இலக்கிய நோபல் – கலைஞர் கடிதம்

உடன்பிறப்பே,

அண்மையில் நான் உணர்ந்திட்ட ஒரு மகிழ்ச்சியைச் சொல்லும்போது பல்லிடுக்குப் பாக்காக ஒரு சொல்லிடுக்குச் சோகமும் பீரிடுகின்றதே,அந்தக் கலவையான உணர்வை உன்னிடம் பகிர்ந்து கொள்ளாமல் வேறு யாரிடம் சொல்வேன்?

“மரியோ வர்காஸ் லோஸா” என்று ஓர் எழுத்தாளர் இருக்கின்றார். திராவிட இயக்க எழுத்தாளர்களின் படைப்புகளிலேயே ஊறித் திளைத்திட்ட நீ அவரைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கமாட்டாய். எனக்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னே பிறந்தாலும், இன்று நோபல் பரிசை இலக்கியத்துக்காகப் பெற்றிருக்கின்றார். மகிழத்தக்க செய்திதான். அவரை வாழ்த்தவேண்டியது ஒரு திராவிடக் கடமை என்பதனையும் நான் அறிவேன். அவருக்கு வாழ்த்துத் தந்தி ஒன்றினையும் நான் அனுப்பத் தவறவில்லை என்பதை நீ அறிந்திருப்பாய் என்பது எனக்குத் தெரியும்.

ஆனால் என் உள்ளத்திலே அமைதி இல்லை. அலை கடலைப்பார்! கருமுகிலைப் பார்! என் ஆழ்மனத்து எண்ணம் பார்! அன்னைத் தமிழுக்கு அணிகலன் பூட்டி அழகுபார்க்க நினைப்பது பாவமா? இலக்கின்றி எழுதுவோர் மத்தியிலே இலக்கியமாய் எழுதியவன் நானொருவன் தான் என்று பேரறிஞர் அண்ணா அன்றே சொன்னது உனக்கு நினைவிருக்கும். அந்தோ, அண்ணாவின் அறைகூவல்கூட அந்த நோபல் பரிசுக் கமிட்டியாருக்கு எட்டவில்லையென்றால் இந்தத் தம்பியின் தமிழ் தழைத்தோங்கி என்ன பயன்?

கெழுதகை நண்பர் மரியோ வர்காஸ் லோசாவை நானறிவேன். கம்யூனிசத்தை ஆரம்பகாலத்தில் வானளாவப் பாராட்டி, இன்று வகையாய்ச் சாட வாய்ப்புக் கிடைத்தால் விட்டுவிடாமல் விளாசிக்கொண்டிருக்கின்றாரே, அதையா புகழ்கிறது இந்த நோபல் கமிட்டி? எட்டு வயது இருக்கையிலேயே கம்யூனிச கோஷங்களை எழுப்பியவன் நான். இன்றுவரை எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் நானும் கம்யூனிஸ்ட்தான் என்று சொல்ல என்றாவது தவறி இருக்கின்றேனா? நெறி வழுவி இருக்கின்றேனா?

அய்யனும், அவன்புகழ் ஓங்கிடக் குறளோவியம் தீட்டிய நானும் தீண்டத்தகாதவர்களென இந்த மண்ணின் ஆரிய ஏடுகள் கோயபல்ஸ் பிரச்சாரத்தில் ஈடுபடுவது நமக்கொன்றும் புதியதில்லை. ஆனால் கடல் கடந்தும் அந்தப் பிரச்சாரம் எட்டியிருப்பதும் எடுபட்டிருப்பதும் உன் சிந்தையைத் தீண்டவில்லையா? அதைக்கண்டு அங்கலாய்க்கக் கூடவா நமக்கு உரிமையில்லை?

நோபல் வென்ற லோஸா

பெரு நாட்டைப் பற்றி எழுதிய லோசாவிற்கு நோபல். தமிழன் வாழ்க்கையைப் பற்றி அல்லும் பகலும் அயராது காவியங்களை இயற்றித் தள்ளியவர்களைப் பற்றி நோபல் கமிட்டியாருக்குத் தெரியுமா? யாரேனும் சொல்லியாவது இருக்கின்றார்களா? சங்கம் வளர்த்த தமிழில், கழகம் வளர்த்த 87 அகவை எய்திய எந்த ஒரு மூத்த அறிஞரைப் பற்றியேனும் நோபல் கமிட்டியாரை அறியச்செய்ததுண்டா இந்த ஆரியச் சதிகாரர்கள்? என்னைப்பற்றியே பேசுவது என் வழக்கமல்ல. தமிழுக்குக் கிடைக்காத பெருமை பெருவுக்குக் கிடைக்கிறது என்றால் அதற்கு யார் காரணம் என்பதை நீ சிந்திக்கவேண்டும் என்பதனால்தான் இதனைக் குறிப்பிடுகின்றேன்.

எத்தாலி போயினும் இத்தாலி பெருமை பேசுகின்றேனே, அதனால் வந்த காழ்ப்புணர்ச்சி இது. பொன்னரும் சங்கரும் ஆயிரம் காஸ்ட்ரோக்களைச் செரிமானம் செய்வார்கள் – இதை எடுத்துச் சொல்ல வேண்டிய ஏடுகள், நஞ்சு கக்கும்  நாகங்களாக உலவும் இந்த நாட்டில் பிறந்தோமே, அது நம் குற்றமா? நயவஞ்சக நரிகளின் குற்றமா?

குறளைப் பாடும் பாவாக வைத்தான் அய்யன். அதை ஓவியமாகத் தீட்டினேனே, அது எத்தனை பேர் காழ்ப்புணர்வைத் தூண்டியிருக்கிறது பார்த்தாயா? நாம் தென்றலைத் தீண்டாமல் தீயைத் தாண்டினோமே, அன்றே உணர்ந்திருக்கவேண்டும் இங்குள்ளோர் உள்ளுணர்வை.

பராசக்தியில் தொடங்கி பெண் சிங்கம் வரை திரைப்படங்களை புரட்டிப் போட்ட படைப்பாளிகளை இன்றுவரை உணராத நோபல், வெறும் புலம்பல் பொச்சரிப்பு, பொய்ப்பிரச்சாரக் கதை கட்டுரை எழுதுபவர்களையே பரிசீலிக்கிறது என்றால் எந்த அளவுக்கு ஆரிய கலாச்சாரம் அதன் கூரிய கரங்களை நோபல்லுக்குள் இறக்கி இருக்கும் என்பது உனக்குப் புரியும்.

அரசவைக் கவிஞர் வாலியும் தம்பி வைரமுத்துவும் சரக்கில்லாமல்தான் இந்தக் கருணாநிதியைப் புகழ்கின்றார்கள் என்ற முன்முடிவுக்குள் புகுந்துவிட்ட நோபல் கமிட்டியின் விருது நமக்குத் தேவையா?

அதனால்தான் இந்த முடிவை எடுக்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றேன். நோபல் விருதுக்கு இணையாக, ஏன், மேலாக இனி தமிழக அரசு சார்பாக சாம்பல் விருது வழங்கப்படும். இலக்கிய உலகம் மட்டுமல்ல. ஈரேழு பதினான்கு உலகங்களும் வியக்கத்தக்க வகையில் இவ்விருதினை மிகப்பெரிய அளவினிலே நிறுவுவதென முடிவு செய்திருக்கின்றேன்.

கருணாநிதி நிறுவுகின்றான், என்ன ஆகுமெனத் தெரியாதா என பார்ப்பனப் புல்லுருவிகள் புலம்பல் கீதம் இசைப்பார்களே என நீ கேட்பது புரிகிறது. விருதினை நிறுவுவதுடன் என் பங்களிப்பினை நிறுத்திக்கொண்டு, தகுதிவாய்ந்த நபரினுக்கு ஆண்டுதோறும் அதனை வழங்குவதற்கெனத் தமிழுலகம் பெருமைகொள்ளத்தக்க ஆன்றோர்களான ராமநாராயணன், குஷ்பூ தலைமையில் ஒரு தனிக்குழுவினை அமைக்கவும் முடிவு செய்திருக்கின்றேன்.

நல்லமனம் படைத்திட்ட நடுவர் பெருமக்கள், முதல் விருதை எனக்கே அளிக்க நினைப்பார்கள் என்றாலும், முடிந்தவரை அதனைத் தவிர்க்கவே பாடுபடுவேன். பெரும்பாலும் முடியாமல் போவதற்கு நானல்ல, என் வயதே காரணம் என்பதனை நீ அறிவாய். மேலும் நடுவர் குழு என்ற ஒன்று அமைக்கப்பட்டு அது என்ன முடிவெடுத்தாலும் கட்டுப்படுவதே கழகப் பாரம்பரியத்தில் வந்த இந்தக் கருணாநிதியின் வழக்கம் என்பதும் உனக்குத் தெரியும்.

இனி, தமிழன் எழுத்தைத் துச்சமாக மதிக்கும் நோபல்லை நாம் துச்சமாக மதிப்போம். சாம்பல்லை உச்சத்தில் ஏற்றுவோம்.

அன்புடன்
மு.க.