ஒரு பேரழகியின் கதை

விக்கிரமாதித்தன் கதைகள் / 15 

1082105906வேதாளத்தை மரத்திலிருந்து இறக்கி தனது தோளில் போட்டுக்கொண்டு விக்கிரமாதித்தன் நடக்கத் தொடங்க அது மீண்டும் கதை சொல்லத் தொடங்கியது.

‘பாரதத்தின் தென்கிழக்கிலே வல்லபாலன் என்னும் அரசன் கௌசாம்பி என்னும் பட்டணத்தை ஆண்டு வந்தான். அந்தப் பட்டணத்தில் வசித்து வந்த முத்தநாதன் என்பவர் ஒரு நேர்மையான வணிகர். அவரே அந்தப் பட்டணத்தின் வியாபாரிகளுக்கெல்லாம் தலைவராகத் திகழ்ந்தார். வணிகத்தில் வாய்ச் சொல்லில் சத்தியமும், நாணயமும் இரண்டு கண்களாக மதித்த முத்தநாதன் வாழ்விலும் நீதி, நியாயம் தவறாமல் வாழ்ந்தார்.

முத்தநாதனுக்கு ஒரு மகன். ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள். மகன் வித்யாதரன் தந்தைக்குத் துணையாக வியாபாரத்தைப் பார்த்துக்கொண்டான். மகள் வித்யாவதி மிகுந்த குணவதி. தைரியசாலி. அதீத இரக்க குணம் கொண்டவள். தனது தந்தையைப் போலவே வாக்கு சுத்தம் கொண்டவள். ஒருவருக்குக கொடுத்த வாக்கைக் காப்பாற்ற தனது உயிரையும் கொடுக்கத் துணிவாள். அதுமட்டுமல்ல, தேவலோகத்து மங்கைகளான ரம்பா, ஊர்வசி, மேனகைகளே பொறாமை கொள்ளும் அழகு படைத்தவள் வித்யாவதி. மன்மதனின் மனைவியான ரதி தேவியே வெட்கம் கொள்ளும் அளவுக்கு மோகன வடிவம் கொண்டவள்.

அவளது இந்தப் பேரழகுதான் அவளுக்கு ஆபத்தைக் கொண்டு வந்தது. ஒருநாள் மாலை நேரம். வித்யாவதி கோயிலுக்குச் சென்று விட்டு நந்தவனம் வழியாக தனிமையில் வந்தபோது மதனகாமன் என்பவன் அவளை எதிர்கொண்டு இடைமறித்தான். மதனகாமன் வித்யாவதியின் சகோதரன் வித்யாதரனின் நண்பன்.

‘வித்யாவதி, நான் உன்னிடம் சற்றுப் பேசவேண்டும்!’ என்றான் மதனகாமன்.

‘அதற்கு இதுதானா இடம்? சரி சொல்லுங்கள்!’ என்றாள் வித்யாவதி.

‘வித்யாவதி உனது பேரழகு என்னைப் பாடாய்ப்படுத்துகிறது. உனது வனப்பான பருவமும், திரண்ட எழிலும் என் உள்ளத்தை நார் நாராகக் கிழித்துப் போடுகிறது. நான் உன்னை உயிருக்குயிராகக் காதலிக்கிறேன் வித்யாவதி. இனிமேலும் என்னைத் தவிக்கவிடாதே. என்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்கு கொடு, என் தாபத்தைத் தீர்த்து வை!’ – இறைஞ்சினான் மதனகாமன்.

வித்யாவதி திடுக்கிட்டாள். மதனகாமன் இப்படிச் சொல்வான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. அவனது காதலை அவளால் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. ஏனெனில் அவள் தந்தை முத்தநாதன் வித்யாவதிக்கென அவர்களது உறவிலேயே பக்கத்து ஊரிலுள்ள குணசேகரன் என்கிற வணிகர் குல இளைஞனுக்கு மணம் பேசி நிச்சயித்திருந்தார். விரைவிலேயே அவளது திருமணம் நடக்கவிருந்தது. இந்தச் சூழலில் மதனகாமனின் கோரிக்கை அவளுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

அவள் மதனனிடம், ‘தயவுசெய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். தங்களின் காதலை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. என் தந்தை ஏற்கெனவே வேறோர் மாப்பிள்ளையைப் பார்த்து எனக்கு நிச்சயம் செய்து விட்டார். இன்னும் சிறிது நாட்களில் எனக்குத் திருமணம் நடைபெறப் போகிறது. என்னை மறந்து விடுங்கள்!’ என்றாள்.

‘இல்லை வித்யாவதி. உன்னை என்னால் மறக்க முடியாது. உன்னை அடையாமல் என் வேட்கை தீராது. தயவுசெய்! உன் காலில் விழுந்து கேட்கிறேன். கருணை காட்டு. என்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்கு கொடு!’ – என்று கெஞ்சினான்.

வித்யாவதி எத்தனையோ விதமாக அவனுக்கு நற்போதனைகள் செய்தபோதும் அவன் கேட்பதாயில்லை. மண்டியிட்டான்… கண் கலங்கினான்… விம்மினான்… வெடித்தான்… உண்மையாகவே அவளது பாதங்களில் விழுந்து புரண்டு அழுதான்.

கடைசியாக, ‘நீ எனக்கு இல்லையென்றால் இக்கணமே, மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொள்வேன்!’ என்று மிரட்டினான்.

வித்யாவதி திடுக்கிட்டாள். ‘தயவுசெய்து உங்களை கெஞ்சிக் கேட்கிறேன். அப்படியெல்லாம் செய்து விடாதீர்கள். இது நியாயமில்லை. இன்னொருவர் மனைவியாக நிச்சயிக்கப்பட்ட நான் உங்களை எப்படி மணந்து கொள்ள முடியும். இதனால் எனது தந்தையல்லவா சத்தியம் தவறியவர் என்கிற பழிச்சொல்லுக்கு ஆளாகிப் போவார்? கருணைகூர்ந்து உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்!’ என்று கூறினாள்.

மதனன் முடிவாக, ‘சரி, நீ என்னை மணந்து கொள்ள வேண்டாம். உனது இந்த அழகுதான் என்னை அலைக்கழிக்கிறது. இதை ஒருமுறை சுவைத்து எனது மோகம் தணிந்துவிட்டால் எனது இந்த வேட்கை தீர்ந்து விடும் என்பது நிச்சயம். இப்படியாவது ஒரே ஒருமுறை எனக்கு உதவி செய்!’ என்று கேட்டான்.

மதனகாமனின் இந்த நடத்தை வித்யாவதியை வேதனைப்படுத்தியது. இறுதியில் அவள் ஒரு முடிவுக்கு வந்தவளாக, மதனனிடம், ‘ஐயா! உங்களது தாபம் எனக்குப் புரிகிறது. நீங்கள் என்மீது கொண்டது காதலல்ல, காமம்! சரி நீங்கள் கேட்ட உதவியை நான் கட்டாயம் நிறைவேற்றித் தருகிறேன். ஆனால் முதலில் என் திருமணம் முடியட்டும். எனது தந்தை என்னை கன்னிகாதானம் செய்து தரும்போது அவரது சத்தியத்தைக் காக்கும் விதமாக மணவறையில் நான் கன்னியாக இருக்கவேண்டியது முக்கியம். இல்லையேல் எனது தந்தை வாக்கு தவறியவர் ஆவார். திருமணத்துக்குப் பிறகு நானே உங்களைத் தேடி வந்து என்னைத் தருகிறேன்!’ என்று வாக்குறுதி அளித்தாள்.

ஆனால் மதனகாமன் இதற்கு ஒப்புக் கொள்ளாதவனாக, ‘மற்றவன் எச்சில் செய்து தருவதை சுவைக்கக் கூடியவன் அல்ல நான். வித்யாவதி, உன்னை எனக்குத் தருவதாக வாக்கு தந்தாய். மிக்க சந்தோஷம். ஆனால் அப்படி உன்னை அளிப்பதானால் பூரண கன்னித்தன்மையோடு நீ எனக்கு வேண்டும்!’ என்றான்.

வித்யாவதிக்கு வேறு வழியிருக்கவில்லை. ‘சரி, நான் வாக்களித்தபடியே திருமணம் முடிந்ததும் என் கன்னித்தன்மை கலையாமல் நான் உன்னை வந்தடைகிறேன். என்னை நம்பு. இது சத்தியம்!’ என்று அவனுக்கு சத்தியம் செய்து தந்து விடை பெற்றாள்.

பெரியோர்கள் நிச்சயித்தபடி குறிப்பிட்ட சுபமுகூர்த்த தினத்தில் வித்யாவதியின் திருமணம் மிகுந்த கோலாகலமாக நடைபெற்றது.
இரவுப் பொழுது நெருங்க நெருங்க வித்யாவதி பதறினாள். தனது சத்தியத்தை கணவரிடம் எப்படிச் சொல்வது? இதை அவர் எப்படி எதிர்கொள்வார்? ஒன்றும் புரியவில்லை!

இரவு, முதலிரவு அறைக்குள் நுழைந்ததுமே வித்யாவதி கணவன் குணசேகரன் கால்களில் தடாலென்று விழுந்து கண்ணீர் விட்டாள்.
குணசேகரன் பதறிப் போனான். ‘முதலிரவு அறைக்குள் மணப்பெண் அழுகிறாள் என்றால் அவளுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லையோ? என்னை அவளுக்குப் பிடிக்கவில்லையோ?’ என்று எண்ணியவன்,வித்யாவதியிடம், ‘பெண்ணே! அழாதே! உனக்குப் பிடிக்கவில்லையென்றால் உன்னைத் தொடக்கூட மாட்டேன். உன்னைக் கட்டாயப்படுத்தவும் மாட்டேன். நீ யாரை விரும்புகிறாயோ அந்தக் காதலனுடனேயே என்று வாழலாம். நீ இப்போதே புறப்பட்டுச் செல்!’ என்றான்.

குணசேகரனின் வார்த்தைகளால் துடிதுடித்துப் போன வித்யாவதி, ‘அப்படிச் சொல்லாதீர்கள். நான் உங்களை மனப்பூர்வமாக விரும்பித்தான் திருமணத்துக்கு சம்மதம் சொன்னேன். உங்களைக் கணவனாக அடைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.’ என்றாள்.

குணசேகரன் குழம்பிப் போனான். ‘பின் எதற்காக இந்தக் கண்ணீர்? என்ன உனது துன்பம்? என்னிடம் சொல்!’ என்று கேட்டான் குணசேகரன்.

‘தயவுசெய்து நான் சொல்லப்போவதை தாங்கள் ஆத்திரப்படாமல் கேட்க வேண்டும்.’ என்ற வித்யாவதி, மதனகாமனின் விருப்பத்தையும், கன்னித்தன்மை கலையாமல் வந்து தன்னை அவனிடம் தருவதாக சத்தியம் செய்து தந்திருப்பதையும் விவரமாகச் சொல்லி முடித்தாள்.

‘அன்பரே! நானோ எனது குடும்பத்தாரோ இதுநாள்வரை எந்தத் தருணத்திலும் கொடுத்த வாக்கைத் தவறியதில்லை. இம்முறையும் நான் மதனமோகனனுக்கு அளித்த வாக்கை நிறைவேற்றி விட்டு வருவதற்கு தாங்கள்தான் அனுமதி அளிக்கவேண்டும்!’ என்று கோரினாள்.

குணசேகரனுக்கு தலையில் இடி விழுந்தது போலிருந்தது. அவனுக்குத் தனது மனைவியின் கோரிக்கை விசித்திரமாக இருந்தது. கட்டிய மனைவியை இன்னொருவனிடம் அனுப்பி வைப்பதா என்று மனது கொந்தளிக்கவும் செய்தது. விரக்தியாக சிரித்துக் கொண்டான். பதற்றப்படாமல் ஆழ்ந்து யோசித்தான். அவனும் வணிக வம்சத்தவன்தானே? கொடுத்த வாக்கைக் காப்பாற்றித்தான் ஆகவேண்டும் என்பதில் எந்த விதிவிலக்கும் கிடையாது என்பதால் மனத்தை கல்லாக்கிக் கொண்டு வித்யாவதிக்கு சம்மதம் சொன்னான்.

‘வித்யாவதி ஒருவருக்கு வாக்களிக்கும் முன் அது சாத்தியமா என்பதை யோசித்துத்தான் அளிக்க வேண்டும். அப்படி ஒருமுறை அளித்து விட்டால் உயிரைக் கொடுத்தாவது அதை நிறைவேற்றித்தான் ஆகவேண்டும். பரவாயில்லை போய் வா! கட்டிய கணவனுக்கு துரோகம் செய்து நீ உனது கள்ளக் காதலனைக் காணச் செல்லவில்லை. பசித்தவனுக்கு பிச்சையிடுவது போல உன் அழகை யாசித்தவனுக்கு பிச்சையிட்டு விட்டு திரும்பப் போகிறாய். மனைவியின் சத்தியத்தில் கணவனுக்கும் பங்கிருக்கிறது. போய் நிறைவேற்றி விட்டு வா!’ என்று அனுப்பி வைத்தான்.

வித்யாவதி கணவனுக்கு நன்றி சொல்லி, அந்த ராத்திரி நேரத்திலேயே மதனகாமனை காண்பதற்கு விரைந்தாள்.

அடுத்தொரு சோதனையும் அவளை நெருங்கியது.

வித்யாவதி மதனகாமனை காணச் செல்லும்பொழுது வழியில் காட்டுப் பகுதியில் திருடன் ஒருவன் வித்யாவதியை கத்தி முனையில் மடக்கி மிரட்டினான்.

வித்யாவதி வீணே பேசி காலம் தாழ்த்த விரும்பாமல், தான் அணிந்திருந்த அத்தனை நகைகளையும் கழற்றி திருடனிடம் கொடுத்தாள்.

வித்யாவதியின் அழகை மிகுந்த ஆசையுடன் கண்களால் பருகிய அந்தத் திருடன் அவள் கொடுத்த நகைகளை வாங்காமல், மிருதுவான அவளது கைகளைப் பற்றித் தடவினான்.மேலும் சொன்னான்.

‘இந்த பொன் நகைகள் எதுவும் எனக்கு வேண்டாம். உருக்கி வார்த்த தங்கச் சிலை போல் இருக்கும் நீதான் வேண்டும். வா பெண்ணே! என்னை அணைத்துக் கொள்! என் ஆசையைத் தீர்த்து வை!’

வித்யாவதி பதறி விலகினாள். அவளது கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.

‘ஐயா, பாழாய்ப் போன எனது இந்த அழகுதான் எனது வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கிறது. திருமணமான அன்றிரவே தாலி கட்டிய கணவனைச் சேராமல், அந்த நல்லவரின் அனுமதியுடன் ஒரு காமுகனுக்கு தேகத்தை ஒப்படைக்கப் போய்க் கொண்டிருக்கும் அபலை நான். இதில் தாங்கள் வேறு தடுத்து துன்புறுத்துகிறீர்களே!’ என்று கதறினாள்.

‘என்ன? கணவனின் அனுமதியுடன் அடுத்தவனை சேரப் போகிறாயா? என்ன உன் கதை? எனக்குச் சொல்!’ என்று கேட்டான்.

வித்யாவதி தனது கதையை அவனிடம் சொல்லி முடித்தாள். பின், ‘ஐயா! உங்களை நான் ஏமாற்ற மாட்டேன். தயவுசெய்து இப்போது என்னை விட்டு விடுங்கள். வாக்குக் கொடுத்தபடி என் கன்னித்தன்மையை அந்த காமுகனுக்குக் கொடுத்து விட்டு திரும்ப வரும்போது மீண்டும் இங்கேயே வந்து சேருகிறேன். தங்களின் ஆசையை பூர்த்தி செய்கிறேன்!’ என்றாள்.
திருடனும் சம்மதித்து அனுப்பி வைத்தான்.

ஒருவழியாக எல்லா கண்டத்திலிருந்தும் தப்பி தனது கன்னித் தன்மையைக் காப்பாற்றிக் கொண்டு, மதனகாமனிடம் வந்து சேர்ந்தாள் வித்யாவதி.
அவளைப் பார்த்ததும் மதனகாமன் முதலில் அதிர்ச்சியுற்றான். பின் எல்லையில்லாத வியப்படைந்தான். திருமணமான முதல் ராத்தியில் கட்டிய கணவனுக்குக்கூட தன்னை அர்ப்பணிக்காமல் கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காக கன்னித் தன்மையுடன் தன் முன் வந்து நிற்கும் வித்யாவதியைப் பார்க்கவே அவன் மனம் கூசியது. வெட்கித் தலை குனிந்தான்.

‘வித்யாவதி! மிகக் கேவலமானவன் நான். உனது நேர்மையோடும், உனது கணவனின் தியாக உள்ளத்தோடும் ஒப்பிட்டால் நான் சிறு தூசு போல் என்னை உணர்கிறேன். உனது இந்த தூய குணம் என்னைத் திருத்தி விட்டது. உத்தமியே! உனது கன்னித்தன்மை கலையாமல் இங்கிருந்து செல். உன் கணவனுக்கே அதை காணிக்கையாக்கி இருவரும் இன்புற்று வாழ்ந்திருங்கள்!’ – என வாழ்த்தி வழியனுப்பினான்.

அங்கிருந்து புறப்பட்ட வித்யாவதி, திருடன் இருக்கும் இடத்துக்கு வந்தாள்.
அத்தனை விரைவாக திரும்பி வந்த வித்யாவதியைப் பார்த்து திருடன் ஆச்சரியப்பட்டான். ‘இத்தனை சீக்கிரம் வந்து விட்டாயே! காமுகன் அங்கில்லையோ?’ என்று வினவினான்.

‘காமுகன் கனவானாகி விட்டான்!’ என்ற வித்யாவதி நடந்ததை மகிழ்ச்சியுடன் தெரிவித்தாள்.

இதைக் கேட்ட திருடன் மனம் நெகிழ்ந்து போனான். அவனது கண்கள் கலங்கின.

‘அம்மா! உண்மையாகவே உன்னைப் போல் ஒரு உத்தமியை நான் இதுவரை பார்த்ததில்லை. காமுகனுக்கு வந்த மனமாற்றம் இந்தக் கள்ளனுக்கு மட்டும் வராதா என்ன? இங்கிருந்தும் உனது கன்னித்தன்மை கலையாமல் புறப்பட்டுச் செல். உனது நற்குணம் எப்பேர்ப்பட்ட தீயவனையும் நல்வழிப்படுத்தி விடும் அம்மா! நீ தீர்க்காயுசாக, தீர்க்க சுமங்கலியாக உனது கணவனுடன் மகிழ்ச்சியாக இரு.’ – என்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தான்.

வித்யாவதி மிகுந்த சந்தோஷத்துடன் ஓடோடிச் சென்று கணவனிடம் சேர்ந்தாள். நடந்த சம்பவங்கள் அனைத்தையும் சொன்னாள். ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். அன்புடன் கணவன் நெஞ்சில் சாய்ந்தாள்.

அவளை கட்டித் தழுவிய குணசேகரன், ‘வித்யாவதி உனது மேனியழகு அவர்களைக் கெட்டவர்களாக்கியது. ஆனால் உனது உள்ளத்தழகு அவர்களை நல்லவர்களாக மாற்றிவிட்டது. உன்னை மனைவியாக அடைந்ததில் நானும் பெருமைப்படுகிறேன் கண்மணி!’ என்று சொல்லிப் பூரித்தான்.

இப்படியாக கதை சொல்லி முடித்த வேதாளம், விக்கிரமாதித்தனிடம் கேட்டது.

‘இப்போது நான் சொன்ன கதையில் வந்த கணவன், காமுகன், கள்ளன் மூவருமே மிகுந்த பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார்கள் என்றாலும் இதில் யாருடைய நடத்தை மிகச் சிறந்தது என்பாய்?’

‘வேதாளமே, கணவன் குணசேகரன், காமுகன் மதனகாமன் இருவரும் வணிக குலத்தைச் சேர்ந்தவர்கள். நாணயம், நேர்மையை கடைப்பிடிக்க வேண்டியவர்கள். அவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டதில் எந்த அதிசயமுமில்லை. ஆனால் அடுத்தவர்களை ஏமாற்றியும், மிரட்டியும், வஞ்சித்தும், திருடியும் பிழைப்பு நடத்தும் தீயவனான ஒரு கள்ளன் மனம் திருந்தி நடந்து கொண்ட பெருந்தன்மைதான் பாராட்டுக்கு உரியது!’

சரியான பதிலைச் சொன்னதால் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏற, விக்கிரமாதித்தன் சோர்ந்து போகாமல் அதை விரட்டிச் சென்றான்.

வீரபாலன் கதை

விக்கிரமாதித்தன் கதைகள் / 14 

img_1098_medவிக்கிரமாதித்தன் கொஞ்சமும் சலிப்படையாமல் முருங்கை மரத்தில் ஊசலாடிய வேதாளத்தைத் தூக்கி தோள் மீது போட்டுக் கொண்டு, தொடர்ந்து நடக்க, விடாப்பிடியாக வேதாளம் கதை சொல்லத் தொடங்கியது.

அளகாபுரி என்னும் பட்டணத்தை ராஜசிம்மன் என்பவன் ஆண்டு வந்தான். நீதி நெறி வழுவாத அவனது ஆட்சியில் மக்கள் அனைவரும் மிகுந்த மனநிறைவுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். அவனது ஆட்சியில் பசி, பட்டினி, பஞ்சம் என்பதே இல்லை. அவனது பட்டணத்தில் ஏழைகளும் இல்லை. எல்லோரும் எல்லாமும் பெற்று நிறைவாக வாழ்ந்து வந்தார்கள். இன்னும் சொல்லவேண்டுமானால் பூமியைத் தாங்கி அருள்பாலிக்கும் மாதா பூமாதேவியே மன்னன் ராஜசிம்மனின் நற்குணத்தால் கவரப்பட்டு அவனை ஆசீர்வதித்து அவன் மீது மிக்க அன்புடன் திகழ்ந்தாள்.

இத்தனை சிறப்பு மிக்கவனான ராஜசிம்மன் அரசவைக்கு ஓர்நாள் வீரபாலன் என்பவன் அவனது மனைவி வேதவதி, மகன் விஜயன், மகள் லீலாவதி என தனது குடும்பத்தினருடன் மன்னனைக் காண வந்தான். ராஜசிம்மனைக் கண்டு பணிந்து வணங்கினான்.

‘அரசே, நான் ஒரு வீரன். மத்வ தேசத்திலிருந்து வருகிறேன். நானிலமே போற்றிப் புகழும் தங்களின் கீழ் பணியாற்றவே தங்களை நாடி வந்துள்ளேன். தங்களின் அந்தரங்கப் பாதுகாவலனாக என்னை ஏற்றுக் கொண்டால் தங்களுக்கு எந்தத் தீங்கும் ஆபத்தும் நேராமல் காப்பேன் என்று உறுதியாகச் சொல்கிறேன்!’ என்று தலை தாழ்த்தி விண்ணப்பித்தான். அவனது குடும்பத்தினரும் மன்னன் முன் கை கூப்பி நின்றிருந்தனர்.
வீரனுக்கே உரிய வாள், கேடயத்துடன் கம்பீரமாக தன் முன் நின்று தன்னம்பிக்கையுடன் பேசும் வீரபாலனை மன்னன் ராஜசிம்மனுக்கு மிகவும் பிடித்துப் போனது.

மலர்ந்த புன்னகையுடன், வீரபாலனைப் பார்த்து, ‘அப்படியே ஆகட்டும் வீரனே! உன்னை எனது பாதுகாவலனாக ஏற்றுக் கொள்கிறேன். நீ நாளையிலிருந்து பணிக்கு வரலாம். இந்த உனது பணிக்கு சன்மானமாக மாதம் 100 பொற்காசுகள் பெற்றுக் கொள்ளலாம்! ’ என்று கட்டளையிட்டான்.
வீரபாலனும், அவனது குடும்பத்தாரும் மன்னனுக்கு நன்றி கூறி மகிழ்ச்சியுடன் விடைபெற்றுக் கொண்டார்கள்.

மறுதினமே வீரபாலன் பணியில் சேர்ந்தான். அரண்மனை வாசலில் உருவிய வாளுடன் நடைபயின்று அல்லும் பகலும் காவல் காத்தான். வெயில், மழை, காற்று, புயலே அடித்தபோதிலும் தனது கடமையிலிருந்து தவறாமல் சொட்டச் சொட்ட நனைந்தபடி அவன் காவல் புரிந்ததை மன்னன் ராஜசிம்மன் பலநாள்கள் கண்டு வியந்தான். மனத்துக்குள் பாராட்டினான்.
காலம் விரைந்தது.

ஓர்நாள் இரவு மன்னன் தனது பள்ளியறையில் இருந்தான். வீரபாலன் வழக்கம்போல் அரண்மனை வாசலில் குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி காவல்காத்துக் கொண்டிருந்தான். அப்போது தூரத்தில் யாரோ ஒரு பெண் கதறியழும் ஒலி கேட்டது. அந்த அழுகையொலி கேட்பவர்களின் மனத்தை வருத்திப் பிசைந்தது.

மன்னன் ராஜசிம்மன் அந்த அழுகைச் சப்தத்தினால் பாதிக்கப்பட்டு மேன்மாடத்துக்கு வந்து நின்று நாலாதிசையிலும் பார்த்தான். அந்த அழுகைச் சப்தம் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. மன்னன் ராஜசிம்மன், வாசலில் காவல் காத்துக் கொண்டிருந்த வீரபாலனைப் பார்த்து, ‘வீரபாலா! ஒரு பெண்ணின் அழுகையொலி உனக்குக் கேட்கிறதா?’ என்று கேட்டான்.

‘ஆமாம் அரசே! அந்தச் சப்தத்தை நானும் கேட்டேன்!’ என்றான் வீரபாலன்.

‘நமது ஆட்சியில் இந்த அவலக் குரல் எதிரொலிப்பது மனத்துக்குச் சங்கடமாயிருக்கிறது. யார் அந்தப் பெண்? எதற்காக அழுகிறாள்? என்று விசாரித்து வா!’ என்று அனுப்பி வைத்தான்.

வீரபாலன் புறப்பட்டுச் சென்றாலும் மன்னன் ராஜசிம்மனுக்கு மனம் கேட்கவில்லை. தனது குடிமக்களில் ஒருத்தி கதறி அழுகிறாள் என்றால் அதில் தனது ஆட்சியின் தவறு ஏதாவது இருக்கிறதா? என்று கேள்வி அவன் மனத்தைத் துளைக்க, அரண்மனையில் அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. அவனும் அரண்மனையை விட்டு வெளியே வந்து வீரபாலன் போன திசையிலேயே பின் தொடர்ந்தான்.

மன்னனின் கட்டளைப்படி அழுகுரல் கேட்ட திசை நோக்கி விரைந்த வீரபாலன், நகரத்தின் எல்லையில் இருந்த நதிக்கரையை அடைந்தான். நதிக்கரையின் ஓரத்தில் இருந்த மண்டபம் ஒன்றில் சர்வ அலங்கார லட்சணங்களுடன் பெண்ணொருத்தி அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.
‘ஐயோ விதியே உனக்கு கொஞ்சமும் இரக்கமில்லையா? தர்மவானான மகா வீரனை அழைக்கிறாயே! அவனது வாழ்க்கையோடு விளையாடுகிறாயே! இது நியாயமா?’ என்று புலம்பிக் கொண்டு விம்மினாள்.

வீரபாலன் அவளை அணுகி, ‘தாயே! நீங்கள் யாரென்று நான் அறிந்து கொள்ளலாமா? இந்த அர்த்தராத்திரியில் எதற்காக இங்கே உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டான்.

அப்பெண், ‘மகனே! நான் பூமாதேவி. இந்நாட்டு அரசன் ராஜசிம்மன், என் அன்புக்குரிய மகன். தர்மநெறி தவறாமல் நல்லாட்சி நடத்தும் அந்த நல்லவன் இன்னும் இரண்டொரு நாளில் இறக்கப் போகிறான். அந்த துக்கம் தாளாமல் தான் அழுது கொண்டிருக்கிறேன்!’ என்றாள்.

இதைக் கேட்ட வீரபாலன் திடுக்கிட்டுப் போனான். பதறித் துடித்தான்.
அவன் பூமாதேவியிடம், ‘தாயே! பராக்கிரமசாலியும், தயாள குணம் கொண்டவரும், தனது குடிமக்களை, தான் பெற்ற மக்களைப் போல் அரவணைத்துக் காப்பவருமாகிய எனது அன்புக்குரிய மன்னருக்கா மரணம் வரப் போகிறது என்கிறீர்கள்? இல்லை, இல்லவேயில்லை! அப்படி நேரக் கூடாது! தாயே! கடவுளுக்கு நிகரான அன்னை பூமாதேவியே! சொல்லுங்கள் தாயே! நான் மன்னர் ராஜசிம்மனின் பாதுகாவலன். அவரது உயிரைக் காப்பாற்றும் கடமை எனக்கிருக்கிறது. இந்த ஆபத்திலிருந்து மன்னரைக் காப்பாற்ற ஏதாவது வழியிருக்கிறதா? தயவுசெய்து உதவுங்கள் தாயே!’ என்று கெஞ்சினான்.

உடனே பூமாதேவி, ‘இருக்கிறது வீரனே! இந்த அபாயக் கண்டத்திலிருந்து ராஜசிம்மனைத் தப்புவிக்கும் வழி ஒன்றிருக்கிறது. ஆனால் அதை நிறைவேற்றுவது ஆகாத காரியம்!’என்றாள்.

‘தாயே எத்தனை கஷ்டமானதாக இருந்தாலும் நான் அதை நிறைவேற்றியே தீருவேன்! சொல்லுங்கள் தாயே! என்ன செய்தால் என் மன்னனின் உயிரைக் காப்பாற்ற முடியும்?’

‘வீரபாலா! இந்நகரத்தின் தென் எல்லையில் வனபத்ரகாளியின் கோயில் இருக்கிறது அல்லவா? அக் கோயிலின் பலி பீடத்தில் தகப்பன் ஒருவன் தனது மகனை மனமுவந்து பலி கொடுத்தால் மன்னன் ராஜசிம்மன் இந்த மரணகண்டத்திலிருந்து தப்பித்து விடலாம். இல்லாவிட்டால் இரண்டொருநாளில் அவன் மரணமடைவது நிச்சயம்!’ என்றாள்.

வீரபாலன், ‘தாயே! இதை நான் நிச்சயம் நிறைவேற்றி விடுவேன்! இனி நீங்கள் வருத்தம் கொள்ளவேண்டாம்!’ என்று சொல்லி விட்டு அங்கிருந்து விரைந்தான்.

இவ்வாறு வீரபாலனும், பூமாதேவியும் பேசிக்கொண்டு இருந்த சகல விஷயங்களையும் அவனைப் பின் தொடர்ந்து வந்திருந்த மன்னன் ராஜசிம்மன் மறைந்திருந்து கேட்டுக் கொண்டுதான் இருந்தான். இனி வீரபாலன் என்ன செய்யப் போகிறான்? எங்கே செல்கிறான்? என்கிற ஆர்வத்துடன் மன்னன் ராஜசிம்மன் வீரபாலனைப் பின் தொடர்ந்து செல்லலானான்.

நதிக்கரை மண்டபத்திலிருந்து புறப்பட்ட வீரபாலன் நேராக தனது வீட்டை அடைந்தான். அங்கே தனது மனைவியிடம் பூமாதேவி தன்னிடம் கூறியது அனைத்தையும் விளக்கமாகச் சொன்னான்.

இதைக் கேட்ட அவனது மனைவி வேதவதி, ‘குடிமக்கள் சௌக்கியமாகவும், சந்தோஷமாகவும் இருக்கவேண்டுமானால் அதற்கு முதலில் நாட்டின் மன்னன் பூரண ஆயுளுடன் நலமாக இருப்பது அவசியம். அவன் நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். அரசனுடைய நலனுக்காக எதையும் நாம் தியாகம் செய்யலாம்!’ என்றாள்.

இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த வீரபாலனின் மகனாகிய சிறுவன் விஜயனும் தன் தந்தையிடம், ‘அப்பா, நமது மன்னர் மிகவும் நல்லவர். இந்நாட்டின் லட்சக்கணக்கான உயிர்களைக் காக்கும் கடமையில் இருப்பவர். அவரது உயிரைப் பாதுகாக்கும் கடமை உங்களுக்கு இருப்பது போலவே, தகப்பனின் கடமையில் பங்கேற்பது மகனாகிய எனது கடமையாகும். எனவே நமது மன்னரின் உயிரைக் காப்பாற்ற நான் என் உயிரைத் தர சித்தமாயிருக்கிறேன். தாமதிக்க வேண்டாம். வாருங்கள், வனபத்ரகாளியின் கோயிலுக்குச் செல்வோம்.’ என்றான்.

உடனே வீரபாலனின் குடும்பத்தார் மனைவி, மகன், மகள் உட்பட அனைவரும் அந்த நள்ளிரவு நேரத்திலேயே வனபத்ரகாளியம்மன் கோயிலுக்குப் புறப்பட்டனர்.

இவ்வளவையும் ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருந்த மன்னன் ராஜசிம்மன், வீரபாலன் குடும்பத்தாரின் தியாகத்தை நினைத்து உள்ளம் நெகிழ்ந்து போனான். மேலும் அவர்களைத் தொடர்ந்து சென்றான்.

கோயிலை அடைந்ததும் வீரபாலனின் மகன் விஜயன், தேவியைப் பணிந்து வணங்கி, ‘தாயே, பத்ரகாளி, எனது இந்தச் சிறு உயிரை பரிசாகப் பெற்றுக் கொண்டு, நீதிமானான மன்னர் ராஜசிம்மனுக்கு நீண்ட ஆயுளைத் தா!’ என்று வேண்டிக் கொண்டு பலி பீடத்தில் தனது தலையைப் பொருத்திக் கொண்டான்.

அடுத்தநொடி தனது கூரிய வாளால் மகனின் தலையை வெட்டியெடுத்து அம்மனின் காலடியில் காணிக்கையாக வைத்த வீரபாலன், ‘தகப்பனொருவன் மனமுவந்து தனது மகனின் உயிரை பலி கொடுத்தால் மன்னன் உயிர் காக்கப்படும் என்று சொன்னார்கள். நான் அதைச் செய்து விட்டேன். தேவி பத்ரகாளி இனி நீதான் மன்னர் ராஜசிம்மனை மரண அபாயத்திலிருந்து காப்பாற்றவேண்டும்!’ என்று வேண்டினான்.

அப்போது அசரீரி ஒலித்தது. ‘வீரபாலா, உனது தியாகம் வீணாகாது. மன்னன் உயிர் தீர்க்காயுசாக நீட்டிக்கப்பட்டு விட்டது. இன்னும் பல நூறு வருடங்கள் அவன் நல்லாட்சி புரிவான்!’ என்று கூறியது.

அப்போது மாண்டு போன தனது அண்ணன் விஜயனின் உடலுக்கு அருகில் அமர்ந்து அழுது கொண்டிருந்த வீரபாலனின் மகள் லீலாவதி அழுது அழுது அதீத துக்கத்தால் இதயம் வெடித்து இறந்து போனாள்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த வீரபாலனின் மனைவி வேதவதி, கணவனிடம், ‘சுவாமி! கணவனது காரியத்தில் பங்கேற்பது மனைவியின் கடமை. இது முடிந்து விட்டது. மன்னனைக் காப்பாற்ற வேண்டிய உங்களது கடமையில் துணை நின்று காரியம் பூர்த்தியாகி விட்டது. இதில் நமது இரண்டு குழந்தைகளும் இறந்த பிறகு இதற்கு மேல் இவ்வுலகில் எனக்கு உயிர் வாழ விருப்பமில்லை. எனவே குழந்தைகளின் உடலுக்கு சிதை மூட்டி அவர்களுடனே நானும் உயிர் விடச் சித்தமாகி விட்டேன். தாங்கள் அனுமதிக்க வேண்டும்!’ என்று சொல்லி அனுமதி பெற்றுக் கொண்டு, அதுபோலவே குழந்தைகளுடன் எரிந்து சாம்பலானாள்.

பின் பத்ரகாளியின் முன் நின்ற வீரபாலன், ‘தாயே, அசரீரி சொன்ன வாக்கின்படி, மன்னர் ராஜசிம்மர் உயிருக்கு எந்த ஆபத்துமின்றி பூரணநலமாக இருந்து நாடாள்வார் என்பது உறுதியாகி விட்டது. நான் எனது குடும்பத்தை இழந்து இவ்வுலகில் துக்கமும் துயரமுமாக வாழ்வதை விட எனது உயிரை விடுத்து அவர்களுடனே போய் விடுவதுதான் சரியானது!’ என்று சொல்லியபடி தனது வாளால் தலையை ஒரே வீச்சில் துண்டித்துக் கொண்டு மாண்டு விழுந்தான்.

இதுவரையிலும் அங்கே நடந்த அத்தனை நிகழ்வுகளையும் பார்த்துக் கொண்டிருந்த மன்னன் ராஜசிம்மன் உணர்ச்சிப் பிழம்பாக திகைத்துப் போய் நின்றான். அதிசயப்படுவதா, ஆச்சரியப்படுவதா, துக்கப்படுவதா, வேதனைப்படுவதா ஒன்றும் விளங்கவில்லை.

வீரபாலனின் குடும்பத்தவர் தன் ஒருவனுக்காக செய்த தியாகம் அவனுக்குள் பிரமிப்பை ஏற்படுத்தி மனத்தை நடுங்கச் செய்திருந்தது. இதயம் நெகிழ்ந்து தவித்தது.

‘எந்த ஒரு மனிதனும் செய்யத் துணியாத பெருந்தியாகத்தை செய்த இக்குடும்பத்தினரை நான் எப்படிப் போற்றுவேன்? அர்த்தராத்திரியில் காட்டுக்குள் வந்து இக்குடும்பத்தினர் செய்த தியாகம் யாருக்குமே தெரியப்போவதில்லை. ஆனாலும் எந்தப் பாராட்டையும், புகழ்ச்சியையும் எதிர்பாராமல் என் ஒருவனது உயிருக்காக நான்கு உயிர்களை பலியிட்டு விட்டார்களே! இவ்வுலகில் இப்படிப்பட்ட மனிதர்களும் இருப்பார்களா? இவர்களை நான் எப்படி கௌரவிப்பேன்?’ என்றெல்லாம் நெகிழ்ந்தான்.

அவனது மனம் துயரத்தில் தத்தளித்தது. ஒரு முடிவுக்கு வந்தவனாக தேவி பத்ரகாளியின் முன் வந்து நின்றவன், ‘தாயே, மனித உயிர்களில் பெரியது என்ன; சிறியது என்ன? உயர்ந்தது என்ன; தாழ்ந்தது என்ன? உயிர்களின் மதிப்பு ஒன்றேதான்! என் ஒருவனுக்காக நான்கு உயிர்கள் மரித்தது எனக்கு குற்ற உணர்வாக இருக்கிறது. நானும் இனி உயிர் வாழ பிரியப்படவில்லை. இந்தா எனது உயிரும் உனக்கு காணிக்கை!’ என்று சொல்லி வாளை எடுத்து தலையை வெட்டிக் கொள்ள முனைந்தான்.

அப்போது மீண்டும் அசரீரி ஒலித்தது.

‘ராஜசிம்மா அவசரப்படாதே! மற்றவர் வேதனையைப் பொறுக்காத, தியாகத்தை மதிக்கத் தெரிந்த நீதிமானே! வருந்தாதே! இதோ உன் பொருட்டு உயிர் துறந்த அனைவரும் உயிர் பிழைப்பார்கள்!’ என்று சொல்லியது.

மறுகணமே மாண்டுபோன வீரபாலன் குடும்பத்தினர் அனைவரும் உயிர் மீண்டு எழுந்தனர். அவர்களின் கண்படாமல் மன்னன் ராஜசிம்மன் நழுவி அரண்மனை சேர்ந்தான்.

உயிர் மீண்ட வீரபாலன் குடும்பத்தினர் இது அன்னை பத்ரகாளியின் அருள் என்பதை உணர்ந்து கடவுளுக்கு நன்றி சொல்லி வீடு மீண்டனர்.

மறுநாள் வீரபாலன் எப்போதும்போல் அரண்மனை வாசலில் பணியாற்றச் சென்று காவலிருந்தான். அப்போது மன்னன் ராஜசிம்மன் அவனை தர்பாருக்கு அழைத்து வரச் சொல்லி, தானே தனது மந்திரி பிரதானிகளுடன் வந்து வீரபாலனை எதிர்கொண்டு வரவேற்றான். வீரபாலனுக்கு தனி இருக்கை அளித்து கௌரவித்து, சபையில் உள்ளோருக்கு முன் தினம் நடந்த நிகழ்வை முழுவதும் கூறினான். சபையோர் திகைத்து திக்குமுக்காடி வீரபாலனையும் அவனது குடும்பத்தாரையும் வாழ்த்தி முழக்கமிட்டனர்.

மன்னன் ராஜசிம்மன் வீரபாலனுக்கு பெரும் பதவியளித்து, பொன்னும் பொருளும் ஏராளமாகத் தந்து தன்னுடன் இணை பிரியாத நண்பனாக வைத்துக் கொண்டான்.

என்று கதை சொல்லி முடித்த வேதாளம் வழக்கம் போல் கேள்வி தொடுத்தது.

‘மன்னனுக்காக பெரும் தியாகம் செய்த வீரபாலன் மற்றும் அவனது குடும்பத்தினர், தனது பணியாளன் செய்த தியாகத்தின் காரணமாக வேதனையில் தனது உயிரையே போக்கிக் கொள்ள முனைந்த மன்னன் ராஜசிம்மன் இவர்களுள் யார் மிக உயர்ந்தவர்? சொல்லுங்கள் விக்கிரமாதித்தரே!’

‘ நிச்சயமாக மன்னன் ராஜசிம்மன் தான் உயர்ந்தவன்!’ என்றான் விக்கிரமாதித்தன்.

வேதாளம் திகைப்புடன் கேட்டது. ‘என்ன! விக்கிரமாதித்தரே யோசித்துத்தான் சொல்கிறீரா? மன்னன் உயிருக்காக தனது மகன் உயிரையே பலி கொடுத்த வீரபாலன் உயர்ந்தவனில்லையா? பத்துமாதம் சுமந்து பெற்ற மகனை மன்னனது நலனுக்காக பலி கொடுக்க ஒப்புக் கொண்ட தாய் வேதவதி உயர்ந்தவளில்லையா? மன்னன் உயிர் காக்க தனது உயிரையே துணிச்சலாகத் தர ஒப்புக் கொண்ட சிறுவன் விஜயன் உயர்ந்தவனில்லையா? இவர்களையெல்லாம் விட ராஜசிம்மன் எப்படி உயர்ந்தவனாவான்?’

‘அரசனின் கீழ் பணி புரியும் வீரனும், அவனது குடும்பத்தினரும் மன்னனுக்காக உயிர் தியாகம் செய்யக் கடமைப்பட்டவர்கள் என்பதுதான் உலக நியதி. அதுபோலவே மன்னர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தங்களின் கீழ் உள்ளவர்களை பலி கொடுப்பதென்பதும் சர்வ சாதாரணமாக நிகழ்வுதான். இப்படியிருக்கையில் மன்னன் ராஜசிம்மன் தன் கீழ் பணிபுரியும் ஒரு சாதாரண வேலைக்காரனுக்காகவும், அவனது குடும்பத்தினர் செய்த தியாகத்துக்காகவும் மனம் வேதனைப்பட்டு தனது உயிரையே தரச் சித்தமானான் அல்லவா? எனவே அவனது செயலே மிக பெரியது. அவனே மிக உயர்ந்தவன்!’ என்று சொன்னான்.

விக்கிரமாதித்தனின் இந்த விளக்கம் மிகச் சரியான பதிலாக அமைய வேதாளம் அவனது தோளிலிருந்து விடுபட்டு முருங்கை மரத்துக்குப் பறந்தது.

கிளிகள் சொன்ன கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் / 13 

two_parrots_and_a_vein_by_gehadmekki-d5cv0seவிக்கிரமாதித்தன் விடாமுயற்சியுடன் வேதாளத்தை மீண்டும் முருங்கை மரத்திலிருந்து இறக்கி தோளில் போட்டுக் கொண்டு நடந்தபோது வேதாளம் தனது அடுத்த கதையைச் சொல்லத் தொடங்கியது.

‘பூலோகத்தின் புண்ணிய நதியான கங்கை ஆற்றின் கரையில் உள்ள பாடலிபுத்திரம் என்னும் நகரை விக்கிரமசேனன் என்னும் மன்னன் ஆட்சி செய்து வந்தான். நல்ல ஒழுக்கமும், பண்பும் கொண்டவன். மகா தர்மசீலன். நேர்மை தவறாதவன். அவன் ஒரு பஞ்சவர்ணக் கிளியை வளர்த்து வந்தான். அதன் பெயர் விதேகன்.

விதேகன் எனப்படும் அந்த ஆண் கிளி ஒரு பேசும் கிளி! முக்காலமும் உணர்ந்த, சகல சாஸ்திரங்களும் அறிந்த புத்திசாலியான கிளி. அதனாலேயே மன்னன் விக்கிரமசேனன், அந்தக் கிளியின் மேல் அலாதியான பாசம் கொண்டிருந்தான்.

நாட்டை அரசாட்சி செய்வதிலிருந்து தனது சொந்த வாழ்க்கையின் பிரச்னைவரை எல்லாவற்றுக்கும் அந்தக் கிளியைக் கலந்து ஆலோசித்து அதன் சொற்படிதான் விக்கிரமசேனன் செயல்பட்டு வந்தான். அவ்வளவு ஏன்? மன்னன் விக்கிரமசேனனுடைய திருமணம்கூட அந்தக் கிளியின் ஆலோசனைப்படிதான் நடந்தது. ஆமாம்! விக்கிரமசேனனுக்கு மணந்துகொள்ள சம்மதம் தெரிவித்திருந்த ஏராளமான ராஜகுமாரிகளின் ஓவியங்களிலிருந்து மகதராஜ்ஜியத்தின் மன்னன் மகளான மதிவதனியை கிளிதான் தேர்ந்தெடுத்தது. அவளைத்தான் தனது மனைவியாக்கிக் கொண்டான் விக்கிரமசேனன்.

ஆச்சரியம் என்னவென்றால் ராணி மதிவதனியும் ஒரு கிளியை வளர்த்து வந்தாள். அதுவோர் பெண் கிளி. அதன் பெயர் சோபிகை. அதுவும் ஆண் கிளி விதேகனைப் போன்றே பேசும் திறனும், அறிவும் கொண்ட அழகுக் கிளியாகத் திகழ்ந்தது.

மகத இளவரசி மதிவதனி மன்னன் விக்கிரமசேனனை மணந்துகொண்டு பாடலிபுத்திரம் வந்ததும் இரண்டு கிளிகளும் அந்தப்புரத்தில் அவர்களது பள்ளியறையில் ஒரே கூண்டிலேயே சேர்ந்து வசித்து வந்தன. மன்னனையும், மகாராணியையும் தங்களது அறிவார்ந்த பேச்சுத் திறத்தால் நகைச்சுவை உணர்வுடன் பேசி மகிழ்வித்து வந்தன.

இப்படியிருக்கும்போது ஆண் கிளியான விதேகனுக்கு பெண் கிளி சோபிகை மேல் காதல் உண்டாகி, ஒருநாள், ‘சோபிகை, எனக்கு உன்னை மிகவும் பிடித்திருக்கிறது. நாம் ஏன் திருமணம் செய்துகொள்ளக்கூடாது!’ என்று கேட்டது.

அவ்வளவுதான் சோபிகைக்கு வந்ததே கோபம்! அது மிகுந்த கடுகடுப்புடன், விதேகனிடம், ‘ஆண்கள் எல்லோருமே நன்றியில்லாதவர்கள். கொடுமைக்காரர்கள். துர்புத்தி கொண்டவர்கள். எனவே நான் எந்த ஆணையும் கல்யாணம் செய்துகொள்ளப் போவதில்லை!’ என்று துடுக்காகச் சொன்னது.

சோபிகையின் இந்தப் பதிலால் எரிச்சலுற்ற விதேகன், ‘ஒட்டு மொத்தமாக ஆண் வர்க்கத்தையே இப்படித் தூற்றுவது சரியில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் பெண்கள்தான் கொடூரமான குணமும், துரோக புத்தியும் கொண்டவர்கள்!’ என்றது.

இப்படியே இரண்டும் மாற்றி மாற்றி ‘ஆண்கள்தான் கெட்டவர்கள்’, ‘இல்லையில்லை பெண்கள்தான் மோசமானவர்கள்’ என்று சண்டை போட்டுக்கொண்டன. விவாதம் ஒரு முடிவுக்கு வருவதாயில்லை. எனவே தங்கள் வழக்கை மன்னன் விக்கிரமசேனனிடம் சொல்லி முடிவை அவனது தீர்ப்புக்கே விட்டுவிடலாம் என்று தீர்மானித்தன. ஆண் கிளி ஜெயித்தால் பெண் கிளி சோபிகை, விதேகனை மணந்து கொள்ளவேண்டும். பெண் கிளி ஜெயித்தால் ஆண் கிளி விதேகன் காலம் முழுவதும் சோபிகையின் அடிமையாகக் கிடக்கவேண்டும். இதுதான் ஒப்பந்தம்.

மன்னன் விக்கிரமசேனன் இருதரப்பு வழக்கையும் கேட்டான். பின், அவன் புன்னகையுடன், பெண் கிளியிடம், ‘சோபிகை! ஆண்கள் நன்றி கெட்ட கொடுமைக்காரர்கள், துரோகிகள் என்கிறாயே! எதை காரணமாக வைத்து இப்படிச் சொல்கிறாய்?’ என்று கேட்டான்.

‘அரசே, இதற்கு ஆதாரமாக கதை ஒன்றைச் சொல்கிறேன்; கேளுங்கள்!’ என்று சொல்லத் தொடங்கியது.

‘சதுர்மங்கலம் என்னும் ஊரில் ஜெயதத்தன் என்னும் செல்வந்தன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒரேயொரு செல்வ மகன்; பெயர் நாகதத்தன். தாயில்லாப் பிள்ளை என்று தந்தை மிகுந்த செல்லம் கொடுத்து வளர்த்ததில் நாகநத்தன் சீர்கெட்டுப் போய் பொறுப்பில்லாத ஊதாரியாக வளர்ந்தான். எந்த வேலையும் செய்யாமல் தந்தைக்கும் வியாபாரத்தில் உதவியாக இல்லாமல் வெறுமனே ஊர் சுற்றி வந்தவனுக்கு, தீயவர்கள் பலர் நண்பர்களானார்கள். ஒருவன் கெட்டுப் போவதற்கு முழுமுதற் காரணமாக இருப்பது அவனது தீய சகவாசம்தான் என்பது நிஜம்தானே!

தனது பொல்லாத நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு மது, மாது, சூது என்று பலப்பல தீயபழக்கங்களுக்கு ஆளாகி மனம் போல் திரிந்தான் நாகதத்தன். இதனால் மனம் உடைந்து போன ஜெயதத்தன் அந்தக் கவலையிலேயே நோய்வாய்பட்டு, படுத்த படுக்கையாகி இறந்தே போனான். தந்தை மரணமடைந்ததில் சிறிதும் மனம் வருந்தாத நாகதத்தன் சொத்தெல்லாம் கைக்கு வந்ததில் பெரும் மகிழ்ச்சி கொண்டான். நாளொரு பெண்ணும், பொழுதொரு மதுவும், சதாசர்வ காலமும் சீட்டாட்டமுமாக தனது தீய நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு மொத்த சொத்தையும் செலவழித்துத் தீர்த்தான். வீடு வாசல் நிலபுலன்கள் அனைத்தும் போய் விரைவிலேயே அடுத்த வேளைச் சோற்றுக்கே வழியில்லாத நிலையில் நடுத்தெருவுக்கு வந்தான்.

பெரும் பணக்காரனாக இருந்து, சொத்து முழுவதும் போய் ஏழ்மை நிலைக்கு வந்த நாகதத்தன் அதற்கும் மேல் அதே ஊரிலேயே வசிக்க விருப்பமில்லாமல் கால்போன போக்கில் புறப்பட்டான். ஊர் ஊராக, நாடு நாடாகத் திரிந்தான். ஆங்காங்கே கிடைத்ததைச் சாப்பிட்டு நினைத்த இடத்தில் தூங்கி வலம் வந்தான்.

அப்படி சுற்றி வந்த தருணத்தில் ஒருநாள் அவன் வாணியபுரம் என்னும் நகரத்தை அடைந்தபோது அங்கே தனநாயகர் என்ற வணிகர் அவனுக்கு அறிமுகமானார். ஏனோ தெரியவில்லை தனநாயகருக்கு நாகதத்தனை முதல் பார்வையிலேயே பிடித்துப் போனது. அவனை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவிட்டு உபசரித்த தனநாயகர் அவனை அங்கேயே தம்முடனே தங்க வைத்துக் கொண்டார்.

நாகதத்தன் அங்கிருந்த சிறிது காலத்திலேயே தனநாயகரிடமும் அவரது வீட்டாரிடமும் மிகுந்த நல்லவன் போல் நடித்து அனைவரது மனத்தையும் கவர்ந்து கொண்டான். அவனொரு பசுத்தோல் போர்த்திய புலி என்பதை அறியாத தனநாயகர் தனது ஒரே மகளான ரத்னாவளியை நாகதத்தனுக்கு திருமணம் செய்து வைத்து வீட்டோடு மாப்பிள்ளையாக்கிக் கொண்டார்.

பிறகென்ன? நாகதத்தனுக்கு சந்தோஷத்துக்கு குறைவேயில்லை. பெரும் செல்வச் சீதனத்தோடு வந்த அன்பான மனைவி, ஆனந்தமான இல்லறம், படாடோபமான வாழ்க்கை, பெரும் மதிப்புடன் கொண்டாடும் மாமனார், மாமியார் என சுகபோகமாகக் காலம் கழிந்தது.

ஆனாலும் என்ன? ஆடின காலும், பாடின வாயும் சும்மாயிருக்காது என்பதுபோல, தீயபழக்கங்களிலேயே மூழ்கி குருட்டாம்போக்கில் செலவு செய்த நாகதத்தனுக்கு மாமனார் வீட்டில் இருப்பது கட்டிப் போட்டது போல இருந்தது. ஆசை தீர செலவு செய்ய கைகளில் ஏராளமான செல்வம் இருக்கும்போது அதற்கும் மேல் அங்கே தங்கியிருக்க நாகதத்தனுக்குப் பிடிக்கவில்லை.

ஒருநாள் அவன் தனது மாமனார் தனநாயகரிடம் சென்று, ‘ மாமா! நான் ஊரை விட்டு வந்து நெடுநாள்களாகி விட்டன. தந்தை இறந்த துக்கத்தில் வீட்டை விட்டுப் புறப்பட்டவன், ஊர் ஊராக தலயாத்திரை செய்து, இங்கே தங்களைச் சந்தித்த பிறகு அப்படியே தங்கிவிட்டேன். பாவம்! அங்கே எனது உற்றார் உறவினர்கள் எல்லோரும் என்னைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். எனவே நான் ஒருமுறை, ஊருக்குப் போய் அனைவரையும் பார்த்து தகவல் சொல்லிவிட்டு வருகிறேன். ரத்னாவளியுடன் புறப்பட்டுச் செல்ல என்னை நீங்கள் அனுமதிக்கவேண்டும்!’ என்று கேட்டான்.

ஒரே மகளான ரத்னாவளியை பிரிந்திருக்க தனநாயகருக்கு சம்மதம் இல்லையென்றாலும் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டு, நாகதத்தனுக்கு மேலும் கொஞ்சம் பொன் பொருளைக் கொடுத்து, மகளை அவனுடன் அனுப்பி வைத்தார். கூடவே ஒரு வேலைக்கார கிழவியையும் மகளுக்குத் துணையாக போகச் சொல்லி அனுப்பினார்.

பயணம் புறப்பட்ட மூவரும் மாலை மங்கும் நேரத்தில் ஒரு காட்டுப் பகுதிக்கு வந்து சேர்ந்தார்கள். நாகதத்தன் மனைவி ரத்னாவளியிடம், ‘ரத்னா, இருட்டப் போகிறது. இங்கே காட்டுப் பகுதியில் திருடர் பயம் அதிகம்! எனவே உனது நகைகளை எல்லாம் கழட்டி என்னிடம் கொடுத்து விடு’ என்று சொல்லி எல்லாவற்றையும் வாங்கி வைத்துக் கொண்டான்.

அப்படி அவன் வாங்கிக் கொண்டதன் பின்னணியில் ஒரு பெரும் சதித்திட்டம் ஒளிந்திருந்தது. பொதுவாக மது, மாது, சூது போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையான கயவர்கள் எப்பேர்ப்பட்ட பஞ்ச மாபாதங்கங்களுக்கும் அஞ்ச மாட்டார்கள் என்று பெரியோர் சொல்வார்கள். நாகதத்தனும் அப்படிப்பட்டவன்தானே! அதனால்தான் அவன் மிகப் பெரிய பாதகம் ஒன்றுக்கு திட்டமிட்டிருந்தான். மனைவி ரத்னாவளியைக் கொன்றுவிட்டு அவளது பொன் பொருள் நகைகளுடன் ஓடிப் போய் விடுவது என்பதுதான் அந்தத் திட்டம்.

இருள் கவியத் தொடங்கிய நேரத்தில் அவர்கள் மூவரும் ஒரு மலைப்பாங்கான பகுதியைக் கடந்தபோது அவன் தனது திட்டத்தை நிறைவேற்றினான். மலையின் மறுபுறம் இருந்த அதலபாதாளத்தில் மனைவி ரத்னாவளியையும், அவளுடன் துணைக்கு வந்த கிழவியையும் பிடித்துத் தள்ளிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.

நாகதத்தனால் தள்ளி விடப்பட்ட கிழவி மிக வேகமாகக் கீழே உருண்டுபோய் ஒரு பெரும் பாறையில் மோதிக்கொண்டாள். அதனால் அவள் மண்டை உடைந்து அக்கணமே இறந்துபோனாள். பின்னால் தள்ளி விடப்பட்ட ரத்னாவளி கிழவியின் மேல் போய் விழுந்ததால் அடிபடாமல் தப்பித்துக் கொண்டாள்.

ரத்னாவளி பெரும் அதிர்ச்சியடைந்தாள். கணவனின் இந்தத் துரோகத்தை அவள் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. என்ன செய்வதென்று அறியாமல் இரவு முழுதும் மனம் உடைந்துபோய் குமுறிக் குமுறி அழுது கொண்டிருந்தாள். பின் ஒருவாறு மனத்தைத் தேற்றிக் கொண்டு, பொழுது விடிந்ததும் சுற்றிலுமிருந்த செடி கொடிகளைப் பிடித்துக் கொண்டு மேலேறி வந்தாள். பின் திக்குதிசை தெரியாமல் அலைந்து திரிந்து எதிர்பட்டவர்களிடம் வழி கேட்டுக்கொண்டு, தனது ஊருக்கு வந்து சேர்ந்தாள்.

அலங்கோலமாக வந்து சேர்ந்த மகள் ரத்னாவளியின் நிலை கண்டு தனநாயகர் பதறிப் போனார். ‘என்னம்மா, என்னாயிற்று? உனது கணவர் எங்கே? நீ ஏன் இப்படி அலங்கோலமாக வந்திருக்கிறாய்? என்னாயிற்று மகளே?’ என்று படபடத்தார்.

மனைவியையே கொல்லத் துணிந்த கயவன்தான் என்றாலும், உத்தமியான ரத்னாவளிக்கு தன் கணவனைக் காட்டிக் கொடுக்க விருப்பமில்லை. தந்தையிடம் பொய் கூறினாள்.

‘அப்பா! நாங்கள் காட்டுப் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது கொள்ளைக் கும்பல் ஒன்று எங்களை மடக்கி நகை, பொருள் அனைத்தையும் கவர்ந்து கொண்டு விட்டது. அதை தடுக்க முனைந்து சண்டையிட்டதால் எனது கணவரை அந்தக் கொள்ளைக் கூட்டம் கட்டி தூக்கிக்கொண்டுபோய் விட்டது. அந்த மோதலில் மண்டையில் அடிபட்டு கிழவி இறந்துவிட்டாள். நான் மட்டும் தப்பித்து வந்துவிட்டேன்!’

‘ம்ஹும்! போனது போகட்டும்.தெய்வத்தின் கருணையால் நீயாவது உயிர் பிழைத்து வந்தாயே மகளே! கவலைப்படாதே! நாம் எப்படியாவது உனது கணவனைத் தேடிக் கண்டுபிடிப்போம்!’ – என்று அவளது தந்தையும் தாயும் ரத்னாவளிக்கு ஆறுதல் சொல்லித் தேற்றினார்கள். ரத்னாவளியோ சதாசர்வ காலமும் தன்னைப் பிரிந்து போன கணவன் நாகதத்தன் நினைவாகவே இருந்து மனம் கலங்கி வருந்தினாள். என்றாவது ஒருநாள் அவன் மனம் திருந்தி வரமாட்டானா என்று காத்திருந்தாள்.

மாமனார் கொடுத்த பொன் பொருளுடன், மனைவியின் நகைகளையும் சேர்த்து பெரும் செல்வக் குவியலுடன் சொந்த ஊர் திரும்பிய நாகதத்தன் பழையபடியே தனது சகாக்களுடன் கொண்டாட்டங்களில் இறங்கி, விரைவிலேயே மொத்த செல்வத்தையும் செலவழித்துத் தீர்த்தான்.
கையில் செப்பாலடித்த காசு கூட இல்லாமல் போனதும் மீண்டும் அவனுக்கு தனது மாமனார் தனநாயகரின் நினைவு வந்தது. அவரிடம் சென்று ஏதாவது வியாபாரம் செய்யப்போவதாகச் சொல்லி பொன் பொருள் கேட்டு வாங்கலாம் என்று புறப்பட்டான்.

மகள் ரத்னாவளியைப் பற்றி தனநாயகர் கேட்டால் அவளை ஊரிலேயே அறுவடையைப் பார்த்துக் கொள்வதற்காக விட்டு வந்ததாகச் சொல்லி சமாளித்துக் கொள்ளலாம்.’ என்று திட்டமிட்டான்.

நாகதத்தன் ஊருக்குள் நுழைந்து தெருமுனைக்கு வரும்போதே ரத்னாவளி அவனைப் பார்த்து விட்டாள். மிகுந்த சந்தோஷத்துடன் ஓடோடிச் சென்று அவனை எதிர்கொண்டாள்.

ரத்னாவளி செத்துப் போயிருப்பாள் என்று நினைத்திருந்த நாகதத்தன் உயிருடன் அவளை எதிரே கண்டதும் திகிலடைந்து போனான். பயந்து நடுங்கினான்.

உடனே ரத்னாவளி அவனை ஆறுதல்படுத்தி, காட்டில் நடந்த எதையுமே தான் தந்தையிடம் கூறவில்லை என்று சொல்லி, அவரிடம் தான் சொல்லியிருந்த பொய்யை நாகதத்தனுக்குச் சொல்லி அதன்படியே அவனை சமாளிக்கச் சொன்னாள்.

ஆசுவாசம் கொண்ட நாகதத்தன் பயம் நீங்கி, ரத்னாவளியுடன் வீட்டுக்குச் சென்றான். தன்னை கட்டித் தூக்கிப் போன கொள்ளையரிடமிருந்து அவர்கள் ஏமாந்த சமயத்தில் மிகுந்த சாமர்த்தியமாக தப்பி வந்ததாகக் கதை சொல்லி சமாளித்தான்.

மாப்பிள்ளை தப்பிப் பிழைத்து வந்ததை தனநாயகர் பெரும் விருந்து வைத்துக் கொண்டாடினார். மனைவி ரத்னாவளியும் கணவனது துரோகத்தை மறந்து அவனுடன் சந்தோஷமாக இல்லறம் நடத்தினாள். நாகதத்தனும் வழக்கம் போல தனது சுகபோக வாழ்க்கையைத் தொடர்ந்தான்.

ஆனாலும் கலங்கிய சேற்றுக் குட்டையில் மூழ்கி அதையே சுகமாகக் கருதும் எருமையைப் போல தீயபழக்கங்களில் மூழ்கித் திளைத்த அந்தக் கொடியவனுக்கு ஒழுக்கமான வாழ்க்கையில் நீடித்திருக்க முடியவில்லை.
ஒருநாள் அந்தத் துரோகி நாகதத்தன், இரவு தன்னுடன் படுத்திருந்த மனைவி ரத்னாவளியை கழுத்தைத் திருகிக் கொன்று விட்டு, அவளது நகைகளைப் பறித்துக் கொண்டு ஓடிப் போய்விட்டான்.

இப்போது சொல்லுங்கள் மகராஜா! பசி பட்டினியிலிருந்து காப்பாற்றி, தனது மகளையே அளித்த தனநாயகருக்குக் கொஞ்சமும் நன்றி விசுவாசமில்லாமலும், உத்தமியான மனைவி ரத்னாவளிக்கு பெரும் துரோகத்தை இழைத்தவனுமாகிய நாகதத்தன் போன்ற ஆண்கள் கொடுமைக்காரர்கள்தானே? இந்தக் கதை மூலம் ஆண்கள் எல்லோரும் பெரும் மோசக்காரர்கள் என்பது விளங்குகிறதில்லையா?’ என்றது சோபிகை கிளி.

உடனே ஆண் கிளியாகிய விதேகன், ‘பெண்கள் மட்டுமென்ன? பொய், பித்தலாட்டம், சோரம், அக்கிரமம், அயோக்கியத்தனம் போன்றவற்றின் மொத்த உருவம்தானே அவர்கள்! அதற்கு நான் சொல்லப்போகும் இந்தக் கதையே உதாரணம். கேளுங்கள், மகாராஜா!’ என்று கதை சொல்லத் தொடங்கியது.

புருஷபுரம் என்னும் நகரத்தில் ரத்னாகர் என்னும் வியாபாரி இருந்தார். பெரும் செல்வந்தராகிய அவருக்கு வசுந்தரா என்பவள் ஒரே மகள். மிகுந்த அழகியான அவளை பக்கத்து நகரத்தில் பெரும் பணக்காரனாகத் திகழ்ந்த சாத்துவன் என்கிற இளைஞனுக்கு திருமணம் செய்து வைத்திருந்தார். அவர்களது இல்லறம் இனிமையாகவே நடந்தது.

ஒருசமயம் வசுந்தராவின் கணவன் வியாபார விஷயமாக வெளிதேசம் சென்றதால் அவள் தனது பிறந்தகத்துக்கு வந்து தங்கியிருந்தாள். அந்தச் சமயத்தில் கோயிலுக்குச் செல்லும்போதும், கடைத் தெருவுக்குச் செல்லும்போதும் அதே ஊரிலிருந்த அழகான இளைஞன் ஒருவனை அவள் அடிக்கடி காண நேர்ந்தது. அவன் பெயர் இளமாறன். அழகில் மன்மதனாகத் திகழ்ந்த இளமாறன்மேல் வசுந்தராவுக்கு நாட்டம் ஏற்பட்டது. அவனைக் கண்டநாள் முதல் விரகதாபத்தால் தவித்த வசுந்தரா, தனது வேலைக்காரியை அவனிடம் தூது அனுப்பி இளமாறனை தினமும் தனிமையில் சந்தித்துப் பேசினாள். யாருக்கும் தெரியாமல் அவர்களது கள்ளக்காதல் நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாக செழித்து வளர்ந்தது.

இந்தத் தருணத்தில் வெளிதேசம் போயிருந்த வசுந்தராவின் கணவன் ஊர் திரும்பினான். வந்ததுமே மனைவியைக் காணும் ஆவலில் அவள் வீட்டுக்கு ஓடோடி வந்திருந்தான். கணவன் வந்ததில் வசுந்தராவுக்கு சிறிதளவும் சந்தோஷமில்லை. தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக கணவன் வந்து விட்டானே என்றெண்ணி மனம் குமுறினாள். கணவன் வந்த நாள் முதல் அவள் தனது கள்ளக் காதலனை சந்திக்க முடியவில்லை. தவித்து மருகினாள்.

ஒருநாள் இரவு, கணவன் நன்கு உறங்கியதும் வசுந்தரா தனது கள்ளக் காதலனைக் காண்பதற்காக திருட்டுத்தனமாகப் புறப்பட்டாள். வழக்கமாக தாங்கள் சந்திக்கும் இடத்துக்கு அவனை வரச்சொல்லி முன்னதாகவே தகவல் அனுப்பியிருந்தாள். வெகுநாள்களுக்குப் பின் காதலனை சந்திக்கச் செல்வதால் தன்னிடம் இருந்த எல்லா நகைகளையும் அணிந்துகொண்டு சர்வ அலங்காரபூஷிதையாகக் கிளம்பினாள்.

இப்படி இவள் கிளம்பியதை அவளது வீட்டுக்குள் பதுங்கியிருந்த திருடன் ஒருவன் பார்த்துக் கொண்டிருந்தான். மிகச் சரியாக அன்றைக்குத்தான் அவன் வசுந்தராவின் வீட்டுக்குத் திருட வந்திருந்தான். மொத்த நகைகளையும் அணிந்துகொண்டு வசுந்தரா புறப்பட்டுச் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தவன் மனம் பதறினான். ‘அய்யய்யோ! நான் திருட வந்த மொத்த நகைகளையும் அணிந்து கொண்டு செல்கிறாளே! அப்படி இவள் இந்நேரத்தில் எங்கே செல்கிறாள்? என்று நினைத்துக்கொண்டு ஆவலுடன் அவளைப் பின்தொடர்ந்தான்.

ஆசையுடனும் பெரும் ஆவலுடனும் தனது கள்ளக் காதலனைச் சந்திக்கச் சென்ற வசுந்தராவுக்கு அங்கே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
வசுந்தராவின் கள்ளக் காதலன் இளமாறன் அங்கிருந்த மரத்தடி ஒன்றில் பாம்பு கடித்து இறந்து போய் நீலம் பாரித்து பிணமாகக் கிடந்தான். அப்படி பிணமாகக் கிடந்தவன் உடலுக்குள் அம்மரத்து வேதாளம் ஒன்று புகுந்து கொண்டிருந்தது.

இது ஏதும் அறியாத வசுந்தரா தனது ஆசை நாயகன் மாண்டு கிடந்ததில் மனம் வருந்தி அவனை மடியில் எடுத்து கிடத்திக் கொண்டு அழுதாள். அளவுகடந்த துக்கமும் அழுகையுமாக காதலனின் பிணத்துக்கு ஓர் ஆசை முத்தம் இட அவள் நெருங்கியபோது, அவனது உடலுக்குள் இருந்த வேதாளம் வசுந்தராவின் மூக்கை கவ்விப் பிடித்துக் கடித்தது. மூக்கின் முனைப் பகுதி துண்டிக்கப்பட்டு பிணத்தின் வாய்க்குள்ளேயே விழுந்தது.
வசுந்தரா வலியில் துடிதுடித்துப் போனாள். ரத்தம் சொட்டச் சொட்ட பதறி எழுந்தாள். பிணத்துக்குள் ஏதோ பேய் நுழைந்திருக்கிறது என்று உணர்ந்து திடுக்கிட்டவள் அதற்கும் மேல் அங்கே தாமதிக்காமல், ஓட்டமும் நடையுமாக வீடு திரும்பினாள்.

அவளது மனம் முழுவதும் திகிலாக இருந்தது. காலையில் தன்னைக் காண்பவர்கள் எல்லோரும் துண்டிக்கப்பட்ட தனது மூக்குக்கு விளக்கம் கேட்பார்களே என்ன சொல்வது என்று எண்ணியவள், தூங்கிக் கொண்டிருந்த கணவனைப் பார்த்தாள். மனத்தில் ஓர் யோசனை தோன்ற, பெருங்குரலெடுத்துக் கத்தினாள்.

‘ஐயையோ! எல்லோரும் வாருங்களேன். என் கணவன் என்கிற இந்த மகாபாவி, ஒரு சாதாரண சண்டையில் எனது மூக்கை வெட்டி விட்டானே.’ என்று கதறினாள்.

அவளது அலறலைக் கேட்டு முதலில் விழித்துக் கொண்டவன் வசுந்தராவின் கணவன் தான். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. மலங்க மலங்க விழித்தான். அடுத்து வசுந்தராவின் தந்தையும், தாயும் இன்னும் வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் அங்கே ஓடோடி வந்தனர். மூக்கு வெட்டப்பட்டு ரத்தம் சொட்ட நிற்கும் மகளையும், அவள் பக்கத்தில் திகைத்து நிற்கும் கணவனையும் கண்டு, கோபம் கொண்டனர். அவனை எதுவுமே விசாரிக்காமல், அவன் சொல்ல வந்ததையும் கேட்காமல் வெறியுடன் அவனை அடித்து உதைத்தனர். வசுந்தராவின் கணவன் மயங்கி விழுந்தான்.

இது நடந்தது அத்தனையையும் வசுந்தராவைப் பின் தொடர்ந்து வந்து பார்த்துக் கொண்டிருந்த திருடன் இதற்கும் மேல் இங்கிருந்தால் தனக்கு ஆபத்து என்றெண்ணி ஓசைப்படாமல் நழுவி வீடு போய் சேர்ந்தான்.
மறுநாள், வசுந்தராவின் வழக்கு அரசவைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அரசன் முன்னிலையில் விசாரணை நடந்தது. வசுந்தராவின் கணவன், தான் இந்தக் காரியத்தைச் செய்யவில்லை என்றும், அவளது மூக்கு எப்படி அறுபட்டது என்று தனக்குத் தெரியாது என்றும் சொல்ல, அவனை யாரும் நம்பவில்லை. வசுந்தராவின் சொல்லையே அனைவரும் நம்பினார்கள். இறுதியாக மனைவியின் மூக்கை அறுத்த குற்றத்துக்காக வசுந்தராவின் கணவனுக்கு மரணதண்டனை விதித்தான் மன்னன்.

இந்த வழக்கு எவ்விதமாகப் போகிறதென்று காண்பதற்காக திருடனும் அந்த அரசவைக்கு வந்து மக்களோடு நின்று கவனித்துக் கொண்டிருந்தான். மன்னன் வசுந்தராவின் கணவனுக்கு மரண தண்டனை விதித்ததும் திருடன் திடுக்கிட்டுப் போனான். அவனுக்கு அதற்கு மேல் மனம் தாளவில்லை. ஒரு நிரபராதி தண்டிக்கப்படுவதை காணச் சகிக்காமல் நடந்த உண்மையைச் சொல்லி விடுவதென்று தீர்மானத்துக்கு வந்தான்.

‘மன்னவா! தங்கள் விசாரணையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்க வேண்டும்!’ என்று சொல்லியபடி சபையின் மையப்பகுதிக்கு வந்து அரசன் முன் பணிந்து நின்றான்.

‘அரசே, இந்தப் பெண்ணின் கணவன் நிரபராதி! ஏதும் அறியாத அப்பாவி! நடந்தது அனைத்தையும் நான் அறிவேன்!’ என்றவன், முன் தினம் இரவு வசுந்தராவின் வீட்டுக்கு தான் திருடச் சென்றது முதல், கள்ளக் காதலன் வாயில் சிக்கி அவளது மூக்கு அறுபட்டது வரை விளக்கிச் சொன்னான்.
‘மன்னா, இவள் பெரிய சூழ்ச்சிக்காரி! வஞ்சகி! இழிவான பிறவி இவள்! நான் கூறியதற்கு ஆதாரம் வேண்டுமென்றால், இறந்து கிடக்கும் இவளது கள்ளக் காதலனின் பிணத்தின் வாயில் பார்த்தால் உண்மை விளங்கும். இந்தப் பெண்ணின் மூக்கு அந்த பிணத்தின் வாயில் கிடக்கும்!’ என்றான்.

மன்னனும் அதுபோலவே காவலர்களை அனுப்பி பரிசோதிக்க திருடன் சொன்னது ஊர்ஜிதமானது. மன்னன் வசுந்தராவின் கணவனை விடுதலை செய்து, வசுந்தராவை மொட்டையடித்து கழுதை மேல் ஏற்றி நாடு கடத்தும்படிக் கட்டளையிட்டான். வழக்கில் தவறான தீர்ப்பு வழங்காமல் காத்த திருடனுக்குப் பரிசுகள் அளித்து இனி திருடக் கூடாது என்று சொல்லி அரண்மனை உத்தியோகமும் கொடுத்தான்.

இப்போது சொல்லுங்கள் மகாராஜா, பெண்கள்தானே கொடுமைக்காரிகள்? வஞ்சகிகள்?’ என்று ஆண் கிளி விதேகன் கதை சொல்லி முடித்துக் கேட்டதுமே அங்கே ஓர் அற்புதம் நிகழ்ந்தது.

கதைகள் சொல்லிய இரண்டு கிளிகளும் தேவலோக கந்தர்வனாகவும், தேவலோகக் கன்னியாகவும் உருமாற்றம் பெற்றன.

‘மன்னவா, நாங்கள் இந்திரன் அளித்த சாபத்தால் இதுவரை கிளிகளாகக் கிடந்தோம். தங்களுக்குச் சொல்லிய இந்தக் கதைகள் மூலம் சாபவிமோசனம் பெற்றோம்!’ என்று சொல்லி இருவரும் விடை பெற்றுக் கொண்டு வானுலகம் மீண்டார்கள்.

இவ்வாறாக கதை சொல்லி முடித்த வேதாளம், விக்கிரமாதித்தனிடம், ‘நீர் சொல்லும் மகாராஜனே! அந்த இரண்டு கிளிகளும் சொன்ன கதைகளில் வரும் ஆண், பெண் இருவரில் மிக மோசமானவர், கொடியவர் யார்? சரியான விடை தெரிந்தும் சொல்லாவிட்டால் உமது தலை சிதறி விடும்! பதில் சொல்லும் உத்தமரே!’ என்று கேட்டது.

‘வேதாளமே! இந்த இரண்டு கதைகளில் வரும் ஆண், பெண் இருவரில் பெண்தான் மிகவும் மோசமானவள். கணவன் மனைவியைக் கொடுமைப்படுத்துவதை விட, அமைதிக்கும், கருணைக்கும், பொறுமைக்கும் உதாரணமாகச் சொல்லப்படும் பெண்ணானவள் தன் கணவனைக் கொடுமைப்படுத்துவதுதான் மிகவும் மோசமான செயலாகும். இக்காலத்தில் பெரும்பாலும் பெண்கள்தான், ஆண்களை விடவும் பொய்யானவர்களாக, துரோகிகளாக இருக்கிறார்கள்!’ என்றான்.

விக்கிரமாதித்தனின் இந்தச் சரியான பதிலால் வேதாளம் அவனது தோளை விட்டு முருங்கை மரத்துக்குப் பறந்தது. விக்கிரமாதித்தன் அதைத் துரத்திக் கொண்டு விரைந்தான்.

மதனமோகினி கதை

விக்கிரமாதித்தன் கதைகள் / 12

46149_Mahishasura-Mardhini-Picture-Brahma-Wallpaper_1570x1200விக்கிரமாதித்தன் மீண்டும் வேதாளத்தை முருங்கை மரத்திலிருந்து விடுவித்து தோள்மீது போட்டுக்கொண்டு புறப்பட்டான். சிறிது நேரம் போனதுமே வேதாளம் அவனிடம் பேச்சுக் கொடுத்தது.
‘அறிவிலும், வீரத்திலும் இணையில்லாதவன் என்று போற்றப்படும் விக்கிரமாதித்தரே, என்னைச் சுமந்து செல்லும் களைப்பு தெரியாமல் இருக்க உமக்கு ஒரு கதை சொல்கிறேன். காது கொடுத்துக் கேளும்!’ என்று கதையை சொல்லத் தொடங்கியது.

‘பிரஹத்புரம் என்னும் நகரத்தை யட்சகேது என்கிற மன்னன் ஆண்டு வந்தான். அவனது ராஜ்ஜியத்தில் பிரசித்தி பெற்ற துர்க்கையம்மன் கோயில் ஒன்று அமைந்திருந்தது. அங்கு கோயில் கொண்டிருந்த துர்க்கையம்மன் மகா வரப்பிரசாதி. பக்தர்கள் வேண்டியதைத் தந்து அருள்பாலிப்பவள். அதனால் பிரகஹ்புரம் குடிமக்கள் மட்டுமின்றி அதனைச் சுற்றியிருந்த நாடு நகரங்களில் இருந்தெல்லாம்கூட பக்தர்கள் அக்கோயிலுக்கு வந்து துர்க்கையம்மனை தரிசனம் செய்து பலனடைந்தார்கள்.

ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் அக்கோயிலின் திருவிழா நடைபெறும். பத்து நாட்கள் நடைபெறும் அத்திருவிழாவில் மன்னர் முதல் எளியவர்வரை அத்தனை பேரும் ரதத்திலும், மாட்டு வண்டிகள் கட்டிக் கொண்டும், கால்நடையாகவும் உற்றார் உறவினருடனும் கூட்டம் கூட்டமாக தங்கள் பெண்டு பிள்ளைகளுடன் வந்து தங்கி கோயில் தீர்த்தக் குளத்தில் நீராடி துர்க்கையைத் தரிசித்து மகிழ்வார்கள். அவர்களுள் சிலர் தங்களது கஷ்டங்களைச் சொல்லி பிரார்த்தித்துக்கொள்வார்கள். மற்றும் சிலர் தங்களது பிரார்த்தனை நிறைவேறியதற்காக தாங்கள் வேண்டிக் கொண்டபடி வேண்டுதலை நிறைவேற்றிச் செல்வார்கள்.

அப்படி கோயிலுக்கு வந்தர்களில் பவளனும் ஒருவன். பிரகஹ்புரத்தை அடுத்த ஆலப்பாக்கம் என்னும் ஊரைச் சேர்ந்தவன். சற்று வசதிக்கார இளைஞன். அவனது ஒரே குறை தாழ்வு மனப்பான்மை. அதனால் கொஞ்சம் கோழைத்தனம் உண்டு. ஆனால் அளவுகடந்த அம்மனின் பக்தன். துர்க்கையம்மனின் மீது எல்லையில்லாத நம்பிக்கையும், பக்தியும் கொண்டவன். அதனால்தானோ என்னவோ அந்த துர்க்கையம்மனின் திருவிழாவில் பவளனின் வாழ்க்கையில் ஓர் திருப்பம் நேர்ந்தது.

பிரஹத்புரம் வந்து துர்க்கையம்மன் கோயில் திருவிழாவில் மிகுந்த பக்தியுடனும், பரவசத்துடனும் சுற்றி வந்த பவளனின் கண்களில் பட்டாள் அந்தத் தேவதை. நிலவை உருக்கி வார்த்து, நட்சத்திர மின்னலால் இழைத்தது போன்ற வனப்புடன் திகழ்ந்த அந்தப் பெண்ணைக் கண்டதுமே அவள் மேல் காதலானான் பவளன்.

திருவிழாவில் அவள் நடந்த திசையெல்லாம் தொடர்ந்து போய் அவளது அழகை கண்களால் விடாமல் பருகி தன் இதயம் முழுக்க நிரப்பி மகிழ்ந்தான். ஆனால் மனத்துக்குள் இத்தகைய பேரழகி தனக்குக் கிடைப்பாளா என்கிற ஏக்கமும் எழுந்தது. மேலும் அவளைப் பின்பற்றி அவளைக் குறித்த தகவல்களைத் திரட்டிக்கொண்டான். அவளது பெயர் மதனமோகினி என்பது உச்சரிக்கும் போதெல்லாம் அவனது நாக்கை தித்திக்க வைத்தது.

’மதனமோகினி’ ‘மதனமோகினி’ ‘மதனமோகினி’ என்று அவள் பெயரை மந்திரம் போல் உச்சரித்தவன், அதே வேகத்துடன் நேராக துர்க்கையம்மன் சந்நிதிக்குச் சென்றான். தேவியை வணங்கி மனம் உருகப் பிரார்த்தித்தான்.

‘தாயே துர்க்காதேவி! இப்போது என் வாழ்க்கையின் குறிக்கோள் ஒன்றே ஒன்றுதான்! இதோ உன் கோயிலில் நான் பார்த்து விரும்பிய அந்தப் பெண்ணே, அந்த மதனமோகினியே எனக்கு மனைவியாக வாய்க்கவேண்டும். பேரழகியான அவளுடன் சில நாட்களே வாழ்ந்தாலும் போதும். என் ஜென்ம பலன் பூர்த்தியாகிவிடும். இதற்கு நீதான் அருள் செய்ய வேண்டும். அப்படி நீ என் விருப்பத்தை நிறைவேற்றி வைத்தால், அடுத்தமுறை உனது இந்த ஆலயத்துக்கு வரும்போது என் தலையை வெட்டி உனக்கு காணிக்கையாக்குகிறேன்!’ என்று வேண்டிக் கொண்டான்.

துர்க்கையம்மன் கோயிலிலிருந்து வீடு திரும்பிய பவளன், நாளெல்லாம் மதனமோகினியின் நினைவாகவே கிடந்தான். அவளை நினைத்தே ஏங்கினான். தனக்குத்தானே பேசிக் கொண்டான். தானே சிரித்துக் கொண்டான். சரியாகச் சாப்பிடாமல், தூங்காமல் இளைத்துத் துரும்பானான்.

பவளனின் இந்த நிலையைக் கண்டு அவனது பெற்றோர் பெரும் கவலை கொண்டனர். ஒருநாள் பவளனின் தாயார் அவனை அழைத்து, ‘மகனே! பவளா! ஏன் இப்படி பித்துப் பிடித்தவன் போல் கிடக்கிறாய்? என்ன உன் துயரம்? சொன்னால்தானே நாங்கள் அதைத் தீர்த்து வைக்க முடியும்!’ என்று கேட்டு விசாரிக்க, பவளன் திருவிழாவில் தான் கண்ட மனம் கவர்ந்த பெண்ணைப் பற்றி அவளிடம் கூறினான்.

தாயார் இதை பவளனின் தந்தையிடம் கூற, அவர் பவளனிடம், ‘அந்தப் பெண் யார்? எந்த ஊர்?’ என்றெல்லாம் விசாரித்துத் தெரிந்துகொண்டு, ‘இதற்காகவா, உண்ணாமல் உறங்காமல் நீயும் துன்பப்பட்டு, எங்களையும் கஷ்டப்படுத்தினாய்? அந்தப் பெண்ணின் தகப்பன் எனது நண்பன்தான். பொன் பொருள், குலம், அந்தஸ்து என்று அனைத்திலும் நாமும் அவனுக்கு நிகரானவர்கள்தான். எனவே நான் பெண் கேட்டால் அவன் மறுக்க மாட்டான். கவலைப்படாதே!’ என்றார்.

அதுபோலவேதான் நடந்தது. மதனமோகினியின் தந்தை மிகுந்த சந்தோஷமாக பவளனுக்கு தனது மகள் மதனமோகினியை திருமணம் செய்து தர ஒப்புக்கொண்டார். அடுத்து வந்த முகூர்த்தத்திலேயே திருமணம் கோலாகலமாக நடந்தேறியது.

மனைவி மதனமோகினியுடன் வீடு திரும்பிய பவளன் மிகுந்த சந்தோஷமாக அவளுடன் இல்லறம் நடத்தினான். மணமக்கள் சல்லாபக் கடலில் மூழ்கித் திளைத்து இன்பத்தை அள்ளி அள்ளிப் பருகினார்கள். காலம் களிப்புடன் நகர்ந்தது.

திருமணமாகி சரியாக ஒரு வருடம் கழிந்த நிலையில் ஒருநாள் மதனமோகினியின் அண்ணன் மதனபாலன் தனது தங்கையின் வீட்டுக்கு வந்தான். தங்கையும், தங்கையின் கணவனான பவளனும், அவனது பெற்றோரும் மதனபாலனை மிகுந்த அன்புடன் வரவேற்றனர். அன்றைய தினம் தடபுடலான விருந்துக்கு ஏற்பாடு செய்து மதனபாலனை திணறத் திணற உபசரித்து மகிழ்ந்தனர்.

சாப்பாடு இன்னபிற உபசாரங்கள் எல்லாம் முடிந்ததும் மதனமோகினியின் அண்ணன் தங்கையின் புகுந்த வீட்டாரிடம், சொன்னான். ‘ஊரிலே துர்க்காதேவி கோயில் உற்சவத் திருவிழா தொடங்கிவிட்டது. தங்கையுடன் உங்கள் அனைவரையும் அழைத்து வரச் சொல்லி அப்பா அனுப்பி வைத்தார்’ என்று கூறினான்.

பவளனின் அப்பா அவனிடம், ‘அதற்கென்ன, அப்படியே ஆகட்டும்.’ என்றவர், தனது மகன் பவளனிடம் திரும்பி, ‘பவளா! முதலில் நீயும் உன் மனைவியும் நாளைக் காலையே உனது மைத்துனனுடன் புறப்பட்டுச் செல்லுங்கள்! எனக்கு இங்கே ஒரு சிறிய வேலை இருக்கிறது. அதை முடித்துக்கொண்டு நானும் உன் அம்மாவும் இரண்டொருநாள் கழித்து வருகிறோம்!’ என்றார்.

அவர் சொன்னதுபோலவே மறுநாள் காலையில் பவளன், மனைவி மதனமோகினி, மைத்துனன் மதனபாலனுடன் மாமனார் வீட்டுக்குப் புறப்பட்டான்.

அவர்கள் பிரகஹ்புரத்தை அடையும்பொழுது உச்சிப்பொழுது நெருங்கி விட்டது. நகரத்தின் நுழைவாயிலிலேயே அமைந்திருந்த துர்க்கையம்மனின் கோயிலைக் கண்டபோதே பவளனின் இதயம் சிலிர்த்தது. கடந்து போன திருவிழா நாள்கள் நினைவுக்கு வந்தது. மதனமோகினியைக் கண்டு ஏங்கியதும், அம்மனின் சந்நியில் தான் வேண்டிக்கொண்ட பிரார்த்தனையும், அதுபோலவே பேரழகி மதனமோகினி தனக்கு மனைவியாகக் கிடைத்த ஆனந்தமயமான வாழ்க்கையும் மனத்துக்குள் அலைமோதியது.

நன்றியுணர்வில் மனம் நெகிழ்ந்த பவளன் உணர்ச்சிப் பெருக்கு மேலிட துர்க்கையம்மன் சந்நிதியில் தனது பிரார்த்தனையை நிறைவேற்றத் தயாரானான். மனைவி மைத்துனனிடம் ஏதும் சொல்லாமல் அவர்களை கோயிலின் பிரமாண்டமான ஆலமரத்து நிழலில் அமர்த்தி விட்டு, ‘மோகினி, நீயும் உனது அண்ணனும் களைத்துப் போயிருக்கிறீர்கள். எனவே இங்கேயே அமர்ந்து இளைப்பாறுங்கள். நான் போய் துர்க்கையம்மனை தரிசித்து வணங்கிவிட்டு வருகிறேன்!’ என்று சொல்லி அவர்களை அமரச் செய்து விட்டு சந்நிதிக்குள் புகுந்தான்.

மகிஷாசூரமர்த்தினியாக கோலம் கொண்டிருந்த துர்க்கையம்மனை தரிசித்தவன், அவளிடம், ‘தேவி தயாபரி! துர்க்காமாதா! எனது ஆசையை நிறைவேற்றி ஆனந்த வாழ்வளித்தாய். இந்த ஒரு வருடம் மிகுந்த மனத் திருப்தியுடன் என் மனைவியுடன் வாழ்ந்துவிட்டேன். அது போதும் எனக்கு. இதோ, நான் உனக்கு அளித்த வாக்குப்படி என் தலையை உனக்கு காணிக்கையாக்கிறேன்!’ என்று சொல்லிவிட்டு சுற்று முற்றும் பார்த்தான்.
சந்நிதிக்குள் கிடந்த வெட்டுக் கத்தி ஒன்றை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டவன், கோயிலினுள் ஆலயமணி கட்டியிருந்த கயிற்றில் ஆலயமணியைக் கழற்றி விட்டு, அந்தக் கயிற்றில் தனது தலை முடியை உயர்த்திக் கட்டினான். பின் வெட்டுக் கத்தியால் ஒரே வீச்சில் கழுத்தை அறுத்துக் கொண்டான். ரத்தம் சொட்டச் சொட்ட அவனது தலை கயிற்றில் தொங்கி ஊசலாட, முண்டமாகிய உடல் தள்ளாடித் தரையில் விழுந்தது.
வெளியே காத்திருந்ததில் மதனமோகினி மரத்தில் சாய்ந்தபடி தூங்கியே போனாள். அவளது அண்ணன் மதனபாலனோ நேரம் விரைந்தோடியதில் பொறுமையிழந்துபோய், தூங்கிக் கொண்டிருந்த தங்கையை அப்படியே விட்டு பவளனைத் தேடி கோயிலுக்குள் நுழைந்தான்.

அங்கே, தங்கையின் கணவன் தலை வேறு உடல் வேறாகக் கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டான். ‘அடடா! என்ன காரியம் செய்து விட்டேன். தங்கையின் கணவனை தனியே விட்டிருக்கக்கூடாது. இப்போது எப்படி நான் இதை என் உயிருக்குயிரான தங்கையிடம் போய் சொல்வேன்.’

மதனபாலன் மனம் உடைந்து போனான். தங்கையின் கணவன் இறந்து விட்டான் என்ற தகவலை போய்ச் சொல்ல அவனுக்கு இதயத்தில் திராணியில்லை. அவன் ஓர் தீர்மானத்துக்கு வந்தான்.

பவளன் இறந்தது போலவே அவனும் அதே வழியில் அதே கத்தியால் தனது தலையை துண்டித்துக் கொண்டு மாண்டு போனான்.

இது எதுவும் அறியாத மதனமோகினி, தூக்கம் கலைந்து பார்த்தபோது பக்கத்தில் யாரும் இல்லாததால் திகைத்துப் போனாள். என்னை தனியே விட்டுவிட்டு இருவரும் எங்கே சென்றார்கள்? கணவனையும், அண்ணனையும் தேடி கோயிலுக்குள் சென்றாள்.

அங்கே, நேசத்துக்குரிய கணவனும், பாசத்துக்குரிய அண்ணனும் இருவரும் மாண்டு கிடக்கும் கொடிய காட்சியைக் கண்டாள். கதறினாள். துடித்தாள். இதயம் வெடித்து விடுவதைப் போல குமுறிக் குமுறி அழுதாள்.

அழுது அழுது கண்ணீர் வற்றித் துவண்டதும், ஒரு முடிவுக்கு வந்தவளாக எழுந்தாள். துர்க்கையம்மன் முன் சென்று ஆவேசத்துடன், ‘தாயே, என்னைக் காத்து ரட்சிக்க வேண்டிய நீயே என்னைக் கைவிட்டு விட்டாய். உனது சந்நிதியிலேயே, உன் கண்ணெதிரிலேயே எனது கணவனும், சகோதரனும் உயிர் விட்டிருக்கிறார்கள். நீ அவர்களைக் காப்பாற்றவில்லை. போகட்டும்! எனது மஞ்சள் குங்குமத்தையும், மங்கலத்தையும் காக்க மனமில்லாதவளே, இனி நான் மட்டும் இவ்வுலகில் வாழ்ந்து என்ன செய்யப் போகிறேன். இதோ உன் கண்ணெதிரேயே நானும் உயிர்விடப் போகிறேன். இந்த ஜென்மத்தில் என்னைக் கை விட்டதுபோல இல்லாமல் அடுத்த ஜென்மத்திலும் இந்த இருவருமே எனது கணவனாகவும், சகோதரனாகவும் அமைய வரம் கொடு!’ என்று வேண்டிக் கொண்டாள்.

பின் மதனமோகினி ஆலயத்தின் உள்ளேயே ஓர் ஆலமரத்தின் விழுதைக் கட்டி அதில் தூக்கிட்டுக் கொள்ளப் போனாள். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது! கருவறையில் இருந்து ஓர் அசரீரிக் குரல் ஒலித்தது.
‘மகளே மதனமோகினி, அவசரப்படாதே! நீ ஆத்மஹத்தி செய்துகொள்ளத் தேவையில்லை. உனது பதி பக்தியும், அண்ணன் மீது கொண்ட பாசமும் மன உறுதியும் போற்றத்தக்கது. போ! போய் இருவரது தலைகளையும் அவரவர் உடலுடன் பொருத்தி வை! எனது அருளால் அவர்கள் உயிர் பெற்று எழுந்திருப்பார்கள்!’ என்று கூறியது.

மனம் மகிழ்ந்து போன மதனமோகினி, தூக்கிலிருந்து இறங்கி ஆவலுடன் இருவரது உடல் கிடந்த இடத்துக்கு ஓடினாள். இருவரது தலைகளையும் உடலுடன் பொருத்தினாள். ஆனால்… ஆனால்…

அடடா! அவள் என்ன காரியம் செய்துவிட்டாள்? தலைகால் புரியாத சந்தோஷத்தினாலும், பதற்றத்தினாலும் என்ன செய்கிறோம் என்பதே அறியாமல் மதனமோகினி இருவரது தலைகளையும் மாற்றி மாற்றிப் பொருத்தி விட, கணவனின் தலை அண்ணன் உடலிலும், அண்ணனின் தலை கணவன் உடலிலும் பொருந்திப் போய் இருவரும் உயிர் பெற்று எழுந்து நின்றார்கள்.

மதனமோகினி மனம் கலங்கிப் போனாள். அவளுக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது. இந்த இருவரில் யார் எனது கணவன்? யார் எனது அண்ணன்? கணவன் தலையோடு நிற்கும் அண்ணனின் உருவமா? அண்ணனின் தலையோடு இருக்கும் கணவனின் உருவமா? எப்படிக் கண்டுபிடிப்பது?’

குழப்பத்தின் உச்சத்தில் கதையை நிறுத்திய வேதாளம், விக்கிரமாதித்தனிடம் கேட்டது:

‘சொல்லுங்கள் விக்கிரமாதித்தரே! இந்த இரண்டு உருவங்களில் யார் மதனமோகினியின் கணவன்? யார் மதனமோகினியின் அண்ணன்?’

‘வேதாளமே, ஒருவனது எண்சாண் உடலில் சிரசே பிரதானம் என்பர் பெரியோர். நாமும் தலையைக் கொண்டுதான் மனிதரை அடையாளம் கண்டுகொள்கிறோம். அதுமட்டுமல்ல தலையில் உள்ள மூளைதான் அனைத்தையும் யோசிக்கிறது. செயலாற்றத் தூண்டுகிறது. எனவே அந்த இருவரில் எவன் மதனமோகினியை மனைவி என்று நினைக்கிறானோ அவனே அவளின் கணவன் ஆவான்!’

அவ்வளவுதான்! சரியான பதிலைக் கேட்ட வேதாளம் முருங்கை மரம் செல்ல, விக்கிரமாதித்தன் அதைத் தொடர்ந்து போனான்.

0

மூன்று மாப்பிள்ளைகள் கதை

விக்கிரமாதித்தன் கதைகள் / 11

210px-DEMON_MASKவிக்கிரமாதித்தன் மீண்டும் வேதாளத்தை மரத்திலிருந்து மீட்டெடுத்துப் புறப்பட்டதும், பாதி வழி கடந்ததுமே வழக்கம்போல வேதாளம் தனது அடுத்த கதையை சொல்லத் தொடங்கியது.

‘உஜ்ஜயினி என்னும் நகரத்தை புண்ணியசேனன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனது அரசவை பண்டிதராகப் பணியாற்றியவர் ஹரிதாஸர் என்னும் அந்தணர்.

ஹரிதாஸர் தனது மனைவி, மகன், மகளுடன் உஜ்ஜயினியின் அக்ரஹாரம் ஒன்றில் குடியிருந்தார். மனைவி பத்மாவதி. மகன் பெயர் தேவஸ்வாமி. அவரது மகளின் பெயர் தேவப்பிரபா.

ஹரிதாஸரின் மகள் தேவப்பிரபாவுக்கு தான் ஒரு பேரழகி என்பதில் மெல்லிய கர்வம் உண்டு. அவள் அப்போது திருமண வயதை எட்டியிருந்ததால் கூடிய சீக்கிரமே அவளுக்குத் தகுந்தவாறு மாப்பிள்ளை தேடவேண்டும் என்று, தேவப்பிரபாவின் தாயும், தந்தையும், அண்ணனும் பேசிக் கொண்டிருந்ததை அவள் கேட்டாள்.

தேவப்பிரபாவுக்கு மனத்தில் மெல்லிய பயம் ஏற்பட்டது. தனது அழகுக்கும் அறிவுக்கும் தகுந்தபடி இல்லாமல் தனது பெற்றோர் ஏதோவொரு மாப்பிள்ளையைப் பிடித்து வந்து கட்டி வைத்து விடுவார்களோ என்று கவலைப்பட்டாள்.

எனவே தன் மனத்தில் இருப்பதை வெளிப்படையாகவே சொல்லி விடத் தீர்மானித்து, ஒருநாள் வீட்டில் அனைவரும் சேர்ந்திருந்த சமயத்தில் மெல்லப் பேச்சைத் துவக்கினாள்.

‘அம்மா, நீங்கள் என் திருமணத்துக்கு வரன் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் அல்லவா?’ என்று வெட்கத்துடன் கேட்டாள்.

‘ஆம் மகளே! அது எங்கள் கடமையல்லவா? வயதுக்கு வந்த பெண்ணை நீண்ட நாட்கள் வீட்டில் வைத்திருக்கக் கூடாது அம்மா! அதனால்தான் விரைவிலேயே உனக்குக் கணவராகத் தகுந்தவராக ஒருவரைத் தேடிக் கொண்டிருக்கிறோம்!’ – அம்மா அன்புடன் கூறினாள்.

அதற்குள் அவளது தந்தையார் ஹரிதாஸர் குறுக்கிட்டு, ‘மகளே தேவப்பிரபா, நீ எங்களிடம் ஏதோ சொல்ல நினைக்கிறாய் என்று தோன்றுகிறது! எதுவானாலும் தைரியமாகச் சொல் அம்மா!’ என்று கேட்டார்.

‘ஆம் அப்பா! எனக்குக் கணவராக வரப் போகிறவரைப் பற்றி உங்களிடம் சொல்லவேண்டும். நீங்கள் எனக்குத் தேர்ந்தெடுக்கும் மணமகன் வீரத்திலோ, ஞானத்திலோ, விஞ்ஞான சூத்திரத்திலோ ஏதோ ஒன்றில் வல்லவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவரைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன்! இதற்கு மாறாக எந்தத் திறமையும் இல்லாத எவரையேனும் தேர்ந்தெடுத்துவிட்டு தயவுசெய்து என்னைக் கட்டாயப்படுத்தாதீர்கள்! இது என் கோரிக்கை!’ என்று சொல்லி விட்டு வீட்டுக்குள் விரைந்தோடிச் சென்றுவிட்டாள்.

இதைக் கேட்டதுமே ஹரிதாஸரும், மனைவி பத்மாவதியும், மகன் தேவஸ்வாமியும் மலைத்துப் போனார்கள். தேவப்பிரபா குறிப்பிட்டபடியான மாப்பிள்ளையை எங்கு போய் தேடி, எப்படிக் கண்டுபிடிப்பது என்று கவலை கொண்டார்கள்.

இந்தச் சமயத்தில்தான் ஹரிதாஸர் வசித்த அந்த உஜ்ஜயினி நகரத்துக்கு வேறொரு அபாயமும் வந்து சேர்ந்தது!

தட்சிணதேசத்து மன்னன் பிரத்யுங்கன் என்பவன் உஜ்ஜயினி தேசத்தின் மீது படையெடுத்து வந்து எல்லைப்புறத்தில் முகாமிட்டிருந்தான்.

உஜ்ஜயினியின் மன்னன் புண்ணியசேனன் பதறிப் போனான். தட்சிணதேசத்து மன்னனின் பெரும் படையுடன் உஜ்ஜயினியின் சிறிய படை மோதி வெற்றி கொள்வதென்பது நடக்காத காரியம். எனவே மன்னன் பிரத்யுங்கனுடன் சமாதானமாகப் போக விரும்பினான்.

அவனிடம் யாரை சமாதானத் தூதுக்கு அனுப்புவது என்று யோசித்து தனது அரசவைப் பண்டிதரான ஹரிதாஸரை தேர்ந்தெடுத்து போர் முகாமுக்கு அனுப்பி வைத்தான்.

ஹரிதாஸர் உஜ்ஜயினி மன்னனின் சார்பாக தட்சிண மன்னனிடம் சமாதானம் பேசினார். அவனது மனத்துக்கு உகந்தபடியாக பிரத்யுங்கனைப் புகழ்ந்து பேசி வசப்படுத்திக் காரியம் சாதித்தார். உஜ்ஜயினி மன்னனுடன் நட்புக்கரம் நீட்ட தட்சிண மன்னனும் ஒப்புக் கொண்டான். ஹரிதாஸரை அவனுக்கு மிகவும் பிடித்துப் போனதால் தன்னுடன் இரண்டொரு நாள் தங்கிச் செல்லும்படியாகக் கேட்டுக் கொண்டான்.

அதன்படியே தட்சிண மன்னன் பாசறையில் தங்கியிருந்தபோது ஹரிதாஸரை வந்து சந்தித்தான் ஒரு பிராமண இளைஞன். தட்சிண மன்னனின் அரசவையைச் சேர்ந்தவனான அந்த இளைஞனின் பெயர் சூத்திரவான்.

அவன் ஹரிதாஸரை வணங்கி, ‘ஸ்வாமி, என் பெயர் சூத்திரவான். நான் தங்களது மகள் தேவப்பிரபாவைப் பற்றியும் அவளது பேரழகு குறித்தும் அநேகர் சிலாகித்துப் பேசுவதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்போதிலிருந்தே மனத்தில் தங்கள் மகள் மீது மிகுந்த பாசம் கொண்டுவிட்டேன். எனவே தாங்கள் தங்கள் மகளை எனக்கு மணம் செய்வித்துத் தந்தால் மிகவும் மகிழ்வேன்!’ என்று வேண்டினான்.

ஹரிதாஸருக்கு இளைஞன் சூத்திரவானைப் பிடித்துப் போனாலும், மகள் தேவப்பிரபா தனக்கு இட்ட நிபந்தனையை நினைத்துப் பார்த்தார். அதை சூத்திரவானிடமும் கூறினார்.

‘இளைஞனே உன்னை எனது மாப்பிள்ளையாக ஏற்றுக்கொள்வதில் சிறு சிக்கல் இருக்கிறது. எனது மகள் தனக்கு வரப்போகிற கணவன் வீரம், ஞானம், விஞ்ஞான சாத்திரம் இம்மூன்றில் ஏதோ ஒன்றிலாவது வல்லவராக இருக்க வேண்டும் என்று நிபந்தனை இட்டிருக்கிறாள். அதன்படி உன்னிடம் என்ன திறமை உள்ளது?’ என்று கேட்டார்.

‘ஆஹா! ஸ்வாமி அதிலொன்றும் பிரச்னையில்லை. நான் விஞ்ஞான சூத்திரத்தில் கரை கண்டவன். இதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். நிரூபிக்கிறேன், பாருங்கள்!’ என்றவன் சில தினங்களிலேயே இயந்திரப் பொறிகளால் ஆகாயத்தில் பறக்கும் அதிசய விமானம் ஒன்றை உருவாக்கி, அதில் ஹரிதாஸரையும் ஏற்றிக் கொண்டு விண்ணில் பறந்து காண்பித்தான்.

மீண்டும் தரையிறங்கிய மறுகணமே மனம் மகிழ்ந்து போன ஹரிதாஸர், இளைஞன் சூத்திரவானிடம், ‘நீர்தான் எமக்கு மாப்பிள்ளை. இன்றிலிருந்து ஏழாவது நாள் உமக்கும் எனது மகளுக்கும் திருமணம் நடைபெறுவது உறுதி’ என்று வாக்களித்து விடை பெற்றார்.

இவர் இங்கே வாக்குறுதி தந்த அதே சமயத்தில் உஜ்ஜயினியில் ஹரிதாஸரின் மகனான தேவஸ்வாமியையும் ஓர் இளைஞன் சந்தித்து அவனது தங்கையை தனக்கு மணம் முடித்துத் தருமாறு வேண்டினான்.
அதற்கு தேவஸ்வாமி, ‘நண்பரே எனது தங்கை தேவப்பிரபா தனக்கு வரப்போகிற கணவன் வீரம், ஞானம், விஞ்ஞான சாத்திரம் இம்மூன்றில் ஏதோ ஒன்றிலாவது வல்லவராக இருக்க வேண்டும் என்று நிபந்தனை இட்டிருக்கிறாள். அதன்படி உம்மிடம் என்ன திறமை உள்ளது?’ என்று கேட்டான்.

சூரசேனன் என்கிற அந்த இளைஞன் பெயருக்குத் தகுந்தபடி தான் ஒரு வீரன் என்றும், வில் வித்தை, வாள் வித்தை, மற்போர், ஆயுதச் சண்டை அனைத்திலும் ஈடில்லாத திறமை கொண்டவன் என்றும் சொல்லி அதை தேவஸ்வாமியின் முன் நிரூபித்துக் காண்பித்தான்.

சூரசேனனின் திறமையைக் கண்டு மகிழ்ந்த தேவஸ்வாமி தனது தங்கை தேவப்பிரபாவை சூரசேனனுக்கே மணம் முடித்து வைப்பதாக அவனுக்கு வாக்குறுதி தந்தான். அதற்காக அவன் குறித்த மணநாளும், முகூர்த்தமும், அவனது தந்தை ஹரிதாஸர் சூத்திரவானுக்கு நிச்சயித்திருந்த அதே முகூர்த்த நாளிலேயே அமைந்தது.

இவர்கள் மட்டுமா, தேவப்பிரபாவின் தாய் பத்மாவதியும்கூட ஞானதேசிகன் என்கிற இளைஞனிடம் அதைத்தான் கூறியிருந்தாள்.

ஆம்! தேவப்பிரபாவின் அழகில் மனம் பறிகொடுத்த ஞானதேசிகன் என்கிற இளைஞன் அவளது தாயான பத்மாவதியை அணுகி நமஸ்கரித்தான். பின் மிகுந்த பணிவுடன், தேவப்பிரபாவை தனக்கு மணம் செய்து தருமாறு அவளிடம் கேட்டான்.

அதற்கு பத்மாவதி அவனிடம், ‘தம்பி! எனது மகள் தேவப்பிரபா தனக்கு வரப்போகிற கணவன் வீரம், ஞானம், விஞ்ஞான சாத்திரம் இம்மூன்றில் ஏதோ ஒன்றிலாவது வல்லவராக இருக்க வேண்டும் என்று நிபந்தனை இட்டிருக்கிறாள். அதன்படி உன்னிடம் ஏதாவது திறமை உள்ளதா?’ என்று கேட்க,

‘அம்மா! நான் ஒரு ஞானி! முக்காலமும் உணர்ந்தவன். சந்தேகமிருந்தால் தாங்கள் என்னை பரீட்சை செய்து பார்க்கலாம்!’ என்று கூறினான்.
அதன்படியே பத்மாவதி அவனை பலவிதத்தில் சோதித்துப் பார்க்க, ஞானதேசிகன் நடந்தது, நடப்பது, நடக்கப் போவது அனைத்தையும் சொல்லி அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தினான்.

அந்த ஆச்சரியத்துடனே பத்மாவதி ஞானதேசிகனுக்கு தனது மகள் தேவப்பிரபாவை மணம் முடித்துத் தருவதாக வாக்களித்து முடித்தாள். அவள் ஜோசியரிடம் சென்று கேட்டு நிச்சயித்த முகூர்த்தம், அவளது கணவரும், மகனும் நிச்சயித்திருந்த அதே தினம்தான்!

தட்சிண மன்னனின் பாசறையில் இருந்து விடைபெற்றுக் கொண்டு வீடு திரும்பிய ஹரிதாஸர், தனது மனைவியிடமும், மகனிடமும் மகள் தேவப்பிரபாவுக்கு தான் மாப்பிள்ளை நிச்சயம் செய்து விட்ட தகவலைக் கூறினார்.

இதைக் கேட்டுத் திடுக்கிட்ட பத்மாவதியும், தேவஸ்வாமியும் தாங்களும் தேவப்பிரபாவுக்கு மாப்பிள்ளை பார்த்து வாக்களித்து விட்ட தகவலைத் தெரிவித்தனர்.

இப்போது வீட்டில் அனைவருக்கும் கலக்கம் ஏற்பட்டது. இப்படி ஆளுக்கு ஆள் வாக்களித்து விட்டோமே! யாருக்குத்தான் தேவப்பிரபாவை மணம் முடித்துக் கொடுப்பது என்று சஞ்சலத்தில் ஆழ்ந்தார்கள்.

நாட்கள் விரைந்தோடி திருமண நாள் வந்தது. வீரத்தில் வல்லவனான சூரசேனனும், விஞ்ஞான சாஸ்திரத்தில் விற்பன்னனான சூத்திரவானும், ஞானத்தில் வல்லமை மிக்க ஞானதேசிகனும் என மூன்று மாப்பிள்ளைகளும் குறித்த நேரத்தில் வந்து சேர்ந்தார்கள்.

மூன்று மாப்பிள்ளைகளுக்கும் இடையில் பெரும் மோதல் நிகழப் போகிறது என்று ஹரிதாஸரின் குடும்பத்தினர் தவித்துக் கொண்டிருக்க, அப்போதுதான் பெரும் திருப்பம் நேர்ந்தது.

‘கல்யாணப் பெண்ணைக் காணோம்!’ என்று கூக்குரல் எழுந்தது.

‘என்னது தேவப்பிரபாவைக் காணோமா?’ அவளது பெற்றோரும், தமையனும் அதிர்ந்துபோய் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் தேடினார்கள்.

ஊஹூம்! எங்குமே காணோம்! அவள் வெளியில் செல்லவில்லை. வீட்டினுள்ளும் இல்லை. காற்றில் கரைந்தது போல் மறைந்து விட்டாள்!
பதைபதைத்துப் போன தேவப்பிரபாவின் தாய் பத்மாவதி, ஞானதேசிகனிடம், ‘தம்பி! உங்களது ஞானத்தால் இப்போது எனது மகள் எங்கிருக்கிறாள் என்று அறிந்து சொல்ல முடியுமா?’ என்று வேண்டினாள்.

‘அம்மா! பதறாதீர்கள். இதோ இப்போதே அறிந்து சொல்கிறேன்!’ என்ற ஞானதேசிகன் கண் மூடி அமர்ந்து தனது ஞானத்தால் தேடிப் பார்த்து உணர்ந்து, ‘விந்திய மலைக் காட்டின் குகையில் வசிக்கும் அரக்கன் ஒருவன்தான் தேவப்பிரபாவை தூக்கிச் சென்று வைத்துள்ளான்.’ என்று கூறினான்.

தேவப்பிரபாவின் பெற்றோர், திடுக்கிட்டுப் போனார்கள். ‘ஐயோ! எங்கள் செல்ல மகளை அரக்கன் கொண்டு போனானா? அவள் எப்படி தவிக்கிறாளோ தெரியவில்லையே. அரக்கனிடமிருந்து எங்கள் மகளை எப்படி மீட்பது? வழி ஒன்றும் தெரியவில்லையே!’ என்று கலங்கினார்கள்.

அப்போது சூத்திரவான் அவர்களிடம், ‘கவலைப்படாதீர்கள். இப்போதே நான் வானில் செல்லும் விமானம் மூலம் நொடிப் பொழுதில் அரக்கன் தேவப்பிரபாவை வைத்திருக்கும் இடத்துக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்!’ என்று ஆறுதல் கூறினான்.

அதன்படியே விமானத்தை அவன் துரிதமாகத் தயார்படுத்த, சூரசேனன் அரக்கனை எதிர்ப்பதற்குத் தேவையான பலவிதமான ஆயுதங்களை, விமானத்தில் எடுத்து வைத்தான். பின் சூத்திரவானும் ஞானதேசிகனும்,சூரசேனனும், தங்களுடன் தேவப்பிரபாவின் தந்தை ஹரிதாஸரையும், அண்ணன் தேவஸ்வாமியையும் கூட்டிக்கொண்டு கிளம்பினார்கள். விந்திய மலைப் பகுதிக்கு வந்து சேர்ந்தார்கள்.

சூத்திரவான் விமானத்தைக் காட்டில் இறக்கியதுமே இவர்களைப் பார்த்துவிட்ட அரக்கன் மிகுந்த கோபத்துடன் பெரும் பாறைகளை வீசியெறிந்து தாக்கத் தொடங்கினான். வீரனான சூரசேனன் மற்ற அனைவரையும் பாதுகாப்பான இடத்தில் ஒளிந்திருக்கச் செய்து தான் ஒருவனாகவே அரக்கனுடன் நேருக்கு நேர் சண்டையிட்டான். மிகுந்த ஆக்ரோஷத்துடன் நீண்ட நேரம் நடந்த போரின் முடிவில் சூரசேனன் தனது முழுத் திறமையையும் காட்டி, இறுதியாக பிரம்ம பாணத்தின் மூலமாக அரக்கனின் தலையை வெட்டி வீழ்த்தினான். தலையும் உடலும் இரண்டு துண்டுகளாக்கப்பட்டு அரக்கன் மாண்டு போனான். தேவப்பிரபாவை மீட்டுக்கொண்டு அதிசய விமானத்தில் ஏறி அனைவரும் உஜ்ஜயினி வந்து சேர்ந்தார்கள்.

இதற்குப் பிறகுதான் தொல்லை தொடங்கியது.

அன்னை, தந்தை, அண்ணன் மூவரும் ஆளுக்கு ஆள் வாக்குறுதி தந்தபடி தங்களுக்குத்தான் தேவப்பிரபாவை மணம் செய்து தரவேண்டும் என்று மூவரும் அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டார்கள். அவர்களுக்குள் பெரும் விவாதம் நடந்தது.

‘தேவப்பிரபாவை தூக்கிக்கொண்டு போன அரக்கன் எங்கிருக்கிறான் என்று நான் கண்டு பிடித்துச் சொல்லாவிட்டால் நீங்கள் எப்படி தேவப்பிரபாவை மீட்டிருக்க முடியும்? எனவே எனக்குத்தான் தேவப்பிரபா சொந்தமாக வேண்டும்!’ என்றான் ஞான தேசிகன்.

‘இடத்தைக் கண்டுபிடித்துச் சொல்லி விட்டால் போதுமா? யாரும் எளிதில் போக முடியாத அந்தக் கானகப் பகுதிக்கு நான் எனது அதிசய விமானத்தில் அழைத்துச் சென்றிருக்காமல் போனால் எப்படி தேவப்பிரபாவை மீட்டிருக்க முடியும்? என்னால்தான் அது சாத்தியமானது! எனவே தேவப்பிரபா எனக்கே சொந்தம்!’ என்றான் சூத்திரவான்.

‘நீங்கள் இருவரும் என்ன செய்திருந்தாலும், அரக்கனுடன் சண்டையிட்டு நான் அவனைக் கொன்றிருக்கா விட்டால் மீண்டும் தேவப்பிரபா எப்படி கிடைத்திருப்பாள்? எனவே அவள் எனக்கே மனைவியாக வேண்டும்.’ என்றான் சூரசேனன்.

இப்படி மூன்று மாப்பிள்ளைகளும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதைப் பார்த்த ஹரிதாஸர் குடும்பத்தார் செய்வதறியாமல் தவித்து நின்றார்கள்.’

என்று கதையை முடித்த வேதாளம், ‘ஐயா விக்கிரமாதித்தரே! நீங்கள் சொல்லுங்கள்! ஹரிதாஸரின் மகள் தேவப்பிரபா யாருக்குச் சொந்தமாவாள்? மூன்று மாப்பிள்ளைகளில் யாரை அவள் மணந்துகொள்ள வேண்டும்? இந்தக் கேள்விக்கான பதில் தெரிந்தும் நீர் சொல்லாவிட்டால் உமது தலை சுக்குநூறாக சிதறிவிடும்’ என்றது.

விக்கிரமாதித்தன் வேறு வழியில்லாமல் தனது மௌனம் கலைத்து பதில் கூறினான்:

‘காதல் என்றாலே வீரம்தான் முன்னணி வகிக்கும். எனவே தனது உயிரையும் பொருட்படுத்தாமல் அரக்கனுடன் சண்டையிட்டுக் கொன்ற வீரனுக்கே அந்தப் பெண் உரிமையாவாள். மற்றபடி விஞ்ஞான சாஸ்திரம் அறிந்தவனும், ஞானம் கொண்டவனும் வீரனுக்கு உதவி செய்ய கடமைப்பட்டவர்கள் ஆவார்கள். பெண்ணை அடையும் முதல் உரிமை அவர்களுக்கில்லை!’

விக்கிரமாதித்தனின் இந்தச் சரியான பதிலால் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்துக்கே சென்றது.

0

மூன்று சகோதரர்களின் கதை

விக்கிரமாதித்தன் கதைகள் / 10

jennifer-lopez-bedமனத்தின் உறுதி சற்றும் தளராமல் வேதாளத்தை மீண்டும் முருங்கை மரத்திலிருந்து விடுவித்து, தோளில் போட்டுக்கொண்டு புறப்பட்டான் விக்கிரமாதித்தன். பாதி வழி கடந்ததும் வழக்கம் போல கதை சொல்லத் தொடங்கியது வேதாளம்.

‘அங்கதேசத்தின் அக்ரஹாரம் ஒன்றில் மூன்று சகோதரர்கள் வசித்து வந்தனர். மூவரும் அவரவர் ரசனைக்கேற்ப தங்களது வாழ்க்கையை சுகானுபவமாக அனுபவித்து வாழ்ந்தனர். அவர்கள் மூவரிடமும் ஆளுக்கு ஆள் அலாதியான திறமையொன்று இருந்தது.

மூத்த சகோதரன் அட்டகாசமான சாப்பாட்டுப் பிரியன். சாப்பாடு குறித்ததான ரசனையில் அவனுக்கு நிகராக யாருமே கிடையாது. இரண்டாமவன் சிற்றின்ப போகப் பிரியன். பெண்களின் சாமுத்திரிகா லட்சணம் முதல் அவர்களை ஆட்கொள்ளும் காம சாஸ்திரம் வரை சகலமும் தெள்ளத் தெளிவாக உணர்ந்தவன். மோக தாப விரக விளையாட்டுகளில் வல்லவன். கடைசி சகோதரன் நித்திரை சுகத்தில் ரசனைக்காரன். உறக்கத்தை மோகிக்கும் ரசனையாளன். கட்டில், படுக்கை, மெத்தை அனைத்தையுமே மிகுந்த கச்சிதமாகவும் தரமாகவும் தேர்ந்தெடுத்து தூக்கத்தில் மூழ்குபவன்.

ஒருநாள் அவர்களது தந்தையார் யாகம் ஒன்று நடத்தப் போவதாகச் சொல்லி, அந்த யாகத்துக்குத் தேவைப்படும் ஆமை ஒன்றைக் கொண்டு வருமாறு பிள்ளைகளை அனுப்பி வைத்தார்.

சகோதரர்கள் மூவரும் கடலோரமாகவே தேடித் திரிந்து கடைசியாக ஆமை ஒன்றைக் கண்டுபிடித்தனர். ஆனால் அதை கையில் தூக்கிக் கொண்டு வருவது யார் என்று சண்டையிட்டுக் கொண்டனர்.

ஆமையை முதலில் பார்த்த மூத்த சகோதரன் தனது தம்பிகளிடம், ‘கரடுமுரடாகவும் வழுவழுப்பாகவும் உடல் தசைகள் சுருங்கியும் காணப்படும் இந்த ஆமையைப் பார்த்தாலே எனக்கு அருவருப்பாக இருக்கிறது. எனவே நீங்கள் இதைத் தூக்கி வாருங்கள்!’ என்றான்.

‘இல்லையில்லை எனக்கும் இதைப் பார்த்தால் குமட்டுகிறது. நான் தூக்கிவர மாட்டேன்’ என்று இரண்டாமவன் சொல்ல, ‘எனக்கும் அப்படித்தான் இருக்கிறது!’ என்று மறுத்தான் மூன்றாமவன்.

‘இதை நீங்கள் தூக்கி வராவிட்டால் தந்தையின் யாகம் பூர்த்தியாகாத பாவம் உங்களையே சேரும்!’ என்று பயமுறுத்தினான் அண்ணன்.

‘அதே பாவம் உன்னைச் சேராதா என்ன?’ என்று தம்பிகள் அண்ணனை ஏளனம் செய்தார்கள்.

‘நான் எப்பேர்ப்பட்ட ரசனையாளன். போஜன கலாரசிகனான என்னைப் போய் நாற்றமடிக்கும் ஆமையை தூக்கி வரச் சொல்கிறீர்களே! இது நியாயமா?’ என்று முகம் சுளித்தான் மூத்தவன்.

இரண்டாமவன், ‘நான் மட்டும் என்ன? பட்டுப் போன்ற மேனியையுடைய கட்டிளம் கன்னிகளைத் தழுவி அங்குலம் அங்குலமாக ரசித்து காமத்தைக் கலையாக நுகரும் என்னைப்போய் இந்தக் கேவலமான ஆமையை தூக்கி வரச் சொல்கிறீர்களே! உங்கள் மனசாட்சிக்கே உறுத்தவில்லையா?’ என்றான்.

‘உறக்கத்தின் உன்னதத்தை உளப்பூர்வமாக உணர்ந்து அனுபவிக்கும் நான் இந்த ஆமையைச் சுமந்து வந்தால் அதன் பிறகு எனது வாழ்நாளில் ரசனையான நித்திரை என்பது வசப்படுமா? நீங்களே சொல்லுங்கள். எனவே தயவுசெய்து இந்த வேலையை என்னை செய்யச் சொல்லாதீர்கள்!’ என்று தீர்மானமாக மறுத்தான் கடைசி சகோதரன்.

இப்படியாக அவர்களது வாதம் தொடர்ந்து கொண்டே போய் ஒரு முடிவுக்கு வர முடியாமல், கடைசியாக அவ்வூர் மன்னனிடம் தங்கள் வழக்கைக் கொண்டு சென்றனர்.

இவர்களது வழக்கைக் கேட்ட மன்னன் பிரசேனன், இந்த மூன்று கலாரசிகர்களின் விதவிதமான திறமையைக் கேள்விப்பட்டு ஆச்சரியத்தில் மூழ்கினான்.

பின் சகோதரர்களிடம், ‘நீங்கள் மூவரும் இங்கு எனது அரண்மனையிலேயே தங்குங்கள். உங்களை நானே சோதித்துப் பார்த்துவிட்டு எனது முடிவைத் தெரிவிக்கிறேன்!’ என்றான்.

அரண்மனைப் பணியாட்கள் சகோதர்கள் மூவரையும் அழைத்துச் சென்று விருந்தினர் அறைகளில் தங்க வைத்து சகல வசதிகளும் செய்து தந்து உபசரித்தனர்.

மன்னன் பிரசேனன் அன்றைய மதிய உணவுக்கே சகோதரர்கள் மூவரையும் தன்னுடன் உணவு அருந்த வரும்படி அழைப்பு விடுத்தான்.

சகோதரர்கள் மூவருடன் மன்னனும், மந்திரிகள், பிரபுக்கள் என அநேகர் சேர்ந்து உணவருந்தினர். அறுசுவையுடன் விதவிதமான ருசிகரமான ராஜ உணவுகள் பரிமாறப்பட்டன. அனைவரும் ரசித்து ருசித்து உண்டு மகிழ, சகோதரர்களில் மூத்தவனான சாப்பாட்டுப் பிரியன் மட்டும் ஏதொன்றையும் சாப்பிடாமல் முகம் சுளித்து அமர்ந்திருந்தான்.

அதைக் கண்ட மன்னன் பிரசேனன், ‘ ஏன் சாப்பிடாமல் உட்கார்ந்திருக்கிறாய்? உடல்நிலை சரியில்லையா?’ என்று விசாரித்தான்.

‘இல்லை மன்னவா! இந்த சாதத்தில் பிணவாடை அடிக்கிறது. அருவருப்பினால் என்னால் ஒரு வாய்கூட சாப்பிடமுடியவில்லை!’ என்றான்.

‘சாதத்தில் பிண வாடையா? எனக்கொன்றும் தெரியவில்லையே!’ என்ற மன்னன், மற்றவர்களைப் பார்த்து ‘உங்களுக்கு ஏதேனும் வாடை தெரிகிறதா? எல்லோரும் சாதத்தை எடுத்து முகர்ந்து பாருங்கள்!’ என்று சொன்னான்.

மந்திரிகள், பிரபுக்கள் எல்லோருமே எடுத்து முகர்ந்து பார்த்து, ‘மன்னவா மல்லிகைப் பூப்போன்ற இந்த சாதத்தில் எந்த கெட்ட மணமும் எங்களுக்குத் தெரியவில்லை. சுவையும் நன்றாகவே உள்ளது!’ என்றனர்.

ஆனால் சாப்பாட்டுப் பிரியனோ, தீர்மானமாகச் சொன்னான். ‘கண்டிப்பாக இந்த சாதத்தில் பிண வாடை படிந்திருக்கிறது! இது மிக உண்மை!’

உடனே மன்னன் பிரசேனன், மடப்பள்ளியிலிருந்து ஆட்களை தருவித்து எல்லா வகையிலும் துருவித் துருவி விசாரித்தான். விசாரணையின் முடிவில் ஆச்சரியகரமான உண்மை ஒன்று வெளியானது.

ஆம்! அன்றைய தினம் சமைக்கப்பட்டிருந்த அரிசி, ஒரு மயானத்தின் அருகிலிருந்த விளைநிலத்தில் விளைந்த அரிசி என்பது தெரிய வந்தது.
மன்னன் பிரசேனன் ஆச்சரியப்பட்டுப் போனான். ’போஜனப் பிரியனே, உண்மையில் உனது இந்த ரசிகத் திறமை மிகவும் பாராட்டப்பட வேண்டியதுதான். உன்னைப் போல் சாப்பாட்டு வல்லவராக வேறு யாரும் இவ்வுலகில் இருக்க மாட்டார்கள்.’ என்று மனம் திறந்து பாராட்டினான்.

பின் வேறு அரிசியில் வடிக்கப்பட்ட சாதம் சாப்பாட்டுப் பிரியனுக்குப் பரிமாறப்பட்டு, விருந்து நிறைவடைந்தது.

பின் சகோதரர்கள் மூவரும் அவரவர்க்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றார்கள்.

மன்னன் அடுத்தபடியாக பெண் சுகம் அறிவதில் வல்லவனான இரண்டாவது சகோதரனை சோதிக்க நினைத்தான். அன்றைய இரவு சந்திரன் உதயமானதும் தனது அரண்மனைப் பெண்களில் அழகில் மிகச் சிறந்தவளான தாசிப்பெண் ஒருத்தியை இரண்டாமவன் அறைக்கு அனுப்பி வைத்தான்.

அந்த தாசிப் பெண் இரண்டாவது சகோதரனை நெருங்கி சல்லாபத்துக்கு இழுத்து கட்டியணைக்க, அந்த சிற்றின்பப் பிரியனோ, தனது மூக்கைப் பொத்திக்கொண்டு, ‘பெண்ணே! நீ முதலில் இந்த அறையை விட்டு வெளியேறி விடு! உன்னோடு மோகம் கொள்ள என்னால் முடியாது! உன் உடல் மேலிருந்து வெள்ளாட்டின் நீச்சவாடை வீசுகிறது! அது என்னை குமட்டுகிறது!’ என்று சொல்லி அவளை விடாப்பிடியாக வெளியே துரத்தினான்.

இதைக் கேள்விப்பட்ட மன்னன் வியந்து போனான். அந்தப் பெண்ணின் மீதிருந்து அப்படியொரு வாடை வருவதாக அவனுக்குத் தோன்றவில்லை. ஆனாலும் அந்த சிற்றின்பப் பிரியன் சொன்னதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று கருதிய மன்னன் விடாப்பிடியாக அந்தப் பெண்ணின் முழு பூர்விகத்தையும் தூண்டித் துருவி விசாரித்தான். கடைசியில் அந்த ஆச்சரியகரமான உண்மை வெளியானது.

தாசிப் பெண் பிறந்தபோது அவளின் தாய் பிரசவத்தின் போதே இறந்துவிட, தாய்ப்பால் இல்லாமல் அவள் வெள்ளாட்டுப் பாலை குடித்து வளர்ந்த குழந்தை என்பது தெரியவந்தது.

இதைக் கேள்விப்பட்டதும் மன்னன் பிரசேனன் பெரிதும் திகைத்துப் போனான். பெண் சுகம் அறிவதில் இந்த இளைஞனுக்கு நிகரானவன் ஈரேழு உலகங்களிலும் யாரும் இருக்கமுடியாது என்று இரண்டாம் சகோதரனை பாராட்டினான்.

இந்த சூட்டுடனே உறக்க சுகத்தில் வல்லவனான மூன்றாமனுடைய ரசனையையும் சோதித்துப் பார்த்து விட எண்ணி, தூக்க ரசிகனுடைய அறையில் அவனது சௌகரியப்படியே அவன் கேட்டவாறே, மென்மையான ரோஜா இதழ்களால் அலங்கரிக்கப்பட்ட கட்டிலில் ஆறேழு மெத்தைகள் போடச் சொல்லி உத்தரவிட்டான்.

மனத்துக்கு இதமான நல்ல மணம் வீசும் நறுமணப் புகை போடப்பட்டு, சுகமான காற்றும், இதமான குளிரும் நிலவியபோதும் நித்திரைப் பிரியனால் ஒரு ஜாமம் கூட நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. நீண்ட நேரம் புரண்டு புரண்டு படுத்துப் பார்த்து முடியாமல், ‘ஐயோ! எனது முதுகில் ஏதோ உறுத்துகிறதே! வலிக்கிறதே!’ என்று எழுந்து உட்கார்ந்து கொண்டு கதறினான்.

இதைக் கண்ட சேவகர்கள் அணுகி விவரம் விசாரிக்க, மூன்றாமவன் அவர்களிடம் திரும்பி தனது முதுகைக் காண்பித்தான். அவனது முதுகில் ஒரு மெல்லிய முடியளவுக்கு ஒரு வளைவுக் கீறல் சிவக்கத் தென்பட்டது.
இது எப்படி வந்தது? சேவகர்கள் மெத்தைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்க்க, ஆறாம் மெத்தைக்குப் பிறகு ஏழாவது மெத்தைக்கு மேல் ஒரு மெல்லிய தலைமுடியொன்று இருந்தது. நித்திரைப் பிரியனின் முதுகில் இருந்த கீறல் அடையாளம் அதனுடன் கச்சிதமாகப் பொருந்தியது.

சேவகர்கள் ஓடோடிச் சென்று மன்னனிடம் சென்று இத்தகவலை தெரிவித்தனர்.

மன்னனும் வந்து பார்த்து ஆச்சரியப்பட்டான். ஏழாவது மெத்தையில் கிடந்த தலைமுடியானது ஏழு மெத்தைகள் தாண்டியும் இவனது முதுகில் பதிகிறதென்றால், அதையும் இவன் உணர்கிறானென்றால், நிச்சயமாக உறக்கத்தை கலாபூர்வமாக அனுபவித்து ரசிப்பதில் வல்லவன் இவன்தான். இவனுக்கு நிகர் வேறு யாருமில்லை என்று புகழ்ந்தான்.

மறுநாள் தனது அரசவையில் அவர்கள் மூவருக்கும் ஏராளமான பொன் பொருள் வழங்கி கௌரவித்து அனுப்பி வைத்தான்.

-என்று கதை சொல்லி முடித்த வேதாளம், விக்கிரமாதித்தனிடம் கேட்டது.

‘போஜன ரசனை, பெண் ரசனை, நித்திரை ரசனை என்கிற மூன்று ரசனைகளில் வல்லவர்களான அந்த சகோதரர்களில் மிகவும் வல்லவன் யார்? எந்த விதத்தில் அவன் மேன்மையானவன் ஆவான்? பதில் தெரிந்தால் சொல் பார்ப்போம்!’

‘போஜன ரசனை கொண்டவனும், பெண் சுகம் காண்பனும் அவரவர் பூரண சுய உணர்வுடன் ஐம்புலன்களால் அனுபவித்துத் தெரிந்துகொண்டதைத்தான் சொன்னார்கள். ஆனால் நித்திரை சுகம் காண்பவனோ, எல்லாப் புலன்களும் உறக்கத்தில் மூழ்கி உணர்வற்ற ஜட நிலையில் தான் அனுபவித்ததை உணர்த்தினான். எனவே அவனே மிகப் பெரும் கலாரசிகன்! ரசனையில் வல்லவன்!’

விக்கிரமாதித்தனின் சரியான பதிலால், மீண்டும் வேதாளம் முருங்கை மரம் பறந்து போக, விக்கிரமாதித்தன் தளர்ச்சியடையாமல் மீட்டு வரப் புறப்பட்டான்.

0

வேதாளம் சொன்ன ‘பிரபாவதி’ கதை (2)

விக்கிரமாதித்தன் கதைகள் / 9

hqdefaultவிக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்து வேதாளத்தைப் பிடித்து தோளில் போட்டுக் கொண்டு புறப்பட்டான்.

பாதிதூரம் கடந்ததும் ‘கேள், விக்கிரமாதித்தா…’ என்று வேதாளம் மீண்டும் தனது அடுத்த கதையை சொல்லத் தொடங்கியது.

‘யமுனா நதி பாயும் செழுமையான பிரதேசங்களில் பிரம்மபுரம் என்கிற ஊர் மிகப் பிரசித்தி பெற்றது. அங்கே வேதவிற்பன்னரான விஷ்ணுசர்மா என்கிற பிராமணப் பண்டிதர் ஒருவர் வசித்து வந்தார். அவருக்கு ஒரேயொரு மகள். பெயர் பிரபாவதி. மிகச் சிறந்த அழகி.

பாசத்துக்குரிய தனது மகளின் மேல் உயிரையே வைத்திருந்த விஷ்ணுசர்மா பிரபாவதி பருவ வயதை அடைந்ததும் அவளுக்கு மணம் செய்து வைப்பதற்காக பொருத்தமான மாப்பிள்ளையை தேடத் தொடங்கினார்.
உற்றார், உறவினர் அறிந்தோர் தெரிந்தோர் அனைவரிடமும் சொல்லி வைத்ததில் அநேக வரன்கள் வந்ததில், ராஜகுப்தம் என்னும் ஊரிலிருந்து வந்திருந்த மூன்று இளைஞர்களை விஷ்ணுசர்மாவுக்கு மிகவும் பிடித்துப் போனது.

மூவருமே நன்கு படித்த அறிவாளிகள். நற்குணம் கொண்டவர்கள். மிகுந்த திறமைசாலிகள். ஒவ்வொருவருமே பிரபாவதிக்கு மிகவும் பொருத்தமானவர்கள்தான். சரி, இவர்களில் யாரை பிரபாவதிக்குக் கணவனாகத் தேர்ந்தெடுப்பது?

விஷ்ணுசர்மா ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்துப் பேசினார். பிரபாவதியின் அழகில் மனம் பறி கொடுத்திருந்த ஒவ்வொருவனும் தனக்குத்தான் பிரபாவதியை திருமணம் செய்து தரவேண்டுமென்று விஷ்ணுசர்மாவை வற்புறுத்தினார்கள். அவளில்லாமல் தங்களுக்கு வாழ்க்கையே இல்லையென்று கெஞ்சினார்கள். அதற்கும் மேலாக பிரபாவதியை தனக்குத் திருமணம் செய்து தராமல் வேறு யாருக்காவது மணம் செய்துதந்தால் அந்த நிமிடமே தனது உயிரை விட்டுவிடுவதாக தற்கொலை மிரட்டலும் செய்தனர்.

விஷ்ணுசர்மா அதிர்ந்து போனார். அவருக்கு என்ன முடிவு எடுப்பதென்றே தெரியவில்லை. யோசித்து பதில் சொல்ல சில காலம் அவகாசம் அளிக்கும்படி இளைஞர்களைக் கேட்டுக் கொண்டார்.

விஷ்ணுசர்மாவின் முடிவு தெரியாமல் அங்கிருந்து செல்லப்போவதில்லை என்று தீர்மானித்து இளைஞர்கள் மூவரும் அங்கேயே தங்கி விட்டனர்.

நாட்கள் ஓடின. இளைஞர்களில் எவன் ஒருவனுக்கு சாதகமாக முடிவெடுத்தாலும் மற்ற இருவர் உயிர் துறந்து விடுவார்களோ என்கிற பயத்தில் விஷ்ணுசர்மாவும் நாட்களை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார்.
இளைஞர்களோ தினமும் பிரபாவதியைக் காண்பதும், அவளது அழகை ரசித்து மகிழ்வதுமே தங்களது பாக்கியமாகக் கருதி நாட்களை இனிமையாக நகர்த்திக் கொண்டிருந்தனர்.

அந்தச் சமயத்தில்தான் ஒரு பெரும் துக்கம் நிகழ்ந்தது.

ஒருநாள் சாதாரண ஜுரத்தில் பாதிக்கப்பட்ட பிரபாவதி போகப் போக ஜுரவேகம் அதிகமாகி பின் முற்றிலும் சுயநினைவு இழந்து மூன்றாம் நாள் இறந்தே போனாள்.

பிரபாவதியை நேசித்த மூன்று இளைஞர்களும் இடிந்து மனம் உடைந்து நொறுங்கிப் போனார்கள்.

மூவரில் ஒருவன் பிரபாவதியை தகனம் செய்த மயானத்திலேயே ஒரு குடிசை போட்டுத் தங்கி, பிச்சையெடுத்து சாப்பிட்டுக் கொண்டு அவளது சாம்பலின் மீதே படுத்துறங்கி, காலம் கழிக்கத் தொடங்கினான். மற்றொருவன், பிரபாவதியின் அஸ்திகளை எடுத்துக்கொண்டு கங்கையில் சேர்ப்பிப்பதற்காக காசிக்குப் புறப்பட்டுப் போனான். இன்னொருவனோ மனம் வெறுத்து சந்நியாசியாகி தேசாந்திரம் போனான்.

அப்படி தேசாந்திரம் புறப்பட்டு ஊர் ஊராகச் சென்று சந்நியாசி ஒருநாள் சந்திரபிரஸ்தம் என்னும் ஊரை அடைந்தான். அவ்வூரின் அந்தணர் ஒருவர் இவனைக் கண்டு சந்நியாசியை தனது வீட்டுக்கு உணவருந்த அழைத்துச் சென்றார்.

அந்தணரின் மனைவியும் துறவியை வரவேற்று வேண்டிய உபசரணைகள் செய்து, சாப்பிடுவதற்காக அவனை மனையில் அமர்த்தினாள். பின் அவர் முன் பெரும் வாழையிலையிட்டு சாதம், கறிகாய்கள், பழங்கள் வைத்துப் பரிமாறி, தேவையானதை கேட்டுக் கேட்டு உபசரித்தாள்.

அப்போது அவளின் குழந்தை அழுது அடம் பிடித்து விடாமல் கத்திக் கதறியது. எவ்வளவோ சமாதானம் செய்தும் அடங்காமல் குழந்தை அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, அந்தப் பெண்மணி கோபத்துடன் குழந்தையைத் தூக்கி அடுப்பு நெருப்பில் வீசியெறிந்து விட்டாள். வீசிய மாத்திரத்தில் குழந்தை நெருப்பில் பொசுங்கிப் போய் சாம்பலாகிப் போனது.

இதைக் கண்ட வாலிபத் துறவி திடுக்கிட்டுப் போய், அப்படியே சாப்பாட்டிலிருந்து பாதியிலேயே எழுந்துகொண்டு அலறினான். ‘அடிப்பாவி! நீ பெண்தானா? அல்லது பிரம்மராட்சஸியா? தாய் உருவில் வந்த பேயே, ஒரு சிறு குழந்தையைப் போய் இப்படி நெருப்பிலிட்டுப் பொசுக்கி விட்டாயே? ஐயோ! இந்த வீட்டில் சாப்பிடுவதே பெரும் பாவம்! இதற்கு மேல் ஒரு விநாடியும் இங்கிருக்க மாட்டேன்!’ என்று கதறிப் புலம்பியபடி அங்கிருந்து வெளியேற முனைந்தான்.

அப்போது அந்த வீட்டுக்குச் சொந்தக்காரனான அந்தணன், ‘சந்நியாசியைத் தடுத்து நிறுத்தி, சிறு புன்னகையுடன் கூறினார்: ஸ்வாமி! பதறாதீர்கள்! இது இந்த வீட்டில் சகஜமாக நடப்பதுதான். குழந்தைக்கு ஒன்றும் ஆகாது. இதோ இப்போதே எனது மந்திரத்தினால் குழந்தையை உயிர்ப்பித்து விடுகிறேன்! பாருங்கள்.’ என்று சொல்லி, அந்தணன் சஞ்சீவி மந்திரத்தை உச்சரித்து, நெருப்புச் சாம்பலின் மீது கலச நீரைத் தெளிக்க குழந்தை ஒரு சிறு காயமும் இன்றி எழுந்து வந்தது.

வாலிபத் துறவி மிகுந்த ஆச்சரியம் அடைந்தான். அன்றைய இரவை அங்கேயே கழித்த சந்நியாசி, அந்தணனிடம் தனக்கும் அந்த சஞ்சீவி மந்திரத்தை சொல்லித் தரும்படி மன்றாடிக் கேட்டான். மாண்டு போன தனது காதலியை உயிர்பிக்க வேண்டுமென உண்மையைக் கூறி, அவன் அந்தணனிடம் கெஞ்ச, ‘துறவியாரே! நீங்கள் இத்தனை தூரம் கெஞ்சுவதால் நான் உங்களுக்கு அந்த சஞ்சீவி மந்திரத்தை சொல்லித் தருகிறேன். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை உண்டு!’ என்றான் அந்தணன்.

‘என்ன நிபந்தனை சொல்லுங்கள். எதுவானாலும் செய்கிறேன்!’ துடிப்புடன் கேட்டான் துறவி.

‘இந்த சஞ்சீவி மந்திரத்தை ஒருமுறை மட்டுமே அதுவும் உனது காதலியை உயிர்ப்பிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் மற்றொரு முறை பயன்படுத்தக் கூடாது. சம்மதமா?’

‘சம்மதம். அப்படியே செய்கிறேன். அந்த ஒருமுறைக்கு மேல் சஞ்சீவி மந்திரத்தை பயன்படுத்த மாட்டேன்! இது சத்தியம்!’

அந்தணன், துறவியின் காதில் சஞ்சீவி மந்திரத்தை உபதேசித்து அனுப்பி வைத்தான்.

வாலிபத் துறவி மிகுந்த சந்தோஷத்துடன் இரவு பகலாக நடந்து இடையில் எங்குமே தங்காமல் பிரபாவதியை தகனம் செய்த மயானத்துக்கு வந்து சேர்ந்தான். அதே சமயம் பிரபாவதியின் அஸ்திகளை கங்கைக்குக் கொண்டு சென்ற இளைஞனும் அஸ்திகளை புனித நீராட்டிக் கொண்டு அங்கே ஊர் திரும்பியிருந்தான். முதலாம் வாலிபன் எப்போதும்போல் பிரபாவதியின் சாம்பலைப் பாதுகாத்துக்கொண்டு அங்கேயே இருந்தான்.

வாலிபத் துறவி, மற்ற இருவரிடமும் நடந்ததைக் கூறி, ‘நண்பா, நீ பிரபாவதியின் சாம்பலைக் குவித்து வை. காசிக்குச் சென்று வந்த நீ அவளது அஸ்திகளை சாம்பலிலேயே போடு. நான் சஞ்சீவி மந்திரத்தைச் சொல்லி அவளை உயிர் பிழைக்க வைத்து விடுகிறேன்!’ என்று சொல்லி அது போலவே செய்தான்.

துறவி, சஞ்சீவி மந்திரத்தை உச்சாடனம் செய்து நீர் தெளித்ததுமே பிரபாவதி மாறாத பேரழகுடன் முன் போலவே எழுந்து வந்தாள்.

அதிசயம் நிகழ்ந்த அடுத்த கணமே அங்கே பெரும் சண்டை மூண்டது!

ஆம்! பிரபாவதியின் அழகில் மயங்கி கிறங்கிப் போன மூவரும், உயிருடன் வந்த பிரபாவதி தனக்குத்தான் சொந்தம் என்றும், அவள் தன்னைத் தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் தங்களுக்குள் சண்டையிடத் தொடங்கினார்கள். ஒவ்வொருவருமே தன்னால்தான் பிரபாவதி உயிர்பிழைத்தாள் என்று கூறி உரிமை கொண்டாடினார்கள்.

‘எனது சஞ்சீவி மந்திரத்தால்தால் பிரபாவதி உயிர் பிழைத்தாள். எனவே அவள் என்னைத்தான் மணந்துகொள்ள வேண்டும்!’ என்றான் ஒருவன். அவளது அஸ்திகளை காசியில் திருமுழுக்காட்டிக் கொண்டு வந்தவனோ, ‘நான் அவளது அஸ்திகளை கங்கை நதியில் முழுக்காட்டிய புண்ணியத்தால்தான் உயிர் பிழைத்தாள். ஆகையால் அவள் எனக்கே மனைவியாவாள்!’ என்று வாதிட்டான். இன்னொருவனோ, ‘நான் பிரபாவதியின் சாம்பலை பாதுகாத்து வந்ததால்தானே அவள் உயிருடன் வருவது நிகழ்ந்தது! இல்லாவிட்டால் அவள் உயிர் பிழைத்தது எங்ஙனம் நிகழ்ந்திருக்கும்? எனவே அவள் எனது உடமை’ என்று அடித்துச் சொன்னான்.’

-இந்த விதமாக கதையை முடித்த வேதாளம், விக்கிரமாதித்தனிடம் கேட்டது,

‘சொல்லுமய்யா மகாராஜனே! அந்தப் பெண் பிரபாவதி யாருக்குச் சொந்தமாவாள்? அவர்களது வாதத்தில் உள்ள நியாயம் என்ன? விடை தெரிந்தும் சொல்லாவிட்டால் உனது தலை சிதறி விடும்!’ என்று கேட்டது.

விக்கிரமாதித்தன் விளக்கமாக பதில் கூறினான்: வேதாளமே, மந்திரத்தால் அந்தப் பெண்ணை உயிர் பெறச் செய்தவன் நிச்சயமாக அவளது கணவனாக மாட்டான். ஏனென்றால் அவளுக்கு உயிர் கொடுத்தவன் தந்தை ஸ்தானத்துக்கே ஒப்பானவன் ஆவான். அதுபோலவே பிரபாவதியின் அஸ்தி எலும்புகளை கங்கைக்கு எடுத்துச் சென்றவன் அவளுக்கு மகனாவான். அவளது சாம்பலை விட்டுப் பிரியாமல் கட்டித் தழுவி மயானத்திலேயே தங்கி பாதுகாத்துக் கொண்டிருந்தவனே அவளது கணவன் ஆவான்!’ என்று கூறினான்.

விக்கிரமாதித்தனுடைய இந்த சரியான பதிலால் வேதாளம் அவனது தோளிலிருந்து புறப்பட்டு முருங்கை மரத்துக்கே சென்று சேர்ந்தது. முனிவன் ஞானசீலனுக்குக் கொடுத்த வாக்குப்படி வேதாளத்தைப் பிடித்து வர விடாமுயற்சியுடன் மீண்டும் புறப்பட்டான் விக்கிரமாதித்தன்.