இந்திய தேசியவாதம் எப்படிப்பட்டது?

நவீன இந்தியா / அத்தியாயம் 7

6a00d8341c464853ef019101fb0f25970c-500wi1905ம் ஆண்டு முதல் தேசியவாத தலைவர்களும் அறிவுஜீவிகளும் சுயாட்சி குறித்து விவாதிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதை ஒரு கோரிக்கையாக மக்கள் முன்வைக்கவும் அவர்கள் தயாராயினர். முதல் உலகப் போர் முடிவில், 1918ம் ஆண்டு அவர்கள் வயது வந்தவர்களுக்கான வாக்குரிமை பற்றியும் அரசாங்கத்தில் பங்கேற்பதன் அவசியம் பற்றியும் குரல் கொடுக்கத் தொடங்கினார்கள். 1929ம் ஆண்டு முழுமையான சுதந்தரத்தை இந்திய தேசியவாத இயக்கம் முன்வைத்தது. இதையே தனது அரசியல் நோக்கமாகவும் அது வரித்துக்கொண்டது என்கிறார் பிபன் சந்திரா. இந்தப் போராட்டம் பல கட்டங்களில் நடைபெற்றது. இறுதிக் கட்டத்தில்தான் பெரும் திரளமான மக்கள் பங்கேற்பு இருந்தது. இதுவே விடுதலைப் போராட்டத்தை உந்தி முன் தள்ளவும் செய்தது.

இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பின் பங்கு இதில் குறிப்பிடத்தக்கது என்கிறார் பிபன் சந்திரா. தேசியவாத இயக்கத்தை ஒரு விரிவான கோட்பாட்டுத் தளத்தில் வைத்து ஆராய்ந்த வரலாற்றாசிரியர்களில் இவர் முக்கியமானவர். சுதந்தரப் போராட்டத்தை முன்னின்று ஒருங்கிணைத்த காங்கிரஸின் பாத்திரத்தை விரிவாக ஆராயும்போது சில முக்கிய அம்சங்களைக் குறிப்பிடுகிறார் பிபன் சந்திரா. தொடக்கம் முதலே காங்கிரஸ் கட்சி ஒரு நாடாளுமன்ற அமைப்பின் வடிவமாகவே இருந்தது வந்தது. அதன் செயல்பாடுகளில் ஜனநாயகத்தன்மை இருந்தது. வெவ்வேறு சிந்தனையோட்டம் கொண்டவர்கள் அதில் அங்கம் வகித்தபோதும் தொடக்கம் முதலே எதேச்சதிகாரப் போக்கு அமைப்பில் பரவவில்லை.

தேசத்தின் பிரச்னைகள் சீரானமுறையில் விவாதங்கள்மூலம் அலசப்பட்டன. இந்தச் சந்திப்புகள் அனைத்தும் ஆவணமாகப் பதிவு செய்யப்பட்டன. குறிப்பிட்ட ஒரு முடிவு எடுக்கப்பட்ட பிறகு அது வாக்களிப்புக்கு விடப்பட்டது. அனைவரின் ஒப்புதலும் பெற்றபிறகே திட்டம் நடைமுறைக்குச் சென்றது. ஜனநாயகமும் மதச்சார்பற்ற தேசியவாதமும் அமைப்பின் அடிப்படைகளாகத் திகழ்ந்தன. இந்த அடிப்படைகள் முக்கியமானவை; வெவ்வேறு பிரதேசங்களில், வெவ்வேறு மொழிகள் பேசும், வெவ்வேறு மதங்களைப் பின்பற்றும், வெவ்வேறு சமூகப்பொருளாதாரப் பின்னணியில் வாழும் மக்களை ஒன்றுதிரட்ட இந்த நோக்கங்கள் பயன்பட்டன.

இந்தியா முழுக்க உள்ள பொதுவான பிரச்னைகளை எடுத்துப் பேசினால்தான் அனைவரும் திரள்வார்கள் என்று இந்திய தேசிய காங்கிரஸ் கணக்கிட்டது. சமூக சீர்திருத்தத்தை இப்போதைக்கு காங்கிரஸ் எடுத்துக்கொள்ளாது என்று தொடக்கத்திலேயே தெளிவுபடுத்தினார் தாதாபாய் நவுரோஜி. இதில் பலருக்குக் கருத்து வேறுபாடுகள் இருந்ததுதான் இதற்குக் காரணம். ‘ஒட்டுமொத்த தேசமும் நேரடியாகப் பங்கேற்கும்படியான விஷயங்களை மட்டுமே தேசிய காங்கிரஸ் கையாளவேண்டும். நம்முடைய அரசியல் விழைவுகளை நம்முடைய ஆட்சியாளர்களுக்குப் பிரதிபலிப்பதற்காகத்தான் ஓர் அரசியல் அமைப்பாக நாம் திரண்டிருக்கிறோம்.’ இந்தத் திரட்சி சாத்தியமாகத் தொடங்கிய பிறகே சமூக மாற்றம், பொருளாதாரம், சமூக நீதி உள்ளிட்ட அம்சங்களில் காங்கிரஸ் கவனம் செலுத்தத் தொடங்கியது என்கிறார் பிபன் சந்திரா.

கலாசாரத்தை மையமாக வைத்து தேசியவாத இயக்கத்தைக் கட்டமைக்கும் போக்கையும் காங்கிரஸ் தலைவர்கள் மேற்கொள்ளவில்லை. இந்திய வேற்றுமையின் முக்கியத்துவத்தை அவர்கள் உணர்ந்திருந்ததால் மதம், கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் புதிய தேசத்தை அவர்கள் நிர்மாணிக்க விரும்பவில்லை. மதச்சார்பின்மையே இந்தியாவின் அடையாளமாக இருக்கும் என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தனர். மதச்சார்பின்மையை வலியுறுத்தினால்தான் பல்வேறு மதப் பிரிவினரும் ஒருங்கிணைந்து வாழ்வது சாத்தியம் என்று அவர்கள் நம்பினர்.

பெரும்பாலான இந்திய மக்கள் அப்போது படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்தனர் என்பதால் அவர்களுக்குப் புரியும்படியான அம்சங்களைக் கொண்டு அவர்களை ஒருங்கிணைக்கவும் அவர்களால் ஏற்கமுடியாதவற்றை ஒதுக்கித் தள்ளவும் தேசியவாதத் தலைவர்கள் தயாராகயிருந்தனர். மதத்தை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட தேசியவாத எழுச்சிகளை காங்கிரஸ் ஏற்கமுன்வரவில்லை. இந்து தேசியவாதம், சீக்கிய தேசியவாதம், இஸ்லாமிய தேசியவாதம் என்று அவற்றை அழைக்காமல் வகுப்புவாத எழுச்சிகள் என்றே அவற்றை காங்கிரஸ் அடையாளப்படுத்தியது. அமைப்பில் இருந்த வகுப்புவாதச் சக்திகளை அடையாளம் கண்டு 1938ம் ஆண்டு வெளியேற்றியது காங்கிரஸ். இதன்மூலம் வகுப்புவாதத்துக்கு இடமில்லை என்பதையும் அது உறுதிபடுத்தியது.

அதே சமயம், இந்திய தேசிய காங்கிரஸால் வகுப்புவாதத்தைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. (இது பற்றி நாம் பின்னர் விரிவாகப் பார்க்கவிருக்கிறோம்). காலனியாதிக்கத்தை எதிர்த்ததைப் போல் வகுப்புவாதத்தை ஒரு வலுவான செயல்திட்டத்தை வடிவமைத்து எதிர்க்க காங்கிரஸ் முன்வரவில்லை. 1946-47ல் வெடித்த வகுப்புவாத மோதல்களும் பாகிஸ்தான் பிரிவினையும் உணர்த்தும் உண்மை இதுவே.

பிபன் சந்திராவைப் பொருத்தவரை, இந்திய தேசிய காங்கிரஸின் முதன்மையான வெற்றி என்பது ஒரு வலுவான தேசியவாத இயக்கத்தைக் கட்டமைத்து காலனியாதிக்க எதிர்ப்பை மேற்கொண்டதில்தான் அடங்கியிருக்கிறது. சாதிய ஏற்றத்தாழ்வு, வர்க்க வேறுபாடு, வகுப்புவாதம், சமூக மாற்றம், பாலின வேறுபாடு ஆகியவற்றில் காங்கிரஸ் கவனம் செலுத்தவில்லை.

0

தேசியவாதிகளின் வரலாற்றுப் பிரதிகள் காலனியாதிக்க வரலாற்றுப் பிரதிகளின் தொடர்ச்சியாக எழுதப்பட்டவை. காலனியாதிக்கத்தின் விளைவாக எழுதப்பட்டவை அல்லது காலனியாதிக்கத்தை எதிர்க்கும் நோக்கில் எழுதப்பட்டவை என்றும் இவற்றை அழைக்கமுடியும். பிபன் சந்திரா அடிப்படையில் ஓர் இடதுசாரி என்றபோதும் அவர் தேசியவாத வரலாற்றாசிரியராகவும் மதிப்பிடப்படுபவர். காந்தி, கார்ல் மார்க்ஸ் இருவரையுமே இவரால் ஏற்கமுடிந்தது. ஆனால் தீவிர இடதுசாரிகள் பிபன் சந்திரா போன்ற தேசியவாதிகளின் வரலாற்றுப் பார்வையை ஏற்பதில்லை.

1967ல் உருவான நக்சல்பாரி எழுச்சிக்குப் பிறகு தோற்றம் பெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியின் நிறுவக உறுப்பினர்களில்ஒருவர், சுனிதி குமார் கோஷ். இந்திய தேசியவாதத்தை மட்டுமல்ல, அதன் நாயகமாக தேசியவாதிகளுக்குத் தோற்றமளிக்கும் இந்திய தேசிய காங்கிரஸின் பாத்திரத்தையும் சுனிதி குமார் கோஷ் கேள்விக்கு உட்படுத்துகிறார். தனது India & the Raj என்னும் புத்தகத்தின் முன்னுரையே இதனை நமக்குத் தெளிவுபடுத்துகிறது. ‘அந்நிய ஆட்சிக்கு எதிராக விடுதலையை நோக்கி இந்தியமக்களை வழிநடத்திச் சென்றது இந்தியத் தேசிய காங்கிஸே; முப்பதாண்டுகாலம் இதன் தலைவராக இருந்த காந்திதான் ஆழ்துயிலில் இருந்த மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினார்; உலகிலேயே வலிமைவாய்ந்த பேரரசைத் தோற்கடித்தத் தனிச் சிறப்பான ஆயுதத்தை (சத்தியாகிரகத்தை) இம்மக்களுக்காக வடிவமைத்துத் தந்தவரும்இவரே; விடுதலை வேள்வியின் ஊடாக இந்த மாபெரும் தேசத்தை உருவமைத்தது இந்தியத் தேசிய காங்கிரஸின் தலைமையே; இந்தியராயினும் சரி, வெளிநாட்டினராயினும் சரி, வரலாற்றாளர்களும், அரசியல் விஞ்ஞானிகளும் பெரும்பாலும் இந்தக் கருத்தே கொண்டிருந்தனர்.’

இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் இரண்டு சக்திகள் பங்கேற்றன என்று குறிப்பிடும் சுனிதி குமார் கோஷ் அந்த இரண்டின் பண்புகளையும் விவரிக்கிறார். ‘நீண்டகாலக் காலனிய ஆட்சியின்போது ஒன்றுடன் ஒன்று போராடும் இரண்டு சக்திகள் இந்தியச் சமூகத்தில் தோன்றின. ஒன்று, பழங்குடிகள், விவசாயிகள், கைத்தொழில்கள், ஆலைத் தொழிலாளிகள், நகர்ப்புறச் சிறுமுதலாளிகள் ஆகியோரின் அணி. இரண்டு, (வணிகம் சார்ந்த அல்லது தொழில் சார்ந்த) பெருந்த தரகு முதலாளிகள், பெரு நிலப்பிரபுக்கள், இளவரசர்கள் மற்றும் அந்நிய ஆட்சியாளர்களின் கருத்துகளில் ஊறித் திளைத்தவர்களும், அவர்களின் ஆட்சி இந்தியாவுக்கு நன்மை தரக்கூடியதென்றும், முற்போக்கானதென்றும் முழுமையாக நம்பி வந்தவர்களும், சலுகைகளை அனுபவித்து வந்தவர்களுமான மேல்தட்டு அறிவுஜீவிகள், அதாவது பெரும் வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், அரசாங்க உயர் அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய அணி. இரண்டாவதாகச் சொல்லப்பட்ட இந்த அணியினர் தம் இருப்புக்கும் செழிப்புக்கும் வசதிகளுக்கும் காலனிய ஆட்சிக்குக் கடன்பட்டிருந்தார்கள். ஏகாதிபத்தியத்துக்கு ஒத்துழைக்கும் அதனுடன் சமசரம் செய்துகொள்ளும் அரசியலைப் பின்பற்றினார்கள். முதலில் சொல்லப்பட்ட அணியினரோ ஏகாதிபத்தியத்தின் மற்றும் உள்நாட்டில் அதற்கு ஒத்துழைப்பாக இருந்தவர்களின் கொள்ளைக்கும் ஒடுக்குமுறைக்கும் பலியாகிக் கொண்டிருந்தார்கள். இவர்களின் அரசியல், போதுமான அளவில் தெளிவாக முன்வைக்கப்பட்டதோ, இல்லையோ ஏகாதிபத்தியத்துக்கும் அதன் சுதேசிக் கூட்டாளிகளுக்கும் எதிரான சமரசமற்ற போராட்ட அரசியலாக இருந்தது. ’

கோஷ் தொடர்கிறார். ‘இந்த இரண்டு முகாம்களுக்கும் இடையிலான எல்லை அரசியல்ரீதியாக தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்று குறிப்பிடும் கோஷ், அவற்றுக்கு இடையிலான உறவு மிகவும் சிக்கலானாக இருந்தது என்றும் குறிப்பிடுகிறார். விவசாயிகள், தொழிலாளர்கள், நகர்ப்புறச் சிறு முதலாளிகள் ஆகியோரின் பொருளியல் நலன்கள், ஏகாதிபத்திய மூலதனத்துக்கு இடைத்தரகர்களாகப் பணியாற்றிய இளவரசர்கள், நிலக்கிழார்கள், பெருமுதலாளிகள் ஆகியோரின் பொருளியல் நலன்களுடன் தீவிரமாக மோதிக்கொண்டன. இருப்பினும் இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள வர்க்கங்களின் அரசியல் பிரதிநிதிகள் சூழ்ச்சியாளர்களாக இருந்தனர். கடுமையாகச் சுரண்டப்பட்டுவந்த பொதுமக்களை ஏறத்தாழ முதல் உலகப்போரின் முடிவிலிருந்தே குழப்பி வந்தனர். சில நேரங்களில் அவர்களைத் தமக்குப் பின்னால் அணிதிரட்டிக் கொண்டனர். பிற நேரங்களில் பிரிட்டிஷ் அரசுடன் சதி செய்து அவர்களின் போராட்டங்களைத் தடம்புறளச் செய்தனர். திசை திருப்பினர். அடக்கி ஒடுக்கினர். இது முரண்பாடு போல் தோன்றினாலும் இதுதான் உண்மை.’

விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றதாக அறியப்படும் தேசியவாதத் தலைவர்களின் நோக்கத்தை சுனிதி குமார் கோஷ் கேள்விக்கு உட்படுத்துகிறார். அவர்களுடைய நோக்கம் இந்திய விடுதலை அல்ல, அதற்கு எதிரானது என்னும் முடிவுக்கும் அவர் வந்து சேர்கிறார். ‘உண்மையான தேசிய விடுதலையை எதிர்த்த அவர்கள் (மேலே குறிப்பிட்டப்பட்டிருக்கும் இரண்டாம் அணியைச் சேர்ந்தவர்கள்) முன்யோசனையுடன் கூடிய செயலுத்தியாக காலனிய எதிர்ப்புப் போராட்டக் கொடியையும் உயர்த்திப் பிடித்தார்கள். ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களைத் தடுப்பதற்காக அவ்வப்போது கட்டாயத்தின் பேரில் அவர்களால் தொடங்கப்பட்ட இயக்கங்கள், தலைமை வரையறுத்த வரம்புகளைத் தாண்டியபோது மட்டுமே உண்மையான தேசிய விடுதலைப் போராட்டத் தன்மையைப் பெற்றன.’

இந்திய விடுதலைப் போராட்டத்தின்முக்கிய மைல்கற்களாக கருதப்பட்டுவரும் பல இயக்கங்கள் இவ்வாறு வரம்புகளைத் தாண்டியவையேஎன்கிறார் சுனிதி குமார் கோஷ். 1919ல் நடைபெற்ற ரவுலட் சத்தியாக்கிரகம், 1920-22ல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கம், 1930-31ல் நடைபெற்ற சட்டமறுப்பு இயக்கம் ஆகியவை வெற்றிகரமான தேசியவாதப் போராட்டங்கள் அல்ல. இவை தேசிய விடுதலைப் போராட்டத்தின் ‘தன்மையை அடையும்போல அச்சுறுத்தல் தோன்றியதுமே, அவசர அவசரமாகத் திடுதிடுப்பென திரும்பப் பெறப்பட்டன. அதனால் நாடு பலத்த ஏமாற்றத்துக்கும், உளச் சீரழிவுக்கும் உள்ளானது.’

படித்த, மேல்தட்டுப் பிரிவினர் விடுதலைப் போராட்டத்தில் வகித்த பாத்திரம் மக்களுக்கு விரோதமானதான அமைந்தது என்பதை பல மேற்கோள்களைச் சுட்டிக்காட்டி வாதிடுகிறார் கோஷ். மும்பையின் கவர்னராகவும் சுப்ரீம் கவுன்சிலின் உறுப்பினராகவும் இருந்த சர். பர்ட்டல் ஃபிரேரியின் கருத்து இது. ‘இப்போது நான் செல்லுமிடமெல்லாம் ஆங்கிலேய அரசாங்கத்தின் மிகச் சிறந்த கொள்கை விளக்குநர்களை, இந்திய மக்களுடைய தனித்தன்மைகளுக்குத் தக அந்தக் கொள்கையை மிகத் திறமையாக முன்வைக்கும் விளக்குநர்களை, படித்த சுதேசிப் பிரிவினரிடையே பார்க்கிறேன்.’

தாதாபாய் நவுரோஜியின் கருத்து இது. ‘அவர்கள் (இந்தியாவில் உள்ள படித்த வர்க்கங்கள்) பிரிட்டனுடன் இந்தியா மென்மேலும் உறுதியாகப் பிணைக்கப்படுவதற்கான பலம்வாய்ந்த இணைப்புக் கண்ணியாக இருக்கிறார்கள்.’ காலனியாட்சி படித்த வர்க்கங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது என்று வேறோரிடத்தில் அவர் எழுதுகிறார். ‘பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவு இந்தியாவுக்கு ஆசிர்வாதத்தையும் இங்கிலாந்துக்கு பெரும் புகழையும் தரும் என்றே நான் நம்புகிறேன். புவிமீது மிகச் சிறந்ததும் மிகுந்த மனிதத்தன்மை உள்ளதுமான தேசத்துக்குத் தகுதியான விளைவுதான் இது. ’

இந்திய நடுத்தர வர்க்கத்தைக் குறித்து ஆய்வு செய்துள்ள பி.பி. மிஸ்ராவின் வார்த்தைகள் இவை. அவரைப் பொருத்தவரை மேல் நடுத்தரவர்க்க அறிவாளிகள் ‘இந்தியாவின் உள்நாட்டுச் சமூகத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கான அணைப்பாக அமைந்தார்கள். சார்லஸ் கிராண்ட், மெக்காலே, சர். சார்லஸ் உட் போன்றவர்களின் சமூக, அரசியல் கோட்பாடுகளின் பயன்பாட்டினால் உருவான ஆதாரகோல்களாக விளங்கினார்கள் .’

0

இந்திய தேசியவாதம் : ஓர் அறிமுகம்

நவீன இந்திய வரலாறு / அத்தியாயம் 6

RBதேசியவாதம் குறித்து விரிவாக ஆராய்ந்துள்ள எரிக் ஹாப்ஸ்பாம், இது ஒரு நவீன கருத்தாக்கம் என்றும் ஐரோப்பாவே அதன் பிறப்பிடம் என்றும் குறிப்பிடுகிறார். 18ம் நூற்றாண்டு முடிவில் குறிப்பாக, 1789 மற்றும் 1848 ஆண்டுகளுக்கு இடையிலான காலகட்டத்தில் இந்தக் கருத்தாக்கம் உதயமானது என்கிறார் ஹாப்ஸ்பாம். அறிவொளி தத்துவங்களால் உந்தப்பட்டு 1789ம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சி அரசியல் மற்றும் சிந்தாந்தத் தளங்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. ஜனநாயகம், தேசியவாதம், லிபரலிசம் ஆகிய சிந்தனைகள் அரும்பி, பரவவும் தொடங்கின. மற்றொரு பக்கம் தொழில்புரட்சியின் விளைவாக நவீன தொழில்நுட்பம், அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆகியவை வளர்ச்சிபெற்றன. இரட்டைப் புரட்சி என்று இதனை அழைக்கிறார் ஹாப்ஸ்பாம்.

பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு ஐரோப்பாவின் ஆதார சக்தியாக தேசியவாதம் மாறிப்போனது. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வசிக்கும் மக்கள் தங்களுக்கிடையில் உள்ள கலாசார, மொழி ஒற்றுமையை அங்கீகரித்து ஒரே தேசமாக அணிதிரளத் தொடங்கினர். தேசிய அடையாளத்தின் முக்கியத்துவத்தை ஐரோப்பா உணரத் தொடங்கியது. சொந்த நாட்டின்மீதான பற்று மக்களை ஒன்றிணைத்தது நல்ல அம்சம்தான். ஆனால் இதே தேசியவாதம் காலனியாதிக்கத்தையும் ஐரோப்பாவையும் தோற்றுவித்தது. இதற்கும் நாட்டுப்பற்றே ஆதாரமான சக்தியாகஇருந்தது.

ஐரோப்பிய தேசியவாதத்துக்கும் இந்திய தேசியவாதத்துக்கும் இடையில் சில வேறுபாடுகள் உள்ளன என்கிறார் பிபன் சந்திரா. நிலப்பிரபுத்துவம் உடைந்து முதலாளித்துவம் தோன்றும்போது ஐரோப்பாவில் தேசங்கள் உருவாயின. அல்லது, நவீன தொழில்மயமாக்கலோடு இணைந்து உருவாயின. அந்த வகையில் ஐரோப்பிய தேசியவாதம் என்பது ஒரு பூர்ஷ்வா கருத்தியலாக இருந்தது. பல சமயங்களில் முடியாட்சியின் ஆதரவும் அதற்குக் கிடைத்தது. ஐரோப்பிய தேசியவாதம் இனம் சார்ந்ததாக இருந்தது. மொழி, கலாசாரம் ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் ஒன்றுதிரண்டனர். அல்லது, 19ம் நூற்றாண்டில் நடந்ததைப்போல் பாசிசம், நாசிசம் என்னும் தேசவெறி கொள்கையாக உரு திரியலாம். ஜெர்மனியும் ஜப்பானும் இத்தாலியும் தேசியவாதத்தின் கோர வடிவங்களை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன.

இந்தியாவிலும் பிற காலனிகளிலும் (அரை காலனிகளிலும்) தேசியவாதம் காலனியாதிக்க எதிர்ப்பாக வெளிப்பட்டது. சீனாவில் நடந்ததும் இதுதான். ஜப்பானில் முதலில் காலனி எதிர்ப்பாகத் தொடங்கி பிறகு ஜிங்கோயிசமாக மாறிப்போனது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும்இடையிலான ஒரு வேறுபாட்டை பிபன் சந்திரா சுட்டிக்காட்டுகிறார். இந்திய மக்கள் ஒரு தேசமாகத் திரண்டபோது இந்திய தேசம் என்று அந்த வரலாற்று நிகழ்வை அழைத்தனர். சீனர்கள் தேசம் என்னும் பதத்தைப் பயன்படுத்தவில்லை; தங்கள் தேச உணர்வை சீன மக்கள் என்னும் பதத்தில் வெளிப்படுத்தினார்கள். இந்தியாவுக்கு இந்த உணர்வு ஏற்பட்டது தேசியவாதம் 19ம் நூற்றாண்டின் விளைவு என்பதால் அந்தக் காலகட்டத்துப் பெயரான தேசியம் என்பதை அது இணைத்துக்கொண்டது.

இந்திய தேசியம் பற்றி நிலவிவரும் இரண்டு சிந்தனைப் போக்குகளை பிபன் சந்திரா சுட்டிக்காட்டி இரண்டையும் மறுதலிக்கிறார். முதல் பிரிவினர் இந்தியா என்றொரு தேசம் 19ம் நூற்றாண்டில் உருவாகவில்லை என்றும் இனி அது சாத்தியமும் இல்லை என்றும் வாதிட்டனர். இவர்களைப் பொருத்தவரை படித்த, மேல்தட்ட வர்க்கத்தினரின் நலன்களே இந்திய தேசியமாக முன்மொழியப்பட்டது. பிரிட்டிஷ் வர்த்தக நலன்களுக்கு எதிராகத் தங்கள் நலன்களை முன்னிறுத்தி இவர்கள் மேற்கொண்ட போராட்டமே தேசியவாதப் போராட்டமாக அறியப்படுகிறது. இரண்டாவது பிரிவினர் இந்திய தேசியம் என்பது 19ம் நூற்றாண்டு சிந்தனை அல்ல; இந்திய நாகரிகம் எவ்வளவு பழைமையானதோ அவ்வளவு பழைமையானது இந்திய தேசியமும் என்று நிறுவ முயல்கின்றனர்.

இந்திய தேசியம் என்பது ஐரோப்பிய தேசியம் அல்ல. அது மேல்தட்டுப் பிரிவனரின் முழக்கமும் அல்ல. வேத காலத்திலேயே தோன்றிவிட்ட ஓர் உணர்வும் அல்ல. ஒரே மதம், ஒரே கலாசாரம், ஒரே மொழி, ஒரே ரத்த உறவு ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய தேசியம் உருவாகவில்லை. நவீன தொழில்மயமாக்கல், முதலாளித்துவத்தின் தோற்றம் ஆகியவற்றோடு இந்திய தேசியத்தின் தோற்றத்தைத் தொடர்புபடுத்தமுடியாது. இந்திய தேசம், இந்திய தேசியவாதம் ஆகியவை காலனியாதிக்கத்தின் தாக்கத்தால் நேரடியாக எழுச்சிபெற்றன. சுதந்தரத்துக்காக நடத்தப்பட்ட காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் இருந்து தேசியவாதம் கிளர்ந்தெழுந்தது.

இந்திய தேசம், தேசியவாதம் இரண்டுமே வரலாற்றின் விளைவுகள் என்கிறார் பிபன் சந்திரா. இந்திய மக்களின் பொருளாதார, அரசியல், சமூக மற்றும் சிந்தாந்த வளர்ச்சியை ஆராய்வதன்மூலம் இந்திய தேசியத்தின் பரிணாம வளர்ச்சியை நம்மால் புரிந்துகொள்ளமுடியும். 19ம் நூற்றாண்டு தொடங்கி இந்தியாவில் அகநிலையிலும் புறநிலையிலும் தேசக் கட்டுமானம் தொடங்கிவிட்டது. பல்வேறு அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார சக்திகள் ஒன்றிணைந்து, ஒன்றுடன் ஒன்று வினை புரிந்து இந்திய மக்களிடையே ஒற்றுமை உணர்வை உண்டாக்கியது. தங்களுடைய நலன்கள் ஒன்றுபட்டிருந்ததையும் காலனிய ஆக்கிரமிப்பை எதிர்க்கவேண்டி அனைவரும் ஒன்றிணையவேண்டிருந்ததையும் இந்தியர்கள் உணர்ந்திருந்தனர் என்கிறார் பிபன் சந்திரா. இந்திய தேசியவாதம் அல்ல, காலனியாதிக்கமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தியது. காலனியாதிக்கமே அவர்களுக்குள் ஒரு பிணைப்பை ஏற்படுத்தியது. காலனியாதிக்கத்துக்கும் இந்தியர்களின் நலன்களுக்கும் இடையில் தீர்க்கமுடியாத முரண்பாடு ஏற்பட்டபோது அந்த எதிர்ப்புணர்வு தேசியவாதமாக மாறியது.

இந்திய மக்கள் காலனியாதிக்கத்துக்கு எதிராகத் திரண்டது உண்மை என்றால் அவர்களுடைய தேசியவாதமும் உண்மைதான் என்கிறார் பிபன் சந்திரா. காலனியாதிக்கத்துடனான முரண்பாடு சாதி, வர்க்கம், பிரதேசம், மதம், மொழி ஆகியவற்றைக் கடந்துசென்ற காரணத்தால் தேசிய விடுதலைப் போராட்டம்இந்தியா எங்கும் பரவிப் படர்ந்தது. அனைவருக்கும் ஒரு பொது எதிரி இருந்ததால் எதிர்ப்பு ஒருமுகப்படுத்தப்பட்டது. ஆக்கிரமிப்பு பொதுவானது என்னும் ஒரு காரணமே போதும்; அதனை எதிர்க்கவேண்டும் என்னும் விருப்பம் பிறந்துவிடும் என்று நேருவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது வாதத்தை அழுத்தமாக நிறுவ, பிபன் சந்திரா ஒரு கற்பனை ஒப்பீட்டை நிகழ்த்துகிறார். ஒருவேளை இந்தியா முழுமையாக ஒரே காலனியாக பிரிட்டனால் ஆளப்படாமல் வெவ்வேறு காலனிய சக்திகளால் தனித்தனிப் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டு ஆளப்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்? தனித்தனியே அல்லவா எதிர்ப்புச் சக்திகள் பிரதேச வாரியாகத் தோன்றியிருக்கும்? விடுதலைப் போராட்ட உணர்வும் தேசியவாத உணர்வும் சிதறடிக்கப்பட்டிருக்கும் அல்லவா? பொது எதிரி இல்லாததால் பொது எதிர்ப்புணர்வும் இல்லாமல் போகியிருக்கும் அல்லவா? இந்தியா என்றொரு தேசம் உருவாகாமல் போகியிருக்கவே வாய்ப்புகள் அதிகம், இல்லையா?
லத்தின் அமெரிக்காவை உதாரணத்துக்குக் கொண்டு வருகிறார் பிபன் சந்திரா.

ஸ்பெயின் லத்தின் அமெரிக்காவைக் கைப்பற்றி தனது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தது. ஆனால் மேலே குறிப்பிட்டதைப் போல் தனித்தனி காலனிகளாக உடைத்து லத்தின் அமெரிக்காவை ஆட்சி செய்தது. அதனால் ஒரே மொழி பேசும் மக்கள் இருந்தும், ஒரே மதத்தை அவர்கள் கடைபிடித்தபோதும், ஒரே கலாசாரத்தைப் பின்பற்றியபோதும் லத்தின் அமெரிக்கா என்றொரு தேசமோ லத்தின் அமெரிக்க தேசியவாதம் என்றொரு உணர்வோ அங்கே உருவாகவில்லை. எதிர்ப்புகள் சிதறிப்போனது. தனித்தனியே தேசியப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. தனித்தனியே விடுதலைக்கான பாதைகள் ஆராயப்பட்டன. மக்கள் தனித்தனியே தங்களுக்குள் திரண்டனர். இந்தியாவில் அப்படி நேராமல் போனதற்குக் காரணம் ஒரே காலனியாக அதனை பிரிட்டன் பாவித்ததுதான்.

இந்தியாவைப்போலவே இந்தோனேஷியாவும் நீண்டகாலம் ஒரே அந்நிய ஆதிக்கத்தின் கீழ் (டச்சு) இருந்ததால் அங்கும் தேசிய விடுதலைப் போராட்டம் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டமாக மலர்ந்து மக்களை ஒன்றுதிரட்டியது. இந்தோனேஷியா என்னும் தேசம் ஒன்றும் உருவானது. ஆனால் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்து இந்தோ சீனா ஒரே தேசியமாகத் திரளவில்லை. வியட்நாம், கம்பூச்சியா, லாவோஸ் என்னும் மூன்று பிரதேசங்கள் தனித்தனியே தங்கள் காலனிய எதிர்ப்பை முன்வைத்துப் போராடி மூன்று நாடுகளைத் தோற்றுவித்தன. விடுதலைக்குப் பிறகு இந்த மூன்றும் ஒன்றையொன்று எதிர்க்கத் தொடங்கியதும் வரலாறே. சோவியத் யூனியனில் ஜார் ஆட்சிக்கு எதிரான போராட்டம் எல்லாப் பகுதிகளிலும் ஒன்றுபோல் இருக்கவில்லை. ஜார் ரஷ்யா பல்வேறு தேசியங்களின் சிறைச்சாலையாக இருந்து என்று லெனின் சுட்டிக்காட்டியிருந்ததை அலசும் பிபன் சந்திரா, சோவியத் யூனியன் பின்னாள்களில் சிதறிப்போனதற்கு ஒன்றுபட்ட தேசிய உணர்வு ஏற்படாததே ஒரு காரணம் என்கிறார். தேசிய உணர்வு, போராட்டத்தைத் தூண்டிவிடுகிறது. போராட்டம், மக்களிடையே புரிதல் உணர்வை உண்டாக்குகிறது. இந்த இரண்டும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவை; இந்த இரண்டுக்கும் இடையில் இயங்கியல் உறவு உள்ளது என்கிறார் பிபன் சந்திரா.

பிரிட்டிஷ் ஆட்சி இந்திய நிலப்பரப்பு முழுவதையும் ஒரே அரசியல் மற்றும் நிர்வாகமுறையின்கீழ் கொண்டுவந்தது. ஆட்சிசெய்வதற்கு வசதியாக இருந்த இந்த ஏற்பாடு வெவ்வேறு பிரதேசங்களில் வசித்த மக்களை ஒரே பக்கத்தில் திரட்டவும் உதவியது. கிராமப்புறங்கள், மூலை முடுக்குகள், நகரங்கள் எதுவும் இதிலிருந்து தப்பவில்லை. நவீன போக்குவரத்து வசதியும் புதிய சாலைகளும் மோட்டார் வாகன வசதிகளும் புவியியல் ரீதியாக சிதறிக்கிடந்த மக்களை ஒன்றுபடுத்தியது. நவீன தொழிற்சாலைகளும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நிகழ்த்தின. பெரும்பாலான இந்த நடுத்தர ஆலைகள் பிரதேச எல்லைகளைக் கடந்து அனைத்திந்திய அளவில் இயங்கின. புதிய சமூக வர்க்கங்கள் உருவாயின. முதலாளிகள், தொழிலாளர்கள் இருவருமே அனைத்திந்திய தன்மை கொண்டிருந்தனர் என்கிறார் பிபன் சந்திரா. அனைத்திந்திய தொழிற்சங்கம் (ஏஐடியுசி), ஃபெட்ரேஷன் ஆஃப் இந்தியன் சாம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் (எஃப்ஐசிசிஐ) இரண்டுமே 1920களில் நிறுவப்பட்டன. இந்த இரண்டுமே இந்தியா தழுவிய அளவில் இயங்கியதோடு தேசியவாதத்தன்மையும் கொண்டிருந்தன. மதம், பிரதேசம், மொழி, சாதி ஆகியவற்றைக் கடந்தும் செயல்பட்டன. இன்னும் சொல்லப்போனால் இந்த இரண்டும் இந்திய தேசிய காங்கிரஸின் பிரதிபிம்பகளாக இருந்தன என்கிறார் பிபன் சந்திரா.

இந்திய தேசிய உணர்வை ஊட்டியதில் அறிவுஜீவிகளின் பங்களிப்பையும் பிபன் சந்திரா பதிவு செய்துள்ளார். தொடக்கத்தில் ஆடம் ஸ்மித், ஜெரமி பெந்தம், ஜான் ஸ்டூவர்ட் மில் போல் காலனியாதிக்கம் வளர்ச்சியையே கொண்டுவரும் என்று படித்த, இந்திய அறிவுஜீவிகள் முதலில் நம்பினாலும் பின்னாள்களில் தங்கள் எண்ணத்தை அவர்கள் மாற்றிக்கொண்டனர் என்கிறார் இவர். சமூக யதார்த்தத்தைக் கண்டதும் 1870களில் இந்த மனமாற்றம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அறிவுஜீவிகள் காலனியாதிக்கக் கொள்கைகளை மக்களிடையே அம்பலப்படுத்தி விமரிசிக்கத் தொடங்கினர். அப்போது இவர்கள் தேசியவாத அறிவுஜீவிகளாக மாற்றம் கண்டனர். மக்களின் சிந்தனைகளை இவர்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கினர். தேசத்தின் பிரதிநிதிகளாக அறிவுஜீவிகள் தங்களை உணர்ந்த தருணமும் இதுவே. அதாவது, தேசம் என்றொன்று உருவாவதற்கு முன்பே அதனை இவர்கள் உருவகப்படுத்திக்கொண்டு அதன் அடிப்படையில் சிந்திக்கவும் மக்களை ஒன்றுதிரட்டவும் தொடங்கினர்.

எங்கள் மொழியில் நேஷன் என்னும் ஆங்கில வார்த்தைக்கு இணையான ஒரு பதமே இல்லை என்று 1916ம் ஆண்டு பிபின் சந்திர பால் எழுதினார். இந்தி மொழியில் உள்ள தேஸ், பர்தேஸ் ஆகிய வார்த்தைகள்கூட அருகில் உள்ள பிரதேசங்களையே குறித்தன. தனியொரு தேசத்தை அல்ல. 1866ம் ஆண்டு நேடிவ் ஒப்பீனியன் என்னும் பத்திரிகை பின்வருமாறு குறிப்பிட்டது. தற்போதுள்ள நிலையில் மராத்தியர்கள், குஜராத்திகள், பெங்காலிகள் என்று பலரும் தங்களைத் தனித்தனி பிரிவினராகவே கருதுகின்றனர். ஒரு முழு தேசத்தின் பகுதிகளாக அல்ல. 19ம் நூற்றாண்டின் இறுதியில்கூட ஒரியாவில் இருந்தவர்கள் வங்காளர்களையும் பிகாரிகளையும் அயல்நாட்டவர்களாவே கண்டனர். 1926ம் ஆண்டு நேரு இவ்வாறு குறிப்பிடுகிறார். ‘இந்தியாவின் இலக்கியம், வரலாறு, மத ரீதியலான பாரம்பரியம் அனைத்தும் தொடக்க காலத்தில் இருந்தே இந்திய ஒற்றுமையைப் போதித்து வந்துள்ளன. ஆனால் அரசியல் ரீதியில் தேசம் என்றொரு கருத்தாக்கத்தை இவை உருவாக்கவில்லை.மேற்கிலேயே இது ஒரு சமீபத்திய வரவுதான்.’

இந்திய தேசிய காங்கிரஸின் செயல்பாடுகளை 1896ம் ஆண்டு விவேகானந்தர் இவ்வாறு மதிப்பிடுகிறார். ‘இது மிக முக்கியமான இயக்கம்; இதனை இதயப்பூர்வமாக வரவேற்கிறேன். வெவ்வேறான இனங்களைக் கொண்டிருக்கும் இந்தியாவில் இருந்து ஒரு தேசம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வெவ்வேறு இனங்கள் ஐரேப்பாவில் உள்ள வெவ்வேறு விதமான மக்களையே நினைவுபடுத்துகிறார்கள்.’

1902ல் பிபின் சந்திர பால் இந்தியாவை புதிய இந்தியா என்றும் இந்தியர்களை புதிய மக்கள் என்றும் தொடர்ச்சியாக அழைத்தார். புதிய இந்திய தேசத்தில் இந்துக்கள், முகம்மதியர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள், சமூகப் பரிணான வளர்ச்சியில் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் ஆதிவாசிகள் அனைவரும் முக்கிய உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று அவர் கனவு கண்டார். இந்தியா என்பது வெறும் புவியியல் பரப்பை மட்டும் குறிக்கவில்லை; தனித்துவமான ஒரு தேசமாக அது உருவாகிக்கொண்டிருக்கிறது என்று1908ம் ஆண்டு லாலா லஜபதி ராய் எழுதினார். ஒரு தேசமாக உருவாக என்னென்ன தடைகள் இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காணவேண்டியது அவசியம் என்று 1909ம் ஆண்டு அரவிந்த கோஷ் எழுதினார்.

இந்த மேற்கோள்கள் தெளிவாக உணர்த்தும் உண்மை இதுதான். பொதுவான வரலாறு, கலாசாரம், புவியியல் ஆகியவை இருந்தபோதும், இந்தியா என்றொரு தேசம் உருவாகியிருக்கவில்லை என்பதை இந்திய தேசியவாதிகள் உணர்ந்திருந்தனர். ஆனால் அந்தத் தேசிய கருத்தாக்கம் உருவாவதற்கு வாய்ப்பே இல்லை என்று பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளைப்போல் அவர்கள் நம்பவில்லை. வரலாற்றுச் சக்திகள் ஒன்றிணைந்துகொண்டிருக்கின்றன; நம் கண்முன்னால் இந்தியா ஒரு தேசமாக உருவாகிக்கொண்டிருக்கிறது என்று அவர்கள் நம்பினர். பிளவுகள், வேறுபாடுகள், குறைபாடுகள், சமமற்ற நிலை, குழப்பங்கள், இக்கட்டுகள் அனைத்தையும்மீறி ஒன்றுபட்ட ஒரு தேசம் பிறப்பெடுக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர்.

0

காலனியமும் கல்வியும்

அத்தியாயம் 5

schoolingtheworld4

கரீபிய நாவலாசிரியரான ஜார்ஜ் லாமிங் ஓரிடத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். ‘காலனியம் என்பது வரலாற்றில் ஒரு கட்டத்தில் வந்து இன்னொரு சமயம் மறைந்து ஓடிவிடுகிற ஒரு விஷயமல்ல. அது தொடர்ச்சியானது; வாழ்ந்துகொண்டிருப்பது. காலனிய சூழல் முடிவுக்கு வந்தபிறகும்கூட நினைவுகளில் அது தொடர்ந்து வாழ்கிறது.’

2012ம் ஆண்டு பிரிட்டன் ஹை கமிஷனர் சர் ஜேம்ஸ் பெவன் உறையாற்றிக்கொண்டிருந்தபோது ஒரு சீக்கியர் எழுந்து நின்று இடைமறித்தார். ‘நான் ஒரு சுதந்தரப் போராட்ட வீரர். ஜனநாயகம் வேண்டும் என்று கேட்டுப் போராடியதற்காக நீங்கள் என்னைச் சிறையில் அடைத்தீர்கள். அதற்காக ஏன் பிரிட்டன் இப்போது மன்னிப்பு கேட்கக்கூடாது?’ இந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி சார்லஸ் ஆலென் தி டெலிகிராஃப் இதழில் எழுதுகிறார். ‘அந்த சீக்கிய அதிகாரியிடம் பிரிட்டிஷ் அதிகாரி திருப்பிக்கேட்டிருக்கவேண்டும். ஜனநாயகம் குறித்தும் தேசியம் குறித்தும் யோசிக்கவேண்டும் என்று முதலில் உங்களுக்குக் கற்றுக்கொடுத்தவர் யார்? தவிரவும் காலனியாதிக்கத்துக்காக இந்தியாவிடம் மன்னிப்பு கேட்பது என்பது ஜோன் ஆஃப் ஆர்க் கொல்லப்பட்டதற்காக இப்போது மன்னிப்பு கேட்கச் சொல்வதற்கு ஒப்பானது.’

சார்லஸ் ஆலெனைப் பொருத்தவரை காலனியம் என்பது ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினர்மீது தங்கள் கருத்துகளைப் பலவந்தமாகத் திணிப்பது. இந்திய வரலாற்றை ஆராயும்போது இத்தகைய ஆக்கிரமிப்புகள் தொடர்ச்சியாக ஏற்பட்டு வந்துள்ளதைப் பார்க்கலாம் என்கிறார் ஆலென். உள்ளூர் ஆதிவாசிகள்மீதான ஆரியர்களின் ஆக்கிரமிப்பை மகாபாரதம் புகழ்ந்து போற்றுகிறது. வேத காலத்தில் ஆக்கிரமிப்பாளரே ஆட்சியாளராக இருந்துள்ளார். அவருடைய கடமை தனது ஜனபதாவை (ராஜ்ஜியம்) மகாஜனபதாவாக (சாம்ராஜ்ஜியம்) மாற்றுவதுதான். ஆக்கிரமிப்புகள்மூலமே இது சாத்தியம். என்னைப் பொருத்தவரை இவையனைத்துமே ஏகாதிபத்தியம்தான் என்கிறார் சார்லஸ் ஆலென். பௌத்தத்துக்கு மாறிய பிறகு அசோகர் இத்தகைய ஆக்கிரமிப்புகளை எதிர்த்தார் ஆனால் அந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை என்கிறார் ஆலென்.

மைசூரைக் கிழக்கிந்திய கம்பெனி மட்டுமல்ல ஹைதர் அலியும்கூடத்தான் ஆக்கிரமித்தார். ராஜபுத்திர ராஜ்ஜியங்களை மராத்தியர்கள் ஆக்கிரமித்தனர். பஞ்சாபை சீக்கியர்கள் ஆக்கிரமித்தனர். இதில் பிரிட்டனின் காலனியாதிக்கம் பிறவற்றில் இருந்து எப்படி, ஏன் மாறுபடுகிறது? ஏன் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்து எதிர்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார் ஆலென். அதற்கான பதிலை அவரே அளிக்கிறார். இந்தியப் பொருளாதாரத்தை அதிகம் சீரழித்தது பிரிட்டனின் காலனியம்தான். மான்செஸ்டரும் பிர்மிங்ஹாமும் செழித்து வளர்ந்தபோது இந்தியாவின் கிராமப்புறங்கள் கடும் சுரண்டலுக்கு உள்ளாயின. மற்றவர்களைப் போலன்றி இந்தியக் கலாசாரத்தை பிரிட்டன் தாழ்வாகப் பார்த்தது. ஆங்கிலத்தை இந்தியா முழுமைக்கும் சிபாரிசு செய்த தாமஸ் மெக்காலே ஓர் உதாரணம்.

இந்தியாவை ஆக்கிரமித்து ஆட்சி செய்த மற்ற ஆட்சியாளர்களுக்கும் பிரிட்டனுக்கும் உள்ள மற்றொரு முக்கிய வேறுபாட்டை ஈ.எம்.எஸ். நம்பூதரிபாட்  சுட்டிக்காட்டுகிறார். மற்ற ஆக்கிரமிப்பாளர்கள் இந்தியாவை ஓர் அந்நியப் பிரதேசமாகவே கருதி ஆட்சி நடத்தினார்கள். இந்தியாவுடன் அவர்கள் ஒன்றவில்லை. தங்கள் கலாசாரத்தை, தங்கள் பண்பாட்டை, வழிபாட்டு முறையை, சமூக மதிப்பீடுகளை அவர்கள் இந்தியாமீது திணிக்க முயன்றனர். பிரிட்டனும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் முகலாயர்கள் பிரிட்டனைப்போலன்றி இந்தியர்களுடன் ஒன்று கலந்தனர்.

பிரிட்டனின் பாடப்புத்தகங்களில் மாற்றங்களைக்கொண்டுவரவேண்டும்; காலனியம் பற்றிக் குறிப்பாக இந்தியா மற்றும் ஆப்கனிஸ்தானில் பிரிட்டன் இழைத்த கொடுமைகள் பற்றிப் போதிக்கவேண்டும் என்கிறார் வில்லியம் டால்ரிம்பிள். ‘என் குழந்தைகள் ட்யூடர்கள் குறித்தும் நாஜிகள் குறித்தும் திரும்பத் திரும்ப படித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் லட்சக்கணக்கான மக்கள் காலனியத்தால் கொல்லப்பட்டதை அவர்கள் கற்பதேயில்லை. மலையளவு குவிந்துகிடக்கும் மண்டையோடுகளின்மீதுதான் காலனிய ஆட்சி நடைபெற்றது என்பதை மக்கள் தெரிந்துகொண்டாகவேண்டும்‘ என்கிறார் டால்ரிம்பிள்.

பிரிட்டிஷ் மாணவர்கள் மட்டுமல்ல காலனியத்தின் தாக்கத்துக்கு உட்பட்டுக்கிடக்கும் இந்தியர்கள் குறிப்பாகக் காலனியம் பற்றி விரிவாகக் கற்கவேண்டியிருக்கிறது. அதற்கு முதல் படியாக தனது கலாசார அடையாளத்தை இந்தியா கண்டெடுக்கவேண்டும் என்கிறார் பவன் கே வர்மா. இந்தியர்களின் உள்ளத்திலும் கலாசார பழக்கவழக்கங்களிலும் பிரிட்டிஷ் ராஜ் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறது. இதிலிருந்து விடுபட்டு நம்முடைய கலாசார வேர்களைச் சென்றடைவதுதான் நம்முன் இப்போதுள்ள மிகப் பெரிய சவால் என்கிறார் பவன் கே வர்மா. யூனியன் ஜாக் கொடியைக் கீழிறக்கி மூவர்ணக் கொடியை ஏற்றிவிட்டால் எல்லாம் முடிந்துவிட்டது என்று பொருளில்லை. நூறாண்டுகளுக்கு மேலாக ஒரு நாட்டை இன்னொன்று ஆண்டிருக்கிறது என்னும்போது கடந்தகாலம் நிச்சயம் நிகழ்காலத்தோடு கலந்தே இருக்கும் என்கிறார் வர்மா.

சமூகக் கட்டமைப்பில் பிரிட்டன் கொண்டுவந்த முக்கிய மாற்றம் உயர்குடிகளைக் கொண்டிருந்த ராணுவத் தலைமையை மாற்றி நிர்வாகக் கட்டுப்பாட்டையும் ஒழுங்கமைக்கப்பட்ட ராணுவத்தையும் கொண்டுவந்ததுதான் என்கிறார் ஆங்கஸ் மாடிசன். மற்றொரு மாற்றம் ஆங்கிலத்தை கல்வி மொழியாக  அறிமுகப்படுத்தியது. பிரிட்டனின் வருகைக்கு முன்பு பெருமளவில் மதம் சார்ந்த போதனைகளே உயர் கல்வி என்னும் பெயரில் அரபி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் கற்பிக்கப்பட்டன. தொடக்கத்தில் பிரிட்டன் இந்தக் கல்விமுறையை ஊக்குவிக்கவே செய்தது. கல்கத்தாவிலுள்ள மதராஸாவுக்கும் பெனாரஸ் சமஸ்கிருத கல்லூரிக்கும் பிரிட்டன் நிதியுதவி அளித்தது. கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹாஸ்டிங்ஸ் சஸ்கிருதம், பெர்ஷியன் உள்ளிட்ட மொழிகளை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டார். சர் வில்லியம் ஜோன்ஸ் சமஸ்கிருத இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததோடு 1785ம் ஆண்டு ஏஷியாடிக் சொஸைட்டி ஆஃப் பெங்கால் என்னும் அமைப்பை உருவாக்கவும் செய்தார்.

Thomas Babington Macaulay

Thomas Babington Macaulay

ஆனால் தாமஸ் மெக்காலேவுக்கு ஓரியண்டல் காதல் இல்லை. இந்திய இலக்கியங்களால் பயன் எதுவும் இல்லை, அவற்றை ஆதரிப்பது வீண் வேலை என்பது அவர் கருத்து. ஆய்வுகள் என்னும் பெயரில் பிரிட்டன் பணத்தை இந்தியாவில் வீணடிக்கிறது. இந்திய இலக்கியங்களை மொழிபெயர்ப்பது, அச்சடிப்பது ஆகியவற்றால் காகிதங்கள்தான் பாழாகின்றன. இந்திய வரலாறு, தத்துவம், மதம், அறிவியல் அனைத்தும் முட்டாள்தனமாவை என்று மெக்காலே அறிவித்தார். பிற பிரிட்டிஷ் அதிகாரிகளைப்போல் எனக்கு சமஸ்கிருதம், அரபி இரண்டும் தெரியாது என்றும் பெருமிதப்பட்டுக்கொண்டார். இந்தியா, அரேபியாவில் எழுதப்பட்ட அனைத்து இலக்கியப் பதிவுகளையும்விட ஒரே ஒரு அலமாரி நல்ல ஐரோப்பிய இலக்கியம் மேலானது என்பது மெக்காலே வந்தடைந்த முடிவு.

இந்த மனநிலையோடுதான் ஆங்கிலம் இங்கே நுழைக்கப்பட்டது. இது நல்லதுதானே, ஆங்கிலம் நம் அறிவின் வாசலை அல்லவா திறந்து வைத்தது? வேறு எதற்காக இல்லாவிட்டாலும் இதற்காக மட்டுமாவது நாம் காலனியத்துக்கு நன்றி செலுத்தவேண்டாமா என்று சிலர் கேட்கலாம். அதற்கான பதில் மெக்காலேயிடமிருந்தே வருகிறது. ஆங்கிலத்தை அறிமுகப்படுத்தியதன் நோக்கம் என்ன என்பதை அவரே சொல்கிறார். ‘இங்குள்ள மக்கள் கூட்டம் அனைவருக்கும் கல்வி போதிப்பது என்பது முடியாத செயல். அப்படியொரு முயற்சி மேற்கொள்வதற்குக்கூட நம்மிடம் வசதியில்லை. நாம் ஆளப்போகும் லட்சக்கணக்கானவர்களுக்கும் நமக்கும் பாலமாகச் செயல்படக்கூடிய ஓர் இடைநிலை வர்க்கத்தை உருவாக்குவதே நம்முடைய இப்போது பணி. இவர்கள் நிறம், உடலில் பாயும் ரத்தம் ஆகியவை இந்தியர்களுடையதாகவே இருக்கும். ஆனால் இவர்களுடைய ரசனை, சிந்தனைகள், அறம், அறிவு அனைத்தும் ஆங்கிலேயர்களுடையதாக இருக்கும். இந்நாட்டின் பல்வேறு வட்டார வழக்குகளை மேம்படுத்தும் பணியை இந்த வர்க்கத்தினரிடம் நாம் விட்டுவிடலாம்.’

இந்தப் பணி என்னவானது? ஆங்கிலக் கல்விமுறையால் விளைந்த பலன் என்ன? 1857ம் ஆண்டு கல்கத்தா, மெட்ராஸ், பாம்பே ஆகிய இடங்களில் மூன்று பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன.  ஆனால் இவை மேற்பார்வையிடும் நிறுவனங்கள் மட்டுமே. அரசு அனுமதியுடன் நடத்தப்பட்ட பிற பல்கலைக்கழகங்களில் இரண்டாண்டு பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் மனனம் செய்து எழுதும் பாடமுறையே இங்கு கையாளப்பட்டது. இங்கிருந்து வெளியேறும் பட்டதாரிகள் அரைகுறை ஆங்கில அறிவு, மேற்கத்திய மோகம் ஆகிய இரண்டையும் மட்டுமே சம்பாதித்துக்கொண்டனர். 19ம் நூற்றாண்டு முழுக்க பெண்களுக்குக் கல்வி சென்று சேரவில்லை. ஆரம்பக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. கல்வியைக் கொண்டு மூட பழக்கவழக்கங்களை அகற்றியிருக்கமுடியும். மத ஆதிக்கத்தை மட்டுப்படுத்தியிருக்கமுடியும். பெண்களின் நிலையை உயர்த்தியிருக்கமுடியும். ஆனால் கல்வியை அப்படியொரு உபகரணமாகப் பயன்படுத்தும் நோக்கம் மெக்காலேவுக்கும் இல்லை, பிரிட்டனுக்கும் இல்லை. அவர்கள் எதிர்பார்த்தபடி படித்த, சிறிய இடைநிலை வர்க்கத்தை மட்டும் இந்தக் கல்விமுறை உருவாக்கியது.

காந்தி 1921ம் ஆண்டு கீழ்வருமாறு எழுதினார்.

‘தற்போது ஆங்கிலம் கற்பிக்கப்படும் வழிமுறை, இந்திய மாணவர்களின்மீது அதிகச் சுமையை ஏற்றி, ஆங்கிலம் பயின்ற இந்தியர்களை வலிமையற்றவர்களாக மாற்றிவிட்டது என்பது என் முடிவான கருத்து. அது நம்மைப் போலிகளாக ஆக்கிவிட்டது. பிராந்திய மொழிகள் ஆங்கிலத்தால் ஒதுக்கப்பட்டது ஆங்கிலேயர்களின் தொடர்பினால் நடந்த மிகவும் வருந்தத்தக்க விஷயம். ஆங்கிலத்திலேயே சிந்திக்கவும் எண்ணங்களை ஆங்கிலத்துக்கு மாற்றிக்கொள்ளவும் வேண்டிய நெருக்கடி இருந்திருக்காவிட்டால், ராம் மோகன் ராய் இன்னும் பெரிய சீர்திருத்தவாதியாகவும், லோகமான்ய திலகர் மேலும் பெரிய அறிவாளியாகவும் இருந்திருப்பார்கள்.

அவர்கள் ஆங்கில இலக்கியம் என்னும் புதையலில் இருந்து நல்ல அறிவை அடைந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவை அவர்களுடைய தாய்மொழியிலேயே கிடைத்திருக்கவேண்டும். மொழிபெயர்ப்பாளர்கள் எனும் இனத்தை உருவாக்குவதால் என்றுமே எந்த ஒரு நாடும் தேசமாகிவிடாது. பைபிளின் அதிகாரபூர்வமான பிரதி கிடைத்திராவிட்டால், ஆங்கிலம் (ஆங்கிலேயர்கள்) என்ன ஆகியிருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். சைதன்யர், கபீர், நானக், குரு கோவிந்த் சிங், சிவாஜி மற்றும் பிரதாப் ஆகியோர் ராம் மோகன் ராய், திலகர் இவர்களைவிடச் சிறந்தவர்கள் என்று நம்புகிறேன். ஆங்கில மொழி அறிவு இன்றி ராஜாவும் லோகமான்யரும் இந்தவிதமாகச் சிந்திருக்கமுடியாது என்பதை நம்ப மறுக்கிறேன்.

சுதந்தர உணர்ச்சியை மக்களிடம் விதைப்பதற்கும் சரியான எண்ணங்களை உருவாக்கி வளர்ப்பதற்கும் ஆங்கில அறிவு மிகவும் அவசியம் என்பதுதான் இந்தியாவிலுள்ள அனைத்து மூட நம்பிக்கைகளிலும் மிகவும் பெரியது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக, ஒரே மாதிரியான கல்வித் திட்டம்தான் இருந்தது என்பதையும், ஒரே மொழியில்தான் அவை நம்மீது திணிக்கப்பட்டன என்பதையும் நாம் நினைவுகூர வேண்டும். அதனால் இப்போதுள்ள பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இந்தக் கல்வி இல்லாவிட்டால் என்ன ஆகியிருப்போம் என்று தெரிந்துகொள்ள நம்மிடையே எந்தத் தகவல்களும் இல்லை. ஒன்று மட்டும் தெரியும். இந்தியா 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இன்று ஏழ்மையாக இருக்கிறது. கல்விமுறைதான் இதில் மிகவும் பழுதடைந்த பகுதி. சுதேசக் கல்விமுறை பயனில்லாதது மட்டுமல்ல மிகவும் மோசமானது என்று ஆங்கிலேய ஆட்சியாளர்கள உண்மையாகவே நம்பினர். அவர்கள் முன்வைத்த கல்விமுறை தவறிலேயே பிறந்தது. இந்தியர்களின் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றைக் கூனிக் குறுகச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் அது உருவாக்கப்பட்டது.’

நேருவும் இதையேதான் வலியுறுத்தினார் என்று சுட்டிக்காட்டுகிறார் பவன் கே வர்மா. ஆங்கிலம் கற்ற இந்திர்கள் தனியொரு உலகில் பிற இந்தியர்களிடம் இருந்து விலகி வாழ்ந்துகொண்டிருப்பதைக் கண்டு அவர் வருந்தினார். ‘இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆங்கிலம் வரும் என்று சிலர் கற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள். சொற்பமான மேல் தட்டு அறிவுஜீவிகளுக்கு மட்டுமே பயன்தரக்கூடிய ஒன்றாக அது இருக்கும் என்றே எனக்குப் படுகிறது. பெரும்பாலானோருக்கான கல்வி, கலாசாரத்தைப் பற்றி பிரச்னைகளுக்கும் இதற்கும் சம்பந்தமேயில்லை. தொழில்நுட்பம், விஞ்ஞானம், வியாபாரம் முதலியவற்றில் அதுவும் உலகளவில், அதிகமாக உபயோகப்படும் மொழியாக ஆங்கிலம் ஆகப்போகிறது என்பது உண்மைதான். ஆனால் உலகைப் பற்றிய சமநோக்கோடு கூடிய சித்திரம் கிடைக்கவேண்டுமென்றால், நாம் ஆங்கிலம் என்னும் மூக்குக் கண்ணாடியின்மூலம் மட்டுமே பார்ப்பதைத் தவிர்க்கவேண்டும்.’

1947 வாக்கில் 88 சதவிகித இந்தியர்கள் கல்வியறிவு அற்றவர்களாக இருந்தனர் என்பதைச் சுட்டிக்காட்டி பிரிட்டனின் நோக்கங்களை வெளிப்படுத்துகிறார் மாடிசன். பிரிட்டிஷ்  அதிகாரிகள் தங்களை ஆளும் வர்க்கமாகவும் ஆளும் சாதியினராகவும் வலுப்படுத்திக்கொண்டனர். இந்திய உயர் சாதியினரைப் போலவே இவர்கள் தாழ்ந்த சாதியினருடன் நெருங்கி பழகாமலும் அவர்களுடன் திருமண உறவு வைத்துக்கொள்ளாமலும் தனித்து நின்றனர். அவர்களுடைய குழந்தைகள் பூர்விக இந்தியக் குழந்தைகளுடன் ஒன்று கலக்கவில்லை. (ஆனால் முகலாயர்கள் இப்படி விலகி நிற்காமல் இந்தியாவுடன் ஒன்று கலந்தனர் என்பதை இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம்). மொத்தத்தில், பிரிட்டனின் ஆட்சி மேல்மட்ட அளவில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தன என்றபோதும் பெருமளவிலான மக்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க நல்ல முன்னேற்றங்கள் எதையும் ஏற்படுத்தவில்லை என்கிறார் ஆங்கஸ் மாடிசன்.

மேற்கொண்டு வாசிக்க :

  1. The history of India is a history of colonialism, Charles Allen, The Telegraph
  2. Class Structure and Economic Growth, Angus Madisson
  3. Becoming Indian, Pavan K Varma, Penugin/Viking
  4. இந்தியன் ஆவது எப்படி? பவன் கே. வர்மா, கிழக்கு பதிப்பகம்

காலனியம் : ஆதரவும் எதிர்ப்பும்

அத்தியாயம் 4

empire_main
பிரிட்டிஷ் முடியாட்சியை நீண்டகாலம் தலைமை தாங்கி நடத்திய விக்டோரியா மகாராணி தனது அறுபதாவது ஆண்டுவிழாவை ஜூன் 1897ம் ஆண்டு விமரிசையாகக் கொண்டாடினார். உலகின் வண்ணமயமான, வளமான சாம்ராஜ்ஜியமாக பிரிட்டன் அப்போது செழிப்புடன் இருந்தது. 1860 வாக்கில் பிரிட்டனின் நிலப்பரப்பு 9.5 மில்லியன் சதுர மைல். 1909 வாக்கில் இந்த எண்ணிக்கை 12.7 மில்லியன். உலகின் நிலப்பரப்பில் இது 25 சதவிகிதம். ஒப்பீட்டளவில் பிரெஞ்சு சாம்ராஜ்ஜியத்தைக் காட்டிலும் இது மூன்று மடங்கு அதிகம். ஜெர்மானிய சாம்ராஜ்ஜியத்தைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகம். பிரிட்டனின் ஆளுகையின்கீழ் 444 மில்லியன் மக்கள் ஆப்பிரிக்கா, தூரக் கிழக்கு, மலேயா, நியூ கினியா, பசிபிக் தீவுகள் என்று தொடங்கி உலகம் முழுவதும் வாழ்ந்து வந்தனர். ஒரு கண்டம், நூறு தீபகற்பங்கள், இரண்டாயிரம் நதிகள், ஆயிரக்கணக்கான ஏரிகள், பத்தாயிரம் தீவுகள் ஆகியவை பிரிட்டனுக்குச் சொந்தமாக இருந்தன. விக்டோரியா மகாராணி நிச்சயம் மன நிறைவுடன் தனது வைர விழாவைக் கொண்டாடியிருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த மனநிறைவு வேறு பலரிடமும் இருந்தது. உலகம் இதுவரை கண்ட நன்மைகளில் சிறந்தது பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் என்றார் லார்ட் கர்ஸன். மனித வரலாற்றிலேயே மிகப் பரவலான ஒழுங்கமைக்கப்பட்ட சுதந்தரம் என்றால் அது பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம்தான் என்று பெருமிதத்துடன் அறிவித்தார் ஜெனரல் ஸ்மட்ஸ். புகழ்பெற்ற ஸ்காட்டிஷ் வரலாற்றாசிரியரான நீல் ஃபெர்குசன் இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் தன் பாணியில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை இன்றளவும் உயர்த்திப் பிடித்துக்கொண்டுதான் இருக்கிறார். பிரிட்டிஷ் காலனியாதிக்கம் மனிதாபிமான முகம் கொண்டது என்று கர்ஸன், ஸ்மட்ஸ் ஆகியோரைப் போல் நீல் ஃபெர்குசன் நிறுவ முயற்சி செய்யவில்லை என்றபோதும் பிரிட்டனின் பங்களிப்பு அதன் அனைத்துக் குறைபாடுகளையும் கடந்து பிரகாசித்துக்கொண்டிருக்கிறது என்கிறார் அவர்.

18ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் அடிமைகளைப் பயன்படுத்தி செல்வம் குவித்தது உண்மை. அதைப் பெருமிதமாக அந்நாடு கருதியதும் உண்மை. ஆனால் எந்த அளவுக்குத் தீவிரமாக அடிமைகளைக் குவித்துக்கொண்டதோ அதே தீவிரத்துடன் அடிமை ஒழிப்பிலும் ஈடுபட்டது என்கிறார் ஃபெர்குசன். கடுமையாக இனப் பாகுபாட்டைக் கடைபிடித்த அதே பிரிட்டன் இன்று மாறிவிட்டது. 1857ம் ஆண்டு இந்தியா பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகத் திரண்டு எழுந்தது. ஜமைக்காவில் 1831 மற்றும 1865ம் ஆண்டுகளிலும், தென் ஆப்பிரிக்காவில் 1899ம் ஆண்டும் இதே போன்ற எதிர்ப்புகள் கிளம்பின. அப்போதெல்லம் பிரிட்டன் மிகக் கடுமையாக எதிர்வினையாற்றி கலகக்காரர்களை ஒடுக்கியது. அயர்லாந்தில் 1840களிலும் இந்தியாவில் 1870களிலும் பஞ்சம் பரவியபோது பிரிட்டன் அவ்வளவாக அசைந்துகொடுக்கவில்லை. பல சமயங்களில் பஞ்சத்துக்கு அதுவே காரணமாகவும் இருந்திருக்கிறது. இவையனைத்தையும்மீறி வரலாற்றில் பிரிட்டன் வகித்த முக்கியப் பாத்திரத்தை நாம் மறந்துவிடக்கூடாது என்கிறார் ஃபெர்குசன்.

Nial Ferguson

Niall Ferguson

19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் பண்டங்கள், மூலதனம், உழைப்பு ஆகியவற்றின் சுதந்தரமான நடமாட்டத்தை பிரிட்டன் அளவுக்கு வேறு எந்த நாடும் உயர்த்திப் பிடித்ததில்லை என்கிறார் இவர். மேற்கத்திய சட்டம், ஒழுங்கு, ஆட்சிமுறை ஆகியவற்றை உலகம் முழுவதும் கொண்டுசென்ற பெருமை பிரிட்டனையே சேரும். சிற்சில விதிவிலக்குகள் போக, பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் ஊழல் இருந்ததில்லை. இத்தனைப் பெருமைகளையும் சிறப்புகளையும் பெற்றிருந்தும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் சரிந்தது ஏன்? பலரும் நினைப்பதுபோல் டப்ளின் தொடங்கி டில்லி வரை பரவிய தேசியவாதப் போராட்ட அலை அல்ல நிஜக் காரணம். பிரிட்டனுடன் போட்டிப் போட்ட பிற சாம்ராஜ்ஜியங்களே அதன் வீழ்ச்சிக்குக் காரணம் என்கிறார் ஃபெர்குசன்.

காங்கோவில் பெல்ஜியம் இழைத்த கொடுமைகள் அதீதமானவை. ரப்பர் தோட்டங்களும் ரயில்வே பாதைகளும் காங்கோவில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் பலன்கள் அனைத்தும் பெல்ஜியம் அரசர் இரண்டாம் லியோபோல்ட் வசமே சென்று சேர்ந்தது. இவர் ஆட்சியில் ஏற்பட்ட படுகொலை, பஞ்சம், நோய் ஆகியவற்றின் காரணமாக பத்து லட்சம் காங்கோ மக்கள் உயிரிழந்தனர். மொத்த மக்கள் தொகையில் இது சரி பாதி. இதே காங்கோவை ஆண்ட பிரெஞ்சும் இத்தகைய ஆட்சியையே நடத்தினர். அல்ஜீரியா, வியட்நாம் ஆகிய நாடுகளிலும் பிரான்ஸின் காலனியாதிக்கம் அளவற்ற உயிரழப்புகளையே ஏற்படுத்தியது. இப்படி பெல்ஜியம், பிரான்ஸ், ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி என்று பிற நாடுகள் உலகைப் புரட்டிப்போட்டுக்கொண்டிருந்த சூழலில் பிரிட்டன் இந்தப் போட்டியைச் சமாளிக்க அவர்களுடன் மோத வேண்டியிருந்தது. இந்த மோதல் பிரிட்டனின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்தது. எனவே பிரிட்டன் வேறு வழியின்றி தனது காலனியக் கொள்கையைக் கைவிட்டது.

இந்த வாதத்தின்மூலம் நீல் ஃபெர்குசன் இரண்டு அம்சங்களைக் குறிப்பிடுகிறார். ஒன்று, ஒப்பீட்டளவில் பிற காலனியாதிக்கச் சக்திகளைவிட பிரிட்டன் அதன் காலனிகளிடம் நியாயமாகவே நடந்துகொண்டது. காலனிகளின் நலனுக்காக, அவர்களை உய்விப்பதற்காகத்தான் காலனியாதிக்கம் தோன்றியது என்று சொல்லமுடியாவிட்டாலும் இறுதியில் பிரிட்டன் தீமைகளைக் காட்டிலும் நன்மைகளையே அதிகம் வழங்கியது. ஒருவேளை பிரிட்டனின் காலனியாக இல்லாமல் போயிருந்தால் நாடாளுமன்ற ஜனநாயகம், தனிமனித சுதந்தரம், ஆங்கில மொழி போன்ற உயர்வான பங்களிப்புகள் இந்தியாவுக்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்கிறார் ஃபெர்குசன். இரண்டாவது, பிரிட்டன் தன் காலனியக் கொள்கைகளைக் கைவிட்டது பெரும் உலக நன்மைக்காக. இது ஒரு தியாகம். இந்தத் தியாகத்தின் பலனாக அதன் பிற தீமைகள் அனைத்தும் உதிர்ந்து சிதறிவிட்டன.  அதாவது, அச்சு நாடுகளின்  அணியில் இருந்த ஜெர்மனி மற்றும் இத்தாலி பெரும் ஆதிக்கச் சக்திகளாக நீடித்திருந்தால் உலகம் வேறு பாதையில் சென்றிருக்கும். அதனைத் தடுக்கவேண்டுமானால் அவர்களுடைய காலனிகள் உதிர்ந்து அவர்களுடைய பலம் குறைந்தாகவேண்டும். அதற்கு முன்நிபந்தனையாக பிரிட்டன் முதலில் தன் காலனிகளை உதறித் தள்ளியது.

ஃபெர்குசனின் வாதத்தை பங்கஜ் மிஷ்ரா திட்டவட்டமாக மறுக்கிறார்.  ஐரோப்பாவை, மேலை நாட்டு மதிப்பீடுகளை, வெள்ளை நிறவெறியை உயர்த்திப் பிடிக்கும் போக்கு வரலாற்றில் நீண்டகாலமாகவே நிலவிவருகிறது என்கிறார் மிஷ்ரா. வெள்ளை நிறத்தவரே உலகை ஆளும் திறமை வாய்ந்தவர்கள் என்பதை அவர்கள் தொடர்ச்சியாகச் சொல்லிவருகின்றனர். 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெள்ளை நிறவெறியுடன் கூக் க்ளக்ஸ் கிளான் குழுவினர் கறுப்பின மக்களை எரித்துக்கொன்றனர். வெள்ளையினம் அழிந்துவிடப்போகிறதே என்று அஞ்சினார் தியோடர் ரூஸ்வெல்ட். இஸ்லாமியர்கள் உலகின்  விரோதிகள் என்று பலர் வெளிப்படையாகவே எழுதினர். நாஜிகளின் இனவெறுப்பு சித்தாந்தத்துக்கு மேற்குலகில் பல ஆதரவுக் குரல்கள் எழுந்தன. பலமானதே உலகை ஆள்வதற்கு வல்லது என்னும் கருத்து வலுவாக ஆதிக்கம் செலுத்தியது. நீல் ஃபெர்குசன் அத்தகையோரில் ஒருவர் என்கிறார் பங்கஜ் மிஷ்ரா. பிரிட்டனின் காலனியாதிக்கத்தை மட்டுமல்ல அமெரிக்காவின் ராணுவ ஆதிக்கத்தையும்கூட ஃபெர்குசன் நியாப்படுத்தவே செய்கிறார் என்பதையும் மிஷ்ரா எடுத்துக் காட்டுகிறார்.

நாகரிகமற்றோரை முன்னேற்றுவதைக் கடமையாக வரித்துக்கொண்ட வெள்ளைக்காரர்களின் சுமையைக் கண்டு பரிதாபப்படும் ஃபெர்குசனின் அணுகுமுறை வலதுசாரிகளின் எழுச்சியால் முக்கியத்துவம் பெற்றுள்ளதையும் பிரிட்டனைவிட அமெரிக்காவில் இத்தகைய குரல்களுக்கு ஆதரவும் மரியாதையும் பெருகியிருப்பதையும் பங்கஜ் மிஷ்ரா சுட்டிக்காட்டுகிறார். நீல் ஃபெர்குசனின் சிவிலைசேஷன் : தி வெஸ்ட் அண்ட் தி ரெஸ்ட் என்னும் புத்தகத்தின் தலைப்பே அவருடைய போக்கை உணர்த்திவிடுகிறது. அனைத்து பலங்களையும் கொண்ட, அற்புதங்கள் நிறைந்த, மனித குலத்துக்கு மகிழ்ச்சியை அள்ளித் தரும் ‘தி வெஸ்ட்’ ஒரு பக்கம். இவையனைத்துக்கும் எதிராக உள்ள ‘தி ரெஸ்ட்’ இன்னொரு பக்கம். இப்படித்தான் உலகை ஃபெர்குசன் பிரிக்கிறார். அவரைப் பொருத்தவரை நாகரிகம் என்பது என்ன? மனித வாழ்வில் தொடர்ச்சியாக முன்னேற்றங்களைக் கொண்டுவரும் திறன். கடந்த ஐந்நூறு ஆண்டுகளை எடுத்துவைத்துப் பார்க்கும்போது உலகின் பிற நாடுகளைவிட அதிக அளவிலான முன்னேற்றங்களை மனித வாழ்வில் ஏற்படுத்தியது மேலை நாடுகள்தாம். மேற்கத்திய நாகரிகம் 1500ம் ஆண்டு தொடங்கி ஆறு முக்கிய அம்சங்களில் பிற நாடுகளில் இருந்து வேறுபடுகிறது என்கிறார் ஃபெர்குசன். சொத்துரிமை, போட்டி மனோபாவம், அறிவியல், மருத்துவம், நுகர்வோர் சமூகம், பணி சார்ந்த விழுமியங்கள் ஆகியவையே நாகரிகத்தை இயக்கும் ஆறு ‘கில்லர் ஆப்ஸ்’ ஆகும். இவற்றைக் கொண்டே மேற்கு பிறவற்றைவிட முன்னேறியது; பிறவற்றை ஆளவும் செய்தது.

வலிமையானது பலவீனமானதை ஆள்வது இயற்கையானது, இயல்பானது என்று நிறுவ முயலும் ஃபெர்குசனை ஏற்க மறுக்கிறார் பங்கஜ் மிஷ்ரா. முதலாளித்துவ நவீனத்துவத்தை வந்தடைந்து அதன்மூலம் உலகமயமாக்கலை மேற்கு தோற்றுவித்தது ஏன் என்று கேள்வி எழுப்புகிறார் ஃபெர்குசன். மேற்கு உண்மையில் பிற நாடுகளைவிடச் சிறந்துள்ளதா என்று அவர் பார்க்க விரும்வில்லை. அது ஏன் சிறந்த விளங்குகிறது என்று மட்டுமே கேட்கிறார். அதாவது, மேற்கு உயர்ந்தது, மற்றவை தாழ்ந்தது என்னும் முன்முடிவுடன் தன் ஆய்வை அவர் தொடங்குகிறார். இது தவறான அணுகுமுறை என்கிறார் பங்கஜ் மிஷ்ரா. வரலாறு இவ்வளவு தட்டையானதோ எளிமையானதோ அல்ல. ஃபெர்குசனின் வாதத்தை மறுக்க சி.ஏ. பெய்லியின் வாதம் ஒன்றை மிஷ்ரா எடுத்துக் காட்டுகிறார். பெய்லியின் பார்வையில், நவீன ஐரோப்பா மற்றும் நவீன அமெரிக்காவின் உருவாக்கத்தில் ஆசியாவின் பங்களிப்பு அழுத்தமாகவே உள்ளது. ஹாம்பர்க், நியூ யார்க் பூர்ஷ்வா முதலாளிகளைப் போலவே சீன முதலாளிகளும் தென் கிழக்கு ஆசிய வர்த்தகத்துக்கும் பண்ட பரிமாற்றங்களுக்கும் பங்காற்றியுள்ளனர். வர்த்தகம் மட்டுமல்ல கலை, அறிவியல், கலாசாரம் என்று பல துறைகளில் ஆசியாவின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடும் வழக்கம் மேற்கத்திய ஆதரவாளர்கள் மத்தியில் நிலவிவருகிறது. காலனியாதிக்கம் சரியானதுதான் என்று வாதிடுபவர்களில் பலர் இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள்தாம்.

ஃபெர்குசனின் மதிப்பீட்டின்படி பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் என்பது உலகம் பின்பற்றப்படவேண்டிய ஒரு மாடல். தற்போதுள்ள நிலையில் பிரிட்டனின் இடத்தைப் பிடிப்பதற்கான தகுதி கொண்ட ஒரு நாடு அமெரிக்கா. அமெரிக்கா பிரிட்டன் வழியில் நடக்கவேண்டும் என்பது அவர் விருப்பம். ‘செயல்திறன் மிக்க ஒரு லிபரல் சாம்ராஜ்ஜியம் உலகுக்கு இன்றும் தேவைப்படுகிறது என்று நான் நம்புகிறேன்.  அந்தப் பாத்திரத்தை வகிக்க அமெரிக்கா பொருத்தமான நாடு. அதன் பாதுகாப்புத் தேவைகளுக்காக மட்டுமல்ல, மனிதாபிமான நோக்கத்தின்  அடிப்படையிலும் அமெரிக்கா இந்தப் பதவிக்குப் பொருத்தமானதுதான். அதற்கான தனித்துவம் மிக்க தகுதிகளை அமெரிக்கா கொண்டிருக்கிறது.’

அதே சமயம் அமெரிக்காவிடம் சில குறைபாடுகளும் உள்ளன என்கிறார் ஃபெர்குசன். அதன் அரசியல் கலாசாரம், பொருளாதார அமைப்பு, சமூகத் தோற்றம் ஆகியவற்றில் சில மாற்றங்களை அமெரிக்கா செய்யவேண்டியிருக்கும் என்கிறார் அவர். பிரிட்டனின் பாதையில் சென்று அதே சமயம் பிரிட்டனின் சில தவறுகளைச் செய்யாமல் இருந்தால் அமெரிக்கா ஓர் வலுவான சாம்ராஜ்ஜியமாக உருமாறும், உலகையும் உருமாற்றும் என்பதே ஃபெர்குசனின் நம்பிக்கை. அமெரிக்காவுக்கு அடுத்த சக்தி அவரைப் பொருத்தவரை சீனா. இந்த இரண்டும் ஒன்றுசேரவேண்டும் என்னும் தன் கனவையும் ஃபெர்குசன் இன்னோரிடத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவும் சீனாவும் கைகுலுக்கிக்கொண்டால் ஒன்றின் குறையை இன்னொன்று நிறைவுசெய்யும் வகையில் அந்தக் கூட்டணி அமையும் என்று அவர் கருதுகிறார்.

உலகின் முன்னேற்றத்துக்கு ஒரு வலிமையான தலைமை தேவையா? பின்தங்கிய நாடுகளை இத்தகைய வலிமையானதொரு தலைமை தத்து எடுத்துக்கொள்வது அவசியமா? தொடக்கத்தில் கார்ல் மார்க்ஸ் இத்தகைய நம்பிக்கையே கொண்டிருந்தார். 1853ம் ஆண்டு நியூ யார்க் டெய்லி ட்ரிப்யூனில் எழுதும்போது  பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் அடிப்படைப் புரட்சியை ஏற்படுத்துகிறது என்றும் ஆசியாவின் சமூக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவருகிறது என்றும்தான் குறிப்பிட்டார். இந்த நடைமுறை வலி மிகுந்தது என்றபோதும் பல ஆண்டுகளாக குவிந்துகிடக்கும் பிசகுகள் அகல இந்த ஆட்சிமுறை உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை என்பதை அவர் வெகு விரைவில் கண்டுகொண்டார். தன் கருத்தை உடனடியாகத் திருத்திக்கொள்ள அவர்  தயங்கவில்லை.

0

மேற்கொண்டு வாசிக்க :

  1. Why we ruled the world, Niall Ferguson, niallferguson.com
  2. The Global Empire of Niall Ferguson, Janet Tassel, Harvard Magazine
  3. Watch This Man, Pankaj Mishra, London Review of Books
  4. Civilization : The West and the Rest, Niall Ferguson
  5. Empire: How Britain Made the Modern World, Niall Ferguson

காலனியத்தை நியாயப்படுத்தமுடியுமா?

அத்தியாயம் 3

Bild 6
இங்கிலாந்து  ஆட்சி இந்தியாவுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது என்னும் வாதத்தை மறுக்க பிபன் சந்திரா இங்கிலாந்தின் வரவுக்கு முந்தைய இந்தியாவை ஆராய்ந்து சில நிரூபணங்களை அளிக்கிறார். பிரிட்டனின் வரவுக்கு முந்தைய பதினெட்டாம் நூற்றாண்டு இந்தியா வளர்ச்சி அடையாமல் இருந்தது என்பது உண்மை. ஆனால் நிச்சயம் அது வளர்ச்சி குன்றிய நிலையில் இல்லை. உலக அளவில் வேறு பல நாடுகளைவிட இந்தியா குறைவாக வளர்ந்திருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் மற்ற நாடுகளைவிட இந்தியாஅதிக அளவில் வளர்ச்சியடைந்திருந்தது. ‘உலக வளர்ச்சியின் பெரும்பகுதி 18ம் நூற்றாண்டுக்குப் பின்னரே, குறிப்பாக 1850க்குப் பிறகே நிகழ்ந்தது. உண்மையில் முகலாய இந்தியாவுக்கும் தொழில்மயமத்துக்கு முந்தைய ஐரோப்பாவுக்கும், ஜப்பானுக்கும் இடையில் அதிக இடைவெளி இருக்கவில்லை. காலனிய ஆட்சியில்தான் அதன் விளைவாக இந்தியா சமகாலச் சூழலில் வளர்ச்சி குன்றியதாக ஆனது.’

காலனியம் ஏற்பட்ட பிறகே இந்தியாவின் வளர்ச்சி குன்றத் தொடங்கியது என்கிறார் பிபன் சந்திரா. ‘1750ம் ஆண்டிலிருந்து நீடித்த இந்தியாவின் காலனியத்தின் நீண்ட வரலாற்றின் அடிப்படையான அம்சம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட சமூக உபரியை பிரிட்டிஷார் தன் வசப்படுத்திக்கொண்டதாகும். உபரியை எடுத்துச்செல்லும் வடிவங்கள் காலனியத்தின் வெவ்வேறு கட்டங்களில் மாற்றத்துக்கு உள்ளாகிக்கொண்டே இருந்தன. அவை : நேரடியாக எடுத்துக்கொள்வது, தங்களது ஆட்களை அதற்காக வேலைக்கு அமர்த்துவது, சமமற்ற பரிவர்த்தனை (அதிக மதிப்புள்ள பொருள்களைக் குறைந்த விலை கொடுத்து எடுத்துக்கொள்வது), தொழில் முதலாளித்துவத்தின் லாபம், பொதுக் கடன்கள் மீதான வட்டி போன்ற வடிவங்கள். ஆனால் உபரியை எடுத்துக்கொள்வது நிலையானதாகவும், அடிப்படையாகவும் இருந்தது. ஆனாலும் பல மாற்றங்கள் இருந்தன. அவற்றில் சில ஆக்கப்பூர்வமானவையாகவும் இருந்தன. எடுத்துக்காட்டாக ரயில் பாதைகள். ஆனால் இந்த மாற்றங்கள் காலனியக் கட்டமைப்பின் பகுதிகளாகவே வந்தன. ஆதலால் வளர்ச்சியைக் குன்றச் செய்யும் போக்கின் ஒரு பகுதியாகவே வந்தன.’

1757 தொடங்கி 1947 வரை இங்கிலாந்து இந்தியாவில் இருந்து திரட்டிய செல்வத்தின் மதிப்பு (உபரி மதிப்பு) எவ்வளவு இருக்கும்? அதை அளவிடுவது சாத்தியமா? சில வரலாற்றாசிரியர்களும் பொருளாதார நிபுணர்களும் இத்தகைய ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் வந்தடையும் மதிப்பீட்டில் வேறுபாடுகள் உள்ளன. இந்தியாவின் நிகர வருவாயில் ஏறக்குறைய ஒரு பாதி என்கிறார் ஆர்.சி. தத். இந்தியாவின் மொத்த தேசிய வருமானத்தில் 6 சதவிகிதம் என்கிறார் ஜி.வி. ஜோஷி. இதையெல்லாம்விட மிதமாகவும்  அதிகமாகவும் மதிப்பிடுபவர்களும் உள்ளனர். இர்ஃபான் ஹபீப் அளிக்கும் தகவல்களின்படி 1783 தொடகி 1792 வரை தேசிய வருமானத்தில் 9 சதவிகிதத்தை இங்கிலாந்து இந்தியாவிடம் இருந்து திரட்டிக்கொண்டது. 1834 முதல் 1857 வரை ஆண்டுக்குச் சராசரியாக 6.3 மில்லியன் பவுண்ட் உபரி இந்தியாவில் இருந்து வெளியேறியது என்கிறார் ராமச்சந்திர முகர்ஜி.

பிபன் சந்திரா எழுதுகிறார். ‘காலனிய அரசால் இந்தியாவின் சமூக உபரியில் ஒரு மிகப் பெரும் பகுதி எடுத்துச் செல்லப்பட்டது. அதன் பெரும் பகுதி ராணுவ மற்றும் சிவில் நிர்வாகத்துக்கே செலவிட்டது. விவசாய மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு அல்லது சமூக அடிப்படைக் கட்டமைப்புக்கு அல்லது கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் அளிப்பது போன்ற தேச நிர்மாணச் செலவுக்கு மிகச் சொற்பமே செலவிடப்பட்டது. உண்மையில் காலனிய நிதி நிர்வாக முறைக்கும் இந்தியப் பொருளாதாரத்தின் தேவைகளுக்கும் சம்பந்தமே இருக்கவில்லை. இது காலனியக் கொள்கையின் பாதகமான அம்சமாகும். அதுபோல் இந்தியாவின் வளர்ச்சி குன்றியமைக்கான காரணமும் ஆகும்.’

அதிக வருமானம் நிலத்தில் இருந்தே அதாவது நில வரி மற்றும் நில வருவாய்மூலம் காலனிய அரசுக்குக் கிடைத்திருக்கிறது. 19ம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஆக்ராவில் நில வரி 70 சதவிகிதம் உயர்த்தப்பட்டதைச் சுட்டிக்காட்டுகிறார் இர்ஃபான் ஹபீப். இடத்துக்கு ஏற்ப நில வரி மாறுபட்டது. விவசாயிகளுக்கு இது குறையாத சுமையாக என்றென்றும் அழுத்திக்கொண்டிருந்தது. வரிச் சுமையைத் தாங்கிக்கொள்ளமுடியாதபோது உற்பத்தி பாதித்தது. மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப உற்பத்தி பெருகாததால் தட்டுப்பாடு ஏற்பட்டது. நிலைமை இப்படியே தொடர்ந்தால் விவசாயிகள் கோபம் கொண்டு போராடத் தொடங்கிவிடுவார்கள் என்று அஞ்சிய அரசு 20ம் நூற்றாண்டு தொடக்கத்தில் தன் கொள்கையை மாற்றிக்கொண்டு நில வரியை உயர்த்துவதில்லை என்று முடிவெடுத்தது. பின்னர் இரண்டாம் உலகப் போர் மூண்டபோது பண வீக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நில வரி மேலும் கணிசமாகக் குறைக்கப்பட்டது.

அதே சமயம் வருவாய்கும் தடை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகப் பிற வரிகள் விதிக்கப்பட்டன. உதாரணத்துக்கு, உப்பு வரி. ஆனால் இந்தச் சுமை ஏதுமற்ற ஏழைகளையே மேலும் ஒடுக்குவதாக இருந்தது. செல்வந்தர்களுக்கு நில வரி தவிர வேறு எதுவும் விதிக்கமுடியவில்லை. அந்த வரியையும் செல்வந்தர்கள் குத்தகை விவசாயிகள்மீதே சுமத்தியதால் நலிந்தவர்கள்மீதே சுமை அதிகம் விழும் நிலை நிலவியது.

british-loot-great-game-indiaஉற்பத்தியைப் பெருக்காத இந்த வருவாய் இரண்டு துறைகளில் செலவிடப்பட்டது. ராணுவச் செலவு மற்றும் நிர்வாகச் செலவு. 1890க்குப் பிறகு ராணுவச் செலவு மத்திய பட்ஜெட்டில் கிட்டத்தட்ட ஐம்பது சதவிகிதத்தை உறிஞ்சிக்கொண்டதை பிபன் சந்திரா சுட்டிக்காட்டுகிறார். காலனிய அரசின் கொள்கைகள் வளர்ச்சிப் போக்குக்கு எதிராக அமைந்திருந்தன. ‘பிரிட்டிஷ் ஆட்சியின் முடிவு வரை, காலனிய அரசின் பொருளாதாரக் கண்ணோட்டம் கச்சாப் பொருள்களையும் உணவுப் பொருள்களையும் பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியாவின் ஆற்றலையும், பிரிட்டன் உற்பத்திப் பொருள்களை வாங்கும் ஆற்றலையும் அதிகரிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது’. கைவினைத் தொழில்களின் அழிவைத் தடுக்க காலனி அரசு மறுத்தது. புதிய தொழில்களை ஊக்குவிக்க மறுத்தது. ‘இந்தியாவின்மீது காலனிய அரசு சுதந்தரத வர்த்தகத்தைத் திணித்தது. பிரிட்டன், மேற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் அளித்தது போல் அப்போதுதான் தொடங்கப்பட்டிருந்த இந்தியாவின் தொழிற்சாலைகளுக்கு எந்த வரிப் பாதுகாப்பும் அளிக்கத் தவறியது. இதன் விளைவாக பிரிட்டன் அல்லது வேறு எந்த நாட்டின் துறைமுகங்களைவிடவும் இந்தியத் துறைமுகங்கள் போக்குவரத்துத் தடைகள் எதுவும் அற்றவையாக இருந்தன.’

விவசாயம் தேக்கமடைந்தது. அதே சமயம் பணக்கார விவசாயிகள் தோன்றினர். இவர்கள் நிலங்களை வாங்கிக்குவித்து நிலப்பிரபுக்களாகவும் கந்து வட்டிக்காரர்களாகவும் மாறினர். இப்படி ஒரு சிறு கும்பலை வளர்த்துவிட்டதைத் தவிர முதலாளித்துவம் விவசாயத்தைப் பெரிய அளவில் ஊக்குவிக்கவில்லை. தொழில்நுட்ப அடித்தளத்திலும் எந்தவகை மாற்றத்தையும் நிகழ்த்தவில்லை. 1946ம் ஆண்டு ஒன்பது விவசாயக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. நிலத்தைச் சமன்படுத்துதல், வெள்ளக் கட்டுப்பாடு, கழிவு நீர் வெளியேற்றம், மண்ணை வளப்படுத்துவது ஆகியவற்றில் எந்த முதலீடும் செய்யப்படவில்லை. ஒரே விதிவிலக்கு நீர்ப்பாசனைத்துறை.  ‘ரயில் பாதை அமைக்கப்பட்டது. ஆனால் கூடவே தொழில்புரட்சி நடக்காததால் அது வர்த்தகப் புரட்சியை மட்டுமே ஏற்படுத்தியது. இது இந்தியப் பொருளாதாரத்தை மேலும் காலனிமயமாக்கியது.’

இருந்தும் இந்தியாவில் அதி விரைவான பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது என்றே பிரிட்டன் தொடர்ந்து சொல்லிவந்தது. இதனை இந்தியர்களில் சிலருமேகூட நம்பினர். அந்நிய நாடு என்றபோதும் பலம் வாய்ந்த ஓர் அரசால் ஆளப்படுவது இந்தியாவையும் நாளடைவில் ஒரு பலமான நாடாக மாற்றிவிடும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நாம் முன்னர் பார்த்த முரண்பாடுகள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியதும் இந்த நம்பிக்கை மறைந்தது. இந்தியாவின் வறுமையும் மேலும் மேலும் மோசமடையும் நிலைமையும் காலனிய அரசுடன் தொடர்புடையது என்பதையும் அவர்கள் கண்டுகொண்டனர்.

காலனியத்தை பிபன் சந்திரா இப்படி வரையறை செய்கிறார். ‘காலனியம் என்பது நன்கு கட்டமைக்கப்பட்ட முழுமையான, தனித்துவமான ஒரு சமூக அமைப்பு அல்லது துணை அமைப்பு.’ பழைய சமுதாயத்தின் பொருளாதார மற்றும் அரசியல் அடித்தளத்தை பிரிட்டிஷ் ஆட்சி தகர்த்துவிட்டது. முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்தி முறையின் அடித்தளத்தை அழித்தது. ஆனால் அதைத் தொடர்ந்து ஒரு புதிய முதலாளித்துவ உற்பத்தி முறை வரவில்லை. அதற்குப் பதிலாகப் புதிய காலனிய உற்பத்தி முறை இருப்புக்கு வந்தது. ‘

காலனியத்தை ஆதரிக்கும், எதிர்க்கும் பிரிவினர் இங்கிலாந்திலேயே இருந்தனர். நாம் யாரை அடிமைப்படுத்துகிறோமோ அவர்கள் பெயரில் காலனியத்தை நியாயப்படுத்தும் வழக்கம் எதிர்க்கப்படவேண்டும் என்று குரல் கொடுத்தார் ஹென்றி ஹின்ட்மென். சோஷியல் டெமாக்ரடிக் ஃபெடரேஷன், நேஷனல் சோஷலிஸ்ட் கட்சி ஆகியவற்றைத் தோற்றுவித்தவ இவர் ஓர் எழுத்தாளரும் ஆவார். ஒரு மாபெரும் நிலப்பரப்பையும் அதன் மக்களையும் ஒரு சிறு கூட்டத்தால் அடக்கியாளமுடியும் என்பதை இந்தியா உலகுக்குத் தெளிவாக நிரூபித்தது. ஒரு பெரும்பான்மை இனத்தை அந்நிய நிலத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர் அடக்கி ஆண்டனர். இது கண்டிக்கத்தக்கது என்று எழுதினார் ஹின்ட்மென். கட்டுப்படுத்தப்படாத முதலாளித்துவம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைத் தெரிந்துகொள்ள இந்தியா ஓர் உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவை பிரிட்டிஷ் மக்கள் ஆளவில்லை; பிரிட்டனுக்குக் கட்டுப்பட்ட இந்தியர்கள்மூலமே இந்தியா ஆளப்பட்டது. இந்தியாவில் நிலவிய குழப்பங்களை பிரிட்டன் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

காட்டுமிராண்டித்தனமான, நாகரிகமற்ற, பிற்போக்கான ஒரு சமூகத்தை பிரிட்டன் ஆளவில்லை. இந்தியர்களை நாகரிக உலகுக்கு அழைத்துச் செல்வது பிரிட்டனின் நோக்கம் அல்ல. அப்படியொரு அவசியம் இந்தியாவுக்கு ஏற்படவும் இல்லை என்றார்  ஹின்ட்மென். இந்தியா வளமான, சிறந்த நாடாகத் திகழ்ந்தது. மேற்கு உலகம் பல நூற்றாண்டுகளாக இந்தியாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளத் துடித்து வந்ததை நாம் மறந்துவிடக்கூடாது. நாகரிகம் என்று சொல்லப்படுவது என்ன? அறிவியலில் முன்னேற்றம், கலாசாரம், கட்டடக் கலை, விவசாயம், தொழில்,  மருத்துவம், சட்டம், தத்துவம், மதம் ஆகியவை நாகரிகத்தைக் குறிக்கும் என்றால் இந்தியாவில் இவையனைத்தும் இருந்தன. ஐரோப்பாவின் எந்தவொரு நாகரிக நகரத்தையும் அப்போதைய இந்தியாவுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். அக்பர், அவுரங்கசிப், ஷாஜஹான், சிவாஜி போன்றவர்களைக் காட்டிலும் சிறந்த மன்னர்களை ஐரோப்பிய முடியாட்சி உருவாக்கிவிடவில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்தியத் துணைக்கண்டத்திடம் இருந்து மேற்கு நிறைய கற்றுக்கொண்டுள்ளது.

பிரிட்டனின் வருகைக்கு முன்னால் இந்தியாவில் அராஜகவாதமே நிலவிவந்தது என்னும் கூற்றையும் ஹின்ட்மென் மறுக்கிறார். மத்திய காலத்தில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் நிலவிய அராஜகவாதத்தைவிடவும் தீவிரமான அளவில் இந்தியாவில் அராஜகவாதம் நிலவியதில்லை என்கிறார் அவர். இந்தியாவை நாங்கள் முன்னேற்றிக் காட்டிருக்கிறோம் என்று பிரிட்டனால் சொல்லவேண்டுமானால் அதற்கான சாட்சியங்களையும் புள்ளிவிவரங்களையும் அவர்கள் தந்தாகவேண்டும். இந்தியாவை அடிமைப்படுத்த பிரிட்டனுக்கு எந்த அருகதையும் கிடையாது, அவர்கள் எந்தவிதத்திலும் தங்கள் செயலை நியாயப்படுத்தமுடியாது என்று அறுதியிட்டுச் சொல்கிறார் ஹின்ட்மென்.

மேற்கொண்டு வாசிக்க :

1) Nationalism and Colonialism in Modern India, Bipan Chandra, Orient Blackswan

2) காலனியம், பிபன் சந்திரா, தமிழில்: அசோகன் முத்துசாமி, பாரதி புத்தகாலயம்

3) Ruin of India by British Rule, H. M. Hyndman

காலனியத்தின் புதிர்கள்

அத்தியாயம் 2
article-1298569-02F49E4C0000044D-94_468x286

ஐரோப்பாவில் முதலாளித்துவம் வளர்ச்சி கண்டதற்கும் தொழில்மயமாக்கல் துரிதமடைந்ததற்கும் காலனியம் பேருதவி புரிந்தது. ஐரோப்பிய முதலாளித்துவத்தைப் பிறப்பிப்பதற்கு காலனியம் ஒரு மருத்துவச்சியாகப் பங்காற்றியது என்றுகூடச் சொல்லலாம் என்கிறார் அனியா லூம்பா. ஐரோப்பிய காலனயாதிக்கத்துக்கும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பை 19ம் நூற்றாண்டு மற்றும் 20ம் நூற்றாண்டு பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஐரோப்பிய அறிவை நீட்டிப்பதன்மூலம் இந்தியத் துணைகண்டத்தை முன்னேற்றலாம் என்று 1854ம் ஆண்டு கல்வித் துறை சார்ந்த ஓர் அறிக்கை குறிப்பிடுகிறது. ஆங்கிலக் கல்வி இந்தியாவை வளர்த்தெடுக்கும் என்று பிரிட்டிஷ் காலனிய அதிகாரிகள் மட்டுமல்ல பல இந்தியர்களும்கூட நம்பினர். இந்தியாவின் பரந்து விரிந்த இயற்கை வளங்களையும் மனித வளத்தையும் பயன்படுத்திக்கொள்ளும் திறன் ஆங்கிலக் கல்விமூலம் இந்தியர்களுக்குக் கைக்கூடும் என்பது அந்த நம்பிக்கையின் ஒரு பகுதி. கவர்னர் ஜெனரல் லார்ட் ஆம்ஹெர்ஸ்ட் என்பவருக்கு ராஜா ராம்மாகன் ராய் எழுதுகிறார். சமஸ்கிருதம் மற்றும் அரபி பெர்ஷியன் கல்விக்கு அரசு ஆதரவு அளித்தால் அது ’இந்தியாவை இருளில்தான் வைத்திருக்கும்’.

கார்ல் மார்க்ஸ் காலனியத்தை மனிதச் சாரத்தைக் கொள்ளையடிக்கும் முதலாளித்துவமாகக் கண்டார். பணத்துக்கும் பண்டத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் முதலாளித்துவம் மனிதர்களையும் ஒரு பண்டமாகவே பார்க்கிறது. காலனியம் மனிதர்களைச் சுரண்டுவதோடு நின்றுவிடாமல் மனிதப் பண்புகளையும் அழித்துவிடுகிறது. இவ்வாறு செய்யும்போது அது காலனியவாதிகளையும் சேர்த்தே தரம் தாழ்த்துகிறது.   Discourse on Colonialism என்னும் நூலில் Aimé Césaire  இதனை எளிமையாக்கித் தருகிறார். ‘காலனியாதிக்கம் என்பது அனைத்தையும் பண்டமாக்கும் முறை’.

காலனியத்தின் மிக முக்கியமான அதே சமயம் மிக விநோதமாகத் தோற்றமளிக்கக்கூடிய சில பண்புகளை பிபன் சந்திரா சுட்டிக்காட்டுகிறார். காலனியம் சில சமயம் காலனி நாட்டுக்கு சில நன்மைகளை அல்லது அவ்வாறு தோற்றமளிக்கக்கூடிய சில செயல்களைச் செய்கிறது. காலனி நாட்டில் உள்ள உயர் வர்க்கத்தினருக்கு எதிராகச் சில சட்டத்திட்டங்களை அது ஏற்படுத்துகிறது. தொழிற்சாலைச் சட்டம், குத்தகை மற்றும் கந்து வட்டிக்கு எதிரான சட்டங்கள் ஆகியவற்றை அது கொண்டுவருகிறது. சிறுபான்மைச் சமூகங்களுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கிறது. காலனி நாட்டில் நிலவும் சில பிற்போக்குக் கூறுகளுக்கு எதிராகச் சில சீர்திருத்தங்களை முன்மொழிந்து செயல்படுத்தவும் ஆரம்பிக்கிறது. இந்த முரண்பாட்டை பிபன் சந்திரா ஆராய்கிறார். தான் அடிமைப்படுத்த விரும்பும் ஒரு நாட்டில் உள்ள சில முறைகேடுகளைக் களையவேண்டும் என்று ஏன் ஒரு காலனி நாடு பிரயத்தனப்படுகிறது? இந்தியாவில் உள்ள வளங்களைச் சுரண்டுவதுதான் பிரிட்டிஷ் காலனியத்தின் நோக்கம். அது எதற்கான இங்குள்ள சிறுபான்மையினர்மீது அக்கறை கொள்கிறது? எதற்காக இங்குள்ள செல்வந்தர்களின் அதிகாரத்தைக் கலைக்கப் பார்க்கிறது? இந்தியாவில் தொழிலாளர் நலச்சட்டங்களை ஏற்படுத்தவேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் அமைப்பு ஏதேனும் குரல் கொடுக்கலாம். ஒரு காலனிய அரசு ஏன் அதைச் செய்யவேண்டும்? இந்தியத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் குறித்து லண்டன் தொழிலதிபர்கள் வருத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கமுடியுமா? யூத, அரேபிய இன எதிர்ப்பாளர்கள் இந்தியச் சிறுபான்மையினர் நலன் குறித்து அக்கறையுடன் சிந்திக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளமுடியுமா? இன வேறுபாட்டைக் களையமுடியாத ஓர் வெள்ளை அரசு இந்தியா சாதி வாரியாகப் பிரிந்திருப்பதைப் பற்றி மட்டும் கவலைக்கொள்கிறது என்று எடுத்துக்கொள்ளமுடியுமா?

பிபன் சந்திரா இந்த விசித்திரத்தை விளக்குகிறார். ‘சில குறிப்பிட்ட காலத்துக்கு, சில குறிப்பிட்ட நிலைமைகளில் காலனிய அரசு நிலப்பிரபுக்கள் மற்றும் குத்தகை விவசாயிகள், முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள், உயர் சாதியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியினர் ஆகியோரை எதிரெதிராக நிறுத்தவு இது வழிவகுக்கின்றது. அனைத்து வகையான பெரும்பான்மை மற்றும் சிறுபான்மையினரை ஒருவருக்கு எதிராக மற்றவரை நிறுத்தவும் இது வழிவகுக்கின்றது.’

இதன் தொடர்ச்சியாக பிரிட்டிஷ் ஆட்சியை இங்குள்ள செல்வந்தர்களும் நிலப்பிரபுக்களும்கூட எதிர்க்கத் தொடங்கினர். அதாவது காலனி அரசின் ஆளும் வர்க்கத்துக்கும் காலனி நாட்டின் ஆளும் வர்க்கத்துக்கும் இடையில் மோதல்கள் வெடித்தன. பிபன் சந்திரா எழுதுகிறார். ‘போலந்து அல்லது எகிப்தைப் போல, காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டத்துக்கு பெரும் நிலப்பிரபுக்கள்கூட தலைமை தாங்கமுடியும்.’ இந்தப் போராட்டத்தை மேலும் நுணுக்கமாக ஆராயும் பிபின் சந்திரா ஒரு புதிய வெளிச்சத்தை அளிக்கிறார். ஒடுக்க வந்த ஆளும் வர்க்கத்துக்கும் ஒடுக்கப்படும் சமூகத்தைச் சேர்ந்த ஆளும் வர்க்கத்துக்கும் இடையிலான போராட்டம் அல்லது போட்டி தேசியவாதம் என்னும் கருத்தாக்கத்தைத் தோற்றுவிக்கிறது. அதாவது, ‘உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உயர் வர்க்கத்தவருக்கு இடையில் அதிகாரத்துக்காக நடக்கும் போராட்டத்தின் விளைவே தேசியவாதம் எனும் கோட்பாடு.’
train-e1366715162410

காலனிய அரசு என்பது அடிப்படையில் ஒரு முதலாளித்துவ அரசு என்பதையும் பிபன் சந்திரா நிறுவுகிறார். ‘ஒரு காலனிய அரசு முதலாளித்துவச் சட்டங்களையும், சட்ட அமைப்புகளையும், முதலாளித்துவச் சொத்துறவுகளையும், சட்டத்தின் ஆட்சியையும், அதிகார வர்க்க நிர்வாகத்தையும் பல்வேறு கட்டங்களில் புகுத்துகின்றது. ஆதலால் காலனியாதிக்க முதலாளித்துவ நாட்டுக்கு ஏற்ப அது எதேச்சதிகார அரசாகவோ அல்லது ஆப்பிரிக்காவிலுள்ள பல காலனிகளைப்போல் பாசிச அரசாகவோ அல்லது இந்தியா போல் அரை எதேச்சதிகார மற்றும் அரை ஜனநாயக அரசாகவோ இருக்கலாம். அது எப்போதும் முழுமையான ஜனநாயக அரசாக இருக்கமுடியாது.’

ஒரு காலனி அரசு இப்படித்தான் தனது காலனி நாட்டிடம் நடந்துகொள்ளும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது. காலனி நாட்டின் பண்பு, கலாசாரம், வரலாறு, பொருளாதார முறை ஆகியவற்றின் அடிப்படையில் காலனி அரசு தன் ஆட்சியையும் நிர்வாக முறையையும் வடிவமைத்துக்கொள்கிறது. வன்முறை அவசியம் என்றால் அதனைப் பிரயோகிக்கத் தயங்குவதில்லை. காலனி சமூகத்தில் சில சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன என்று ஒரு காலனி அரசு கருதினால் அதனை மேற்கொள்ளவும் அது தயங்குவதில்லை.

தொடக்கத்திலிருந்தே காலனியம் உள் முரண்பாடுகள் நிறைந்த ஒரு கட்டமைப்பாகவே திகழ்ந்தது. இந்த முரண்பாடுகளைக் கண்டறிந்து புரிந்துகொள்வதன்மூலமே காலனியத்தையும் அதன் பல்வேறு கட்டங்களையும் புரிந்துகொள்ளமுடியும். 1840கள் மற்றும் 1850களில் முதலாளித்துவத்தின் வர்க்க முரண்பாடுகள் யதார்த்த வாழ்வில் தோன்றியபோது கார்ல் மார்க்ஸ் அறிவியல் ரீதியாக முதலாளித்துவத்தை ஆராயத் தொடங்கினார் என்கிறார் பிபன் சந்திரா.  இந்தியாவிலும் அத்தகைய உள் முரண்பாடுகளை காலனியம் சந்தித்தது. அவற்றில் சிலவற்றை பிபன் சந்திரா பட்டியலிடுகிறார்.

1) வளமும் சுரண்டலும்

வளங்களைச் சுரண்டுவது என்பது காலனியாதிக்கத்தின் முக்கிய அம்சம். அதே சமயம் கிடைக்கும் அனைத்தையும் சுரண்டிவிட்டு ஓடிவிடுவது என்பது ஒரு காலனி அரசின் நோக்கமாக இருக்கமுடியாது. லாபம் ஈட்டவேண்டுமானால் உற்பத்தி பெருகவேண்டும். அப்போதுதான் உபரியும் பெருகும். எனவே பொன் முட்டை இடும் வாத்தை அறுப்பதற்கு பிரிட்டன் தயாராகயில்லை. எனவே தவிர்க்கவியலாதபடிக்கு காலனி நாட்டின் பொருளாதாரத்தை மறு உற்பத்தி செய்யவேண்டிய அவசியம் அதற்கு ஏற்பட்டது. பிரிட்டன் வங்கத்தைச் சுரண்டிய அதே சமயம், அதன் உற்பத்தியையும் பெருக்கியது இந்தக் காரணத்துக்காகத்தான்.

2) நலன்கள், ஆதாயங்கள்

கிழக்கிந்திய கம்பெனியின் ஊழியர்கள் தங்கள் நலனைப் பெருக்கிக்கொள்வதில் தீராத ஆர்வம் கொண்டு ஆதாயங்களைத் தேடிக்கொண்டனர். இது அவர்களுடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் உதவியது. இந்த இரண்டு நலன்களுக்காகவும் இந்தியா சுரண்டப்பட்டது. சுரண்டலோடு சேர்ந்து உற்பத்திப் பெருக்கமும் நிகழும் என்று பார்த்தோம் அல்லவா? அந்த வகையில் இந்திய முதலாளி வர்க்கத்தின் நலன்களுக்காகவும் இந்தியப் பொருளாதாரத்தின் நலன்களுக்காகவும்கூட காலனியத் தொழில் முயற்சிகள் உதவின. இந்தக் காரணங்களுக்காகவும் இந்தியா சுரண்டப்பட்டது.

3) நவீனமயமாக்கல்

காலனியம் அதன் அடுத்தகட்ட வளர்ச்சியைச் சந்தித்தபோது, இந்தியாவை நவீனமயமாக்கவேண்டிய தேவை எழுந்தது. மேலும் ஆற்றல் கொண்டதாக, விரிவாக்கப்பட்டதாக இந்தியப் பொருளாதாரத்தை மாற்றவேண்டுமானால் அடிப்படை அம்சங்களை நவீனமயமாக்கவேண்டியது அவசியம் என்பதை பிரிட்டன் உணர்ந்திருந்தது. ‘இந்தியாவை வளர்ப்பது ஏகாதிபத்திய பிரிட்டனின் தேவையாக இருந்தது. நிதிக் கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் இந்தத் தேவை எழுந்தது.’ இந்தியப் பொருளாதாரம் தேக்கமடைந்திருந்தால் குறைவான பலன்களே காலனிய அரசுக்குக் கிடைக்கும். தேவைப்படும் வரிகளை விவசாயிகள் மற்றும் இதர பிரிவினர்மீது விதிக்கமுடியாது. ஏற்கெனவே பொருளாதாரம் சுணக்கமடைந்திருக்கும் நிலையில் வரிச்சுமையையும் சுமத்தினால் அவர்கள் அதிருப்தி தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும். இது காலனிய அரசின் அடித்தளத்தேயே பாதிக்கும்.  அதற்காக வரி விதிக்காமல் இருக்கவும் முடியாது. கிடைக்கும் பலன்களே போதும் என்று நினைக்கவும் முடியாது. சிவில், ராணுவச் செலவுகளைச் சமாளிக்க கூடுதல் வருவாய் அவசியம். ஆக மொத்தகம் இந்தியாவைக் கட்டுப்படுத்தவேண்டும். அதே சமயம் இந்தியாவை வளர்க்கவும் வேண்டும்.

4) விவசாய வளர்ச்சி

தொழில்துறையைப்போலவே விவசாயத்தை வளர்க்கவேண்டிய தேவை பிரிட்டனுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை பிபன் சந்திரா விவரிக்கிறார். ‘விவசாயிகளை பிரிட்டிஷ் பொருள்களை வாங்கக் கூடியவர்களாகவும், விவசாயத்தில் முதலீடு செய்பவர்களாகவும், தேவையான கச்சாப் பொருள்களை உற்பத்தி செய்பவர்களாகவும் மற்றும் பொதுவாக விரிவாக்கப்பட்ட அளவில் விவசாயத்தை மேற்கொள்பவர்களாகவும் ஆக்குவதற்காக அவர்கள் சேமிப்பதற்கு உதவவேண்டும். பேரரசின் பாதுகாப்புக்கும், விரிவாக்கத்துக்கும், அதன் நிர்வாகத்துக்கும் வளர்ச்சிக்கும் விவசாயியை வரி கொடுக்கும்படிச் செய்யவேண்டும் என்கிற எதிர்த் தேவையும் இருந்தது. மற்றும் ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான சமூக உபரியை விவசாயி வழங்கவேண்டியும் இருந்தது.’ இந்நிலை ஒரு முரண்பாட்டை ஏற்படுத்தியது. அதைச் சமாளிக்க விவசாயத்தை வளர்த்தெடுக்கவேண்டிய நிலை பிரிட்டிஷ் அரசுக்கு ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன? ‘முதலாளித்துவ அடிப்படையில் விவசாயத்தை வளர்ப்பதற்கான அனைத்துத் திட்டங்களும் விவசாயத்தில் ஜமீன்தாரி முறையைப் புகுத்துவதில் போய் முடிந்தது. பிரிட்டிஷ் அதிகாரிகள் எவ்வளவு அதிகமாக லேவாதேவிக்காரர்களைத் தவறாகப் பயன்படுத்தினார்களோ அவ்வளவு அதிகமாக அரசாங்கமும், விவசாயிகளும் வரி வாங்கவும் கொடுக்கவும் அவர்களையே சார்ந்திருக்கவேண்டியதாயிற்று. விவசாயிகள் தாங்கள் உயிர் பிழைத்திருப்பதற்கே அவர்களைச் சார்ந்திருக்க வேண்டியதாயிற்று.’

5) காலனியும் போராட்டமும்

மறு உற்பத்தி செய்யும் ஒரு காலனியாக இந்தியாவை மாற்றுவதற்கு பிரிட்டன் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பிரிட்டனுக்கு எதிரான போராட்ட அலைகளை ஏற்படுத்தியதும்கூட ஒரு முரண்பாடுதான். தன்னுடைய ஆதாயத்துக்காகப் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த பிரிட்டன் விரும்பியது. ஆனால் நேர் எதிரான விளைவுகளையே இது ஏற்படுத்தியது. இந்த முரண்பாடு இந்திய பிபன் சந்திரா குறிப்பிடுவதைப்போல் காலனியத்துக்கும் இந்திய மக்களுக்கும் இடையிலான முரண்பாடாக வளர்ந்தது. தேசிய விடுதலைப் போராட்டத்துக்கும் இது வழி வகுத்தது. ‘இந்தியாவைப் பயனுள்ள ஒரு காலனியாக ஆக்குவதற்குத் தேவையான ஒரு வரம்புக்குட்பட்ட மாறுதலும்கூட காலனியத்தை எதிர்க்கின்ற, அதற்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்துகின்ற சமூக சக்திகள் தோன்றுவதற்கு இட்டுச் சென்றது.’

0

மேற்கொண்டு வாசிக்க :

1) Nationalism and Colonialism in Modern India, Bipan Chandra, Orient Blackswan

2) காலனியம், பிபன் சந்திரா, தமிழில்: அசோகன் முத்துசாமி, பாரதி புத்தகாலயம்

3) Colonialsm/Post-Colonialism, Ania Loomba, Routledge

காலனியம் : ஓர் அறிமுகம்

நவீன இந்திய வரலாறு / அத்தியாயம் 1

india

இரண்டு நூற்றாண்டுகளாக இந்தியாவைக் கட்டுக்கோப்பான பலத்துடன் ஆட்சி செய்துவந்த முகலாயர்களின் சாம்ராஜ்ஜியம் 18ம் நூற்றாண்டின் முதல் பாதியில் சரிந்து படிப்படியாக உடையத் தொடங்கியது. இந்தியப் பிரதேசங்களின் பெரும் பகுதியை ஆண்டுவந்த முகலாயர்களிடம் ஒரு கட்டத்தில் டெல்லியின் ஒரு சில சதுர மைல்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. அதுவும்கூட நாளடைவில் பிரிட்டன் வசம் செல்ல, வரலாற்றுப் புகழ்மிக்க முகலாய சக்கரவர்த்தி பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து உதவித் தொகை பெறும் ஒரு சாமானியராகச் சுருங்கிப்போனார்.  முகலாயர்களின் வீழ்ச்சி மத்தியகால இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் பொருளாதாரக் கட்டுமானங்களின் குறைபாடுகளையும் போதாமைகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது.

1757 பிளாசி போரின் முடிவில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டுக்குள் இந்தியா வந்து சேர்ந்தது. 1857ம் ஆணடு சிப்பாய் புரட்சி வெடித்தபோது அதைக் கட்டுப்படுத்திய பிரிட்டன் இந்தியாவை ஒரு காலனி நாடாகத் தன்னுடைய நேரடி ஆட்சியின்கீழ் கொண்டுவந்தது. ஆனால் முந்தைய முகலாய சாம்ராஜ்ஜியத்தைப் போலவே பிரிட்டிஷ் பேரரசும் பலமிழக்கத் தொடங்கியபோது இந்தியா உள்ளிட்ட தனது காலனி நாடுகளைவிட்டு வெளியேறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

முகலாய சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சி, பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சி இரண்டையும் மிகவும் விரிவாகப் பல வரலாற்றாசிரியர்கள் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து பதிவு செய்துள்ளனர். நவீன இந்தியாவைப் பற்றிய நமது இந்தத் தேடல் காலனியத்தையும் அதன் பங்களிப்பையும் ஆராய்வதில் இருந்து தொடங்குகிறது.

ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியின்படி Colonialism என்பது காலனியா (வயல், குடியிருப்பு) என்னும் ரோமானிய வார்த்தையில் இருந்து உருவான ஒருசொல்லாகும். பிற இடங்களில் குடியேறிச் சென்ற ஆனால் தொடர்ந்து ரோமானியர்களாக நீடித்த மக்களைக் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்பட்டது. முழுமையான அகராதி விளக்கம் இது: ஒரு புதிய நாட்டில் உருவான குடியிருப்பு… தாய்நாட்டின் தொடர்பைத் துண்டித்துக்கொள்ளாமல்  ஒரு புதிய பகுதியில் குழுவாகச் சென்று குடியேறிய மக்கள் கூட்டம்… முதல் முறையாகக் குடியமர்ந்தவர்கள் அல்லது அவர்களுடைய வழித்தோன்றல்கள்.

எல்லா இடங்களிலும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு முறைகளில் இத்தகைய காலனியாதிக்கக் குடியேற்றங்கள் நிகழ்ந்தன  என்றாலும் ஒரு பொதுவான  அடிப்படையை அவற்றில் காணமுடியும் என்கிறார் காலனியம், பின்காலனியம் ஆகிய கோட்பாடுகளை ஆராய்ந்துள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகப் பேராசிரியர் அனியா லூம்பா. ஒரு புதிய பிரதேசத்துக்குள் நுழையும் காலனியக் குழுக்கள் ஏற்கெனவே அங்கு வசித்துவந்தவர்களுடன் இணக்கமான உறவு கொள்வதில்லை. மாறாக, மனித குல வரலாற்றின் மிகவும் குழப்பமான, வலி மிகுந்த உறவுகளில் ஒன்றாக இந்த இருவருக்கும் இடையிலான உறவுமுறை அமைகின்றது என்கிறார் லூம்பா. காலனியம் குறித்த அகராதி விளக்கத்தையும் அவர் கேள்விக்கு உள்ளாக்குகிறார். ‘ஏற்கெனவே ஒரு சமூகம் குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழ்ந்துவந்தபோது அங்குச் சிலர் குழுவாக வந்து குடியமர்ந்தனர் என்றால் அது எப்படி ‘புதிய பகுதி’ என்று அழைக்கப்படும்? ஒரு குழு அல்லது மக்கள் கூட்டம் ஒரு புதிய பிரதேசத்தில் குடிபுகுந்தபோது அங்கிருந்தவர்கள் என்ன ஆவார்கள்? அவர்களைக் குறிப்பதற்கு ஏன் சொற்கள் உருவாக்கப்படவில்லை?’

ஒரு காலனி நாடு தான் கண்டுபிடித்த ஒரு புதிய பகுதியில் தனது சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு முன்னால் முந்தைய சமூகத்தையும் அதன் கட்டமைப்பையும் நொறுக்கித் தகர்க்கிறது. வணிகம், கொள்ளை, பேச்சுவார்த்தை, போர், இனப்படுகொலை, ஒடுக்குமுறை, அடிமைப்படுத்துதல் ஆகியவற்றின்மூலம் ஒரு புதிய சமூக முறையை காலனி நாடு உருவாக்குகிறது. வரலாற்றில் இத்தகைய ஆக்கிரமிப்புகள் தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் ரோம சாம்ராஜ்ஜியம் ஆர்மினியா முதல் அட்லாண்டிக் வரை பரந்துவிரிந்திருந்ததற்குக் காரணம் காலனி ஆக்கிரமிப்புகள். 13ம் நூற்றாண்டில் செங்கிஸ்கான் தலைமையில் மங்கோலியர்கள் மத்திய கிழக்கையும் சீனாவையும் ஆக்கிரமித்தனர். 15ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் உள்ள பல்வேறு சமஸ்தானங்கள் விஜயநகரப் பேரரசின்கீழ் கொண்டுவரப்பட்டன. தற்போதைய துருக்கியில் ஒரு சிறிய இஸ்லாமியப் பிரதேசமாக இருந்த ஒட்டமான் சாம்ராஜ்ஜியம் பெரும்பாலானா ஆசியா மைனர் மற்றும் பால்கன் பிரதேசங்களை ஆக்கிரமித்துக்கொண்டு தன்னைப் பலப்படுத்திக்கொண்டது.  வரலாறு நெடுகிலும் இத்தகைய பல உதாரணங்கள் விரவிக்கிடக்கின்றன.

Bipan Chandraஇந்தியாவில் காலனியம் இயங்கிய விதத்தைப் புரிந்துகொள்ள சரியான தொடக்கப்புள்ளி பிபன் சந்திரா (1928- 2014). இந்திய தேசியவாதிகளும் அறிவுஜீவிகளும் காலனியத்தை எப்படி அணுகினர், எப்படிப் புரிந்துகொண்டனர், எப்படிப் பதிவு செய்தனர் என்பதை பிபன் சந்திரா தனது படைப்புகளில் விரிவாக ஆராய்ந்துள்ளார். அவரைப் பொருத்தவரை தேசியவாதிகள் தொடக்கத்திலேயே காலனியம் குறித்து ஆராயவும் விவாதிக்கவும் தொடங்கிவிட்டனர் என்றபோதும் அவர்களுடைய படைப்புகள் முழுமையான, விரிவான ஒழுங்கமைக்கப்பட்ட பார்வையை அளிக்கவில்லை. கே.டி. ஷா, சி.என். வகீல், பால் கிருஷ்ணா, வாடியா, மெர்ச்சண்ட் போன்ற சில பொருளாதார ஆய்வாளர்கள்  ‘ஆரம்பால தேசியவாத அணுகுமுறைக்கு அனுபவ அறிவுரீதியான, தத்துவரீதியான ஆதரவைத் தொடர்ந்து வழங்கிவந்தனர்.’ ஆனால் ‘காலனியம் பற்றிய தீவிர ஆய்வுகள் மட்டுமல்ல அடிப்படையான அலசல்கள்கூட மிகச் சமீபத்தில்தான் ஆரம்பிக்கப்பட்டன.’

பிபன் சந்திராவின் கருத்துப்படி ‘ஒரு சமூக ஆதிக்க அமைப்பை முழுமையாக வலியுறுத்தும் ஒரு நவீன வகையாகக் காலனியம் என்கிற சொல் 1920களில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஒரு தீர்மானத்தின் மூலமும், உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரசாரம் மற்றும் போராட்டங்களின் மூலமும் பரவலான பயன்பாட்டுக்கு வந்தது. அன்றிலிருந்து ஏறக்குறைய மார்க்சிஸ்டுகள் மட்டுமே காலனியம் என்கிற கருத்து மற்றும் யதார்த்த நடைமுறை குறித்து மேற்கொண்டு நடந்த ஆய்வுக்குப் பங்களித்துள்ளனர்!’

முதன்மையான ஏகாதிபத்திய நாடுகளாக இருந்த பிரிட்டன், பிரான்ஸ் நாட்டு பல்கலைக்கழகங்கள் காலனியத்தைத் தொடக்கத்தி வெளிப்படையாக ஆதரித்துள்ளன. 1945க்குப் பிறகு உலகம் தழுவிய அளவில் தேசிய விடுதலைப் போராட்டங்கள் தீவிரமடைந்த காலகட்டத்திலும்கூட காலனியம் குறித்த ஆய்வுகள் தீவிரமடையவில்லை. 1945க்குப் பிறகான இருபதாண்டுகளில் சோஷலிச நாடுகள் நீங்கலாக வேறு எங்கிருந்தும் காலனியம் குறித்த காத்திரமான ஆய்வுகள் வெளிவரவில்லை என்கிறார் பிபன் சந்திரா. காலனியத்தைத் தொடர்ச்சியாகவும் தீவிரமாகவும் ஆய்வு செய்து விமரிசனம் செய்துவந்ததால் கம்யூனிஸ்டுகள் பல்கலைக்கழகங்களில் இருந்தும் ஆராய்ச்சி நிறுவனங்களில் இருந்தும் தேடித்தேடி விரட்டியடிக்கப்பட்டனர்.

1965ம் ஆண்டு வாக்கில் நிலைமை மாறியதற்குக் காரணம் தேசிய அளவில் நடைபெற்ற முக்கியப் போராட்டங்களும் அவற்றுக்குக் கிடைத்த கவனமும்தான். உதாரணத்துக்கு, கியூபப் புரட்சி, அல்ஜீரியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் நடைபெற்ற தேச விடுதலைப் போர்கள் மற்றும் பிரேசில், சிலி, அர்ஜெண்டினா உள்ளிட்ட லத்தின் அமெரிக்க நாடுகளில் நடைபெற்ற மக்கள் எழுச்சிகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவற்றைத் தொடர்ந்து காலனியம் குறித்து பல அடிப்படைக் கேள்விகளும் விவாதங்களும் எழுப்பப்பட்டன. காலனியாதிக்கத்துக்கு உட்படும் ஒரு நாடு எத்தகைய அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்களைச் சந்திக்கிறது? இந்த மாற்றங்கள் எல்லாமே தீமையானவை என்று சொல்லமுடியுமா? ஆதிக்கம் செலுத்தும் நாட்டின் பண்புகள் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருக்கும் நாட்டிடம் காணப்படுமா? காலனியாதிக்கத்துக்கு உட்படாமல் போயிருந்தால் ஒரு நாடு மேலான வளர்ச்சியை அடைந்திருக்குமா?

எந்தவொரு காலனி நாடும் தன் நோக்கங்களை நியாயப்படுத்தவே செய்யும். பிரிட்டனும் இங்கே அதைத்தான் செய்தது. இந்தியாவை ஒரு முதலாளித்துவ நாடாக மாற்றிக்காட்டுவோம் என்னும் முழக்கத்தை 19ம் நூற்றாண்டில் பல பிரிட்டிஷ் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்துடன் முன்வைத்தனர். இதற்கு இந்தியாவிலேயே பலருடைய ஆதரவும் கிடைத்தது. இந்தியா போன்ற ஒரு பின்தங்கிய நாட்டை பிரிட்டனின் ஆட்சி மேம்படுத்தவே செய்யும் என்று இவர்கள் வாதிட்டனர். விவசாயம், வர்த்தகம், ரயில்வே என்று இந்தியாவில் காலனியம் ஏற்படுத்திய மாற்றங்களைச் சுட்டிக்காட்டி காலனியத்தை இவர்கள் உயர்த்திப்பிடிக்கவும் செய்தனர். முதலாளித்துவ வளர்ச்சிக்கும் தேச வளர்ச்சிக்கும் இத்தகைய மாற்றங்கள் உறுதுணையாக இருக்கும் என்றும் மதிப்பிட்டனர்.

அப்படியென்றால் பல சமூகத் தளங்களில் ஏன் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை? பிரிட்டனின் வருகைக்கு முன்னால் நிலவிவந்த நிலப்பிரபுத்துவத்தின் கூறுகள்  ஏன் களையப்படவில்லை? இன்னமும்கூட இந்தியா ஏன் வளரும் நாடாகவே உள்ளது? அதற்குக் காரணம் காலனியம் அல்ல, இந்தியச் சூழல்தான் என்று காலனிய ஆதரவாளர்கள் வாதிட்டனர். ‘காலனிகளில் உட்புகுந்து வெல்லமுடியாத அளவு நெருக்கமாக இருந்த சமூக, பொருளாதார, புவியியல், மக்கள்தொகை மற்றும் கலாசார நிலைமைகளே இந்நிலைக்குக் காரணம்’ என்றனர். காலனிய ஆதரவாளர்களைப் பொருத்தவரை முதலாளித்துவ வளர்ச்சியின் குறைபாடுகளுக்குக் காரணம் முதலாளித்துவமோ அதை அறிமுகப்படுத்திய ஆட்சியாளர்களோ அல்ல; மிகவும் தொடக்க நிலையில் இருந்து செயல்படவேண்டியிருந்த இந்திய நிலைமைதான். இன்றும்கூட இத்தகைய வாதங்கள் முன்வைக்கப்படுவதை ஒருவர் காணமுடியும்.

கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருக்கும் காலனியாதிக்கத்தின் அடிப்படை நோக்கம் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் சந்தேகம் எதுவும் இருக்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இதைத் தெளிவுபடுத்துவதை பிபன் சந்திரா சுட்டிக்காட்டுகிறார். முதலாளித்துவம் ஓர் உலக அமைப்பு என்கிற வகையில் ‘அது அழிவின் விளிம்பில் இருக்கும் உலக நாடுகள் அனைத்தையும் முதலாளித்துவ நாடுகளாக ஆகுமாறு கட்டாயப்படுத்துகிறது. ஒரு வார்த்தையில் கூறினால், அது தன்னுடைய உருவத்தையொத்த ஒரு உலகத்தை உருவாக்குகின்றது’. முதலாளித்துவத்தால் ஒரு ஒற்றை நாட்டுக்குள் அல்லது பகுதிக்குள் முடங்கிக்கிடக்கமுடியாது; அதன் இயல்பு அப்படி என்பதை மார்க்ஸ் முதல்முதலில் உணர்த்தினார். ஒரு காலனியாதிக்க முதலாளித்துவ நாடு காலனி நாட்டிலும் தன்னுடைய முதலாளித்துவப் பண்பையே மறுஉற்பத்தி செய்யும் என்னும் மார்க்ஸ், எங்கெல்ஸின் கருத்தை ராஜாராம் மோகன் ராய் ஏற்றுக்கொண்டார்.

வளர்ச்சியடைந்த ஒரு முதலாளித்துவ நாட்டால் ஆக்கிரமிக்கப்படும்போது காலனி நாட்டிலும் முதலாளித்துவ வளர்ச்சிக்கான பாதை திறந்துவிடப்படும் என்று கருதுவது தவறு என்கிறார் பிபன் சந்திரா. காலனியாதிக்கம் ஒரு நாட்டை நிச்சயம் உருமாற்றும் ஆனால் அது ஆராக்கியமான மாற்றமல்ல.  ‘முதலாளித்துவம் ஒரு ஒற்றை உலக அமைப்பாகவும், காலனிகள் அதன் அடிப்படை உறுப்புகளாகவும் இருந்தாலும், அவை காலனியாதிக்க நாடுகளைப்போல அதே வகையில் முதலாளித்துவ நாடுகளாக ஆகிவிடுவதில்லை. முதலாளித்துவம் ஒரு உலக அமைப்பு. ஆனால் அது ஏகாதிபத்திய நாடுகளில் ஒரு முகத்தையும், காலனி நாடுகளில் வேறொரு முகத்தையும் கொண்டுள்ளது… ஏகாதிபத்தியம் காலனிகளை அச்சு அசலாக வளர்ந்த நாடுகளைப் போல் மாற்றவோ அல்லது காலனிகளை வளர்ப்பதில் அது வெற்றிபெறவோ இல்லை. அது அவற்றை வளர்ச்சி குன்றச் செய்கின்றது. அவற்றைக் காலனியச் சமுதாயங்களாக ஆக்குகின்றது. ஏகாதிபத்தியம் காலனி நாடுகளில் முதலாளித்துவத்தையும் முதலாளித்துவ உற்பத்தி முறையையும் முதலாளித்துவச் சொத்துறவுகளையும் புகுத்துகின்றது. ஆனால் வளர்ச்சியை அறிமுகப்படுத்துவதில்லை. அது பழைய பொருளாதாரத்தையும் சமூக வடிவத்தையும் அமைப்பையும் அழித்து மாற்றுகிறது. ஆனால் புதிய காலனிய பொருளாதாரமும் சமூக அமைப்பும் பிற்போக்குத்தனமானவையாக இருந்தன.’

சமூக வளர்ச்சியில் முதலாளித்துவம் என்பது ஒரு முன்னேறிய கட்டம். ஆனால் காலனியம் அப்படியானதல்ல என்கிறார் பிபன் சந்திரா. ‘அது காலனியாதிக்க முதலாளித்துவத்தின் ஒரு பிம்பம். ஆனால் எதிர்மறை பிம்பம்; அதன் எதிர்ப்பக்கம். அதன் வளர்ச்சியற்ற பகுதி.’ காலனியம் என்பது ஒரு உற்பத்தி முறையல்ல என்னும் முடிவுக்கும் வந்து சேர்கிறார் பிபன் சந்திரா. ‘3காலனியம் என்பது முதலாளித்துவ உற்பத்தி முறை உள்பட பல்வேறு உற்பத்தி முறைகளும், உற்பத்தி உறவுகளும், சுரண்டல் வடிவங்களும் ஒத்து நிலவும் ஒரு சமூக அமைப்பாகும். நிலப்பிரபுத்துவம், அரை நிலப்பிரபுத்துவம், அடிமை முறை, கொத்தடிமை முறை, சிறு சரக்கு உற்பத்தி, வணிக மற்றும் கந்துவட்டிச் சுரண்டல், விவசாய, தொழில் மற்றும் நிதி முதலாளித்துவம் ஆகியவை ஒத்து வாழ்கின்றன. ஆனால் அவை அமைதியாகவோ அல்லது விரோதமின்றியோ உடனொத்து வாழ்ந்தன என்று கூறமுடியாது. காலனியப்படுத்தலின் முறைகளில் வெவ்வேறு வகையான கலவை வெவ்வேறு காலனிகளில், வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு கட்டங்களில் வேறுபட்டது. அனைத்து வேறுபட்ட உற்பத்தி முறைகளும் ஏகாதிபத்திய மூலதனத்துக்குக் கீழ்ப்படுத்தப்பட்டிருந்தன.’

காலனியக் கட்டமைப்பின் மூன்று அடிப்படைப் பண்புகளை பிபன் சந்திரா சுட்டிக்காட்டுகிறார்.

1) அந்நிய நலன்கள்

காலனி நாட்டின் பொருளாதாரம் அந்நாட்டு நலன்கள் மற்றும் தேவைகளால் தீர்மானிக்கப்படுவதில்லை.காலனியாதிக்க நாட்டின் பொருளாதாரம், அதன் முதலாளித்துவ வர்க்கத்தின் தேவைகள், நலன்கள் ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகிறது. உலக முதலாளித்துவம், உலகச் சந்தை ஆகியவற்றுடன் காலனி நாட்டின் பொருளாதாரம் ஒருங்கிணைக்கப்படுவதில்லை. மாறாக, அவற்றுக்குக் கீழ்படிந்திருக்கும்படி நிர்பந்திக்கப்படுகிறது.

2) சமமற்ற வேலைப்பிரிவினை

பரிவர்த்தனைகள் சமமற்றதாக இருக்கும். இந்தியத் தொழில்துறையின் நலன்களுக்கு அல்ல, பிரிட்டிஷ் உற்பத்தியின் தேவைகளுக்குச் சேவை செய்வதே நோக்கமாக இருக்கும். மார்க்ஸ், எங்கெல்ஸ் சுட்டிக்காட்டியதைப் போல் காலனி நாடுகள் கச்சாப் பொருள்களை உற்பத்தி செய்யும். தயாரிக்கப்பட்ட பொருள்கள் காலனியாதிக்க நாடுகளால் உற்பத்தி செய்யப்படும். காலனியாதிக்க நாடு உயர் தொழில்நுட்பம், உயர் உற்பத்தி ஆற்றல், உயர் ஊதியம் தேவைப்படும் சரக்குகளை உற்பத்தி செய்யும். காலனி நாடு கீழான தொழில்நுட்பம், கீழான உற்பத்தி ஆற்றல், குறைவான ஊதியம் தேவைப்படும் சரக்குகளை உற்பத்தி செய்யும். மொத்தத்தில், ஒரு சர்வதேச வேலைப்பிரிவினையைக் காலனியாதிக்கம் நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது.

3) சுரண்டல்

ஒரு காலனியாதிக்க நாடு காலனி நாடுகளின் செல்வத்தைச் சுரண்டி தன்னிடத்துக்குக் கொண்டுசென்று சேர்ப்பதை வழக்கமாக வைத்துக்கொண்டிருக்கும். இந்தியாவின் வறுமை, வளர்ச்சியின்மை ஆகியவற்றைப் புரிந்துகொள்ள இந்தச் சுரண்டலையும் நாம் புரிந்துகொண்டாகவேண்டும். காலனி நாட்டின் செல்வம் அந்நாட்டின் பொருளாதாரத்திலும் மறு உற்பத்தியிலும் நுழையாமல் ஏகாதிபத்திய நாட்டின் பொருளாதாரத்துக்குள் நுழைந்துவிடுகிறது. இது ஒரு பக்கம் ஏழைமையையும் இன்னொரு பக்கம் செல்வத்தையும் அதிகரிக்கிறது.

0

மேற்கொண்டு வாசிக்க :

1) History of Modern India, Bipan Chandra, Orient Blackswan

2) Nationalism and Colonialism in Modern India, Bipan Chandra, Orient Blackswan

3) காலனியம், பிபன் சந்திரா, தமிழில்: அசோகன் முத்துசாமி, பாரதி புத்தகாலயம்

4) Colonialsm/Post-Colonialism, Ania Loomba, Routledge

5) கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, கார்ல் மார்க்ஸ், ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ்