லஞ்சக் கலாசாரம்

23. ராபர்ட் கிளைவ்

 

ராபர்ட் க்ளைவ்

உலகத்தில் அத்தனைபேர் எண்ணமும் ஒரே போல இருப்பதில்லை. சிலருக்கு ஒரு விசயம் பிடித்தால் பலருக்கு அது பிடிக்காது. வில்லத்தனமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு சாரருக்கு வில்லனாகப் படும் ஒரு ஆள் இன்னொரு சாரருக்கு நாயகனாகத் தென்படுவார்.  ஒரு நாட்டையே கொள்ளையடித்துக் கைப்பற்றியவரை,  அவரது நாட்டுக்காரர்கள் தேசத்தொண்டனாகப் பார்ப்பதும், கைப்பற்றப்பட்ட நாட்டுக்காரர்கள் பக்கா வில்லனாகப் பார்ப்பதும் சகஜம்.  இந்தியாவையே எடுத்துக் கொண்டால் இங்கு படையெடுத்து வந்து நமது வரலாற்றுப் புத்தகங்களில் கொள்ளைக்காரர்களாகவும் கொடுங்கோலர்களாகவும் நாம் படித்துக் கொண்டிருக்கும் பலர், அவரவர் நாடுகளில் தேசநாயகன்களாக போற்றப்படுகின்றனர்.  இவ்வரிசையில் நடுநாயகமாக வீற்றிருப்பவர் ராபர்ட் கிளைவ். இந்தியத் துணைக்கண்டம் ஆங்கிலேயர் வசமாவதற்கு முக்கிய காரணகர்த்தாவாகக் கருதப்படுபவர். அவரே இந்த வாரம் (நமக்கு) வில்லன்.

பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒளரங்கசீப்பின் மரணத்துக்குப் பின்னால் முகலாயர் ஆட்சி வலுவிழக்கத் தோன்றியது.  முகலாய அரசின் சிற்றரசர்களும் பிராந்திய ஆளுனர்களும், ஆளுக்கொரு மாநிலத்தை பிரித்தெடுத்துக் கொண்டு அங்கு ஆதிக்கம் செலுத்தலாயினர். முகலாயர்களின் இந்த வீழ்ச்சியால் இந்தியாவில் ஒரு அதிகார வெற்றிடச்சூழல் உருவாகியது.  இக்காலத்தில் தலைதூக்கிய மராத்தியப் பேரரசும் இதை நீக்க முயன்று தோற்றது. யார் அடுத்து இந்தியாவை ஆளப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்த இக்காலகட்டத்தில் ஐரோப்பியர்கள் இந்தியாவை வணிக நோக்குடன் பார்த்துவந்தனர். வர்த்தகமும் லாபமுமே பல்வேறு ஐரோப்பிய கிழக்கிந்தியக் கம்பனிகளின் குறிக்கோள்களாக இருந்து வந்தன.  அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமென்று முதலில் அவர்கள் நினைக்கவில்லை. ஆனால் முகலாயர்களுக்குப் பின்னால் இந்தியாவில் பலமான ஒரு  அரசு அமையாதது ஆட்சியைக் கைப்பற்ற அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. அப்போது கூட பேரரசை அமைப்பது அவர்களது குறிக்கோளாக இல்லை, அதிகாரத்தால் அதிகமாக சம்பாதிப்பதே அவர்களது ஒரே நோக்கமாக இருந்தது. பிரெஞ்சு, டச்சு, போர்த்துகீசிய, டானிய என பல கிழக்கிந்தியக் கம்பனிகள் அப்போது இந்தியாவில் இருந்தாலும், இந்தச் சூழலை நன்கு பயன்படுத்திக் கொண்டு இந்தியாவை வளைத்துப் போடும் ரேசில் ஜெயித்தது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி தான். இதற்கு முதற் காரணம் ராபர்ட் கிளைவ்.

கிளைவ் பெரிய குடும்பத்தில் பிறந்தவர் கிடையாது. சாதாரண நடுத்தர குடும்பம் தான். இங்கிலாந்து நடுத்தர இளைஞர்கள் பணம் சம்பாதித்து செட்டில் ஆக வேண்டுமென்றால் கிழக்கிந்தியக் கம்பனியில் சேர்ந்து இந்தியாவில் சில காலம் பணிபுரிவது வழக்கமாக இருந்தது. இவ்வழக்கப்படி கிளைவும் தனது பதினெட்டாவது வயதில் கம்பனியில் ஒரு எழுத்தராகச் சேர்ந்து இந்தியாவுக்குக் கிளம்பினார். அவர் இந்தியா வந்த காலத்தில், பிரெஞ்சுக்காரர்களுக்கும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனிக்கும் தென்னிந்தியாவில் யார் தாதா ஆவதென்று பலப்பரீட்சை நடந்து கொண்டிருந்தது. இந்த காலத்தில் தான் ஐரோப்பாவில் இரு நாடுகளுக்குமிடையே அடிக்கடி சண்டை நடந்து கொண்டிருந்தது. அங்கு போர் மூளும்போதெல்லாம், அதைக் காரணம் காட்டி இந்தியாவிலும் இரு தரப்பினரும் மோதிக் கொண்டிருந்தனர். அப்போது தென்னிந்தியாவில் சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டை தான் பிரிட்டிஷாரின் தலைமையிடமாக இருந்தது.  கிளைவ் சென்னைக்கு வந்து எழுத்தராக வேலை பார்க்கத் தொடங்கி சில நாட்களுக்கெல்லாம் பிரெஞ்சுக்காரர்கள் சென்னையைத் தாக்கினர். பாண்டிச்சேரி ஆளுனர் டூப்ளே தலைமையிலான பிரெஞ்சுப் படை சென்னையைக் கைப்பற்றி கிளைவ் உட்பட பல கம்பனி ஊழியர்களைப் பிணைக்கைதிகளாகப் பிடித்துக் கொண்டது.  சென்னையை மீட்க கம்பனிகாரர்களோடு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த போதே கிளைவ் தன் சக ஊழியர்களோடு சென்னையிலிருந்து தப்பினார்.  சாதாராண குமாஸ்தாவான இளைஞன் ஒருவன் தந்திரமாக பிரெஞ்சுப் பிடியிலிருந்து தப்பியது கம்பனி அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.  அவர்கள் கம்பனி படையில் அதிகாரியாக கிளைவை நியமித்தார்கள்.

ஆனால் வெகு சீக்கிரம் பிரெஞ்சுக்காரர்களோடு அமைதி உடன்பாடு கையெழுத்தானதால், கிளைவ் மீண்டும் பழைய எழுத்தர் வேலைக்கே போக நேரிட்டது. ஆனால் சென்னையிலிருந்து தப்பியபோது கிடைத்த சந்தோஷத்தை கிளைவ் மறக்கவே இல்லை. அவருக்கு எழுத்தர் வாழ்க்கை சலித்துப் போனது. பிரெஞ்சுக்காரர்களோடு நிகழ்ந்த அடுத்த கட்ட மோதலில் தானாக முன்வந்து படைகளில் மீண்டும் சேர்ந்தார்.  டூப்ளேவும், கம்பனியும் கர்னாடகப் பகுதியை (தற்கால ஆந்திரா, தமிழகம்)  யார் கட்டுப்படுத்துவது என்று பலப்பரீட்சை நடத்திக் கொண்டிருந்தனர். கம்பனி முகமது வாலாஜாவையும்,  டூப்ளே சந்தா சாகிபையும் ஆதரித்தனர். 1751ல் சந்தா சாகிபின் பெரும்படையொன்று பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலிருந்த ஆற்காட்டை முற்றுகையிட்ட போது, ஆற்காட்டுப் படைகளுக்குத் தலைமையேற்ற கிளைவ் திறமையாகச் செயல்பட்டு முற்றுகையைத் தோற்கடித்தார். இதனால் அவரது புகழ் கம்பனி வட்டாரங்களில் பரவத்தொடங்கியது.  சிறிது காலம் இங்கிலாந்தில் இருந்துவிட்டு மீண்டும் இந்தியாவுக்கு வந்த கிளைவ், இம்முறை வங்காளத்துக்கு அனுப்பப்பட்டார்.

தென்னாட்டைப் போலவே வங்காளத்திலும் கடும் அதிகாரப் போட்டி நடந்து கொண்டிருந்தது. அங்கும் உள்ளூர் அரசியலில் கம்பனிக்காரர்கள் தலையிட்டு கட்டப் பஞ்சாயத்து வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர். இது பிடிக்காத வங்காளத்தின் நவாப் சிராஜ் உத்-தாலா கம்பனித் தலைமையிடமான கல்கத்தா மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றினார். கல்கத்தாவை சிராஜ் உத்-தாலாவிடமிருந்து மீட்க ஒரு திறமையான ஆள் கம்பனிக்குத் தேவைப்பட்டது. ஆற்காடு முற்றுகையை திறம்பட சமாளித்த கிளைவின் தலைமையில் ஒரு சிறுபடையை  கல்கத்தாவுக்கு அனுப்பினர்.  நவாபின் பலமோ அளப்பரியது, படைபலமும் பணபலமும் பெரியது. கிளைவிடம் இருந்ததோ சிறு படை. நேரடியாக நவாபுடன் மோதினால் அழிவு நிச்சயம் என்பதை உணர்ந்த கிளைவ் அதிரடித் தாக்குதல் உத்திகளைக் கையாண்டார். விரைவில் கல்கத்தாவை நவாபிடமிருந்து மீட்டார். அடுத்து நவாபை ஒழித்துக் கட்ட திட்டம் தீட்டினார். நவாபின் ஆட்களுள் அவர் மீது அதிருப்தியடைந்த சிலர் நவாப் ஆட்சியைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டி வந்தனர். இந்த செய்தி கிளைவின் காதுகளை எட்டியவுடன் உடனடியாக சதிகாரர்களை சந்தித்தார்.  நவாபின் படைத்தளபதி மீர் ஜாஃபர் தான் இந்த சதிகாரர்களின் தலைவர்.  மீர் ஜாஃபரின் பதவி ஆசையைப் பயன்படுத்திக் கொண்ட கிளைவ், சிராஜ் உத்-தாலாவைக் காட்டிக் கொடுத்தால் ஜாஃபரை அடுத்த நவாபாக்கி விடுவதாக ஆசைகாட்டி தன் கைக்குள் போட்டுக் கொண்டார்.

ஜாஃபருக்கும் கிளைவுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட முக்கிய காரணமாக இருந்தவர் உமிச்சந்த் என்ற வங்காள வர்த்தகர்.  சதிகார கும்பலுக்கும் கம்பனிக்குமிடையே தூதராக செயல்பட்டு வந்தார். தனது சேவைகளுக்கு பதிலாக அதிக பணம் வேண்டுமென்று கிளைவை நச்சரித்து வந்தார். நவாபுக்கு துரோகமிழைக்க ஜாஃபரைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்த அதே சமயம் உமிச்சந்துக்கு ஒரு துரோகத்தைச் செய்தார் கிளைவ்.  சிராஜ் உத்-தாலாவைக் காட்டிக் கொடுக்க உதவினால் மூன்று லடசம் பவுண்டுகள் தருவதாக ஒப்புக்கொண்டு அதற்கேற்றார் போல ஒரு போலிப் பத்திரத்தைத் தயார் செய்து உமிச்சந்திடம் காட்டினார். அதனை நம்பி ஏமாந்த உமிச்சந்தும் மீர் ஜாஃபர்-கிளைவிடையே தூது போய் வந்தார். ஜாஃபரைக் கைக்குள் போட்டுக் கொண்டவுடன் சிராஜ் உத்-தாலாவை சண்டைக்கு இழுத்தார்.  1757ல் வங்காளத்தில் பலாஷி என்ற இடத்தில் (ஆங்கிலத்தில் பிளாசி என்றானது) இரு தரப்பும் மோதிக்கொண்டன. பிளாசி சண்டை (Battle of Plassey) என்று தற்போது வரலாற்றாளர்களால் அறியப்படும் இந்த சண்டை தான் இந்தியாவின் வரலாற்றை மாற்றி அமைத்தது.  சிராஜ் உத்-தாலாவின் படைகள் கம்பனிப் படைகளை விட எண்ணிக்கையில் பல மடங்கு அதிகம். ஆனால் அவற்றில் ஒரு பகுதி மீர் ஜாஃபரின் கட்டுப்பாட்டில் இருந்தது.  சண்டை நடந்து கொண்டிருக்கும் போதே மீர் ஜாஃபாரின் படைப்பிரிவு போரிலிருந்து விலகிக் கொண்டது. ஜாஃபரின் துரோகம் தந்த அதிர்ச்சியிலிருந்து சிராஜ் உத்-தாலா மீள்வதற்குள் கிளைவின் படைகள் அவரது படைகளைத் தோற்கடித்துவிட்டன. சிராஜ் உத்-தாலா உயிர் பிழைக்க போர்க்களத்திலிருந்து தப்பி ஓடினார். ஆனால் ஜாஃபரின் சக சதிகாரர்கள் அவரைக் கைதுசெய்து கொலை செய்துவிட்டனர்.  ஜாஃபர் வங்காளத்தின் புதிய நவாப் ஆனார், இந்தியாவில் பிரிட்டிஷ ஆதிக்க காலம் தொடங்கியது. (கிளைவ் ஆரம்பித்து வைத்த துரோக சூழ்ச்சி உத்திகளை சில ஆண்டுகளில் ஜாஃபர் மீதே பிரயோகித்தனர் பிரிடிஷ்காரர்கள் – அவரை நவாப் பதவியில் இருந்து தூக்கி விட்டு அவரது மருமகன் மீர் காசிமை நவாப் ஆக்கிவிட்டனர்.)

தன்னை நவாப் ஆக்கியதற்கு நன்றிக்கடனாக கிளைவுக்கு பணத்தை அள்ளி வீசினார் மீர் ஜாஃபர். கம்பனி கணக்கிலும், படை வீரர்கள் கணக்கிலும் எழுதியது போக லட்சக்கணக்கில் சொந்த செலவுக்காகவும் வங்காள அரசிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டார் கிளைவ்.  இப்படி உள்ளூர் ஆட்சியாளர்களிடமிருந்து நேரடியாக கையூட்டு வாங்கும் பழக்கத்தைக் கிழக்கிந்திய கம்பனிக்கு பெரிய அளவில் அறிமுகப்படுத்திய பெருமை கிளைவையே சேரும். சம்பாதிக்க நினைத்ததை விட பல மடங்கு ஈட்டியபின்னர் இங்கிலாந்து திரும்பி அங்கு சில ஆண்டுகள் வாழ்ந்தார். பின்னர் மூன்றாவது முறையாக 1765ல் மீண்டும் இந்தியா திரும்பினார். இம்முறை சூழ்ச்சிகளில் ஈடுபடாமல் நேரடியாக முகலாயப் பேரரசரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இந்தியாவின் பல பகுதிகளை கம்பனியின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். இதன் மூலம் கிழக்கிந்தியக் கம்பனி இந்தியாவில் ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆட்சியாளராகிவிட்டது. அடுத்த அரை நூற்றாண்டில் இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகள் கம்பனியின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன.

நன்றாக சம்பாதித்து செட்டில் ஆன பின்னால் கிளைவ் கம்பனியின் நிருவாகத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர முயன்றார். ஆனால் அவர் ஆரம்பித்து வைத்த லஞ்சக் கலாசாரம் கம்பனியின் கீழ்மட்டம் வரை பரவியதால் அவரது சீர்திருத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. கம்பனி பொறுப்புகளில் இருந்து ஓய்வு பெற்று  இங்கிலாந்து திரும்பிய கிளைவ் சில வருடங்களுக்குப் பின் தற்கொலை செய்து கொண்டார். அவர் இந்தியாவில் செய்த காரியங்களால் மனம் வருந்தி தற்கொலை செய்து கொண்டார் என்று ஒரு கருத்தும்,  தீராத நோயினால் அவதிப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார் என்று இன்னொரு கருத்தும் நிலவுகின்றன. இந்தியாவில் சம்பாதித்த பணத்தை அவரால் அனுபவிக்க முடியவில்லையென்றாலும்,  பிரிட்டிஷ் பேரரசின் வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற்றுவிட்டார். அவர் ஆரம்பித்து வைத்த வேலையை, வாரன் ஹாஸ்டிங்க்ஸ், ஆர்தர் வெல்லஸ்லி,  தல்ஹாய்சி ஆகியோர் முடித்து வைத்தனர். இந்தியத் துணைக்கணடம் முழுவதும் அடுத்த நூற்றைம்பதாண்டுகளுக்கு பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்தது.  இப்போது இந்தியர்களால் நாட்டைக் கொள்ளையடித்த வில்லனாகவும், பிரிட்டிஷ்காரர்களால் சிலைவைத்துப் போற்றப்படும் நாயகனாகவும் விளங்குகிறார் கிளைவ்.

ஆசை எமன்

23. ஜியா உல் ஹக்

 

ஆமை புகுந்த வீடு, அமீனா புகுந்த வீடு போலத் தான் மதம் அரசியலில் புகுந்த நாடும். உருப்படாமல் போகும். வெறுமனே மதம் புகுந்த நாட்டுக்கே இந்த கதியென்றால் மதத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட நாட்டைப் பற்றி கேட்கவே வேண்டாம்.  இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் முஸ்லிம்கள் சுதந்திரத்துடனும் உரிமையுடனும் வாழ முடியாது என்ற அச்சத்தில் உருவானதே பாகிஸ்தான்.  முஸ்லிம்களுக்கென ஒரு தனி நாடு வேண்டுமென்று கோரிய ஜின்னாவின் ஆசைப்படி ஒரு இஸ்லாமிய நாடாகத் தோற்றுவிக்கப்பட்டது பாகிஸ்தான்.  மதத்தின் அடிப்படையில் நாடு அமைந்ததேயொழிய, சரியான முறையில் மக்களாட்சி அமைப்புகள் அதில் உருவாகவில்லை.  மாறி மாறி ராணுவ ஆட்சியும்,  மக்களாட்சியும் ஏற்பட்டு அந்நாடு அழிவை நோக்கி மெல்லச் சென்றது.  பாகிஸ்தானின் நிலை அந்நாட்டை மற்றும் பாதிப்பதில்லை. சுற்றியுள்ள நாடுகளையும் – குறிப்பாக இந்தியாவையும் பாதிக்கிறது. பாகிஸ்தானை நாச பாதையில் இட்டுச் சென்ற பெருமை அதன் ஆட்சியாளர்கள் அனைவரையும் சேரும் என்றாலும், அதைக் காப்பாற்றவே முடியாது என்ற நிலைக்கு ஆளாக்கியவர் பதினோராண்டுகள் அதன் ஜனாதிபதியாகவும் சர்வாதிகாரியாகவும் இருந்த தளபதி ஜியா-உல்-ஹக்.

ஜின்னாவுக்குப் பின்னர் வந்த ஆட்சியாளர்களின் பேராசையாலும் கையாலாகாத்தனத்தாலும் அந்நாட்டில் அடிக்கடி ராணுவப் புரட்சி வெடித்து ராணுவ தளபதிகள் ஆட்சியைக் கைப்பற்றி வந்தனர். அரசியல்வாதிகளின் ஊழல் தாங்க முடியாமல் மக்கள் ராணுவ ஆட்சியை வரவேற்பதும், கொஞ்ச நாள் போன பின்னால் ராணுவ சர்வாதிகாரியின் அட்டகாசம் தாங்க முடியாமல் மீண்டும் மக்களாட்சி வேண்டுமென்று கேட்பதும் பாகிஸ்தானில் வழக்கமாகிப் போய்விட்டது.  பாகிஸ்தான் உருவாகி சில ஆண்டுகளிலேயே ஜின்னா இறந்து போனார். அவர் உயிருடன் இருந்த போது அவரைப் போல பெரிய பிம்பம் கொண்ட இரண்டாம் கட்டத் தலைவர்களை உருவாக்க வில்லையென்பதால் அவரைத் தொடர்ந்து வந்தவர்கள் அவரைப் போன்று பாகிஸ்தான் மக்கள் மத்தியில் மதிப்போ பரவலான ஆதரவோ பெற்றிருக்கவில்லை. பாகிஸ்தான் வெளியிலிருந்து பார்ப்பதற்கு  ஒரே மதத்தால் ஒன்று பட்ட நாடுபோலத் தோன்றினாலும், அதன் மக்களுக்கு மதத்தைத் தவிர பொதுவில் ஒன்றும் கிடையாது. இந்தியாவைப் போலவே அங்கும் பல இனங்கள், குழுக்கள், மொழிகள், பிரதேச உணர்வுகள் இருந்தன. இந்தியா தன் அரசியலமைப்பிலேயே யதார்த்தத்தை ஒத்துக்கொண்டு அதற்கேற்றார் போல் தன் போக்கினை அமைத்துக் கொண்டது. ஆனால் பாகிஸ்தான் தன் மக்களை இணைக்க மதம் ஒன்றே போதும் என்று தப்புக் கணக்குப் போட்டதால் உள்நாட்டுப் பிரச்சனைகள் பெருகின. முதலில் மொழிப்பிரச்சனை தான் உருவானது – கிழக்குப் பாகிஸ்தானில் (தற்கால பங்களாதேசம்) வங்காள மொழிக்கு உருது மொழிக்கு இணையான அந்தஸ்து வேண்டுமென்று போராட்டங்கள் தொடங்கின.  பின் முஸ்லிம்களுள் ஒரு பிரிவினரான அஹ்மாதியாவினருக்கு எதிராக அவ்வப்போது கலவரங்கள் வெடித்த வண்ணம் இருந்தன.

பொருளாதார ரீதியாகவும் நாடு பின்தங்கத் தொடங்கியது. 1958ல் ஜனநாயகத்தின் குறைபாடுகளைச் சகிக்க முடியாத பாகிஸ்தான் மக்கள் தங்களது முதல் பெரும் தவறினைச் செய்தனர் –  ராணுவத் தளபதி அயூப் கான் ஆட்சியைக் கைப்பற்றிய போது தங்களுக்கு விடிவு காலம் பிறந்து விட்டது என எண்ணி அதனை வரவேற்றனர்.  அடுத்த பதின்மூன்று ஆண்டுகள் அயூப் கானே பாகிஸ்தானின் சர்வாதிகாரியாக இருந்தார். உள்நாட்டுப் பிரச்சனைகளை மக்கள் மறக்க வேண்டுமென்பதற்காக இந்தியாவுடன் 1965ல் ஒரு போரையும் மூட்டி விட்டார். யாருக்கும் வெற்றியில்லாமல் முடிவடைந்த அப்போரினால் பாகிஸ்தானின் பொருளாதாரம் மேலும் சீர்குலைந்தது. அயூப் கானுக்கு மக்களிடம் ஆதரவு கரைந்து போனதால் அவர் பதவி விலகி, இன்னொரு ராணுவ தளபதி யாஹ்யா கான் சர்வாதிகாரியானார். அவர் நடத்திய பொதுத் தேர்தலில் கிழக்கு பாகிஸ்தானின் வங்காளிகள் வெற்றி பெற்று அவர்களது தலைவர் முஜிபூர் ரகுமான் அடுத்த பாகிஸ்தான் பிரதமராகும் வாய்ப்பு உருவானது. இதை ஏற்றுக்கொள்ள முடியாத மேற்கு பாகிஸ்தான் இனவாதிகள் தேர்தல் முடிவுகளைச் செல்லாது என்று அறிவித்தனர். கிழக்கு பாகிஸ்தானில் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டனர், லடசக்கணக்கில் மக்கள் மடிந்து, மேலும் பல லட்சக்கணக்கானோர் இந்தியாவுக்கு அகதிகளாக ஓடும் நிலை உருவானது. இந்தியா இவ்விஷயத்தில் தலையிட்டுப் போர் மூண்டு பாகிஸ்தான் இரண்டாகப் பிளவுபட்டது. பங்களாதேஷ் என்ற புதிய நாடு உருவானது.

நாடு இரண்டு பட்டபின் இராணுவ ஆட்சியின் அபாயங்களைப் பற்றி மக்களுக்கு லேசாக உறைத்தது. இதனால் மீதமிருந்த பாகிஸ்தானில் மீண்டும் மக்களாட்சி ஏற்பட்டு சுல்ஃபிக்கார் அலி பூட்டோ பிரதமரானார். ஆனால் அவரும் முந்தைய ராணுவ ஆட்சியாளர்களைப் போலவே நாட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்தாமல், இந்தியாவை எப்படி ஒழிப்பது என்பதிலேயே குறியாக இருந்தார். இந்தியா அணுகுண்டு செய்ததைக் கண்டு பொறாமை கொண்டு பிச்சை எடுத்தாலும் நம் நாடும் அணுகுண்டு செய்யவேண்டும் என்று முறுக்கிக் கொண்டார். இப்படி தன்னாட்டை கவனியாமல் இந்தியா மீதே கவனம் செலுத்தி வந்ததால் பாகிஸ்தானில் பிரிவினைவாதமும் மதவாதமும் தலைதூக்கத் தொடங்கின.  வழக்கமாக பாகிஸ்தானின் ஜனநாயக ஆட்சியாளர்களுக்கு நேரும் கதியே அவருக்கும் நேர்ந்தது. 1977ல் மீண்டும் ராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. ஜெனரல் ஜியா-உல்-ஹக் பாகிஸ்தானின் சர்வாதிகாரியாகப் பொறுப்பேற்றார். அதுவரை மதப் புதைகுழிக்குள் இடுப்புவரை முழுகியிருந்த பாகிஸ்தான் அதிலிருந்து மீண்டுவர மிதமிருந்த கொஞ்ச நஞ்ச வாய்ப்பு அதோடு காலியானது.

ஜியா பிரிக்கப்படாத இந்தியாவில் பிறந்தவர்.  பிரிட்டிஷ் இந்தியாவின் ராணுவத்தில் அதிகாரியாக சேர்ந்து இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றார். 1947ல் இந்தியப் பிரிவினையின் போது ராணுவமும் பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் ராணுவம் உருவானது. அதில் உடனே இணைந்தார் ஜியா.  படிப்படியாக பதவி உயர்வு பெற்றார்.  அவர் ராணுவத்தில் பணியாற்றிய போது தான் அதன பலம் உயர்ந்து நாடே அதன் வசமானது. இப்படிப்பட்ட சூழ்நிலை ஜியா போன்ற இளம் அதிகாரிகளுக்கு ஜனநாயகத்தின் மீது ஒரு இளக்காரமான எண்ணத்தை உருவாக்கி விட்டது. யார் தங்களை ஆள்வது என்பதைத் தீர்மானிக்க மக்கள் லாயக்கற்றவர்கள், மக்களாட்சி வேஸ்ட், ராணுவத்தால் மட்டுமே நிலையான நல்லாட்சி தரமுடியும் என்ற பிம்பத்தில் மூழ்கிய ஒரு புதிய தலைமுறையே உருவானது.  யாஹ்யா கான் ஆட்சி கவிழ்ந்து பூட்டோ பிரதமரான போது பாகிஸ்தான் தரைப்படையில் மிக உயரிய பதவியில் இருந்தார் ஜியா. உடனடியாக பூட்டோவுக்கு காக்கா பிடிக்கும் வேலைகளில் இறங்கினார்.  பூட்டோவுக்கு விசுவாசமானவர் போல நடித்தார்.

ராணுவம் மீண்டும் அரசியலில் தலையிடாமல் இருக்க தனக்கு நம்பிக்கையான ஒருவர் ராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருக்க வேண்டுமென்று பூட்டோ விரும்பினார். தனது கையாள் என்றால் ராணுவம் தன் மீது பாயாது என்று நம்பினார். பாம்புக்கு பால் வார்க்கிறோம் என்ற றியாமல் ஜியாவினை ராணுவத்தின் தலைமை தளபதியாக்கினார். ஜியாவைக் காட்டிலும் சீனியராக பல தளபதிகள் இருந்தனர் ஆனால் அவர்களுக்கு மேலாக பதவி உயர்வு கொடுத்து ஜியாவை உயர் பதவிக்குத் தூக்கி விட்டார் பூட்டோ.  வளர்த்த கடா மார்பில் பாயும் என்ற கதை ஜியா விஷயத்திலும் உண்மையானது.  பதவிக்கு வந்து ஆறாண்டுகளில் பூட்டோவை பாகிஸ்தான் மக்களுக்கு பிடிக்காது போனது. தனக்கு எதிரான போராட்டங்களையும் எதிர்க்கட்சிகளையும் ஜியாவின் துணையுடன் ராணுவத்தைக் கொண்டு அடக்கினார் பூட்டோ.  இதனால் பூட்டோ-ஜியா கூட்டணியில் ஜியாவின் கை ஓங்கியது.  ராணுவத்தின் துணையின்றி பூட்டோ பதவியில் நீடிக்க முடியாதென்ற நிலை உருவானது.  நமது தயவினால் தான் இவன் பதவியில் இருக்கிறான், நாமே பேசாமல் ஆட்சியைப் பிடித்துவிட்டால் என்ன என்று எண்ணினார் ஜியா. பூட்டோவையும் அவரது அமைச்சர்களையும் பிடித்து சிறையில் தள்ளினார். பாகிஸ்தானின் மூன்றாவது ராணுவ சர்வாதிகாரியாகத் தானே பொறுப்பேற்றுக் கொண்டார்.

பதவிக்கு வந்தவுடன் புதிய சர்வாதிகாரிகள் வழக்கமாகப் பாடும் -விரைவில்  தேர்தல்கள் நடத்துவேன் என்ற பல்லவியை ஜியாவும் பாடினார். ஆனால் விரைவில் அவ்வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டார். தன்னைத் தானே பாகிஸ்தானின் குடியரசுத் தலைவராக அறிவித்தார். பூட்டோவை உயிருடன் விட்டு வைத்தால், தனக்கு போட்டியாக வரக்கூடும் என்பதை உணர்ந்து, அவர் மீது கொலை வழக்கு போட்டு அவரை தூக்கிலிட்டார்.  அரசியல் எதிரிகளைக் கொலை செய்வது பாகிஸ்தானில் புதிதில்லை என்றாலும்,   நாட்டின் முன்னாள் தலைவரை கிரிமினல் குற்றம் சாட்டி தூக்கிலிடுவது அதுவே முதல் முறை.  அதன்பின்னர் பாகிஸ்தானின் மீது ஜியாவின் பிடி இறுகியது.

தனக்கு முன் ஆட்சியைப் பிடித்த ராணுவ தளபதிகளுக்கு நேர்ந்த கதி தனக்கு நிகழாமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார் ஜியா. இதற்காக நாட்டின் வெளியிலும் உள்ளேயும் பல காரியங்களைச் செய்தார். வெளியே நாட்டின் வெளியுறவுக் கொள்கையை அமெரிக்காவுக்கு அடகு வைத்தார், உள்நாட்டில் இஸ்லாமியத் தீவிரவாதத்தை வளர்த்து விட்டார். இவ்விரு விஷயங்கள் தான் இன்றளவும் பாகிஸ்தானின் கழுத்தை இறுக்கிக் கொண்டிருகின்றன.

1950களிலிருந்தே பாகிஸ்தான் அமெரிக்காவின் ஆதரவு நாடாக இருந்து வந்தது.  அதற்கு பிரதிபலனாக ஆயுத உதவியும் நிதி உதவியும் பெற்று வந்தது.  ஆனால் 1978ல் சோவியத் யூனியன் ஆஃப்கானிஸ்தான் மீது படையெடுத்த பின்னர் பாகிஸ்தானுக்கு மவுசு கூடிப்போனது. ஆஃப்கானிஸ்தானில் சோவியத் படைகளுக்கு ஆப்பு வைக்க முஜாஹுதீன் போராளிகளை ஏவிவிட்டது அமெரிக்கா. இதில் அமெரிக்காவுக்கும் முஜாஹூதீனுக்கு இடையே தரகர் வேலை செய்தது பாகிஸ்தான். இதனால் ஆப்கன் முஜாஹூதீனுக்கு பாகிஸ்தானில் பயிற்சி தளங்கள் அமைத்து போர் பயற்சி வழங்கியது பாகிஸ்தானிய இராணுவம். முஜாஹூதீனுக்கு போகும் பணத்தையும் ஆயுதங்களையும் பெருமளவில் தனது பயன்பாட்டுக்கும் எடுத்துக் கொண்டது.  அமெரிக்க பணவெள்ளம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பாகிஸ்தான் இராணுவத்தின் கையை பலப்படுத்திவிட்டது. பாகிஸ்தான் சமுதாயத்தில் ராணுவம் எல்லா அம்சங்களிலும் தன் பிடியை இறுக்கியது.   பாகிஸ்தானின் மிகப்பெரிய நில உரிமையாளர்களுள் ராணுவம் ஒன்றானதுடன் பல தொழில்களிலும் ஈடுபட்டு பாகிஸ்தான் பொருளாதாரத்தில் பெரும் புள்ளியாகவும் வளர்ந்துவிட்டது. இராணுவம் இல்லையென்றால் நாடே இல்லையென்ற நிலை உருவானது.

இராணுவத்தின் பிடி இறுகிக் கொண்டிருக்கும் போதே மக்களின் கவனத்தை திசை திருப்ப மதவாதத்தைத் தூண்டி விட்டார் ஜியா. அதுவரை பொதுச்சட்டம் வழக்கில் இருந்த பாகிஸ்தானில் இஸ்லாமிய ஷாரியா சட்டத்தை புகுத்தினார். தன்னை ஒரு இஸ்லாமிய ஆட்சியாளராகக் காட்டிக் கொள்வதற்காகவும் அரசியல் எதிரிகளை ஒடுக்கவதற்காகவும் கடுமையான இஸ்லாமியச் சட்டங்களைக் கொண்டு வந்தார். ஹுடூட் சட்டங்கள் (Hudood Ordnances) என்றழைக்கப்படும் இச்சட்டங்கள் பெண்களுக்கும், பிற மதத்தினருக்கும் முஸ்லிம்களுள் அஹ்மாதியாக்கள் போன்ற சிறுபான்மையினருக்கும் பல உரிமைகளைப் பறித்தன.  ஜியா பதவியில் இருந்த பத்து ஆண்டுகளில் பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கை அமெரிக்காவின் கையிலும், உள்நாட்டுக் கொள்கை மதவாதிகளின் பிடியிலும் சிக்கிக் கொண்டன. தனது பதவியைத் தக்க வைப்பதிலேயே குறியாக இருந்த ஜியா இதனால் பாகிஸ்தானுக்கு எதிர்காலத்தில் பெரும் ஆபத்து விளையும் என்பது பற்றி  கவலைப்படவில்லை.  ஆனால் எவ்வளவு தான் கெட்டியாக நாற்காலியைப் பிடித்துத் தொங்கினாலும் ஒரு நாள் பதவியிலிருந்து இறங்கத் தானே வேண்டும்.  ஜியாவின் பதவி ஆசையே அவருக்கு எமனாக அமைந்தது. 1988ம் ஆண்டு அவரது விரோதிகளோ அல்லது போட்டியாளர்களோ அவர் சென்ற விமானத்தில் நாச வேலை செய்து அதனை விபத்துக்குள்ளாக்கினர். அந்த விபத்தில் ஜியா மரணமடைந்தார்.

அவர் இறந்த பின்னர் வழக்கம் போல பாகிஸ்தான் கொஞ்ச நாள் மக்களாட்சி, கொஞ்ச நாள் ராணுவ ஆட்சி என்று அல்லாடிக் கொண்டிருக்கிறது.  வெளியே அமெரிக்கா உள்ளே மதவாதம் என்று இருமுனைகளிலும் பாகிஸ்தான் நாட்டை அழிவு சக்திகள் அரித்துத் தின்று வருகின்றன. பாகிஸ்தான் ஒரு நாள் அழியுமெனில் அதற்கு வித்திட்ட பெருமை ஜியா உல் ஹக்கையே சேரும்.

வில்லனான புத்தகம்

22. புரோட்டோக்கால்ஸ் ஆஃப் சியான்

 

உலக வரலாற்றில் வில்லனகள் வெவ்வேறு அளவிலும் வடிவத்திலும் வந்துள்ளனர்.  ஒருவர் வில்லனாவதற்கு பெரும் சக்கரவர்த்தியாகவோ,  கொடூர கொலையாளியாகவோ பல லட்சம் பேர்களை நேரடியாகக் கொலை செய்தவராகவோ இருக்கத் தேவையில்லை. ஏன் உயிருள்ள மனிதராக இருக்கக்கூடத் தேவையில்லை. உயிரற்ற எண்ணக்கருக்களும்,  கோட்பாடுகளும், நம்பிக்கைகளும் கூட பல சமயங்களில் அவற்றை பின்பற்றுவோரால் உயிர்பெற்று    உலகில் பெரும் நாசத்தை விளைவித்துள்ளன / வருகின்றன. ஏன் பொய்களும் புரட்டுகளும் திட்டமிட்டு பரப்பட்ட வதந்திகளும் கூட பல நூற்றாண்டுகளாக மனித குலத்துக்கு பல தீமைகளைச் செய்து வந்திருக்கின்றன.  இப்படி ஒரு இனத்தின் மீது வீண்பழி சுமத்தி உலகையே அவர்களை வெறுக்கச் செய்து, அழிக்கத் தூண்டிய ஒரு புத்தகமே இந்த வார வில்லன்.  யூதர்களைப் பற்றி நூறாண்டுகளுக்கு மேலாக அவதூறுகளைப் பரப்பப் பயன்படுத்தப்படும் தி புரோட்டோகால்ஸ் ஆஃப் தி எல்டர்ஸ் ஆஃப் சியான் (The Protocols of the Elders of Zion)  என்ற இப்புத்தகம் 20ம் நூற்றாண்டில் யூதர்களுக்கு சொல்லவொண்ணாத் துயர்களையும் பேரிடர்களையும் உருவாக்கியுள்ளது.

ஐரோப்பிய மக்களுக்கு பல நூற்றாண்டுகளாகவே யூதர்களின் மீது நல்ல அபிப்ராயம் கிடையாது.  ஏசுவை சிலுவையில் அறையக் காரணமானவர்கள் என்பதிலிருந்து அதிக வட்டி கேட்கிறார்கள் என்பது வரை அவர்கள் மீது ஐரோப்பிய கிருத்துவர்கள் சிறிதும் பெரிதுமாக பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தி பல கொடுமைகளுக்கு ஆளாக்கி வந்துள்ளனர். சிலுவைப் போர்களில் யூதர்களைப் படுகொலை செய்வது, மதம் மாறச் சொல்லி துன்புறுத்துவது,  மொத்த யூத மக்களையும் நாடு கடத்துவது, பல தொழில்களில் ஈடுபடக்கூடாது என்ற கட்டுபாடுகள்,  நகரங்களில் வசதியற்ற குறுகிய பகுதிகளில் ஆடுமாடுகளைப் போல் அடைத்து வாழ வற்புறுத்துவது என்று பல வழிகளில் ஐரோப்பிய யூதர்களைத் துன்புறுத்தி வந்துள்ளனர்.  யூதர்களுக்கு பல தொழில்களைப் புரிய அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் ஒன்று கைவினைக் கலைஞர்களாக வேண்டும் அல்லது வட்டிக்கு கடன் கொடுக்கும் லேவா தேவிக்காரர்களாக வாழ வேண்டும்.  பொதுவாக வட்டி வசூலிக்கும் யாரையும் மக்களுக்குப் பிடிக்காது; ஒரு குறிப்பிட்ட இனத்தவர் மட்டும் வட்டிக்காரர்களாக இருந்தால்,  அந்த இனத்தின் மீதே அவர்களுக்கு வெறுப்பு வளர்ந்து விடும். யூதர்களுக்கு இதுவே நடந்தது. யூதன் என்றாலே பேராசை பிடித்து பணம் பணம் என்று அலைபவன் என்ற பிம்பம் ஐரோப்பிய மக்களிடையே உருவாகி விட்டது.  கூட சட்டத்தை மதிக்காமல் பெரும் குற்றமிழைப்பவர்கள் என்ற முத்திரையும் சேர்ந்து கொண்டது.  புனைவுக் கதைகளும் நாடகங்களும் இந்த பிம்பத்தை தூபம் போட்டு வளர்த்து விட்டன. பதினேழாம் நூற்றாண்டில் ஷேக்ஸ்பியர் எழுதிய மெர்ச்சண்ட் ஆஃப் வெனிசில் வரும் ஷைலாக் கடன்காரன் பாத்திரமும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய ஆலிவர் டுவிஸ்ட் புதினத்தில் வரும் ஃபாகின் திருடன்  பாத்திரமும் இந்த பிம்பங்களைப் பலப்படுத்திய கற்பனைப் படைப்புகளுள் ஒரு சில.

ஒரு புறம் அவதூறும் கொடுமைகளும் நடந்து கொண்டிருந்த போதே இன்னொரு புறம் யூதர்களில் ஒரு பகுதி வட்டித் தொழிலில் செழித்துக் கொண்டிருந்தது. என்னதான் மக்கள் கடன்காரர்களை வெறுத்தாலும் அதற்காகக் கடன் வாங்காமலா இருந்து விடப்போகிறார்கள்.  சர்வதேச வங்கி வர்த்தகத்தின் முதுகெலும்பே கடன் கொடுக்கலும் வாங்கலும் தான். இதனால் வட்டித் தொழிலில் ஈடுபட்ட ஐரோப்பாவின சில யூதக் குடும்பங்கள் காலப்போக்கில் பெரும் வங்கியர்களாகி (bankers) விட்டன.  இது ஐரோப்பிய கிருத்துவர்களுக்கு யூதர்களின் மீதிருந்த பொறாமையினையும் வெறுப்பையும் பன்மடங்காக்கியது. நாட்டிற்கு எந்த கஷ்டம் வந்தாலும் அதற்குப் பின்னால் யூதர்கள் இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டும் பழக்கமும் ஏற்பட்டது.  விலைவாசி உயர்விலிருந்து, போரில் தம் நாட்டுப் படைகள் தோற்பது வரை அனைத்துக்கும் காரணம் யூதர்களின் சதி தான் என்று ஒரு தரப்பு குற்றம் சாட்டத் தொடங்கியது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யூத சமுதாயத்தினிடையேயும்  பெரும் மாற்றங்கள் ஏற்படலாயின. கைவினைத் தொழிலும், வட்டித் தொழிலும் செய்து திருப்தியடையாத பல யூதர்கள் உயர் கல்வி கற்று பெரும் சிந்தனையாளர்களாகவும், மெய்யியலாளர்களாகவும், அறிவியலாளர்களாகவும் மாறத் தொடங்கினர். மேற்கு ஐரோப்பாவில் மெதுவாக யூத சமுதாயத்தின் நிலை முன்னேறத் தொடங்கியது. ஆனால் கிழக்கு ஐரோப்பாவிலும் அருகிலிருந்த ரஷியப் பேரரசிலும் அவர்களது வாழ்வில் பெரிதாக எந்த மாற்றமும் நிகழவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டு உலக வரலாற்றில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த கால கட்டம். தொழிற்புரட்சியும் எந்திர மயமாக்கலும் உலகின் சமுதாய அரசியல் கட்டமைப்பைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தன. நில அடிமை வாதம், வர்க்கவொழுக்கம் போன்றவற்றால் நூற்றாண்டுகளாகக் கட்டிக் காப்பாற்றப்பட்டு வந்த அரசியல் அமைப்புகளும், பேரரசுகளும் ஆட்டம் கண்டன.  ஆட்சியாளர்களின் மீது அதிருப்தி அடைந்த மக்களிடையே சின்னதும் பெரிதுமாக பல புரட்சிகள் வெடித்து வந்தன. அவற்றை அடக்குவதற்கு மன்னர்களும் மந்திரிகளும் திணறிக் கொண்டிருந்தனர். 20ம் நூற்றாண்டு பிறந்த பின்னர் பழைய சமுதாய அரசியல் கட்டமைப்புகளில் பெருத்த மாற்றம் நிகழப்போகிறது என்பது தெளிவானது. ஆனாலும் பல பழமைவாதிகள் தங்களது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள விடாது போராடினர். மக்கள் கோபத்தைத் திசை திருப்ப அவர்கள் கையாண்ட ஒரு உத்தி, அதனை யூதர்கள் மீது திசைதிருப்புவது.  இது ரஷ்யப் பேரரசில் ஒரு தேர்ந்த அரசியல் உத்தியாகவே ஜார் மன்னர்களால் மாற்றப்பட்டிருந்தது.  போரில் தோல்வியா யூதனை நோக்கி குற்றம் சொல்,  இந்த ஆண்டு பயிர்கள் விளையவில்லையா அப்படியென்றால் யூதன் சதி செய்து விட்டான், பஞ்சமா யூதன் தானியத்தைப் பதுக்கி விட்டான். இதுவே பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்ய அரசியல்.

வெறுமனே குற்றம் சாட்டுவதோடு நிற்காமல் யூதர்களின் மீது திட்டமிட்ட வன்முறையும் கலவரங்களும் ஜார் மன்னர்களால் உருவாக்கப்பட்டன. போக்ராம் (pogram) என்ற வார்த்தைக்கு குறிப்பிட்ட இனக்குழுவைத் திட்டமிட்டுத் தாக்குதல் என்று அர்த்தம் உருவாக ஜார் மன்னர்களின் யூதப் போக்ராம்களே காரணமாக அமைந்தன. இப்படி யூதர்கள் மீது மக்களின் வெறியைக் கூட்ட உருவாக்கப் பட்ட புத்தகமே தி புரோட்டோகால்ஸ் ஆஃப் தி எல்டர்ஸ் ஆஃப் சியான். முதன் முதலில் 1903ம் ஆண்டு ரஷ்ய மொழியில் இந்த புத்தகம் ஒரு அறிக்கை வடிவில் வெளியானது.  பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் உலகத்தைக் கைப்பற்றி ஆளுவதற்காக யூதத் தலைவர்கள் கூடித் திட்டமிட்டனர் என்றும். அந்த கூட்டத்தில் அவர்கள் பேசிய பேச்சுகள், வகுத்த திட்டங்களை புத்தக வடிவில் வெளியிடுகிறோம் என்றும் புத்தகத்தை வெளியிட்டவர்கள் சொன்னார்கள்.  ஐரோப்பிய மக்களுக்கு யூதர்கள் மீதிருந்த எல்லா கெட்ட நினைப்புகளையும் இந்தப் புத்தகம் நன்றாக வெளிக்கொணர்ந்திருந்தது.  யூத வங்கியர்கள் முதலில் உலகப் பொருளாதாரத்தை சீர் குலைப்பார்கள், பிற இனத்தவர்களின் சமூக கட்டுப்பாடுகளைத் தகர்த்து அவர்களை பலவீனப்படுத்துவார்கள்,  உலகெங்கும் போர்களை மூட்டுவார்கள். இதனால் பேரிழப்புகளுக்காளாகி பலவீனப்பட்டு இருக்கும் உலகத்தை எளிதில் கைப்பற்றி ஒரு உலகளாவிய யூதப் பேரரசை உருவாக்கிவிடுவார்கள் என்று புரோட்டோகால்ஸ் பூச்சாண்டி காட்டியது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் நடந்த ஒரு சாதாரண யூத மாநாட்டைச் சாக்காக பயன்படுத்திக் கொண்ட ரஷ்ய உளவுத்துறையின் பாரிசு கிளையே இந்த ஃபோர்ஜரிக்குக் காரணம். யூதர்கள் கூட்டியதோ ஒரு சாதாரண ஜாதிச் சங்க மாநாடு போன்ற ஒரு விஷயம். ஆனால் ரஷ்ய உளவுத்துறை அதற்கு நன்றாக பில்டப் கொடுத்து உலகத்தைக் கைக்குள் போட திட்டம் தீட்டினார்கள் என்று தயார் செய்து இந்த போலி “திட்டத்தை”க் கசியவிட்டது. யூதர்களின் மீது மக்களுக்கு வெறுப்பு கிளப்பும் ரஷ்ய ஆட்சியாளர்களின் செயலகளில் இதுவும் ஒன்றாகவே தொடங்கியது. ஆனால் சந்தர்ப்பவசமாக பொதுமக்களிடம் இது பிரபலமானதால் மீண்டும் மீண்டும் பல தரப்பினரும் அச்சிட்டு வெளியிடத் தொடங்கினர்.  பல ஐரோப்பிய மொழிகளில் பெயர்க்கப்பட்டு ஐரோப்பாவெங்கும் இப்புத்தகம் பரவியது.

ஐரோப்பிய யூத வெறுப்பாளர்களுக்கு புரோட்டோகால்சின் பிரபலம் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலானாது. நாங்க சொன்னோம்ல அவனுங்க உலகமகா வில்லனுங்கன்னு என்று பரப்புரை செய்யத் தொடங்கினர்.  யூதர்கள் மீது இதுவரை சாற்றப்பட்டு வந்த அவதூறுகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரமாகக் காட்ட புரோட்டாகால்ஸ் அவர்களுக்கு வசதியாகப் பயன்பட்டது.  அதுவரை குடிசைத் தொழிலாக இருந்த யூத அவதூறு புரோட்டோகால்ஸ் புத்தகத்தின் துணையுடன் பெரும் உற்பத்தித் தொழிற்சாலையாக விசுவரூபமெடுத்தது.. யூதர்களின் மீது பழி போட்டு பல ஆண்டுகளாகத் தப்பி வந்த ரஷ்யாவின் ஜார் மன்னர்களின் ஆட்சி 1917ல் கம்யூனிஸ்ட்டுகளின் புரட்சியால் முடிவுக்கு வந்தது.  கம்யூனிஸ்டுகளிடமிருந்து தப்பி ஐரோப்பாவில் தஞ்சம் புகுந்த முன்னாள் ரஷ்ய ஆட்சியாளர்களும் ஆதரவாளர்களும், புரோட்டோகால்சின் புகழ் பரவ புத்துணர்ச்சி அளித்தனர். கம்யூனிஸ்டு புரட்சிக்கு யூதர்களே காரண கர்த்தாக்களென்றும், புரோட்டோகால்சில் சொல்லப்பட்டிருந்த திட்டங்களுக்கு ரஷ்யப் புரட்சியே நல்ல எடுத்துக் காட்டு என்றும் பிரச்சாரம் செய்யத் தொடங்கினர். ஐரோப்பிய மக்களின் மனங்களில் இதனால் புரோட்டோகால்ஸ் புத்தகம் உண்மை என்ற கருத்து ஆழமாக வேரூன்றிவிட்டது.

1920களில் புரோட்டோகால்ஸ் ஒரு ஃபோர்ஜரி புத்தகமென்று தெளிவாக நிரூபிக்கப்பட்டது.  பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளியான பல புத்தகங்களில் இருந்து முழுப் பக்கங்களை அப்படியே காப்பியடித்து ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்ட புத்தகம் என்று இலக்கிய ஆய்வாளர்களும் வரலாற்றளர்களும் தெளிவாக நிரூபித்தனர். ஆனால் ஐரோப்பிய மக்கள் தான் அதனை நம்பத் தயாராக இல்லை.” புத்தகத்திலேயே போட்ட்ருக்காம்ல் யூதன் சதி செய்யறான்னு” என்ற ரீதியிலேயே அவர்களது புரிதல் இருந்தது.  இதனை ஐரோப்பாவின் புதிய ஆட்சியாளர்களும் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். முதலாம் உலகப் போரில் தோற்ற ஜெர்மனியில் போரில் நம்ம நாடு தோற்று விட்டது என்று பலரால நம்ப முடியவில்லை. நம்ம படை தோற்கடிக்கப்பட்டிருக்குன்னா அதுக்கு யாராச்சும் சதி செஞ்சுருப்பாங்க என்று சொல்லிக் கொண்டவர்கள் புரோட்டாகால்சை ஆதாரமாகக் காட்டினார்கள்.  இது கண்டிப்பாக யூதர்களின் சதியாகத் தான் இருக்க முடியுமென்று  ஹிட்லரின் ஆதரவாளார்கள் சொல்லத் தொடங்கினர். இப்படிப் பரவிய யூத வெறுப்பே ஹிட்லர் ஜெர்மனியில் பதவிக்கு வரத் துணையாக இருந்தது.  நாஜிக்களின் இன வெறிக்கு அறுபது லட்சம் யூதர்கள் பலியாகவும் காரணமாக அமைந்தது.

ஒரு புறம் ஹிட்லர் போன்றவர்களின் அரசியல் துணை இன்னொரு புறம் அமெரிக்கத் தொழிலதிபர் ஹென்றி ஃபோர்டு போன்றோரின் ஆதரவு. இது போன்ற காரணங்களால் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் புரோட்டோகால்சுக்கு உலகெங்கும் ஆதரவு பெருகியது.  இரண்டாம் உலகப் போரில் பாசிச நாடுகள் தோற்கடிக்கப்பட்டாலும் பின்னர் யூதர்களுக்கான நாடாக இஸ்ரேல் உருவானதிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளில் பிரபலமாகத் தொடங்கியது. புரோட்டோகால்ஸ் புத்தகம் ஒரு போலி என்று தெளிவாக எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டவை அனைத்தும் உண்மை என்று நம்புவோர் கோடிக்கணக்கில் உள்ளனர்.  யூதர்கள் இன்னும் உலகையாள முயலுகிறார்கள்,  பொருளாதார சிக்கல்களுக்கு அவர்களது சதியே காரணம் என்று பரவலாக நம்பப்படுகிறது.  பொதுமக்கள் மட்டுமல்ல பல நாடுகளின் ஆட்சியாளர்களும் இன்னும் இதை நம்புகின்றனர். 1990களில் நிகழ்ந்த ஆசிய பொருளாதார நெருக்கடியை யூதர்கள் தான் வேண்டுமென்றே உருவாக்கினார்கள் என்று அப்போதைய மலேசியப் பிரதமர் மஹாத்திர் முகமது வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார்.

இப்படி வெளியாகி நூறாண்டுகள் ஆகியும் இஸ்ரேலையும் யூதர்களையும் தாக்குவதற்கும் அவர்களைப் பற்றி அவதூறு பரப்புவதற்கும் இந்த புரோட்டோகால்ஸ் புத்தகம் பயன்பட்டு வருகிறது.  ஒரு பெரும் இனவழிபபு (holocaust)  நிகழக் காரணமாக இருந்த இது இன்று வரை பரவலாக நம்பபடுவதுதான் ஆச்சரியத்தையும் அச்சத்தையும் அளிக்கும் விஷயமாகும்.

 

கொள்ளையர் பிதாமகர்

21. கறுந்தாடி டீச்


பொதுவாக திருடர்கள், கொள்ளைக்காரர்கள் என சட்டத்தை மீறுவோர் மீது மக்களுக்கு ஒரு இனம்புரியாத கவர்ச்சி உள்ளது.  அதிலும் கடல் கொள்ளையர்கள் என்றால் ஒரு அலாதிப் பிரியம் தான். கடற் கொள்ளையர் என்றவுடன் நம்மில் பலருக்கும் உடனே நினைவுக்கு வரும் உருவம் –    தோளில் கிளி, ஒரு கண்ணை மறைக்கும் கண்பட்டை, ஒரு மரக்கட்டைக் காலுடன் கூடிய கருப்பு தாடிக்காரர்.  இன்னும் கொஞ்சம் யோசித்தால் மண்டையோடும் எலும்புகளும் கொண்ட கறுப்பு கொள்ளையர் கொடியும் பாய்மரக் கப்பல்களும், புதையல் பெட்டிகளும் நினைவுக்கு வரும். இந்த பொது பிம்பம் உருவாக பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் கரிபீயன் கடலைக் கலங்கடித்துக் கொண்டிருந்த பல கொள்ளையர்களே காரணம். இவர்களது கதைகளே காலங்காலமாக  கதைகளிலும், திரைப்படங்களிலும் வந்து கடற்கொள்ளையர்கள் மீது மக்களின் மனதில் ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டன. .என்ன தான் கேட்பதற்கு கவர்ச்சியாக இருந்தாலும் கடற்கொள்ளையர்கள் சட்டத்தை மீறிய திருடர்களே. வர்த்தகர்களுக்கு பெரும் தொந்தரவாக இருந்தவர்களே. இந்த வில்லன்களுள் மிகப் பரவலாக அறியப்படும் வில்லன் கறுந்தாடி எனப்படும் எட்வர்ட் டீச்.  கடற் கொள்ளையர் பொது பிம்பத்துக்கு கறுப்பு தாடியை இரவல் கொடுத்தவர் இவரே.

பதினேழு-பதினெட்டாம் நூற்றாண்டுகள் வரலாற்றாளர்களால் கடல் கொள்ளையின் பொற்காலம் (Golden Age of Piracy) என்றழைக்கப்படுகிறது. அமெரிக்க கண்டம் கண்டுபிடிக்கப்பட்ட இருநூறு ஆண்டுகளுக்குள் ஐரோப்பிய நாடுகள் அங்கே பல காலனிகளை உருவாக்கி தங்கள் மக்களை குடியேற்றின.  பெரும் பரப்பளவில் பண்ணைகளும் தோட்டங்களும் உருவாக்கப்பட்டு பருத்தி, கரும்பு ஆகியவை பயிரிடப்பட்டன. பதினேழாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற அனைத்து முன்னணி ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவில் காலனிகள் இருந்தன. காலனிகளுக்கும் ஐரோப்பாவுக்கும் நடுவே அட்லாண்டிக் கடல் இருந்தது. அதைக் கடப்பதற்கு அதிவேகமான கப்பலென்றாலும் குறைந்த பட்சம் சில வாரங்களாவது ஆகும்.   காலனிகளுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையே வர்த்தகம் வருடந்தோறும் பெருகி வந்ததால், கப்பல்களுக்கும் மாலுமிகளுக்கும் பெரும் கிராக்கி ஏற்பட்டது. கப்பல் வாழ்க்கை என்பது சாதாரணமானதல்ல. ஒவ்வொரு பிரயாணமும் மாதக் கணக்கில் நீடிக்கும்.   உயிருடன் திரும்பி வருவோம் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ஊதியமோ மிகக் குறைவு. அதுவும் சரியாக வழங்கப்படுவது சந்தேகமே.  கப்பல்களின் மேலதிகாரிகள் ஊழலுக்குப் பேர் போனவர்கள். மாலுமிகளின் சம்பளத்தைத் திருடுவது, அவர்களுக்கான உணவை, உடைகளை வாங்குவதில் ஊழல் என பலவகைகளிலும் தங்கள் கைவரிசையைக் காட்டி வந்தனர். பெரும்பாலும் படிப்பறிவில்லாதவர்களாக இருந்த மாலுமிகளால் இதை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை.  எதிர்த்துப் பேசினால் சாட்டையடி விழும், வாரக்கணக்கில் இருட்டறையில் அடைத்து வைக்கப்படுவார்கள்,  அல்லது பட்டினி போடப்படுவார்கள். பல சமயங்களில் சிறு குற்றங்களுக்குக் கூட தூக்கில் போட்டு விடுவார்கள்.  பெரும்பாலான மாலுமிகள் கடுமையான கப்பல் வாழ்க்கையிலிருந்து தப்பிக்க வாய்ப்புகளை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் ஒரு அளவுக்கு மேல் கொடுமைகளைத் தாங்க முடியாதல்லவா. அதுதான் நடந்தது இங்கும். பல கப்பல்களில் மாலுமி புரட்சிகள் வெடித்தன. மாலுமிகள் தங்கள் மேலதிகாரிகளைக் கொன்று கப்பல்களைக் கைப்பற்றினர்.  புரட்சிக்குப் பின் அவர்களால் தாய்நாடு திரும்ப முடியாது. திரும்பினால் தூக்கு தான். கொள்ளையராக மாறுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.  கடுமையான மாலுமி வாழ்க்கையைவிட கொள்ளையர் வாழ்க்கை அவர்களுக்கு எளிதாகத் தெரிந்தது. இப்படித்தான் பல புதிய கொள்ளையர் கூட்டங்கள் உருவாகின.

இப்படி மாலுமியாக இருந்து கொள்ளையரானவர் தான் எட்வார்ட் டீச்.  ஐந்துக்கும் பத்துக்கும் கொள்ளையடிக்கும் கூட்டத்தில் இருந்த டீச்,  புகழ்பெற்ற கொள்ளையர் கேப்டனான பெஞ்சமின் ஹார்னிகோல்டின் சீடனாக ஆன பின்னர் பெரிய அளவில் கொள்ளையடிக்கத் தொடங்கினார்.  அமெரிக்க கண்டத்திலிருந்து ஐரோப்பாவுக்கு புதையல்களை கொண்டு சென்ற ஸ்பானிஷ் கப்பல்களைக் கொள்ளையடித்து பெரும் பொருள் சேர்த்த ஹார்னிகோல்டு,  கொள்ளையர்களுக்கென தனியே ஒரு தளம் வேண்டுமென்று விரும்பினார். இதற்காக கரிபியன் தீவுகளில் ஒன்றான பஹாமாசின் தலைநகர் நசாவுவைக் கைப்பற்றினார். இந்த தளத்தைப் பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர் கூட்டமைப்பு முன்னை விட அதிகமான முனைப்புடன் கொள்ளைத் தொழிலில் இறங்கினர். விரைவில் குருவை மிஞ்சிய சிஷ்யனாக மாறிவிட்டார் கறுந்தாடி. ஹார்னிகோல்ட் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர், தேசப்பற்றால் பிரிட்டிஷ் கப்பல்களைத் தாக்குவதில்லை என்ற கொள்கை கொண்டிருந்தார். ஆனால் அவரது சீடர்களோ கொள்ளையர்கள் நமக்கு தேசமாவது பற்றாவது என்று அவரை கேப்டன் பதவியிலிருந்து இறக்கி விட்டனர். அவரது இடத்திற்கு 1717ம் ஆண்டு கறுந்தாடி வந்தார்.

கொள்ளையர் கேப்டனான பின்னர் கறுந்தாடியின் கொள்ளைத் தாக்குதல்கள் அதிகரித்தன. அதுவரை சின்னச் சின்ன வணிகக் கப்பல்களை மட்டும் தாக்கி கொள்ளையடித்து வந்த அவரது கூட்டம், பெரும் போர்க்கப்பல்களைத் துணிந்து தாக்கத் தொடங்கியது. லா கன்கார்ட் என்ற பிரெஞ்சு ஆயுதமேந்திய சரக்குக் கப்பலைக் கைப்பற்றிய கறுந்தாடி அதனைத் தனது கொள்ளைக் கூட்டத்துக்கு தலைமைக் கப்பலாக்கிக் கொண்டார்.  குயின் ஆனிஸ் ரிவெஞ்ச் (Queen Anne’s Revenge) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட இக்கப்பல்தான் அதுவரை கடற்கொள்ளையர்கள் பயன்படுத்திய கப்பல்களுள் மிகவும் பலம் வாய்ந்தது.  அதிகமான பீரங்கிகளும் திறமையான கேப்டனும் இருந்ததால் குயின் ஆனி வருகிறது என்ற செய்தியைக் கேட்டாலே வணிகக் கப்பல் கேப்டன்களுக்கு குலை நடுங்கும் நிலை உருவானது. கறுந்தாடியின் புகழ் பிற கொள்ளையர்கள் மத்தியிலும் வேகமாகப் பரவியதால், பல கொள்ளையர்கள் தேடி வந்து அவரது கூட்டத்தில் இணைந்து கொண்டனர்.  கறுந்தாடியின் கூட்டத்தில் உறுப்பினர் என்ற கெளரவம் (!) கிடைத்தாலும் அவரது கூட்டத்தினர் அடிக்கடி வெற்றிகரமாகக் கொள்ளையடிப்பதால் சீக்கிரம் பணக்காரர்களாகி விடலாம் என்ற எண்ணமே பிற கொள்ளையர்களைக் கறுந்தாடியின் பக்கம் ஈர்த்தது.

விரைவில் கறுந்தாடியின் கொள்ளைக் கூட்டம் 150 பேர் கொண்டதாகப் பெருகியது. அனைவரையும் ஒரே கப்பலில் வைத்திருக்க முடியாதென்பதை உணர்ந்த கறுந்தாடி,  தான் கைப்பற்றிய இரு கப்பல்களைக் கொள்ளைக் கப்பல்களாகத் தயார் செய்து தன் கூட்டத்தினிடம் கொடுத்தார்.  இதனால் ஒரு கப்பலுக்கு கேப்டனாக இருந்த அவர் மூன்று கப்பல்களுக்கு கமடோராகி (கடற்படை தளபதி) விட்டார். இக்காலகட்டத்தில் தான் அவருக்கு கறுந்தாடி என்ற பெயர் பிரபலமானது. அதுவரை எட்வர்ட் டீச் அல்லது எட்வர்ட் தாச் என்றே அறியப்பட்டு வந்த அவர், தன்னைக் காண்பவர் பயப்படும் வண்ணம் தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டார். நீண்ட கறுந்தாடி,  தோளின் குறுக்கே பல கைத்துப்பாக்கிகள் அடங்கிய  தோல் பட்டை, பெரிய தொப்பி, நீண்ட அங்கி என தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார்.  அவரது பெயரும் “கறுந்தாடி” என்றாகிப் போனது. . 1718ம் ஆண்டு கறுந்தாடியின் கொள்ளைத் தாக்குதல்கள் மேலும் அதிகரித்தன. கரிபியன் கடலில் ஒரு குறுகிய பகுதியில் மட்டும் கொள்ளையடித்து வந்த அவர் அந்த ஆண்டு அப்பகுதியிலிருந்த பிற ஐரோப்பிய காலனிகளிலும் தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கினார்.  கறுந்தாடியின் சாகசங்கள் பிற கொள்ளையர்களுக்கும் தைரியமளித்து அவர்களும் தங்கள் கைவரிசையைப் பல இடங்களில் காட்டத் தொடங்கினர். ஹார்னிகோல்டு நசாவுவில் உருவாக்கியிருந்த கொள்ளையர் தளம், ஒரு குடியரசைப் போன்று செயல்படத் தொடங்கியது.  கொள்ளையர்கள் தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி ஒன்றிணைந்து செயல்படத் தொடங்கினர்.

கொள்ளையர் தொந்திரவால் வடஅமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே நடைபெற்ற கடல்வழிப் போக்குவரத்து முழுதும் துண்டிக்கப்பட்டது. ஐரோப்பியரின் அமெரிக்க பேரரசுகள் ஆட்டம் கண்டன. அமெரிக்க காலனியாளர்கள் கொள்ளையரிடமிருந்து தங்களைக் காப்பாற்றுமாறு இங்கிலாந்தின் முதலாம் ஜார்ஜ் மன்னரிடம் முறையிடத் தொடங்கினர்.  மன்னரும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்டார். கொள்ளையரின் கொட்டத்தை அடக்க வேண்டுமெனில் முதலில் பஹாமாஸ் தீவுகளைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென அவரது அமைச்சர்கள் வலியுறுத்தினர். எனவே பஹாமாசுக்கு ஒரு புதிய ஆளுனரை நியமித்து அவரைப் படைபலத்துடன் கரிபியனுக்கு அனுப்பி வைத்தனர். வூடஸ் ரோஜர்ஸ் என்ற அந்த தளபதி ஒரு கப்பல் படையுடன் கொள்ளையரை ஒழிக்க இங்கிலாந்திலிருந்து கரிபியன் தீவுகளுக்கு கிளம்பினார். ரோஜர்ஸ் கரிபியன் தீவுகளை நெருங்கிக் கொண்டிருந்த போது கறுந்தாடியின் கொள்ளைப் படை தங்கள் தொழில் வாழ்க்கையின் உச்சகட்ட சாதனையை நிகழ்த்திக் கொண்டிருந்தது.

இதுநாள் வரை கரிபியன் பகுதியிலிருந்த ஐரோப்பிய காலனிகளை மட்டும் கொள்ளையடித்து வந்த கறுந்தாடிக்கு வட அமெரிக்கப் பகுதிகளில் ஏன் கொள்ளையடிக்கக் கூடாது என்ற எண்ணம் வந்தது. அதுவரை யாரும் கொள்ளையடிக்காத பகுதியென்பதால் அங்கு பாதுகாப்புக்கு கடற்படை கப்பல்கள் ஏதும் இல்லை. எனவே 1718ம் ஆண்டு மே மாதம் அமெரிக்கக் காலனியான தெற்கு கரோலினாவின் தலைநகர் சார்லஸ்டன் துறைமுகத்தைத் தாக்கினார் கறுந்தாடி. ஒரு கொள்ளையர் கூட்டம் தைரியமாக ஒரு பெரிய நகரை நேரடியாகத் தாக்குவது அதுவே முதல் முறை.  சார்லஸ்டன் துறைமுக வாயிலில் தன் கப்பல்படையை நிறுத்திய கறுந்தாடி, அங்கு வந்த பல கப்பல்களைக் கைப்பற்றி அதன் பயணிகளை சிறைபிடித்தார். தனக்கு வேண்டிய சில மருந்துகளை உடனடியாக அனுப்பாவிட்டால் பிணைக்கைதிகளைக் கொன்றுவிடுவதாக சார்லஸ்டன் ஆளுனரை மிரட்டினார்.  சில நாட்கள் இந்த முற்றுகை நீடித்தது, பின்னர் மருந்துகளைப் பெற்றுக் கொண்டு கைதிகளை விட்டுவிட்டார். அவர் நினைத்திருந்தால் சார்லஸ்டனை தரைமட்டமாக்கியிருக்கலாம். ஆனால் வெறும் சில மருந்துகளுக்காக ஏன் இப்படியொரு தாக்குதலை நடத்தினார் என்பது மர்மமாகவே உள்ளது.

வட அமெரிக்காவிலிருந்து திரும்பிய கறுந்தாடிக்கு ரோஜர்சின் படை நசாவுவை நோக்கிச் செல்லும் செய்தி கிட்டியது.  அதனை சமாளித்துப் போரிட முடியாது என்று முடிவு செய்த அவர் தற்காலிகமாக கொள்ளைத் தொழிலிலிருந்த் ஓய்வு பெற முடிவு செய்தார். அமெரிக்கவின் வட கரோலினா மாநிலத்தின் ஆளுனருக்கு லஞ்சம் கொடுத்து அங்கு குடியேறினார். அதற்காக வேண்டுமென்றே தனது குயின் ஆனி கப்பலை தரைதட்டச் செய்தார்.

சில மாதங்கள் அமைதியாக வடக்கு கரோலினாவில் காலம் கடத்தினார். இந்நேரத்தில் ரோஜர்சின் கப்பற்படை நசாவு தீவினை அடைந்து அங்கிருந்த கொள்ளையர்களை அடித்து விரட்டியது. பல கொள்ளையர் தலைவர்கள் கைப்பற்றப்பட்டு தூக்கிலிடப்பட்டனர்.  அவர்களுக்கு நேர்ந்த கதியிலிருந்து புத்திசாலித்தனமாக கறுந்தாடி தப்பி விட்டாலும் அவரால் நிலத்தில் அமைதியாக வாழ முடியவில்லை. மீண்டும் கொள்ளைத் தொழிலுக்குத் திரும்ப வேண்டுமென்ற ஆசை எழுந்தது. சில மாதங்களுக்குப் பின்னர் வட கரோலினா கடற்கரைப் பகுதிகளில் தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கினார்.  நசாவுவிலிருந்து தப்பி வந்திருந்த வேறு சில கொள்ளையர் கேப்டன்களும் அவருடன் இணைந்து கொண்டனர். ஆனால் இம்முறை காலனிய ஆட்சியாளர்கள் விழிப்புடன் இருந்தனர். வட கரோலினாவுக்கு பக்கத்து மாநிலமான விர்ஜீனியாவின் ஆளுனர், கறுந்தாடி மீண்டும் கொள்ளைத் தொழிலில் இறங்கியதைக் கேட்டவுடன், கறுந்தாடியை ஒழிக்க உடனடியாக ஒரு கடற்படையைத் தயார் செய்தார். இப்படை லெப்டினண்ட் மேனார்ட் தலைமையில் கறுந்தாடியின் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தை ரகசியமாக அணுகியது.  கறுந்தாடியின் கப்பலின் மேற்தளத்தில், கறுந்தாடியின் கூட்டத்துக்கும் மேனார்டின் படைவீரர்களுக்குமிடையே கடும் சண்டை நிகழ்ந்தது.  ஆவேசத்துடன் கறுந்தாடி போராடினாலும் இறுதியில் மேனார்டின் வீரர்கள் அவரைத் தீர்த்துக் கட்டினர். அவரது தலை துண்டிக்கப்பட்டு மேனார்டின் கப்பல் பாய்மரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டது.

கறுந்தாடி இறந்து சில வருடங்களில் பிற கொள்ளையர் தலைவர்களும் பிடிபட்டனர். கடற்கொள்ளையின் பொற்காலமும் முடிவுக்கு வந்தது.  ஆனால் மரணத்துக்குப் பின்னரும் கறுந்தாடியின் புகழ் இன்றும் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. கடற் கொள்ளையர் என்றாலே கறுந்தாடியின் உருவம் நினைவுக்கு வருமளவுக்கு இன்றை நிலை உள்ளது. நிஜ வாழ்வில் கரிபியன் கடற்பகுதியைக் கலங்கடித்தவர், இப்போது கதைகள் திரைப்படங்கள் மூலமாக உலகையே கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இனவெறி

20. டூட்சிக்களும் ஹுட்டுக்களும்

ஒரு சின்ன கதையைக் கேளுங்கள். இரண்டு குழுக்கள் பல நூறு ஆண்டுகளாக ஒரே பகுதியில் வாழ்ந்து வந்தன.  ஆரம்பத்திலிருந்தே இரு குழுக்களுக்கும் ஒத்துப் போனதில்லை. ஒரு குழு நாங்களே இந்த மண்ணின் மைந்தர்கள், அவனுங்க வந்தேறிகள், இந்த மண்ணின் மீது உரிமை இல்லதாவங்க என்று மார் தட்டிக் கொள்ளும். இன்னொரு குழுவோ அவனுங்க சுத்த சோம்பேறிங்க,  ஒண்ணுக்கும் லாயக்கு இல்லாதவனுங்க, இந்த நாட்டை வளப்படுத்துன நாங்க தான் இந்த மண்ணுக்கு உண்மையான வாரிசு என்று உரிமை கொண்டாடும்.  இரு தரப்பிலும் இனகலப்பு இருக்கக் கூடாது, தங்கள் இளைய சமுதாயத்தினர் அடுத்த இனத்தில் போய் கல்யாணம் செய்து விடக்கூடாது என்று என்று ரொம்ப கண்டிப்பாக இருப்பார்கள். அவ்வப்போது இரு குழுக்களுக்கும் இடையே உரசல்கள் இருக்கும்.  உங்க தரப்பு மாடு எங்க வயலில் மேய்ந்துவிட்டது, உங்க பையன் எங்க பொண்ண கூட்டிட்டு ஓடிட்டான் போன்ற சின்ன விஷயங்களில் ஆரம்பித்து, நாட்டு அரசியலில் தங்களக்கு சேர வேண்டிய இடத்தை அடுத்தவர் ஆக்கிரமித்துள்ளனர் போன்ற பெரிய விஷயங்கள் வரை சின்ன சின்ன புகைச்சல்கள் இருந்து கொண்டே இருக்கும். சில சமயங்களில் கைகலப்பும் உயிர்ச்சேதமும் ஏற்படுவதுண்டு.

என்ன இதுவரை சொன்ன கதை எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதா. எல்லா நாடுகளில், சமூகங்களில் இது மாதிரி ஆயிரக்கணக்கான கதைகள் உண்டு. எங்கெல்லாம் மனித நாகரிகம் தழைத்திருக்கிறதோ அங்கெல்லாம் இந்த கதை பல வகைகளில் அரங்கேறியுள்ளது, இன்னும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஆனால் மிகப் பெரும்பாலான கேசுகளில் வாய்ச்சண்டைகளோடும் சிறு கைகலப்புகளோடும் இந்த மோதல் நின்று போகும்.  ஆனால் ஆயிரத்தில் ஒன்றாக ஒரு தரப்பு இன்னொரு தரப்பை முற்றிலுமாக அழிக்க முடிவு செய்து இனப்படுகொலை செய்யவும் முயன்றதுண்டு.  லட்சக்கணக்கில் உயிர்களைக் காவு கேட்டுள்ள ருவாண்ட இனப்படுகொலை இப்படியொரு முயற்சி.  சேர்ந்து வாழ முடியாவிட்டாலும் அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டு போகாமல் அடுத்த இனத்தையே தீர்த்துக் கட்ட முயன்ற / முயன்று கொண்டிருக்கும் ஆப்பிரிக்க டுட்சி, ஹுட்டு இன மக்களே இந்த வார வில்லர்கள்.

டுட்சிக்களும் ஹுட்டுக்களும் மத்திய ஆப்பிரிக்கப் பகுதியில் வாழும் இரு இனக்குழுக்கள். பல நூறு ஆண்டுகளாக பெரும் ஏரிகள் பகுதி (Great lakes region) என்று தற்போது அழைக்கப்படும் பகுதியில் தான் வாழ்ந்து வருகிறார்கள். ஆப்பிரிக்காவின் பிற இனக்குழுக்களைப் போலவே அவர்களுள் சிறு சிறு மோதல்கள் அவ்வப்போது நிகழ்ந்து வந்துள்ளன. இரு குழுக்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை ஊதிப் பெரிதாக்கியப் பெருமை காலனியாதிக்கத்தைச் சாரும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு ஆப்பிரிக்காவில் காலனிகளை உருவாக்கின.  இந்த காலனியாக்கத்துக்கு பல காரணங்கள் உண்டு – அக்கண்டத்தின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதிலிருந்து பக்கத்து நாட்டுக்காரனை விட பெரிய நிலப்பரப்பைக் கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டுமென்ற வெத்து ஜம்ப நினைப்பு வரை.  இதனையே வரலாற்றாளர்கள் ஆப்பிரிக்காவிற்கான அடிதடி (the scramble for Africa) என்று அழைக்கின்றனர்.  ஆப்பிரிக்காவின் எதார்த்த நிலையைப் பொருட்படுத்தாமல் ஐரோப்ப்பாவில் உட்கார்ந்து கொண்டு ஆப்பிரிக்க வரைபடத்தில் கோடு கிழித்தனர் ஐரோப்பிய அரசியல்வாதிகள். இதனால் ஆப்பிரிக்காவில் சம்பந்தமில்லாமல் நாடுகள் உருவாகி விட்டன.  பல நூற்றாண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த இனக்குழுக்கள் ஐரோப்பியர் வரைந்த எல்லைகளால் பிளவுபட்டன.  அதே போல பல நூற்றாண்டுகளாக சண்டையிட்டுக் கொண்டிருந்த இனக்குழுக்கள் ஒரே நாட்டில் அருகருகே வாழும்படியும் ஆனது.  இந்த குழப்படி வேலையில் உருவானைவை தான் ருவாண்டா மற்றும் புரூண்டி நாடுகள்.  இவ்விரு நாடுகளும் ஜெர்மனியின் காலனிகளாக மாறின. இதற்கு முன்பே இப்பகுதி பல நூறு ஆண்டுகளாக டுட்சி இன மன்னராட்சியின் கீழ் இருந்தது.  டுட்சிக்கள் எண்ணிக்கையில் ஹுட்டுக்களை விட குறைவென்றாலும், ஆட்சி அதிகாரங்கள் அவர்களது கையில் தான் இருந்தன. ஜெர்மனியின் காலனிய ஆட்சியாளர்களும் டுட்சிகளுக்கு சாதகமாகவே செயல்பட்டதால், அவர்களது அரசிலும் டுட்சிகளே உயர் பதவிகளை வகித்தனர். டுட்சிகள் தான் மரபணு அடிப்படையில் உயர்ந்த இனம் என்ற எண்ணம் கொண்டிருந்த ஜெர்மானியர்களின் கொள்கைகள் அதுவரை சிறிய அளவில் புகைந்து கொண்டிருந்த இனவெறுப்பை நன்றாக ஊதி விட்டன.  எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் இரண்டாம் தரக் குடிமக்கள் போலவே ஹுட்டுக்கள் வாழ நேரிட்டது.   இதனால் அவர்களுக்கு டுட்சிக்களின் மேலிருந்த கோபம் வெறுப்பாக மாறியது.

முதல் உலகப் போரில் ஜெர்மனி தோற்றதால்,  ருவாண்டாவும் புருண்டியும் பெல்ஜியத்தின் கட்டுப்பாட்டில் வந்தன. பெல்ஜியமும் ஜெர்மனியின் இனவாதக் கொள்கைகளை மேலும் விரிவுபடுத்தி டுட்சிக்களுக்கு சாதகமாக நடந்து கொண்டது.  இப்பகுதி மக்களுக்கு இன அடிப்படையில் அடையாள அட்டைகள் வழங்கப்படும் அளவுக்கு காலனிய ஆட்சியாளர்கள் இனவாதக் கொள்கையைப் பின்பற்றினர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஆப்பிரிக்கா மீதான ஐரோப்பிய பிடி தளர்ந்தது.  ஆப்பிரிக்கா முழுவதும் தேசியவாதம் தழைத்தோங்கி எல்லா நாடுகளிலும் விடுதலை இயக்கங்கள் தோன்றின. ருவாண்டாவிலும் புரூண்டியிலும், ஹுட்டு இன மக்களளே விடுதலை இயக்கங்களில் பெரும் பங்காற்றினர். நாடு விடுதலை அடைந்துவிட்டால், இதுவரை கிடைக்காத அரசியல் அதிகாரம் தங்கள் கைக்கு வரும் என்பது அவர்களது கணக்கு.  மக்களாட்சி முறையில் எண்ணிக்கையில் அதிகமானோருக்கே அரசு அமைக்க முடியும் என்பதால் இரு நாட்டு ஹுட்டுக்களுக்கும் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டனர். ஆனால் டுட்சிக்கள் நாடுகள் விடுதலை அடைவது பற்றி அவ்வளவு உற்சாகம் கொள்ள வில்லை. காலனியாட்சி போய் மக்களாட்சி வந்துவிட்டால், எண்ணிக்கையில் குறைந்த தங்கள் இனம் அதுவரை அனுபவித்து வந்த ஆட்சியும் அதிகாரமும்   இழந்து ஹுட்டுக்களின் தயவில் வாழ வேண்டுமே என்று அஞ்சினர். இதனால் விடுதலை இயக்கங்களில் பங்கேற்கவில்லை. இரு நாடுகளும் 1960களில் விடுதலையடைந்து மக்களாட்சி முறையில் தேர்தல்கள் நடந்தன. மக்கள் தொகையில் சுமார் 80 சதவிகிதம் இருந்த ஹூட்டுகள் ருவாண்டாவில் எளிதில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினர்.  அதிகாரத்தை இழந்த டுட்சிக்கள் எப்படி மீண்டும் அதனைக் கைப்பற்றுவது என்று சிந்திக்கத் தொடங்கினர். ஆனால் அண்டை நாடான புரூண்டியில் டுட்சிக்களின் ராணுவ ஆட்சியே நடந்து வந்தது.

1960களில் ஆப்பிரிக்காவெங்கும் காணப்பட்ட அரசியல் நிலையின்மையும் அடிக்கடி நிகழும் இராணுவப்புரட்சிகளும், ருவாண்டாவில் தங்கள் இன மக்களின் வெற்றியும் புரூண்டியின் ஹுட்டுக்களுக்கு அதிகாரத்தை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொள்ளலாம் என்ற தைரியத்தைக் கொடுத்தன. 1972ல் புரூண்டியில் ஹூட்டுக்களின் புரட்சி வெடிததது. சில ஆயிரம் டுட்சிக்கள் புரட்சியால் விளைந்த கலவரங்களில் கொல்லப்பட்டனர். ஆத்திரம் அடைந்த டுட்சி அரசு பதிலுக்கு ஹுட்டுக்களைக் கொன்று குவிக்கத் தொடங்கியது.  திட்டமிட்டு ஹுட்டு இனத்தை அழிக்க முயன்றது. இக்காலகட்டத்தில் டுட்சி அரசின் முழு ஒத்துழைப்போடு நடந்த  படுகொலைகளில் ஒன்றரை லட்சம் ஹுட்டுக்கள் கொல்லப்பட்டனர். மேலும் சில லட்சம் பேர் தப்பித்து ஓடி அண்டை நாடுகளில் அகதிகளானார்கள்.  அதுவரை இரு இனங்களுக்குமிடையே சிறு சிறு மோதல்கள் நடைபெற்று வந்தாலும் ஒரு இனம் கவனமாகத் திட்டமிட்டு அடுத்த இனத்தை முழுவதும் அழிக்க முயன்றது இதுவே முதல் முறை. இந்த முயற்சி வெற்றி பெறவில்லையென்றாலும் சம்பந்தப்பட்டவர்களது மனதுகளில் இனவொழிப்பு செய்துவிடலாம் என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றச் செய்தது. அடுத்த இருபது ஆண்டுகளுக்கு ருவாண்டாவிலும் புரூண்டியிலும் பெரிய அளவு கலவரங்கள் எதுவுமின்றி அமைதியாக இருந்தது. எனினும் ருவாண்டாவின் ஹுட்டு பெரும்பான்மை அரசை வீழ்த்த டுட்சி போராளிக் குழுக்கள் ஆயுதமேந்தி போராடி வந்தன. உகாண்டா, செயர் போன்ற அண்டை நாடுகளில் இருந்து ருவாண்டா மீது தாக்குதல் நடத்திய வண்ணம் இருந்தன. 1990களில் இந்த மோதல்கள் பெரிய அளவில் உள்நாட்டுப் போராக வெடித்தன.  உள்நாட்டுப் போர் மூண்டவுடன் பிற நாடுகள் தலையிட்டு இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் பேசின. ஆட்சி அதிகாரத்தில் டுட்சிப் போராளிகளுக்கு பங்கு கொடுக்கும் படி ஹுட்டு அரசை வற்புறுத்தின.

இத்தனை நாள் அதிகாரமற்று இருந்த நாங்கள் இப்போது கொஞ்ச நாளாகத் தான் அதிகாரத்தை அனுபவித்து வருகிறோம். அதுவும் பொறுக்காமல் அதைப் பிடுங்கி டுட்சிகளுக்கு கொடுக்கச் சொல்கிறார்களே என்று ஹுட்டுக்களுக்கு ஆத்திரம் மூண்டது. இந்தப் பிரச்சனையே டுட்சிக்கள் இருந்தால் தானே. அவர்களை வேரோடு அழித்து விட்டால் அவர்களுக்கு அதிகாரத்தில் பங்காவது மண்ணாவது என்று ஹுட்டுக்களுக்குத் தோன்றியது. மேலும் 1972ல் புரூண்டியில் டுட்சிக்கள் செய்ய முயன்று தோற்ற இனவொழிப்பை இந்த முறை தாங்கள் செய்து விட வேண்டும் என்று முடிவு செய்தனர்.  இனவொழிப்புக்கான ஆயத்தங்களைத் தொடங்கினர்.  ஏப்ரல் 1994ல் ருவாண்டா மற்றும் புரூண்டி நாடுகளின் குடியரசுத் தலைவர்கள் பயணம் செய்த விமானம் ருவாண்டா நாட்டுத் தலைநகர் கிகாலியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இருவரும் இதில் மரணமடைந்தனர்.  இனவொழிப்பைத் தொடங்க ஹுட்டுக்கள் தேடிக்கொண்டிருந்த காரணம் அவர்களுக்கு கிடைத்து விட்டது.  எப்படியும் டுட்சிக்கள் நம்மை ஆள விடமாட்டார்கள் என்று பிரச்சாரம் செய்ய இது வசதியாகப் போனது. (யார் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தினார்கள் என்று இன்றுவரை சர்ச்சையாகவே உள்ளது.  டுட்சிப் போராளிக் குழுக்கள் தான் செய்தன என்று ஹுட்டுக்களும், ஹுட்டு தீவிரவாதிகளே இனவொழிப்பைத் தொடங்குவதற்க்காக இதைச் செய்தனர் என்று டுட்சிக்களும் இன்று வரை மாறி மாறி  குற்றம் சாட்டி வருகின்றனர்)

யார் ஆரம்பித்தார்களோ அடுத்து நிகழ்ந்த பயங்கரம் இதுவரை உலக வரலாற்றில் யாரும் கண்டிராதது.  ருவாண்டாவின் ஊடகங்கள் டுட்சி இனத்தவரின் மீது வெறுப்பினை உமிழ்ந்தன.  ஹுட்டு மக்களின் ரத்தம் கொதிக்கும் படி டுட்சிக்களின் சதிகளையும் துரோகங்களையும் பற்றி அவதூறுகளைப் பரப்பின. டுட்சிக்கள் கரப்பான் பூச்சிகள் போன்றவர்கள். அடியோடு நசுக்கா விட்டால், பல்கிப் பரவி தொந்தரவு செய்து கொண்டே இருப்பார்கள் என்று மக்களை உசுப்பேத்தின.  அடுத்து நிகழவிருந்த இனக்கொலைக்குத் தேவையான கத்திகளை லட்சக்கணக்கில் அரசு இறக்குமதி செய்து, ஹுட்டுக்களுக்கு வினியோகம் செய்தது.  ஓவ்வொரு ஊரிலும் கிராமத்திலும் டுட்சி குடும்பங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களை யார் கொல்ல வேண்டுமென்று “பொறுப்புகள்” பிரிக்கப்பட்டன..  ஹுட்டு இளைஞர்களைக் கொண்டு கொலை படைப்பிரிவுகள் உருவாக்கப்பட்டன.  டுட்சிக்களை எளிதில அடையாளம் கண்டுகொள்ள மக்கள் அனைவரும் இனத்தின் அடிப்படையில் தனித்தனியே அடையாள அட்டைகளை பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

ஏப்ரல் 7, 1994ல் டுட்சி இனப்படுகொலை தொடங்கியது. குழந்தைகள் வயதானோர், ஊனமடைந்தவர்கள் என யாரும் விட்டுவைக்கப்படவில்லை.  ஒரு ஊரில் வாழ்ந்த டுட்சிக்களை அவர்களது பகுதியில் வாழ்ந்த ஹுட்டுக்களே அடையாளம் கண்டு கொன்றனர்.  படுகொலையில் பங்கெடுக்க மறுத்த ஹுட்டுக்களுக்கும் டுட்சிகளின் கதியே நேர்ந்தது.  தப்பியோடி ஒளிந்த டுட்சிக்களைக் கொல்ல கொலைப்படைகள் நாடெங்கும் அலைந்தன. தேவாலயங்கள், பள்ளிகள் என எங்கு ஒளிந்திருந்தாலும் டுட்சிக்களைத் தேடிப்பிடித்து கொலை செய்தன. ஜூலை மாத இறுதி வரை இந்த வெறியாட்டம் தொடர்ந்தது. ஐந்து லட்சத்திலிருந்து பதினோரு லட்சம் டுட்சிக்கள் இந்த இனப்படுகொலையில் கொல்லப்பட்டனர் என்று கணிக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு நிமிடத்துக்கும் 7 டுட்சிக்கள் வீதம் கொலை செய்யப்பட்டிருந்தனர்.   இப்படியொரு படுகொலை நிகழ்ந்து கொண்டிருந்த போது ஐக்கிய நாடுகளும், பன்னாட்டு சமுதாயமும் ஏதோ உள்நாட்டுத் தகராறு நடக்கிறது என்று சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. டுட்சி போராளிக் குழுக்கள் தங்கள் இன மக்கள் சாவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கவில்லை, படைதிரட்டி ருவாண்டா நாட்டைக் கைப்பற்றி ஹுட்டு அரசை பதவியிலிருந்து விரட்டி விட்டன.  பல லட்சம் ஹுட்டுக்களும் டுட்சி அரசு தங்களைப் பழிவாங்கிவிடும் என்று பயந்து நாட்டை விட்டு அகதிகளாக ஓடிவிட்டனர்.

இப்போது நிலை தலைகீழாக மாறியுள்ளது. டுட்சி அரசு ருவாண்டாவை இரும்புப் பிடியுடன் ஆளுகிறது. ஹுட்டு போராளிப் படைகள் பக்கத்து நாடுகளில் இருந்து கொண்டு ருவாண்டாவைத் தாக்கி வருகின்றன. அவற்றை ஒழிக்கிறேன் பேர்வழி என்று ருவாண்டா பக்கத்து நாடான செயருக்குள் அவ்வப்போது படையெடுத்து அங்கு உள்நாட்டுப் போரை தூண்டி விடுகிறது. லட்சக்கணக்கில் மக்கள் இறந்தும், இன்னும் பல லட்சம் பேர் வீடிழந்து அகதிகளாகியும் இரு தரப்பிலும் வெறி தணியாமல் இன்னும் பகைமை வளர்ந்து கொண்டிருக்கிறது.

ரத்த ராணி

13. எலிசபெத் பாதோரி

வரலாற்றைப் படிப்பவர்களுக்கு கொள்கைக்காகவும் சொந்த ஆதாயத்துக்காகவும்  மக்களைக் கொன்று குவித்த வில்லன்கள் அடிக்கடி தென்படுவார்கள்.  இப்படிப்பட்ட வில்லன்களை விட தனிப்பட்ட சந்தோஷத்துக்காக ஒரு சில பத்து பேரைக் கொன்ற தொடர் கொலையாளிகள் (serial killers) தான் மக்களிடையே பிரபலமாக இருக்கிறார்கள். 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் சீரியல் கில்லர், சைக்கோபாத் போன்ற வார்த்தைகளெல்லாம் உருவாக்கப்பட்டன என்றாலும் வரலாற்றில் அதற்கு பல காலம் முன்னரே தொடர் கொலையாளிகள் இருந்திருக்கிறார்கள். அவர்களுள் பெண்களும் அடக்கம்.   இவர்கள் வாழ்ந்து பல நூற்றாண்டுகள் ஆன பின்னரும் அவர்களைப் பற்றிய கதைகள் மட்டும் இன்னும் உலா வந்து கொண்டிருக்கினறன.  காலப்போக்கில் ஊதிப் பெரிதாக்கப்பட்டு ஈறு பேனாகி, பேன் பெருமாளானது போல இன்று பல மொழி இலக்கியங்களுக்கும் கற்பனைப் பாத்திரங்களுக்கும் அடிப்படையாகிப் போயிருக்கின்றன.  இப்படி இலக்கியத்தில் அமரத்துவம் பெற்ற தொடர் கொலையாளிகளில் ஒருவரான எலிசபெத் பாதோரி தான் இந்த வார வில்லி.

வரலாற்றில் எப்போதும் கிழக்கு ஐரோப்பாவுக்கென ஒரு தனி இடம் உண்டு. மேற்கு    மற்றும் தெற்கு ஐரோப்பியப் பகுதிகள் பழம் நாகரிங்களுக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் பெயர் போனவை. ஆனால் கிழக்கு ஐரோப்பா என்றுமே வரலாற்றில் “இருண்ட பிரதேச” மாகத் தான் இருந்துள்ளது. .  இப்பிராந்தியத்தின் அமானுஷ்யக் கதைகள் மிகப் பிரபலம். மேற்கு ஐரோப்பியர்கள் காட்டுமிராண்டிகள் வாழுமிடம் எனக் கருதிய ஆசியாவின் எல்லையில் அமைந்திருப்பதோ என்னமோ கிழக்கு ஐரோப்பாவென்றால் பேய் பிசாசு இன்ன பிற இரத்த வெறி பிடித்த ஐட்டங்கள் அலையும் இடம் என்றொரு பிம்பம் உருவாகி விட்டது.  இந்த கருத்துருவாக்கத்துக்கு தீனி போடுவது போல கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பல வில்லன்களும் வில்லிகளும் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களுள் அதிக பிரபலமானவர் விளாட் டிராக்கூல்.  டிராகுலா கதைக்கு மூல காரணம் என்று சொல்லப்படுபவர். இவருக்கு அடுத்தபடியாக அதிக பிரபலமாக இருக்கும் வில்லி, ஹங்கேரியின் எலிசபெத் பாதோரி. 650  இளம் பெண்களைக் கொலை செய்து அவர்களது இரத்ததில் குளித்து “இரத்த ராணி” என்றும் “பெண் டிராகுலா”  என்றும் பெயர் பெற்றவர்.

எலிசெபெத் 1560ம் ஆண்டு ஹங்கேரி ராஜ்ஜியத்தின் பலம் வாய்ந்த பாதோரிக் குடும்பத்தில் பிறந்தார். பாதோரி பிரபுக்கள் குறுநில மன்னர்கள். ஹங்கேரியில் பல துறைகளிலும் முக்கிய பதவிகளை வகித்தவர்கள்.  அந்தக் காலத்தில் ஹங்கேரியில் நில அடிமைத்துவம் (serfdom) அமலில் இருந்தது. இம்முறையில் ஒரு பகுதியின் குறுநில மன்னருக்கே அப்பகுதி நிலமனைத்தும் சொந்தம். அப்பகுதி மக்கள் அனைவரும் ஒரு வகையில் அவருடைய அடிமைகளே. அவரே அப்பகுதியில் காவல்துறை, நீதித்துறை எல்லாம். அவர் வைத்தது தான் சட்டம். ஒரு  பிரபு தன் கட்டுப்பாட்டிலுள்ள நில அடிமைகளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். யாரும் கேட்க முடியாது.  ஒரு பிரபு தன்னை விட மேலதிகாரத்தில் உள்ள மற்றொரு பிரபுக்கு மட்டுமே கட்டுப்பட்டவர். கீழிருப்பவர்களைக் கண்டு கொள்ளத் தேவையில்லை. பாதோரி குடும்பத்தினர் இந்த நில அடிமை அதிகார அடுக்கில் பல நிலைகளை வகித்தனர்.

பிரபுக்களின் குடும்பங்கள் பெண் கொடுத்தும் பெண் எடுத்தும் தான் தங்கள் அரசியல் கூட்டணிகளைப் புதுப்பித்தும் பலப்படுத்தியும் வந்தன. அது போல பதினைந்து வயதான எலிசபெத்தையும் அவரது பெற்றோர் நிச்சயித்தது போலவே நாடாஸ்டி பிரபு குடும்பத்தில் உறுப்பினரான ஃபெரென்க் நாடாஸ்டிக்கு மணமுடித்தனர்.  ஃபெரென்க்கும் ஹங்கேரி அரசியலில் பெரும் புள்ளி. தனது புதிய மனைவிக்கு திருமணப் பரிசாக ஒரு பெரிய கோட்டையினையும் அதனைச் சுற்றியுள்ள பல நகரங்களையும் வழங்கினார். இப்பகுதி முழுவதும் நாடாஸ்டி குடும்பத் தனிச்சொத்தாக இருந்ததால் இங்கு ஹங்கேரியின் சட்ட திட்டங்கள் செல்லாது. எலிசபெத்தும் அவரது கணவனும் வைத்தது தான் சட்டம். கணவன் இல்லையென்றால் எலிசபெத்து தான் இப்பகுதிக்கு முழு சொந்தக்காரி என்ற நிலை இருந்தது.

இங்கு தான் அடுத்த பல ஆண்டுகள் எலிசபெத் வாழ்ந்தார். கணவர் ஃபெரென்க் ஹங்கேரியின் ராணுவத்தில் உயர் பதவி வகித்தவர். அடிக்கடி படைகளுக்குத் தலைமை தாங்கி தளபதியாகப் பணியாற்ற பல போர்முனைகளுக்குச் சென்று விடுவார். தனித்து விடப்பட்ட எலிசபெத் கணவர் இல்லாத நேரங்களில் குடும்ப விவகாரங்களைக் கவனித்துக் கொள்வார். குடும்ப நிலங்களின் நிர்வாகம், கீழிருக்கும் பிரபுக்களுக்கும், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நில அடிமைகளுக்கும் ஏற்படும் சிக்கல்களுக்கு பஞ்சாயத்து செய்து தீர்ப்பு சொல்லுதல் போன்ற பொறுப்புகள் அனைத்தையும் எலிசபெத்தே ஏற்று செய்தார். இப்படியே முப்பது ஆண்டுகள் கழிந்தன.

எல்லாம் நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்த போது மெதுவாக பாதோரி குடும்ப நிலங்களிலிருந்து வெளியுலகுக்கு பயங்கர வதந்திகள் கசியத் தொடங்கின. பாதோரி குடும்பக் கோட்டையில் சொல்ல முடியாத கொடூரங்கள் நடக்கின்றன, சாத்தானிய பில்லி சூனிய வேலைகள், ரத்த மாந்திரீகம் போன்றவையும் நிகழ்கின்றன என பலவாறாக பேசப்பட்டது.  இதனை பயன்படுத்திக் கொள்ள நினைத்த பாதோரி மற்றும் நாடாஸ்டி குடும்பத்தின் அரசியல் எதிரிகள் வதந்திகளில் உண்மையுள்ளதா என்று தோண்டித் துருவினர். விசாரணையில் கேள்விப்பட்ட விஷயங்கள் அவர்களைக் குலை நடுங்க வைத்தன. கணவர் ஊரில் இல்லாத போது எலிசபெத் தங்கள் குடும்ப நிலங்களை நிர்வாகம் செய்வதோடு மட்டும் நிற்கவில்லை நூற்றுக்கணக்கான கொலைகளையும் செய்திருந்தார்.  கணவரின்றி தனித்து விடப்பட்ட எலிசபெத்துக்கு போரடித்த வாழ்க்கை சூனியமாக இருந்தது.  பொழுது போக்குவதற்காக முதலில் தனது பணிப்பெண்களை அடித்துத் துன்புறுத்த ஆரம்பித்தார். ஆரம்பத்தில் அடி உதையுடன் நின்று போன சித்திரவதைகள் போகப் போக கடுமையாகின.  பணிப்பெண்களைத் தனது கோட்டையில் உள்ள நிலவறையில் நிர்வாணமாகக் கட்டி வைத்து வகை வகையாக சித்தரவதை செய்து மகிழ்ந்தார். அதுவும் யாராவது அழகான பெண் எலிசபெத்தின் கண்ணில் பட்டு விட்டால் போதும் அவரது வெறி தலைக்கேறி விடும். அப்பெண்ணைக் கட்டைகளால் அடித்தும், ஊசிகளால் குத்தியும், முகத்தை சிதைத்தும் துன்புறுத்துவார்.  வெறியேறிய பின் தீயினால் சுட்டு ரசிப்பார். தன்னை விட அழகான அப்பெண் அவலட்சணமாகி துடிதுடித்து சாகும் வரை எலிசபெத்தின் வெறி அடங்காது.

எலிசபெத்தின் இந்த மனநோய் விரைவில் வேறு திசையில் திரும்பியது.  அவருக்கு வயது அதிகமாக அதிகமாக தனது அழகை இழந்து விடுவோம் என்ற பயம் பிடித்துக் கொண்டது.  எப்படியாவது இளமையையும் அழகினையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்ற வெறி மூண்டது. ஏற்கனவே எலிசபெத்தின் வெறியாட்டங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த பில்லி சூனியக்காரர்கள் அவரது புது இளமை மோகத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டனர். கன்னிப் பெண்களின் ரத்தத்தில் அடிக்கடி குளித்தால் இழந்த இளமையினை மீண்டும் பெறலாம் என்று அவரது காதில் போட்டு வைத்தனர். அவ்வளவு தான், பாதோரி குடும்ப நிலங்களில் இளம் பெண்கள் காணாமல் போவது திடீரென்று அதிகரித்தது. முன்பு பணிப்பெண்களை அடித்துக் கொல்வதோடு திருப்தியடைந்திருந்த எலிசபெத், இப்போது தனது “இளமைக் குளிய”லுக்காக  பிற இளம்பெண்களையும் கொண்டு வர தனது ஆட்களுக்கு உத்தரவிட்டார்.   இந்த இளம் பெண்களை முன்பு போல துன்புறுத்தி கொலை செய்த பின்னர் அவர்களது உடம்பில் உள்ள ரத்தத்தினை வடித்து அதில் குளிக்கத் தொடங்கினார் எலிசபெத்.

தங்கள் எஜமானியின் கோட்டையில் வேலைக்கு சேரும் பெண்கள் யாரும் உயிருடன் திரும்பி வருவதில்லை என்பதைக் கண்டுகொண்ட குடியானவர்கள் தங்கள் பெண்களை அக்கோட்டைக்கு அனுப்ப மாட்டோம் என்று முரண்டு பிடிக்கத் தொடங்கினர். இதனால் எலிசபெத்தின் அடியாட்கள் அக்கம் பக்கத்திலிருந்த பெண்களைக் கடத்தி வந்து தங்கள் எஜமானியின் இரத்த பசிக்கு தீனி போடத் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு அதிகமாகி எலிசபெத்தின் அட்டூழியங்கள் பற்றிய வதந்திகள் ஹங்கேரியின் பிற பகுதிகளுக்குப் பரவின. இதைக் கேள்விப்பட்டுத் தான் பாதோரி மற்றும் நாடாஸ்டி குடும்பங்களின் அரசியல் விரோதிகள் தங்கள் விசாரணையைத் தொடங்கினர். வதந்திகள் உண்மையென உறுதிப் படுத்திக் கொண்ட பிறகு ஹங்கேரியின் அரசரிடம் விஷயத்தைப் போட்டு உடைத்தனர்.  அரசர் இந்த குற்றச்சாட்டை விசாரிக்க ஒரு குழுவினை அமைத்தார். அவர்கள் எலிசபெத்தின் கோட்டையைச் சோதனையிட்டனர். அங்கு அவர்கள் கண்ட ஒரு இளம்பெண்ணின் பிணம் குற்றச்சாட்டினை உறுதிபடுத்தியது. மேலும்

அக்கம் பக்கமுள்ள கிராமங்களில் விசாரித்ததில் எலிசபெத்தின் அட்டூழியங்கள் பற்றிய முழு உண்மைகள் மெதுவாக வெளியே வந்தன.  எலிசபெத்தும் அவருடைய அடியாட்களும் கைது செய்யப்பட்டனர். எலிசபெத் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை வீட்டுக் காவலில் மட்டும் வைத்தனர். அடியாட்களைச் சிறையில் அடைத்து விசாரித்ததில் சுமார் 650 இளம்பெண்களை எலிசபெத் 30 ஆண்டுகளில் கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

எலிசபெத் கொலைகாரி என்பது உறுதியான பின்னரும் அவருக்கு தண்டனை வழங்கப்படவில்லை. பிரபு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை சாதாரண மக்களைக் கொலை செய்ததற்காகத் தண்டித்தால் தவறான (!) முன்னுதாரணமாக ஆகி விடும் என்பதற்காகவும், பலம் வாய்ந்த பாதோரி குடும்பத்தின் பிற கிளைகளை பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவும் அவரை தண்டிக்கவில்லை. அவரது அடியாட்கள் மட்டும் மரணதண்டனை விதிக்கப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டனர்.  எலிசபெத் தனது மீதி வாழ்நாளை வீட்டுச் சிறையிலேயே கழித்தார். அவரது கொடூர குற்ற சரித்தரம் கதைகளோடு கலந்து விட்டது. டிராகுலா கதைகளிலும் மாந்திரீகப் புனைவுகளிலும் இன்று எலிசபெத் வில்லியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இருவர்

13. எர்னான் கோர்டேஸ் – ஃபிரான்சிஸ்கோ பிசாரோ


கோர்டேஸ்

ஒரு நாடு மற்றொரு நாட்டைக் கைப்பற்றி அதன் மக்களை அடிமைகளாக்கி அதன் நாகரிகத்தை அழித்த நிகழ்வுகள் உலக வரலாற்றில் பல முறை நிகழ்ந்துள்ளன. பொதுவாக இவை ஒரு பேரரசரின் சாம்ராஜ்ய கனவுகளை மெய்பிக்கவும் சர்வாதிகாரிகளின் சக்தியைப் பெருக்கவும் நடந்துள்ளன. ஆனால் சாதாரண போர் வீரர்கள் பணத்துக்காகவும் புகழுக்காகவும் பெரும் நாகரிகங்களை ஒழித்ததும் பதினாறாம் நூற்றாண்டில் நடந்துள்ளது.

பதினைந்தாம் நூற்றாண்டு வரை இந்தியாவுடனான ஐரோப்பிய வர்த்தகம் கான்ஸ்டாண்டினோப்பிள் ந்கரம் (தற்கால இஸ்தான்புல்) வழியாகத் தான் நடந்து கொண்டிருந்தது. 1453ல் துருக்கியர்கள் அந்த நகரைக் கைப்பற்றி வர்த்தக வழியை அடைத்து விட்டார்கள். நில வழி அடைபட்டதால் இந்தியாவுக்குப் போகும் கடல்வழியைக் கண்டுபிடிக்க முயன்றனர் ஐரோப்பியர். அப்படித் தான் 1492 இல் கொலம்பஸ் வட அமெரிக்க கண்டத்தில் காலடி எடுத்து வைத்தவுடன் அமெரிக்க பூர்வீக குடிகளுக்குக் கெட்ட காலம் ஆரம்பமாகி விட்டது. இந்தியாவிற்குப் போகும் வழியைத் தேடித் தான் கொலம்பஸ் அமெரிக்கா போனார். ஆனால் அமெரிக்காவின் செல்வச் செழிப்பைக் கண்டவுடன் இந்தியா மறந்து போனது. கொலம்பசுடன் வந்தவர்கள் ஐரோப்பாவிற்குத் திரும்பிப் போய் தாங்கள் கண்ட புதிய உலகைப் பற்றிய கதைகளைப் பரப்பத் தொடங்கினர். பெரும்பாலும் அக்கட்டுக் கதைகள் அனைத்தும் ஒரு விஷயத்தை மட்டும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தின – புதிய உலகத்தில் எக்கச்சக்கமாக செல்வம் இருக்கிறது; அங்கே போனால் பணக்காரனாகி விடலாம்.

அந்த செல்வத்தைக் கொள்ளையடிப்பதற்காகக் கூட்டம் கூட்டமாக ஐரோப்பிய காலனியாளர்கள் அமெரிக்காவிற்கு வரத்தொடங்கினர்.  அப்படி வந்தவர்கள் காலரா, பெரியம்மை போன்ற பல புதிய நோய்களை வட,தென் அமெரிக்க கண்டங்களுக்கு அறிமுகப்படுத்தினர். இப்புதிய நோய்களுக்கு எதிர்ப்பு சக்தி இல்லாமையால் பூர்வீக குடியனர் லட்சக் கணக்கில் இறந்தனர். நோய்கள் கொல்லாமல் விட்டவர்களை ஐரோப்பியர்களின் பீரங்கிகளும் துப்பாக்கிகளும் கொன்று குவித்தன.  இந்தப் புதிய உலகத்தைக் கொள்ளையடிக்க பல ஐரோப்பிய தேசங்களிடையே கடும் போட்டி நிலவினாலும் ரேசில் ஜெயித்ததது ஸ்பானியப் பேரரசு தான். கொலம்பஸ் வந்திறங்கிய பின் ஐம்பது ஆண்டுகளுக்குள் பூர்வீக குடியினரின் பெரும் சாம்ராஜ்யங்கள் ஸ்பானியப் படைகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் வீழ்ந்தன.   ஸ்பானியத் தளபதிகளின் பொன்னாசைக்கும், மூர்க்கத்திற்கும் முன்னால் அஸ்டெக், இன்கா பேரரசுகளால் சிறிது காலம் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை.  இப்படி அரை நூற்றாண்டுக்குள் அமெரிக்க கண்டத்தில் ஸ்பானிய ஆதிக்கத்தை நிறுவுவதற்கும் அஸ்டெக் மற்றும் இன்கா சாம்ராஜ்யத்தை வீழ்த்துவதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர்கள் இரு கான்கிஸ்டடார்கள் – எர்னான் கோர்ட்டேஸ் மற்றும் ஃபிரான்சிஸ்கோ பிசாரோ. கான்கிஸ்டடார் (conquistador)  என்றால் கைப்பற்றுபவர் என்று பொருள். இந்த இருவரும் சேர்ந்து எப்படி ஒரு கண்டத்தையே ஸ்பெயினுக்காகக் கைப்பற்றினார்கள் என்று இனி பார்ப்போம்.

பிஸாரோ

கோர்ட்டேஸ் குடும்பம் ஸ்பெயினில் ஒரு பிரபுக் குடும்பமாக இருந்தாலும் அவர்கள் அப்படி ஒன்றும் பணக்காரர்கள் இல்லை.  சட்டத்துறையில் கல்வி கற்ற கோர்ட்டேசுக்குப் பெரும் புகழும் பணமும் சம்பாதிக்க வேண்டுமென்று வெறி இருந்தது. குடும்பத்தார் பேச்சைக் கேட்டால் அவர்களைப் போலத் தானும் பணமில்லாதவனாக இருக்க வேண்டியது தான் என முடிவு செய்தார். அப்போது தான் அமெரிக்காவில் ஸ்பானியக் காலனிகள் உருவாகத் தொடங்கியிருந்தன.  பணம் சம்பாதிக்கவும் தங்கள் பெயரை நிலை நாட்டவும் ஸ்பானியர்கள் பலரும் புதிய காலனிகளுக்குக் கிளம்பினார்கள்.  அப்படி போய் வந்தவர்கள் சொன்ன கதைகளைக் கேட்டு கோர்ட்டேசுக்குத் தானும் அங்கு போக வேண்டுமென்ற ஆசை எழுந்தது.  1504ம் ஆண்டு ஸ்பானியக் காலனியான ஹிஸ்போனியாலாவுக்கு (தற்கால கியூபா) போனார். அடுத்த சில ஆண்டுகளுக்கு கியூபாவை முழுவதும் கைப்பற்றும் ஸ்பானிய முயற்சியில் பங்கேற்று பெரும் புகழும் பணமும் சம்பாதித்தார்.  ஸ்பானிய ஆட்சியாளர்களிடையே நல்ல பேரும் பதவியும் அவரைத் தேடி வந்தன. ஆனால் கியூபா போன்ற ஒரு சிறிய தீவில் அவர் தனது வாழ்க்கையைக் கழிக்க விரும்பவில்லை.  சிறிய தீவிலேயே இவ்வளவு செல்வம் கிட்டியதென்றால அமெரிக்காவின் உட்பகுதியில் எவ்வளவு இருக்கும் என்று கணக்குப் போட்டார். பதினைந்து ஆண்டுகள் கியூபாவில் கழித்த பின்னர், அமெரிக்கா மீது படையெடுக்க ஆயத்தங்களைத் தொடங்கினார்.

இந்த முயற்சிக்கு கியூபாவின் ஆளுனர் விரும்பவில்லை. தற்கால மெக்சிகோ பகுதிகளைக் கைப்பற்ற பெரும் செலவாகும் என்று அவர் கருதியதால் கோர்ட்டேசுக்கு உதவி செய்ய மறுத்துவிட்டார். இதனால் கோர்ட்டேஸ் அரசின் ஆதரவின்றி சொந்தச் செலவில் ஒரு படையினை உருவாக்கி மெக்சிகோ மீது படையெடுக்க வேண்டியதாயிற்று.  அப்போது மெக்சிகோ முழுவதும் அஸ்டெக் பேரரசால் ஆளப்பட்டு வந்தது.  அதன் தலைநகரம் தெனோசித்லானில் (தற்கால மெக்சிகோ நகரம்)  தங்கமும் வெள்ளியும் குவிந்து கிடப்பதாக கோர்ட்டேசுக்கு தகவல் கிடைத்தது.  கோர்ட்டெசின் படைகள் பலம் பொருந்தியவை அல்ல.  ஆயிரம் வீரர்கள் கூட அப்படையில் இல்லை. ஆனால் வெடிமருந்தும், அதுவரை எதிர் கொண்டிராத புதிய நோய்களும் அஸ்டெக் பேரரசை அழிக்க அவர்களுக்குத் துணையாக இருந்தன. தனது படை எவ்வளவு பலவீனமானது என்பதை கோர்ட்டேஸ் நன்கறிந்திருந்தார். இதனால் அஸ்டெக் மக்களிடையே தன் பெயரைக் கேட்டாலே அலறும்படி செய்ய, கையில் சிக்கிய அஸ்டெக் ஆட்சியாளர்களையெல்லாம் படுகொலை செய்தார். அஸ்டெக் மக்களுக்கு அடிபணிந்து வாழ்ந்து கொண்டிருந்த மற்ற பழங்குடியினரைத் தன் பக்கம் ஈர்த்தார்.  கோர்ட்டேசின் மூர்க்கமும் அவர் படையிலிருந்த புதிய வெடிமருந்து ஆயுதங்களும் அஸ்டெக் அல்லாத குடியினருக்கு, அஸ்டெக் சாம்ராஜ்யத்தை வீழ்த்த அவர் தான் சரியான ஆள் என்று காட்டிக் கொடுத்தன. அவர்கள் ஆயிரக்கணக்கில் அவரது படையில் சேர்ந்தனர்.

கோர்ட்டேசின் படையெடுப்பைச் சமாளிக்கத் தெரியாமல் திகைத்த அஸ்டெக் ஆட்சியாளர்கள் அவருடன் சமாதானமாகப் போகலாம் என்று எண்ணி அவரை டெனோசித்லானுக்கு அழைத்தனர். தலைநகரின் செல்வச் செழிப்பை நேரடியாகக் கண்ட கோர்ட்டேஸ் அதனை முற்றுகையிட்டு 1521ம் ஆண்டு கைப்பற்றினார். அஸ்டெக் அரச குலத்தவர்களையெல்லாம் படுகொலை செய்து விட்டார்.  அஸ்டெக் பேரரசு அப்படியே வீழ்ந்து மெக்சிகோ முழுவதும் கோர்ட்டெஸ் வசமானது.  ஆரம்பத்தில் இதனால் அவர் நினைத்தபடி பெரும் புகழும் பணமும் கிடைத்தன. ஸ்பானியப் பேரரசர் அவருக்கு பல பட்டங்களையும் நிலங்களையும் அளித்து கெளரவித்தார். ஆனால் இந்த நிலை நீடிக்கவில்லை. அஸ்டெக் சாம்ராஜியத்தில் அரசியல் செய்தவருக்கு உள்ளூர் அரசியலில் தாக்குப் பிடிக்க முடியவில்லை.  அவரது அரசியல் விரோதிகள் அவரை ஓரம் கட்டி விட்டனர். இழந்த புகழைப் பெற அவர் செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து இறுதியில் கடனாளியாகத் தான் இறந்தார்.

அஸ்டெக் பேரரசுக்கு கோர்ட்டேஸ் போல தென் அமெரிக்காவின் இன்கா பேரரசுக்கு வாய்த்தவர் ஃபெர்னாண்டோ பிசாரோ.  இவரும் கோர்ட்டெசைப் போலவே ஒரு சுமாரான குடும்பத்தில் பிறந்து பொருள் ஈட்டுவதற்காக அமெரிக்காவுக்கு வந்தார். கோர்ட்டேஸ் மத்திய அமெரிக்காவைக் குறி வைத்தது போல பிசாரோ தென் அமெரிக்காவைக் குறிவைத்தார்.  1520களில் தென் அமெரிக்காவின் பெரும் பகுதிகளை ஆட்சி புரிந்து வந்த இன்கா பேரரசு பற்றிய செய்திகள் ஸ்பானிய காலனியாளர்களை எட்டின. பல நூற்றாண்டுகளாகப் பெரும் பிரதேசங்களை ஆண்டு வந்த இன்கா வம்சத்தினர் சுற்றியுள்ள சிற்றரசுகளை அடக்கி, தட்டிக் கேட்க ஆளில்லாமல்  ஆண்டு வந்ததால் அதன் கஜானாக்கள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. இந்த செழிப்பு தான் அதற்கு வினையாகிப் போனது.  கோர்ட்டேசுக்கு மெக்சிகோவில் கிடைத்த வெற்றி பிற ஸ்பானிய கான்கிஸ்டடோர்களை உசுப்பி விட்டது.  எங்கே தங்கம்? எங்கே தங்கம்? என்ற தவிப்புடன் அமெரிக்கா வந்திறங்கியிருந்த ஸ்பானியத் தளபதிகளுக்கு இன்கா பேரரசில் தங்கத்தால் செய்த நகரங்கள் (el dorado) உள்ளன போன்ற வதந்திகள் மேலும் வெறியூட்டின.  பிசாரோவும் தனது சகாக்களுடன் 1520களில் மூன்று முறை  தெற்கு நோக்கிப் படையெடுத்தார்.  நோய்கள், அடர்ந்த காடுகள், எதிர்த்துச் சண்டையிடும் உள்ளூர் குடிகள் என பல இன்னல்களை மீறி இன்கா பேரரசினை அடைந்தார்.

இன்கா பேரரசிற்குப் பெரும் படைகளிலிருந்தன. பிசாராவிடமோ நூற்றுக்கும் குறைவான வீரர்கள். எனவே நேரடியாக மோதாமல், தந்திரமாக ஒரு காரியம் செய்தார் பிசாரோ. இன்கா பேரரசர் அடாஹுல்போவைக் கடத்திக் கொண்டு போய் விட்டார்.  அடாஹூல்போ தன்னை விடுவித்தால் ஒரு அறை முழுக்கத் தங்கமும் அது போல இரு மடங்கு வெள்ளியும் தருவதாக பேரம் பேசினார். சுமார் இருபதுக்கு பதினைந்தடி நீள அகலமும் எட்டடி உயரமும் கொண்ட ஒரு அறையைக் கற்பனை செய்து பாருங்கள். ஆம் அது முழுவதும் தங்கம்! அது போல இரு மடங்கு வெள்ளி!! குறைந்த பட்சம் 24 டன் தங்கமாவது இருந்திருக்க வேண்டும் என வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். இவையனைத்தும் ஒரு நாள் கொள்ளையில் பிசாரோ சம்பாதித்தவை. தங்கத்தை வாங்கிக் கொண்டு மன்னரை விட்டாரா என்றால் அதுவும் இல்லை. போட்டுத் தள்ளி விட்டார். அடாஹூல்போ இறந்ததால் இன்கா பேரரசில் பெரும் அரசியல் குழப்பம் உருவானது.  இன்கா மக்களை ஸ்பானியர்களுக்கு எதிராகத் திரட்ட சரியான தலைவரில்லாமல் போனதால், பிசாரோவின் ஆட்கள் மொத்தப் பேரரசையும் சுருட்டி தங்கள் கையில் போட்டுக் கொண்டனர். இன்கா பேரரசு ஸ்பெயினின் ஒரு மாகாணமாகி விட்டது. பிசாரோ அதன் ஆளுனராகிவிட்டார். ஆனால் கோர்ட்டேசைப் போலவே அவராலும் அவரது புகழையும் பணத்தையும் அனுபவிக்க முடியவில்லை.  இன்கா பேரரசு வீழ்ந்து சிறிது வருடங்களிலேயே, பிசாரோவுக்கும் அவருடைய சகாக்களுக்கும் தகராறு ஏற்பட்டு அதில் பிசாரோ கொலை செய்யப்ப்ட்டார்.

புதிய கண்டத்தில் ஒரு பேரரசை நிறுவ ஸ்பெயின் முதலில் முயலவிலை. கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு போவது தான் அவர்களின் முதல் குறிக்கோளாக இருந்தது. ஆனால் பிசாரோ மற்றும் கோர்ட்டேசின் செயல்களால் நிதானமாக ஆட்சி புரிந்து திட்டமிட்டு கொள்ளையடிக்கும் வாய்ப்பு ஸ்பெயினுக்கு கிட்டியது. பிசாராவுக்கும் கோர்ட்டேசுக்கும் கையில் சிக்கிய தங்கத்தைப் போல  பல லட்சம் ஆயிரம் மடங்கு அதிக செல்வங்கள் அடுத்த சில நூற்றாண்டுகளில் அமெரிக்காவிலிருந்து கொள்ளை போயின.  அஸ்டெக், இன்கா என்ற இரு பெரும் நாகரிகங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயின. சில நூற்றாண்டுகளில் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவைச் சுத்தமாகத் துடைத்து எடுத்து விட்டனர் ஸ்பானியர்கள்.

தங்கம், வெள்ளி மட்டுமல்ல விலைமதிப்பற்ற கற்கள், வாசனை திரவியங்கள், பட்டு ஆடைகள், புகையிலை, சர்க்கரை என கிடைத்த எதையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.  அமெரிக்க அரசுகளின் கஜானாக்கள் காலியான பின்னர் ஸ்பானியப் பேரரசு அமெரிக்க அடிமைகளைக் கொண்டு தங்கம், வெள்ளி சுரங்கங்களை இயக்க ஆரம்பித்தது.  இதனால் பிசாரோவுக்கும் கோர்ட்டேசுக்கும் கிடைக்காத தங்க வெள்ளி மலைகள் அவர்களுக்குப் பின் வந்த காலனியாளர்களுக்குக் கிடை­த்தன. இந்தக் கொள்ளை சில நாட்களிலோ, சில ஆண்டுகளிலோ முடிந்து விடவில்லை, சில நூறு ஆண்டுகள் நீடித்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்கப் பகுதிகளுக்கு ஐரோப்பிய காலனியாதிக்க நாடுகளிடம் இருந்து விடுதலை கிடைத்தது. ஆயினும் இந்த கட்டுக்கடங்காத கொள்ளை மற்றும் காலனியாதிக்கத்தின் பின் விளைவுகள் இன்றளவும் மத்திய, தென் அமெரிக்க நாடுகளைக் கடுமையாகப் பீடித்துள்ளன.