வலி மிகும் இடங்கள், வலி மிகா இடங்கள்

akatsuki-leader-pain-pein-3023592-800-600அம்மா, ஆடு, இலக்கணம் / அத்தியாயம் 18

சின்ன குதிரை, சின்னக் குதிரை: இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

நடுவில் வருகிற ஒரு ‘க்’தான் வித்தியாசம். ஆனால் அதனால் இவற்றின் பொருளே மாறிவிடுகிறது:

சின்ன குதிரை என்றால், சின்ன + குதிரை, சிறிய, small குதிரை

சின்னக் குதிரை என்றால், சின்னம் + குதிரை, அதாவது, ஓர் அரசியல் கட்சியின் தேர்தல் சின்னமாகவோ, ஒரு நிறுவனத்தின் வணிக இலச்சினை(logo)வாகவோ பயன்படுத்தப்படும் குதிரையை இப்படி அழைக்கலாம்

இதேபோல் இன்னும் சில உதாரணங்கள், இவற்றில் வரும் இரு சொற்களிடையே அர்த்தத்தில் என்ன மாற்றங்கள் வரக்கூடும், ஏன் சிலவற்றில் ‘க்’, ‘ச்’, ‘ப்’, ‘த்’ வருகிறது, சிலவற்றில் வரவில்லை என்று கொஞ்சம் யோசியுங்கள் (இவற்றுக்கான விளக்கங்களை இதே அத்தியாயத்தின் பின் பகுதியில் பார்ப்போம்).

* தங்க குடிசை Vs தங்கக் குடிசை
* வேர்ச் சொல் Vs வேர் சொல்
* ஊக்கப் பரிசு Vs ஊக்க பரிசு
* தந்தத் தட்டு Vs தந்த தட்டு

‘க்’, ‘ச்’, ‘ப்’, ‘த்’ போன்ற எழுத்துகளைச் சேர்ப்பது அல்லது நீக்குவது இப்படி ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடுமா என்றால், ஆமாம். கொஞ்சம் கவனமாகவே யோசித்து எழுதவேண்டிய தமிழ்ப் பகுதி இது.

நல்லவேளையாக, இந்த விஷயத்தைத் தமிழ் இலக்கண நூல்கள் மிக விரிவாகப் பேசியிருக்கின்றன. மேற்கண்ட நான்கு எழுத்துகளை எப்போது சேர்க்கவேண்டும், எப்போது சேர்க்கக்கூடாது என்பதுபற்றிய தெளிவான நெறிமுறைகள் உள்ளன. அடுத்த சில அத்தியாயங்களில் இவற்றை விளக்கமாகப் பார்க்கவிருக்கிறோம்.

இலக்கணப் புத்தகங்களில் இந்தப் பகுதியை ‘வலி மிகும் இடங்கள், வலி மிகா இடங்கள்’ என்று அழைப்பார்கள். அதாவது, ‘க்’, ‘ச்’, ‘த்’, ‘ப்’ ஆகிய நான்கு வல்லின எழுத்துகள் எங்கே வரவேண்டும் (வலி மிகும்), எங்கே வரக்கூடாது (வலி மிகாது) என்று விவரிக்கும் நெறிமுறைகள் இவை.

உதாரணமாக, ‘கையைப் பிடித்தான்’ என்று எழுதும்போது, இரண்டாவது சொல்லின் தொடக்கத்தில் ‘பி’ என்ற பகர வர்க்க எழுத்து வருகிறது. ஆகவே, முதல் சொல்லின் நிறைவில் அதே குடும்பத்தைச் சேர்ந்த ‘ப்’ என்ற வல்லின மெய் தோன்றுகிறது, இதைதான் ‘வலி மிகும்’ என்று அழைக்கிறோம்.

இன்னோர் உதாரணம், ‘கையில் புறா’. இங்கே இரண்டாவது சொல்லின் தொடக்கத்தில் ‘பு’ என்ற பகர வர்க்க எழுத்து வந்திருந்தாலும், முதல் சொல்லின் நிறைவில் அதே குடும்பத்தைச் சேர்ந்த ‘ப்’ என்ற வல்லின மெய் தோன்றவில்லை. ‘கையில்ப் புறா’ என்று நாம் எழுதுவதில்லை. இதைதான் ‘வலி மிகாது’ என்கிறோம்.

எப்போது வலி மிகும், எப்போது மிகாது என்று படிப்படியாகப் பார்ப்போம். அதற்குமுன்னால் ஒரு சந்தேகம், வல்லினம் என்றால் மொத்தம் ஆறு எழுத்துகளாச்சே, ஆனால் இங்கே நான்குதானே வருகிறது. மீதமுள்ள இரண்டு?

‘ட்’, ‘ற்’ ஆகிய வல்லின எழுத்துகள் இங்கே விடுபட்டிருப்பது உண்மைதான். ஆனால், அவைபற்றி நாம் கவலைப்படவேண்டியதில்லை. ஏனெனில், ‘ட’, ‘ற’ ஆகிய எழுத்துகளோ அவற்றின் குடும்பத்தைச் சேர்ந்த டா, றா, டி, றி போன்ற எழுத்துகளோ சொல்லின் தொடக்கத்தில் வராது. ஆகவே, ‘ட்’, ‘ற்’ என்ற வல்லின எழுத்துகள் முந்தைய சொல்லின் இறுதியில் வருவதற்கு (அதாவது வலி மிக) வாய்ப்பே இல்லை!

முதலில், வேற்றுமை உருபுகள் ஒவ்வொன்றிலும் வலி மிகுமா, மிகாதா என்பதை உதாரணங்களுடன் பார்த்துவிடலாம்.

* முதல் வேற்றுமை உருபு: பெயர் : வலி மிகாது

உதாரணம்: கண்ணன் பிடித்தான்

* இரண்டாம் வேற்றுமை உருபு: ஐ : வலி மிகும்

உதாரணம்: கண்ணனைப் பிடித்தேன்

* மூன்றாம் வேற்றுமை உருபு: ஆல் : வலி மிகாது

உதாரணம்: கண்ணனால் பிடிக்கப்பட்டேன்

* நான்காம் வேற்றுமை உருபு: கு : வலி மிகும்

உதாரணம்: கண்ணனுக்குப் பிடித்தது

* ஐந்தாம் வேற்றுமை உருபு: இன் : வலி மிகாது

உதாரணம்: கண்ணனின் சிறந்தது

* ஆறாம் வேற்றுமை உருபு: அது : வலி மிகாது

உதாரணம்: கண்ணனது சிந்தனை

* ஏழாம் வேற்றுமை உருபு: கண் : வலி மிகாது

உதாரணம்: கண்ணனின்கண் சென்றேன்

* எட்டாம் வேற்றுமை உருபு: விளி : வலி மிகாது

உதாரணம்: கண்ணா, பாடு

‘ஹையா, பாடம் ஓவர்’ என்று கிளம்பிவிடாதீர்கள். இதில் இன்னொரு சிக்கல் பாக்கியிருக்கிறது.

வேற்றுமை உருபுகள் நேரடியாக அன்றி, மறைமுகமாகவும் வரும் (வேற்றுமைத் தொகை) என்று பார்த்தோம். உதாரணமாக, ‘தண்ணீர் கொட்டினான்’ என்றால், அதன் அர்த்தம், ‘தண்ணீரைக் கொட்டினான்’ என்பதுதான். இங்கே ‘ஐ’ என்ற இரண்டாம் வேற்றுமை உருபு ஒளிந்திருக்கிறது.

இப்படி வேற்றுமை உருபுகள் நேரடியாக வராமல் ஒளிந்து வந்தால், வலி மிகுமா? வலி மிகாதா? அதற்கான நெறிமுறைகள் இவை:

* முதல் வேற்றுமைத் தொகை: பெயர் : மறைந்து வராது

* இரண்டாம் வேற்றுமைத் தொகை: ஐ : மறைந்து வந்தால் வலி மிகாது

* மூன்றாம் வேற்றுமைத் தொகை: ஆல் : மறைந்து வந்தால் வலி மிகாது

* நான்காம் வேற்றுமைத் தொகை: கு : மறைந்து வந்தால் வலி மிகாது

* ஐந்தாம் வேற்றுமைத் தொகை: இன் : மறைந்து வந்தால் வலி மிகாது

* ஆறாம் வேற்றுமைத் தொகை: அது : மறைந்து வந்தால் வலி மிகாது

* ஏழாம் வேற்றுமைத் தொகை: கண் : மறைந்து வந்தால் வலி மிகாது

* எட்டாம் வேற்றுமைத் தொகை: விளி : மறைந்து வராது

என்ன? தலை சுற்ற ஆரம்பித்துவிட்டதா? இது அத்துணை சிரமம் இல்லை. 8 + 8 = 16 விஷயங்களைப் படித்துச் சிரமப்படாமல், எளிதில் நினைவில் வைத்துக்கொள்வதற்கான சூத்திரம் இங்கே:

* வேற்றுமை உருபுகள் நேரடியாக வந்தால்: 2(ஐ), 4(கு) ஆகியவற்றில்மட்டும் வலி மிகும் (‘ஐஸ்க்ரீமுக்கு ஆசைப்பட்டுப் பல் வலி வந்தது’ என்று மனப்பாடம் செய்துகொள்ளுங்கள்!)
* வேற்றுமை உருபுகள் ஒளிந்து வந்தால் (வேற்றுமைத் தொகை): எப்போதும் வலி மிகாது (”கையில் தொகை (ரூபாய், டாலர், துட்டு, மனி) இருந்தால் வாழ்க்கையில் வலியே இருக்காது” என்று மனப்பாடம் செய்துகொள்ளுங்கள்!)

இப்போது, ஓர் எளிய பயிற்சி. இந்த வாக்கியங்களில் எங்கெல்லாம் வலி மிகும் எங்கெல்லாம் வலி மிகாது என்று யோசித்துத் திருத்தி எழுதுங்கள்:

* மீரா பாடினாள்
* மீராவின் பாடலை படித்தேன்
* மீராவுக்குப் பிடித்த தெய்வம் கண்ணன்
* ‘கண்ணா, காப்பாற்று” என்று பாடினாள் மீரா
* கண்ணனை கும்பிட்டாள்
* கண்ணனால் காப்பாற்றப்பட்டாள்
* மீராவது கண்ணன் இனிமையானவன்
* மீராவின்கண் பக்தி நிறைந்திருந்தது
* பக்தி இலக்கியத்துக்கு பல சிறந்த பாடல்களை தந்தவள் மீரா

வலி மிகும், வலி மிகா இலக்கணத்தில் வேற்றுமை உருபுகள், வேற்றுமைத் தொகைகள் அடிப்படையிலான இந்தப் பாடம் ஓர் ஆரம்பம்தான். இன்னும் பல விஷயங்கள் உள்ளன. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

அ, இ என்ற சுட்டெழுத்துகளைப்பற்றியும், ‘எ’ என்ற வினா எழுத்தைப்பற்றியும் ஏற்கெனவே பேசியிருக்கிறோம். இவையே ‘அந்த’, ‘இந்த’, ‘எந்த’ என்றும் நீளும்.

இந்தச் சொற்கள் அனைத்துக்குப்பிறகும் க, ச, த, ப என்ற வல்லின வர்க்கத்தைச் சேர்ந்த எழுத்துகள் வருமானால், அங்கே வலி மிகும். உதாரணமாக:

அச்சிறுவன்
இச்சிறுமி
அந்தச் சிறுவன்
இந்தச் சிறுமி
எந்தச் சிறுவன்?
எந்தச் சிறுமி?

அடுத்து, பெயரெச்சம். இதைப்பற்றியும் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம், ஒரு சொல்லுக்குப் பின்னால் பெயர்ச்சொல் வரும்படி எஞ்சி நிற்பது பெயரெச்சம். உதாரணமாக, ‘அடுத்த மாணவன்’, ‘ஓடிய குதிரை’…

பெயரெச்சங்களுக்கு எப்போதும் வலி மிகாது. ‘ஓடிய குதிரை’தான், ‘ஓடியக் குதிரை’ என்று எழுதக்கூடாது. மேலும் சில உதாரணங்கள்:

* படித்த பாடம்
* குதித்த தவளை
* சிறந்த கணவன்
* இனிக்கும் சாதம்
* தைத்த சட்டை

‘இனிக்கும் சாதம்’ என்று எழுதினால் அங்கே வலி மிகாது. ஆனால் ‘இனிப்புச் சாதம்’ என்று எழுதினால் வலி மிகும். இது ஏன் என்று ஊகிக்கமுடிகிறதா?

முதல் வாக்கியத்தில் ‘இனிக்கும்’ என்பது பெயரெச்சம், ஏனெனில், ‘சாதம்’ என்ற இரண்டாவது சொல்லைச் சேர்க்காமல் அது நிறைவு பெறாது. ஆகவே, வலி மிகாது, ‘இனிக்கும் சாதம்’ என்று எழுத வேண்டும்.

அதையே ‘இனிப்பு’ என்று எழுதினால், அது தனித்து பொருளைத் தருகிறது, எஞ்சியுள்ள ‘சாதம்’ என்பது வேறு சொல். ஆகவே, பெயரெச்சத்துக்கான ‘வலி மிகாது’ என்ற சூத்திரம் இங்கே பொருந்தாது. இது ஏன் ‘இனிப்புச் சாதம்’ என்று மாறுகிறது என்பதற்கான புணர்ச்சி இலக்கணத்தைப் பின்னர் தனியாகப் பேசுவோம்.

இதேபோல், மேலே நாம் பார்த்த ‘சின்ன குதிரை’ என்பதில் ‘சின்ன’ பெயரெச்சம், ஆகவே வலி மிகாது, அதையே ‘சின்னம் + குதிரை’ என்று மாற்றும்போது வலி மிகுந்து ‘சின்னக் குதிரை’ என்று மாறுகிறது. ‘தங்க குடிசை’ என்பதில் ‘தங்க’ பெயரெச்சம், வலி மிகாது, தங்கம் + குடிசை என்றால் வலி மிகும். ‘ஊக்க பரிசு’ என்பதில் ‘ஊக்க’ பெயரெச்சம், வலி மிகாது, ஊக்கம் + பரிசு என்றால் வலி மிகும்…

பெயரெச்சத்தில் இரு வகை உண்டு. நேர்ப் பெயரெச்சம் (ஓடிய குதிரை), எதிர்மறைப் பெயரெச்சம் (ஓடாத குதிரை). இந்த இரண்டிலும் வலி மிகாது.

ஆனால், ‘ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்’ என்ற ஒரு வகையில்மட்டும் வலி மிகும். உதாரணமாக:

* ஓடிய குதிரை : நேர்ப் பெயரெச்சம் : வலி மிகாது
* ஓடாத குதிரை : எதிர்மறைப் பெயரெச்சம் : வலி மிகாது
* ’ஓடாத’ என்பதில் ஈறு, அதாவது நிறைவு எழுத்து ‘த’ என்பதை நீக்கிவிட்டால், ‘ஓடாக் குதிரை’, இங்கே ‘க்’ வரும், அதாவது வலி மிகும்!

இதேபோல் ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வலி மிகும் உதாரணங்கள் இன்னும் சில: பொருந்தாக் காதல், அருந்தாத் தாகம், பறக்காக் கிளி, பாடாக் கவிதை (ஆனால் ‘பாடாவதிக் கவிதை’ என்பது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் அல்ல!)

அடுத்து, வினையெச்சம். இதுவும் பெயரெச்சத்தைப்போலவேதான். ஆனால் இரண்டாவதாக வருவது வினைச்சொல்லாக, ஒரு செயலாக இருக்கும். உதாரணமாக, ‘மெதுவாக ஓடினான்’, ‘பாடி ஆடினான்’…

வினையெச்சத்தில் எப்போதும் வலி மிகும். உதாரணமாக:

* என்னைப் பார்த்தான்
* உன்னைக் கேட்டான்
* அருமையாகப் பாடினான்
* அழகாகச் சிரித்தாள்
* வேகமாகத் தாவினான்

இந்த அத்தியாயத்தில் இவ்வளவு வலி போதும். மீதத்தை அடுத்த அத்தியாயத்தில் அனுபவிப்போம்!

அதற்குமுன்னால், இந்த அத்தியாயத்தில் நாம் பார்த்த முக்கியமான சொற்கள் / தலைப்புகள் / Concepts பட்டியலை இங்கே தருகிறேன், எதற்கு என்ன அர்த்தம், என்ன உதாரணம் என்று நினைவுபடுத்திப் பாருங்கள், ஏதேனும் புரியாவிட்டால், சிரமம் பார்க்காமல் மேலே சென்று ஒருமுறை படித்துவிடுங்கள்.

* இரண்டாம் சொல்லின் முதல் எழுத்து வல்லின வர்க்கமாக இருந்தால், முதல் சொல்லின் நிறைவில் வலி மிகலாம், அல்லது மிகாமலும் இருக்கலாம்
* வல்லினத்தில் க், ச், த், ப் சில நேரங்களில் மிகும், ட், ற் எப்போதும் மிகாது
* இரண்டாம் (ஐ) வேற்றுமை உருபு, நான்காம் வேற்றுமை உருபு (கு) ஆகியவற்றில் வலி மிகும், மற்றவற்றில் மிகாது
* வேற்றுமை உருபுகள் மறைந்து வந்தால் (வேற்றுமைத் தொகை) வலி மிகாது
* அ, இ, எ, அந்த, இந்த, எந்த ஆகியவற்றில் வலி மிகும்
* பெயரெச்சத்தில் வலி மிகாது (நேர், எதிர்)
* ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வலி மிகும்
* வினையெச்சத்தில் வலி மிகும்

0

வேற்றுமை உருபுகள்

passive-vs-active-voice2அம்மா, ஆடு, இலக்கணம் / அத்தியாயம் 17

பள்ளியில் இலக்கணம் படிக்கும்போது, செய்வினை, செயப்பாட்டுவினை என்று படித்திருப்போம். அல்லது, ஆங்கிலத்தில் Active Voice, Passive Voice படித்திருப்போம். ஒரு வகை வாக்கியத்தை இன்னொரு வகையாக மாற்று என்று பரீட்சையில் கேள்வி கேட்பார்கள்.

‘நான் நடனம் ஆடினேன்’ என்றால் அது Active Voice, செய்வினை வாக்கியம். காரணம், நான் ஆடுகிற லட்சணத்துக்கு அந்த நடனத்தைப் பார்ப்பவர்கள் செய்வினை வைத்தாற்போல் பேஸ்த் அடித்துப் போய்விடுவார்கள்.

அதே வாக்கியத்தைக் கொஞ்சம் மாற்றி ‘நடனம் என்னால் ஆடப்பட்டது’ என்றால் அது Passive  Voice, செயப்பாட்டுவினை வாக்கியம். இதில் ‘ஆல்’ என்ற வேற்றுமை உருபு வந்திருப்பதைக் கவனியுங்கள். இது இவரால் “செய்யப்பட்டது” என்று சொல்வதால்தான் இதன் பெயர் “செயப்பாட்டு”வினை என்று ஆகிறது.

சென்ற அத்தியாயத்தில் ‘ஐ’ என்பது இரண்டாம் வேற்றுமை உருபு என்று பார்த்தோம், இது ‘யாரை’ அல்லது ‘எதை’ என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லும்.

அதேபோல், ‘ஆல்’ என்பது மூன்றாம் வேற்றுமை உருபு. இது ‘யாரால்’ அல்லது ‘எதனால்’ என்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்லும்.

உதாரணமாக, ‘பாட்டு பாடப்பட்டது’ என்று ஒரு வாக்கியம். ‘யாரால் பாடப்பட்டது?’ என்று கேள்வி கேட்டால், ‘ஷ்ரேயா கோஷலால் பாடப்பட்டது’ என்று பதில் வரும்.

ஷ்ரேயா கோஷல் என்பது பாடியவரின் பெயர், அதோடு ‘ஆல்’ சேர்க்கும்போது, மூன்றாம் வேற்றுமை உருபு வருகிறது. பாடலைப் பாடியவர் அவர் என்கிற பொருள் இணைப்பு ஏற்படுகிறது.

அஃறிணைக்கும் மூன்றாம் வேற்றுமை உருபு உண்டு. உதாரணமாக, பால் குடிக்கப்பட்டது… எதனால் குடிக்கப்பட்டது? பூனையால் குடிக்கப்பட்டது!

இப்போது, இந்த வாக்கியத்தைக் கொஞ்சம் வேறுவிதமாக மாற்றுவோம். பால் வேண்டாம், காபியை எடுத்துக்கொள்வோம்!

ஒரு கோஷ்டி பெண் பார்க்க வருகிறது. மாப்பிள்ளை அசடு வழிந்துகொண்டு உட்கார்ந்திருக்கிறார். அலங்காரங்களோடு தயாராகும் பெண் கையில் காபி தம்ளரைக் கொடுத்து, ‘போய்க் கொடுத்துட்டு வா’ என்கிறார் அவரது தாயார்.

‘யாருக்குக் கொடுக்கறது?’

‘இதென்னடீ கேள்வி? மாப்பிள்ளைக்குதான்!’

இங்கே ‘யாருக்கு?’ என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு ‘கு’ என்ற நான்காம் வேற்றுமை உருபைப் பயன்படுத்திப் பதில் சொல்லப்பட்டிருக்கிறது.

வழக்கம்போல், இதில் அஃறிணையும் உண்டு. உதாரணமாக, மாட்டுக்குத் தீனி போட்டேன், மாப்பிள்ளைக்குக் காபி கொடுத்தேன் (குறிப்பு: இரண்டு வாக்கியங்களுக்கும் தொடர்பில்லை!)

இதுவரை வந்த நான்கு வேற்றுமை உருபுகளும் நாம் இன்றுவரை பயன்படுத்துகிறவை. ஆகவே, அவற்றைப் புரிந்துகொள்வது சிரமமில்லை.

அடுத்து வரப்போகும் மூன்று வேற்றுமை உருபுகள் கொஞ்சம் பழைய வாடை அடிக்கும். ஆனாலும் பயப்படவேண்டாம், அவற்றைத் தூசுதட்டி வேறுவிதமாக இன்னும் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம்.

ஐந்தாம் வேற்றுமை உருபு, ‘இன்’, இது ஒப்பீட்டுக்காகப் பயன்படுகிறது.

உதாரணமாக, ‘சச்சினின் சிறந்த கேப்டன் தோனி.’

இந்த வாக்கியத்தைப் படித்தவுடன் உங்களுக்கு என்ன அர்த்தம் தோன்றுகிறது? சச்சின் டெண்டுல்கர் பல கேப்டன்களுக்குக் கீழே விளையாடியிருக்கிறார். அவர்களில் தோனிதான் மிகச் சிறந்தவர். அதாவது, “சச்சினின்” என்ற வார்த்தையை நாம் “சச்சினுடைய” என்று புரிந்துகொள்கிறோம்.

ஆனால், உண்மையான அர்த்தம் அதுவல்ல, ‘இன்’ என்ற வேற்றுமை உருபின் இன்றைய வடிவம், ‘ஐவிட’ என்பது. இதே வாக்கியத்தை இப்படி மாற்றி எழுதிப் பாருங்கள்: ‘சச்சினைவிடச் சிறந்த கேப்டன் தோனி.’

இப்போது, நாம் ஆரம்பத்தில் பார்த்த அர்த்தம் முற்றிலும் மாறிவிட்டதல்லவா? இன்னோர் உதாரணம், ”பெப்ஸியின் சிறந்தது நீர்மோர்” என்ற வாக்கியம், “ஐவிட” என்ற நவீன வேற்றுமை உருபைச் சேர்த்துக்கொண்டு “பெப்ஸியைவிடச் சிறந்தது நீர்மோர்” என்று மாறும்.

ஆக, ஐந்தாம் வேற்றுமை உருபு இப்போது ‘இன்’ என்ற அதே பழைய வடிவத்தில் புழக்கத்தில் இல்லை. அதற்குப் பதிலாக ‘ஐவிட’ என்ற புது வேற்றுமை உருபை நாம் உருவாக்கிக்கொண்டுவிட்டோம்.

இதனால், ‘இன்’ சேர்த்து எழுதப்படும் ஒப்பீட்டு வாக்கியங்கள் கொஞ்சம் போரடிக்கும், அல்லது அர்த்தமே மாறிவிடும். காதலியிடம் ‘நஸ்ரியாவின் அழகி நீ’ என்றால் உதைதான் விழும்.

அடுத்து வருகிற வேற்றுமை உருபு, ‘அது’. அஃறிணையைச் சுட்டிக்காட்டப் பயன்படுகிற ‘அது’ அல்ல, அஜீத்குமார் அடித்தொண்டையில் அலறுகிற ‘அத்த்த்து’வும் அல்ல, இது வேறு.

மேஜைமேலே ஒரு பேனா இருக்கிறது. யாருடைய பேனா? என்னுடைய பேனா (தன்மை), அல்லது உங்களுடைய பேனா (முன்னிலை), அல்லது சரவணனுடைய பேனா (படர்க்கை).

இப்படி நாம் பயன்படுத்துகிற ‘உடைய’ என்ற சொல்லின் பழைய வடிவம்தான் ‘அது’, ஆறாம் வேற்றுமை உருபு. உதாரணமாக: சரவணனது பேனா.

ஏழாம் வேற்றுமை உருபு, ‘கண்’. முகத்தில் உள்ள கண் அல்ல, ஒரு விஷயம் யாரிடம் இருக்கிறது என்பதைக் குறிப்பிடும் விஷயம் இது.

உதாரணமாக, ‘சரவணனின்கண் பேனா இருந்தது’ என்று ஒருவர் சொன்னால், இன்றைய தமிழில் ‘சரவணனிடம் பேனா இருந்தது’ என்று அர்த்தம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஆக, ‘கண்’ என்ற ஏழாம் வேற்றுமை உருபை நாம் ‘இடம்’ என்ற புதிய வடிவத்துக்கு மாற்றிக்கொண்டுவிட்டோம்.

நிறைவாக, எட்டாம் வேற்றுமை உருபு. இது ரொம்ப ஈஸி. விளி. அதாவது, ஒருவரைக் கூப்பிடுதல். உதாரணமாக, ‘சரவணா, பேனா எங்கே?’

ஏற்கெனவே முதல் வேற்றுமை உருபில் ஒரு பெயரைமட்டும் பார்த்தோம் (சரவணன்), இப்போது அந்தப் பெயரை விளியாக்கி அந்த நபரை அழைக்கிறோம் (சரவணா).

சில நேரங்களில் இவை இரண்டும் ஒன்றாகவே இருப்பதுண்டு. முக்கியமாகப் பெண் பெயர்களில். உதாரணமாக, ‘சிநேகா வந்தாள்’ என்றால் முதல் வேற்றுமை உருபு, ‘சிநேகா, வா’ என்றால் எட்டாம் வேற்றுமை உருபு.

இந்த வேற்றுமை உருபுகள் ஒரு வாக்கியத்துக்கு ஒன்றுதான் என்று எந்தக் கணக்கும் இல்லை. அவை கலந்தும் வரலாம். உதாரணமாக, ‘என்னைப் பார்த்து உன்னுடைய தம்பி இந்தக் கேள்வியைக் கேட்கலாமா?’, ‘என்னுடைய பேனாவை நீ பயன்படுத்தலாம்’, ‘கண்ணா, உனக்கு இன்னொரு லட்டு வேண்டுமா?’.

இப்போது, எட்டு வேற்றுமை உருபுகளையும் தொகுத்துப் பார்ப்போம்:

* முதல் வேற்றுமை உருபு : பெயர்மட்டும் : உதாரணமாக, சித்ரா பாடினார்

* இரண்டாம் வேற்றுமை உருபு : ”ஐ” : யாரை? எதை? : சித்ரா பாட்டைப் பாடினார்

* மூன்றாம் வேற்றுமை உருபு : ”ஆல்” : யாரால்? எதால்? : சித்ராவால் பாட்டு பாடப்பட்டது

* நான்காம் வேற்றுமை உருபு : ”கு” : யாருக்கு? எதற்கு? : சித்ராவுக்குப் பாட்டுப் பாடுவது ரொம்பப் பிடிக்கும்

* ஐந்தாம் வேற்றுமை உருபு : “இன்” : யாரைவிட? எதைவிட? : சித்ராவின் ஜானகி நன்றாகப் பாடுவார் (அல்லது, இன்றைய தமிழில்) சித்ராவைவிட ஜானகி நன்றாகப் பாடுவார் (ஒருவேளை நீங்கள் பாடகி சித்ராவின் ரசிகர் என்றால், இந்த வாக்கியத்தை மாற்றிப் படித்துக்கொள்ளவும்!)

* ஆறாம் வேற்றுமை உருபு : ”அது” : யாருடைய? எதனுடைய? : சித்ராவது பாடல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும் (அல்லது, இன்றைய தமிழில்) சித்ராவுடைய பாடல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்

* ஏழாம் வேற்றுமை உருபு : “கண்” : யாரிடம்? எதனிடம்? : சித்ராவின்கண் நல்ல பாட்டுத் திறமை உண்டு (அல்லது, இன்றைய தமிழில்) சித்ராவிடம் நல்ல பாட்டுத் திறமை உண்டு

* எட்டாம் வேற்றுமை உருபு : விளி / அழைத்தல் : சித்ரா, பாடு(ங்கள்)

சில நேரங்களில், வேற்றுமை உருபுகள் நேராக வராமல் ஒளிந்திருந்து விளையாடும். அதற்கு ‘வேற்றுமைத் தொகை’ என்று பெயர். அதாவது, வேற்றுமை உருபு தொக்கி நிற்கிறது, ஒளிந்துள்ளது.

உதாரணமாக: ‘என் பேனா’… இதில் ஏதேனும் வேற்றுமை உருபு உள்ளதா?

நேரடியாகப் பார்த்தால், இல்லை. ஆனால் உண்மையில் அது ‘என்னுடைய பேனா’ (அல்லது) ‘எனது பேனா’ என்று இருக்கவேண்டும். ஆறாம் வேற்றுமை உருபு ‘அது’ தொக்கி நிற்கிறது. ஆகவே, வேற்றுமைத் தொகை.

இன்னோர் உதாரணம், ‘தோசை தின்றான்’… இது ‘தோசையைத் தின்றான்’ என்று வரவேண்டும், ‘ஐ’ என்ற இரண்டாம் வேற்றுமை உருபு தொக்கி நிற்கிறது. ஆகவே, வேற்றுமைத் தொகை.

இப்போது, ஒரு சின்னப் பயிற்சி. சில சினிமாப் பாடல் வரிகளைக் கீழே தந்துள்ளேன். இவற்றில் எந்த வேற்றுமை உருபுகள் அல்லது வேற்றுமைத் தொகைகள் வருகின்றன என்று கண்டுபிடித்து எழுதுங்கள். (குறிப்புகள்: சில வேற்றுமை உருபுகள் மேலே பார்த்த அதே வடிவத்தில் இருக்காது, அல்லது ஒளிந்திருக்கும், ஆனால் சரியான கேள்விகளைக் கேட்டால் சரியான பதில் வந்துவிடும். ஒரே வாக்கியத்தில் இரண்டு அல்லது மூன்று வேற்றுமை உருபுகள்கூட இருக்கலாம். எல்லாவற்றையும் கண்டுபிடிக்கப் பாருங்கள்).

* கண்ணா, வருவாயா? மீரா கேட்கிறாள்

* கண்ணன் மனம் என்னவோ, கண்டு வா தென்றலே

* எனக்குப் பிடித்த பாடல், அது உனக்கும் பிடிக்குமே

* உன்னால் முடியும் தம்பி, தம்பி!

* என்னைத் தாலாட்ட வருவாளா?

* என்னோட லைலா, வர்றாளே ஸ்டைலா

* பாட்டாலே புத்தி சொன்னார்

* உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்

* மாமா, உன் பொண்ணைக் கொடு

* மாமாவுக்குக் குடுமா குடுமா, அறை ஒண்ணே ஒண்ணு

* இந்த மாமனோட மனசு மல்லிகப்பூ போலே பொன்னானது

* தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு

* தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான்

* பூவே, செம்பூவே, உன் வாசம் வரும்

‘பெயர், ஐஆல்குஇன்அதுகண், விளி’ என்கிற எளிய சூத்திரத்தை இன்னொருமுறை நினைவுபடுத்திக்கொள்வோம். அடுத்த அத்தியாயத்தில் இந்த வேற்றுமை உருபுகளை வைத்துச் சில புணர்ச்சி விதிகளைப் பார்ப்போம்.

அதற்குமுன்னால், இந்த அத்தியாயத்தில் நாம் பார்த்த முக்கியமான சொற்கள் / தலைப்புகள் / Concepts பட்டியலை இங்கே தருகிறேன், எதற்கு என்ன அர்த்தம், என்ன உதாரணம் என்று நினைவுபடுத்திப் பாருங்கள், ஏதேனும் புரியாவிட்டால், சிரமம் பார்க்காமல் மேலே சென்று ஒருமுறை படித்துவிடுங்கள்.

* மூன்றாம் வேற்றுமை உருபு : ஆல்
* நான்காம் வேற்றுமை உருபு : கு
* ஐந்தாம் வேற்றுமை உருபு : இன் (ஐவிட)
* ஆறாம் வேற்றுமை உருபு : அது (உடைய, இன்)
* ஏழாம் வேற்றுமை உருபு : கண் (இடம்)
* எட்டாம் வேற்றுமை உருபு : அழைத்தல்

0

எழுவாய் – பயனிலை – செயப்படுபொருள்

ilakஅம்மா, ஆடு, இலக்கணம் / அத்தியாயம் 16

ஒரு திருமணம். மாப்பிள்ளை பேர் முருகன், பெண் பெயர் வள்ளி. அவர்களுடைய திருமணத்தைப் பார்த்து மகிழ்ந்த பலர் இப்படி ரிப்போர்ட் எழுதுகிறார்கள்:

* முருகன் மாலையிட்டான்
* வள்ளி மாலையிட்டாள்
* முருகனுக்கு வள்ளி மாலையிட்டாள்
* முருகன் வள்ளிக்கு மாலையிட்டான்

இந்த வாக்கியங்கள் அனைத்திலும், சில பொதுவான அம்சங்களைப் பார்க்கிறோம்:

* முருகன்
* வள்ளி
* மாலை (அல்லது மாலையிடுதல்)

அதேசமயம், இவற்றை லேசாக மாற்றி அமைக்கும்போது, வெவ்வேறு அர்த்தங்கள் வருகின்றன. உதாரணமாக, ‘முருகன் மாலையிட்டான்’ என்று சொன்னால், முருகன் இன்னொருவருக்கு மாலையிட்டான் என்று பொருள். அதையே கொஞ்சம் திருப்பி ’முருகனுக்கு மாலையிட்டாள்’ என்று சொன்னால், இன்னொருவர் (அதாவது, வள்ளி) முருகன் கழுத்தில் மாலையிட்டதாகப் பொருள்.

இங்கே ‘கு’ அல்லது ‘க்கு’ என்ற சொல், முருகன், மாலை என்ற இரு சொற்களுக்கு நடுவே அமையும்போது அதன் அர்த்தம் அமைகிறது, அல்லது மாறுகிறது. இதேபோல் இன்னும் சில உதாரணங்கள்:

 • சரவணன் வென்றான் : சரவணனை வென்றான் : ‘ஐ’ என்ற சொல்லால் மாற்றம் ஏற்பட்டுள்ளது
 • சண்முகன் ஆப்பிள் சாப்பிட்டான் : சண்முகனால் ஆப்பிள் சாப்பிடப்பட்டது : ‘ஆல்’ என்ற சொல் சண்முகனையும் ஆப்பிளையும் இணைக்கிறது, ஆனால் அர்த்தத்தில் மாற்றம் இல்லை
 • கந்தன் கருணை : கந்தனின் கருணை : ‘இன்’ என்ற சொல், அர்த்தம் மாறவில்லை
 • கதிர்வேலன் கோயில் : கதிர்வேலனுடைய கோயில் : ‘உடைய’ என்ற சொல், அர்த்தம் மாறவில்லை

இப்படித் தமிழில் இருவேறு சொற்களுக்கு இடையே அமைந்து அவற்றினிடையே வேற்றுமை எப்படி ஏற்படுகிறது என்பதைத் தீர்மானிக்கும் சொற்களை ‘வேற்றுமை உருபு’கள் என்பார்கள். உதாரணமாக, மேலே நாம் பார்த்த ஐ, ஆல், கு, இன் போன்றவை.

வேற்றுமை உருபுகளில் மொத்தம் எட்டு வகைகள் உள்ளன. அவற்றின் பட்டியலைப் பார்க்குமுன், நாம் இன்னோர் அடிப்படை விஷயத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்: எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்.

ஒரு பழைய ஜோக். வகுப்பில் ஆசிரியர் இலக்கணப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். ஒரு பையன் கடைசி பெஞ்சில் உட்கார்ந்தபடி ராக்கெட் தயாரித்து பத்துத் திக்குகளிலும் அனுப்பிக்கொண்டிருந்தான்.

எரிச்சலான ஆசிரியர் அவன் தலையில் ஒரு குட்டு வைத்தார், ‘டேய் தம்பி, நீ எழுவாய், உன்னால் செயப்படுபொருள் இங்கே ஏதும் கிடையாது, உனக்கு நான் சொல்லிக்கொடுத்து ஏதும் பயனிலை, வெளியே போ!’ என்றார்.

எழுவாய் என்றால் எழுந்திரு, செயப்படுபொருள் என்றால் செய்யப்படுகின்ற பொருள், பயனிலை என்றால் பயன் இல்லை. இந்த மூன்று சொற்களின் மாற்று அர்த்தங்களை வைத்துச் சொல்லப்படும் வேடிக்கையான வாசகம் இது.

உண்மையில், இவற்றுக்கு இலக்கணரீதியில் என்ன பொருள்?

முதலில், “எழுவாய்”, இதற்குத் தோன்றுகின்ற / எழுகின்ற இடம் என்று பொருள். அதாவது, ஒரு வாக்கியத்தில் சொல்லப்படும் விஷயத்தைச் செய்தது யார்? (அல்லது எது?)

உதாரணமாக: முருகன் வள்ளிக்கு மாலையிட்டான் என்ற வாக்கியத்தில் மாலையிட்டது யார்? முருகன். அந்த ’அறு’முகன்தான் இங்கே ‘எழு’வாய். ஆங்கிலத்தில் இதனை “Subject” என்பார்கள். இது எப்போதும் ஒரு பெயர்ச்சொல்லாகவே இருக்கும்.

அடுத்து, ”பயனிலை”, ஒரு வாக்கியத்தின் பயனை, அதில் நிகழ்ந்த செயலைப் பூர்த்தி செய்கிற விஷயம் இது. அதாவது, எந்த விஷயம் செய்யப்பட்டது?

அதே “முருகன் வள்ளிக்கு மாலையிட்டான்” என்ற வாக்கியத்தில் எந்த விஷயம் செய்யப்பட்டது? மாலையிடுதல். அதுதான் இங்கே “பயனிலை”. ஆங்கிலத்தில் இதனை “Predicate” என்பார்கள். இது எப்போதும் ஒரு செயலாக, அதாவது வினைச்சொல்லாகவே இருக்கும்.

நிறைவாக, “செயப்படுபொருள்”. பெயரே தெளிவாக இருக்கிறது. செய்யப்பட்ட பொருள். பயனிலையில் சொல்லப்பட்ட விஷயம் யாரை முன்வைத்துச் செய்யப்பட்டது?

முருகன் (எழுவாய்) யாருக்கு மாலையிட்டான் (பயனிலை)? வள்ளிக்கு. ஆகவே, வள்ளிதான் செயப்படுபொருள். ஆங்கிலத்தில் இதனை “Object” என்பார்கள். இது எப்போதும் ஒரு பெயர்ச்சொல்லாகவே இருக்கும்.

இன்னோர் உதாரணத்துடன் பார்ப்போம்: ஜனாதிபதி கொடி ஏற்றினார்

* செயல் எது? ஏற்றுதல் : பயனிலை
* செய்தவர் யார்? ஜனாதிபதி : எழுவாய்
* ஜனாதிபதி எதை ஏற்றினார்? கொடி : செயப்படுபொருள்

எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் மூன்றும் ஒரு வாக்கியத்தில் இந்த வரிசையில்தான் வரவேண்டும் என்று எந்தக் கட்டுப்பாடும் இல்லை. உதாரணமாக:

* நான் பாட்டுப் பாடினேன் (எழுவாய், செயப்படுபொருள், பயனிலை)
* பாட்டு என்னால் பாடப்பட்டது (செயப்படுபொருள், எழுவாய், பயனிலை)
* என்னால் பாடப்பட்ட பாட்டு பிரமாதமாக இருந்தது (எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்)

அதேபோல், ஒரு வாக்கியத்தில் இந்த மூன்றும் வந்தே தீரவேண்டும் என்கிற கட்டுப்பாடுகளும் கிடையாது. உதாரணமாக, ‘சோறு தின்றேன்’ என்ற வாக்கியத்தில் பயனிலை உண்டு (தின்றேன்), செயப்படுபொருள் உண்டு (சோறு), ஆனால் எழுவாய் இல்லை. “தின்றேன்” என்ற பயனிலைச் சொல் ’தன்மை’யில் வருவதால், இந்த வாக்கியத்தைச் சொன்னவர்தான் தின்றார் என்று நாமாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

இதுபோல வெளிப்படையாகத் தெரியாத எழுவாய்களைத் “தோன்றா எழுவாய்” என்பார்கள். இதற்கு இன்னொரு நல்ல உதாரணம் இதோ:

* “அருமையாக ஆடினான்” : ஆடியது யார்? தெரியவில்லை! ஆனால் யாரோ ஒரு மூன்றாம் நபர், அதாவது படர்க்கை என்பதுமட்டும் தெரிகிறது
* இதையே “அருமையாக ஆடினாய்” என்று சொன்னால், ஆடியது யார் என்ற குழப்பமே இல்லை, முன்னால் நிற்பவர், அதாவது முன்னிலை).

இந்த உதாரணத்தில் தன்மை, முன்னிலை, படர்க்கை என்பதெல்லாம் என்ன என்று குழம்பினீர்களானால், நீங்கள் பழைய பாடங்களை ஒழுங்காகப் படிக்கவில்லை என்று அர்த்தம். கொஞ்சம் தேடிப் ப(பி)டியுங்கள்!

எழுவாய்போலவே, சில வாக்கியங்களில் செயப்படுபொருளும் விடுபட்டிருக்கக்கூடும். உதாரணமாக:

* நான் பாடினேன் (எதைப் பாடினேன்?)
* அரசன் வென்றான் (எந்த நாட்டை வென்றான்? எந்தப் போட்டியில் வென்றான்?)

“அது என் வீடு” என்பதுபோன்ற பயனிலை (செயலே) இல்லாத வாக்கியங்களும் உண்டு. ஆனால் செயலே இல்லாதபோது அந்த வாக்கியத்தை எழுவாய், செயப்படுபொருள் என்று பிரித்துப் பார்ப்பதிலும் அர்த்தம் இருக்காது.

ஆக, பயனிலை என்பது எஞ்சின்மாதிரி, எழுவாய் என்பது ஓட்டுபவர்மாதிரி, செயப்படுபொருள்தான் ஓட்டப்படும் கார். கூகுள் தொழில்நுட்பத்தில் ஓட்டுநர் (எழுவாய்) இல்லாமல் கார் ஓடலாம், ஒரு ரிப்பேர் கடையில் காரே (செயப்படுபொருள்) இல்லாமல் வெறுமனே எஞ்சின்மட்டும் ஓடலாம், ஆனால் எஞ்சின், அதாவது பயனிலை இல்லாவிட்டால் எதுவும் ஓடாது. இந்த வகை வாக்கியங்களுக்கு அதுதான் ஆதாரம்!

இப்போது, வேற்றுமை உருபுகளுக்குத் திரும்புவோம். அதில் மொத்தம் எட்டு வகைகள் என்று பார்த்தோம். அவை:

* முதலாம் வேற்றுமை உருபு (எழுவாய்)
* இரண்டாம் வேற்றுமை உருபு: ஐ
* மூன்றாம் வேற்றுமை உருபு: ஆல்
* நான்காம் வேற்றுமை உருபு: கு
* ஐந்தாம் வேற்றுமை உருபு: இன்
* ஆறாம் வேற்றுமை உருபு: அது
* ஏழாம் வேற்றுமை உருபு: கண்
* எட்டாம் வேற்றுமை உருபு (விளி)

இதை ஞாபகம் வைத்துக்கொள்ள ஓர் எளிய ஃபார்முலா பள்ளிக்கூடத்தில் சொல்லித்தந்திருப்பார்கள், பாடல்மாதிரி மனப்பாடம் செய்திருப்பீர்கள்: ‘ஐஆல்குஇன்அதுகண்’.

ஒரு விஷயம், ‘ஐ’ என்று பாடல் தொடங்குவதால் அது முதல் வேற்றுமை உருபு என்று எண்ணிவிடக்கூடாது, இந்தப் பாடல் இரண்டாம் வேற்றுமை உருபில் தொடங்கி ஏழுவரை செல்கிறது. அதற்கு முன்னால் எழுவாய், பின்னால் விளி என்று பொருத்திக்கொண்டால் எட்டும் நன்றாக ஞாபகத்தில் நிற்கும்!

முதலாவது வேற்றுமை உருபு என்பது, எழுவாய் தனித்து நிற்பது. உதாரணமாக: ’ராமன் சீதையைப் பார்த்தான்.’

இங்கே ராமன் என்பது எழுவாய். அது இயல்பாக அப்படியே வருகிறது, அதோடு எந்த வேற்றுமை உருபும் இல்லாமலே அது தனித்து நிற்கிறது.

அதே வாக்கியத்தைக் கொஞ்சம் மாற்றி எழுதுவோம்: ராமனைச் சீதை பார்த்தாள்’. இங்கே ராமன் என்பது வெறுமனே வரவில்லை, அதோடு ஓர் ‘ஐ’ சேர்ந்திருக்கிறது. ராமன் + ஐ = ராமனை.

இதனால் என்ன மாற்றம் ஏற்பட்டுவிட்டது?

முதல் வாக்கியத்தில் ராமன் என்பது எழுவாய், ஆனால் இரண்டாவது வாக்கியத்தில் ராமனைச் சீதைதான் பார்த்திருக்கிறாள், ஆகவே, சீதைதான் எழுவாய், ராமன் செயப்படுபொருள், அதாவது பார்க்கப்பட்ட பொருள்.

இதுதான் இரண்டாம் வேற்றுமை உருபு. ‘யாரை?’ என்ற கேள்விக்குப் பதில் சொல்லும். ஒரு பெயர்ச் சொல்லுடன் “ஐ” சேர்த்தால், அது இரண்டாம் வேற்றுமை உருபு. உதாரணமாக:

* ஐஸ்க்ரீமைச் சாப்பிட்டேன்
* உலகைச் சுற்றிய வாலிபன்
* தண்ணீரைக் காய்ச்சிக் குடித்தேன்
* உன்னைப் பார்த்தேன், என்னை மறந்தேன்

மற்ற வாக்கியங்கள் இருக்கட்டும், ‘என்னை மறந்தேன்’ என்ற நிறைவு வாக்கியத்தைமட்டும் கொஞ்சம் எடுத்துக்கொண்டு அலசுவோம். இந்த வாக்கியத்தில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் எவை?

* எழுவாய்: இல்லை (தோன்றா எழுவாய், “நான் என்னை மறந்தேன்” என்று வாசிக்கவேண்டும்!)
* பயனிலை: மறந்தேன்
* செயப்படுபொருள்: என்னை

ஆனால், செயப்படுபொருள் என்பது பெயர்ச்சொல்லாக அல்லவா இருக்கவேண்டும்? ‘என்னை’ என்று ஒரு செயப்படுபொருள் இருக்கமுடியுமா என்ன?

பிரச்னையில்லை, அதைப் பிரித்துவிடுவோம் என் + ஐ = என்னை. அவ்வளவுதானே?

ம்ஹூம், ”என்னை” என்ற சொல்லை நான் + ஐ என்றுதான் நாம் பிரிக்கவேண்டும், அதேபோல் “உன்னை” என்ற சொல்லை நீ + ஐ என்று பிரிக்கவேண்டும். “எங்களை” என்ற சொல்லை நாங்கள் + ஐ என்று பிரிக்கவேண்டும். “உங்களை” என்ற சொல்லை நீங்கள் + ஐ என்று பிரிக்கவேண்டும்.

ஆக, இங்கே செயப்படுபொருள் ‘என்னை’ அல்ல, ‘என்’ அல்ல, ‘நான்’!

இதேபோல் மேலும் பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. இன்னும் ஆறு வேற்றுமை உருபுகள் மீதமுள்ளன. அவற்றை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

அதற்குமுன்னால், இந்த அத்தியாயத்தில் நாம் பார்த்த முக்கியமான சொற்கள் / தலைப்புகள் / Concepts பட்டியலை இங்கே தருகிறேன், எதற்கு என்ன அர்த்தம், என்ன உதாரணம் என்று நினைவுபடுத்திப் பாருங்கள், ஏதேனும் புரியாவிட்டால், சிரமம் பார்க்காமல் மேலே சென்று ஒருமுறை படித்துவிடுங்கள்.

* வேற்றுமை உருபு (பெயர்ச் சொல்லைத் தொடர்ந்து வரும்)
* எழுவாய் (யார்? எது?)
* பயனிலை (என்ன செய்தார்கள்?)
* செயப்படுபொருள் (எது செய்யப்பட்டது?)
* எட்டு வகை வேற்றுமை உருபுகள் (எழுவாய், ஐ, ஆல், கு, இன், அது, கண், விளி)
* எழுவாய் வேற்றுமை உருபு (இயல்பாக வரும் பெயர்ச்சொல்)
* முதல் வேற்றுமை உருபு (யாரை? செயப்படுபொருளைக் குறிக்கும்)

0

Robin is involved that katherine is throwing out her, but just katherine indicates each goes additionally not, originally they go and pack to viagra sildenafil citrate buy.

விகாரம், புணர்ச்சி

chain-linkஅம்மா, ஆடு, இலக்கணம் / அத்தியாயம் 15

சென்ற அத்தியாயத்தில் ‘பகுதி’ என்கிற முக்கியமான பகுபத உறுப்பைப்பற்றிப் பார்த்துக்கொண்டிருந்தபோது, அதற்கு இரண்டு மாறுபட்ட உதாரணங்களைக் குறிப்பிட்டோம்:

* நடந்தான் : பகுதி ‘நட’
* வந்தான் : பகுதி ‘வா’

இதில் ‘நடந்தான்’ என்ற சொல்லிலேயே ‘நட’ என்கிற பகுதி உள்ளது. ஆனால் ‘வந்தான்’ என்பதில் ‘வா’ இல்லை, வெறும் ‘வ’தான் உள்ளது.

‘வா’ என்ற நெடில், ‘வ’ என்கிற குறிலாக மாறியுள்ளதல்லவா? இந்தத் தன்மையைதான் விகாரம் என்ற பெயரில் தனியான பகுபத உறுப்பாகக் குறிப்பிடுகிறோம்.

‘விகாரம்’ என்றால், ஒன்று மற்றொன்றாக இயல்பு மாறிக் காணப்படுவது.

நம் முன்னே யாராவது ஒருவர் ஐந்து கண், ஏழு மூக்குகள், பதினேழு காதுகளோடு முன்னே வந்தால், ‘விகாரமான தோற்றம்’ என்போம். காரணம், பொதுவாக மனிதர்களுக்கு இரண்டு கண், இரண்டு காது, ஒரு மூக்குதான் உண்டு. அந்த இயல்பான எண்ணிக்கை அங்கே மாறியுள்ளது. ஆகவே, அதனை ‘விகாரம்’ என்று அழைக்கிறோம்.

அதுபோல, மற்ற பகுபத உறுப்புகள் தங்களுடைய இயல்பான நிலைமை மாறி அமைவதற்குப் பெயர்தான் விகாரம். மேலும் சில உதாரணங்கள்:

* சென்றான் : பகுதி ‘செல்’, அது ‘சென்’ என மாறியுள்ளது விகாரம்
* வந்தான் : பகுதி ’வா’, அது ‘வ’ என மாறியுள்ளது விகாரம், சந்தி ‘த்’, அது ‘ந்’ என மாறியுள்ளதால், அது இன்னொரு விகாரம்

இந்த விகாரம் ஒரு சொல்லினுள் மட்டுமல்ல, இரண்டு சொற்கள் ஒன்றாகச் சேர்கிற இடத்திலும் உண்டு. அதையும் கொஞ்சம் பார்த்துவிடுவோம்.

பொதுவாக இரண்டு சொற்கள் சேருவதைத் தமிழில் ‘புணர்ச்சி’ என்பார்கள். இந்தச் சொல்லைப் பாலியல் சார்ந்த அர்த்தத்திலேயே பயன்படுத்திப் பயன்படுத்தி, யாராவது இதைச் சொன்னாலேயே கூச்சம் வருகிறாற்போல் மாறிவிட்டோம்.

‘புணர்தல்’ என்பதன் நிஜமான பொருள், சேர்தல், கூடுதல் என்பதுதான். அது பாலியல் நோக்கத்துக்கும் பொருந்தும் என்றாலும், எல்லா இடங்களிலும் பயன்படுத்தலாம்.

உதாரணமாக, திருவருட்பாவில் வள்ளலார் எழுதிய ஓர் அருமையான வெண்பா:

அருள் அளித்தான், அன்பு அளித்தான், அம்பலத்தான் உண்மைப்
பொருள் அளித்தான், என்னுள் புணர்ந்தான், தெருள் அளித்தான்,
எச்சோதனையும் இயற்றாமல் ஆண்டுகொண்டான்,
அச்சோ! எனக்கு அவன்போல் ஆர்!

இங்கே சிவபெருமானின் அருளையும் அன்பையும், அவன் தந்த உண்மைப் பொருளையும் சொல்லவரும் வள்ளலார், அந்த அம்பலத்தான் எனக்குத் தெளிவு கொடுத்தான், எந்தச் சோதனையும் தராமல் என்னை ஆட்கொண்டான், அவனைப்போல் எனக்கு யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் நெகிழும்போது, நடுவில் ‘என்னுள் புணர்ந்தான்’ என்கிறார். அதன் அர்த்தம், ‘எனக்குள்ளே கலந்துவிட்டான்’ என்பதுதான்.

இந்தப் பாடலை இங்கே சொல்லக் காரணம், ‘புணர்ச்சி விதிகள்’ என்றதும் அக்கம்பக்கம் பார்க்கவேண்டியதில்லை. கூச்சப்படாமல் தொடர்ந்து படிக்கலாம்!

இரு சொற்கள் ஒன்றோடு ஒன்று சேரும்போது, இரண்டு வகைப் புணர்ச்சிகள் நிகழக்கூடும்:

* இயல்புப் புணர்ச்சி
* விகாரப் புணர்ச்சி

இயல்புப் புணர்ச்சி என்றால், இரு சொற்களும் எந்தவிதத்திலும் மாறாது. காந்தத்தை அருகருகே வைத்தால் பச்சக் என்று ஒட்டிக்கொள்வதுபோல் ஒட்டிக்கொண்டு, அதேபோல் நிற்கும்.

உதாரணமாக, பூ + மாலை = பூமாலை. இந்தப் புதிய சொல்லில் ‘பூ’வும் உள்ளது, ‘மாலை’யும் உள்ளது, இரண்டும் இயல்பாகச் சேர்ந்துள்ளன. ஆகவே, அது இயல்புப் புனர்ச்சி.

இப்போது, ‘பூ’வை அப்படியே வைத்துக்கொள்வோம், ‘மாலை’க்குப் பதில், அதே பொருள் தரும் இன்னொரு சொல்லாகிய ‘சரம்’ என்பதைப் பயன்படுத்துவோம். பூ + சரம் என்பது எப்படிப் புணரும்?

‘பூசரம்’ என்று புணர்ந்தால் அது இயல்புப் புணர்ச்சி. ஆனால் அவை ‘பூச்சரம்’ என்றுதான் புணரும்!

இங்கே நடுவில் ஓர் ‘ச்’ ஏன் வந்தது, எப்படி வந்தது என்றெல்லாம் பின்னர் விரிவாகப் படிக்கலாம், இப்போதைக்கு, ‘பூமாலை’ என்பதும் ‘பூச்சரம்’ என்பதும் ஒரேமாதிரி புணர்ச்சி அல்ல என்பதைமட்டும் கவனித்தால் போதும்.

‘பூமாலை’ என்ற சொல்லில், ‘பூ’, ‘மாலை’ ஆகிய சொற்கள் இயல்பாக அமைந்திருப்பதுபோல, ‘பூச்சரம்’ என்ற சொல்லில் ‘பூ’, ‘சரம்’ ஆகியவை அமையவில்லை. ஏதோ விகாரம் நடந்திருக்கிறது.

இதைதான் ‘விகாரப் புணர்ச்சி’ என்கிறோம். அதில் மொத்தம் மூன்று வகைகள் உண்டு:

* தோன்றல் (ஒரு புதிய எழுத்து தோன்றுதல்)
* கெடுதல் (ஏற்கெனவே உள்ள ஓர் எழுத்து நீங்குதல்)
* திரிதல் (ஓர் எழுத்து இன்னோர் எழுத்தாக மாறுதல்)

உதாரணங்களுடன் பார்ப்போம், முதலில்:

பூ + சரம் = பூச்சரம்

இங்கே ‘பூ’, ‘சரம்’ ஆகியவற்றுடன், ‘ச்’ என்ற புதிய எழுத்து தோன்றியிருக்கிறது. அதுதான் ‘தோன்றல் விகாரம்’.

இன்னும் சில உதாரணங்கள்:

சிவப்பு + கொடி = சிவப்புக் கொடி
நாய் + சங்கிலி = நாய்ச் சங்கிலி
நேர் + சிந்தனை = நேர்ச் சிந்தனை

அடுத்து, கெடுதலுக்கு உதாரணமாக, ‘தங்கச் சங்கிலி’யை எடுத்துக்கொள்வோம்.

தங்கம் + சங்கிலி = தங்கச் சங்கிலி

இங்கே புதிதாகத் தோன்றிய ‘ச்’ என்பது தோன்றல் விகாரம். ஆனால் நாம் கவனிக்கவேண்டியது, ‘தங்கம்’ என்ற சொல்லில் இருந்த ‘ம்’ என்ற எழுத்து எங்கே போனது?

அதுதான் ‘கெடுதல் விகாரம்’, நல்ல பிள்ளைகளோடு சேரும்போது நம் கெட்ட குணங்கள் காணாமல் போவதுபோல (அல்லது, Vice Versa) இந்தப் புணர்ச்சியால் ஓர் எழுத்து கெட்டுவிட்டது.

நிறைவாக, திரிதல். இதற்கு உதாரணம், ‘பொற்கலசம்’

பொன் + கலசம் = பொற்கலசம்

இங்கே ‘கலசம்’ என்ற சொல் அப்படியே வந்துள்ளது. ஆனால், ‘பொன்’ என்ற சொல்லின் நிறைவில் இருக்கும் ‘ன்’ என்ற எழுத்து, ‘ற்’ என்று மாறிவிட்டது.

அது ஏன் அப்படி மாறவேண்டும் என்று அப்புறம் பார்ப்போம். இப்போதைக்கு, திரிதல் விகாரம் என்றால், ஓர் எழுத்து இன்னொன்றாகத் திரிவது, மாறுவது, அவ்வளவுதான்!

‘விகாரப் புணர்ச்சி’ என்று ஒருமையில் பெயர் சூட்டிவிட்டதால், இதில் ஏதேனும் ஒன்றுதான் வரும் என்று நினைத்துவிடாதீர்கள், ஒரே புணர்ச்சியின்போது ஒன்றுக்கு மேற்பட்ட விகாரங்களும் வரலாம்.

உதாரணமாக, நாம் ஏற்கெனவே பார்த்த ‘தங்கச் சங்கிலி’ என்ற உதாரணத்தில் தோன்றல், கெடுதல் ஆகிய இரண்டு விகாரங்களும் உள்ளன.

இப்போது, உங்களுக்கு ஒரு பயிற்சி, இந்தச் சொற்களில் எவையெல்லாம் இயல்புப் புணர்ச்சி, எவையெல்லாம் விகாரப் புணர்ச்சி, அதிலும் குறிப்பாக, எது தோன்றல், எது கெடுதல், எது திரிதல், எங்கெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட விகாரங்கள் உள்ளன என்று கண்டுபிடியுங்கள்:

* செந்தாமரை
* நாய் வால்
* உலகத் தமிழர்கள்
* பழரசம்
* மதுரசம்
* மதுக்குடம்
* பழக்குடம்
* தென்னந்தோப்பு
* பனைமரம்
* ஆற்றங்கரை

மேலே நாம் பார்த்த மூன்று விகாரங்கள்தவிர, இன்னும் ஒன்பது வகை விகாரங்கள் உள்ளன. நல்லவேளையாக, இவை தினசரி வாழ்க்கையில் பயன்படாது, செய்யுள் எழுதும்போதுமட்டும்தான் நாம் இவற்றைப் பயன்படுத்துவோம். ஆகவே, இவற்றுக்குச் ‘செய்யுள் விகாரம்’ என்று பெயர்.

செய்யுளுக்கென்று விசேஷமாக விகாரம் எதற்காக?

மரபுக் கவிதையில் சொற்கள் இப்படிதான் அமையவேண்டும் என்று நெறிமுறைகள் உண்டு. அவற்றை மீறினால், இலக்கணப் பிழையாகிவிடும்.

ஆனால், சில நேரங்களில் சில சொற்கள் பாடலில் கச்சிதமாக உட்கார்ந்துகொண்டு எழ மறுக்கும். அவற்றை மாற்றினால், செய்யுளின் அழகு போய்விடும்.

அதுபோன்ற சந்தர்ப்பங்களில், அந்தச் சொல்லை வேண்டுமென்றே கொஞ்சம் மாற்றி (விகாரப்படுத்தி) எழுதிச் சமாளிப்பார்கள் புலவர்கள். இதுதான் செய்யுள் விகாரம்.

உதாரணமாக, திருநாவுக்கரசர் எழுதிய இந்தப் பிரபலமான பாடலைப் பாருங்கள்:

மாசு இல் வீணையும், மாலை மதியமும்
வீசு தென்றலும், வீங்கு இள வேனிலும்,
மூசு வண்டு அறை பொய்கையும் போன்றதே,
ஈசன் எந்தை இணை அடி நீழலே!

என்னுடைய தந்தையாகிய இறைவன், அவனுடைய திருவடி நிழல் எப்படிப்பட்டது தெரியுமா?

குற்றமில்லாத இசையைத் தருகிற ஒரு வீணையைப்போன்றது, மாலை நேரத்தில் தோன்றுகின்ற குளிர்ச்சியான சந்திரனைப்போன்றது, வீசுகின்ற தென்றலைப்போன்றது, செறிவான இளவேனிலைப்போன்றது, வண்டுகள் சத்தமிட்டபடி மொய்க்கிற பொய்கையைப்போன்றது!

அதெல்லாம் இருக்கட்டும், பாடலின் நிறைவுச் சொல்லைக் கவனியுங்கள். ‘நீழலே’ என்கிறார் திருநாவுக்கரசர், அது ‘நிழலே’ என்றல்லவா இருக்கவேண்டும்?

இதுதான் செய்யுள் விகாரம். படிக்கிறவர்கள் அர்த்தத்தைப் புரிந்துகொள்வார்கள் என்கிற நம்பிக்கையில் லேசாகச் சொற்களை மாற்றி எழுதுவது.

இப்படி ஒன்பது வகையான செய்யுள் விகாரங்கள் உண்டு என்று பார்த்தோம். அவை:

* வலித்தல்
* மெலித்தல்
* நீட்டல்
* குறுக்கல்
* விரித்தல்
* தொகுத்தல்
* முதற்குறை
* இடைக்குறை
* கடைக்குறை

பெயர்கள் ஒருமாதிரி பயமுறுத்தினாலும், உதாரணத்துடன் பார்த்தால் இவை மிக எளிமையாகிவிடும். இவற்றில் முதல் ஆறும் ஒன்றுக்கொன்று நேர் எதிரான பங்காளிகளாக இருப்பதால் சட்டென்று புரிந்துகொண்டுவிடலாம்.

ஒரு விஷயம், இங்கே செய்யுளில் வருவதுபோன்ற பழந்தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தாமல், வேண்டுமென்றே எளிய உதாரணங்களைத் தந்துள்ளேன். ’இதையெல்லாம் இப்படி மாத்தி எழுதுவாங்களா என்ன?’ என்று சந்தேகப்படவேண்டாம், சும்மா புரிந்துகொள்வதற்காகமட்டும்தான் இது!

1. வலித்தல்

ஒரு மெல்லின எழுத்தை வல்லினமாக மாற்றுவது. உதாரணமாக, ஒரு பெண்ணின் பெயர் ‘அம்பிகா’, அவளை ஒருவர் ‘அப்பிகா’ என்று (சும்மா கிண்டலுக்குதான்) அழைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இங்கே, ’ம்’ என்ற மெல்லின எழுத்து ‘ப்’ என்ற வல்லின எழுத்தாக மாறியுள்ளதால், அது வலித்தல் விகாரம், பதிலுக்கு அவள் அவருடைய கன்னத்தில் ஓர் அப்பு அப்பினால், அவரது முகத்தில் வலித்தலும் ஏற்படும், விகாரமும் ஏற்படும்!

2. மெலித்தல்

‘மெலித்தல் விகாரம்’ என்றால், சிலர் ஒரு நாளைக்கு ஏழு அரிசிகளைமட்டும் சாப்பிட்டு சைஸ் ஜீரோ ரேஞ்சுக்கு மெலிந்து எலும்பும் தோலுமாக இருப்பதல்ல. வலித்தல் விகாரத்துக்குப் பங்காளி இது, ஒரு வல்லின எழுத்தை மெல்லினமாக மாற்றுவது.

உதாரணமாக, ‘தொப்பி’ என்ற சொல்லை ‘தொம்பி’ என்று மாற்றிச் சொல்வது மெலித்தல் விகாரம், காரணம், இங்கே ‘ப்’ என்ற வல்லின எழுத்துக்குப் பதில் ‘ம்’ என்ற வல்லின எழுத்து வந்துள்ளது.

3. நீட்டல்

சிலர் கண்ணுக்கு மை தீட்டுகிறேன் பேர்வழி என்று தீட்டித் தீட்டி அதைக் காதுவரை நீட்டிவிடுவார்கள், அது பார்ப்பதற்கு ரொம்ப விகாரமாக இருக்கும்.

ஆனால் இலக்கணத்தில் வரும் நீட்டல் விகாரம் அதுவல்ல, குறிலை நெடிலாக நீட்டி எழுதுவது. இதற்குச் சிறந்த உதாரணமாக‘நிழல்’ என்ற சொல் ‘நீழல்’ என்று (குறில் ‘நி’க்குப் பதில் நெடில் ‘நீ’) மாறி வருகிற நீட்டல் விகாரத்தை நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம்.

4. குறுக்கல்

நீட்டல் விகாரத்துக்குப் பங்காளி இது, நெடிலைக் குறிலாகக் குறுக்கி எழுதுவது. உதாரணமாக, ‘வாத்து’ என்பதை ‘வத்து’ என்று சொல்வது. ‘வா’ நெடிலுக்குப் பதில் ‘வ’ என்ற குறில் வருவதால் இது குறுக்கல் விகாரம்.

5. விரித்தல்

சொல்லில் இல்லாத ஓர் எழுத்தை அறிமுகப்படுத்துவதுதான் விரித்தல். உதாரணமாக, ‘அடடா’ என்பதை ‘அடடடடா’ என்று சிலர் விரிப்பார்களே, அந்தமா‘திரி!

6. தொகுத்தல்

‘தொகை’ என்றால் ஒளிந்திருத்தல் என்று அர்த்தம். ஒரு சொல்லில் ஏற்கெனவே இருக்கும் ஓர் எழுத்தை ஒளியவைத்துவிடுவதுதான் தொகுத்தல் விகாரம், இது விரித்தல் விகாரத்துக்குப் பங்காளி.

உதாரணமாக, ‘சிறிய பறவை’ என்பதை ஒருவர் ‘சிறி பறவை’ என்று எழுதினால், அது தொகுத்தல் விகாரம். அதையே ‘சிறு பறவை’ என்று எழுதினால் விகாரம் இல்லை. காரணம், தமிழில் ‘சிறு’ என்ற சொல் உண்டு, ‘சிறி’ என்ற சொல் இல்லை, அது ‘சிறிய’ என்பதன் தொகுத்தல் விகாரம்.

7. முதல் குறை

ஒரு சொல்லின் முதல் எழுத்தை நீக்கிவிடுவது. உதாரணமாக, ‘தாமரை’ என்ற சொல்லைச் சில பாடல்களில் ‘மரை’ என்று குறிப்பிடுவார்கள். அப்போதும் அது ‘தாமரை’தான் என்று புரியும். ‘பழம்’ என்றாலே ‘வாழைப் பழம்’ என்று நாம் புரிந்துகொள்வதைப்போலதான்!

8. இடைக் குறை

டயட் இருந்தால் ‘இடை குறை’யும். ஆனால் இது வேறு, நடுவில் ‘க்’ உண்டு, ‘இடைக் குறை’, அதாவது, ஒரு சொல்லின் நடுவே இருக்கும் எழுத்தை நீக்கிவிடுவது.

உதாரணமாக, ’முத்து’ என்ற சொல்லை ‘முது’ என்று மாற்றி எழுதினால் அது இடைக் குறை.

9. கடைக் குறை

’கடை’ என்றால் ‘கடைசி’ என்று அர்த்தம். ஒரு சொல்லின் கடைசியில் இருக்கும் எழுத்தை நீக்கிவிட்டால் அதனைக் ‘கடைக் குறை’ என்பார்கள்.

உதாரணமாக, ’வந்தாச்சு’ என்பதைச் சிலர் ‘வந்தாச்’ என்று எழுதுவார்கள். கடைசி எழுத்தாகிய ‘சு’ இல்லாமலே அதன் அர்த்தம் புரிகிறதல்லவா?

இந்த ஒன்பது விகாரங்களையும் தெரிந்துகொண்ட கையோடு அவற்றைப் பயன்படுத்தக் கிளம்பிவிடாதீர்கள். இவை செய்யுள் விகாரங்கள் என்பதை மறந்துவிடவேண்டாம். ஒருவேளை நீங்கள் செய்யுள் எழுதி, அதில் ஒரு வார்த்தை சரியாக உட்கார மறுத்தால்மட்டுமே இவற்றைப் பயன்படுத்தலாம்.

‘அடடா, வட போச்சே’ என்று வருத்தப்படவேண்டாம், SMS எழுதுங்கள், அதில் உள்ள பெரும்பாலான சொற்கள் விகாரம்தானே? do u undrstnd?

விகாரப்பட்டது போதும், இயல்புக்குத்திரும்புவோம், அடுத்த அத்தியாயத்தில் வேற்றுமை உருபுகளைப்பற்றிப் பார்ப்போம்!

அதற்குமுன்னால், இந்த அத்தியாயத்தில் நாம் பார்த்த முக்கியமான சொற்கள் / தலைப்புகள் / Concepts பட்டியலை இங்கே தருகிறேன், எதற்கு என்ன அர்த்தம், என்ன உதாரணம் என்று நினைவுபடுத்திப் பாருங்கள், ஏதேனும் புரியாவிட்டால், சிரமம் பார்க்காமல் மேலே சென்று ஒருமுறை படித்துவிடுங்கள்.

* விகாரம்
* புணர்ச்சி இலக்கணம் என்றால் என்ன?
* இயல்புப் புணர்ச்சி, விகாரப் புணர்ச்சி
* தோன்றல், கெடுதல், திரிதல்
* செய்யுள் விகாரம்
* வலித்தல், மெலித்தல்
* நீட்டல், குறுக்கல் (வல்லினம் <> மெல்லினம்)
* விரித்தல், தொகுத்தல் (குறில் <> நெடில்)
* முதல் குறை, இடைக் குறை, கடைக் குறை

0

பகுபதம் : எப்படி உடைப்பது?

imagesஅம்மா, ஆடு, இலக்கணம் / அத்தியாயம் 14

பேனா என்பது நமக்கு எழுதும் சமாசாரம். அதையே ஒரு சின்னக் குழந்தை கையில் கொடுத்தால், அரை விநாடியில் இப்படிப் பிரித்துக் கையில் கொடுத்துவிடும்:

* மூடி
* கீழ்ப்பகுதி
* அதன்மீது வைத்துத் திருகக்கூடிய மேல் பகுதி
* மைக்குச்சி எனப்படும் ரீஃபிள்

உலகம் முழுக்க எல்லாப் பேனாக்களிலும் இந்த பாகங்கள்தான் இருக்குமா?

இல்லை. ரீஃபிள் இல்லாத பேனாக்கள் உண்டு, கீழ்ப்பகுதி, மேல் பகுதி என்று தனித்தனியே பிரியாமல் ஒன்றாக இருக்கும் பேனாக்கள் உண்டு. மூடி இல்லாத பேனாக்கள் உண்டு, இன்னும் கூடுதலாக ஸ்ப்ரிங் உண்டு, ஒன்றுக்கு மேற்பட்ட வண்ணங்களில் ரீஃபிள்களைக் கொண்டிருக்கும் மல்ட்டி கலர் பேனாக்கள் உண்டு. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆக, ஒரு பேனாவைப் பகுக்கமுடியும் என்பதுமட்டும் உண்மை. அதை எப்படிப் பகுப்பது, எத்தனையாகப் பகுப்பது என்பதெல்லாம் அந்தந்தப் பேனாவைப் பொறுத்து மாறுபடும்.

பகுபதமும் அப்படிதான். அதைப் பல துண்டுகளாகப் பகுக்கமுடியும். ஆனால், எத்தனை துண்டுகள் என்பது சொல்லைப் பொறுத்து மாறும்.

ஆனால் ஒன்று, பகுபதத்தில் அதிகபட்சம் இத்தனை துண்டுகள்தான் உண்டு என்று இலக்கணம் தெளிவாகச் சொல்கிறது, அவை எந்த வரிசையில் வரக்கூடும் என்பதையும் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள்.

அந்த ஆறு துண்டுகளும், பகாப்பதங்களாக இருக்கும். அதாவது, ஒரு பகுபதத்துக்குள் அதிகபட்சம் ஆறு பகாப்பதங்கள் இடம்பெறமுடியும். அவை:

* பகுதி
* விகுதி
* இடைநிலை
* சந்தி
* சாரியை
* விகாரம்

இந்த ஆறையும் சேர்த்து ‘பகுபத உறுப்பிலக்கணம்’ என்று அழைப்பார்கள். இவை என்னென்ன, சொல்லில் எங்கே எப்படி வரும் என்று உதாரணங்களுடன் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

ஒரு விஷயம், பகுபத உறுப்புகளாகிய இந்த ஆறையும் நாம் இப்போது பார்க்கப்போகும் வரிசை வேறு, சொற்களில் அவை தோன்றுகிற வரிசை வேறு. உதாரணமாக, பகுதிக்குப்பிறகு விகுதி, அதன்பிறகு இடைநிலை என்று அமையாது.

ஆகவே, நம்முடைய கருத்துத் தெளிவுக்காக முதலில் இந்த ஆறு பகுதிகளையும் தனித்தனியே தெரிந்துகொள்வோம். அதன்பிறகு, அவற்றைப் பொருத்திப் பார்ப்போம். இப்போதைக்கு வரிசையைத் தாற்காலிகமாக மறந்துவிட்டு விஷயத்தைமட்டும் பாருங்கள்.

முதலில், பகுதி. எல்லாப் பகுபதங்களிலும் இதுதான் முதலில் வரும், நேரடிப் பொருள் தரும், அந்தச் சொல்லையே அதுதான் உருவாக்கும்.

உதாரணமாக, ‘நடந்தான்’ என்ற சொல்லில் உள்ள ‘நட’ என்பதுதான் பகுதி. அதிலிருந்துதான் அந்தச் சொல் ‘நட’ப்பதைக் குறிப்பதாக மாறுகிறது.

இங்கே ‘நட’ என்ற பகுதியை எடுத்துவிட்டுப் ‘பற’ என்ற இன்னொரு பகுதியைச் சேர்த்தால், அந்தச் சொல் ‘பறந்தான்’ என்று மாறிவிடும், ‘பற’ப்பதைக் குறிப்பதாகிவிடும்.

சில நேரங்களில் பகுதி இப்படி நேரடியாக வராது, உருமாறிக் காணப்படும், வளைத்துதான் வெளியில் எடுக்கவேண்டும். உதாரணமாக, ‘வந்தான்’ என்ற சொல்லின் பகுதி, ‘வா’, ‘சென்றான் என்ற சொல்லின் பகுதி, ‘செல்’.

அடுத்து, விகுதி. இது சொல்லின் நிறைவாக நிற்கும். பகுதியில் தொடங்கிய பொருளை முழுமை செய்யும். இதை மாற்றினால் சொல்லின் தன்மையும் மாறக்கூடும்.

உதாரணமாக, அதே ‘நடந்தான்’ என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம்:

* தொடக்கத்தில் வரும் ‘நட’ என்பது பகுதி
* நிறைவாக வரும் ‘அன்’ என்பது விகுதி

இங்கே ‘அன்’ என்ற விகுதிக்குப் பதிலாக ‘அள்’ என்ற விகுதியைச் சேர்த்தால், இந்தச் சொல் ‘நடந்தாள்’ என்று மாறிவிடும். ஆண்பால் பெண்பாலாகிவிடும்.

அதே இடத்தில் ‘அள்’க்குப் பதில் ‘அது’ என்ற விகுதியைச் சேர்த்தால், இந்தச் சொல் ‘நடந்தது’ என்று மாறிவிடும். உயர்திணை அஃறிணையாகிவிடும். இதேபோல் நடந்தது, நடந்தன, நடந்தனர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

முக்கியமான விஷயம், இந்தச் சொற்கள் அனைத்திலும் பகுதி ஒன்றுதான் (நட), ஆனால் விகுதி மாற மாற, அந்தச் சொல்லின் தன்மை, பயன்பாடு எல்லாமே மாறிவிடுகிறது.

ஆக, பகுதி என்பது சொல்லின் பொருளை உருவாக்குகிறது, விகுதி என்பது அதை வேறுபடுத்துகிறது. ஆண், பெண், அஃறிணை, உயர்திணை, ஒருமை, பன்மை என்று பிரித்துக் காட்டுகிறது.

இதைப் புரிந்துகொள்ள ஓர் எளிய உதாரணம் வேண்டுமென்றால், பெரிய உணவகங்களுக்குச் சென்று பாருங்கள். அவற்றைப் பல பகுதிகளாகப் பிரித்திருப்பார்கள்:

* சுய சேவை(Self Service)ப் பிரிவு
* வழக்கமான சேவை(Regular Service)ப் பிரிவு
* குளிர்பதன அறைச் சேவை (A/C Service)
* வீட்டுக்குப் பொட்டலம் கட்டும் பார்சல் சேவை
* உங்கள் வீட்டு விழாக்களுக்குப் பரிமாறும் (Catering) சேவை

இப்படிப் பல பிரிவுகள் இருந்தாலும், அனைத்துக்கும் சமையலறை ஒன்றுதான். அங்கே சமைக்கப்படும் உணவு தென்னிந்திய வகையா, வட இந்திய வகையா, சைவமா, அசைவமா, துரித உணவா என்கிற மாற்றங்கள் இருக்கும். இவைதான் ஒரு சொல்லின் பகுதியைப்போல.

சமையலறையில் ஒரு குறிப்பிட்ட உணவு சமைக்கப்பட்டபிறகு, அது எங்கே பரிமாறப்படுகிறது என்பதைப் பொறுத்து விலையும் மாறும், மரியாதையும் மாறும். ஒரே இட்லியை செல்ஃப் சர்வீஸில் சாப்பிட்டால் பத்து ரூபாய், உள்ளே உட்கார்ந்து சாப்பிட்டால் பன்னிரண்டு ரூபாய், ஏஸி அறை என்றால் பதினைந்து ரூபாய்.

அதுபோல, பகுதிதான் ஒரு சொல்லின் பொருளை உருவாக்குகிறது (சமைக்கிறது), விகுதி அதனை எப்படிப் பயன்படுத்துவது என்று தீர்மானிக்கிறது (பரிமாறுகிறது).

ஆக, பகுதி, விகுதி இரண்டும் ஒரு பகுபதத்துக்கு முக்கியம். மற்ற நான்கு உறுப்புகளும் இல்லாவிட்டால்கூட, இவை இரண்டுமட்டுமே ஒரு சொல்லை உருவாக்கிவிடமுடியும்.

உதாரணமாக, ‘நம்மை’ என்ற சொல்லில், நாம் + ஐ எனப் பகுதி, விகுதிமட்டுமே வந்துள்ளது. மற்ற பகுபத உறுப்புகள் எவையும் இல்லை.

அடுத்து, இடைநிலை. பெயரைக் கேட்டதும் புரிந்திருக்கும், பகுதிக்கும் விகுதிக்கும் நடுவே இருக்கும் உறுப்புதான் இது.

உதாரணமாக, ’வருகிறான்’ என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இதை எப்படிப் பிரிப்பீர்கள்?

இதில் ‘வா’தான் பகுதி என்பது புரிகிறது, நிறைவாக வரும் ‘ஆன்’ விகுதி என்பதும் புரிகிறது. இரண்டுக்கும் நடுவில் ‘கிறு’ என்று ஏதோ இருக்கிறதே.

அதுதான் இடைநிலை. வா + கிறு + ஆன் = வருகிறான்.

பகுதி என்பது ஒரு பெயரையோ செயலையோ காட்டும், விகுதி என்பது ஆண், பெண், உயர்திணை, அஃறிணை, ஒருமை, பன்மை வித்தியாசத்தைக் காட்டும், இடைநிலை என்ன செய்யும்?

அது காலத்தைக் காட்டும். உதாரணமாக இந்த மூன்று சொற்களைப் பாருங்கள்: செய்தான், செய்கிறான், செய்வான்.

இந்த மூன்றிலும் பகுதி ஒன்றுதான் (செய்), விகுதியும் ஒன்றுதான் (ஆன்), ஆனால் இடைநிலை மாறுகிறது. இப்படி:

* செய் + த் + ஆன்
* செய் + கிறு + ஆன்
* செய் + வ் + ஆன்

‘த்’ இடைநிலையாக உள்ளபோது, அந்தச் சொல் கடந்த காலத்தைக் குறிக்கிறது, அதே சொல்லில் ‘கிறு’ இடைநிலையாக இருந்தால், நிகழ்காலம், ‘வ்’ இடைநிலையாக இருந்தால், எதிர்காலம். இப்படி ஒரு பகுபதத்தின் இடைநிலையை வைத்து அது எப்போது நிகழ்ந்தது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்:

கடந்த காலத்தைக் காட்டும் இடைநிலைகள் நான்கு. அவை, த், ட், ற், இன். இந்த நான்குக்கும் உதாரணங்கள், செய்தான், உண்டான், விற்றான், பாடினான்.

நிகழ் காலத்தைக் காட்டும் இடைநிலைகள் மூன்று. அவை கிறு, கின்று, ஆநின்று. இவற்றுக்கு உதாரணங்கள்: செய்கிறான், செய்கின்றான், செய்யாநின்றான்.

இதில் ‘ஆநின்று’ என்பது இப்போது புழக்கத்தில் இல்லை. சும்மா தெரிந்துவைத்துக்கொள்வோம்.

எதிர் காலத்தைக் காட்டும் இடைநிலைகள் இரண்டு: ப், வ். இவற்றுக்கு உதாரணங்கள்: உண்பான், செய்வான்.

இப்போது, உங்களுக்கு ஒரு பயிற்சி. இந்த அத்தியாயத்தில் நாம் இதுவரை தெரிந்துகொண்ட விஷயங்களை வைத்து இந்தச் சொற்களைப் பகுதி, விகுதி, இடைநிலை என்று பிரித்துப் பாருங்கள்.

* வந்தான்
* வருவான்
* நடக்கின்றான்
* படித்தான்
* உண்டோம்
* உண்போம்
* எழுதுவேன்
* பாடினாள்
* குதித்தது
* குதிக்கின்றனர்

இந்தச் சொற்களில் பகுதி, விகுதி, இடைநிலை ஆகியவற்றை எளிதாகக் கண்டுபிடித்திருப்பீர்கள். அவைதவிர வேறேதும் கண்ணில் பட்டதா?

உதாரணமாக, ‘படித்தான்’ என்ற சொல்லைப் பிரிப்போமா?

* ‘படி’ பகுதி
* ‘ஆன்’ விகுதி
* நடுவில் ’த்’ என்பது இடைநிலை

அப்படி எஸ்கேப் ஆகமுடியாது நண்பீர். கொஞ்சம் கவனமாகப் பாருங்கள். அங்கே ஒரு ‘த்’ இல்லை, இரண்டு ‘த்’ இருக்கிறது. படி + த் + த் + ஆன்.

இவற்றில் ஒரு ‘த்’ இடைநிலை, புரிகிறது, இன்னொரு ‘த்’?

அதற்குப் பெயர் ‘சந்தி’. மேலே நாம் பார்த்த பகுபத உறுப்பிலக்கணப் பட்டியலில் நான்காவதாக உள்ளது.

ஒருவரை நேரில் பார்த்துப் பேசும்போது, அதைச் ‘சந்திப்பு’ என்கிறோம். பல ரயில் பாதைகள் ஒருங்கிணையும் இடத்துக்கும் ‘சந்திப்பு’ என்றுதான் பெயர்.

ஆக, ‘சந்தி’ என்றால் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விஷயங்கள் ஒன்றுகூடுவது. பகுபத உறுப்பிலக்கணத்தில் பகுதி, இடைநிலை ஆகியவற்றைச் சேர்ப்பது சந்தி.

‘படித்தான்’ என்பதை நான்காகப் பிரித்துப் பார்ப்போம். முதலில் வருவது (1) ’படி’, நிறைவாக வருவது (4) ’ஆன்’, நடுவில் வருபவை (2) ’த்’ மற்றும் (3) ’த்’.

இதில் (1) ‘படி’ பகுதி, (4) ‘ஆன்’ விகுதி என்பதில் யாருக்கும் எந்தக் குழப்பமும் இருக்காது. (2), (3) என வரும் ‘த்’களில் எது இடைநிலை, எது சந்தி?

இதுமாதிரி குழப்பம் வரும்போது, விகுதிக்குப் பக்கத்தில் இருப்பதுதான் இடைநிலை என்று எடுத்துக்கொள்ளவேண்டும். அதாவது (3) ‘த்’ இடைநிலை.

அப்படியானால், (2) ‘த்’ சந்தி. அது என்ன செய்கிறது? (1) ‘படி’ என்கிற பகுதியையும், (3) ‘த்’ என்கிற இடைநிலையையும் சேர்க்கிறது.

இப்போது, மீண்டும் ஒரு பயிற்சி, மேலே நாம் பார்த்த அதே பத்து சொற்களில் எங்கெல்லாம் சந்தி வருகிறது என்று இன்னொருமுறை உங்களுடைய கணக்கைச் சரி பாருங்கள்.

அடுத்து, ‘கண்டான்’ என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இதை எப்படிப் பிரிப்பீர்கள்?

* காண் : பகுதி
* ட் : இடைநிலை
* ஆன் : விகுதி

இதையே கொஞ்சம் மாற்றி ‘கண்டனன்’ என்று எழுதுவோம். இது நாம் சாதாரணமாகப் பயன்படுத்துகிற சொல் இல்லைதான். ஆனாலும், இலக்கணப் பாடத்துக்காக ஒருமுறை அப்படி எழுதிப் பார்ப்போம். தவறில்லை!

‘கண்டனன்’ என்ற சொல்லை நீங்கள் எப்படிப் பிரிப்பீர்கள்?

காண் + ட் + அன் + அன்

வழக்கம்போல், இவற்றுக்கு நம்பர் போடுவோம். (1) ‘காண்’, (2) ‘ட்’, (3) ‘அன்’, (4) ‘அன்’.

இதில் (1) ‘காண்’ பகுதி, (4) ‘அன்’ விகுதி. அதில் சந்தேகமில்லை. நடுவில் வரும் (2) ‘ட்’, (3) ‘அன்’ ஆகியவற்றை என்னவென்று அழைப்பது?

’ட்’ என்பது கடந்த காலத்தைக் காட்டுகிறது. ஆகவே (2) ‘ட்’தான் இடைநிலை.

அப்படியானால் (3) ‘அன்’ சந்தி. இல்லையா?

ம்ஹூம், இல்லை. சந்தி என்பது பகுதி, இடைநிலைக்கு நடுவே வரவேண்டும். ஆனால் இந்த ‘அன்’, இடைநிலைக்கும் விகுதிக்கும் நடுவே வருகிறது. விகுதியைச் சார்ந்து வருவதால் அதன் பெயர் சாரியை.

சந்திக்கும் சாரியைக்கும் நாம் தந்துள்ள இலக்கணங்கள் பெரும்பாலும் இப்படி அமைபவை. சில நேரங்களில் இந்த ஒழுங்கு மாறுவதும் உண்டு.

உதாரணமாக, ‘மனத்தில்’ என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இதில் ‘மனம்’ என்பது பகுதி, ‘இல்’ என்பது விகுதி, நடுவில் வரும் ’அத்து’ என்பது இடைநிலையா?

இல்லை. அது காலம் காட்டுவதில்லையே. ஆகவே, ‘அத்து’ என்பது இடைநிலை அல்ல, சாரியை.

இப்படிப் பதினேழு வகையான சாரியைகள் உண்டு. அவை: ‘அன்’, ‘ஆன்’, ‘இன்’, ‘அல்’, ‘அற்று’, ‘இற்று’, ‘அத்து’, ‘அம்’, ‘தம்’, ‘நம்’, ‘நும்’, ‘ஏ’, ‘அ’, ‘உ’, ‘ஐ’, ‘கு’, ‘ன’.

சந்தியுடன் ஒப்பிடும்போது, நாம் தினசரி பயன்படுத்தும் சொற்களில் சாரியை அதிகம் வருவதில்லை. பத்துக்கு ஒன்று தென்பட்டாலே அதிகம்.

ஆக, நாம் இதுவரை பார்த்துள்ள ஐந்து அம்சங்களைத் தொகுத்தால்:

* பகுதி என்பது பகுபதத்தின் முதல் பகுதி
* விகுதி என்பது பகுபதத்தின் நிறைவுப் பகுதி
* பகுதிக்கும் விகுதிக்கும் நடுவே அமைந்து காலம் காட்டுவது இடைநிலை
* (பெரும்பாலும்) பகுதிக்கும் இடைநிலைக்கும் நடுவே அமைவது சந்தி
* (பெரும்பாலும்) இடைநிலைக்கும் விகுதிக்கும் நடுவே அமைவது சாரியை

ஒரு வகுப்பில் ஐந்து மாணவர்கள் எப்போதும் (அல்லது பெரும்பாலான நேரங்களில்) ஒரு குறிப்பிட்ட வரிசையில்மட்டுமே அமர்ந்திருப்பதுபோல் கற்பனை செய்துகொள்ளுங்கள். இதை நினைவில் வைத்துக்கொள்வது எளிது.

இன்னும் மீதமுள்ளது விகாரம் ஒன்றுதான். அதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

அதற்குமுன்னால், இந்த அத்தியாயத்தில் நாம் பார்த்த முக்கியமான சொற்கள் / தலைப்புகள் / Concepts பட்டியலை இங்கே தருகிறேன், எதற்கு என்ன அர்த்தம், என்ன உதாரணம் என்று நினைவுபடுத்திப் பாருங்கள், ஏதேனும் புரியாவிட்டால், சிரமம் பார்க்காமல் மேலே சென்று ஒருமுறை படித்துவிடுங்கள்.

* பகுபத உறுப்புகள் (6)
* பகுதி
* விகுதி
* இடைநிலை
* சந்தி
* சாரியை

0

பெயர்ச்சொல் – வினைச்சொல் – எச்சம்

imagesஅம்மா, ஆடு, இலக்கணம் / அத்தியாயம் 13

‘நாலு பேர்கிட்ட நல்ல பேர் வாங்கணும்’ என்று பொதுவாகச் சொல்வார்கள். இப்போது நாம் பார்க்கவிருக்கும் உதாரணத்தில் ஒருவர், ஆறு பேரிடம் நல்ல பெயர் வாங்கியிருக்கிறார், அதுவும் ஆறுவிதமான பெயர்கள்:

* பொன்னன்
* மதுரைக்காரன்
* கார்த்திகையான்
* முட்டைக்கண்ணன்
* நல்லவன்
* கவிஞன்

இதுபோன்ற வேடிக்கையான செல்லப் பெயர்கள் எல்லாருக்கும் உண்டு. அப்படி ஒரு கற்பனை செய்துகொண்டு இந்தப் பெயர்கள் ஒவ்வொன்றும் எப்படி வந்திருக்கும் என யோசிப்போம்:

1. பொன்னன் : பொன் + அன் : தங்கத்தை உடையவன்
2. மதுரை சொந்த ஊர், அதனால் மதுரைக்காரன்
3. கார்த்திகை மாதம் பிறந்தவன், அதனால் கார்த்திகையான்
4. பெரிய முட்டைக் கண்களைக் கொண்டவன், அதனால் முட்டைக்கண்ணன்
5. எல்லாரிடமும் நன்கு பழகுகிறவன், அதனால் நல்லவன்
6. கவிதை எழுதுகிறவன், அதனால் கவிஞன்

மேற்கண்ட பட்டியலைக் கவனித்துப் பார்த்தால் இந்த ஆறு பெயர்களும் வெவ்வேறு காரணங்களால் வந்திருப்பவை என்பது புரியும். என்ன காரணங்கள்?

1. பொன்னன் : பொன் / தங்கம் என்கிற பொருளால் வந்த பெயர். ஆகவே இது பொருள் பெயர்ப் பகுபதம்
2. மதுரையான் : மதுரை என்ற இடத்தால் வந்த பெயர். ஆகவே இது இடப் பெயர்ப் பகுபதம்
3. கார்த்திகையான் : ஒரு குறிப்பிட்ட காலத்தால் வந்த பெயர். ஆகவே இது காலப் பெயர்ப் பகுபதம்
4. முட்டைக்கண்ணன் : ஓர் உறுப்பு / சினையால் வந்த பெயர். ஆகவே இது சினைப் பெயர்ப் பகுபதம், அல்லது உறுப்புப் பெயர்ப் பகுபதம்
5. நல்லவன் : ஒரு குணத்தால் வந்த பெயர். ஆகவே இது குணப் பெயர்ப் பகுபதம்
6. கவிஞன் : ஒரு செயல் அல்லது தொழிலால் வந்த பெயர். ஆகவே இது தொழில் பெயர்ப் பகுபதம்

ஆக, பெயர்ப் பகுபதத்தில் மொத்தம் ஆறு வகைகள். இவற்றைப் புரிந்துகொள்ள சில உதாரணங்களைத் தருகிறேன். இவை ஒவ்வொன்றும் மேற்சொன்ன ஆறில் எந்த வகை என்று யோசியுங்கள்:

பணக்காரன், ராக்கோழி, திருடன், தொப்பையன், நாட்டுப்புறத்தான், உத்தமன்

அடுத்து, வினைப் பகுபதம். இதில் இரண்டு வகைகள்:

1. முற்று
2. எச்சம்

இங்கே ‘வினை’ என்பது ஒரு செயலைக் குறிக்கிறது. அது முற்றுப்பெற்றுவிட்டதா அல்லது மீதமிருக்கிறதா என்பதைப் பொறுத்து அதனை முற்று அல்லது எச்சம் என்று அழைக்கிறோம்.

உதாரணமாக, ‘நடந்தான்’ என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இதில் நடத்தல் என்ற வினை (செயல்) முற்றுப்பெற்றுவிட்டது. ஆகவே, இது ”முற்று”.

அடுத்து, கிட்டத்தட்ட இதேமாதிரி இன்னும் இரு சொற்கள், ‘நடந்த’, ‘நடந்து’ என்பவை. இவற்றுக்கும் ‘நடந்தான்’க்கும் என்ன வித்தியாசம்?

’நடந்த’, ‘நடந்து’ என்பவையும் நடத்தல் என்ற வினையைக் குறிப்பதுதான். ஆனால், அந்தச் செயல் இங்கே முற்றுப்பெறவில்லை. இவற்றைத் தொடர்ந்து இன்னொரு சொல் வரவேண்டும். இதுபோல:

* நடந்த ராமன்
* நடந்த நாடகம்
* நடந்து முடித்தான்

ஆக, ‘நடந்தான்’ என்பது முற்று, ‘நடந்த’, ‘நடந்து’ என்பவை எச்சம், விஷயம் முற்றுப்பெறாமல் இன்னும் ஏதோ எஞ்சியுள்ளதால் அந்தப் பெயர்.

எச்சத்தில் இரண்டு வகை உண்டு:

* பெயரெச்சம்
* வினையெச்சம்

இவற்றைப் புரிந்துகொள்வது மிக எளிது. எச்சத்துக்குப் பின்னால் ஒரு பெயர்ச்சொல் வந்தால் அது பெயரெச்சம், வினைச்சொல் வந்தால் அது பெயரெச்சம்.

உதாரணமாக:

* ‘நடந்த ராமன்’ என்பதில் ‘நடந்த’க்குப் பின்னால் ‘ராமன்’ என்ற பெயர்ச்சொல் வருகிறது, ஆகவே, அது பெயரெச்சம்.

* ‘நடந்து முடித்தான்’ என்பதில் ‘நடந்து’க்குப் பின்னால் ’முடித்தான்’ என்ற வினைச்சொல் வருகிறது. ஆகவே, அது வினையெச்சம்.

இந்த “முற்று”வில் ஒரு சிறப்பு வகை, அதன் பெயர் தெரிநிலை வினைமுற்று.

‘தெரிநிலை’ என்றால், நிலைமை (status) தெரிகிறது என்று அர்த்தம், அதாவது ஒரு சொல் அங்கே என்ன நடக்கிறது என்கிற நிலைமையைத் தெரிவிக்கிறது.

உதாரணமாக, ‘ராஜேஷ் மசால் தோசை சாப்பிட்டான்’ என்ற வாக்கியத்தை எடுத்துக்கொண்டு அலசுவோம்.

* இங்கே ராஜேஷ் என்பது பெயர்ச்சொல்
* மசால் தோசை என்பதும் பெயர்ச்சொல்
* சாப்பிட்டான் என்பது வினைச்சொல், இதோடு அந்தச் செயல் முற்றுப்பெறுவதால், வினை முற்று
* வெறும் வினைமுற்று அல்ல, தெரிநிலை வினைமுற்று

‘தெரிநிலை’ என்று சொல்லும் அளவுக்கு, இந்தச் சிறிய சொல் அப்படி என்ன விஷயங்களைத் தெரிவிக்கிறது? இதற்கான நன்னூல் சூத்திரம்:

செய்பவன், கருவி, நிலம், செயல், காலம்
செய்பொருள் ஆறும் தருவது வினையே.

ஆக, இதிலிருந்து நாம் ஆறு விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்?

* செய்பவன் : யார் செய்தார்கள்? (ராஜேஷ்)
* கருவி : எதைக் கொண்டு செய்தார்கள்? (கை அல்லது ஸ்பூன்)
* நிலம் : எங்கே செய்தார்கள்? (ராஜேஷின் வீட்டில், அல்லது ஹோட்டலில்)
* செயல் : என்ன செய்தார்கள்? (சாப்பிட்டார்கள்)
* காலம் : எப்போது செய்தார்கள்? (ஏற்கெனவே சாப்பிட்டு முடித்துவிட்டார்கள்)
* செய்பொருள் : எதைச் செய்தார்கள்? அதாவது, எதைச் சாப்பிட்டார்கள்? (மசால் தோசை)

இப்படி ஒரு தெரிநிலை வினை முற்றை வைத்துக்கொண்டு ஆறு விதமான விஷயங்களைப்பற்றிப் பேசலாம், கேள்வி கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். உங்களுக்கு ஒரு பயிற்சியாக, “கண்ணன் வெண்ணெய் தின்றான்” என்ற வாக்கியத்தில் இதே ஆறு கேள்விகளைக் கேட்டுப்பாருங்கள்.

அடுத்து, வினையாலணையும் பெயர். இதனை வினை + ஆல் + அணையும் + பெயர் என்று பிரிக்கவேண்டும். அதாவது, ஒரு செயலைச் செய்பவருக்கு அதுவே பெயராக வருவது.

உதாரணமாக, வந்தவர், சென்றவர், பாடியவர், சிரித்தவர், நடந்தவர், நடக்கிறவர், நடக்கப்போகிறவர்… இந்தச் சொற்கள் அனைத்திலும், ஒரு செயல் வருகிறது, அதுவே அந்தச் செயலைச் செய்தவருக்குப் பெயராகிவிடுகிறது. ஆகவே, இவை வினையாலணையும் பெயர்கள்.

இப்போது ஒரு வாக்கிய உதாரணத்தைப் பார்ப்போம்: ‘மேடையில் பாடியவன் நன்றாகப் பாடினான்’.

இங்கே பாடியவன், பாடினான் என்று இரண்டு சொற்கள் உள்ளன. இரண்டுக்கும் வேர்ச்சொல் ‘பாடுதல்’ என்ற வினைதான், ஆனால், இவற்றில் எது வினைமுற்று? எது வினையாலணையும் பெயர்?

வினைமுற்று, வினையாலணையும் பெயருக்கு நாம் பார்த்த விளக்கங்களை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். பதில் கண்டுபிடிப்பது சுலபம்:

* வினைமுற்று என்றால், அத்துடன் அந்தச் செயல் நிறைவு பெறவேண்டும், ‘பாடியவன்’ என்று சொன்னால் அந்தச் செயலோ, அந்த வாக்கியமோ நிறைவு பெறுவதில்லை, ஆகவே, அது வினைமுற்றாக இருக்கமுடியாது. ‘பாடினான்’தான் வினைமுற்று

* வினையாலணையும் பெயர் என்றால், ஒரு செயலைச் செய்தவருக்கு அதுவே பெயராகவேண்டும், பாடியதால் (வினை) அவர் பாடியவன் (பெயர்). ஆகவே இது வினையாலணையும் பெயர்.

கொஞ்சம் பொறுங்கள். மேலே ஒருவரைக் ‘கவிஞர்’ என்று சொன்னோம், அதற்குத் தொழில் பெயர்ப் பகுபதம் என்று பெயர் சூட்டினோம். ஆனால் இங்கே ‘பாடியவன்’ என்று சொல்லி அதை வினையாலணையும் பெயர் என்கிறோம். இரண்டும் ஒரேமாதிரிதானே இருக்கிறது?

ம்ஹூம், இல்லை. சில முக்கியமான வித்தியாசங்கள் உண்டு:

வித்தியாசம் 1: வினையாலணையும் பெயர் காலம் காட்டும், தொழில் பெயர் காலம் காட்டாது

வித்தியாசம் 2: தொழில் பெயர் படர்க்கையில்மட்டுமே வரும், வினையாலணையும் பெயர் தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்றிலும் வரும்

உதாரணமாக, கிட்டத்தட்ட ஒரேமாதிரியான இரண்டு சொற்களை எடுத்துக்கொண்டு முதல் வித்தியாசத்தைமட்டும் பேசுவோம்: பாடகர் & பாடியவர்.

* ‘பாடகர்’ என்று சொல்லும்போது, அவர் முன்பு பாடினாரா, இப்போது பாடுகிறாரா, இனிமேல்தான் பாடப்போகிறாரா என்பது தெரியவில்லை. காலம் காட்டவில்லை. ஆகவே, அது தொழில் பெயர்

* ஆனால் ‘பாடியவன்’ என்று சொல்லும்போது, அவர் ஏற்கெனவே பாடிவிட்டார் (கடந்த காலம்) என்பது தெரிகிறது. காலம் காட்டுகிறது. ஆகவே, அது வினையாலணையும் பெயர்

அடுத்து, இரண்டாவது வித்தியாசத்தை எடுத்துக்கொள்வோம். அதில் தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூன்று நிலைகளைப்பற்றிப் பேசுகிறோம். ஆங்கிலத்தில் இவற்றை First Person, Second Person, Third Person என்று சொல்வார்கள்.

* பேசுபவர் தன்னைப்பற்றியோ ஒரு குழுவாகத் தங்களைப்பற்றியோ சொல்வது தன்மை (நான், எனது, என்னுடைய, எனக்கு, எங்களுக்கு).

* பேசுபவர் முன்னிலையில், அதாவது, தனக்கு முன்பாக நிற்கிற ஒருவரைப்பற்றியோ, அல்லது ஒரு குழுவைப் பற்றியோ சொல்வது முன்னிலை (நீ, உனது, உன்னுடைய, உனக்கும் உங்களுக்கு)
* இவர்கள் பேசும் இடத்திலேயே இல்லாத ஒருவரைப்பற்றிப் பேசினால், அது படர்க்கை (அவன், அவள், அவனுடைய, அவளுடைய, அவனுக்கு, அவளுக்கு)

இந்தப் பின்னணியில் யோசிக்கும்போது, தொழில் பெயர் எப்போதும் படர்க்கையில்மட்டுமே வரும், அதாவது, நீங்களோ நானோ அல்லாத ஒரு மூன்றாம் மனிதரைப்பற்றிமட்டுமே அது பேசும். உதாரணமாக, பாடகர், கவிஞர், இயக்குநர், தையல்காரர், நடனக்கலைஞர்… இப்படி.

ஆனால் வினையாலணையும் பெயர் அப்படியில்லை. அது தன்மையிலும் வரும், முன்னிலையிலும் வரும், படர்க்கையிலும் வரும். இதோ இப்படி:

* பாடினேன் (பாடிய நான், தன்மை)
* பாடினாய் (பாடிய நீ, முன்னிலை)
* பாடியவன் (பாடிய இன்னொருவன், படர்க்கை)

கொஞ்சம் பொறுங்கள். ‘பாடினேன்’ என்றால் பாடிய செயல் முற்றுப்பெற்றுவிடுகிறதே. அது வினை முற்றுதானே, வினையாலணையும் பெயர் அல்லவே.

”பாடினேன்” என்ற சொல் வினை முற்றாகவும் வரும் (நான் சிறப்பாகப் பாடினேன்), அது வினையாலணையும் பெயராகவும் வரும் (சிறப்பாகப் பாடினேன் ஆதலால் நான் பரிசு பெற்றேன்).

இதை வைத்து ஒரு பிரமாதமான கதைகூட உண்டு.

கோகுலத்தில் கண்ணன் வெண்ணெய் தேடி ஒரு வீட்டுக்குள் சென்றான். அங்கே ஒரு பெரிய மணி கட்டப்பட்டிருந்தது.

அந்த மணியைப் பார்த்த கண்ணனுக்குச் சந்தேகம். ‘ஏ மணியே, நான் இந்த வெண்ணெயை எடுக்கும்போது நீ சத்தம் போட்டுக் காட்டிக்கொடுத்துவிடமாட்டாயே?’ என்று கேட்டான்.

‘அடியேன்’ என்றது மணி.

இதைக் கேட்ட கண்ணன் சந்தோஷமாக மேலே ஏறி வெண்ணெயை எடுத்தான். சாப்பிட ஆரம்பித்தான்.

உடனே, அந்த மணி பலமாக ஒலித்தது. கண்ணன் கோபமாக, ‘மணியே, அடிக்கமாட்டேன் என்று என்னிடம் சொன்னாயே’ என்றான் அந்தா மணியிடம்.

‘இல்லை கண்ணா’ என்றது அந்த மணி, ‘நான் அடியேன் என்றுதான் சொன்னேன், அதை நீ அடிக்கமாட்டேன் என்று புரிந்துகொண்டால் அதற்கு நானா பொறுப்பு?’

‘அடியேன் என்றால் அடிக்கமாட்டேன் என்றுதானே அர்த்தம்?’

’ம்ஹூம்’ என்று குறும்பாகச் சிரித்தது அந்த மணி, ‘நான் சொன்னதன் அர்த்தம், நான் உனக்கு அடியவன், என்னுடைய தெய்வம் நீ சாப்பிடும்போது நான் அதைப் பார்த்து மகிழ்ச்சியாகச் சத்தம் போடுகிறேன்!’

இங்கே ‘அடியேன்’ என்பது ஒரு சொல். அதைக் கண்ணன் எப்படிப் புரிந்துகொண்டான்?

”அடியேன்”, அதாவது அடிக்கமாட்டேன். வினை முற்று.

ஆனால் அந்த மணி, அதே ‘அடியேன்’ என்ற சொல்லை எப்படிச் சொன்னது?

“அடியேன்”, அதாவது அடிபணிந்து நிற்கிற நான், வினையாலணையும் பெயர்!

கதை சரி, “அடியேன்” என்பது உண்மையிலேயே வினையாலணையும் பெயர்தானா? அல்லது, தொழில் பெயரா? நாம் ஏற்கெனவே தெரிந்துகொண்ட இந்த இரண்டு விஷயங்களை வைத்துப் பரிசோதித்துப்பாருங்கள்:

* வினையாலணையும் பெயர் காலம் காட்டவேண்டும், தொழில் பெயர் காலம் காட்டாது, “அடியேன்” என்பதில் காலம் தெரிகிறதா?

* வினையாலணையும் பெயர் தன்மை, முன்னிலை, படர்க்கை என்று மூன்றிலும் வரவேண்டும், ஆனால் தொழில் பெயர் படர்க்கையில்மட்டும் வரும், “அடியேன்” என்பது தன்மையா, முன்னிலையா, படர்க்கையா?

ஒருவேளை “அடியேன்” என்பது வினையாலணையும் பெயர் என்றால், அதற்குச் சமமான தொழில் பெயர் என்ன? ஒருவேளை அது தொழில் பெயர் என்றால், அதற்குச் சமமான வினையாலணையும் பெயர் என்ன?

இதைப்பற்றி யோசித்துவையுங்கள். அடுத்த அத்தியாயத்தில் பகுபதத்தைப் பகுத்துப் படிப்போம்.

அதற்குமுன்னால், இந்த அத்தியாயத்தில் நாம் பார்த்த முக்கியமான சொற்கள் / தலைப்புகள் / Concepts பட்டியலை இங்கே தருகிறேன், எதற்கு என்ன அர்த்தம், என்ன உதாரணம் என்று நினைவுபடுத்திப் பாருங்கள், ஏதேனும் புரியாவிட்டால், சிரமம் பார்க்காமல் மேலே சென்று ஒருமுறை படித்துவிடுங்கள்.

* பெயர்ச்சொல் வகைகள் (பொருள், இடம், காலம், சினை / உறுப்பு, குணம், தொழில்)
* வினைச்சொல் வகைகள் (முற்று, எச்சம்)
* எச்சத்தின் வகைகள் (பெயர், வினை)
* தெரிநிலை வினை முற்று
* வினையாலணையும் பெயர்
* வினையாலணையும் பெயர், தொழில் பெயர் வித்தியாசம்
* தன்மை, முன்னிலை, படர்க்கை

0

கூட்டணி குறித்து தமிழ் என்ன சொல்கிறது?

coalitionஅம்மா, ஆடு, இலக்கணம் / அத்தியாயம் 12

ஒரு வகுப்பில் பதினெட்டு பையன்கள். இவர்களில் நான்கு பேர்மட்டும் தனிமை விரும்பிகள். இவர்கள் தங்களுக்குள்ளும் பழகமாட்டார்கள். தனக்குத் தானே பழகிக்கொள்வார்கள். அந்தப் பதினெட்டு பையன்கள், தமிழில் உள்ள பதினெட்டு உயிரெழுத்துகள். அவற்றுள் நான்குமட்டும் தனிமை விரும்பிகள். அவை: க், ச், த் & ப்.

அதாவது, இந்த நான்கு எழுத்துகளுக்குப் பின்னால் வேறு மெய்யெழுத்துகள் வராது. அதே எழுத்துதான் வரும்.

உதாரணமாக, ‘உப்பு’ என்ற சொல்லில் ‘ப்’ என்ற மெய்யெழுத்தைத் தொடர்ந்து மீண்டும் ‘ப்’ வந்துள்ளது (உ + ப் + ப் + உ), அதேபோல் ‘சொத்து’ என்ற சொல்லில் ‘த்’ என்ற மெய்யெழுத்தைத் தொடர்ந்து மீண்டும் ‘த்’ வந்துள்ளது (ச் + ஒ + த் + த் + உ).

இதுபோல, மேலே நாம் பார்த்த அந்த நான்கு எழுத்துகளும் தங்களுடன்மட்டுமே மயங்கும். மற்ற எந்த மெய்யெழுத்துகளுடனும் மயங்காது. ‘க்’ என்ற எழுத்து வந்துவிட்டால், அதற்குப்பின்னால் க், க, கி, கெ, கோ என்பதுபோன்ற அதே வர்க்க எழுத்துமட்டும்தான் வரும். இதேபோல்தான் ச், த், ப் போன்றவையும்.

ஆனால் ஒன்று, இந்த எழுத்துகளுக்கு முன்னால் வேறு மெய்யெழுத்துகள் வரலாம். உதாரணமாக, ‘பந்து’ (ப் + அ + ந் + த் + உ) என்ற சொல்லில் ‘த்’ என்ற மெய்யெழுத்துக்கு முன்பாக ‘ந்’ என்ற வேறொரு மெய்யெழுத்து வந்துள்ளது.

அடுத்து, மீதமுள்ள பதினான்கு பையன்களைப் பார்ப்போம். நாம் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல், இவர்கள் தனிமை விரும்பிகள் இல்லை, மற்றவர்களுடன் கலந்து பழகுவார்கள்.

உதாரணமாக, ‘பாய்ச்சல்’ என்ற சொல்லில் ‘ய்’க்கு அடுத்து ‘ச்’ வருகிறது, ‘நேர்த்தி’ என்ற சொல்லில் ‘ர்’க்கு அடுத்து ‘த்’ வருகிறது. இப்படி ஆயிரக்கணக்கில் எடுத்துக்காட்டுகளை அடுக்கமுடியும்.

அப்படியானால், இந்தப் பதினான்கு எழுத்துகளும் எப்படி வேண்டுமானாலும் மற்ற எழுத்துகளுடன் கூட்டணி சேரலாமா?

இல்லை. அதற்கும் சில தெளிவான வரையறைகள் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். இங்கே குறிப்பிடப்பட்டுள்ளவற்றைத்தவிர மற்ற Combinations வராது என்று நீங்களே புரிந்துகொள்ளலாம்.

 1. ‘ங்’க்குப் பின்னால் ‘க்’ வரும். உதாரணம்: ப’ங்கு’ கொடு த’ங்கை’யே
 2. ‘வ்’க்குப் பின்னால் ‘ய்’ வரும். இது அவ்வளவாகப் பயன்பாட்டில் இல்லை. ‘தெவ்யாது’ என்ற புழக்கத்தில் இல்லாத சொல்லை உதாரணமாகக் கேள்விப்பட்டேன், நமக்குத் தெரிந்த சொல்தான் வேண்டும் என்று ரொம்ப யோசித்தால், ‘காவ்யம்’ என்கிற (வடமொழிச்) சொல் தோன்றுகிறது. இவைதவிர வேறு ஏதேனும் நல்ல, பிரபலமான தமிழ்ச் சொல் உங்களுக்குத் தோன்றினால் சொல்லுங்கள்
 3. ‘ஞ்’க்குப் பின்னால் ‘ச்’ வரும். உதாரணம்: ப’ஞ்சு’ மெத்தையில் த’ஞ்ச’ம் அடைந்தேன்
 4. ‘ந்’க்குப்பிறகு ‘ய்’ வரும். இதுவும் அவ்வளவாகப் பயன்பாட்டில் இல்லை. பொருந்யாது என்பதுபோன்ற சில புழக்கத்தில் இல்லாத சொற்களை உதாரணமாகச் சொல்கிறார்கள்
 5. ‘ட்’க்குப் பின்னால் ‘க்’, ‘ச்’, ‘ப்’ ஆகியவை வரும். உதாரணம்: தொலைக் கா’ட்சி’, வானொலியில் கே’ட்ப’தையெல்லாம் உண்மை என்று நம்பிவிடலாமா? வெ’ட்க’மாக இல்லையா?
 6. ‘ற்’க்குப் பின்னாலும் அதே ‘க்’, ‘ச்’, ‘ப்’ ஆகியவை வரும். உதாரணம்: தமிழைக் க’ற்க’வேண்டும் என்று இங்கே வந்தேன், அதில் நல்ல பயி’ற்சி’ எடுத்துக்கொண்டேன், க’ற்பி’த்த உங்களுக்கு நன்றி.
 7. ‘ண்’க்குப் பின்னால் ‘ட்’, ‘க்’, ‘ச்’, ஞ்’, ‘ப்’, ‘ம்’, ‘ய்’, ‘வ்’ ஆகிய ஒன்பது மெய்யெழுத்துகளும் வரும். சில உதாரணங்கள்: வ’ண்டி’, பெ’ண்க’ள், ப’ண்பா’டு, ஆ’ண்மை’ போன்றவை
 8. ‘ன்’க்குப் பின்னால் மேலே சொன்ன அந்த எட்டு மெய்யெழுத்துகளில் ‘ட்’ தவிர மீதமுள்ள எல்லாம் வரும். கூடுதலாக, ‘ற்’ வரும். சில உதாரணங்கள்: ந’ன்றி’, ந’ன்மை’, இ’ன்ப’ம், எ’ன்கி’றான் போன்றவை
 9. ‘ம்’க்குப் பின்னால் ‘ப்’, ‘ய்’ மற்றும் ‘வ்’ ஆகியவை வரும். இதில் முதலாவதாக வரும் ம் + ப் கூடணிக்குப் பிரபலமான உதாரணங்கள், தம்பி, கம்பி, எம்பி, நம்பி போன்றவை. அடுத்து வருகிற ம் + ய், ம் + வ் கூட்டணிச் சொற்கள் அதிகப் பயன்பாட்டில் இல்லை
 10. ‘ய்’, ‘ர்’, ‘ழ்’ ஆகிய எழுத்துகளுக்குப் பின்னால், ‘க்’, ‘ச்’, ‘த்’, ‘ப்’, ’ந்’, ‘ம்’, ’ஞ்’, ‘ய்’, ‘வ்’, ‘ங்’ ஆகிய பத்து மெய்யெழுத்துகளும் வரும். சில உதாரணங்கள்: பொ’ய்கை’, பா’ர்த்’தேன், வா’ழ்க்’கை, சூ’ர்யா’, வா’ழ்வா’ன் போன்றவை
 11. ‘ல்’, ‘ள்’ ஆகிய மெய்யெழுத்துகளுக்குப் பின்னால், ‘க்’, ‘ச்’, ‘ப்’, ‘வ்’, ‘ய்’ ஆகிய ஐந்து மெய்யெழுத்துகளும் வரும். சில உதாரணங்கள்: ந’ல்கி’னான், க‘ல்வி’, க’ல்யா’ணம், கே’ள்வி’ போன்றவை

கொஞ்சம் நீளமான பட்டியல்தான். நல்லவேளையாக, இத்தனையையும் நினைவில் நிறுத்தவேண்டிய அவசியம் இல்லை. அவ்வப்போது சந்தேகம் வரும்போது எடுத்துப் பார்த்துக்கொள்வதற்காக வைத்துக்கொண்டால் போதும்.

ஒருவழியாக மயக்கத்திலிருந்து வெளியே வருகிறோம். மீண்டும் பகுபதம், பகாப்பதம் ஆகியவற்றைப்பற்றி விரிவாகப் பார்க்கத் தொடங்குவோம்.

பகுபதத்துக்கும் பகாப்பதத்துக்கும் எல்லை வகுத்திருக்கிறது தமிழ் இலக்கணம். அதாவது, இவற்றில் அதிகபட்சமாக எத்தனை எழுத்துகள் இடம்பெறலாம் என்கிற எல்லை.

* பகாப்பதம் : 2 முதல் 7 எழுத்துகள்
* பகுபதம் : 2 முதல் 9 எழுத்துகள்

அப்படியானால் தமிழில் ஒன்பது எழுத்துகளுக்குமேல் கொண்ட தனிச் சொற்களே இல்லையா?

அப்படி வெளிப்படையாகக் குறிப்பிடப்படாவிட்டாலும், நன்னூலில் உள்ள பகுபத, பகாப்பத இலக்கணத்தின்படி, தமிழில் இந்த எல்லையைவிட அதிக எழுத்துகளைக் கொண்ட சொற்கள் இருக்கமுடியாது என்றே தோன்றுகிறது. நான் யோசித்தவரை அத்துணை பெரிய சொற்கள் எவையும் அகப்படவில்லை. அப்படியே தென்பட்டாலும் அவற்றைத் தனித்தனிச் சொற்களாகப் பிரித்துவிடமுடிகிறது.

உங்களுக்குத் தெரிந்து ஒன்பது எழுத்துக்குமேல் கொண்ட தமிழ்ச் சொல் ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள். அலசுவோம்.

இப்போது, பகாப்பதத்தில் உள்ள நான்கு வகைகளைப் பார்ப்போம். ஏற்கெனவே பார்த்ததுபோல், இவை பிரிக்கமுடியாத, பிரிக்கக்கூடாத சொற்கள்:

* பெயர்ப் பகாப்பதம்
* வினைப் பகாப்பதம்
* இடைப் பகாப்பதம்
* உரிப் பகாப்பதம்

முதல் இரண்டையும் விளக்குவது எளிது, பெயர்ச்சொல் என்றால் ஒரு பொருளையோ, மனிதரையோ குறிப்பிடுவது, ஆங்கிலத்தில் Noun. வினைச்சொல் என்றால், ஒரு செயலைக் குறிப்பிடுவது, ஆங்கிலத்தில் Verb.

உதாரணமாக, ‘பேனா’ என்பது பெயர்ச்சொல். ‘எழுது’ என்பது வினைச்சொல். இரண்டும் பகாப்பதங்கள். ஆகவே, ‘பெயர்ப் பகாப்பதம்’, ‘வினைப் பகாப்பதம்’ என்று இவற்றைக் குறிப்பிடலாம்.

அடுத்து, இடை, உரி… சேர்த்துப் படித்தால் ரொம்பக் கவர்ச்சியாகத் தோன்றுகிறதே! ‘இடை உரி’ என்றால் இடுப்பில் கட்டிய ஆடை என்றுதான் அர்த்தம்.

தமிழில் ‘இடைச்சொல்’ என்றால், அவை தனித்து இயங்காது, இன்னொரு பெயர்ச்சொல் அல்லது வினைச்சொல்லுடன் சேர்ந்துதான் இயங்கும்.

உதாரணமாக, ‘பாண்டியனும் சேரனும் வந்தார்கள்’ என்பதைப் ‘பாண்டியன்’ + ‘உம்’, ‘சேரன்’ + ‘உம்’ என்று பிரிக்கிறோம். இதில் பாண்டியன், சேரன் பெயர்ச் சொற்கள். ‘உம்’ என்பது இடைச்சொல். அது தனியே வராது, வந்தாலும் அதற்குப் பொருள் இருக்காது.

இதேபோல், ‘எழுதுவதுபோல நடித்தான்’ என்பதை ‘எழுதுவது’ + ‘போல’ + ‘நடித்தான்’ என்று பிரிக்கிறோம். இதில் எழுதுவது, நடிப்பது வினைச் சொற்கள், ‘போல’ என்பது இடைச்சொல். இதுவும் தனியே வராது.

ஆனால், இதை ஏன் ‘இடைச்சொல்’ என்று சொல்லவேண்டும்? அது பாண்டியன், சேரனுக்குப் பின்னால்தானே வருகிறது? ‘கடைச்சொல்’ என்றால் பொருத்தமாக இருக்குமல்லவா?

‘இடைச்சொல்’ என்றால் என்ன பொருள்? இதற்கு முன்னால் ஒரு சொல், பின்னால் ஒரு சொல் வருகிறது என்பதுதானே அர்த்தம்?

அதன்படி, மேலே உள்ள வாக்கியங்களை ஒருமுறை பாருங்கள். பாண்டியன், உம், சேரன், உம், வந்தார்கள் என்று ஒரு வாக்கியம், எழுதுவது, போல, நடித்தான் என்பது இன்னொரு வாக்கியம். இதில் வருகிற இரண்டு ‘உம்’கள், ஒரு ‘போல’ அனைத்துக்கும் முன்னால், பின்னால் வெவ்வேறு சொற்கள் உள்ளன. இல்லையா?

அதுதான் இடைச்சொல்லின் இலக்கணம். அதற்கு முன்னால் பெயர்ச்சொல்லோ வினைச்சொல்லோ வரும், அதற்குப் பின்னாலும் ஒரு சொல் வந்தால்தான் அந்த வாக்கியம் முடிவடையும். வெறுமனே ‘பாண்டியனும்’ என்றால் அந்த வாக்கியத்துக்குப் பொருள் இல்லை. வெறுமனே ‘எழுதுவதுபோல’ என்றாலும் அந்த வாக்கியத்துக்குப் பொருள் இல்லை.

ஆக, அது இடைச்சொல்தான். கடைச்சொல் இல்லை!

நிறைவாக, ‘உரிச்சொல்’. இதுவும் பெயர்ச் சொல், வினைச் சொல்லைச் சார்ந்து இயங்குவதுதான். ஆனால் இடைச்சொல்லுக்கும் இதற்கும் முக்கியமான வித்தியாசங்கள் இரண்டு:

* இடைச்சொல் என்பது, பெயர்ச்சொல், வினைச்சொல்லுக்குப்பின்னால் வரும்
* உரிச்சொல் என்பது, பெயர்ச்சொல், வினைச்சொல்லுக்கு முன்னால் வரும்
* இடைச்சொல் ஒரு குறிப்பிட்ட அம்சத்தைப் பேசுவது அல்ல, பொதுவானது, பலவிதங்களில் பயன்படுவது
* உரிச்சொல் ஒரு பண்பையோ, குணத்தையோமட்டும் குறிப்பிடும்

உதாரணமாக, ‘அவன் ரொம்பப் பேசறான்’ என்கிறோம். இதில் ‘அவன்’ பெயர்ச்சொல், ‘பேசுவது’ வினைச்சொல், ‘ரொம்ப’ என்பது உரிச்சொல், பேசுவதன் தன்மையைச் சொல்கிறது அது.

உண்மையில் ‘ரொம்ப’ என்பது சரியான சொல்லே இல்லை. ‘நிரம்ப’ என்பதன் சிதைந்த வடிவம்தான் அது. விஷயத்தை எளிமையாகப் புரியவைப்பதற்காக அதனை முதல் உதாரணமாகப் பயன்படுத்தினேன்.

சரியான உதாரணங்களைச் சொல்லவேண்டுமென்றால், தமிழின் பிரபலமான உரிச்சொற்கள் இவை: சால, நனி, உறு, தவ, கூர், கடி…

‘என்னய்யா, பிரபலம்ன்னு சொல்றீங்க. ஆனா, இதையெல்லாம் நாங்க கேள்விப்பட்டதே இல்லையே!’ என்கிறீர்களா? அது இலக்கணத்தின் பிழை அல்லவே!

‘சால’ என்ற முதல் சொல்லைமட்டும் எடுத்துக்கொள்வோம். இதற்குச் ‘சிறந்த’ அல்லது ‘நிறைய’ என்கிற பொருள். தெலுங்கில் இதனை இன்றும் அதே அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்கள். தமிழில் ‘சாலச் சிறந்தது’ என்று எப்போதாவது அபூர்வமாக எழுதுவதோடு சரி. பேச்சுவழக்கில் காணாமலே போய்விட்ட அருமையான சொல் இது.

உரிச்சொற்கள் அனைத்துமே எழுத, பேச அழகானவைதான். ‘கடி மனை’ என்றால் காவல் அதிகமுள்ள வீடு என்று பொருள். இதனை இன்றைக்கு எங்கெல்லாம் பயன்படுத்தலாம் என்று யோசித்துப்பாருங்கள். ஏன் பயன்படுத்துவதில்லை?

இப்படித் தமிழில் நாம் பயன்படுத்தாமல் ஒட்டடை படிய விட்டிருக்கும் சொற்களைமட்டும் திரட்டினாலே போதும், அந்தப் பட்டியலே மற்ற பல மொழிகளின் சொல்வளத்தைவிடச் சிறந்ததாக இருக்கும்.

அந்த வம்பு நமக்கெதற்கு. அடுத்து, பகுபதத்தின் வகைகளுக்கு வருவோம்.

பகுபதத்தில் இரண்டே வகைகள்தான். பெயர்ப் பகுபதம், வினைப் பகுபதம். மீதமுள்ள இடைச்சொல், உரிச்சொல் இரண்டும் பகாப்பதங்களாகமட்டுமே வரும்.

பெயர்ப் பகுபதம் எதன் அடிப்படையில் பிறக்கிறது என்பதை வைத்து அதில் ஆறு வகைகள் உண்டு. அவை:

* பொருள்
* இடம்
* நேரம்
* உறுப்பு
* குணம்
* தொழில்

இது மிகவும் சுவாரஸ்யமான வகைபாடு. இந்த ஆறு வகைகளைப்பற்றியும் உரிய உதாரணங்களுடன் அடுத்த அத்தியாயத்தில் விரிவாகப் பேசுவோம்.

அதற்குமுன்னால், இந்த அத்தியாயத்தில் நாம் பார்த்த முக்கியமான சொற்கள் / தலைப்புகள் / Concepts பட்டியலை இங்கே தருகிறேன், எதற்கு என்ன அர்த்தம், என்ன உதாரணம் என்று நினைவுபடுத்திப் பாருங்கள், ஏதேனும் புரியாவிட்டால், சிரமம் பார்க்காமல் மேலே சென்று ஒருமுறை படித்துவிடுங்கள்.

 • தனிமை விரும்பி எழுத்துகள் (தங்களுக்குப் பின்னால் மற்ற மெய்யெழுத்துகளை அனுமதிக்காது) (4)
 • மற்ற மெய்யெழுத்துகளுடன் கலந்து பழகும் எழுத்துகள் (14)
 • அனுமதிக்கப்பட்டுள்ள கூட்டணிகள்: ங்க், வ்ய், ஞ்ச், ந்ய், ட்க், ட்ச், ட்ப், ற்க், ற்ச், ற்ப், ண்ட், ண்க், ண்ச், ண்ஞ், ண்ப், ண்ம், ண்ய், ண்வ், ன்ற், ன்க், ன்ச், ன்ஞ், ன்ப், ன்ம், ன்ய், ன்வ், ம்ப், ம்ய், ம்வ், ய்க், ய்ச், ய்த், ய்ப், ய்ந், ய்ம், ய்ஞ், ய்ய், ய்வ், ய்ங், ர்க், ர்ச், ர்த், ர்ப், ர்ந், ர்ம், ர்ஞ், ர்ய், ர்வ், ர்ங், ழ்க், ழ்ச், ழ்த், ழ்ப், ழ்ந், ழ்ம், ழ்ஞ், ழ்ய், ழ்வ், ழ்ங், ல்க், ல்ச், ல்ப், ல்வ், ல்ய், ள்க், ள்ச், ள்ப், ள்வ், ள்ய்
 • பகாப்பத எல்லை (2 முதல் 7)
 • பகுபத எல்லை (2 முதல் 9)
 • பகாப்பத வகைகள் (4)
 • பகுபத வகைகள் (2)
 • பெயர்ச் சொல் பகுபதம் வகைகள் (6)

0