வேதியனை விலக்கி முடவனைச் சுமந்தவள்

பஞ்ச தந்திரக் கதைகள்/ 4.4 

indianjackalதாரா நகரத்தில் சத்தியவிரதன் என்ற ஒரு வேதியன் தன் மனைவியோடு வாழ்ந்துவந்தான். அவன் மனைவி அக்கம் பக்கத்தில் இருப்போரிடம் சண்டையும் கலகமும் செய்துகொண்டிருந்தாள். அவளைத் திருத்த முடியாத அந்த வேதியன், அவளை அழைத்துக்கொண்டு வேறு நகரத்திற்குச் சென்றான்.
செல்லும் வழியில் அவளுக்குத் தண்ணீர்த் தாகம் எடுத்தது. அவள், ‘எனக்கு உடனே தண்ணீர்வேண்டும். தண்ணீர் இல்லையேல் நான் இந்தத் தாகத்தாலேயே இறந்துவிடுவேன்’ என்று கூறினாள்.

உடனே அந்த வேதியன் தண்ணீர் தேடிச் சென்றான். வெகுநேரம் கழித்தே அவனால் தண்ணீர்கொண்டு வரமுடிந்தது. அதற்குள் அவள் இறந்துவிட்டாள். வேதியன் அழுது புலம்பினான்.

அப்போது வானில், ‘உன் வயதில் இவளுக்குப் பாதியைக் கொடுத்தால் இவள் மீண்டும் உயிர்பெறுவாள்’ என்று ஓர் அசரீரி ஒலித்தது.

உடனே அவன் அவ்வாறே தருவதாகத் தன் மனத்தில் நினைத்துக்கொண்டான். அவள் உயிர்பெற்றாள். பின்னர் அவள் அவன் கொண்டுவந்த தண்ணிரைப் பருகினாள். பின்னர் அவர்கள் இருவரும் தொடர்ந்து நடந்து ஒரு நகரத்தினை அடைந்தனர்.

அங்கு ஓர் இடத்தில் அவளைத் தங்கவைத்துவிட்டுக் கடைக்குச் சென்றான் வேதியன். தனியாக இருந்த அவளிடம் ஒரு முடவன் தவழ்ந்துவந்தான். அவன் இனிமையாகப் பாடினான். அவன் பாட்டில் மயங்கிய இவள் அவனுடன் இணைந்தாள்.

திரும்பிவந்த வேதியன் தனது மனைவியின் அருகில் ஒரு முடவன் இருப்பதைப் பார்த்து, ‘இவன் யார்?’ என்று அவளிடம் விசாரித்தான்.
‘நான் தனியாக இருந்தபோது, இவனே எனக்குத் துணையாக இருந்தான்.’ என்றாள். வேதியனுக்கு முடவன் மீதும் தன் மனைவி மீதும் எந்தச் சந்தேகமும் ஏற்படவில்லை. இதனைப் புரிந்துகொண்ட மனைவி, ‘நாம் இவனுக்கு உணவளிப்போமா?’ என்றாள். வேதியன் அதற்குச் சம்மதித்தான்.
பின்னர் இவர்கள் வேறு இடத்துக்குப் புறப்படும்போது, அவள், ‘இவனை நம்முடனே வைத்துக்கொள்வோமா?’ என்றாள். இவளையும் முடவனையும் நம்பியதால் வேதியன் அதற்கும் ஒப்புக்கொண்டான்.

‘ஆனால், இவனால் நடக்க முடியாதே! இவனை எப்படி நம்முடன் அழைத்துச்செல்வது? என்று கேட்டான் வேதியன்.

அவள், ‘நான் இவனை என் முதுகில் சுமந்து செல்வேன்’ என்றாள். தன் மனைவியின் இரக்க குணத்தை நினைத்து மனம் மகிழ்ந்த அவன் அதற்கும் சம்மதித்தான்.

செல்லும் வழியில் வேதியன் ஒரு கிணற்றின் கரையில் படுத்து ஓய்வெடுத்தான். இதுதான் சமயம் என்று நினைத்த அவள் வேதியனை அந்தக் கிணற்றில் தள்ளிவிட்டாள். பின்னர் அந்த முடவனை ஒரு பெட்டிக்குள் அமரச்செய்து தன் தலையில் அவனைச் சுமந்துகொண்டு சென்றாள்.

வழியில் சென்ற காவலாளிகள், தலையில் பெட்டியுடன் செல்லும் அவளைக் கண்டவுடன் சந்தேகப்பட்டு, அவளை ராஜாவிடம் அழைத்துச் சென்றனர்.

தன்னை விசாரித்த ராஜாவிடம், ‘இவர் என் கணவர். இவரால் நடக்க முடியாது. இவருக்கு நோயுள்ளது. மனைவி என்ற முறையில் இவரை நான்தானே பாதுகாக்கவேண்டும்!’ என்றாள். இவளின் கற்புத் தன்மையைக் கண்டு கண்கலங்கிய ராஜா, அவளைத் தன் உடன்பிறந்தவளாகக் கருதி அவளையும் முடவனையும் அரண்மனையில் தங்கவைத்து உபசரித்தார்.

கிணற்றில் தள்ளி விடப்பட்ட வேதியன் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தான். அப்போது வழிப்போக்கன் ஒருவன் தண்ணீர்த் தாகம் ஏற்பட்டதால் அருகில் இருக்கும் கிணற்றிலிருந்து தண்ணீர் பருக நினைத்துக் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தான்.

அங்கு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த வேதியனைக் கண்டு, அருகிலிருந்த ஆட்களை அழைத்து கிணற்றில் குதிக்கச் சொல்லிக் காப்பாற்றினான். பின்னர் வேதியன் தன் மனைவியையும் அந்த முடவனையும் தேடிச் சென்றான்.

அரண்மனை மாடத்திலிருந்து வீதியில் செல்லும் வேதியனைப் பார்த்த அவனது மனைவி, அரண்மனைக் காவலர்களிடம் சென்று, ‘அதோ அந்த வேதியன், என்னையும் முடமாகவுள்ள என் கணவரையும் கொல்ல வருகிறான்’ என்று கூறினாள்.

அவர்கள் வேதியனைப் பிடித்து ராஜாவின் முன் நிறுத்தினர். ராஜா நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டார். வேதியனைத் தீர விசாரித்த நீதிபதி உண்மையை அறிந்துகொண்டு, ராஜாவிடம் கூறினார். ராஜா வேதியனை விடுவித்து, வேதியனின் மனைவியையும், முடவனையும் தண்டித்தார்.

‘ஆதலால், பெண்களின் பேச்சினைப் புத்திசாலிகள் கேட்கத் தயங்குவர். அவர்களின் பேச்சினை நம்பினால், நந்தனராஜாவும் வரருசியன் என்ற மந்திரியும் அவமானப்பட்டதுபோல நாமும் அவமானப்பட நேரிடும்’ எனக் குரங்கு கூறியது.

‘அவர்கள் எத்தகைய அவமானத்தை அடைந்தார்கள்?’ என்று கேட்டது முதலை. குரங்கு அந்தக் கதையினைக் கூறத் தொடங்கியது.

4.5. குதிரையும் மொட்டையும்

வீரத்திலும் தீரத்திலும் மிகவும் சிறந்தவரான நந்தனராஜா தனது நாட்டை சீரும் சிறப்புமாக அரசாட்சி செய்து வந்தார். அவருக்கு வரருசியன் என்ற மந்திரி இருந்தார். ராணியும் மந்திரியின் மனைவியும் நெருங்கிய தோழிகள்.
ஒருநாள் மாலையில் அந்தப்புரத்தில் ராஜாவுக்கும் ராணிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. ராஜா எவ்வளவோ கூறியும் ராணி சமாதானமாகவில்லை.

‘நான் என்ன செய்தால் உன் கோபம் தணியும்?’ என்று கேட்டார் ராஜா.

‘நீங்கள் ஒரு குதிரையைப் போலக் கடிவாளம் கட்டிக்கொண்டு, என்னைச் சுமந்துகொண்டு குதிரையைப் போலவே கனைக்கவேண்டும்’ என்றாள்.

வேறுவழி இல்லாததால் ராஜா, குதிரையின் கடிவாளத்தைத் தன் வாயில் கவ்விக்கொண்டு ராணியைத் தன்முதுகில் சுமந்து, குதிரையைப் போலவே கனைத்தார். ராணியின் கோபம் தணிந்தது.

இந்த நிகழ்வை ராணியின் தோழியாகிய மந்திரியின் மனைவி பார்த்துவிட்டாள். அன்று இரவு தன் வீட்டுக்குச் சென்ற அவள், தன் கணவரிடம் எந்தக் காரணமும் இல்லாமல் கோபித்துக்கொண்டாள்.

மந்திரி பலவாறு கூறியும் அவளின் கோபம் தணியவில்லை.

‘நான் என்ன செய்தால் நீ உன் கோபம் தணியும்?’ என்று கேட்டார் மந்திரி.

‘நீங்கள் உங்கள் தலையினை மொட்டையடித்துக்கொண்டு என்னைச் சுற்றிவந்து என் காலில் விழுந்து வணங்கவேண்டும்!’ என்றான் அவள்.

வேறுவழி இல்லாததால் மந்திரி, தன் தலையினை மொட்டையடித்துக்கொண்டார். தன் மனைவியைச் சுற்றிவந்து அவள் காலில் விழுந்துவணங்கினார்.

மறுநாள் அரசபைக்கு வந்த மந்திரியைப் பார்த்த ராஜா, ‘என்ன மந்திரியாரே! திடீரென்று மொட்டைபோட்டுள்ளீர்?’ என்றார்.

அதற்கு மந்திரி, ‘ராஜா! தாங்கள் குதிரையைப் போலக் கனைத்ததால்தான் நான் திடீரென்று மொட்டைபோட வேண்டியதாயிற்று’ என்றார்.

அரசவையில் இருந்தவர்களுக்கு ஏதும் புரியவில்லை. பின்னாளில் இதன் காரணத்தைத் தெரிந்துகொண்டவர்கள் மந்திரிக்குத் தலைமுடி வளரும் வரை அவரைக் கேலிசெய்தனர். குதிரை கனைக்கும் சப்தத்தைக் கேட்கும்போதெல்லாம் ராஜாவை நினைத்துச் சிரித்தனர்.

‘ஆதலால், பெண்கள் இத்தகைய பேச்சுக்களைப் பேசும்போது ஆண்கள் மௌனமாக இருந்துவிடவேண்டும். மறுமொழி பேசினால், புலித்தோலைப் போர்த்திக்கொண்டிருந்த கழுதை போலத் துன்பமடைவான்’ என்றது குரங்கு.

‘கழுதை ஏன் புலித்தோலைப் போர்த்திக்கொண்டது?’ என்று கேட்ட முதலைக்குக் குரங்கு அந்தக் கதையினைக் கூறத்தொடங்கியது.

4.6. புலித்தோல் போர்த்திய கழுதை

நர்மதை நதிக்கரையில் வாழ்ந்த வண்ணான் ஒருவன் கழுதை ஒன்றை வளர்த்து வந்தான். அவன் தொழில் சிறப்பாக நடைபெறாததால் வண்ணான் மிகவும் வறுமையில் வாடினான். அதனால் அவன் தன் கழுதைக்கும் சரிவர உணவுகொடுக்கவில்லை. அதனால் அந்தக் கழுதை உடல் இளைத்துக் கொண்டே வந்தது.

ஒருநாள் அவன் காட்டுக்கு அருகாமையில் சென்றுகொண்டிருக்கும்போது அங்கே ஒரு புலித்தோலினைக் கண்டெடுத்தான். அதனைப் பார்த்ததும் அவனுக்கு ஒரு யோசனை வந்தது.

அதனைக் கொண்டுவந்து தன் கழுதையின் மீது போர்த்தினான். இரவில் அதனை வெளியில் நடத்திச்சென்று அக்கம் பக்கத்தில் உள்ள தோட்டங்களில் அதனை அனுப்பிப் பயிர்களை மேயவைத்தான். தோட்டக் காவலர்கள் இதனைப் புலி என்று நினைத்துப் பயந்து ஓடினர். கழுதையும் எந்தத் தொந்தரவும் இன்றி தனது பசி தீர பயிர்களை ஆசையாகச் சாப்பிட்டு வந்தது.

இதுபோலவே நாள்தோறும் இரவில் தன் கழுதைக்குப் புலித் தோலைப் போர்த்திய அந்த வண்ணான், அதனைப் பக்கத்துக் கிராமங்களுக்கும் அழைத்துச் சென்று அங்குள்ள பயிர்களையும் மேயச்செய்தான். அங்கிருந்த இரவுக் காவல்காரர்களும் இந்தக் கழுதையைப் புலி என்று நம்பி விலகி ஓடினர்.

ஒருநாள் வழக்கம்போல அந்தக் கழுதை வயலில் மேய்ந்துகொண்டிருக்கும்போது, தூரத்தில் ஒரு பெண் கழுதையின் குரல் கேட்டது. உடனே புலித்தோலைப் போர்த்தியிருந்த இந்தக் கழுதையும் கத்தத் தொடங்கியது. பயந்து ஒதுங்கியிருந்த தோட்டக் காவலர்கள், இது புலி அல்ல, கழுதை என்பதனைப் புரிந்துகொண்டார்கள். அதன் மேலிருந்த புலித்தோலைப் பறித்துக்கொண்டு, கழுதையை அடித்து விரட்டினார்கள்.

‘ஆதலால், பெண்களுடன் வீணாகப் பேசக்கூடாது’ என்றது குரங்கு. முதலை தன் தவறினை உணர்ந்தது.

முதலைக்கு மேலும் அறிவுறுத்தும் வகையில், குரங்கு சொல்லியது: ‘முதலையே! நீ உன் மனைவியின் மீதுகொண்ட அன்பின் காரணமாகத்தான் என்னைக் கொல்லவந்தாய். உன் மீது எந்தக் குற்றமும் இல்லை. அவன் மீது உனக்குள்ள விசுவாசத்தால்தானே நீ அவள் கூறிய காரியத்தில் இறங்கினாய். இத்தகைய மனநிலை சாதுக்களின் சேர்க்கையாலும் மாறாது. உன்னைப் போன்ற தீய மனம்கொண்டவர்களுக்கு அறிவுரை கூறுவதும் பயனற்றதுதான்’ என்றது குரங்கு.

அப்போது கங்கைக் கரையில் நீந்தி வந்த ஒரு விலங்கு அந்த முதலையிடம், ‘முதலையே! அக்கரையில் உன் பெண் முதலை இறந்து கிடக்கிறாள்’ என்றது.

அந்தச் செய்தியைக் கேட்ட முதலை கலங்கியது. பின்னர், அந்த முதலை, ‘முன்பு நான் என் நண்பனுக்கு விரோதியானேன். இப்போது என் மனைவியின் உயிரையும் பறித்துவிட்டேன். எனக்கு மட்டும் ஏன் இப்படித் துன்பங்கள் தொடர்ந்து வருகின்றன? அவள் இல்லாத என் வீடு சுடுகாடாக மாறிவிடுமே!’ என்று புலம்பியது.

பின்னர் அது அந்தக் குரங்கிடம், ‘நண்பா! நான் என்னுடைய தவறுகளுக்காக இங்கேயே நெருப்பினை வளர்த்து அதில் விழுந்து உயிரைவிடப்போகிறேன்’ என்றது.

‘நீ ஏன் உயிரைவிடவேண்டும்? உன்னைத் தவறு செய்யத் தூண்டியது அவள். அவள் இறந்ததற்காக நீ வருந்தவேண்டாம். அந்தப் பொல்லாதவள் இறந்ததற்காக நீ மகிழ்ச்சியடைய வேண்டும். ஆதலால், நீ உன் வீட்டிற்குச் செல்’ என்றது குரங்கு.

குரங்கின் பேச்சினைக் கேட்டுத் தன் வீட்டிற்குச் சென்ற முதலைக்கு அங்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த முதலையின் வீட்டிற்குள் வேறொரு பெரிய முதலை குடியேறிவிட்டது. இந்த முதலையை அது உள்ளேயே விடவில்லை. வேறுவழியின்றி வீதியில் நின்ற அந்த முதலைக்கு மீண்டும் தன் குரங்கு நண்பனின் நினைவுவந்தது.

உடனே கங்கையைக் கடந்து தன் குரங்கு நண்பனைக் காணவந்தது.
முதலையைப் பார்த்த அந்தக் குரங்கு, ‘ஏய் நன்றிகெட்டவனே! மீண்டும் ஏன் இங்கு வந்தாய்?’ என்று கோபமாகக் கேட்டது.

‘நண்பா! உன்னைவிட்டால் எனக்கு யார் இருக்கிறார்கள்? என் வீட்டை வேறு ஒரு பெரிய முதலைக் கைப்பற்றிக்கொண்டது. இப்போது நான் என்ன செய்ய?’ என்றது அந்த முதலை.

‘உன்னைப் போன்ற முட்டாளுக்கு அறிவுரை கூறினால், வீடு உடையவன் வீடிழந்த கதையாகிவிடும்’ என்றது குரங்கு.

‘அது என்ன கதை?’ என்று கேட்ட அந்த முதலைக்குக் குரங்கு அந்தக் கதையினைச் சொல்லத் தொடங்கியது.

4.7. குரங்குக் கை

ஒரு சிறிய காடு. அங்குள்ள ஒரு மரத்தில் இரண்டு தூக்கணாங் குருவிகள் கூடுகட்டி வாழ்ந்துவந்தன. அதே மரத்தில் ஒரு குரங்கும் வசித்துவந்தது. தூக்கணாங்குருவிகள் தன் கூட்டில் ஓய்வெடுக்கும்போது, அந்தக் குரங்கு மரக்கிளையில் சாய்ந்துகொண்டு ஓய்வெடுக்கும்.

இதனைப் பார்த்த ஆண் தூக்கணாங்குருவி, ‘குரங்கே நீயும் எங்களைப் போல ஒரு கூடுகட்டிக்கொண்டு அதில் வாழலாமே! என்றது.

குரங்கு, ‘எனக்குக் கூடுகட்டத் தெரியாது’ என்றது.

‘கைகள் இல்லாத நாங்களே கூடுகட்டும்போது கைகள் இருக்கும் நீ ஏன் கூடுகட்டப் பழகிக்கொள்ளக் கூடாது?’ என்றது ஆண் தூக்கணாங்குருவி.

‘நான் எதைப் பழகவேண்டும் என்பது எனக்குத் தெரியும். நீ எனக்கு அறிவுரை கூறவேண்டாம்’ என்று குரங்கு கூறியது.

அப்போது பெண் தூக்கணாங்குருவி, ஆண் குருவியைப் பார்த்து, ‘உங்களுக்கு ஏன் இந்த வேலை? அந்தக் குரங்கு கூடுகட்டினால் என்ன, கட்டாவிட்டால் நமக்கு என்ன? நீங்கள் ஏன் அந்தக் குரங்குக்கு அறிவுரை கூறுகிறீர்கள். அந்தக் குரங்கு கோபப்பட்டு ஏதாவது செய்துவிட்டால் நமக்குத்தானே தொல்லை. உங்களுக்கு அறிவேயில்லை! ’ என்று திட்டி அடக்கியது.

ஒருநாள் அந்தக் காட்டில் பெரும் புயற்காற்று வீசியது. கனமழை பொழிந்தது. அந்த மரமே ஆடியது. இரண்டு தூக்கணாங் குருவிகளும் தன்கூட்டில் பத்திரமாக அமர்ந்துகொண்டு மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன.
அப்போது குரங்கு மட்டும் மழையில் நனைந்து, குளிரில் நடுங்கியபடியே அந்த மரத்திற்கு வந்தது. அதனைப் பார்த்த இரண்டு தூக்கணாங்குருவிகளும் இரக்கப்பட்டன.

பெண் தூக்கணாங்குருவி, ‘அந்தக் குரங்கிடம் ஏதும் பேசாமல் அமைதியாக இருங்கள்!’ என்று ஆண் குருவியிடம் சொன்னது.

ஆனால் ஆண் தூக்கணாங்குருவி அதைக் கேட்காமல், குரங்கைப் பார்த்து, ‘ஏய், குரங்கே! ஒரு கூடு கட்டிக்கொள் என்று நான் அன்றே உனக்கு அறிவுரை கூறினேன் அல்லவா? அப்போதே உன் கைகளால் கூடுகட்டப் பழகியிருந்தால், இன்று ஒரு கூட்டினைக் கட்டியிருப்பாய். எங்களைப் போல நீயும் மழையில் நனையாமல் நிம்மதியாக இருந்திருக்கலாம். நீ தான் என் பேச்சைக் கேட்கவில்லை. இப்போது அவஸ்தைபடுகிறாய்!’ என்றது.

குரங்குக்கு அவமானமாக இருந்தது. ‘இந்தச் சின்னக் குருவி நமக்கே அறிவுரை கூறுகிறதா!’ என்று நினைத்துக் கோபப்பட்டது. ‘எனக்குக் கைகள் இருக்கிறது. அந்தக் கைகளுக்குக் கூடு கட்டத்தெரியாது. ஆனால், ஒரு கூட்டினைப் பிரித்துவிட அந்தக் கைகளுக்கு நன்றாகத் தெரியும்’ என்று கூறி, அந்தத் தூக்கணாங்குருவிகளின் கூட்டினைப் பிரித்துப் போட்டுவிட்டது.

அந்தக் குரங்கினைப் போலவே, இந்த இரண்டு தூக்கணாங்குருவிகளும் மழையில் நனைந்து, குளிரில் நடுங்கத் தொடங்கின.

‘ஆதலால், நான் உனக்கு அறிவுரை கூறினால், எனக்கு அந்தத் தூக்கணாங்குருவிகளின் நிலைதான் ஏற்பட்டுவிடும்’ என்று கூறியது குரங்கு.

முதலை, ‘நண்பா! நான் முட்டாள்தான், குற்றவாளிதான். என்னை மன்னித்துவிடு. நான் உன்னுடைய பழைய நண்பன்தானே! நீ எனக்கு ஒரு யோசனையைக் கூறு. நான் எப்படி என் வீட்டைத் திரும்பப் பெறுவது?’ என்று கேட்டது.

குரங்கு, ‘நல்லவனுக்குக் கும்பிடும், சூரனுக்குப் பேதமும் காரியக்காரனுக்குத் தாளமும் ஈடானவனுக்குத் தண்டமும் செய்தாற்போலச் செய்யவேண்டும்’ என்று ஒரு யோசனையைக் கூறியது.

‘அது எப்படி? எனக்கு விளக்கமாகக் கூறு?’ என்ற முதலைக்கு அந்தக் குரங்கு கதை ஒன்றினைக் கூறியது.

4.8. நரியின் புத்திசாலித்தனம்

ஒரு பெரிய மலையின் சரிவில் சதுரன் என்ற நரி வாழ்ந்து வந்தது. ஒருநாள் அது இரைதேடி அலைந்து கொண்டிருக்கும்போது, இறந்த ஒரு யானையின் உடலைக் கண்டது.

அந்த யானையின் தோலை உரிக்கும் அளவிற்கு அதன் கால்களில் வலு இல்லை. ‘அடடா! இரை கிடைத்தும் அதனை உண்ண முடியாமல் இருக்கிறோமே!’ என்று அது வருந்தியது. ‘சரி, நமக்கு உடல் வலு இல்லையென்றால் என்ன, நாம் நமது புத்தியைப் பயன்படுத்துவோம்’ என்று நினைத்து அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டிருந்தது.

அந்த வழியாக ஒரு சிங்கம் வந்தது. நரி, சிங்கத்தைப் பார்த்து வணங்கியது. ‘எதற்காக இவன் நம்மை வணங்குகிறான்’ என்று அந்தச் சிங்கம் யோசித்தது.

பின்னர் அந்தச் சிங்கம், ‘நீ யார்?’ என்றது அந்த நரியை விசாரித்தது.

நரி, ‘நான் தங்களின் அடிமை. தாங்கள் அடித்துப்போட்ட இந்த யானையின் உடலுக்கு நான் காவலாக இருக்கிறேன்’ என்றது.

‘நான் இந்த யானையை வேட்டையாடவில்லை’ என்றது சிங்கம்.

‘இதனைத் தாங்கள் அடித்ததாக நினைத்துத்தான் நான் இதன் உடலைக் காவல்காக்கிறேன்’ என்றது.

‘இதனை வேறு யாராவது வேட்டையாடியிருப்பார்கள். அல்லது இந்த யானை தானாகவே இறந்திருக்கும். எது எப்படியோ நான் இந்த யானையின் உடலை உண்ண மாட்டேன். நீ இதற்குக் காவல் இருக்கவேண்டாம். உனக்கு வேண்டுமானால், நீயே இந்த யானையின் உடலை உண்டுவிடு’ என்றது சிங்கம்.

‘ஆகா! தங்கள் தாராள குணத்தை எண்ணி நான் மகிழ்கிறேன். வலிமையுடையவர்கள் எப்போதும் எளியவர்களுக்கு உதவுகிறார்கள்’ என்று கூறி, அந்தச் சிங்கத்தை மீண்டும் வணங்கியது நரி.

சிறிது நேரத்திற்குப் பின்னர் அந்த வழியாக ஒரு புலி வந்தது. ‘ஆகா! இந்தப் புலி இந்த யானை உடலைத் தின்றுவிடுமே! இதனிடமிருந்து இந்த யானை உடலை எப்படிக் காப்பாற்றுவது?’ என்று யோசித்தது.

உடனே, அந்த நரி அந்தப் புலியிடம், ‘ஏய் புலியே! நீ ஏன் இங்கு வந்தாய்? திரும்பிச் சென்று விடு. இங்கு ஒரு சிங்கம் புலியைக்கொல்வதற்காகத் தேடிக்கொண்டிருக்கிறது’ என்றது.

‘ஏன் அது புலியைக் கொல்கிறது?’ என்று கேட்டது புலி.

‘அந்தச் சிங்கம் இந்த யானையை அடித்துக்கொன்றதாம். குளித்துவிட்டு வந்து இந்த யானையின் உடலை உண்ணலாம் என்று நினைத்துக் குளிக்கச்சென்றபோது, ஒரு புலி வந்து இந்த யானையின் உடலை உண்ண முயன்றதாம். அதைப் பார்த்து கோபம் கொண்ச்ட சிங்கம் அந்தப் புலியை விரட்ட, அது தப்பியோடி விட்டதாம். அதனால், மீண்டும் அந்தப் புலி வந்தால் என்னிடம் கூறு என்று சொல்லிவிட்டு அந்தச் சிங்கம் இந்தப் பக்கமாகச் சென்றுள்ளது. ஆதலால், நீ இங்கு இருக்காதே, அது உன் உயிரைப் பறித்துவிடும்’ என்று நரி அந்தப் புலியை எச்சரித்தது.

‘யானையைச் சாப்பிட வந்த புலி நான் அல்ல. அது வேறு புலியாயிருக்கும்!’ என்றது புலி.

‘இருந்தாலும், கோபத்திலிருக்கும் அந்தச் சிங்கத்திற்கு நான் விளக்கிக் கூறமுடியாது’ என்றது நரி. நரி கூறியதில் நியாயம் இருந்ததால் அந்தப் புலி திரும்பிச் சென்றுவிட்டது.

அடுத்து அந்த வழியாக ஒரு குரங்கு வந்தது. அதனைக் கண்ட நரி, ‘முதலில் வந்த சிங்கத்தை நாம் வணங்கி அனுப்பிவைத்தோம். இரண்டாவதாக வந்த புலியை எச்சரித்து அனுப்பிவைத்தோம். இப்போது மூன்றாவதாக வரும் இந்தக் குரங்கினைக்கொண்டு இந்த யானையின் தோலைக் கிழிப்போம். குரங்கு சைவம்தானே! அதனால், இது இந்த யானையின் உடலில் பங்கு கேட்காது’ என்று நினைத்தது.

அந்தக் குரங்கைப் பார்த்து, ‘நண்பா! என்ன உன்னை இந்தப் பக்கம் பார்க்கவே முடியவில்லை? எனக்கு சிங்கம் ஒரு வேலையைக் கொடுத்துள்ளது. இந்த யானையின் உடலை நான் பாதுகாக்க வேண்டுமாம். அது குளிக்கச் சென்றுள்ளது. அது திரும்பிவருவதற்குள் நான் இந்த யானையின் உடலைச் சிறிது சுவைக்க விரும்புகிறேன். உனக்குத்தான் திறமையான கைகளும் அவற்றில் கூர்மையான நகங்களும் இருக்கின்றன. எனக்கு உதவிசெய்யேன். இந்த யானையின் தோலைச் சற்று உரித்துக் கொடு’ என்றது. குரங்கு தன் கைகளால் அந்த யானையின் தோலை சிறிது உரித்தது. பின்னர் சென்றுவிட்டது. நரி யானையை உண்ணத் தொடங்கியது.

அப்போது வேறு ஒரு நரி வந்தது. அதனைப் பார்த்த இந்த நரி, ‘அட, நான்காவது ஆளாக நம் இனமே வருகிறதே! இதை ஏமாற்ற முடியாதே!’ என்று நினைத்த அந்த நரி, அதன் மீது பாய்ந்து சண்டையிட்டு அதனை விரட்டியடித்தது.

பின்னர் யாருடைய குறுக்கீடும் இல்லாமல் தானே அந்த யானையின் உடலைச் சில நாட்களில் உண்டு முடித்தது.

‘ஆதலால் நீ உன் வீட்டில் புகுந்துகொண்ட அந்தப் பெரிய முதலையை வீண் வம்புக்கு இழுத்து அதனைக் கொல்லவேண்டும்.’ என்றது.

‘ஆஹா! உன்னைப் போல் நண்பன் கிடைக்க நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்’ என்று முதலை மகிச்சியாகக் கூறியது.

‘அது உண்மைதான்! எல்லா வசதிகளும் இருந்தாலும் நல்ல நண்பன் இல்லாவிட்டால் சித்திராங்கனனைப் போலத் துன்பத்தை அனுபவிக்க வேண்டிவரும்’ என்று குரங்கு அந்த முதலையை எச்சரித்தது.

‘சித்திராங்கன் என்ன துன்பத்தை அனுபவித்தான்?’ என்று முதலை விசாரிக்க, குரங்கு அந்தக் கதையினைச் சொல்லத் தொடங்கியது.

4.9. சொந்த இடமே சுகம் தரும்

அயோத்தியா நகரத்தில் சித்திராங்கன் என்ற நாய் வாழ்ந்து வந்தது. அதற்குச் சரியான எஜமானர் கிடைக்காமல், அனாதையாக தெருவில் சுற்றித் திரிந்தது. அதற்கு யாரும் உணவு தரவில்லை. நாள்தோறும் பசியில் வாடி, அலைந்துகொண்டிருந்தது.

ஒருநாள் அந்த நாய், ‘நாம் ஏன் உணவுகிடைக்காத இந்த நகரத்தில் அலைந்து கொண்டிருக்கவேண்டும்? நாம் வேறு ஒரு நகரத்திற்குச் சென்றுவிடலாமே! என்று நினைத்தது.

தன்னுடைய சக நண்பர்களிடம் கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு அருகில் உள்ள வேறொரு நகரத்திற்குச் சென்றது.

அங்கு ஒரு வீட்டில் சென்று தஞ்சம் புகுந்தது. அந்த வீட்டிலிருந்த எஜமானி அம்மா இந்த நாயைத் தன் வீட்டிற்குள்ளேயே வைத்துக்கொண்டு, அதனைத் தன் பிள்ளைபோல வளர்த்து வந்தாள். அந்த நாய்க்கு நல்ல உணவும் மதிப்பும் இருந்துவந்தது.

ஒருநாள் அந்த நாய் தன் எஜமானி அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியே வந்து, தெருவில் நின்றது.

அந்தத் தெருவில் வாழும் பிற நாய்கள் அந்த நாயைக் கண்டதும் விரட்டிக் கடிக்கத் தொடங்கின. இரத்தக் காயத்தோடு அந்த நாய் மீண்டும் அயோத்தியா நகருக்கே திரும்பிவந்தது.

அந்த நாயின் நண்பர்கள், ‘என்ன நண்பா! புதிய நகரம் எப்படி இருந்தது?’ என்று விசாரித்தன.

அதற்கு அந்த நாய், ‘அந்த நகரம் செழிப்பாக இருக்கிறது. அந்த நகரத்துப் பெண்கள் இரக்க குணமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அங்கிருக்கும் நம் இனத்தவர்கள்தான் சரியில்லை. அதனால்தான் நான் திரும்ப இங்கேயே வந்துவிட்டேன்’ என்றது.

‘ஆதலால், எப்போதும் சொந்த இடத்தில் இருப்பதுதான் சுகம்’ என்ற குரங்கு, ’நீ உடனே புறப்பட்டு உனது வீட்டுக்குச் செல். அந்தப் பெரிய முதலையுடன் போராடு. வெற்றிபெற்றால் நீ உன் வீட்டைப் பெறுவாய். தோல்வியடைந்தால் நீ வீரசொர்க்கமடைவாய்’ என்று கூறியது.

முதலை தன் வீட்டிற்குச் சென்றது. அந்தப் பெரிய முதலையுடன் போரிட்டு, வென்றது. தன் வீட்டிலேயே வாழ்நாள் முழுவதும் தங்கியிருந்தது.

நான்காம் தந்திரம் – லப்தஹானி (அர்த்தநாசம்) முற்றியது.

நரியின் மகாதந்திரம்

பஞ்ச தந்திரக் கதைகள்/ 4.2

imagesஒரு பெரிய காடு. அதில் கராளகேசரி என்ற சிங்கம் வாழ்ந்து வந்தது. ஒருநாள் அதற்கு உடல்நலமில்லை. அதனால், அது தூசரன் என்ற நரியை அழைத்து, ‘இன்று எனக்கு உடல் நலமில்லை. என்னால் இன்று இரைதேடச் செல்ல முடியாது. எனக்கு ஏற்ற இரையை இன்று நீதான் கொண்டுவரவேண்டும்’ என்றது.

சிங்கத்தின் கட்டளைக்குப் பணிந்த நரி, காட்டில் சுற்றித் திரிந்து சிங்கத்திற்கு இரைதேடியது. எதுவும் அகப்படவில்லை. ‘வெறுங்கையோடு சென்றால் சிங்கத்தின் கோபத்திற்கு ஆளாகிவிடுவோமே’ என்று பயந்த நரி சோகமாக நடந்துகொண்டிருந்தது.

சற்று தூரத்தில் ஆற்றங்கரையோரமாக மேய்ந்து கொண்டிருந்த கழுதை ஒன்றை அந்த நரி பார்த்தது. அது துணிகளைத் துவைக்கும் ஒரு வண்ணானுக்குச் சொந்தமானது.

நரி, அந்தக் கழுதையிடம் சென்று, ‘ஏன் இப்படி மெலிந்து இருக்கிறாய்?’ என்று அன்போடு விசாரித்தது.

அதற்கு அந்தக் கழுதை, ‘எனக்கு முதலாளியாக இருக்கும் வண்ணான் என் மீது பொதிகளை அதிகமாகச் சுமத்துகிறான். ஆனால், குறைவாகவே உணவு கொடுக்கிறான். அதனால்தான் நான் மெலிந்துள்ளேன்’ என்றது.

‘உனக்கு ஏற்ற நல்ல உணவுகள் இருக்கும் இடம் எனக்குத் தெரியும். நீ என்னுடன் வா. நான் உன்னை அங்கு அழைத்துச்செல்கிறேன்’ என்றது நரி.

‘இங்கிருந்து அந்த இடம் வெகுதூரத்தில் இருக்கிறதோ?’ என்று கேட்டது கழுதை.

‘இல்லை, இல்லை. இந்த ஆற்றங்கரையின் ஓரத்தில்தான். அதன் கடைசிப் பகுதியில் பச்சைப் புல்கள் அடர்த்தியாக செழித்து வளர்ந்துள்ளன.’ என்று நரி தந்திரமாகக் கூறியது.

‘அந்தப் புதிய இடத்தில் நான் மட்டும் தனியாகவா மேய்வது?’ என்று பயந்தபடி அந்தக் கழுதை கேட்டது.

‘இல்லை, இல்லை. அங்கு நிறைய பெண் கழுதைகள் மேய்ந்துகொண்டிருக்கின்றன. அவற்றுக்கு நல்ல ஆண் துணை இல்லாததால் வருத்தத்துடன் உள்ளன. நீ அங்குச் சென்றவுடன் அவை உன்னைத் தழுவிக்கொள்ளும்!’ என்று ஆசை வார்த்தை காட்டியது நரி.

கழுதை அங்கு வர சம்மதித்து, நரியுடன் சென்றது.

சிங்கத்தின் குகையை நெருங்கும்போது நரி கழுதையுடன் வருவதைக் கண்ட சிங்கம், பசியின் மிகுதியால் தனது இரையை உடனே உண்ணத் துடித்தது.

பொறுமை இல்லாமல் வேகமாக அந்தக் கழுதையின் மீது பாய்ந்தது. கழுதை பயந்து போனது. அது நகரத்தில் இருந்த கழுதை என்பதால் இதுவரை அது சிங்கத்தையே பார்த்ததில்லை. எனவே கழுதை தனது கால்களால் அந்தச் சிங்கத்தை மிக வேகமாக உதைத்து குதித்து தப்பிக்கப் பார்த்தது. சிங்கத்திற்கு உடல்நலமில்லாததால் அதன் பிடி வலுவற்று இருந்தது. எனவே அது தனது பிடியை நழுவ விட கழுதை, சிங்கத்தை உதறித் தள்ளிவிட்டு ஓடிப் போனது.
இதைப் பார்த்த நரி அலுத்துக் கொண்டது. ‘அட! சிங்கமே! என்ன இப்படி இரையை தப்பவிட்டுவிட்டாயே!’ என்று புலம்பியது.

‘இன்னும் ஒருமுறை நீ அந்தக் கழுதையை என்னருகில் அழைத்துவா. இம்முறை அதைத் தப்பவிடாமல் ஒரே அறையில் அதைக் கொன்று சாப்பிட்டு விடுகிறேன்’ என்றது சிங்கம். நரி மீண்டும் அந்தக் கழுதையிடம் சென்றது.
நரி வருவதைப் பார்த்த கழுதை, ‘என்ன நரியே! இப்படிச் செய்து விட்டாயே! உன்னை நம்பி வந்த என்னைக் கொல்லப் பார்த்தாயே!’ என்றது.

‘நானா? எப்போது?’ என்று தந்திரமாகக் கேட்டது நரி.

‘அங்கு சென்றவுடன் என் மீது ஒரு விலங்கு பாய்ந்ததே. பார், அது என் முதுகில் காயங்களை ஏற்படுத்திவிட்டது. அது என்ன விலங்கு?’ என்று கேட்டது கழுதை.

‘அட, கழுதையே! அது ஒரு பெண் கழுதை. அது உன் மீதுள்ள விருப்பத்தால் உன்னைத் தழுவிக்கொள்ளப் பாய்ந்தது!’ என்று நைச்சியமாகப் பொய் சொன்னது நரி.

நரியின் வார்த்தைகளை நம்பிய அந்தக் கழுதை, ‘அப்படியா? அது என்னைக் கொல்ல வருகிறது என்று நினைத்தல்லவா நான் ஓடிவந்துவிட்டேன்.’ என்றது.

‘சரி, பரவாயில்லை. இப்போது அந்தப் பெண் கழுதைதான் என்னை உன்னிடம் அனுப்பிவைத்தது. அது உன்னுடன் வாழ விரும்புகிறதாம். உன்னை உடனே அழைத்து வருமாறு கூறி அனுப்பியது. வா, போகலாம்!’ என்றது.

நரியின் வார்த்தைகளை அப்படியே நம்பிய அந்த அப்பாவிக் கழுதை, நரியுடன் மிகுந்த ஆவலாகச் செல்ல, இந்த முறை சிங்கம் தன் உணவினைத் தவறவிடவில்லை. ஒரே அறையில் அந்தக் கழுதையைக் கொன்றது.

ஆனால், உடனே உண்ணவில்லை. குளிக்காமல் எப்படி உணவு உண்பது?
சிங்கம், நரியிடம், ‘நரியே, நான் போய் குளித்து விட்டு வருகிறேன், அதுவரையில் இந்தக் கழுதையின் உடலை பத்திரமாகப் பார்த்துக் கொள்!’ என்று காவல் வைத்து விட்டுச் சென்றது.

சிங்கம் போனதுமே, நரி, அந்தக் கழுதையின் காதுகளையும் ஈரலையும் உண்டுவிட்டது. குளித்துமுடித்துத் திரும்பிய வந்த சிங்கம் அந்தக் கழுதையின் உடலில் காதுகளும் ஈரலும் இல்லாமல் இருப்பதனைப் பார்த்து கோபம் கொண்டது.

‘யார் இவற்றை உண்டது?’ என்று கேட்டது.

‘யாரும் உண்ணவில்லையே!’ என்றது நரி.

‘அப்படியானால், இந்தக் கழுதையின் காதுகளும் ஈரலும் எங்கே?’ என்றது சிங்கம்.

‘சிங்கமே! இந்தக் கழுதைக்குக் காதுகளும் ஈரலும் இல்லை. அவை இருந்தால் நான் அழைத்ததும் அந்தக் கழுதை இங்குவர சம்மதிக்குமா?’ என்று தந்திரமாகக் கூறியது நரி.

நரியின் வார்த்தைகளை நம்பிய அந்தச் சிங்கம், கழுதையின் உடலில் ஒரு பங்கை நரிக்குக் கொடுத்துவிட்டுத் தானும் உண்டது.

‘இப்படித்தானே நீ எனக்கு உன் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி என்னைக் கொல்லப் பார்க்கிறாய்?’ என்று குரங்கு கேட்டது.

அதற்கு முதலை, ‘எவன் ஒருவன் தன்னுடைய நன்மையைக் கருதாமல் உண்மையைக் கூறுகிறானோ, அவன் பானைகளைச் செய்யும் யுதிஷ்டிரன் என்ற குயவனைப் போலத் துன்பமடைவான்’ என்றது.

‘யுதிஷ்டிரன் கூறிய உண்மை என்ன?’ என்று கேட்ட குரங்குக்கு முதலை அந்தக் கதையினைக் கூறியது.

4.3. குயவன் கூறிய உண்மை!

பானைகளைச் செய்து விற்கும் யுதிஷ்டிரன் என்ற குயவன் ஒரு குப்பத்தில் வாழ்ந்துவந்தான். ஒருநாள் அவன் தான் செய்த பானைகளைப் பரணில் அடுக்கிக் கொண்டிருக்கும்போது, ஒரு கொட்டாங்குச்சி (தேங்காய் ஓடு) அவனின் முன்தலையில் விழுந்து காயத்தை ஏற்படுத்தியது. பின்னாளில் அந்தக் காயம் ஒரு பெரிய தழும்பாக மாறிவிட்டது.

ஒருமுறை அந்தக் குப்பத்தில் பஞ்சம் ஏற்பட்டதால், அந்தக் குயவன் வேறு ஒரு நாட்டிற்குச் சென்றான். அங்கு தன் குலத்தொழிலைச் செய்யாமல், அந்த நாட்டின் அரண்மனையில் சேவகனாகப் பணிக்குச் சேர்ந்தான். ராஜா தன் சேவகர்களைப் பார்வையிடும் போது, இவன் தலையில் பெரிய தழும்பு இருப்பதனைப் பார்த்தார். ‘இவன் முன்பு ஏதாவது படையில் சிறந்த வீரனாக இருந்திருப்பான்’ என்று நினைத்து, இவனின் திறமையைப் பாராட்டும் விதமாக அதிக ஊதியமும் மதிப்பு மிக்க பதவியும் அளித்தார். ராஜா இந்தப் புதிய சேவகனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தந்தது மற்ற சேவகர்களுக்கும் ராஜாவின் உறவினர்களுக்கும் பிடிக்கவில்லை. ஆனால், அவர்கள் அதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

ஒருநாள் யுதிஷ்டிரன் தனிமையில் தனக்கு பணிவிடை செய்துகொண்டிருந்தபோது ராஜா அவனிடம் கேட்டார். ‘உன் தலையில் உள்ள வெட்டுக்காயம் எந்தப் போர்க்களத்தில் ஏற்பட்டது?’

சூழ்நிலையைப் புரிந்துகொள்ளாத யுதிஷ்டிரன், ‘ராஜா எனக்கும் போர்க்களத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது? நான் என்ன படைவீரனா? நான் ஒரு பானை செய்யும் குயவன்தானே! என் தலையில் ஒரு தேங்காய் ஓடு விழுந்து காயப்படுத்திவிட்டது. அந்தக் காயம் பின்னாளில் தழும்பாக மாறிவிட்டது’ என்று நடந்த உண்மையை அப்படியே சொன்னான்..

ராஜாவுக்குக் கடுமையான கோபம் வந்தது. இவனைப் போய் பெரிய வீரனென்று நினைத்து ஏமாந்தோமே என்று அவருக்கு அவமானமாகவும் இருந்தது. ‘இந்த விஷயம் மற்றவர்களுக்குத் தெரிந்தால் அவர்கள் என்னை எவ்வளவு இளக்காரமாக நினைப்பார்கள்?’ என்று நினைத்த ராஜா, யுதிஷ்டிரனிடம், ‘உன்னுடைய இந்த விஷயம் மற்றவர்களுக்குத் தெரியும் முன்பாக இந்த நாட்டைவிட்டே ஓடிவிடு’ என்று ஆணையிட்டார்.

குயவனுக்குத் தான் செய்த தவறு இப்போதுதான் புரிந்தது. உடனே அவன், ‘ராஜா என் கைகளிலும் கால்களிலும் உள்ள வெட்டுக்காயங்களைப் பாருங்கள். இவை ஒரு போர்க்களத்தில் ஏற்பட்டவைதான்’ என்று பொய் கூறினான்.

ராஜா அவன் வார்த்தைகளை நம்பவில்லை. ‘பொய் சொல்லாதே! நீ பிறந்த குலம் போர்க்களத்தில் வருவதில்லை. ஆயிரம்தான் ஆனாலும் சிங்கக் குட்டிகளுடனே வளர்ந்தாலும், நரிக்குட்டி சிங்கக் குட்டியாகுமா? நீ அந்த நரிக்குட்டிபோலத் துள்ளாதே!’ என்று அவனைப் பழித்துக் கூறினார்.

அவன், ‘நரிக்குட்டி ஏன் துள்ளியது?’ என்று ராஜாவிடம் கேட்க, ராஜா அந்தக் கதையினைக் கூறத் தொடங்கினார்.

4.3.1. நரிக்குட்டி சிங்கக் குட்டியாகுமா?

ஒரு பெரிய கானகத்தில் ஓர் ஆண்சிங்கமும் ஒரு பெண்சிங்கமும் இணைந்து வாழ்ந்துவந்தன. எப்போதும் இரண்டும் இணையாகவே சென்று வேட்டையாடி சாப்பிட்டு வந்தன.

அந்தச் சிங்கத் தம்பதியருக்கு இரண்டு குட்டிகள் பிறந்தன. அதனால், ஆண் சிங்கம் பெண் சிங்கத்தை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு தான் மட்டும் வேட்டைக்குச் சென்று பெண் சிங்கத்திற்கும் குட்டிகளுக்கும் இரைகளைக் கொண்டுவந்து கொடுத்தது.

ஒருநாள் அந்த ஆண் சிங்கத்துக்கு எந்த இரையும் அகப்படவில்லை. அன்று அதற்கு ஒரேயொரு நரிக்குட்டி மட்டும்தான் கிடைத்தது. அது அந்த நரிக்குட்டியைக் கொண்டுவந்து பெண் சிங்கத்திடம் கொடுத்தது.
பெண் சிங்கத்திற்கு அந்த நரிக்குட்டியின் மீது இரக்கம் ஏற்பட்டது. அது அந்த நரிக்குட்டியை உண்ணாமல் தன் சிங்கக்குட்டிகளோடு இணைத்து வளர்க்கத் தொடங்கியது.

சற்று வளர்ந்துவிட்ட அந்த மூன்று குட்டிகளும் ஒருநாள் காட்டிற்குள் வேட்டையாடச் சென்றன. வழியில் ஒரு பெரிய யானையைப் பார்த்ததும் நரிக்குட்டி பயந்து விட்டது. அது அங்கிருந்து ஓடியது. அதனைப் பார்த்த இரண்டு சிங்கக் குட்டிகளும் அதன் பின்னாலேயே ஓடிவந்து குகைக்குள் ஒளிந்துகொண்டன.

இதனைப் பார்த்த பெண் சிங்கம் நடந்ததைத் தன் குட்டிகளிடம் விசாரித்தது. ‘யானையைப் பார்த்து இவன் பயந்துவிட்டான். அதனால் நாங்களும் இவன் பின்னாலேயே வந்துவிட்டோம்’ என்றன.

பின்னர் சிங்கக் குட்டிகள் இரண்டும் நரியைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தன. உடனே நரிக்குக் கோபம் வந்துவிட்டது. உடனே பெண் சிங்கத்திடம், ‘இவர்கள் ஏன் என்னைப் பார்த்து சிரிக்கிறார்கள்? நான் எந்த விதத்தில் இவர்களைவிடத் தாழ்ந்தவன்? கூழுக்கு மாங்காய் தோற்குமா? கொட்டினால் தேள். கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா? நான் இவர்களை வெல்வேன்’ என்று கூறியது.

பெண் சிங்கம் நரியைத் தனியே அழைத்துச் சென்று, ‘நீ சிங்கக் குட்டி அல்ல. நீ நரிக்குட்டி. யானையை வெல்லும் தீரமும் வீரமும் நரிக்கு எப்படி இருக்கும்? நரிக்குட்டிச் சிங்கக் குட்டிகளுடன் வளர்வதனாலேயே அது சிங்கக் குட்டியாகிவிடுமா? நீ நரி என்பதனை இவர்கள் அறிந்து கொள்வதற்கு முன்னர், நீ இங்கிருந்து ஓடிச் சென்று தப்பித்துக்கொள்’ என்று எச்சரித்தது. உடனே அந்த நரிக்குட்டி அங்கிருந்து ஓடிவிட்டது.

‘அதுபோலவே நீயும், இங்கு இருப்பவர்கள் யாரும் ‘நீ போர்வீரன் அல்லன், ஒரு குயவன்’ என்பதனை அறிந்துகொள்வதற்கு முன்பாக ஓடிவிடு’ என்று எச்சரித்தார் ராஜா.

இப்படியாக கதை சொல்லி முடித்த குரங்கு, முதலையிடம் மேலும் ‘பெண்கள் மனத்தில் இருப்பதை எவரும் எளிதில் தெரிந்துகொள்ள முடியாது என்பதால் அவர்களின் அன்பை நம்பக்கூடாது’ என்றும் கூறியது.

‘ஏன் அப்படிச் சொல்கிறாய்?’ என்று கேட்ட முதலைக்குக் குரங்கு அந்தக் கதையினைச் சொல்லத் தொடங்கியது.

அர்த்தநாசம்

பஞ்ச தந்திரக் கதைகள்/ நான்காம் தந்திரம் – லப்தஹானி (அர்த்தநாசம்)

Crocodile-Drawing-2மூன்றாம் தந்திரம் முடிந்ததும் நான்காம் தந்திரமான பல்தஹானி அதாவது அர்த்தநாசம் என்பதில் ஒரு நெடுங்கதைத் தொடரை சொல்லத் தொடங்கினார் பண்டிதர் விஷ்ணுசர்மா.

‘இளவரசர்களே எத்தனை பெரிய துன்பம் வந்தபோதும் எவன் ஒருவன் தன் அறிவினை இழக்காமல் இருக்கிறானோ, அவனே முதலையிடமிருந்து விடுபட்டக் குரங்குபோல மீள்வான்’ என்றார் பண்டிதர்.

‘குரங்கு எப்படி முதலையிடமிருந்து விடுபட்டது?’ என்று கேட்ட அந்த மூன்று இளவரசர்களுக்கும் ‘பேரழிவு’ குறித்த ஒரு நெடுங்கதையினைப் பண்டிதர் விஷ்ணுசர்மா கூறத் தொடங்கினார்.

4. பேரழிவு

கங்கைக் கரையில் ஒரு நாவல் மரம் இருந்தது. அந்த மரத்தில், சுமுகன் என்ற ஒரு குரங்கு வாழ்ந்து வந்தது. அந்த மரத்தில் பழுக்கும் மிகவும் சுவையுடைய நாவற்பழங்களை உண்டு அது சுகமாக காலம் கழித்தது.

ஒருநாள் கங்கைக் கரையின் வழியாக ஒரு முதலையொன்று அந்த மரத்தின் கீழ் வந்து நின்றது. முதலை இனம் தனக்குப் பகை என்பது தெரிந்தும், ‘தனது வீட்டிற்கு வந்த விருந்தினரை வரவேற்பதே சிறந்த பண்பு’ என்பதால், அந்தக் குரங்கு முதலையை வரவேற்றது.

‘நீ என் வீட்டிற்கு முதன்முதலாக வந்துள்ளாய். உனக்கு நான் சில நாவற்பழங்களைத் தருகிறேன்’ என்றுகூறிய குரங்கு அந்த மரத்தின் கிளையை உலுக்கியது. கீழே விழுந்த நாவற்பழங்களை எடுத்து உண்ட முதலை மிகவும் மகிழ்ந்தது.

பின்னர், அது நாள்தோறும் அந்தக் குரங்கைப் பார்க்க வந்தது. குரங்கும் அதற்கு நாள் தவறாமல் நாவற்பழங்களைத் தந்து உபசரித்தது. விரைவிலேயே அந்த முதலையும் குரங்கும் இணைபிரியாத நண்பர்களாக மாறினர். இருவரும் மணிக்கணக்கில் கங்கைக் கரையில் அமர்ந்து கதைபேசி, சிரித்து, மகிழ்ந்துவந்தனர்.

ஒருநாள் அந்தக் குரங்கு கொடுத்த நாவற்பழங்களை முதலை தன் வீட்டிற்குக் கொண்டு சென்று தனது மனைவியாகிய பெண் முதலையிடம் கொடுத்தது. அப் பழங்களை உண்ட அந்தப் பெண்முதலை துள்ளிக் குதித்தது.
‘இத்தகைய சுவையுடைய நாவற்பழங்களை இதுவரை நான் என் வாழ்நாளில் உண்டதே இல்லை’ என்று கூறி, ‘இந்தப் பழங்கள் உனக்கு எங்கே கிடைத்தன?’ என்று கேட்டது.

‘இவை என் நண்பன் எனக்குத் தினமும் தருவதுதான். இன்று உனக்காக அவற்றைக் கொண்டுவந்தேன்’ என்றது ஆண் முதலை.

‘அந்த நண்பன் யார்?’ என்று கேட்டது பெண் முதலை.

‘அது அந்த நாவல் மரத்திலேயே வசிக்கும் ஒரு குரங்கு’ என்றது ஆண் முதலை. உடனே, பெண் முதலைக்கு சட்டென்று ஓர் எண்ணம் தோன்றியது.
‘உன் குரங்கு நண்பன் தினமும் இந்த நாவற்பழங்களைச் சாப்பிட்டு வருவதால், அவனுடைய ஈரலும் இந்த நாவற்பழத்தைப் போலவே சுவையாக இருக்கும் அல்லவா? எனக்கு உன் நண்பனின் ஈரலைச் சுவைக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. கொண்டு வந்து தருவாயா?’ என்று கேட்டது அந்தப் பெண் முதலை.

‘ஐயோ! அவன் என் நண்பன். அவனைக் கொல்வதா?’ என்று அதிர்ந்தது ஆண் முதலை.

‘அதனால் என்ன? நமக்குச் சுவையான ஈரல் கிடைக்குமே!’ என்றது பெண் முதலை.

‘சகோதரனைவிட முதன்மையானவன் நண்பன். நண்பனுக்கு துரோகம் செய்யக்கூடாது?’ என்றது ஆண் முதலை.

‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு உடனே அந்தக் குரங்கின் ஈரல் வேண்டும். நீ கொண்டுவராவிட்டால் நான் இறந்துவிடுவேன்!’ என்று கூறி அடம் பிடித்தது பெண் முதலை.

ஆண் முதலையால் பெண் முதலையைச் சமாதானப்படுத்தமுடியவில்லை. வேறுவழியின்றி அது தன் குரங்கு நண்பனிடம் சென்றது. குரங்கின் ஈரலைக் கவர்வதற்கு மனத்துக்குள் திட்டமிட்டுக் கொண்டே சென்றது.

அந்த ஆண் முதலை, குரங்கு வசிக்கும் நாவல் மரத்தடிக்குச் சென்று மிகுந்த சோகமாக அமர்ந்துகொண்டது.

‘என்ன நண்பா? சோகமாக இருக்கிறாய்? என்று விசாரித்தது குரங்கு.

‘என்னுடைய மனைவி என்னைத் திட்டி விட்டாள். அதனால்தான் சோகமாக இருக்கிறேன்’ என்றது முதலை.

‘எதற்குத் திட்டினாள்?’ என்று கேட்டது குரங்கு.

‘ அது என்னவென்றால் அவள் என்னிடம் சொன்னாள். ‘நீ மட்டும் தினமும் உன் குரங்கு நண்பனின் வீட்டிற்குச் சென்று நாவற்பழங்களை விருந்தாக உண்டுவருகிறாயே, ஒருநாளாவது உன் நண்பனை இங்கு அழைத்துவந்து விருந்து கொடுத்துள்ளாயா? நீ நல்ல நண்பனா?’ என்று சொல்லி என்னைத் திட்டினாள். அத்துடன், ‘இன்றாவது உன் நண்பனை அழைத்து வா. நான் விருந்து சமைத்து வைக்கிறேன்’ என்று கூறி என்னை உன்னிடம் அனுப்பிவைத்தாள்’ என்று தந்திரமாகக் கூறியது.

‘சரி! ஆனால் நான் எப்படி உன் வீட்டிற்கு வருவது? இந்தக் கங்கை நதியை என்னால் நீந்திக் கடக்கமுடியாதே!’ என்றது.

‘அதைப் பற்றி நீ கவலைப்படாதே நண்பா! நீ என் முதுகில் ஏறிக்கொள். நான் என் வீட்டுக்கு உன்னைச் சுமந்துகொண்டு செல்கிறேன்!’ என்று நயமாகப் பேசியது முதலை.

தன் நண்பனான முதலையின் பேச்சினை நம்பிய அந்தக் குரங்கு மரத்திலிருந்து இறங்கி முதலையின் முதுகில் ஏறிக்கொண்டது. குரங்கைச் சுமந்துகொண்ட முதலை வேகமாக நதியில் நீந்தியது. குரங்குக்கு பயமாக இருந்தது.

‘நண்பா! மெதுவாகச் செல். நான் நதியில் விழுந்துவிட்டால் இறந்துவிடுவேன்’ என்றது குரங்கு.

தன்னிடம் குரங்கு நன்றாக அகப்பட்டுக்கொண்டது என்பதனைப் புரிந்துகொண்ட முதலை, வஞ்சக சிரிப்புடன் தன் நோக்கத்தைக் குரங்கிடம் கூறியது.

‘நண்பா! நான் உன்னை விருந்திற்கு அழைத்துச்செல்லவில்லை. என்னுடைய பெண் முதலைக்கு விருந்தாக்கவே உன்னை அழைத்துச்செல்கிறேன். அவள்தான் உன் ஈரல் மீது ஆசைப்பட்டு என்னை அனுப்பிவைத்தாள். அவள் விருப்பத்தை நிறைவேற்றுவது என் கடமை அல்லவா?’ என்றது முதலை.

முதலை தன்னை வஞ்சித்து விட்டதைக் கண்டு குரங்கு மிகுந்த துக்கம் கொண்டது. பின் இந்த அபாயத்திலிருந்து எப்படித் தப்பிப்பது என்று யோசித்தது. பின்னர், முதலையிடம் அன்பாகப் பேசியது.

‘நண்பா! இதனை நீ முதலிலேயே கூறியிருக்கலாமே!’ என்றது குரங்கு.

‘ஏன்? நீ தப்பிவிடுவதற்கா?’ என்றது முதலை.

‘இல்லை நண்பா! நட்புக்காக உயிரையும் தருவது குரங்கு இனத்தின் குணம். உன்னுடைய பெண் முதலை என்னுடைய ஈரலைக்கேட்டது என்று நீ முன்பே கூறியிருந்தால், அந்த மரத்தில் நான் தொங்கவைத்திருந்த என் ஈரலை எடுத்து உன்கையில் கொடுத்திருப்பேனே’ என்றது குரங்கு.

‘ஆ! என்ன? உன் ஈரல் அந்த மரத்தில் தொங்குகிறதா?’ அதிர்ச்சியுடன் கேட்டது முதலை.

‘ஆமாம். அவ்வப்போது என் ஈரலை எடுத்து காயவைப்பது என் பழக்கம்!’ என்றது குரங்கு.

‘அடடா! உன் ஈரலைக் கொண்டுவராவிட்டால் என் பெண்முதலை இறந்துவிடுவதாகக் கூறியுள்ளதே. ஈரல் இல்லாத உன்னைக் கொண்டு போய் நான் இப்போது என்ன செய்ய?’ என்று முதலை அந்தக் குரங்கிடம் கேட்டது.

‘நீ ஏன் வருத்தப்படுகிறாய் நண்பா! மீண்டும் என்னைச் சுமந்துகொண்டு எனது மரத்திற்கு அழைத்துச்செல். நான் மரத்தில் ஏறி என் ஈரலை எடுத்து உனக்குக் கொடுத்துவிடுகிறேன்’ என்று குரங்கு மிகவும் நயமாகப் பேசியது.

குரங்கின் வார்த்தைகளை நம்பிய முட்டாள் முதலை, மறுபடியும் அக் குரங்கினைச் சுமந்துகொண்டு திரும்ப அந்த மரத்திற்கே சென்றது. குரங்கு விட்டால் போதுமென்று கடகடவென்று அந்த மரத்தின் உச்சிக்கிளையில் ஏறி அமர்ந்துகொண்டது.

‘நண்பா! மரத்தில் இருக்கும் உன் ஈரலை எடுத்து எனக்குக்கொடு’ என்று கேட்டது முதலை.

‘அட, முட்டாள் முதலையே! யாராவது தன் வயிற்றிலிருந்து ஈரலை எடுத்து மரத்தில் வைப்பார்களா? அப்படிச் செய்தால் உயிர்வாழ முடியுமா?’ என்றது குரங்கு.

குரங்கு தன்னை ஏமாற்றிவிட்டதனை உணர்ந்த முதலை, ‘குரங்கின் ஈரல் இல்லாமல் தன் வீட்டிற்குச் செல்லமுடியாதே!’ என்று நினைத்து வேறு ஒரு திட்டம்போட்டது.

‘அட நண்பா! நான் கூறியதை உண்மை என்று நம்பி விட்டாயா? நான் உன்னை விளையாட்டாக ஏமாற்ற நினைத்தேன். எனக்குத் தெரியாதா, உடலைவிட்டு ஈரலைப் பிரித்துவிட்டால் உயிர்வாழ முடியாது என்று? நான் உன் நட்பினைச் சோதிக்கவே அவ்வாறு கூறினேன்’ என்றது முதலை.

குரங்கு இந்தமுறை முதலையின் வார்த்தைகளை நம்புவதாக இல்லை. அது மரத்தை விட்டுக் கீழ் இறங்கவில்லை.

உடனே, முதலை ‘என் பெண் முதலை உனக்கு விருந்தளிக்கத்தான் உன்னை அழைத்துவரச் சொன்னாள். அவள் உன்னை உண்ணவோ உண் ஈரலைச் சுவைக்கவோ விரும்பவில்லை. நீ என் நண்பனாயிற்றே! நான் அவ்வாறு உன்னைக் கொல்ல ஒத்துக்கொள்வேனா? கீழே இறங்கிவா. என் வீட்டிற்கு வந்து விருந்து சாப்பிடு’ என்று ஆசைவார்த்தை கூறியது முதலை.

‘நண்பா! ‘பசித்தவனின் விசுவாசத்தில் நம்பிக்கை வைக்கக் கூடாது’ என்று சாஸ்திரங்கள் கூறியுள்ளன. அதனால், இனி நான் உன்னை நம்பமாட்டேன்’ என்று கூறியது குரங்கு.

‘பசித்தவனின் விசுவாசம் என்பது என்ன?’ என்று கேட்டது முதலை.

குரங்கு, அந்த முதலைக்கு பிரியதரிசனனைக் கண்டு அஞ்சிய கங்காதத்தன் திரும்பி வராத கதையினைக் கூறத்தொடங்கியது.

4.1. பசித்தவனின் விசுவாசம்

ஓர் ஊரில் ஒரு பெரிய கிணறு இருந்தது. அதில் கங்காதத்தன் என்ற தவளை தன் குடும்பத்துடன் வாழ்ந்துவந்தது. கங்காதத்தனின் உறவினர்கள் பலரும் அதே கிணற்றில் வாழ்ந்துவந்தனர். அவர்களில் சிலர் வலிமைமிக்கவர்களாக இருந்தனர். அவர்கள் அவ்வப்போது கங்காதத்தனுக்குத் துன்பம் விளைவித்தனர்.

இதனால் மனம் வருந்திய கங்காதத்தன், ‘தன் குடும்பம் தவிர மற்ற அனைத்து உறவினர்களையும் இந்தக் கிணற்றைவிட்டு விரட்டிவிடவேண்டும்’ என்று நினைத்து ஒரு திட்டம் போட்டது.

பலவழிகளை யோசித்துப் பார்த்தும் அதற்கு ஒரு வழியும் சரியாகத் தோன்றவில்லை. ‘அவர்களை விரட்டுவது கடினம். ஆனால், அவர்களை அழிப்பது எளிது’ என்று நினைத்தது. ‘தனக்கு கெடுதல் செய்யும் எதிரிகளை தனது பகைவரைக்கொண்டுதான் அழிக்கவேண்டும்’ என்று முடிவெடுத்தது.
அந்தக் கிணற்றிலிருந்து நீர் எடுக்கப் பயன்படும் வாளிக் கயிற்றின் வழியாக மேலே ஏறிய கங்காதத்தன், கிணற்றைவிட்டு வெளியே வந்தது.

பின்னர் கங்காதத்தன் ஒரு பாம்புப் புற்றினைத் தேடிச் சென்றது. பாம்பினை அழைத்தது. அது புற்றுக்குள்ளிருந்த படியே, ‘நமக்கு இரையாகும் இனத்தைச் சேர்ந்த தவளை, ஏன் நம்மை அழைக்கிறது? ஏதாவது சதி செய்கிறதோ?’ என்று நினைத்து, உள்ளிருந்தபடியே, ‘என்ன விஷயம்?’ என்று கேட்டது.

‘பாம்பே! நீ எனக்கு ஓர் உதவிசெய்யவேண்டும். அதற்காகத்தான் உன்னைத் தேடி வந்திருக்கிறேன்!’ என்றது கங்காதத்தன்.

‘நெருப்பிடம் ஒரு துரும்பைச் சேர்த்தால் அது பொசுங்கிவிடுமல்லவா? இவன் ஏன் என்னை அழைத்து அவனுக்கே அழிவைத் தேடிக்கொள்கிறான்’ என்று யோசித்த பாம்பு, புற்றைவிட்டு வெளியே வந்தது.

‘என்ன உதவி?’ என்று கேட்டது பாம்பு.

‘நான் தங்கியிருக்கும் கிணற்றில் என் உறவினர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் ஏதாவது ஒரு வகையில் தொடர்ந்து எனக்குத் தொல்லை கொடுத்து வருகின்றனர். நீ அவர்களை அழிக்கவேண்டும்?’ என்றது கங்காதத்தன்.

‘உன் பகைவர்களை அழிக்க விரும்பினால், நீ உன்னுடைய நண்பனிடம்தானே உதவிகேட்கவேண்டும். உன் பகைவனான என்னிடம் ஏன் உதவிகேட்கிறாய்?’ என்றது பாம்பு.

‘பகைவனுக்குப் பகைவனே எதிரி என்று நீதிநூல்கள் கூறியுள்ளன. அதனால்தான் நான் உன்னிடம் உதவி கேட்கிறேன்’ என்றது கங்காதத்தன்.

‘இரை நம்மிடத்திற்கு வருவதும் நாம் இரையினிடத்திற்குச் செல்வதும் நமக்கு நம்மைதானே! இவன் வாழும் கிணற்றில் நிறைய தவளைகள் இருக்கும். அவற்றை மொத்தமாக உண்டுவிடலாம்’ என்று யோசித்த பாம்பு, உதவி செய்வதாக ஒப்புக்கொண்டது.

கங்காதத்தன் அந்தப் பாம்பினை வாளிக்கயிற்றின் வழியாகக் கிணற்றுக்குள் இறக்கிவிட்டுத் தானும் இறங்கியது.

இரண்டொரு நாட்களில் அந்தப் பாம்பு கங்காதத்தனின் உறவினர்களில் கங்காதத்தனுக்குத் தொல்லை தந்த அனைத்து எதிரிகளையும் உண்டுவிட்டது.

பின்னர் அந்தப் பாம்பு கங்காதத்தனிடம் சென்று, ‘நீ கூறியவாறு நான் உனக்கு உதவி செய்துவிட்டேன். அதற்காக நீ எனக்கு ஏதாவது உணவு கொடு’ என்று கேட்டது. ‘என்னிடம் என்ன இருக்கிறது? நீ என் உறவினர்களை வேண்டுமானால் சாப்பிட்டுக் கொள்’ என்றது கங்காதத்தன்.

பாம்பும் அவ்வாறே கங்காதத்தனின் உறவினர்களை சாப்பிட்டுத் தீர்த்தது. இதனை அறிந்த கங்காதத்தனின் மனைவியாகிய பெண் தவளை, ‘அட பாதகா! பகைவரை அழிக்கிறேன் என்று கூறி நம் குல எதிரியை அழைத்து வந்து இப்படி நம் எதிரிகளோடு சேர்த்து நம்முடைய உறவினர்களையும் அழித்துவிட்டாயே!’ என்று கங்காதத்தனைத் திட்டடியது.

‘தாம் தவறு செய்துவிட்டோமோ’ என்று உணர்ந்த கங்காதத்தன், பாம்பிடம் சென்றது.

‘நண்பா! நீ எனக்குச் செய்த உதவிக்கு ஏற்ப நான் உனக்கு உணவும் அளித்துவிட்டேன். இனி, நீ இந்தக் கிணற்றை விட்டுச் சென்றுவிடு’ என்று கூறியது.

இதுநாள்வரை இந்தக் கிணற்றில் இருந்துகொண்டு, எளிதாக உணவினைப் பெற்று உண்டுவந்த பாம்புக்கு இந்தக் கிணற்றை விட்டுச் செல்ல மனமில்லை.
அதனால், அந்தப் பாம்பு கங்காதத்தனிடம், ‘நான் இங்கிருந்து சென்றால் எப்படி வாழ்வேன்? எனக்கு யார் உணவுகொடுப்பார்கள்? நான் இங்கிருந்து செல்லமாட்டேன். நீதான் என்னை இங்குக் கொண்டுவந்தாய். அதனால், நீதான் எனக்கு நாள்தோறும் உணவும் அளிக்கவேண்டும்’ என்று கூறி பிடிவாதம் பிடித்தது.

வேறுவழியின்றி கங்காதத்தன் நாள்தோறும் கிணற்றைவிட்டு வெளியில் சென்று, தன் இனத்தவர்களிடம் பொய்கூறி அவர்களை அந்தக் கிணற்றுக்கு அழைத்து வந்தும், வலுக்கட்டாயமாகப் பிடித்துவந்தும் அந்தப் பாம்புக்கு உணவாகக் கொடுத்து வந்தது.

ஒருநாள் கங்காதத்தனால் எந்தத் தவளையையும் அந்தக் கிணற்றிற்குக் கொண்டுவர முடியவில்லை. பசியெடுத்த பாம்பு கங்காதத்தனின் பிள்ளைகளை உண்டுவிட்டது.

இதனை அறிந்த பெண் தவளை கங்காதத்தனிடம் அழுது, புலம்பி, ‘இந்தப் பாம்பு இனி நம்மையும் கொன்றுவிடும்’ என்று கூறியது.

கங்காதத்தன் ஒரு திட்டம் போட்டது. மறுநாள் தன் பெண் தவளையைக் கிணற்றைவிட்டு வெளியேற்றியது. பாம்பு பசியோடு வந்தது. ‘என்ன இன்று எனக்கு உணவு இன்னமும் வரவில்லையே?’ என்று கங்காதத்தனிடம் கேட்டது.

‘உனக்கு இரைதேடிவரத்தான் என் பெண் தவளை வெளியே சென்றுள்ளது. இன்னமும் வரவில்லை. அதற்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறேன்’ என்றது கங்காதத்தன்.

பாம்பு கங்காதத்தனின் திட்டத்தை அறியாமல் வெகுநேரம் காத்திருந்தது. பின்னர், ‘என்ன இவ்வளவு நேரமாக உன் பெண் தவளை இரையைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறதா?’ என்று கங்காதத்தனை அதட்டிக்கேட்டது.

உடனே, கங்காதத்தன் ‘நான் வேண்டுமானால் வெளியே சென்று, என் பெண் தவளையைத் தேடிவரட்டுமா? அப்படியே உனக்கும் சில தவளைகளை உணவாகக் கொண்டுவருகிறேன்’ என்று கேட்டது.

‘எப்படியாவது தமக்கு உணவு வந்தால் சரிதான்’ என்று நினைத்த பாம்பு, கங்காதத்தனை வெளியில் செல்ல அனுமதித்தது.

வெளியில் சென்ற கங்காதத்தன் திரும்ப வரவில்லை. மறுநாள் பாம்பு அந்தக் கிணற்றில் இருந்த ஒரு பல்லியிடம், ‘எனக்காக இரைதேடிச் சென்ற கங்காதத்தன் தம்பதியரை இன்னும் காணவில்லை. நீ கிணற்றுக்கு வெளியே சென்று அவர்களைப் பார்த்து, அழைத்து வா’ என்று கூறி அனுப்பிவைத்தது.

பல்லி கிணற்றைவிட்டு வெளியேசென்று கங்காதத்தன் தம்பதியரைச் சந்தித்தது. பாம்பு தன்னிடம் கூறியவற்றைச் சொல்லியது.

அந்தப் பல்லியிடம், ‘பசித்தவனின் விசுவாசத்தை நம்பக்கூடாது என்பதை நன்றாக அனுபவப்பட்டுத் தெரிந்துகொண்டேன் என்று நீ அந்தப் பாம்பிடம் சொல்லிவிடு’ என்று கங்காதத்தன் கூறியது. பின்னர் கங்காதத்தன் தம்பதியினர் தம் வாழ்நாளில் அந்தக் கிணற்றுப் பக்கமே செல்லவில்லை.

‘அதுபோலவே, நான் உன்னிடம் மீண்டும் வரமாட்டேன்’ என்று அந்த முதலையிடம் கூறியது குரங்கு சுமுகன்.

‘அப்படிச் சொல்லாதே நண்பா! நீ என்னுடன் வராவிட்டால் நான் நன்றிகெட்டவனாகிவிடுவேன். நீ இப்போது என்னிடம் வராவிட்டால், நான் இங்கேயே இருந்து உணவு உண்ணாமல் இறந்துவிடுவேன்’ என்றது முதலை.

‘என்ன முதலையே! நரி கழுதைக்கு நம்பிக்கையை ஏற்படுத்திச் சிங்கத்திடம் சிக்கவைத்துக் கொன்றதைப்போல, நீ எனக்கு உன்மீது நம்பிக்கையை ஏற்படுத்தி என்னைக் கொல்லத் திட்டம் போடுகிறாயா? என்று கேட்டது குரங்கு.

‘அதென்ன கதை? நரி கழுதைக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி, அதனைச் சிங்கத்தால் கொன்றதா? அது எப்படி நடந்தது? என்று கேட்ட முதலைக்குக் குரங்கு அந்தக் கதையினைக் கூறத் தொடங்கியது.

குகையுடன் பேசிய நரி

பஞ்ச தந்திரக் கதைகள்/ 3.8

how-to-draw-a-frog-10ஒரு சிறிய காடு. அந்தக் காட்டில் கிரகிரன் என்ற சிங்கம் வாழ்ந்து வந்தது.
அந்தச் சிங்கம் ஒருநாள் இரை தேடி காட்டின் பல பகுதிகளிலும் அலைந்து திரிந்தது. நாளெல்லாம் அலைந்தும் அதற்கு ஒரு சிறிய இரைகூடக் கிடைக்கவில்லை. பொழுது சாய்ந்துவிட்டது. சிங்கத்திற்கு அதிகப் பசி. அப்போது அது ஒரு பெரிய குகையினைக் கண்டது. உடனே, சிங்கத்திற்கு ஒரு யோசனை தோன்றியது.

‘நாம் இந்தக் குகைக்குள் ஒளிந்துகொள்வோம். இந்தக் குகையில் தங்கியிருக்கும் விலங்குகள் இரைதேடிவிட்டுத் திரும்பி இங்கே வரும். அப்போது நாம் அவற்றைப் பிடித்து உண்டுவிடலாம்’ என்று நினைத்து அந்தக் குகைக்குள் சென்று படுத்து ஓய்வெடுத்தது.

அந்தக் குகையில் அவிபுச்சன் என்கிற ஒரு புத்திசாலியான நரி வசித்து வந்தது. அது அப்போது வெளியே இரை தேடி உண்டுவிட்டுத் தன் குகைக்குத் திரும்பி வந்தது. தனது குகைக்குள் நுழைய முனைந்த அந்த புத்திசாலி நரி குகையின் வாசலில் சிங்கத்தின் காலடித் தடங்கள் இருப்பதனைப் பார்த்துவிட்டது.
உடனே அது ஆழ்ந்து யோசித்தது. ‘ஒருவேளை இந்தக் குகைக்குச் சிங்கம் வந்திருக்கலாம். ஆனால், அது சென்று விட்டதா? அல்லது இப்போது இந்தக் குகைக்குள் இருக்கிறதா என்பதனை நாம் எப்படி அறிந்துகொள்வது? சிங்கம் குகைக்குள் இருந்தால் நாம் இந்தக் குகைக்குள் நுழைவது ஆபத்து’ என்று எண்ணிய நரி குகையின் வாசலிலேயே நின்று சிந்தித்தது. சட்டென்று அதற்கு ஒரு யோசனை தோன்றியது.

குகைக்கு வெளியே நின்றுகொண்ட நரி, ‘ஏய், குகையே! ஏய், குகையே!’ என்று அழைத்தது.

சிங்கம் எழுந்தது. வெளியே ஒரு நரி இருப்பதனை அறிந்துகொண்டது. அது யாரிடம் பேசுகிறது என்று கவனித்தது.

நரி, மீண்டும், ‘ஏய், குகையே ஏன் மௌனமாக இருக்கிறாய்?’ என்றது.
சிங்கத்திற்கு ஒன்றும் புரியவில்லை. ‘ஏன் இந்த நரி குகையிடம் பேசுகிறது?’ என்று யோசித்தது.

நரி, ‘குகையே என் மீது ஏதும் கோபமா? நீ தினமும் என்னிடம் பேசுவாயே? இன்று ஏன் என்னுடன் பேசாமல் அமைதியாக இருக்கிறாய்?’ என்று கேட்டது.
அப்போதுதான் சிங்கத்திற்குப் புரிந்தது. ‘அடடா! இந்தக் குகை தினமும் நரியுடன் பேசக்கூடியது போலும். ஆனால், இன்று ஏனோ இது பேசவில்லை’ என்று நினைத்தது.

நரி, ‘ஏய், குகையே! நீ பேசிய பின்னர்தானே நான் உன்னுள் நுழைவேன். இன்று நீ பேசாமல் இருந்தால் நான் எப்படி உன்னுள் நுழைவேன்?’ என்றது.
சிங்கம் பதறிப் போனது. ‘அடடா! குகை பேசினால்தான் நரி குகைக்குள் வருமாமே! நரி குகைக்குள் வராவிட்டால் நமக்கு இரை கிடைக்காதே! இப்போது என்ன செய்யலாம்?’ என்று நினைத்த சிங்கத்திற்கு ஒரு யோசனை தோன்றியது.

‘நாம் ஏன் இந்தக் குகையைப் போலவே பேசக்கூடாது? நாம் குகைபோலப் பேசினால், அதனை அந்த நரி நம்பிவிடும். பின்னர் இந்தக் குகைக்குள் வந்துவிடும். நாமும் அதை அடித்துச் சாப்பிட்டு விடலாம்!’ என்று நினைத்த சிங்கம், ‘ஏ நரியே! நான் வேறு சிந்தனையில் இருந்ததால் உன்னிடம் பேசவில்லை. தவறாக நினைக்காதே. வா உள்ளே!’ என்று குகை பேசுவது போல பேசி குரல் எழுப்பியது.

அவ்வளவுதான், குகைக்குள் இருந்து சிங்கத்தின் குரல் வெளிவந்ததும் சுதாரித்துக் கொண்ட நரி, தப்பித்தோம் பிழைத்தோம் எனத் தலைதெறிக்க ஓடிப் போனது.

‘ஆதலால், எதனையும் செய்வதற்கு முன்பு ஆலோசித்துச் செய்யவேண்டும்’ என்றது குரூரநாசன். பின்னர், அது பிற நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டது.

குரூரநாசன் சென்ற பின்னர்தான் காகமாகிய சிரஞ்சீவிக்கு நிம்மதி ஏற்பட்டது. அது தனக்குள், ‘புத்தியுள்ள மந்திரி, நண்பர் யார் பகைவர் யார் என்பதனை அறிந்து ராஜாவுக்குத் தெரியப்படுத்திவிடுவான். அவனால் ராஜாவுக்கு நன்மையே. அப்படிப்பட்ட குரூரநாசன் இப்போது இங்கு இல்லை. புத்தியற்ற மந்திரிகளை உடைய இந்த ஆந்தை ராஜா விரைவில் அழிவான். அந்த ஆந்தை ராஜாவின் அருகில் உள்ள அனைத்து மந்திரிகளுமே புத்தியற்றவர்கள்தான். அதனால், தன்னுடைய திட்டம் விரைவில் நிறைவேறிவிடும்’ என்று நினைத்துக் கொண்டது.

சிரஞ்சீவி ஒவ்வொரு நாளும் ஒரு சுள்ளி என, நாள்தோறும் சுள்ளிகளை எடுத்துவந்து அந்தக் குகையின் வாயிலில் நிறைத்து வந்தது. சிரஞ்சீவியின் நடத்தையில் எந்தவித சந்தேகமும் யாருக்கும் ஏற்படவில்லை. அதனால் அது தன் பணியினைச் சிறப்பாகவும் விரைவாகவும் செய்து முடித்தது.
பகற்பொழுதில் கண்பார்வையற்ற ஆந்தைக் கூட்டம் குகைக்குள் அடைந்து, தூங்கிக்கொண்டிருந்தது. இதுதான் தக்க தருணம் என்று நினைத்த சிரஞ்சீவி அந்தக் குகையைவிட்டு வெளியேறியது.

தன்னுடைய காகராஜனைச் சந்தித்த சிரஞ்சீவி, ‘ராஜா! என்ன நடந்தது என்பதனை நான் உங்களுக்குப் பின்னர் கூறுகிறேன். இப்போது உடனடியாக, எல்லாக் காகங்களையும் அழைத்துக்கொண்டு, அவர்களிடம் ஆளுக்கொரு எரியும் கொள்ளியைக் கொடுங்கள். அவை நான் ஆந்தையின் குகை வாசலில் குவித்துள்ள சுள்ளிக்குவியலில் வைத்துவிடட்டும். உடனே, குகையின் வாசல் தீப்பற்றி எரியும். ஆந்தைக் கூட்டம் அந்தத் தீயில் வெந்து அழியும்’ என்றது சிரஞ்சீவி.

சிரஞ்சீவியின் திட்டப்படி, காகராஜா தன் காகக் கூட்டத்தை அழைத்துக்கொண்டு எரியும் கொள்ளியுடன் ஆந்தைக் குகையை அடைந்தது. அங்கு சிரஞ்சீவி குவித்துவைத்துள்ள சுள்ளிகளில் தீயை மூட்டியது. நெருப்பும் புகையும் குகைக்குள் மண்டியதில் ஆந்தைகள் அனைத்தும் அழிந்தன.
ஆந்தைக் கூட்டம் அழிந்த பின்னர், காகராஜா தன்னுடைய பழைய ஆலமரத்தில் வழக்கம்போலத் தன்னுடைய அரசாட்சியை நடத்திவந்தது.
பின் காக ராஜன் சிரஞ்சீவியை அரசவைக்கு அழைத்து, ‘நீ எப்படி ஆந்தைக் கூட்டத்தை நம்பவைத்து ஏமாற்றினாய் எங்களுக்கு விளக்கிக் கூறு’ என்று கேட்டது.

‘பாம்பு இரையை உண்பதற்காகத் தன் தோளில் தவளைகளைச் சுமந்ததுபோலத்தான் நானும் ஆந்தைக் கூட்டத்தை வஞ்சகமாக அழித்தேன்’ என்றது சிரஞ்சீவி.

‘பாம்பு தவளைகளைத் தன் தோளில் சுமந்ததா?’ என்று வியப்புடன் கேட்ட காகராஜனுக்கு, சிரஞ்சீவி அந்தக் கதையினைக் கூறத் தொடங்கியது.

3.9. தவளைகளைச் சுமந்த பாம்பு

ஒரு பெரிய கானகத்தில் மந்தவிஷன் என்கிற பாம்பு ஒன்று வசித்து வந்தது. ஒருநாள் இரையைத் தேடித் திரிந்த அந்தப் பாம்பு தனக்கு ஏதும் கிடைக்காததால் வருத்தமடைந்து ஓர் ஏரிக்கரைக்கு அருகில் வந்து அமர்ந்தது.

அப்போது அந்த ஏரியில் நிறைய தவளைகள் இருப்பதைக் கண்டது. ஆஹா! தனது பசிக்கு இந்தத் தவளைகள் கிடைத்தால் நன்றாக இருக்குமே! இந்தத் தவளைகளை எப்படியாவது தந்திரமாகப் பிடித்து உண்டுவிடவேண்டும் என்று திட்டமிட்டது.

அப்போது அந்தப் பக்கம் வந்த தவளையொன்று இந்தப் பாம்பைப் பார்த்து விட்டது. அது பயந்து போய், சற்று தொலைவில் இருந்துகொண்டே, பாம்பைப் பார்த்து ‘பாம்பே! ஏன் இரையேதும் தேடித் திரியாமல் இந்தக் கரையில் இப்படிச் சும்மா உட்கார்ந்திருக்கிறாய்?’ என்று கேட்டது.

உடனே, அந்தப் பாம்பு தந்திரமாகப் பேசத் தொடங்கியது. ‘நான் பாவி. எனக்கு எப்படி, எங்கிருந்து உணவு கிடைக்கும்?’ என்று தன் முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு கேட்டது.

‘ஏன்? நீ என்ன பாவம் செய்தாய்?’ என்று தவளை விசாரித்தது.

‘இன்று காலையில் நான் இரைதேடிவந்தேன். அப்போது ஒரு தவளை குறுக்கே சென்றது. நான் அதைப் பிடிக்க நினைத்து முன்னே சென்றேன். அது புதரில் சென்று ஒளிந்துகொண்டது. நான் அதனைத் தேடிச் சென்றேன். அருகில் ஒரு பிராமணன் குளித்துக்கொண்டிருந்தான். அவனது மகன் புதரின் அருகில் விளையாடிக்கொண்டிருந்தான். நான் தேடிவந்த தவளைதான் இது என்று நினைத்து, அந்தப் பிராமணனின் பிள்ளையுடைய பாதத்தைக் கடித்து விட்டேன். அவன் இறந்துவிட்டான். அதனால் கோபம் கொண்ட பிராமணன் என்னைச் சபித்துவிட்டான்’ என்றது பாம்பு.

‘அந்தப் பிராமணன் உன்னை என்னவென்று சபித்தான்?’ என்று கேட்டது அந்தத் தவளை.

‘அந்தப் பிராமணன் என்னைப் பார்த்து, ‘இதுவரை தவளைகளைப் பிடித்து உண்டு வந்த நீ, இனிமேல் தவளைகளுக்குச் சேவைசெய்து வாழக் கடவாய்’ என்று சபித்துவிட்டான். அவன் சாபம் பலித்துவிட்டது. நான் இந்த ஏரிக்கரைக்கு வந்து தவளைகளுக்குச் சேவகம் செய்வதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்’ என்று கூறியது.

அந்தத் தவளை பாம்பு கூறுவது அனைத்தும் உண்மை என்று நம்பி, பாம்பு பெற்ற சாபத்தைத் தன் இனத்தாரிடம் கூறியது.

உடனே, தவளை ராஜா தன்னுடைய அனைத்துத் தவளைகளையும் அழைத்துக்கொண்டு ஏரியைவிட்டு வெளியே வந்தது. அந்தப் பாம்பினை அதிகாரம் செய்தது. ‘ஏ பாம்பே! அனைத்துத் தவளைகளையும் உன் முதுகின் மீது ஏற்றிக் கொண்டு செல்!’ என்று கட்டளையிட்டது.

உடனே, பாம்பு மிகவும் பவ்வியமாக தவளைகளைத் தன் முதுகில் சுமந்துகொண்டு அந்தக் காட்டையே வலம்வந்தது. இவ்வாறு இரண்டு நாட்கள் சென்றன. பாம்பின் வேகம் குறைந்துவிட்டது.

தவளை ராஜா பாம்பிடம், ‘ஏன் சோர்வாக இருக்கிறாய்?’ என்று விசாரித்து.
‘நான் சாப்பிட்டு நான்கு நாட்கள் ஆகின்றன. எனக்கு மிகவும் பசிக்கிறது’ என்றது பாம்பு.

‘அப்படியா! சரி, இனிமேல் நீ சிறிய தவளைகளைப் பிடித்து உன் பசிக்கு ஏற்ப அளவாக உண்டுகொள்’ என்று உத்தரவிட்டது.

உடனே, பாம்பு, ‘எனக்குச் சாபம் கொடுத்த அந்தப் பிராமணர் எனக்கு இட்ட அதே கட்டளையைத் தாங்களும் கூறுகிறீர்கள்!’ என்று கூறியது.

அதன் பின்னர், அந்தப் பாம்பு சிறிய தவளைகளைச் சாப்பிட்டுக்கொண்டும் பெரிய தவளைகளைச் சுமந்துகொண்டும் காட்டில் திரிந்தது.

அப்போது அந்தக் காட்டிற்குள் நுழைந்த ஒரு புதிய பாம்பு இந்தக் காட்சியைக் கண்டு கோபம் கொண்டது.

‘நமக்கு இரையாக உள்ள இந்தத் தவளைகளை நீ ஏன் உன் முதுகில் சுமந்துகொண்டு திரிகிறாய்?’ என்று கேட்டது.

அதற்கு அந்தப் பாம்பு, ‘எல்லாம் காரணமாகத்தான்! காலம் கடந்தபின் உனக்கே தெரியும்’ என்றது.

சில நாட்களில் அந்தப் பாம்பு தவளைகளைச் சுமந்து சுமந்து, அவற்றை ஏமாற்றி அனைத்துத் தவளைகளையும் உண்டுவிட்டது. இறுதியாகத் தவளை ராஜாவையும் சுமந்து சென்று அதையும் சாப்பிட்டு ஏப்பம்விட்டது.

‘எந்தச் சமயத்தில் எதனைச் செய்யவேண்டுமோ அந்தச் சமயத்தில் அதனைச் செய்து பகைவர்களை வேரோடு அழித்துவிடவேண்டும். நெருப்பு தன் வலிமையால் காட்டையேகூட அழிக்கவல்லது. மரங்கள் தன் வேர்களை நிலத்தில் ஊன்றியுள்ளன. இருந்தாலும், மிருதுவான தன்மைகொண்ட தண்ணீரும் காற்றும் மரங்களை வேரோடுப் பிடுங்கிச் சாய்த்துவிடுகின்றனவே’ என்றது சிரஞ்சீவி.

காகராஜா, ‘கீழ்நிலையில் உள்ளவர்கள், தங்களுக்குச் சிக்கல் வரும் என்று நினைத்து, பயந்து எந்தச் செயலிலும் ஈடுபடுவதில்லை. நடுநிலையில் உள்ளவர்கள், ஏதாவது ஒரு காரியத்தைத் தொடங்கி, பின்னர் ஏதேனும் சிக்கல் வந்தால் அந்தக் காரியத்தைக் கைவிட்டுவிடுவார்கள். மேல்நிலையில் உள்ளவர்கள், ஆயிரம் தடைகள் வந்தாலும் அவற்றைத் தகர்த்துவிட்டு எடுத்த காரியத்தை முடித்துவிடுவார்கள். அதுபோலத்தான் நீ எடுத்துக்கொண்ட காரியத்தை ஆயிரம் தடைகளையும் மீறி முடித்துள்ளாய். அதுவும் அந்தக் காரியத்தைத் தீயினால் நிரந்தரமாக முடித்துள்ளாய். சண்டையில் ஆயுத்தைப் பயன்படுத்தினால் ஒருவன் சாவான். ஆனால், சண்டையில் புத்தியைப் பயன்படுத்தினால் ஆயிரம் பேர் சாவார்கள்’ என்றுகூறி சிரஞ்சீவியைப் பாராட்டியது.

‘அரசனாகிய தங்களின் புகழினால்தான் இது சாத்தியமாயிற்று. தங்களைப் போன்றவர்களுக்கு இறைவன் நல்ல உத்திகளை வழங்குவார். இதுபோன்ற காரியங்களைத் தடியெடுத்து அடித்து முடிக்கமுடியாது. அனுசரிக்கும் புத்தியால்தான் செய்யவேண்டும். நான் அவ்வாறே செய்து, சிறப்பாக முடித்தேன்’ என்றது சிரஞ்சீவி.

அதன்பின்னர், காகராஜன் அந்த மரத்திலிருந்து நெடுநாட்கள் எந்தச் சிக்கலும் இல்லாமல் அரசாண்டுவந்தது.

ரகசியத்தைக் கூறிய பாம்புகள்

பஞ்ச தந்திரக் கதைகள் / 3.5

draw-snake-5விஷ்ணுவர்மன் என்ற மன்னனுக்கு திடீரென்று வயிற்றில் ஏதொவொரு நோய் உண்டானது. நாள் செல்லச் செல்ல அந்த நோய் மிகுதியாகி மன்னனது உடல் மெலிந்தது. அவர் தன் நோய் குணமாவதற்காக தீர்த்தயாத்திரை மேற்கொண்டார். அவ்வாறு அவர் செல்லும்போது வழியில் ஒரு கோயிலில் தங்க நேர்ந்தது.

அந்த ஊரில் பலி என்பவர் அரசாண்டு வந்தார். அவருக்கு இரண்டு மகள்கள். அவர்கள் இருவரும் தன்னுடைய தந்தையைப் பார்க்க வந்தனர்.
முதல் மகள் தன் தந்தையைப் பார்த்ததும் ‘வெற்றியடைவீர்!’ என்று வாழ்த்தினாள். இரண்டாவது மகள், ‘நன்றாக உணவு உண்பீர்!’என்று வாழ்த்தினாள்.

தன் இரண்டாவது மகளின் பேச்சு அவருக்குக் கோபத்தைத் தூண்டியது. உடனே அவர் தன் அமைச்சரை அழைத்து, ‘இவளை ஒரு நோயாளிக்குக் கொடுத்துவிடுங்கள்’ என்று கட்டளையிட்டார்.

அமைச்சர், அரசரின் இரண்டாவது மகளை அந்த ஊரில் உள்ள கோவிலில் தங்கியிருந்த நோயாளியான மன்னர் விஷ்ணுவர்மனுக்குக் கொடுத்துவிட்டார்.

அவள் தன் கணவனை நன்றாகக் கவனித்துக்கொண்டாள். அவருடன் வேறு நாட்டிற்குச் சென்றுவிட்டாள். அங்கு தன் கணவருக்கு வேண்டிய உணவுகளைச் சமைப்பதற்காகத் தன் பணியாளரை அழைத்துக்கொண்டு கடைவீதிக்குச் சென்றாள். அவள் கணவன் விஷ்ணுவர்மன் தூங்கிக்கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த ஒரு புற்றிலிருந்த பாம்பு அந்த நோயாளி மன்னனின் வயிற்றில் இருந்த பாம்பிடம் பேசியது. மன்னனின் வயிற்றுக்குள் இருந்த பாம்பு புற்றிலிருந்த பாம்பின் பேச்சுச் சப்தத்தைக் கேட்டு தானும் பதிலுரைத்தது. இதனால் அந்த இரண்டு பாம்புகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நேரத்தில் கடைவீதிக்குச் சென்றிருந்த மனைவி வந்துவிட்டாள். இந்த இரண்டு பாம்புகளும் பேசிக்கொண்டிருப்பதைக் கவனித்தாள். அவள் ஒரு மரத்தின் மறைவில் ஒளிந்துகொண்டு அப் பாம்புகளின் பேச்சினைக் கூர்ந்து கேட்டாள்.

புற்றுப்பாம்பு, ‘அட தீயவனே! நீ ஏன் இந்த அழகிய மன்னரின் வயிற்றுக்குள் இருந்து, அவரைத் துன்பப்படுத்துகிறாய்?’ என்றது.

அதற்கு மன்னரின் வயிற்றுக்குள்ளிருந்த பாம்பு, ‘நான் உணவு நிறைந்த குடத்தில் நிம்மதியாக இருப்பது உனக்குப் பொறாமையாக உள்ளதா?’ என்று கேட்டது.

‘அட தீயவனே! அந்த மன்னர் கடுகினை உண்டால் நீ இறந்துவிடுவாயே! பின்னர் அவர் நிம்மதியாக வாழ்வார். இந்த விஷயம் அவருக்குத் தெரியாதவரையில்தான் நீ அவரது வயிற்றில் சுகமாக வாழமுடியும்’ என்றது புற்றுப்பாம்பு.

‘அட நீ மட்டும் என்ன நெடுங்காலம் வாழ்ந்துவிடுவாயா? யாராவது உன் புற்றுக்குள் வெந்நீரை ஊற்றிவிட்டால் நீ இறந்துவிடுவாயே’ என்றது அந்தப் பாம்பு.

இந்த ரகசியத்தை அறிந்துகொண்ட அந்த மனைவி, தன் கணவரிடம் கடுகைக் கொடுத்து உண்ணச்செய்தாள். அடுப்பில் வெந்நீர் வைத்து அதனை அந்தப் புற்றில் ஊற்றினாள். இரண்டு பாம்புகளும் இறந்துவிட்டன. மன்னர் விஷ்ணுவர்மனின் நோய் குணமடைந்தது. அவர் பழைய உடலைப் பெற்றார்.

ஆரோக்கியமடைந்த கணவருடன் சந்தோஷமாக அவள் தன்னுடைய நாட்டிற்குச் சென்றாள். அவர்களை அனைவரும் வாழ்த்தினர்.

‘ஆகையால், இருவரும் ஒருவருக்கொருவர் தங்களின் ரகசியங்களைக் காப்பாற்றிக்கொள்ளாவிட்டால் இந்தப் பாம்புகளைப் போல இருவருக்குமே துன்பம் வரும். ஆதலால், நாமும் இந்த சிரஞ்சீவியும் ஒருவருக்கொருவர் தங்களின் ரகசியங்களைக் காப்பாற்றுவது நன்மையைத் தரும் என்றது’ கொள்ளிக்கண்ணன்.

ஆந்தை ராஜா தன்னுடைய மந்திரி குரூரநாசனைப் பார்த்து, ‘தாங்கள் ஏதேனும் ஆலோசனை கூற விரும்புகிறீர்களா’ என்று கேட்டது.

‘ராஜா! மந்திரிமார்கள் கூறுவது அனைத்தும் சரியன்று. ராஜன் தண்டத்தை மட்டுமே கைக்கொள்ளவேண்டும். வலிமையுடையவர்கள் தங்களின் பகைவர்களைச் சண்டைசெய்தே வெல்வார்கள். தந்திரம் செய்து வெல்பவரை யாரும் வலியவர் என்று ஏற்றுக்கொள்வதில்லை. தன் வலிமையைக் காட்டாவிட்டால் எதிர்ப்படும் விளைவுகளை ஏற்கவேண்டிவரும். தண்டத்தால் பகைவர்களை அவமானப்படுத்தி வெல்பவர்களையே லட்சுமிதேவி விரும்புகிறாள். பலமுடையவன் தன் பகைவர்களைப் போரிட்டுத்தான் வெல்லவேண்டும்’ என்றது குரூரநாசன்.

ஆந்தை ராஜா தன்னுடைய மந்திரி பிரகாரநாசனைப் பார்த்து, ‘தாங்களுடைய ஆலோசனை என்ன?’ என்று கேட்டது.

‘ராஜா! சிரஞ்சீவி தங்களிடம் அடைக்கலமாக வந்துள்ளான். முற்காலத்தில் ராமன் எப்படி தன்னைத் தஞ்சம் அடைந்த விபீஷணனைத் தலைவனாக்கி ராவணாதிகளை அழித்தாரோ, அப்படியே நாம் நம்முடைய பகைவர்களையும் அழிக்கவேண்டும். அடைக்கலமாக வந்தவனைக் கொல்வது சரியல்ல. அவ்வாறு கொன்றால் நமக்கு நரகமே கிடைக்கும். வேடனிடம் அகப்பட்டிருந்த ஒரு புறாவினை விடுவிப்பதற்காக சிபிச்சக்கரவர்த்தி தன் உடல் மாமிசத்தை வேடனுக்குக் கொடுத்து அந்தப் புறாவினை மீட்டதாக மகாபாரதம் கூறியுள்ளது. தன்னிடம் அடைக்கலமாக வந்தவனைக் காக்கும்பொருட்டு நெருப்பில் குதித்தவனைப் போல…’ என்று உதாரணம் கூறிய பிரகாரநாசனை இடைமறித்து, ‘அது எப்படி நடந்தது?’ என்று கேட்டது அரிமர்த்தனன். அதற்கு அந்தக் கதையினைக் கூறியது பிரகாரநாசன்.

3.6. தியாகப் புறாக்கள்

ஒரு பெரும் காடு. அங்கு உள்ள ஒரு மரத்தில் ஓர் ஆண் புறாவும் ஒரு பெண்புறாவும் கூடுகட்டி வாழ்ந்துவந்தன. அவை ஒன்றையொன்று மிகவும் நேசித்தன. அந்தக் காட்டில் ஒரு வேடன் தடியும் வில்லும் அம்பும் கூண்டும் வலையும் கையில் வைத்துக்கொண்டு சுற்றித் திரிந்தான்.

ஒருநாள் அந்த வேடன் அந்தக் காட்டில் ஒரு பெண் புறாவினைப் பிடித்துத் தன் கூண்டில் அடைத்துக் கொண்டு, வேறு ஏதேனும் பறவைகள் சிக்குமா என்று எதிர்பார்த்துக்கொண்டே காட்டினைச் சுற்றிவந்தான். அப்போது அடைமழை பொழியத் தொடங்கியது.

மரத்திலிருந்த ஆண் புறா, தன் பெண்புறாவைக் காணாமல் தேடிக்கொண்டிருந்தது. ‘இந்த மழையில் எங்குள்ளதோ? அதற்கு ஏதேனும் ஆபத்து வந்துவிட்டதோ?’ என்று நினைத்துப் புலம்பிக்கொண்டிருந்தது.

மழையோடு சேர்ந்து புயற்காற்றும் வீசத் தொடங்கியது. வேடன் மிகவும் பயந்துவிட்டான். அவன் தன் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டான். பின்னர் ஒரு மரத்தினடியில் சென்று ஒதுங்கிநின்றான்.

அந்த மரத்தின் மீது இருந்த அந்த ஆண் புறா, ‘என் இணையான பெண் புறா இல்லாமல் இந்தக் கூடே வெறுமையாக உள்ளதே! எனக்கு இந்தக் காடே நரகமாகத் தோன்றுகிறது. இந்தப் புயலில், மழையில் என் இணைப்புறா எப்படி இருக்கிறதோ?’ என்று புலம்பி மனம் கலங்கியது.

வேடனின் கூண்டில் இருந்த பெண்புறா தன் கணவரின் புலம்பலைக் கேட்டு வருந்தியது. ‘முற்பிறப்பில் தீங்கு செய்தவர்களுக்கே இந்தப் பிறப்பில் மிகுதியான துன்பங்களும் துயரங்களும் ஏற்படுகின்றன. எச் சமயத்தில் எது ஏற்படவேண்டுமோ அது தவறாமல் ஏற்பட்டு விடுகிறது’ என்றுத் தனக்குள் பேசிக்கொண்டது.

வேடனின் கூண்டுக்குள் இருந்த பெண் புறா நிமிர்ந்து அந்த மரத்தின் மீதிருந்த தன் இணையான ஆண் புறாவைப் பார்த்து, ‘நம் மரத்தினடியில் நின்றிருக்கும் இந்த வேடன் நமக்கு விருந்தாளிதான். அவனுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள். வீட்டிற்கு வரும் விருந்தினரை உபசரிக்காமல் இருந்தால், அவர் தன் பாவத்தை அந்த வீட்டாருக்குக் கொடுத்துவிட்டு, வீட்டாரின் புண்ணியத்தை எடுத்துக்கொண்டு செல்வார். ஆதலால், உங்களால் இயன்ற அளவு அவருக்கு வேண்டியதனைச் செய்துகொடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டது.

ஆண்புறா தன் இணையான பெண்புறாவைப் பிடித்த அந்த வேடன் மீது கோபங்கொள்ளாமல், தன் இணைப்புறா கூறியவாறே அவனுக்கு நன்மை செய்ய நினைத்தது. அது, அவனை வணங்கி வரவேற்றது. வேடன் மகிழ்ந்தான்.

‘உங்களுக்கு நான் ஏதாவது உதவி செய்யவேண்டுமா?’ என்று ஆண்புறா கேட்டது.

‘எனக்கு மிகவும் குளிர்கிறது. அதனை உன்னால் போக்க முடியுமா?’ என்று கேட்டான்.

உடனே, ஆண்புறா தன் கூட்டிலிருந்து உலர்ந்த சுள்ளிகளை எடுத்துக் கொடுத்தது. வேடன் அவற்றைக் கொண்டு நெருப்பினை மூட்டிக் குளிர்காய்ந்தான்.

‘வேறு ஏதாவது உதவி வேண்டுமா?’ என்றது ஆண்புறா.

‘எனக்கு மிகவும் பசிக்கிறது’ என்றான்.

‘என் கூட்டில் உங்களுக்குத் தரத் தகுந்த உணவு ஏதும் இல்லை. ஆதலால், நான் என் உடலையே உங்களுக்கு உணவாகத் தருகிறேன்’ என்று கூறிய அந்த ஆண்புறா அந்த நெருப்பில் விழுந்து இறந்தது.

அதனைக் கண்ட வேடன், ‘என் பசியைப் போக்க இந்தப் புறா தன்னுயிரையே தியாகம் செய்துவிட்டதே!’ என்று வருந்தினான்.

‘நானோ தீய ஒழுக்கமுள்ளவன். பிற உயிர்களைக்கொன்று உயிர்வாழ்பவன். இரக்கம், உதவி போன்ற எவற்றையும் அறியாதவன். இன்றுமுதல் நான் இரக்கமுள்ளவனாக நல்லவனாக வாழ விரும்புகிறேன்’ என்று நினைத்துத் தன்னுடைய தடி, வில், அம்பு முதலியவற்றை முறித்துப்போட்டான். தன் வலையினைத் தூர வீசிவிட்டான். தன் கூண்டிலிருந்த அந்தப் பெண் புறாவுக்கு விடுதலை அளித்தான்.

அந்தக் கூண்டைவிட்டு வெளியே வந்த அந்தப் பெண் புறா, ‘தருமத்திற்காக என் இணையான ஆண்புறா உயிர்த்தியாகம் செய்துவிட்டது. அது இல்லாத இந்த உலகில் நான் வாழ விரும்பவில்லை’ என்று கூறி அதுவும் அந்த நெருப்பில் விழுந்து இறந்தது.

அடடா! நாம் எவ்வளவு பெரிய தவறினைச் செய்துவிட்டோம். நம் தவறால் இன்று ஒரு புறா தம்பதிகளை நெருப்பிலிட்ட பாவத்திற்கு ஆளாகிவிட்டோமே’ என்று கலங்கிய வேடன், தானும் அந்த நெருப்பில் விழுந்து மாண்டான்.

‘ஆதலால், தன்னிடம் அடைக்கலமாக வந்தவர்களை நாம் எப்பொழுதும் காக்க வேண்டும்’ என்றது மந்திரி பிரகாரநாசன்.

அரிமர்த்தனன், ‘ராஜா! எனக்கும் அதே எண்ணமே உள்ளது. சிரஞ்சீவி உண்மையைப் பேசுபவனாகவும் புத்திசாலியாகவும் இருக்கிறான். காகராஜா இவனை மிகவும் துன்பப்படுத்தியுள்ளார். ஆதலால், நாம் இவனைக் கொல்வது சரியன்று. நம்மை அடைக்கலமாக வந்துள்ளான். இவனைக் காப்பது நம் கடமை’ என்றது.

ஆந்தை ராஜா, சிரஞ்சீவியிடம், ‘நீ எங்களுடன் வந்துவிடு. எங்களின் கோட்டையில் தங்கியிரு. நாங்கள் உன்னைப் பாதுகாப்போம்’ என்று கூறினார்.

மகிழ்ச்சியடைந்த சிரஞ்சீவி, ராஜா! நான் தங்களுடன் பழகுவதிலிருந்து என் குடிப் பிறப்பைப் பற்றித் தாங்கள் அறிந்துகொள்வீர்கள்!’ என்றது.

அதற்கு மந்திரி குரூரநாசன், ‘ஆந்தையின் குலமெல்லாம் ராஜாவின் குற்றத்தால் பாழாகும். பிறர் குற்றங்களை ராஜாவுக்கு அறிவிக்கவேண்டும். ராஜா அவற்றைக் கேட்காவிட்டால் அதற்கு என்ன பயன் இருக்கிறது?’ என்று கூறியது. மந்திரியின் பேச்சைக் கேட்காத ஆந்தை ராஜா சிரஞ்சீவியைத் தன்னுடன் அழைத்துச்சென்றார்.

சிரஞ்சீவி தன் மனத்திற்குள், ‘நம்மைக் கொல்லவேண்டும் என்று கூறியவன் இவர்களில் எல்லோரையும் விட புத்திசாலி. அவனை அழித்துவிட்டால் மற்றவர்களை வெல்வது எளிது. காரணம் மற்றவர்கள் அவர்களின் ராஜனைப்போலவே மூடர்கள்’ என்று நினைத்தது.

அரிமர்த்தனன் பணியாளர்களை அழைத்து, ‘சிரஞ்சீவிக்கு நம் அரண்மனையினைச் சுற்றிக்காட்டுங்கள்’ என்றது. அவர்கள் அவ்வாறே செய்தனர்.

சிரஞ்சீவி தன் மனத்திற்குள், ‘நாம் இவ்வாறு இங்கே இருந்தால் நாம் எப்படி வஞ்சகமாகச் செய்படுவது. எப்படியாவது ராஜாவின் அன்பினைப் பெற்று இந்தக் குகையின் தலைமைக் காவலனாக வேண்டும். பின்னர் நம் திட்டத்தினை எளிதில் செயல்படுத்திவிடலாம்’ என்று நினைத்தது.

ஆந்தை ராஜாவைச் சந்தித்த சிரஞ்சீவி, ‘ராஜா! நான் ஏன் இந்தக் குகையில் முடங்கிக்கிடக்கவேண்டும்? எனக்கு ஏதாவது காவல் பணியினைத் தாங்கள் கொடுத்தால், விசுவாசத்துடன் அதனைச்செய்துகொண்டு என் காலத்தை முடித்துக்கொள்வேன். எனக்குக் குகையின் காவல் பணியினைக் கொடுங்களேன்! விசுவாசமானவன் குகைக்கு உள்ளிருந்தால் என்ன, குகைக்கு வெளியில் இருந்தால் என்ன?’ என்றது.

அப்போது குறுக்கிட்ட குரூரநாசன், ‘ராஜா! தாங்களும் மற்ற மந்திரிகளும் மூர்க்கர்களாக இருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். ‘முதல் மூடன் நான். இரண்டாவது மூடன் வேடன், மூன்றாவது மூடன் அரசன், நான்காவது மூடர்கள் மந்திரி’ என்று கூறிவிட்டுச் சென்ற அதிசயப் பறவை பற்றி உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டது.

ஆந்தை ராஜா, ‘தெரியாது. பறவை ஏன் அவ்வாறு கூறியது?’ என்று கேட்டதற்கு, குரூரநாசன் அந்தக் கதையினைக் கூறத்தொடங்கியது.

3.7. நான்குவிதமான முட்டாள்கள்

ஒரு மலைக்காட்டில் எண்ணற்ற வகையான பறவைகள் வாழ்ந்துவந்தன. ஒரு மரத்தில் மட்டும் ஓர் அதிசயப் பறவை வாழ்ந்துவந்தது. அந்தப் பறவை தங்கத்தையே எச்சமாக (கழிவு) இடக்கூடியது.

அந்தக் காட்டில் சுற்றித் திரிந்த ஒரு வேடன் ஒரு மரத்தினடியில் தங்கம் சிதறிக் கிடப்பதனைப் பார்த்தான். பிறகுதான் புரிந்து கொண்டான், இது ஒரு பறவையின் எச்சம் என்று. தங்கத்தையே எச்சமாக இடக்கூடிய அந்தப் பறவை ஓர் அதிசயப் பறவைதான் என்று உணர்ந்த அந்த வேடன், அப் பறவையை உயிருடன் பிடிக்க விரும்பினான்.

அந்த மரத்தினடியில் ஒரு வலையினை விரித்தான். அவன் விரித்த வலையில் அந்த அதிசயப் பறவை அகப்பட்டது. அதனைக் கவனமாகப் பிடித்துச்சென்றான் அந்த வேடன்.

‘இப்படி ஓர் அதிசயப் பறவையினை வீட்டிற்குக் கொண்டுசென்றால், எப்படியும் இந்த விஷயம் நம் ராஜாவுக்குத் தெரிந்துவிடும். அதன்பின் இந்த விஷயத்தை நான் அவரிடமிருந்து மறைத்துவிட்டதாக நினைத்து, அவர் என்னைத் தண்டித்துவிடுவாரே!’ என்று நினைத்த வேடன், அந்தப் பறவையைத் தன் வீட்டிற்குக் கொண்டுசெல்லாமல் ராஜாவின் அரண்மனைக்குக் கொண்டுசென்றான்.

ராஜாவைச் சந்தித்த அந்த வேடன், அந்தப் பறவையை ஒப்படைத்தான். அந்தப் பறவை அதிசயப் பறவை என்று கூறினான். அது தங்கத்தை எச்சமாக இடும் என்று அந்த வேடன் கூறியதும், ராஜா பெரிதும் மகிழ்ந்தார். அவர் அந்தப் பறவைக்காகவே விலைமதிப்புள்ள ஒரு கூண்டினைச் செய்து, அதில் அந்த அதிசயப் பறவையை அடைத்துவைத்தார்.

ராஜா இவ்வாறு செய்ததை அறிந்த மந்திரி ராஜாவைச் சந்தித்தார். ‘ராஜா! அந்த வேடன் ஏதேதோ கூறி உங்களை ஏமாற்றிவிட்டான். எந்தப் பறவையும் தங்கத்தை எச்சமாக இடாது. நீங்கள் ஏமாறவேண்டாம். அந்தப் பறவையை விட்டுவிடுங்கள்’ என்று மந்திரி கூறினார்.

மந்திரி கூறுவதில் உண்மையிருக்குமோ என்று நினைத்த ராஜா, அந்தக் கூண்டினைத் திறந்துவிட்டார். உடனே, அந்த அதிசயப் பறவை பறந்துசென்றது.

பின்னர் அது அரண்மனையின் உச்சிமாடத்தில் அமர்ந்துகொண்டு, ‘ஒரே மரத்தில் தங்கியிருந்த நான் முதல் மூடன். என்னைப் பிடித்துத் தானே வைத்துக்கொள்ளாமல் ராஜாவிடம் ஒப்படைத்த அந்த வேடன் இரண்டாவது மூடன். என்னுடைய அதிசயத் தன்மையைத் தன் கண்ணால் பார்க்காத இந்த ராஜா மூன்றாவது மூடன். வேடனும் ராஜாவும் முட்டாள்கள் என்றும் தான் மட்டுமே அறிவாளி என்றும் தவறாக நினைத்துச் செயல்பட்ட அந்த மந்திரி நான்காவது மூடன்’ என்று கூறிவிட்டுத் தன்னுடைய மலைக்காட்டை நோக்கிச் செல்லாமல், வேறு ஒரு காட்டினைத் தேடிப் புறப்பட்டது.

இவ்வாறு அதிசயப் பறவை பற்றிக் கூறிய குரூரநாசன், நரி ஒன்று குகையைப் பார்த்துக் கூப்பிட்டு நன்மையடைந்ததைப் போல ஒரு சிக்கல் வருவதற்கு முன்னரே அதனை உய்த்துணர்ந்து அதனைத் தீர்த்துக்கொள்ள ஆலோசிப்பவன் நன்மையையே அடைவான்!’ என்றது.

மந்திரிமார்கள், ‘நரி ஏன் குகையைப் பார்த்துக் கூப்பிட்டது?’ என்று கேட்டவுடன், அவர்களுக்கு குரூரநாசன் அந்தக் கதையினைக் கூறத் தொடங்கியது.

(தொடரும்)

ஆட்டை இழந்த பிராமணன்

பஞ்ச தந்திரக் கதைகள் / 3.3

பெரிய நகரம் ஒன்றில் மித்திரசர்மா என்ற 8271426001_ae5e9de040_zபிராமணன் வாழ்ந்துவந்தான். அவன் மாசி மாதத்தில் யாகம் ஒன்று செய்யத் திட்டமிட்டான். அந்த யாகத்துக்கு ஓர் ஆடு தேவைப்பட்டது. ஆடு வாங்க அருகில் இருந்த ஓர் ஊருக்குச் சென்றான். அங்கிருந்த பணக்காரர்களிடம் தனது நோக்கத்தினைக் கூறினான். அவர்களும் யாக காரியம் என்பதால் மறுக்காமல், ஒரு பெரிய ஆட்டினை அவனுக்குக் கொடுத்தனர்.

அவன் அந்த ஆட்டை நடத்தி அழைத்துவரும்போது, அது அங்கும் இங்குமாக ஓடியது. அதனால், அவன் அந்த ஆட்டைத் தன் தோளில்போட்டுக்கொண்டு நடந்துவந்தான்.

இந்தப் பிராமணன் ஆட்டுடன் வருவதைத் தூரத்திலிருந்து பார்த்த சில வஞ்சகர்கள் எப்படியாவது இந்த ஆட்டினை இவனிடமிருந்து கவர்ந்துவிடவேண்டும் என்று திட்டமிட்டனர்.

அவர்களுள் ஒருவன் பிராமணனிடம் வந்து, ‘அட வேள்வி வளர்த்து வேதம் ஓதும் பிராமணனே! நீ ஏன் இந்த பழியினைச் செய்கிறாய்? மிகவும் இழிந்த இந்த நாயை உன் தோள்களில் சுமந்துவரலாமா? நாய், கோழி, கழுதை இவற்றை நீ தொடுவதுகூட குற்றமாயிற்றே!’ என்றான்.

உடனே, அந்தப் பிராமணன், ‘இது யாகப் பசு. இதனையா நீ நாய் என்று கூறுகிறாய்? உன் கண்கள் கெட்டுவிட்டனவா?’ என்று கோபித்துக்கொண்டான்.

‘சரி, சரி! நீ கோபித்துக்கொள்ளாதே. போ’ என்று அவனை அனுப்பிவிட்டுச்சென்றான்.

சிறிது தூரம் சென்றதும் அந்த வஞ்சகர்கூட்டத்தைச் சேர்ந்தவர்களுள் மற்றொருவன் அந்தப் பிராமணனிடம் வந்தான்.

‘அட பிராமணா! உனக்குத்தான் இந்தக் கன்றின் மீது எவ்வளவு பாசம்! அது இறந்த பின்னரும் கூட அதனை உன் தோளில் சுமந்துகொண்டுவருகிறாயே’ என்றான்.

‘இது கன்று இல்லை. இது யாகத்திற்கான ஆடு. இது இறக்கவில்லை’ என்றான் அந்தப் பிராமணன்.

பிராமணன் கூறியதைக் கேட்காமல் அவன், ‘இறந்த விலங்குகளைத் தொடுவது பாவம். அந்தத் தீட்டு எப்படிப் போகும்?’ என்று கேட்டுவிட்டுச் சென்றுவிட்டான்.

மித்திரசர்மா குழப்பத்துடன் மேலும் சிறிது தூரம் சென்றதும் அந்த வஞ்சகர்கூட்டத்தைச் சேர்ந்தவர்களுள் மூன்றாமவன் அந்தப் பிராமணனிடம் வந்தான்.

‘அட பிராமணா! என்ன கொடுமைஇது? நீ ஒரு கழுதையைச் சுமந்து செல்லலாமா?’ என்று கேட்டுவிட்டுச் சென்றான்.

உடனே அந்தப் பிராமணன் யோசித்தான். ‘வழியில் பார்த்த மூவரும் இந்த ஆட்டைப் பற்றி மூன்றுவிதமாகக் கூறியுள்ளனரே! இது நம் கண்களுக்கு ஆடாகவும் மற்றவர்களின் கண்களுக்கு வேறு விலங்காகவும் காட்சி தருகிறதோ?’ என்று நினைத்து, ‘இந்த ஆடு ஏதாவது ராட்சஸனாக இருக்கும்போலும்’ என்று பயந்து, அதனை அங்கேயே விட்டுவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் தன் வீடுவந்துசேர்ந்தான்.

தம் திட்டம் வெற்றிபெற்றதனைக் கண்டு மகிழ்ந்த அந்த வஞ்சகர்கள் அந்த ஆட்டைக் கைப்பற்றிக்கொண்டனர் என்று கூறிய வயதில் மூத்த காகமாகிய சிரஞ்சீவி, காகராஜாவைத் தனியாக அழைத்துப் பேசியது.

‘பிராமணனை வஞ்சித்து ஆட்டைப் பறித்தவர்களைப்போல நான் நமது எதிரியை வஞ்சித்து அவர்களை அழிப்பேன்’ என்று காகராஜாவுக்கு உறுதி கூறிய சிரஞ்சீவி, ‘நீ எனக்கு ஓர் உதவிசெய்யவேண்டும். நீ என்னை வெறுத்து ஒதுக்குவதுபோலப் பேசி, என் மீது வேறு ஒரு விலங்கின் ரத்தத்தைத் தடவி, என்னை ஆலமரத்தின் கீழ் போட்டுவிடு. பின்னர் நீ அனைவரையும் அழைத்துக்கொண்டு மலையின் மீது சென்று அமர்ந்துகொள். நான் உங்களுக்கு எதிரியாக உள்ளேன் என்று நினைக்கும் அந்த ஆந்தைக் கூட்டம், என்னை அவர்கள் அருகில் சேர்த்துக்கொள்ளும். நான் அவர்களிடம் நண்பன்போல உறவாடி அவர்களுக்கு அழிவைத் தருவேன்’ என்றது.

‘இவ்வாறு செய்வதால் உன் உயிருக்குக் கூட ஆபத்துவருமே!’ என்று காகராஜா வருந்தியது.

சிரஞ்சீவி, ‘ராஜ காரியத்திற்காகச் சேவகர்கள் இப்படிப்பட்ட காரியங்களையும் செய்யத்தான் வேண்டும். தனக்குத் துன்பம் வரும்போது இவர்கள் உதவுவார்கள் என்பதால்தான் ராஜாக்களும் என்னைப் போன்ற சேவகர்களைத் தங்கள் அருகில் வைத்துக்கொள்கிறார்கள். இப்படி அவர்கள் ராஜாக்களுக்கு உதவவில்லை என்றால் அவர்களை ராஜாக்கள் தங்கள் அருகில் வைத்துக்கொண்டமைக்குப் பயனிருக்காதே!’ என்று கூறியது. பின்னர் தன் கலகத் திட்டத்தில் இறங்கியது சிரஞ்சீவி.

இவர்கள் நாடகமாடுகிறார்கள் என்பதனை அறியாத மற்ற காகங்கள் சிரஞ்சீவியைத் தாக்க வந்தன. காகராஜா அவர்களைத் தடுத்து, ‘இவன் ராஜ துரோகம் செய்துவிட்டான். இவனுக்கு நானே தண்டனை அளிக்கிறேன்’ என்று கூறி, தன் சொண்டால் (அலகு) அதனைப் பொய்யாகக் கொத்திக் கீழே தள்ளியது. பின்னர், தன் கூட்டத்தினரை அழைத்துக்கொண்டு மலைக்குச் சென்றது.

வழக்கம்போலப் படையெடுத்து வந்த ஆந்தைகள் அந்த ஆலமரத்தில் எந்தக் காகமும் இல்லாததனைக் கண்டு திகைத்தன. அப்போது மரத்தடியில் இருந்த மூத்த காகமாகிய சிரஞ்சீவி, அடிபட்ட பறவைபோல நடித்து, ‘என்னைக் காப்பாற்றுங்கள். காகராஜா என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்டான். நான் உங்கள் ராஜாவிடம் சரணடைகிறேன்’ என்று கூறியது. இந்த விஷயத்தை அவர்கள் தங்கள் ராஜாவிடம் கூறினர். ஆந்தை ராஜா ஆச்சரியப்பட்டார். தானே நேரில் வந்து, சிரஞ்சீவியைப் பார்த்தார்.

சிரஞ்சீவி, ஆந்தை ராஜாவிடம் ‘காகராஜா உன் மீது வன்மம்கொண்டு, உன்னை எதிர்த்துப் போர்தொடுக்கத் திட்டமிட்டார். நான் அவரின் திட்டத்தைத் தடுத்து, ஆந்தை ராஜா உன்னைவிட வலிமையானவர். அவரிடம் நீ எதிர்த்து நின்றால் விளக்கை அணைக்க நினைத்து அதில் விழுந்து மாண்ட விட்டில் பூச்சி போலாகிவிடுவாய் என்று கூறி, ஆந்தை ராஜாவுடன் சமாதானம் செய்துகொண்டு உயிர் பிழைத்துக்கொள் என்று எச்சரித்தேன். அவர் உங்களிடம் சமாதானம் பேச விரும்பவில்லை. ‘பணத்தை எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக்கொள்ளலாம். உயிரை இழந்துவிட்டால் மீண்டும் பெறமுடியுமா?’ என்று அவருக்கு எடுத்துக் கூறினேன். அவர் என் மீது கோபித்து, என்னை அடித்துக் கொல்லத் துணிந்தார். இப்போது நான் உங்கள் காலடியில் கிடக்கிறேன்’ என்று தந்திரமாகப் பேசியது.

ஆந்தை ராஜா, சிரஞ்சீவியின் மீது இரக்கம் கொண்டது. அதனை அறிந்த சிரஞ்சீவி, ‘தாங்கள் என்னைக் காப்பாற்றினால், நான் உங்களுடன் இணைந்துகொண்டு அந்தக் காகக் கூட்டத்தையே அழித்துவிடுவேன்’ என்று கூறியது.

உடனே, ஆந்தை ராஜா தன்னுடைய ஐந்து மந்திரிகளையும் அழைத்து, ‘இந்த சிரஞ்சீவியை என்ன செய்யலாம்? என்று அவர்களிடம் ஆலோசனை கேட்டது.
குருதிக்கண்ணன் என்ற மந்திரி, ‘ராஜா! இவன் காகராஜனுக்கு முதன்மையான மந்திரி. காலநேரம் சரியில்லாததால் இவன் அவனுக்கு எதிரியாகத் தெரிகிறான். இவன் நம்முடன் இணைந்த பின்னர் இவனுடைய வார்த்தைகளை நாம் கேட்காவிட்டால் இவன் நமக்கு எதிரியாகிவிடவும் வாய்ப்புள்ளதே! இவனைக் கொண்டே நாம் நமது எதிரியை வெல்லவேண்டும். சாம, தான, பேத, தண்டம் ஆகிய நான்கு வழிகளில், சாமத்தினால் செய்கின்ற காரியங்கள் எப்போதுமே கெடுவதில்லை. சர்க்கரையை உண்டாலே பித்தம் நீங்கும் எனில் நாம் ஏன் கசப்பான மருந்தை உண்ணவேண்டும்?. ஆதலால், சாம வழியினையே நாம் இப்போது பயன்படுத்தலாம். தான, பேத, தண்ட வழிகளை நாம் கைக்கொள்ள வேண்டாம்’ என்றது.

இந்த ஆலோசனையைக் கேட்டுக்கொண்ட ஆந்தை ராஜா, தன்னுடைய இரண்டாவது மந்திரியான கொடுங்கண்ணனிடம் கருத்துகேட்டது.
மந்திரி கொடுங்கண்ணன், ‘ராஜா! காகங்கள் எப்போதுமே நமக்குப் பகைதான். ஆகையால், இவர்களை அடக்க நாம் தண்ட வழியைக் கைக்கொள்வதுதான் சிறந்தது. வெல்லமுடியாத பகைவர்கள் நமக்கு இருந்தால் அவர்களின் பகைவர்களை நாம் துன்பப்படுத்தவேண்டும். அல்லது அவர்களுக்குப் பணம்கொடுத்தாவது, பொய்ப் பத்திரம் பிறப்பித்தாவது அவர்களுக்குள் நாம் பகையைத் தூண்டவேண்டும். நடுவில் புரைச்சல் உள்ள முத்துக்களும்கூடப் பயன்படுகின்றனவே! ஆதலால், இந்தக் காகத்தைத் தாங்கள் கொல்லவேண்டும். ஒருவேளை நம் பகைவனும் நமக்கு நன்மையே செய்யலாம்! ஒரு திருடன் ஒருவனைப் பிழைக்கச் செய்ததும் ஒரு ராட்சஸன் இரண்டு பசுக்களைப் பிழைக்கச் செய்ததும் தாங்கள் அறிவீர்கள்தானே!’ என்றது.

இல்லை. அது எனக்குத் தெரியாது. எது எப்படி?’ என்று கேட்ட ஆந்தை ராஜாவுக்கு, மந்திரி கொடுங்கண்ணன் அந்தக் கதையினைக் கூறத் தொடங்கியது.

3.4. ராட்சஸனுடன் கூட்டுவைத்த திருடன்

ஒரு பெரிய நகரத்தில், ஏழைப் பிராமணன் ஒருவன் வசித்துவந்தான். அவன் தனக்குக் கிடைத்த ஒரு பசுவையும் அதன் கன்றினையும் மிகவும் பாசமாக அதிக உணவு கொடுத்து வளர்த்து வந்தான். அப்படி கொழுத்து வளர்ந்த பசுவையும், கன்றையும் கவர்ந்து செல்வதற்காக திருடன் ஒருவன் திட்டமிட்டுக் காத்திருந்தான்.

பல நாள்கள் கண்காணித்துவந்த அந்தத் திருடன், ஒருநாள் அந்தப் பிராமணனின் பசுவையும் கன்றையும் திருடுவதற்காகக் கயிற்றினை எடுத்துக்கொண்டு சென்றான்.

அவன் செல்லும் வழியில், கோரைப்பல்லும் நீண்ட மூக்கும் செம்பட்டையான முடிகளும் சிவந்த கண்களும் கறுத்த உடலுமுடைய ஒரு ராட்சஸன் அவனை வழிமறித்தான்.

ராட்சஸனைக் கண்டதும் திருடன் தன் மனத்துக்குள் நடுங்கினான். தன் பயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் துணிவுடன், ‘யார் நீ?’ என்று அவனிடம் கேட்டான்.

‘நான் சத்தியவசனன் என்ற ராட்சஸன். நீ யார்?’ என்று கேட்டான் ராட்சஸன்.

‘நான் ஒரு திருடன். பிராமணன் வளர்த்துவருகின்ற பசுவையும் கன்றையும் திருடுவதற்காகச் செல்கிறேன். எனக்கு வழியைவிடு’ என்றான் திருடன்.

‘அட, அந்தப் பிராமணனா? அவன் மிகவும் நல்லவனாயிற்றே! சரி, இரு. நானும் உன்னுடன் வந்து அவனை விழுங்கிவிடுகிறேன்’ என்றான் ராட்சஸன்.

அதற்கு உடன்பட்ட திருடன் ராட்சஸனை அழைத்துக்கொண்டு பிராமணனின் வீட்டிற்குச் சென்றான். அந்தப் பிராமணன் தூங்கிக்கொண்டிருந்தான். இதுதான் சரியான தருணம் என்று நினைத்த ராட்சஸன் அந்தப் பிராமணனை விழுங்கச்சென்றான்.

அவனைத் தடுத்த திருடன், ‘முதலில் நான் அந்தப் பிராமணனின் பசுவையும் கன்றையும் திருடிக்கொள்கிறேன். அதன் பின்னர் நீ அந்தப் பிராமணனை விழுங்கு’ என்றான்.

‘நீ பசுவையும் கன்றையும் திருடும்போது அவை சப்தமிடும். அந்தச் சப்தத்தில் பிராமணன் விழித்துவிடுவான். அதனால், முதலில் நான் பிராமணனை விழுங்கிவிடுகிறேன். அதன் பின்னர் நீ அந்தப் பிராமணனின் பசுவையும் கன்றையும் திருடிச்செல்’ என்றான் ராட்சஸன்.

‘இல்லை. நீ பிராமணனைக் கொல்லும்போது அவன் சப்தமிடுவான். அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் விழித்துக்கொள்வார்கள். அதன் பின்னர் நான் எப்படி இந்தப் பசுவையும் கன்றையும் திருடிச் செல்லமுடியும்?’ என்று வாதிட்டான் திருடன்.

இப்படி இவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருக்கும் சப்தம்கேட்டு விழித்துக்கொண்டான் பிராமணன். அவன் முதலில் திருடனைப் பார்த்துவிட்டான். உடனே திருடன், ‘அட பிராமணா! உன்னைத் தின்ன இந்த ராட்சஸன் வந்திருக்கிறான்’ என்றான்.

பிராமணன் ராட்சஸனைப் பார்த்தான். உடனே ராட்சஸன், ‘இல்லை பிராமணா! இந்தத் திருடன் உன்னுடைய பசுவையும் கன்றையும் திருட வந்திருக்கிறான்’ என்றான்.

பிராமணன் தன்னுடைய இறைவனை நினைத்துவேண்டினான். உடனே ராட்சஸன் ஓடிவிட்டான். பிராமணன் அருகிலிருந்த ஒரு கழியினை (கம்பு) எடுத்து அந்தத் திருடனை அடித்து விரட்டினான். இறுதியில் பிராமணனின் உயிரும் தப்பியது, அவனுடைய பசுவும் கன்றும் திருடப்படவில்லை. ஆதலால், மாற்றானும் ஒருவேளை நமக்கு நன்மைசெய்யக்கூடும்’ என்றது ஆந்தை மந்திரி கொடுங்கண்ணன்.

ஆந்தை ராஜா அடுத்து மந்திரி கொள்ளிக் கண்ணனைப் பார்த்து, ‘உன்னுடைய ஆலோசனை என்ன?’ என்று கேட்டார்.

கொள்ளிக் கண்ணன், ‘ராஜா! சாமமும் பேதமும் உனக்கு உடன்பாடில்லை. நாம் பகைவரிடம் சமாதானம் செய்தால் அந்தப் பகைவருக்கு ஆணவம் ஏற்பட்டுவிடும். அதனால் நமக்குக் கேடுதான் விளையும். புத்திசாலி தருமத்தினால் பகைவனைத் தன்வசப்படுத்திக் கொள்வான். இவன் நம் எதிரிகளிடம் சண்டையிட்டு நம் பக்கம் வந்துள்ளதால், இவன் நம் எதிரிகளின் பலவீனங்களை நமக்குச் சொல்லிவிடுவான். அதனை அறிந்து நாம் நமது எதிரிகளை எளிதில் வெல்லலாம். ஆதலால், நாம் இவனை ஆதரிப்பது நல்லது. இவன் நம்மிடம் நன்றாகப் பழகிவிட்டால், அதன் பின்னர் இவன் நம்மைப் பற்றிய ரகசியங்களை வெளியே கூறமாட்டான். ஒருவேளை இவன் நம்முடைய ஆதரவினை மறந்து நமது ரகசியங்களை வெளியே கூறினால், வயிற்றிலிருந்த பாம்பும் புற்றிலிருந்த பாம்பும் நாசமடைந்ததைப் போலக் கெடுவான்’ என்றது.

மந்திரி உலூகராஜன், ‘எப்படி அந்த இரண்டு பாம்புகளும் நாசமடைந்தன?’ என்று கேட்டவுடன், மந்திரி கொள்ளிக்கண்ணன் அந்தக் கதையினைக் கூறத் தொடங்கினான்.

(தொடரும்)

சந்திரபிம்பத்தால் முயல்கள் பெற்ற நன்மை

பஞ்ச தந்திரக் கதைகள் / 3.1

downloadஒரு பெரிய காடு. அதில் சதுரதந்தன் என்ற யானை ராஜா தன்னுடைய கூட்டத்துடன் வாழ்ந்துவந்தது. அந்தக் காட்டில் மழையின் பொழிவு குறைந்தது. அதனால் அந்த யானைக் கூட்டத்துக்கு உணவும் நீரும் கிடைப்பது அரிதாகிவிட்டது.

யானைகள் அனைத்தும் ஒன்று திரண்டு சென்று யானை ராஜாவைச் சந்தித்தன. ‘ராஜா! இந்தக் காட்டில் மழையே பொழியவில்லை. காட்டிலுள்ள குளமும் வற்றிவிட்டது. எங்களுக்குக் குடிக்க நீரும் இல்லை; உண்ண உணவும் கிடைக்கவில்லை. இவ்வாறே நாட்கள் சென்றால் நாங்கள் அனைவரும் இறந்துவிடுவோம். தாங்கள்தான் எங்களைக் காப்பாற்றவேண்டும்’ என்று வேண்டின.

‘சரி! நாம் இங்கிருந்து வேறு இடத்திற்குச் செல்வோம். அதற்கு நாம் இங்கிருந்து ஐந்து நாட்கள் பயணம் செய்யவேண்டும். அவ்வாறு சென்றால் நாம் ஒரு பெரிய பாதாள கங்கையை அடைவோம். அங்கு நமக்கு வாழ்நாள் முழுவதற்கும் தேவையான குடிநீர் கிடைத்துவிடும்’ என்றது யானை ராஜா.

யானை ராஜாவின் திட்டப்படி அனைத்து யானைகளும் பாதாள கங்கையை நோக்கிப் பயணமாகின. ஐந்து நாட்கள் நடந்து, இறுதியில் பாதாள கங்கையை அடைந்தன. நீர்நிலையைக் கண்டதும் எல்லா யானைகளும் மிகுந்த சந்தோஷத்துடன் அதிலிறங்கி நீரினைப் பருகின. குளித்தன. கும்மாளமிட்டன. நீண்ட நேரம் மூழ்கி விளையாடிய பின்னர், அந்த நீர்நிலையின் மறுகரை வழியாகக் கரையேறின.

அந்த நீர்நிலையின் மறுகரையில் ஒரு முயல் கூட்டம் வாழ்ந்து வந்தது. அந்த முயல்கூட்டம் திடீரென இப்படி பெருங் கூட்டமாக யானைகளின் வருகையை எதிர்பார்க்கவில்லை. யானைகளும் கரையின் புதரில் வாழும் முயல்கூட்டத்தைக் கவனிக்கவில்லை. எனவே யானைகள் போகிறபோக்கில் அவற்றை மிதித்துச்சென்றன. பல முயல்கள் இறந்தன. பல முயல்களுக்குக் கால்கள் முறிந்தன.

அன்றே முயல்கள் தங்களுக்குள் கூடிப்பேசின. ‘இந்த யானைகள் இனி நாள்தோறும் இந்த நீர்நிலைக்கு வரும்போலத் தெரிகிறது. இனி நாம் இந்த இடத்தில் வசிப்பது ஆபத்து. நாம் வேறு இடத்திற்குச் சென்றுவிடலாமா’? என்று பேசிக்கொண்டன.

அவற்றுள் சில முயல்கள், ‘நாம் ஏன் இந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்குச் செல்லவேண்டும்? நம் முன்னோர்கள் இங்கேதான் பல ஆண்டுகள் வாழ்ந்து வந்துள்ளனர். இந்தப் பகுதியில் இந்த இடத்தில் மட்டும்தான் தண்ணீர் இருக்கிறது. நாம் இந்த இடத்தைவிட்டுப் போகக்கூடாது’ என்றும் பேசிக்கொண்டன.

வயதில் மூத்த முயல்கள், ‘யானை தொட்டாலும் பாம்பு முகர்ந்தாலும் ராஜா சிரித்தாலும் பகைவன் நமக்கு மரியாதை செய்தாலும் உயிர்ச்சேதம் வரும் என்று சாஸ்திரங்கள் சொல்லியுள்ளன. நம் உயிருடன் வாழவேண்டுமென்றால் இந்த இடத்தை விட்டுச் செல்வதுதான் ஒரேவழி’ என்றன.

சில முயல்கள், ‘யானைகள் அஞ்சும் அளவிற்கு நாம் ஏதாவது தந்திரம் செய்யவேண்டும். விஷமில்லாத பாம்பு படமெடுத்தாலும் அதனைக் கண்டு மனிதர்கள் ஓடுகிறார்களே! நம்மிடம் வலு இல்லையென்றாலும் நாம் நமது எதிர்ப்பினை ஏதாவது ஒரு வழியில் காட்டத்தான் வேண்டும்’ என்றன.
அவர்களுள் ஒரு முயல், ‘யானைகள் பயப்படும் அளவிற்கு நான் ஒரு வழிசொல்கிறேன்’ என்று கூறியது.

‘அது என்ன வழி?’ என்று கேட்ட முயல் கூட்டத்திற்கு அந்த முயல், ‘நாம் ஒரு பொய்யினை யானைகளிடம் கூறவேண்டும். நமது ராஜா விஜயதந்தன் என்பவர் சந்திர மண்டலத்தில் இருக்கிறார் என்றும் அவரது தூதுவன் இங்கு வந்துள்ளார் என்றும் பொய் கூறி ஒரு முயலை நாம் அந்த யானைகளிடம் அனுப்பிவைக்கவேண்டும். அவ்வாறு செய்தால் அந்த யானைகள் நம்மைப் பார்த்து பயப்படும்’ என்றது.

இது சரியான வழிதான் என்று அனைத்து முயல்களும் ஏற்றுக்கொண்டன. ‘யாரைத் தூதுவனாக அனுப்புவது?’ என்று யோசித்தன. திட்டத்தினைக் கூறிய முயல், நெட்டைக்காரன் என்ற முயலைப் பார்த்து, ‘நீதான் தூதுவனாக நடிக்க ஏற்றவன். ஏனென்றால், நீ புத்திசாலி. எதிரிகளிடம் சமமாக நின்று சமாதானம் பேசுவதில் வல்லவன். உனக்குச் சோம்பல் என்பதே இல்லை. நீ நம்மிடையே பொய் கூறமாட்டாய். நீ எதனையும் நன்றாக யோசித்துச் செயல்படக் கூடியவன். நீயே தூதுவனாகச் சென்றால் காரியம் நல்லபடியாக முடியும்’ என்று கூறியது.

நெட்டைக்கார முயல் தூது செல்ல சம்மதித்தது. யானைகள் வரும் வழியில் உள்ள ஒரு மேட்டின் மீது அமர்ந்துகொண்டது. அப்பொழுது அந்த யானைக்கூட்டத்தைச் சேர்ந்த யூதபூபதி என்ற யானை அந்த மேட்டின் அருகில் வந்தது.

அந்த யானைப் பார்த்த நெட்டைக்கார முயல், ‘அட முட்டாள் யானையே! யாரைக்கேட்டு இந்தப் பகுதியில் சுற்றித் திரிகிறாய்? உன்னையும் உன் கூட்டத்தாரையும் அடித்துத் துரத்துவதற்காகவே நான் என் ராஜாவின் தூதுவனாக இங்கு வந்துள்ளேன்’ என்றது.

‘யார் உன் ராஜா?’ என்றது யூதபூபதி.

அதற்கு நெட்டைக்கார முயல், ‘விஜயதந்தன். அவர்தான் எங்கள் ராஜன். அவர் சந்திரமண்டலத்தில் இருக்கிறார். நான் அவரின் கட்டளையால் இங்கு வந்துள்ளேன்’ என்றது.

‘இவன் வலிமைமிக்கவனின் தூதன்’ என்று நினைத்த யூதபூபதி, ‘உன் ராஜா உனக்கு இட்ட கட்டளை என்ன?’ என்று கேட்டது.

‘நீயும் உன் கூட்டத்தின் அனைத்து யானைகளும் எங்கள் இனத்தவர்களில் பலரைக் கொன்றுள்ளீர்கள். உங்கள் செயலை ஒருமுறை எங்கள் ராஜா மன்னித்துவிட்டார். நீங்கள் நாள்தோறும் இந்த நீர்நிலைக்கு வந்து எங்கள் கூட்டத்தாரை வஞ்சிப்பது முறையல்ல. உங்களுக்கு உங்களின் உயிர்மேல் ஆசையிருந்தால் உடனே இங்கிருந்து சென்றுவிடுங்கள். இதனை உங்களிடம் கூறிவரவே என் ராஜா என்னை இங்கு அனுப்பிவைத்தார்’ என்றது நெட்டைக்கார முயல்.

சற்று யோசித்த யூதபூபதி, ‘என்னை உன் ராஜாவிடம் அழைத்துச் செல். நான் அவரைப் பார்க்கவேண்டும்’ என்றது.

‘நீங்கள் எங்கள் ராஜாவுக்கு ஏதாவது தகவல் தெரிவிக்கவேண்டியது இருந்தால் என்னிடம் கூறுங்கள். அதனை நான் அவரிடம் சென்று கூறிவிடுகிறேன்’ என்றது முயல்.

‘தகவல் ஒன்றும் இல்லை. நான் உங்கள் ராஜாவை வணங்கிவிட்டு, என் கூட்டத்தாரை அழைத்துக்கொண்டு வேறொரு இடத்திற்குச் செல்லலாம் என்று நினைக்கிறேன்’ என்றது யூதபூபதி.

சற்று யோசித்த நெட்டைக்கார முயல், ‘இன்று இரவு நான் உன்னை என்னுடன் அழைத்துச்சென்று, உனக்கு என் ராஜாவைக் காட்டுகிறேன். ஆனால், நீ மட்டும் என்னுடன் தனியாகத்தான் வரவேண்டும்’ என்றது.

அதற்கு ஒத்துக்கொண்ட யூதபூபதி அன்று இரவு தனியாக, நெட்டைக்கார முயலிடம் வந்தது. அந்த யானையை அழைத்துக்கொண்டு சென்ற முயல், ஒரு குட்டைக்கு அருகில் சென்று, ‘இன்று எங்கள் ராஜா இந்தக் குட்டைக்கு வந்துள்ளார். இங்கு அவர் ஓய்வெடுக்கிறார். ஆதலால், நீ அவரைத் தொந்தரவு செய்யாமல் அவரை வணங்கிவிட்டுச் சென்றுவிடு’ என்றது.

யானையும் அவ்வாறே குட்டைநீரில் தெரிந்த சந்திரனின் பிம்பத்தினைப் பார்த்தது. அதுதான் முயல்களின் ராஜா என்று நம்பி, அவரை வணங்கியது. மறுநாள் தன் கூட்டத்தினை அழைத்துக்கொண்டு வேறொரு இடத்திற்குச் சென்றது.

‘வயலுக்கு அடுத்ததாக உள்ள மரத்தினடியில் இருக்கும் புல்லை உழவன் தன் ஏரால் உழுது அதனை அழிப்பதில்லை. அதுபோல விலகியிருந்து பெரியவர்களைச் சார்ந்திருந்தால் ஒருபோதும் கெடுதல் வராது. தீயவர்களின் கூட்டுறவு எப்போதும் தீமையையே தரும். அது எப்படியென்றல், முயலும் ஆந்தையும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு தங்களுக்குத் தீர்வுகூற பூனையிடம் சென்று தங்களின் உயிரை இழந்ததைப் போலகிவிடும்’ என்றது காகம்.

‘எப்படி முயலையும் ஆந்தையையும் பூனை கொன்றது?’ என்று கேட்ட பறவைகளுக்குக் காகம் அந்தக் கதையினைக் கூறத்தொடங்கியது.

3.2. முயலையும் ஆந்தையையும் கொன்ற பூனை

நெடுநாட்களுக்கு முன்பாக நானும் கபிஞ்சலன் என்ற ஆந்தையும் ஒரு முதிய மரத்தில் தனித்தனிப் பொந்துகளில் குடியிருந்துவந்தோம். எனக்கு அவன் நல்ல நண்பன். ஒருநாள் இரவில் இரை தேடிச்சென்ற கபிஞ்சலன் தன் பொந்துக்குத் திரும்பவில்லை. நான் அவனைப் பல இடங்களில் தேடினேன். அவனைக் காணவில்லை.

மூன்று நாட்களுக்குப் பின்னர் அந்த மரத்துக்கு ஒரு முயல் வந்தது. அது கபிஞ்சலனின் பொந்துக்குள் சென்று அமர்ந்துகொண்டது.

நான் அந்த முயலிடம், ‘இது என்னுடைய நண்பன் வசிக்கும் பொந்து. அவன் வெளியில் சென்றுள்ளான். அவன் வந்தால் என்னைக் கொன்றுவிடுவான்!’ என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன். அந்த முயல் பயப்படுவதாகத் தெரியவில்லை. ஆந்தையின் அந்தப் பொந்தினைத் தன் பொந்துபோலவே பயன்படுத்தத் தொடங்கியது.

ஒருநாள் மாலையில் கபிஞ்சலன் வந்துவிட்டான். தன்னுடைய பொந்தில் ஒரு முயல் இருப்பதனைப் பார்த்துவிட்டு கோபப்பட்டான். ‘என் வீட்டில் நீ என்ன செய்கிறாய்?’ என்று முயலிடம் கோபத்துடன் கேட்டான். முயல் அலட்சியமாக, ‘இது உன் வீடா? இது என் வீடு’ என்று வாதிட்டது.

ஆந்தையாகிய கபிஞ்சலன் பலவாறு பேசிப் பார்த்தான். பயனில்லை.
‘குளம், கிணறு, கோயில், சத்திரம் இவற்றின் சொந்தம் அவற்றை விட்டு நீங்கின பின்னர் இருக்காது. பறவைகளில் எது வலிமையுள்ளதோ அதுதான் தான் விரும்பியதை அடையும். இப்படித் தரும நியாயம் இருப்பதால் இது என் வீடுதான்’ என்றது முயல்.

‘தரும நியாயம் பற்றி நீ பேசுவதால், நாம் இருவரும் சாஸ்திரிகளிடம் சென்று முறையிடுவோம். அவர் கூறும் தீர்ப்புக்கு இருவரும் கட்டுப்படுவோம்’ என்றது ஆந்தை. அதற்கு ஒப்புக்கொண்ட முயல், ஆந்தையுடன் சாஸ்திரிகளைத் தேடிச் சென்றது. இவற்றின் பின்னால் நானும் சென்றேன்.
போகும் வழியில் நடுவே தென்பட்ட ஒரு பூனை, முயல் மற்றும் ஆந்தையின் முகபாவத்தைப் பார்த்ததுமே ‘இவர்கள் தீர்ப்புகேட்கத்தான் போகிறார்கள்’ என்று தெரிந்துகொண்டது.

அது இவர்கள் செல்லும் வழியிலேயே ஒரு குறுக்கு வழியில் முன்னேறிச் சென்று ஓர் ஆற்றங்கரையில் அமர்ந்துகொண்டது. பின்னர் தனக்குத்தானே சப்தமாகப் பேசத் தொடங்கியது.

‘இந்த உலகத்தில் உண்டாகின்ற இன்பம் கணநேரத்தில் அழிந்துவிடுகிறது. அதனால் தருமத்தை விட வேறு கதியில்லை. அறத்தைவிட்டு எவன் நாளைக் கழித்துவருகிறானோ அவன் மரப்பொம்மைக்குச் சமமானவன். அவனைப் பிணம் என்றே கருதலாம். எப்படித் தயிரின் சாரம் நெய்யோ, எள்ளின் சாரம் எண்ணெயோ அதுபோலத்தான் இந்த உலகத்தில் பிழைத்திருப்பதன் சாரம் தருமம். தருமத்தைப் புறக்கணித்து உண்டுவாழ்பவன் இந்தப் பூமிக்குச் சுமையாக இருக்கிறான். ஆகையால் மக்களே! தருமம் பல இடையூறுகளோடு தருமம் கூடிக்கொண்டே இருக்கிறது. உங்களுக்கு நான் தருமத்தைக் கூறுகிறேன் கேளுங்கள்! பிறருக்கு உதவி செய்வதைப் போன்ற புண்ணியம் வேறு எதுவும் இல்லை. பிறருக்குத் தீங்கு செய்வதைப் போன்ற பாவம் வேறு எதுவும் இல்லை. தனக்குத் துன்பம் தருவது பிறருக்கும் துன்பத்தையே தரும் என்பதனை உணருங்கள். இப்படிப்பட்ட பல தரும ரகசியங்களைக் கேட்டு உள்ளத்தில் இருத்திக் கொள்ளுங்கள்’ என்று தரும அறிவுரைகளாக பொழிந்து தள்ளியது.

இப்படி சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்த அந்தத் தந்திரப் பூனையை முயலும் ஆந்தையும் பார்த்தன.

உடனே முயல் ஆந்தையிடம், ‘ஆந்தையே! இந்தப் பூனை தருமத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறது. எனவே இது சாஸ்திரியாகத்தான் இருக்கவேண்டும். இதனிடம் சென்று நம் வழக்கினைக் கூறி தீர்ப்புகேட்போம்’ என்றது.

‘இவனிடமா? இவன் நம் இருவருக்கும் பகைவன் என்பதை மறந்துவிட்டாயா?’ என்றது ஆந்தை.

‘பகைவன்தான்! இருந்தாலும், இவன் சாஸ்திரிபோலத் தெரிகிறான். இவனிடம் நாம் நெருங்காமல் தூரத்திலிருந்தே நம் வழக்கினைக் கூறுவோம்’ என்றது முயல்.

பூனைக்கு சற்றுத் தூரமாக நின்றுகொண்ட முயலும் ஆந்தையும், ‘சாஸ்திரியாரே! தாங்கள் தான் எங்களின் வழக்கினைக் கேட்டு, தருமம் தவறாது விசாரித்து, நல்ல தீர்ப்பினைக் கூறவேண்டும். பொய் கூறுபவனைக் கொல்லவேண்டும்!’ என்றன.

உடனே பூனை நல்லவனைப் போல நடித்து, ‘கொலை என்ற வார்த்தையை என்னிடம் சொல்லாதீர்கள்! கொலைதான் நரகத்திற்குக் காரணமாகிறது. நான் அதனைவிட்டு அறத்தைப் பின்பற்றி வருகிறேன். பிற மிருகங்களைக் கொன்று வாழும் புலி முதலான கொடிய விலங்குகளைக் கொல்லுகின்றவர்களும் நரகத்திற்கே செல்கின்றனர் என்று சாதுக்கள் கூறியுள்ளனர்’ என்று நயமாகப் பேசியது.

ஆனாலும் பூனையின் பேச்சில் முயலுக்கும் ஆந்தைக்கும் நம்பிக்கை ஏற்படவில்லை. இதனைப் புரிந்துகொண்ட பூனை, ‘மற்றவர்களுக்குக் கொலையினால் நரகம் கிடைக்கும் என்பதில் வியப்பில்லை. யாக தருமத்திற்காகப் பசுவைக் கொல்லுகிறவர்கள் வேதத்தின் உட்பொருளை அறியாதவர்களே! அப்பொழுது ஏழு ஆண்டுகளின் நெல்லைக்கொண்டு ஓமம் செய்ய வேண்டுமென்றும் சொல்லப்பட்டிருக்கிறது. பசுக்களைக் கொன்று மரங்களை வெட்டி ஓமம் செய்து சுவர்க்கம் கிடைக்கும் என்றால் ஏன் நரகத்திற்குப் போகிறார்கள்? ஆதலால், நான் கொலை புரிவதில்லை. நான் நரகத்திற்குச் செல்ல விரும்பவில்லை. நான் உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யமாட்டேன். என்னிடம் வாருங்கள்!. என் அருகில் வாருங்கள்!’ என்று அன்பாக அழைத்தது.

முயலும் ஆந்தையும் பூனையை நெருங்கத் தயங்கின. இதனை உணர்ந்துகொண்ட பூனை, ‘எனக்கோ வயதாகிவிட்டது. எனக்குச் சரியாகக் காதுகள் கேட்பதில்லை. ஆதலால், என் அருகில் வந்து உங்கள் வழக்கு பற்றிய விவரங்களைக் கூறுங்கள். நான் நடுநிலையோடு தீர்ப்பு கூறுகிறேன். நீங்கள் என் காதுகளுக்கு அருகில் வந்து நின்று உங்கள் வாதங்களைச் சொல்லுங்கள்!’ என்றது.

பூனையின் வார்த்தைகளை நம்பிய முயலும் ஆந்தையும் அதன் காதின் அருகேசென்றன. உடனே, அவற்றைத் தன் கைகளுக்கு ஒன்றாக அந்தப் பூனை பிடித்து, இரண்டையும் நெறித்துக் கொன்றது.

‘தீயோரைச் சேர்ந்தால் தீமையே வந்துசேரும். எது செய்யத்தக்கதோ அதை மட்டுமே செய்யவேண்டும்’ என்று காகம் கூறியது.

காகத்தின் கருத்தினை ஏற்றுக்கொண்ட பறவைகள், தமக்கான ராஜாவைத் தேர்ந்தெடுக்கும் வேலையினை நாம் அடுத்தமுறை இங்கே கூடிச் செய்வோம் என்று கூறிக் கலைந்துசென்றன.

பறவைகளின் ராஜாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டும் காகத்தின் கருத்தால் பறவைகளுக்கு ராஜாவாக முடிசூட்டிக்கொள்ள முடியாமல்போன அந்த ஆந்தை, தன் மனைவியிடம் நடந்தவற்றை வருத்தத்தோடு கூறியது.
மனைவியாகிய ஆந்தை தன் கணவனிடம் ‘சரி, இப்போதுதான் பறவைகள் அனைத்தும் கலைந்து சென்றுவிட்டனவே. இப்போது காகம் மட்டும் தனியாகத்தானே இருக்கும். நீங்கள் சென்று அதனிடம் சண்டையிடுங்கள்’ என்றது.

உடனே ஆந்தை தன்னுடைய மனைவியையும் அழைத்துக்கொண்டு அந்தக் காகத்திடம் சென்றது. ‘அட தீயவனே! நான் ராஜாவாக பதவி ஏற்பதனை உன் வார்த்தைகளால் கெடுத்துவிட்டாயே! இனிமேல் உன் குலத்திற்கும் என் குலத்திற்கும் ஜென்ம ஜென்மத்திற்கும் பகையே இருக்கும்’ என்றது. பின்னர், தன் கூட்டிற்குத் திரும்பிவந்தது.

‘தவளை தன் வாயால் கெடும் என்பதுபோல, காகம் தன் வாயாலேயே தன் குலத்திற்குத் தீராப் பகையினைத் தேடிக்கொண்டது. புத்திசாலியாக இருப்பவன் சபையில் பிறரைக் குறை கூறிப்பேசுவது தவறு என்பதனை உணர்ந்துகொண்டது. ‘எதைச் செய்யவேண்டுமென்றாலும் தன் குலத்தாரோடு கூடிப் பேசிச் செய்யவேண்டும். அவ்வாறு செய்யாததால்தான் என் குலத்திற்கே தீமை தேடித் தந்துவிட்டேன்’ என்று வருந்தியது. பின்னர் அது தன் கூட்டிற்குத் திரும்பியது. அந்த நாள் முதல் ஆந்தை இனத்திற்கும் காக இனத்திற்கும் தீராப் பகை மூண்டு, தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது’ என்றது சிரஞ்சீவி.

‘இந்தப் பகையினை முடிவுக்குக் கொண்டுவர நாம் என்ன செய்யலாம்?’ என்று காகராஜா சிரஞ்சீவியிடம் கேட்டது.

அதற்கு சிரஞ்சீவி, ‘பிராமணன் வைத்திருந்த ஆட்டினைச் சிலர் எவ்வாறு வஞ்சகமாகக் கவர்ந்து சென்றார்களோ, அதுபோலவே நாமும் அந்த ஆந்தைக் கூட்டத்தை வஞ்சனை செய்து கொல்லவேண்டும்’ என்றது.

‘ பிராமணனின் ஆட்டை யார், எப்படி வஞ்சகமாகக் கவர்ந்தது?’ என்று கேட்ட காகராஜாவுக்கு சிரஞ்சீவி அந்தக் கதையினைக் கூறத் தொடங்கியது.

0