வினோத ராட்சசர்கள்

கிரேக்க இதிகாசக் கதைகள் / 3

h

h

இந்து புராணத்தில் ராவணனுக்குப் பத்துத் தலைகள் இருக்கும். காளிக்கும் பத்து தலைகள். ஆனால், கிரேக்க இதிகாசத்தில் யுரேனஸ் என்னும் தலைமைக் கடவுளுக்கும் ஜீயாவுக்கும் பிறந்தவர்களான வினோத ராட்சசர்களுக்கு ஐம்பது தலைகள் உள்ளன. கைகளோ நூறு.  இப்படிப் பிறந்தவர்கள் மொத்தம் மூன்று பேர். வினோதமான பிரமாண்டமான தோற்றம் கொண்ட இவர்களுடைய பெயர்கள், ப்ரியாருஸ், கைஸ் மற்றும் கோட்டஸ். ப்ரியாருஸுக்கு ஏஜியான் என்ற பெயரும் உண்டு.

இவர்களுடைய அமானுஷ்ய ஆற்றலையும் தோற்றத்தையும் கண்டு பொறாமை கொண்ட இவர்களுடைய தந்தை யுரேனஸ் இவர்களைப் பூமி மடிக்குள் அதாவது இவர்களைப் பெற்ற ஜீயாவின் வயிற்றுக்குள் அழுத்தித் திணித்து மறைத்து வைத்தானாம். இதனால் ஜீயாவுக்குச் சொல்லமுடியாத அளவுக்கு வலியும் வேதனையும் ஏற்பட்டதாம். யுரேனஸுக்கும் அவன் பெற்ற மக்களான டைட்டன்களுக்கும் ஏற்பட்ட வெறுப்பின் விளைவு க்ரோனஸ்ஸின் நெஞ்சில் குமுறி வெடித்து யுரேனஸை வீழ்த்த வழி தேடியபோது ஜீயா தானாக வந்து, தன் வேதனை தீரவும் யுரேனஸின் கொடுமை ஓயவும் கைகொடுத்தாள்.

ஒருவழியாக யுரேனஸ் தேவனை ஒழித்துக் கட்டிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய க்ரோனஸ் பின்னர் தன் தாயுடன் பிறந்த மாமனான டார்டரஸிடம் இந்த வினோத ராட்சசர்களையும் ஒற்றைக் கண் மாமல்லர்களான சைக்கிளாப்ஸ்களையும் ஒப்படைத்துச் சிறைவைக்கச் செய்கின்றான். அதன் பிறகு க்ரோனஸ் ஆட்சிக் காலத்தின் முடிவில் ஸீயஸ் புரட்சி செய்தபோது, க்ரோனஸ்ஸையும் அவனுக்குத் துணை நிற்கும் அவனது உடன் பிறப்புகளான டைட்டன்களையும் வென்று வாகைசூட ஸீயஸின் பாட்டியும் க்ரோனஸின் தாயுமான ஜீயா ஸீயஸுக்கு இவர்களை எல்லாம் அதாவது வினோத ராட்சசர்களையும் ஒற்றைக்கண் மாமல்லர்களையும் டார்டரஸிடமிருந்து விடுவிக்க அறிவுரை கூறுகின்றான். அதன்படி இவர்கள் விடுவிக்கப்பட்டு டைட்டன்களைத் தோற்கடிப்பதில் பெரும்பங்கு வகித்து வெற்றிக்கனியை ஸீயஸுக்கு அளித்தனர். ஆனால் மீண்டும் இவர்கள் டார்டர்ஸ் திரும்பி முறியடிக்கப்பட்ட டைட்டன்களை எல்லாம் சிறையிலிட்டு அந்தச் சிறையைச் சுற்றி காவல் காத்து வருகின்றார்கள்.

முதலாலவன் ப்ரியாரூஸ் ஸீயஸுக்குத் துணை நின்ற வினோத ராட்சசர்களில் தலையானவன். போரின்போது பேருதவியாக இருந்த இவனுக்கு ஸீயஸ் தன்னுடைய மகளான ஸிம்போலா என்பவளைப் பரிசாக அளித்தான். ஒருசிலர் இவனையும் மற்ற இருவரையும் போசைடோனுக்கும், யுரேனஸ்ஸுக்கும் பிறந்தவர்கள் என்பர். வினோத ராட்சசர்களான கோட்டோஸ், ஜீஸ்  ஆகியோரைப் பற்றிய விவரம் எதுவுமில்லை. ஆயினும் இந்த மூவரோடு என்செலாடஸ் என்னும் மற்றொரு வினோத ராட்சசனைப் பற்றிய குறிப்புகள் காணக்கிடக்கின்றன. இவன் டார்டரஸுக்கும் ஜீயாவுக்கும் பிறந்த நூறு கைகள், ஐம்பது தலைகளைக் கொண்ட மற்றொரு வினோத ராட்சசர்களிலே மிகுந்த வலிமையுடையவன் இவனே. ஒருசமயம் இவன் ஸீயஸுக்கு எதிரே சதி செய்தான். எனவே ஸீயஸும், அவனது படைகளும் மேசிடோனியாவில் உள்ள ப்ளேக்ராவில் வைத்து இவனை வீழ்த்தினர். இவன்மேல் ‘ஏட்ணா’ மலையை எடுத்து வீசிக் கொன்றதாகச் சொல்வர். இந்த ராட்சசன் விட்ட மூச்சு எரிமலைகள் கக்கும் நெருப்புச் சுவாலையாக வெளிவரும். ஸீயஸ் இவனை அதிக சக்தி வாய்ந்த மின்னலைக் கொண்டு கொன்றான் என்றும், இவன் மேல் “அத்தீனா தேவி”  சிசிலித் தீவை எறிந்து கொன்றாள் என்றும் கூறுவர்.

ஒற்றைக் கண் மல்லர்கள் (Cyclopes)

இவர்கள் யுரேனஸுக்கும் ஜீயாவுக்கும் பிறந்த அதிசயப் பிறவிகள். விநோதத் தோற்றமும் விலங்குகளின் குணமும் முரட்டு ஆகுதியும் நெற்றியின் நடுவில் அச்சமூட்டும் வகையில் அமைந்துள்ள வட்டமான ஒற்றைக் கண்ணோடும் இருப்பவர்கள். (சைக்கிளாப்ஸ் என்றால் வட்டமான கண்ணுடையவர் என்று அர்த்தம்) இவர்கள் புரோன்டஸ், ஸ்டீரிப்யாப்ஸ், அர்கஸ் என்னும் மூவர்கள் என்று கூறுவர். ஆனால் இந்தப் பெயர்களைத் தவிர வேறு சில பெயர்களும் கூறப்படுகின்றன. இவர்களில் போலிபிமஸ் (Polyphemus) மிகவும் பிரசித்திப் பெற்றவன். சிசிலியின் கடற்புறங்களில் இவனது ஆட்சி கொடி கட்டிப் பறந்ததாம். ஹோமர் இவர்களை ஒற்றைக்கண் கொண்டவர்களாக வர்ணிக்கவில்லை. போலிபிமஸ் மட்டுமே அப்படிப்பட்டவனாக இவரது காவியங்களில் காட்டப்பட்டுள்ளான்.

இவர்கள் சட்டத்துக்கோ வேறு வகை கட்டுப்பாடுகளுக்கோ அடங்காதவர்கள். இவர்கள் யுரேனஸின்கீழ் அடிமைகளாகக் கிடந்தனர். ஸீயஸ் விடுவிக்கப்பட்டு அவனது வெற்றிக்குக் கட்டியம் கூறியவர்கள். ஸீயஸால் எதிர்த்த டைட்டான்களைப் புறுமுதுகிடச் செய்தவர்கள் இவர்கள். அதன்பின் ஸீயஸிடம் சேவையாற்றினர். பின்னர் ஒரு காலத்தில் இவர்கள் ஹேபடஸ்ஸின் அடிமைகள் என்று கூறுவர்.

அரக்கர் உலகம்

இயற்கையின் இலக்கணத்தை மீறிய உடல் அமைப்பும், பிரமிக்க வைக்கும் ஆற்றலும், மலைக்க வைக்கும் முரட்டுத்தனமும், மிருகங்களே மிரளும் மூர்க்கத்தனமும் கொண்டவர்கள் அரக்கர்கள். இவர்களை மான்ஸ்டர்ஸ் என்று ஆங்கிலத்தில் கூறுவர். இவர்கள் மலைகளை எடுத்து பந்து விளையாடுவர். எறும்புகளை நசுக்குவதுபோல யானைகளை ஒற்றை விரலில் நசுக்கிக் கொல்வர். பசி எடுத்தால், மாமிச விரும்பிகளாக இருந்தால் பெரிய மிருகங்களைக்கூட உயிரோடு எடுத்து ஒரே விழுங்காக விழுங்குவர். பின் ஆலமரத்தை எடுத்துப் பல்குத்திக் கொள்வார்களாம். இவர்களிலே பலவகையினர் உண்டு. மனிதர்களைச் சாப்பிடும் நர மாமிசர்களும்கூட உள்ளனர். இவர்கள் மூச்சு விடும்போது நெருப்பு பற்றி எரியுமாம். இப்படியெல்லாம் இவர்களைப் பற்றி விவரிக்கப்படுகின்ற கிரேக்கப் புராணங்களில் காணப்படுகின்ற சிலரைக் குறித்து இதோ சில குறிப்புகள்:

ஜார்கான்கள் (Gorgons)

மூன்று அரக்கியர்களைக் குறிப்பிடும் சொல் இது. ஸ்தெனோ, யூரியேல், மெடூஸா ஆகியவை இவர்களுடைய பெயர்கள். இம்மூவரும் Phorcys மற்றும் Ceto ஆகியோருக்குப் பிறந்தவர்கள். மேற்படி இருவரும் போண்டஸ் மற்றும் ஜியாவுக்குப் பிறந்த அண்ணன், தங்கைதான்.  ஆயினும் அரக்க உலக வழக்கப்படி இவர்கள் இணைந்து மூன்று அரக்கியரைப் பெற்றெடுத்தனர். அவர்களே இந்த மூவர். மெடூஸா தவிர்த்து ஏனையோர்கள் இறவா வரம் பெற்றவர்கள். இவர்களுடைய கூந்தல் உயிர்ப் பாம்புகளாகச் சீறி எழுந்திருக்கும். கைகள் வெங்கலத்தால் ஆனவை. இவர்களுடைய உடலில் குத்திக் கிழித்துவிடும் ரம்பம் போன்ற செதில்களால் மூடப்பட்டிருக்கும். செம்பால் ஆன பயங்கரமான கூரியக் கடப்பாறை போன்று அமைந்த பற்கள் வாய்க்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்க, தூக்கலான காட்டுப் பன்றியின் முகவாய் போன்ற மூக்கும் கொண்டவர்கள். இவர்கள் யாரையாவது பார்த்துவிட்டால் அவர்கள் கல்லாகச் சமைந்துவிடுவார்களாம்.

வேறுசில புராணங்களில் மெடூஸா அழகுமிக்க கன்னிப் பெண். போசைடானுக்கு இவள் ஒரு பிள்ளையைக் கருச்சுமந்து பெற்றெடுத்தாள். அந்தப் பிரசவம் அத்தீனா ஆலயத்தில் நடந்துவிட்டதால் கன்னி தெய்வம் அத்தீனா கோபமுற்று இவளைச் சபிக்க இவளுடைய கூந்தலின் ஒவ்வொரு இழையும் ஒவ்வொரு பாம்பாக மாறியதோடு அகோரத் தோற்றம் கொண்டவளாகவும் மாறிவிட்டாளாம். இதன் பின் இவள் யாரைப் பார்த்தாலும்சரி, அவர்கள் அக்கணமே கல்லாய்ச் சமைந்துவிடுவார்கள்.

ஸீயஸுக்கும் டானேவுக்கும் பிறந்து மைசினா, டிரின்ஸ் ஆகிய பகுதிளை ஆளும் சிற்றரசன் பெர்சுயஸ். இவன் மன்னன் போலிடக்ட்ஸ் என்பவனுக்கு யாராலும் முடியாத, சாத்தியமே இல்லாத ஒரு காரியத்தை செய்துகொடுப்பதாக வாக்குறுதி தருகிறான். கோர்க்கான் மெரூசாவின் தலையைக் கொய்து வருவதாக ஒரு வாக்குறுதியை தருகின்றான். சோர்க்கான் மெரூசா பார்த்தாலே கல்லாய் மாறிவிடும்போது, அதையும் தாண்டி அதன் தலையை அறுக்க வேண்டுமானால் பறந்து செல்ல வேண்டும். அதோடு சேர்க்கான் மெரூசா, அரக்கியின் சகோதர அரக்கிகள் தங்கள் சகோதரியை யாராவது தாக்க வந்தால் சும்மா விடுவார்களா? அவர்களும் பறக்கும் ஆற்றல் பெற்றவர்கள். அவர்கள் பறந்துவந்து எதிரியை தொலைத்து விடுவார்கள். எனவே மெரூசாவின் தலையை வெட்டிவருவது என்பது யாராலும் நிறைவேற்றிடமுடியாத ஒன்று. அதை நிறைவேற்றியே முடிப்பேன் என்று பெர்சுயஸ்  சில மோகினிகளின் உதவியால் பறக்கும் பாதரட்சைகள் கொண்டு கண்ணுக்குப் புலப்படாமல் செய்துவிடும் தொப்பியை அணிந்தும் ஹெர்மெஸியிடமிருந்து பெற்ற வாளைக் கொண்டும் அவன் செய்த சபதத்தை நிறைவேற்றினான். மெடூஸாவின் தலையை வெட்டி எடுத்துக்கொண்டு பாலிடெக்டஸ் அவைக்கு அவன் வந்தபோது எல்லோரும் ஸ்தம்பித்து விட்டார்கள். மெடூஸாவின் ரத்தத்திலிருந்து பெகாஸஸ் என்ற பறக்கும் குதிரை பிறந்து வந்தது.

(தொடரும்)

கிரேக்கர்களின் தெய்வங்கள்

கிரேக்க இதிகாசக் கதைகள் /2

GREEK_GODS_AND_GODDESSESஆதிகால கிரேக்கர்களின் சமய நம்பிக்கை பல தெய்வ உருவ வழிபாட்டுக் கோட்பாட்டில் அமைந்திருந்தது. வானத்துக்கும் பூமிக்கும் தனித்தனியே கடவுள்கள் இருந்தனர். மலைகளுக்கும் கடலுக்கும் கடவுளர்கள் கற்பிக்கப்பட்டனர். சூரியனும் சந்திரனும் கடவுளர்களாகத் தெரிந்தனர். நெருப்புக்கும் நீருக்கும் கடவுளர்கள் இருந்தனர். காட்டுக்கென்றும் கழனிக்கென்றும் கடவுளர்கள் இருந்தனர். காட்டில் அலையும் மிருகங்களுக்கென்றும், கடலில் திரியும் மீன்களுக்கும் கடவுள்கள் உண்டு. வயலில் விளையும் தானியங்களுக்கும், காய்த்துக் குலுங்கும் கனிகளுக்கும் கடவுள்கள் உண்டு. இரும்படிக்கும் கருமானுக்கும் தனியாகக் கடவுள் இருந்தான். வேட்டைக்காரர்களுக்கு வேண்டியவை செய்ய தெய்வம் இருந்தது. போருக்குச் சென்றாலும் வெற்றியை ஈட்டித்தர கடவுள் இருந்தது. கல்விக்குத் தனித் தெய்வம் உண்டு. காதலுக்கும் அது போல் தனியே தெய்வம் உண்டு. செல்வத்துக்கும், சேமத்துக்கும் தனியே கடவுளோ தெய்வமோ கற்பிக்கப்பட்டிருந்தது. இப்படி எல்லாவற்றுக்கும் தனித்தனியே கடவுள்களைக் கற்பித்து வணங்கி வந்தனர்.

இதற்கிடையே ரோமர்கள் கிரேக்கர்களின் சமய நம்பிக்கைகளையும் இலக்கியத்தையும் தங்களோடு எடுத்துக்கொண்டும் ஏற்றுக்கொண்டும் அவற்றைத் தங்களுடைய சமயம், இலக்கியம் ஆகியவற்றில் புதிய வார்ப்புகளாக வடிவமைத்து, தாங்கள் அதுவரை வணங்கி நின்ற தெய்வங்களோடு கிரேக்கர்கள் வணங்கிவந்த தெய்வங்களை இணைத்தும் இணையாக்கியும் வைத்தனர். இதனால் கிரேக்கர்களின் ஆதிகால சமய இதிகாசக் கதைகளின் பெரும்பாலான சாயல்கள் ரோமர்களின் சமய இதிகாசக் கதைகளிலும் ஏற்பட்டு, படிக்கும்போது முதற்பார்வையில் குழப்பத்தை ஏற்படுத்துவதுண்டு. எனவேதான், கிரேக்கர்களின் முழுமுதல் கடவுளர்களாக உள்ள பன்னிருவர், ரோமர்களால் எப்படி எடுத்தும் ஏற்றும் கொள்ளப்பட்டு மாற்றுப் பெயர்களால் அழைக்கப்பட்டனர் என்பதையும் நாம் அறிந்துகொள்வது அவசியமாகின்றது.

கிரேக்கர்களுக்கு முழு முதற்கடவுள் அல்லது தலைமைக் கடவுள் ஸீயஸ் என்பவன். இதே கிரேக்கர்களுக்கு, இவனுக்கு முன்பு க்ரோனஸும், க்ரோனஸுக்கு முன்பு யுரேனஸும் இப்பதவியில் இருந்தனர். இந்த ஸீயஸ் (ரோமர்களால் ஜுபிடர் என்று அழைக்கப்பட்டான். இவனுடைய மனைவி கிரேக்கர்களுக்கு ஹீரா ரோமர்களுக்கு ஜுனோ அல்லது ஜோவ். இந்தப் பன்னிரண்டு முக்கிய மூலத்தெய்வங்கள் யார் யாரென்றும் இவர்களுக்குக் கிரேக்கர்களும் ரோமர்களும் இட்டு அழைத்த பெயர் என்னவென்றும் மேலும் அவர்கள் எவற்றுக்கு கடவுளராய் உள்ளனர் என்பதையும் இனிக்காண்போம்.

கிரேக்கர்களின்  கடவுள் / ரோமர்களின் கடவுள் / கடவுளின் துறை

 • ஸீயஸ் /  ஜுபிடர்   / தலைமைக் கடவுள், வான மண்டலத்தின் தேவன்
 • அபோலியன் / அப்போலோ / சூரியனுக்குக் கடவுள்
 • ஆரெஸ் / மார்ஸ் / போருக்குரிய கடவுள்
 • ஹெர்மஸ் / மெர்க்குரி / செய்தி பரப்புத் துறை; தூதுவச் சேவை; கட்டியங்காரன்
 • பொசைடான் / நெப்டியூன் / பெருங்கடல்களுக்குத் தலைமைக் கடவுள்
 • ஹபாயிஸ்டஸ் / வல்கன் / கருமான், கொல்லன், நெருப்புக் கடவுள்
 • ஹீரா / ஜுனோ / தலைமைப் பெண் தெய்வம்
 • டிமெட்டர் / சிரஸ் / பூமியின் தெய்வம் வேளாண்மைத் துறைத் தலைவி!
 • ஆர்டெமிஸ் / டயானா / நிலவுக்கும் வேட்டைக்கும் இவளே தெய்வம்
 • ஏத்தீனா / மினர்வா / கல்வி, அறிவு தெய்வம்
 • ஆஃப்ரோடைட் / வீனஸ் / காதல், அழகு தெய்வம்
 • ஹெஸ்டி / வெஸ்தா / வீட்டுக் குடித்தனம் தொடர்பான தெய்வம்

கிரேக்கர்கள், ரோமர்கள் ஆகியோரின் முக்கிய 12 கடவுளர்கள் மேற்குறிப்பிடப்பட்டவர்கள். இவர்களோடு மேலும் நால்வரும் கிரேக்கர்களால் வணங்கப்பட்டு வந்துள்ளனர்.

 • டியோனிசஸ் (Dionysos) : மதுவுக்கும் போதைக்குமான கடவுள். இவனை ரோமர்கள் பக்கஸ் (Bacchus) என்றழைப்பர். இந்தக் கடவுளை மூலதெய்வமாகக் கொண்டு பிற்காலத்தில் ஒரு தனிச்சமயம் உருவானது. இது ஒரு மறுமலர்ச்சி மதம்; அல்லது பரிணாமமடைந்த சமயம் என்று வர்ணிக்கப்பட்டது.
 • ஈராஸ் (Eros) என்னும் ரோமர்களின் கியூப்பிட் (Cupid) என்ற காதல் கடவுள் நமது ஊர் மன்மதன்.
 • ப்ளூடன் (Pluton) என்னும் ரோமர்களின் ப்ளூட்டோ (Pluto). இவன் பாதாள லோகத்துக் கடவுள்.
 • க்ரோனஸ் என்ற ரோமர்களின் சாத்தான் சனி பகவான். நல்ல நேரம், கெட்ட நேரம் இவற்றின் நிர்ணயகர்த்தா இவனே.
 • தனிச்சிறு தெய்வங்களும் வணங்கப்பட்டுள்ளன.
 • ஆஸ்குளோப்பியஸ் என்பவள் நோயிலிருந்து நிவாரணம் அளிக்கும் கடவுள்.
 • ஹெடஸ்  பாதாள லோகத்துக்குக் கடவுள்.
 • ஹைஜீயா அல்லது ஹைஜினியா  : இவள் ஆரோக்கிய வாழ்வுக்கு ஆதரவான தெய்வம். ஹைஜீன் என்ற சொல் இதிலிருந்தே வந்தது.
 • ஹைப்பரியான் : இவன் ஹெலியஸ் என்ற சூரியனையும், செலீன் என்ற சந்திரனையும் இயாஸ் என்ற வைகறைப் பொழுதுக்குரிய தேவதையையும் பெற்றெடுத்தவன்.
 • சட்யர்ஸ் என்பவள் காடு கழனிகளைக் காக்கும் மோகினித் தெய்வம்.
 • தெமீஸ்  : சட்டம், நீதி ஆகியவற்றின் தலைமை நாயகி.

தனித்தனி குணாதிசயங்களை உருவாக்கி, தனித்தனியே துறை வாரியாக கடவுளர்கள் இப்படி உருவாக்கப்பட்டு, வணங்கப்பட்டார்கள். மேலே உள்ளது ஒரு துளி மட்டுமே. இது போக ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.

டைட்டான்கள் என்னும் ஆதி தேவர்கள்

கிரேக்கர்களின் மூலக் கடவுள், முதலாவது கடவுள் யுரேனஸுக்கும் முதல் பெண் தெய்வமான ஜியாவுக்கும் பிறந்த பன்னிரண்டு மக்கள், டைட்டன்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ஆறு ஆண், ஆறு பெண் குழந்தைகள்.

ஆண் டைட்டன்களின் பட்டியல்

* ஓஷனஸ் (Oceanus)

* கூயஸ் (Coeus)

* கிரியஸ் (Crius)

* ஹைப்பிரியான் (Hyperion)

* ஐயபீடஸ் (Iapetus)

* க்ரோனஸ் (Cronus)

பெண் டைட்டன்களின் பட்டியல்

* திய்யா (Theia)

* ரீயா (Rhea)

* தெமிஸ் (Themis)

* நெமோசின் (Mnemosyne)

* ஃபோபே (Phoebe)

* தேத்திஸ் (Tethys)

உலகை ஆள்வதில் முன்னவனாகத் திகழும் யுரேனஸ், பூமிதேவி ஜீயா பெற்றெடுத்தவன்தான். எனினும், இவளைத் தவிர உலகில் வேறு பெண்ணினத்தைச் சேர்ந்தவள் யாரும் இல்லையென்பதால், இவளே இவனுக்கு மனைவியாகி பட்டத்து மகிஷியாகவும் ஆகிறாள். இப்படி யூரேன்ஸ்-ஜியா தம்பதியினர் பெற்றெடுத்தவர்கள்தான் இந்த டைட்டன்கள் என்று அழைக்கப்படுகின்ற ஆதி தேவர்கள். இவர்கள் தவிர நூறு கைகள் கொண்ட பிரம்ம அரக்கர்கள், சைக்கிளாப்ஸ் என்று அழைக்கப்படும் ஒற்றைக் கண் மாமல்லர்கள் என்று ஏராளமான பிள்ளைகள்.

ஆனால் ஏனோ தந்தை யுரேனஸ்ஸுக்கு இவர்கள் யாரையுமே பிடிக்கவில்லை. பெற்றெடுத்த பிள்ளைகளை, ஆஜானுபாகுவான தோற்றமும் அமானுஷ்ய ஆற்றலும் உடைய 12 டைட்டன்களையும் நூறு கைகள் கொண்ட பயங்கர தோற்றம் கொண்ட பிரம்ம அரக்கர்களான பிரியார, காட்டஸ், கியாஸ், என்செலடஸ் போன்றோரையும், ஒற்றை முழுவட்டக் கண்களுடன் முரட்டு ஆகுதி கொண்ட சைக்கிளாப்ஸ்களான அர்கஸ், ஸ்ட்ரோப்ஸ், புரோன்டஸ் ஆகியோரையும் யுரேனஸ் துரத்தியடிக்கிறான். தன் தாயுடன் பிறந்தவனான டார்டரஸிடம் இவர்கள் மாட்டிக்கொண்டு அடிமைகளாக அல்லல்படுகின்றனர்.

இந்நிலையில்தான் நாம் முன் அத்தியாயம் ஒன்றில் விவரித்துள்ளபடி கொடுமைக்கு உள்ளான டைட்டன்களின் ஒருவனான க்ரோனஸ் குமுறி எழுகின்றான். தன் தாய் ஜீயாவின் உதவியால் தன் தந்தை யுரேனஸ்ஸை வெட்டி வீழ்த்தி விட்டு ஆட்சியைப் பிடிக்கிறான்.

க்ரோனஸ் ஆட்சிப்படி ஏறிய சிறிது காலத்துக்குள் அவனது மனமும் மாறிவிடுகிறது. தன் தந்தையைப் போன்று இவனும் தன் சகோதரர்களை வெறுத்து, மீண்டும் அவர்களை அதே டார்டரஸின் நரக பாதாளத்துக்குத் துரத்திவிடுகிறான். மிச்சக்கதையை முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம்.

இனி டைட்டன்களில் சிலரைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்வோமா?

ஓஷனஸ் 

இவன்தான் டைட்டன்களில் மூத்தவன். தன்னுடன் பிறந்தவளான தேத்திஸ்  என்பவளை மணந்தான். இவள் மூலமாக ஓஷியனடைஸ் என்று அழைக்கப்படுகின்ற கடல் தேவ-தேவியர்களையும், நதி தேவ-தேவியர்களையும் மோகினிகளையும் பெற்றெடுத்தான். இவன்தான் கடலுக்குத் தேவன். இவனும் இவன் மனைவியும் ஹீராவுக்குத் துணையாகப் பல நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர். இவனுடைய மகள்தான் அழகும் அறிவுக் கூர்மையும் கொண்ட மெட்டீஸ் என்பவள். ஸீயஸின் இளமைக் காதல் இவளோடு ஆரம்பித்தது. இவள் தான் க்ரோனஸ்ஸை ஒழிக்க பானம் கலந்து ஸீயஸ் மூலமாக கொடுத்தனுப்பியவள்.

ஹைப்பிரியான்

இவன் ஸீயஸுக்குத் தோள் கொடுத்த முக்கியமான டைட்டன். ஹெலியாஸ் -சூரியன். செலன், நிலவு. இயோஸ் -வைகறை ஆகியோரின் தந்தை.

ஐயபிடஸ்

கடல் தெய்வம் ஓஷியனிட்டான கிலைமென் மூலமாக இவனுக்கு அட்லாஸ், புரோமித்தியஸ், எபிமித்தியஸ், மெனதியஸ் ஆகியோர் பிறந்தனர். மனித இனத்தின் மூதாதை இவனே என்ற கூற்றும் உண்டு.

(தொடரும்)

க்ரோனஸ் என்னும் கொடியோன்

கிரேக்க இதிகாசக் கதைகள் / 1

Rubens_saturnக்ரோனஸ் இப்பொழுது வான மண்டலங்கள் மற்றும் பிற உலகங்களுக்கெல்லாம் ஏகாதிபதி ஆகிவிட்டான். பேருலக ஆட்சி அதிகாரம் அவன் கையில் வந்ததால் அவனுடைய உடன்பிறப்புகளுக்கெல்லாம் அதிகாரத்தைப் பகிர்ந்துளித்துவிட்டு மாமன்னனாக வலம் வருகிறான். தங்கை முறையிலுள்ள ரியா என்பவளை மணந்துகொள்கிறான். அவருக்கும் பேருலகத்தின் பேரரசி என்ற பட்டம் கிடைத்துவிட்டது. ஆதி தேவன் யூரேனஸை ஆட்சியைவிட்டு அகற்ற மற்ற உடன்பிறப்புகளைப் போன்று தனக்கு உறுதுணையாக உதவி புரியாமல் ஒதுங்கிக்கொண்ட ஒரே டைட்டன் ஒஷனஸ் என்பவனை எப்பொழுதும் போல் கடல் தேவனாகவே இருக்குமாறு விட்டுவிட்டான் க்ரோனஸ். அவனால் தொல்லை இல்லை என்பதால் இந்த ஏற்பாடு.

ஆனால் ஒரு கவலை மட்டும் தீரவேயில்லை க்ரோனஸுக்கு. நான் என் தந்தையைக் கொன்று பதவியைப் பிடித்துக்கொண்டதைப்போல் நாளை என் பிள்ளைகள் என்னைக் கொன்றால் என்னாகும்? இந்த நினைப்பு அவன் நெஞ்சில் காட்சியாக விரிந்து பயமுறுத்துகிறது. எப்படியாவது தன் உயிரையும் பதவியையும் காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்று முடிவெடுக்கிறான். குழந்தை பிறந்தவுடன் அப்படியே வாயில் போட்டு விழுங்கிவிடவேண்டும் என்று தீர்மானிக்கிறான்.

ஒரு நாள் ரியா தன்னுடைய முதல் பெண் குழந்தையை ஆசையோடு எடுத்துவந்து தன் கணவனிடம் தருகிறாள். க்ரோனஸ் அந்தப் பச்சிளம் குழவியைக் கையிலே வாங்கி ஒரே விழுங்காக விழுங்கி விடுகிறான். அடுத்தடுத்து பிறந்த இரு பெண் சிசுக்களையும் இதேபோன்று விழுங்கி விடுகிறான். பிறகு பிறந்த இரு ஆண் குழந்தைகளுக்கும்கூட இதே கதிதான். கடைசியாக ரியா கர்ப்பமடைந்தபோது, ரியாவின் தாய் ஜியா அவளிடம், “இனி பிறக்கின்ற குழந்தையை க்ரோனஸிடம் காட்டாதே. அவன் கேட்டால், குழந்தை அளவுக்கு ஒரு கல்லைத் துணியிலே சுற்றி  இதுதான் குழந்தை என்று கொடுத்துவிடு. கல்லை விழுங்கட்டும் அந்தக் கல்நெஞ்சுக்காரன். பின் நடக்கப் போவதைப் பார்” என்றாள். இதன் பிறகு ரியா மலைகள் சூழ்ந்த க்ரீட் தீவுக்குச் சென்று, டிக்ட் என்ற மலைப் பொதும்பில் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அந்தக் குழந்தைதான் ஸீயஸ். தன் பணியாட்களிடம் குழந்தையை ஒப்படைத்து, அத்தீவின் மன்னனான மெலிஷியஸ் என்பவனின் புதல்வியான மோகினிகள் – இடா, அட்ரேஸ்டியா ஆகியோரின் கவனிப்பில் க்ரோனஸுக்குத் தெரியாமல் வளர்க்குமாறு கேட்டுக்கொள்கிறான். ஆயுதம் தரித்தவாறு, பிள்ளையைப் பாலூட்டி சீராட்டி தோளிலிட்டு, தூங்க வைத்தும் விளையாடச் செய்தும் வேண்டிய வண்ணம் கடமைகளை எல்லாம் தவறாது மூன்று கியூரிடஸ்கள் செய்கிறார்கள். இவர்கள் மூவர் அல்ல, பதின்மர் என்ற கூற்றும் உண்டு. இடாவும், அட்ரேஸ்டியாவும் குழந்தை ஸீயஸைக் கொஞ்சுவதும் கொள்ளைப் பாசமும் பிரியமும் ததும்ப, கொண்டாடுவதுமாக இருக்கிறார்கள். அன்னையின் அருகாமையும் அரவணைப்பும் இல்லாத குறை தெரியாது வளர்கிறான் ஸீயஸ்.

ரியா திட்டப்படி கருங்கல்லை க்ரோனஸிடம் கொண்டுபோய் கொடுக்கிறாள். க்ரோனஸ் அதையும் கையிலே வாங்கி,  வாயைத் திறந்து விழுங்கிவிடுகிறான்.

காலம் ஓடுகிறது. குழந்தையாக இருந்த ஸீயஸ் இப்பொழுது குமரனாக மாறிவிடுகிறான். வாலிபத்தின் வனப்பும் வசீகரமும் அவனைப் பொலிவுறச் செய்து பார்ப்பவரை எல்லாம் கவர்ந்து இழுக்கிறது. ரியா தன் மகனை யாரோ ஒருவனுடைய பிள்ளையைப் போல் அழைத்துக் கொண்டு அரண்மனைக்குச் செல்கிறாள். ஸீயஸும் ரியாவும் சேர்ந்து க்ரோனஸைத் தீர்த்துக் கட்டுவது என்று தீர்மானிக்கிறார்கள். க்ரோனஸ் இதுவரை விழுங்கிய தன் குழந்தைகளை முதலில் வெளிவரச் செய்யவேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். அதற்கு அவன் வாந்தி எடுத்தாகவேண்டும். அதற்கொரு மருந்து தயாரித்துத் தருகிறாள் ரியாவின் சகோதரன், ஓஷனஸின் மகள் மெட்டீஸ்.

ஒரு நாள் க்ரோனஸ் குடிப்பதற்கு ஏதேனும் கொண்டுவரச் சொல்ல, இதுதான் தகுந்த சந்தர்ப்பம் என்று எண்ணி, மெட்டீஸ் ஒரு பானத்துடன் மருந்தைக் கலந்து ஸீயஸிடம் கொடுத்து,  அதை க்ரோனஸ் குடிப்பதற்குக் கொடுக்கச் சொல்கிறாள். மகன் என்று அறியாமலேயே தனக்குப் பானத்தை எடுத்து வந்த ஸீயஸிடமிருந்து க்ரோனஸ் அதை வாங்கிக் குடிக்கின்றான். அவ்வளவுதான், குமட்டல் ஏற்படுகிறது. குடல் புரளுகிறது. கண்கள் சுழல்கின்றன. தள்ளாடுகின்றான் க்ரோனஸ். வயிற்றிலிருந்து ஒரு புயல், வேகமாகப் புறப்பட்டு வந்தது போல் வாந்தி எடுக்கிறான். முதலில் அவன் வாயிலிருந்து வெளிப்பட்டு வந்த விழுந்தது கருங்கல்தான். அதன் பிறகு குழந்தைகள் ஒவ்வொன்றாக வந்து குதிக்கின்றன. சில குழந்தைகள் வளர்ந்திருந்தன. சிலர் வாலிபப் பருவத்தை எட்டியிருந்தனர்.

க்ரோனஸுக்குப் புரிந்துவிடுகிறது. தன் முன்னால் நிற்பவன் தன் மகன் என்பதை அவன் உணர்கிறான். ஆத்திரமும் ஆங்காரமும் கொண்டு ஆர்ப்பரிக்கிறான். ஸீயஸையும் அவன் உடன் பிறப்புக்கள் அத்தனைப் பேரையும் ஒழித்துக் கட்டியே தீருவேன் என்று சபதம் செய்கிறான். பூதாகர உடலுடன் போர்ப் பிரகடனம் செய்கிறான்.

சமரில் வென்றான் ஸீயஸ்

போர் தொடங்கிவிட்டது. ஸீயஸுக்கு முன் பிறந்த மூத்தவர்களான ஹேடஸ், பொசிடான் ஆகிய இருவரும் போர் உடை பூண்டு, ஆயுதம் தாங்கி ஸீயஸுக்குப் பக்க பலமாக நிற்க, அவனுடைய உடன் பிறந்த சகோதரிகளான ஹேஸ்டியா (Hestia), திமெதர் (Demeter), ஹீரா (Hera) ஆகியோர் தங்களுக்கேற்ற வகையில் தன் சகோதரன் வெற்றி காணவும் தந்தை முறியடிக்கப்படவும் வேண்டிய ஆயத்தங்களைச் செய்யலாயினர். பாட்டி ஜியாவினால் பெற்றெடுக்கப்பட்ட அரக்கர்கள் சிலரை வைத்துக்கொண்டு போரைத் தொடங்கிவிடுகிறான் ஸீயஸ்.

க்ரோனஸ், டைட்டன்களான தன் உடன்பிறந்தார் அனைவரையும் ஒன்றுகூட்டி விடுகிறான். ஆனால் கடல் தேவனான ஓஷனஸ் மட்டும் பட்டுக்கொள்ளாமல் ஒதுங்கிவிடுகிறான். மூர்க்கன் க்ரோனஸ், அவனது சகோதரர்களான டைட்டன்கள், அவர்கள் காவலர்கள், ஏவலர்கள் என்று படை திரள்கிறது. மற்றொரு பக்கமும் ஸீயஸ், அவனது சகோதர-சகோதரியர், துணைக்கு சில அரக்கர்கள் என்று ஒரு படை.

தெஸ்ஸாலி என்ற இடமே போர்க்களமாகி விடுகிறது. ஸீயஸும் அவனது படையும் ஒலிம்பஸ் மலையைக் கைப்பற்றிவிடுகின்றனர். க்ரோனஸின் படையினர் ஒத்ரிஸ் மலையைப் பிடித்து, நிலைப்படுத்திக்கொண்டனர். டைட்டன் படையின் பலப்பிரயோகம் ஸீயஸின் படையினரைத் திணறடிக்கின்றது. இப்படியே இருபடையினரும் தாக்கிக் கொள்வதும் திணறிப்போவதுமாக பத்தாண்டு காலத்தைக் கழிக்கிறார்கள்.

ஸீயஸின் பாட்டி ஜியா, யூரேனஸைப் பெற்றெடுத்துப் பின் அவனை மணந்து அதன்பின் அவனையே ஒழித்துக் கட்ட க்ரோனஸுக்குத் துணை நின்றவள். இப்பொழுதோ, க்ரோனஸை ஒழித்துக்கட்ட ஸீயஸுக்கு உதவ முன்வந்தாள். அவளது ராஜ வியூகம் செயல்படத் தொடங்கியது. அவளுக்குப் பிறந்த சைகிளாப்ஸ் என்ற ஒற்றைக் கண்ணர்களையும் மற்றொரு பிரிவினரான நூறு கரங்கள் கொண்ட அரக்கர்களையும் ஸீயஸ் பயன்படுத்தினால் வெற்றி கிடைக்கும் என்று கணிக்கிறாள். ஆனால் இவர்களைத் தன் சகோதரனான டான்டரஸ் சிறைபிடித்துள்ளான் என்பதை அறிந்து அவர்களை விடுவிக்கச் சொல்கிறாள். இது ஓர் அசாத்திய காரியம். டான்டரஸ் கேம்ப் என்ற பூதத்தின் பொறுப்பில் இவர்கள் சிக்கியிருந்தனர்.

ஜியா ஸீயஸுக்குத் துணையாக மின்னல், இடி இரண்டையும் அனுப்புகறாள்.ஸீயஸ் தன் படை, இடி, மின்னலோடு சென்று தன் உடன் பிறந்தவர்களான ஹேடல் அளித்த தலைக்கவசத்தை அணிந்துக்கொண்டு மற்றொரு சகோதரன் போசிடான் அளித்த அற்புத வாளை ஏந்தியபடி செல்கிறான். மின்னல் ஒளி கண்டு கேம்ப் கண்கள் கூசுகின்றன. இடியும் இடிக்க, ஒரே கணத்தில் கேம்ப்பை வெட்டி வீழ்த்துகிறான் ஸீயஸ். சைக்கிளாப்ஸ் மற்றும் அரக்கர்களை விடுவிக்கிறான்.

பெரும் பலம் திரண்டதும் ஸீயஸ் க்ரோனஸின் டைட்டன்களை எல்லாம் புறமுதுகிட்டு ஓடச்செய்தான். வெற்றி முரசு கொட்ட எதிரிகளை விரட்டிக்கொண்டே வருகிறான். முதுகிலும் தலையிலும் பலமாக அடிபட்டுப் பெரிய உடம்பைத் தூக்க முடியாமல் மூச்சு வாங்கியபடி, வானுலக அரசைவிட்டு ஓடுகிறான் க்ரோனஸ்.

ஒரு காலத்தில் தன் தந்தையை எந்தக் கடலில் வெட்டி வீசினானோ, அதே கடலுக்கு அடியில் அபயம் புகுந்தான் க்ரோனஸ். அங்கும் அமைதியாக அவனால் இருக்கமுடியவில்லை. தன்னை ஸீயஸ் துரத்துவதாகவோ அல்லது அவனைச் சார்ந்தவர்கள் துரத்துவதாகவோ எண்ணிக்கொண்டு, குனிந்தபடி நீர் வழிய, வழிய ஒரு கையைத் தொங்கப்போட்டுக்கொண்டு தலையை ஒரு பக்கமாகச் சாய்த்துக்கொண்டு கடல்நீரின் அடியில் ஓடிக்கொண்டே இருக்கிறான். இவனைக் கிழட்டுச் சனி என்று ஒதுக்கி வைத்துவிட்டார்கள். இவனது பார்வை யார் மீது விழுந்தாலும் அல்லது இவனை யார் பார்த்தாலும் அவர்களுக்குக் கஷ்டகாலம் ஆரம்பித்துவிடுமாம்.

மணிமுடியும் மணமாலையும்

பத்தாண்டுக்காலப் போர் முடிந்தது. பாட்டி ஜியாவின் தந்திரமும் தயவும் ஸீயஸை வெற்றி வேந்தனாக ஆக்கிவிட்டன. க்ரோனஸையும் அவனது சக டைட்டன்களையும் முறியடித்து வாகை சூடுகிறான் ஸீயஸ். வான மண்டலத்துக்கும் பூவுலகத்துக்கும் இனி ஸீயஸே சக்கரவர்த்தி. எனவே அவன் ஈடும் இணையுமற்று அரியணை அமர்கின்றான்.

பட்டத்து ராணியாக, பக்கத்தில் ஒருத்தி இருந்தால் தானே சிம்மாசம் மேலும் பொலிவு பெறும்? பாட்டி ஜியா கைப்பிடித்துக்கொடுக்க தன் சகோதரியான ஹீரா என்றழைக்கப்படும் ஜூனோ (Juno) என்பவளை மணமுடிக்கிறான். தன் தந்தையின் உடன் பிறப்புகளான ஆதி தேவியரும், பாட்டி ஜியா பெற்றெடுத்த மற்றவர்களும், சகோதர சகோதரிகளும் பிரசன்னமாகி இவனது திருமணத்தை நடத்திவைக்கின்றனர். வான மண்டலமே விழாக்கோலம் பூணுகிறது.

பாட்டி ஜியா, திருமணப் பரிசாகத் தங்க ஆப்பிள்களை ஹீராவுக்கு வழங்கினாள். இந்தத் தங்க ஆப்பிள்களைப் பாதுகாப்பதற்கு ஓர் ஏற்பாடும் செய்யப்படுகிறது. ஹெஸ்பெரிடஸ் என்ற மூன்று சகோதரிகள் இவற்றைக் காவல் காக்கவேண்டும். மேலும் லெடான் என்ற அரக்கன்/அரக்கியும் கூடுதல் பாதுகாப்புக்கு இருக்கவேண்டும். இந்த ஆப்பிள்களின் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. அதனைப் பிறகு பார்க்கலாம்.

(தொடரும்)

கிரேக்கம் உங்களை வரவேற்கிறது

கிரேக்க இதிகாசக் கதைகள் / முன்னுரை

Ancient-Greek-Mythologyவிலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இல்லாத ஒரு சிறப்பியல்பு மனிதனுக்கு மட்டும் உள்ளது. அவன் சிந்திக்கத் தெரிந்தவன். அவனால் கற்பனை செய்யமுடியும். கற்பனைகள் அவனை வளப்படுத்தின, உற்சாகப்படுத்தின.  அச்சம், வீரம், காதல், இரக்கம் போன்ற உணர்வுகளின் பிரவாகத்தில், ஒருவகை ‘கலா மோகத்தில்’ அவன் தன்னை ஆட்படுத்திக்கொள்ள அவை உதவின.

மனிதனின் கலை வெளிப்பாடு என்பது பண்டைய காலம் முதலே தொடங்கிவிட்டது.  பூமி உருண்டையின் எல்லாப் பக்கங்களிலும் பேசப்படுகின்ற கதைகளே இதற்குச் சான்று.  விதவிதமான மொழிகளில், விதவிதமான வடிவங்களில் இந்தக் கதைகள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பிரதேசங்களில் இருந்து உருவாயின. இந்தத்  தொன்மக் கதைகள் அனைத்தும் செவிவழிக் கதைகளாக பல தலைமுறைகளைத் தாண்டி நம்மை வந்தடைந்துள்ளன. இருந்தும் இன்றும் அவற்றை வாசிக்கும்போது நம் நெஞ்சம் கொள்ளை போய்விடுகிறது.

அமானுஷ்ய விஷயங்களின் மீது மனித சமூகம் காலங்காலமாகக் கொண்டிருக்கும் ஈர்ப்பும் ஈடுபாடும் இக்கதைகளில் வெளிப்படுகின்றன. இக்கதைகளின் மூலப் பெருமை தங்களுடையதே என்ற உரிமைக் குரலொலிகள் எல்லாப் பக்கங்களிலும் கேட்கின்றன. உண்மையில் இவை மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானவை என்றுதான் சொல்லவேண்டும். கிரேக்கம், ரோமாபுரி, பாரசீகம், எகிப்து, சீனா என்று உலகம் முழுவதிலும் தொன்மக் கதைகள் உருவாகியுள்ளன. சமயம் இந்தக் கதைகளின் அடிப்படையாக அமைந்துள்ளது. இந்தியப் புராணங்களிலும் இதிகாசங்களிலும்கூட இதனைக் காணலாம்.

இந்நூல் கிரேக்கத் தொன்மக் கதைகளை அறிமுகம் செய்து வைக்கிறது. கிரேக்க நாட்டுக் கதைகளுக்குத் தனி மகத்துவம் உண்டு. நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற எத்தனையோ சொற்பதங்களுக்கு கிரேக்கக் கதைகள் மூலமாக அமைந்துள்ளன. அட்லஸ், ஏரியன், டைட்டன், ஒலிம்பிக்,  ஹெர்குலஸ், அப்பல்லோ என்று நமக்குப் பரிச்சயமான கிரேக்கப் பெயர்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் என்னை மிகவும் கவர்ந்தவை கிரேக்கக் கதைகளே. ஹெர்குலிஸும், ஹெலன் ஆஃப் ட்ராயும் மறக்கமுடியாத பாத்திரங்கள். இந்தச் சுவாரஸ்யமான கிரேக்கக் கதைகளில் இந்தியத் தொன்மக் கதைகளின் அம்சங்களும் அடையாளங்களும், ஏன் கதை நிகழ்வுகளும்கூட அதிகமாகக் காணப்படுவதை ஒருவர் உணரலாம்.

***

ஒலிம்பஸ் மலைத் தொடர்

மாசிடோனியாவையும் தெஸ்ஸாலியையும் அணைத்துக் கொண்டு, கிழக்குப் பக்கமாய் ஆழக் கடலைத் தொட்டுக் கொண்டு, வானத்தை 9800 அடிகள் முட்டிக்கொண்டு பிரமாண்டமாக விரிந்திருக்கிறது ஒலிம்பஸ் என்னும் மலைத்தொடர். கிரேக்க நாட்டின் ஆதர்சனம் இது.

கிரேக்கத்தின் மிகவும் உயரமான, மாபெரும் மலைத்தொடர் மட்டுமல்ல ஒலிம்பஸ். பண்டைய கிரேக்க மக்கள் புனைந்த கதைகளின் மையமும் இதுதான்.  நாயகர்கள், நாயகிகள், தெய்வங்கள் என்று பல சுவாரஸ்யமான கதபாத்திரங்கள் ஒலிம்பஸை சுற்றியே படைக்கப்பட்டுள்ளன. யதார்த்தத்தையும் பகுத்தறிவையும்மீறி உருப்பெற்ற கற்பனைக் கடவுள்களை கிரேக்கர்கள் ஒலிம்பியன் கடவுள்கள் என்றே அழைத்தனர்.

இந்த அறிமுகத்தோடு இனி கதைகளுக்குள் நுழையலாம்.

***

1) ஆதிதேவன் யுரேனஸ்

uranusஜீ அல்லது ஜீயா (Gaea) என்பவள் கிரேக்கர்களின் ஆதி தெய்வம். இவள் பிரபஞ்சங்களும் படைப்புகளும் உருவாகும் முன்பே தோன்றியவளாம். இவளுக்கு டான்டரஸ் என்ற சகோதரன் உண்டு. பூமி வடிவத்தில் இருந்த  ஜீ துணை யாருமில்லாமல் வான் தேவனான யுரேனஸ்ஸையும், மலைகளின் தேவனான ஊரியாவையும் (Ourea) கடல் தேவனான போன்ட்டஸையும்  (Pontus) பெற்றெடுக்கின்றாள்.  பின்னர் யுரேனஸ்ஸை மணந்து கொள்கின்றாள். யுரேனஸ் தேவலோக மன்னனாக முடி சூட்டிக் கொள்கின்றான்.

இவர்களது இல்லறத்தின் அடையாளமாக ஒற்றைக் கண்ணர்களையும் (Cyclopes). பின்னர் பிரமாண்ட தோற்றமும் அமானுஷ்ய ஆற்றலும் கொண்ட பன்னிரு ஆதி தேவர்களையும்  (Titans)  நூறு கைகளை உடைய மூன்று அரக்கர்களையும் ஜீ பெற்றெடுக்கிறாள். ஆனால் ஒற்றைக் கண்ணர்களையும் அரக்கர்களையும் காணப் பிடிக்காமல் யுரேனியஸ் அவர்களை பூமியின் வயிற்றில் அடைத்து வைக்கின்றான். பூமியான ஜீக்கு இது தாளமுடியாத வேதனையை ஏற்படுத்துகிறது. இதற்கு ஒரு முடிவு காண வேண்டுமென்று நினைக்கிறாள்.

மேலும், யுரேனஸ் ஆஜானுபாகு தோற்றம் கொண்ட டைட்டன்களையும் விரட்டி, டான்டரஸ் (Tantarus) என்ற தேவனிடம் (இவனுடைய மாமனிடம்) ஒப்படைத்து அவனிடம் அடிமைப்பட்டுக் குற்றேவல் புரிய விட்டவிடுகிறான். இந்நிலையில் டைட்டன்களுக்குத் துணிச்சல் ஊட்டி மாற்றத்தை ஏற்படுத்தி, புரட்சி ஒன்றை நடத்தி தந்தை யுரேனஸைப் பதவியைவிட்டு நீக்கி, தான் தலைமைப் பீடத்தில் அமர வேண்டுமென்று திட்டம் தீட்டுகிறான் டைட்டன்களில் ஒருவனான க்ரோனஸ்.

இதனை எப்படியோ அறிந்துகொண்ட இவனுடைய தாய் ஜீ, க்ரோனஸ்ஸைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறாள். யுரேனியஸின் கொடுமைகளை ஒடுக்க ஒரு கருவியாக க்ரோனஸ் பயன்படுவான் என்று ஜீ நம்புகிறாள். தந்தையைக் கொன்றால் பதவியை நீ கைப்பற்றிக்கொள், நான் உனக்கு உதவுகிறேன் என்கிறாள் ஜீ. கூடவே, அரிவாள் ஒன்றைத் தயார்செய்து அவனுக்குக் கொடுக்கிறாள். சரியான சந்தர்ப்பம் வரும்போது சொல்கிறேன், செயல்படு என்றும் அறிவுரை சொல்கிறாள்.

ஒருநாள் யுரேனஸுடன் உறங்கும்போது, மறைவாகப் பதுங்கியிருந்த க்ரோனஸுக்கு ஜீ சமிக்ஞை அளிக்கிறாள். உடனே அவன் யுரேனஸ் மீது பாய்கிறான். ஆயுதத்தையும் செலுத்துகிறான். யுரேனஸின் உடல் பாகங்களை வெட்டி துண்டுகளாக்கி கடலில் தூக்கி வீசுகின்றான். ஆனால், க்ரோனஸ் யுரேனஸை வெட்டும்போது வெளியான ரத்தம் ஜீ மீது பட்டுவிடுகிறது. உடனே ப்யூரிஸ் (Furies) என்ற குண்டோதரனும், மெலியா என்ற மோகினியும் (Ash nymphs) தோன்றுகின்றனர். யுரேனஸின் உடல் பாகங்கள் கடலில் விழுந்தவுடன் கடல் கொந்தளிக்க, நுரை பொங்குகிறது. அலைகள் எழுகின்றன. அந்த நுரைப்பின் வழியே ஆஃப்ரோடைட் என்ற அழகு தேவதை தோன்றி வருகிறாள். தந்தையை ஒழித்துக்கட்டிவிட்டு க்ரோனஸ் ஆட்சியைப் பிடிக்கிறான்.

யுரேனஸை ஒழித்துக்கட்டுவதில் க்ரோனஸுடன் உடன் பிறந்தவர்களான டைட்டன்கள் எல்லோரும் ஒன்றுபட்டு நின்றபோதிலும், ஓஷனஸ் என்ற டைட்டன் மட்டும் ஒதுங்கி நிற்கிறான். மேலும், தன் தந்தையான யூரேனஸை முறையற்ற விதத்தில் வீழ்த்தினார்கள் என்ற மனக்குறை இவனுக்கு இருந்தது. (இதனால்தான் இதேபோன்ற ‘ஆட்சிக்கவிழ்ப்பு’ நிகழ்வு மறுபடி நேரிட்ட வேளையில் இதே க்ரோனஸை எதிர்த்து அவனது மகன் ஸீயஸ் போர்க்கொடி தூக்கியபோதுக்ரோனஸுக்குத் துணையாக எல்லா சகோதர டைட்டான்களும் உடன் நின்றபோது ஓஷனஸ் மட்டும் ஒதுங்கிக் கொள்கிறான்).

யுரேனஸின் ஆதிக்கம் மறைந்து, க்ரோனஸின் ஆட்சி தொடங்குகிறது. ஜீயா போன்டஸ் (Pontus) மூலமாக ஏராளமான குழந்தைகள் பெற்றுக் குவிக்கிறாள். நீரஸ், தாவுமஸ், போர்சிஸ், செட்டோ, யூரிபியா ஆகியோரைப் பெற்றெடுக்கிறாள்.  இவர்களைத் தவிர ஏராளமான அரக்கர்கள் அரக்கியர்களையும் உருவாக்குகிறாள். எகிட்னா என்ற பயங்கர அரக்கியையும் தைபூன் என்ற ராட்சசஅரக்கனையும் டான்டரஸ் மூலம் பெற்றெடுக்கிறாள். இவர்களில் தைபூன் என்பவன் பின்னர் ஸீயஸை எதிர்த்துப் போர் புரிந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.

(தொடரும்)