நைலான் ரதங்கள்

காதல் அணுக்கள் / அத்தியாயம் 25

(அதிகாரம் – ஊடலுவகை)

Camino_day_7_051குறள் 1321:

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.

எதற்கென்றே அறியாத

செல்லச்சண்டைகளில்

மெல்ல வேர் பிடித்து

விருட்சமாகும் காதல்!

*

குறள் 1322:

ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.

பிரியங்கள் உடைக்கும்

புரிதல்கள் புதைக்கும்

ஆனாலும் அழகானது

காதல் யுத்த காண்டம்.

*

குறள் 1323:

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.

பூமி தழுவும் கடலாய்க்

காதலிக்கிறான் – ஊடல்

நிமித்தம் சிலபல துண்டு

சுவர்க்கங்கள் வீசுகிறான்.

*

குறள் 1324:

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.

உடல் பின்னிக் கிடக்க

உதவும் காதல் அடிதடி

அஃதே அவள் உள்ளம்

உடைத்திடும் தடியடி.

*

குறள் 1325:

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.

பிழைகள் செய்தறியாத

உள்ளங்கவர் கள்ளியை

தொடாது கோபித்தலில்

பரவும் மின்சாரச் சுகம்.

*

குறள் 1326:

உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

உண்டு பசியாறலை விட

அதை ருசித்திடல் சுகம்;

கூடிக்களைத்தலை விட

ஊடித்திளைத்தல் அழகு.

*

குறள் 1327:

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.

ஊடல்ப்போரினில்

புறமுதுகிட்டவர்க்கு

கூடல் ஒப்பந்தத்தில்

வாகை சூடப்படும்.

*

குறள் 1328:

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.

தேகம் வியர்க்கும்

கலவிப்பெருஞ்சுகம்

ஊடல் கொண்டால்

நேருமோ மீண்டும்!

*

குறள் 1329:

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.

இன்னும் கொஞ்சம்

கோபம் கொள்ளடி,

ஊடல் நாடகத்தில்

விடிந்தால் இரவு!

*

குறள் 1330:

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.

காதலின் சுவை

ஊடலின் முனை

தாண்டிக்குதித்தால்

காமப் பெருங்கடல்.

0

(முடிந்தது)

தண்ணீர் சிற்பம்

காதல் அணுக்கள் / அத்தியாயம் 24

அதிகாரம் – புலவி நுணுக்கம்)

nymph 3.jpg7f18a8a4-8308-45c9-a86e-2e5565945416Largeகுறள் 1311:

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.

யான் தீண்டேன்

பெண்கள் கண்கள்

பிய்த்துத் தின்னும்

இவன் மார்பினை.

*

குறள் 1312:

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.

சண்டையினூடே ஒரு

தும்மல் நுழைப்பான்

நூறாயிசு” சொல்லி

சமாதானமாவேனென.

*

குறள் 1313:

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.

சன்ன அலங்காரம்

செய்து நின்றாலும்

எவளை மயக்கிட

இதெனக் கேட்பாள்.


*

குறள் 1314:

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.

எவரையும் விட இது

உயர்காதல் என்றால்

எவரை விட? எனச்

சிணுங்கி ஊடுவாள்.


*

குறள் 1315:

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.

இப்பிறவியில் பிரியேன்

என்றால் இனி வரும்

பிறவிகள் குறித்து இரு

கண்ணில் நீர் வைப்பாள்.


*

குறள் 1316:

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.

நினைத்தேன் என்றால்

அதற்கு முன் கணம்

ஏன் மறந்தாய்? எனக்

கேட்டு பிணங்குவாள்.


*

குறள் 1317:

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.


தும்மினால் வாழ்த்திப்

பின் எவள் நினைப்பில்

வெடித்த தும்மல் என

விசாரணை வைப்பாள்.

*

குறள் 1318:

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.

தும்மல் யுத்தங்கள்

தவிர்க்க அடக்கினால்

எவளை மறைக்கிறாய்

என்றொரு புது யுத்தம்.

*

குறள் 1319:

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.

கோபத்தில் பேரழகு என

சமாதானம் முயன்றால்

மற்றவளையும் இப்படியா

மயக்குவாய் என்கிறாள்.


*

குறள் 1320:

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.

கண்கள் கொட்டாது

அவளைப் புசித்தால்

எவளோடு ஒப்பிட்டு

ரசிப்பென சந்தேகம்.

0

பொய்க்கால் குதிரைகள்

காதல் அணுக்கள் / அத்தியாயம் 23

அதிகாரம் – புலவி

Viceroy_Butterflyகுறள் 1301:

புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.

பிரிவு ரணத்தை

அவனும் சற்று

அனுபவிக்கட்டும்

ஊடி விளையாடு!

*

குறள் 1302:

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.

சமையல் குறிப்பில்

உப்பு தேவைக்கேற்ப;

மையல் கலையில்

ஊடல் அதே போல்.

*

குறள் 1303:

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.

ஊடல் பெண்ணுரிமை;

லாவகமாய் உடைத்து

மெல்ல மனமிளக்கிக்

கூடல் ஆண் கடமை.

*

குறள் 1304:

ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.

ஊடல் கொண்டவளை

சமாதானம் செய்யாதது

சட்டப்படி குற்றமாகும்

.பி.கோ. செக்‌ஷன் 307.

*

குறள் 1305:

நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.

ஆண்மைக்கழகு

சலிக்காத கூடல்,

ஒரு பெண்ணின்

ப்ரியமான ஊடல்.

*

குறள் 1306:

துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.

சண்டையின் ருசியற்று

சீண்டாமல் தீண்டுதல்

சிறுவனோ கிழவனோ

செய்யும் விளையாட்டு.

*

குறள் 1307:

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று.

கூடித் திளைக்கும்

காலம் குறைக்கும்

ஊடல் என்பதால்

உண்டு சிறுவலி.

*

குறள் 1308:

நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி.

வலியை அறிதலே

அன்பெனப்படுகிறது

அவனை நினைத்தே

இந்த வலி யாவும்.

*

குறள் 1309:

நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.

அன்புள்ளவனிடம்

ஊடல் பலிக்கும்

அஃதில்லையெனில்

அது பல் இளிக்கும்.

*

குறள் 1310:

ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.

ஊடலை அணைக்காத

அவனை அணைத்துக்

கூட ஏங்கும் நெஞ்சம்

அதன் பெயர் வேட்கை.

 

குரோட்டன்களோடு கொஞ்ச நேரம்

காதல் அணுக்கள் / அத்தியாயம் 22

அதிகாரம் – நெஞ்சொடுபுலத்தல்

குறள் 1291:

அவர்நெஞ்சுஅவர்க்காதல்கண்டும்எவன்நெஞ்சே
நீஎமக்குஆகாதது.

 

Leaf_1_webசொல்பேச்சு கேட்கும்

ஆண் மனசு – இந்தப்

பெண் மனசு தான்

அடங்காப்பிடாரி!

 

*

 

குறள் 1292:

உறாஅதவர்க்கண்டகண்ணும்அவரைச்
செறாஅரெனச்சேறியென்நெஞ்சு.

 

முள் முனையளவும்

அன்பில்லாதவனைக்

கொஞ்சிக் கெஞ்சும்

வஞ்சியின் நெஞ்சம்.

 

*

 

குறள் 1293:

கெட்டார்க்குநட்டார்இல்என்பதோநெஞ்சேநீ
பெட்டாங்குஅவர்பின்செலல்.

 

என் ஒரே தோழி

சின்ன மனசையும்

களவாடிப் போன

கல்லூளி மங்கன்.

 

*

 

குறள் 1294:

இனிஅன்னநின்னொடுசூழ்வார்யார்நெஞ்சே
துனிசெய்துதுவ்வாய்காண்மற்று.

 

ஊடிப் பின் கூடும்

சுகம் புரியாத இந்த

முட்டாள் மனதோடு

பேசிப் பயனில்லை.

 

*

 

குறள் 1295:

பெறாஅமைஅஞ்சும்பெறின்பிரிவுஅஞ்சும்
அறாஅஇடும்பைத்தென்நெஞ்சு.

 

இல்லாவிட்டால்

“வர மாட்டானா?”

வந்து சேர்ந்தால்

“போய் விடுவானா?”

 

*

 

குறள் 1296:

தனியேஇருந்துநினைத்தக்கால்என்னைத்
தினியஇருந்ததென்நெஞ்சு.

 

தனிமையில் என்னை

மெல்ல முத்தமிட்டுக்

கொன்று செரித்திடும்

நினைவெனும் மிருகம்.

 

*

 

குறள் 1297:

நாணும்மறந்தேன்அவர்மறக்கல்லாஎன்
மாணாமடநெஞ்சிற்பட்டு.

 

அவனைத் துறக்காது

தீண்டித் தொடரும்

கிறுக்கு மனதோடு

வெட்கம் மறந்தேன்.

 

*

 

குறள் 1298:

எள்ளின்இளிவாம்என்றுஎண்ணிஅவர்திறம்
உள்ளும்உயிர்க்காதல்நெஞ்சு.

 

அவனைத் திட்டுதல்

சுயஇகழ்வு சமானம்

காத்திருக்கின்றன

உடம்பும் உயிரும்.

 

*

 

குறள் 1299:

துன்பத்திற்குயாரேதுணையாவார்தாமுடைய
நெஞ்சந்துணையல்வழி.

 

எல்லாத் துயிரிலும்

உடன் வரும் மனசு

காதல் மட்டும் இந்த

விதிக்கு மிக விலக்கு.

 

*

 

குறள் 1300:

தஞ்சம்தமரல்லர்ஏதிலார்தாமுடைய
நெஞ்சம்தமரல்வழி.

 

உடன் பிறந்த மனமே

துணை இருப்பதில்லை

காதலிக்காத அவனைக்

குறைபட ஏதுமில்லை.

 

***

 

மல்லிகைக் கிழமைகள்

காதல் அணுக்கள் / அத்தியாயம் 21

அதிகாரம் – புணர்ச்சிவிதும்பல்

 

couple-holding-handsகுறள் 1281:

உள்ளக்களித்தலும்காணமகிழ்தலும்
கள்ளுக்கில்காமத்திற்குண்டு.

 

மது போலில்லை

பார்வை போதும்

நினைப்பு போதும்

காதல் வெறியேற.

 

*

 

குறள் 1282:

தினைத்துணையும்ஊடாமைவேண்டும்பனைத்துணையும்
காமம்நிறையவரின்.

 

பிரபஞ்சமாய்ப் பிரியம்

பெருகுகையில் பிளவு

கூடாது அணுவளவும்

அதனின் துகளளவும்.

 

*

 

குறள் 1283:

பேணாதுபெட்பவேசெய்யினும்கொண்கனைக்
காணாதமையலகண்.

 

ரோமதிற்கொப்பு தான்

நானவனுக்கு எனினும்

அவனையே தேடித்

துடித்தலையும் கண்கள்.

 

*

 

குறள் 1284:

ஊடற்கண்சென்றேன்மன்தோழிஅதுமறந்து
கூடற்கண்சென்றதுஎன்னெஞ்சு.

 

கோபத்தின் கதிர்கள்

தாபமாய்க் குவியும்

விசித்திரமான ஆடி

ஒரு காதல் சந்திப்பு.

 

*

 

குறள் 1285:

எழுதுங்கால்கோல்காணாக்கண்ணேபோல்கொண்கன்
பழிகாணேன்கண்டஇடத்து.

 

தெளிவுப் பார்வையின்

நீச தூரமாய் அருகே

வந்ததும் மாயமாகும்

அவன் பிரிவுப்பிழை.

 

*

 

குறள் 1286:

காணுங்கால்காணேன்தவறாயகாணாக்கால்
காணேன்தவறல்லவை.

 

நெருங்கி வந்தால்

அவன் நிரபராதி;

விலகிப் போனால்

பெருங்குற்றவாளி.

 

*

 

குறள் 1287:

உய்த்தல்அறிந்துபுனல்பாய்பவரேபோல்
பொய்த்தல்அறிந்தென்புலந்து.

 

சுனாமி நீச்சலாய்

தோல்வி அறிந்து

களமாடும் சாகசம்

ஊடல் யுத்தம்.

 

*

 

குறள் 1288:

இளித்தக்கஇன்னாசெயினும்களித்தார்க்குக்
கள்ளற்றேகள்வநின்மார்பு.

 

எத்தனை உதாசீனம்

எத்தனை அவமானம்

மறந்து கிறங்கடிக்கும்

மார்பின் மயிர்கற்றை.

 

*

 

குறள் 1289:

மலரினும்மெல்லிதுகாமம்சிலர்அதன்
செவ்விதலைப்படுவார்.

 

பூவை விட, பஞ்சை விட,

மேகத் துணுக்குகளை விட

மென்மையின் உச்சம் காமம்

புரிந்தவன் புன்னகைக்கிறான்.

 

*

 

குறள் 1290:

கண்ணின்துனித்தேகலங்கினாள்புல்லுதல்
என்னினும்தான்விதுப்புற்று.

 

என்னை விட வேகமாய்

முரடாய்த் தழுவுகிறாள்

கண்களில் பிடிவாதமாய்

சினங்கொண்ட சிநேகிதி.

 

***

 

இக்கடல் இச்சுவை

காதல் அணுக்கள் / அத்தியாயம் 20

(அதிகாரம் – குறிப்பறிவுறுத்தல்)

 

valentine_flowers1குறள் 1271:

கரப்பினுங்கையிகந்தொல்லாநின்உண்கண்
உரைக்கல்உறுவதொன்றுண்டு.

 

பிரிவை விரும்பாத

பிரியத்தின் ஒளியை

மறைக்கத் தகுமோ

இந்தக் கண்களால்!

 

*

 

குறள் 1272:

கண்ணிறைந்தகாரிகைக்காம்பேர்தோட்பேதைக்குப்
பெண்நிறைந்தநீர்மைபெரிது.

 

விழி தின்னும் விழி

சுழித்தோடும் மேனி

இதெல்லாம் கடந்து

பெண்மை பேரழகு!

 

*

 

குறள் 1273:

மணியில்திகழ்தருநூல்போல்மடந்தை
அணியில்திகழ்வதொன்றுஉண்டு.

 

முத்து மாலையின்

வெள்ளிக்கம்பியாய்

பெண்ணழகின் பின்

ஓர் அழைப்புண்டு.

 

*

 

குறள் 1274:

முகைமொக்குள்உள்ளதுநாற்றம்போல்பேதை
நகைமொக்குள்உள்ளதொன்றுண்டு.

 

வெடிக்காத மலரின்

ரகசிய வாசனையாய்

இவள் புன்னகையுள்

அவன் நினைவுகள்.

 

*

 

குறள் 1275:

செறிதொடிசெய்திறந்தகள்ளம்உறுதுயர்
தீர்க்கும்மருந்தொன்றுஉடைத்து.

 

கைவளையழகியின்

எனக்கு மட்டுமான

கள்ளச்சைகைகளில்

சேதமாகும் சோகம்.

 

*

 

குறள் 1276:

பெரிதாற்றிப்பெட்பக்கலத்தல்அரிதாற்றி
அன்பின்மைசூழ்வதுடைத்து.

 

ஓர் ஆத்மார்த்த அணைப்பு

காதலை உணர்த்துகிறது

காமத்தை உணர்த்துகிறது

பிரிவை உணர்த்துகிறது.

 

*

 

குறள் 1277:

தண்ணந்துறைவன்தணந்தமைநம்மினும்
முன்னம்உணர்ந்தவளை.

 

கலந்தவன் விலகுவான்

கவலைகள் தீட்டுவான்

நழுவும் வளையல்கள்

செப்பும் முன்னறிவிப்பு.

 

*

 

குறள் 1278:

நெருநற்றுச்சென்றார்எம்காதலர்யாமும்
எழுநாளேம்மேனிபசந்து.

 

நேற்று போனான்

உடலில் பரவிடும்

பிரிவுச்சாயையில்

நூற்றாண்டு ரணம்.

 

*

 

குறள் 1279:

தொடிநோக்கிமென்தோளும்நோக்கிஅடிநோக்கி
அஃதாண்டவள்செய்தது.

 

உடன் வருவாள்

என்று சொல்லும்

கழலும் வளையல்

சுழலும் கால்கள்.

 

*

 

குறள் 1280:

பெண்ணினால்பெண்மைஉடைத்தென்பகண்ணினால்
காமநோய்சொல்லிஇரவு.

 

பிரிய பயப்படுவது

மிகுபெண்மை வீசிக்

காதலை யாசிக்கும்

அந்த விழிகளுக்காக.

 

***

 

நீ இப்பொழுது இறங்கும்ஆறு

காதல் அணுக்கள் / அத்தியாயம் 19

(அதிகாரம் – அவர்வயின்விதும்பல்)

குறள் 1261:

Woman-man-on-separate-benches2வாளற்றுப்புற்கென்றகண்ணும்அவர்சென்ற
நாளொற்றித்தேய்ந்தவிரல்.

 

வழி பார்த்துப் பூத்த விழி

காலண்டர் காய்த்த விரல்

அழகழிக்கும் ராட்சசனாய்

அவனுக்கான காத்திருப்பு.

 

*

 

குறள் 1262:

இலங்கிழாய்இன்றுமறப்பின்என்தோள்மேல்
கலங்கழியும்காரிகைநீத்து.

 

பிரிவுத் துயரினில்

நழுவும் வளையல்

உடைந்து சிதறும்

உன்னை மறந்தால்.

 

*

 

குறள் 1263:

உரன்நசைஇஉள்ளம்துணையாகச்சென்றார்
வரல்நசைஇஇன்னும்உளேன்.

 

விரும்பிய வெற்றியை

நெருங்க விலகியவன்

திரும்புதல் நோக்கியே

அரும்பி நீளும் ஆயுள்.

 

*

 

குறள் 1264:

கூடியகாமம்பிரிந்தார்வரவுள்ளிக்
கோடுகொடேறுமென்நெஞ்சு.

 

காடேறி மேடேறி

மரமேறி மலையேறி

அவனைக் கண்தேடும்

காதல் பித்து மனம்.

 

*

குறள் 1265:

காண்கமன்கொண்கனைக்கண்ணாரக்கண்டபின்
நீங்கும்என்மென்தோள்பசப்பு.

 

மீண்டு வருமென்

தேகத் திருவனப்பு

மீண்டும் அவனைக்

கண்கள் கண்டால்.

 

*

 

குறள் 1266:

வருகமன்கொண்கன்ஒருநாள்பருகுவன்
பைதல்நோய்எல்லாம்கெட.

 

பிரிந்திருந்த நாட்களுக்கும்

சேர்த்து திரும்பிய தினமே

தேகம் தேயத் துய்ப்பேன்

மோகக் கடன் தீர்ப்பேன்.

 

*

 

குறள் 1267:

புலப்பேன்கொல்புல்லுவேன்கொல்லோகலப்பேன்கொல்
கண்அன்னகேளிர்விரன்.

 

அவன் திரும்பினால்

அழுது தீர்ப்பேனோ

தழுவிக் கிடப்பேனோ

அல்லது இரண்டுமோ!

 

*

 

குறள் 1268:

வினைகலந்துவென்றீகவேந்தன்மனைகலந்து
மாலைஅயர்கம்விருந்து.

 

வினை வென்ற பின்

விரைந்து வந்தவளைத்

திறந்து விருந்துண்ண

இரவு இனித்திருக்கும்.

 

*

 

குறள் 1269:

ஒருநாள்எழுநாள்போல்செல்லும்சேண்சென்றார்
வருநாள்வைத்துஏங்குபவர்க்கு.

 

காதல் பிரிவுத்துயரில்

கிடப்பவளது கற்பனை

கிழிந்து க்ளீஷேவாகும்

ஒரு கணம் ஒரு யுகம்.

 

*

 

குறள் 1270:

பெறின்என்னாம்பெற்றக்கால்என்னாம்உறினென்னாம்
உள்ளம்உடைந்துக்கக்கால்.

 

பிரிவு தாங்காமல்

மனசு சிதைந்தால்

திரும்ப வந்தென்ன

தீரக் கலந்தென்ன!

 

***