அமர்த்தியா சென்னும் அதிகாரமும்

TH26_AMARTYA_SEN_19761fகடந்த பிப்ரவரி மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற உலகப் புத்தகக் கண்காட்சியில் முதல் முறையாக அமர்த்தியா சென்னைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. கூகிள் ஹாலில்  (எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், கவிஞர் என்று தினம் ஒரு பிரமுகர் கலந்துகொண்டு உரையாடும் பெரிய அரங்கம் அது) முதல் நாள் அமர்த்தியா சென், நடிகர் ஷர்மிளா தாகூர் இருவரும் உரையாடிக்கொண்டிருந்தனர். இருக்கையில் இடமில்லாததால் தரையில் ஒரு கூட்டம் அமர்ந்திருந்தது. அரங்கத்தின் ஓரங்களில் வரிசையாக இன்னொரு கூட்டம். முண்டியடித்து செல்ஃபோனில் படம் பிடிக்க மற்றொரு தனிக்கூட்டம். பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.

பங்களாதேஷை இந்தியாவோடு ஒப்பிட்டுப் பேசினார் அமர்த்தியா சென். அடிப்படை சுகாதார வசதிகளில் இந்தியாவைவிட பங்களாதேஷ் முன்னேறியிருக்கிறது. இன்னமும் இந்தியாவில் சாலை, குடிநீர், சுகாதாரம், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளே செய்துதரப்படவில்லை. இடது, வலது பேதமின்றி அரசியல் கட்சிகள் மக்கள் நலனை உதாசீனம் செய்கின்றன. இந்தியாவில் இன்னமும் பெரும்பலானானோருக்குக் கழிப்பிட வசதியே இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி வருந்தினார். பங்களாதேஷ் இதில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளதைப் புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டினார்.

அமர்த்தியா சென் இடதுசாரி அல்ல. அவர் உலகமயமாக்கலையும் சந்தைப் பொருளாதாரத்தையும் நிராகரிப்பவர் அல்லர். ஆனால் வளர்ச்சி சரியான விகிதத்தில் பங்கிடப்படவில்லை என்னும் ஆதங்கத்தை சுமந்து நிற்கும் ஒரு பொருளாதார நிபுணர். பசி குறித்தும் பஞ்சம் குறித்தும் ஆய்வு செய்தவர் என்னும் அடிப்படையில் இந்தியாவில் பசி இன்னமும் தீராத நோயாக இருப்பதையும் சந்தைப் பொருளாதாரம் பெரும்பாலான மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கவில்லை என்பதையும் அவர் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுகிறார்.

தற்போது அமர்த்தியா சென் இரு காரணங்களுக்காக விவாதத்தில் இருக்கிறார். ஒன்று, ஜகதிஷ் பகவதி விவகாரம். இதைப் பற்றி எளிமையான அறிமுகம் கிடைக்க இந்தக் கட்டுரையை வாசியுங்கள். இரண்டாவது, மோடி பற்றி அவர் உதிர்த்த கருத்து. மோடி பிரதமராவதை தான் விரும்பவில்லை என்று சொன்னதற்காக அவருக்குக் கொடுக்கப்பட்ட பாரத் ரத்னா விருதைப் பறிக்கவேண்டும் என்று பாஜக தரப்பில் இருந்து எழுந்துள்ள கண்டனத்துக்குரிய ஒரு குரல்.

சமீபத்தில் படித்த ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது. பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட சமயத்தில் அமெரிக்கப் பொருளாதார நிபுணரான ஜோசப் ஸ்டிக்ளிட்டிஸ் (Joseph Stiglitz) அரசின் பெயில் அவுட் திட்டம் குறித்து அதிருப்தி தெரிவித்த காரணத்தால் பராக் ஒபாமா அவரை ஒரு கட்டத்தில் கழற்றிவிட்டுவிட்டார்.

அமர்த்தியா சென்னைப் போலவே ஸ்டிக்ளிட்ஸும் நோபல் பரிசு பெற்றவர். சென்னைப் போலவே அவரும் இடதுசாரி அல்லர். மோடி பிடிக்கவில்லை என்று சொன்னால் அமர்த்தியா சென்னின் பாரத ரத்னாவையும், முடிந்தால் நோபலையும் பறிக்கவேண்டும். ஒபாமா நிர்வாகத்தைக் குறை கூறினால் ஸ்டிக்ளிட்ஸ் விலகவேண்டும்.

தனக்குப் பிடித்த செய்திகளை, தனக்குப் பிடிக்கும் தொனியில் சொல்பவர்களை மட்டுமே அதிகாரம் விரும்புகிறது.

0

நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்!

pig

மாற்றம் : யார் மனிதன், யார் விலங்கு என்று கண்டறியமுடியாதபடி அனைவருடைய முகங்களும் ஒன்றுபோல் இருந்தன என்னும் ஜார்ஜ் ஆர்வெல்லின் விலங்குப் பண்ணை வாசகம் நினைவுக்கு வருகிறது.  ஜார்ஜ் புஷ்ஷின் நான்காவது ஆட்சிக்காலத்தை ஒபாமா நடத்திக்கொண்டிருக்கிறாரா? அல்லது ஒபாமாவின் முதல் இரு ஆட்சிக்காலத்தை புஷ் நடத்திக்கொடுத்தாரா?

அமெரிக்கா பிற நாடுகளை மட்டுமல்ல அமெரிக்கர்களையே ரகசியமாக உளவு பார்த்துக்கொண்டிருக்கிறது என்னும் உண்மையை  இதற்கு முன்பே சிலர் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள் என்றாலும் முதல் முறையாக உலகின் பெரும் கவனம் இதற்குக் கிடைத்திருப்பதற்குக் காரணம் எட்வர்ட் ஸ்நோடென். புஷ் அரசு, பல மில்லியன் அமெரிக்கர்களின் தனிப்பட்ட வாழ்வில் தேவையில்லாமல் தலையிடுகிறது என்று கோபாவேசத்துடன் பிரசாரம் செய்து தன்னை ஒரு லிபரலாக முன்னிறுத்தி புஷ்ஷை வீழ்த்தியவர் ஒபாமா. இப்போது புஷ்ஷின் அதே திட்டங்களை (கிட்டத்தட்ட ஒன்றுவிடாமல்) மேலதிகத் தீவிரத்துடன் ஒபாமா தொடர்கிறார். குவந்தணாமோ சிறைச்சாலையை மூடுவேன் என்று முழங்கினார். செய்யவில்லை. போர்களை முடிவுக்குக் கொண்டுவருவேன் என்றார். செய்யவில்லை.

ஜப்பான் சரணடைந்துவிட்டது, இரண்டாவது உலகப் போர் முடிவடைந்துவிட்டது என்று 1945ல் ஹாரி ட்ரூமேன் அறிவித்தபோது, அமெரிக்கர்கள் இனம் புரியாத மகிழ்ச்சியோடு வீதிகளில் திரண்டு வந்து ஆர்ப்பரித்தார்கள். ஜப்பனில் அணுகுண்டுகள் வீசப்பட்டது அவர்கள் நினைவில் இல்லை. அமெரிக்கா வென்றுவிட்டது என்பதால் எழுந்த மகிழ்ச்சி அல்ல அது. அவர்களுடைய உயிரையும் உணர்வுகளையும் தின்றுகொண்டிருந்த போர் முடிந்துவிட்டதால் எழுந்த ஏக்கப் பெருமூச்சே மகிழ்ச்சியாக வீதிகளில் வெளிப்பட்டது.

பராக் ஒபாமா வெற்றிபெற்றபோதும் இதே போன்ற மகிழ்ச்சி அமெரிக்க வீதிகளில் வெளிப்பட்டது. புஷ்ஷின் போர்கள் முடிவடைந்துவிடும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். சொன்னதைப் போலவே ஒபாமா மாற்றத்தைக் கொண்டுவந்துவிடுவார் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். அமெரிக்கர்கள் மட்டுமல்ல, உலகின் பெரும்பகுதியில் எதிரொலித்த நம்பிக்கை இது. வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்பினத் தலைவர் என்று கொட்டை எழுத்துகளில் தலைப்பிட்டு மகிழ்ந்தது மீடியா உலகம்.

உலகை மட்டும் ஏமாற்றியிருந்தால் பரவாயில்லை. அமெரிக்காவையும் சேர்த்தே ஏமாற்றியிருக்கிறார் ஒபாமா. அதற்காக (மட்டும்) அமெரிக்கர்கள் இப்போது பொங்கியிருப்பது மட்டுமே உறுத்துகிறது. விலங்குப் பண்ணையோடு சேர்த்து ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984-ஐயும் அமெரிக்கர்கள் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டிய தருணமிது. The Big  Brother is not just watching the world, but watching you too.

0

0743276671A Pinch of Salt : பிரிட்டிஷ் பயண எழுத்தாளரான ஏஏ கில் என்பவர் எழுதிய AA Gill is away என்னும் புத்தகத்தை வாசித்து முடித்தேன். சூடான், டான்ஸானியா, எத்தியோப்பியா, டோக்கியோ, டெல்லி, க்யூபா, அர்ஜெண்டினா என்று கில் மேற்கொண்ட பயணங்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இது. நீங்கள் எதைப் பற்றி எழுத விரும்புகிறீர்கள் என்று ஒரு பத்திரிகை எடிட்டர் கேட்டபோது கில் இவ்வாறு பதிலளித்திருக்கிறார். ‘இடங்களை, மனிதர்களாகப் பாவித்து பேட்டி எடுத்து எழுதப்போகிறேன்.’ இந்தப் புத்தகத்தைப் பற்றிய ஒரு வரி அறிமுகமும் இதுதான்.

நல்ல எழுத்து, ஒவ்வொரு இடத்தையும் பற்றிய சுருக்கமான, தெளிவான, பல சமயம் அழகான அறிமுகம் என்றபோதும்  ஒரு சிட்டிகை உப்பைப் பக்கத்தில் வைத்துக்கொண்டுதான் இந்தப் புத்தகத்தைப் படிக்கவேண்டியிருக்கிறது. முதல் காரணம், கில்லின் prejudices. ஒரு திடமான முன்முடிவோடுதான் ஒவ்வொரு நாட்டையும் அவர் காண்கிறார். க்யூபாவையும் ரஷ்யாவையும் முதல் பார்வையிலேயே வெறுத்தொதுக்குகிறார். கம்யூனிசத்தின் நிழல் அல்ல, நிழல் விழுந்த இடம்கூட அவருக்குப் பிடிக்கவில்லை. இரண்டாவது காரணம், பாலியல், பெண்கள், ஃபோர்னோகிராஃபி மீதான அவருடைய ஒருவகை obsession. எங்கு சென்றாலும் இதே வரிசையில் இவற்றையே அவர் ஆர்வத்துடன் தேடித்திரிகிறார்.

நல்ல வேளையாக, இந்தியாவை அவருக்குப் பிடித்திருப்பதற்கு முதன்மையான காரணம் தாஜ் மஹால். It is the most complete thing என்று வாய் பிளந்து வியக்கிறார். அவர் வியக்கும் மேலும் சில இந்திய விஷயங்கள். 30 அல்லது 300 அல்லது 3000 மில்லியன் கடவுள்கள். எவ்வளவு கூட்டம் இருந்தாலும் மேலே வந்து இடிக்காத மக்கள். (அவர் சொல்வது!). ஒரே ஒருமுறை தெரியாமல் இடித்துவிட்டு, தன் நெஞ்சை கையால் தொட்டு அமைதியாகவும் இங்கிதத்துடனும் பொயட்டிக்காகவும் சாரி கேட்ட ஒரு மனிதன். பிரிட்டன்மீது இன்னமும் மரியாதை வைத்திருக்கும் மனிதர்கள். (‘ஆயிரம் இருந்தாலும் டெலிகிராம், ரயில்வே எல்லாம் அவன் கொடுத்தது சார்’). பொருளாதாரரீதியில் மட்டுமே ஏழையாக இருக்கும் இந்தியர்கள். (வரலாறு, கலாசாரம், ஆன்மிகம் ஆகிய விஷயங்களில் அமெரிக்கர்கள்கூட இந்தியாவிடம் இருந்து கற்கவேண்டுமாம்).

பிரயாண எழுத்தாளர்களில் பெரும்பாலானோரால் ஏன் Stereotyping இல்லாமல், prejudice இல்லாமல் புத்தகம் எழுதமாட்டேன் என்கிறார்கள்?

0

 

Disguise: பிரதி வெள்ளி என்று அறிவிக்கப்பட்ட ‘புரட்சி’ கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் மிகச் சரியாக திங்கள் அன்று வெளிவந்துகொண்டிருக்கிறது. இந்த ஒழுங்கீனத்தை மூடிமறைக்கவும் தொடர் வரவேண்டிய இடத்தை இட்டுநிரப்பவும்தான் இந்தப் புதிய திடீர் பகுதி என்று இந்நேரம் நீங்கள் கண்டுபிடித்திருக்கக்கூடும்.

0

மருதன்