ஆக்கிரமிப்புகளும் தயாரிப்புகளும்

இந்தியா பாகிஸ்தான் போர்கள் / அத்தியாயம் 5

12241622874161946 அக்டோபர் 30 ஆம் தேதிக்கும் நவம்பர் 7 ஆம் தேதிக்கும் இடையே மிகப்பெரிய இனப்படுகொலைகள் பீகாரில் நடந்தன. இம்முறை மிகுதியாக பாதிக்கப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில்  5,000 பேர் கொல்லப்பட்டார்கள் என்று ஓர்  அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஸ்டேட்ஸ்மென் பத்திரிகை 10,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றது. கொல்லப்பட்டவர்களில் முஸ்லிம் பெண்களும் குழந்தைகளும் அடங்குவார்கள். ஜின்னா பதறினார். பிரிவினைக்கு முழு அழுத்தம் கொடுத்தார். முக்கியமான விஷயம் என்னவென்றால் கல்கத்தா, நவகாளி படுகொலைகளுக்குப் பழி தீர்ப்பதற்காக பீகார் இனப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன என்ற கருத்து பரவியதுதான்.

இந்தியாவைப் பிரித்து தனி பாகிஸ்தான் கேட்டவர்கள் முஸ்லிம் லீகைச் சேர்ந்தவர்கள். பிரிவினை வேண்டாம் என்றவை  மற்ற பெரிய கட்சிகளான காங்கிரஸும் இந்து மகாசபையும். 1946 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாணப் பொதுத் தேர்தல் அறிக்கையில் இரண்டு கட்சிகளும் தங்கள் தேசப்பிரிவினை எதிர்ப்பைத் தெளிவாகக் குறிப்பிட்டன. முஸ்லிம் லீகைத் தவிர மற்ற முஸ்லிம் அமைப்புகளும் வெளிப்படையாகப் பிரிவினையை எதிர்த்தன. முஸ்லிம் லீக் தனி பாகிஸ்தான் என்ற லட்சியத்தை அடைய  பஞ்சாப், வங்காளம் ஆகிய மாகாணங்களைப் பிரிப்பதையே நம்பி இருந்தது. ஏனென்றால் மேற்கு பஞ்சாபிலும், கிழக்கு வங்காளத்திலும் முஸ்லிம்கள் மிகுதியாக உள்ளார்கள். பீகாரில் மூஸ்லிம்கள் சுமார் 10 சதவீதம் தான். அங்கே பெரும்பான்மையினராக இந்துக்கள் இருக்கிறார்கள். அதனால் சிறுபான்மை மக்களாக இருக்கும் முஸ்லிம்களை அவர்கள் மிரட்டிக் கொல்ல ஆரம்பித்தார்கள் என்று நம்புவது எளிது.

பீகாரில் அப்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. பிரிவினையை விரும்பாத காங்கிரஸ் சுதந்தரத்துக்குப் பிறகு மதச்சார்பற்ற குடியரசை நிறுவுவதைக் கொள்கையாகக் கொண்டிருந்தது. அப்போது பீகாரில் நிறைய முஸ்லிம் போலீஸ் அதிகாரிகள் பணியில் இருந்தார்கள். இந்நிலையில் அங்கு என்னதான் நடந்தது என்பது எல்லோரும் அறிந்துகொள்ள நினைக்கும் ஒன்று. கலவரங்கள் நடந்த இடங்களில் நேரடியாகப் பார்த்த சாட்சிகள் கொடுக்கும் தகவல்கள்தாம் உண்மையை அறிந்து கொள்ள உதவும்.

ஒரு வருடத்துக்கு முன்பாக எந்த வன்முறையையும் சந்திக்காத முங்கெர் கற்பனைக்கு எட்டாத வன்முறைகளை 1946 இல் சந்தித்தது. அகில இந்திய அளவில் இனக்கலவரங்கள் பல இடங்களில் நடைபெறுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். உள்ளூரில் அது எப்படி தொடங்கி வளர்ந்தது என்பதை நாம் இங்கே கண்டு கொள்ளலாம். முங்கெர் எப்போதுமே முஸ்லிம் லீக் துடிப்புடன் செயல்படும் மாவட்டம். இந்தக் கலவரங்கள் நடைபெறுவதற்கு முன்னதாக சாதகமான சூழ்நிலை ஏற்படும்வரை மூஸ்லிம் லீக் காத்திருந்ததாகவே தெரிகிறது. மாவட்ட நிர்வாகத்தில் ஒரு கணிசமான அளவு அதிகாரிகள் இஸ்லாமியர்களாகவும், முஸ்லிம் லீகின் கொள்கைகளை ஆதரிப்பவர்களாகவும் இருந்த காலகட்டத்தை  அது சரியாகப் பயன்படுத்த நினைத்தது. இந்துக்களின் விழாக்களில் இடையூறு செய்வதை வாடிக்கையாக கொண்டது முஸ்லிம் லீக். இதற்கு உள்ளூர் அதிகாரிகள் ஆதரவாக இருந்தார்கள். பீகாரை ஆளும் காங்கிரஸ் அரசு இதைக் கண்டுகொள்ளாமல் இருந்தது.

கல்கத்தா, நவகாளி போன்று  பீகாரிலும் முஸ்லிம் லீக் பாகிஸ்தானை எப்படியாவது அடைந்து விடும் நோக்கில் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டது. இருந்தபோதும் இடைக்கால அரசாங்கத்துக்குத் தலைமை வகித்த நேரு, ‘வன்முறையில் ஈடுபடும் இந்துக்கள்மீது விமான குண்டு வீச்சு நடத்தக்கூடத் தயங்கமாட்டேன்’ என்றார்.

இந்தியப் பிரிவினையை எதிர்த்த காங்கிரஸின் கொள்கைக்கு எதிராக ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதே அவருக்கு மிக முக்கியமானதாக இருந்திருக்கவேண்டும். கல்கத்தா, நவகாளி படுகொலைகளுக்குப் பிறகு பெரிய அளவில் கலவரம் நடைபெறக்கூடாது என்பதே அனைவரின் எண்ணம். நேருவும் விடுதலைக்கு முன்பு எத்தகைய கலவரத்தையும்  இந்தியாவில் நடக்க அனுமதிக்கக் கூடாது என்றே நினைத்திருப்பார். அந்தச் சமயத்தில் பீகாரில் இந்துக்கள், இஸ்லாமியர்களை பழி தீர்க்கிறார்கள் என்ற செய்தியாலும் அவர் நேரடியாக பீகாரில்  கண்டவற்றாலும் எரிச்சல் அடைந்திருக்கவேண்டும். பெரும்பான்மை மக்களாக  இந்துக்கள் இருக்கும் இடத்தில்  முஸ்லிம்களுக்கு பாதுகாப்பில்லை என்ற ஜின்னா போன்றவர்களின் குற்றச்சாட்டினால் அவர்  மன நெருக்கடிக்கு ஆளானார். அதைத்தான் முஸ்லிம் லீக் விரும்பியது. படிப்படியாக ஜின்னா தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதில் வெற்றி பெற்று வந்தார்.

0

1947 ஆம் ஆண்டு இந்தியாவின் கடைசி பிரிட்டிஷ் வைஸ்ராயாகப் பதவி ஏற்றார் மவுண்ட்பேட்டன். அவர் அறிவித்த ஜூன் 3 ஆம் தேதி திட்டத்தின்படி அல்லது மவுண்ட் பேட்டன் திட்டத்தின்படி பிரிட்டிஷ் இந்தியா என்பது இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு டொமினியன்களாகப்   பிரிக்கப்பட்டன. 1947 ஜூன் மாதம் 3 ஆம் தேதி பத்திரிகையாளர்கள் கூட்டத்தில்  மவுண்ட்பேட்டன் அந்தத் திட்டத்தை அறிவித்தார். அதன் முக்கிய அம்சம் பஞ்சாப், வங்காள மாகாணங்களின் பிரிவினை பற்றியது. பஞ்சாப், வங்காள சட்டசபைகளில் இந்து, சீக்கிய, முஸ்லிம்  உறுப்பினர்கள்  அனைவரும் பிரிவினை வேண்டுமா, வேண்டாமா என முடிவு செய்ய வாக்களிப்பார்கள்.பெரும்பான்மை உறுப்பினர்கள் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்தால் இரண்டு மாகாணங்களும் பிரிக்கப்படும். சிந்து மாகாணம் எந்த ப்க்கம் இணையவேண்டும் என்பதை அதுவே முடிவு செய்து கொள்ளும். வடமேற்கு எல்லை மாகாணமும், அசாமின் சில்ஹெத் மாவட்டமும்  இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டுமா அல்லது பாகிஸ்தானுடன் இணைக்கப்பட வேண்டுமா என்பதை  பொது வாக்கெடுப்பின் மூலம்  முடிவு செய்து கொள்ளலாம். 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா சுதந்தரம் பெறும்; பிரிவினை இருக்கும் பட்சத்தில் பிரிவினை கமிஷன் ஒன்று அமைக்கப்படும் என்று அந்தத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜூன் 2 ஆம் தேதியே இந்தியாவின் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் மவுண்ட்பேட்டன் திட்டத்தை ஏற்றுக்கொண்டார்கள். திட்டத்தில் ஐநூறுக்கும் மேலான சமஸ்தானங்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் ஜூன் 3 ஆம் தேதி மவுண்ட்பேட்டன் சமஸ்தானங்கள் விடுதலை பெறவுள்ள இரண்டு டொமினியன்களில் ஏதாவது ஒன்றுடன் இணைந்துவிடும்படி அறிவுரை கூறினார்.

மவுண்ட்பேட்டனுக்கு முன்பு  வைஸ்ராயாக பதவி வகித்த வேவல்  இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கான எல்லைக் கோட்டை ஓரளவு வகுத்திருந்தார். புதிதாகப் பிறக்க இருந்த  இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் உரிய பகுதிகளைப் பிரித்துக் கொடுப்பதற்காக பிரிட்டிஷ் அரசு சர். சிரில் ராட்கிளிஃபை நியமித்தது. அவர் இரண்டு எல்லை கமிஷன்களுக்குத் தலைமை வகிப்பார். ஒன்று வங்காளத்தையும், மற்றொன்று பஞ்சாபையும் பிரிக்கும்.

இஸ்லாமியர்கள் மிகுதியாக  இருக்கும் பகுதி பாகிஸ்தானுக்கும், இஸ்லாமியர் அல்லாதவர்கள் மிகுதியாக இருக்கும் பகுதி இந்தியாவுக்கும் கொடுக்கப்படும். இரண்டு கமிஷன்களிலும் நான்கு பிரதிநிதிகள் இருப்பார்கள். இருவர் இந்திய தேசிய காங்கிரஸைச் சேர்ந்தவர்களாகவும், இருவர் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள். இரண்டு கட்சிகளுக்குமிடையே இருக்கும் பகையைக் கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தை முறியும் நிலை ஏற்பட்டால் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ராட்கிளிஃப் கையில் கொடுக்கப்படும்.

பிரிவினைக்கு முன்னால் பிரிட்டிஷ் அரசின் கீழ் இருந்த இந்தியாவின் மொத்தப் பரப்பளவு சுமார் 15 லட்சத்து 67 ஆயிரம் சதுர மைல்கள். 1941 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 38 கோடியே 90 லட்சம். தேச விடுதலையின் போது இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு தனி டொமினியன்கள் ஆயின. மதச்சார்பற்ற இந்தியா ‘யூனியன் ஆஃப் இந்தியா’ என்றும்; முஸ்லிம்களின் பாகிஸ்தான் ‘டொமினியன் ஆஃப் பாகிஸ்தான்’ என்றும் அழைக்கப்பட்டன. இந்த இரண்டையும் பிரிக்கும் எல்லைக்கோடுதான் ராட்கிளிப் கோடு. அதை உருவாக்கிய ராட்கிளிப்பின் பெயரால் அது அழைக்கப்பட்டது.

தேசப் பிரிவினையின் அடிப்படை இதுதான். பிரிட்டிஷ் அரசின் கீழ் இருந்த வடமாகாணங்களில் முஸ்லிம்கள் மிகுதியாக வாழும் மாகாணங்கள் தாம் தனி பாகிஸ்தான் என்ற கட்டடத்தின் அஸ்திவாரம். அதன்படி மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 91.8% இருக்கும் பலுசிஸ்தான் மாகாணமும்,முஸ்லிம்கள் 72.2% இருக்கும் சிந்து மாகாணமும் முழுமையாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டன.முஸ்லிம்களின் மக்கள் தொகை மிக அதிகமாக இல்லாத மாகாணங்களான வங்காளமும் பஞ்சாபும் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் பிரித்துக் கொடுக்கப்படவேண்டும்.

வங்காளத்தின் மக்கள்தொகையில் முஸ்லிம்கள் 54.4%; பஞ்சாபின் மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 55.7%. வட மேற்கு எல்லை மாகாணம் தேச விடுதலைக்குப் பிறகு பொது வாக்கெடுப்பில் கிடைத்த முடிவின்படி பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது. பின்னாளில் அதன் பெயர் கைபர் பக்துன்குவா என்று மாற்றப்பட்டது. அசாம் மாகாணத்தின் சில்ஹெத் மாவட்டமும் பொது வாக்கெடுப்புக்குப் பிறகு பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது.

ராட்கிளிப் கோடு 1947 ஆகஸ்ட் 17 ஆம் தேதி வெளியிடப்பட்டது .அது ஒரு லட்சத்து எழுபத்து ஐந்தாயிரம் சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட 8.8 கோடி மக்கள் வசிக்கும் பகுதிகளைப் பிரித்தது. இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டபடி பிரிக்கப்பட்ட பகுதிகளில் ங்பஞ்சாப்,வங்காளம்சி இருந்து இந்தியா பக்கம் இருக்கும் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தான் பகுதியில் இருக்கும் இஸ்லாமியர் அல்லாதவர்கள் இந்தியாவுக்கும் இடம் பெயர வேண்டும்.மொத்தம் ஒரு கோடியே 45 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்தார்கள்.1951ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சுமார் 72 லட்சத்து 27 ஆயிரம் முஸ்லிம்கள் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குக் குடி பெயர்ந்தார்கள் என்று பாகிஸ்தான் தெரிவித்தது. அதே போல 1951 ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி இந்துக்களையும், சீக்கியர்களையும் சேர்த்து பார்க்கும்போது சுமார் 72 லட்சத்து 96 ஆயிரம் பேர் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் விரும்பி இந்த இடப்பெயர்ச்சியை ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மையைச் சொன்னால் அவர்கள் துரத்தியடிக்கப்பட்டார்கள். பலர் உயிருக்குப் பயந்து ஓடி வந்தார்கள். இது இரு தரப்பு மக்களுக்கும் பொருந்தும்.

இந்தியப் பிரிவினையில் இறந்தவர்கள் 4 லட்சம் பேர் என்று வைத்துக்கொண்டால், அவர்களுள் 2 லட்சம் பேர் முஸ்லிம்கள்; இந்துக்கள்,சீக்கியர்கள், மற்ற மதத்தவர்கள் எல்லோரையும் சேர்த்துக் கணக்கிட்டால் அவர்களின் எண்ணிக்கை 2 லட்சங்கள். சுமார் 75 ஆயிரம் பெண்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார்கள்.

பிரிவினை பூகம்பம் பஞ்சாபை மிக மோசமாகப் பாதித்து உலுக்கியெடுத்தது. இடம் பெயர்ந்த ஒரு கோடியே 45 லட்சம் பேரில் சுமார் ஒரு கோடி பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள்.பிரிவினை வன்முறைகளின் போது உயிர் இழந்தவர்களில் மிகுதியானவர்களும் அவர்கள்தாம்.

பிரிட்டிஷ் ஆட்சியின்போது இருந்த பஞ்சாப் என்பது 29 மாவட்டங்களை உள்ளடக்கியது. அது டெல்லி, ஜலந்தர், லாகூர், ராவல்பிண்டி, முல்தான் ஆகிய ஐந்து பிரிவுகளையும், 43 சமஸ்தானங்களையும் கொண்டது. அவற்றுள் 16 சமஸ்தானங்கள் பெரியவை. சமஸ்தானங்களையும் சேர்த்து பஞ்சாப் மாகாணத்தின் மொத்தப் பரப்பளவு சுமார் ஒரு லட்சத்து 34 ஆயிரம் சதுர மைல்கள்.

தேச பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுக்குக் கிடைத்த மேற்கு பஞ்சாப் மாகாணம் சுமார் 62 ஆயிரம் சதுர மைல்கள் பரப்பளவு கொண்டது. பின்னாளில் சுமார் 17ஆயிரம் சதுர மைல் பரப்பளவு கொண்ட பகவல்பூர் சமஸ்தானம் அதனோடு இணைக்கப்பட்டது. அப்போது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தோடு இஸ்லாமாபாத் தலைநகர் பகுதி சேர்ந்திருந்தது. 1955 இல் அது பஞ்சாப் மாகாணத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. பிரிவினையின் போது 16 மாவட்டங்கள் மேற்கு பஞ்சாபுக்குக் கொடுக்கப்பட்டன. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பஞ்சாபின் எஞ்சிய பகுதி கிழக்கு பஞ்சாபாக இந்தியாவுக்குக் கிடைத்தது. அதற்கு 13 மாவட்டங்களும், ஐந்து சமஸ்தானங்களும் கிடைத்தன.

(தொடரும்)

பிரிவினைக்கு முன்பு

mahatma gandhi_0_1பாகிஸ்தான் அரசியல் வரலாறு / அத்தியாயம் 3

17 அக்டோபர் 1946 தேதியிடப்பட்ட மனு ஒன்று பேகம்கன்ஜ் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டது.

திருமதி.பாரமாலா ராய்(மறைந்த மோனோ மோகன் ராயின் மனைவி)
கோவிந்தாபூர்,பேகம்கன்ஜ் காவல் நிலையம்,
நவகாளி மாவட்டம்.

‘கடந்த திங்கள் கிழமை அன்று (14-10–1946) சில மனிதர்கள் எங்கள் வீட்டுக்குள் நுழைந்தார்கள். அவர்களை என்னால் அடையாளம் காட்டமுடியும். ஆனால் அவர்களுடைய பெயர்கள் எனக்குத் தெரியாது. ஒருவனின் பெயர் மூசா என்று அறிந்தேன். அவர்கள் அனைவரும் ஆயுதம் வைத்திருந்தார்கள். அவர்கள் வாசலுக்கு வந்தவுடன் நானும் மற்றவர்களும் நடைக்கதவை மூடிவிட்டோம். அவர்கள் கதவுகளை உடைக்க முற்படும்போது நாங்கள் வீட்டின் கூரை மேல் ஏறிவிட்டோம். மேலே இருந்து பார்க்கும்போது சுற்றியிருந்த அறைகளுக்கு அவர்கள் தீ வைப்பது தெரிந்தது. அவை எரிந்து கொண்டிருந்தன. சில ரவுடிகள் நடையின் கூரையில் இருந்த எங்களில் சிலரை இழுத்துக் கீழே போட்டார்கள். நாங்கள் வீட்டின் கூரைக்கு ஏறிக் கொண்டிருந்தபோது மேலிருந்து எங்கள் வீட்டு ஆண்களைப் பார்த்தோம். அவர்கள் கட்டி வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் உதைக்கப்பட்டார்கள்; கத்தியால் குத்தப்பட்டார்கள்; ஈட்டியால் தாக்கப்பட்டார்கள்.

கீழே இருந்த பெண்களும் குழந்தைகளும் குளிக்கும் இடத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்கள். அவர்கள் ஏற்கெனவே என் கணவரின் மூத்த சகோதரரை பலமாகத் தாக்கியிருந்தார்கள். தலையில் அடிபட்ட அவர் எங்களுடன்தான் இருந்தார். அவர் மனைவி அவருக்கு முதலுதவி செய்ய முயன்று கொண்டிருந்தாள். குண்டர்கள் அவரைக் கீழே இழுத்தார்கள். அவரைத் தூக்கிச் சென்று துர்கா பூஜைக்காகப் போடப்பட்டிருந்த சிறிய அலங்கார பந்தலுக்குக் கீழே எரிந்து கொண்டிருந்த தீயில் உயிருடன் வீசினார்கள். இன்னும் பலரை அவ்வாறு கொன்றார்கள். எங்களோடு இருந்த என் கணவரின் தம்பி ரமணி மோகனை அழைத்தார்கள். அவரை லத்தியால் அடித்து நெருப்புக்குள் வீசினார்கள். இப்போது குளிக்கும் இடத்தின் அருகில் படிகளின் மேல் இருந்த எங்களுக்கு துர்கா மண்டபத்தின் முன்பகுதி சரியாகத் தெரியவில்லை. ஒரு பெரிய கும்பல் அங்கு இருந்தது. ஓரளவு எங்களால் அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்க முடிந்தது. எங்கள் குடும்பத்தினர் பலரும் தீக்குள் எறியப்பட்டார்கள். தீக்காயங்களுடன் வெளியே வந்தவர்களைக் குண்டர்கள் மீண்டும் தீக்குள் தள்ளினார்கள்.

அண்டை வீட்டுக்காரர் பரத் பவுமிக் இழுத்து வரப்பட்டு துர்கா மண்டபத்தின் முன்னே கொலை செய்யப்பட்டார். இந்தப் பேய்த்தனமான அட்டூழியங்களைப் பார்த்து சில பெண்கள் மயக்கமுற்று விழுந்தார்கள். அதன் காரணமாக நாங்கள் பவுமிக்கின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப் பட்டோம். இதனிடையே எங்கள் நகைகளையும் அணிகலன்களையும் அவர்கள் பறித்துக்கொண்டார்கள். அப்போது எங்களுடைய மூக்கும் காதுகளும் காயமடைந்தன. ஆடைகளும் கிழித்தெறியப் பட்டன. ஒரு பெண் நிர்வாணமாக்கப்பட்டாள். பட்டரிபாரியைச் சேர்ந்தவர்கள் எங்களை பவுமிக்கின் தோட்டத்தில் தங்க வைத்தார்கள். அதன்பின் நாங்கள் பட்டரிபாரியில் தங்க வைக்கப்பட்டோம். நேற்று நண்பகல் நாங்கள் போலீஸாரால் மீட்கப்பட்டு, நவகாளி நகரத்துக்கு அழைத்து வரப்பட்டோம். மற்ற பெண்களின் நிலை பற்றி எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் 17 பேர் பட்டரிபாரியில் இருந்து மீட்கப்பட்டோம். இதில் கொடுக்கப்பட்ட அனைத்தும் என்னிடம் மீண்டும் படித்துக் காட்டப்பட்டது. அதை நான் நன்றாக புரிந்து கொண்ட பிறகு கையொப்பமிட்டேன்.

உண்மையுள்ள,

திருமதி பாரமாலா ராய்
நவகாளி
17-10-1946

இது போன்ற எத்தனையோ புகார்கள் காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்டன. மதமாற்றம் என்பது மிகவும் கொடிய தண்டனை. அதை பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒருவர் மதம் மாற மறுக்கிறார். அவர் புதல்வர்களும் மதம் மாறமுடியாது என்கிறார்கள். உடனே மிரட்டிக் கொண்டிருக்கும் கும்பல் அவர் மகன்களை ஒவ்வொருவராக கழுத்தை அறுத்துக் கொல்கிறது. இவ்வாறு வன்முறையாளர்கள் காட்டுமிராண்டித்தனத்தின் உச்சத்துக்கே சென்றார்கள்.

நவகாளி காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட மற்றொரு புகார்:

“நான் இந்த இடத்துக்கு வருவதற்கு 15 நாள்களுக்கு முன்னதாக இது நடந்தது. ஒரு நாள் இரவு முஸ்லிம் வன்முறைக் கும்பல் ஒன்று என் வீட்டுக்கு வந்து முஸ்லிம் லீகுக்கு நன்கொடை கொடுக்கும்படி கூறியது. கொடுக்கவில்லை என்றால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியது. நான் 100 ரூபாய் கொடுத்து அந்தக் கூட்டத்தை விரட்டிவிட்டேன். அதன் பிறகு ஒரு நாள் அந்தக் கும்பல் என் கடையை சூறையாடியது. அதிலிருந்த அனைத்தையும் எடுத்துச் சென்றுவிட்டது. இனி அங்கு வாழ முடியாது என்ற நிலையில் நான், என் குடும்பத்தை அழைத்துக்கொண்டு கல்கத்தா வந்துவிட்டேன். இதேபோல இன்னும் பல குடும்பங்கள் உடமைகளை முற்றிலுமாக இழந்துவிட்டன. இழப்பீட்டுக்காக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், துரதிர்ஷ்டவசமாக அவர்கள் எதுவும் செய்யவில்லை.

பக்கத்து கிராமங்களில் இந்துக்கள் எரித்துக் கொல்லப்பட்டார்கள். குழந்தைகள் தீக்குள் உயிரோடு வீசப்பட்டார்கள். பலர் மதமாற்றம் செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு மாட்டு இறைச்சி உணவாகக் கொடுக்கப்பட்டது. பெண்கள் கடத்தப்பட்டார்கள். வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டார்கள். மேலும் அந்தப் பெண்களின் தொடையின் மேல்பகுதி முதல் வயிறு வரை உள்ள பகுதியும், மார்பகங்களும் வெட்டி எறியப்பட்டன. கடத்திச் செல்லப்பட்ட பெண்களில் எங்கள் உறவினர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. எங்கள் சஹா குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தியை ரவுடிகளிடமிருந்து காப்பாற்ற முற்பட்ட அவள் அண்ணனின் கை,கால் தலை எல்லாம் பலமாக காயம் அடைந்தன. இவற்றையெல்லாம் பார்த்த பின், இன்னும் பலவற்றைக் கேள்விப்பட்டபின் இந்து மகா சபையின் உதவியோடு சந்த்பூர் நிவாரண முகாமுக்கு வந்தோம். இப்போது காங்கிரஸ் கமிட்டி 2 வது வார்டில் இருக்கிறேன்.

உண்மையுள்ள
பிரியா நாத் சென்
உஜியல்பூர் காவல் நிலையம்
சதார், நவகாளி மாவட்டம்.

வீடு வீடாகச் சென்ற வன்முறையாளர்கள் முஸ்லிம் லீகுக்கு நன்கொடை கேட்டு மிரட்டுவது பல இடங்களில் நடந்தது. பேசிக்கொண்டிருக்கும்போது வீட்டில் உள்ள முதியவர் தலை வெட்டப்படுகிறது. அப்போது அங்கிருந்த தன் தந்தையைக் காப்பாற்ற ஓர் இளம் பெண் பணம், நகை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வெளியே வருகிறாள். ஒரு கையால் அவளிடம் இருந்தவற்றை வாங்கும் ஒருவன், மறுகையில் வைத்திருந்த ஆயுதத்தால் அவள் தந்தைக்கு மரண அடி கொடுத்து விட்டுப் போகிறான். இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள் நடந்தன. தாங்கள் பிறந்து வளர்ந்த ஊரில் அடிமைகளை விட மோசமான நிலையில் மக்கள் அவதிப்பட்டார்கள்.

நவகாளி வன்முறையை எப்படிச் சிலர் திட்டமிட்டு செயல்படுத்தினார்கள் என்பதை மாடர்ன் ரெவ்யூ பத்திரிகை தொகுத்து எழுதியது. அது அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருந்தது. கல்கத்தா படுகொலைகளுக்கும் நவகாளி படுகொலைகளுக்கும் வேறுபாடு இருந்தது. அதாவது கல்கத்தா படுகொலைகள் நிகழ்வதற்குக் காரணமானவர்கள் புதிய அணுகுமுறையை நவகாளியில் கையாண்டார்கள். முதலில் முஸ்லிம் லீக் அதிகாரத்தில் இருந்த வங்காள அரசு, பத்திரிகை செய்திகளைக் கடுமையான தணிக்கைக்கு உட்படுத்தியது. ஏனென்றால் கல்கத்தா படுகொலைகள் பற்றி அப்போது பரவலாக செய்திகள் வெளியாயின. அதன்மூலமாக நடந்தவற்றில் பல வெளிச்சத்துக்கு வந்து, நாடு முழுவதும் மக்கள் அவற்றை அறிந்துகொண்டார்கள். வங்காள அரசு பதற்றத்தைத் தவிர்ப்பதற்கும், மதக்கலவரம் தொடராமல் இருப்பதற்கும் பத்திரிகைத் தணிக்கை அவசியம் என்றது. தபால் நிலையங்களுக்கு வந்த கடிதங்கள்கூட ஆய்வுக்கு பின்னே தான் அனுப்பப்பட்டன. இந்தத் தடைகளை எல்லாம் மீறி வங்காளத்தின் கிழக்கு மாவட்டங்களில் இருந்து வன்முறை தொடர்பான செய்திகள் கசிந்து வந்துகொண்டே இருந்தன. ஆட்சியாளர்கள் உண்மையில் மக்களின் அச்சத்தைக் குறைப்பதற்கோ, வன்முறைகளைத் தடுப்பதற்கோ எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களுக்கு ஆதரவாக சில பிரிட்டிஷ் ஐ.சி.எஸ் அதிகாரிகளும் செயல்பட்டார்கள்.

கல்கத்தாவில் இருந்து நவகாளிக்கு ஒன்றரை மணி நேரத்தில் விமானம் மூலம் சென்று விடலாம்.இருந்த போதும் மீட்புப்பணிகள் நடப்பதற்கும், உதவிகள் கிடைப்பதற்கும் பல நாள்கள் ஆயின. பத்திரிகை ஊடகம் முழுவதுமாகக் கட்டுப்படுத்தப்பட்டது. காவல் துறை அதிகாரிகளும் தற்காலிக நீதிபதியும் முஸ்லிம்கள். அக்டோபர் 10 முதல் 14 ஆம் தேதிவரை வன்முறையாளர்களுக்குப் போதுமான அவகாசம் அளிக்கப்பட்டது. அப்போது அவர்கள் முடிந்த அளவுக்கு எல்லா தடயங்களையும், ஆதாரங்களையும் அழித்துவிட்டார்கள். அவர்களிடம் சிக்கிக்கொண்டவர்கள் வாய் திறக்க முடியாதபடி அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டார்கள்.
ஒன்றை நடக்க வைப்பதற்கு சில வாதங்கள் வேண்டும். அந்த வாதங்களுக்கு சில நிரூபணங்கள் தேவைப்படுகின்றன. அவை கண்முன்னே நடந்த நிகழ்வுகளாக இருக்கும்போது யாராலும் மறுக்க முடியாது. பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் அவர்களின் ஆழமான உணர்வுகளுக்கும் அவற்றில் தொடர்பு இருக்கும் பட்சத்தில் காரணிகள் நியாயங்கள் ஆகிவிடுகின்றன. எனவே இந்தியா பிரிக்கப் படவேண்டியது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

நவகாளி, திப்பேரா அட்டூழியங்களுக்குப் பிறகு தலைவர்கள் பலரும் நம்பிக்கை இழந்தார்கள். அவர்களில் பிரிவினையை விரும்பாத முஸ்லிம் தலைவர்களும் அடங்குவார்கள். வங்காள கவர்னர் பரோஸ் இனி இந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து வாழ்வது சாத்தியமே இல்லை என்று கருதினார் அதனால் தான் அவர், ‘அங்கு நம்பிக்கையை மீண்டும் கொண்டு வருவதென்பது மிகக்கடுமையான நீண்டகாலம் பிடிக்கும் செயல் என்பதை என்னால் உணர முடிகிறது. முஸ்லிம் சிறுத்தையும், இந்துக் குழந்தையும் அருகருகே இருக்க அந்தப் பகுதியில் இன்னும் ஒரு டஜன் காந்திகள் தேவைப்படுவார்கள்.’ என்று கூறினார்.

ஆனால் ஒருவர் மட்டும் இன்னும் இந்துக்களும் முஸ்லிம்களும் சேர்ந்து வாழமுடியும் என்று நம்பினார். அவர்தான் மகாத்மா காந்தி. 7 நவம்பர் 1946 அன்று காந்தி நவகாளியின் சவுமுஹானி ரயில் நிலையம் வந்து சேர்ந்தார். அது ஒரு வியாபார மையம். அங்கு ஜோகேந்திர மஜும்தார் வீட்டில் இரண்டு நாள்கள் தங்கியிருந்தார். அதன் பிறகு உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் ஏற்பட்ட மிகப்பெரிய அழிவை நேரடியாகப் பார்த்து அறிவதற்காக தத்தபாராவை நோக்கிப் பயணமானார். கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் அவர் வன்முறைகள் நிகழ்த்தப்பட்ட பகுதிகளில் தங்கியிருந்தார். கிராமம் கிராமமாகச் சென்றார். இந்துக்களுடனும் முஸ்லிம்களுடனும் பேசினார்; பிரார்த்தனை செய்தார். சமாதானத்தை அவர்களிடம் விதைக்க முயன்றார்.
ஏழு வாரங்களில் 116 மைல்கள் செருப்பு அணியாத பாதங்களால் நடந்தே பயணித்து 47 கிராமங்களுக்குச் சென்றார். குடிசை குடிசையாகச் சென்று மக்களைச் சந்தித்தார். வன்முறையின்போது கொலையில் ஈடுபட்ட முஸ்லிம்களின் வீடுகளில் போய் அமர்ந்தார். அவர்களுக்கு தர்மசங்கடம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் அப்போதுதான் புரிந்தது. கத்தியால் குத்தியவர்களை அன்பால் குத்தினார் காந்தி என்றார்கள். ராஜேந்திரலாலின் வீடு கொளுத்தப்பட்டபோது கொல்லப்பட்ட ஆண்களின் தலைகள் கொய்யப்பட்டன. தலையற்ற உடல்கள் கோணிகளில் கட்டப்பட்டு சிற்றாறுகளில் இறக்கப்பட்டன.க õந்தி அங்கு சென்றபோது படகுக்காரர்கள் துணையோடு ஒரு கோணி வெளியே எடுக்கப்பட்டது. அதில் பதினைந்து தலை இல்லாத உடல்கள் இருந்தன.

எரிக்கப்பட்ட ராஜேந்திர லாலின் வீட்டை காந்தி பார்வையிட்டார். அதில் சாம்பலுக்கு அடியிலிருந்து ஒரு குழந்தையின் மண்டை ஓட்டைக் கண்டெடுத்தார். அதுவே இந்தியா பலி கொடுத்த கடைசி உயிராக இருக்கட்டும் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் தேசப் பிரிவினையின்போது பல லட்சக்கணக்கான உயிர்களை மதக்கலவரம் காவு கொள்ள இருக்கிறது என்பதை அவர் உள்பட பலரும் அப்போது கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டார்கள்.

விசாரணைக் கமிஷன் அறிக்கைகளைத் தூக்கி வங்காள அரசு கிடப்பில் போட்டது. மத்திய பிரிட்டிஷ் அரசு வன்முறைக்குக் காரணமானவர்கள் அனைவரையும் தண்டிக்கவில்லை. போலீஸ் துறையும், அதிகாரிகளும், ராணுவமும் செய்ய முடியாதவற்றை காந்தி என்ற தனி மனிதர் செய்து காட்டினார். மனிதனின் உள்ளம் தான் அவர் அதிகமாக நம்பிக்கை வைத்த நீதிமன்றம். அங்கே கடவுள் சாட்சியாக ஒருவருடைய மனசாட்சி வெளிப்படையாக உண்மையைப் பேச, மனிதன் ஒருவன் தன் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்போது வழக்கு முடியும். நவகாளியில் அவருடைய புனிதப்பயணம் முழு வெற்றி அடையவில்லை என்பது ஒரு சாராரின் கருத்து. அவ்வாறு இருக்குமானால் எது மனித வாழ்க்கையின் வெற்றி, எது தோல்வி என்ற கேள்விக்கும் நாம் விடை காணவேண்டும். அப்போதுதான் நாம் தெரிவிக்கும் கருத்துக்கு உண்மையான அர்த்தம் இருக்கும். துவேஷத்தை வளர்ப்பவர்களுக்கு கலவர பூமி பயிற்சிக்களம். இன்னும் பல போர்களை நடத்த அவர்களுக்கு நிறைய சாட்சிகள் கிடைத்தன. காந்தி அந்த கொலைக் களத்தில் சமாதான விதைகளை விதைத்தார். அவை வளர்ந்து இந்தியாவை நேசிப்பவர்களுக்கு ஆதாரமாக உள்ளன.

ஹொரேஸ் அலெக்ஸாண்டர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு சமாதானப் போராளி. ஆசிரியர்; எழுத்தாளர் ; பறவையியலாளர் போன்ற பல பரிமாணங்களைக் கொண்டவர். இந்தியாவின் மிகச்சிறந்த நண்பர் என்று காந்தியால் அழைக்கப்பட்டவர். காந்திக்கும், இர்வின் பிரபுவுக்கும் இடையே தூதராக செயல்படுவதற்காக அவர் இந்தியா வந்தார். 1931 ஆம் ஆண்டு காந்தியை இங்கிலாந்தில் நடந்த வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ள வைத்தவர் அவர் தான்.

1947 ஆகஸ்ட் 15 இல் இந்தியாவுக்கு சுதந்தரம் என்று முடிவாகிவிட்ட நிலையில் அதற்குச் சில நாள்களுக்கு முன்னதாக அலெக்ஸாண்டரை தான் சந்திக்க விரும்புவதாக காந்தி கடிதம் எழுதினார். காந்தியின் விருப்பப்படி அவர் இந்தியா வந்து பிகாரில் இருந்த காந்தியைச் சந்தித்தார். இருவரும் அதன் பின் கல்கத்தா சென்றார்கள். அங்கே தன் ஆசிரமத் தொண்டர் ஒருவர் வீட்டில் சில இரவுகள் தங்கி இருக்க காந்தி திட்டமிட்டிருந்தார். ஆகஸ்ட் 14 ஆம் தேதி இருவரும் கிழக்கு வங்காளம் செல்ல முடிவு செய்திருந்தார்கள். ஆனால் கல்கத்தாவில் இருந்த முஸ்லிம்கள் சிலர் காந்தி சுதந்தரம் கிடைக்கும் நாளில் கல்கத்தாவில் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். அவர் இருந்தால் இந்து முஸ்லிம் கலவரம் கல்கத்தாவில் மீண்டும் வெடிக்காது என்று அவர்கள் நம்பினார்கள். காந்தி முதலில் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதற்குப் பிறகு கிழக்கு வங்காளத்தில் இருக்கும் இந்துக்களுக்கு சில முக்கிய முஸ்லிம் பிரமுகர்கள் பாதுகாப்பு தருவதாக உறுதியளித்த பின் அவர்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.

கல்கத்தாவில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாகத் தன்னை ‘கிழட்டுப் பொய்யர்’ என்று வர்ணித்த சுகர்வாடியை காந்தி அழைத்தார். அப்போது அவர் வங்காளத்தின் முதலமைச்சர் பதவியில் இல்லை. இருவரும் தங்கியிருக்க கல்கத்தா கலவரத்தில் காலி செய்யப்பட்ட முஸ்லிம் ஒருவரின் வீடு தெரிவு செய்யப்பட்டது. அது பெல்காத்தில் இருந்தது.

ஆகஸ்ட் 13ஆம் தேதி நண்பகல், அலெக்ஸாண்டர் ஒரு நண்பரின் உதவியோடு அங்கு சென்றார். வீட்டைச் சுற்றி இந்து இளைஞர்கள் சிலர் கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். காந்தி நண்பர் ஒருவர் வந்திருக்கிறார் என்று அறிந்ததும் அவர்கள் காந்தியை கல்கத்தாவை விட்டு வெளியேறுமாறு கோஷமிட்டார்கள். அவர்களில் சிலர் காந்தியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்கள். அவர் இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் வெளியேறி உருவாகயிருக்கும் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும் என்றார்கள். காந்தி அந்த இளைஞர்களிடம் மலரவிருக்கும் சுதந்தர இந்தியா இவ்வாறு பிறக்கக்கூடாது என்றார். மேலும் இந்தியா சகிப்புத்தன்மையும், பெருந்தன்மையும் கொண்ட பூமி என்று எடுத்துக் கூறி அவர்களை அனுப்பி வைத்தார். அமைதியை ஏற்படுத்தும் அவர் முயற்சிக்கு தாங்கள் முழு ஒத்துழைப்பு நல்குவதாக அவர்கள் கூறிவிட்டுப் போனார்கள்.

மறு நாள் மாலை பிரார்த்தனைக் கூட்டத்தில் சுகர்வாடி இல்லாததை சில இளைஞர்கள் கவனித்து விட்டார்கள். அவர் எப்படியும் வீட்டுக்குள் தான் இருக்க வேண்டும் என்று கருதினார்கள். சுகர்வாடியின் ரத்தம் வேண்டும் என்று அவர்கள் கத்தினார்கள். பிரார்த்தனை முடிந்தபிறகு காந்தி வீட்டுக்குள் ஜன்னலின் அருகே நின்றார். ஜன்னல் கதவுகளைத் திறந்து வெளியே நின்றிருந்தவர்களைப் பார்த்து தாழ்ந்த குரலில் பேசினார். அவர்கள் நடவடிக்கைகளுக்காக கடிந்து கொண்டார். சுகர்வாடியின் பழைய செயல்களைப் பற்றி அவர்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்றார். இப்போது சுகர்வாடி அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் தன்னை இணைத்துக்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினார். சுகர்வாடியை காந்தி தன் முன்னே வரவழைத்தார். அப்போது அவர் தோளை காந்தி தன் கையால் பற்றியிருந்தார். கூட்டத்தில் இருந்தவர்கள் ‘கடந்த ஆண்டில் (ஆகஸ்ட் 1946) நடந்த கல்கத்தா படுகொலைகளுக்கு நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறீர்களா?’ என்று ஆவேசமாகக் கேட்டார்கள்.

அவர் உடனே, ‘ஆமாம். நடந்தவற்றுக்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன். மேலும் அவற்றுக்காக நான் வெட்கப்படுகிறேன்’ என்றார்.

அதன் பின்னர் காந்தி, ‘இந்தச் சூழலை தூய்மைப்படுத்த பொது மக்கள் மத்தியில் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்வதைத் தவிர சிறந்த ஒன்று இருக்கமுடியாது. அந்தக் கணத்தில் சுகர்வாடி அவர்களை வென்று விட்டார்’ என்று அலெக்ஸாண்டரிடம் கூறினார். இவை எல்லாவற்றையும் அலெக்ஸாண்டர் தன் எழுத்தில் விவரித்திருக்கிறார். சுதந்தரத்துக்கு முன்பு மக்களின் மனநிலை எவ்வாறு இருந்தது என்பதை அறிந்து கொள்ள இவை நமக்கு உதவுகின்றன.

(தொடரும்)

தொடக்கப்புள்ளிகள்

பாகிஸ்தான் அரசியல் வரலாறு / அத்தியாயம் 2

image026பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராக இந்தியா போராடத் தொடங்கியது. 1930க்கு பிறகு இந்திய விடுதலைப் போராட்டம் முக்கியமான திருப்பத்தைச் சந்தித்தது. மத வேறுபாடு பாராட்டாமல், எல்லோரும் இந்தியர்களாக இணைந்து பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெறவேண்டும் என்பது மிகுதியான மக்களின் எண்ணம். பெரும்பான்மையினராக இருக்கும் இந்துக்கள், முஸ்லிம்கள்மீது அதிகாரம் செலுத்துவார்கள் என்ற வாதத்தை முன் வைத்தது ஜின்னா தலைமையில் இயங்கிய இந்திய முஸ்லிம் லீக். இந்த வாதத்துக்குள் இருக்கும் சந்தேகம் சில அரசியல் தலைவர்களிடமும் இருந்தது. அதாவது ஆட்சி அதிகாரம் என்று வரும்போது இந்து அரசியல் தலைவர்கள் தங்கள் நலன்களை உதாசீனம் செய்வார்கள்; தங்களை ஒதுக்கிவிடுவார்கள் என்று அவர்கள் எண்ணினார்கள். இந்தச் சந்தேகத்தையும் அச்சத்தையும் முஸ்லிம் மக்களின் முன்பே இவர்கள் வைத்தார்கள். இப்போது அது மக்கள் பிரச்னை ஆகிவிட்டது.

இந்தியர்களே இந்தியாவை ஆளும் அனுபவத்தை அப்போது வாழ்ந்த யாரும் நேரடியாகக் கண்டிருக்கவில்லை. ஜனநாயக ஆட்சியாக இருந்தாலும் அது எப்படி இருக்கும் என்பது சரியாக யாருக்கும் தெரியாது. படிப்பறிவில்லாத பொது மக்களைப் பற்றிக் கேட்கவேவேண்டாம். விடுதலை என்று சொல்லும்போதெல்லாம் ஒரு சாராருக்கு அச்சம் அதிகமான சமயம் அது. வெள்ளையர்களே ஆட்சியைத் தொடரட்டும் என்று கூடச் சிலர் கருதினர். தமிழகத்திலும் அப்படிப்பட்ட குரல்கள் எழுந்தன. பெரிய அரசியல் அமைப்பான இந்திய தேசிய காங்கிரஸ் வட நாட்டவர் பிடியில் உள்ளது. அதுவும் உயர் சாதியினரே அதை நடத்துகிறார்கள். வெள்ளையரிடமிருந்து விடுதலை கிடைக்கும். ஆனால் இவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு விடுதலை கிடைக்குமா என்று அவர்கள் கேள்வி எழுப்பினார்கள். தலைவர்களுக்கே இப்படிப்பட்ட அச்சங்கள் எழும்போது பாமர மக்களுக்கு எழாமல் இருக்குமா? முஸ்லிம் லீக் கட்சி இதை மேலும் ஊதிப் பெரிதாக்கியது.

1942ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இந்தியாவின் முழு ஒத்துழைப்பு பிரிட்டிஷ் அரசாங்கத்துக்குத் தேவைப்பட்டது. ஜப்பான் படை இந்தியாவின் எல்லைகளைத் தொடும் வேளையில் இந்தியாவில் எந்தவிதமான பெரிய கிளர்ச்சியையும் அரசு விரும்பவில்லை. அதனால் 1942 மார்ச் மாதம் ஒரு தூதுக்குழு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது. சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் அக்குழுவுக்குத் தலைமை தாங்கினார். அவர் அப்போது வின்ஸ்டன் சர்ச்சிலின் போர்க்கால மந்திரி சபையில் இருந்தார். இந்திய அரசியல் தலைவர்களைச் சந்தித்து தான் கொண்டு வந்த திட்டத்தை விளக்கினார். மாகாணங்களுக்கு டொமினியன் அந்தஸ்து; அவை தனியாக செயல்படுவதற்கு அதிகாரம்; ஒரு பொது அரசமைப்பு சட்டத்தை உருவாக்குவது போன்ற அம்சங்களைக் கொண்டது கிரிப்ஸ் திட்டம். அந்தப் பொது அரசமைப்பு சட்டத்தை அப்படியே பிரிட்டிஷ் அரசங்கம் ஏற்றுக்கொள்ளும் என்பதற்கு உத்தரவாதமில்லை என்ற நிபந்தனையும் அதில் அடங்கியிருந்தது. அதனால் அதை இந்திய அரசியல் தலைவர்கள் ஏற்கவில்லை. திவாலான வங்கியின் ‘பின் தேதியிட்ட காசோலை’ என்று அதை அவர்கள் வர்ணித்தார்கள். எனவே கிரிப்ஸ் தூதுக்குழுவின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து 1942 ஆகஸ்ட் 8 ஆம் தேதி காங்கிரஸ் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை அறிவித்தது. விடுதலையை நோக்கி ஒருமுகப்படுத்தபட்ட நாட்டை காந்தி, கப்பலை இயக்கும் கேப்டனைப் போல வழி நடத்தினார்.

இந்தச் சமயத்தில்தான் ஜின்னாவும் அவருடன் இருந்தவர்களும், முஸ்லிம்களுக்கு தனி நாடு அவசியம் என்று தெளிவாக அறிவித்தார்கள். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பிரிட்டிஷாருக்கு மட்டுமல்ல காங்கிரஸுக்கும் அழுத்தம் கொடுத்தார்கள். விடுதலை கைக்கு எட்டும் தொலைவில் இருப்பதை உணர்ந்த ஜின்னா பேரம் சீக்கிரம் முடிய வேண்டும் என்று விரும்பினார். 1946 இல் எல்லாம் முற்றிய நிலையில் ஜின்னா இதற்கு மேல் நாங்கள் பொறுக்க முடியாது என்று அனைவருக்கும் காட்ட முடிவெடுத்தார்.

1946 இல் நடைபெற்ற மாகாணத்தேர்தல்களுக்குப் பிறகு வங்காளத்தில் முஸ்லிம் லீக்கின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதே ஆண்டில் பிரிட்டிஷ் அரசின் கேபினட் மிஷன் பிரிட்டிஷ் ஆட்சியின் அதிகாரங்களை இந்தியாவுக்கு மாற்றும் பெரும் பணியில் ஈடுபட்டது. அது இந்தியாவை தற்போதுள்ள பாகிஸ்தான், வங்க தேசம் சேர்த்து விடுதலை பெற்ற டொமினியனாக அறிவிக்க முடிவு செய்தது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றது முஸ்லிம் லீக். அது இந்தியாவும், பாகிஸ்தானும் விடுதலை பெற்ற இரண்டு தனி டொமினியன்களாக அறிவிக்கப்பட வேண்டும் என்றது. ஆனால் முஸ்லிம் லீக் கோரிக்கையை காங்கிரஸ் ஏற்க மறுத்தது. அந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக 1946 ஜூலை 27 ஆம் தேதி முஸ்லிம் லீக் பம்பாயில் கூடியது. பிரிட்டிஷ் அரசின் கேபினட் மிஷன் முடிவை அது நிராகரித்தது. மேலும் 1946 ஆகஸ்ட் 16 ஆம் தேதி மிகப்பெரிய நாடு தழுவிய ஹர்த்தாலை நடத்தப் போவதாக அறிவித்தது. அந்த தினத்துக்கு ‘நேரடி நடவடிக்கை நாள்’என்று பெயரிட்டது.

ஹர்த்தால் என்பது மகாத்மா காந்தியால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹர்த்தால் என்பது கடையடைப்பு, வேலை நிறுத்தம் போன்றவற்றைக் குறிக்கும் ஒரு குஜராத்திச் சொல். தென்னாப்பிரிக்காவில் இருந்த கறுப்புச் சட்டத்தை எதிர்க்க அங்கிருந்த இந்தியர்களைத் திரட்டி 1906 ஆம் ஆண்டு உலகின் முதல் ஹர்த்தாலை நடத்திக் காட்டினார் காந்தி. முதல் உலகப் போரில் (1914-18) இந்தியா, பிரிட்டிஷ் அரசுக்கு உதவியது. காந்தி முழு ஒத்துழைப்பு நல்கினார். ராணுவத்தில் இந்தியர்களைச் சேர்ப்பதற்கும் உதவினார். களப்பணியாற்றினார். போருக்குப் பிறகு பிரிட்டிஷ் அரசு இந்திய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் என்று பலருடன் சேர்ந்து அவரும் நம்பினார்.

1919 இல் ரௌலட் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி சந்தேகத்துக்குள்ளான நபர்களை விசாரணையின்றி இரண்டு வருடங்கள் சிறையில் அடைக்கலாம். அது போன்ற இன்னும் பல அடக்குமுறைகளைச் செயல்படுத்த அந்தச் சட்டம் உதவியது. விடுதலைப் போராட்டக்காரர்களைக் குறி வைத்தே அது கொண்டு வரப்பட்டது. அதனால் காந்தி உள்பட அனைவரும் அந்தச் சட்டத்தை எதிர்த்தனர். 1919 மார்ச் 6 ஆம் தேதி நாடு தழுவிய ஹர்த்தால் நடைபெற்றது. அப்போது இந்தியர்கள் அனைவரும் தங்கள் பணிகளை ஒரு நாள் நிறுத்தி உண்ணாவிரதம் இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். அதுவே இந்தியாவில் காந்தியால் வெற்றிகரமாக நடத்தப்பட்ட முதல் ஹர்த்தால். அது நாட்டின் விடுதலைக்காக சுகபோக வாழ்வையும், நிம்மதியையும் இழக்கத் தயாராக இருந்த பல தரப்பட்ட மக்களால் நிகழ்த்திக்காட்டப்பட்டது. அத்தகைய ஹர்த்தாலை நேரடி நடவடிக்கை நாளன்று நடத்துவதற்குத்தான் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. கூட்டம் எவ்வளவு கூடினாலும் முந்தைய ஹர்த்தாலின் அனுபவம் இருப்பதால் மக்களைக் கட்டுப்படுத்துவது எளிதாகத்தான் இருக்கும் என்று பொதுவாக பலரும் நினைத்தார்கள். ஆனால் நடந்தது வேறு.

அப்போது ஒன்றுபட்ட வங்காளத்தின் மொத்த மக்கள்தொகையில் இஸ்லாமியர்கள் 56% பேரும், இந்துக்கள் 42% பேரும் இருந்தார்கள். இஸ்லாமியர்கள் மிகுதியாக கிழக்குப் பகுதியில் தான் வசித்தார்கள். கல்கத்தாவை எடுத்துக்கொண்டால் அதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 63%; இஸ்லாமியர்கள் 33%. ஜின்னா ஆகஸ்ட் 16 ஆம் தேதியை நேரடி நடவடிக்கை நாளாக அறிவித்தவுடன் வங்காளத்தின் முதலமைச்சர் (பிரீமியர்) உசைன் சாகித் சுகர்வாடி துடிப்புடன் செயல்பட்டார். அவர் வங்காளத்தின் தலைமைச் செயலாளர் ஆர்.எல். வாக்கரின் அறிவுரைப்படி, ஆகஸ்ட் 16 ஆம் தேதி பொது விடுமுறை என்று அறிவிக்கும்படி வங்காளத்தின் கவர்னர் சர் ஃப்ரெடரிக் பரோசைக் கேட்டுக்கொண்டார். அன்று அரசாங்க அலுவலகங்கள், வியாபார மையங்கள், கடைகள் எல்லாம் மூடப்படவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் இந்த அறிவிப்பைக் கடுமையாக எதிர்த்தது. இது இஸ்லாமியர்கள் மிகுதியாக இல்லாத இடங்களிலும் மக்கள் மீது ஹர்த்தாலைத் திணிக்கிறது என்று கூறியது.

வங்காள சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரஃபுல்ல சந்திர கோஷ் ஆகஸ்ட் 14 ஆம் தேதி பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் இந்துக்கள் ஹர்த்தாலில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். முஸ்லிம் லீக் ஹர்த்தாலை நடத்துவதில் தீவிரம் காட்டியது. முஸ்லிம் நாளிதழ் ‘ஸ்டார் இண்டியா’ நேரடி நடவடிக்கை தினத்தின் நிகழ்ச்சி நிரலை வெளியிட்டது. அதன்படி அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சேவைகளைத் தவிர மற்ற எல்லாம் நிறுத்தப்படும். அரசு அலுவலகங்களும் தொழிற்சாலைகளும் மூடப்படும். ஊர்வலங்கள் கல்கத்தா, ஹௌரா, ஹூக்ளி, மெட்டியா புரூஸ், 24 பர்கானாக்கள் ஆகிய இடங்களில் இருந்து புறப்பட்டு ஆக்டெர்லோனி நினைவிடத்தில் வந்து சேர வேண்டும். அங்கே முதலமைச்சர் முன்னிலையில் ஒரு பேரணி நடைபெறும்.

நேரடி நடவடிக்கை நாளான ஆகஸ்ட் 16 ஆம் தேதி எல்லாம் திட்டமிட்டபடி நடந்தன. இந்தியாவின் பல பகுதிகளில் நேரடி நடவடிக்கை நாள் பிரச்னை ஏதுமின்றி கடந்து போனது. ஆனால் அது கல்கத்தாவை உலுக்கி எடுத்தது. பகல் 12 மணிக்கு கல்கத்தாவில் பேரணி நடந்தது. நண்பகல் 2 மணிக்குப் பொதுக்கூட்டம் தொடங்கியது. அதற்கு முன்னரே நண்பகல் தொழுகை முடிந்தபின் பல பகுதிகளிலிருந்து முஸ்லிம் மக்கள் அங்கு வந்து குவியத் தொடங்கிவிட்டார்கள். கவாஜா நாசிமுதினும், முதலமைச்சர் சாகித் சுகர்வாடியும் முக்கியப் பேச்சாளர்கள். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் அங்கே கூடியிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் இரும்புத் தடிகளையும் கம்புகளையும் வைத்திருந்தார்கள். மத்தியப் புலனாய்வு அதிகாரிகள் கொடுத்த தகவல்கள் அங்கு நடந்தவை பற்றித் தெரிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன.

நாசிமுதின் அமைதியைப் போதித்து தன் பேச்சை ஆரம்பித்தாலும் அதன் பின் அன்று காலையில் கல்கத்தாவில் தொடங்கிய மதக்கலவரத்தைப் பற்றிப் பேசலானார். காலை 11 மணி வரை அடிபட்டவர்கள் இஸ்லாமியர்கள்தாம் என்றார். மேலும் இஸ்லாமியர்கள் தற்காப்பு நடவடிக்கையாகச் சில செயல்களைச் செய்யவேண்டியிருந்தது என்று கூறினார். உண்மை நிலவரம் அதுவல்ல. லால் பஜார் போலீஸ் தலைமையகம் காலை பத்து மணிக்கு முன்னதாகவே கலவரம் தொடங்கிவிட்டதாகத் தெரிவித்தது. கடைகளைத் திறந்து வைத்திருந்தவர்களைச் சிலர் மிரட்டி மூட வைத்தார்கள். சண்டைகள், கத்திக்குத்து, கல்வீச்சு அனைத்தும் நடந்தன.

அடுத்த 72 மணி நேரத்தில் கல்கத்தாவில் 4,000 பேர் கொல்லப்பட்டார்கள். ஒரு லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்தார்கள். ஆறு நாள்களுக்கு மதக்கலவரம் தொடர்ந்தது. 21 ஆம் தேதி வங்காளம் வைஸ்ராயின் நேரடி ஆளுமையின் கீழ் வந்தது. அங்கு என்னதான் நடந்தது என்பதைச் சொல்ல வேண்டிய பொறுப்பு கவர்னருக்கு உள்ளது. ராணுவ அதிகாரிகளால் நியமிக்கப்பட்ட மத்தியப் புலனாய்வு அதிகாரி ஒருவர் பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் இருந்தார். அவருடைய தகவல் நம்பகத்தன்மை வாய்ந்தது என்று கவர்னர் பரோஸ் கருதினார். முதலமைச்சர் சாகித் சுகர்வாடி லட்சக்கணக்கானோர் கூடியிருந்த பொதுக் கூட்டத்தில் பேசிய வரி ஒன்றைப் புலனாய்வு அதிகாரியின் குறிப்பில் கண்டு கவர்னர் உள்பட அதிகாரிகள் பலரும் அதிர்ச்சி அடைந்திருக்க வேண்டும். ‘போலிஸும் ராணுவமும் குறுக்கிடாதபடி நான் பார்த்துக் கொள்கிறேன்.’

இதன்மூலமாக ராணுவத்தையும் போலிஸையும் செயல்படவிடாமல் தன்னால் கட்டுப்படுத்தமுடியும் என்பதையே அவர் தெரிவிக்கிறார். அவர் வேறு ஏதேனும் சொல்ல முற்பட்டிருந்தாலும், அங்கிருந்த கூட்டம் ஒன்றைப் புரிந்துக்கொண்டது. கலகம் செய்வதற்கு வெளிப்படையான அறிவிப்பு வந்துவிட்டது. அங்கிருந்து புறப்பட்டவர்கள் நிகழ்த்தி அனைத்தும் அதை நிரூபிப்பதாகவே இருந்தன. அவற்றைத் தொடர்ந்து ஆயுதம் தாங்கிய குண்டர்கள் டிரக்குகளில் வந்து கல்கத்தாவின் ஹாரிசன் ரோட்டில் இறங்கினார்கள். இந்துக்களின் கடைகளைத் துவம்சம் செய்தார்கள்.

பாதிக்கப்பட்ட இந்துக்களும், சீக்கியர்களும் எதிர் தாக்குதல் நடத்த ஆரம்பித்தவுடன் கலவரம் உச்சக் கட்டத்தை அடைந்தது. எதிர்ப் பிரிவு கும்பலிடம் சிக்கும் மனிதர்கள் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டார்கள். நேரடி நடவடிக்கை நாளான ஆகஸ்ட் 16 ஆம் தேதி தொடங்கி, ஏழு நாள்களுக்கு வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்றன. அதனால்தான் அந்த வாரத்திற்கு ‘நீண்ட கத்திகளின் வாரம்’ என்ற பெயர் கொடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்துக்களும் சீக்கியர்களும் முஸ்லிம்களுக்கு இணையாக கொலைவெறித் தாண்டவம் ஆடினார்கள்.இந்து வன்முறைக் கும்பல், கண்களில் அகப்படும் இஸ்லாமியர்கள் அனைவரையும் வெட்டிக் கொன்றது. கல்வி நிறுவனங்களில் இருந்த மாணவர்களும் வன்முறையில் இருந்து தப்ப முடியவில்லை. வீடுகளுக்குள் இருந்தவர்களும், கல்விச்சாலையில் இருந்தவர்களும் வெளியே இழுத்து வரப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்டார்கள்.

தாக்குதல் முற்றிய நிலையில் கல்கத்தாவைவிட்டு முஸ்லிம்கள் பலர், அவர்கள் மிகுதியாக இருக்கும் கிழக்கு வங்காளத்துக்கு இடம் பெயர்ந்தார்கள்.
நேரடி நடவடிக்கை நாளுக்கு அடுத்த நாளான ஆகஸ்ட் 17 ஆம் தேதி மேலும் கொடுமையான தினமாக அமைந்தது. கல்கத்தாவுக்கு அருகில் இருக்கும் தொழிற்சாலைகள் மிகுந்த இடம் மெட்டியா புரூஸ். அப்போது கார்டன் ரீச் துணியாலை ஊழியர் சங்கத்தின் தலைவராக இருந்தவர் அப்துல்லா ஃபரூக்கி. இவர் எலியன் மிஸ்திரி என்ற கொடிய இஸ்லாமிய வன்முறையாளரை அழைத்துக்கொண்டு ஒரு கும்பலோடு பிர்லாவின் கேசோராம் பஞ்சாலைக்குள் நுழைந்தார். ஆலைத் தொழிலாளர்கள் பலர் உள்ளே இருந்தார்கள். அவர்களுள் ஒரிசாவைச் சேர்ந்த பலர் இருந்தனர். ஃபரூக்கியின் தூண்டுதலின் பேரில் அங்கிருந்த இந்துத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை 500 முதல் 800 வரை இருக்கும். சில முஸ்லிம் தொழிலாளர்களும் அந்தத் தாக்குதலில் இறந்துபோனார்கள்.

முதலமைச்சர் சாகித் சுகர்வாடி சீல்டா ராணுவ ஓய்வு முகாமில் இருக்கும் ராணுவத்தினரை வரவழைக்குமாறு பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். அவர்கள் சற்று மெதுவாகவே செயல்பட்டார்கள். 16ஆம் தேதி இரவு 1.45 மணிக்கு பிறகுதான் ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

ஒரு கட்டத்தில் மக்கள் கல்கத்தாவைவிட்டு உயிருக்குப் பயந்து ஓட ஆரம்பித்தார்கள். ஹௌரா பாலத்தில் மக்கள் கூட்டம் நிரம்பியது. ஹௌரா ரயில் நிலையத்தை அடைந்து, கல்கத்தாவைவிட்டுப் போவதற்காக மக்கள் பாலத்தைக் கடந்தார்கள். ஆனால் கல்கத்தாவைவிட்டு வெளியேறினாலும் மரணம் அவர்களைத் துரத்தி வந்தது.

சத்தியப் பிடிவாதம் கொண்ட அகிம்சாவாதியான காந்தியை மதக்கலவரம் கடுமையான கவலைக்குள்ளாக்கியது.பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று வந்த காந்தி மனம் உடைந்து போனார். அதனால்தான் வேவல் பிரபு காந்தி தன்னிடம் இப்படி ஒரு கருத்தைக் தெரிவித்தார் என்றார். ‘இந்தியா ரத்தத்தில் நீராட விரும்பினால் அப்படியே ஆகட்டும்.’

(தொடரும்)

ஒரு நாடு உருவான கதை

பாகிஸ்தான் அரசியல் வரலாறு / அத்தியாயம் 1

Pakistan-Flag-Art-Desktop-Wallpaper-Collectionபொதுவாக ஒரு நாடு எப்படி பிறக்கிறது என்பதை யாராலும் தெளிவாகக் கூற முடியாது. ஒரு நதியின் கதை எவ்வளவு  பழமையானதோ அதே போன்ற கணிக்க முடியாத கால ஓட்டத்தைக் கடந்து ஒரு நாடு பிறக்கிறது. இந்தியா போன்ற மிகப் பழமையான நாடுகளுக்கு இது மிகச்சரியாகப் பொருந்தும். அதே வேளையில் நம் கண் முன்பே சில நாடுகள் புதிதாக பிறந்துள்ளதையும் நாம் கண்டிருக்கிறோம். 1947ல் பிறந்த பாகிஸ்தான் ஒரு சிறந்த உதாரணம்.

முஸ்லிம்களுக்குத் தனி நாடு வேண்டும் என்ற கொள்கையை ஜின்னாவுக்கு முன்னால்  முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர்  சர் சையத் அகமது கான்ங (1817—1898). எனவே பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே, தனி நாடு வேண்டும் என்ற எண்ணம் முஸ்லிம் மக்கள் சிலரிடம் தோன்றி இருக்கிறது. 1947 ஆகஸ்ட் 15 அன்று சுதந்தர இந்தியா மலர்ந்தது. அதற்கு முந்தைய நாள் ஆகஸ்ட் 14 ஆம் தேதி முன்னமே செதுக்கப்பட்ட பாகிஸ்தான் இந்தியாவில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டது. இந்தக் கூற்று  தேசப்பிரிவினை பற்றி  ஜின்னா போன்றவர்கள் கொண்டிருந்த கருத்துக்கு மிக மிக நெருக்கமாக இருக்கும். இந்தியாவில் பெரும்பான்மையினராக இருக்கும் இந்துக்களில் இருந்து  பண்பாடு, மதம் ஆகியவற்றால் வேறுபட்ட முஸ்லிம் இன மக்களை மட்டுமே கொண்ட ஒரு தனி நாடாக பாகிஸ்தான் ஜின்னாவின் கொள்கைக்கு ஏற்ப பிரிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் ஒரு தனி சிலையாகச் செதுக்கி எடுக்கப்பட்டது என்பது அவர் முதலில் கொண்டிருந்த  நம்பிக்கை. பாகிஸ்தான் என்பது செதுக்கப்பட்ட சிலை அல்ல, இந்தியாவிடம் இருந்து உடைக்கப்பட்ட ஒரு பகுதி என்று சொல்பவர்களும் உள்ளனர்.

தனி பாகிஸ்தானைப் பெற்று அதிகாரத்தில் அமர கனவு கண்ட சிலர் அதை எவ்வழியில் அடைந்தார்கள் என்பது எல்லோரும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. அவர்கள் அப்போது  கையாண்ட முறைகள் அவர்களுடைய அரசியல் சித்தாந்தத்திலும், கொள்கையிலும் ஒன்றுகலந்தன. அவை இன்றும் பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றில்  தொடர்ந்து வெளிப்படுகின்றன.

கடந்த நூற்றாண்டின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று இந்தியப்  பிரிவினை. அதன் காரணமாகப் பிறந்த  பாகிஸ்தான் பற்றி பல்வேறு காலகட்டங்களில் பலவேறு கருத்துகள் பலரால் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் வாதப் பிரதிவாதங்கள் நிறைய இருக்கின்றன.

0

இந்திய விடுதலைச் சட்டம் 1947 பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு 1947 ஜூலை மாதம் பிரிட்டிஷ் அரசின் ஒப்புதல் கிடைத்தது. இந்தச் சட்டத்தின்படி ஒரே நாடாக இருந்த இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு டொமினியன்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு சுதந்தரம் பெற்றன. 1947 ஆகஸ்ட் 14 அன்று பாகிஸ்தானும், ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவும் விடுதலை அடைந்தன. இந்திய விடுதலைச் சட்டம் 1947ல் இந்தியப் பிரிவினை பற்றிய விஷயங்கள் அடங்கியுள்ளன. அதன் முக்கியமான பிரிவுகளில் ஒன்று வங்காளம், பஞ்சாப் ஆகிய மாகாணங்கள் பிரிக்கப்பட்டு இந்தியா, பாகிஸ்தான் ஆகியவற்றுக்கு அளிக்கப்படுவதைக் குறிப்பிடுகிறது. பிரிவினை ஒப்பந்தப்படி அனைத்தும் பிரித்துக் கொடுக்கப்பட்டன. அவற்றில் இந்தியக் கருவூலம்; இந்திய அரசுப் பணி; இந்திய ராணுவத்தின் தரைப்படை,  கப்பல் படை, விமானப் படை மற்றும் எஞ்சி இருக்கும் அத்தனை நிர்வாக அமைப்புகளும் அடங்கும்.

புதிதாகப் பிறந்த பாகிஸ்தானின் அப்போதைய தலைநகரம் கராச்சி. பளிங்கு கற்களால் ஆன ஓர் அரண்மனையில், பாகிஸ்தான் மக்களின் தன்னிகரற்ற தலைவனாக கிட்டத்தட்ட ஓர் அரசனைப் போல் ஜின்னா இருந்தார். இந்தப் பாகிஸ்தான் அவ்வளவு எளிதாக அவருக்கும் அந்த மாபெறும் கனவை நனவாக்கத் துடித்த அவர் சகாக்களுக்கும் கிடைத்து விடவில்லை. பெரும் விலையை இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் கொடுக்கவேண்டியிருந்தது. பாகிஸ்தான் உருவான கதையின் சாரம் என்பது அந்தத் தேசத்துக்காகக் கொடுக்கப்பட்ட பெரும் விலைதான்.

பிரிவினைக்கு முன்பும் அதற்குப் பின்பும்  இந்தியாவில்  இந்துக்களுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் இருந்தவர்கள் முஸ்லிம் மக்கள்தாம். இந்தியாவின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் அவர்களுடைய  பங்களிப்பு  கணிசமானது. அதனால்தான் மத அடிப்படையிலான அந்தத் தேசப் பிரிவினையை மிகுதியான மக்களும் தலைவர்களில் பலரும் விரும்பவில்லை. பல நூற்றாண்டுகளாக இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றாக  வாழும் நாட்டை மத அடிப்படையில் பிரிக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர்கள் கருதினார்கள். இந்தியாவைக் கிட்டத்தட்ட  இரு நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டவர்கள் பிரிட்டிஷார். அதற்கு முன்னால் சுமார் முந்நூறு ஆண்டுகள் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் முகலாயர்களின் ஆட்சியின் கீழ் இருந்தன. அன்றும் ஒன்றுபட்ட பெரும் இந்தியா இருந்திருக்கிறது. அப்போதெல்லாம் மதஅடிப்படையிலான பிரிவினைக் கருத்து மக்களிடையே – குறிப்பாக முஸ்லிம் மக்களிடையே தலைதூக்கவில்லை. இதன் காரணமாகவே 1947 இல் இயங்கிக் கொண்டிருந்த  பல முஸ்லிம் அரசியல் கட்சிகள்  பிரிவினையை எதிர்த்தன.

ஆனால் இந்திய முஸ்லிம் லீக் பிரிவினைக் கொள்கையில் உறுதியாக இருந்தது. 1940ல் நடைபெற்ற லாகூர் கூட்டத்தில் ஜின்னா முஸ்லிம்களுக்குத் தனி நாடு அவசியம் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து தேசப் பிரிவினை அதிகாரப்பூர்வமாக நிழ்ந்த 1947 வரை ஏழு வருடங்களாக நாடு பெரும் இன்னல்களைச் சந்தித்தது. அதற்குப் பிறகும் இன்னல்கள் தொடர்ந்தன.

பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலான முகமது அலி ஜின்னா அந்நாடு உருவாவதற்கு  முக்கியப் பங்காற்றியவர். பிரிட்டிஷ் இந்தியாவின் சிந்துவில் பெரும் செல்வக்குடும்பத்தில் பிறந்த அவர் இங்கிலாந்தில் சட்டம் பயின்றவர். ஒரு தேசியவாதியாக முகமது அலி ஜின்னா உருவானார். இங்கிலாந்தில் இருந்தபோதே தாதாபாய் நௌரோஜி போன்ற தலைவர்களால் அவர் ஈர்க்கப்பட்டார். இந்தியாவுக்கு வந்து 1906ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டார். அதே ஆண்டு தொடங்கப்பட்ட  முஸ்லிம் லீக்கில் சேர்வதற்குத் தயக்கம் காட்டினார். ஆனால் 1913ல் முஸ்லிம் லீக்கில் இணைந்த அவர் மூன்று ஆண்டுகளில் அதன் தலைவராகி விட்டார். அந்நியர்கள்  ஆண்டபோது வராத கவலை, முஸ்லிம் தலைவர்களை அப்போது வாட்டியது. இந்தியா சுதந்தரம் பெற்றால் இந்துக்கள் தங்கள்மீது அதிகாரம் செலுத்துவார்கள் என்று அவர்கள் எண்ணினார்கள். 1906 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸில் உள்ள இந்து உறுப்பினர்கள் மீது  முஸ்லிம் தலைவர்கள் கொண்ட சந்தேகத்தின் காரணமாக இந்திய முஸ்லிம் லீக்  தொடங்கப்பட்டது.

1930 ஆம் ஆண்டு நடந்த முஸ்லிம் லீக் கூட்டத்தில் எழுத்தாளர் அலாமா இக்பால்   தலைமை உரையாற்றியபோது இவ்வாறு கூறினார். “இந்துக்கள் மிகுதியாக இருக்கும் இந்தியத் துணைக் கண்டத்தில் முஸ்லிம்களுக்குத் தனி நாடு அவசியமாகிறது.பிரிவினை வெகு சீக்கிரத்தில் நடக்கும் என்பதே என் கணிப்பு.”

இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய மக்கள் இடப்பெயர்ச்சிக்கு வழிவகுத்தது இந்திய பாகிஸ்தான் பிரிவினை. அது எல்லைக் கோட்டின் இருபுறமும் சுமார் ஐந்து லட்சம் மக்கள் உயிர் இழக்கக் காரணமாக இருந்தது.

1905 ஆம் ஆண்டு இந்தியாவின் வைஸ்ராய் கர்சன் பிரபு வங்காளத்தை கிழக்கு, மேற்கு பகுதிகளாகப் பிரித்தார். அதன்மூலம் இந்து முஸ்லிம் பகையை வளர்த்து, இந்திய தேசிய காங்கிரஸின் செயல்பாடுகளை நீர்த்துப் போகச் செய்யலாம் என்று அவர் எண்ணினார். எதிர்ப்புகள் வலுக்கவே 1911ல் மீண்டும் வங்காளத்தின் பகுதிகள் இணைக்கப்பட்டன. அது ஒரு முக்கியமான நிகழ்வுக்குக் காரணமானது. அதுதான் இந்திய முஸ்லிம் லீக்கின் தொடக்கம். மேலும் அது இந்தியாவை மத ரீதியில் பிரிப்பதற்கு ஒத்திகை பார்த்தது போலாகிவிட்டது.

பரந்து விரிந்து பலவிதமான  பழக்க வழக்கங்களையும், மொழிகளையும் கொண்ட மக்கள் வாழும்  நாடு இந்தியா. இது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ஒன்றாக  இருந்தது என்பது  மிகவும் வியப்பான ஒரு விஷயம்தான்.  ஏனென்றால் அப்போது இந்தியாவில் பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சியின் கீழ் செயல்பட்ட மாகாணங்கள் தவிர, நேரடி கட்டுப்பாட்டில் இல்லாத ஐநூறுக்கும் மேலான  சமஸ்தானங்கள் இருந்தன.

முதலில் இந்தியாவை ஆண்டது கிழக்கிந்திய கம்பெனிதான். ஈஸ்ட் இண்டீஸ் என்ற பெயர் பதினாறாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பாவில் பிரபலம் அடையத் தொடங்கியது. ஐரோப்பியர்கள் ஆசியாவில் இருக்கும் பல நாடுகளையும், அவற்றைத் தாண்டி பசிபிக் கடலில் இருக்கும் பெரும் தீவுக் கூட்டங்களையும் ஈஸ்ட் இண்டீஸ் என்ற பெயரால் அழைத்தார்கள். அதன் படி ஈஸ்ட் இண்டீஸ் என்பது இந்திய துணைக்கண்டம்; தென்கிழக்கு ஆசிய நாடுகள்; பசிபிச் கடலில் இருக்கும் ஆஸ்திரேலியாவோடு இன்னும் பல தீவுக் கூட்டங்கள்; மேலும் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளையும் குறிக்கும் ஒரு சொல்.

1600 ஆம் ஆண்டு  லண்டனில் தொடங்கப்பட்ட ஈஸ்ட் இண்டியா கம்பெனி தான் ஐரோப்பாவில் இருந்தவற்றில் மிகவும் பழமையானது. இந்த கிழக்கிந்திய கம்பெனியின் பங்குதாரர்களாக பெரும் வியாபாரிகளும், பிரபுக்களும் இருந்தார்கள். எலிசபெத் அரசி அதற்கு  ராஜ உரிமை அளித்தார். இருப்பினும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு  அதில் பங்குகள் எதுவும் இல்லை. அரசாங்கம் மறைமுகமாக அதனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.1707 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி பிரிட்டிஷ் ஜாயின்ட் ஸ்டாக் கம்பெனி ஆனது. 1757 ஆம் ஆண்டில், கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் உறுதியானது. 1857 இல் நடந்த சிப்பாய் கலகம் வரை கிழகிந்திய கம்பனி ஆட்சி தொடர்ந்தது. 1858 இல் இயற்றப்பட்ட இந்திய அரசாங்க சட்டத்தின் படி, இந்தியா பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நேரடி ஆளுமையின் கீழ் வந்தது.

பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவின் நிலப்பரப்பில் சுமார் 60 சதவிகிதம் பிரிட்டிஷாரின் நேரடி ஆளுமையில் இருந்தது. எஞ்சிய 40 சதவிகிதம் 565 பல்வேறு சமஸ்தானங்களின் கீழ் இருந்தது. இந்த சமஸ்தானங்களின் அரசர்கள், அரசர்களாக இருக்க அனுமதிக்கப்பட்டாலும் அவர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டது பிரிட்டிஷ் அரசு. சுதந்தரத்துக்குப் பிறகு இவற்றுள் அதிக விவாதத்திற்குள்ளான சமஸ்தானங்கள் காஷ்மீர், ஹைதராபாத், தற்போது குஜராத்தில் இருக்கும் ஜுனாகத் ஆகியவை தாம். முஸ்லிம்கள் மிகுதியாக உள்ள காஷ்மீரை ஓர் இந்து அரசர் ஆள்கிறார். இந்துக்கள் மிகுதியாக உள்ள ஹைதராபாத்தையும், ஜுனாகத்தையும்  முஸ்லிம் அரசர்கள் ஆள்கிறார்கள். இவை விசித்திரமான முரண்பாடுகள். அதே வேளையில் இவை இந்தியாவில் இந்துக்களும், முஸ்லிம் மக்களும் எவ்வாறு கலந்து, கலாசாரத்தால் இணைந்து வாழ்ந்தார்கள் என்பதற்கு சாட்சிகளாகவும் உள்ளன.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அனைத்து சமஸ்தானங்களும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் இருப்பதற்கு  ஒப்பந்தம் செய்து கொண்டன. மொத்த சமஸ்தானங்களில்  21 சமஸ்தானங்கள் மட்டுமே  தங்களுக்கென மாநில அரசாங்கம் வைத்திருந்தன. அவற்றிலும் ஹைதராபாத், மைசூர், பரோடா, ஜம்மு – காஷ்மீர் ஆகிய நான்கு மட்டுமே பெரியவை. மற்ற எல்லா சமஸ்தானங்களும் சிறியவை.அவற்றின் அரசர்கள்  இந்திய வைஸ்ராயின் ஒப்பந்தக்காரர்கள் போல செயல்பட்டார்கள்.

இந்தியாவை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்த  பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் சமஸ்தானங்களை மேய்ப்பது ஒரு  முக்கியமான வேலையாக இருந்தது. சிறிய ஜமீன்கள் போன்றவை நீங்கலாக இருநூறுக்கும் மேலான சமஸ்தானங்கள் பாதுகாப்புப் படை வைத்திருந்தன. இந்த சமஸ்தானங்களில் இரண்டு மோதிக் கொள்ளும் போதும் ஒரு பெரிய சமஸ்தானம் சிறிய ஒன்றைப் பிடிக்க முயலும் போதும், பிரச்னை எழுந்தது. அந்தச் சமயங்களில் இந்தியாவில்  ஆட்சி செலுத்தும் பிரிட்டிஷ் பேரரசின் அதிகாரம் கேள்விக்குள்ளானது. இன்று வளர்ந்த நாடுகளின் வரிசையில் பிரிட்டன் நீடிப்பதற்குக் காரணமாக இருப்பவை ஆங்கிலேயர்களின் அறிவு, திறமை, உழைப்பு ஆகியவைதாம் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. அதே வேளையில் இங்கிலாந்து நாட்டின் உண்மையான மண்ணின் மைந்தர்கள் அவர்கள் அல்ல என்பது மறுக்கமுடியாத உண்மை. பிரிட்டானியர் என்ற பெயருக்கும் அவர்கள் உரிமையானவர்கள் அல்ல. ஏனென்றால் இங்கிலாந்தின் பூர்வ குடிகள் செல்டிக் மக்கள். இப்படி தொடக்கம் முதலே பிறரை அடக்கியாளும் குணம் கொண்ட ஆங்கிலேயர்களிடம் இருந்தது. இந்தியாவிலும் இது பிரதிபலித்தது.

(தொடரும்)