சபாஷ் ‘சுபாஷ்’

netajiஇளைஞர்களிடம், உங்களுடைய ரத்தத்தை என்னிடம் தாருங்கள். நான் உங்களுக்கு விடுதலை வாங்கித் தருவேன்’’ என்று விடுதலைக்கு ரத்தத்தை விலைபேசி ஆண்களையும் பெண்களையும் திரட்டி, ஒரு ராணுவத்தை உருவாக்கி, ஒன்பது நாடுகளின் ஆதரவினைப் பெற்று பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடிய வீரத்திருமகன் நேதாஜி. நேதாஜி என்றால் இந்தியில் “மரியாதைக்குரிய தலைவர்“ என்று பொருள்.

முகம்மது ஜியாவுதீன், ஓர்லாண்டோ மசோட்டா, கிளாசி மாலங், பகவான்ஜி, கும்நாமி பாபா,  சவுல்மரி, இச்சிரோ உக்குடா போன்ற பல பெயர்களில் உலகின் பல பகுதிகளில் நேதாஜி உலவியிருக்கிறார். உலகின் மிகச்சிறந்த போராளி செய்யவேண்டிய அனைத்து செயல்களையும் தவறாமல் செய்தவர். அப் போராளி எதிர்கொள்ளவேண்டிய அனைத்து சிக்கல்களையும் துணிவுடன் எதிர்கொண்டவர். அப் போராளி பெறவேண்டிய பெரும் புகழினையும் பெற்றவர்.

தனிமையில் இனிமை

ஒடிசாவின், கட்டாக்கில், ஜானகிநாத் போஸ் – பிரபாவதிதேவி என்ற ஓர் இந்து வங்காளித் தம்பதியருக்கு 15 குழந்தைகள் பிறந்தன. அதில் ஒன்பதாவது குழந்தையாக 23.01.1897ஆம் நாள் சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார். போஸ்க்கு எட்டு சகோதர்கள் மற்றும் ஆறு சகோதரிகள் இருந்தனர். போஸின் தந்தை பிரபலமான வழக்கறிஞர். நிறைய பணம் புலங்கியது. பெரிய வீடு. நிறைய உறவு. ஆனால், போஸ் தனிமையை விரும்பினார்.

ஆரம்பக்கல்வி பயில்வதற்காக ஐந்து வயதில் போஸை ப்ராட்டஸ்டன்ட் ஐரோப்பிய பள்ளியில் சேர்த்தனர். பிரிட்டிஷாரைகிலப் பாடம் அவருக்கு ஒத்துவரவில்லை. குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் போதனை அவரைக் கவர்ந்தது. ஆன்மிகத்தில் மனம் ஈடுபட்டது. பள்ளியில் அவருக்கு பைபிள் போதிக்கப்பட்டது. கிறித்துவத்திற்கும் இந்துத்துவத்திற்கும் இடையில் ஊசலாடினார்.

1913ஆம் கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில்  உயர் கல்வியை முடித்து அதில் முதல் மாணவனாகத் தேர்ச்சிபெற்றார். தன்னுடைய 16ஆம் வயதில் வீட்டைவிட்டு வெளியேறினார். தனிமை அவருக்கு இன்பத்தையும் நிம்மதியையும் அளித்த்து. காசி, ஹரித்துவார், பிருந்தாவனம் எனப் பல ஆன்மிகத்தளங்களுக்குச் சென்றார். சந்நியாசிகளிடமும் மத, சாதி காழ்ப்புணர்வுகள் இருப்பதைக் கண்டு ஆன்மிகத்தில் வெறுப்படைந்தார். வீடுதிரும்பினார்.

முதல் எதிர்ப்பு

1915 ஆம் ஆண்டு “கொல்கத்தா ப்ரெசிடென்ஸி கல்லூரியில்” சேர்ந்தார். அங்குப் பணியாற்றிய சி.எப். ஓட்டன் என்ற பிரிட்டிஷ் பேராசிரியர் இந்தியர்களை இழிவாகப் பேசியதும் நடத்தியதும் போஸால் சகிக்கமுடியவில்லை. மாணவர்களைத் திரட்டி ஓட்டனைத் தாக்கினார். இந்தியர்களுக்காகப் பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து போஸ் நடத்திய முதல் போர் இது.

ஓட்டன் தாக்குதல் தொடர்பாக போஸ் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் 1917ஆம் ஆண்டு சேர்ந்தார். 1919ஆம் ஆண்டு பி.ஏ. படிப்பினை முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றார்.

பஞ்சாப்பிலுள்ள அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு அருகில் உள்ள ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் 13.04.1919ஆம் நாள் நடத்தப்பெற்ற படுகொலை போஸைக் கலங்கச்செய்தது. பிரிட்டிஷ் எதிர்ப்புணர்வு அவருக்குள் மிகுந்தது. ஆனால், காலம் வேறுவிதமாகக் காய்களை நகர்த்தியது. போஸ் வெறுக்கும் பிரிட்டனுக்கே அவரை அனுப்பிக் கல்வி கற்க வைத்தது.

சுதந்திர தாகம்

தந்தையின் விருப்பத்திற்கு ஏற்ப ஐ.சி.எஸ். படிப்புக்காக லண்டன் சென்றார். 1920 ஐ.சி.எஸ். தேர்வினை எழுதினார். நான்காவது மாணவராகத் தேர்ச்சிபெற்றர். அங்கு வந்திருந்த சரோஜினி தேவி இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அவ் உரை போஸைக் கவர்ந்தது. அது புதிய தெம்பினை அவருக்கு அளித்தது. இந்தியாவில் காந்தி புதிய வீச்சுடன் பிரிட்டிஷ் எதிர்ப்புணர்வை இந்தியர்கள் மத்தியில் தூண்டிக்கொண்டிருந்தார். இந்தியா சென்று விடுதலைப்போரில் பங்கெடுக்க வேண்டும் என்று போஸ் விரும்பினார்.

1921ஆம் ஆண்டு மே மாதம் தன்னுடைய ஐ.சி.எஸ். பதவியை ராஜனாமா செய்தார். 26.07.1921 ஆம் நாள் மும்பை வந்தார். காந்தியைச் சந்தித்தார். அவர் கல்கத்தாவில் உள்ள சி. ஆர். தாஸைச் சந்திக்கும்படிக் கூறினார். சென்றார். சந்தித்தார். சி.ஆர். தாஸ், போஸின் துணிவினையும் பலத்தினையும் புரிந்துகொண்டார். தன் வலது கரமாகப் போஸை வைத்துக்கொண்டார்.

சிறிய வயதில் பெரிய பதவி

கல்கத்தாவில் தேசியக் கல்லூரி தொடங்கப்பட்டது. அதன் தலைவராக 25 வயதான போஸ் நியமிக்கப்பட்டார். மாணர்கர்களுக்குப் பாடம் நடத்தும் பாங்கில் சுதந்திர உணர்வை ஊட்டினார்.

முதல் உலகப்போரில் பிரிட்டன் சார்பாக இந்திய வீரர்கள் கலந்துகொண்டமையைப் பாராட்டும் வகையில் வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்தார். அப்போது இந்தியாவின் வைசிராயராக லார்ட் ரீடிங் இருந்தார். அவர் இளவரசருக்கு இந்தியாவைச் சுற்றிக்காண்பிக்க எண்ணினார். இத்தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டு இந்தியர்கள் பிரிட்டிஷ் எதிர்ப்பினை வலுவாகக் காட்டவேண்டும் என்று ரகசியமாகத் திட்டமிடப்பட்டது.

இந்தியா முழுவதும் நாடு தழுவிய வேலைநிறுத்தம், கடையடைப்பு, வீட்டிற்குள் இருத்தல் என்ற முறையில் இளவரசருக்கு ஓர் இந்தியரும் தன் முகத்தைக்காட்டக்கூடாது என்று உறுதிகொண்டனர். இதுகுறித்து இந்தியாவின் பல இடங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

கல்கத்தாவில் பிரச்சாரம் செய்யும் குழுவிற்குத் தலைவராகப் போஸை சி.ஆர். தாஸ் நியமித்தார். கல்கத்தாவைப் போஸ் தன் கண்ட்ரோலுக்குக் கொண்டுவந்தார். 17.11.1921இல் இளவரசர் பம்பாய் வந்தார். அந்த இடம் மனிதர்கள் வாழா இடம்போலக் காட்சியளித்தது. கல்கத்தா வந்தார். அங்கு மயான அமைதி நிலவியது. திட்டமிட்டபடியே போராட்டம் சக்சஸ். கல்கத்தாவில் மட்டும் டபுள் சக்சஸ்.

சி.ஆர். தாஸ் போஸைப் பெரிதும் பாராட்டினார். இதற்குக் காரணம் போஸ்தான் என்பதனை அறிந்த பிரிட்டிஷாருக்கு வியர்த்தது. காரணம், பிரிட்டிஷாரைப் பொறுத்தவரை போஸ் பற்றி ஐந்து கருத்துகள் இருந்தன. ஓர் அகிம்சை வாதி, காந்தியின் நண்பர், ஆபத்தில்லாதவர், ஒரு திவிரவாதி, சிக்கலான ஆள். இவை ஒன்றுக்கொன்று முரண்பாடானவை. பிரிட்டிஷார் கூட்டிக் கழித்துப் பார்த்து ஒரு முடிவிற்கு வந்தனர். போஸைக் கைதுசெய்து ஆறு மாதம் சிறைத்தண்டனை விதித்தனர். அதன்பின் போஸ் பிரிட்டிஷாரின் கண்காணிப்புக்கு ஆளானார்.

கட்சியும் பதவியும்

காந்தியின் போராட்டங்களில் சி.ஆர். தாஸ்க்கு நம்பிக்கையில்லை. சட்டசபைத்தேர்தலில் இந்தியர்கள் பங்கேற்கவேண்டும் என்று அவர் காந்திக்குக் கோரிக்கைவிடுத்தார். காந்தி அதனை ஏற்கவில்லை. காந்தி கோஷ்டி – தாஸ் கோஷ்டி என்ற இரு பிரிவாக இந்தியர்கள் பிரிந்தனர். நேரு இரண்டு கோஷ்டிக்கும் நடுவில் நின்றார்.

தாஸ் சுயராஜ்ஜியக் கட்சியினைத் தொடங்கினார். ஃபார்வர்ட் என்ற பிரிட்டிஷாரைகில நாளிதழினைத் தொடங்கினார். அப் பத்திரிகையின் ஆசிரியராகப் போஸை நியமித்தார். இச்சூழலில் மத்திய சட்டசபை மற்றும் மாகாண அசெம்ப்ளிக்கான தேர்தல் வந்தது. அதில் இரண்டிலும் சுயராஜ்ஜியக் கட்சி வெற்றிபெற்றது. கல்கத்தா கார்ப்பரேஷன் மேயராக 27 வயதான போஸ் நியமிக்கப்பட்டார்.

இத்தருணத்தில் போஸின் மனநிலை பற்றி மருதன் தன்னுடைய “சுபாஷ் மர்மங்களின் பரம பிதா“ என்ற நூலில், “போஸ்க்கு இது முதல் முக்கியப் பதவி. “இதோ இந்தியா! உன் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்துகொள்!“ என்று அவரது உள்ளங்கையைப் பிரித்து அதில் ஒரு தேசத்தை வைத்து அழுத்தி மூடியதைப் போல் அவர் சிலிர்த்துக் கொண்டார். ஒரு குழந்தையைப் போல உள்ளங்கையை விரித்து விரித்துப் பார்த்துப் பூரித்துப் போனார். அடிமனத்தில் தேங்கிக் கிடந்த அத்தனை ஆசைகளையும் நிறைவேற்றிடத் துடித்தார்.“ என்று எழுதியுள்ளார். ஆம் அத்தகைய மனநிலையைத்தான் போஸ் அடைந்தார்.

அதிரடி மாற்றங்கள்

பதவியேற்றதும் போஸ் தன் ஊதியத்தைப் பாதியாகக் குறைத்துக்கொண்டார். கார்ப்பரேஷன் ஊழியர்களின் சீருடையைக் கதர்த்துணியாக மாற்றினார். பிரிட்டிஷாரின்  பெயர்களைக் கொண்ட பொதுக் கட்டடங்கள் மற்றும் தெருக்களின் பெயர்களை மாற்றித் தேசியப் பெயர்களை இட்டார். பிரிட்டிஷார் வழங்கிவந்த பாராட்டுப் பட்டங்களையும் சான்றிதழ்களையும் நிறுத்தினார். இன்னும் பல மாற்றங்களால் பிரிட்டிஷார் உஷாரானனர். பிறகென்ன கைதுதான்.

கைது – கலவரம் – விடுதலை

போஸ்மீது கிரிமினல் குற்றம் சாட்டப்பெற்று 25.10.1924ஆம் நாள் அதிகாலை கைதுசெய்யப்பட்டார்.போஸ்க்கு ஆதரவாகக் கல்கத்தாவில் கலவரம் ஏற்பட்டது. ஆதலால் பிரிட்டிஷார் போஸை மாண்டலே சிறைக்கு மாற்றினர். அங்குப் போஸ்க்குக் கடும் நோய் ஏற்பட்டது. இந்நிலையில் சி.ஆர். தாஸ் காலமானார். போஸ் நிர்க்கதிக்குள்ளானார். 1926ஆம் ஆண்டு போஸ் சிறையிலிருந்தபடியே சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனாலும் பிரிட்டிஷார் போஸை விடுதலை செய்யவில்லை. நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் 15.05.1927ஆம் நாள் போஸ் விடுதலை செய்யப்பட்டார்.

கட்சியில் பிளவு

தாஸின் சுயராஜ்ஜிய இயக்கத்தை அவருக்குப்பின் அவரது மனைவி வசந்திதேவி முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று போஸ் விரும்பினார். ஆனால், வசந்திதேவியின் விருப்பப்படி போஸே தலைமைதாங்கினார். அது போஸின் அளவிற்கு இயக்கத்தில் ஈடுபட்டுவந்த சென்குப்தாவுக்குப்  பிடிக்கவில்லை. ஆதலால் இயக்கம் இரண்டாகப் பிளவுபட்டது.

ஃபார்வர்ட் பத்திரிகைக்கு எதிராகச் சென் குப்தா “அட்வான்ஸ்“ என்ற பத்திரிகையைத் தொடங்கினார். தனித்தனியே தேர்தலில் நின்றனர். காந்தி இருவருக்கும் இடையில் நின்று சமரசம் செய்தார். ஆதலால் சென் குப்தா தேர்தலிலிருந்து விலகினார். ஆனாலும் போஸ், ஒன்பது வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். அடுத்துவந்த வங்க மாகாணத் தேர்தலில் போஸ் நின்றார். வென்றார்.

அதிருப்தி அளித்த காந்தி

1928ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அகில இந்திய காங்கிரஸின் மாநாடு கல்கத்தாவில் நடைபெற உள்ளதாக காந்தி அறிவித்தார். மாநாடு ஏற்பாடுகளைப் போஸ் கவனித்தார். மாநாட்டில் நேரு, “குடியேற்ற நாடு என்னும் அந்தஸ்தைப் பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு வழங்கவேண்டும்“ என்று தீர்மானம் நிறைவேற்றினார். இது போஸ்க்குப் பிடிக்கவில்லை. அதனை உடனே மறுத்து, “சுயராஜ்யம் மட்டுமே தேவை“ எனப் பேசினார். காந்தி இந்தச் சூழ்நிலையைச் சமாளிப்பதற்காக, “31.12.1929க்குள் இந்தியா குடியேற்ற நாடு அந்தஸ்தைக் கொடுக்கவேண்டும். இல்லையெனில் சுயராஜ்ஜத்தையே நாங்கள் கோருவோம்“ என்றார். இருவழியாக மாநாடு அதிருப்தியில் முடிவுற்றது.

காந்தியின் கொள்கைகளோடு ஒத்துப்போக முடியாத நேரு, போஸின் கொள்கையை ஏற்றார். இருவரும் இணைந்து “விடுதலைக் சங்கம்“ என்ற ஒன்றைத் தொடங்கினர். மக்களிடம் பிரச்சாரம் செய்தனர்.

புறக்கணிக்கப்பட்டார்

நாட்கள் உருண்டன. காந்தி விதித்திருந்த கெடு முடிவுற்றது. பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு குடியேற்ற நாடு என்ற அந்தஸ்தை அளிக்கவில்லை. லாகூரிர் காங்கிரஸ் மாநாடு கூடியது. காந்தி, “சுயராஜ்யம் மட்டுமே வேண்டும்“ என்ற கோரிக்கையை முன்வைத்தார். வெறும் கோரிக்கைகள் வேலைக்கு ஆகாது என்று தெரிந்ததால் போஸ் காங்கிரஸை உடைக்கத் துணிந்தார்.

காந்தியின் காங்கிரஸ் மிதவாத காங்கிரஸ் என்றும் அதனால் ஒன்றும் வழி கிடைக்கப் போவதில்லை என்றும் உறுதியாக நம்பிய போஸ், “காங்கிரஸ் ஜனநாயகக் கட்சி“ என்ற ஒன்றினைத் தொடங்கி அதின் தலைவராக ஸ்ரீனிவாச அய்யங்காரை நியமித்தார். போஸின் காங்கிரஸ் தீவிரவாத காங்கிரஸ் என்று அழைக்கப்பட்டது.

காந்தி – போஸ் இருவருக்குமிடையே விரிசல் ஏற்பட்டது. லண்டன் வட்டமேஜை மாநாட்டுக்குச் செல்லும் குழுவில் இருந்து போஸின் பெயரைக் காந்தி நீக்கினார்.

அயர்லாந்து தந்த உற்சாகம்

இந்நிலையில் பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்டிருந்த அயர்லாந்தில் டிவெலரா தலைமையில் புரட்சிவெடித்தது. அயர்லாந் சுதந்திரம் பெற்றது. இதனை அறிந்த போஸ் அயர்லாந்தின் இடத்தில் இந்தியாவை வைத்துக் கற்பனைசெய்து மகிழ்ந்தார்.

அங்கு நடந்த புரட்சியைப் போல் இந்தியாவிலும் நடைபெறவேண்டும் என்று விரும்பினார். செயல்பட்டார். கைதுசெய்யப்பட்டு ஓர் ஆண்டு சிறைத்தண்டனை பெற்று அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் காந்தி உப்புச் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். மக்கள் ஆதரவினைப் பெற்றார். கல்கத்தாவில் நகராட்சி மேயர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் சிறையிலிருக்கும் போஸின் பெயரும் முன்மொழியப்பட்டு, போஸ் வெற்றி பெற்றார்.

காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றது. நேரு முதலிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர். அச்சூழலில், 1930ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விடுதலையானார். பிரிட்டிஷ் அரசின் தடையைமீறி மால்தா கிராமத்திற்குப் போஸ் சென்றார். அவரைப் பிரிட்டிஷார் கைது செய்து ஒரு வாரம் சிறையில் அடைத்தனர். அதன்பின் விடுதலையானார். 26.01.1931 ஆம் நாள் இந்திய விடுதலைநாளாகக் கொண்டாட போஸ் விரும்பினார். பிரிட்டிஷ் அரசு தடைவிதித்தது. போஸ் மீறினார். ஆறுமாதம் தண்டனை விதிக்கப்பெற்று போஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.

காந்தியின் போக்கு

05.03.1931ஆம் நாள் காந்தி – இர்வின் ஒப்பந்தம் நடைபெற்றது. அது இந்தியர்களுக்கு எந்த நலனும் தரவில்லை. போஸ் மனம்வெம்பினார். இந்நிலையில் பகத்சிங்கும் அவரது நண்பர்கள் இருவரும் ரகசியமாகத் தூக்கிலிடப்பட்டனர். அதுகுறித்து காந்தி கவலைப்படவில்லை. இது போஸ்க்கு வெறுப்தைத் தந்தது.

அரசியல் கைதிகளைக் குற்றவாளிகள் போல் நடத்துவதைக் கண்டித்து சிறையில் ஜாதின்தாஸ் என்பவர் 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து 13.09.1929ஆம் நாள் உயிர்நீத்தார். இது குறித்தும் காந்தி கவலைப்படவில்லை. இது போஸக்கு காந்தியின் மீதிருந்த நம்பிக்கை நீங்கக் காரணமானது.

இரண்டாம் வட்டமேஜை மாநாடு லண்டனில் நடைபெற்றது. அதிலும் இந்தியர்க்குச் சாதகமாக ஏதும் நடைபெறவில்லை. ஆதலால் காந்தி சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார். போஸ் கைது செய்யப்பட்டு சியோனி சிறையில் அடைக்கப்பட்டார்.  உடல்நிலை பாதிப்படைந்தது. பிரிட்டிஷ் அரசு அவரைச் சிறைமாற்றம் செய்தது. பின் அவரின் உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படாததால் அவர் இந்தியாவுக்குள் நுழையக்கூடாது என்ற நிபந்தனையுடன் 13.02.1933ஆம் நாள் ஐரோப்பாவுக்கு அனுப்பிவைத்தது.

வியன்நாவில் சிகிக்சை பெற்ற போஸ் உலக நாடுகள் பலவற்றுக்குச் சென்று அந்நாடுகளின் அரசியல் அமைப்புகள் குறித்து ஆராய்ந்தார். இந்தியாவில் நடைபெற்று வரும்போராட்டங்கள் குறித்தும் அறிந்துகொண்டேயிருந்தார்.

காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திவிட்டு மக்கள் சேவையில் இறங்கினார். இது இந்திய விடுதலைக்குப் பின்னடைவைத் தரும் என்று கூறி, இது காந்திக்கும் இந்தியருக்கும் ஏற்பட்ட தோல்வி என்றும் காங்கிரஸ் இனி காந்தியை நம்பிப் பயனில்லை என்றும் காங்கிரஸைப் புதுப்பிக்கவேண்டிய காலம் வந்துவிட்டது என்றும் போஸ் அறிக்கை வெளியிட்டார்.

காதல் வந்தது

1934ஆம் ஆண்டு ஆஸ்திரியாவிலுள்ள பாட்கஸ்டீன் என்னும் பகுதிக்குப் போஸ் சென்றார். அங்கு எமிலி செங்கல் என்பவரைச் சந்தித்தார். எமிலி செங்கல் 26.12.1910ஆம் நாள் பிறந்தவர். அவரைத் தன் செயலராகப் பணியமர்த்தினார். பின்னாளில் எமிலி – போஸ் காதலர்களாக மாறினர். 27.12.1937ஆம் ஆண்டு தம்பதியர்களாக மாறினர்.

போஸ் – எமிலி செங்கல் திருமணம் ரகசியமாகவே நடைபெற்றது. தொடர்ந்து பிற நாடுகளுக்குப் பயணமானார். இப்பயணங்களுக்கு நடுவில் போஸ் 1934ஆம் ஆண்டு முதல் 1942ஆம் ஆண்டு வரை 162 கடிதங்களை எமிலிக்கு எழுதியுள்ளார். போஸ் – எமிலி செங்கல் தம்பதியருக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அனிதா எனப் பெயரிட்டனர்.

காங்கிரஸ் தலைவர்

1938ஆம் ஆண்டின் தொடக்கத்தில் போஸ் இந்தியா வந்தார். 51ஆவது காங்கிரஸ் மகா சபை ஹரிபுராவில் நடைபெற இருந்தது. அங்கு வாசிப்பதற்கான உரையினை ஓர் இரவில் எழுதிமுடித்தார். அதில் தாம் அகில இந்திய காங்கிரஸின் தலைமைப்பொறுப்பினை ஏற்றால் செய்யவுள்ள திட்டங்களின் முழுவடிவமும் இருந்தது. ஹரிபுரா கூட்டத்தில் உரையாற்றினார். அகில இந்திய காங்கிரஸின் தலைமைப்பொறுப்பினை ஏற்றார்.

பின்னர் திட்டக்குழுவினைக் கூட்டினார். இந்து-முஸ்லீம் பிரச்சனைக்கள் சுதந்திர இந்தியாவில் ஏற்படக்கூடாது என்பது குறித்து ஜின்னா முதலிய தலைவர்களுடன் விவாதித்தார்.  பின்னர் ஆறுமாதங்கள் கழித்து தேசிய திட்ட மாநாட்டைக் கூட்டினார். அதில் ஓர் நாடு திறம்பட வளர்வதற்கு என்னென்ன தேவையோ அவற்றை அதற்குரிய நிபுணர்களைக் கொண்டு திட்டமிடுவதே அம் மாநாட்டின் நோக்கம். இத்தகைய மாநாடுகள் சுதந்திரத்திற்குப் பின்னர் நடத்தப்படுவதே வழக்கம். ஆனால், போஸ் சுதந்திரத்திற்கு முன்பே அதனை நடத்தினார். இதனை உலக நாடுகள் இந்தியா குறித்த போஸின் எதிர்காலவியல் சிந்தனையாகக் கருதின.

மீண்டும் காங்கிரஸ் பொதுத்தேர்தல் வந்தது. காந்தி தன் தரப்பில் பட்டாபி சீதாராமய்யரை வேட்பாளராக நிறுத்தினார். போஸ் 50 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். காந்தி தனித்துவிடப்பட்ட நிலைக்கு ஆளானார். போஸின் வெற்றிக்கொண்டாட்டங்கள் திருபுரி போன்ற சில இடங்களில் வரவேற்பைப் பெறவில்லை. காங்கிரஸ் ஆதரவாளர்களைக் கொண்டு சுதந்திரப்போரை நடத்தமுடியாது என்று அறிந்தார். இடதுசாரி சிந்தனை கொண்டவர்களால்தான் தீவிரமான போரில் ஈடுபடமுடியும் என்று கருதி, காங்கிரஸ் காட்சியின் தலைமைப் பதவியை ராஜினாமாசெய்தார்.

“ஃபார்வார்ட் பிளாக்“ என்ற புதிய கட்சியினைத் தொடங்கினார். இதில் இடதுசாரி சிந்தனை கொண்ட இளைஞர் பலரை இணைத்தார்.  ஆனால், வகுப்புவாதக் கட்சிகள் பல தோன்றி மக்களைப் பாகப்பிரிவினை செய்துவந்தன. போஸ் மனம்தளர்ந்தார்.

கிரேட் எஸ்கேப்

இந்தியாவை விட்டு வெளியேறி உலக நாடுகளின் துணையுடன் இந்திய சுதந்திரத்தினைப் பெறவேண்டும் என்ற நோக்கோடு 13.06.1940ஆம் ஆண்டு காந்தியைச் சந்தித்தார். புதிய முறையில் இந்திய சுதந்திரத்தைப் பெற முயற்சிப்பதாகக் கூறினார். காந்தி வாழ்த்தினார்.

இந்நிலையில் கல்கத்தாவில் ஹால்வில் என்பவருடைய நினைவகத்தை அகற்றும் போராட்டத்தில் போஸின் புதிய கட்சி ஈடுபட்டது. அந்த விவகாரத்தில் போஸ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் தாம் உண்ணாநோம்பு இருக்கப்போவதாக பிரிட்டிஷ் உயரதிகாரிகளுக்குக் கடிதம் எழுதினார். பிரிட்டிஷ் அரசு அவரை விடுதலை செய்தது.

தன்னைப் பற்றி பிரிட்டிஷ் அரசின் உளவுப் பரிவு சேகரித்து வைத்துள்ள ஆணவங்களைத் தன் நண்பர் சத்ய ரஞ்சன் பக்க்ஷியின் உதவியுடன் படித்துப் பார்த்தார்.

பின்னர் இந்தியாவை விட்டு ரகசியமாகத் தன் குடும்பத்தாருக்கும் தெரியாமல் வெளியேறத் திட்டமிட்டார். 17.01.1941ஆம் நாள் வெளியேறினார். முகம்மது ஜியாவுதீன் என்ற பெயரில் இந்தியாவைத் தாண்டினார்.

பின் இத்தாலி சென்றார். அவர் அங்கு சென்ற பின்னரே இந்தியர்களுக்கு அவர் இந்தியாவை விட்டு வெளியேறிய விஷயம் தெரியவந்தது. அங்கிருந்து ஓர்லாண்டோ மசோட்டா என்ற பெயரில் ரஷ்யா சென்றார்.

பின்னர் ஜெர்மனி சென்றார். தான் எதிர்பார்த்த அளவுக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. காரணம் இரண்டாம் உலகப்போர் காரணமாக பல நாடுகள் ஒன்றுக்கொன்று எதிர்நிலையில் இருந்தன. அவற்றுள் போஸ் நம்பியிருந்த நான்கு நாடுகளும் ஒன்றையொன்று எதிர்த்தன. இந்நிலையில் யாரை நட்புக்கொண்டாலும் மற்ற மூவரையும் பகைத்துக்கொள்ளும் நிலை இருந்தது. போஸ் ஜெர்மனிக்குள் சுற்றிக்கொண்டிருந்தார்.

அந்நிய மண்ணில் சுதந்திரத் திருநாள்

1941இல் பெர்லினில் “சுதந்திர இந்திய மையம்“ ஒன்றைத் தொடக்கிவைத்தார். “ஆசாத் ஹிந்த்“ என்ற வானொலி சேவையை 1942ஆம் ஆண்டு தொடங்கினார். “ஆதாத் ஹிந்த்“ என்ற பெயரில் ஜெர்மன் மற்றும் பிரிட்டிஷாரைகிலம் ஆகிய இரண்டுமொழிகளிலும் அப்பத்திரிகையை வெளியிட்டார். தேசியக்கொடியினை வடிவமைத்தார். தேசியப் பாடலாக ரவீந்தரநாத் தாகூர் இயற்றிய “ஜனகணமன“ பாடலை அறிவித்தார். “ஜெய்ஹிந்த்“ என்ற கோஷத்தைப் பிரபலப்படுத்தினார்.

இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் கை ஓங்கியது. உடனே, போஸ் ஜப்பானின் உதவியைக் கோரி அங்குப் புறப்படத் தயாரானார். இறுதியாக முசோலினியையும் ஹிட்லரையும் சந்தித்தார். பலனில்லை. இந்திய விடுதலைக்காகப் பிறநாடுகளின் உதவியை எதிர்பார்த்தார். ஜெர்மனியும் இத்தாலியும் கையைவிரித்துவிட்ட நிலையில் ஜப்பான் மட்டுமே உதவிக்கரம் நீட்டியது. ஆதலால், போஸ் ஜப்பான் நோக்கிப் புறப்படத் தயாரானார்.

தன் மனைவி, மகளை ஐரோப்பாவிலேயே விட்டுவிட்டு, ஜப்பான் நோக்கி ஓர் நீர்மூழ்கிக் கப்பலில் 09.02.1943ஆம் நாள் ஒரு கடினமான பயணத்தை மேற்கொண்டார்.

ஐ.என்.ஏ. செயல்பட்டது 

பயணத்தின் இடையே தான் ஒரு பெரும் புரட்சிப்படையை உருவாக்கிப் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடத் திட்டம் தீட்டினார். ஜான்சி ராணி ரெஜிமென்ட் தொடங்குவது பற்றியும் திட்டமிட்டார். 13.05.1943ஆம் நாள் ஐப்பான் வந்தடைந்தார்.

அங்கு முன்பே மோகன்சிங் மற்றும் ஃப்யுஜிவாரா ஆகியோர் இணைந்து பிரிட்டிஷ்க்கு எதிராப் போராட ஐ.என்.ஏ. என்ற இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கியிருந்தனர். ஆனால், அது செயல்படாமல் இருந்தது. அதனைப் போஸ் செயல்படவைத்தார். அப்படைக்கு ஆள்சேர்த்தார். ராஷ் பிகாரி போஸ் என்பவரை ஐ.என்.ஏ.வின் தலைவராக்கினார்.

ஐ.என்.ஏ. வீரர்களின் அணிவகுப்பினைப் பார்வையிட்டு, அவர்கள் முன் “நான் உங்களைச் சுதந்திரத்தை நோக்கி அழைத்துச்செல்வேன்“ என்று உறுதியளித்தார். கிழக்கு ஆசியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஐ.என்.ஏ. வுக்கு நிதியும் ஆள்பலமும் சேர்த்தார்.

பர்மிய நாட்டின் தலைவர் பா-மாவ் போஸின்  ஆற்றல் வாய்ந்த பேச்சு பற்றி, “போஸ் ஆழமாகப் பேசத் தொடங்கினால் இன்னொரு சக மனிதரிடம் பேசுவது போல் நீங்கள் உணர மாட்டீர்கள்; மாறாக, நம்மை விடப் பல மடங்கு பிரம்மாண்டமான, அமானுஷ்யமான, பலகாலம் அடக்கப்பட்ட ஆதார சக்தி ஒன்று திடீரென உடைப்பெடுத்துப் பெருகினால் எப்படி இருக்குமோ அப்படி உணர்வீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றாய்வாளர் பீட்டர் ஃபே, போஸ், “போகுமிடத்திலெல்லாம் அவர் பேச்சைக்கேட்டு, குடும்பப் பெண்கள் காதிலும் கழுத்திலும் போட்டிருக்கும் அத்தனை நகைகளையும் அணிகலன்களையும் கழற்றி நாட்டு விடுதலைக்குச் சமர்ப்பித்தார்கள்“ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் தென்கோடியிலிருந்து முத்துராமலிங்கத்தேவரின் முனைப்பில் பல்லாயிரக்கணக்கான தீரர்கள் இந்திய தேசிய ராணுவத்தில் சேர சிங்கப்பூர் சென்றனர். ஐ.என்.ஏ. படையினருக்கு உலகின் பல நாடுகளிலும் போர்ப்பயிற்சி அளிக்கப்பட்டது. “ஜான்சி ராணி“ என்ற பெண்கள் படையும் 12 – 18 வயதிற்குட்பட்ட பாலர் படையும் உருவானது. பெண்கள் படை தளபதியாக டாக்டர். லக்ஷ்மி செஹ்கல்  சுவாமிநாதன் என்ற தமிழ்ப் பெண் தலைமை தாங்கினார்.

புதிய அரசு

சிங்கப்பூரில் 21.10.1943 ஆம் நாள் இந்திய சுதந்திர அரசை அறிவித்தார். அதற்கு “ஆசாத் ஹிந்த்“ என்று பெயரிட்டார். 38கோடி இந்தியர்களின் விடுதலைக்குப் பாடுபடுவேன் என்ற உறுதிமொழியுடன் அந்தப் புதிய அரசின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

ஒரு மாத காலத்துள் ஜப்பான், பர்மா, பிலிப்பைன்ஸ், ஜேர்மனி குரொஷியா, சீனா, மஞ்சுகோ, இத்தாலி, தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தப் புதிய அரசினை அங்கீகரித்தன. அயர்லாந்து வாழ்த்து அனுப்பியது.

ஜப்பான் அந்தமான் நிக்கோபார் தீவுகளை அந்தப் புதிய அரசுக்கு வழங்கியது. போஸ் அந்தமானுக்கு “ஷாகித்“ என்றும் நிகோபாருக்கு “ஸ்வராஜ்“ என்றும் பெயர்சூட்டினார். 29.12.1943ஆம் நாள் இந்தியதேசியக் கொடியினை ஏற்றினார். பர்மா காட்டில் முகாம் அமைத்தார். டில்லிநோக்கித் தன் படைகளை நகர்த்தத் திட்டமிட்டார். தன் புதிய அரசுக்குரிய பணம், தபால்தலை போன்றவற்றை வடிவமைத்து அச்சிட்டார். நிர்வாகத்திற்காகப் பல துறைகளை வகுத்தார். பொறுப்புகளைப் பலருக்கும் பகிர்ந்தளித்தார். எல்லாம் ரெடி. நாடுதான் இல்லை. நாட்டைக் கைப்பற்ற டில்லி நோக்கி படை புறப்பட்டது.

ஐ.என்.ஏ. வின் தாக்குதல்     

04.02.1944ஆம் நாள் இந்திய – பார்மிய எல்லையான சிட்டகாங் என்ற இடத்தில் ஐ.என்.ஏ. தன் முதல் தாக்குதலைத் தொடங்கியது. வெற்றிபெற்றது. பின் இம்பால் நோக்கி நகர்ந்தது.

22.04.1944ஆம் நாள் அங்குத் தாக்குதலைத் தொடங்கியது. பிரிட்டிஷ் புதிய முறையில் போரிடத் தொடங்கியதால் ஒரு மாதமாகப் போராடியும் பலனில்லை. இயற்கை எதிரியாக இருந்தது. தளவாடப் பொருட்கள் குறைந்தன. ஆதலால் ஐ.என்.ஏ. படை தளர்ந்தது. 2,20,000 பேரில் 1,30,000 பேரே மிஞ்சினர். ஆனாலும் போஸ் போரை நிறுத்தவில்லை.

தப்பித்தல் 

பர்மாவில் இருக்க முடியாத சூழ்நிலை உருவானது. இந்திய தேசிய ராணுவம் ஒரு முழுப்பயிற்சி பெற்ற ராணுவமாகவோ அல்லது பிரிட்டிஷாரை எதிர்க்கும் அளவுக்கு ஆயுத பலம் வாய்ந்ததாகவோ உருவெடுக்க முடியவில்லை. இந்தியாவை நோக்கி படைதிரண்டு வந்தவர்களில் பத்து சதவீதம் பேரே உயிர் பிழைத்து இந்தியாவிற்குள் வர முடிந்தது. ஆனால் சாதி, மதப் பிரிவினைகளைத் தாண்டி தேசியவாத வேகத்தில் மக்களை இணைப்பதில் இந்திய தேசிய ராணுவம் வெற்றி பெற்றது.

போஸைத் தப்பிச்சென்றுவிடுமாறு ஐ.என்.ஏ. வீரர்கள் கேட்டுக்கொண்டனர். வேறு வழியின்றி போஸ் அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், ஜான்சி படைப்பிரிவினை மட்டும் அங்கிருந்து வெளியேற்றிவிட்டு அவர்களுக்குத் தக்கப் பாதுகாப்பும் நிதியும் வழங்கியபின்பே தாம் வேறு நாட்டுக்குச் செல்வதாகத் தீர்மானித்துக்கொண்டார்.

அவர்களை அழைத்துக்கொண்டு பாங்காக் வந்தார். அவர்களுக்கு நிதியளித்து விடைகொடுத்தார். பின்னர் அவர் சிங்கப்பூர் சென்றார். இந்நிலையில் அமெரிக்காவினால் அணுஆயுத தாக்குதலுக்கு உட்பட்டு ஜப்பான் சரணடைந்தது. ஆதலால் நம்பிக்கை இழந்த போஸ் மனம் தளர்ந்துவிட்டார்.

அங்கிருந்து தன் நண்பர்கள்  மூவருடன் 17.08.1945ஆம் நாள் ஒரு குண்டு வீசும் விமானம் மூலம் பாங்காக் சென்றார். அங்கிருந்து சாய்கோன் சென்றார். பின் வேறு ஒரு விமானத்தின் மூலம் தன்னுடைய ஒரு நண்பருடன் (ஹபிபூர் ரகுமான்) 18.08.1945ஆம் நாள் ஹாங்காங் சென்றார்.

போரின் முடிவில் 1945ஆண்டு நவம்பர் மாதம் இந்திய தேசிய ராணுவக் கமாண்டர்கள் மூவர் (பிரேம் குமார் செகல் என்கிற இந்து, ஷா நவாஸ் கான்  என்கிற இஸ்லாமியர், குருபக் சிங் தில்லன் என்கிற சீக்கியர்) பிரிட்டிஷ் ராணுவத்தால் ராஜதுரோகக் குற்றத்திற்காக விசாரணைக்குட்படுத்தப்பட்டு ஆயுள் தண்டனையாக நாடுகடத்தப்பட வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆயுதமேந்தி பிரிட்டிஷாருக்கு எதிராகப் போரிட்ட இந்த மூவரையும் விடுவிக்க முன்வந்த வழக்கறிஞர்களில் ஜவஹர்லால் நேருவும் இருந்தார். இந்த விசாரணை நடக்க நடக்க, நாடே கொந்தளிக்கத் தொடங்கியது.

1946ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்தியக் கடற்படைக் கப்பல்கள் யூனியன் ஜாக் கொடியை இறக்கி விட்டு, காங்கிரஸ் கொடியை ஏற்றி பம்பாய்க் கடற்கரையை ரோந்து வரத்தொடங்கின. இந்திய ராணுவம் முதன்முறையாகப் பிரிட்டிஷாருக்கு எதிராகத் திரண்டெழுவது கண்ட பிரிட்டிஷ் தலைமைக் கமாண்டர் ஆஷின்லெக் அவசர அவசரமாக இந்திய தேசிய ராணுவத்தின் மூன்று கமாண்டர்களையும் விடுதலை செய்தார்.

ஷா நவாஸ் கான் ஹிந்தி மொழி நடிகர் ஷாருக்கானின் வளர்ப்புத் தாத்தா ஆவார். அதாவது ஷாருக்கானின் தாயார் லத்தீப் பாத்திமாவை, ஷா நவாஸ் கான் வளர்ப்பு மகளாகத் தத்தெடுத்து வளர்த்தவர் ஆவார். உறவு வகையில், இஸ்லாமுக்கும், ஷா நவாஸ்கான் தாத்தா முறை. இதனால் இஸ்லாமும், ஷாருக் கானும் கூடத் தூரத்து உறவினர்கள் என்று கூறப்படுகிறது.

ஷா நவாஸ் கான் சுத்தமான இந்தியராக விளங்கியவர். நேதாஜியின் படையில் முக்கிய தளபதியாகச் செயல்பட்ட அவர் முன்பு பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். இரண்டாம் உலகப் போரின்போது அவர் படையில் இருந்தார். 1942ஆம் ஆண்டு சிங்கப்பூரை ஜப்பான் படைகள் நாசப்படுத்தியபோது பிடிக்கப்பட்டார் ஷா நவாஸ் கான். பின்னர் அவர் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து மேஜர் ஜெனரலாக உயர்ந்தார். அப்போதைய பர்மாவில் அவர் போரில் பங்கேற்றார். சுதந்திரத்திற்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து நான்கு முறை எம்.பியாக இருந்தார்.

இரண்டு முறை இறந்தார்     

18.08.1945ஆம் நாள் ஹாங்காங் செல்லும் வழியில் விமானம் விபத்துக்குள்ளாகி போஸ் இறந்துவிட்டார் என்றன உலகநாடுகள். இது அவரது முதல் இறப்பு.

இந்தியாவில் உத்திரப்பிரதேசத்தில் பைசியாபாத்தில் ஒரு சிறு ஆசிரமம் அமைத்து பகவான்ஜி என்ற பெயரில் அவர் வாழ்ந்து வந்தார். அவ்வப்போது சில நாடுகளுக்கும் சென்றுவந்தார். அவரைச் சீனாவில் தாம் பார்த்ததாக முத்துராமலிங்கத் தேவர் குறிப்பிட்டுள்ளார். தமது நெருங்கிய வட்டத்திற்குள் மட்டும் அவர் சில உதவிகளைக் கேட்டு வாங்கி வாழ்ந்துவந்தார்.

பகவான்ஜி பார்ப்பதற்குப் போஸ் போலவே இருந்தார். போஸ் போலவே பேசினார். அந்த வயதில் அவரது உயரமும் தோற்றமும் ஒத்திருந்தது. நேதாஜியின் குடும்பப் புகைப்படங்களும் அந்த துறவி வீட்டில் கிடைக்கப்பெற்றன. பல் இடுக்கும் ஒத்திருந்தது. வயிற்றின் கீழே இருந்த தழும்பும் ஒத்திருந்தது. டீ. லால் என்ற ஆராய்ச்சியாளர் இருவருடைய எழுத்தும் நடையும் ஒத்துள்ளன என்றார். பகவான்ஜி ஒரு வங்காளி. பிரிட்டிஷாரைகிலம், இந்துஸ்தானி, சமஸ்கிருதம், ஜெர்மன் மொழியில் அவர் புலமை பெற்றிருந்தார். நேதாஜி அணிவது போலவே வட்ட வடிவ மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தார் தங்க வாட்ச் அணிந்திருந்தார். (18.08.1945ஆம் நாள் போஸ் மறைந்ததாக சொல்லப்பட்ட இடத்தில் அவரது மூக்குக் கண்ணாடியோ, தங்க வாட்சோ கிடைக்கப்பெறவில்லை) நேதாஜியின் பெற்றோரின் அரிய புகைப்படங்கள் மட்டுமல்ல, அவரது தந்தையார் பயன்படுத்திய குடையும் அங்கிருந்தது. இந்திய தேசிய ராணுவத்தின் உளவுப்பிரிவு தலைவராகச் செயல்பட்ட டாக்டர். பவித்ரா மோகன் ராய், லீலா ராய், சுனில் தாஸ், திரிலோக்நாத் சக்ரவர்த்தி ஆகியோர் இந்தத் துறவியின் சீடர்களாக இருந்தனர். கும்நாமி பாபா என்று அறியப்பட்ட அந்தத் துறவி மர்மயோகியாகவே வாழ்ந்தார். திரைக்குப் பின்னிருந்தே மற்றவர்களைச் சந்தித்தார். வெளியே எங்கும் தலைகாட்டாமல் வாழ்ந்தார். 1985ஆம் ஆண்டு பகவான்ஜி இறந்தார். இது அவரது இரண்டாவது இறப்பு.

அவர் மறைந்த பொழுது அவரே போஸ் என்று செய்திகள் பரவின. உத்திரப்பிரதேச நீதிமன்றம் அவருடைய உடைமைகளை சீல் வைத்து பைசியாபாத் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்குமாறு ஆணையிட்டது. 22.12.2001ஆம் நாள் முகர்ஜி கமிஷன் பார்வையிடுவதற்காக அந்த சீல் உடைக்கப்பட்டது.

சபாஷ் சுபாஷ்

சுபாஷ் சந்திரபோஸின் மரணம் குறித்து பற்பல வதந்திகள் உலவின. பல மர்மங்கள் இன்றும் வெளிச்சத்திற்கு வரவில்லை. நூல்களிலும் இணைய தளங்களிலும் பலர் கொடுத்திருந்த தகவல்களை வரிசைப்படுத்தியுள்ளேன்.

 • தாய்வானின் அதிகாரிகள் விமான விபத்து நடந்ததாகச் சொல்லப்பட்ட தேதியில் அப்படியொரு விபத்து தாய்வானின் நடந்ததாக எந்தவித ரெக்கார்டும் இல்லை.
 • பிரிட்டிஷ் இண்டெலிஜென்சியின் ரகசியக்கோப்புகளில் பிரிட்டிஷ் பிரைம் மினிஸ்டர் கிளமெண்ட்ஸ் அட்லீ ‘’ போஸ் இப்போது எங்கிருக்கிறாரோ அங்கேயே இருக்கட்டும்’’ என்று 1945ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முடிவெடுத்ததாகப் பதியப்பட்டிருக்கிறது.
 • CIA எனப்படும் சென்ட்ரல் இண்டெலிஜென்ஸ் ஏஜென்சி 1950ஆம் ஆண்டு வரையிலும் போஸ்க்கான தேடுதல் வேட்டையைத் தொடர்ந்திருக்கிறது. அவர் இறந்ததாகக் கூறிய நிலையில் அவரை ஏன் தேட வேண்டும்?
 • 1946ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் பார்ட்டியைச் சேர்ந்த கேலாச்சர் என்பவர் ஒரு பொதுமேடையிலேயே அப்போதைய அயர்லாந்து நாட்டின் தலைவர்  டிவெலராவை டப்ளின் நகரில் போஸை வரவேற்றதாக விமர்சித்திருக்கிறார். டிவெலராவும் இதற்கு மறுப்பேதும் தெரிவிக்காதது கவனித்தில் கொள்ளவேண்டும். அத்தோடு மட்டுமில்லாமல் 1946ஆம் ஆண்டுக்குப் பின் இந்தியாவிற்கு வந்திருந்த டிவெலரா பத்திரிக்கையாளர்களிடம் ‘’நான் இங்கே போஸை சந்திப்பேன் என்று எதிர்பார்த்து வந்தேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்! 1945ஆம் ஆண்டு போஸ் இறந்திருந்தால் 1946ஆம் ஆண்டு டிவெலரா ஏன் அவரைச் சந்திக்க விரும்பவேண்டும்,
 • பிரிட்டிஷ் இண்டெலிஜென்சின் ஒரு ரிப்போர்ட்டில் போஸ் எங்கிருக்கிறார் என்பது நேருவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அதனால்தான் அவர் வெளியுறவுத்துறையை மட்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு விஜயலெட்சுமி பண்டிட்டை ரஷ்யாவுக்கான இந்தியத் தூதராக நியமித்திருக்கிறார் என்று குறிப்பெழுதப் பட்டிருப்பதாக ஒரு தகவலும் உண்டு.
 • ரஷ்யன் கம்யூனிஸ்ட் பார்ட்டியின் புரட்சியாளர் அபானி முகர்ஜீ என்பவரின் மகன் கோகா என்பவரை இந்தியத்தூதர் டாக்டர். சத்யநாராயணா சின்ஹா சந்தித்தபோது, அவரிடத்தில் கோகா தனது தந்தையும் போஸ்வும் சைபீரியாவில் சிறைக்கைதிகளாகப் பக்கத்துப் பக்கத்து அறைகளில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் அங்கே போஸ்க்குச் சிறை ரெக்கார்டுகளில் ‘கிளாசி மாலங்’ என்று பெயரிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். சிறையிலிருந்து போஸ் பலமுறை நேருவுக்குத் தான் இந்தியாவுக்குத் திரும்ப விரும்புவதாகவும், தன்னை மீட்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் கடிதம் எழுதியிருக்கிறார்.
 • போஸின் இறப்பு மர்மம் குறித்த விசாரணைக்கு இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி முகர்ஜி கமிஷனில் நிசாமுதீன் என்பவர் அளித்த வாக்குமூலத்தில் விபத்து நடந்ததாகக் கூறப்பட்ட விமானத்தில் கேப்டன் ஏக்ரம், லால்சிங் மற்றும் சில பெங்காளி வீரர்களும், மூன்று ஜப்பானியர்களும் மட்டுமே அதில் பயணித்ததாகவும், போஸ் அதிலில்லை என்றும் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
 •  பிரிட்டனில் 25.10.1945ஆம் நாள் காபினட் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் கிளமண்ட அட்லீ தலைமையில் நடந்த அந்தக் கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. பிரிட்டிஷ் அரசே பதிப்பித்த ஆட்சி மாற்றம் என்ற நூலில் இந்தியாவில் ஒரே எதிரியாகப் போஸ் வருணிக்கப்பட்டார். அவரைக் கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வந்து என்ன தண்டனை அளிப்பது என அமைச்சரவை விவாதித்துள்ளது. ஆக போஸ் இறந்து விட்டது உண்மையாக இருக்குமானால் அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட இரண்டு மாதம் கழித்து பிரிட்டிஷ் அரசின் அமைச்சரவை போஸைக் கைது செய்வது பற்றி எப்படி விவாதித்திருக்க முடியும்?
 •  பிரிட்டிஷ் – இந்திய அரசு பிரிட்டனில் உள்ள அரசுக்கு 23.10.1945 ஆம் நாள் அனுப்பிய கடிதத்தில் போஸைக் கைது செய்தால் நாடே கொந்தளிக்கும் “அவர் எங்கிருக்கிறாரோ அங்கேயே இருக்கட்டும். அவரை சரண் அடைய வற்புறுத்தாதீர்கள்” என்று எழுதி இருந்தது.
 •  21.01.1967ஆம் நாள் போஸின் பிறந்த நாள் வருவதற்கு இரண்டு நாள் முன்பே முன்னாள் மத்திய அமைச்சரும் ஜாதவ்பூர் பல்கலைக் கழகப் பேராசிரியருமான சமர் குகா பிறந்த நாள் வாழ்த்து கூறி போஸ்க்கு எழுதிய மடலில் சூரியன் உதிப்பதற்காக எல்லோரும் காத்துக் கொண்டுள்ளோம் என அவரின் மீள்வருகை பற்றிச் சூசகமாக்க் குறிப்பிட்டார். நேரு 1964ஆம் ஆண்டு மறைந்த பின்னர் போஸ் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள சிந்திதிருக்கக் கூடும் என்பதற்குப் பேராசிரியரின் கடிதமே சாட்சியமாகும்.
 •  நேரு, காந்தி, ஜின்னா மூவரும் பிரிட்டிஷ் நீதிபதியிடம் உடன்பாட்டுக்கு வந்து போஸ் இந்தியாவுக்குள நுழைந்தால் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைப்போம் என்று உறுதி அளித்ததாக நீதிபதி கோஸ்லா கமிஷன் முன் போஸின் மெய்க்காப்பளராக இருந்த உஸ்மான் பட்டேல் பிரமாண வாக்குமூலம் அளித்துள்ளார்.
 •  ஜஸ்டிஸ் முகர்ஜி கமிஷன் அறுபதாண்டுகள் சஸ்பென்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்திய அரசால் நியமிக்கப்பட்ட இந்த நீதி விசாரணைக் கமிஷன் என்ற இடத்தில் 18.08.1945ஆம் நாள் விமான விபத்து நடக்கவே இல்லை. எனவே, விபத்தல் போஸ் இறந்தார் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தீர்ப்பளித்தது.
 •  2001ஆம் ஆண்டு இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு புலனாய்வு செய்து, ஆகஸ்ட் 18.08.1945 ஆம் நாள் போஸ் விமான விபத்தில் கொல்லப்பட்டதாக ஜப்பானியர் உதவியுடன் கட்டுக்கதை திட்டமிட்டே கட்டப்பட்டது. பின் தொடரும் நேச நாடுகள் படைகள் பிடியில் இருந்து தப்பிக்கவே இக்கதை கூறப்பட்டது. போஸ் சோவியத் யூனியனுக்குள் சென்றிருக்கலாம் என்று கூறியது.

போஸ் ஒரு முறைதான் பிறந்தார். ஆனால், இரண்டுமுறை இறந்தார். நாம் நமது அரசாங்கத்தைப் பகைத்துக்கொள்ளக்கூடாது என்பதாலும் அதற்காக நாம் நமது மனசாட்சியை அடகுவைத்துவிட முடியாது என்பதாலும் நேதாஜி இரண்டுமுறை இறந்ததாக நாம் நம்புவதில் தவறில்லை.

(இன்று சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம்)

பாஞ்சாலங்குறிச்சி : அறியப்படாத பலவீனங்கள்

veerapandiya_kattapomman_tamil_king_statue_tamil_naduகட்டபொம்மன் பற்றிய கதைப்பாடல் மற்றும் கட்டபொம்மன் பற்றிய திரைப்படங்கள் கட்டபொம்மனை ஒரு வீர, தீரப் பேரரசனாகக் காட்டுகின்றன. ஆனால், ஆவணங்கள் வேறுவிதமாக அவரைக் காட்சிப்படுத்துகின்றன.

கட்டபொம்மனின் முன்னோர்களின் செயல்பாடுகள் மெச்சத்தக்கவையாக இல்லை. கட்டபொம்மனின் நிர்வாக முறைமை போற்றத்தக்கதல்ல. நீங்கள் இதுநாள் வரை கட்டபொம்மன் மீது கொண்ட வியப்பும் ஒருவிதத்தில் மாயையும் பின்வருபவற்றை வாசிக்கும்போது உங்களிடமிருந்து விலக வாய்ப்புள்ளது.

அவரது பிரிட்டிஷ் எதிர்ப்புணர்வு இந்திய விடுதலைக்கு கணிசமான அளவில் உதவியது என்பது உண்மையே. ஆனால், கொண்டாடும் அளவுக்கு இல்லை.

பாஞ்சாலங்குறிச்சி – ஒரு பின்னோட்டம்

மதுரை நாயக்கர் பரம்பரை மறைந்த பின்னர் அவர்களுக்கு வரி கொடுத்தும் படைவீரர்களைத்  திரட்டிவழங்கியும் வந்த பாளையக்காரர்கள் தனிக்காட்டு ராஜாக்களாக மாறினர். இந்நிலையில் ஆர்க்காட்டு நவாபு வெறும் பொம்மை மன்னராக கர்நாடகத்தில் வசித்து வந்தார். நாட்டின் முழு நிர்வாகமும் பிரிட்டிஷாரின் கைகளில் இருந்தன.

கிழக்கிந்திய கம்பெனியினர் ஆர்க்காட்டு நவாபுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி திருநெல்வேலிச் சீமையின் வரி பெறும் உரிமையைத் தம் வசம் மாற்றிக்கொண்டனர். நான்கு ஆண்டுகள் கழித்து நவாபு அவ்வுரிமையை கி.பி. 1785ஆம் ஆண்டு தன்னுடையதாக்கிக்கொண்டார். ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் கி.பி. 1790ஆம் ஆண்டு பிரிட்டிஷார் அவ்வுரிமையை நவாபிடமிருந்து பறித்துக்கொண்டனர்.

இக்காலக்கட்டத்தில் திருநெல்வேலிச் சீமையின் பாளையப்பட்டுகள் இரண்டாகப் பிளவுபட்டன. கிழக்குப் பகுதியில் தெலுங்கர்களின் கை ஓங்கியிருந்தது. இப்பகுதியிலுள்ள பாளையப்பட்டுகளுக்குப் பாஞ்சாலங்குறிச்சி தலைமையிடமாக இருந்தது.

பஞ்சாயத்துக்காரர்கள்

பாஞ்சாலங்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட பாளையப்பட்டுக்களைக் கம்பளத்து நாயக்கர்கள் ஆண்டனர். கம்பளத்தை விரித்து அதன்மீது அமர்ந்து நீதி வழங்கியதால் இந்த இனத்தவர்கள் இப்பெயரினைப் பெற்றனர். இக் கம்பளத்து நாயக்கமார்களுக்குப் போடி நாயக்கனூர், பேரையூர், சாப்டூர், தேவாரம், தொட்ட நாயக்கனூர், செக்க நாயக்கனூர், ஆயக்குடி, கண்டம நாயக்கனூர், அம்மைய நாயக்கனூர், இடையக்கோட்டை செங்குறிச்சி, பாஞ்சாலங்குறிச்சி ஆகிய பதினெரு பாளையங்கள் உரிமையுடையனவாக இருந்தன.

வீரபாண்டியபுரம்

இன்றைய ஒட்டபிடாரம் அக்காலத்தில் அழகிய வீரபாண்டியபுரம் என்ற பெயரில் இருந்த்து. அங்கு ஆட்சிபுரிந்து வந்த நாயக்க வம்ச மன்னர் ஜெகவீரபாண்டியனின் அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர்  இனத்தைச் சார்ந்தவர். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின்னர் தமிழில் கட்டபொம்மன் என்றாயிற்று.

பொல்லாப்பாண்டியன்

கி.பி. 1744ஆம் ஆண்டு நாயக்க பரம்பரையின் இறுதி வாரிசு விஷம் குடித்து மாண்டபின்னர் பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராக இரண்டாம் கட்டபொம்மு தன்னை சின்ன நவாபு என்று அறிமுகப்படுத்திக்கொண்டு ஆட்சிபுரியத் தொடங்கினார்.  இவருக்குப் பொல்லாப்பாண்டியன் என்ற பெயரும் உண்டு.

கி.பி. 1755ஆம் ஆண்டு பிரிட்டிஷ் தளபதி கர்னல் ஹெரோன் பாஞ்சாலங்குறிச்சியின் மேல் போர்தொடுத்தார். அவருடன் இணைந்து நவாபின் முழுஅதிகாரம்பெற்ற படைத்தளபதி யூசுப்கானும் வந்தான். போரைத் தவிர்ப்பதற்காகப் பொல்லாப்பாண்டியன் ஆர்க்காட்டு நவாபுக்கு வரிசெலுத்து ஒப்புக்கொண்டார். பாஞ்சாலங்குறிச்சி பஞ்சத்தில் இருப்பதால் தவணைமுறையில் வரிசெலுத்துவதாக வாக்குக்கொடுத்தார். ஆனால், அவர் வரியினை முழுமையாகச் செலுத்தும் வரை பொல்லாப்பாண்டியனின் சில முக்கியமான ஆட்களை பிணைக்கைதிகளாக யூசுப்கான் அழைத்துச் சென்றுவிட்டான்.

இந்நிலையில் பூலித்தேவன் பாளையக்காரர்களைத் திரட்டி வரிகொடா இயக்கத்தை நடத்தினார். அதில் பொல்லாப்பாண்டியன் கலந்துகொள்ளவில்லை. ஆனால், யூசுப்கானுடன் இணைந்து பூலித்தேவனுக்கு எதிராகப் போர்புரிந்தார். 21.03.1756 இல் நடைபெற்ற இப்போரில் பூலித்தேவன் தோற்றார்.

பின்னர் திருநெல்வேலிச் சீமையின் வரிபெறும் உரிமையை 11லட்சரூபாய்க்குக் குத்தகையாக அழகப்ப முதலியாருக்குக் கிழக்கிந்திய கம்பெனி வழங்கியது. வரி பெறுதலில் குழப்பம் நிலவியது. வரிபெறும்பொறுப்பிலிருந்து நவாபு மபூஸ்கான் என்பவரை நீக்கினார். அவர் திருவிதாங்கூர் மன்னனின் உதவியுடன் பிரிட்டிஷாரின் ஆளுகைக்குட்பட்ட பாளையங்களின் மீது போர்தொடுத்தார். அப்போரில் பொல்லாப்பாண்டியன் பிரிட்டிஷாருக்கு ஆதரவாகப் போரிட்டார். இதற்காக அவருக்குச் சில கிராமங்களை பிரிட்டிஷார் பரிசளித்தனர். ஆனாலும், இவர் தரவேண்டிய வரிப்பணத்தை முழுமையாகப் பெற்றுக்கொண்ட பின்னரே பிணைக்கைதிகளாக அழைத்துச் சென்றவர்களை யூசுப்கான்  விடுவித்தான்.

ஜெகவீர பாண்டிய கட்டபொம்மு

கி.பி. 1760ஆம் ஆண்டு பொல்லாப்பாண்டியன் இறந்தான். இவருக்குப்பின் பாஞ்சாலங்குறிச்சியின் தலைமையை ஜெகவீர பாண்டிய கட்டபொம்மு ஏற்றார்.

கி.பி. 1766ஆம் பிரெஞ்சுப்படை டிலாந்த் என்பவரின் தலைமையில் பூலித்தேவர் மற்றும் அவருக்கு வேண்டிய பாளையங்களின் மீது போர்தொடுத்தது. அந்நிலையில் பூலித்தேவர் ஜெகவீர பாண்டிய கட்டபொம்முவின் உதவியைக் கோரினார். ஆனால், ஜெகவீர பாண்டிய கட்டபொம்மு மறுத்துவிட்டார். தந்தை செய்த அதே தவறினைத் தானும் செய்தார். பூலித்தேவர் இப்போரிலும் தோற்றார்.

யூசுப்கான், நவாபுக்கும் பிரிட்டிஷாருக்கும் எதிராகச் செயல்படத் தொடங்கியதால் 15.10.1764ஆம் நாள் கொலை செய்யப்பட்டார். கூட்டணிகள் மாறின. காலம் கடந்தது.

பிரிட்டிஷ்காரன் வேண்டாம் டச்சுக்காரன் போதும்

கி.பி. 1767ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கர்னல் கோம்பெல் முன்னறிவிப்பின்றி கொல்லம் கொண்டான் கோட்டையை முற்றுகையிட்டார். மூன்று நாள் முயன்று கோட்டையைக் கைப்பற்றினார். ஆனால் அங்கு யாரும் இல்லை. கோபம் கொண்ட கர்னல் கோம்பெல் சேத்தூர், சிவகிரி ஆகிய பாளையங்களைத் தாக்கினார். அங்கும் மக்களோ, செல்வமோ, ஆயுதங்களோ இல்லை. அவருக்கு அங்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

ஜெகவீர பாண்டிய கட்டபொம்மு தன் கோட்டையை விட்டுத் தப்பியோடினார். பின்னர் டச்சுக்காரர்களின் உதவியுடன் தன் கோட்டைக்குத் திரும்பி, கோட்டையைப் பலப்படுத்தினார். இவர்களின் செயல்பாடுகள் குறித்து லார்டு இர்வின் பிரபு தன் தலைமையிடத்துக்குக் கடிதம் எழுதினார்.

கி.பி. 1783ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் தளபதி புல்லர்டன் தலைமையில் ஒரு பெரும் படை புறப்பட்டு வந்தார். புல்லர்டனின் ஆட்கள் 08.08.1783ஆம் நாள் ஜெகவீர பாண்டிய கட்டபொம்முவைச் சந்தித்தனர். திறைப்பணத்தைத் செலுத்தக்கோரினர். தமக்கு டச்சுக்காரர்கள் துணைபுரிவதால் துணிவுடன் திறை செலுத்த மறுத்தார்.

ஒருநாள் ஜெகவீர பாண்டிய கட்டபொம்மு நாயக்கன் சொக்கம்பட்டி என்ற பாளையத்தின் மீது போர் தொடுக்கச்சென்றார். அச் சூழலைப் பயன்படுத்தி பிரிட்டிஷ் தளபதி புல்லர்டன் பாஞ்சாலங்குறிச்சியின் மீது போர் தொடுத்தார். கைப்பற்றினார். அங்கு 40,000 டச்சு வராகன்களும் துப்பாக்கிகளும் ஆயுதங்களும் வெடி மருந்துகளும்  புல்லர்டனுக்குக் கிடைத்தன.

இதனை அறிந்த ஜெகவீர பாண்டிய கட்டபொம்மு பாளையங்கோட்டை வழியாகச் சென்று சிவகிரி பாளைத்தில் ஒளிந்துகொண்டார். அங்குச் சென்ற புல்லர்டன் கோட்டையை முற்றுகையிட்டார். பின்னர் 1,500 டச்சு வராகன் கொடுத்து பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை மீட்டுக்கொள்ளுமாறு தூது அனுப்பினார். அதற்கு ஜெகவீர பாண்டிய கட்டபொம்மு  ஒப்புக்கொண்டார். பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைத் திரும்பப் பெற்றார்.

யார் இந்த நவாப்?

தமிழகப் பகுதிகளில் வரிவசூல் செய்வதற்காக மொகலாய மன்னர் ஒளரங்கசீப்பால் 1698ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான் நவாப் எனும் பதவி. முதலில் மொகலாய வம்சாவழியினரான நேவாயெட்ஸ் நவாப் ஆகப் பதவி வகித்தனர். முகலாயப் பேரரசு நலிவுற்ற காலத்தில் வாலாஜா எனப்படும் வம்சா வழியினர் நவாப் பட்டத்திற்கு வந்தனர்.

கி.பி.1750ஆம் ஆண்டில் நேவாயெட்ஸ் வம்சத்தைச் சேர்ந்த சந்தாசாகிப்பிற்கும், வாலாஜா வம்சத்தைச் சேர்ந்த முகம்மது அலிக்கும் நடந்த பதவிச் சண்டையில், சந்தாசாகிப் பிரெஞ்சுக்காரர்களையும், முகமது அலி பிரிட்டிஷ்காரர்களையும் அடியாள் படையாக அழைத்தனர். கர்நாடகப் போர் மூண்டது. முகமது அலி வென்றார். தன் வெற்றிக்குத் துணையாக இருந்த பிரிட்டிஷ்காரர்களுக்கு நன்றிக் கடன்பட்டார் முகமது அலி. இந்த நன்றிக்கடன் நாளடைவில் முகமது அலியின் பேராசையால் பணக்கடனாகியது.

பிரிட்டிஷாரின் படையைப் பயன்படுத்தியே இலங்கை உள்ளிட்ட தென்னிந்தியாவின் சக்ரவர்த்தியாகி விடலாம் என்பது முகமது அலியின் கனவு. எனவே, பாளையக்காரர்களுடன் வரிவசூல் தொடர்பாக எழும் சிக்கல்கள் தொடங்கி, எல்லா விவகாரங்களுக்கும் பிரிட்டிஷ் படைகளையே கூலிப்படையாகப் பயன்படுத்த ஆரம்பித்தார். காலப்போக்கில் பிரிட்டிஷ் படைச்செலவுக்கு அடைக்கவேண்டிய கடன் தொகை மிகுந்தது.  ஒரு கட்டத்தில் நவாப் திவால் அடையும் நிலைக்குச் சென்றான். இறுதியில் வேறுவழியின்றி தன் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளை ஒவ்வொன்றாக முகமது அலி பிரிட்டிஷாருக்கு எழுதிக் கொடுக்கத் தொடங்கினார்.

கி.பி. 1785ஆண்டுக்கும் கி.பி. 1790ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் திருநெல்வேலிச் சீமையின் வரிவசூல் செய்யும் உரிமையை நவாப் தாமே எடுத்துக்கொண்டார். கி.பி. 1790ஆண்டுக்கும் கி.பி. 1795ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பிரிட்டிஷார் நவாபின் உரிமைகளைப் பறித்துக்கொண்டனர். பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை சீர்கொடத்தொடங்கியது. இந்நிலையில்  ஜெகவீர பாண்டிய கட்டபொம்மு மாண்டார்.

கெட்டிபொம்மு மரபின் ஏழாவது மன்னர்

ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன். இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமகத்தம்மாள் தம்பதியர்.

இவர்களுக்கு 03.01.1760ஆம் நாள் பிறந்த மகனே வீரபாண்டியன் அல்லது கருத்தையா எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மன். கட்டபொம்மனுக்கு குமாரசுவாமி என்ற சிவத்தையா, துரைசிங்கம் என்ற ஊமைத்துரை ஆகிய தம்பியர்களும் ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர்.

இவர் நாயக்க வம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் இவர் பொம்மு நாயக்கர் என்று மக்களால் அழைக்கப்பட்டார். கெட்டிபொம்மு மரபின் ஏழாவது மன்னரான வீரபண்டிய நான்காம் கட்டபொம்மு 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.

மக்கள் விரோத அரசு

பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைப் புதுப்பித்தார். அதற்கு நிதியாக மக்களிடம் 84 சதவிகித மகசூலைப் பெற்றார். மக்களின் உடைமைகளையும் பணத்தையும் பறித்தார். இவரது கொள்ளைகள் குறித்து கி.பி.1818ஆம் ஆண்டு கால்டுவெல் பாதிரியார் எழுதிய ‘திருநெல்வேலியின் அரசியல்’ என்ற நூல் விரிவாக விளக்கியுள்ளது. இவரின் ஆட்சி மக்கள் விரோ அரசாட்சியாகவே இருந்துள்ளது.

பாளையத்து எல்லையை நிர்ணயித்த ஆங்கிலேயர்கள் அருங்குளம், சுப்பலாபுரத்தை எட்டயபுரத்துக்கு வழங்கியதாலும், ஆற்காடு நவாப்பிடம் ஒப்பந்தம் செய்து பாஞ்சாலங்குறிச்சியில் ஆதிக்கம் செலுத்தியதாலும் கட்டப்பொம்மன் பிரிட்டிஷார் மீது கடுப்பில் இருந்தார்.

இந்நிலையில், கி.பி. 1797ஆம் ஆண்டில் பிரிட்டிஷார் கட்டபொம்மனிடம் கப்பம் கேட்டனர். கட்டபொம்மன் மறுத்தார். கி.பி.1797ஆம் ஆண்டின் இறுதியில் பிரிட்டிஷ் ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிட்டார். அப்போரில் கட்டபொம்மன் வென்றார்.

வா ராஜா வா

கி.பி. 1797ஆம் ஆண்டில் இராமநாதபுரத்தில் பாளையக்காரர்கள் கலகம் செய்தனர். அதனை அடக்க பிரிட்டிஷ் அரசு டபிள்யு. எல். ஜாக்ஸன் என்பவரை திருநெல்வேலி கலெக்டராக நியமித்து, அனுப்பி வைத்தது.

அவர் தன்னை வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு ஆணைபிறப்பித்தார். அவரைச் சந்திப்பதற்காக கட்டபொம்மன் தன்னுடன் சிறிய படையுடன் பல மைல்கள் பயணித்தார். டபிள்யு. எல். ஜாக்ஸனைச் சந்திக்க இயலவில்லை. டபிள்யு. எல். ஜாக்ஸன் கட்டபொம்முவைச் சொக்கம்பட்டி, தேற்றூர், ஸ்ரீவில்லிபுத்தூர், பேறையூர், பாவாலி, பள்ளிமடை, கமுதி ஆகிய ஊர்களுக்கு அலைக்கழித்தார். அவரை இராமநாதபுரம் வரவழைத்துச் சிறைப்பிடிக்க டபிள்யு. எல். ஜாக்ஸன் திட்டமிட்டார்.

டபிள்யு. எல். ஜாக்ஸன் – கட்டபொம்முவின் சந்திப்பு 05.09.1798ஆம் நாள் நடைபெற்றது. வாக்குவாதம் முற்றி, கைலப்பில் முடிந்தது. பிரிட்டிஷ் படைத்தலைவன் கிளார்க் இறந்தார்.  கட்டபொம்முவையும் அவரின் சிறு படையினரையும் பாதுகாப்பாக அங்கிருந்து தப்பிவர வெள்ளைத்தேவன் அல்லது பாதர் (பகதூர்) வெள்ளை என்பவர் உதவினார். ஆனால், பாஞ்சாலங்குறிச்சியின் செயலர் சுப்பிரமணிய பிள்ளை பிரிட்டிஷாரால் கைதுசெய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

டபிள்யு. எல். ஜாக்ஸனின் இச்செயல்பாடு பிரிட்டிஷ் அரசுக்குப் பிடிக்கவில்லை. டபிள்யு. எல். ஜாக்ஸனை நீக்கியது. அவருக்குப் பதிலாக லூஷிங்டன் என்பவரை நியமித்தது. சுப்பிரமணிய பிள்ளை விடுவிக்கப்பட்டார். கட்டபொம்முவின் போக்கு  லூஷிங்டனுக்குப் பிடிக்கவில்லை. மீண்டும் போர்ச் சூழல் ஏற்பட்டது.

கெட்ட நேரம்

இந்நிலையில் மேஜர் பானர்மன் தலைமையில் பெரும்படை கி.பி. 1799ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியின் மீது மோதியது. ஆனால், அப்போது திருச்செந்தூர் விசாக விழாவை முன்னிட்டு கட்டபொம்முவின் சகோதரர்கள் பாதிப் படையுடன் திருச்செந்தூர் சென்றிருந்தனர். சுப்பிரமணிய பிள்ளை ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்தார். கட்டபொம்முவுடன் வீரபத்திரபிள்ளையும் கணக்கன் பொன்னைப் பிள்ளையும் மீதிப் படையினரும் இருந்தனர்.

பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிட்ட பிரிட்டிஷ் படைக்கு லெப்டினண்டு டல்லஸே தலைமைதாங்கினார். காலின்ஸ், ஓரெய்லி, புரூஸ், டக்ளஸ் டார் மிக்ஸ், பிளேக் பிரெய்ன் ஆகிய பிரிட்டிஷ் தளபதிகளும் உடனிருந்தனர்.

கோட்டைவிட்டனர்

05.09.1799 ஆம் நாள் அதாவது டபிள்யு. எல். ஜாக்ஸன் – கட்டபொம்முவின் சந்திப்பு நிகழ்ந்த ஓராண்டு கழித்து பிரிட்டிஷ் பிரங்கிகளால் பாஞ்சாலங்குறிச்சி பாதி தகர்க்கப்பட்டது.  இரண்டுநாட்கள் கழித்து 12 பவுண்டு திறனுள்ள பீரங்கிகளால் தாக்கினர். மண்கோட்டை தகர்ந்தது. ஆனால், அங்கிருந்து கட்டபொம்மனும் அவனுடைய ஆட்களும் தப்பிவிட்டனர். கோட்டை தாக்கப்படும் தகவல் அறிந்த சுப்பிரமணியபிள்ளையும் கட்டபொம்மன் தம்பியரும் வேறு வழியாக வந்து கட்டபொம்மனுடன் இணைந்துகொண்டனர்.

மேஜர் பானர்மனின் விரர்களும் எட்டயபுரப்பாளையக்காரரும் கட்டபொம்மனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். கோலார் பட்டிக்கோட்டையில் கட்டபொம்மன் இருப்பதை அறிந்த பிரிட்டிஷார் அங்குசென்றனர். கட்டபொம்மன் அவர்களுடன் போரிட்டபடியே தன்னுடைய முதன்மையான ஆறு நபர்களுடன் தப்பிவிட்டார். கட்டபொம்மனின் 34 வீரர்களும் சுப்பிரமணியபிள்ளையும்  பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் சுப்பிரமணியபிள்ளை தவிர்த்து மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

கட்டபொம்மனுக்குத் துணையாக இருந்த நாகலாபுரம், கோலார்பட்டி, ஏழாயிரம் பண்ணை, காடல்குடி, குளத்தூர் ஆகிய பாளையக்காரர்களுள் காடல்குடி பாளையக்காரர் மட்டும் தப்பியோடினார். மற்றவர்கள் பிரிட்டிஷாரிடம் சரணடைந்தனர்.

மருமகனா? பணமா? 

சரணடைந்தோரில் சுந்தரபாண்டிய நாயக்கரை மட்டும் மன்னிக்காமல் அவரின் தலையைத் துணித்தனர். சுப்பிரமணிய பிள்ளை நாகலாபுரத்தில் தூக்கிலிடப்பட்டார். பிரிட்டிஷ் படைத்தலைவன் காலின்ஸைக் கொன்ற வெள்ளைத்தேவனை பிரிட்டிஷாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆதலால் அவரைக் காட்டிக்கொடுப்பவருக்கு 1000 வெள்ளி பரிசு என்று அறிவித்தனர். இந்தியப் பணத்தில் ரூபாய் 5,000.00 மதிப்புடையது. வெள்ளைத்தேவனின் மாமன் அப்பரிசுத்தொகைக்கு ஆசைப்பட்டு தன் மருமகனான வெள்ளைத்தேவனைக் காட்டிக்கொடுத்தான். ஆற்றூரில் தானாபதி பிள்ளை குடும்பத்தைச் சிறை பிடித்து சென்னைக்குக் கொண்டு சென்றனர்.

இரண்டாவது தற்கொலைப் படைப் போராளிகள்

பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமம் கெவிணகிரி. இங்கு ஒரு விவசாயிக்கு மகனாகப் பிறந்தவர் சுந்தரலிங்கம். இவரது வீரத்தைக் கேள்விப்பட்ட கட்டபொம்மன் தன் ஒற்றர் படைக்கு அவரைத் தளபதியாக்கினார். விரைவில் அனைத்துப் படைகளுக்கும் தளபதியாக உயர்ந்தார் சுந்தரலிங்கம்.

சுந்தரலிங்கத்தின் பொறுப்பில்தான் கட்டபொம்மனின் தானியக்கிடங்கும், வெடிமருந்துக் கிடங்கும் இருந்தன. கட்டபொம்மனுக்கும் பிரிட்டிஷாருக்கும் முட்டல், உரசல் உருவானபோது வெள்ளையத்தேவனும், சுந்தரலிங்கமும் கட்டபொம்மனுக்கு பக்கபலமாக விளங்கினர்.

கட்டபொம்மனை பல நாட்கள் அலைக்கழிய வைத்து ராமநாதபுரம் அரண்மனையில் ஜாக்சன் துரை சந்தித்தபோது சுந்தரலிங்கமும் உடனிருந்தார். அந்த சந்திப்பு பின்பு பெரும் சண்டையாக மாறியபோது சுந்தரலிங்கத்தின் வாளுக்குப் பல பிரிட்டிஷ் சிப்பாய்கள் மாண்டனர்.

இதையடுத்து கட்டபொம்மனை அழிக்க பிரிட்டிஷார் கி.பி. 1799ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தார்கள். பிரிட்டிஷ் படை பாஞ்சாலங்குறிச்சிக்கு வெளியே கரிசல் காட்டில் முகாமிட்டிருந்தது. பீரங்கிகள், வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் பிரிட்டிஷ் படை குவிந்திருந்தது.

08.09.1799ஆம் நாள் சுந்தரலிங்கம் தன் முறைப்பெண்ணான வடிவுடன் ஆடுமேய்ப்பவர்களைப் போல வேடமிட்டு பிரிட்டிஷாரின் வெடிமருந்து கிடங்குப் பகுதிச் சென்றார். தீப்பந்தத்தைக் கொளுத்தியபடி சுந்தரலிங்கமும், வடிவும் வெடிமருந்துக் கிடங்கிற்குள் பாய்ந்தார்கள். பலத்த வெடிச்சத்தத்துடன் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது. சுந்தரலிங்கமும், வடிவும் வேலுநாச்சியாரின் மெய்க்காப்பாளர் குயிலியின் பாணியினைக் கையாண்டு சுதந்திரப் போரின் இரண்டாவது தற்கொலைப் படைப் போராளிகளாகப் பெயரெடுத்தனர்.

சூழ்ச்சி விருந்து

கட்டபொம்மன் காட்டில் ஒளிந்திருப்பதை அறிந்த புதுக்கோட்டை மன்னர் விஜய ரகுநாத தொண்டைமான், தன் தளபதி முத்துவைர அம்பலக்காரன் வழியாக அவரை விருந்துக்கு அழைத்து, அடைக்கலம் அளிப்பதுபோல் நாடகமாடி அவரை 01.10.1799ஆம் நாள் பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்தார்.

கட்டபொம்மனைக் கைதுசெய்த பிரிட்டிஷார் அவரை 16.10.1799ஆம் நாள் பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள பழைய கயத்தாறு கோட்டைக்கு அருகில் உள்ள ஒரு புளியமரத்தில் தூக்கிலிட்டனர். கட்டபொம்மனின் தம்பி சிவத்தையாவும் ஊமைத்துரையும் சிறைபிடிக்கப்பட்டு பாளையங்கோட்டையில் அடைக்கப்பட்டார்.

கோட்டைகள்தான் எதிரிகள்

பின்னர் ஆழ்ந்து சிந்தித்த பிரிட்டிஷ் மேஸர் பானர்மன் கோட்டைகள் இருப்பதனால்தானே இவர்கள் நம்மை வந்துபார் என்கிறார்கள்? கோட்டைகளை அழித்துவிட்டால் என்ன? என்று முடிவெடுத்தனர். தென் தமிழகத்தில் இருந்த பாளையக்காரர்களைப் பத்துநாட்கள் தம்முடன் வைத்துக்கொண்டு அவர்களின் ஆணையின்பேரில் 42 கோட்டைகளை பீரங்கிகளின் உதவியால் தரைமட்டமாக்கினர். அவரகளின் படைக்களங்களைப் பறிமுதல்செய்தான். கோட்டைகளைக் கட்டுவதும் படைக்களம் வைத்திருப்பதும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரானது என்று அறிவித்தார்.

சிறைக் கலவரம்

அச்சிறையில் 02.02.1801ஆம் நாள் கலகம் விளைவித்து தப்பிய ஊமைத்துரையும் அவரது வீரர்களும் மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டையை வலுப்படுத்தத் திட்டமிட்டனர். கண்டிக்குப் போவதாகக் கடிதம் மூலம் பிரிட்டிஷாருக்குத் தகவல் அனுப்பிவிட்டு, பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்தார். அங்குத் தொழிலாளிகளோடு தொழிலாளியாக நின்று ஆறு நாட்களில் கோட்டையைச் சீரமைத்தார். ஆளத்தொடங்கினர்.

இதனை அறிந்த பிரிட்டிஷார் மேஜர் மெக்காலே பெரும்படைகொண்டு பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைத் தாக்கினர். முடியவில்லை. மீண்டும் அவரது தலைமையில் ஒரு பெரும்படை 30.03.1801ஆம் நாள் முதல் 24.05.1801ஆம் நாள் வரை முற்றுகையிட்டது.

ஊமைத்துரையுடன் போரிட்ட  ‘பேக்கார்ட்‘ என்ற அதிகாரி போர் கைதியாக மாட்டிக்கொண்டார். அவர் மனைவி உயிர்பிச்சை கேட்க அவரை ஊமைத்துரை விடுவித்தார்.

பின்னர், திருச்சியிலிருந்து வந்த பிரிட்டிஷ் படையினர் 3,000பேர் சேர்ந்து பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைத் தகர்க்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவியாக மலபாரிலிருந்தும் திருச்சியிலிருந்தும் துணைப் படைகள் வந்துசேர்ந்தன. அவற்றிற்கு கலோனப் அக்னியூ என்பவர் தலைமை தாங்கினார். கோட்டை தகர்க்கப்பட்டது.

ஜேம்ஸ் வெல்ஸ் என்ற பிரிட்டிஷ் அதிகாரி எழுதிய ‘போர் நினைவுகள்‘ என்ற நூலில் “முருக பக்தர்கள் வேடமிட்டு ஊமைத்துரையும் செவத்தையாவும் மீட்கப்பட்டபோது சுமார் ஒரு மைல் தூரத்தில் தான் நிராயுதபாணியாக பிரிட்டிஷ் அதிகாரிகள் மதுவிருந்தில் களித்திருந்தனர். ஊமைத்துரையும் உடன்வந்த 200க்கு மேற்பட்ட வீரர்களும் அதைக் கவனித்திருந்தால் இன்று வரலாறே மாறியிருக்கும்“ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் ஊமைத்துரை தப்பியோடி, மருது பாண்டியரிடம் தஞ்சமடைந்தார். அவருக்கு அடைக்களம் கொடுத்ததற்காக பிரிட்டிஷார் மருதுபாண்டியரின் காளையார் கோயிலை 01.10.1801ஆம் ஆண்டு கைப்பற்றி, மருது பாண்டியர்களைத் திருப்பத்தூர் கோட்டைக்கு அருகில் தூக்கிலிட்டனர்.

ஊமைத்துரையைக் கைதுசெய்து, பாஞ்சாலங்குறிச்சியின் புதிய கோட்டையைத் தகர்க்கப் பயன்பட்ட பீரங்கிகளை வைத்திருந்த பீரங்கிமேட்டில் தூக்குமேடை அமைத்து அங்கேயே தூக்கிலிட்டனர்.

வரலாற்றிலிருந்து அழி

30 ஏக்கர் பரப்பளவுள்ள பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையும் கட்டபொம்மனின் தர்பார் மண்டபம், மருந்துப்பட்டறை, பீரங்கிமேடு, அந்தப்புரம், யானைகட்டிய மண்டபங்கள் ஆகியன அனைத்தும் முழுவதுமாக மண்ணோடு மண்ணாக்கப்பட்டு அந்நிலத்தில் உழுது ஆமணக்கு பயிரிடப்பட்டது. அப்போரில் உயிர்நீத்த 42 பிரிட்டிஷ் வீரர்களுக்குக் கல்லறை அமைக்கப்பட்டது.

பாஞ்சாலக்குறிச்சிப் பாளையம் எட்டயபுரம், மணியாச்சி முதலிய பாளையங்களிடையே பங்கிடப்பட்டது. திருநெல்வேலி கெஜெட்டிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயர் நீக்கப்பட்டது. அனைத்து ஆவணங்களிலும் அப்பெயர் கவனமாக நீக்கப்பட்டது.

 (இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள்).

அணு ஆயுதப் போர் – தப்பிக்கும் வழிகள்

உலக நாடுகள், தங்களுக்குள் போர் செய்யும் போது, அணு ஆயுதங்களை பயன்படுத்தினால், ஏராளமான உயிர்ச் சேதமும், பொருட்சேதமும் ஏற்படுவதோடு, எதிர்கால சந்ததியினரையும் கடுமையாகப் பாதிக்கும். இந்தியா – பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாகத் தீராத சிக்கல்கள் உள்ளன. ஏற்கெனவே, மூன்று முறை  இரு நாடுகளிடையே போர் நடந்துள்ளது. எனினும் இனி வரும் காலங்களில் இரு நாடுகளிடையே போர் ஏற்பட்டால் அதில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தும் அபாயம் உள்ளது. அவ்வாறு அணு ஆயுதப் பிரயோகம் நிகழ்ந்தால் 200 கோடி பேர் கடுமையாகப் பாதிக்கப்படுவர். இந்த எண்ணிக்கை உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது. இதில், ஏராளமானோர் கொல்லப்படலாம்.

சர்வதேச அணு ஆயுதப் போர் தடுப்பு ஆர்வலர்களின் கருத்து இது.

Nuclear-War-Americaஇரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில்தான் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினார்கள். ஆனால்,  மூன்றாம் உலகப் போர் அல்லது அடுத்த இந்தியா – பாகிஸ்தான் போர் நடைபெற்றால், அதன் தொடக்கத்திலேயே அணு ஆயுதம் பயன்படுத்தப்படலாம். அப்போரில் பரிதாபமாகப் பாதிக்கப்படுபவர்கள் பொதுமக்களே.

அணு ஆயுதத்தின் கொடூர விளைவுகளைப் பற்றித் தெரிந்துகொள்ள கூகுள் உதவியால், ஐப்பானில் ஹிரோசிமா, நாகசாகி நகரங்களில் விழுந்த அணுகுண்டுகளின் பின்விளைவுகளைப் பார்க்கவும். அவை சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட அணுகுண்டுகள். இப்போது போர் மூண்டால் 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தயாரிக்கப்பட்ட நவீன அணுகுண்டுகள்தானே பயன்படுத்தப்படும். அவற்றின் தாக்கம் 50 மடங்குகளுக்கும் அதிகமாக இருக்கும்.

உலக மக்கள் அனைவரும் அமைதியைத்தான் விரும்புகிறார்கள். ஆனால், உலக அரசுகள் அவ்வாறு விரும்புகின்றனவா? சின்ன நாடுகள் கூடத் தன் வலிமையை ஆயுதத்தின் வழியாகத்தான் உலகுக்குக் காட்ட விரும்புகின்றன. உலகப் போர்களைப் பேசித் தீர்த்துக்கொள்ள எந்த நாடும் விரும்புவதில்லை. எந்த நாடும் தன் ஆயுதப் பலத்தால்தான் பெரும்போர்களை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளன. அணு ஆயுதத்தால் விளையும் அமைதி மயான அமைதி. அந்த அமைதியைத் தரிசிக்க வெட்டியான் கூட மிஞ்சமாட்டான்.

அணு ஆயுதப் போர் தொடங்கினால் அரசால் போரை முன்னின்று நடத்துவதற்குத்தான் நேரமிருக்கும். முதன்மைத் தலைவர்கள் தப்பியோடவே முனைப்பாக இருப்பர். அவர்களுக்குப் பொதுமக்களைக் காக்கும் வழி தெரியாது. அணு ஆயுதப் போரிலிருந்து இறைப் பிராத்தனைகளாலோ அல்லது அமைதிப் பேச்சுவார்த்தைகளாலோ தப்பிவிட முடியாது. தன் கையே தனக்கு உதவி எனப் பொதுமக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளவேண்டும். எப்படி?

அணு ஆயுதப் போருக்கான முகாந்திரம் தெரியவந்தால் உடனடியாகப் பொதுமக்கள் பின்வரும் 15 வழிமுறைகளை ஒருமனதாக மேற்கொள்ளவேண்டும்.

 1. உங்களுக்கு அசையாச் சொத்துக்கள் இருந்தால் உடனடியாக யார் கேட்டாலும் கேட்ட விலைக்கு விற்றுப் பணமாக்கவும்.
 2. உங்களின் இருக்கும் அசையும் சொத்துக்களை முடிந்தால் விற்கவும் அல்லது எடைக்குப் போட்டுப் பணமாக்கவும்.
 3. பாண்டுப் பத்திரங்கள் இருந்தால் முடிந்தால் அவற்றை உடனடியாகத் திருப்பிக் கொடுத்துப் பணமாக்கிக்கொள்க.
 4. வட்டிக்குப் பணம் கொடுத்திருந்தால் உடனடியாக வசூலித்துக்கொள்க. வட்டிக்குப் பணம் வாங்கியிருந்தால் வழக்கம்போல அதனைத் திருப்பிக்கொடுக்க மறந்துவிடுங்கள்.
 5. பங்குச்சந்தையில் பணம் முதலீடு செய்திருந்தால் நஷ்டமானாலும் அனைத்துப் பங்குகளையும் விற்றுப் பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
 6.  தனியார் சிட்பண்டு, வங்கி, தபால்துறையில் பணம் வைத்திருந்தால் அவற்றை முழுவதுமாக எடுத்துக்கொள்ளுங்கள்.
 7. வீட்டில் உள்ள, தங்களின் உடலில் உள்ள அனைத்து தங்க, வைர நகையையும் விற்று விடவும். வெள்ளிப்பொருட்களையும் விற்கவும்.
 8. இப்போது தங்கள் கையில் 50,000த்தை மட்டும் வைத்துக்கொண்டு மீதியுள்ள அனைத்து தொகைக்கும் (நிலம், வீடு, அசையும் சொத்துக்கள், நகைகளை விற்ற தொகை, பங்குச் சந்தையில் பெற்றவை போன்ற அனைத்து வகையிலும் வந்த முழுத் தொகைக்கும்) தரமிகுந்த வைரக் கற்களை வாங்கிப் பத்திரமாகக் கையில் வைத்துக் கொள்ளுங்கள். எக்காலத்திலும் எந்தநாட்டிலும் மீண்டும் விற்கக்கூடிய, விலையுயர்ந்த, சுமைகுறைந்த, மறைத்துவைக்க ஏற்ற பொருள் அது மட்டுமே.
 9. ஆளுக்கு மூன்று ஜோடி துணிமணிகளும் நடுநாள் கெட்டுப் போகாத தரமிகுந்த, சத்துநிறைந்த உணவுப் பொருட்களை உங்களால் சுமக்க முடிந்த அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள். நோயாளிகளாக இருந்தால் மருந்து, மாத்திரைகளை அதிக அளவில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
 10. முக்கியமானப் பொருட்கள் அல்லது நினைவுச் சின்னங்கள் எவற்றையும் எடுத்துச் செல்லாதீர்கள். அவற்றை மனத்தில் மட்டுமே சுமந்துகொள்ளுங்கள். உங்களின் சுமை வைரமாகவும் உணவாகவும் மட்டுமே இருக்கட்டும்.
 11. உங்கள் வீட்டாரில் யாரேனும் நெடும் பயணத்திற்கு ஏற்றவராக இல்லை எனில் கல்மனத்தோடு அவர்களை அங்கேயே விட்டுவிடுங்கள். அதற்காக மனத்தைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள்.
 12. உங்கள் வளர்ப்புப் பிராணிகளுக்குப் பிரியாவிடை தந்துவிடுங்கள்.
 13. அணுஆயுதப் போரின்போது பதுங்கு குழிகள் அமைத்துத் தப்பிக்க முடியாது. அணுக்கதிர்வீச்சு சில ஆண்டுகள் வரை வீரியமாகவே இருக்கும். எத்தனை ஆண்டுகளுக்குப் பதுங்கு குழிக்குள் உங்களால் இருக்க முடியும்?  ஆதலால், நாட்டை விட்டுச் செல்லுதலே சிறப்பு. (புலம்பெயர்தல் தமிழர்களுக்குப் புதிதல்லவே). “தாய்மண்ணே வணக்கம்!“ என்று நம் நாட்டுக்கு ஒரு கிரேட் சல்யூட் அடித்துவிட்டுப் புறப்படுங்கள்.
 14. வான்வழியாகவோ அல்லது கடல்வழியாகவோ அந்தமான் நிகோபார் தீவுகளுக்குச் சென்றுவிடவும். அல்லது லட்சத்தீவுகளுக்கு அல்லது போரின் சுவடு இல்லாத ஏதாவது ஒரு குட்டி நாட்டுக்கு ஓடிவிடவும். பெரிய நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும். காரணம், அங்கும் அணுகுண்டு விழலாம்.
 15. சட்டப்படியோ அல்லது அகதியாகவோ அங்கேயே சில ஆண்டுகள் தங்கிவிடுங்கள். அல்லது அங்கேயே வேர்ப்பதித்துக் கொள்ளுங்கள். மக்கள்தான் நாட்டுக்குச் சொந்தமில்லை. ஆனால், உலகம் அனைத்துயிருக்கும் (மக்களுக்கும்) சொந்தம்தானே!

உலக அரசுகளே! உணவுப் பொருட்களைப் போல ஆயுதங்கள் கெட்டுப்போகும் பொருட்கள் அல்ல. ஆதலால், அவற்றைத் தங்களால் முடிந்த அளவிற்குப் பயன்படுத்தாமலே வைத்திருங்கள்.

நம்காலத்திலும் நமக்குப் பின்னான காலத்திலும் போர், குறிப்பாக அணுஆயுதப்போர் நிகழாமல் இருக்க உலக அரசுகளை (இறைவனை அல்ல) வேண்டுவோம்.

0

முரட்டுச் சிங்கம் ஹைதர் அலி

hyderali_10461மன்னரின் மகன் மன்னராவதுதான் இந்திய மரபு. விதிவிலக்காக அரச மரபில் பிறக்காதவர்களும் தங்களின் அறிவுத்திறத்தால், உடல்வலிமையால் ஆட்சியைப் பிடித்து மன்னராவதும் உண்டு.

எளியவர்கள் தங்களின் அறிவால், துணிவால் அரியணையேறினாலும் அவர்கள் முழுவதுமாகத் தங்களை மன்னர்களாகவே கருதுவதில்லை. தாம் என்றும் ஒரு சாதாரண குடிமகன்தான் என்று நினைத்து குடிமக்களின் மன்னராகவே வாழ்வர். அத்தகையோருள் ஒருவர் ஹைதர் அலி, மற்றொருவர் திப்பு சுல்தான். இவர்களுள் ஒருவர் சிங்கம் என்றால் மற்றொருவர் புலி. ஹைதர் என்பதற்குச் “சிங்கம்“ என்று அர்த்தம். ஹைதர்அலி உண்மையிலேயே சிங்கம்தான். ஆனால் கொஞ்சம் முரட்டுச் சிங்கம். திப்பு சுல்தானுக்கு ஜாகோபியன்கள் “குடிமகன்“ என்ற பட்டத்தினை வழங்கினர். மன்னர் மரபினர் அல்லாத மன்னர்கள் மக்களின் மனத்தில் வாழும் நல்ல குடிமகன்கள்தான் என்பதற்கு இந்தச் சிங்கமும் புலியுமே சான்று.

சூஃபி மரபு

ஹைதர் அலியின் முன்னோர்கள் “அகவிழிப்புடைய மனிதர்கள்” என்று அழைக்கப்படும் சூஃபி குடும்பத்தினர். அவர்களுள் ஒருவர் ஃபட்டா முகம்மது. சூஃபி மரபினர் போர் வீரராவது ஒரு வகையில் முரண்தான்.  சூஃபி இஸ்லாமின் அடிப்படைக் கொள்கை சுல்ஹ்-இ-குல் என அழைக்கப்படுகிறது. இதன் பொருள் ‘அனைத்துடனும் சமாதானம்’ என்பதாகும்.

சமாதானத்தை விரும்பும் மரபில் போர் வீரர் உருவாவது முரண்தானே?. பத்தே முகம்மது ஆற்காடு நவாபின் முதன்மைத் தளபதியாக இருந்தவர். அவருக்கு இரண்டாவது மகனாக கி.பி.1720ஆம் ஆண்டு ஹைதர் அலி பிறந்தார்.

படைவீரர்

மைசூரை ஆண்ட இளம்வயது அரசர் கிக்க கிருஷ்ணராசாவிடம் படை வீரர்களாக ஹைதர் அலியும், அவரது அண்ணன் ஷாபாஸ் சாஹிபும் சேர்ந்தனர். கி.பி. 1749ஆம் ஆண்டு நடைபெற்ற தேவனஹள்ளிப் போரில் இவர்கள் காட்டிய வீரம் கிருஷ்ணராசாவை வியப்பில் ஆழ்த்தியது. அப்போரில் பெற்ற வெற்றிக்குக் கைமாறாக கிருஷ்ணராசா ஹைதர் அலியைக் குதிரைப்படைத் தளபதியாக்கினார்.

பிரிட்டிஷ் எதிர்ப்பு

கி.பி.1750ஆம் ஆண்டு பிரிட்டிஷாருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இந்திய மண்ணில் கடும்போர் ஏற்பட்டது. இந்நிலையில் அரசர் கிக்க கிருஷ்ணராசா பிரெஞ்சுக்காரர்களுக்கு ஆதரவாக இருந்தார். இப்போரில்தான் ஹைதர்அலி பிரிட்டிஷாரை எதிர்த்து முதல் முதலில் மோதினார். தன் அணியினரான பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து நவீன போர் நுணுக்கங்களையும் ஆயுதங்களையும் அறிந்துகொண்டார்.

ஆயுதப்படை

பிரிட்டிஷாரை ஹைதர் அலி எதிர்கொண்ட விதத்தையும் வீரத்தைக் கண்டு வியந்த மைசூர் அமைச்சர் நஞ்ஞராஜர் மைசூர் ஆட்சியின் ஒரு பகுதியாக இருந்த திண்டுக்கல்லை நிர்வகிக்கும் பொறுப்பினை ஹைதர் அலிக்கு வழங்கினார்.

திண்டுக்கல்லில் ஹைதர் அலி தன் முழுத் திறமையையும் வெளிப்படுத்தினார். அங்கு இராணுவ ஆய்வுக் கூடத்தை உருவாக்கி, பிரிட்டிஷ் படையை எதிர்கொள்ளும் வகையில் பீரங்கிப் படையை அமைத்தார்.

வீரர்களின் நண்பர்

மைசூர் படையில் வீரர்களுக்கு ஊதிய நிலுவை, ஊதிய உயர்வு சார்ந்த சிக்கல்கள் எழுந்தன. அது பெருஞ்சிக்கலாகி கி.பி.1758ஆம் ஆண்டில் வீரர்களுக்கும் மன்னருக்கும் இடையில் ஒரு கலகமாக உருவெடுத்தது. அக்கலகத்தை அடக்கும் பொறுப்பை அரசர் கிக்க கிருஷ்ணராசா ஹைதர் அலியிடம் ஒப்படைத்தார்.

ஹைதர் அலி தன் சாட்டையைச் சொடுக்கிக் கலவரத்தை அடக்கி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தார். தன் முயற்சியால் கிருஷ்ணராசாவிடம் பணம்பெற்றும் தன் சொந்தப் பணத்தைக்கொண்டும் வீரர்களின் பண(மன)த்துயரைத் துடைத்தார். இதனால் படைவீரர்கள் மத்தியில் ஹைதர் அலிக்குச் செல்வாக்கு ஏற்பட்டது.

வெற்றிச்சிங்கம்

கி.பி. 1759ஆம் ஆண்டு மராட்டியப் படை மைசூரைத் தாக்கியது. மைசூர் படைக்கு ஹைதர்அலியைத் தலைமையேற்குமாறு அரசர் கிக்க கிருஷ்ணராசா கட்டளையிட்டார். மைசூர் படை ஹைதர் அலியின் தலைமையில் மராட்டியப் படையினை எதிர்த்தது. மகத்தான வெற்றியினைப் பெற்றது.

அரசர் கிக்க கிருஷ்ணராசா அவ்வெற்றியைக் கொண்டாடும் வகையிலும் ஹைதர்அலியைப் பாராட்டும் வகையிலும் ஹைதர் அலிக்கு “பதே ஹைதர் பஹதூர்“ என்ற பட்டத்தினை வழங்கினார். அதாவது “தைரியம் உடைய வெற்றிச் சிங்கம்“ என்று பொருள்.

ஆட்சியைப் பிடி

அரசர் கிக்க கிருஷ்ணராசா இளம் வயதினர் என்பதால் அவரை ஏய்த்தபடியே தேவராஜர் மற்றும் நஞ்ஞராஜர் ஆகிய இரண்டு அமைச்சர்களும் சுகவாழ்வு வாழ்ந்தனர். ஆனால், மறைமுகமாக ஹைதர்அலி மக்கள் மனத்தில் பெருவாழ்வு வாழ்ந்து வந்தார்.

பிரிட்டிஷாரைப் பொறுத்தவரை மைசூரில் அவர்களுக்கு இணையான வீரராக ஹைதர் அலியை மட்டுமே கருதினர். ஆதலால், பிரிட்டிஷ் அரசு ஹைதர் அலிக்கு எதிராக ஒரு பெரும் கூட்டணியை உருவாக்கியது. அக்கூட்டணியில் மராத்தியர்களும் நிஜாம்களும் இருந்தனர். இதனை அறிந்த ஹைதர் அலி பிரெஞ்சுக்காரரர்களைத் தன்வசப்படுத்திக்கொண்டார்.  அவர்களின் வீரர்களின் உதவியுடன் தன் படைவீரர்களுக்குப் போர் நுட்பப்  பயிற்சியினை அளித்தார்.

இந்நிலையில் பிரிட்டிஷார் அமைச்சர்கள் தேவராஜர் மற்றும் நஞ்ஞராஜர் ஆகியோரைத் தன்வசப்படுத்திக்கொண்டு ஹைதர் அலிக்கு எதிராக அவர்களைச் செயல்படத் தூண்டினர். ஆனால், ஹைதர் அலி முந்திக்கொண்டார். அவர் தேவராஜர் மற்றும் நஞ்ஞராஜர் ஆகியோரைக் கைதுசெய்தார். அரசர் கிக்க கிருஷ்ணராசாவை ஆட்சிப்பொறுப்பிலிருந்து நீக்கினார். மைசூரின் அரசராகத் தன்னை அறிவித்துக்கொண்டார். வீரர்களும் மக்களும் அவரைத் தம் அரசராக ஏற்றனர்.

தேவை படையும் பணமும்

மைசூர் சிம்மாசனத்தில் அமர்ந்த ஹைதர் அலி முதல்வேலையாகத் தன் படையினைச் சீர்படுத்தினார். தன்படையினருள் புதிதாக 200-க்கும் மேற்பட்ட பிரெஞ்சு வீரர்களை இணைத்துக்கொண்டார். அவர்களின் வழியாகத் தன் படையினரை நவீன வீரர்களாக மாற்றினார். 1.8 லட்சம் வீரர்களைக் கொண்ட பெரும் படையினைத் தயார்செய்தார்.

உலக அளவில் ஏவுகணை தயாரிப்பு வரலாற்றில் ஹைதர் அலிக்கு முக்கியப் பங்குண்டு. அட்டைக்குப் பதிலாக உலோகக் குழாய்களைக் கொண்டு, 10 அடி உயரமுள்ள மூங்கில்களைப் பயன்படுத்தி ஆறு கிலோகிராம் எடையுள்ள, நூற்றுக்கணக்கான ஏவுகணைகளைத் தயாரித்தார்.

அடுத்ததாக அவர் வேளாண்மையில் கவனம் செலுத்தினார். வயல் விளைந்தால்தான் அரசுக்கு வரி கிடைக்கும் என்ற தத்துவத்தைப் புரிந்துகொண்டார். ஒரு நாட்டிற்குப் படையும் பணமும் அதிமுக்கியம் என்பது அவரது கோட்பாடு. அவ்விரண்டையும் அதிகப்படுத்திக்கொண்டார்.

வந்தது முதல் மைசூர் யுத்தம்

எப்போதும் எதற்கும் தயார்நிலையில் இருந்த ஹைதர் அலிக்குப் போர் புரியும் வாய்ப்பு கிடைத்தது. போர் என்றால் சில நாட்கள் அல்ல. சில ஆண்டுகள். அந்த நெடிய யுத்தத்தை முத்தமிட ஹைதர் அலி விரும்பினார்.

பிரிட்டிஷ் தளபதி ஜெனரல் ஜோசப் ஸ்மித் தலைமையில் ஹைதர் அலிக்கு எதிராகக் கி.பி. 1767ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் போர் தொடங்கியது. அப்போரைக் கண்டு அஞ்சிய ஹைதராபாத் நிஜாம் 23.02.1768ஆம் பிரிட்டிஷாருடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டார்.

ஹைதர் அலி தொடர்ந்து மோதினார். மராட்டியரை வென்று மங்களூரைக் கைப்பற்றினார். ஈரோட்டில் பிரிட்டிஷ் படைகளை தோற்கடித்தார். பிரிட்டிஷ் தளபதி நிக்ஸன் தோல்வியை ஒப்புக் கொண்டார். கி.பி.1767ஆம் ஆண்டு முதல் கி.பி.1769ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இப்போர் முதல் மைசூர் யுத்தம் என வரலாற்றில் குறிக்கப்பெற்றது.

ஒப்பந்தமும் ஓவியமும்

இப்போரின் முடிவில் பிரிட்டிஷார் ஹைதர் அலியுடன் ஓர் உடன்படிக்கை செய்துக் கொண்டனர். அவரவர் ஆக்கிரமித்த நிலங்களை திருப்பியளிப்பது என்றும், மைசூர் ஆட்சிக்கு ஆபத்து எனில் பிரிட்டிஷ் படை உதவிக்கு வரும் என்றும் ஒப்பந்தமானது.

ஹைதர் அலியின் ஆணைப்படி, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் கதவுகள் மீது ஆணி அடித்து, ஹைதர் அலிநொறுக்கப்பட்ட பீரங்கிகளின் குவியல் மீது அமர்ந்திருப்பதைப்போலவும், தன் காலடியில் மண்டியிட்டிருக்கும் பிரிட்டிஷ் அதிகாரி டூப்ரேயின் மூக்கைப் பிடித்து ஹைதர் அலி உலுக்குவதுபோலவும் டூப்ரேயின் தங் நாணயங்களைக் கக்குவதைப்போலவும் பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியின் பதக்கத்தை அணிந்த ஒரு நாய்  ஹைதர் அலியின் பின்புறத்தை நக்கிக்கொண்டு இருப்பதைப்போலவும் உடைய ஓர் ஓவியத்தைப் பதித்தனர்.

பிளாஷிப்போர் சொல்லிக்கொடுத்த பாடம்

ஆற்காடு நவாப் பிரான்சின் ஆதரவில் இருந்தார். இவர் கல்கத்தாவின் மீது போர் தொடங்கி, பல பிரிட்டிஷாரைக் கொன்றார். அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக பிரிட்டிஷார் வங்காளத்தைத் தாக்கினர்.

ஹைதர் அலியைப் போல், கிழக்கிந்தியாவில் பிரிட்டிஷாரை எதிர்த்த வங்காளத்தின் நவாப் சிராஜ் உத்-தௌலாவுக்கும் பிரிட்டிஷாருக்கும் இடையே கடுமையான போர் 23.06.1757ஆம் நாள் பிளாஷி என்ற இடத்தில் நடைபெற்றது.

பிரிட்டிஷ் படைகளுக்கு இராபர்ட் கிளைவ் தலைமை தாங்கினார். நவாப்பின் படைகள் எண்ணற்றதாக இருந்ததால் இராபர்ட் கிளைவ் சூழ்ச்சி செய்தார். நவாபின் தளபதி மீர் ஜாஃபருடன் ஓர் இரகசிய உடன்படிக்கை செய்துகொண்டார். அதன்படி போரில் மீர் ஜாஃபருக்கு உட்பட்ட படைப்பிரிவு பிரிட்டிஷாருடன் போரிடாமல் ஒதுங்கிக்கொண்டது. ஆதனால், இராபர் கிளைவ் வெற்றிபெற்றார். நவாப் சிராஜ் உத்-தௌலாக் கைதுசெய்த பிரிட்டிஷார் அவரைக் கல்கத்தா துறைமுகத்தில் தூக்கிலிட்டனர்.

இச்செய்தி ஹைதரைத் துன்பத்தில் ஆழ்த்தியது. தன் தேசத்தின் சக போராளி வீழ்ந்ததை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பிரிட்டிஷாரிடம் இந்திய மன்னர்கள் தோற்கக்கூடாது எனக் கருதி, மராத்தியர்கள் மற்றும் ஹைதராபாத் நிஜாம் மீதான எதிர்ப்புகளை கைவிட்டார். மராட்டியர்களை இந்துக்கள் என்பதற்காக அவர் எதிர்க்கவில்லை. பிரிட்டிஷாருடன் அவர்கள் இணைந்திருந்த காலகட்டங்களில், தேச நலனுக்காகவே அவர்களை எதிர்த்தார்.

வந்தது இரண்டாம் மைசூர் யுத்தம்

மராட்டியர்கள், மைசூர் மீது மீண்டும் போர் தொடுத்தனர். ஒப்பந்தப்படி, பிரிட்டிஷ் படைகள் ஹைதருக்கு உதவிபுரிய வரவில்லை. கடுப்பாகிப்போன ஹைதர் அலி பிரிட்டிஷ் படைகள் மீது கி.பி. 1780ஆம் ஆண்டு முதல் ஒரு நெடும்போரினைத் தொடங்கினார்.

100 பீரங்கிகள், 90,000 வீரர்களுடன் ஹைதர் அலி தாக்குதலை நடத்தினார். ஆற்காடு, பரங்கிப்பேட்டை, வந்தவாசி உள்ளிட்ட இடங்களில் யுத்தம் தீவிரமாக நடந்தது. பேரம்பாக்கம் என்ற இடத்தில் பிரிட்டிஷ் படைகளை வழிமறித்து ஹைதர் அலியின் படை சிதறடித்தது. அப்போரில் 2,000 பிரிட்டிஷார்  உட்பட 7,000 எதிரிப்படைகள் கொல்லப்பட்டனர். 2,000 பிரிட்டிஷார்  சிறைப்படுத்தப்பட்டனர்.

கல்கத்தாவில் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் சென்னை கவர்னரைப் பதவியிலிருந்து விலக்கினார். சர் அயர் கூட் என்னும் படைத்தலைவர் தலைமையில் ஒரு பெரும்படையை ஹைதர் அலியின் மீது ஏவினார். அப்படை சிதம்பரத்தை அடுத்த பறங்கிப் பேட்டையில் கி.பி.1781 ஆம் ஆண்டு ஹைதர் அலியை எதிர்கொண்டது. இப்போரில் ஹைதர் அலி தோல்வியுற்றார்.

வீர உரையும் ஈர மடலும்

தன் படைவீரர்கள் நெடிய போரைக் கண்டு மனம் தளரக் கூடாது என்பதற்காக ஹைதர் அலி தன்னுடைய நீண்ட நெடிய போர் திட்டம் குறித்து தன் தளபதிகளிடம்,“பிரிட்டிஷாரை நாம் பலமுறை வென்றுவிட்டோம். ஆனால் ஓர் இடத்தில் தோற்கடிப்பதன் மூலம் அவர்களை நாம் வீழ்த்திவிட முடியாது. காந்தகார் (இன்றைய ஆப்கான்) மற்றும் பாரசீக(ஈரான் மன்னர்களை வங்காளத்தின் மீதும், மராட்டியர்களை பம்பாயின் மீதும் படையெடுக்க செய்ய வேண்டும். பிரெஞ்சுகாரர்களையும் இணைத்து கொண்டு நாம் அனைவரும் கூட்டாக ராணுவ நடவடிக்கை எடுத்து, எல்லா முனைகளிலும் பிரிட்டிஷாரைத் தாக்க வேண்டும்“
என்று கி.பி. 1782ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உரையாற்றினார். இந்த யுத்தத்தின்போது மராட்டியர்களையும் ஹைதராபாத் நிஜாமையும் இணைத்து “ஐக்கிய கூட்டணி“யை அமைத்தார்.

1782 டிசம்பர் மாதம் ஆந்திர மாநிலம் சித்தூரில் ஹைதர் அலி போர் செய்துக் கொண்டிருந்தார். அப்போது, கேரளாவின் மலபார் பகுதியில் அவரது மகன் திப்பு சுல்தான் பிரிட்டிஷாரை எதிர்த்து போரிட்டுக் கொண்டிருந்தார். அப்போது போர் குறித்தும், இந்திய தேசத்தின் விடுதலை குறித்தும் இந்தியாவின் பெருமை குறித்தும் அவர் தன் மகன் திப்புசுல்தானுக்கு எழுதிய கடிதம் சிறந்த ஆவணம்.

அதில் அவர்,

“அன்பு மகனே… அதிகாரம் மற்றும் நமது மைசூர் ஆட்சியின் பாதுகாப்பு குறித்தும் நான் கவலைப்படவில்லை. நமது முன்னோர் முகலாயர் ஆட்சியில், ஆசியா கண்டத்தில் நமது இந்திய தேசம் கௌரவமான இடத்தை வகித்தது. ஆனால் இன்று நமது தாய்நாடு சிதறிப்போய் கிடக்கிறதே… நமது இந்திய மக்களுக்கு தேசத்தின் மீதான நேசம் குறைந்துப் போய்விட்டதே”

என்று குறிப்பிட்டுள்ளார். கி.பி. 1780ஆம் ஆண்டு முதல் ஹைதர் அலி தொடங்கிய இந்த யுத்தம் கி.பி. 1784ஆம் ஆண்டு வரை அவரது மகன் திப்புசுல்தான் தலைமையிலும் தொடர்ந்தது. இதனை இரண்டாம் மைசூர் யுத்தம் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டனர்.

சிங்கத்தின் மீளாத்துயில்

இரண்டாம் மைசூர் யுத்தத்தின்போது ஹைதர் அலிக்கு வயது 60. திப்புசுல்தான் தமிழ்நாட்டில் கும்பகோணம், கடலூர் ஆகிய பகுதிகளை வென்ற செய்தியைச் ஆந்திராவில் உள்ள சித்தூரில் இருந்த ஹைதர் அறிந்தார். இந்நிலையில் ஹைதர் அலி முதுகுத்தண்டு புற்றுநோய் காரணமாக 03.12.1782ஆம் நாள் காலமானார்.

அவரது உடலை அங்கிருந்து 60 மைல் தொலைவில் உள்ள கோலாருக்கு இரகசியமாக அனுப்ப ஹைதர் அலியின் மதிமந்திரி பூர்ணையா திட்டமிட்டார். அங்குதான் ஹைதர் அலியின் தந்தை ஃபட்டா முகம்மதுவின் சமாதி உள்ளது. அங்கு கொண்டு செல்லப்பட்ட ஹைதர் அலியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

(இன்று ஹைதர் அலி நினைவு தினம்)

இயந்திரப் புலி திப்பு சுல்தான்

tipuபெருங்கருணையும் பேராற்றலும் உடைய மாவீரராக, சமூக – சமயச் சீர்திருத்தவாதியாக, பொதுவுடைமைவாதியாக, நவீன தொழில்நுட்பவாதியாக, பிரிட்டிஷாருக்குச் சிம்மசொப்பனமாக, மைசூரின் புலியாக…. சிறந்த மன்னராகவும் நல்ல குடிமகனாகவும் வாழ்ந்த ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த மாமனிதர் திப்புசுல்தான்.

திப்பு சுல்தான் பதவிக்கு வந்தது முதல் இறக்கும் வரை அவரின் முகத்துக்கு முன்னால் சில எதிரிகளும் முதுகுக்குப் பின்னால் பல துரோகிகளும் அவரைத் தாக்கத் தயார்நிலையில் காத்திருந்தனர்.  திப்பு சுல்தான் தன் மன, உடல், அறிவு வலிமையால் அவர்களைத் தன் வாழ்நாள் முழுவதும் ஒடுக்கியபடியே இருந்தார். உலகில் எந்தப் பேரரசருக்கும் இல்லாத நெருக்கடிகள் திப்புசுல்தானுக்கு இருந்தன. அவற்றைத் தகர்த்தபடியே அவர் தன்னை மைசூரில் நிலைப்படுத்திக்கொண்டார்.

அறப்பணியா, அரசுப்பணியா?   

ஹைதர் அலியின் முதல் மனைவி ஷாபாஸ் பேகம். அவருக்கும் ஹைதல் அலிக்கும் பெண்குழந்தைகளே பிறந்தன. ஆண் வாரிசு இல்லை. ஆதலால் ஷாபாஸ் பேகமின் வற்புறுத்தலின்பேரில் ஹைதர் அலிக்கு ஃபக்ர் உன்னிஸாவைத் திருமணம் செய்துவைத்தார்.ஃபக்ர் உன்னிஸா தனக்குப் பிறக்கும் முதல்குழந்தையை அல்லாவின் திருப்பணிக்கு நேர்ந்துகொள்ளவும் அடுத்த குழந்தையை வாரிசாக ஏற்றுக்கொள்ளவும் ஹைதர் அலியிடம் அனுமதிபெற்றுக்கொண்டார். அத்தம்பதியருக்கு ஐந்தாண்டுகள் குழந்தைப்பேறு இல்லை.

முதல் குழந்தையாகத் திப்பு சுல்தான் 20.11.1750ஆம் நாள் பிறந்தார். ஹைதர் அலி தன் இரண்டாம் மனைவி ஃபக்ர் உன்னிஸாவின் விருப்பப்படி திப்பு சுல்தானை இறைப்பணிக்கு ஒப்படைத்தார். ஹைதர் அலியின் முன்னோர்களின் சூஃபி மரபு இனி திப்பு சுல்தானால் தொடரும் என்று நம்பினார். ஆனால், அல்லாவின் கணக்குவேறு விதமாக இருந்தது.
திப்புசுல்தானுக்கு இஸ்லாமும் பிற இந்திய மதங்களும் கற்பிக்கப்பட்டன. அமைதி என்பது ஒரு மந்திரமாகவே திப்பு சுல்தானுக்குக் கற்பிக்கப்பட்டது. ஹைதல் அலி – ஃபக்ர் உன்னிஸா தம்பதியருக்கு இரண்டாவதாக ஒரு ஆண்குழந்தை பிறந்தது. கரீம் என்று பெயரிட்டனர். அவனையே தன் அடுத்த ஆட்சி வாரிசாக ஹைதர் அலி நினைத்தார்.

ஆனால், கரீம் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையானான். ஹைதர் அலி கலங்கினார். அவர் திப்புசுல்தானைப் பார்க்கச் சென்றார். அப்போது திப்புசுல்தான் ஒரு பண்டிதரிடம் பாடம் படித்துக்கொண்டிருந்தார்.

அப்போதே ஹைதர் அலி தன் முதல் மகன் திப்பு சுல்தானின் மொத்த ஆன்மிகப் படிப்பையும் நிறுத்தினார். திப்பு சுல்தானின் கைகளில் தன் வாளை ஒப்படைத்தார். இனி திப்பு சுல்தான் ஆன்மிகப் பாதையில் பயணிக்க முடியாது. இனி அமைதியை அவர் போர்களத்தில்தான் தேடவேண்டும்.

வித்தியாசமானவர்

திப்பு சுல்தானுக்குப் போர்க்கலைகள் கற்பிக்கப்பட்டன. ஒரு தகுதிவாய்ந்த இளவரசராகத் திப்பு சுல்தான் உருவானார். அப்போது திப்பு சுல்தானுக்கு வயது 15. பெத்தனூர் அரசர் ஹைதர் அலியிடம் வாலா(ளா)ட்டினார். பாலம் என்ற இடத்தில் ஹைதர் அலியின் படைகள் பெத்தனூரை நோக்கி முன்னேறின. இந்தப் போரைக் காண்பதற்காக (அதாவது போர் குறித்த பிராக்டிகல் எக்ஸாமாக) திப்பு சுல்தானும் அழைக்கப்பட்டிருந்தார்.

ஹைதர் அலியும் அவரது படைகளும் பெத்தனூர் அரசனைப் பந்தாடின. திப்புசுல்தான் போர்க்களத்திலிருந்து சற்றுத் தொலைவிலிருந்தார். தன் தந்தைக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்று கருதிய திப்பு சுல்தான் வேறுவழியில் ஹைதர் அலி போரிடும் பகுதிக்குச் சென்றார்.

அவ்வாறு போகும் வழியில் பெத்தனூர் அரசரின் குடும்பத்தாரைச் சந்தித்தார். அவர்களைப் பாதுகாப்பாக அழைத்துவந்தார். இச்செய்தி பெத்தனூர் அரசருக்குத் தெரிந்ததும் அவர் ஹைதர் அலியிடம் சரணடைந்தார்.

திப்பு சுல்தான் பெத்தனூர் அரசரின் குடும்பத்தாரைப் பிணையக் கைதியாகப் பிடித்துள்ளார் என்பதனை அறிந்த ஹைதர் அலி மகிழ்ச்சியுடன் திப்பு சுல்தானைப் பார்க்க வந்தார். அதற்குள் ஹைதர் அலியின் தளபதி மக்பூல்கான் திப்பு சுல்தானிடம் வந்து, பிணையக் கைதிகளைப் பார்வையிட்டார். திப்பு சுல்தானின் வீரத்தைப் புகழ்ந்தார். பின் வழக்கம்போலப் பிணையக் கைதிகளிடம் வென்றவர்கள் நடத்தும் அத்துமீறல்களைச் செய்யத் துணிந்தான். அது திப்புசுல்தானுக்குப் பிடிக்கவில்லை. எச்சரித்தார். அவன் கேட்கவில்லை. திப்புசுல்தான் தன் கைத்துப்பாக்கியால் சுட்டார். திப்புசுல்தானின் அரசியல்கொலைகளின் எண்ணிக்கை மக்பூல்கான் கொலையிலிருந்து தொடங்கியது.

திப்புசுல்தான் பெத்தனூர் அரச குடும்பத்தாரைப் பாதுகாத்த்தும் மக்பூல்கானைக் கொன்றதும் ஹைதர் அலிக்குச் சரியாகவே பட்டது. திப்புசுல்தானின் விருப்பப்படி ஹைதர்அலி பெத்தனூர் அரசரையும் அவரது குடும்பத்தாரையும் விடுவித்தார்.

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை

“எங்கெல்லாம் பிரிட்டிஷார் அத்து மீறி ஆக்கிரமிப்பு நடத்துகிறார்களோ அங்கெல்லாம் விரைந்து செல்லவேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சரி, நம் எதிரியாகவே இருந்தாலும் சரி, அவர்களுக்கு ஆதரவாகத் தோள்கொடுத்து நிற்கவேண்டும்.”

இதுதான் திப்புசுல்தானுக்கு அவரின் தந்தை ஹைதர்அலி சொல்லிச் சென்ற (மனத்தில் விதைத்துச் சென்ற) மகாமந்திரம். இதனைத் திப்புசுல்தான் தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தார். அதனால்தான் அவர் வரலாற்றில் நீங்கா இடம்பிடித்தார்.

முதல் வெற்றியும் தொடர் வெற்றிகளும்

கி.பி. 1776ஆம் ஆண்டு மராட்டியர்களுக்குச் சொந்தமான காதிகோட்டையைத் திப்புசுல்தான் கைப்பற்றினார்.

கி.பி. 1767ஆம் ஆண்டு பிரிட்டிஷ் தளபதி ஜோசப் ஸ்மித் தலைமையில் வந்த பிரிட்டிஷ் படையைத் திப்புசுல்தான் வாணியம்பாடியில் எதிர்த்து நின்று வெற்றிபெற்றார். அப்போது திப்புசுல்தானுக்கு வயது 17.

அன்றுமுதல் கி.பி. 1769ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பிரிட்டிஷ் படை அத்துமீறுகிறதோ அங்கெல்லாம் திப்புசுல்தான் தன் வாளை வீசி அவர்களை அடக்கினார்.
பின் கி.பி. 1780ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் மைசூர் போரில் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராகத் தன் தந்தையுடன் இணைந்து போர்தொடுத்தார்.

மைசூர் சுல்தான்

07.12.1782 அன்று தன்னுடைய தந்தை ஹைதர் அலி இறந்தபின் 26.12.1782ஆம் நாள் மைசூர் சுல்தானாக ஆட்சிப்பொறுப்பினை ஏற்றார். அப்பொது திப்பு சுல்தானுக்கு வயது 32.
புலி சின்னம் பொறிக்கப்பட்ட கொடியைத் தன்னுடைய சின்னமாகப் பயன்படுத்தினார். துரோகிகளாக மதிமந்திரி பூர்ணையா தனக்கு அடையாளம் காட்டிய அத்தனைபேரையும் மறு பரிசீலனையே இல்லாமல் மன்னித்தார்.

சுல்தானின் அந்தப்புரம்

திப்புசுல்தானின் அதிகாரப்பூர்வமான மனைவியர்கள் நால்வர். அவர்கள் ருக்கையா பானு, ஆற்காடு ரோஷன் பேகம், புரந்தி பேகம், கதீஜா ஜமானி பேகம் ஆவர்.

திப்புசுல்தானுக்கு ஃபத்தே ஹைதர், அப்துல் காலிக், முஹ்யித்தீன், மொய்சுதீன்கான், முஹம்மது யாசீன், முகம்மது சுபான், ஷ்ருக்கில்லாஹ், சிர்ருதீன், குலாம் முஹம்மது, குலாம் ஹமீது, முனீருத்தீன், ஜமீயுத்தீன் ஆகிய பன்னிரண்டு ஆண்குழந்தைகள் பிறந்தன.
பீவி பேகம், அஸ்முலுன்னிஸா பேகம், உமருன்னிஸா பேகம், பாத்திமா பேகம், பதீயுன்னிஸா பேகம், நூருன்னிஸா பேகம், குலூமா பேகம், கதீஸா பேகம் ஆகிய எட்டு பெண் குழந்தைகள் பிறந்தனர்.

திப்புவின் ஆழ்மனது   

திப்புவின் இயந்திரப் புலி சுவாரசியமானது. ஒரு புலி ஒரு பிரிட்டிஷ் வீரரைக் கடித்துக் குதறுவது போன்று ஓர் இசை இயந்திரத்தை  பிரெஞ்சுக் கலைஞர் ஒருவரைக் கொண்டு திப்பு வடிவமைத்திருந்தார்.

ஒரு விசையை இயக்கியவுடன் அந்தப் புலி கர்ஜனையுடன் அந்த பிரிட்டிஷ் வீரனைக் கடித்துக் குதறும். வீரன் அலறுவான். புலியின் கர்ஜனையும் வீரனின் மரண ஓலமும் கூடிய இந்த இயந்திரப்புலி திப்புவுக்கு பிரிட்டிஷாரைப் பழிதீர்க்கும் எண்ணத்தை அவ்வப்போது நினைவூட்டிவந்தது.

இந்த இயந்திரப் புலி ஒரு குறியீடு. அது திப்புவின் ஆழ்மனது. அது திப்புவைத் திப்புவுக்கு நினைவூட்டியபடியே இருந்தது. திப்புவின் வாழ்நாள் முழுவதும் பிரிட்டிஷ் எதிர்ப்புணர்வை வளர்த்துவந்தது. திப்புவின் இறப்பிற்குப் பின்னர் அது பிரிட்டிஷாரால் திருடப்பட்டு, இலண்டனுக்குக் கடத்தப்பட்டது. இப்போது அது அங்குள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

பொற்கால ஆட்சி

திப்பு சுல்தான் ஒரு சிறந்த நிர்வாகியாகவும், பொருளாதார வல்லுநராகவும் திகழ்ந்தார். இந்தியா முழுவதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிக கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டாண்டி நோபிள் என அழைக்கப்பட்ட இன்றைய துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் மைசூர் அரசின் கப்பல்துறை என பரந்து விரிந்தது திப்புவின் வணிகத் திட்டம்.

வணிகத்தில் பெருமளவில் ஈடுபட்டு பிரிட்டிஷார் நடத்திய போர்களுக்குப் பனியா, மார்வாடி, பார்ஸி வணிகர்கள் பொருளுதவிச் செய்து வந்தனர். ஆனால், வணிகத்தையே ஏகாதிபத்திய அந்நிய எதிர்ப்பு ஆயுதமாக மாற்றியவர் திப்புசுல்தான்.

அரசிற்கு வருமானத்தை ஈட்ட மது விற்பனையை அனுமதித்த தன் அமைச்சரைக் கண்டித்த திப்புசுல்தான், “மக்களின் உடல்நலனையும், ஒழுக்கத்தையும்,பொருளாதார நலனையும் காட்டிலும் நமது கருவூலத்தை நிரப்புவதுதான் முதன்மையானதா?” என்றார். இந்தக்கேள்வியை நாம் இப்போது நம் அரசிடம் கேட்கவேண்டும்.

பிரிட்டிஷார் விவசாயிகளைக் கஞ்சா பயிரிடுமாறு வற்புறுத்தி துன்புறுத்திய வேளையில் கஞ்சா உற்பத்தியைத் திப்புசுல்தான் தடை செய்தார். பிரிட்டிஷார் பாலியல் தொழிலில் பணம் சம்பாதித்தபோது திப்புசுல்தான் தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் பாலியல் தொழிலைத்தடை செய்ததோடு அநாதைச் சிறுமிகளைக் கோயிலுக்குத் தேவதாசியாகத் தானமளிப்பதையும் தடை செய்தார்.

அடிமை விற்பனையைத் தடை செய்வதற்காகத் திப்புசுல்தான் ‘எந்த அரசு வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக்கூடாது’ என்று ஆணை பிறப்பித்தார். வரதட்சணைக் கொடுமையும் சட்டத்திற்கு உட்படாத ஆண்-பெண் தொடர்புகளையும் திப்புசுல்தான் நீக்கினார்.

கேரளத்தில் நம்பூதிரிகள் கொண்டிருந்த ஆச்சாரப் பழக்கவழக்கத்தில் உள்ள தீய முறையை நீக்கவேண்டியும் தன் மக்கள் தூயவாழ்க்கை வாழ வேண்டும் என்ற நோக்கிலும்,  “உங்களுக்கு மத்தியில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு நீங்கள் சம்மதிப்பதும் உங்களது பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண்-பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விடக் கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்து, சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்” என்றார்.

கீழ்சாதிப்பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று மேல்ஜாதி வர்க்கம் விதித்த சட்டத்தை மாற்றி மேலாடை அணிய சட்டம் வகுத்தார் திப்புசுல்தான்.

மதச்சார்பின்றி அனைத்து மதத்தினருக்கும் அரசுப் பணத்தில் கொடைகள் வழங்கினார். இந்துக் கோயில்களுக்கும் அறநிலையங்களுக்கும் பிராமண மடங்களுக்கும் முஸ்லிம் ஸ்தாபனங்களுக்கும் திப்புசுல்தான் ஆண்டுதோறும் 2.34 லட்சம் வராகன்கள் செலவிட்டார்.
“எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத் தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்” என்று திப்பு பிரகடனம் செய்திருக்கிறார். ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் மூன்று லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார்.

சென்னை மாகாணத்தைப் போலில்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.
கி.பி. 1792ஆம் ஆண்டு நிகழ்ந்த போருக்குப்பின் திப்புசுல்தானிடமிருந்து பிரிட்டிஷார் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து பிரிட்டிஷாரின் வரிக் கொடுமை தாளாமல் 4,000 விவசாயிகள் திப்புசுல்தானின் ஆட்சிப் பகுதிகளுக்குக் குடிபெயர்ந்ததைக் கி.பி. 1796ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அதிகாரி தாமஸ் மன்றோ தன்னுடைய ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளார்.

கி.பி. 1792 ஆம் ஆண்டு தோல்விக்குப் பின்னரும் திப்புசுல்தான் தமது எல்லைக்குள் வாணிகம்செய்துகொள்ள பிரிட்டிஷாருக்கு அனுமதி தரவில்லை. உள்ளூர் வணிகர்களை ஊக்குவித்தார். பணப் பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தைப் பிற உற்பத்தித் துறைகளுடன் இணைத்தார். பாசன வசதியைப் பெருக்கி விவசாயத்தை விரிவுப்படுத்தினார்.

கி.பி. 1911ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையக் கட்டும் பணிகளைத் துவக்கியபொழுது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்குக் கி.பி. 1798ஆம் ஆண்டு திப்புசுல்தான் அடிக்கல் நாட்டப்பட்ட கல்லைக் கண்டனர். அக் கல்வெட்டில் “இந்த அணைநீரைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும்“ என்று திப்புசுல்தான் ஆணையிட்டிருந்தார்.

“விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்” என்று தண்டனை முறையையே மாற்றினார்.
“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்குத் திப்புசுல்தான் எழுத்துப் பூர்வமாக ஆணையிட்டார்.

பிரிட்டிஷாருக்கு எதிரான போரில் படைவீரர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பிய திப்புசுல்தான், “அனைத்து விவசாயிகளுக்கும் துப்பாக்கி பயிற்சி வழங்கப்பட வேண்டும். தினமும் ஊருக்கு வெளியே துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படவேண்டும்” என்று ஆணையிட்டார்.

இத்தனை நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தி ஆட்சிபுரிந்த திப்புசுல்தானின் மீது வரலாற்றாசிரியர்கள் மதவாத, இனவாதக் கருத்துக்களைத் தூவி அவரின் புகழுக்குக் கலங்கம் விளைவித்தனர். சங்கும் சுட்டாலும் வெண்மைதரும் என்ற விதிக்கு ஏற்ப திப்புசுல்தானின் புகழ் இம்மியும் குறையவில்லை.

சுல்தானின் ராணுவம்

மிகப்பெரிய இராணுவப் படையினைக் கொண்டிருந்தார். இதில் குதிரைப்படை, ஒட்டகப்படை மட்டுமல்லாமல், போரில் பீரங்கிகளையும் பயன்படுத்தியுள்ளார்.

பிரிட்டிஷாரின் அத்துமீறல்களை அடக்குவதற்கு வாளும் வேலும் மட்டும் பயன்படாது தொழில் முறையில் பயிற்சி பெற்ற ராணுவமும், தொழில் நுட்பமும் தேவை என்பதைத் திப்பு சுல்தான் புரிந்துகொண்டார்.

ஆதலால் கடற்பயிற்சி பள்ளிகளை உருவாக்கி, கடற்படையில் பீரங்கிகள் மற்றும் பிரிட்டிஷாருக்கு நிகராக நவீன ஏவுகணைகளைப் பயன்படுத்தினார். சக்தி வாய்ந்த ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர் திப்பு சுல்தானே.

திப்பு சுல்தானுக்கு மொத்தம் 3.20 லட்சம் வீரர்கள் இருந்தனர். மூன்று லட்சம் துப்பாக்கிகளும் 929 பீரங்கிகளும் 2.24 லட்சம் வாள்களும் இருந்தன. தன் தந்தை பயன்படுத்திய ஏவுகணைகளைத் திப்புசுல்தான் பிரெஞ்சு படைவீரர்களின் துணையுடன் புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தி புதுவகையில் பயன்படுத்தினார்.

மோதி விளையாடு

மேற்கு கடற்கரையிலிருந்து பிரிட்டிஷாரைத் துரத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிரெஞ்சுப் படையினரையும் சேர்த்துக் கொண்டு ஆவேசத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு.

ஆனால், பிரெஞ்சு மன்னன் பதினாறாம் லூயி பிரிட்டனுடன் சமரசம் செய்துக் கொண்டதால் திப்பு வேறுவழியில்லாமல் போரை நிறுத்தினார். கி.பி. 1784 ஆம் ஆண்டு முடிவுற்ற இப்போரில் ஆங்கிலேய தளபதி உள்ளிட்ட 4,000 சிப்பாய்கள் திப்புசுல்தானால் போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் பிரிட்டிஷாருக்குத் திப்புவை நினைத்து பதறச் செய்தது.

கி.பி. 1790ஆம் ஆண்டு முதல் கி.பி. 1792ஆம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்றாவது மைசூர் யுத்தம் என்பது பிரிட்டிஷாரின் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனான தர்மராஜாவால் தூண்டி விடப்பட்டதே. திருவிதாங்கூர் எங்களது நட்பு நாடு அதனைப் போரில் ஆதரிப்பது எமது கடமை எனக்கூறி ஜெனரல் கார்ன் வாலிஸ் திப்புசுல்தானுக்கெதிராகப் போர் புரியத் தயாரானான்.

இச்சூழலில் திப்புசுல்தானுக்கு எதிராகப் போர் புரிய ஆற்காட்டு நவாபும், தொண்டைமான், ஹைதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள் அனைவரும் பிரிட்டிஷாருடன் இணைந்து கொண்டனர். தனித்து நின்ற திப்புசுல்தான் அத்தனை  எதிரிகளையும் ஒருகைபார்த்தார்.

ஸ்ரீரங்கப்பட்டினம் 30 நாட்களுக்கு மேலாக முற்றுகையிடப்பட்ட போதிலும் எதிரிகளால் திப்புசுல்தானின் கோட்டைக்குள் யாராலும் நுழைய முடியவில்லை.

சூது கவ்வியது

மூன்றாம் மைசூர் போரில் பிரிட்டிஷாரிடம் திப்பு தன் தோல்வியைத் தவிர்ப்பதற்காகச் சமாதான உடன்படிக்கைக்கு இசைவு அளித்தார்.

அதன்படி மைசூரின் ஒரு பகுதியையும் 3.3 கோடி வராகனும் கொடுக்க 26.02.1792ஆம் நாள் ஒப்புக்கொண்டார். முதல்தவணையாகத் திப்பு 1.65 கோடி வராகன் கொடுத்தார். திப்புவின் திண்டுக்கல், கோவை, சத்தியமங்கலம், தேன்கனிக்கோட்டை, சேலம், கிருஷ்ணா நதியைச் சார்ந்த பகுதிகள் பிரிட்டிஷாரின் ஆளுகைக்குச் சென்றன.

முழுப்பணத்தையும் கொடுக்கும் வரை பிணையக்கைதிகளாகத் திப்புவின் பிள்ளைகளான பத்துவயதுடைய அப்துல் காலிக் மற்றும் எட்டு வயதுடைய மொய்சுதீன் கான் ஆகியோர் காரன் வாலிஸ் பிரபுவால் 10.03.1792ஆம் நாள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
மீதியுள்ள 1.65 கோடி வராகனை மூன்று தவணைகளில் சுமார் இரண்டாண்டு அவகாசத்தில் திப்பு செலுத்தி தன் மகன்களை 29.02.1794ஆம் நாள் மீட்டார்.

தன் மகன்களைப் பிரிந்திருந்த இந்த இரண்டாண்டு காலத்தில் திப்புசுல்தான் அடுத்து போருக்குத் தன்னைத் தயார்செய்திருந்தார். திப்புசுல்தானின் மகன்கள் மனத்தளவில் இங்கிலாந்து கலாச்சாரத்திற்கு பிரிட்டிஷாரால் மாற்றப்பட்டிருந்தனர். அதுமட்டுமல்ல அவர்களுக்கு அல்லாவின் மீதும் வெறுப்பு ஏற்படும் படி பிரிட்டிஷார் மூளைச் சலவை செய்திருந்தனர்.

தர்மம் தலை காக்கவில்லை

இந்தமுறை பிரிட்டிஷார் திப்புசுல்தானின் அமைச்சர்களை விலைக்கு வாங்கினர். திப்புசுல்தானுக்கு உதவியாகப் படைதருவதாகக் கூறியிருந்த நெப்போலியனால் அப்போது உதவிக்கு வரமுடியவில்லை. எதிரிகளுக்கும் குள்ளநரிகளுக்கும் இடையில் தனியாகச் சிக்கிக்கொண்ட திப்புசுல்தான் தன்னுடைய கடைசி 11,000 வீரர்களுடன் தானும் ஒரு சிப்பாயாக வாளேந்திப் போரிட்டு 04.05.1799ஆம் நாள் மாண்டார்.

ஆயுதம், அறிவுத் திருட்டுகள்

நான்காவது மைசூர் யுத்தத்தில் வஞ்சகம்,  சூழ்ச்சி, துரோகம் ஆகியவற்றால் 04.05.1799ஆம் நாள் திப்புசுல்தானை வீழ்த்திய பிரிட்டிஷார்  அவரது அரண்மனைக்குள் புகுந்து அங்கிருந்த 9,700-க்கும் மேற்பட்ட நவீன ராக்கெட்டுகளை கைப்பற்றினர்.

திப்பு சுல்தான் தன் அரண்மனையில் அமைத்திருந்த ஓரியண்டல் லைப்ரரி என்ற பெயருடைய நூலகத்துக்குள் நுழைந்து, அங்கிருந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள், ராக்கெட் தயாரிப்பு சார்ந்த ஆய்வுக்குறிப்புகள் மற்றும் தொழில்சீர்திருத்தம் பற்றிய திப்புவின் பல்வேறு திட்டக்குறிப்புகள் ஆகியவற்றைக் கொள்ளையிட்டனர்.

இங்கிலாந்தில் கி.பி.19ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி காரணமாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து சீர்திருத்த நடவடிக்கைகளும் திப்புசுல்தானின் அரண்மனையிலிருந்து கொள்ளையடித்துச் செல்லப்பட்ட நூல்களின் வழிகாட்டுதலோடு மேற்கொள்ளப்பட்டவைதான்.

திப்புசுல்தானின் ராக்கெட் தயாரிப்பு சம்பந்தமான ஆய்வுக்குறிப்புகளைக் கொண்டு தனது ராணுவத்திற்கு தேவையான ராக்கெட்டுகளை தயாரிக்க விரும்பிய பிரிட்டிஷ் அரசு அதற்காக அப்போது இங்கிலாந்தில் புகழ்பெற்று விளங்கிய கண்டுபிடிப்பாளர்  மற்றும் ராணுவத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவருமான சர் வில்லியம் காங்கிரிவ் என்பவரை அணுகியது.

சில ஆய்வுகளை மேற்கொண்ட வில்லியம் காங்கிரிவ்  திப்புசுல்தானின் தயாரிப்பு முறைகளில் இருந்த சில அடிப்படை தவறுகளைக் களைந்து  திப்புசுல்தானின் ராக்கெட்டை மேம்படுத்திக் கி.பி. 1804ஆம் ஆண்டு “காங்கிரிவ்“ என்ற ராக்கெட்டை  வடிவமைத்தார்.
16அடிகள் நீளம் கொண்ட மூங்கில் கம்புகளின் முனையில் கட்டி ஏவப்பட்ட “காங்கிரிவ் ராக்கெட்டுகள்“ ஒன்பது கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டவையாக இருந்தன.

அவ்வாறு தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையே கி.பி. 1800களில் நடந்த பல யுத்தங்களில் பிரிட்டிஷ் ராணுவத்தினரால் அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டன.

முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் தாம் அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையத்திற்குச் சென்றபொழுது திப்புசுல்தான் பயன்படுத்திய ஏவுகணையின் புகைப்படத்தை அங்கு பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பிரிவின் (DRDO) முன்னாள் தலைமை இயக்குநர் மற்றும் விஞ்ஞானியான திரு. சிவதாணு பிள்ளை, ‘இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகளுக்கான தொழில் நுட்ப அடிப்படைக் கோட்பாடுகளை விவரிக்கும் ஆதாரங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்யும் பணியில் DRDO முழு மூச்சுடன் இறங்கும்’ என்றும்  ‘ஏவுகணை வரலாற்றில் ஒரு மைல் கல்லான திப்பு சுல்தானின் படைகள் பயன்படுத்திய 2 கி.மீ தூரம் வரை சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கக்கூடிய ஏவுகணைகளுக்கான பகுப்பாராய்வு ஆவணங்கள் தற்போது லண்டனில் உள்ள ஆர்ட்டிலரி பொருட்காட்சி மையத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன’ என்றும் கூறினார்.

இவர்களின் கருத்துகளிலிருந்து திப்புசுல்தானின் ஆயுதம் சார்ந்த தொழில்நுட்பத்தின் வெற்றியைப் புரிந்துகொள்ள முடிகிறது.

Tipu_Sultan_BLதிப்பு சுல்தானின் மரணத்திற்குப் பின்

திப்புவின் மரணத்துக்குப் பின் கி.பி. 1799ஆம் ஆண்டில் ஃபத்தே ஹைதர், அப்துல் காலிக், முஹ்யித்தீன், மொய்சுதீன்கான், முஹம்மது யாசீன், முகம்மது சுபான், ஷ்ருக்கில்லாஹ், சிர்ருதீன், குலாம் முஹம்மது, குலாம் ஹமீது, முனீருத்தீன், ஜமீயுத்தீன் ஆகிய பன்னிரண்டு ஆண்குழந்தைகளும் குடும்ப உறுப்பினர்களும் திப்புவின் தளபதிகளில் சிலரும் பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டு வேலுர் கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதே சமயம் திப்புவின் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் மிகுந்த மரியாதை கொண்டிருந்த வீரர்களும் பக்கீர்களும் குடிமக்களும் மைசூரில் இருந்து புலம் பெயர்ந்து வேலுரைச் சுற்றி முகாமிட்டனர்.

சிறையில் அடைபட்டிருந்த திப்புவின் மைந்தர்களோடு இரகசியத் தொடர்பை எற்படுத்திக்கொண்டு, அலோசனை செய்து ஒரு குறிப்பிட்ட நாளில் திடீர்ப் புரட்சி செய்ய என்று முடிவு செய்தனர். ஆனால், அந்தப் புரட்சித் திட்டம் ஒற்றர்கள் மூலமாகக் கசிந்து அங்கிலேயருக்குத் தெரியவந்ததால் வேலுர் கோட்டையைச் சுற்றி பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது.

இதனை அறியாத திப்புவின் வாரிசுகளும் அவரது பற்றாளர்களும் 10.07.1806ஆம் நாள் அதிகாலை 2.00மணியளவில் அதிரடியாகப் புரட்சியில் இறங்கினர். 100க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் சிப்பாய்களைக்  கொன்றனர். கோட்டையின்மேல் திப்புசுல்தானின் புலிக்கொடியைப் பறக்கவிட்டனர்.

இரண்டு நாட்களில் ஆற்காட்டிலிருந்து பிரிட்டிஷாரின் 19 லைட் ட்ரகூன்ஸ் என்ற 19ஆவது சிரிய குதிரைப் படை ஆயுதங்களுடன் வந்து அப்புரட்சியை முற்றிலும் முறியடித்தனர். 3000த்திற்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். பிடிபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்களைப் பீரங்கி வாய்களில் கட்டி, பீரங்கியால் சுட்டுக் கொடூரமாகக் கொன்றனர்.

அந்தப் புரட்சிக்குப் பின் திப்புவின் குடும்பத்தினர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரு பிரிவினர் மைசூருக்கும் மற்றொரு பிரிவினர் வங்கத்திற்கும் அனுப்பப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பின் சில அண்டுகள் கழித்து திப்புவின் வாரிசுகளுக்கு மானியம் வழங்குவோம் என்று பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. ஆனால் வழங்கவில்லை. பிரிட்டிஷாரைப் போலவே நாமும் அவர்களைக் கைவிட்டு விட்டோம்.

எங்கக் கொள்ளுத் தாத்தா மைசூரின் சுல்தானாம்!    

திப்புவின் கொள்ளுப் பேரர்களில் ஒருவர் அன்வர்ஷா. அவருக்கு சன்வர், அன்வர், திலாவர், ஹஸன் ஆகிய நால்வரும் வாரிசுகள்.

அந்நால்வரும் அவர்களின் குடும்பத்தினரும் இன்று கல்கத்தாவிலுள்ள இளவரசர் அன்வர்ஷா தெரு  இன்று திப்புவின் பேரக்குழந்தையின் பெயராலேயே அழைக்கப்படும் தெருவில் உள்ள சிறிய குடிசை வீட்டில் வசித்து வருகிறார்கள்.

இதில் சன்வரும், அன்வரும் சைக்கிள் ரிக்க்ஷா  இழுத்துப் பிழைக்கிறார்கள். திலாவர் சிறிய டீக்கடை நடத்தி வருகிறார். ஹஸன் ஸ்கூட்டர்கள் மற்றும் ஆட்டோ ரிக்க்ஷாக்களுக்கு சீட் கவர் தைத்துக்கொடுக்கும் பணியைச் செய்கிறார்.

நமக்குத் திப்புசுல்தான் ஒரு வரலாற்று ராஜா. அவர்களுக்குத் திப்புசுல்தான் நம்பமுடியாத நிஜ ராஜா. அவர்களின் வாரிசுகள் திப்புசுல்தானின் வரலாற்றைப் படிக்காமல் இருப்பது நல்லது. படித்தால் “நம்ம கொள்ளுத்தாத்தாவா சுல்தானாக இருந்தார்?“ என்று நம்ப மறுப்பார்கள். அப்படித்தானே நாம் அவர்களை இப்போது வைத்திருக்கிறோம்!

திப்பு சுல்தான் (20 நவம்பர் 1750 – 4 மே 1799) பிறந்த தின  சிறப்புக் கட்டுரை.

0

முனைவர் ப. சரவணன்

நேரு, முசோலினி, மூஞ்சே: வரலாற்றைத் திரிக்கும் அ.மார்க்ஸ்

nehru patelசர்தார் வல்லபபாய் படேல் காலமானபோது இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு அந்த அந்திம ஊர்வலத்தில் கலந்து கொள்ளவில்லை என பாரதிய ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளரான நரேந்திர மோடி கூறியதாக ஒரு செய்தி வெளியானது. ஆனால் அதை வெளியிட்ட பத்திரிகையே அது தவறான செய்தி என கூறிவிட்டது.[1]

உடனே ஞாநி அற ஆவேசத்துடன் ‘இப்படிப் பொய் சொல்கிறவரை நம்பலாமா!’ என அதிர்ந்தார். அ. மார்க்ஸோ ஒரு படி அதிகமாகச் சென்று, ‘நேரு பாசிசத்தை ஒதுக்கினார் ஆனால், ஆர்.எஸ்.எஸ் நிறுவனர்களில் ஒருவரான டாக்டர் மூஞ்சே முசோலினியை நேரம் ஒதுக்கி சென்று பார்த்தார்’ என்றெல்லாம் விளக்க ஆரம்பித்துவிட்டார். அவரைப் பொருத்தவரை, நேரு பாசிசத்தை வெறுத்தொதுக்கியவர். ஆனால் மூஞ்சே (எனவே ஆர் எஸ் எஸ் எனவே நரேந்திர மோடி) பாசிசத்தை ஆதரித்தவர்(கள்).

அ.மார்க்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதுகிறார்:

மனைவி கமலா மரணப்படுக்கையில் இருக்கையில் கடைசி முறையாகப் பார்க்க இந்தியா வந்த நேரு, இத்தாலியில் அடுத்த விமானத்தைப் பிடிக்கச் சில மணி நேரங்கள் விமானநிலையத்தில் காக்க வேண்டி இருந்தது. நேரு காத்திருப்பதை அறிந்த முசோலினி ஒரு சில நிமிடங்கள் வந்து உரையாட ஆள் அனுப்பிக் கெஞ்சினான். ஒரு அற்புதமான ஜனநாயகவாதியாகிய நேரு அந்த பாசிஸ்டைச் சந்திக்க மறுத்தார். இறுதிவரை செல்லவில்லை. ஆனால் ஆர்.எஸ்.எஸ்-சை நிறுவியவர்களில் ஒருவனான டாக்டர்.மூஞ்சே, இத்தாலி சென்று முசோலினியிடம் வழிந்து ”உங்கள் மாதிரியில்தான் ஆர்.எஸ்.எஸ் சை அமைத்துள்ளோம்.” என சொல்லி வந்தான். தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் இத்தாலி மற்றும் ஜெர்மானிய பாசிஸ்ட்களுக்கும் தொடர்பிருந்தது. பாசிச அறிக்கைகளையும் கட்டுரைகளையும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மகா சபை அமைப்புகள் மொழி பெயர்த்து வெளியிட்டன. காந்தியைக் கொலை செய்த இந்தக் கும்பலின் வழி வந்த நரேந்திர மோடிதான் நேற்று அகமாதாபாத்தில் முசோலினியை சந்திக்க மறுத்த நேருவைக் குறை கூறிய நபர். [2]

இப்படி ஏக வசனத்தில் டாக்டர் மூஞ்சே குறித்த வரலாற்றை மறைக்கும்படி இப்படி எழுதியுள்ளார் இ. மார்க்ஸ். உண்மையில் நடந்தது என்ன? டாக்டர் மூஞ்சே முசோலினியைச் சந்தித்தாரா? ஆம். நேரு சந்திக்க மறுத்தாரா? ஆம். எனில் அ.மார்க்ஸ் உண்மையை சொல்கிறாரா?  இல்லை.

சற்றே விரிவாகப் பார்ப்போம்.

0

டாக்டர் பாலகிருஷ்ண சிவராம மூஞ்சே (1872-1948) ஹிந்துத்துவத்தின் நவீன கால ஆதி சிற்பிகளில் ஒருவர். சிறந்த கண் அறுவை சிகிச்சை நிபுணர் இவர்.  கண் புரையை அகற்றும் அறுவை சிகிச்சையில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற புதிய முறையைக் கண்டறிந்தவர்.[3] இவர் ஆர் எஸ் எஸ்ஸை உருவாக்கிய டாக்டர் ஹெட்கேவாரின் மிக நெருங்கிய நண்பர். ஹிந்துத்துவச் சித்தாந்தி. பாரத இளைஞர்களுக்கு அடிப்படை ராணுவப் பயிற்சி அவசியம் என்று கருதிய இவர் அதற்கான அமைப்புகளை உருவாக்க எண்ணினார். பிற நாடுகளில் இத்தகைய அமைப்புகள் எப்படி இயங்குகின்றன என்றும் அறிந்துகொள்ள விரும்பினார்.

அதன் தொடர்ச்சியாக, லண்டனில் நடைபெற்ற முதல் மற்றும் இரண்டாம் வட்டமேஜை மாநாடுகளில் மூஞ்சே கலந்துகொண்டார். ஐரோப்பிய நாடுகளைச் சுற்றிப் பார்த்து இளைஞர்களுக்கான ராணுவப் பயிற்சி அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்று கண்டறிந்தார்.  அவ்வாறே மார்ச் 19, 1931 அன்று முசோலினி மூஞ்சே சந்திப்பு நடைபெற்றது. இது பற்றி மூஞ்சே எழுதுகிறார்.

சிக்னார் முஸோலினி என்னிடம் பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்டீர்களா? என்று கேட்டார். எனக்கோ மாணவர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கப்படும் மையங்களை பார்வையிடுவதில்தான் ஆர்வம் என்றும் எனவே இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இத்தகைய ராணுவப் பயிற்சிப் பள்ளிகளை பார்வையிட்டுள்ளதாகவும் இப்போது இத்தாலிக்கு இதே காரணத்துக்காகவே வந்திருப்பதாகவும் கூறினேன். ‘வெளியுறவு அமைச்சகமும் யுத்த அமைச்சகமும் நான் இத்தகைய பள்ளிகளைக் காண எனக்கு சிறப்பான முறையில் வாய்ப்பளித்தனர். நான் நிச்சயம் அவற்றால் நல்ல தாக்கம் அடைந்துள்ளேன். அவற்றில் என்னால் ஆட்சேபகரமாக எதையும் காண இயலவில்லை. ஆனால் பலநேரங்களில் பத்திரிகைகளில் அவை குறித்தும் தங்களை குறித்தும் அத்தனை நல்லவிதமாக இல்லாதபடியே விஷயங்கள் வருகின்றன.’ என்று நான் கூறினேன்.

சிக்னார் முஸோலினி: அவை குறித்து உங்கள் கருத்து என்ன?
நான் (மூஞ்சே): நான் மிகவும் கவரப்பட்டுள்ளேன். ஒவ்வொரு முன்னேறும் நாட்டுக்கும் சாதிக்க விரும்பும் நாட்டுக்கும் இத்தகைய அமைப்புகள் தேவை. இந்தியாவுக்கு அவை மிக அவசியம் தேவை. கடந்த 150 ஆண்டுகள் பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியர்கள் ராணுவ துறையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளார்கள்.  ஆனால் இந்தியா தற்போது தனது பாதுகாப்பை தானே செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. இதற்காக நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன். ஏற்கெனவே அதற்காக ஓர் அமைப்பை நான் இந்த நோக்கங்களுக்காகத் தொடங்கியுள்ளேன்.  தேவை ஏற்படுமானால் தங்கள் பாலில்லா மற்றும் பாசிஸ்ட் அமைப்புகளை இந்தியாவிலும் இங்கிலாந்திலும் பகிரங்கமாகப் பாராட்டத் தயங்கமாட்டேன்.

இதைக் கேட்ட சிக்னார் முசோலினி மிகவும் மகிழ்ச்சியடைந்தவர் போல காணப்பட்டார். ஆனால் உங்கள் பணியோ இன்னும் சிரமமானது. நீங்கள் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்றார். இவ்வாறு கூறிய முசோலினி எழுந்தார். நானும் எழுந்து அவரிடமிருந்து விடைபெற்றேன். [4]

இதில் மூஞ்சே இத்தாலியை மட்டும் குறிப்பிடவில்லை என்பதையும் இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் உள்ள மாணவர் ராணுவப் பயிற்சி பள்ளிகளை குறிப்பிட்டுள்ளார் என்பதையும் கவனிக்கவேண்டும். மேலும் இந்த ராணுவப் பயிற்சிப் பள்ளிகளை ஏற்படுத்தி பாரதிய இளைஞர்கள் அனைவருக்கும் ராணுவப் பயிற்சி அளிப்பதில் டாக்டர் மூஞ்சேவுக்கு இருந்த மற்றொரு நோக்கமும் முக்கியமானது. பாசிச இளைஞர் அமைப்பைப் பார்த்துவிட்டு மூஞ்சே தனது நாட்குறிப்பில் எழுதுகிறார்:

…இதன் மூலமாக மக்களைச் செயற்கையாகப் போர்க்குணம் கொண்ட சாதிகள், போர்க்குணமற்ற சாதிகள் என்று பிரிக்கும் பிரிட்டிஷாரின் செயற்கை பிரிவினைகளை இல்லாமல் ஆக்கிவிட முடியும். நாக்பூரில் ஹெட்கேவாரால் தொடங்கப்பட்ட நமது அமைப்பு ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் இத்தகைய ஒன்றுதான். [5]

ஆக மூஞ்சே முசோலினியைச் சந்தித்தது பாசிசத்தின்மீதான பாசத்தால் அல்ல. இந்தியாவில் சில குறிப்பிட்ட சாதியினர் ராணுவத்தில் சேரவே முடியாது என பிரிட்டிஷ் ஒதுக்கி வைத்திருந்த நிலையில் அதற்கான எதிர்வினையாகவே இந்தச் சந்திப்பு அமைந்தது.

0

benito-mussolini1முசோலினி-மூஞ்சே சந்திப்பு நிகழ்ந்தது மார்ச் 1931ல். அப்போது பாசிசத்தின் உண்மை முகம் என்ன என்பதை இந்தியத் தலைவர்கள் எத்தனை நன்றாக உணர்ந்திருந்தார்கள் என்பது ஐயத்துக்குரியது. ஏற்கெனவே ரவீந்திரநாத் தாகூர் முசோலினி குறித்து மிகச் சிறப்பான பரப்புரைகளை இந்திய மனங்களில் ஏற்படுத்தியிருந்தார். ஐரோப்பிய நாடுகளுடனான இந்திய உரையாடலுக்கான களத்தை முசோலினியின் இத்தாலியே உருவாக்கும் என்பதில் அந்த மகா கவிஞருக்கு எவ்வித ஐயமும் இருக்கவில்லை.

மூஞ்சே-முசோலினி சந்திப்பு நிகழ்ந்து ஏறக்குறைய ஒன்பது மாதங்களுக்கு பிறகு காந்தி முஸோலினியைச் சந்தித்தார். பாசிச இத்தாலியைப் பார்வையிட்டார். இவருக்கு மூஞ்சேயைவிட முசோலினியின் உண்மை முகம் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இத்தாலியப் பயணத்துக்கு முன்னால், கடுமையான பாசிச எதிர்ப்பாளரான ரோமேன் ரோலாண்டுடன் காந்தி சுவிட்ஸர்லாந்தில் தங்கியிருக்கிறார். காந்தி இத்தாலி செல்வதை ரோலாண்ட் கடுமையாக எதிர்த்திருக்கிறார்.  காந்தி இதனை ஏற்கவில்லை. செல்வேன் ஆனால் இத்தாலி அரசு மாளிகையில் தங்கமாட்டேன் என்று மட்டுமே அறிவித்தார்.

1931 டிசம்பர் 11 முதல் 15 வரை காந்தி இத்தாலியில் இருந்தார். முசோலினியைச் சந்தித்தார். இருபது நிமிடங்கள் நீடித்தது அந்தச் சந்திப்பு.  முசோலினியைக் குறை சொல்லும் ஐரோப்பிய நாடுகள் முதலில் அவரது சீர்திருத்தங்களை விருப்பு வெறுப்பின்றி அணுகி ஆராய வேண்டும் என்றார் காந்தி. மேலும், பாசிச அமைப்பில் அடக்குமுறையும் பலவந்தமும் இருந்தபோதும் ஐரோப்பிய அரசுகள் அனைத்திலும் இத்தகைய தன்மைகள் உள்ளன என்றார் காந்தி. ஐரோப்பா செல்லும் இந்தியப் பிரமுகர்கள் முசோலினியைச் சந்திக்கவேண்டும் என்றும் அவர் பரிந்துரை செய்தார். [6]

காந்தியும் மூஞ்சேயும் முசோலினியைச் சந்தித்த பின்புலத்தைப் புரிந்துகொள்வது அவசியம். வட்டமேஜை மாநாடுகளில் இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து கொடுப்பது குறித்த பேச்சு வார்த்தைகள் படு மோசமாகத் தோல்வி அடைந்த தருணம் அது. மூஞ்சே முசோலினியைச் சந்தித்தது முதல் வட்ட மேஜை மாநாட்டின் தோல்விக்குப் பிறகு என்றால், காந்தியின் சந்திப்பு நிகழ்ந்தது இரண்டாவது மாநாட்டின் தோல்விக்குப் பிறகு. இந்தியப் பிரதிநிதிகள் விரக்தியில் இருந்த சமயம் அது. இந்தப் பின்னணியில்தான் இங்கிலாந்துடன் நட்புறவு கொண்டிராத இத்தாலியுடன் இந்திய தேசியவாதிகள் இணக்கம் கொண்டனர். இதன்மூலம் இங்கிலாந்துக்கு இவர்கள் உணர்த்த விரும்பிய செய்தி வெளிப்படையானது : இனியும் இந்தியாவை நீங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளமுடியாது!

மூஞ்சே-முசோலினி சந்திப்பில் இந்த எண்ணத்தை மூஞ்சே தெளிவாக முன்வைப்பதைக் காணலாம். ‘எங்களுக்கு மற்ற டொமினியன்களுக்கு அளிக்கப்படும் அதே சம உரிமையை இங்கிலாந்து தர முடியுமென்றால் மட்டுமே பிரிட்டிஷ் பேரரசில் அமைதி ஏற்படும்’ என்றும் ‘இந்தியா அமைதியாகவும் சம அந்தஸ்து கொண்டதாகவும் இருந்தால் மட்டுமே பிரிட்டன் ஐரோப்பிய தேசங்கள் மத்தியில் தலை நிமிர்ந்து முதன்மையாக விளங்க முடியும்’ என்றும் முசோலினியுடன் அவர் கூறுகிறார்.[7] முசோலினி இந்தப் பதிலால் ஈர்க்கப்பட்டதாக மூஞ்சே பதிவு செய்கிறார். ஆனால் முசோலினிக்கு இந்தப் பதில் எத்தகைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பது தெளிவு.

முசோலினியுடனான சந்திப்பை நேரு தவிர்த்தது 1936ல். காந்தி, மூஞ்சே இருவருக்கும் கிடைக்காத இரு வாய்ப்புகள் நேருவுக்குக் கிடைத்தன. ஒன்று, முசோலினியின் மூர்க்கத்தனம் தெளிவாக அப்போது வெளிப்பட்டிருந்தது. 1935ல் அபிஸீனியா (எத்தியோப்பியா) மீது இத்தாலி படையெடுத்திருந்தது. எனவே பிரிட்டிஷ் காலனியத்தை எதிர்க்கும் இந்தியத் தேசியவாதிகளுக்கு இத்தாலியின் இந்தக் காலனிய படையெடுப்பு சங்கடத்தை தந்தது.[8]  இரண்டாவதாக, பிரிட்டிஷாருக்கும் சர்வதேச கம்யூனிஸ்ட்களுக்கும் தன்னை தன் முக்கிய அரசியல் எதிரியாக நேரு கருதிய சுபாஷ் சந்திர போஸிடமிருந்து வேறுபடுத்தி காட்டவும் இது ஒரு வாய்ப்பாக அமைந்தது.[9]

0

fascismமூஞ்சே – முசோலினி சந்திப்பை குறித்து பேசி [எனவே ஆர் எஸ் எஸ் எனவே] மோடி ஒரு பாசிஸ்ட் என்றும் நேரு ஒரு ஜனநாயகவாதி என்றும் பறை சாற்றுவது வரலாற்றைத் திரிப்பதற்கு ஒப்பானது. அ.மார்க்ஸ், ராம் புன்யானி, சம்சுமல் இஸ்லாம், ஜான் தயாள் ஆகிய அனைவருமே எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லியில் மார்ஸியா கஸோலாரி (M Casolari) என்பவர் எழுதிய ஒரு கட்டுரையில் இருந்தே (Hindutva’s Foreign Tie-up in the 1930s’) மேற்படி கருத்தைப் பெற்றிருக்கின்றனர். அந்தக் கட்டுரையாளர் மூஞ்சேவுக்கு முன்னரும் பின்னரும் முசோலினியைச் சந்தித்தவர்களின் கருத்துகளை வெட்டியெறிந்துவிட்டு, மூஞ்சேயை மட்டும் பெரிதுபடுத்தியிருந்தார்.

உண்மையில், அன்றைய இந்துத்துவர்கள் நாசிசம், பாசிசம் ஆகிய இசங்களைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை. உதாரணமாக கஸோலாரி கொடுத்துள்ள அதே கட்டுரையில் வீர சாவர்க்கரின் ஒரு மேற்கோளில் அவர் பாசிசம், நாசிசம், போல்ஷ்விசம், ஜனநாயகம் இதையெல்லாம் அந்தந்த நாட்டு மக்கள் தங்களுக்கு எது வேண்டுமென விரும்புகிறார்களோ அதைத் தேர்ந்தெடுத்து கொள்ளட்டும் என்று கூறுகிறார். ஆனால் இந்தியச் சூழலில் நாசிசம், பாசிசம், ஸ்டாலினசம் போன்ற கோட்பாடுகளுக்கு இந்துத்துவர்கள் எவ்வித ஆதரவும் அளிக்கவில்லை என்பது தெளிவு.

எடுத்துக்காட்டாக 1939ல் வீர சாவர்க்கர், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் உட்பட ஏழு இந்திய தலைவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்ட ஓர் அறிக்கையில் காங்கிரஸ் செயல்படும் விதம் பாசிசதன்மை கொண்டதாக இருப்பதுடன் அது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும் கூறினர். பாசிசம் அவர்களால் எதிர்மறையாகவே அடையாளப்படுத்தப்பட்டது.[9]  1941ல் வெளியிடப்பட்ட ஹிந்து மகாசபை அறிக்கைகள் தொகுப்பு பாசிசம் குறித்த தன் நிலைப்பாட்டை திட்டவட்டமாக அறிவிக்கிறது: வீர சாவர்க்கரின் கோட்பாடுகளான பாரத மக்களுக்கு ராணுவப் பயிற்சியளித்தலையும்  பாரதத்தை தொழில்மயமாக்குதலையும்  ஹிந்து மகாசபை ஏற்கிறது. ஹிந்து மகா சபை பாசிசத்தை ஆகப் பெரிய ஆபத்தாகவும் நம் பண்பாட்டில் இருக்கும் அனைத்து நன்மைகளையும் சான்றாண்மையையும் அழிக்கக் கூடியதாக கருதுகிறது.[10]

மூஞ்சே முன்வைக்கும் ராணுவப் பயிற்சி என்பது சுதேச ராணுவம் குறித்த கவலை கொண்ட ஒவ்வொருவருக்கும் தோன்றியிருக்கவேண்டிய ஒரு கனவு. பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் இஸ்லாமிய எண்ணிக்கை குறித்து வெளிப்படையாகவே எச்சரித்தார் அம்பேத்கர். வரலாற்றாய்வாளர் ம.வெங்கடேசன், ‘புரட்சியாளர் அம்பேத்கர் மதம்மாறியது ஏன்?’ எனும் நூலில் இதைக் குறிப்பிடுகிறார். 1942 பிப்ரவரி மத்தியில் பம்பாய் வாக்லே ஹாலில் ஆற்றிய பேருரையில் பாபா சாகேப் சொல்கிறார்: இந்திய ராணுவத்தில் முஸ்லீம்களின் செல்வாக்கை குறைத்து, விரோத சக்திகளை வெளியேற்றிவிட வேண்டும். நமது பூமியை நாம் காப்பாற்றுவோம். இந்தியாவில் முஸ்லீம் சாம்ராஜ்ஜியத்தை பாகிஸ்தான் விரிவுபடுத்திவிடும் என்று தவறான கருத்துக் கொண்டிருக்க வேண்டாம். இந்துக்கள் அதை மண்ணைக் கவ்வச் செய்வார்கள்.[11]

அதே போல அனைத்து பாரதியருக்கும் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும் என்பதிலும் டாக்டர் அம்பேத்கர் டாக்டர் மூஞ்சே போலவே அக்கறை கொண்டிருந்தார். அவர் தமது நண்பர் சித்ரேவுக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டார்: இராணுவ அறிவியலைக் கற்பிப்பதைக் கல்லூரி தன்னுடைய ஒரு சிறப்புத் துறையாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். அவ்வாறு செய்வது இந்திய நாட்டிற்கு ஆற்றும் அரிய தொண்டாகும். அத்துடன் தீண்டப்படாத வகுப்பு மக்களுக்கும் தொண்டு செய்வதாக அமையும்.[12]

ராணுவப் பயிற்சி அளிப்பதன்மூலம் மக்களிடையே போர்க்குணம் கொண்ட சாதிகள் போர் குணமற்ற சாதிகள் எனும் செயற்கைப் பிரிவினையை போக்கிவிடலாம் என்கிற டாக்டர் மூஞ்சேயின் கருத்தும் ராணுவப் பயிற்சியை கல்வியில் சேர்ப்பதன் மூலம் சாதியத்தை அழிக்கலாம் என்கிற பாபா சாகேப் அம்பேத்கரின் கருத்தும் ஒன்றியிருப்பதைக் காணலாம்.

0

பாசிசத்தைக் கொண்டாடும் ஒரு பாடநூலை அண்மையில் காண நேர்ந்தது. அந்த நூலில் முசோலினியின் சாதனைகள் என்று சில பட்டியலிடப்பட்டிருக்கின்றன. வத்திகானுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு போப்புக்கு வத்திகானின் மீதான அரசுரிமையை அங்கீகாரம் செய்தார். உற்பத்தியைப் பெருக்கினார். மூன்றே ஆண்டுகளில் இத்தாலியை வளமாக்கினார். இத்யாதிகள்.

அந்தப் பாடநூல் மாணவர்களுக்குச் சொல்கிறது. “ஒன்றாம் உலகப்போருக்கு பின்னர் குழப்பவாதம், ஒழுக்கமின்மை மற்றும் ஒழுங்கின்மையில் வீழ்ந்திருந்த இத்தாலியை பாசிசம் காப்பாற்றியது.” பின்னர் கேள்வி பதில் பகுதி : எத்தகைய நிலையிலிருந்து இத்தாலி பாசிசத்தால் காப்பாற்றப்பட்ட்து எத்தகைய மாற்றங்கள் தேர்தலில் கொண்டு வரப்பட்டன? கிறிஸ்தவ சபையின் ஆதரவை முஸோலினி எவ்வாறு பெற்றார்? [13]

தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தினரால் வெளியிடப்பட்ட மெட்ரிகுலேஷன் பத்தாம் வகுப்புக்கான சமூகப் பாடநூல் அது. 2006ல் முதல் பதிப்பு வெளிவந்திருக்கிறது. இந்நூல் வெளியீட்டு குழுவின் ‘சேர்-பெர்சன்’ சிஸ்டர் மேரி ஸாக்கரியா. ஆசிரியைகளில் ஒருவரான உமா மகேஸ்வரி அண்ணா ஆதர்ஷ் பள்ளியை சேர்ந்தவர். மற்றொருவர் சாலி வர்கீஸ் சி.எஸ்.ஐ எவார்ட் பள்ளியைச் சேர்ந்தவர். இந்தப் பாடநூல் மறுபார்வை செய்தவர்களில் ஒருவரான பாலா தியாகராஜன் புனித மைக்கேல் பள்ளியைச் சேர்ந்தவர். மற்றொருவரான லதா பிரேம் குமார் சி.எஸ்.ஐ ஜெஸி பள்ளியைச் சேர்ந்தவர். எல்லாவற்றிலும் ஆர் எஸ் எஸ் சதியையும் பிராமணியத்தையும் பார்க்கும் அ.மார்க்ஸின் பார்வையை இங்கே பொருத்திப் பார்த்தால் என்னவாகும்? பாசிசத்திடமும் முஸோலினியிடமும் கிறிஸ்தவ சபைகள் இன்னும் நன்றியுடன் இருப்பதால் இப்படி ஒரு பாடம் பாடநூலில் இடம் பெற்றிருக்கிறது என்று சொல்லலாமா? ஆனால் அத்தகைய ஒரு முடிவு அதீதமானது என்பதை நாம் அறிவோம்.

அ.மார்க்ஸ் போன்றவர்கள் இனியாவது ஆங்கில ஊடகங்களில் கொட்டப்படுவதை அப்படியே தழுவி பொய் பரப்புரைகளையும் திரிபுகளையும் மேற்கொள்வதைக் கைவிடவேண்டும்.  அல்லது இவர்களுடைய வாசகர்களாவது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

சான்றுகள்/குறிப்புகள்

[1] திவ்ய பாஸ்கர், முதல்பக்க செய்தி, 29-அக்டோபர்-2013
[2] அந்தோனிசாமி மார்க்ஸ், நேருவைக் குறை கூற இந்த மோடிக்கு என்ன யோக்கியதை?, முகநூல் பதிவு தேதி 30-அக்டோபர்-2013
[3] Ophthalmic Review, Vol 25-26, பக்.63
[4]மார்ஸியா காசோலரி, Hindutva’s Foreign Tie-up in the 1930s Archival Evidence, Economic and Political Weekly, ஜனவரி-22, 2000, பக்.220
[5] அதே.
[6]டேவிட் ஜேம்ஸ் ஃபிஷர், Romain Rolland and the Politics of the intellectual Engagement, Transaction Publishers, 2004, பக்.134, 136
[7] மார்ஸியா காசோலரி, 2000, பக்.220
[8]ப்ராங் மோரெஸ், Jawaharlal Nehru a Biography, Jaico Publishing House, 2007, பக்.265
[9]பீட்டர் வார்ட் ஃபே, The Forgotten Army: India’s Armed Struggle for Independence 1942-1945, University of Michigan Press, 1995, பக்.191
[10] நிர்மல் சந்திர சாட்டர்ஜி &நிரிபேந்திரநாத் சிர்கார், Hindu Mahasabha Tracts, Vedic Press, 1941, பக்.14
[11] ம.வெங்கடேசன், புரட்சியாளர் அம்பேத்கர் மதம் மாறியது ஏன், இந்துத்துவ பதிப்பகம்: மேற்கோள் காட்டப்பட்டது: தன்ஞ்ஜெய் கீர், Dr. Ambedkar: Life and Mission,Popular Prakashan, 1995,பக்.334
[12] ம.வெங்கடேசன், புரட்சியாளர் அம்பேத்கர் மதம் மாறியது ஏன், இந்துத்துவ பதிப்பகம்: மேற்கோள் காட்டப்பட்டது: தன்ஞ்ஜெய் கீர், 1995, பக்.405-6
[13]History and Civics Matriculation, Standard 10, Tamil Nadu Textbook Corporation, 2006, பக்.40-41 & 46

தாரிக் அலி : சுதந்தரம் – அச்சுறுத்தல் – ஜனநாயகம்

tariq_ali 1மீடியா டெவலப்மெண்ட் ஃபவுண்டேஷன், ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் இணைந்து ஜூலை 9 அன்று நடத்திய கருத்தரங்கில் புகழ்பெற்ற எழுத்தாளரும் இடதுசாரி சிந்தனையாளருமான தாரிக் அலி The State of Journalism in the 21st Century: Celebrities, Trivia and Whistleblowers என்னும் தலைப்பில் உரையாற்றினார். 2014ம் ஆண்டு இதழியல் மாணவர்களுக்காக சிவகாமி பெத்தாச்சி அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பெருமளவு கூட்டம் திரண்டுவிட்டதால் பார்வையாளர்கள் பலருக்கு நிகழ்ச்சியின் இறுதி வரை அமர இடம் கிடைக்கவில்லை.

தாரிக் அலியின் உரை ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. அதற்குப் பிறகு கேள்வி பதில் பகுதி. காத்திரமான உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தாலும் சரளமான நடையில் அபாரமான உச்சரிப்பில் இடையிடையே நகைச்சுவை கலந்து உரை அமைந்திருந்ததால் ஒரு விநாடிகூட யாருக்கும் சோர்வு தட்டியிருக்காது என்று நம்புகிறேன். ஒரே ஏமாற்றம், எடுத்துச் சென்று ஒலிப்பதிவுக் கருவி இயங்காததுதான். எனவே, நினைவில் தங்கியிருந்ததை வைத்தும் இடையிடையே எடுத்த குறிப்புகளின் அடிப்படையிலும் இதனை எழுதுகிறேன். குறைகள், குற்றங்கள் என்னுடையவை. இன்னும் ஓரிரு நாள்களில் யூட்யூபில் இந்த உரை முழுவதுமாகப் பதிவேற்றப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். கிடைத்தவுடன் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

பத்திரிகை சுதந்தரம்

 • எட்வர்ட் ஸ்நோடெனை நான் ஆதரிக்கிறேன். அடைக்கலம் கோரி ஸ்நோடென் அனுப்பிய விண்ணப்பத்தை ஒரு விநாடிகூட யோசிக்கவும் இந்தியா நிராகரித்துவிட்டது வருத்தமளிக்கக்கூடியது. ஏதேனும் சாக்கு போக்கு அல்லது காரணங்கள் சொல்லி நிராகரிக்கக்கூட இந்தியா முயற்சி செய்யவில்லை. அரசியல் எஜமானர்களைப் பகைத்துக்கொள்ளக்கூடாது என்பது மட்டும்தான் இந்தியாவின் குறிக்கோள்.
 • ஸ்நோடெனை ஒரு விசில் புளோயர் என்றல்ல ஒரு கிரிமினல் குற்றவாளி என்றே அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய மீடியா அழைக்கிறது.
 • அரசாங்கத்தின் ஊதுகுழல்கள் மட்டுமே ஒரு நாட்டில் இயங்கமுடியும்; அரசாங்கத்தின் கருத்துகள் மட்டுமே நமக்குக் கிடைக்கும் என்றால் அதை ஒரு ஜனநாயக நாடு என்று அழைக்கமுடியாது.
 • சோவியத் யூனியனில் பத்திரிகை சுதந்தரம் இல்லை, மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை என்று மேற்கத்திய உலகம் வலுவாகப் பிரசாரம் மேற்கொண்டபோது இடதுசாரிகளால் தகுந்த முறையில் பதிலளிக்கமுடியவில்லை. சோவியத் யூனியனில் பத்திரிகை சுதந்தரம் இருக்கல்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
 • இன்னொன்றையும் ஒப்புக்கொள்ளவேண்டும். சோவியத் யூனியனைப் பலமாக எதிர்த்த மேற்கத்திய நாடுகள் பலவற்றில் அப்போது பத்திரிகை சுதந்தரம் இருந்தது. இதையே அவர்கள் வேறு வார்த்தைகளில், ‘எங்களிடம் ஜனநாயகம் இருக்கிறது, ஆனால் உங்களிடம் அது இல்லை’ என்று குற்றம் சாட்டினார்கள். உங்களைவிட நாங்கள் மேம்பட்டவர்கள், உயர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ள பத்திரிகை சுதந்தரத்தையே அவர்கள் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டினார்கள்.
 • வியட்நாம் யுத்தம் குறித்து அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களை நீங்கள் பார்க்கவேண்டும். அப்போதெல்லாம் செய்திகள் தெரிந்துகொள்ளவேண்டுமானால் டிவியைத்தான் ஆன் செய்யவேண்டும். வியட்நாம் எந்த அளவுக்குக் கொடூரமாக அமெரிக்காவால் அழிக்கப்பட்டது என்பதை அமெரிக்க மீடியா துணிச்சலுடன் படம் போட்டுக் காட்டியது. இப்போதும்கூட அப்படிப்பட்ட காட்சிகளை ஒருவர் படம்பிடிக்கமுடியுமா என்று தெரியவில்லை. அதே போல், அமெரிக்காவைக் கண்டிக்கும் பல கட்டுரைகள் நியூ யார்க் டைம்ஸில் வெளிவந்துள்ளன.
 • பிரிட்டனின் கொள்கைகள் பிரிட்டனிலேயே எதிர்க்கப்பட்டது. கிறிஸ்டஃபர் ஹில், எரிக் ஹாப்ஸ்பாம் போன்ற ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களைப் பிரிட்டன் உருவாக்கியது.
 • பார்த்தீர்களா எங்கள் நாட்டில் மட்டும்தான் பத்திரிகை சுதந்தரம் இருக்கிறது என்று பெருமிதத்துடன் இருந்த மேற்கத்திய நாடுகளுக்கு அந்தப் பெருமிதமே ஒரு கட்டத்தில் இம்சையாகவும் மாறியது. அவர்களுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டே தீரவேண்டிய கட்டாயத்துக்கும் அவர்கள் தள்ளப்பட்டார்கள்.

அமெரிக்கா, பிரிட்டன், முதலாளித்துவம் 

 • ஆப்கனிஸ்தான்மீது அமெரிக்கா படையெடுத்தது ஏன்? ஆப்கன் பெண்களுக்குச் சுதந்தரம் அளிக்கத்தான் என்கிறது அமெரிக்கா. அப்படியானால் பெண்களுக்காக நடத்தப்பட்ட முதல் யுத்தம் என்று இதனை நாம் பெருமையுடன் அழைக்கலாம். ஆனால், அவ்வாறு நம்மால் செய்யமுடியாமல் போவதற்குக் காரணம் எந்தப் பெண்களுக்காகப் போராடுவதாகச் சொன்னார்களோ அதே பெண்களால் அமெரிக்க ராணுவத்தினர் வெறுப்புடன் விரட்டியடிக்கப்பட்டதுதான்.
 • ஆப்கனிஸ்தான் யுத்தம் குறித்து மேற்கத்திய உலகில் பெரிதாக எந்த எதிர்ப்புகளும் இல்லை. ஆக்கிரமிப்பாக அல்ல, விடுதலைக்கான யுத்தமாகவே அதை அவர்கள் கண்டனர். சிலர் வெளிப்படையாகவே அது ஒரு பழிவாங்கும் செயல் என்றனர். இப்படி நேர்மையாக ஒப்புக்கொண்டவர்களைக்கூட ஒருவகையில் ஏற்றுக்கொண்டுவிடலாம்.
 • கடாபியின் கதையை எடுத்துக்கொள்ளுங்கள். டோனி பிளேரின் ஆலோசகராக இருந்த ஆண்டனி கிப்பன்ஸ் லிபியாவுக்குச் சென்று முகமது கடாபியைச் சந்தித்து பல மணி நேரங்கள் பேசியிருக்கிறார். கடாபியின் (அவர் எழுதியதாகச் சொல்லப்படும்) கிரீன் புக்கைப் பற்றி ஆஹா, ஓஹோ என்று பாராட்டிப் பேசியிருக்கிறார். அவருடைய புத்திசாலித்தனத்தைப் புகழ்ந்திருக்கிறார். பிரிட்டனில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று கடாபியின் மகனுக்கு டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. அவருடைய ஆராய்ச்சிக்கட்டுரையை வேறு யாரோ எழுதிக்கொடுத்தார்கள். இப்படி கடாபியோடு ஒட்டி உறவாடி வந்த நாடுதான் பிரிட்டன். பிற்பாடு மிக மோசமான முறையில், கொடூரமாக கடாபி கொல்லப்பட்டார்.
 • டோனி பிளேர், க்ளிண்டன், புஷ், ஒபாமா அனைவருடைய கொள்கையும் ஒன்றுதான். இவர்களிடையே எந்த வேறுபாடும் இல்லை.
 • தற்போது எஞ்சியுள்ள ஒரே சூப்பர் பவர் அமெரிக்கா. அதற்கு எதிர்ப்புகளே இல்லை. ஆசியா, ஐரோப்பா அனைத்தும் அமெரிக்காவுக்கு அடிபணிந்தே நடக்கின்றன. ஒற்றைத் துருவ வல்லரசு ஒன்றின் கீழ் உலகமே இன்று அடங்கியிருக்கிறது. இது நிச்சயம் ஆரோக்கியமான விஷயம் அல்ல.
 • மேற்கத்திய உலகம் பயன்படுத்தும் சில வார்த்தைப் பிரயோகங்களை நாம் உன்னிப்பாக கவனிக்கவேண்டும். ஒரு குறிப்பிட்ட நாடு ‘ரிஃபார்ம்ஸை’ எதிர்க்கிறது என்று எழுதுகிறார்கள். சந்தைப் பொருளாதாரத்தை ரிஃபார்ம்ஸ் என்று அழைக்கமுடியுமா என்ன?
 • அதே போல், சுதந்தரம் என்றால் ஜனநாயகம். ஜனநாயகம் என்றால் முதலாளித்துவம். ஆக, முதலாளித்துவம் என்றால் சுதந்தரமும் ஜனநாயகமும்தான் என்று மேற்கத்திய உலகம் சொல்லிவருகிறது. அனைத்து வார்த்தைகளையும் ஒன்றுபோல் பாவித்து மாற்றி மாற்றி அவர்கள் பயன்படுத்திவருகிறார்கள். உண்மையில் முதலாளித்துவம் என்னும் வார்த்தையைப் பயன்படுத்த அவர்களுக்கே சங்கடங்கள் இருக்கின்றன. அதனால்தான் சுதந்தரத்தையும் ஜனநாயகத்தையும் இழுத்து வந்து நம் முன் நிறுத்துகிறார்கள்.
 • ஜனநாயகம் என்பதை நாம் போராடிப் பெறவேண்டியிருக்கிறது. நாடுகள் ஒவ்வொன்றும் பிரயத்தனப்பட்டுப் போராடியே ஜனநாயகத்தைப் பெற்றிருக்கின்றன. ஆனால் முதலாளித்துவம் அப்படியல்ல. முதலாளித்துவம் ஜனநாயகத்தை மறுக்கிறது. சுதந்தரத்தை மறுக்கிறது. உழைக்கும் மக்கள் (சார்டிஸ்டுகள்) பிரிட்டனில் அரசியல் சீர்திருத்தங்களுக்காகப் போராடியிருக்கிறார்கள். பெண்கள் வாக்குரிமைக்காகப் போராடியிருக்கிறார்கள். முதலாளித்துவம் இந்த அடிப்படை உரிமைகளைக்கூட மறுத்துள்ளது என்பதை நாம் மறக்கக்கூடாது. முதலாளித்துவமும் ஜனநாயகமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று சொல்லப்படுவதை நிச்சயம் ஏற்கமுடியாது.

இன்றைய மீடியா

 • சினிமா நட்சத்திரங்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களுக்குப் பிடித்தது என்ன, பிடிக்காதது என்ன? சமீபத்தில் விவாகரத்து செய்தவர்கள் யார்? இது போன்ற முக்கிய விவரங்களை உள்ளடக்கிய சினிமா பத்திரிகைகள் வெளிவருவதில் எனக்குப் பிரச்னையில்லை. அதே போல்தான் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்படும் பத்திரிகைகளும். யாருக்கு எதில் விருப்பமோ அதைத் தேடிப்பிடித்து காசு கொடுத்து வாங்கிகொள்வார்கள். ஆனால் எல்லாப் பத்திரிகைகளும் திரும்பத்திரும்ப இப்படிப்பட்ட விஷயங்களை அளிக்கவேண்டிய அவசியம் என்ன? சீரியஸ் ரிப்போர்டிங் இன்று குறைந்து வருகிறது.
 • பொதுவாகவே கனமான விஷயங்களைக் கொடுக்கவேண்டாம் என்றே பெரும்பாலான பத்திரிகைகள் நினைக்கின்றன. எதற்காக வாசகர்களைக் கஷ்டப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறார்கள் போலும்.
 • எதற்காக பல நிருபர்களை ஒரு நிறுவனம் பணியில் வைத்திருக்கிறது என்றே புரியவில்லை. எல்லாப் பத்திரிகைகளும் ஒரே கதையை ஒரே மாதிரியே சொல்கின்றன.
 • ஆழமாக விஷயங்கள் தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கான பத்திரிகையாக இன்றும் இருப்பது தி கார்டியன் போன்ற வெகு சில பத்திரிகைகள்தான். ஆனால் அதிலும்கூட இப்போது பல மாற்றங்கள் வந்தவிட்டன. ‘கொலைவெறிக் கதைகள்’ நிறைய வர ஆரம்பித்துவிட்டன. மக்கள் எதைத் தெரிந்துகொள்ளவேண்டுமோ அதை மட்டுமல்ல, எது அவர்களுக்குப் படிக்கப் பிடிக்குமோ அதையும் சேர்த்தே கொடுப்போம் என்று முடிவெடுத்துவிட்டார்கள் போல.
 • தி கார்டியனுக்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறது. செப்டெம்பர் 11 தாக்குதலைத் தொடர்ந்து மில்லியன் கணக்கில் அமெரிக்கர்கள் தி கார்டியன் இணையத்தை பார்வையிட்டார்கள். தம்மைச் சுற்றி என்ன நடக்கிறது, ஏன் தாக்கப்படுகிறோம் என்று அவர்களுக்குப் புரியவில்லை. அந்த நெருக்கடியான கணத்தில் அமெரிக்கப் பத்திரிகைகளை நாடி அவர்கள் செல்லவில்லை. அந்த அளவுக்கு கார்டியன்மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். இவ்வளவு பேர் ஒரே சமயத்தில் இணையத்தில் தேடியதில் திக்குமுக்காடிப்போன கார்டியன் இணையத்தளம் தாற்காலிகமாக அப்போது செயலிழந்துவிட்டது.
 • டயானா இறந்துவிட்டார். நிச்சயம் இது ஒரு துன்பமான நிகழ்வுதான், சந்தேகமில்லை. இரு குழந்தைகளின் தாய் ஒருவர் திடீரென்று இறந்துபோனாலும் அது வருத்தம் தருவதாகத்தான் இருக்கும். ஆனால் மீடியா இந்தத் துக்கத்தை அத்தனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. அத்தனை பத்திரிகைகளிலும் டயானா கவர் ஸ்டோரி. மாய்ந்து, மாய்ந்து டயானாவின் வாழ்வையும் மரணத்தையும் அலசி ஆராயத் தொடங்கினார்கள். உலகின் மாபெரும் பேரழிவு என்றார்கள். மரணம் நிகழ்ந்த சில ஆண்டுகளுக்கு ஒவ்வொரு நாளும் டயானா பற்றி தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தார்கள். அவர் படம் இடம்பெறாத பத்திரிகைகளே இல்லை. முக்கியத்துவம் வாய்ந்த எவ்வளவோ செய்திகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு டயானாவை முன்னிறுத்தவேண்டிய அவசியம் என்ன?
 • எதையும் உடனுக்குடன் கொடு என்கிறது இணையம். சுடச்சுட செய்தி, சுடச்சுட கருத்து என்பதுதான் அதன் தாரக மந்திரம். சில விஷயங்களில் இதுவும் நமக்குத் தேவைதான். என்றாலும் பொறுமையாக விஷயத்தை உள்வாங்கி, ஆராய்ந்து அலசி எழுதப்படும் கட்டுரைகளே அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

எதிர்காலமும் நம்பிக்கையும்

 • இன்றுள்ள அரசியல் தலைவர்களிடம் ‘விஷன்’ இல்லை.
 • chavezஹியூகோ சாவேஸின் செயல்பாடுகள் நம்பிக்கையளிக்கும்படியாக இருக்கின்றன. வெனிசூலாவில் அவர் மேற்கொண்ட மாற்றங்கள் கண்கூடானவை. திட்டவட்டமாக முடிவெடுத்து சில மக்கள் நலன் சார்ந்த மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார். ‘வெனிசூலாவில் இதற்கு முன்னால் கொள்ளையடித்துக்கொண்டிருந்தார்கள். நாட்டின் எண்ணெய் வளம் அமெரிக்க முதலாளிகளால் உறிஞ்சப்பட்டு வந்தது. இனி அது தொடராது. எண்ணெய் வருவாய் இனி வெனிசூலா மக்களுக்காகச் செலவிடப்படும்’ என்று அறிவித்துவிட்டு அதன்படி நடந்துகொண்டவர் சாவேஸ். கல்வி, மருத்துவம், அடிப்படை கட்டுமானங்கள் என்று பல துறைகளில் வெனிசூலா முன்னேறியுள்ளது. (இன்னமும் முன்னேற வேண்டிய துறைகள் அநேகம் என்பது உண்மை).
 • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியைப் பிடித்த முதல் புரட்சியாளர் சாவேஸ். சாவேஸுக்கு எதிராக வெனிசூலாவில் மீடியா அவநம்பிக்கையுடன் செயல்பட்டது. சாவேஸின் முயற்சிகள் தோல்விடையும் என்று பத்திரிகைகள் எழுதின. ஆனால் அவற்றையெல்லாம் மீறி சாவேஸ் வெற்றிபெற்றார். மீண்டும் பத்திரிகை சுதந்தரத்தை இங்கே நினைத்துப் பார்க்கவேண்டியிருக்கிறது. சிலர் பத்திரிகைகள் வலிமையானவை, அவற்றைமீறி யாரும் எதையும் செய்யமுடியாது என்கிறார்கள். இதுவும் தவறுதான். இல்லாவிட்டால் சாவேஸ் வென்றிருக்கமுடியுமா?
 • எதிர்காலத்தில் புத்தகம் வழக்கொழிந்துவிடுமா என்று சிலர் கேட்கிறார்கள். அப்படி ஆகாது என்றே நினைக்கிறேன். நான் ஒரு பழமைவாதி. அதற்காக இணையத்தை நான் பயன்படுத்துவதில்லை என்பதல்ல விஷயம். அதுவும் முக்கியம்தான். ஆனாலும் கையில் எடுத்து வைத்து ஒரு விஷயத்தைப் படிப்பதையே நான் விரும்புகிறேன். உதாரணத்துக்கு, பத்திரிகையை எடுத்துக்கொள்ளுங்கள். எது தலைப்புச் செய்தியாக வந்திருக்கிறது, எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், அட்வர்டைஸ்மெண்ட் ஸ்பேஸ் எப்படி உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது போன்ற விஷயங்களை அச்சில் காணவே நான் விரும்புகிறேன்.
 • இணையம் அச்சிடுவதை எளிமையாக்கிவிட்டிருக்கிறது. முன்பெல்லாம் ஒரு கட்டுரை எழுதினால் அதை நியூ யார்க் டைம்ஸுக்கோ அல்லது அப்படியொரு பத்திரிகைக்கோ அனுப்புவோம். அது பிரசுரமானால் சரி. ஆகாவிட்டால் அத்தோடு தொலைந்தது என்று விட்டுவிடுவோம். வேறு மாற்று இல்லை. ஆனால் இப்போதோ உங்களால் எதையும் சுயமாக இணையத்தில் பதிப்பிக்க முடியும். இந்த மாற்றத்தை வரவேற்கிறேன்.
 • கவுண்டர்பஞ்ச், சலோன் போன்ற இணையத்தளங்கள் பல காத்திரமான கட்டுரைகளைத் தாங்கி வருகின்றன. பிரிட்டன், அமெரிக்கா போன்ற இடங்களில் இப்படிப்பட்ட தளங்கள் இயங்குவதற்கு வாசகர்கள் பண உதவி அளிப்பது சகஜமானது.
 • ஒரு சில பெரிய நிறுவனங்கள் தவிர இப்போதெல்லாம் பத்திரிகையை மட்டுமே நம்பி யாரும் இயங்குவதில்லை. வேறு ஏதோ செய்கிறார்கள், அப்படியே ஓர் ஓரமாகப் பத்திரிகையையும் நடத்துகிறார்கள்.
 • ஒரு பத்திரிகையாளரின் கடமை என்ன? தான் கண்டதை, தனக்கு உண்மை என்று பட்டதை உண்மையாக எழுதவேண்டும். தனக்குப் பிடிக்காத அல்லது கருத்தளவில் தான் சாராத ஓரிடத்தில் இருந்து வரும் விஷயங்களையும்கூட உள்ளது உள்ளபடி பதிவு செய்யவேண்டும். எதிர்கருத்துக்கும் மாற்றுக்கருத்துக்கும் இடம் கொடுக்கவேண்டும். ரிப்போர்டிங்கில் சுயசரக்கு சேர்க்கக்கூடாது. விருப்பு வெறுப்பின்றி அரசியல் கட்சிகளின் சந்திப்புகள், ஊர்வலங்கள், தலைவர்களின் உரைகள் போன்றவற்றைப் பதிவு செய்யவேண்டும். பிற்பாடு அவற்றை மறுத்தோ அல்லது முற்றிலும் நிராகரித்தோ தனியாக எழுதலாம். தவறில்லை. ஆனால் முதலில் எதிர் கருத்தை உரிய முறையில் பிரசுரித்துவிடவேண்டும்.
 • மேற்கத்திய உலகமே செய்தித்துறையில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறது. அவர்கள் முன்வைக்கும் செய்திகளுக்கு மாற்றான செய்திகள், அவர்கள் முன்வைக்கும் வாதங்களுக்கு மாற்றான வாதங்கள் முன்வைக்கப்படவேண்டும்.
 • அரசியல் அழுத்தங்கள் எதுவுமின்றி சுதந்தரமாக ஊடகம் செயல்படவேண்டும். இதில் ஏதேனும் விதிமீறல்கள் நிகழ்ந்தால், ஜனநாயகம் மறைந்துபோகிறது.

தாரிக் அலி : ஓர் அறிமுகம்

லாகூரில் பிறந்து வளர்ந்த தாரிக் அலி ஒரு பிரிட்டிஷ் பாகிஸ்தானிய எழுத்தாளர் ஆவார். தி கார்டியன், கவுண்டர்பஞ்ச், லண்டன் ரிவ்யூ ஆஃப் புக்ஸ் ஆகிய இதழ்களில் எழுதி வருகிறார். பாகிஸ்தான் அரசியல், அமெரிக்கா, லத்தின் அமெரிக்க அரசியல், பொலிவாரியப் புரட்சி, வரலாறு, இஸ்லாம், சமூகம் போன்ற பல துறைகளில் நூல்கள் எழுதியுள்ளார். பத்திரிகையாளர், நாவலாசிரியர், குறும்பட இயக்குநரும்கூட. இவரது தந்தை மஸார் அலி கான் நாத்திகவாதத்தையும் கம்யூனிசத்தையும் ஏற்றுக்கொண்டவர். தாரிக் அலி இந்த இரண்டையும் தன் தந்தையிடம் இருந்தே கற்றிருக்கவேண்டும். இஸ்லாத்தை எதிர்த்து வாதிடவேண்டும் என்பதற்காகவே அந்த மதத்தின் அடிப்படைகளை தாரிக் அலியின் தந்தை அவருக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார். பாகிஸ்தான் அரசியல் குறித்து தாரிக் அலி இள வயதிலேயே தீவிரமான விமரிசனக் கருத்துகள் கொண்டிருந்ததால் அங்கே இருப்பது ஆபத்து என்று கருதி பிரிட்டனுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

தாரிக் அலி தனது தொடக்கக்கால அரசியல் உணர்வுகள் குறித்தும் தனது நம்பிக்கைகள் உருபெற்ற கதையையும் ஒரு புத்தகமாக எழுதியிருக்கிறார். நீண்ட நாள்களாக அச்சில் இல்லாமல் இருந்து தற்போது வெளியிடப்பட்டிருக்கும் அந்தப் புத்தகத்தின் பெயர், Street Fighting Years. வியட்நாம் யுத்தத்துக்கு எதிராக ஹென்றி கிஸிஞ்சருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டபோது தாரிக் அலியின் பெயர் பரவலாக வெளியில் தெரிய ஆரம்பித்தது. அமெரிக்கா இன்று வரை போரிடுவதை நிறுத்திக்கொள்ளவில்லை. அமெரிக்காவை விமரிசிப்பதையும் தாரிக் அலி இன்றுவரை நிறுத்திக்கொள்ளவில்லை.

அறுபதுகளில் முளைவிட்ட நியூ லெஃப்ட் என்னும் அறிவியக்கத்தில் தாலிக் அலி தன்னை இணைத்துக்கொண்டார். நியூ லெஃப்ட் ரிவ்யூ இதழில் இணைந்து பணியாற்றினார். ஐஎம்ஜி என்று அழைக்கப்படும் இண்டர்நேஷனல் மார்க்ஸிட் க்ரூப் என்னும் ட்ராட்ஸ்கிய கட்சியில் சேர்ந்தார்.

மால்கம் எக்ஸ், ஜான் லெனன், ரெஜி டெப்ரே உள்ளிட்டோருடன் நேரடியாகப் பழகியிருக்கிறார் தாரிக் அலி. எட்வர்ட் செய்ட்டுடன் நீண்ட உரையாடல் நிகழ்த்தியிருக்கிறார். வரலாறு குறித்து திரைப்பட இயக்குநர் ஆலிவர் ஸ்டோனுடன் விவாதித்திருக்கிறார். இந்த இரு உரையாடல்களும் புத்தகங்களாக வெளிவந்துள்ளன.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் நியோ லிபரல் கொள்கைகளையும் தாரிக் அலி கடுமையாகச் சாடி வருகிறார். வெனிசூலாவில் நடைபெற்ற பொலிவாரியப் புரட்சியின்மீதும் அதை நிகழ்த்திய ஹியூகோ சாவேஸின்மீதும் தாரிக் அலிக்கு மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் இருக்கிறது.

சில புத்தகங்கள்

Bush in Babylon  : ஜார்ஜ் புஷ் தலைமையில் 2003ல் நடைபெற்ற இராக் ஆக்கிரமிப்பு பற்றிய நூல். இராக் யுத்தம் தோல்வியில்தான் முடியும் என்றும் புதிதாக அமையும் பொம்மை அரசு நிச்சயம் கவிழும் என்றும் தாரிக் அலி இதில் குறிப்பிட்டுள்ளார்.

Clash of Fundamentalism  : செப்டெம்பர் 11 தாக்குதலின் வரலாற்றுப் பின்னணி. இஸ்லாத்தின் பின்னணி.

Pirates Of The Caribbean: Axis Of Hope  : லத்தின் அமெரிக்க அரசியல் வரலாறு. பொலிவியா, க்யூபா, வெனிசூலா மூன்றையும் முன்வைத்து.

The Obama Syndrome  : அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் போர்கள்.

தாரிக் அலி : விக்கிபீடியா பக்கம்

தாரிக் அலி : இணையத்தளம்

0

மருதன்