ஜன்ம சாபல்யம்

 

என் வீட்டில் ஒரு சின்ன தொலைக்காட்சி பெட்டி இருந்தது. புதுப்புது விதமான எத்தனையோ பெட்டிகள் சந்தையில் வந்து போய்விட்டன. அகலமானது, சதுரமானது, அதி துல்யமானது, பிளாஸ்மா, சுவரில் கொழுவுவது இப்படி பல. ஆனால் என் வீட்டின் ஒரு மூலையில் இருந்து பல வருடங்களாக தன் காரியத்தை சரியாகச் செய்தது இந்த தொலைக்காட்சி பெட்டி. ஒரு ஐந்து வயதுக் குழந்தை டிவியின் முன்னால் நின்றால் அது முழுவதுமாக மறைந்துவிடும். அவ்வளவு சின்னது ஆனாலும் சளைக்காமல் வேலை செய்தது.

தொலைக்காட்சியில் பல ஆங்கில சானல்களும் நாலு தமிழ் சானல்களும் இருந்தன. தமிழ் சானலில் எதைப் போட்டாலும் ஓரு பாட்டுப் போட்டி அல்லது நடனப் போட்டி அல்லது இரண்டும் நடந்துகொண்டிருக்கும். ஒரு நாள் இரவு இரண்டு மணிக்கு எழும்பினேன். வெளியே பனிப்புயல் அடித்துக்கொண்டிருந்தது. சரி, என்னதான் நடக்கிறது என்று தொலைக் காட்சியை இயக்கியபோது அங்கே ஒரு சங்கீத யுத்தம் முடிவை நெருங்கிக்கொண்டிருந்தது. அடுத்த நாள் காலை மறுபடியும் போட்டுப் பார்த்தேன். அப்போதும் ஒரு சங்கீதப் போட்டி நடந்தது. மூன்று பிரபலமான பாடகர்கள் நடுவிலே உட்கார்ந்து தீர்ப்பு வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

எத்தனை சங்கீதப் போர்களை ஒருவர் கேட்கமுடியும்? காலையில் இருந்து இரவு படுக்கும் வரை அவை என்னைத் துரத்தின. சில சமயங்களில் என்னுடைய டிவி தானாகவே அவஸ்தை தாங்கமுடியாமல் நின்றுவிடும். தலையில் ஒரு தட்டு தட்டியவுடன் மறுபடியும் ஆரம்பிக்கும். எல்லாமே சினிமாப் பாடல்கள். சிவாஜி காலத்தில் ஆரம்பித்து ரஜினியின் சிவாஜிவரை தொடர்ந்தன. எத்தனை வகையான பாடல்கள் இருக்கின்றனவோ அத்தனை பாடல்களும் அத்தனை குரல்களில் அத்தனை பிழைகளுடன் பாடப்பட்டன. இவைகளைக் கேட்கும்போது எத்தனை வகையான பிழைகள் இருக்கின்றன என்ற அறிவு எனக்கு கூடிக்கொண்டே போனது.

ஒரு கட்டத்தில் விளம்பர இடைவேளைகள் வந்தபோது அவசரமாகப் போய் என் வேலைகளை முடித்துவிட்டு வந்து பாடல்களை கேட்க ஆரம்பித்தேன். பின்னொரு கட்டத்தில் அவர்கள் பாடும்போதும் போய் என்னுடைய அலுவல்களை முடித்துவிட்டு வந்து நடுவர்களின் தீர்ப்பு கட்டம் வரும்போது அவர்கள் பேசுவதைக் கவனிக்க ஆரம்பித்தேன். அவர்கள் கருத்துகளும் தீர்ப்புகளும் சுவை குறையாமல் இருந்தன. ஒவ்வொரு பாடலுக்கும் ஏதாவது ஒரு புதுவிதமான குறையை கண்டுபிடித்து சொன்னார்கள். அந்தப் பாடகரின் முகம் சரிந்து போவதை பார்ப்பதில் பலருக்கும் ஆர்வம் இருந்தது தெரிய வந்தது.

மூன்று நடுவர்களில் ஒருவர் எப்பொழுது பார்த்தாலும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் ஏதாவது கிறுக்கிக்கொண்டு இருப்பார். என்ன எழுதுகிறார் என்பது தெரியவில்லை. அவருடைய கருத்தை சொல்லும் முறைவரும்போது ஒன்றிரண்டு வரிகளில் பேசி முடித்துவிடுகிறார். இவர், வேறு யாரோ காசு கொடுத்து கிடைக்கும் நேரத்தில் தன்னுடைய சுயசரிதையை எழுதுகிறாரோ என்னவோ. மற்றவர் ஒரு பெண். ஒரு காலத்தில் பிரபலமான பாடகியாய் இருந்தவர். ஒவ்வொரு முறையும் ஒரு புதிய சேலை உடுத்தி புதிய நகை அணிந்து புதிய ஒப்பனையுடன் வீற்றிருப்பார். ஒட்டியாணம் மட்டும் கிடையாது, ஆசை இருந்தது ஆனால் அவர் இடுப்பளவு ஒட்டியாணம் கடைகளில் கிடைக்காது என நினைக்கிறேன்.  புகைப்படத்துக்கு சிரிப்பது போல புன்னகையுடன் எந்நேரமும் காட்சியளிப்பது அவர் வழக்கம். இவர் ஒருவர்தான் போட்டியாளர் எவ்வளவு மோசமாக பாடினாலும் தலையை ஆட்டி தாளம்போட்டு ரசித்தபடி இருப்பார்.

மூன்றாவது நடுவர் ஏன் அங்கே உட்கார்ந்திருக்கிறார் என நான் குழம்பிப்போய் இருக்கிறேன். நாலு பேர் இவரை இழுத்துப் பிடித்து  வந்து உட்காரவைத்தது போல உட்கார்ந்திருப்பார். அவருடைய உடம்பும் மூளையும் அங்கே இல்லை. கைகள் இரண்டையும் மேசையில் ஊன்றிப் பிடித்தபடி எந்த நேரமும் எழும்பி ஓடுவதற்கு தயாரானவர் போலவே காட்சியளிப்பார். சிரிப்பதற்கு பத்து தடவை யோசிப்பார். ஆனால் தற்செயலாக அவர் கவனத்தை ஈர்க்கும்விதமாக ஏதாவது வேடிக்கையாக நிகழ்ந்துவிட்டால் மனிதர் தலையை மேசையில் குனிந்து குனிந்து அடித்து சிரிப்பார்.

நான் என்ன வேலையில் இருந்தாலும் நடுவர்கள் சொல்லும் தீர்ப்புகளைக் கேட்க தொலைக்காட்சிக்கு முன்னால் வந்துவிடுவேன்.

நடுவர்களின் பழக்கம் என்னவென்றால் முதல் இரண்டு நிமிடங்களும் பாடியவரை புகழ்ந்து தூக்குவார்கள். பின்னர் தள்ளிவிடுவார்கள். அன்றைக்கு பாடிய பையனின் பெயர் சுரேஷ். வயது இருபதை தாண்டாது. முழங்கால்களில் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து உத்தமபுத்திரனில் சிவாஜி நடந்துவருவதுபோல அசைந்து வந்து மேடையின் நடுவில் நின்றார். அவரிடம் y குரோமசோம்கள் கொஞ்சம் அதிகமாகவே காணப்பட்டன.  மைக்கை எடுத்துப் பிடித்தவகையில் ஏதோ புதுசாக வரப்போகிறது என்று நினைத்தேன்.  ஏ.ஆர் ரஹ்மானின் பாடல் ஒன்று 436வது தடவையாக அந்த மேடையில் அரங்கேறியது. மாட்டிலே பால் கறப்பதுபோல ஒரு கையை மேலேயும் கீழேயும் ஏற்றி இறக்கி பாடினார். பாத்திரம் நிறைந்ததும் பாட்டும் முடிந்தது.  நடுவர் பெண் சொன்னார். ‘சுரேஷ், மிக அழகாகப் பாடினீர்கள். உங்கள் குரல் இந்தப் பாட்டுக்கு என்று செய்ததுபோல பொருத்தமாக அமைந்துவிட்டது. அங்கங்கே சுருதி கொஞ்சம் பிசகிவிட்டது. சரணத்துக்கு வந்தபோது தாளமும் இப்படியப்படி தவறிவிட்டது. தமிழ் சொற்கள் உச்சரிப்பை உருண்டையாக்குங்கள். அதில் கூடிய கவனம் செலுத்தியிருக்கலாம்.. மற்றும்படிக்கு மிக அழகாக render பண்ணியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.’

அவரைத் தொடர்ந்து நோட்டுப் புத்தகத்துடன் உட்கார்ந்திருக்கும் நடுவர் சொன்னார். ‘உங்கள் குரல் ஆட்களை மயக்கவல்லது. அப்படி ஒரு கவர்ச்சி இருக்கிறது. நான் நடுவராக இருப்பதால் ஏதாவது சொல்வதற்காக சொல்லவில்லை. உங்கள் பாட்டு excellent ஆக இருந்தது. நீங்கள் பயிற்சி செய்தால் சின்னச் சின்ன பிழைகளைக் களைந்துவிடலாம். முக்கியமாக தாளத்தோடு இணைந்து பாடுவது, அது பல இடங்களில் தனியாகப் போய்விட்டது. ஆனால் சங்கதிகள் எல்லாம் amazing. சினிமாவில்கூட இந்தச் சங்கதிகள் இத்தனை அழகோடு வெளிப்படவில்லை.’

வேண்டா வெறுப்பு நடுவர் முகத்தில் முதல் தடவையாக ஒரு புன்னகை தோன்றியது. இருப்பதில் ஆகச் சின்ன சில்லறைக் காசை எடுத்து பிச்சைக்காரனுக்கு எறிவதுபோல சொன்னார். ‘சுரேஷ், அருமையான பாட்டுத் தெரிவு. இப்படியான போட்டிகளில் உங்கள் குரலுக்கு ஏற்ற பாடலை தெரிவு செய்தாலே பாதி வெற்றி கிடைத்துவிடும். கண்ணை மூடிக்கொண்டு கேட்டபோது எஸ்.பி.பி பாடியதுபோலவே இருந்தது. உங்கள் பிரச்சினை என்னவென்றால் மேடையில் நிற்கும்போது உங்களுக்கு வேண்டாத டென்சன் வந்துவிடுகிறது. ஒரு பரீட்சைக்கு பாடுவதுபோல பாடுகிறீர்கள். அதுதான் எதிர்பாராத இடங்களில் சறுக்குகிறது.’ அவர் பாராட்டினாரா அல்லது அதற்கு எதிரானதைச் செய்தாரா தெரியவில்லை.

அடுத்து ஒரு பெண் பாடுவதற்கு வந்தாள். சாரியும் இல்லை. சுரிதாரும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு வகையான உடை. மார்பில் பச்சை குத்தியிருந்தாள், அதில் பாதி வெளியே நீட்டிக்கொண்டு தெரிந்தது. முழுவதையும் பார்க்கும் ஆசையையும் தூண்டியது. தோள் மூட்டிலும் பச்சை குத்தியிருந்தார். கண் மடல்களில் பூசியிருந்த இளஞ்சிவப்பு பூச்சு அவர்  கண்களை மூடியபோதெல்லாம் தெரிந்தது. கண்களைத் திறந்ததும் மறைந்துபோனது. பிரபலமான குத்துப் பாட்டு ஒன்றை ஆரம்பித்தார். பாடினார், குதித்தார் பின்னர் ஆடினார். பாட்டின் இறுதியில் நோட்டு புத்தகம் எழுதும் நடுவரும் எழுந்து மேடைக்குச் சென்று அவருடன் ஆடினார். அவரால் ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. தன்னுடைய இருக்கைக்கு திரும்பியதும் பரபரவென்று ஏதோ எழுதினார்.

பாட்டு முடிந்ததும் வழக்கம்போல நடுவர்களின் தீர்ப்பு நேரம். நடுவர் பெண்மணி சொன்னார். ’நீங்களும் நல்லாகப் பாடினீர்கள். சும்மா இருப்பவரையும் எழும்பி ஆட வைக்கும் பாட்டு. அது இசை அமைத்தவரின் திறமை. சரியான இடங்களில் பாட்டின் உணர்ச்சிகள் வெளிப்படவேண்டும். அது பாடகர் செய்ய வேண்டிய வேலை. அது எல்லாம் நல்லாய் வந்திருக்கிறது. ஆனால் dynamics போதாது. மேடையில் ஏதோ ஒன்று உங்களை தடுக்கிறது. உங்களுக்குள் இருக்கும் முழுத் திறமையும் வெளியே வரவில்லை.’

மற்ற நடுவரும் இதையே வேறு வார்த்தைகளில் சொன்னார். ’ரொம்ப அருமை. ஆனால் feelings பற்றாது. இன்னும் கொஞ்சம் பாடலுக்கு உள்ளே போயிருக்கலாம். எனக்கு என்னவோ ஒரு ஸ்கேல் மேலே பாடியிருக்கலாமோ என்றுகூட படுது.’ வேண்டா வெறுப்பு நீதிபதி ஒரு குண்டை தூக்கி போட்டதுபோல சொன்னார். அந்தப் பெண் அவ்வளவு துள்ளியதும், பாடியதும், நெளிந்ததும் நடுவரை கொஞ்சமும் அசைக்கவில்லை. வழக்கம்போல பாடியவரை இரண்டு நிமிடம் புகழ்ந்த பின்னர் இப்படிச் சொன்னார்.

‘என்ன அம்மா, இந்த தடவையும் அபஸ்வர கிரீச்சிடல் வந்துவிட்டதே. போனதடவை இனிமேல் வராது என்று சொன்னீர்கள். சரி, அது கிடக்கட்டும். நீங்கள் தமிழ்தானே. எதற்காக ஹிந்திக்காரர் தமிழ் உச்சரிப்பதுபோல நீங்கள் உச்சரிக்கவேண்டும். இது ஹிந்தி பேசும் ஒருவர் பாடிய தமிழ் பாட்டு. ஆகவே நீங்களும் அவர் விட்ட பிழைகளை விடத்தேவையில்லை. உங்கள் மூளை சொல்வதை உங்கள் வாய் கேட்க மறுக்கிறது. மேலே போகும்போது நிதானத்துடன் போகும் நீங்கள் கீழே வரும்போது glide பண்ண வேண்டும். மேடையில் குதிப்பது வேறு. பாடும்போது குதிக்க முடியாது. மெதுவாக கீழே இறங்கவேண்டும்.’ பெண்ணுக்கு கண்கள் பளபளத்தன. அடிக்கடி மென்சிவப்பு கண்களை வெட்டி நீரைத் தடுக்கப் பார்த்தார்.

இப்படி நடுவர்களின் பிரசங்கங்களை சுவாரஸ்யமாக கேட்டுக்கொண்டிருந்தபோது நான் எதிர்பாராத ஒன்று நடந்தது. என்னுடைய டிவிப்பெட்டி என்ன நினைத்ததோ அதிலிருந்து ஒலி வந்தது. ஆனால் படம் இல்லை, கோடுகள் மட்டும் ஓடின. ஒரு பெண் பாடினார், பாட்டுக் கேட்டது. பெண்ணைத் தெரியவில்லை. நான் தொடர்ந்து டிவிப் பெட்டியில் கோடுகளைப் பார்த்தபடி பாடலைக் கேட்டேன். பாட்டு முடிந்ததும் நடுவர்கள் ஒவ்வொருவராக பேசத்தொடங்கினர். குரலில் இருந்து என்னால் யார் பேசுகிறார் என்பதை ஊகிக்க முடிந்தது.

முதலில் நோட்டுப் புத்தகம் எழுதுகிறவர் பேசினார். ‘எல்லாம் தட்டையாக இருந்தது. மகிழ்ச்சியாகப் பாடவேண்டிய பாட்டை நீங்கள் எப்படியோ சோகமயமாக மாற்றிவிட்டீர்கள். உங்களுக்கு இன்னும் நிறையத் தூரம் இருக்கிறது.’ அந்தப் பெண்ணினுடைய முகம் எப்படி வாடிப் போயிருக்கும் என்பதை பார்க்க முடியவில்லை. டிவியில் கோடுகள்தான் தெரிந்தன. புன்னகை நடுவர் பேசினார். ‘பல்லவி பாடியபோது நல்ல பயிற்சி தெரிந்தது. ஆனால் அப்புறம் என்ன நடந்தது? உங்களுடைய சொந்தச் சங்கதிகளை நீங்கள் வைக்கலாம் ஆனால் ஒரு பிரபல பாடகரின் பாடலை எடுத்துப் பாடும்போது அவர் பாடிய சங்கதிகளில் ஒன்றாவது உங்கள் பாட்டில் வந்திருக்கலாமே என்றுபட்டது.’

வேண்டா வெறுப்பு நடுவர் ஆரம்பித்தார். அவர் முகம் பேசும்போது எப்படியிருக்கும் என என்னால் கற்பனை செய்ய முடிந்தது. ’மைதிலி, உங்களுக்கு என்ன நடந்தது? எத்தனையோ தடவை எங்களுக்கு முன் நின்று பாடிய பிறகும் உங்களுக்கு மேடை பயம் வந்துவிட்டதே. இந்தச் சனங்களை மறவுங்கள். நடுவர்களை மறவுங்கள். நீங்கள் பாத்ரூமுக்குள் பாடுவதை கற்பனை செய்யுங்கள். உங்களுக்கு மாத்திரமே நீங்கள் பாடுகிறீர்கள். எல்லோரையும் இப்போது மறந்துவிட்டீர்களா? ‘ஆம், மறந்துவிட்டேன்.’ ‘இப்போ எங்கே நிற்கிறீர்கள்?’ ’பாத்ரூமுக்குள்.’

‘சரி, அந்தச் சரணத்தை ஒருக்கால் பாடுங்கள்.’ அவர் பாடினார்.

’திறந்து பாடுங்கள். திறந்து பாடுங்கள், அம்மா. இல்லை, இல்லை. ஐயோ தொண்டையை  திறந்து பாடுங்கள்.’

இப்பொழுது சத்தமும் இல்லை. படமும் இல்லை. டிவி ஒரேயடியாக வாழ்க்கையை முடித்துக்கொண்டது.

குறுந்தொகையில் ஒரு தலைவி ‘கண்டனையோ, கண்டார்க் கேட்டனையோ’ என்று புலம்புவாள். கனடாவில் 300,000 தமிழர்கள் வாழ்கிறார்கள். அன்று அந்த நிகழ்ச்சியை 30,000 பேராவது பார்த்திருப்பார்கள். அந்தப் பெண் என்ன செய்தாள் என்பதை நான் பார்க்கவில்லை. பார்த்தவர்களும்  சொல்லவில்லை. அது தெரியாவிட்டால் எனக்கு தலை வெடித்துவிடும். தெரிந்தால் ஜன்ம சாபல்யம் அடைவேன்.

O

அ. முத்துலிங்கம்

நெகிழும் தருணம்

அவர் ஒரு சன்னியாசி. இளைஞர். ஆண்மையின் கம்பீரமும் அறிவின் சுடர் பிரகாசமும் கொண்டவர். அவள் ஒரு நடனப்பெண். அழகி. பெண்மையின் நளினம் கொண்டவள். அரசவை நர்த்தகி. அரசவைக்கு வந்த துறவியை மரியாதை செய்ய அவளது நடனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. துறவி தீர்மானமாக வர மறுத்துவிட்டார். ‘முற்றும் துறந்த துறவிக்கு பெண்ணின் நடனம் எதற்கு?’ என்று மறுத்துவிட்டாராம் துறவி. எத்தனையோ அவைகளில் எத்தனையோ வித மனிதர்கள் முன் நடனமாடியே வாழ்ந்த அந்த பெண் அன்றைய தினத்தை அருட்பிரசாதமாகவே எண்ணியிருந்தாள். அவள் அதை தன் வாழ்க்கை நிறைவாகவே எண்ணியிருந்தாள். பெரும் ஏமாற்றம் அவளுக்கு.

ஏமாற்றம் நெகிழ்ச்சியான இசையாக மாறியது. சூரதாஸரின் பாடல்:

பிரபுவே என் குறைகளைப் பாராதே சமதர்ஸி என்பது உன் பெயரல்லவா…வழிபடப்படும் சிலையும் கொலை செய்யும் கத்தியும் ஒரே இரும்பல்லவா…ஆனால் பரிசமணி அவற்றைத் தீண்டினால் இரண்டும் பொன்னாக மாறிவிடுமே.. அந்த பரிசமணிக்கு வேற்றுமை உணர்வு தகுமா கூறு…

வெளியில் நின்ற சன்னியாசியின் காதில் இக்குரல் பாய்ந்தது. இதயத்தில் இறங்கியது. அவர் சிந்தையில் எழுந்தது ஞான சூரியன்.

துறவிக்கு ஏது பேதம்? அவள் பெண் என்பதால் பார்க்க மறுத்தேனே…அந்த மறுப்பு ‘நான் தேகம் அதுவும் ஆண்’ என்ற தேகாபிமானத்தின் ஏற்பு தானே…

துறவி மீண்டும் அவையில் நுழைகிறார்.

தெரிந்த நிகழ்வுதான். ஒரு சமஸ்தானத்துக்கு சென்ற போது சுவாமி விவேகானந்தர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு. அதனை அருமையான ஆன்மிகச் சிறுகதையாக வடித்தெடுத்திருக்கிறார் பாமதிமைந்தன்.

துறவு என்றால் மானுட உறவுகள் அனைத்தையும் துறந்த வைராக்கியம் மட்டுமே என்றும் வேதாந்தம் என்றால் வறட்டு தத்துவம் என்றும் ஒரு எண்ணம் உண்டு. ஆனால் உண்மையான வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் அத்துடன் விவேகானந்தர்-ஸ்ரீ ராமகிருஷ்ணர்-தூய அன்னை ஆகியோர் வாழ்க்கை சம்பவங்களையும் இணைக்கோட்டில் நிறுத்தி சிறுகதைகளாக்கி அளிக்கிறார் பாமதிமைந்தன். விவேகானந்த-பக்தர்களுக்கு ஒவ்வொரு சிறுகதையும் கண்களில் நீர் துளிக்க வைப்பதை தவிர்க்கமுடியாது.

கணவனை இழந்த பெண் ஆறுதலுக்காக ராமகிருஷ்ண ஆலயத்துக்கு வருகிறாள். இது நிகழ்வு. தூய அன்னை சாரதை வாழ்க்கையில் தன்னிடம் வந்த மகவிழந்த பெண்ணுக்காக அன்னை அழுகிறாள். மாயைதானே சம்சார வாழ்க்கை என்றெல்லாம் சொல்லவில்லை. அந்த பெண்ணின் இழப்புக்காக தன் இழப்பாகவே எண்ணி அழுகிறார் அன்னை. ஒரு தருணத்தில் மகவினை இழந்த பெண் அன்னை சாரதைக்கு ஆறுதல் சொல்கிறார். தன்னை விரித்து பிறர் துயரை தன் துயராக கருதும் இதய விரிவே உண்மை துறவு. மனித உறவுகளை முறிப்பதல்ல துறவு. அனைத்துலகையும் ஏன் பிரபஞ்சமனைத்தையும் தன் உறவாக்கும் விரிதலே துறவு. அதற்கான திண்மையையும் அனைத்துயிர்களின் துயரத்துக்கும் தன் இதய செந்நீரை சிந்துவதற்குமான தன்மையை பெறுவதே உண்மை வேதாந்தம்.

தந்தையுடன் மனவிலகல் கொண்ட பதின்ம சிறுவன் வாழ்க்கையில் திசை தேடும் போது தற்செயலாக கண்ணில் படிம் விவேகானந்தரின் மேற்கோள் அவனுக்கு வாழ்க்கைப்பாதையை காட்டுகிறது. ஆசிரியர்-மாணவர் உறவு (அவன் ஒரு முரட்டு மாணவன்), சகோதர-சகோதரி உறவு, பணியிட உறவு இப்படி பல்வேறு மானுட உறவுகளில் வேதாந்த சிந்தனை எப்படி ஓர் இனிமைப்படுத்தும் சக்தியாக செயல்பட முடியும் என்பதை காட்டுகிறது இச்சிறுகதை தொகுப்பு.

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் முதன்முதலாக வெளியிடும் சிறுகதைத் தொகுப்பு இது. ஒழுக்க கதைகள் போல இருக்கிறதே எனும் நினைப்பு எழலாம். ஆனால் சுவாமி விவேகானந்தர் முன்வைத்த வேதாந்த கருத்துக்கள், அவர் வாழ்க்கை நிகழ்வுகள் எப்படி இன்றைக்கும் நம் வாழ்க்கையில் வழிகாட்டும், உத்வேகமூட்டும் சக்தியாக திகழ்கின்றன என்பதை சிறுகதை வடிவத்தை பயன்படுத்தி அருமையாகவே தந்திருக்கிறார் ஆசிரியர். இச்சிறுகதைகள் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் இதழில் வெளிவந்தன.

இக்கதைகள் உண்மை சம்பவங்களை கருக்களாக கொண்டவை என்று பின்னட்டை சொல்கிறது: “கரு உண்மை உரு கற்பனை”. இதுவும் இன்னொரு முக்கியமான விஷயம். கணவனையும் மகளையும் பிரிந்து வாழும் ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரு சிறுகதை ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்தில் வெளியான போது அக்குடும்பம் மீண்டும் இணையும் நிலை உருவானதை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

அர்னே நாயிஸ் (Arne Næss) என்கிற பெல்ஜிய சூழலியல் சிந்தனையாளர் இன்று உலக சூழலியல் இயக்க சிந்தனையில் மிக முக்கியமாக பேசப்படுபவர். மேற்கத்திய சிந்தனையில் அகம் என்பது வெறும் ஈகோவாக தொடங்கி பின்னர் சமூக சுயமாக (social self) மாறி பிறகு தத்துவார்த்த சுயமாக (metaphysical self) நின்றுவிடுவதாக சொல்லுவார் அவர்.  ஆனால் அதற்கும் மேலாக அனைத்து உயிர்களையும் தனதாக காணும் சூழலியல் சுயமாக (ecological self) ஆக மாறுவது சூழலியல் இயக்கத்தில் ஒரு முக்கிய அம்சமாகும். அதனை அத்வைத-அஹிம்சை தன்மையுடன் இணைத்து பேசுவார் நாயிஸ்.

12 சிறுகதைகள் கொண்ட இச்சிறுகதைத் தொகுப்பில் ’அன்னையைச் சரண் புகுந்தால்’ என்று ஒரு சிறுகதை உள்ளது. மயிலாப்பூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் இருக்கும் அந்த சிறிய அழகிய மரங்களில் காகங்களுக்கு பயந்து தன் குஞ்சுகள் இருக்கும் கூட்டை மாற்றி மாற்றி இறுதியில் மடத்துக்குள் இருக்கும் சாரதா தேவியின் பெரிய படத்தில் அன்னை காலடியில் மாற்றிவிட்ட அணிலின் கதை. நம் சுயம் மானுடத்தையும் தாண்டி இயற்கையை நாமாக பார்க்கும் பார்வையை அளிக்கிறது. கதையா அது?

சென்ற முறை சென்னை வந்திருந்த போது ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் அலுவலகத்தில் அன்னை சாரதையின் திருவுருவப்படத்தின் கீழ் அணில் கூட்டின் விளிம்பு வெளியே தெரிந்தது நினைவாடுகிறது.

சுவாமி விவேகானந்தர் கூறினார்: “நான் உருவமற்ற குரலாக செயல்பட்டுக்கொண்டிருப்பேன்” (A voice without form) ஆம் அவர் குரல் இந்த சிறுகதைத் தொகுப்பின் ஒவ்வொரு பக்கங்களிலும் ஒவ்வொரு நிகழ்விலும் வெளிப்படுகிறது. வாங்கிப்படியுங்கள். உங்கள் வாழ்க்கையிலும் விவேகானந்தரின் குரல் வளத்தையும் வலிமையையும் அறத்தையும் சேர்க்கட்டும்.

[என்றும் நான் உன் அன்னை: ஆசிரியர் பாமதி மைந்தன். வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் மயிலாப்பூர், விலை ரூ 30.00]

இன்று சுவாமி விவேகானந்தரின் 148வது பிறந்த தினம். தேசிய இளைஞர் தினம். தமிழ் பேப்பருக்கு 100 வது எடிஷன் தினம்.

பதற்றம்

அ. முத்துலிங்கம்

எனக்கு வரும் பதற்றம் நானாக உருவாக்குவதில்லை. பக்கத்தில் இருப்பவர் அதை உருவாக்குவார். நேபாளத்திலிருந்து நண்பர் வந்து ரொறொன்ரோவில் இறங்கியதும் அது ஆரம்பித்தது. இவருடைய வேலை தேசம் தேசமாகச் சுற்றிக்கொண்டிருப்பது. உலகத்து நாடுகளில் 72 நாடுகளுக்குப் பயணித்திருக்கிறார். கனடாவுக்குப் பல தடவை வந்து போயிருக்கிறார். கையில் எதை எடுத்தாலும் அதை முதல் காரியமாகத் தொலைத்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். அவர் வந்து இறங்கிச் சில நிமிடங்கள்கூட ஆகாதபோது ‘என்னுடைய செல்பேசியைக் கண்டீர்களா?’ என்று கேட்பார்.

அவர் உட்கார்ந்ததும் தன்னைச் சுற்றிப் பொருட்களைப் பரவி விட்டுக்கொள்வார். அவருடைய மேல்கோட்டைக் கழற்றி கதிரையின் பின்பக்கத்தில் கொழுவுவார். கால்சட்டை பைகளில் இருந்து செல்பேசி, பணப்பை, சாவிக்கொத்து முதலியவற்றை வெளியே எடுத்து தனித்தனியாக வைப்பார். மடிக்கணினியை சுவரில் இருக்கும் ஏதோ ஒரு மின்னிணைப்பில் சொருகுவார். மூக்குக்கண்ணாடியும் பேனையும் தேவைக்கு தக்கமாதிரி அவ்வப்போது அவர் உடம்பிலும் சமயங்களில் மேசையிலும் தங்கும். வந்து இறங்கிய சில நிமிடங்களில் என்னுடைய முழு வீடும் அவருக்குச் சொந்தமாகிப் போகும். ஒரு வேலை செய்து பாதியில் இன்னொரு வேலையை ஆரம்பிப்பார். செல்பேசியில் வந்த ஒரு தகவலை சட்டைப் பையில் குத்தியிருந்த பேனாவால் குறிப்பெடுப்பதற்கு மூக்கு கண்ணாடியை அணிவார். பின்னர் மடிக்கணினியில் எதையோ அவசரமாகப் பார்ப்பார். சாவியை எடுத்து சூட்கேசைத் திறந்து அவர் கலந்து கொள்ளப் போகும் மாநாட்டின் நிகழ்ச்சிநிரலை ஆராய்வார். பின்னர் மூக்குக் கண்ணாடியையும் சாவிக்கொத்தையும் தேடுவார்.

இவர் என் வீட்டில் காலடி வைத்த மறு கணத்திலிருந்தே நான் அவர் சேவகனாக மாறிவிடுவேன். ஓர் இடத்திலிருந்து வேலை செய்யும் பழக்கம் அவரிடம் கிடையாது. சாப்பாட்டு மேசையில் வைத்துக் குறிப்புகள் எடுப்பார். அவருடைய சூட்கேஸ் படுக்கை அறையில் இருக்கும். செல்பேசியில் பேசும்போது நடந்து நடந்து ஓய்வெடுக்கும் அறைக்குள் போய்விடுவார். என்னுடைய வேலை அவருடைய பொருள்களைக் காபந்து பண்ணுவதுதான். அது தெரிந்தோ என்னவோ அவர் அவற்றைப்பற்றிக் கவலைப்படாமல் மிக அமைதியாகத் தன் வேலைகளைக் கவனிப்பார்.

நண்பர் மொன்றியலில் நடக்கும் உலகப் பொறியியலாளர் மாநாட்டுக்கு வந்திருந்தார்.  ரொறொன்ரோவிலிருந்து மொன்றியல் 500 கி.மீட்டர் தூரம். அவர் வாடகை கார்பிடித்து அங்கே போய் இரண்டு நாள் தங்கி மாநாட்டில் கலந்துவிட்டுத் திரும்ப வரப்போகிறார். ‘நீங்களும் வருகிறீர்களா?’ என்று கேட்டார். நான் என்ன சொல்லியிருக்கவேண்டும். மாட்டேன். அப்படிச் சொல்லவில்லை.

ஊழ்வினை உறுத்து வந்தூட்டும் அல்லவா? நானும் புறப்பட்டேன். மறக்கமுடியாத இரண்டு நாள்களாக  அது அமைந்தது அப்படித்தான்.  நண்பரின் வேலையாளாக, காரியதரிசியாக, உதவியாளராக, எடுபிடியாக நான் செயல்பட்டேன். அந்த வேலையில்கூட எனக்கு வெற்றி கிடைக்காமல் அவர் பார்த்துக்கொண்டார்.

மொன்றியலுக்கு போகும் வழியில் நண்பர் காலைச் சாப்பாடு என்றார். ஒரு மணிநேரம் முன்புதான் அப்படி ஒன்றைச் சாப்பிட்டிருந்தோம். காரை நிறுத்தி உணவகம் ஒன்றில் மீண்டும் சாப்பிட்டுவிட்டு நெடுஞ்சாலையில் பயணித்தோம். 60 கி.மீட்டர் கடந்த பின்னர்தான் கடன் அட்டையை உணவகத்தில் விட்டுவிட்டது அவருக்த் தெரிந்தது. வந்தவழியே திரும்பவும் 60 கி.மீட்டர் பயணித்து கடன் அட்டையை மீட்கவேண்டியிருந்தது.  ஹொட்டல் அறையில் தங்கியிருந்த ஒவ்வொரு பத்து நிமிடமும் நான் பதற்றத்தின் உச்சியில் இருந்தேன். ஹொட்டல் அறைக் கதவைத் திறக்கும் மின் அட்டையை அடிக்கடி மறந்துவிடுவார். ஹொட்டல் மனேஜர் வந்து திறந்துவிடுவார். இவருக்கு நினைவூட்டுவதும், இவர் தொலைப்பதை எடுத்துக்கொடுப்பதும், இருப்பதைத் தொலைக்காமல் பாதுக்காப்பதுமே என் முழுநேர வேலையாக மாறியது. மூக்குக்கண்ணாடியைக் கைமாறி வைப்பது  இவருடைய பொழுதுபோக்கு. மூக்குக்கண்ணாடி மூக்கிலேயே இருக்கவேண்டியதுதானே. என்ன பிரச்சினை? அடிக்கடி கழற்றி வைப்பார். பின்னர் தேடுவார். நான் நினைவூட்டும்போது அவர் சொல்லும் வாசகம் ‘நான் 72 நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறேன்’ என்பது.

இவர் ஏதாவது பொருளை உங்களிடம் கடன் கேட்டால் அதை ஒருமுறை கடைசித் தடவையாக கண்டுகளித்துவிட்டு  நீங்கள் கொடுத்தால் நல்லது. அது திரும்பி வரப்போவதில்லை. அதை பாவித்துவிட்டு அதே இடத்தில் விட்டுவிட்டு நகர்ந்துவிடுவார். நீங்கள்தான் தேடி எடுக்கவேண்டும். மொன்றியலில் இருந்த நாள்களில் இவர் காரிலிருந்து இறங்கியதும் கார் சாவியைப் பறித்து நான் வைத்துக்கொள்வேன். ஆரம்பத்தில் சாவியைத் தொலைப்பதும் தேடுவதுமாகவே இருந்தார். சாவியைக் கேட்டதும் எடுத்துக் கொடுப்பேன். பின்னர் பார்த்தால் அவரைச் சுற்றியிருக்கும் என்ன பொருள் தேவையென்றாலும் என்னைக் கேட்க ஆரம்பித்தார். ஆகவே இவருக்குப் பக்கத்தில் வீணே என் வயதை அதிகரித்தபடி எந்த நேரமும் நான் நிற்கவேண்டி நேர்ந்தது. மாநாட்டில் பேச அழைத்ததும் மேடையில் நின்றபடி இரவு முழுக்க தயாரித்த குறிப்புகளை சட்டைப் பையிலும், கால் சட்டையிலும், கோட்டுப் பைகளிலும் தேடினார். கிடைக்கவில்லை. ஆனால் அன்றைய அவருடைய பேச்சு தடங்கல் இல்லாமல் ஒரு சிறந்த பேச்சுக்கு உதாரணமாக அமைந்தது.

மாநாடு ஒருவாறாக முடிந்து ரொறொன்ரோ வந்த பின்னர்தான் அவருடைய செல்பேசி charger ஐ ஹொட்டலில் விட்டுவிட்டு வந்தது தெரிந்தது. ஒரு நாள் முழுக்க ரொறொன்ரோ கடைகளில் அலைந்து இன்னொன்று வாங்கவேண்டியிருந்தது. நண்பர் தன்னை செயல்திறன் மிக்கவராக நினைக்கிறார். இவருடைய நேரத்தில் பாதி நேரம் தொலைத்தவற்றை மீட்பதில் செலவாகுகிறது. ஆனால் அவர் அப்படி நினைக்கவில்லை. ஒரே சமயத்தில் தன்னால் பல காரியங்களை ஆற்றமுடியும் என்கிறார். பல பொருட்களை ஒரே நேரத்தில் தொலைப்பதைச் சொல்கிறாரோ தெரியாது. இவர் எப்படி தன்னுடைய கடவுச்சீட்டுகளையும், விமான டிக்கட்டுகளையும் செல்பேசியையும் மடிக்கணினியையும் தொலைக்காமல் வெற்றிகரமாகப் பயணம் செய்து திரும்புகிறார் என்பது என்னால் எப்பவுமே அவிழ்க்கமுடியாத புதிர்தான்.

இவர் மாத்திரமல்ல. நிறைய பயணம் செய்யும் மற்றவர்களிடமும் இதே குணம் இருப்பதை நான் அவதானித்திருக்கிறேன். எல்லாவற்றையும் தொலைப்பார்கள், ஆனால் எப்படியோ உலகத்தை சுற்றி வருவார்கள். அதிக எச்சரிக்கை அறிவு உள்ளவர் பயணம் செய்வதே கிடையாது. எனக்கு ஜெகன் என்று ஒரு நண்பர் இருக்கிறார். இவர் தண்ணீரில் கடந்த தூரம் நிலத்தில் கடந்த தூரத்திலும் பார்க்க அதிகம். மறதி மன்னர். உலகத்தின் பல பாகங்களுக்கும் சென்று தன்னுடைய கம்பனி விற்பனையை அதிகரிப்பது இவர் தொழில். ஒருமுறை சான்பிரான்சிஸ்கோவில் வாடகை காரை எடுத்து நீண்ட தூரம் பயணம் சென்றபோது காரிலே பெற்றோல் தீர்ந்ததால் எதிரில் வந்த  நிலையத்தில் பெற்றோல் போட்டுக்கொண்டு காரை ஓட்டினார். ஆனால் பத்து மைல் தூரம் போவதற்குள் அவரை இரண்டு பொலீஸ்கார்கள் துரத்தின. இவர் காரை நிறுத்தினார். பார்த்தால் பெற்றோல் போட்ட இடத்தில் காசைக் கட்டிவிட்டு காரை எடுத்திருக்கிறார், ஆனால் பெற்றோல் போட்ட ட்யூபை அகற்ற மறந்துவிட்டார். பத்து மைல்தூரம் அதை அறுத்து ரோட்டில் இழுத்துக்கொண்டு காரை ஓட்டிய கதையை அவர்தான் சொன்னார்.

ஜெகனுடைய தந்திரம் எந்த நெருக்கடியான சந்தர்ப்பத்திலும் சமநிலை இழக்காமல், அமைதியாக இருப்பது. விமான நிலையத்தில் ஒரு மணிக்கு நிற்கவேண்டுமென்றால் இவர் மிகத்தாமதமாக ஆசுவாசமாக வெளிக்கிடுவார். அவரைச் சுற்றியிருப்பவர்கள் அந்தரப் படுவார்கள். பதகளிப்பார்கள். விமானம் தவறிவிடுமோ என்று தவிப்பார்கள். ஜெகன் அசையவே மாட்டார். அவர் செய்யும் காரியம் எல்லாம் பக்கத்திலிருப்பவரைப் பதற்றமடைய திட்டமிட்டுச் செய்வதுபோலவே இருக்கும். ஒரு சப்பாத்துக் கயிற்றைக் கட்டிவிட்டு மற்றதைக் கட்டாமல் உங்களுடன் பேசுவார். சாப்பாட்டுக் கரண்டியை வாய்க்கு கிட்ட கொண்டுபோவார், ஆனால் வாயை திறக்கமாட்டார். கார் சாவியை சாவி துவாரத்தினுள் நுழைப்பார், ஆனால் காரை கிளப்பமாட்டார். இவரைப் போன்றவர்களின் வெற்றியின் ரகஸ்யம் தங்கள் பதற்றத்தை மற்றவர்களுக்கு கடத்தி, தங்கள் பதற்றத்தை இல்லாமல் செய்வது என்றுதான் நினைக்கிறேன்.

அடிக்கடி பயணம் செய்பவர்களின் குணாம்சம் பொதுவானதாகவே இருக்கிறது. நேபாள நண்பர் போகும்போது நடந்ததையும் சொல்லிவிடுகிறேன். அவர் தன்னுடைய சாமான்களை எல்லாம் வீட்டின் பல பாகங்களிலுமிருந்து சேகரித்து சூட்கேசில் அடுக்கிப் பூட்டிய பிறகு, ஏதாவது தவறவிட்டிருப்பாரோ என்று பயந்து நான் மறுபடியும் வீட்டை சோதனை செய்தேன். நண்பர் சிரித்தபடி சொன்னார். ‘நான் சாமான்கள் அடுக்குவதில் திறமைசாலி. கொண்டுவந்த பொருட்களை திரும்ப ஒரு சூட்கேசில் போட்டு மூடுவதற்கு புத்திக்கூர்மை எண் ஐம்பது இருந்தாலே அதிகம். நண்பரே, பதற்றம் வேண்டாம். அமைதியாக இருங்கள். நான் 72 நாடுகள் பயணம் செய்திருக்கிறேன்.’  எப்படியோ அவரை விமான நிலையத்தில் கொண்டுபோய் ஏற்றிவிட்டு திரும்பவும் வீடு வந்து சேர்ந்தேன். பள்ளிக்கூடம் விட்டுப் பிள்ளைகள் எல்லாம் போனபிறகு காட்சியளிக்கும் வகுப்பறை போல வீடு வெறுமையாகவும் அமைதியாகவும் இருந்தது. என் நெஞ்சு படபடப்பு அடங்க ஒரு மணி நேரம் எடுத்தது. ஆனால் கதை முடியவில்லை என்பதை ஊகித்திருப்பீர்கள்.

நண்பரிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது. ‘அனைத்துலக பொறியியலாளர் மாநாட்டின் மலரை எங்கேயோ கைமாறி வைத்துவிட்டேன். அது மிகவும் முக்கியமானது. ரொறொன்ரோ தலைமையகத்துக்கு சென்று ஒரு மலரைப் பெற்று அதை உடனடியாக எனக்கு அனுப்பினால் நல்லது. நான் பயணத்திலிருக்கிறேன். 12 – 14ம் தேதிக்குள் எனக்கு கிடைக்குமென்றால் இந்த விலாசத்துக்கும், 15 – 18ம் தேதிக்குள் கிடைக்குமென்றால் இந்த விலாசத்துக்கும், 19ம் தேதிக்குப் பின்னர் என்றால் இந்த விலாசத்துக்கும் அனுப்பிவிடுங்கள்.’ இந்தக் குறுஞ்செய்தியை அவர் விமானத்தில் ஏறிய பின்னர்  அனுப்பியிருந்தார்.

எனக்கும், உலகப் பொறியியலாளர் தலைமையகத்துக்கும், தபால் கந்தோருக்கும் பெரிய தலையிடியைக் கொடுத்துவிட்டு நண்பர் 35,000 அடி உயரத்தில் அமைதியாகப் பறந்துகொண்டிருந்தார். விமானத்தின் முதல் வகுப்பு இருக்கையைப் பின்னால் நல்லாய் சாய்த்துவிட்டு, திரையில் ஓடும் படத்தைப் பார்த்தபடி, கால்களை நீட்டி, வெள்ளை வைன் அருந்தியவாறு அவருடைய பொழுது ஆனந்தமாய்ப் போய்க்கொண்டிருக்கும்.

இலவசமாகக் கிடைத்த கையெழுத்து

அ. முத்துலிங்கம்

ஒரு விருந்திலே நண்பர் ஒருவர் என்னைக் கண்டு முறைப்பாடு செய்தார். நண்பர் என்றால் ஒன்றிரண்டு தடவை அவரை முன்னே பார்த்ததுண்டு. அவ்வளவுதான். ‘நீங்கள் புத்தகம் வெளியிட்டீர்களாமே. எனக்கு ஒரு புத்தகம்கூடத் தரவில்லை. உங்கள் கையெழுத்தை வைத்து ஒன்று தாருங்கள்’ என்றார். இவர் என்ன சொல்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. நான் ஒரு புத்தகம் வெளியிட்டால் அதை வீடு வீடாக எடுத்துச் சென்று கதவை தட்டி ஆட்களிடம் இலவசமாகக் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

‘புத்தகக் கடையில் கிடைக்கிறது. நீங்கள் வாங்கலாமே?’ என்றேன். அவருடைய முகம் வேறு யாரோவுடைய முகம்போல மாறிவிட்டது. நான் அவருக்குப் புத்தகம் இலவசமாகத் தரவில்லையென்று கோபித்துக்கொண்டு போய்விட்டார். ஒரு குயவன் பானை செய்தால் அதனை இலவசமாகக் கொடுக்கவேண்டும் என்று யாராவது எதிர்பார்ப்பார்களா? ஓவியர் படம் வரைந்தால் அதை மற்றவர்களுக்கு இலவசமாகத் தருவாரா? ஓர் எழுத்தாளர் பலவருட காலம் பாடுபட்டு உழைத்து ஒரு புத்தகத்தை வெளியிட்டால் ஏன் அதை எல்லோரும் இலவசமாகத் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்?

நான் எப்படி இலவசமாகப் புத்தகம் கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கமாட்டேனோ அப்படியே என்னுடைய புத்தகத்தையும் இலவசமாகக் கொடுக்க விரும்பமாட்டேன். யாராவது எனக்கு ஒரு புத்தகத்தைத் தரவந்தால் நான் அதற்குரிய விலையைக் கொடுக்கவே முயற்சி செய்வேன். அது ஒரு மரியாதை என்றே  நம்புகிறேன். இலவசமாக ஒரு நண்பருக்குப் புத்தகம் கொடுத்தால் அவர் அதை எப்படியும் வாசிக்கப்போவதில்லை. உங்களை சந்தோசப்படுத்தவே அவர் புத்தகத்தை ஏற்கிறார் என்பது என் கருத்து.

எனக்கு அகில் சர்மாவின் ஞாபகம் வந்தது. அவர் பிரபலமான ஆங்கில எழுத்தாளர். சிறுகதைகள் எழுதி பல பரிசுகள் பெற்றவர். அவருடைய An Obedient Father நாவலை வாசித்த பிறகு ஒரு பத்திரிகைக்காக நான் அவரிடம் சில கேள்விகள் கேட்டேன். அப்போது அவர் சொன்ன பதில் என்னை ஆச்சரியப்படுத்தியது. அவர் முழுநேர எழுத்தாளராக அப்போது இல்லை. நியூயோர்க்கில் ஒரு பிரபலமான சட்ட நிறுவனத்தில் பணியாற்றினார். அவர் ஓர் எழுத்தாளர் என்பது அவருடன் வேலை பார்த்தவர்களுக்குத் தெரியாது. அவருடைய நாவல் வெளிவந்தபோது பல பத்திரிகைகள் அதைப்பற்றி எழுதின. தொலைக்காட்சி அவரைப் பேட்டி கண்டது. அப்பொழுது அவருடன்  வேலை செய்தவர்கள் அவரிடம் குறைபட்டுக்கொண்டார்கள். ‘நீங்கள் பெரிய எழுத்தாளராமே. எங்களுக்கு ஏன் சொல்லவில்லை. எனக்கு ஒரு நாவல்கூடத் தரவில்லையே.’

அகில் சர்மா சொன்னார். ‘இவர்கள் வருடத்துக்கு ஒரு மில்லியன் டொலர்களுக்குக் குறையாமல் சம்பாதிப்பவர்கள். என்னிடம் வந்து இருபது டொலர் நாவலை  இலவசமாகத் தரவேண்டும் என்று குறைபட்டார்கள். உண்மையில் அவர்கள்  நண்பர்கள் என்றால் எனக்கு மரியாதை செய்வதற்காக ஒரு நாவலைக் காசுகொடுத்து வாங்கி, அதைப் படித்துவிட்டு அபிப்பிராயம் சொல்லவேண்டும். அவர்களுடைய நட்பு 20 டொலர் இலவச நாவலைத் தாண்டவில்லை.’

மைக்கேல் சீடன்பேர்க் என்பவர் ஒரு பழைய புத்தகக்கடை நடத்தினார். ஒரு நாள் ஒரு காதலனும் காதலியும் அவருடைய கடைக்குள் நுழைந்தார்கள். அரை மணி நேரமாகப் புத்தகங்களைப் பார்வையிட்டபிறகு காதலன் கேட்டான், ‘உனக்கு ஒரு புத்தகம் வேண்டுமா?’ அவள் சொன்னாள்,  ‘இல்லையே, என்னிடம் ஏற்கனவே ஒரு புத்தகம் இருக்கிறது.’ இளையவர்கள் புத்தகம் படிப்பதில்லை என்பதை நிறுவுவதற்காக மேற்படி உதாரணத்தை சீடன்பேர்க் அடிக்கடி கூறுவார். ஆனால் உண்மை  எதிர் திசையில்தான் இருக்கிறது. காசு கொடுத்துப் புத்தகம் வாங்குவோரின்  எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. வட அமெரிக்காவில் ஒரு வருடத்தில் விற்கும் புத்தகங்களின் மதிப்பு 26 பில்லியன் டொலர்கள். சென்னை புத்தகச் சந்தையில் விற்பனையாகும் புத்தகங்களின் தொகையும் கணிசமான அளவில் கூடிக்கொண்டே வருகிறது. முன்பு எப்பொழுதும் கண்டிராதபடி புத்தகங்கள் தரத்துடன் நல்ல தாளில் கண்ணுக்கு இதமான அச்சில் வெளிவருகின்றன.

ஒன்றிரண்டு பேர் இலவசப் புத்தகங்களை நம்பியிருக்கலாம். ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்கள் காசு கொடுத்துப் புத்தகம் வாங்குவதற்குத் தயங்குவதே இல்லை. யாழ்நூலகம் அழிந்து கிட்டத்தட்ட 30 வருடங்கள் கழிந்த நிலையில் அவர்களுக்குப் புத்தகங்கள் சேர்ப்பது முக்கியமானது. உலகத்தின் முதல் நூலகம் அலெக்சாந்திரியாவில் இருந்தது. சீசரின் எகிப்தியப் படையெடுப்பின்போது இந்த நூலகம் எரிந்து சாம்பலானது. இதுவே முதன்முதலில் எரிக்கப்பட்ட நூலகம். அமெரிக்காவின் Library of Congress பிரிட்டிஷ் படையெடுப்பின்போது எரியூட்டப்பட்டது. ஆனால் உலகத்திலேயே ஓர் அரசு தன் சொந்த நாட்டு நூலகத்தையும் அதிலிருந்த 97,000 நூல்களையும் எரியிட்டு அழித்தது என்றால் அது இலங்கையில்தான் முதன்முதல் நடந்தது.

இன்று அதே இடத்தில் எவ்வளவு பெரிய நூலகத்தைக் கட்டினாலும், எத்தனையாயிரம் புத்தகங்களை வாங்கி அடுக்கினாலும் அழிந்துபோன ஓர் ஓலைச்சுவடிக்கு அது ஈடாகாது. இது புலம்பெயர்ந்தவர்களுக்குத் தெரியும். அந்த அநீதியை அவர்களால் மறக்கவும் முடியாது. தாம் சென்று வாழும் இடங்களில் சொந்தமாகப் புத்தகங்களைச் சேகரித்து, அந்த இழப்பை ஓரளவுக்கு ஆற்றிக்கொள்கிறார்கள்.

நான் பள்ளியில் படித்த காலத்திலிருந்து எனக்கு ஒரு நண்பர் இருந்தார். பத்திரிகைகளில் வரும் முக்கியமான செய்திகளை எல்லாம் வெட்டி நறுக்குகளாகப் பாதுகாப்பார். மாத இதழ்கள், வார இதழ்கள், புத்தகங்கள் என்று தனியான அடுக்குகள் வைத்திருப்பார். அநேகமாகப்  பழைய புத்தகக் கடைகளுக்குப் போய் பழைய புத்தகங்களை வாங்குவார். நவீன இலக்கியங்கள், மொழிபெயர்ப்புகள், பழைய இலக்கியங்கள் என ஒன்றையும் தவறவிடமாட்டார். அவரிடம் ஒரு கொள்கை உண்டு. இருபது வயதுவரை கையிலே அகப்பட்டதை எல்லாம் படிக்கவேண்டும். இருபதிலிருந்து நாற்பதுவரை தேர்ந்த இலக்கியங்களையும், அறிவு நூல்களையும் படிக்கவேண்டும். அதற்குப் பிறகு என்று கேட்டால் தொடர்ந்து மற்றவர்கள் எழுதுவதையே படித்துக்கொண்டிருந்தால் உங்கள் மூளை சிந்திக்கும் திறனை இழந்துவிடும். நாற்பது வயதுக்குப் பிறகு நீங்கள் சிந்திப்பது அதிகமாகவும் வாசிப்பது குறைவாகவும் இருக்கவேண்டும் என்பார்.

புத்தகம் வாங்குவதிலும் அவரிடம் ஒரு நுட்பம் இருந்தது. ஒருவருக்கு நோபல் பரிசு கிடைக்கிறது. உடனேயே அவருடைய புத்தகம் உலகளாவிய ரீதியில் விற்பனையாகி உச்சத்தைத் தொடுகிறது. நோபல் பரிசுத் தேர்வில் இரண்டாவதாக ஒருத்தர் வந்திருப்பார். அவரை ஒருவருமே கவனிப்பதில்லை. அவர் பெயர்கூட வெளியே வராது. அவர் எழுதிய நூல் எவ்வளவுதான் உயர்ந்ததாக  இருந்தாலும் அது கவனிக்கப்படாமல் போய்விடும் வாய்ப்பு உண்டு. புறநானூறு தொகுப்பில் 401 வது பாடல் என்று ஒன்றிருந்திருக்கும். அது தொகுக்கப்படவில்லை. யார் கண்டது? அது உயர்ந்த கவிதையாக இருந்திருக்கலாம். எப்படியோ விடுபட்டுப்போய்விட்டது. புத்தகங்களைத் தேடும்போது விடுபட்டதையும் சேர்த்துத் தேடவேண்டும். பழைய புத்தகக் கடைகளில்தான் அபூர்வமாக விடுபட்ட புத்தகங்கள் கிடைக்கும் என்பது அவர் அடிக்கடி சொல்வது.

ஓர் உண்மைக் கதை. பழைய புத்தகம் ஒன்றை வாங்கிய என் நண்பர் ஒருவருக்கு வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. அவர் சில வருடங்களுக்கு முன்னர் ஓர் ஆங்கிலப் புத்தகத் தொகுப்பை வெளியிட்டார். விற்றதுபோக மீதமிருந்த புத்தகங்களை எல்லாம் தன் நண்பர்களுக்கு இலவசமாக விநியோகித்தார். யாருக்கு அன்று அவர் புத்தகம் இலவசமாகக் கொடுக்கப்போகிறார் என்ற விசயம் முன்கூட்டியே தெரியாததால் பொதுவாக ‘அன்பு நண்பருக்கு’ என்று எழுதிக் கையெழுத்திட்டு எடுத்துப் போவார். நண்பர்களைக் கண்டதும் அதைக் கொடுப்பார். இப்படியே அவர் இலவசமாகக் கொடுத்து வந்ததில் ஒருநாள் திடீரென்று அவரிடமிருந்த கடைசிப் புத்தகத்தையும் கொடுத்துவிட்டார். ஏற்கெனவே கையெழுத்துப் போட்டுக் கொடுத்த புத்தகத்தை நண்பரிடமிருந்து எப்படித் திரும்பப் பெறுவது? ஒரு பழைய புத்தகக் கடையில் தேடிக்கொண்டு போனதில் தற்செயலாக அவர் பதிப்பித்த புத்தகம் அகப்பட்டது. அதைத் திறந்து பார்த்தவருக்கு ஒரே அதிர்ச்சி. அந்தப் புத்தகத்தில் ‘அன்பு நண்பருக்கு’ என்று எழுதி இவருடைய  கையொப்பமும் இருந்தது. யாரோ அன்பளிப்பாகப் பெற்ற அவருடைய புத்தகத்தைப் பழைய புத்தகக் கடையில் விற்றுக் காசாக்கிவிட்டார்கள். நான் கடைசியாக விசாரித்த அளவில் நண்பர் அந்தப் புத்தகத்தை விற்றவரை இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் எனக்கு நேர்ந்த அனுபவத்தையும் சொல்லவேண்டும். அதைச் சொல்வதற்காகவே இதை எழுதத் தொடங்கினேன். கடந்த 60 வருடங்களாக எழுதிவரும் மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர் ஒருவருடைய புத்தகத்தைக் கடந்த வாரம் வாங்கினேன். அதில் ஓர் இடத்தில்  எழுதியிருந்ததைப் படித்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘ஐந்தாறு ஆண்டுகளாகவே என்னால் பல விஷயங்களை நினைவுபடுத்திக் கொள்ளமுடியாமல் போவதை உணர்ந்திருக்கிறேன். என் குடும்பம்வரை இதை அவர்களும் உணர்ந்திருந்தாலும் என் நண்பர்கள் ஒத்துக் கொள்வதில்லை. ஒருநாள் மாலை சுமார் அரைமணி நேரத்திற்கு என் வீட்டுக்குச் செல்லும் வழி மறந்துவிட்டது. அதைவிட இன்னும் தீவிரமானது என் பெயர், முகவரி மறந்துவிட்டது. ஆனால் மொழி மறக்கவில்லை.’

ஓர் எழுத்தாளர் அவர் பெயரை மறந்தால் நிலைமை என்னவாகும். அவர் வேறு பெயரில்தான் எழுதவேண்டி வரும். அவருக்கு எழுத்துமூலம் கிடைக்க வேண்டிய பணம் எல்லாம் வேறு யாருக்கோ போகும். நல்ல காலமாக அந்த ஞாபகமறதி நீடிக்கவில்லை. அரை மணி நேரத்தில் எல்லாம் சரியாகிவிட்டது. அவர் பெயர் அசோகமித்திரன்.

நான் மதிக்கும் எழுத்தாளர்களில் இவரை மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறேன். இவர் எழுதிய புத்தகங்களில் அநேகமானவற்றைப்  படித்திருக்கிறேன். நானும் ஜெயமோகனும் கடைசியாகச் சந்தித்தபோது அரைவாசி நேரம் இவரைப் பற்றியே பேசினோம். நான் எழுத்தாளர்களின் கையெழுத்துகளைச் சேகரிப்பதில்லை. பல ஆங்கில, தமிழ் எழுத்தாளர்களைச் சந்தித்திருந்தாலும் அந்த எண்ணம் தோன்றியதில்லை. சிலநேரங்களில் சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜெயமோகன் போன்றவர்களைச் சந்தித்தபோது புத்தகங்களில் அவர்களுடைய கையெழுத்துகளைப் பெற்றிருக்கலாமே என்று நினைத்ததுண்டு. அதிலும் அசோகமித்திரனின் கையெழுத்திட்ட புத்தகம் என்னிடம் ஒன்றுகூட இல்லையே என்று நினைத்து சமயத்தில் வருந்தியிருக்கிறேன்.

நான் சமீபத்தில் வாங்கிய அசோகமித்திரனின் புத்தகத்தின் தலைப்பு ‘நினைவோடை.’ முதல் பக்கத்தைத் தற்செயலாகத் தட்டியபோது எனக்கொரு ஆச்சரியம் காத்திருந்தது. அதிலே இப்படி அழகான கையெழுத்தில் எழுதியிருந்தது.

நண்பர் ராஜகோபாலுக்கு
மிக்க அன்புடன்
அசோகமித்திரன்
வேளச்சேரி, 27.2.2010.

இந்தப் புத்தகம் எப்படியோ என் கைக்கு வந்து சேர்ந்துவிட்டது. கையெழுத்து வைத்தவரோ, அதைப் பெற்றவரோ, புத்தகத்தை எனக்கு விற்றவரோ செய்த தவறு என்று எனக்கு நன்றாகத் தெரிகிறது. இந்தப் புத்தகத்தை என்ன வந்தாலும் நான் திருப்பிக் கொடுப்பதாயில்லை. புத்தகத்தில் குறிப்பிட்ட விலையிலும் பார்க்க எட்டு மடங்கு காசு கொடுத்து அதை நான் வாங்கியிருந்தேன். இன்னும் எட்டுமடங்கு யாராவது தருவதாக இருந்தாலும் அது நடக்காது. இது எங்கே வரவேண்டுமோ அங்கே வந்திருக்கிறது. புத்தகமும் கையெழுத்தும் என்னுடனேயே இருக்கும்.

மனைவிகள்

சமய அடிப்படையில் உபந்நியாசம் செய்பவர்களை விட்டு-விடலாம். வருடத்தில் சில நாட்களே சென்னையில் தங்கும் ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஆறு, ஏழு பிரசங்கங்கள் செய்வார். புதன்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில், ஆலமரத்தடியில். ஒரு மணி நேரத்துக்குள்ளாகத்தான். பிரசங்கம் ஆரம்பித்துச் சில நிமிஷங்களுக்கெல்லாம் கேட்க வந்தவர்களில் பெரும்பாலோருடைய மனம் எங்கெல்லாமோ அலைய ஆரம்பிக்கும். கிருஷ்ணமூர்த்தி கைகூப்பிப் பிரசங்கம் முடிந்துவிட்டதென்று தெரிவிக்கும்போது எல்லோரும் பெரிய இக்கட்டு விலகியது போன்ற விடுதலை உணர்ச்சியோடு வெளியே விரைவார்கள்.

வருடத்தில் என்றோ ஒரு நாள் ஒரு மணி நேர தத்துவப் பேச்சு இப்படிச் செய்யக் கூடுமானால் பொழுது விடிந்து மறுபொழுது விடியும் வரை குடித்தனம் நடத்தச் சம்பாதிக்காமல், குழந்தைகளைக் கவனிக்காமல், ஓயாமல் தத்துவப் பேச்சும் கேள்விகளுமாகவே பேசிப் பேசி, ஊரார் – அரசாங்கத்தார் துவேஷத்தையும் பெருக்கிக்கொள்ளும் சாக்ரடீஸுடன் ஜாந்திபி எப்படிப்பட்ட மீளாத வேதனை அனுபவித்திருப்பாள்? அவள் என்றாவது ஒரு நாள் இரைந்திருப்பது பெருந்தவறில்லை. ஆனால் அவளைப் பற்றி ‘இடி இடித்தது; இப்போது மழை பெய்கிறது’ என்கிற கதைதான் நிலைத்திருக்கிறது.

சாக்ரடீஸின் வீட்டைக் கவனித்துக்கொண்டு, அவருக்கு உணவு ஆக்கிப் போட்டு, நிறையக் குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்து, அவருக்கு உற்ற துணையாகக் கடைசி நாள் வரை ஜாந்திபி இருந்திருக்கிறாள். மாக்ஸ்வெல் ஆஸ்டர்ஸன் எழுதிய ‘ஏதென்ஸில் வெறுங்காலோடு’  என்கிற நாடகம் இக்கோணத்தை எடுத்துக் காட்டுகிறது.

மிகவும் எளிய நிலைமையில் ஒரு சின்ன ஊரில் வாழ்க்கை நடத்திய லிங்கன் தம்பதிகள் திடீரென்று வாஷிங்டனில் குடியேற வேண்டியிருந்தது. அநேக பரம்பரைப் பணக்காரர்கள், சமூக வாழ்க்கையில் பெரும் செல்வாக்கு பெற்றவர்கள், அரசியல்வாதிகள், இவர்களின் நவநாகரிகமான, ஜம்பமான, படாடோபமான – ஆனால் போலியான உலகின் மத்தியில் லிங்கனின் மனைவி மேரி, நாட்டின் தலைமைச் சீமாட்டி என்கிற பெயரில் அநேக வைபவங்களில் கலந்து கொள்ள வேண்டியதாயிற்று. பலவற்றை அவளே தலைமை தாங்கி நடத்த வேண்டியிருந்தது. அமெரிக்க அரசியலில் மிகவும் கொந்தளிப்பு மிகுந்த காலம் அது. பல இடங்களில் லிங்கனைக் கொடும்பாவி கட்டி எரித்தார்கள். அருவருக்கத்தக்கச் சித்திரங்களைப் பத்திரிகைகளில் வெளியிட்டார்கள். ‘கொலை செய்துவிடுவேன்’ என்று ஏராளமான பயமுறுத்தல்கள். உள்நாட்டு யுத்தம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மேரி சில சந்தர்ப்பங்களில் நிதானம் தவறியது ஆச்சரியமில்லை. ஆனால் லிங்கனின் வாழ்க்கையையே குலைக்க வந்தவள் என்றுதான் லிங்கன் வாழ்க்கை வரலாறு எழுதியவர்கள் அனைவரும் அவளைப் பற்றி எழுதினார்கள்.

டால்ஸ்டாயுடன் மாக்சிம் கார்க்கி

சுற்றிலும் ஏளனப் பார்வை, குற்றம் காணும் கண்கள், பொறாமை, அமைதியற்ற குடும்பநிலை, ஆசை மகனின் மரணம், இதற்கெல்லாம் சிகரம் போல் கணவனின் படுகொலை – பிற்காலத்தில் மேரி லிங்கன் தன் மகனாலேயே பைத்தியக்காரர் விடுதியில் சேர்ப்பிக்கப்பட்டாள். எல்லா மனிதர்களுக்கும் சாதாரணமாக உள்ள குறைபாடுகளுடன் ஓர் அசாதாரணச் சூழ்நிலையில் அவதிக்குட்பட வேண்டியிருந்த மேரி லிங்கன் பற்றிப் பதினைந்து ஆண்டுகள் முன்புதான் ஒரு பரிவான, கண்ணியமான வாழ்க்கை வரலாறு வெளிவந்தது. (ரூத் ராண்டால் எழுதிய ‘மேரி லிங்கன்’).

டால்ஸ்டாய் திடீரென்று நினைத்துக்கொண்டு காது கொடுத்துக் கேட்க முடியாத வார்த்தைகளாகப் பொழிவார். ஆத்மிகச் சுத்திகரிப்பு வேகம் வந்து யார் யாரிடமோ எது எதையெல்லாமோ உளறிக் கொட்டுவார். காலத்துக்கும் மனித இயல்புக்கும் ஒவ்வாத திட்டங்களை வகுத்துக் கொண்டு ‘தான் எளியனிலும் எளியன்’ என்று சொல்லிக்கொண்டு, தன்னைச் சுற்றி அண்டியிருப்பவர்கள் அனைவரையும் ஒரு சர்வாதிகாரிக்குரிய கடுமையுடன் அத்திட்டங்களை நிறைவேற்ற வற்புறுத்துவார்.

அவருக்கு அத்யந்த சிஷ்யர்கள் என்று ஏராளமான பேர் அவரைச் சுற்றி எப்போதும் கூட்டம் போட்டவண்ணம் இருந்தார்கள். அவருடைய வீட்டுச் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு, அவருடைய புகழ், செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு, அவருடைய வாழ்நாளிலேயே அவர் வீட்டின் அந்தரங்கங்களைத் திரித்து அவரைப் பற்றி ஏச்சுப் பிரசாரம் செய்தார்கள். டால்ஸ்டாயின் கொள்கைகளின் நுட்பங்களை எல்லோரும் எளிதில் அறிய முடியாது. அவருடைய ஆத்மிக வேகத்தையும் சுய சுத்திகரிப்பு வாக்குமூலங்களின் தன்மையையும் கற்றறிந்தவர்கள்கூட பொருத்தமான விளக்கங்களின் உதவியில்லாமல் புரிந்து கொள்வது கடினம். ‘போலிச் சாமியார் டால்ஸ்டாய்’, ‘ஊரை ஏய்க்கும் ஆஷாடபூதி’ என்றெல்லாம் அவருடைய அன்புக்குப் பாத்திரமானவர்களே பிரசாரம் செய்ததன் பலன் ஒரு சமையற்காரன் ‘அந்த மதத் துரோகி டால்ஸ்டாயை மட்டும் நான் வெந்நீரில் முக்கி வேகவைக்க முடியுமானால்…’ என்று பல்லைக் கடித்துக்கொண்டு வருவோர் போவோரிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
முடித்திருத்தம் செய்பவர் ஒருவர் டால்ஸ்டாயைப் பற்றி மிக அருவருப்பான புத்தகம் ஒன்று எழுத, புனித விரதங்கள் மேற்கொண்ட உள்ளூர்ப் பாதிரியார், ‘இந்தப் புத்தகம் என் பூரண சம்மதம் பெற்றது’ என்று பகிரங்கமான அறிவித்தார்!

உலக வாழ்க்கையில் பரவியிருக்கும் மிகச் சாதாரணமான கயமையைக் கூடக் கண்டுகொள்ள இயலாத ‘அசடு’  டால்ஸ்டாயுடன் ஐம்பதாண்டுகள் குடித்தனம் நடத்தி, நிறையப் பிள்ளை பெண்கள் பெற்றெடுத்து, வீட்டு அதிகாரத்தில் ஒரு நிலையான இடம் இல்லாததாலும் என்றைக்கும் ஏராளமான மூன்றாவது மனிதர்கள் தலையீட்டின் மத்தியிலேயே பெரிய பண்ணையின் பொறுப்புகளையும், தன் குடும்ப வருவாய் செலவுக் கணக்குகளையும் பார்த்து வரவேண்டிய டால்ஸ்டாயின் மனைவியை இகழாதாரும் அவமானப்படுத்தாதவரும் கிடையாது. ‘இல்லம் துரத்தல்’ என்று 1910-ல் டால்ஸ்டாய் தனியே வெளியே போகாமல் இருந்தால் அந்த ஆண்டிலேயே அவர் மறைவு ஏற்பட்டிருக்காது என்றும் கூறுகிறார்கள். அவர் மரணப் படுக்கையில் இருக்கும்போதுகூட அவருடைய மனைவி வந்து பார்க்க அவருடைய ‘நண்பர்கள்’ அனுமதிக்கவில்லை!

டால்ஸ்டாயின் பெருமை பேச வேண்டுமானால் கூடவே அவர் மனைவியைத் தூற்ற வேண்டும் என்ற நிலைமை இருந்தபோது ஓர் எழுத்தாளர் மட்டும் அவளுக்காக அனுதாபக் குரல் எழுப்பினார். அவர் மாக்சிம் கார்க்கி.

மாக்சிம் கார்க்கிக்கு டால்ஸ்டாயின் மனைவி மீது பரிவுகொள்ளத் தனிக் காரணங்களே இல்லை. அவருடைய பிறப்பு, இளமைப் பருவம் கழிக்க நேர்ந்த வட்டாரம், அன்றாட வாழ்க்கை நடத்துவதே பெரும் பளுவாக இருந்த சந்தர்ப்ப சூழ்நிலைகள் – இவையே, வர்க்கத்துக்கு வர்க்கம், டால்ஸ்டாய் போன்றோரை கார்க்கி ஓர் ஆழ்ந்த வெறுப்புடன் நினைக்கத் தூண்ட வைக்கும். ஆனால் கார்க்கிக்கு ஏனோ அம்மாதிரி தோன்றியதே இல்லை. அவர் பெயரில் கசப்பை வைத்துக் கொண்டாரே தவிர எழுத்திலும் வாழ்க்கை நோக்கிலும் கசப்பையும் வெறுப்பையும் வைத்திருக்கவில்லை. உற்சாகத்தை எவ்வளவு ஒடுங்க வைக்கக்கூடிய சூழ்நிலை இருந்தாலும் எல்லாவற்றையும் மீறிப் பல ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுவதே அவருடைய தனிச் சிறப்பாக இருந்திருக்கிறது.

அநேக சந்தர்ப்பங்களில் கருத்து முரண்பாடு ஏற்பட்டாலும் கார்க்கிக்குப் பிரபல பத்திரிகைகளின் பிரபல அறிமுகம் ஏற்பட உதவிய கொரலங்கோவின் தூண்டுதலின் பேரிலும் சிபாரிசினாலும் கார்க்கி ‘சமரா கெஜட்’ என்னும் பத்திரிகையில் உத்தியோகம் புரிய சமரா சென்றார். அவருடைய மணவாழ்க்கை அங்கேதான் ஆரம்பித்தது. ‘கெஜட்’டில் புரூப் திருத்துபவராக இருந்த காடரீனா வால்ழீனாவை கார்க்கி 1896-ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். கார்க்கியின் ஒரே குழந்தையான மாக்சிம் பிறந்தான். கார்க்கியின் எழுத்து உள்ளூர் நிர்வாக ஊழல்களை வெளிப்படுத்த, கார்க்கி ‘கெஜட்’டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அந்த நாட்களிலேயே கார்க்கியின் படைப்புகள் தணிக்கையாளரால் மிகவும் வெட்டப்பட்டன. அப்படி இருந்தும் 1898-ல் அவருடைய ‘கவிதைகளும் கட்டுரைகளும்’ வெளியானபோது பொதுஜனங்கள் அளித்த வரவேற்பு மகத்தானது. படித்தவர்கள், மேல் தரப்பிலுள்ளவர்கள் கார்க்கியின் இலக்கிய வேகத்தையும் உயிர்த் துடிப்பையும் பாராட்ட, வசதியற்றோர், ஏழை எளியவர்கள் கார்க்கியை அவர்களுடைய அந்தரங்கமான பிரதிநிதியாகக் கொண்டாடினார்கள். அவருடைய அமோகமான பொதுஜன மதிப்பு, அரசைக் கடுமையான நடவடிக்கை ஒன்றும் எடுத்துவிடாதபடி தடுத்தது. ‘அதல பாதாளம்’ என்கிற கார்க்கியின் நாடகம் அதி கவனமான தணிக்கைக்கு உட்பட்டு, ‘இனி இதை அடக்கி வைத்தாலும் வெளியிட்டாலும் ஒன்றுதான்’ என்று தீர்மானித்த பிறகுதான் மேடைக்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால் இந்த எழுபதாண்டு காலத்தில் அபரிமிதமான வெற்றி பெற்ற முதல் பத்து உலக நாடகங்களில் அதுவும் ஒன்றாக இடம் பெற்றிருக்கிறது. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் கார்க்கியின் புகழ் உலகில் பரவாத இடமில்லை.
ரஷ்யாவின் புரட்சி இயக்கத்துக்கு நிதி திரட்டவென கார்க்கி 1906-ம் ஆண்டில் அமெரிக்கா சென்றார். அதற்குள் அவருடைய மண வாழ்க்கையில் பிளவு ஏற்பட்டுவிட்டது. ஆண்டிரியீனா என்கிற நடிகைதான் கார்க்கியுடன் சென்றிருந்தாள். அவளைத்தான் அமெரிக்காவில் திருமதி கார்க்கி என்று அழைத்தார்கள். மார்க் ட்வெய்ன், எச்.ஜி.வெல்ஸ், ஆர்தர் பிரிஸ்பேன், வில்லியம் ஹாவெல்ஸ் போன்றோர் கூடி, கார்க்கிக்கு அமெரிக்காவில் மகத்தான வரவேற்பு கொடுத்தார்கள். பத்திரிகைகள் புகழாரம் சூட்டிய வண்ணம் இருந்தன. கார்க்கியின் அமெரிக்க விஜயப் பட்டியலில் ஜனாதிபதி தியோடோர் ரூஸ்வெல்ட்டின் ‘வெள்ளை மாளிகை’ வரவேற்பு விருந்து முக்கியமானதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

‘ஒரு கலவரக்காரன்’ என்கிற பெயரில் கார்க்கியை மட்டந்தட்ட ரஷ்யத் தூதரகம் அமெரிக்காவில் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆனால் அதைவிட இன்னமும் சக்திவாய்ந்த ஆயுதமொன்றை அது உபயோகித்தது.

வில்லியம் ஹேவுட் என்பவர் அமெரிக்கத் தொழிலாளர் இயக்கத்தின் தலைவர். அவரும் மொயர் என்கிற இன்னொரு தலைவரும் கார்க்கியின் விஜயத்தின்போது சிறையிலிடப்பட்டிருந்தார்கள். கார்க்கி அவர்களுக்கென்று ஒரு விசேஷச் செய்தி விடுத்தார்.

அதே சமயத்தில்தான் ‘சட்டபூர்வமாக மணம் செய்து கொள்ளாதவளை மனைவி என்று இழுத்து வந்திருக்கிறானே, இவனுக்கா இந்த ஆர்ப்பாட்ட வரவேற்பு அளிக்கிறீர்கள்?’ என்று ரஷ்யத் தூதரகம் எல்லா பத்திரிகைகளுக்கும் குறிப்பு அனுப்பியது. அத்துடன் ‘இதோ இருக்கிறாள் ரஷ்யாவில், இந்தக் கார்க்கியுடன் சேர்ந்து வாழ இயலாது என்று விலகிய அவனுடைய மனைவி’ என்று காடரீனாவின் புகைப்படப் பிரதிகளையும் தந்து உதவியது. நடு இரவில் கார்க்கி தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்டார். அது மட்டுமல்ல. அந்த நேரத்திலேயே அவரும் அவர் குழுவினரும் அந்த ஹோட்டலிலிருந்து வெளியேற்றப்பட்டனர். ஏகமாகப் புகழ்ந்த பத்திரிகைகள் ‘துன்மார்க்கன், இல்லறத் துரோகி’ என்றெல்லாம் கார்க்கி மீது வசைமாரி பொழிந்தன. பிரமுகர்களும் பத்திரிகைகளும் சேர்ந்து தமது ‘தங்கும் விடுதிகளின் புனிதத் தன்மையைக் காப்பாற்ற வேண்டும்’ என்று ஓர் அறப்போர் தொடுத்து கார்க்கிக்கு அமெரிக்காவில் தங்க இடம் இல்லாமல் செய்தார்கள். ரூஸ்வெல்ட் கார்க்கிக்குத் தான் அளிக்கவிருந்த வரவேற்பை ரத்து செய்தார்.

கார்க்கியின் சிறுகதைகளில் ‘வெட்ட வெளிச்சம்’ என்றொரு மிகச் சிறிய கதை இருக்கிறது. அது 1895-ல் எழுதப்பட்டது. இருபது வயதுகூட அடையாத ஓர் இளம் மனைவி நடத்தை கெட்டவளென்று நடுத்தெருவில் சித்திரவதைக்குட்பட்டு உடலெல்லாம் ரத்தமொழுக இழுத்துச் செல்லப்படும் கொடுமை பற்றியது அது. அந்தக் காட்சியை 1891 ஜூலை 15-ம் தேதியன்று தான் நேரில் கண்டு அப்படியே எழுதியதாக கார்க்கி கூறியிருக்கிறார். மிகவும் அடக்கமாக எழுதப்பட்ட கதை இது. ஓரிடத்தில்கூட படிப்போரை வெறி கொள்ளச் செய்ய முயற்சிக்கவில்லை. இப்படித்தான் முடித்திருக்கிறார்: “இம்மாதிரி கொடூரங்கள்  இரக்கமற்ற, கற்றறியா மக்கள் தார்மீக வெறியின் பேரில் புரியக்கூடும் என்று இன்று கண்கூடாகப் பார்த்து விட்டேன்… மனிதர் விலங்குகளாக மாறுவதை நேரில் பார்த்து விட்டேன்…”

ஒரு ரஷ்யக் குக்கிராமத்தில் சிறிது நேரம் தாண்டவமாடிய ‘தார்மீக’ வேகத்தின் இன்னொரு பரிமாணத்தை கார்க்கி தன் சொந்த வாழ்க்கையில் அயல் நாடாகிய அமெரிக்காவில் அனுபவித்து விட்டார்.

எந்தத் தனி மனிதனையும் இழிவுபடுத்தும் வகையில் கார்க்கி தீர்ப்பளித்ததில்லை. ‘மனிதன்! எத்துணை உயர்வாக இச்சொல் ஒலிக்கிறது!’ என்றுதான் இறுதி நாள் வரை அவர் கூறிக் கொண்டிருந்தார். “அஞ்ஞானக் குப்பையைப் புறம் தள்ளி, தன் தவறுகள் தனக்கிடும் பனித் திரையை விலக்கிக் கொண்டு, பழைமையைப் போக்கி பெரும் புதிராயிருக்கும் தன் எதிர்காலத்தை நோக்கி மனிதன் கம்பீரமாகவும் சுயேச்சையாகவும் மெல்ல முன்னேறிக் கொண்டே இருக்கிறான். அவன் பயணத்தில் கணக்கில்லாத இன்னல்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவன் முன்னேறிக் கொண்டே இருக்கிறான்.”

அதனால்தான் கார்க்கிக்கு கிராமத்துப் பேதைமீது கருணை காட்ட முடிந்தது. டால்ஸ்டாய் சீமாட்டி மீதும் பரிவு கொள்ள முடிந்தது.

(1968ல் எழுதப்பட்ட கட்டுரை. அசோகமித்திரன் கட்டுரைகள் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.)