கள் மேட்டர்

அம்புஜாக்‌ஷி

”சுரேஷ், எந்த நேரத்தில் நீ போஸ்டர்களில் எழுத்துப்பிழைகள் பத்தி சொன்னியோ. இப்போ எல்லாம் எந்த போஸ்டரைப் பார்த்தாலும் எழுத்துப்பிழை எதாவது இருக்கான்னுதான் பார்க்கத் தோணுது.”

“அடுத்தவங்க செய்யற தப்பு நம்ம கண்ணில் பட்டா, நாம அந்தத் தப்பைச் செய்யாம இருப்போம். அதனால பாரு பாரு. தப்பே இல்லை. அது இருக்கட்டும். இப்போ எதாவது கண்ணில் பட்டுச்சா?”

“வெண்ணீர், தீவணம், சமர் பணம், சமர் பனம் அப்படின்னு வகை வகையா தப்பு கண்ணில் படுது. ஆனா அதை எல்லாம் விடு. எனக்கு ரொம்ப நாளா குழப்பற விஷயம் ஒண்ணு இருக்கு. வாழ்த்துக்கள் அப்படின்னு எழுதணுமா? இல்லை வாழ்த்துகள்ன்னு சொல்லணுமா?”

“இது உனக்கு மட்டும் வர சந்தேகம் இல்லை. எங்க பார்த்தாலும் இந்த பிரச்சனை கண்ணில் பட்டுக்கிட்டேதான் இருக்கு. இதுக்கு பதில் சொல்லறதுக்கு முன்னாடி உன்னை ஒரு கேள்வி கேட்கறேன். ஒருத்தரைப் பத்தி கிசுகிசுவாப் பேசினா வம்புன்னு சொல்லுவோம். இதோட பன்மை என்ன?”

“என்னடா சீரியஸா ஒரு சந்தேகம் கேட்டா வம்பு பேசிக்கிட்டு இருக்க?”

“இல்லை. உன் கேள்விக்கான பதில்தான் இது. வம்பு – இது ஒருமை. இதோட பன்மை வம்புகள். அதே மாதிரி அம்புஜாக்‌ஷியை அம்புன்னு கூப்பிடலாம். அவங்களோட அம்புஜமும் வந்தா அம்பு + அம்பு = அம்புகள்ன்னுதான் சொல்லுவோம். இல்லையா?”

“ஆமாம். வம்புக்கள், அம்புக்கள்ன்னா தப்புதானே!”

“இதுல இவ்வளவு தெளிவா இருக்க. அப்போ வாழ்த்து ஒருமை அதோட பன்மைக்கு மட்டும் ஏன் இவ்வளவு குழப்பம்?”

“வாழ்த்துகள்ன்னுதான் சொல்லணுமா?”

“ஆமாம். வாழ்த்துகள்ன்னுதான் சொல்லணும். அதே மாதிரிதான் பாட்டுகள், எழுத்துகள் எல்லாமே. இங்க எல்லாம் வலி மிகாது.”

“வாழ்த்துக்கள்ன்னு சொன்னா தப்பா? “

“தப்பே இல்லை யார் சொன்னா தப்புன்னு? இப்போ எதாவது ஒரு விஷயம் நடந்தா பார்ட்டி குடுக்கறது வழக்கமா இருக்கே. பார்ட்டின்னா பியர், விஸ்கின்னு சரக்கு இல்லாம இருக்கறது இல்லை. இதையே கொஞ்சம் தமிழ் மண் வாசனையோட பார்ட்டி தரணும்ன்னா இந்த விஸ்கிக்குப் பதிலா கள்ளு குடுக்கலாம். ஒருவரை வாழ்த்தத் தரும் கள் என்பதால் அதை வாழ்த்துக்கள்ன்னு சொல்லலாம். ”

“வாழ்த்துகள்ன்னா வாழ்த்துவது. வாழ்த்துக்கள்ன்னு சொன்னா அப்படியே சியர்ஸ் சொல்லி வாய்க்குள்ள கவுத்திக்கிறது. ஆஹா! இப்போ நல்லாப் புரியுதுடா.”

“இப்படி எல்லாம் சொன்ன நல்லாப் புரியுமே. ஆனா இந்த தப்பு எல்லா இடத்திலேயும் நடக்கறதுதான். ஒரு சினிமாப் பாட்டு பார்க்கலாமா?”

“சினிமாப்பாட்டு வேற இருக்கா? சொல்லு!”

“பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்ன்னு ஒரு பாட்டு இருக்கு தெரியுமா?”

“தெரியாம என்ன. சமீபத்தில் கூட ரீமிக்ஸ் பண்ணி இருக்காங்களே!”

“ரீ மிக்ஸ் பத்திப் பேசாதே. அந்தப் பாட்டுகளை எல்லாம் கேட்டா பத்திக்கிட்டு வருது. அதை விடு. அந்தப் பாட்டில் முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்ன்னு ஒரு வரி வரும். முத்துன்னு சொன்னா அதோட பன்மை முத்துகள்தான். ஆனா சந்தத்துக்காக அதை முத்துக்கள்ன்னு போட்டு இருப்பாங்க. இலக்கணப்படி முத்துக்கள் தப்புதான்.”

“எழுத்துக்கள் கூட தப்பா? எழுத்துகள்தான் சரியா?”

“எழுத்தாளர்கள் சில பேரு எப்பவும் நான் இந்த பாருக்குப் போனேன் அந்த சரக்கை அடிச்சேன்னு குடிக்கிறதைப் பத்தியே எழுதுவாங்க பாரு. அதை வேணா எழுத்துக்கள்ன்னு சொல்லலாம். ஆனா எழுத்து என்பதன் பன்மை எழுத்துகள்தான்.”

“புரியுது. இந்த மாதிரி வேற எதாவது விஷயம் இருக்கா?”

“முன்னாடி ஓர் – ஒரு பத்திப் பேசினோம் ஞாபகம் இருக்கா? அந்த மாதிரி இந்த ஒருமை – பன்மை விஷயத்திலும் சில ரூல்ஸ் இருக்கு.”

“யப்பா, இந்த ரூல்ஸுக்கு முடிவே இல்லையா? சொல்லு!”

“ ஒரு உதாரணம் சொல்லறேன். என் கையில் இருக்கும் புத்தகம் என்னுடையது அல்ல.”

”அதுல என்ன தப்பு? அது நீ வித்யா கிட்ட இருந்து இரவல் வாங்கினதுதானே.”

“டேய். அதைச் சொல்லலைடா. ஒரு புத்தகம்ன்னு சொல்லும் போது அல்லன்னு சொல்லக் கூடாது. இந்தப் புத்தகங்கள் என்னுடயவையல்ல. இப்படிச் சொன்னால்தான் சரி.”

“அப்போ ஒரு புத்தகத்துக்கு என்ன சொல்லணும்?”

“இந்தப் புத்தகம் என்னுடையதன்று. இப்படித்தான் சொல்லணும்.”

“அதாவது ஒருமைக்கு அன்று. பன்மைக்கு அல்ல. இப்படித்தான் சொல்லணும். இல்லையா?”

“ஆமாம். அன்று எல்லாம் இன்னிக்குப் பழக்கத்தில் இல்லைன்னாலும் இலக்கணப்படி எழுதும் பொழுதாவது சரியா எழுதணும். இதே மாதிரி அவன் தன் வேலையைச் செய்தான்னு எழுதணும். அதையே அவர்ன்னு வந்தா அவர் தம் வேலையைச் செய்தார்ன்னு சொல்லணும். அவர்கள்ன்னு பன்மையா வந்தாலும் இதே மாதிரி அவர்கள் தம் வேலையைச் செய்தனர்ன்னு எழுதணும்.”

“ம்ம். இதனாலதான் எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா அப்படின்னு பாட்டு எழுதினாங்களா?”

“ஆமாம் எந்தன், உந்தன், அவர்தம், அவர்கள்தம் அப்படின்னு எழுதினாத்தான் இலக்கணப்படி கரெக்ட். ஆனா இப்படி எல்லாம் இன்னிக்கு யாரு எழுதறாங்க சொல்லு.”

”எனக்கு ஒரு சந்தேகம்டா. இந்த இலவசம் இலவசம்ன்னு சொல்லறோமே. அதுக்கு எதாவது கதை இருக்கா?”

“இல்லாம என்ன, இன்னிக்குக் கூட கல்யாணம் மாதிரி விழாக்கள் ஆகட்டும் இல்லை ஒரு குருவைப் பார்க்கப் போகும் போது ஆகட்டும் வெற்றிலை பாக்கு எல்லாம் ஒரு தட்டில் வைத்துதான் பரிசு தரோம் இல்லையா? அதுக்கு இது உங்களுக்கானது. நீங்கள் திருப்பித் தர வேண்டாம் அப்படின்னு அர்த்தம். இப்படி இலையின் மூலம் தரும் பரிசுக்கு இலை வயம் என்று சொல்லி அது இலவசம்ன்னு ஆச்சு.”

“இப்போ இலை கட்சி மட்டும் இல்லை. எல்லாருமே இலவசமாத் தராங்க!”

”கட்சின்னு சொன்ன உடனே ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருதுடா. தேர்தல் வரப் போகுது. இப்பவே எதிர்மறையா பிரச்சாரம் செய்யக்கூடாது. நேர்மறையா செய்யுங்கன்னு சிலர் சொல்ல ஆரம்பிச்சு இருக்காங்க. இது ரொம்பத் தப்பான விஷயம்.”

“என்னடா சொல்லற? எதிர்மறையா பேசாதேன்னு சொன்னா நல்லதுதானே?!”

“எதிர்மறையா பேசாதேன்னு சொல்ல வேண்டியதுதான். ஆனா அதுக்காக நேர்மறையாப் பேசுன்னு சொல்லக் கூடாது. ஏன்னா நேர்மறைன்னு தமிழ்ல ஒரு வார்த்தையே கிடையாது. எதிர்மறைக்கு எதிரா இருக்கணும்ன்னு நேர்மறைன்னு சொல்லறாங்க.  உண்மையில் speak positively அப்படின்னு சொல்லணும்ன்னா அறப்பேசு அப்படின்னு சொல்லலாம். நேராகப் பேசு, நல்லவிதமாகப் பேசுன்னு எல்லாம் சொல்லலாம். ஆனா நேர்மறைன்னு சொல்லக் கூடாது.”

“மறைன்னா வேதம்தானே. அது எங்க இங்க வந்தது?”

“மறைன்னா சொல் அப்படின்னு ஒரு அர்த்தம் இருக்கு. எதிர்மறைன்னு சொல்ல அது காரணமா இருக்கும். ஒண்ணு ஞாபகம் வெச்சுக்கோ. நேர்மாறுன்னு சொன்னா முற்றிலும் எதிரானது. எதிர்மறைக்கு நேர்மாறானது நேர்மறை இல்லை!”

“எதிர்மறை கூட சேர்த்துதான் எழுதணும். எதிர் மறைன்னு எழுதினா முன்னாடி இருக்கும் வேதம் அப்படின்னு பொருளாகிடும் இல்லையா?”

“ஆமாம். சேர்த்துதான் எழுதணும். இன்னும் ஒண்ணு கூட சொல்லணும்ன்னு நினைச்சேன். மங்கலம் / மங்களம், பவளம் / பவழம் – இது எப்படி எழுதினாலும் சரிதான்னு பேசினோமே. அதே மாதிரி மதில் / மதிள், உளுந்து / உழுந்து – இதெல்லாம் கூட எப்படி எழுதினாலும் சரிதான்.”

“உழுந்து கூட சரியா? இது அவ்வளவா கேள்விப்பட்ட மாதிரி இல்லையே.”

“இப்போ பல பேருக்கு வாழைப்பழம்ன்னு சொல்ல வராம வாயப்பயம்ன்னு சொல்லறாங்க. இதுல உழுந்துன்னு யாரு சொல்லப் போறா. ஆனா கம்பராமாயணத்தில்

உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும் அப்படின்னு கம்பரே எழுதி இருக்காரு. இந்த மாதிரி ஒரு எழுத்து வர வேண்டிய இடத்தில் வேற ஒரு எழுத்து வந்தாலும் பொருள் மாறாமல் வந்தா அதுக்குப் போலின்னு பேரு.”

“போலியா? சாதாரணமா ஒரிஜினலா இல்லைன்னாத்தானே போலின்னு சொல்லுவோம்.”

“அதே அர்த்தம்தான். ஒன்று போல இருக்கும் மற்றொன்று அப்படின்னு சொல்லணும்ன்னா அதை போல் +இருப்பது = போலிருப்பதுன்னு சொல்லறோமே. அதோட சுருக்கம்தான் போலி. எந்த எழுத்து மாறி வருதுன்னு பார்த்து அதை முதற் போலி, இடைப் போலி, கடைப் போலின்னு மூணு விதமாப் பிரிக்கலாம். ஞாயிறுன்னு சொல்லறோம். அதை நாயிறுன்னு சொன்னா முதல் எழுத்து மாறி வருது. அதனால அது முதற் போலி. முன்னாடி பார்த்த பவழம் / பவளம், உளுந்து / உழுந்து எல்லாம் நடுவில் இருக்கும் எழுத்து மாறி வரதுன்னால இடைப் போலி. மதில் / மதிள் – இதுல கடைசி எழுத்து மாறிப் போகறதுனால இது கடைப் போலி.”

“வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலில் போளி நல்லா இருக்கும். அதனால அது போளிக் கடை. டாப் கிளாஸ் போளி கிடைக்கும். அது முதற் போளி. ஆனா அவங்களைப் பார்த்து வேற ஒருத்தன் ஸ்டால் போட்டா அது போலிக் கடை. அதையே கடை போலின்னும் சொல்லலாம்.”

“ நீ விளையாட்டா சொன்னாலும் அதுல ரெண்டு விஷயம் இருக்குடா. போளி – போலி ஒரு எழுத்து மாறினாலும் அதோட அர்த்தமே மாறுது. அதனால இது போலி இல்லை. ரெண்டாவது, கடைப் போலி / கடை போலி – வலி மிகுந்து வர வேண்டிய இடத்தில் சரியா எழுதலைன்னா எப்படி  மீனிங் மாறுதுன்னு பாரு. இதனாலதான் தமிழ் எழுதும் பொழுது தப்பில்லாம கவனமா எழுதணும்ன்னு சொல்லறேன்.”

”ஆமாண்டா. நீ இதை எல்லாம் சொல்லும் போது எனக்குத் தமிழ் மேல தனி மரியாதையே வருது.”

“தமிழ் மேல மரியாதை வரது இருக்கட்டும். எப்போப் பாரு கேண்டீனிலே இருக்க, உன் மனசில் என்ன நினைச்சுக்கிட்டு இருக்கன்னு மேனேஜர் திட்டறான். தமிழுக்கு தனி மரியாதை வர நேரத்தில் நம்ம மரியாதை காத்தில் போயிடும் போல இருக்கு. அதனால இதுக்கு கொஞ்சம் ப்ரேக் விட்டுட்டு தொழிலை கவனிக்கலாம்.”

“ஆமாண்டா. என் பாஸ் கூட முறைக்கறான். எதாவது சந்தேகம் வந்தா மெயில் அனுப்பறேன். எப்பவாவது வீட்டுக்கு வருவ இல்லை. அப்போ மொத்தமா சேர்த்து வெச்சு அதுக்கெல்லாம் பதில் சொல்லு.”

“சரிடா. இப்போ பார்க்கலாம். பை”

“பை”

 • வாழ்த்துகள் என்பதுதான் சரி. வாழ்த்துக்கள் என்பது தவறு.
 • இதே போல் எழுத்துகள், முத்துகள், பாட்டுகள், வார்த்தைகள் என்றுதான் எழுதுதல் சரி.
 • ஒருமைக்கு அன்று. அல்ல பன்மைக்கு. (என் புத்தகமன்று, என் புத்தகங்களல்ல)
 • ஒருமைக்கு தன், பன்மைக்குத் தம் (அவந்தன், அவர்தம், அவர்கள்தம்)
 • இலை வயம் தரப்படும் பரிசு என்பதே இலவசம் என்றானது. வெற்றிலையில் வைத்துத் தரப்படும் பரிசைக் குறிப்பது இது.
 • எதிர்மறை என்பதை எதிர் மறை என எழுதுதல் கூடாது.
 • நேர்மறை என்ற வார்த்தை தமிழில் இல்லை.
 • மதில் / மதிள், உளுந்து / உழுந்து – எப்படி எழுதினாலும் சரியே
 • ஒரு வார்த்தையில் ஒரு எழுத்து வர வேண்டிய இடத்தில் வேறு ஒரு எழுத்து வந்து பொருள் மாறாமல் இருந்தால் அது போலி எனப்படும்
 • மாறும் எழுத்து இருக்கும் இடத்தைப் பொருத்து முதற் போலி, இடைப் போலி, கடைப் போலி என மூன்று வகையாகப் பிரிக்கலாம்

[கொத்தனாரின் இலக்கண நோட்ஸ் இந்த வாரத்துடன் நிறைகிறது. அடுத்த படையெடுப்பு விரைவில்.]

ஒண்ணு விட்டா போச்சு!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு

“என்னடா சுரேஷ், கையில் என்ன கட்டு?”

“அது ஒண்ணும் இல்லைடா. எங்க காலனியில் இன்னிக்கு ரத்த தான முகாம். அதுல கலந்துக்கிட்டு ரத்தம் குடுத்துட்டு வரேன்.”

“உங்க காலனியிலுமா? மத்திய மந்திரி ஒருத்தர் பிறந்த நாளை ஒட்டி ரத்த தான முகாம்ன்னு ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டி இருந்தாங்களே.”

“சரியாப் பார்த்தியா? நானும் பார்த்தேன். அவங்க என்ன எழுதி இருந்தாங்க தெரியுமா? அமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்தான முகாம்ன்னு எழுதி இருந்தாங்க.”

“ஆஹா! இதை நான் சரியாப் பார்க்கலையே. ஒரு எழுத்து விட்டதுனால ரத்ததான முகாம் ரத்தான முகாமா ஆயிடுச்சே!”

”தமிழை ஒழுங்கா எழுதுன்னு நான் சொன்னா சிரிப்பியே. இப்போ பாரு ஒரே ஒரு எழுத்து விட்டதுக்காக இவங்களைப் பார்த்து நீயே சிரிப்பா சிரிக்கற. இதே மாதிரி நான் இந்த வாரம் ஒரு வலைப்பதிவைப் பார்த்து சிரிச்சேன்.”

“உனக்குத்தான் எழுத்துப்பிழைன்னா அல்வா மாதிரியாச்சே. என்ன விஷயம் சொல்லு.”

“யாரோ நல்ல காரியம் ஒண்ணு செஞ்சதை இவரு பாராட்ட பதிவு எழுதறாரு. அதில இன்னார் செஞ்சது பாராட்டுக்குறியது அப்படின்னு போட்டு இருக்காரு. இதுக்கு விலாவாரியா விளக்கம் சொன்னா பாரா கல்லெடுத்து அடிப்பார். அதனால எழுத்துப்பிழை இல்லாம எழுத வேண்டியது அவசியம்ன்னு சொல்லிட்டு அடுத்த மேட்டரைப் பார்க்கலாம்.”

“இதெல்லாம் எழுத்துப்பிழைகள். புரியுது. ஆனா பொதுவா பயன்பாட்டில் இருக்கிற வார்த்தை எதாவது தப்பா இருக்கா?”

“இருக்கே. நிறையா உதாரணம் சொல்லலாம். ஒண்ணு சொல்லறேன் கேளு. அருகாமை. உங்கள் வீடு தொலைவில் இருக்கிறதான்னு கேட்டா, இல்லை அருகில் இருக்கிறதுன்னு சொல்லுவோம். ஆனா அதை அருகாமையில் உள்ளது அப்படின்னு சொன்னா இலக்கிய வாசனை அடிக்குதுன்னு நிறையா பேரு நினைக்கறாங்க.”

“ஆமா. அருகாமைங்கிறது பரவலா எல்லாரும் சொல்லறதுதானே. அதுல என்ன பிரச்சனை?”

“அதுதாண்டா பிரச்னை. அருகில் இருக்கிறதுன்னு சொன்னா சரியா இருக்கு. அது என்ன அருகாமை? முயலாமைன்னு சொன்னா முயலாமல் இருப்பது. செய்யாமைன்னா செய்யாமல் இருக்கிறது. இப்படிப் பார்த்தா அருகாமைன்னா அருகாம இருக்கிறது. அருகுவதுன்னா குறைவது. அருகாமைன்னா குறையாம இருப்பதுன்னு வேணா சொல்லலாம்.”

“அருகாமைன்னு சொல்லறதே தப்பா? ரொம்ப இண்டரெஸ்டிங்கா இருக்கே.”

“அடகுக்கடை எதாவது தெரியுமா?”

“தெரியாம என்ன? உனக்கு எதுக்குடா அடகுக்கடை எல்லாம்? எதாவது பிரச்னை இருந்தாச் சொல்லேன். நான் உதவி பண்ணறேன்.”

“எனக்கு பிரச்னை எதுவும் இல்லைடா. இந்த அடகுக்கடைன்னு சொல்லறதுதான் பிரச்னையே.”

“என்னடா சொல்லற? அது எதாவது மார்வாடி வார்த்தையா? அதான் அவங்க இந்த மேட்டரில் சக்கை போடு போடறாங்களா?”

“நம்ம ஆளுங்க மார்வாடிகளுக்குக் குறைச்சலே இல்லை. அதை விடு. விஷயத்தைச் சொல்லறேன் கேளு. ஒரு சாமானை ஒருத்தர் கிட்ட குடுத்துட்டு அதோட மதிப்புக்கு கடன் வாங்கறதுக்கு தமிழில் பெயர் அடைவு. இதை சொல்லும் போது அடவுன்னு சொல்லறது உண்டு.”

“ஓஹோ! அப்போ இதெல்லாம் அடவுக்கடையா? அதைத்தான் நாம அடகுக்கடைன்னு சொல்லறோமா?”

“ஆமாம். அதனாலதான் அடைமானம் வைக்கறதுன்னு சொல்லறோம். அடைத்தல், அடைக்கலம்ன்னு சொல்லும் போது கூட இதே பொருள் வருது பாரு.”

”ஆமாம். அடைவு சரி. அப்போ அடகுன்னா என்ன?”

அடகுன்னா ஒரு வகைக் கீரை. அடகுக்கடைன்னா கீரைக்கடைன்னு அர்த்தம். அங்க கீரையா விக்கறாங்க?  ஆனா இன்னிக்கு அடகு என்பது எல்லாரும் பயன்படுத்தும் ஒரு வார்த்தை ஆயிட்டதுனால அகராதிகளில் கூட இந்த அர்த்தமும் தர ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா அடைவு என்பதுதான் சரியான சொல்.”

“ நம்மாளுங்க எல்லாத்தையும் யோசிச்சு வைச்சு இருக்காங்கப்பா!”

“ஆனா அதை நாம பாதுகாக்காம விட்டுடறோம். எவ்வளவுதான் மம்மி டாடி சொன்னாலும் அப்பா அம்மா நம்ம தமிழில் இருக்கத்தான் செய்யும். ஆனா இது போல உறவினர்களுக்கு எல்லாம் இருக்கும் பெயர்கள் மறைந்து போய் எல்லாருமே அங்கிள் ஆண்ட்டி ஆகக்கூடிய அபாயம் இருக்கு.”

“ஆமாம். நாம் உறவுகளைச் சொல்லத்தான் எவ்வளவு வார்த்தைகள் இருக்கு இல்லையா?”

“உறவுகள் இருக்கட்டும். இன்னிக்கும் ஒரு கல்யாணம்ன்னு வந்தா உங்கள் உற்றார் உறவினருடம்  வந்து அப்படின்னுதானே எழுதறோம். உறவினர்ன்னா சரி. உற்றார்ன்னா என்ன? தெரியுமா?”

“ஆமாண்டா, உற்றார் உறவினர்ன்னு சொல்லறோம். ஆனா உற்றார்ன்னா யாருன்னு தெரியலையே.”

“நீ உறவினர்ன்னா relatives அப்படின்னு சொல்லுவ. ஆனா நம்ம ஆட்கள் இவர்களை ரெண்டு விதமாப் பிரிச்சு இருக்காங்க. Relatives by birth and relatives by choice.

அதாவது நம் பிறப்பினால் நமக்கு உறவானர்வகள் உற்றார். இதுல நமக்கு சாய்ஸே கிடையாது. நம்ம அப்பா, அம்மா, அண்ணா, தம்பி, அக்கா, தங்கை என நம் பிறப்பினால் நமக்குக் கிடைத்த உறவுகள்தான் உற்றார்.

உறவினர்ன்னா  கொண்டு கொடுத்து உறவாக வருபவர்கள். உறவு என்றாலே சம்பந்தம் என்றுதான் பொருள். உறவினர் என்றால் இது போன்ற சம்பந்தத்தின் மூலம் வரும் உறவுகள்.”

“இதைத்தானேடா இன்னிக்கு வாய்ச்சதும் வந்ததும்ன்னு சொல்லறோம். தமிழ் ரொம்பவே அழகா இருக்குடா!” ’

“தமிழ் என்றாலே இனிமை என்றுதானேடா அர்த்தம். அது அழகா இருக்கறதுல என்ன ஆச்சரியம்?

’மேல சொல்லு.”

“இன்னும் சில வார்த்தைகளை எடுத்துக்கோ. அதோட ஒரிஜினல் விதத்தில் இருந்து மாறிப் போய் தவறான வடிவமே நிலைபெற்று விடும். உதாரணத்துக்கு நாம சதைன்னு சொல்லறோம். அதோட உண்மையான வடிவம் என்ன?”

“என்ன? தசைதானே?”

“ஆமாம். தசைதான். அதனாலதான் தசையோட சேர்ந்து இருக்கிற நரம்பை எல்லாம் சேர்த்து தசைநார்ன்னு எல்லாம் சொல்லறோம். ஆனா நாளாவட்டத்துல இந்த தசைன்னு சொல்லறது சதைன்னு மாறிப்போச்சு.”

“ஆமாம். இப்போ நாம சதை, சதைப்பற்றுன்னுதானே சொல்லறோம்.”

“சதைத்தல்ன்னா நசுக்குதல்ன்னு அர்த்தம். இன்னிக்கும் திருநெல்வேலி பக்கம் நசுக்கிடுன்னு சொல்ல சதைச்சுடுன்னு சொல்லுவாங்க. இந்த சதை என்பதை தசை என்ற பொருளில் சொல்லறதே தப்புதான்.”

“ம்ம். இண்டரெஸ்டிங்”

“சேலை கட்டும் பெண்ணிற்கொரு வாசமுண்டு. கண்டதுண்டா? கண்டவர்கள் சொன்னதுண்டா?”

“வாசத்தைப் பார்க்க முடியுமா? அதானே சொல்லப் போற?”

“இல்லைடா!! சேலை என்ற சொல் எங்க இருந்து வந்தது தெரியுமா?”

”தெரியலையே. நீயே சொல்லு.”

“சீலை அப்படின்னு கிராமங்களில் சொல்லுவாங்க. கல்யாணத்துக்கு சீலை எடுத்தாச்சான்னு கேட்பாங்க. ஆனா இந்த சீலையும் கூட சீரை என்ற சொல்லில் இருந்து மருவி வந்தது.”

“சீரையா? அப்படின்னா என்னடா?”

“சீரைன்னா மரப்பட்டைகளிலான உடை. சீரை சுற்றித் திருமகள் பின் செல அப்படின்னு கம்பர் சீதையைப் பத்திச் சொல்லுவாரு. சிறப்பினை தரும் மரவுரி. அதை சீரை என்று சொல்லுவார்கள். இந்த சீரைதான் சீலை என்று மருவி இன்றைக்கு சேலை என்றும் ஆனது.”

“சரி. இனிமே சீரைக் கட்டும் பெண்ணிற்கொரு வாசமுண்டான்னே பாடறேன். போதுமா?”

“இதெல்லாம் இன்னிக்கு தமிழாகிப் போச்சு. அதனால மாத்தணுமா வேண்டாமான்னு யோசிக்கணும். ஆனா இது எல்லாம் எப்படி வந்ததுன்னு தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம். தமிழில் இந்த மாதிரி மாறிப் போனாலும் சரின்னு சொல்லும் வார்த்தைகள் எத்தனையோ இருக்கு தெரியுமா?”

“மாறினாலும் சரியா? அது என்னடா?”

“இப்போ பவளம், பவழம் – இதுல எது சரி?”

“தெரியலையே. நீயே சொல்லு.”

“நான் பவழம்தான் சரின்னு சொன்னேன் வெச்சுக்கோ. பவளம் என்ற சொல் பழங்காலத்திலேர்ந்தே இருக்குன்னு சுட்டி எல்லாம் குடுத்து அமர்க்களப்படுத்துவாங்க. அதே நான் பவளம்தான் சரின்னு சொன்னா, பவழம் கோஷ்டியினர் வந்து இதே மாதிரி சுட்டி எல்லாம் தருவாங்க.”

“அப்போ எதுதான் சரி?”

“ரெண்டுமே சரிதான் என்றுதான் நாம இன்னிக்கு சொல்லறோம். பவளம், பவழம் எப்படி எழுதினாலும் சரிதான். அதே மாதிரிதாம் மங்கலம், மங்களம் என்று எழுதுவதும்.”

“நைசா இன்னிக்கு பேச வேண்டியதுக்கு இப்படி மங்களம் பாடிட்ட போல.”

“அதே. அதே. பை!”

 • பாராட்டுக்கு உரியது என்பதை பாராட்டுக்குரியது என்று எழுத வேண்டும். பாராட்டுக்குறியது என்பது பிழை.
 • அருகில் என்பதே சரி. அருகாமை என்பது பிழையான ஒரு சொல்.
 • அடைவு என்பது அடவு என்று மருவி இன்றைக்கு அடகு என்று ஆனது. அடகு என்றால் கீரை. அடைவு என்பதே ஒரு பொருளை கொடுத்து அதன் மதிப்புக்கு ஈடாக கடன் பெறுவது.
 • உற்றார் என்பவர் பிறப்பின் மூலம் வரும் சொந்தம். உறவினர் என்பது திருமணத்தின் மூலம் வரும் சொந்தம்.
 • தசை என்பதே சரியான சொல். அது சதை என்று மருவிப் போனது. சதை என்றால் நசுக்கு என்று பொருள்.
 • சீரை என்றால் மரவுரி. அது சீலை என்று மருவி இன்றைக்கு சேலை என்று வழங்கப்படுகிறது.
 • பவளம்/ பவழம், மங்கலம்/ மங்களம் என்ற இரு வகைகளும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

இதற்கு உண்டா பத்மபூஷண்?

“எழுந்து எவ்வளவு நேரமாச்சு, காப்பி கொண்டு வாடி” என்ற காலைப் பொழுதை துவங்கினான் தினேஷ்.

“என்ன, என்னிக்கும் இல்லாத திருவிழாவா இன்னிக்கு அதிகாரம் தூள் பறக்குது?” என்ற பதிலோடு களத்தில் இறங்கினாள் வித்யா .

“நான் உனக்கு ஆம்படையான். ஆம்படையான்னா என்ன தெரியுமா? ஆண்+படையான். படை வீரன்னா ஒரு கெத்து வேண்டாமா? ஒரு வீரம் வேண்டாமா?”

“என்ன பேத்தற? மனைவியைக் கூடத்தான் ஆம்படையாள்னு சொல்லுவாங்க. அப்படின்னா ஆண்+படையாள்ன்னு எடுத்துக்கிட்டு நாங்க பொம்பளப்பிள்ளைங்களாப் பெத்துப் போடணுமா?”

“அடடே, நல்ல நேரத்தில்தான் வந்திருக்கேன் போல. கணவனும் மனைவியும் என்னமோ தர்க்கத்தில் இருக்கிற மாதிரி இருக்கே” என்றபடி எண்ட்ரி தந்தான் சுரேஷ்

“வாங்கண்ணா, உங்களோடு சேர்ந்து இவரும் வார்த்தைகளைப் பிரிக்கறேன்னு அபத்தமா உளறிக் கொட்டிக்கிட்டு இருக்காரு.”

“என்னோட சேர்ந்து அபத்தமா உளறரானா? ஏம்மா, அவனை மட்டும் சொல்லறியா, இல்லை இதுல வேற உள்குத்து எதாவது இருக்கா?”

“ஐயோ அப்படி அர்த்தம் வருதா? நான் உங்களைச் சொல்லுவேனா. நீங்க சரியாப் பிரிப்பீங்க. ஆனா இவரு பேசறது லூசுத்தனமால்ல இருக்கு. நீங்களே இந்த ஆம்படையான், ஆம்படையாள் விஷயத்தைப் பத்திச் சொல்லுங்க.”

“ஓஹோ. விஷயம் அப்படிப் போகுதா. இது பொதுவா பிராமணர்கள் பேசும் முறை. ஆத்துக்கு வா, அவ ஆம் எங்க இருக்குன்னு எல்லாம் கூடப் பேசுவாங்க. இல்லையா? அது தமிழ் மாதிரியே இல்லையேன்னு தோணினாலும் அது சுத்தமான தமிழ்தான். ஆனா கொஞ்சம் மருவிப் போச்சு. இது எல்லாத்துக்கும் முக்கியமான வார்த்தை அகம். இதுக்கு பல அர்த்தங்கள் இருக்கு. இங்க நமக்கு வேணுங்கிற அர்த்தம் வீடு.

இந்த அகம் தான் ஆம் என்று மருவி இருக்கு. அகம் உடையான், அகம் உடையாள் என்பது வீட்டின் தலைவன், தலைவி என்ற பொருளைத் தருது. இதுதான் ஆம்படையான், ஆம்படையாள்ன்னு ஆயிருச்சு. இந்த விஷயம் தெரியாம அது தமிழ் இல்லைன்னும் சொல்லக் கூடாது. படை வீரன், பெண்குழந்தைகளை மட்டும் பெற்றுத் தரும் தாய்ன்னு எல்லாம் கன்னாப்பின்னான்னு சண்டை போடக் கூடாது!”

“ஏண்டா சுரேஷ், நேத்து வரேன்னு சொன்ன, ஆனா இன்னிக்குத்தான் வர. என்ன ஆச்சு?”

“ஆணி புடிங்கறது அதிகமாயிருச்சு. அதான் நேத்து நைட் வர முடியலை.”

“ஆணி புடுங்கறதா? அப்படின்னா என்ன அண்ணா?”

“வித்யா, வேலை பார்க்கறதை ஆணி புடுங்கறது அப்படின்னு சொல்லறது இந்த கம்ப்யூட்டர் தொழிலில் இருக்கிறவங்களோட பாஷை. என்னமோ சினிமாவில் வடிவேலு விஜய் சூர்யாவை எல்லாம் ஆணி புடுங்க வைப்பாராமே. அதனால அப்படி சொல்லிக்கறாங்க போல.”

“யப்பா, எப்படி எல்லாம் அடுத்தவங்களுக்குப் புரியாத மாதிரியே பேசிக்கறீங்க.”

“ஏம்மா வித்யா அலுத்துக்கற. இது எல்லா இடத்திலேயும் நடக்கறதுதான். இதுக்கு ஒரு தனி பெயர் கூட இருக்கு தெரியுமா?”

“என்னடா சொல்லற, நாம ஆணி புடுங்கறதுன்னு பேசறதுக்குக் கூடவா தனியா பெயர் இருக்கு? அந்தக் காலத்திலேயே இப்படி எல்லாம் வரும்ன்னு தெரிஞ்சு பேரு வெச்சுட்டாங்களா? தமிழ் இஸ் க்ரேட்!”

“டேய், அடங்குடா. இந்த மாதிரி ஒரு குழுவினர் மட்டும் அவங்களுக்குள்ள பேசிக்கிறது மாதிரி இருக்கற வார்த்தைகளுக்குக் குழூஉக்குறி அப்படின்னு பேரு.”

“தினேஷை விடுங்கண்ணா, நீங்க சொல்லுங்க. இது என்ன குழூஉக்குறி?”

“ஒரு குறிப்பிட்ட கூட்டத்துக்கு மட்டும் புரியற மாதிரி பேசறதுக்குப் பெயர்தான் குழூஉக்குறி. உதாரணமா சந்தைக்குப் போனா காய்கறி மொத்த வியாபாரம் பேசுவாங்க. அவங்க பேசறது நமக்குப் புரியவே புரியாது. அவ்வளவு சங்கேத பாஷை இருக்கும். அதே மாதிரி வியாபாரிகள், தங்க ஆசாரிகள், யானைப்பாகன்கள் இப்படி பல தொழிலில் இருக்கிறவங்க பேசறதுல பல வார்த்தைகள் நமக்குப் புரியாது. இப்படி ஒவ்வொரு குழுவினரும் தமக்கான சில சொற்களை வெச்சு இருப்பாங்க. அதுக்குப் பேருதான் குழூஉக்குறி.”

“நாம தமிழ்ல ஜார்கன்னு சொல்லறோமே. அது மாதிரியா? சுவாரசியமாத்தான் இருக்கு. இந்த மாதிரி வேற எதுனாக் கூட இருக்காடா?”

”ஜார்கன்னு தமிழ்ல சொல்லறோமா? நல்லா இரு!! இன்னும் இது மாதிரி சில விஷயங்கள் இருக்கே. மங்கலம் அப்படின்னு ஒண்ணு இருக்கு. தினேஷ், நீ மங்களமா, இதோட ஆட்டம் க்ளோசான்னு கேட்கறதுக்கு முன்னாடியே பதில் சொல்லிடறேன். இது மங்கலம். ஆனா மங்களம் மங்கலம் ரெண்டுமே ஒரே அர்த்தம்தான். நல்ல விஷயம் அப்படின்னு பொருள். இந்த குழூஉக்குறியோட சொல்லும் பொழுது மங்கலம்ன்னா நல்லது இல்லாத விஷயத்தைச் சொல்லும் பொழுது கூட நல்ல வார்த்தைகளைக் கொண்டு சொல்லறதுன்னு அர்த்தம்.”

”கெட்ட செய்தியை நல்ல வார்த்தைகள் கொண்டு சொல்லறதா? அது எப்படிடா?”

“சொல்லறேன். ஒருத்தர் இறந்துட்டார்ன்னு வெச்சுக்கோ, அப்போ போஸ்டர் அடிக்கும் பொழுது என்ன அடிப்பாங்க? இன்னார் இறந்துவிட்டார் அப்படின்னா சொல்லுவாங்க? இறைவனடி சேர்ந்தார்ன்னு சொல்லுவாங்க. இல்லை, போஸ்டர் அடிக்கறவங்க  நம்ம கமல் மாதிரி பகுத்தரறிவு, ச்சே, பகுத்தறிவு பார்ட்டியா இருந்தா அவங்க கடவுள் நம்பிக்கை இல்லாதவங்களா இருந்தா இயற்கை எய்தினார்ன்னு சொல்லுவாங்க. கொஞ்சம் பழைய காலத்து ஆசாமிங்க ’துஞ்சினார்’ அப்படின்னு சொல்லுவாங்க.”

“அண்ணா துஞ்சினார்ன்னா என்ன?”

“அதுவாம்மா, துஞ்சினார்ன்னா தூங்கினார்ன்னு அர்த்தம். மீளாத் துயிலில் ஆழ்ந்தார்ன்னு சொல்லறது இல்லையா? அந்த துயிலில் ஆழ்பவரைத் துஞ்சினார்ன்னு சொல்லுவாங்க. . அதே மாதிரி சில வீடுகளில் விளக்கை அணைக்கலாமான்னு கேட்க மாட்டாங்க. விளக்கு அணைவது அபசகுனம் என்பதால் விளக்கைப் பார்க்கலாமான்னு கேட்பாங்க. பூவை வேண்டாம் எனச் சொல்லாமல் பூ மிஞ்சி இருக்கிறதுன்னு சொல்லுவாங்க. இப்படி பல அபசகுனமான விஷயங்களைச் சொல்லும் பொழுது நெகடிவான வார்த்தைகளைப் போடாம நல்ல வார்த்தைகளைக் கொண்டு உணர வைப்பதுதான் மங்கலம்.”

“எங்க ஆபீசில் வேலையை விட்டுத் தூக்கினா You are fired அப்படின்னு சொல்லாம, you have an opportunity to look out for a better careerன்னு சொல்லுவாங்க. அதுவும் இந்த மங்கலம் வகையில் சேர்த்துக்க வேண்டியதுதான் போல.”

“ஏண்டா இப்போ வேலை போகறதைப் பத்தி எல்லாம் ஞாபகப்படுத்திக்கிட்டு. அதை விடு. இந்த குழூஉக்குறி, மங்கலம் கூட இன்னும் ஒரு விஷயம் இருக்கு. அதுக்குப் பேரு இடக்கரடக்கல்!”

“என்ன கல்லு?”

“தோசைக்கல்லு. சொல்லறதைக் கேளுடா. அதுக்குப் பேரு இடக்கரடக்கல். பிரிச்சுப் பார்த்தா ஈசியாப் புரியும். இடக்கர் + அடக்கல் = இடக்கரடக்கல்.”

“இடக்கர்ன்னா என்ன? வலக்கருக்கு எதிர்த்தாப்புல இருக்கறதா?”

“இந்த மாதிரி இடக்கா பேசறதானே. இந்த இடக்கா பேசறதுன்னு சொல்லறது இன்னிக்கு நக்கலாப் பேசறதுன்னு அர்த்தம் வர மாதிரி சொல்லறோம். ஆனா உண்மையில் அது தகாத சொற்களைப் பேசறதுன்னு அர்த்தம். இந்த மாதிரி தகாத சொற்களைப் பேசறவங்களைத்தான் இடக்கர்ன்னு சொல்லறது.”

“ஓஹோ! அப்போ இந்த இடக்கர்களை அடக்கறதுதான் இடக்கரடக்கலா?”

“யெஸ்ஸு! அதேதான். பொதுவான இடங்களில் சொல்லத் தகாத வார்த்தைகளைச் சொல்லாம அதுக்குப் பதிலா வேற வார்த்தைகளைச் சொல்லிப் புரிய வைக்கறதுக்குப் பேர்தான் இடக்கரடக்கல்.”

“இதுக்கும் எதாவது உதாரணம் தாங்களேன் அண்ணா”

“பலரும் இருக்கும் இடத்தில் மலம் கழிப்பதைப் பற்றியோ, சிறுநீர் போவதைப் பற்றியோ சொல்ல தயக்கப்பட்டாலும் ஒன்றுக்குப் போகிறேன், கால் கழுவி வருகிறேன் என்றால் தயக்கம் இல்லாமல் இருக்கு இல்லையா. இந்த மாதிரி சில வார்த்தைகளைத் தவிர்க்க வேறு வார்த்தைகளைப் போட்டால் அதுக்கு இடக்கரடக்கல்ன்னு பேரு.

இப்போ சாகித்ய அகாடமி விருது வாங்கி இருக்காரே நாஞ்சில் நாடன். அவரு ஒரு சமயன் எழுதினாரு – கொண்டையில் தாழம்பூ, நெஞ்சிலே வாழைப்பூ, கூடையில் என்ன பூ, குஷ்பு’ என்றெழுதினால் பத்மபூஷண் விருதுக்குக் கோளுண்டு. ஆனால் முலை எனில் தீட்டு; குண்டி, பீ, மூத்திரம் எல்லாம் அமங்கலம். என்னுடைய சிறுகதை ஒன்றினைப் பிரசுரித்தவர் பீ, மூத்திரம் என வரும் இடங்களை வெட்டிவிட்டார். நேரில் பார்த்தபோது கேட்டேன், “உமக்கு அதுவெல்லாம் வருவதில்லையா? ஒன் பாத்ரூம், டூ பாத்ரூம் என்றுதான் வருமா?’ என.

அவ்வளவு பெரிய எழுத்தாளர். அவர் எழுதினதுக்கே வெட்டு விழுந்தது. அதனால அமங்கலமான் சொற்களைப் பேசாமல் அதுக்கு தகுந்தாற்போல நல்ல வார்த்தைகளாப் போட்டுப் பேசறது நாகரிகம். இதுக்கு அந்தக் காலத்திலேயே விதிகளை எல்லாம் போட்டு பேரும் வெச்சு இருக்காங்க நம்ம ஆளுங்க.”

“ம்ம். இன்னும் ஒரு கேள்வி. நீ இப்போ நாகரிகம்ன்னு சொன்னியே. அது நாகரிகமா இல்லை நாகரீகமா?”

“நாகரீகம் எல்லாம் இல்லை நாகரிகம்தான். இதே மாதிரி தேசீயம், மார்க்கசீயம், காந்தீயம் அப்படின்னு எழுதறாங்க. இது எல்லாமே தப்பு. தேசியம், மார்க்கசியம், காந்தியம் இப்படித்தான் எழுதணும். இயம் அப்படின்னா ஆங்கிலத்தில் -ismன்னு சொல்லற மாதிரி. அதை ஈயம் பித்தளைன்னு சொல்லக்கூடாது.”

“தமிழ் கத்துக் குடுக்கச் சொன்ன நைசா அரசியல் எல்லாம் நுழைக்கக் கூடாது. காப்பி போட்டு வெச்சு நேரமாகுது. அதைக் குடிச்சுட்டு ரெண்டு பேரும் ப்ரேக்பாஸ்ட் சாப்பிட வர வழியைப் பாருங்க.”

 • ஆம், ஆம்படையான், ஆம்படையாள் என்பது அகம், அகமுடையான், அகமுடையாள் என்ற சொற்கள் மருவி வந்தது.
 • ஒரு குழுவினருக்கு மட்டும் புரியும்படியான சொற்களுக்குப் பெயர் குழூஉக்குறி (ஆணி புடுங்குதல் = வேலை பார்த்தல், கணினித் துறை)
 • அபசகுனமான விஷயங்களை சுபமான வார்த்தைகளைக் கொண்டு சொல்வதற்குப் பெயர் மங்கலம் ( இறைவனடி சேர்ந்தார்)
 • தகாத வார்த்தைகளைச் சொல்வதற்குப் பதிலாக வேறு வார்த்தைகளைச் சொல்லிப் புரிய வைப்பதற்குப் பெயர் இடக்கரடக்கல் (சிறுநீர் கழித்தேன் = ஒன்றுக்குப் போனேன்)
 • நாகரீகம், தேசீயம், மார்க்சீயம், காந்தீயம் எல்லாம் தப்பு. நாகரிகம், தேசியம், மார்க்சியம், காந்தியம் என்றுதான் எழுதவேண்டும்.

கண்றாவி!

“சே, என்ன கண்றாவிடா இது” என்றபடியே நுழைந்தான் தினேஷ்

“இந்த கண்றாவின்னு சொல்லறதை விடவா கண்ணராவி?” என பதிலைச் சொல்லி கச்சேரியை ஆரம்பித்தான் சுரேஷ்.

“என்னடா சொல்லற? கண்றாவி தப்பா? எல்லாரும் கண்றாவின்னுதானே பேசறாங்க, எழுதறாங்க. அதையே தப்புன்னு சொல்லற?”

“எல்லாரும் பேசினா எழுதினா சரின்னு ஆயிடுமா? சில வார்த்தைகள் எப்படி உருவாச்சுன்னு தெரிஞ்சா இந்தக் குழப்பம் எல்லாம் வராது. இரும்பை கொண்டு தேய்ப்பதற்குப் பெயர் அராவுதல். இதைத்தான் ராவறது அப்படின்னு மருவிச் சொல்லறோம். யாராவது பேசிப் பேசி கழுத்தை அறுத்தார் என்றால் கூட ஏண்டா இப்படி ராவறான்னு கேட்கறோமே. அதுவும் இந்த அராவுதல் காரணமாத்தான். பேசுவது கழுத்தை ராவுவது என்றால் பார்ப்பது கண்ணை ராவுவது. பார்த்தாலே கண்ணுக்குள்ள இரும்பை வெச்சு தேய்க்கற மாதிரி இருக்குதாம். அதனால அதுக்குக் கண்+அராவி = கண்ணராவி அப்படின்னு சொல்லணும். கண்றாவி என்பது தவறான பயன்பாடு.”

“ஓஹோ. கண்றாவின்னு சொல்லியே பழகிட்டோம். ஆனா அது எப்படி வந்ததுன்னு தெரியலை பார்த்தியா. அதனால வார்த்தையே மாறிப் போயிடுது. இனிமே சரியா கண்ணராவின்னே சொல்லணும்.  இது மாதிரி இன்னும் கொஞ்சம் வார்த்தைகள் பத்திச் சொல்லேன்.”

“கண்ணைப் பார்த்தாச்சு. அடுத்தது காதைக் கவனிக்கலாமா?”

“காதும் காதும் வெச்சா மாதிரி சொல்லு கேட்டுக்கறேன்.”

“சொல்லறது என்ன. பாட்டாவே பாடுவேன். ஆனா நீதான் கர்ணகொடூரமாய் இருக்குன்னு சொல்லுவ.”

“அது என்ன கர்ண கொடூரம். கர்ணன் எங்க இங்க வந்தாரு?”

“கர்ணம் அப்படின்னு சொன்னாக் காது. அவரு குண்டலங்களோட பிறந்தாரு இல்லையா. அதான் அவருக்குக் கர்ணன்னு பேரே வெச்சுட்டாங்க. இந்த கர்ணத்துக்கு கொடூரமாய் இருக்கிறதைத்தான் கர்ணன் கொடூரம் அப்படின்னு சொல்லறது. கண்ணால பார்க்க முடியாதது கண்ணராவி, காதால கேட்க முடியாதது கர்ணகொடூரம். ”

“சபாஷ். இந்த டாபிக் நல்லா இருக்கே. இன்னும் கொஞ்சம் போகலாமா?”

“போகலாம். அதுக்கு முன்னாடி சில விஷயங்களைப் பத்திப் பேசவேண்டியது இருக்கு. ஒரு நண்பர் நீங்க ற / ர பத்திப் பேசும் பொழுது பொருப்பு / பொறுப்பு பத்திப் பேசினீங்க ஆனா பொருத்து, பொறுத்து பத்திச் சொல்லலையே. அதில் எனக்கு ரொம்ப குழப்பம் இருக்குன்னு சொன்னாரு.  நாம இதில் பிழைகள் வருவதை அடிக்கடி பார்க்கறோம். என்னைப் பொருத்த வரையில் அப்படின்னு எழுதும் எழுத்தாளர்களையும் நான் பார்த்து இருக்கேன். பொருத்து அப்படின்னு சொன்னா சேர்க்கறது. சரியா பொருந்துதா அப்படின்னு கேட்கறோம். இல்லையா? இந்த வார்த்தை இங்க சரியா பொருந்துமா? அப்படின்னு கேட்கும் பொழுது கூட இணைந்து வருமா அப்படின்னுதானே அர்த்தம். அதனால் பொருப்பு அப்படின்னு சேர்க்கறது.

ஆனா பொறுத்து அப்படின்னா தாங்கிக்கறது. பொறுமைன்னு சொல்லும் பொழுது நாம ற போடறோம்தானே. அதே அர்த்தத்தில் வர பொறுத்துக்கும் நாம ற தானே போடணும். பொறுத்தார் பூமி ஆள்வார் அப்படின்னு பழமொழி இருக்கு. இனிமேலாவது பொறுத்துப் போக வேண்டிய இடத்தில் பொருத்துப் போகாம இருக்கணும்!”

“முன்னாடி எல்லாம் ஒரு நிறுவனம் ஆதியோட அந்தம் வரை எல்லாத்தையும் அவங்களே செய்யற மாதிரி integratedஆ இருப்பாங்க. ஆனா இப்போ எல்லாம் வெளியிடத்தில் செய்ய வெச்சுடறாங்க. அவ்வளவு ஏன் சின்ன டீக்கடைக்குப் போனா காப்பி கலந்து குடுப்பான். ஆனா ஸ்டார் ஹோட்டலில் எல்லாம் தனித்தனியா தந்து நம்மளையே கலந்துக்க வைக்கறான். ஆனா இவனுக்குத்தான் காசு அதிகம். அதனால இன்னிக்கு பொருத்தார் பூமி ஆள்வார்ன்னு சொல்லறதுதானே சரி?”

“நல்லா கத்துக்கறடா நீ!! ஆள்வார்ன்னு சொல்லும் பொழுதுதான் ஞாபகம் வருது. ஆள்வார் என்றால் ஆளுபவர். ஆனா வைணவத்தில் முக்கியமான பன்னிரண்டு பேரையும் ஆழ்வார்ன்னு சொல்லணும். அவங்க அந்த சமயத்தை ஆளலை. ஆனா இறைவனிடம் ஆழ்ந்த பக்தியோட இருந்தவங்க. அதனால அவங்களை ஆழ்வார்ன்னு சொல்லணும்.”

“அப்போ ஆண்டாள்ன்னா ஆள்வாருக்கு பாஸ்ட் டென்ஸ் மாதிரி இருக்கே. அவங்க ஆள்வாரா இல்லை ஆழ்வாரா?”

“அடப்பாவி, உன் லொள்ளுக்கு அளவே இல்லையா? விட்டா ஆள்வார்ன்னா ஆம்பிளைகள்தானே இருக்கணும். அப்போ அம்மா ஆட்சி வந்தா அவரு பெண்வாரான்னு கேட்ப போல. அப்புறம் பெண்களால்தானே war அப்படினு தாவுவ. இங்க அரசியல் எல்லாம் பேசக் கூடாது, தெரியும்தானே. ஆபீஸ் கேண்டீனில் கூட இவ்விடம் அரசியல் பேசக்கூடாதுன்னு போர்டு மாட்ட வெச்சுடாதே ராசா.”

“அன்னிக்கு நம்ம காலேஜ் சுவத்துல நோட்டீஸ் ஒண்ணு பார்த்தேன். சிரிச்சு சிரிச்சு வயத்துவலியே வந்துடுச்சு.”

”நீ உன் விஷயத்தைச் சொல்லறதுக்கு முன்னாடி நான் ஒண்ணு சொல்லறேன். சுவத்திலன்னு பேச்சு வழக்கில் சொல்லறதை எழுதும் பொழுது சுவற்றில் அப்படின்னு எழுதறாங்க. அது தப்பு. சுவரில்ன்னுதான் எழுதணும். சுவர்+இல் = சுவரில். இதுதான் சரி. நீயே வயித்துவலின்னு சொன்ன. அதை எழுதும் பொழுது வயிற்றுவலின்னு எழதறோம். வயிறு+வலி = வயிற்றுவலி,  வயிறு+இல் = வயிற்றில், கயிறு+ஆல் = கயிற்றால். இதெல்லாம்தான் சரி. சுவரு+இல் அப்படின்னு வந்தா வேணா சுவற்றில் அப்படின்னு சொல்லலாம். ஆனா சுவரு என்பது சரியான வார்த்தை இல்லை. அதனால சுவரில் அப்படின்னுதான் சொல்லணும்.”

“ஓஹோ!! சில சமயங்களில் கொஞ்சம் அதிகமாகவே அழுத்தி கரடுமுரடா இருந்தால்தான் சரின்னு நம்ம ஆளுங்க ஒரு அழுத்து அழுத்திடறாங்க போல!”

“அதை விடு. நீ சொல்ல வந்ததைச் சொல்லு.”

”அது ஒரு பள்ளிக்கூடத்துக்கு விளம்பரம். ஒரு பக்கம் ஆங்கிலத்திலும் மறுபக்கம் தமிழிலும் இருந்தது. ஆங்கிலத்தில் கடைசியில் Admissions open for boys and girls அப்படின்னு எழுதி இருந்தது. அதை தமிழில் எழுதும் பொழுது, இப்பொழுது ஆண் பெண் சேர்க்கை நடைபெறுகிறதுன்னு போட்டுட்டாங்கடா!”

“அடப்பாவிகளா! மொழி மாற்றத்தின் போது சில சமயங்களில் இப்படி அபத்தம் ஆயிடும். அதனாலதான் ஜாக்கிரதையா இருக்கணும். இல்லைன்னா சாய்கடைதான்..”

“அது என்னடா சாய்க்கடை?”

“சாய்க்கடை இல்லைடா. அது என்னமோ டீக்கடை மாதிரி இருக்கு. இது சாய்கடை. நாம இதைத்தான் தப்பா சாக்கடைன்னு சொல்லறோம். கடைன்னா இடம் அப்படின்னு ஒரு அர்த்தமும் இருக்கு. அதனால சாய்கடைன்னா சாய்வாக இருக்கும் இடம். கழிவு நீர் வழிந்து ஓடுவதற்கு வசதியாக சாய்வாக இருக்கும் இடம் சாய்கடை. இதை சாக்கடைன்னு சொன்னா என்னமோ சாவுக்கு சம்பந்தப்பட்ட மாதிரி இருக்கு.”

“சாக்கடை பூரா கிருமிகள்தானே. அதன் மூலம் சாவு வரும். அதனால சாவு இருக்கும் இடம் சாக்கடை. எனவே சாக்கடை என்பதும் சரிதான்! உனக்கு மட்டும்தான் இப்படி எல்லாம் விளக்கம் தரத்தெரியும்ன்னு நினைச்சியா?”

“சரிதான்!! நல்லா இருடா ராசா!! நடு செண்டர், கேட்டு வாசல்ன்னு எல்லாம் சொன்னா சிரிப்பதானே. அந்த மாதிரி ஒரு விஷயம் சொல்லவா?”

”சொல்லு சொல்லு.”

“அண்ணாகயிறு, அருணாகயிறுன்னு எல்லாம் சொல்லுவாங்க தெரியுமா?”

“தெரியாம என்ன, அரைஞாண்கயிறு. அதைத்தானே அப்படி எல்லாம் சொல்லறாங்க. எனக்கு சரியான வார்த்தை தெரிஞ்சு இருக்கு பார்த்தியா?”

“சரின்னு நீ சொல்லற பாரு. அங்கதான் பிரச்சனை இருக்கு. அரைன்னா இடுப்பு. வேட்டி அரையிலேயே நிக்கலைன்னு சொல்லுவாங்க. உடம்பைப் பாதியாப் பிரிக்கிற இடம் என்பதால் அரை என வந்ததோ என்னவோ. ஞாண் என்றால் நாண்ன்னு சொல்லறோமே அதோட திரிபுதான். நாண்ன்னாலே கயிறுதான். வில்லில் பூட்டிய நாண்ன்னு சொல்லுவதில் கூட இந்தப் பொருள்தான். அரைஞாண்ன்னு சொன்னாலே இடுப்பில் கட்டும் கயிறுன்னுதான் அர்த்தம். அது கூட எதுக்கு இன்னும் ஒரு கயிறு? தேவையே இல்லை. அரைஞாண்ன்னு சொன்னாலே போதும்.”

”சரி. இதோட ஆட்ட்த்தை முடிச்சுக்கலாம். போவோமா ஊர்கோலம், பூலோகம் எங்கெங்கும்…”

“டேய். இது கூட தப்புதான் தெரியுமா?”

”டேய். இதுல என்னடா தப்பு. கவிஞர் எழுதினபடிதானே பாடறேன்.”

“எழுதினவர் மேலதாண்டா குற்றச்சாட்டு. உன் மேல இல்லை. பொதுவா கோயில்ல கடிகாரம் போற மாதிரி வலமாத்தானே சுத்துவோம். அந்த நாட்களில் ஊரில் எதாவது பண்டிகை நடந்து ஊரைச் சுற்றி வந்தாங்கன்னா இதே மாதிரி வலமாகத்தான் சுத்துவாங்க. அது ஊர்வலம். ராஜா நகர்வலம் போனாருன்னு கூட படிச்சிருக்கோமே. அதனால ஊர்வலம் அப்படின்னுதான் சொல்லணும். கோலம், வீட்டு வாசலை அலங்கரிக்கப் போடறது. ஊர் மொத்தமும் கோலம் போட்டா வேணா ஊர்கோலம்ன்னு சொல்லிக்கலாம்.”

“சரி சரி. போவோமா ஊர்வலம்தான்னு பாடறேன். நீ கிளம்பற வழியைப் பாரு.”

 • கண்ணராவி – கண்ணை ராவும்படியான காட்சி
 • கர்ணக்கொடூரம் – காதில் விழும் கொடூரமான சத்தம்
 • பொருத்து – இணை, பொறுத்து – தாங்கி
 • ஆள்வார் – ஆளுபவர், ஆழ்வார் – ஆழ்ந்த பக்தியுடையவர்
 • சுவர்+இல் = சுவரில், சுவற்றில் இல்லை
 • சாய்கடை – சாய்வாக இருக்கும் இடம் (கழிவுநீர் செல்வதற்காக)
 • அரைஞாண் – இடுப்பில் கட்டப்படும் கயிறு. அரைஞாண் கயிறு எனச் சொல்வது தவறு
 • ஊர்வலம் – ஊரை வலமாக சுற்றி வருதல். ஊர்கோலம் – தவறான பயன்பாடு

ரெண்டு சுழி மூணு சுழி

இப்ப யாரு விமரிசிப்பாங்க?

“கண்ணத்தில் என்னடி காயம்? எந்த வண்ணக் கிளி செய்த மாயம்?”

“டேய் தினேஷ். ஷேவ் பண்ணும் பொழுது கொஞ்சம் கிழிச்சுக்கிட்டேன். அதுக்கு எந்தக் கிளி மேல பழி போட. ஆனா உன் மேல ஒரு பெரிய பழியைப் போடப் போறேன்.”

“என் மேலவா? நான் என்னடா பண்ணினேன்? சும்மாக் கலாட்டாப் பண்ணிப் பாடினா தப்பா? என்ன அநியாயம்டா இது?”

”பின்ன என்னடா, என் கன்னத்தைக் கண்ணம்ன்னு சொல்லி அழுத்தற. ஏற்கனவே வெட்டுப்பட்டு இருக்கு. நீ வேற வீணா அழுத்தலாமா”

“இன்னிக்கு ன, ண வித்தியாசமா? உன் வெறும் வாய்க்கு நான் அவலைப் போட்டேன் போல. நான் ரெண்டு சுழி மூணு சுழின்னு சொல்லுவேன். நீ அப்படிச் சொல்லக் கூடாதுன்னு சொல்லுவ. அதானே ஆரம்பம். ஆரம்பிச்சுடு.”

“கரெக்ட். ரெண்டு சுழி மூணு சுழின்னு எல்லாம் சொல்லக்கூடாது. ந, ன, ண – இந்த மூணுதான் அடிக்கடி குழப்பம் வரது. இதை சொல்லும் பொழுது இந்த எழுத்துகளுக்கு முன்னாடி இருக்கு எழுத்துகளை வெச்சு சொல்லணும். ண – இது டண்ணகரம், ந – இது தந்நகரம், ன – இது றன்னகரம்.”

“புதுமைப்பித்தன் எழுதினது பொன்னகரம். என்னடா, விஜய டி மாதிரி அடிச்சு விடற!”

“அட, உனக்குப் புதுமைப்பித்தன் எல்லாம் கூட தெரியுமா? பரவாயில்லையே. என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே, இதுதான் ஐயா பொன்னகரம்! ஒரு வரியில் எவ்வளவு தாக்கம் பார்த்தியா. எனக்குப் பிடிச்ச சிறுகதைகளில் ஒண்ணு அது.”

“சரி, கதை விமர்சணம் பண்ணப் போயிடாதே.”

“விமர்சணமா? ஏண்டா எல்லா வார்த்தையையும் இப்படி அழுத்தற. விமர்சனம் எவ்வளவு காட்டமா இருந்தாலும் விமர்சனம்தாண்டா. அதைப் போய் விமர்சணம்ன்னு சொன்ன, யாராவது கடுப்பாகி உம்மேல சாணத்தைதான் வீசப் போறாங்க.”

“எனக்கு என்னடா தெரியும். நான் படிக்கிறது எல்லாம் இணையத்தில் எழுதறவங்களைத்தான். அதுல பல பேரு இப்படித்தானே எழுதறாங்க.”

“ஆமாம், நானும் பார்த்து இருக்கேன். இவங்க கிட்ட மாட்டிக்கிட்டு பாடாப் படும் இன்னொரு வார்த்தை பின்னணி. இந்த இணையத்தில் எந்தப் படம் வந்தாலும் உடனே விமர்சனம் பண்ணிடுவாங்க. அதுல முக்கியமா சண்டை போட்டுக்கறது இந்த பின்னணி இசை வெச்சுதான். நாம அதுக்குள்ள போக வேண்டாம். ஆனா அதை அவங்க பிண்ணணி, பின்ணணி, பிண்னணின்னு விதவிதமா போட்டு வதைக்கறாங்க.”

“பின்னணி – இதுதானே சரி?”

“ஆமாம், நடிகர்கள் எல்லாம் முன்னாடி நடிக்கும் பொழுது பின்புலத்தில் இருந்தாலும் இசை அந்தப் படத்திற்கு ஒரு அணியாக இருக்கு. அதனால அது பின்+அணி = பின்னணி இசை. அதே மாதிரி முன்னணிதான். முண்ணனின்னு எல்லாம் எழுதக் கூடாது. இனிமேலாவாது சண்டை போடறவங்க, நிறுத்தலைனாலும், இப்படி எழுத்துப்பிழை பண்ணாம இருக்கலாம்.”

“அதிகமாத்தான் ஆசைப்படற. இதே மாதிரி வேற என்ன எழுத்துப்பிழைகள் உனக்கு அடிக்கடி கண்ணில் படுது?”

“பன்னிரண்டு – இப்படித்தான் 12ஐ எழுதணும். இதை பண்ணிரெண்டு பண்ணிரெண்டுன்னு எழுதறாங்க. இதுவும் உச்சரிப்பு சரியாத் தெரியாததுனால வரும் எழுத்துப்பிழைதான்னு நினைக்கிறேன்.”

“ நான் அப்படின்னு சொல்ல வந்துட்டு அதைக்கூட நாண் அப்படின்னு எழுதறாங்க”

“நான் – தன்னையே குறிக்க சொல்வது, நாண் – கயிறு அல்லது வெட்கப்படு. இதை எப்படித்தான் குழப்பிக்க முடியுமோ! கயிறு என்பதைக் கூட கயர் என்று எழுதினாலும் தப்புதான். நான் / நாண் மாதிரியே தன் என்றால் தன்னுடையது ஆனால் தண் என்றால் குளுமையானது. தண்ணீர்ன்னு சொல்லறோமே.”

“சுடு தண்ணீர்ன்னு சொல்லறோம். அப்போ எங்க போகுது உன்னோட குளிர்?”

”சுடு தண்ணீர்ன்னு சொல்லக் கூடாது. நீர் – இது குளிர்ச்சியா இருந்தா தண்ணீர், சூடா இருந்தா, வெம்மையா இருக்கிறதுனால வெந்நீர்.  சுடுதண்ணின்னு சொன்னா சூடா இருக்கிற குளிர்ந்த நீர் என்று அர்த்தமே இல்லாமப் போயிடும்.”

”அது வேறயா. சரியாப் போச்சு. இன்னும் கூட சுவாரசியமா கொஞ்சம் சொல்லேன்.”

“அன்னிக்கு ஒரு இடத்தில் பார்த்தேன். மான் என எழுத நினைத்து மாண் அப்படின்னு எழுதி இருந்தாங்க. மாணைப் பாதுகாக்கவும் என்பது போல. மாண் என்றால் சிறப்பு, பெருமைன்னு அர்த்தம். அதனால எழுத்துப்பிழை இருந்தாலும் பொருட்பிழை இல்லாமப் போச்சு!

அதே மாதிரி ஒரு டாக்டரைப் பார்க்கப் போயிருந்தேன். அங்க கோபம் தனின்னு ஒரு பலகையில் எழுதி இருந்தது. ஏன் டாக்டர், கோபம் வந்தாத் தனியாப் போயிடணுமா? இல்லை நமக்கு நண்பர்கள் இல்லாம தனியா ஆயிடுவோமா அப்படின்னு கேட்டேன். அவருக்கு சட்டுன்னு புரியலை. நானேதான் கோபம் தணின்னு இருக்கணும் பாஸ் அப்படின்னு சொல்லிட்டு வந்தேன்.”

“அவரு தணிக்காட்டு ராஜாவா இருப்பாரு போல!”

“ பாமா விஜயம் – இது ஒரு பழைய படம். இதுல ஒரு பாட்டு வருது. ஆவணி வீதியிலே அப்படின்னு ரெண்டாவது வரி வரும், அதனால முதல் வரியை எல்லாரும் ஆனி முத்து வாங்கி வந்தேன் அப்படின்னு சொல்லிடுவாங்க. பாவம் கவியரசர். அவரு சொல்லிட்டுப் போனது ஆணி முத்து. இங்க ஆணின்னா சுவத்தில அடிக்கிற ஆணி இல்லை. மாசு இல்லாத, pure என்று பொருள். ஆணிப் பொன், ஆணி முத்து என்பது எல்லாமே இப்படித்தான். ஆணித்தரமாகப் பேசுவது கூட இந்த மாதிரி தயக்கம் இல்லாம உறுதியாகப் பேசுவதைத்தானே குறிக்கிறது.”

“சும்மா ஆணி அடிச்சா மாதிரி சொல்லிட்ட! அடுத்தது என்ன?”

“ரொம்ப கணமா இருக்குன்னு எழுதினா வெயிட்டா இருக்குன்னு அர்த்தம் இல்லை, ரொம்ப நேரமா இருக்குன்னு சொல்லற மாதிரி ஆயிடும். ஏன்னா கணம்ன்னா நேரம். கனம்தான் பளு!”

“கண்ணத்தில் ஆரம்பிச்சயே. அதே மாதிரி அண்ணம்ன்னு எதாவது இருக்கா? அன்னம்ன்னு பறவையை சொல்லும் பொழுது இப்படி அண்ணம்ன்னு அழுத்தறாங்களே.”

“அண்ணம்ன்னா வாயின் மேற்புறம். அங்க போய் நாக்கு சரியாப் படாததுதானலதான் உச்சரிப்பு இப்படி டான்ஸ் ஆடுது. இந்தக் குழப்பம் இன்னும் மனம் -மணம், பானம் – பாணம், பனி – பணி, தினை – திணை, ஆனை – ஆணை, கனை – கணை, பனை – பணை, மனை – மணை இப்படி எவ்வளவோ சொற்களுக்கு வருது.”

“எனக்கு எப்பவுமே குழப்பம் வரும் இன்னும் ஒரு ஜோடி ஊன் – ஊண். இதை சரியா ஞாபகத்தில் வெச்சுக்க சொல்லேன்.”

“ரொம்ப ஈசிதாண்டா. ஊண் எல்லாருக்கும் வேண்டியது. ஊன் என்பது புலால் உண்பவர்களுக்கு மட்டும். ஏன்னா ஊண்ன்னா உணவு. ஊன்ன்னா மாமிசம். இன்னும் ஒண்ணு சொல்லவா, வண்மை – வன்மை, இது ரெண்டுக்கும் எப்படி வித்தியாசத்தைப் புரிஞ்சுக்கறது?”

“நீயே சொல்லு.”

“வண்மைன்னா வளம். நல்லாப் பேசறவங்களுக்கு நாவண்மை இருக்குன்னு சொல்லுவோம் இல்லையா. அந்த அர்த்தத்தில்தான். ஆனால் வன்மைன்னா கடினம். அது சீரியல் மாமியார்கள் எப்பவும் நாக்கால கொடுமை பண்ணறதுனால அவங்களுக்கு நாவன்மை இருக்கிறதா சொல்லிடலாம். என்ன சொல்லற!”

“ஓஹோ! அப்போ வன்மையாகக் கண்டிக்க வேண்டிய இடத்தில் வண்மையாகக் கண்டிக்கக்கூடாதுன்னு சொல்லு!”

“ண-ன பத்தி பேசியாச்சு ஆனா இந்த ந பத்தி ரொம்ப சொல்லவே இல்லையே.”

“ந ரொம்ப குழப்பம் இல்லாத விஷயம். பெரும்பாலும் சொல்லின் ஆரம்பத்தில்தான் வரும். ஆனால் ஆரம்பத்தில் ண,ன வராது என்பதால் ரொம்பக் குழப்பம் இல்லை. மிகச் சில இடங்களில் மட்டும் சொல்லின் நடுவில் வரும். பெறுநர், இயக்குநர், ஓட்டுநர், ஆளுநர்  போன்ற சொற்களில் மட்டும் நடுவில் வரும். இதை இயக்குனர், ஓட்டுனர், பெறுனர், ஆளுனர் என்று எழுதுவது தவறே.

நாநயம் சொல்லுக்கும் நாணயம் வாழ்க்கைக்கும்ன்னு ஒரு பழமொழி இருக்கு நாநயம்ன்னா நல்வாக்கு. நல்ல வார்த்தைகளைப் பேசணும். நாணயம்  என்றால் செல்வம். அது நல்லபடி வாழத் தேவை. இதுதான் அதுக்கு அர்த்தம்.”

“ஓஹோ! சரி, இன்னும் ஒரு கேள்வி கேட்கறேன். பழனி, பழநி எது சரி?”

“ பழம் நீ என்பது மருவி பழநி ஆனது என்பது எல்லாம் கட்டுக்கதை. பழனி என்பதுதான் அந்த ஊரின் சரியான பெயர். இன்னும் சொல்லணமுன்னா புறநானூறு என்ற நூலில் பழனிக்குப் பொதினி என்று பெயர் இருப்பதாகச் சொல்கிறார்கள். பேகன் என்றவன் ஆண்ட இடமாம் இது”

“சரி பழனின்னு சொன்ன உடனே மொட்டை அடிச்சுடப் போற. இதோட நிறுத்திக்கலாமா?”

“ஒரே ஒரு விஷயம் சொல்லறேன் கேட்டுக்கோ. அன்னிக்கு ஒரு எஸ்டிடி பூத்தில் பொது தொலை பேசி அப்படின்னு எழுதி இருக்காங்க. தொலை பேசின்னா பேசிக்கிட்டே தொலைஞ்சு போ அப்படின்னுதான் அர்த்தம். தொலைக்காட்சி, தொலைத் தொடர்புன்னு எல்லாம் எழுதும் பொழுது தொலைப்பேசின்னுதானே எழுதணும். அதை விட்டுட்டு தொலை பேசின்னு எழுதினா சரியா? அதைவிட பொது தொலை பேசின்னு வேற போட்டு இருக்காங்க. பொதுத்தல் அப்படின்னா ஓட்டை போடுதல் அப்படின்னு பொருள். பொதுத்துறை, பொதுச்சொத்துன்னு எழுதும் பொழுது எப்படி வலி மிகுந்து வருது. அதே மாதிரி பொதுத்தொலைப்பேசி அப்படின்னு எழுதும் பொழுது ரெண்டு இடத்திலும் வலி மிகுந்து வரணும். இல்லை அர்த்தம் அனர்த்தமா ஆகிடும்.”

 • நீர் குளிர்ந்து இருந்தால் தண்ணீர் என்றும், சூடாக இருந்தால் வெந்நீர் என்றும் சொல்ல வேண்டும். சுடுதண்ணீர் எனச் சொல்லக் கூடாது.
 • கயிறு என்பதே சரி, கயர் என்பது தவறு.
 • தொலை பேசி என்றும் பொது தொலை பேசி என்றும் எழுதக் கூடாது. பொதுத்தொலைப்பேசி என்பதே சரி.
விமர்சணம் தவறு விமர்சனம் மதிப்பீடு
கண்ணம் தவறு கன்னம் கதுப்பு (முகத்தின் பகுதி)

திருடர்களின் கருவி

பிண்ணணி

பின்ணணி

தவறு பின்னணி பின்னால் இருப்பது
முண்ணணி

முண்ணனி

தவறு முன்னணி முன்னால் இருப்பது
பண்ணிரண்டு

பண்ணிரெண்டு

தவறு பன்னிரண்டு 12
நாண் கயிறு

வெட்கம்

நான் தன்னைக் குறிப்பது
தண் குளிர்ந்த தன் தன்னுடைய
மாண் சிறப்பு

பெருமை

மான் மிருகம்
தணி அடக்கு தனி ஒற்றையாய்
ஆணி கூரிய இரும்புத் துண்டு

மாசற்ற, உறுதியான

ஆனி மாதத்தின் பெயர்
கணம் நேரம் கனம் சுமை, பளு
அண்ணம் மேல் வாய் அன்னம் பறவை
மணம் வாசனை மனம் உள்ளம்
பாணம் அம்பு பானம் திரவம்
பணி வேலை பனி லேசாக உறைந்த நீர்
திணை பிரிவு தினை தானியம்
ஆணை கட்டளை ஆனை யானை
கணை அம்பு கனை கனைத்தல்
பணை மூங்கில் பனை பனைமரம்
மணை பலகை மனை வீடு
ஊண் உணவு ஊன் மாமிசம்
வண்மை வளம் வன்மை வலிமை

கடினம்

இயக்குனர்

பெறுனர்

ஓட்டுனர்

ஆளுனர்

தவறு இயக்குநர்

பெறுநர்

ஓட்டுநர்

ஆளுநர்

சரி
நாணயம் செல்வம் நாநயம் நல்வாக்கு
பழநி தவறு பழனி சரி

ரொம்ப ஞாயம்!

சே, என்னமா சொல்லித்தராரு?

“ஏண்டா தினேஷ், இன்னிக்கு ஒரு சில்லறை மேட்டரோட ஆரம்பிக்கலாமா?”

“அது என்னடா சில்லறை மேட்டர்?”

“போன முறை நாம இந்த ர/ற பத்திப் பேசினோமே. அப்போ சில்லறையா சில்லரையான்னு பேசாம விட்டுட்டோமேன்னு சொல்லி இருக்காரு எழுத்தாளர் இரா முருகன். நியாயப்படி சேர்த்து இருக்க வேண்டிய விஷயம்தான். அதை இப்போ சொல்லிடலாம். சில்லரைன்னா சில அரைகள் அப்படின்னு சொல்லறது மாதிரி ஆகிடும். சில என்றால் இரண்டுக்கும் மேல். உதாரணமா ஒரு நூறு ரூபாயை மாத்தினோமுன்னா, நூறு ரூபாய் மதிப்புதானே திரும்பக் கிடைக்கும். ஆனா சில அரைன்னு சொன்னோமுன்னா நூறு ரூபாய்க்கு மேல கிடைக்கணும்தானே. அதனால அது தப்பு. அதே சமயம் சில்லறைன்னா சில பகுதிகளாக நறுக்குவதால் அறுப்பது என்பது போல அறை என்பது வரும். எனவே சில்லறைன்னுதான் சொல்லணும்.”

“இன்னும் ஒண்ணு. நீ கூட இப்போ நியாயம்ன்னு சொன்ன. அதை சிலர் ஞாயம்ன்னு எழுதறாங்களே. அதுவும் சரிதானா?”

“இல்லை. ஞாபகம்ன்னு எழுதும் போது ஞா போடறோம். பேச்சுவழக்கில் நியாயம்ன்னு சொல்லாம ஞாயம்ன்னு சொல்லறோம். அதுல ஞா அப்படின்னு ஒலி வருது இல்லையா, அதனால எழுதும் போது ஞாயம்ன்னு எழுதிடறாங்க. அது சரி கிடையாது. நியாயம்ன்னு எழுதணும். நியாயம்ன்னுதான் உச்சரிக்கணும்.”

“போன தடவை பேசாம விட்ட இன்னும் ஒரு விஷயம் கூட இருக்கு. இது எனக்கே தெரியும். ரொம்ப அக்கரையா பார்த்துக்கோன்னு சிலவங்க எழுதிப் பார்த்து இருக்கேன். அது அக்கறையோடன்னு வரணும் இல்லையா?”

“ஆமாம். அக்கறைன்னா ஈடுபாடு. அக்கரைன்னா அந்தப் பக்கத்தில் இருக்கும் (ஆற்றின்) கரை அப்படின்னு அர்த்தம். இதெல்லாம் சரியா சொல்லலைன்னா அர்த்தம் அனர்த்தம் ஆயிடும் தெரியுமா?”

“ஆகும்தான். ஆனா ஒரு எடுத்துக்காட்டு ஒண்ணு சொல்லு பார்க்கலாம்.”

“சொல்லறது என்ன, பாட்டாவே பாடறேன் கேட்டுக்கோ – கல்யாண நாள் பார்த்துக் கொல்லலாமா,  கையோடு கை சேர்த்துக் கொல்லலாமா, அன்னிக்கு ஒரு நாள் ஒரு பாட்டுப் போட்டியில் ஒரு அம்மா  இப்படிப் பாடிக்கிட்டு இருந்தாங்க. பண்ணப்போறது அதான்னாலும், பொதுவில சொன்னா, புருஷனாகப் போறவன் உஷாராயிடமாட்டானோ?!”

“ ஆகா! இவங்க எல்லாம் ஒரு க்ரூப்பாத்தான் கிளம்பி இருக்காங்க போல. ஜாக்கிரதையாத்தான் இருக்கணும். வல்லின ற / இடையின ர அப்படின்னு போன முறை வித்தியாசத்தைச் சொல்லிக் குடுத்த. இந்த ல /ள /ழ எல்லாமே மெல்லினமாச்சே. எப்படி சொல்லறது?”

“நல்லா கேட்ட. ரகரம் / றகரம் உச்சரிக்கும் பொழுது கொஞ்சம் ஒண்ணு போல ஒலிக்கும். ஆனா இந்த ல/ள/ழ குழப்பம் வரதுக்குக் காரணமே தப்பான உச்சரிப்புதான். சரியானபடி உச்சரிச்சோமுன்னா லகரம், ளகரம், ழகரம்ன்னு சொன்னாலே போதும். இதைச் சரியாச் சொல்லலைன்னா ரொம்ப குழப்பம் வரும். அது தெரியாம கன்னாப்பின்னான்னு எழுத்துப்பிழை பண்ணறாங்க. உதாரணமா ஒலி, ஒளி, ஒழி – இது மூணையும் எடுத்துக்கோ. ஒலின்னா சத்தம். ஒளின்னா வெளிச்சம்ன்னும் சொல்லலாம், பதுங்குன்னும் சொல்லலாம். ஒழின்னா அழித்து விடு அல்லது தொலைத்து விடுன்னு அர்த்தம். நம்ம ஆட்கள் ஊழல் அரசியல்வாதி ஒளிக அப்படின்னு கோஷம் போட்டா அவங்களை ஒளிஞ்சுக்கச் சொல்லறாங்களா இல்லை நல்ல ஒளியோட பிரகாசமா இருக்கச் சொல்லறாங்களான்னு சந்தேகமே வருது.”

“அவங்களை விடு. நல்ல வேளை நீ ஒலி ஒளின்னு ஆரம்பிச்ச. அழி, அளின்னு போனா அதுக்கே உன்னைத் தனியாத் திட்டி இருப்பாங்க!”

”ஆமாம். அவங்களுக்குத் தெரியலைன்னாக்கூட நீயே போட்டுக் குடுப்ப போல. இங்க எப்பவுமே ழ மாறி ள / லவா ஆகறது இல்லை தெரியுமா. கொளுத்து என்பதைக் கொழுத்து, வாளை மீனை வாழ மீன் அப்படின்னு எல்லாம் கூட எழுதறதைப் பார்க்கறேன்.”

“நான் வாழ சாகும் மீன் என்பதை வாழ மீன் அப்படின்னு சொல்லி இருப்பாங்கப்பா. நீதான் தப்பாப் புரிஞ்சுக்கிட்டு இருக்கப் போற!”

“அப்படிப் பார்த்தா அன்னிக்கு ஒருத்தர் உழுந்து அப்பளம் அப்படின்னு சொன்னாரு. ஒரு வேளை அவரு கீழ விழுந்து அப்பளம் மாதிரி நொறுங்கிப் போன கதையைத்தான் அப்படிச் சொல்லி இருப்பாரோ? நான் வேற விஷயம் தெரியாம அது உழுந்து இல்லை சார் உளுந்துன்னு சொல்லிட்டு வந்துட்டேனே!”

“நீ சொன்ன ஒலி, ஒளி, ஒழி மாதிரி மூணும் வர மாதிரி இன்னும் கொஞ்சம் சொல்லேன். இன்னும் இருக்கா?”

“ஏன் இல்லாம,  நீ சொல்லாமச் சொன்ன அலி, அளி, அழி இருக்கு. கிலி, கிளி, கிழி இருக்கு. தாலி, தாளி, தாழி இருக்கு. வலி,வளி, வழி – புலி, புளி, புழின்னும் சொல்லலாம்.”

“ஏன் எல்லாமே லி ளின்னு சொல்லற. மத்த எழுத்துகளில் ஒண்ணும் இல்லையா?”

“கேள்வி மட்டும் நல்லாக் கேட்கறடா. கொஞ்சம் யோசிச்சா சொல்லிடலாம். ”

“ஹை! உனக்கே உடனடியாப் பதில் தெரியாத கேள்வி கேட்டுடேனா? ஹை ஜாலி!”

“டேய் சும்மா வாள் வாள்ன்னு கத்தாதே. வாள் எடுத்து வாலை நறுக்கினா வாழ்க்கையே வீணாயிடும்!”

“அடப்பாவி. அதுக்குள்ள வால், வாள், வாழ்ன்னு கண்டுபிடிச்சுட்டியா? ”

“ஸ்டார்ட்டிங் ட்ரபுள்தான்.  விலா, விளா, விழான்னு கூட சொல்லலாம். இன்னும் ஐகாரம் பக்கம் போனா நிறையா மாட்டும். ”

“மாட்டும்ன்னு சொன்னாப் போதுமா? ஒரு லிஸ்டுப் போடு. அதையும் கேட்கலாம்.”

“வால் சொன்னேன் இல்லையா. அதுகூட வாலை, வாளை, வாழை அப்படின்னு சொல்லலாம். தலை, தளை, தழை – இலை, இளை, இழை –  கலை, களை, கழை – அலை, அளை, அழை – முலை, முளை, முழை – வலை, வளை, வழை – உலை, உளை, உழை – விலை, விளை, விழை”

“போதும் போதும். விட்டா சொல்லிக்கிட்டே போவ போல. தமிழ்ல தப்புப் பண்ண இவ்வளவு வழி இருக்கா. யப்பா!”

”தெரியாமலே நிறைய பண்ணுவே, இப்ப தெரிஞ்சுக்கிட்டு விஞ்ஞான முறைப்படி தப்பு பண்ணப் போறியா?”

“இல்லடா, இனிமே இந்த மேட்டர்லே எல்லாம் தப்பே பண்ண மாட்டேன்”

“அட, அவ்ளோ புரிஞ்சுடுச்சா?”

“இல்லை, தெரியாதவன் பண்ணா தப்பு, தெரிஞ்சவன் பண்ணா வலு அமைதின்னு சொன்னியே”

“என் வலுவைக் காட்டறேன், அமைதியாயிடுவே. அது வழு டா!”

”அட, வலு வழு. இங்க வளு இல்லையா?”

“இல்லை. சரி. மூணில் எதாவது ரெண்டு மட்டும் வர லிஸ்ட் ஒண்ணு போடலாமா?.”

“இன்னும் அது வேறயா, இன்னிக்கு இதையெல்லாம் உச்சரிச்சுப் பார்த்தே என் நாக்கு சுளுக்கிக்கப் போகுது.”

”அன்னிக்கு ஒருத்தன் என்னை மிரட்டினான். இதுக்கும் மேல பேசின, உன்னைப் புதைச்ச இடத்தில் புள்ளு கூட முளைக்காதுன்னான். அவன்கிட்ட போய், ராசா நீ சொல்ல வேண்டியது புல். புள்ன்னா பறவை. அது என்னிக்கும் முளைக்காதுன்னு சொல்லவா முடியும். அன்னிக்கு மூடிக்கிட்டு வந்துட்டு இன்னிக்கு உன் கிட்ட சொல்லறேன். இந்த மாதிரி ஏகப்பட்ட வார்த்தைகளை தப்பாச் சொல்லறோம், எழுதறோம்.”

“ஆமாம். பழம்ன்னு சரியாச் சொல்லாம பலம் பளம் அப்படின்னு சொல்லறவங்கதான் இன்னிக்கி அதிகமா இருக்காங்க.”

“பளம்ன்னு ஒரு வார்த்தையும் கிடையாது. ஆனா பலம்ன்னா சக்தி. வாழைப்பழம்ன்னு சொல்லாம வாலைப்பலம்ன்னு சொன்னா இளம்பெண்களுடைய சக்தி அப்படின்னு அர்த்தம் அனர்த்தம் ஆகிடும். இன்னிக்கு நாட்டில் குளத்தில் எல்லாம் மண்ணைக் கொட்டிப் ப்ளாட் போட்டுடறாங்களே. அதுக்குக் கூட இந்த எழுத்துப்பிழைதான் காரணம்ன்னு நினைக்கிறேன்.”

“என்னடா சொல்லற?”

“ஆமாம். ஜாதியை ஒழிப்போம், குலத்தை ஒழிப்போம்ன்னு சொல்ல வந்து குளத்தை ஒழிப்போம்ன்னு சொல்லிட்டாங்களோன்னு எனக்கு சந்தேகம்.”

“ஒரு மார்க்கமாத்தான் கிளம்பி இருக்க. குளத்தைப் பத்திப் பேசின, என் பங்குக்கு நானும் பாலம் பாளம்ன்னு சொல்லிக்கறேன்.”

“சபாஷ். விலக்கு – விளக்கு, விலங்கு – விளங்கு, வெல்லம் – வெள்ளம், பால் – பாழ், தாள் – தாழ், கொல்லை – கொள்ளை, கல் – கள், தொலை – தொளை, காலை – காளை, குலை – குழை இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்டா.”

”இன்னும் அர்த்தமே இல்லாத எழுத்துப்பிழைகள் கூட இருக்கு. பல்லிக்கூடம், அளகான பெண், மிழகாய்ப்பழம் – இப்படி எல்லாம் கூட எழுதிப் பார்த்து இருக்கேன். சொல்லிக் குடுக்கும் பொழுது சரியான உச்சரிப்போட சொல்லிக் குடுத்தால் இந்தப் பிரச்சனையே வராது.”

“உனக்கு நாக்கு நல்லா வழையுது. சாரி, வளையுதுடா. அதான் நீ ஈசியாச் சொல்லற. ஆனா எங்க தமிழ் வாத்தியாருக்கே ழ வராது. யாரெல்லாம் தமிள் வீட்டுப் பாடம் எளுதலைன்னு கேட்பாரு. அப்போ என்ன செய்ய?”

“கஷ்டம்தான். இன்னிக்கு ஒரு கடையில் ஒரு போர்டு பார்த்தேன். பிரதி ஞாயிறுதோறும் விடுமுறைன்னு போட்டு இருக்காங்க. இதுல என்ன தப்பு தெரியுமா?”

“தெரியலையே. நிறையா இடங்களில் இந்த மாதிரி போர்டு பார்த்து இருக்கேனே.”

“பிரதின்னா ஒவ்வொரு என்ற அர்த்தத்தில் பயன்படுத்தறாங்க. ஆனா ஞாயிறு தோறும்ன்னு சொன்னாலே ஒவ்வொரு ஞாயிறும்ன்னுதான் அர்த்தம். அதனால பிரதி என்ற வார்த்தையே அவசியமில்லாதது.  இதைப் பார்த்தா எனக்கு இந்த விளம்பரங்களில் வரும் வாசகம்தான் நினைவுக்கு வருது. முற்றிலும் புதிய, மேம்படுத்தப்பட்ட அப்படின்னு சொல்லறாங்க. மேம்படுத்தப்பட்டன்னு சொன்னா இருப்பதை இன்னும் நல்ல வகையில் செய்யறது. புதிய என்றால் இல்லாததைக் கொண்டு வரது. இது ரெண்டுல எதாவது ஒண்ணுதான் இருக்க முடியும். அது என்ன புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட?”

“நல்ல கேள்வி. இதை அப்படியே ஒரு கல்லில் செதுக்கி வெச்சுக்கிட்டு தஞ்சாவூர் பெரிய கோயில் வாசலில் உட்கார்ந்துக்கோ.”

 • சில்லறை என்பதே சரி. சில்லரை என்பது தவறு
 • நியாயம் என்பது சரி. ஞாயம் என்பது தவறு.
 • பிரதி ஞாயிறு தோறும் என்று எழுதுவது தவறு. ஞாயிறு தோறும் என்றாலே போதும்.
ஒலி ஓசை ஒளி பிரகாசம்

மறைத்தல்

ஒழி தொலைத்தல்

அழித்தல்

அலி ஆணும் இல்லாமல்

பெண்ணும் இல்லாமல்

இருப்பது

அளி கொடுப்பது அழி கெடுப்பது
கிலி பயம் கிளி பறவை கிழி கிழிப்பது

பொற்கிழி

புலி மிருகம் புளி புளிப்பு

புளியமரத்தின் காய்

புழி பிழி என்பதின்

பேசும் வடிவம்

வலி துன்பம் வளி காற்று வழி தடம்
தாலி திருமணத்தில் கட்டுவது தாளி கடுகு தாளிப்பது தாழி குடம்
வால் விலங்குகளின் வால் வாள் கத்தி வாழ் வாழ்வது
விலா மார்பு விளா ஒருவகை மரம் விழா திருவிழா

விழாமல்

வாலை இளம்பெண் வாளை வாளை மீன் வாழை வாழை மரம்
தலை மண்டை தளை கட்டு தழை புல்

செழித்து வளரு

இலை செடியின் இலை இளை அளவைக் குறைத்தல் இழை நூல்
கலை வித்தை களை எடுத்து விடுதல்

முகத்தின் ஒளி

கழை மூங்கில்
அலை கடல் அலை

அலைதல்

அளை அளைதல் அழை கூப்பிடு
முலை மார்பு முளை முளைப்பது முழை குகை
வலை மீன் பிடிக்கும் வலை

சிலந்தி வலை

வளை வளையல்

வளைந்து செல்

வழை ஒரு வகை மரம்
உலை உலைக்களம்,

சமைக்கும் அடுப்பு

உளை சேறு

வலி

உழை பாடுபடு
விலை மதிப்பு விளை உண்டாக்கு விழை ஆசைப்படு
வலு பலம் வழு தவறு
குலம் சாதி குளம் ஏரி
பாலம் ஆற்றைக் கடக்க

கட்டுவது

பாளம் கட்டி

பாளம் பாளமய்

வெடிக்கிறது

புல் தழை புள் பறவை
பலம் சக்தி பழம் கனி
விலக்கு தவிர்த்திடு விளக்கு தெளிவாக்கு

ஒளி தருவது

விலங்கு மிருகம் விளங்கு சிறப்போடு இரு
வெல்லம் இனிப்பு வெள்ளம் நீர்வரத்து அதிகமாவது
பால் குடிக்கும் திரவம் பாழ் கெடுவது
தாள் காகிதம் தாழ் பணிவது
கொல்லை புழக்கடை கொள்ளை திருட்டு
கல் பாறை கள் பனை மரத்தில்

இறக்குவது

தொலை தூரம்

தவறவிடு

தொளை ஓட்டை
காலை நேரம் காளை மாடு

இளம் வாலிபன்

குலை கொத்து குழை பணிவது

சின்ன ரா பெரிய றா

என் போட்டோ எதுக்கு?

“சுரேஷ், நீ சொன்னதைப் பத்தி ட்விட்டரில் ரொம்ப தகராறு ஆயிருச்சு போல. மாயண்ணன் வந்திருக்காக, மாப்பிள்ளை மொக்கைச்சாமி வந்திருக்கா ரேஞ்சுல பாரதியாரே ஒர் கனவுன்னு போட்டு இருக்காரு, அருணகிரிநாதரும் கூட அப்படிப் பாடி இருக்காரு. ஆண்டாள் கூட வாரணம் ஆயிரம்ன்னு சொல்லி இருக்காங்க. வாரணங்கள் ஆயிரம்ன்னா சொன்னாங்கன்னு கேள்வி மேல கேள்வி கேட்டாங்கடா”

“கேட்டாங்களா? வெரி குட். கூடவே வழுவமைதி அப்படின்னு ஒரு மேட்டர் கூடப் பேசி இருப்பாங்களே!”

“ஆமாண்டா. என்னென்னவோ சொன்னாங்க. கால வழுவமைதி, எண் வழுவமைதி, திணை வழுவமைதி அது இதுன்னு பேசினாங்க. எனக்குத்தான் ஒண்ணுமே புரியலை.”

“முதலில் ஒண்ணு சொல்லறேன் கேட்டுக்கோ. ஆண்டாள் ஆகட்டும், அருணகிரிநாதர் ஆகட்டும், பாரதி ஆகட்டும் பாடின இடங்களில் எல்லாம் இப்படிப் பாடவில்லை. அவர்களுக்கு இந்த இலக்கணவிதிகள் எல்லாம் நல்லாத் தெரியும். இந்த சில இடங்களில் அவர்களின் பாடல்களின் சந்தம் கலையக் கூடாது என்பதற்காக அவர்கள் விதியை மீறி எழுதி இருக்காங்க. அதனால விதிமுறையே தெரியாம செய்யும் தப்பையும் விதிமுறை தெரிஞ்சும் ஒரு சில காரணங்களுக்காக அதை மீறினால் பரவாயில்லை என்பதற்கும் வித்தியாசம் இருக்கு. அதனால அதை முன்மாதிரியா வெச்சுக்கிட்டு நாம செய்யற தப்பை எல்லாம் சரின்னு சொல்லிக்க முடியாது.”

“சரி, ஆரம்பிச்சதுதான் ஆரம்பிச்ச. இந்த வழுவமைதியையும் சொல்லிடேன். அப்படின்னா என்ன?”

“வழுன்னா என்ன? ஆங்கிலத்தில் சொல்லணுமுன்னா இதை Violation அல்லது Defect என்று சொல்லலாம். இன்னிக்கு மென்பொருளில் சொல்லப்படும் Bug என்பதற்கும் சரியான தமிழ்ச்சொல் இந்த வழுதான். வழுவமைதின்னா என்ன? தப்புன்னு தெரிஞ்சும் கண்டுக்காம விடறது. இதுல முக்கியமான மேட்டர் ஒண்ணு கவனிச்சுக்கோ. இதை தப்பு இல்லைன்னு சொல்ல்லை. ஆனா கண்டுக்காத விடுன்னு சொல்லறாங்க. இது புரியாம வழுவமைதி அதனால நான் எழுதறது சரிதாம்பான்னு சொன்னா, நாமதான் அமைதி காக்கணும்.”

“புரியுது. எண், திணை, காலம் இதிதெல்லாம் செஞ்ச தப்பைக் கண்டுக்காம விடறதுக்குத் தனித்தனி பெயரா எண் வழுவமைதி, கால வழுவமைதின்னு எல்லாம் சொல்லி இருக்காங்களா? சரி. தப்பில்லாம எழுதணமுன்னு கிளம்பினா, இதை எல்லாம் செய்யக்கூடாது. இது தப்புன்னே தெரியாம செஞ்சுட்டு அப்புறம் தான் செஞ்சதுதான் சரின்னு சொன்னா அது அடாவடித்தனம்தான். ஓக்கே ஓக்கே!”

”நீயே, நீ படிச்ச பள்ளிக்கூடத்துக்கு உன் பையனைக் கூட்டிக்கிட்டு போறன்னு வெச்சுக்கோ. பாருடா இதுதான் எங்க மைதானம்  இங்கதான் நாங்க எப்போ பாரு விளையாடிக்கிட்டு இருப்போம் அப்படின்னு சொல்லுவ. இல்லையா? ஆனா சரியாச் சொல்லணமுன்னா இங்கதான் நாங்க விளையாடிக்கிட்டு இருந்தோம் அப்படின்னு கடந்த காலத்தில்தானே சொல்லணும். ஆனா நீ இருப்போம் அப்படின்னு எதிர்காலத்தில் சொல்லற. ஆனா விஷயம் கரெக்ட்டா போய் சேருது. இதுவும் கால வழுவமைதிதான். அதுக்காக இதை சாக்கா வெச்சு எல்லா இடத்திலும் கடந்த காலத்துக்குப் பதிலா எதிர்காலத்தைப் போடலாமா?”

“சரிதான். Exceptions do not make the rule!”

“நம்ம வழக்கமா பேசற விஷயத்துக்கு வரலாம். நீ ட்விட்டரில்  தகராறுன்னு சொன்னியே. அதை வெச்சே ஆரம்பிக்கலாம். ரொம்ப பேரு சொல்லும் வேடிக்கை கதைதான். தகராறுன்னு எழுதும் பொழுது சின்ன ர போடணுமா பெரிய ற போடணுமான்னு யாராவது சந்தேகம் கேட்டாப் போதும் உடனே அங்க ஒருத்தராவது சின்ன தகராறுன்னா சின்ன ர இல்லைன்னா பெரிய ற அப்படின்னு சொல்லாமப் போக மாட்டாங்க. கடி ஜோக்தான்னாலும் இந்த மாதிரி ஒரு கதையா சொன்னா மனசுல ஈசியா பதியும்.”

“இப்போ என்ன சொல்லற? சின்ன ரவா பெரிய றவா? எதைப் போடணும்?”

“எந்த பிரச்சனையுமே முதலில் சின்னதாத்தான் வரும். அப்புறமா பெருசாயிடும். அதே மாதிரிதான் தகராறும்.”

“ஓஹோ! முதலில் ர அப்புறமா ற. தக ரா று! சரிதான் இனி குழப்பம் வராது.”

“இதுல எனக்குப் பிடிக்காத விஷயம் என்னன்னா, தமிழில் ஆங்கிலம் மாதிரி பெரிய சின்ன எழுத்துகள் எல்லாம் கிடையாது. அதனால எல்லா எழுத்தும் ஒரே மாதிரிதான். அதுல என்ன சின்ன ர பெரிய றன்னு சொல்லறது. சரியாச் சொல்லணமுன்னா இதை வல்லின ற, இடையின ர அப்படின்னு சொல்லணும். புரியுதா?”

“பெரியது சிறியது எல்லாம் பார்க்காம எல்லாரும் சமம் என்பது தமிழ்க் கலாச்சாரம் என்பது இதில் இருந்தே தெரிகிறது!”

“ஆரம்பிச்சாச்சா!! கொஞ்ச நாள் முன்னாடி ட்விட்டர்ல பொறியியல் சம்பந்தமான ஆத்திசூடின்னு ஆரம்பிச்சாங்க. அதுல முதலில் அரம் செய்ய இரும்பு அப்படின்னு சொன்னாங்க. ஔவை அறம் செய்ய விரும்பு அப்படின்னு சொன்னதுக்கு ஏத்தா மாதிரி வந்திருக்கு பார்த்தியா. இந்த ரெண்டு வரியிலேயே அழகாக அறம், அரம் இது ரெண்டுக்கும் உள்ள வேறுபாடு புரியுது பாரு. அறம்ன்னா தர்மம் பண்ணறது. அரம் அப்படின்னா ஒரு கருவி. மாத்திப் போட்டா பொருளே மாறிடும்.”

“அரம் செய்ய இரும்பு. அறம் செய்ய விரும்பு. இது நல்லா இருக்கே. இந்த மாதிரி இன்னும் கொஞ்சம் ஜோடிகளைச் சொல்லு பார்க்கலாம்.”

“கொஞ்சம் என்ன நிறையாச் சொல்லலாம். அன்னிக்கு ஒரு போஸ்டர் பார்த்தேன். இறங்கல் செய்தி அப்படின்னு போட்டு இருந்தாங்க. இறப்பு என்பதற்கு வல்லின ற வருவதால் அது குறித்த செய்திக்கும் வல்லின ற போட்டுட்டாங்க போல. ஆனால் இரங்கல் என்றால்தான் வருத்தம் தெரிவிப்பது. அதனால இங்க இடையின ரதான் போடணும். விமானம் போக வேண்டிய இடத்துக்குப் போன பின்னாடி அங்க விமான நிலையத்தில் தரையைத் தொடுவதை தரையிறங்கல் அப்படின்னு சொல்லலாம். ”

“ஞாபகம் வெச்சுக்கும் பொழுது இறப்பு என்பதற்கு வல்லின ற வருவதால் இரங்கல் என்பதற்கு இடையின ர வரணும்ன்னு சொல்லலாம்.”

”இறந்தவர்களைப் பத்திப் பேசினதுனால இந்தக் கேள்வியைக் கேட்கறேன் – எரிக்கவான்னு புதைக்கவான்னு கேட்பாங்களே. அங்க எந்த ர/ற வரணும்?”

“அது பேசுபவர்களைப் பொறுத்தது! ஏன்னா பார்சி இன மக்களை எடுத்துக்கிட்டா அவங்க இறந்தவர்களைக் கொண்டு போய் இறந்தவர்கள் கோபுரம் என்ற இடத்தில் போட்டுவிட்டுக் கழுகுகளைத் தின்ன விடுவார்கள். எரியூட்டுவது எனச் சொல்ல இடையின ர போட வேண்டும். எறிந்துவிட்டு வந்துவிட வல்லின ற போட வேண்டும். அதனால இனிமே எரிக்கவா, புதைக்கவா அல்லது எறியவா அப்படின்னு கேட்கலாம்.”

“எறியறதைப் பத்திப் பேசாதேடா. நம்ம ஊரில்தான் கொஞ்சம் கூட பொருப்பில்லாம குப்பையை கண்ட இடத்தில் எறிஞ்சுடறாங்களே.”

“உண்மைதான். பொருப்பு இருந்தால் மட்டும் என்ன வாழுது ஊட்டி, கொடைக்கானலில் எல்லாம் குப்பை போடாமலா இருக்கான்.”

”புரியலையே. இப்போ எங்க இருந்து ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் வந்தது?”

“நீதானே பொருப்புன்னு சொன்ன, பொருப்புன்னா மலை. அதான் நானும் கொஞ்சம் மலையேறிட்டேன். நீ சொல்ல வந்தது பொறுப்பு. அதான் கடமை.  இப்போ வித்தியாசம் புரியுதா?”

“புரியாம என்ன? இடையினம் போட்டா மலை, வல்லினம் போட்டா கடமை!”

“இதுல ஒரு வேடிக்கை தெரியுமா? ஒரு முறை நண்பர் ஒருத்தரோட சாப்பிடப் போனேன். சாப்பிட ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஒரு நிமிடம் கண்ணை மூடி பிரார்த்தனை செய்துவிட்டு சாப்பிடத் தொடங்கினார். என்ன சார், இரை வணக்கமா அப்படின்னு கிண்டலாக் கேட்டேன். அவரும் சீரியஸா இது இறை வணக்கம் அப்படின்னாரு. நானும் விடாம இறை வணக்கம்ன்னா ஏன் இறைக்கிறதுக்கு முன்னாடியே செய்யறீங்கன்னு கேட்டேன். பாவம் ரொம்ப அப்செட் ஆகிட்டாரு.”

“இரை – இறைன்னு நல்ல வார்த்தை விளையாட்டுதான். அதுவும் இறை என்றால் ரெண்டு அர்த்தம் இருக்கு இல்லையா?”

“ஆமாம். இரைன்னா உணவு, அவர் சொன்ன இறை – கடவுள், இறைக்கு சிதறு அப்படின்னு ஒரு அர்த்தம் இருக்கே. அதை வெச்சுத்தான் நானும் ஒரு வார்த்தை விளையாட்டு விளையாடினேன்.”

”இந்த ரை/றை குழப்பம் இன்னும் நிறைய இடத்தில் வருது இல்லையா?”

“ஆமாம் சொல்லிக்கிட்டே போகலாம் – குரை/குறை, சிரை/சிறை, திரை/திறை, உரை/உறை, கரை/கறை, கூரை/கூறை, பாரை/பாறை இப்படி எவ்வளவோ இருக்கு.  பேச ஆரம்பிச்சாப் பேசிக்கிட்டே இருக்கலாம்.”

“கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு. என் கண்ணு ரெண்டும்…”

“இப்போ என்ன திரும்ப சினிமாப் பாட்டு பக்கம் போயிட்ட?”

“இல்லடா, எனக்கு இதுல ஒரு பெரிய குழப்பம் இருக்கு. கருப்பா? கறுப்பா?”

“இந்த ற/ர குழப்பம் பத்திப் பேசும் போது கட்டாயமாப் பேச வேண்டிய ஒரு விஷயம்தான் இது. கருமை, கருங்குரங்கு, கருவளையம், இப்படி கருப்பு சம்பந்தமான விஷயங்கள் பத்தி பேசும் போதெல்லாம் இடையின ரதான் வருது பாரு. அதனால கருப்புதான் சரி. கறுப்புன்னா சினத்தைக் குறிக்கும். கறுத்த மாமுனி அப்படின்னு  கம்பர் கௌதம முனிவரைச் சொல்லி இருக்காரு. மொத்தத்தில் நீ பாடின கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலருன்னு பாடினதுதான் சரி.”

“ குட். போறதுக்கு முன்னாடி தலைப்புச் செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்ஸ்வாமி ரேஞ்சில் பேசினது எல்லாத்தையும் சொல்லுவியே. அதைச் செய்.”

”இப்படி மட்டும் பேசாதே. இதைக் கேட்டா எனக்கு ஆத்திரம் பத்திக்கிட்டு வரும். செய்திகளைப் படிப்பது ஆடா மாடா? அவங்களும் மனுசங்கதானே. அப்புறம் என்ன படிப்பது? செய்திகளை வாசிப்பவர் அல்லது செய்திகளைப் படிப்பவர்ன்னு சொன்னா என்னவாம்? இதை டெய்லி கேட்டு நமக்கும் தப்புன்னே படறது இல்லை.”

“சரி சரி, நீ கோவப்பட்டு என்ன ஆகப் போகுது. வா, போய் வேலையைப் பார்க்கலாம். ”

தகராறு சரியான பயன்பாடு தகராரு தவறான பயன்பாடு
அரம் இரும்பாலான ஒரு கருவி அறம் தர்மம்
இரங்கு வருத்தப்படு இறங்கு கீழே செல்
எரி தீயினால் சுடு எறி வீசு
துரவு கிணறு துறவு சந்நியாசம்
பொரி சூட்டில் வறுத்தல் பொறி இயந்திரம்
பொருப்பு மலை பொறுப்பு கடமை
கருப்பு வண்ணம் கறுப்பு சினம்
இரை உணவு இறை கடவுள், சிதறு
குரை நாய் குரைப்பது குறை கொஞ்சம், வருத்தம்
சிரை தலை மயிரை நீக்கு சிறை அடைத்தல், சிறைச்சாலை
திரை திரைச்சீலை, அலை

(திரை கடலோடியும்)

திறை கப்பம்

(வரி, வட்டி, கிஸ்தி, திறை)

உரை சொல், பேசு,

தங்கத்தை உரை, விளக்கம்

உறை பை, இருப்பிடம்
கரை எல்லை, கடற்கரை,

கரைத்து விடுதல், கூவு

கறை களங்கம், அழுக்கு
கூரை வீட்டின் மேல் பகுதி கூறை திருமண உடை

(கூறைப் புடவை)

பாரை கடப்பாரை பாறை கல