ரோம சாம்ராஜ்ஜியம் – மதமும் மனிதர்களும்

dreamstime_1529475பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 42

மத நம்பிக்கைகள்

ரோமர்களின் வாழ்க்கை யுத்தத்தையும், மத நம்பிக்கைகளையும் சுற்றியே சுழன்றது. தொட்டில் தொடங்கி, கட்டிலில் தொடர்ந்து, கல்லறை வரை சடங்குகள். குழந்தை பிறந்தால் பூஜை, பதினாறு வயதானதும் பூஜை, திருமணம் செய்தால், யுத்தம் தொடங்கினால், ஜெயித்தால், தோற்றால், மரணமடைந்தால் அனைத்துக்கும் பூஜைதான்.

ரோம் நகரத்தைப் படைத்த ரோமுலஸ், ரேயஸ் ஆகிய இருவருமே மார்ஸ் என்னும் போர்க் கடவுளின் வாரிசுகள்.  ஜூப்பீடர்  என்னும் சூரியன் தலைமை தெய்வம்.  இவரோடு,  கணக்கில்லாக் கடவுள்கள், துறை வாரியாக தெய்வங்கள்:

விவசாயம் : சேரஸ்

வேட்டையாடுதல் : டயனா

வசந்தம்  : ஃப்ளோரா

அதிர்ஷ்டம் :  ஃபார்ச்சூனா

செல்வம் :  ஃப்ளோரா

காதல் : க்யூப்பிட்

திருமணம் :  ஜூனோ

ரோமர்களுக்கு அருள் வாக்கு பெறுவதில் அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது.   கோவில்களில்  பிதியாக்கள் என்ற பெயரால் அழைக்கப்பட்ட ஊடாளர்கள் (மீடியம்) இருந்தார்கள். பெண்கள் மட்டுமே பிதியாக்களாக முடியும். இவர்கள்மேல் “சாமி வந்து“ அருள் வாக்கு வழங்குவார். ஒவ்வொரு மாதமும் ஏழாம் நாள் அருள்வாக்கு நடக்கும். மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஆண்டவனிடம் தங்கள் பிரச்னைகளைச் சமர்ப்பித்து, அருள் வாக்குத் தீர்வுகளைப் பெற்றுச் செல்வது வழக்கம்.

கி. பி. 313 – இல் கான்ஸ்டன்டின் சக்கரவர்த்தி ஆட்சியில் கிறிஸ்தவ மதம் ஏற்றுக் கொள்ளப்பட்டு நாடு முழுவதும் பரப்பப்பட்டது. வாட்டிகன் நகரம், கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமையகமானது, புனித நகரமாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. போப் ஆண்டவர் இதன் தலைவரானார்.

கல்விமுறை

அப்பாதான் குழந்தைகளுக்கு எழுதப் படிக்கவும், ஆயுதங்கள் பயன்படுத்தவும் கற்றுக் கொடுத்தார். பொது நிகழ்ச்சிகள், மதச் சடங்குகள் ஆகியவற்றுக்கு மகன்களை அழைத்துச் சென்று ஏட்டுப் படிப்பைத் தாண்டி, உலகியல் படிப்பையும் வாரிசுகளுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். இந்த உரிமை பெண் குழந்தைகளுக்கு இருக்கவில்லை. உயர் குடும்பத்து ஆண் வாரிசுகள் பதினாறாம் வயதில் அரசு அல்லது அரசியல் நிபுணரிடம் பயிற்சிக்கு அனுப்பப்பட்டார்கள். பதினேழாம் வயதில் அவர்கள் கட்டாய ராணுவ சேவைக்குப் போகவேண்டும்.

பணக்கார வீட்டுக் குழந்தைகள் வீட்டிலேயே கல்வி கற்றார்கள். கல்வி அறிவு கொண்ட அடிமை இவர்களுக்கு ஆசிரியராக இருந்து இவர்கள் படிப்பில் தனிக் கவனம் செலுத்தினார். சாமானியர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பினார்கள்.
கி. மு. மூன்றாம் நூற்றாண்டில், கல்விமுறை சீர்திருத்தி அமைக்கப்பட்டது. படிப்பு ஏழு வயதில் தொடங்கும். ஏழு முதல் பதினொரு வயது வரையிலான படிப்பு ஆரம்பக் கல்வி என்று அழைக்கப்பட்டது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆரம்பக் கல்வி வழங்கப்பட்டது. இதில் லத்தீன் மொழி எழுதப் படித்தல், கணிதம் ஆகியவை கற்றுக்கொடுப்பார்கள். சில பள்ளிகளில் லத்தீனோடு கிரேக்க மொழியும் பயிற்றுவித்தார்கள். பெண்கள் ஆரம்பக் கல்விக்குமேல் படிக்க முடியாது. கணிதத்தில் வாய்ப்பாடு எல்லோரும் கட்டாயம் மனப்பாடம் செய்யவேண்டும்.

நடுத்தரக் கல்வி 12 முதல் 15 வயதுவரை. இது ஆண்களுக்கு மட்டுமே. லத்தீன், கிரேக்க மொழிகள், கணிதம், இலக்கியம் ஆகியவை இப்போது போதிக்கப்பட்டன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் பேச்சுக் கலை ஒரு பாடமானது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் பேச்சுக்கலை வளர்க்கும் தனிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. புரூட்டஸ், மார்க் ஆண்டனி போன்ற தலைவர்கள் தங்கள் பேச்சுத்திறமையால் ரோமின் தலைவிதியையே மாற்றி எழுதினர்கள். அதற்கு வித்திட்டவை இந்தப் பேச்சுப் பாசறைகள்தாம்.

படிப்பின் மூன்றாம் கட்டம் பதினைந்து வயதாகும்போது தொடங்கும். ரோமன் பொது வாழ்க்கையில் பேச்சுத் திறமை மிக முக்கியமானது. சமுதாய அந்தஸ்தும், பதவிகளும் பேச்சாளர்களுக்கு மட்டுமே கிடைத்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் பேச்சுக் கலை பள்ளிக்கூடங்களில் கட்டாயப் பாடமாக இருந்தது. இதே காலகட்டத்தில்,  பேச்சுக்கலை வளர்க்கும் தனிப் பள்ளிகளும் தொடங்கப்பட்டன.

கிரேக்கம் அறிவின் மையமாகக் கருதப்பட்டது. வசதி படைத்த இளைஞர்கள் உயர் கல்வி கற்க, கிரேக்க நாட்டுக்குப் போனார்கள்.

உலகத்துக்கு ரோம நாகரிகம் தந்திருக்கும்  பரிசுகளில் முக்கியமான சில:

 • நாம் பயன்படுத்தும் எண்முறை ரோம் தந்ததுதான்.
 • ரோமர்களின் மொழி லத்தீன். இதன் எழுத்துமுறைதான் ஆங்கில எழுத்துமுறையின் முன்னோடி.   பல ஐரோப்பிய நாடுகளில் லத்தீன் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இருபதாம் நூற்றாண்டில் பிரெஞ்சு மொழி லத்தீன் மொழியின் இடத்தைப் பிடித்துவிட்டது.

ரோமன் இலக்கியம்

ரோமன் படைப்பாளிகளுள் வர்ஜில், கேட்டுலஸ் ஆகியோர் முக்கியமானவர்கள்.

விர்ஜில் – கி.மு. 70 முதல் கி.மு. 19 வரை வாழ்ந்த இவர்தான் ரோமின் நிரந்தரக் கவிச் சக்கரவர்த்தி.  இவர் படைத்த இதிகாசமான இனிட்  ரோமின் மகாபாரதம் அல்லது ராமாயணம்.
க்லோக்ஸ்  விர்ஜிலின் இன்னொரு சாதனைப் படைப்பு. பத்து ஆயர் பாடல்கள் கொண்ட இந்தக் காவியத்தில் வரும் ஒரு பாடல் இயேசுநாதரின் வருகையைக் குறிக்கும் பாடலாக உள்ளது. இன்னொரு படைப்பு ஜியார்ஜிக்ஸ். கிராம நிலங்களை மக்களுக்குப் பகிர்ந்தளித்தல், விவசாயத்தைச் சீர்ப்படுத்துதல் போன்ற சமுதாயப் புரட்சிக் கருத்துகளை இந்தக் கவிதைத் தொகுப்பு அறிவிக்கிறது.

கேட்டுலஸ் – கி.மு. 84 முதல் கி.மு. 34 வரை சுமார் 50 ஆண்டுகள் வாழ்ந்ததாகக் கருதப்படும் இவர் ரோமின் முக்கியக் கவிஞர். 116 கவிதைகள் எழுதியிருக்கிறார். காதல், நட்பு, லெஸ்பியனிஸம், நையாண்டி  ஆகிய மாறுபட்ட உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாளிதழ்

கி.மு. 131ல் அதாவது 2165 ஆண்டுகளுக்கு முன்னால்  ரோமாபுரியில் Acta Diurna
என்னும் நாளிதழ் வெளியானது. (*இந்த லத்தீன் வார்த்தையின் பொருள் – தினசரி நிகழ்வுகள்)

ரோமன் சட்டங்கள்

கி. மு 449 – இல் பன்னிரெண்டு கட்டளைகள் என்னும் சட்டமுறை ரோமாபுரியில் உருவாக்கப்பட்டது.    இந்தச் சட்டம் உலகின் பல நாடுகளின் இன்றைய நீதி, நியாய முறைகளுக்கு வழிகாட்டியாக இருக்கிறது.

பன்னிரெண்டு டேபிள்கள் :  முக்கிய ஷரத்துகள் சுருக்கமாக:

 1. நீதிமன்றத்தில் தோன்றுமாறு அழைப்பு வந்தால் நீங்கள் கட்டாயம் போயே ஆக வேண்டும். அப்படிப் போகாவிட்டால், வலுக்கட்டாயமாக நீங்கள் இழுத்துச்செல்லப் படுவீர்கள்.
 2. உங்கள் வழக்கில் சாட்சிகளாக யாரேனும் தேவைப்பட்டு அவர் வராவிட்டால், மூன்று நாட்களுக்கு ஒரு முறை நீங்கள் அவர் வீட்டின் முன்னால் போய் குரல் எழுப்பி அவரை அழைக்கலாம்.
 3. கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய 30 நாட்களுக்குள் கடன் தொகையைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
 4. உடல் ஊனத்தோடு பிறக்கும் குழந்தைகளைக் கொன்றுவிட வேண்டியது பெற்றோரின் கடமை.
 5. வயது வந்தாலும், பெண்கள் ஆண்களின் பாதுகாப்பில்தான் இருக்க வேண்டும்.
 6. கணவனிடமிருந்து விடுதலை பெற விரும்பும் பெண் ஒரு வருடத்தில் மூன்று நாட்களாவது அவனிடமிருந்து பிரிந்து வாழ்ந்திருக்கவேண்டும்.
 7. உங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் மரம் காற்றடித்து உங்கள் பகுதியில் விழுந்தால் அந்த மரத்தை அவர்தான் எடுக்க வேண்டும். அவர் அப்படிச் செய்யாவிட்டால், நீங்கள் நீதிமன்றத்தின் உதவியை நாடலாம்.
 8. இரவு நேரங்களில் கூட்டங்கள் நடத்தும் உரிமை யாருக்கும் கிடையாது.
 9. நீதிபதிகள் லஞ்சம் வாங்கினால், மரண தண்டனை பெறுவார்கள்.
 10. இறந்தவர்களின் உடலை நகர எல்லைக்கு வெளியேதான் புதைக்கவோ, எரிக்கவோ செய்யலாம்.
 11. குடிமக்கள் இரண்டு “ஜாதிகளாக“ ப் பிரிக்கப்பட்டிருந்தார்கள். பிரபுக் குடும்பத்தினரும், நிலச் சுவான்தார்களும்  பெட்ரீஷியன்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் தவிர மீதி அனைவரும், அவர்கள் பணக்காரர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும், ப்ளீபியன்கள் . ஜாதி மாறி திருமணங்கள் செய்துகொள்ளக்கூடாது.
 12. பெரும்பாலான மக்களின் கருத்து சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்படும்.

ரோமன் காலண்டர்

ரோமாபுரியை நிறுவிய ரோமுலஸ்தான் நாள்காட்டிகளின் தந்தை என்று சொல்கிறார்கள். கி.மு. 753 -இல் அவர் வகுத்த காலண்டரில் 10 மாதங்களும் 304 நாட்களும் இருந்தன. இரண்டாம் மன்னரான ந்யூமா கி. மு. 713ல் இதை 12 மாதங்களும், 355 நாட்களும் கொண்டதாக மாற்றினார். கி.பி. 46 ல் ரோமச் சக்கரவர்த்தி ஜூலியஸ் ஸீஸர் அமைத்த தத்துவ மேதைகள், கணித வல்லுநர்கள், வானியல் அறிஞர்கள், மத குருக்கள்  ஆகியோர் கொண்ட குழு 12 மாதங்கள், 365 நாள்கள் கொண்ட காலண்டரை உருவாக்கியது. இதன் அடிப்படையில், கி.மு. 1562 ல் பதின்மூன்றாம் கிரெகோரி என்னும்  போப் ஆண்டவர் கிரெகோரி காலெண்டர் கொண்டுவந்தார்.

காலெண்டர்களோடு தொடர்புகொண்ட ரோமுலஸ், ந்யூமா, ஜூலியஸ் சீஸர், போப் கிரெகோரி ஆகிய அத்தனைபேரும் ரோமர்களே!

வரலாற்றில் நிரந்தரத் தடம் பதித்த ரோமர்கள்

நல்லரரசர்கள்

ந்யூமா பாம்ப்பிலியஸ் ஆட்சிக்காலம் கி.மு.715 – கி.மு.673
அகஸ்டஸ் சீஸர் ஆட்சிக்காலம் கி.மு.63 – கி.பி.14
நெர்வா ஆட்சிக்காலம் கி.பி. 96 – கி.பி.98
ட்ராஜன் ஆட்சிக்காலம் கி.பி. 98 – கி.பி.117

ராணுவ மேதைகள்

ஸிப்பியோ தோற்றம் கி.மு. 236 – மறைவு கி.மு. 184
பாம்பே தோற்றம் கி.மு. 106 – மறைவு கி.மு. 48
ஜூலியஸ் சீஸர்  தோற்றம் கி.மு. 100 – மறைவு கி.மு. 44

தத்துவ மேதைகள்

சீசரோ தோற்றம் கி.மு. 106 – மறைவு கி.மு. 43
செனிகா தோற்றம் கி.மு. 4 – மறைவு கி.பி. 65
மார்கஸ் அரேலியஸ் தோற்றம் கி.பி.121 – மறைவு கி.பி.180

****

(முடிந்தது).

இசை, விளையாட்டு, குளியல், வாழ்க்கை

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 41

ரோம நாகரிகம் (கி. மு. 753  – கி. பி. 476 )

attila1வசதியுள்ளவர்களின் அன்றாட வாழ்க்கை    

அதிகாலை விழிப்பு. ஏழைகளுக்கு அன்னதானம். தன் நிலபுலன், விவசாயம் பற்றி விசாரித்துத் தகுந்த நடவடிகைகள் எடுத்தல், அரசாங்கப் பணிகள். அன்றாட வேலைகள் இத்துடன் முடிந்தன. லேசான சாப்பாடு, கொஞ்சம் தூக்கம். இதற்குப் பிறகு பொதுக் குளியல் அறைகளில் வெந்நீர்க் குளியல், பூங்காக்களில் உலா, உடற் பயிற்சிகள், புத்தகங்கள் படித்தல். மறுபடி வெந்நீர்க் குளியல், அடிமைகள் கொடுக்கும் மஸாஜ்.

குடும்பம்

ஆண்தான் குடும்பத் தலைவர். திருமணம் ஆனபிறகும், மகன் தன் வருமானம் முழுக்கத் தந்தையிடம் கொடுத்துவிட வேண்டும். அவர் காலம்வரை, அவன் தனக்கெனத் தனியாக எந்த சொத்துகளும் வைத்துக்கொள்ள முடியாது.

குடும்பத்தோடு வசித்து, அவர்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்து, ஆனால், தாமரை இலைத் தண்ணீர்போல் எஜமானர்களோடு ஒட்ட அனுமதிக்கப்படாத அடிமைகளின் வாழ்க்கை சோக காவியம். ஏழைகளும், கொடுத்த கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாதவர்களும், பிற நாடுகளிலிருந்து கைதிகளாகப் பிடித்துவரப்பட்டவர்களும் அடிமைகளாக்கப்பட்டார்கள். இவர்கள்  சொந்தக்காரரின் சொத்து. அவர் அடிமைகளை வாங்கலாம், விற்கலாம். அடிமைகளின் குழந்தைகளும் அடிமைகள்தாம். அடிமைகளை வாங்கவும் விற்கவும் அடிமைச் சந்தைகள் இருந்தன.

வீட்டு வேலைகள், விவசாயம், தொழிற்சாலைகள் ஆகிய பல தளங்களில்  அடிமைகள் பயன்படுத்தப்பட்டார்கள். பெரும்பாலான இடங்களில்,  அடிமைகளுக்கு அடி, உதை, அரைப் பட்டினி, அநியாய வேலைச்சுமை ஆகியவைதான் கிடைத்தன. அவர்களை அன்போடு நடத்தி, கல்வியறிவு கொடுத்து, வாழ்க்கை ஏணியில் ஏறவைத்த ஒரு சில நல்ல குடும்பங்கள் விதிவிலக்கானவை.

குழந்தைகள்   

மக்கள் தொகைப் பெருக்கம் நாட்டின் கொள்கை. எனவே, குழந்தையின் வரவு கோலாகலமாக வரவேற்கப்பட்டது. குழந்தை பிறந்தவுடன் அதை அப்பா முன்னால் கொண்டுவந்து வைப்பார்கள். அவர் குழந்தையைக் கைகளில் தூக்கினால், அது தன் குழந்தை என்று ஒத்துக்கொள்கிறார் என்று அர்த்தம். அப்படித் தூக்காவிட்டால், அந்தக் குழந்தை உயிர் வாழ வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்யும் உரிமை அவருக்கு உண்டு. ஆரோக்கியமில்லாத குழந்தைகளும், உடல் ஊனமுற்ற குழந்தைகளும் கொல்லப்படும் அல்லது பெற்றோரால் கைவிடப்படும். யாராவது எடுத்து வளர்ப்பார்கள். பின்னர்அவர்கள் அடிமைகள் ஆகிவிடுவார்கள்.

குழந்தை பிறந்த எட்டு நாட்கள் விதவிதமான பூஜைகள், சடங்குகள், பரிகாரங்கள் நடக்கும்.   முக்கியமாக, காத்து கருப்புகள் குழந்தைளைத் தொந்தரவு செய்யும் என்று நினைத்தார்கள்.    இதற்குப் பரிகாரமாக, வீட்டு வாசலை இரவில் மூடுவார்கள்.   வாசலில் மூன்று ஆண் அடிமைகள் ஒரு கையில் கோடரியும், இன்னொரு கையில் உலக்கையும் வைத்துக்கொண்டு காவல் இருபார்கள். வீட்டு வாசலைக் கோடரியாலும், உலக்கையாலும் பலமுறை தட்டுவார்கள். பிறகு வாசல்புறத்தைச்  சுத்தமாகப் பெருக்குவார்கள்.  இவற்றைச் செய்தால், துர்தேவதைகள் வீட்டுப் பக்கமே வராமல் பயந்து ஓடிவிடும் என்பது நம்பிக்கை.

குழந்தைகள் கழுத்தில், புல்லா  என்னும் தாயத்தைப் பூசாரி கட்டுவார். தங்கத்தால் செய்யப்பட்ட அதனுள் மந்திரித்த ஈயத்தகடு வைக்கப்பட்டிருக்கும். சிறுவர்கள் இளைஞர்களாகும்போது, சில மதச் சடங்குகள் செய்துவிட்டு, இந்தப் புல்லாவைக் கழற்றவேண்டும். பெண் குழந்தைகளுக்கு புல்லா கிடையாது.

சமூக வாழ்க்கை

ஆண்கள் அடிக்கடி சந்தித்துக்கொண்டார்கள். ஃபாரம் என்னும் நகரின் மையப் பகுதியில் சந்தித்துப் பேசினார்கள். பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரைகளைக் கேட்டார்கள். வீர விளையாட்டுகளில் ஈடுபட்டார்கள். அல்லது அவற்றைக் கண்டு களித்தார்கள். பெண்களுக்கு இத்தனை சுதந்தரம் இல்லை. கடைகளுக்கும் சொந்தக்காரர்களையும் நண்பர்களையும் சந்திப்பதற்கும் மட்டுமே தனியாக வீட்டைவிட்டு வெளியே போனார்கள். திருவிழாக்கள், சர்க்கஸ், கோவில், விருந்துகள் ஆகியவற்றுக்குக்  கணவனுடன் மட்டுமே போக அனுமதிக்கப்பட்டார்கள்.

சமூக உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கத்தோடு அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் மூன்று விதமான மத அல்லது சமூகக் கொண்டாட்டங்களைத் திருவிழாக்களாக ஏற்பாடு செய்தது. இவை :

 • Feriae Stativae  –  ஒவ்வொரு வருடமும் குறிப்பிடப்பட்ட அதே நாட்களில் இந்த விசேஷங்கள் நடக்கும்.
 • Feriae Conceptivae-  இவற்றுக்குக் குறிப்பிட்ட நாள்கள் கிடையாது. பூசாரிகள் ஒவ்வொரு வருடமும் இவற்றுக்கான நாட்களைக் குறித்துக் கொடுப்பார்கள்.
 • Feriae Imperativae –  இவை வருடா வருடம் நடப்பவையல்ல. சாதாரணமாகப் போர்களில்  வெற்றி பெற்றால் கொண்டாடப்படும் விழாக்கள் இவை.

உணவுகள்

கோதுமைக் கஞ்சியும் ரொட்டியும்தான் முக்கிய உணவுகள். ரொட்டியைத் தேன், பாலாடை, முட்டை, சிக்கன், மீன்,  இறைச்சி ஆகியவற்றோடு சேர்த்துச் சாப்பிட்டார்கள். மீனும், சிப்பியும் சுவையான உணவுகளாகக் கருதப்பட்டன.  அவரைக்காய், வெங்காயம், பூண்டு, முட்டைக்கோசு ஆகிய காய்கறிகள் அவர்களுக்குப் பிடித்தமானவை. பழங்கள், தேன், வினிகர் என்னும் புளிச்சாறு ஆகியவற்றோடு சேர்த்து இறைச்சியும் காய்கறிகளும் சமைக்கப்பட்டன.

ரோமர்களுக்குப் பிடித்த பானம் ஒயின் என்னும் திராட்சை ரசம். ஆனால், இந்த ஒயின் போதைக்காக அருந்தப்படவில்லை. புளித்த திராட்சை ரசத்தில் தண்ணீர் ஊற்றி நீர்க்கவைத்துக் குடித்தார்கள். பால் குடிப்பது அநாகரிகமாகக் கருதப்பட்டது. பாலாடை செய்ய மட்டுமே பால் பயன்பட்டது.

பணக்காரர்களின் காலை உணவு பலமானது – பாலாடை, பழம், ரொட்டி, பால் அல்லது திராட்சை ரசம். பகல் உணவில் முதலில் முட்டை, மீன், பச்சைக் காய்கறிகள். அடுத்து வேகவைத்த மாமிசம், காய்கறிகள், கடைசியாகப் பழங்கள், இனிப்புக்கள். சோபாக்களில் படுத்துக்கொண்டு சாப்பிடுவார்கள். அடிமைகள் உணவு பரிமாறுவார்கள்.

உணவு சமைக்க மண், வெண்கலப் பாத்திரங்களும், பரிமாற மரம், வெண்கலம், வெள்ளி, எலும்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட கரண்டிகளும் பயன்பட்டன. உணவைக் கை விரல்களால் சாப்பிட்டார்கள்.

ரோமன் ஆடைகள்

அன்றைய ரோமர்களின் ஆடைகள் அதிகமாகக் கிடைத்த ஆட்டு ரோமம், லினன் ஆகியவற்றால் நெய்யப்பட்டன. பட்டும், பருத்தியும் குறைவான அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

பல உள்ளாடைகள் இருந்தன, பல வடிவங்களில் வந்தன. வடிவங்களுக்கேற்ப subligaculum, campestre, licium, cinctus என்னும் பல பெயர்களில் அழைக்கப்பட்டன. நம் ஊர்க் கோவணம் போன்ற இடுப்புத் துணியும் உண்டு. ஆண் பெண் இருபாலரும் இந்த உள்ளுடைகளை அணிந்தார்கள். இவற்றோடு பெண்கள் பிரா போன்ற மார்புக் கச்சு அணிந்தார்கள்.

மேலாடைகள் ட்யூனிக் என்று அழைக்கப்பட்டன. ஆண்களின் உடைக்கும், பெண்களின் உடைக்கும் ஒரே பெயர்தான். சாமானிய ரோமர்கள் உள்ளாடைகளுக்குமேல் ட்யூனிக் மட்டுமே அணிவார்கள். ஆண்களின் ட்யூனிக் அரைக்கைச் சட்டைபோல் இருக்கும்,  முட்டிவரை வரும். பெண்களின் ட்யூனிக்கில் சட்டை முழுக்கை. அவர்களின் கால்களை மூடித் தரையைத் தொடும் நீளம் இருக்கும்.

ரோமன் நாட்டுக் குடிமக்கள், வெளிநாட்டிலிருந்து வந்து ரோமில் வசிப்பவர்கள் ஆகிய எல்லோருமே ட்யூனிக் அணியலாம். ஆனால், ரோமன் பிரஜைகள் மட்டுமே அணிய அனுமதிக்கப்பட்ட உடை டோகா. போர்வைபோல் நீளமாக அரைவட்ட வடிவத்தில் இருக்கும். சுமார் 27 அடி நீளமும் 20  அடி அகலமும் சாதாரண அளவுகள். உடலின் மேல் பாகத்தையும் ஒரு கையையும் இது மறைக்கும்.  ஆரம்ப நாட்களில் வெற்றுடம்பில் டோகாவைப் போர்த்திக்கொள்ளூம் வழக்கம் இருந்தது. நாளவட்டத்தில் ட்யூனிக் அணிந்து அதன்மேல் டோகா போர்த்திக்கொள்ளும் நடைமுறை வந்தது.

ஆண்களும், பெண்களும் செருப்பு அணியும் வழக்கம் இருந்தது.

அழகுபடுத்துதல்

ஆண்கள் தாடி வளர்த்தார்கள், தினமும் சவரம் செய்துகொண்டார்கள். தலை முடியைக் குட்டையாக வெட்டிக்கொண்டார்கள். இளம்பெண்கள் முடியைச் சுருட்டி முதுகுப் பக்கமாய்ப் பந்துபோல் வைத்துக்கொள்வார்கள். திருமணமான பெண்கள் தலைமுடியைச் சுற்றி வளைத்து தலை நடுவில் பந்துபோல் ரிப்பன்களால் கட்டி வைத்துக்கொண்டார்கள். பொய்முடிவைத்துக் கேசத்தின் அடர்த்தியை அதிகமாக்கிக்காட்டுவது சர்வ சாதாரணமாக இருந்தது.

பெண்கள் இரும்பு, வெண்கலம், தங்கம் ஆகியவற்றால் செய்த நகைகளை அணிந்தார்கள்.    தம்மை அலங்கரித்துக்கொள்ள அவர்கள் பயன்படுத்திய ஆபரணங்கள் – நெக்லஸ் போன்ற கழுத்தணி, காதுத் தொங்கட்டான்கள், கைகளில் ப்ரேஸ்லெட்கள் ஆகியவை.  தங்கத்தால் செய்யப்பட்ட இந்த நகைகளில் முத்துக்கள் பதிக்கப்பட்டிருக்கும்.

பொழுதுபோக்குகள்

விளையாட்டுப் போட்டிகள் – மக்கள் கூட்டம் அலைமோதிய இரண்டு நிகழ்ச்சிகள்  தேரோட்டப் போட்டிகளும், கிளேடியேட்டர் சண்டைகளும்தாம். தேரோட்டிகளுக்கு நாடு முழுக்க ரசிகர் கூட்டம் இருந்தது. தேரோட்டிகளுக்கு அடுத்தபடியாக மக்கள் ஆதரவு பெற்றவர்கள் கிளேடியேட்டர்கள். லத்தீன் மொழியில் கிளேடியேட்டர் என்றால் வாள் வீரர் என்று பொருள். இவர்கள் பெரும்பாலும் அடிமைகள் அல்லது கைதிகள். வாள் சண்டை விளையாட்டை  முழு நேரத் தொழிலாகக் கொண்டவர்கள்.

நாடக அரங்குகள் – விளையாட்டுகள் நடக்கும் நாள்களில் நாடகங்கள் அரங்கேறுவது வழக்கமாக இருந்தது. இதற்காக தியேட்டர்கள் என்னும் தனியான நாடக அரங்குகள் இருந்தன. நாடகங்களில் ஆண் அடிமைகள் மட்டுமே நடித்தார்கள். பெண் வேடங்கள் போடுவதும் இவர்கள்தாம். பாத்திரங்களுக்கு ஏற்ப முகமூடி அணிவார்கள். வயதைக் காட்ட வெள்ளை, கறுப்பு விக் போடுவார்கள். ஒரே நடிகர் இரண்டு வேஷம் நடிப்பதும் உண்டு. காமெடி, டிராஜெடி நாடகங்கள் ஆகிய இரண்டு வகைகளும் இருந்தன.

கி.மு. முதல் நூற்றாண்டில் ஊமைக்கூத்துக்கள் (pantomimes)  தொடங்கின. பாட்டு, நடனம் ஆகியவற்றின் துணையோடு நடிகர்கள் சைகைகளால் நடிப்பை வெளிப்படுத்துவார்கள். காலப்போக்கில் ஊமைக்கூத்துக்கள் ஆபாசக் களஞ்சியங்களாயின.

பொதுக் குளிப்பிடங்கள்  – ரோமன் பொழுதுபோக்குகளில் பொதுக் குளிப்பிடங்களுக்குத் தனி இடம் உண்டு. ஆண், பெண், ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லோருமே இந்த வசதியை அனுபவித்தார்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியான குளிப்பறைகள் இருந்தன.

பொதுக் குளிப்பிடங்கள் 32 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்தன. சில குளிப்பிடங்களின் சிதிலங்கள் இன்றும் காணக் கிடைக்கின்றன. குளிப்பிடங்களின் மையப் பகுதியில் 200 அடிக்கு 100 அடி அளவில் நீச்சல் குளம் இருக்கும். அருகில் சூடான தண்ணீர் கொண்ட தனி  நீச்சல் குளமும் இருக்கும். நெருப்பின் மூலமாக நீராவியை உருவாக்கினர்கள். இதைத் தரையின் அடியில் ஓடும்  குழாய்கள் மூலமாக நீச்சல் குளத்தின் அடிப்பாகத்துக்குக் கொண்டு போனார்கள்.

குளிப்பதற்கு மட்டுமல்லாமல், மக்கள் சந்திப்பதற்கும் இந்தக் குளிப்பிடங்கள் உதவின. கடைகள், உணவு விடுதிகள், பூங்காக்கள், உடற் பயிற்சி மையங்கள், மஸாஜ் செய்யும் இடங்கள், நூல் நிலையங்கள், பொருட்காட்சி சாலைகள் ஆகிய வசதிகளும் இந்தக் குளிப்பிடங்களில்  வந்தன.

தினமும் ஒரு முறையாவது இங்கே வந்து குளித்துவிட்டுப் போவது எல்லா ரோமர்களின் பழக்கம்.

விளையாட்டுக்கள்  – அரசாங்கத்தால் அடிக்கடி நாடு தழுவிய விளையாட்டுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்தப் பொது விளையாட்டுகளுக்கு லத்தீன் மொழியில் லுடி என்று பெயர். இவை சாதாரணமாக ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் நடந்தன.

உடற் பயிற்சிகள் – தைபர் நதிக்கரையில் காம்ப்பஸ் என்னும் பெயரில் விளையாட்டு மைதானங்கள் இருந்தன. பொது மக்கள் ஓடவும், உடற்பயிற்சிகள் செய்யவும் இங்கே வருவார்கள். இளைஞர்கள் மேற்கொண்ட முக்கிய உடற்பயிற்சிகள் ஓடுதல், குதித்தல், குஸ்தி, மல்யுத்தம், நீச்சல் போன்றவை. காலால் பந்தை உதைத்தல், கையால் தூக்கி எறிந்து பிடித்தல் போன்றவை.

பணம்  படைத்தவர்களின்  சிறப்பான பொழுதுபோக்குகள் – ஆடம்பர விருந்துகள், பாட்டு,  நடனக் கச்சேரிகள், கவிதை அரங்குகள், பட்டிமன்றம் போன்றவை. இந்த வசதி இல்லாத சாமானியர்கள் சங்கங்கள் அமைத்தார்கள். இவைமூலமாக விருந்துகளும் பிற கோலாகலங்களும் நடத்தி, அந்தச் செலவுகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.

இசை ரசனை

ரோமர்கள் இசையை அனுபவித்தார்கள். குழந்தையின் பெயர் சூட்டு விழாக்கள், கொண்டாட்டங்கள், திருமணங்கள், தனியார் விருந்துகள், மரண ஊர்வலங்கள் எனப் பிறப்பு முதல் இறப்புவரை ரோமர்கள் வாழ்க்கையில் இசைக்கு முக்கிய பங்கு இருந்தது.
ரோமின் தனித்துவமான சில இசைக் கருவிகள் இருந்தன. அவை:

வாயால் ஊதி வாசிக்கும் கருவிகள்: ட்யூபா என்னும் வெண்கல டிரம்பெட், கோர்னு (என்னும் ஆங்கில எழுத்து ஜி வடிவக் கருவி, புல்லாங்குழல் போன்ற ஒரு கருவி. சித்தாரா, லையர், லூட் ஆகியவை முக்கிய மீட்டும் இசைக் கருவிகள். ட்ரம், சிஸ்ட்ரம் போன்றவை நம் ஊர் மிருதங்கம்போல், தட்டுவதால் இசை எழுப்பும் இசைக் கருவிகள்.

0

மாடல் நகரம்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 40

4romeஇரண்டாம் நூற்றாண்டில் ரோம்தான் மேற்கத்திய உலகின் பெரிய, சிறந்த நகரம். பிரம்மாண்டமான பொதுமக்கள் கூடும் இடம், அதைச் சுற்றி அரசுக் கட்டங்கள் எனச் சீராக வடிவமைக்கப்பட்டிருந்தது. பொது இடங்களுக்கு அருகே குறுகிய தெருக்கள். இந்தத் தெருக்களில், மக்கள், வியாபாரிகள், சாமான் தூக்கிச் செல்லும் அடிமைகள் என ஒரே நெரிசல். இந்தத் தெருக்கள் மனிதர் நடப்பதற்கே. எந்த வண்டிகளும் போகக்கூடாது.

மக்கள் தீவுகளாக வாழவில்லை. சமுதாயக் கூட்டு வாழ்க்கை ரோமாபுரியின் பெருமைக்குரியச்   சின்னம். சந்தைகள், விழாக்கள், விளையாட்டுக்கள், சந்திப்புகள் என அவர்களுக்குள் ஏராளமான உறவுச் சங்கிலிகள் இருந்தன. இதற்காகவே, நகரின் மையப் பகுதியில் ஃபாரம் என்னும் இடம் இருந்தது. இங்கே பொதுக்கூட்டங்கள், அரசு விழாக்கள் ஆகியவையும் நடந்தன.

அன்றைய ரோமில் குடிநீர் விநியோகம் இருந்திருக்கிறது. எனென்றால், நீர் நிலைகளிலிருந்து நகரின் பல பாகங்களுக்குத் தண்ணீர் எடுத்துச் செல்லும் கால்வாய்கள்பற்றிய சான்றுகள் கிடைத்துள்ளன. குடிநீரில் ஈயம் கலக்கக்கூடாது என இன்றைய அறிவியல் சொல்கிறது. இதையே அன்றைய ரோம் கடைப்பிடித்திருக்கிறது. ரோமில் அப்போது பல ஈயப் பட்டறைகள் இருந்தன. இவற்றில் வேலை பார்த்த பலருக்கு உடல்நலப் பிரச்சனைகள் வந்தன. இந்த அடிப்படையில், வீட்டுத் தண்ணீர்க் குழாய்களை ஈயத்தால் செய்யக்கூடாது, களிமண் குழாய்களை உபயோகிக்கவேண்டும் என்று அரசு நெறிமுறை வகுத்திருந்தது.

குடிநீர் விநியோகத்தோடு, கழிவுநீர் அமைப்பும் கனகச்சிதமாக இருந்தது. கி.மு. 600 – இல் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் Cloaca Maxima (இந்த லத்தீன் வார்த்தைக்கு மாபெரும் கழிவுநீர் அமைப்பு  என்று பொருள்) என்னும் இத்திட்டம்தான் உலகின் கழிவுநீர்த் திட்டங்களுக்கு முன்னோடி.

ரோம் நகரத்தில் பல தாழ்வான பகுதிகள் இருந்தன. நகரமே மலைகளும் சமவெளிகளும் நிறைந்த இடம். இதனால், மழைக் காலங்களில் தாழ்வுப் பகுதிகளில்  தண்ணீர் தேங்கியது, மக்கள் நடமாட இடைஞ்சல் கொடுத்ததோடு அவர்கள் உடல்நலம் பாதிக்கும் நோய்கள் பரவவும் காரணமாக இருந்தது. மேற்கண்ட திட்டத்தின்மூலம் உபரித் தண்ணீர் வெளியேற்றப்பட்டு தைபர் நதியில் கலந்தது. இதன் சில பகுதிகள் பூமிக்கு அடியிலும், சில பகுதிகள் திறந்தவையாகவும் கட்டப்படிருந்தன.  இந்தக் கழிவுநீர் அமைப்பின் சில பகுதிகள் இன்றும் காணக் கிடைக்கின்றன.

சமுதாய அமைப்பு

கி.மு. 600ம் ஆண்டே மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தினார்கள். கணக்கெடுப்பில் ஒவ்வொருவராக வந்து தாங்கள் சொல்லப்போவது அத்தனையும் உண்மை என்று சத்தியப் பிரமாணம் செய்யவேண்டும். அதற்குப் பிறகு தங்களின் வயது, சொத்து, தொழில் ஆகிய விவரங்களைச் சொல்லவேண்டும். இந்த விவரங்களின் அடிப்படையில் மக்கள் ஐந்து வகையினராகப் பிரிக்கப்பட்டார்கள். வரி விதிக்கவும், போர்களுக்கு வீரர்களைக் குறுகிய காலத்தில் திரட்டவும் இந்தப் புள்ளிவிவரங்கள் பயன்படுத்தப்பட்டன.

வீடுகள்

பிரம்மாண்டமான பெரிய பங்களாக்கள், தனி வீடுகள், வரிசை வரிசையாகச் சிறிய வீடுகள் என வகை வகையான வீடுகள் இருந்தன.  எல்லா வீடுகளின் நடுப்பகுதியிலும், அட்ரியம் என்னும் முற்றம் இருக்கும். வீட்டின் அளவைப் பொறுத்து இவை சிறியவை அல்லது பெரியவையாக இருக்கும்.  அட்ரியம் விருந்தாளிகளை வரவேற்று உட்காரவைக்கும் அறையாகவும், குடும்பத்தார் எல்லோரும் சேர்ந்து பொழுதுபோக்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டது. முற்றத்தைச் சுற்றியோ அல்லது வாசல் பக்கமோ நிறையச் சின்ன அறைகள் இருக்கும்.  சில வீடுகளில் தனியான குளியல் அறைகளும் இருந்தன.  ஒரு கதவும், ஒன்றோ இரண்டோ ஜன்னல்களோ தெருவை பார்த்தபடி இருக்கும்.

வீட்டின் அளவும் அமைப்பும் வீட்டு சொந்தக்காரரின் பணவசதியைப் பொறுத்து அமைந்தன. பெரும் பணக்காரர்களின் வீடுகளில் பெரிய முற்றம் இருந்தது. இவை விருந்தாளிகள் உட்காரும் வரவேற்பு அறைகளாகவும், குடும்பத்தார் எல்லோரும் சேர்ந்து பொழுதுபோக்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டன. முற்றத்தைத் தாண்டினால், டாபுலே என்னும் அறை வரும். இது குடும்ப ஆவணங்கள், முன்னோர்களின் பொருள்கள், படங்கள் ஆகியவை பாதுகாக்கப்படும் அறை. இவை தவிரப் படுக்கை அறைகள் (க்யுபிக்குலி), ட்ரிக்லினியா என்னும் சாப்பாட்டு அறை, ஓசி  என்னும் வரவேற்பு  அறை, அடுக்களை,  கழிப்பறை எனத் தனித் தனி அறைகள் இருந்தன. சிலர் வீட்டில் நூலகங்களும் வைத்திருந்தார்கள்.

கி. மு. முதல் நூற்றாண்டில், மக்கள் தொகைப் பெருக்கத்தால், நகரங்களில் நிலம் தட்டுப்பாடானது. தனி வீடுகள் கட்டப் போதிய இடம் இல்லை. எனவே, வீடுகள் வரிசை வரிசையாகச் சேர்ந்திருக்கும் குடியிருப்புகள் வரத் தொடங்கின. அடுத்த கட்டமாக, மூன்றடுக்குக் கட்டடங்கள் வந்தன. இவற்றில் எட்டு குடியிருப்புகள் இருந்தன. சில குடியிருப்புகளில் தெருவை எதிர் கொண்டபடிக் கடைகளும் இருந்தன.

வீடுகளுக்குக் கற்களால் அஸ்திவாரம் போட்டார்கள். வீடு கட்ட வேலமரங்கள் பயன்படுத்தப்பட்டன. வேலமர விளார்களில் களிமண் தோய்த்து உபயோகப்படுத்தும் வழக்கம் இருந்தது. களிமண் செங்கல்களும் பயன்பட்டன. வீட்டின் கீழ்ப்பகுதியைச் சிவப்பாகவும், மேல்பகுதியை வெள்ளையாகவும் வண்ணம் அடிப்பார்கள்.

ரோமர்களுக்குத் தங்கள் வீடுகளை ஒவியங்களால் அலங்கரிப்பதில் அமோக விருப்பம். இயற்கைக் காட்சிகள் கொண்ட படங்களை வாங்கித் தங்கள் வீடுகளில் மாட்டினார்கள்.
வீட்டுச் சுவர்களைப் பல வண்ண மார்பிள் கற்களால் அலங்கரித்தார்கள்; வீட்டின் உட்புறச் சுவர்களில் மரங்கள்,  செடிகள், மிருகங்கள், கட்டங்கள் ஆகிய படங்கள் வரைந்தார்கள். தொடங்கினார்கள். வீட்டில் சிற்பங்கள் வைக்கும் பழக்கம் ஆரம்பத்தில் இல்லை, பின்னாட்களில்தான் வந்தது.

கடைகள்

வீடுகள், குடியிருப்புகள் ஆகியவற்றின் முன்பக்கம் கடைகள் இருந்தன. வீடுகளும் குடியிருப்புகளும் கட்டும்போதே கடைகள் அவற்றின் ஒரு பகுதியாகத் திட்டமிடப்பட்டுக் கட்டப்பட்டன. சாதாரணமாகக்  ஓர் அறை மட்டுமே கொண்ட கடைகள் அவை. பல கடைகளில் சாமான்கள் ஸ்டாக் செய்துவைக்கக் கிடங்கும் இருந்தது. கடைகளில் உணவுப் பொருள்கள், வீட்டுச் சாமான்கள், ஒயின், ரொட்டி ஆகியவை விற்கப்பட்டன.   கடைவீதிகளில் பலசரக்குக் கடைகளோடு, மதுபானம் அருந்தும் இடங்களும் இருந்தன. கிரேக்கம், அரேபியா, எகிப்து, கால் ஆகிய பல நாட்டு வணிகர்கள் அங்கே வருவார்கள்.

கட்டடக் கலை

கட்டடங்கள், ரோம சாம்ராஜியத்தின் பெருமையைப் பறைசாற்றும் ஒளிவிளக்குகள். இன்றய நிபுணர்களையே பிரமிக்கவைக்கும் பொறியியல் சாதனைகள். சில உதாரணங்கள்:

சர்க்கஸ் மாக்ஸிமஸ் (Circus Maximus)  

கி. மு. ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட விளையாட்டு அரங்கம் இது.  தேரோட்டப் பந்தயங்கள், வீர விளையாட்டுகள் ஆகியவை இங்கே நடந்தன. மரத்தால் உருவான இந்த அரங்கம் கி.மு. 31, கி. பி. 64  என்று இரண்டு முறை தீப்பற்றி எரிந்தது. இரண்டு முறையும் மறுபடி கட்டப்பட்டது. கி. மு. 103 ல் ரோம் தன் அதிகார உச்சியில் இருந்த காலம், ட்ராஜன் மன்னர் அரங்கத்தை 2000 x 500 அடி அளவில் பெரிதாக்கினார். அரங்கமும் மார்பிள் கற்களால் இரண்டு அடுக்கு மாளிகையாக உயர்ந்தது. இங்கே இறுதியாக கி. பி. 549ல் தேரோட்டப் போட்டி ஒன்று நடந்ததாக நிரூபணங்கள் கிடைத்துள்ளன. இன்று சர்க்கஸ் மாக்ஸிமஸ் இல்லை. அங்கே வெறும் புல்தரை மட்டுமே இருக்கிறது.

Colosseum ஸ்டேடியம்

50,000 பேர் உட்காரும் சுற்றரங்கம். மக்கள் ரசித்துப் பார்த்த வாள் சண்டை, வீரர்களுக்கான போட்டிகள், விலங்கு மனித விளையாட்டுப் போட்டிகள், மாதிரி கப்பற்படைப் போர்கள். இந்த ஆடுகளம் இன்று சிதிலமடைந்திருந்தாலும், நிலைத்து நிற்கிறது, பிரமிக்க வைக்கிறது. எப்போது கட்டினார்கள் தெரியுமா? கி.பி. 70  தொடங்கி, கி.பி. 80 முடித்த பொறியியல் பிரம்மாண்டம்!

பிரம்மாண்ட கட்டடங்கள் இன்னும் பல பண்டைய நாகரிகங்களிலும் உள்ளன. ஆனால், அவற்றை அன்றே, அறிவியல் பூர்வமாக அணுகியவர்கள் ரோமர்கள். மார்க்கஸ் விட்ருவியஸ் போலியோ (Marcus Vitruvius Pollio), கி.மு 80 முதல் கி.மு 17 வரை வாழ்ந்ததாகக் கருதப்படும் கட்டடக் கலை நிபுணர், பொறியியல் வல்லுநர், எழுத்தாளர். ஜுலியஸ் சீஸரின் போர்ப் படையில் பொறியியல் வல்லுநராகப் பணியாற்றிய இவர்தான் உலகத்தின் முதல் எஞ்சினியர் என்று சில சரித்திர ஆசிரியர்கள் சொல்கிறார்கள். டீ ஆர்க்கிட்டெக்ச்யுரா  என்னும் தலைப்பில் கட்டடக் கலை பற்றிப் இவர் பத்துப் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். கட்டடக் கலைக் களஞ்சியம் இது. கட்டக்கலை தாண்டி கட்டட நிர்வாகம், சிவில் எஞ்சினீரிங், கெமிக்கல் எஞ்சினீரிங், மெக்கானிக்கல் எஞ்சினீரிங், மிலிட்டரி எஞ்சினீரிங், நகர உருவாக்கத் திட்டம் என ஏராளமான தொழில்நுட்பத் துறைகளை இந்தப் புத்தகங்கள் ஆழமாக அலசுகின்றன.

நெடுஞ்சாலை

Appian Way என்னும் சாலை ரோமின் புராதனப் பெருமைகளில் ஒன்று. கி.மு. 312 – இல் அப்போதைய கான்சலாக இருந்த அப்பியஸ் க்ளாடியஸ் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டது. பெயர்க் காரணமும் அவர்தான்.     ரோம் நகரத்தையும், ப்ரிண்டிஸி துறைமுகத்தையும் இணைக்கும் இந்த 132 மைல் சாலை இன்றும் நிலைத்து நிற்கிறது. 2300 வருடங்களுக்கு முன்னால் ரோமர்கள் கையாண்ட தொழில்நுட்பம் இன்றைய பொறியியல் வல்லுநர்களையே பிரமிக்கவைக்கிறது.

பாதையில் ஒரு பகுதி காடும் புதருமான இடம், இன்னொரு பகுதி சதுப்பு நிலம், மிச்சப் பகுதி புழுதி படர்ந்த இடம். புதரையும், காட்டையும் வெட்டிச் சீராக்கினார்கள். சதுப்பு நிலத்தில் சேறை நீக்கி அடிப்பாகத்தை உறுதியாக்கினார்கள்.

இந்த அடிப்படை வேலைகள் முடிந்தவுடன்  முழு சாலையும் தரைமட்டமாக்கப்பட்டது. அதன்மேல் ஜல்லி அடித்தார்கள். இதற்குமேல் சுண்ணாம்புக் கலவை  பூசி பெரிய கற்கள் வைத்தார்கள், சமசீராய், கத்தியின் கூர்முனைகூட நுழையமுடியாமல் நெருக்கமாக, இறுக்கமாக சாலைகள் இருந்தன என்று ஆதாரங்கள் சொல்கின்றன.

சாலையின் நடுப்பாகம் மேடாகவும், ஓரங்கள் நடுவிலிருந்து ஒரே கோணத்தில் சரிவாகவும் இருந்தன. ஓரங்களில் பள்ளமான ஓடைகள் இருந்தன. மழை பெய்யும்போது தண்ணீர் கட்டாமல், போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க அவர்கள் செய்த யுக்தி இது. இந்த அபார வேலையை ஒரே வருடத்தில் முடித்துக் காட்டியது நம்ப முடியாத இன்னொரு ஆச்சரியம்!

0

ரோம நாகரிகம்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 39

ரோம நாகரிகம் (கி. மு. 753  – கி. பி. 476 )

தனித்துவம்

Spaeth-1நாம் இதுவரை பார்த்த ஆறு நாகரிகங்களுக்குள் ஒரு ஒற்றுமை உண்டு. மெசபொடோமியா, எகிப்து, சீனா ஆகியவை பெரிய நாடுகள். மாயன் நாகரிகம் நடந்த இடம் இன்று ஐந்து நாடுகளாக இருக்கும் நிலப்பரப்பு. சிந்து சமவெளி சுமார் பதின்மூன்று லட்சம் சதுர மைல் பரப்பளவு. கிரேக்கம் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட நகர ராஜ்ஜியங்கள் கொண்டது. ரோம நாகரிகம் தழைத்து வளர்ந்தது ரோம் என்கிற ஒரே ஒரு நகரத்தில்!

நாகரிகச் சான்றுகள்

பழங்கால  நாகரிகங்களை ஆராய்ச்சி செய்பவர்களுக்கு முக்கியப் பிரச்னை தகுந்த ஆதாரங்கள் கிடைப்பதுதான். இந்த வாக்கு ரோமாபுரிக்குப் பொருந்தாது. ஏராளமான ஆதாரங்கள் கல்வெட்டுகளாக, பண்டைக் கால சரித்திரப் படைப்புகளாகக் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றுள் முக்கியமானவை:

புத்தகங்கள்

முதலில், கிரேக்க நாட்டு  வரலாற்று ஆசிரியர் புளூடார்க். கி.மு 45 முதல் கி.மு 120 வரை வாழ்ந்த இவர் மொத்தம் 227 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அவற்றுள் பேரலல் லைவ்ஸ் என்னும் நூல் ரோமாபுரியின் வரலாற்றுப் பிரியர்களுக்குத் தங்கச் சுரங்கம்.

இங்கிலாந்து நாட்டு வரலாற்று எழுத்தாளர் எட்வர்ட் கிப்பன் படைத்திருக்கும் ரோம சாம்ராஜ்ஜியத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்  என்ற மாபெரும் வரலாற்றுப் புத்தகம். பன்னிரெண்டு வருட ஆராய்ச்சியில் உருவானது.  ஆறு பாகங்கள், 2768 பக்கங்கள் கொண்ட ஒரு தொகுப்பு அது.

பாலிபியஸ் கி.மு. 200 – கி, மு 117 எழுதிய The Histories  என்ற புத்தகம். 40 பகுதிகள் கொண்டது. இதில் கி.மு. 220 முதல் கி.மு. 146 வரையிலான ரோமாபுரி வரலாறு, ரோமின் அரசியல் சட்டம் ஆகியவை பற்றி விவரமாக எழுதியுள்ளார். இவற்றுள் 5 முழுப் புத்தகங்களும் 35 புத்தகங்களின் பகுதிகளும் கிடைத்துள்ளன.

சிசரோ கி.மு. 106 – கி. மு. 43 எழுதிய On The Republic, On The Laws என்னும்  புத்தகங்கள் அன்றைய அரசியல் நிலைமையையும், நிர்வாகத்தையும் அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. இவர் எழுதிய 774 கடிதங்களையும் தேடிக் கண்டுபிடித்து, தொகுத்துப் பிரசுரித்திருக்கிறார்கள். அன்றைய ரோமை அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் இவர்.

ரோம் என்றாலே, நம் நினைவுக்கு வருபவர் ஜூலியஸ் சீஸர். கி.மு. 100 முதல் கி. மு. 44 வரை வாழந்த இவர் மாவீரர் மட்டுமல்ல, மிகச் சிறந்த படைப்பாளி.  Commentaries on the Gallic War, Commentaries on the Civil War ஆகிய இரண்டு புத்தகங்களும் சீஸரின் போர்க்கள நினைவுக் குறிப்புகள். அக்கால ராணுவம், போர் முறைகள், ஆட்சி, அரசியல் ஆகியவை பற்றித் தெளிவாக இவை விளக்குகின்றன.

சாலஸ்ட் (Sallust) கி.மு. 86 – கி. மு. 35. Jugurthine War, Catiline Conspiracy, Histories ஆகியவை  இவருடைய படைப்புகள்.   அன்றைய அரசியலை, ராஜதந்திரங்களை, சூழ்ச்சிகளைப் புரிந்துகொள்ள இவை உதவும்.

லிவி (Livy) கி.மு. 59 – கி. பி. 17. முழுநேரச் சரித்திர எழுத்தாளர். ரோமாபுரியின் வாழ்க்கையை எழுதுவதற்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். முப்பதாம் வயதில் ரோமாபுரியின் வரலாற்றை எழுதத் தொடங்கிய இவர் தன் 142 – வது புத்தகத்தை முடித்தபோது வயது 76.

ஸூட்டோனியஸ் (Suetonius) கி.பி. 70 – கி.பி. 130. பன்னிரெண்டு சீஸர்கள் என்கிற இவருடைய புத்தகம் ஜூலியஸ் சீஸர் முதல் டொமிஷியன் சீஸர்  வரை கி.மு. 49 முதல் கி.பி. 96 வரையிலான காலகட்டத்தின் வரலாற்றை விவரமாகச் சொல்கிறது. பிற எல்லா ரோம வரலாறுகளும் பேரரசர்கள், அவர்கள் ஆட்சி, அரசியல், மக்கள் வாழ்க்கை முறை ஆகியவை  பற்றியே எழுதப்பட்டுள்ளன. ஸூட்டோனியஸ் மட்டும்தான் பன்னிரெண்டு சீஸர்களின் அகம், புறம், அந்தப்புரம் என அவர்களின் லீலா விநோதங்களையும் விவரிக்கிறார்.

நாள் குறிப்புகள்

ரோமர்களின் வாழ்க்கையில் மதம், கோவில்கள், இறை வழிபாடு ஆகியவை முக்கியப் பங்கு வகித்தன. வருட வாரியாக டயரி போன்ற குறிப்பேடுகள் எழுத வேண்டியது கோவில் பூசாரிகளின் கடமைகளுள் ஒன்று. இவற்றில் உள்ளூர் நீதிபதிகளின் பெயர்கள், அவர்கள் பணியாற்றிய பகுதிகளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் ஆகியவை பதிவாகியிருந்தன. இதேபோல் ஏராளமான பிரபுத்துவக் குடும்பங்களிலும் பதிவேடுகள் இருந்தன. கி. மு. 753 முதல் கி. மு. 200 வரையிலான 453 வருட வரலாற்றை உருவாக்க இந்தக் குறிப்புகள் மிக உதவுகின்றன. இவை, கி.மு. 133 – இல் Annales Maximi என்னும் தலைப்பில் ஒரே புத்தகமாகத் தொகுக்கப்பட்டன. பாப்பிரஸ் என்னும் செடியின் நாரிலிருந்து தயாரிக்கப்பட்ட காகிதத்தில் எழுதப்பட்ட இவற்றுள் பல சேதாரமின்றிக் கிடைத்துள்ளன.

ரோமன் நீதிபதிகளின் டயரிக் குறிப்புகள், Fasti. கி. மு. 300 தொடங்கி ரோம் செய்த ஒப்பந்தங்கள், சாதனைகள், போர் வெற்றிகள் ஆகியவை துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கல்வெட்டுக்கள்

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, இன்றும் இருக்கும் Lapis Nige என்னும் கோவில் கல்வெட்டில் ரோமாபுரி பற்றிக் கண்டெடுக்கப்பட்டிருக்கும் மிகப் பழைய கல்வெட்டு இதுதான். மதச்சடங்குகள், நியதிகள் ஆகியவை குறித்த விவரங்கள் இந்தக் கல்வெட்டில் கிடைக்கின்றன.

பொறிப்புக்கள்

அரசு ஆவணங்களைக் கற்களிலும், பித்தளைத் தகடுகளிலும் பொறிப்பது ரோமர் வழக்கம். ஒரு லட்சத்துக்கும் அதிகமான இத்தகைய பொறிப்புக்கள் / கல்வெட்டுகள்  கிடைத்துள்ளன. குறிப்பாக, கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் சட்டங்கள், அரச ஆணைகள், முக்கிய நிகழ்வுகள், ஒப்பந்தங்கள், போர் வெற்றிகள், அரசர்களின் சாதனைகள் என அவர்கள் பொறிக்காத அம்சங்களே இல்லை. இதைவிடச் சிறந்த ஆதாரங்கள் வேறு என்ன வேண்டும்?

நாணயங்கள்

கி. மு. 300 வாக்கில் ரோம் வெண்கல நாணயங்களைப் புழக்கத்துக்குக் கொண்டுவந்தது. சீக்கிரத்திலேயே தங்கம், வெள்ளி நாணயங்களும் நடைமுறைக்கு வந்தன. இவற்றில் உள்ள படங்கள் ரோமன் அரசர்கள், போர்கள், வெற்றிகள், மதம், கடவுள்கள், முக்கியக் கட்டடங்கள் ஆகிய   பல அம்சங்களைப் பிரதிபலிக்கின்றன.

காலகட்டங்கள்

கி. மு ஏழாம் நூற்றாண்டின் முடிவில் டைபர் நதியின் கரையிலிருந்து இட்ருஸ்கர்கள் (Etruscans) ரோமைக் கைப்பற்றினார்கள். அப்போது ரோம் நகரமாக இருக்கவில்லை. குடிசைகள் இருந்த சின்னக் கிராமம்.

கி. மு. ஐந்தாம் நூற்றாண்டின் முடிவில் உள்ளூர் மக்கள் இட்ருரியர்களை வெளியேற்றி தங்கள் குடியரசை ஏற்படுத்தினார்கள். கி. மு மூன்றாம் நூற்றாண்டில் அயல் நாடுகளை வென்றார்கள். இதற்குப் பின் பல உள்நாட்டுக் கலவரங்கள்.

கி. மு 27 – இல் ரோம சாம்ராஜ்யம் உருவானது. ஐநூறு ஆண்டுகளுக்குப் பரந்து விரிந்தது. 476 -இல் மேற்கு சாம்ராஜ்யம் எதிரிகளுக்கு வீழ்ந்தது. கிழக்கு சாம்ராஜ்யமும் நாகரிகமும் ஆயிரம் ஆண்டுகளுக்கு நீடித்தன.

ரோம் நகரம் பிறந்த கதை  

கிரேக்கர்களின் போர்க் கடவுள் செவ்வாய். இவருக்கும் ரியா ஸில்வியா என்கிற பெண் பூசாரிக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறந்தார்கள். இவர்கள் பெயர்கள் ரோமுலஸ், ரேமஸ். செவ்வாயின் எதிரியான அமுலியஸ் குழந்தைகளை டைபர் நதியில் எறிந்தான். ஒரு ஓநாய் அவர்களைக் காப்பாற்றியது. ஆட்டிடையன் ஒருவன் குழந்தைகளைக் கண்டுபிடித்தான். பதினெட்டு வயதில் தங்கள் பிறப்பு ரகசியம் புரிந்துகொண்ட அவர்கள் அமுலியஸைக் கொன்றார்கள்.ஆனால், விரைவிலேயே அண்ணன் தம்பிகளுக்குள் சண்டை வந்தது. ரோமுலஸ் ரேமஸைக் கொன்றார். கி. மு 753 – இல் ரோம் நகரை நிறுவி, அரச கட்டில் ஏறினார்.

அரசியல் கட்டமைப்பு

மேல்சபை, கீழ்ச் சபை என்று உலகம் எங்கும் இன்றும் பின்பற்றப்படும் மக்கள் பிரதிநித்துவ முறைக்கு அடிக்கோல் போட்டது ரோம்தான். ரோம் நகரை நிறுவிய ரோமுலஸ் அரசர் தொடக்க நாள்களிலேயே. நாட்டை நிர்வாகம் செய்யவும், தனக்கு ஆலோசனை கூறவும் இரண்டு சபைகள் உருவாக்கினார். அவை கமிஷா க்யூரியட்டா, செனட் என்பவை. இவற்றுள் நம் லோக் சபாபோல் மக்கள் குரலே மகேசன் குரலாக கமிஷா க்யூரியட்டா ஒலித்தது. செனட் அரசர்களை மக்கள் தேர்ந்தெடுக்க உதவுதல், பேரசர்கள் பாதை தவறும்போது அவர்களுக்குக் கடிவாளம் போடுதல் என ராஜ்யசபாவின் இலக்கணமாக, அறிவுஜீவிகளின்  அரங்கமாகத் திகழந்தது. மன்னராட்சி மட்டுமே நிலுவையில் இருந்த பண்டைய காலகட்டத்தில், மக்கள் கருத்துக்கு மதிப்புக் கொடுத்த ரோமின் வழிகாட்டல்தான், ஏராளமான நாடுகளில்   மக்களாட்சிக்கு மலரக் கிரியா ஊக்கியாக இருந்தது.

நாட்டின் போர்க்குணம்   

கி.மு 753 – ல், ஒரே ஒரு சிறிய ஊராகப் பிறந்த ரோம், சுமார் 650 ஆண்டுகளில் இத்தாலி, கிரீஸ், திரேஸ், பாசிடோனியா, ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன், சிரியா, பாலஸ்தீனம், எகிப்து, ஆசியா, ஆப்பிரிக்கா, மத்தியதரைக்கடல் தீவுகள் ஆகிய பூகோளப் பாகங்கள்மீது போர் தொடுத்து வெற்றி கொண்டு 59 லட்சம் சதுரக் கிலோமீட்டர் பரப்பளவில் தன் கொடியைப் பறக்க வைத்தது. இந்த ஏரியா எத்தனை பெரியது தெரியுமா? இந்தியாவின் பரப்பளவு 32,87,590 சதுரக் கிலோ மீட்டர்கள்.  அதாவது, இரண்டு இந்தியா அளவுக்கு! அண்டை நாடுகள்மீது போர் தொடுத்து, களமெல்லாம் கண்ட வெற்றிகள் இந்த அசுர வளர்ச்சிக்குக் காரணம். ரோமாபுரியின் படைபலம், பயன்படுத்திய ஆயுதங்கள், காலமாற்றங்களுக்கு ஏற்ப ஆயுதங்களில் வந்த புதுமைகள். அரசர்களின் ராஜ தந்திரங்கள், அவர்கள் வகுத்த யுத்த வியூகங்கள், தளபதிகளின் தலைமைப் பண்புகள், போர் வீரர்களின் கட்டுப்பாடு… என்று இன்றும் உலகம் வியக்க பல விஷயங்கள் ரோமில் உள்ளன.

சாதாரணமாகப் பண்டைய நாகரிகங்களில், எல்லா நாடுகளிலும் சிறிய போர்ப்படைகள் இருக்கும். யுத்தங்கள் வரும்போது, பெரும் படையினரைத் திரட்டுவார்கள், பயிற்சி தருவார்கள், களத்தில் இறக்குவார்கள். ஆனால், ரோமாபுரியில் ராணுவம், ஆட்சியின் ஒருங்கிணைந்த அம்சம்.  ஒவ்வொரு நகர சாம்ராஜ்யத்திலும் சுமார் 5000 காலாட்படை வீரர்கள் நிரந்தரப் படையாக இருந்தார்கள்.  இவர்களுக்கு, மாதச் சம்பளம் ஓய்வூதியம் ஆகியவற்றோடு நிலமும் வழங்கப்பட்டது. அமைதி காலத்தில் போர் வீரர்கள், பாதுகாப்பு, சாலை போடுதல், கட்டடங்கள் கட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

0

எழுத்தும் கதையும்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 38

mayan_glyphsமாயர்களின் எழுத்து சித்திர எழுத்து என்ற வகையைச் சேரும். அதாவது வாசிக்கும் முறையில் இல்லாமல், பட அமைப்புடைய எழுதுதல் முறையை அடிப்படையாகக் கொண்டது.

தமிழ் அகர வரிசை எப்படி வருகிறது? அ, ஆ, இ, ஈ, எ, ஏ என்று.  மாயர்கள் மொழியில் இவை எழுத்துக்களாக இருக்காது. படங்களாக இருக்கும்.

இப்படி மாயன் மொழியில் சுமார் 800 குறியீடுகள் இருந்தன.  எழுதக் கற்றுக் கொள்வது கடவுளின் ஆசீர்வாதத்தால் மட்டுமே நடக்கிற காரியம் என்று கருதப்பட்டது. எல்லா மாயர்களும் எழுதக் கற்றுக்கொள்ள முடியாது. குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டுமே மன்னர் அதற்குஅனுமதிப்பார்.

கல்வெட்டுகளிலும், மான் தோல், மர இலைகளால் தயாரிக்கப்பட்ட காகிதம் ஆகியவற்றிலும் இந்தக் குறியீடுகளைப் பயன்படுத்தி, தம் கருத்துக்களை மாயர்கள் வெளிப்படுத்தினார்கள்.

மாயன் இலக்கியம்

ஸ்பெயின் நாடு பெரும்பாலான பழங்கால மாயர் கதைகளைக் கொண்ட புத்தகங்களை அழித்தது. வழிவழியாக வரும் வாய்வழிக் கதைகளை இப்படி அழிக்க முடியாதே? அத்தகைய பல சுவையான கதைகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. முயலும் ஓநாயும் என்கிற ஒரு கதையைப் பார்ப்போம்.

காட்டில் ஒரு முயல் வசித்தது. ஒரு நாள் ஓநாய் அதைத் துரத்தியது. முயல் மிகுந்த புத்திசாலி. தன்னை ஓநாய் பிடித்துவிடும், அப்படிப் பிடித்தால், தன்னைக் கொன்று தின்றுவிடும் என்று அதற்குத் தெரியும். பலமும் வேகமும் கொண்ட ஓநாயோடு சண்டை போட்டு ஜெயிக்க முடியாது என்பதும் முயலுக்குத் தெரியும்.

என்ன தந்திரம் பண்ணலாம் என்று முயல் யோசித்தது. வழியில் ஒரு பாறையின் பக்கம் போனது. அந்தப் பாறையை இறுக்கமாகப் பிடித்தபடி  நின்றது.

“முயலாரே, நீங்கள் ஏன் திடீரென நின்றுவிட்டீர்கள்? ஓட முடியவில்லையா? நான் உங்களைச் சாப்பிடப் போகிறேன் என்ற பயத்தால் ஓட முடியவில்லையா?” என்றது ஓநாய்.

“ஓநாய் மாமா, நீங்கள் என்னைச் சாப்பிடுவதுபற்றி எனக்கு பயமும் இல்லை, கவலையும் இல்லை. நீங்கள்தான் வலியே இல்லாமல் என்னைக் கொன்று விடுவீர்களே? உங்களை நினைத்துத்தான் நான் கவலைப்படுகிறேன்.”

“உளறாதே. என்னைப் பற்றி நீ ஏன் கவலைப்பட வேண்டும்?”

“என்னைக் கொன்ற உடனேயே, என்னைச் சுவைத்துச் சாப்பிடுவதற்கு முன்னால், நீங்கள் பரிதாபமாகச் செத்துப் போகப் போகிறீர்கள்.”

”என்னைக் கொல்லும் தைரியம் இந்தக் காட்டில் யாருக்கு இருக்கிறது? சிங்கமா, யானையா, புலியா?”

“இவர்களும் உங்களோடு சேர்ந்து சாகப் போகிறார்கள்.”

“முயலாரே, பயத்தில் உமக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று நினைக்கிறேன்.
நாங்கள் ஏன் செத்துப் போகப் போகிறோம்?”

“இன்னும் கொஞ்ச நேரத்தில் வானம் இடிந்து இந்தக் காட்டில் விழப் போகிறது.
இந்தப் பாறையின் அடியில் நின்றால் மட்டுமே நாம் தப்புவோம்.”

“எனக்கும் இடம் கொடும் முயலாரே.”

“ஒநாய் மாமா, உங்களுக்கு இல்லாத இடமா? இந்தப் பாறையிலிருந்து நான் விலகி வந்தால், அது உருண்டு கீழே என் மேல் விழுந்து என்னை நசுக்கிவிடும். நீர் ஒரு நிமிடம் பாறையைத் தாங்கிப் பிடித்துக் கொள்ளும். அதற்குள் நான் ஓடிப் போய் ஒரு மரக் குச்சி கொண்டு வருகிறேன். அதை தாங்கலாகக் கொடுத்து, பாறையை நேராக நிறுத்துவோம். அப்புறம் வானம் கீழே விழும்போது, நாம் இரண்டு பேரும் பாறையின் கீழ்  பத்திரமாக இருக்கலாம். அப்புறம் நீங்கள் என்னைச் சாப்பிடலாம்.”

ஓநாய் பாறையைப் பிடித்துக் கொண்டது. முயல் ஓடிப் போயிற்று. நேரம் பறந்தது.  முயல் வரவில்லை.

“முயலாரே, முயலாரே, என் கை வலிக்கிறது. சீக்கிரம் வாரும். நான் நகர்ந்தால், பாறை என் மேல் விழுந்து என்னைச் சட்டினி ஆக்கிவிடும்.”

முயல் அங்கே இருந்தால்தானே, ஒநாயின் சப்தம் அதன் காதில் விழும்?

தன்னைக் கொல்ல வந்த ஓநாயை, முயல் தன் தந்திரத்தால் வென்ற கதை இது. இந்தக் கதையில் முயல் புத்திசாலியாக, ஹீரோவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. மாயர்களின் பெரும்பாலான கதைகளில் புத்திசாலி முயல்தான் ஹீரோ. இதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.

முயலைக் கெட்ட குணமுள்ளதாக, வில்லனாகக் காட்டும் சில கதைகளும் உள்ளன.
உதாரணத்துக்கு இதோ ஒன்று.

முயலுக்குக் கொம்பு உண்டா? கிடையாது. மானுக்குக் கொம்பு உண்டா? உண்டு. ஆனால், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் முயலுக்குக் கொம்புகள் இருந்தன, மானுக்குக் கொம்புகள் கிடையாது. எப்படி வந்தது இந்த மாற்றம்? சொல்கிறது மாயர்களின் கதை.

முயல் காட்டில் ஓடி விளையாடிக் கொண்டிருந்தது. அதற்கு அழகான கொம்புகள் இருந்தன. இந்தக் கொம்புகள் வித்தியாசமானவை. தொப்பியைப் போல் இவற்றைக் கழற்றலாம், மறுபடியும் மாட்டிக் கொள்ளலாம். தன் கொம்புகளைப் பற்றி முயலுக்கு மிகுந்த கர்வம் உண்டு.

வழியில் ஒரு மான் வந்தது. முயலின் கொம்பை மான் மிகவும் ரசித்தது.

“முயலாரே, உங்கள் தொப்பி ரொம்ப அழகாக இருக்கிறது. நான் அதைக் கொஞ்ச நேரம் போட்டுக் கொண்டு பார்க்கலாமா?”

“தாராளமாக. ஆனால் ரொம்ப நேரம் நீங்கள் வைத்துக் கொள்ளக்கூடாது. என்னிடம் சீக்கிரம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்.”

மான் முயலிடமிருந்து கொம்பை வாங்கியது, தலையில் போட்டுக்கொண்டது,வேகமாக ஓடிப் போனது. திரும்பி வரவில்லை.

என்ன செய்யலம் என்று முயல் யோசித்தது. மக்களுக்குக் குறை என்றால் மன்னனிடம்தானே முறையிடவேண்டும்? கடவுளுக்குச் சமமான அரசர்தானே ஏழை எளியோரைக் காப்பாற்றுவார்கள்?

முயல் மன்னரிடம் போனது.

“அரசரே, என் கொம்பை மான் என்னிடமிருந்து ஏமாற்றி எடுத்துக் கொண்டு போய்விட்டது. நீங்கள்தான் என் கொம்பை எனக்குத் திரும்பி வாங்கிக் கொடுக்க வேண்டும்.”

“சரி, உன் புகார் உண்மையானதாக இருந்தால் உனக்கு நியாயம் வாங்கிக் கொடுப்பது என் வேலை.”

“மன்னா, எனக்கு இன்னும் ஒரு வேண்டுகோள்.”

“என்ன அது? சொல்.”

“அரசரே, நான் உருவத்தில் சிறியவனாகச் இருப்பதால்தான் மான் போன்ற மிருகங்கள் என்னை ஏமாற்றுகின்றன. எனக்கு நீங்கள் கடவுளிடம் சொல்லிப் பெரிய உருவம் வாங்கித் தர வேண்டும்.”

“நீ நேர்மையாக நடந்தால் இவை அத்தனையும் உனக்குக் கட்டாயமாகக் கிடைக்கும். நான் உனக்கு ஒரு பரிட்சை வைக்கப்போகிறேன். அதில் நீ ஜெயித்தால் கொம்பும் பெரிய உருவமும் உனக்குக் கிடைக்கும்.”

“சொல்லுங்கள் மகராஜா.”

“நீ நான்கு மிருகங்களின் தோலை முதலில் எனக்குக் கொண்டு வா.”

முயல் வீட்டுக்குப் போனது. வெகு நேரம் ஆலோசித்தது. ஒரு திட்டத்தை முடிவு செய்தது. முயலுக்கு நன்றாகக் கிடார் வாசிக்கத் தெரியும். கிடாரையும் ஒரு பெரிய தடியையும் கைகளில் எடுத்துக் கொண்டு காட்டுக்குள் புறப்பட்டது.

கிட்டாரில் இனிய இசை எழுந்தது. ஒரு பெரிய பாம்பு எதிரே வந்தது.

“முயலாரே, முயலாரே, நீங்கள் இனிமையாக கிட்டார் வாசிக்கிறீர்கள். உங்கள் பாட்டுக்கு ஆட நான் ஆசைப்படுகிறேன்.”.

“ரொம்ப சந்தோஷம் பாம்பு அண்ணா. இதோ உங்களுக்காக ஒரு பாட்டு.”

பாம்பு தன்னை மறந்து ஆடியது. பாட்டில் லயித்திருந்த பாம்பின் தலையில் முயல் தன் தடியால் அடித்தது. பாம்பு இறந்தவுடன் அதன் தோலை முயல் எடுத்துக்கொண்டது.

அடுத்தது, சிங்கம், முதலை ஆகியவை முயலின் கொலைகாரத் திட்டத்துக்குப் பலியானார்கள்.

அடுத்ததாக முயல் பெரிய குரங்குக் கூட்டத்தைப் பார்த்தது. “இவர்கள் அத்தனை பேரையும் தீர்த்துக் கட்டினால் நிறையத் தோல்கள் தேறும்.”

குரங்குகள் புத்திசாலிகள். வெறும் பாட்டால் அவர்களை ஏமாற்ற முடியாது. எனவே முயல் நிறைய வாழைப் பழங்களைக் கைகளில் எடுத்துக்கொண்டு குரங்குகள் அருகே வந்தது.

“முயல் மாமா, முயல் மாமா, எங்களுக்குப் பழம் தாருங்கள்” என்று குரங்குகள் கெஞ்சின.

“காட்டில் இருக்கும் குளத்துக்குப்  பக்கத்தில் மீன் பிடிக்கும் வலை இருக்கிறது. அதைக் கொண்டு வாருங்கள். எல்லாப் பழங்களையும் உங்களுக்கே தந்துவிடுகிறேன்.”

குரங்குகள் ஓடிப் போய் வலையைக் கொண்டு வந்தன. முயல் எல்லாப் பழங்களையும் அவர்களிடம் கொடுத்தது.

குரங்குகள் வாழைப் பழங்களைச் சாப்பிடத் தொடங்கின. அந்த ஆனந்த மயக்கத்தில் தம்மையே மறந்தன. முயல் வலை வீசியது. அத்தனை குரங்குகளும் வலைக்குள் மாட்டிக் கொண்டன. இப்போது முயல் எல்லாக் குரங்குகளையும் கொன்று தோலை எடுத்துககொண்டது.
அரசர் இட்ட கட்டளையை நிறைவேற்றிவிட்டோம், திருட்டுப் போன கொம்பு திரும்பக் கிடைக்கும். யானை போலப் பெரிய உருவத்தோடு உலா வரலாம் என முயல் மனத்தில் ஆயிரம் ஆசைக் கனவுகள்.

“ராஜா, நீங்கள் ஆணையிட்டபடி மிருகங்களின் தோல்களைக் கொண்டு வந்திருக்கிறேன்.”

மன்னர் பார்த்தார்.

“முயலாரே, இத்தனை மிருகத் தோல்களை எப்படிச் சேர்த்தீர்கள்?”

முயல் தன் வீர சாகசங்களை விவரித்தது.

மன்னர் கோபப்பட்டார்.

“நீ நல்லவனாக இருந்தால், காட்டில் இறந்து கிடக்கும் மிருகங்களின் தோல்களைச் சேர்த்துக் கொண்டு வந்திருப்பாய். உன் சுயநலத்துக்காக, மற்ற மிருகங்களைக் கொன்ற நீ மகா அயோக்கியன். கொம்பும் பெரிய உருவமும் இருந்தால் நீ இன்னும் என்னென்ன கொடுமைகள் செய்வாயோ? உனக்கு இனிக் கொம்பு கிடையவே கிடையாது. அது மானுக்குத்தான். உன் உருவமும் சிறியதாகவே இருக்கும்.”

அத்துடன் முயலின் காதையும் மன்னர் பிடித்து இழுத்தார். முயலின் காதுகள் நீண்டுபோயின.

அதனால்தான் இன்றும் முயல்களுக்கு நீண்ட காதுகள் இருக்கின்றன. கொம்புகள் இல்லை.    சக உயிர்களைக் கொன்றால் மன்னிப்பே கிடையாது, அரசரின் முடிவுதான் இறுதி முடிவு என்ற கருத்துகளை அழகாக வெளிப்படுத்துகிறது இந்தக் கதை.

மாயர்களின் பழங்காலக் கதைகள் இந்தியப் பஞ்சதந்திரக் கதைகள் போல் முயல், நரி, ஓநாய் போன்ற மிருகங்களை மையமாகக் கொண்ட நீதி போதனைக் கதைகள்.

0

கலையும் கலை சார்ந்த வாழ்வும்

creation1பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 37

கி. பி. 250 –  900 காலத்தின் சிதிலம் அடைந்த கட்டடங்களை ஆராய்ச்சியாளர்கள்  கண்டுபிடித்திருக்கிறார்கள். எகிப்தின் பிரமிட் போன்ற கட்டடங்கள், மன்னர்களின் அரண்மனைகள், கோவில்கள் ஆகியவை மிகுந்த கலைநயத்தோடு விளங்குகின்றன. குறிப்பாக மனித வடிவங்கள் மிகவும் துல்லியமாகப் படைக்கப்பட்டுள்ளன.

மாயர்கள் காலத்தில் மாடுகள், குதிரைகள் போன்ற உழைப்புக்குப் பயன்படும் மிருகங்கள் இருந்ததாக ஆதாரங்கள் இல்லை. அதனால், மனித முயற்சியும் உழைப்புமே இந்தக் கட்டடங்களை உருவாக்கப் பயன்பட்டன. கருங்கல், தண்ணீர் கலந்த சுண்ணாம்பு ஆகிய பொருட்கள்தாம் கட்டட மூலப்பொருட்கள்.

அரண்மனைகள் நகரங்களின் மையப்புறத்தில் இருந்தன. இவை பல மாடிக் கட்டடங்கள். ஏராளமான அறைகள் கொண்டவை. மன்னர்,  பிரபுக்கள் என தங்குபவர்களின் சமுதாய அந்தஸ்துக்கு ஏற்ப, அறைகளின் எண்ணிக்கைகள், வசதிகள், கலை நயங்கள் ஆகியவை இருந்தன.

மாயர்கள் அற்புதமான சிற்பங்களைக் கல்லிலும் மண்ணிலும் படைத்தார்கள். வகை வகையான வடிவ மண் பாண்டங்கள், பீங்கான் பாத்திரங்களின் மேல் தீட்டப்பட்ட ஓவியங்கள் ஆகியவை ரசிகர்களைப் பிரமிக்க வைக்கின்றன. மரப் பட்டைகளில், கடவுள்கள், இயற்கைக் காட்சிகள், மிருகங்கள். பறவைகள் ஆகிய ஓவியம் வரைவது மிகப் பிரபலமாக இருந்தது.

தங்கம், வெள்ளி, செம்பு, பவழங்கள், ரத்தினங்கள் போன்ற இயற்கைச் செல்வங்கள் அவர்களிடம் இல்லை. ஆனால், தங்கத்தில் அவர்கள் ஆலய மணிகளையும் கடவுள்கள் வடிவ முகமூடிகளையும் உருவாக்கினார்கள்.

ஜேட் (என்கிற பச்சை மணிக்கல்லால் செய்த காதணிகள் அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்திருக்கின்றன. இவை பெரும்பாலும் கடவுள்கள், மிருகங்கள் ஆகிய உருவங்களைத் தாங்கி இருக்கின்றன.

மாயர்களின் மத நம்பிக்கைகள்  

மாயர்களின் வாழ்க்கையில் கடவுள்கள் மிக மிக முக்கியமானவர்கள். சாக்லெட்டுக்கு ஒரு கடவுள், சோளத்துக்கு ஒரு சாமி. மழை, காற்று, வானம், பிறப்பு, மரணம், கல்வி, சூரியன், சந்திரன், அன்பு, வியாபாரம், பாதாள உலகம் என எல்லாவற்றுக்கும் கடவுள்கள்!

மரணக் கடவுள் பெயர் ஆ புக் (Ah Puch). இடிக் கடவுள் பேக்காப் (Becab). நாலு பேக்காப்கள் பிரபஞ்சத்தின் நான்கு மூலைகளையும் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிறது மாய ஐதீகம்.

சாக் (Chaac) மாயர்களின் வருண பகவானான மழை தெய்வம். காமஸோட்ஸ் (Camazotz) என்பவர் வௌவால் சாமி.  தற்கொலை செய்பவர்களைக் காப்பாற்றும் கடவுள் இக்ஸ்டாப் (Ixtab) ஸிப்கானா (Zipcana) பாதாள உலக பூதம்.

மாயர்களுக்கு 166 கடவுள்கள் இருந்ததாக ஆதாரங்கள் சொல்கின்றன.

மாயர்களின் கடவுள் நம்பிக்கை மிக ஆழமானது. கடவுள்கள்மேல் வைத்திருந்த பக்தியின் சின்னங்களாக அவர்கள் பிரம்மாண்டமான கோயில்கள் கட்டினார்கள். இந்தக் கோயில்கள் பிரமிட்களின் உச்சியில் இருந்தன.

எகிப்து பிரமிட்கள் உலகப் புகழ் பெற்றவை. பிரமிட் என்றால் கூம்பு வடிவம். அடிப்பகுதி நீண்ட சதுரமாக இருக்கும். நான்கு சரிவான முக்கோணப் பகுதிகள் உச்சியில் ஒன்றாக இணையும். மாயர்களின் பிரமிட்கள் இதே வடிவக் கட்டடங்கள்தாம்.

உச்சியில் இருக்கும் கோயில்களுக்குப் போக, பிரமிட்களின் பக்கப் பகுதிகளில் படி வரிசைகள் அமைக்கப்பட்டிருந்தன. கோயில்களை அழகிய சிற்ப வேலைகள் செய்யப்பட்ட கற்களால் கட்டினார்கள். தரையில் ஓவிய வேலைப்பாடுகள் செய்யப்பட்டன. சுவரிலும் ஓவியங்கள்!

கோயில்கள் மதச் சடங்குகளுக்கும், மக்கள் ஒன்றுகூடிக் கொண்டாடும் சமுதாய
விழாக்களுக்கும் பயன்பட்டன. எனவே கோயில்களுக்கு மாய நாகரிகத்தில் மிக முக்கிய இடம் உண்டு.

கோயில் பூசாரிகளுக்கு சமுதாயத்தில் மிக உயர்ந்த மதிப்பு இருந்தது. அவர்கள் அறிவில் சிறந்தவர்களாக விளங்கினார்கள். கணிதம், வானியல் ஆகிய துறைகளில் அவர்களுக்கு மிகுந்த புலமை இருந்தது.

காலண்டர் கண்டுபிடித்த மாயர்களுக்கு நல்ல நாள், கெட்ட நாள் என நாள் பார்ப்பதில் அதிக நம்பிக்கை. வருடத்தில் ஐந்து நாட்கள் அதிர்ஷ்டம் கெட்ட நாட்கள். அந்த நாட்களில் ஒரு நல்ல காரியமும் தொடங்க மாட்டார்கள். பூசாரிகள்தான் நல்ல நாள், கெட்ட நாள் குறித்துக் கொடுப்பார்கள்.

மாயக் கோவில்களில் பலி கொடுப்பது வழக்கம். மனித பலி சாதாரணமாக இருந்தது.
கைதிகள், அடிமைகள், குழந்தைகள் ஆகியோரைப் பலி கொடுத்தால், ஆண்டவன் மிக்க மகிழ்ச்சி கொள்வார் என்று மாயர்கள் நம்பினார்கள். மன்னர் குடும்பத்தில் வாரிசு பிறக்கும் நாட்களிலும் மன்னர் பதவி ஏற்கும் தினங்களிலும் மனித பலி கொடுத்தேயாக வேண்டும். அப்போதுதான் ஆண்டவன் அவர்களையும் நாட்டையும் பத்திரமாகக் காப்பாற்றுவார்.

இந்தப் பலிகள் இரவு நேரங்களில், மைதானம் போன்ற பெரிய திறந்த வெளிகளில் நடக்கும். மக்கள் பெரும் கூட்டமாகக் கூடி இவற்றைப் பார்த்து ரசிப்பார்கள். பலர் தீப்பந்தங்கள் கொண்டு வருவார்கள், சங்கு ஊதுவார்கள். ஒரே கோலாகலக் கொண்டாட்டம் நடக்கும்.

மாயர்களின் நாகரிகத்தில் அவர்களுடைய இறுதிச் சடங்குகள் முக்கிய இடம் பிடித்தன. மரணம் வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சிதான், இறப்பவர்களில் பெரும்பாலோனோர் மறுபடி பிறப்பார்கள் என்று நம்பினார்கள்.

உலகத்தில் நல்ல காரியங்கள் செய்பவர்கள், நாட்டுக்காக உழைப்பவர்கள், போர் வீரர்கள், பிறக்கும்போது இறக்கும் குழந்தைகள் ஆகியோர் மறு பிறவிகள் இல்லாமல் நேரடியாக சொர்க்க உலகம் போவார்கள் என்பது மாயர்களின் சித்தாந்தம். இந்த நம்பிக்கைகள் நம் இந்து மதத்தின் பிறப்பு-இறப்பு தத்துவங்கள் போலவேதான்.

ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் இந்து, மாய நம்பிக்கைகள் மாறுபடுகின்றன. தற்கொலை செய்து கொள்பவர்கள் பேய்களாக வேப்ப மர உச்சியில் வசிப்பார்கள், உலகத்தைச் சுற்றுவார்கள்,  மனிதர்களுக்குத் துன்பங்கள் தரும் வில்லன்கள் என்கிறது இந்து மதம். மாயர்களோ, தற்கொலை செய்து கொள்பவர்கள் மரணத்துக்குப் பின் நேராக சொர்க்கம் போகும் அதிர்ஷ்டசாலிகள்.

மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கும் என்றும் மாயர்களுக்குத் தெளிவான எண்ணம் இருந்தது. சாதாரண மக்கள் மரணத்துக்குப்பின் பாதாள உலகம் போவார்கள். பணக்காரர்களும் பிரபுக்களும் சொர்க்கம் போவார்கள்.

வாழ்க்கையில் பாவம் செய்தால், கெட்டவர்களாக வாழ்ந்தால், அதற்குரிய தண்டனை மரணத்துக்குப் பின் கிடைத்தே தீரும். ஊருக்கு உழைக்கும் உத்தமர்களுக்கு மறு பிறவி கிடையாது. அவர்கள் மனித நிலையில் இருந்து கடவுள்கள் ஆவார்கள். இறந்தவர்களுக்கு மரியாதைகள், படையல்கள் செய்து அவர்களின் ஆவிகளை சந்தோஷமாக வைத்திருக்கப் பல சடங்குகள் வைத்திருந்தார்கள்.

மாயர்களின் இறுதிச் சடங்குகளிலும் நம் ஊர் சம்பிரதாயங்கள்போல் பல நடைமுறைகள் உள்ளன. நம் ஊரில் மரணம் அடைந்தவர்களின் வாயில் அரிசி போடுவார்கள். அவர்கள் சொர்க்கம் அல்லது நரகம் போவதுவரை அவர்களுடைய பசி தீர்க்க இந்த அரிசி உதவும் என்பது நம் நம்பிக்கை.

மாயர்களும் இப்படித்தான். இறந்தவர்களின் வாயில் அவர்கள் ஊர் “அரிசி”யான சோளம் போட்டார்கள். மாயர்களைப் பொறுத்தவரை சோளம் வாழ்க்கையின் அடையாளம். சோளத்தோடு மறு உலகம் போனால் இறந்தவர்களின் மறுபிறவி வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள்.
அமரர் ஆனவர்கள் மேல் உலகம் போக வழிச் செலவுக்குப் பணம் வேண்டுமே?
ஜேட் போன்ற விலை உயர்ந்த மாணிக்கக் கற்களும் அவர்களுடைய உடல்கள்மீது வைக்கப்பட்டன

இன்னொரு வினோதப் பழக்கமும் இருந்தது. கற்களால் செய்யப்பட்ட விசில் மறைந்தவர்கள் உடல்களோடு  வைக்கப்பட்டது. இவை கடவுள்கள், மிருகங்கள் ஆகிய வடிவங்களில் இருந்தன. இந்த விசில்கள் உயிர் இழந்தவர்களைப் பத்திரமாக மேல் உலகம் கொண்டு சேர்க்கும் என்று நம்பினார்கள்.

சிவப்பு நிறம் பிறப்பு, மறு பிறவி ஆகியவற்றோடு தொடர்பு கொண்ட நிறமாகக் கருதப்பட்டது. உடலின் மேல் குங்குமம் போன்ற சின்னபார் என்ற சிவப்பு நிறத் தூள் தாராளமாகத் தூவப்பட்டது.  இது ஒரு தாதுப் பொருள்.

உடல்கள் புதைக்கப்பட்டு கல்லறைகளும் அவற்றின்மேல் கோவில்களும் கட்டப்பட்டன. இந்த பந்தாக்கள் எல்லாம் கடவுள்களுக்கும் பணக்காரர்களுக்கும்தான். ஏழைகளை வெறுமனே புதைப்பதோடு சரி.

சில கல்லறைகளின் மேல் பிரமிட் போன்ற கட்டடங்கள் எழுப்பப்பட்டன. சில பிரமிட்களுக்கு 13 படிகள். சொர்க்கத்தில் 13 வகை உலகங்கள் இருப்பதாக மாயர்கள் நம்பியதன் பிரதிபலிப்பு இது. மற்றும் சில பிரமிட்களில் ஒன்பது படிகள் மட்டுமே. பாதாள உலகத்தில் ஒன்பது வகை உலகங்கள் இருப்பதாக அவர்கள் நம்பியது இதற்குக் காரணம்.

கல்லறைகளில் அழகிய பீங்கான் கைவினைப் பொருட்கள், ஜேட் ஆபரணங்கள், முகமூடிகள் போன்ற விலை உயர்ந்த பொருட்களையும் மறைந்தவரின் உடலோடு சேர்த்துப் புதைப்பது வழக்கம். சில சமயம், மறைந்தவரின் வேலைக்காரர்களையும் தங்கள் எஜமானர்களோடு சேர்த்துப் “பரலோகம்: அனுப்புவதுண்டு.

காடுகளில் பிசாசுகள் இருக்கும் என்ற நம்பிக்கையும் பயமும் மாயர்களுக்கு உண்டு,  அவற்றிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் பல வகையான  தாயத்துகளை அவர்கள் அணிந்தார்கள்.

0

மாயர்கள் கணித மேதைகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 36

mayat4நாம் என்ன எண்முறை பயன்படுத்துகிறோம்? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10.

இவற்றின் முன்னோடியாக இந்தியா வழிகாட்டிய காரணத்தால், இந்த எண்கள் இந்து அராபிய எண்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த எண் முறையின் பெயர் தசாம்ச முறை (Decimal System). தசம் என்றால் பத்து. அதாவது, இந்தக் கணித முறை தச அடிப்படையைக் கொண்டது. அது என்ன தச அடிப்படை?

உதாரணமாக 2875 என்ற எண்ணை எடுத்துக் கொள்ளுங்கள். இடமிருந்து வலமாக எண்களைப் பாருங்கள்.

முதல் இடத்தில் 5. இதன் மதிப்பு 5.

இரண்டாம் இடத்தில் 7. இதன் மதிப்பு 7 x 10 = 70.

மூன்றாம் இடத்தில் 8. இதன் மதிப்பு 8 x 102  = 8 x 100 = 800

நான்காம் இடத்தில் 2. இதன் மதிப்பு 2 x 103  = 2 x 1000 = 2000

இந்த அடிப்படையில், எண்ணின் மொத்த மதிப்பு, இரண்டாயிரத்து எண்ணூற்று எழுபத்து ஐந்து.

இந்த எண்முறை நாட்டுக்கு நாடு, கலாசாரத்துக்குக் கலாசாரம் மாறுபடும்.   தமிழ்  எண் முறையில், இந்த எண்களை எப்படி எழுதுவார்கள்?

Evolution-of-number-system

தமிழ் எண் முறையில் 0 கிடையாது.

மாயர்களும் கணித அறிவில் மாபெரும் முன்னேற்றம் கண்டிருந்தார்கள். ஆனால் அவர்களுடைய எண்முறை வித்தியாசமானது. இந்து அரபிய எண்களில், தசாம்ச முறையில், 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 என்ற பத்து குறியீடுகள் உள்ளன.

மாயர்களின் எண்முறையிலும் பத்து எண்கள் உள்ளன. தமிழ் போலவே தனிப்பட்ட எண் முறையும் உண்டு. மேலே பார்த்ததுபோல், தமிழில் 9 குறியீடுகள் உள்ளன. ஆனால், மாயர்களுக்கு மூன்று குறியீடுகள்தாம். அவை :

015
இந்தக் குறியீடுகளை அடிப்படையாக வைத்து மாயர்கள் எண்களை எப்படி எழுதினார்கள்?

இப்படித்தான்.

Maya_numbers_0-20
எப்படி கூட்டல் கணக்குப் போட்டார்கள்?

.  + .. = …
. . +  ———- = ..    —————

மாயர்களின் எண் முறை தசாம்ச முறை அல்ல. அது Vigesimal System என்று அழைக்கப்படுகிறது. அது என்ன புது முறை?

உதாரணமாக மாயர்களின் கீழ்க்கண்ட எண்ணை எடுத்துக் கொள்ளுங்கள்; .

..               ..  .            ..     

_____     _______
முன் போல் வலமிருந்து இடமாக எண்ணுவோம்.

முதல் இடத்தில் 5. இதன் மதிப்பு 5.

இரண்டாம் இடத்தில் 7. இதன் மதிப்பு 7 x 20 = 140.

மூன்றாம் இடத்தில் 8. இதன் மதிப்பு 8 x 202  = 8 x 400 = 3200

நான்காம் இடத்தில் 2. இதன் மதிப்பு 2 x 203  = 2 x 8000 = 16000

எண்ணின் மொத்த மதிப்பு, 16000 + 3200 + 140 + 5 = 19345

மாயர்களின் எண் முறையில் கூட்டல், கழித்தல் செய்யலாம். பெருக்கல், வகுத்தல் செய்ய முடியுமா, செய்தார்களா? நமக்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

மாயர்களின் இந்த எண்முறை ஏன் உலக அளவில் வெற்றி காணவில்லை?
எல்லா நாடுகளும் தசாம்ச முறையைப் பின்பற்றுவதற்கு என்ன காரணம்?

ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் ஒரு காரணம் ஏற்றுக் கொள்ளும்படியாக இருக்கிறது. நம் கைகளில் பத்து விரல்கள் இருக்கின்றன. நாம் சின்னக் குழந்தைகளாக இருக்கும்போது, அப்பா அம்மாவும், ஆசிரியர்களும், எப்படிக் கூட்டல் கணக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள்?

இரண்டும் மூன்றும் கூட்டினால் விடை என்ன? இதை நாம் எப்படிச் சிறுவயதில் கற்றுக்கொண்டோம்? கை விரல்களைக் கொண்டுதான் அல்லவா?

தசாம்ச முறையை உலகம் ஏற்றது சரி. அது மாயர்கள் முறையைவிட எளிதானதாகவும் இருக்கலாம். ஆனால், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்,  விஜெஸிமல் முறை கண்டுபிடித்த மாயர்களின் கணிதத் திறமையை, அறிவுக் கூர்மையை, இந்தக் காரணங்கள் கொஞ்சம்கூடக் குறைத்துவிட முடியாது.

காரணம்? இந்தக் கணிதத் திறமையை அடிப்படையாக வைத்து அவர்கள் வானியல் ஆராய்ச்சிகள் நடத்தினார்கள், நாள்காட்டிகள் உருவாக்கினார்கள். மனித சமுதாய முன்னேற்றத்தில் மாபெரும் சாதனைகள் அல்லவா இவை?

வானியல் சாதனைகள்  

நாம் வாழும் உலகம் தனியான அமைப்பு அல்ல, மாபெரும் பிரபஞ்சத்தில் ஒரு பகுதி என்பது மாயர்களின் நம்பிக்கை. அவர்களுடைய இதிகாசக் கதைகள் இந்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கின்றன.

உலகத்தை முமு முதற் கடவுள் படைத்தார். அந்த உலகத்துக்கு மூன்று பகுதிகள். பூமி. அதற்கு மேல் 13 வகை உலகங்கள் கொண்ட சொர்க்கம். வானத்தின் நான்கு ஓரங்களிலும் நான்கு கடவுள்கள் வானத்தைப் பத்திரமாகத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பூமிக்குக்  கீழே 9 வகை உலகங்கள் கொண்ட பாதாள உலகம். சொர்க்கம், பூமி, பாதாளம் ஆகிய மூன்று வகை உலகங்களுக்கும் தனித்தனி ராஜாக்கள்.

தான் படைத்த உலகம் என்றும் செழிப்பாக இருப்பதற்காகக் கடவுள் உலக மரம் (World Tree) நட்டார்.  இதன் கிளைகள் சொர்க்கத்தில் உள்ளன. வேர்கள் பாதாளத்தில். இந்த மரம்தான் மூன்று உலகங்களையும் தாங்கிப் பிடிக்கிறது என்பது மாயர்களின் நம்பிக்கை.

இங்கே உலக மரம் என்று குறிப்பிடப்படுவது விஞ்ஞானம் விளக்கும் பால்வழி விண்கூட்டம்தான் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்தப் பால்வழி விண்கூட்டத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன.

ரேடியோ மற்றும் ரேடார் வானியல் குறித்தெல்லாம் கி. பி. 1945 க்குப் பிறகுதான் விஞ்ஞான உலகம் தெரிந்துகொண்டது. அதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், மாயர்கள் எப்படிப் பால்வழி விண்கூட்டம் பற்றித் தெரிந்து வைத்திருந்தார்கள்?  விடை தெரியாத ஆச்சரியம் இது!

ஓரியன் விண்தொகுப்பு (Orion Constellation) என்பது மிகப் பிரகாசமான நட்சத்திர மண்டலங்களுள் ஒன்று. தமிழில் ஓரியனைப் பிரஜாபதி என்று சொல்கிறார்கள். இது வேடன் வடிவம் கொண்டதாக வர்ணிக்கப்படுகிறது. அவன் கையில்  வாள்போல் ஒரு பகுதி தெரியும். இந்தப் பகுதியின் பெயர் ஓரியன் நெபுலா.

orion

பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான், ஓரியன் நெபுலா வானியல் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் புகைப்படமே 1880ல் தான் முதன் முதலாக எடுக்கப்பட்டது.

ஆனால், மாய நாகரிகப் பழங்கதைகளில் ஓரியன் விண்தொகுப்பு, நெபுலா ஆகியவற்றின் வர்ணனைகள் காணப்படுகின்றன. இவை புகைப்படம் காட்டும் தோற்றங்களோடு ஒத்தும் போகின்றன. விடை இல்லாத இன்னொரு ஆச்சரியம்!

உலகத்தை படைத்த முழு முதற் கடவுளான கேட்ஸால்கோயோட்டெல் நினைவாகக் கட்டப்பட்ட பிரமிட் சீசென் யீட்ஸா (Chichen Itza ) என்ற நகரத்தில் இருக்கிறது. இந்த பிரமிட் கி. மு. ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

மார்ச் 21, செப்டம்பர் 23 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும், இந்தப் பிரமிடின் நிழல் இறக்கைகள் கொண்ட பாம்பு வடிவமாக, ஆமாம், கேட்ஸால்கோயாட்டெல் வடிவமாக விழுகிறது. பிரமிட் படிகளில் சூரிய வெளிச்சம் பளீரென்று அடிக்கிறது. பல நூற்றாண்டுகளாக, உலகின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் அந்த இரண்டு நாட்களில் தோன்றும் அதிசயத்தைப் பார்க்க வருகிறார்கள்.

மார்ச் 21, செப்டம்பர் 23 ஆகிய இந்த நாள்களின் பின்னால் விஞ்ஞானப் பின்புலம் உள்ளது. இவை சம பங்கு நாட்கள் (Equinox)  அதாவது ஒரு வருடத்தில், இந்த இரண்டு நாட்களில் மட்டும்தான், பகல் பொழுதும் இரவுப் பொழுதும் சம அளவு நேரங்களில் அமையும். அதாவது, பன்னிரண்டு மணி நேரம் சூரியன் தெரிகிற பகல்.  பன்னிரண்டு மணி நேரம் சூரியன் மறைந்திருக்கும் இரவு.

சூரியன் மாயர்களின் முக்கியக் கடவுள். தங்கள் கோவில்களில் சூரிய வெளிச்சம் விழுவது நல்ல சகுனம் என்று அவர்கள் நினைத்தார்கள். கேட்ஸால்கோயாட்டெல் நினைவுச் சின்னத்தின் படிகளில், இந்த இரண்டு சம பங்கு நாட்களில்  மட்டும் வெயில் விழும். மற்ற நாட்களில் வெயில் விழாது.

இப்படி வருமாறு எப்படி வடிவமைத்தார்கள், கட்டட நிழல் கேட்ஸால்கோயாட்டெல் வடிவாக எப்படி வருகிறது, சம பங்கு நாட்கள் பற்றி மாயர்களுக்கு எப்படித் தெரியும்?  விடை இல்லாப் பல ஆச்சரியங்கள்!

சூரியன் மட்டுமல்ல, சந்திரனின் இயக்கத்தையும் அவர்கள் கூர்ந்து கவனித்தார்கள், பதிவு செய்தார்கள். அந்தப் பதிவுகள் சில ஆராய்ச்சிகளில் கிடைத்திருக்கின்றன.
இந்தக் கண்டுபிடிப்புகளுக்காக மாயர்கள் வான் ஆய்வுக்கூடங்களை ஏற்படுத்தியிருந்தார்கள். இங்கே தொலைநோக்கிகள்  போன்ற கருவிகள் இருந்ததாகச் சான்றுகள் சொல்கின்றன.

காலண்டர்கள் என்று நாம் சொல்லும் நாள்காட்டிகள் காலத்தைப் பகுத்து ஒழுங்குபடுத்தி அமைக்கும் முறை. நாட்கள், மாதங்கள், வருடங்கள் எனக் காலம் படிப்படியாக அதிகரிக்கும் வகையில் பிரிக்கப்படுகிறது. காலண்டர்கள் சூரிய, சந்திரச் சுழற்சிகளின் அடிப்படையில் வடிவமைக்கப்படுகின்றன.

சூரிய சந்திர இயக்கங்கள் தெரிந்தவர்கள், கணிதத்தில் வல்லவர்கள், வான் ஆய்வுக்கூடங்கள் கொண்டவர்கள் என்ற பல திறமைகளையும் ஒருங்கிணைத்த மாயர்கள் தங்கள் காலண்டர்களை உருவாக்கினார்கள்.

நாம் கடைப்பிடிக்கும் கிரிகோரியன் காலண்டர் வருடத்தில் 365 நாட்களைக் கொண்டது. மாயர்களின் காலண்டர்களில் இரண்டு வகை காலண்டர்கள் முக்கியமானவை.

ஒன்று 365 நாட்கள் கொண்டது. வருடத்துக்கு 18 மாதங்கள். மாதத்துக்கு 20 நாட்கள். இந்தக் காலண்டரை ஹாப் காலண்டர் (Haab) என்று அழைத்தார்கள். மாதம் 20 நாட்களாக, இந்தக் காலண்டரில் வருடத்துக்கு 360 நாட்கள் வரும். ஆனால், வானியல் முறைப்படி வருடத்துக்கு 365 நாட்கள் வேண்டும் என்று மாயர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள்.

காலண்டர் வகுத்த 360 போக எஞ்சிய ஐந்து நாட்கள் அதிர்ஷ்டம் இல்லாத நாட்கள் என்று நம்பினார்கள். அந்த நாட்களில், எந்த நல்ல காரியங்களும் செய்யமாட்டார்கள். இந்தக் காலண்டர் சாமானியர்களின் உபயோகத்துக்காக உருவாக்கப்பட்டது. கி. மு. 550 – இல் இந்தக் காலண்டர் முறை நடைமுறைக்கு வந்திருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அடுத்த வகை காலண்டர் வருடம் 260 நாட்கள் கொண்டது. ஒவ்வொரு வருடத்துக்கும் 13 மாதங்கள், மாதங்களுக்கு 20 நாட்கள். இந்தக் காலண்டருக்கு  இஸால்கின் (Isalkin) என்று பெயரிட்டார்கள். இது புனிதக் காலண்டர் என அழைக்கப்பட்டது.

நாம் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என கிரகங்களின் பெயரில் கிழமைகளுக்குப் பெயர் வைத்திருக்கிறோம். மாயர்கள் இதே முறையில், தங்களுடைய மாதத்தின் இருபது நாட்களுக்கும் ஒவ்வொரு கடவுள் பெயர் சூட்டினார்கள்.

ஹாப், இஸால்கின் ஆகிய இரண்டு காலண்டர்களும் 52 வருடங்களுக்கு ஒரு முறை இணையும். இந்த இணைப்பு நடக்கும்போது, அதாவது 52 வருடங்களுக்கு ஒரு முறை உலகில் மாபெரும் மாற்றங்கள் ஏற்படும் என்று மாயர்கள் நம்பினார்கள்.

மாயன் காலண்டர் 5126 வருடக் கால அளவு கொண்டது. 2012ம் வருடம் டிசம்பர் 21 அன்று இது முடிந்துவிட்டது. உலகம் அன்றோடு முடியப்போகிறது என்பதற்கான எச்சரிக்கை மணி என்று பலர் நினைத்தார்கள், பயந்தார்கள். ஆனால், அந்த பயங்கள் அர்த்தமற்றவை என்று காலம் நிரூபித்துவிட்டது. ஒரு வேளை, மாயன் காலண்டரின் அர்த்தம் வித்தியாசமானதோ, நாம் புரிந்துகொள்ளமுடியாத ஏதோ ஒரு  தாத்பரியம் அதற்குள் மறைந்திருக்கிறதோ?

0