ஃபைனல் செட்டில்மெண்ட்
சித்ராவிற்கு ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை. குடும்பத்தில் முதல் பட்டதாரி. வேலை வந்தவுடன் வீட்டுக்கு வேண்டிய சாமான்களையெல்லாம் வாங்கிக் குவித்தார். 2008ல் பொருளாதார மந்தசூழல் காரணமாக, அவரின் நிறுவனம் ஆட்குறைப்பு செய்தது. சித்ராவுக்கு வேலை காலி. ஆனால் வீட்டு வசதிக்காக கிரெடிட் கார்டில் வாங்கியது, தனிநபர் கடன்கள் என வங்கியில் குட்டிப்போட்டு EMIவழியாக குறைந்துக் கொண்டிருந்தன. வருமானம் நின்று போனது. வங்கி அனுமதித்த கலெக்ஷன் ஏஜெண்ட்கள் போனில் துரத்த ஆரம்பித்தார்கள். வேலை இல்லை. கொஞ்சம் பணமிருக்கிறது. சித்ரா என்ன செய்வார்?
ஊரிலிருந்து வரும்போது சண்முகத்திடம் உழைப்பைத் தவிர வேறெதுவுமில்லை. அண்ணாச்சி கடைகளில் எடுபிடியாக ஆரம்பித்து, பின் மார்க்கெட்டிங் வேலை செய்து, வாட்டர் பில்டர் விற்று, 10 வருடங்கள் போராடி சொந்தமாய் கடைப் போட்டார். அண்ணாநகரில் இரண்டாவது அவென்யுவில் பகடி கொடுத்து, மனைவி நகையை அடமானம் வைத்து, வங்கி கடன், தனிநபர் கடன், வீட்டின் மீது கடனெல்லாம் வாங்கி ஒரு டெல்லி கம்பெனியின் டீலராக மாறினார். மூன்று வருடங்களில், டெல்லி கம்பெனி போண்டியானது. சரக்கு நின்றுவிட்டது. கொடுத்த முன்பணம் வரவில்லை. வாடிக்கையாளர்கள் விலக ஆரம்பித்தார்கள். வங்கிகள் கொடுத்த கடனுக்கு கடை வாசலில் வந்து நிற்க ஆரம்பித்தார்கள். சண்முகம் என்ன செய்வார்?
சுற்றிலும் கொஞ்சம் காது கொடுத்து கேட்டால், இந்த மாதிரி ஆயிரம் கதைகள். சென்னையில் சொந்தமாய் ஆட்டோ ஒட்டும் எல்லார் பின்பும், ஒரு சிறுதொழில் நாசமாய் போன கதையோ, வேலையிலிருக்கும் போது ஆடின கதையோ நிச்சயமாய் இருக்கிறது. என்னுடைய வீட்டுக்கு ஏர்டெல் பில் வசூலிக்க வரும் நபரில் ஆரம்பித்து, வங்கி கலெக்ஷன் ஏஜெண்ட்கள், டை மாட்டிக் கொண்டு பாண்டி பஜாரில் பொம்மைகள் விற்கும் ஆட்கள் என எல்லாரிடத்திலும் கதையுண்டு. சுற்றி சுற்றி வந்தாலும், எல்லா கதைகளும் முடிவது ஒரு இடத்தில். ”நம்பினேன், காசு போயிருச்சு, வேற வழியில்லைன்னு இதுல இறங்கிட்டேன்”
தமிழ்சினிமாவில் எப்படி எந்த சினிமாவும் போண்டியாகும் என்று நினைத்து பூஜைப் போடுவதில்லையோ, அதே மாதிரி தான் யாரும் ஏமாற்றவேண்டும் என்று நினைத்து கடன்கள் வாங்குவதில்லை. ஏமாற்றும் கூட்டம் வெகு சிறியது. எல்லார்க்கும் இன்றைய நாளை விட எதிர்காலம் நன்றாக இருக்கும் என்கிற நம்பிக்கையில், இன்றைக்கு கடன் வாங்குகிறார்கள். பின்னாளில் எதிர்பார்த்தாற்போல நடக்கவில்லையென்னும்போது பணவரத்து நிற்கிறது. தடுமாற்றம் வருகிறது. திட நெஞ்சுக்காரர்கள் எதிர்த்து நிற்கிறார்கள். பலவீனர்கள் ஒடி ஒளிகிறார்கள். ஊரை விட்டே ஒடுகிறார்கள். தற்கொலை செய்கிறார்கள். கொஞ்சம் புத்தியும், நேர்மையும் இருப்பவர்கள் அதிலிருந்து வெளிவரும் சரியான சட்டப்பூர்வமான வழியே தேர்ந்தெடுகிறார்கள்.
இன்றைக்குப் போலவே நாளையும் நமக்கு பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்கிற நம்பிக்கை தான் எல்லாரையும் கடன்கள் வாங்கச் சொல்கிறது. நாளையின் நிச்சயமற்றத் தன்மையினை யாரும் கடன் வாங்கும்போது யோசிப்பதேயில்லை. கடன் பெறுதல் தப்பில்லை. ஆனால், அதை எப்படி திருப்பி அடைக்கப் போகிறோம் என்கிற தெளிவு இல்லாமல் கடன் வாங்குதல் சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளுதல். மேலும், எந்த அளவிற்கு நம்முடைய வருமானத்திலிருந்து நாம் கடன்களை அடைக்கிறோம் என்பதும் முக்கியம். கடங்காரா-வில் இதைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.
சென்னை OMRல் சந்தை மேலிருக்கும் போது வாங்கி, பின் மந்தச்சூழலில் தவணைகளை கட்டமுடியாமல் ஏராளமான அபார்ட்மெண்ட்கள் இப்போது வங்கிகளின் பிடியில் இருக்கின்றன. அதை முதலில் வாங்கியவர்களால் (முக்கியமாய் மென்பொருள் துறையில் இருப்பவர்கள்) தங்களுடைய மார்ஜின் பணத்தையும், அதுவரை கட்டிய தவணையையும் கூட பார்க்காமல், நெடுஞ்சாண்கிடையாக காலில் விழுந்து, எழுதிக் கொடுத்துவிட்டு வேலையைப் பார்க்கப் போய்விட்டார்கள். வீடு சொத்தாக இருப்பதால் தப்பித்தார்கள், சொத்தில்லாமல் எவ்விதமான பாதுகாப்பும் இல்லாமல் கொடுத்த கடன்களை எப்படி வங்கித் தொல்லையிலிருந்து தப்பி திருப்பி அடைப்பார்கள் ?
Enough Gyan. சித்ராவுக்கும், சண்முகத்திற்கும் என்ன வழி்?
பைனல் செட்டில்மெண்ட்.
வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் இறுதி வாய்ப்பு தான் செட்டில்மெண்ட். வாடிக்கையாளரால் வாங்கிய கடனை முழுமையாக கட்ட முடியாமல் போனாலோ, அல்லது வியாபாரம் நட்டமானாலோ, வேலை இழந்தாலோ வேறு எதிர்பாராத காரணங்களால் பணவரத்து வங்கிக்கு நின்றாலோ, வங்கி முதலில் வாடிக்கையாளரின் கடன் வரலாற்றினைப் பார்க்கும். நேர்மையான காரணங்களினால், சில மாதங்கள் தவணைகள் நின்று போயிருந்தால் அதை கொஞ்சம்கொஞ்சமாக திருப்பிக் கட்டி, கணக்கினை நேர் செய்து கொள்ளலாம்.
ஆனால், ஆறு மாதங்களுக்கு மேல் தொடர்ச்சியாக தவணைகள் வரவில்லையென்றால் தான் செட்டில்மெண்ட் மாதிரியான விஷயங்கள் பேச முடியும். அதுவும் இரண்டு விதமாக நடக்கும்.
ஒன்று, தொடர்ச்சியாக ஆறு மாதங்களாய் உங்கள் காசோலை பவுன்ஸ் ஆனாலோ அல்லது ஈ சி எஸ் எகிறினாலோ முதலில் மீண்டும் முயற்சிப்பார்கள். அது முடியாத பட்சத்தில், கால் சென்டரிலிருந்து பெண்கள் பேசி, ஆட்களை அனுப்பி வசூலிக்க முயற்சிப்பார்கள். அப்படியும் வரவில்லையென்றால் முதலில் ஒரு வக்கீல் நோட்டீஸ் வரும். அந்த நோட்டீஸ், வசூலிக்க வேண்டிய தொகையினைக் குறிப்பிட்டு, இன்ன தேதியில், இன்ன இடத்தில் இன்னாரை சந்தித்து பேசி, சுமூகமாக முடித்துக் கொள்ளலாம் என்று இருக்கும். இது ஒரு வழி.
இல்லையென்றால், நேரடியாக வங்கியிலிருந்தே மக்கள் நீதிமன்றத்திற்கு (Lok Adalat)வரச் சொல்லி அழைப்பு வரலாம். மக்கள் நீதிமன்றம் என்பது ரிட்டயர் ஆன நீதிபதிகள் உட்காரும் ஒரு இலவச சட்ட சமரச அமைப்பு. அதற்கு சட்டரீதியாக உங்களை தண்டிக்கவோ, வழக்கு தொடரவோ அதிகாரமில்லை.
நீங்கள் போனால், வங்கியிலிருந்து வந்திருக்கும் ஆட்களும், நீங்களும் அருகருகில் அமர்ந்து “ஐயா” என்று ஆரம்பித்து வங்கி ஆட்கள் உங்கள் மீது புகார் பட்டியல் வாசிப்பார்கள். இவர் இவ்வளவு மாதங்களாய் பணம் தரவில்லை. இன்னாருடைய அசல் தொகை இது. வட்டி இது. நாங்கள் சுமூகமாக வாடிக்கையாளருக்கும் பயனளிக்கும் வகையில் எங்களுடைய தொகையிலிருந்து கொஞ்சம் குறைக்கிறோம். தவணைகள் தருகிறோம். வாடிக்கையாளரை கட்டச் சொல்லுங்கள். உடனே, நீதிபதி உங்கள் தரப்பு வாதத்தினையும் கேட்பார். நீங்களும், உங்கள் சொந்த/சோகக் கதைகளை சொல்லலாம். நீங்களும் வங்கியும் ஒரு தொகைக்கு ஒத்துக் கொண்டால், அங்கேயே வங்கி நீதிபதி முன்னிலையில் உங்களுக்கான தொகை என்ன, எவ்வளவு தவணைகள், தள்ளுபடி எவ்வளவு, இதுவே இறுதியும், முடிவானதுமான செட்டில்மெண்ட் என்றும் ஒரு லெட்டர் தருவார்கள். அத்தோடு கதை ஒவர்.
ஒரு வேளை, மக்கள் நீதிமன்றத்தில் ஒத்து வரவில்லையென்றால், வங்கி நேரடியாக உங்களோடு பேரம் பேசலாம். இது நடக்க வேண்டுமெனில், குறைந்தபட்சம் கடன் தவணை 9-12 மாதங்கள் வரை தரப்படாமல் இருக்கவேண்டும். வங்கியே நேரடியாக அவர்களின் அலுவலகத்தில் அழைத்து மீண்டும் அசல், வட்டி இன்னபிற தொகை நிலுவைகளைச் சொல்லி, வட்டியை முழுவதுமாக ரத்து செய்கிறோம். பெனால்டி, தாமத கட்டணங்களை ரத்து செய்கிறோம். அசலில் இவ்வளவு தள்ளுபடி செய்கிறோம் என்று இறங்கி வரலாம். அங்கேயும் நீங்கள் உங்கள் நிலையை எடுத்துச் சொல்லி, செட்டில்மெண்ட் கோரலாம். எனக்குத் தெரிந்தவரை, தனியார் வங்கிகள் 40% அசல் தொகை வரை செட்டில்மெண்ட் கொடுத்ததுண்டு. வட்டி, பெனால்டி எல்லாம் ரத்து செய்யப்படும். ஆனால், அந்த செட்டில்மெண்ட் தொகையினை ஒழுங்காக கட்ட வேண்டும். அதைக் கட்டத் தவறினால், வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறும். நீங்கள் மொத்தத் தொகை, வட்டி, பெனால்டிக்கு பதில் சொல்லவேண்டும்.
பொதுவாக, வங்கிகளில் கடன்கள் வசூலிப்பதை பக்கெட் என்று பிரிப்பார்கள். பக்கெட் 1 என்பது ஒன்றிலிருந்து இரண்டு மாதங்கள் தவணை வராமல் இருப்பது. இது முழுக்க முழுக்க கால்சென்டர் பெண்களின் பாலோ-அப் வேலை. பக்கெட் 2 என்பது இங்கிருந்து கீழேப் போவது. இப்படி கிட்டத்திட்ட பக்கெட் 6 வரைக்கும் போகும். பக்கெட் 6 என்பது கிட்டத்திட்ட வங்கி கைக்கழுவி விட்ட வாடிக்கையாளர். அவரிடமிருந்து எது வசூலித்தாலும் அது வங்கிக்கு லாபம் என்கிற நிலையில், அதை வாரா கடன்கள் (Non performing Assets / Defaults) என்கிற அளவில் தள்ளி விடுவார்கள். பெரும்பாலும் பக்கெட் 6 போவது கடினம். ஏனென்றால், ஒவ்வொரு பக்கெட்டிலும் கலெக்ஷன் ஏஜெண்டுகளுக்கான கமிஷன் ஏறும். உதாரணம், பக்கெட் 4-5ல் இருந்து செட்டில்மெண்ட் போனால், செட்டில்மெண்ட் தொகையில் கிட்டத்திட்ட 15-20% வரைக்கும் கலெக்ஷன் ஏஜெண்டுகளுக்கு போகும் சாத்தியங்கள் உண்டு. ஏன் தொடர்ச்சியாக, வங்கியை விட இந்த கலெக்ஷன் ஏஜெண்ட்கள் உங்களின் தவணையைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள் என்றால் இது தான் காரணம்.
இதையெல்லாம் தாண்டி வாடிக்கையாளர் பணம் திருப்பித் தரவில்லையென்றால், அவரின் மீது செக்ஷன் 138, காசோலை மோசடி வழக்குப் போட்டு, நோட்டீஸ் அனுப்பி, அதை வாங்காமல் இருந்தால், அதை பிணையில்லா வழக்காக மாற்றி, ரோஜா மாதிரி கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் உங்களை அலைய விடலாம். அதை செய்யும் சக்தியும், தகுதியும் வங்கிக்கு இருக்கிறது. ஆக வாங்கிய கடனை எதிர்பாராதக் காரணங்களினால் அடைக்க முடியாமல் போனால் அது அழிந்துவிடும் என்று ஒரு போதும் என்னாதீர்கள். கடன்களை செட்டில்மெண்ட் போய் அடைத்தாலேயொழிய ஆறு மாதங்களில் சிபிலில் (CIBIL) உங்கள் பெயரைத் தூக்கமாட்டார்கள். சிபிலில் பெயர் இருந்தால், அடுத்த ஐந்து வருடங்கள் – எந்த வங்கியும் கடன் தராது. சிங்கி தான் அடிக்க வேண்டும். அதற்கு மேலும் கடன் வேண்டுமென்றால், கந்துவட்டி வாங்கி குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடும். ஆகவே, வாங்கிய கடன்களை செட்டில்மெண்ட் செய்தாவது முடியுங்கள்.
செட்டில்மெண்ட் வாங்கும் போது அதில் என்ன எழுதியிருக்கிறது என்று படியுங்கள். Full and Final Settlement of all dues outstanding என்கிற வாசகமும் all legal cases & other actions taken by the bank will be withdrawn என்கிற வாசககும் கட்டாயம் இருக்கவேண்டும். அது இல்லாமல் பேப்பரை வாங்காதீர்கள். செட்டில்மெண்ட் தாளிலேயே, நீங்கள் ஒப்புக் கொண்ட பணமும், அதன் தவணைகளும் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கவேண்டும். அசல் உங்களுக்கும், நகல் வங்கிக்குமாக இரண்டு பிரதிகளில் உங்கள் கையெழுத்தும், வங்கி அதிகாரியின் கையெழுத்தும் இருக்க வேண்டும்.
இதிலிருந்தெல்லாம் தப்பிக்க ஒரு வழி இருக்கிறது. ரூ. 1.75 தட்சணையும், யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று உறுதிப்பிரமாணமும் எடுத்தால் தனியாகச் சொல்லிக் கொடுக்கிறேன்
மெக்சிகோ சலவைக்காரி ஜோக் போல இதைப் பொதுவில் சொல்ல முடியாது.
இதுநாள் வரை, பணம் பற்றியும், நுட்பம் பற்றியும் கிட்டத்திட்ட 6 மாதங்களாக எழுதியவை அனைத்தும் என்னுடைய சொந்த அனுபவம். நேரடியாக அனுபவித்தது, நண்பர்களின் வாழ்வில் பார்த்தது, பாதித்தது, படித்தது, உணர்ந்தவைதான்.
பைனல் செட்டில்மெண்ட் என்பது இந்தக் கட்டுரைக்கான தலைப்பு மட்டுமல்ல, இப்போதைக்கு இந்தப் பகுதிக்கும்கூட. இப்போது விடைபெறுகிறேன். மீண்டும் வேறு உரையாடலை ஆரம்பிப்போம். நன்றி. வணக்கம்.
படம்: நன்றி – passionforcinema.com














