தொடர் பயிற்சி, தொடர் வெற்றி

gary-player-quotes-thumb-400x243-309பேசு மனமே பேசு / அத்தியாயம் 20

தன்னோடு பேசுதல் என்பதை முறையாகச் செய்வதற்கு, அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை இதுவரையில் தொடர்ச்சியாகப் பார்த்தோம். அந்த முறைகளை, வரிசைப்படுத்தி நினைவூட்டுவதற்காக, இங்கே சற்றுச் சுருக்கமாகக் காண்போம்.

தன்னோடு பேசுதலை உபயோகப்படுத்தும்போது, பின்வரும் விஷயங்களைப் பின்பற்றி இருக்கிறீர்களா என்று நீங்களே சோதித்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் இந்தமுறை அதற்கான பலனைத் தரும் என்பதை கண்டிப்பாக மறக்காதீர்கள்.

1. எதைப் பற்றி இருந்தாலும், உள் உரையாடல் அல்லது தன்னோடு பேசுதல், நிகழ்காலத்தில் மட்டுமே இருக்க வேண்டும். ‘இனிமேல் அப்படிச் செய்வேன்; அல்லது செய்ய மாட்டேன்’ என்று இருந்தால், அது எதிர்காலத்து விருப்பத்தைச் சொல்வதாகவோ, ‘உறுதி மொழியாகவோ’ இருக்கும். அதனால் எந்தப் பலனும் இருக்காது. எந்த மாற்றமாக இருந்தாலும், ‘இந்தக் கணத்திலிருந்து’ என்ற செய்திதான் ஆழ் மனத்துக்குச் செல்ல வேண்டும். இந்த பாவனை ஏற்பட வேண்டுமானால், தன்னோடு பேசுதல் நிகழ்காலத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.

2. தெளிவாக இருத்தல் வேண்டும். பிரச்னையைத் தீர்க்க வேண்டியிருந்தாலும் சரி, குறிக்கோளாக இருந்தாலும் சரி, உள் உரையாடல், தெளிவாக, எல்லா அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். உரையாடல், தெளிவில்லாமலும், தயக்கத்துடனும், சந்தேகத்துடனும் இருந்தால், விளைவுகளும் அவ்வாறுதான் இருக்கும். நமக்கு என்ன வேண்டும் என்பது பற்றிய தெளிவுதான், அதற்கான சரியான வழியை நமக்கு அடையாளம் காட்டும். நடத்திக்கொள்ள வேண்டிய விஷயத்தின் அனைத்து அம்சங்கள் பற்றியும் நமக்குத் தெரிந்தால்தான், மனமும், உடலும் அதன் விளைவுகளுக்குத் தயாராகும். நமது பிரச்னை அல்லது குறிக்கோள் என்ன, அவற்றை எவ்வாறு தீர்க்கப் போகிறோம் அல்லது அடையப் போகிறோம் என்பதைத் தெளிவாக நினையுங்கள். அதையே பேசுங்கள்.

உடல்நிலை சரியில்லை என்று இருந்தால், எந்தப் பகுதி பாதித்து உள்ளதோ, அதற்கேற்ற மருத்துவம், மருந்துகள் போன்றவைதான் சரியான தீர்வாக இருக்க முடியும். ‘எப்படியாவது’ பாதிப்பை சரி செய்ய நினைத்தால், விளைவும் ‘வேறு ஏதாவது’ பிரச்னையில்தான் முடியும். இதனால் ஏற்படும் பக்க விளைவுகள், முக்கிய பாதிப்பை விட, தீவிரமாகவோ, மோசமாகவோ இருக்கக்கூடும். அதனால்தான் தன்னோடு பேசுதலும், எது நோக்கமோ, அதை மையப்படுத்தி இருக்க வேண்டியது மிக முக்கியம். நாம் பேசிக்கொள்ளும் வார்த்தைகள், வாக்கியங்கள் ஏதும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நமது ஆழ்மனம், அப்போதுதான், நமது செய்தியை உடனே ஏற்றுக் கொண்டும். பதிவுகளும் அதே போல இருப்பதால், செயல்பாடுகளும் சரியாக இருக்கும்.

நாம் எதைப் பற்றியாவது சாதிக்க வேண்டும், நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்றால், அவற்றைப் பற்றிய உள் உரையாடலின்போது முக்கியமான ஒரு அம்சத்தை நினைவில் கொள்ள வேண்டும். நாம் சொல்லிக் கொள்ளும் வார்த்தைகளை செயல்படுத்த வேண்டியது நாம்தான் என்பதை மறக்கக்கூடாது. அதனால், நம்மையும், நம் திறமையையும் மட்டும், மையப்படுத்திப் பேச வேண்டும். மற்றவர்களை, சூழ்நிலையை குறிக்கும் வார்த்தைகளான அவன்/அவள்/அவர் மற்றும் சூழ்நிலை ‘மாற வேண்டும், மாறுகிறது’ என்றெல்லாம் சொல்வது உங்களைக் கட்டுப்படுத்தாது. இதனால், உங்களது மனத்துக்கு எந்த செய்தியோ, கட்டளைகளோ கிடைக்காது. இவ்வகை செய்தியால் எந்தப் பலனும், மாற்றமும் ஏற்படாது. மாறாக, நான் ‘இப்படிச் செய்கிறேன்’, ‘இப்படியாக மாறுகிறேன்’ என்று உங்களை மையப்படுத்தி உங்களோடு பேசுவதால் மட்டுமே, மாற்றங்களைக் கொண்டுவரமுடியும் என்பதை மறக்காதீர்கள்.

பெரும்பாலானோர், முன்னேறாமல் இருப்பதற்கு, அவர்களுக்கு வேண்டியது கிடைக்காமல், நடக்காமல், பெறமுடியாமல் போவதற்குக் காரணம், இறந்த காலத்தின் பிடியிலேயே இருந்து விடுவதுதான். இந்தப் பிடிப்பு இரண்டு விதமாக இருக்கிறது. எந்த விஷயத்தைச் செய்வதற்கு முனையும்போதும், அதுபற்றிய முன்னுதாரணம், முன் அனுபவம், முன்னால் ஏற்பட்ட மனப்பதிவு ஆகியவற்றைத் தேடுகிறோம். குறிப்பாக, நமக்கு முன்னால் இருக்கக்கூடிய வெற்றிகரமான உதாரணங்களையும், அனுபவங்களையும் தெரிந்துகொள்ள முயற்சிக்கிறோம்.

இந்த முயற்சி நேர்மறை சிந்தனை போல இருந்தாலும், அடிப்படையில் இறந்த கால பயணம் என்பதை மறக்காதீர்கள். புதிய சூழ்நிலை, அதாவது நிகழ்காலத்தில் வெளி அம்சங்கள் மாறியிருக்க வாய்ப்புகள் இருப்பதால், கடந்த கால அனுபவங்களை, வெற்றிகரமாகவே அவை இருந்தாலும், அவற்றைப் பின்பற்றுவது முழு வெற்றியை அளிக்காது. அதே போல நமது கடந்த கால முயற்சிகளில், தோல்வி, சறுக்கல், தடைகள், தாமதம் ஆகியன ஏற்பட்டு இருந்தால், நமது மனத்தை, வேகத்தை ‘தளர்வடைய’ அனுமதித்து இருப்போம். இந்தத் தளர்வுதான், எப்போதும் நமது மனத்தில் பதிவுகளாக இருக்கும். இறந்த காலத்துக்குள் பயணித்தால், இவைதாம் நம்முடன் பயணித்து நிகழ்கால விளைவையும் தீர்மானிக்கும். இதையும், தன்னோடு பேசுதலின்போது கவனமாகக் கணக்கெடுக்க வேண்டும். நமது கடந்த காலத் தவறுகள் மற்றும் தோல்விகளில், நமது பங்கு இருந்தால் அதை நியாயமாகவும், நேர்மையான மனத்துடனும் நமக்குள்ளாகவாவது ஒப்புக்கொள்ளவேண்டும். அப்போதுதான் அவற்றின் நிழல் கூட, நிகழ் காலத்தின் மேல் படியாமல் தடுக்க முடியும்.

இவை தவிர கீழ்க்காணும் நான்கு வாக்கியங்களை முக்கியமாக கவனப்படுத்தி தினமும் சொல்லுங்கள்.

1. எனது வெற்றிகளை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். அவற்றை அடைவதற்காகப் பெருமை கொள்கிறேன். அதே பாவத்தோடு எனது தோல்விகளையும் என்னுடையவை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். தோல்வியை மட்டும் சூழ்நிலையின் மீதோ, பிறரின் மீதோ, போட்டுத் தப்பிக்க முயற்சி செய்வதை பழக்கமாகக் கொள்ளமாட்டேன்.

2. என்னால் செய்ய முடியாததற்கு, நான் சாக்குபோக்குகளைத் தேடுவதில்லை. தெரிந்த காரணங்களை சரியான முறையில் அணுகி அந்தக் குறைகளை நீக்குகிறேன். எதையும் அவற்றிற்கு ஏற்ற நேரத்தில் செய்கிறேன். நேற்றை விட இன்றைக்கு, எனது ஆழ் மன வலிமை கூடியிருக்கிறது.

3. எனது கனவுகள், லட்சியங்கள் என்னுள்ளிருந்து பிறந்தவை, அவற்றை நனவாக்குவதும், குறிக்கோள்களை அடைவதும் எப்போதும், எனது பொறுப்புதான். அதை மனமுவந்து ஏற்கிறேன். இந்தப் பொறுப்பேற்பதற்கான பொறுப்பும் என்னுடையதுதான் என்பதை உணர்ந்தே இருக்கிறேன்.

4. என்னை நான் முழுவதும் நம்புகிறேன். அது எந்த அளவுக்கு வலிமையானது என்றால் ‘தோற்றுவிடுவோம்’ என்ற எண்ணத்தின் சாயல்கூட, எனது எந்தச் செயலிலும், எந்தச் சந்தர்ப்பத்திலும், சொல்லிலும், எழுவதும் இல்லை. படிவதும் இல்லை.

இவை மந்திர சக்தி கொண்ட சொற்கள் அல்ல. இவற்றின் சக்தியின் அளவு, ஆழம் அனைத்தும், இதை சொல்பவரது நம்பிக்கையிலும், வெற்றி பெற வேண்டும் என்ற அடங்காத ஆர்வத்திலும்தான் இருக்கிறது. இவைகளை தனியாக உங்களது கையெழுத்தில்  தெளிவாக எழுதிக்கொண்டு, அட்டையில் ஒட்டிக்கொண்டு தினமும் நிலைக் கண்ணாடியின் முன் நின்று, வாய்விட்டுத் தெளிவாக, மெதுவாகவோ, சப்தமாகவோ படியுங்கள். கண்ணாடியில் தெரியும் உங்களது உருவத்தை நேசியுங்கள்.  உங்களுக்குள் ஒரு நண்பனை, இதுவரையில் அடையாளம் காணப்படாத ஒரு நபரைக் குறித்து நீங்களே உணர்வீர்கள். நம்புங்கள் – செயல்படுங்கள் – தொடர்ந்து செயல்படுங்கள் – வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள் – அந்த வெற்றியை நிலைநிறுத்துங்கள்.

வாழ்த்துகள்.

(முடிந்தது)

நினைத்தால் நடக்கும்

raceபேசு மனமே பேசு / அத்தியாயம் 19

எந்த ஒரு விஷயத்திலாவது ‘எப்படியும் முடிப்பேன்’ என்ற வாக்கியத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லி, காரியத்தை முடித்திருக்கிறீர்களா? அப்படிச் செய்திருந்தால், ‘தன்னோடு பேசுதல்’ முறையை உங்களது பாணியில் நடத்து வெற்றி கண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

அதேபோல ‘குறிப்பிட்ட விஷயத்தைக் குறித்து, பயந்து, தயங்கி ‘எங்கே நடக்கப் போகிறது?’ என்று தொடர்ந்து நினைத்து இருக்கிறீர்களா? முடிவில் ‘எதிர்பார்த்தது’ போலவே, நடக்காமல் போயிருக்கிறதா? இவ்வாறு நிகழ்ந்து இருந்தால், ‘தன்னோடு பேசுதலை’ எதிர்மறையாகப் பயன்படுத்தி, அதற்கான விளைவை சந்தித்திருக்கிறீர்கள் என்று அர்த்தம் கொள்ளலாம்.
குறிப்பிட்ட ஒரு ஒலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டும் போட்டியாளர் வேலரி புரூமெல் கலந்து கொண்டார். அப்போதைய சோவியத் ரஷ்ய நாட்டின் சார்பில் அவர் கலந்து கொண்டார். இத்தாலியில் நடந்த அந்தப் போட்டியில், நிலைமை அவருக்கு எதிராக இருந்தது. பத்திரிகைகள், பார்வையாளர்கள், விளையாட்டு நிபுணர்கள் ஆகிய அனைவராலும்  எதிர்பார்க்கப்பட்ட வீரர் அமெரிக்காவின் நிக் ஜேம்ஸ்.

சூழ்நிலை புரூமெல்லிக்குக்கு எதிராக இருந்த விதத்தை அவரது வார்த்தைகளில் குறிப்பிடுவதனால், ‘இத்தாலியப் பத்திரிகைகள், போட்டி நடக்க வேண்டிய அன்று காலையில், நிக் ஜேம்ஸின் படத்தை மட்டுமே தாங்கி வந்தன.’ இது போதாதென்று நிக் ஜேம்ஸ் பேட்டியின்போது, ‘எனக்குரிய சாம்பியன் பட்டத்துக்கான தங்கப் பதக்கத்தை எடுத்துச் செல்லவே வந்தேன்’ என்று நம்பிக்கை பொங்க, உற்சாகமாகக் கூறியிருந்தார்.

போட்டி ஆரம்பித்தது. ஆரம்பித்தில் தாண்ட வேண்டிய உயரம் 203 செ.மீ.யில் துவங்கியது. பிறகு 209 ஆக உயர்த்தப்பட்டது. புரூமெல் தாண்டிய இரு சமயங்களிலும் கம்பம் விழுந்தது. ‘எனக்குள் அச்சம் பரவியது. யாரோ என் நெற்றியில் துப்பாக்கி வைத்திருப்பது போல உணர்ந்தேன். ஏதும் தோன்றாத நிலையில் கம்பத்தையே பார்த்துக் கொண்டிந்தேன்’ என்று புரூமெல் அப்போதைய தன் நிலையை பின்னாளில் விவரித்தார். இந்த பயம் அடிப்படையில்லாதது என்று அப்போதைய சூழ்நிலையை வைத்துச் சொல்ல முடியாது.

சோவியத் ரஷ்யாவை ஆண்டது கம்யூனிஸ்ட் கட்சி. அப்போதைய நிலவரப்படி, இது போன்ற விளையாட்டில் சந்திக்கும் தோல்விகள்கூட, நாட்டுக்கு செய்யும் துரோகங்களாக, மிக எளிதில் உருவகப்படுத்தப்படும் நிலை இருந்தது. சம்பந்தப்பட்ட வீரர் மேல், அரசின் சந்தேகம் விழுமானால், அவர் தன்னைப் பாதுகாக்க பத்திரிக்கை, நீதிமன்றம் என்று போக வழி இருக்கவில்லை. மாறாக, அவமானம் என்று அரசு முடிவு செய்யுமானால், தண்டனை நிச்சயம். இதையும் எண்ணியே வேலரி புரூமெல் அச்சத்தால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

புரூமெல் என்ன செய்வது என்பது பற்றி தெரியாமல் ஸ்தம்பித்து நின்றபோது, ரஷ்யாவின் மூத்த வீரர் மிட்டே அவரிடம் வந்து, ‘ஏதும் செயல்படாமல் இருக்காதே, வேகமாக வியர்வை வரும்வரை உடற்பயிற்சி செய்’ என்று ஆலோசனை கூறினார். இந்த உடற்பயிற்சியால், உடலின், மனத்தின் இயக்கங்கள் உயிர் பெற்றன. திடீரென்று தனக்குள் (பேசி) சொல்லிக்கொண்டார் புரூமெல். ‘மாட்டேன் விடமாட்டேன்’, ‘ஜெயித்தே தீருவேன்’ இந்த வேகத்திலேயே இரண்டாவது முறை ஓடித் தாண்டினார். இம்முறை, முன்பை விட எளிதாகத் தாண்ட முடிந்தாலும், கடைசி நேரத்தில், உடலில் கம்பம் பட்டு விழுந்தது.

அதே சமயம் நிக் ஜேம்ஸ், முதல் முயற்சியாக ஓடி வந்து தாண்டினார். முடியாமல் கம்பத்தோடு கீழே விழுந்தார். கோபத்துடன் தன்னையே திட்டிக் கொண்டு (பேசிக்கொண்டு) கைகளை உதறி, மிகுந்த எரிச்சலோடு அப்பால் சென்றார். ரஷ்யாவின் மூத்த வீரர் மிட்சேவின் முறை அடுத்ததாக வந்தது. அவர் அமைதியாக ஒரு நிமிடம் நின்று, நிதானப்படுத்திக் கொண்டு பின்னர் ஓடி வந்து தாண்டினார். அவர் தாண்டி விழுந்தவுடன், கம்பம் சிறிது நேரம் நடுங்கி, ஆனால் விழாமல் நின்றது. புரூமெல் யாரைக் கண்டு பயந்தாரோ, அந்த நிக் ஜேம்ஸின் முயற்சி இரண்டாவது முறையும் தோல்வியில் முடிந்தது.

இதைப் பார்த்த புரூமெல்லுக்கு, அமெரிக்க வீரர் போட்டியாளராகத் தெரியவில்லை. நிக் ஜேம்ஸ் தனது ஆர்வத்தை இழந்து விட்டதுபோல தோன்றினார். அவர் தன்னையே நொந்து கொள்வதும், ஆத்திரப்பட்டுக் கொண்டு முணுமுணுப்பதும்  அவரது முயற்சிகளை வீணாக்கின. புரூமெல்லின் முறை வந்தது.

நான் பயிற்சியின்போது பெற்ற அறிவுரைகள் மற்றும் எச்சரிக்கைகளை ஒருமுறை மனத்துக்குள் சொல்லிப் பார்த்தேன். ‘கால்களை முழுமையாகப் பயன்படுத்துவேன். சரியான சமயத்தில் உடலை மேலே எடுத்து எறிவேன்’ என்று புரூமெல், திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு (தன்னோடு பேசிக்கொண்டு) ஓடி வந்து தாண்டினார். அவரது சகாவான விட்சேவுக்கு தங்கப் பதக்கமும், புரூமெல்லுக்கு வெள்ளிப் பதக்கமும் கிடைத்தன.

சரியான சமயத்தில் தேவையான விதத்தில், ‘தன்னோடு பேசுதலை’ நிகழ்த்தினால், நினைத்ததை நடத்திக் கொள்ளலாம் என்பதற்கான ஒரு உதாரணம் தான் ரஷ்ய வீரர் வேலரி புரூமெல். அவருக்கான சூழ்நிலை விளையாட்டு. ஆனால் அதில் இருந்த பிரச்னைகள், சவால்கள் ஆகியன, சாதாரணமானவர்களின் பிரச்னைகளை ஒட்டியதுதான்.

வேலை செய்யும் இடத்தில், குறிப்பிட்ட நபரால் பெரும் பிரச்னை. என்ன செய்வதென்று தெரியவில்லை. இந்த சமயத்தில், ‘என்ன செய்தாலும் அவன்தான் ஜெயிக்கப் போகிறான்’ என்கிற ரீதியிலான அணுகுமுறை எதிர்மறை அணுகுமுறையைச் சார்ந்தது. எந்த விஷயமாக இருந்தாலும், எதிர்மறை அபிப்பிராயங்களால், பிரச்னை தீராது. இது போன்ற சிந்தனைகளால் (தன்னோடு பேசுதலால்) நினைத்தது போலவே நடக்கும். அதாவது ‘காரியம் நடக்காது, நஷ்டம் ஏற்படும்’.

அதே போல ‘இன்னைக்கு எழுந்ததிலிருந்து நேரமே சரியில்லை’, ‘இருக்கிற வேலையைச் செய்யறத்துக்கே நேரம் போதவில்லை. எப்படி சமாளிக்கிறதுன்னே தெரியலை’ என்றோ…
‘என்னால, அவனை/அவளை/நண்பனை/தோழியை பொறுத்துக்கொள்ளவே முடியல. பேசவும் மனசில்லை. பேசாமல் இருக்கவும் முடியல’ என்றோ… இப்படியான சொற்றொடர்களை தொடர்ந்து சொல்லிக் கொள்வதன் மூலம், நமக்குப் பிடிக்காததை, அது நடந்து  விடுவதற்குச் சாதகமாக, நம்மையும் அறியாமல் ‘உதவி’ செய்கிறோம். இவற்றைச் சரியான விதத்தில் மாற்றி யோசித்தால், அதாவது பேசிக்கொண்டால் விளைவுகள் நல்லதாக இருக்கும்.

‘காலையில் எழுந்ததிலிருந்து என்னால், சவால்களைச் சரியாக சமாளித்து வெற்றி பெற முடிகிறது’ ‘இன்றைக்கு நேரமே சரியில்லை’ என்பதற்குப் பதிலாக, ‘இன்றைக்கு எல்லாமே நன்றாக இருந்தது. பிரச்னைகளைச் சமாளித்த விதம் எனக்கு சந்தோஷம் அளிக்கிறது. நாளைக்கு இன்னும் நன்றாக இருக்கும்’

இவ்வாறெல்லாம் மாற்றிச் சொல்வதன் மூலம், இது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது, பிரச்னைகளை ஒதுக்குவது, மூடி மறைப்பது போன்றவற்றில் ஈடுபடுவதாக அர்த்தமாகாது. இதன் நோக்கம், பிரச்னைகளை உங்களுக்கு மேலே, உயரத்தில் நிறுத்திப் பார்ப்பதற்குப் பதில், உங்களை மேலே, உயரே நிறுத்திக் கொள்கிறீர்கள் அவ்வளவுதான். இவ்வாறு செய்தால்தான் நினைப்பதை நடத்திக்கொள்ள முடியும்.

0

ராஜாஜி காட்டும் வழி

rajajiபேசு மனமே பேசு / அத்தியாயம் 18

வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பல விஷயங்களின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது, அவை பற்றிய நமது மதிப்பீடுகளும், அணுகுமுறைகளும்தான். இவற்றை பின்னாலிருந்து இயக்குவது நமது மனப்பான்மை என்று கூறலாம். ஆங்கிலத்தில் இதற்குப் பொருத்தமாக Mindset (மனப்பாங்கு) என்று பெயரிட்டுள்ளனர். நமது அனைத்துச் செயல்களுக்கும் பின்னால், அப்போது எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறோம் என்பதும் மனப்பான்மையாகத்தான் வெளிப்படுகிறது. வாழ்க்கைப் பாதையில், நாம் பயணப்படும்போது, நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடித் தடம் பதிவதற்கான வழித்தடம் அல்லது பாதை என்று கூட மனப்பான்மையை விவரிக்கலாம். நாம் நடக்க, நடக்க, வாழ்க்கைப் பாதை உருவாகிறது. நடக்காத வரை, பயன்படுத்தாத வரை பாதையே அங்கில்லை. இதுதான் வாழ்க்கை. நாமும், நமது மனப்பான்மைகளும் இரண்டறக் கலந்தவை.

மறைந்த மூதறிஞர் ராஜாஜியை அனைவரும் அறிவோம். எந்த விஷயத்துக்கும், அவர் ஆற்றிய எதிர்வினை அவர் யார் என்பதை உணர்த்தியது. அவர் சிறந்த ஆட்சியாளராக, பிடிவாதக்காரராக, சீர்திருத்தவாதியாக, அரசியல் அறிஞராக, துணிவு மிக்கவராக அவர் வாழ்ந்த காலத்திலும், அதற்குப் பின்னரும்கூட அடையாளம் காணப்பட்டார். அதற்குக் காரணம், அவர் விஷயங்களை அணுகும்போது, அவர் வெளிப்படுத்திய மனப்பான்மை என்று சொல்லலாம். ஆரம்ப காலத்தில், அவர் சேலத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். அப்போது தங்குவதற்கு ஒரு வீடு தேவைப்பட்டது. சேலத்திலுள்ள சூரமங்கலம் சாலையில், அவருக்கு வேண்டிய அனைத்து வசதிகளுடனும் ஒரு வீடு கிடைத்தது. அவருக்கு அந்த வீடு மிகவும் பிடித்திருந்தாலும், அது பேய் வாழும் வீடு என்றும் அங்கே குடிபோவது உசிதமானதல்ல என்றும் பலர் அவரைத் தடுத்தனர். ஆனாலும், ‘அந்த வீடுதான் எனக்குப் பிடித்தமானது’ என்று சில காலம் அங்கேயே குடியேறி எந்தப் பிரச்னையும் இல்லாமல் வாழ்ந்தார்.

ராஜாஜியைப் பற்றியே இன்னொரு சம்பவமும் உண்டு. ஒருமுறை அவர் நீதிமன்றம்  செல்ல வேண்டியிருந்தது. அதற்காக ஒரு குதிரை வண்டியில் ஏறினார். வண்டியோட்டி ஏறுவதற்குள் குதிரை திடீரென்று வெறிபிடித்து ஓட ஆரம்பித்தது. குதிரையைக் கட்டுப்படுத்துவது இயலாது என்று உணர்ந்த ராஜாஜி, வண்டியின் சட்டங்களைப் பிடித்துக்கொண்டு அமைதியாக உட்கார்ந்து இருந்தார். குதிரை ஒரு கட்டத்தில், களைத்துத்தானே போகவேண்டும். அப்போது தானாக நின்று விடும் என்று எண்ணி, அமைதியாக இருந்ததாக பின்னர் கூறினார். அவர் நினைத்தபடியே, ஒரு குறிப்பிட்ட வழிக்குப் பழக்கப்பட்ட குதிரை, நீதிமன்றம் வந்ததும், தானாக நின்றது. வண்டியிலிருந்து இறங்கிய ராஜாஜி தனது வழக்கமான அமைதியுடன், நீதிமன்றத்துக்குள் சென்றார்.

இந்த இரண்டு சம்பவங்களிலும், பிரச்னைகளை விட, அதை எதிர்கொண்ட மனிதரின் மனப்பான்மைதான் முன்னே நிற்கிறது. இது மூதறிஞரான இராஜாஜிக்கு மட்டுமில்லாமல், நம் அனைவரது வாழ்க்கையிலும், இதே விஷயம் பொருந்தும். எதையும் எதிர்கொள்ளவும், எதிர் கொள்ளாமல் இருக்கவும் நமது மனப்பான்மைதான் காரணமாக உள்ளது. இதை சரியானபடி வைத்துக்கொள்ள ‘தன்னோடு பேசுதல்’ மிகவும் பயன்படும்.

நாம் என்னவாகப் போகிறோம், இப்போது என்னவாக இருக்கிறோம் என்பதற்கு நாம்தான் பொறுப்பேற்க வேண்டும். இதிலிருந்துதான் மனப்பான்மை வடிவம் பெறுகிறது என்பதை மறக்கக்கூடாது. இதுபோன்ற பொறுப்பேற்கும் தன்மை, நமக்குப் பிடித்த, வெற்றி பெற்ற விஷயங்களில் இருப்பது ஆச்சர்யம் இல்லை. ஆனால், மனிதன், பல பரிமாணங்கள் உள்ளவன். அனைத்துக்கும் அவன்தான் அடிப்படையாகப் பொறுப்பேற்க வேண்டும். இந்த மிக முக்கியமான மனப்பான்மை ஏற்பட, தொடர்ந்து இருக்கச் செய்ய, பின்வரும் வாக்கியங்களை தினமும் தொடர்ந்து சொல்லுங்கள்.

‘எனக்கான பொறுப்புகளை நான் ஏற்கிறேன். அது பற்றி மகிழ்ச்சியடைகிறேன். எனது செயல்களுக்கு நானே பொறுப்பு ஏற்பதன் மூலம், நானே எனக்கு ராஜா என்று உணர்கிறேன்.’
நாம், நமது தோல்விகளுக்கு காரணங்கள் சொல்ல, பெரும்பாலும், சூழ்நிலைகள், மற்றவர் போன்றவற்றைத் தேடுவதை வழக்கமாக வைத்துக் கொள்கிறோம். அதேபோல, சுய முயற்சியால் வந்த பெரும் வெற்றிகளுக்கும் அதிர்ஷ்டம், நல்ல நேரம், பிறர் உதவி, ஆதரவு ஆகியவற்றை காரணமாகக் கற்பித்துக் கொள்கிறோம். இந்த இரண்டு விதமான மனப்பான்மையும் மாற வேண்டும். இதற்குப் பின்வருமாறு உங்களோடு பேசிக் கொள்ளுங்கள். பலன் நிச்சயம் இருக்கும்.

‘நான் எந்தக் காலத்திலும், மற்றவர்களை எனது வாழ்க்கையை நடத்த விட மாட்டேன். அதற்கு நான் மட்டுமே பொறுப்பாக இருக்கிறேன். எனது செயல்களுக்கும், அதன் விளைவுகளுக்கும் மற்றவர்கள் பொறுப்பல்ல.’

அவை அனைத்துக்கும் நானே பொறுப்பு. என்றால் நடப்பவை அனைத்துக்கும் நானே பொறுப்பேற்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சியையும், திருப்தியையும் அளிக்கிறது.’
இதற்கு என்ன அர்த்தம் என்றால், நமது முடிவுகளுக்கு நாமே பொறுப்பு ஏற்கத் தயாராக இருக்கிறோம் என்பதுதான். இதனாலேயே முடிவெடுக்க வேண்டிய தருணங்களில் அவசரப்பட மாட்டோம். இந்த நிலையில், பிரச்னைகள், தடங்கல்கள், பின்னடைவுகள் என்று எதாக இருந்தாலும், அவற்றுக்கு விடை தேடுவதில் கவனமாக இருப்போம்.

சில சமயங்களில், நமது செயல்கள் மற்றும் விளைவுகளுக்கு நம்மால் பொறுப்பாக முடியாத சூழ்நிலை ஏற்படலாம். இந்த நிலை சாதாரண மக்களுக்கும், அவர்களை விட மேம்பட்டவர்களுக்கும் பொதுவாக ஏற்படாது. ஆனால், சமூகத்தில் கடைநிலையில் உள்ள வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ளவர்கள், பாலியல் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்தவர்கள் போன்றோரில் இந்த நிலை ஏற்படலாம். அப்பொழுதும்கூட, நமது வாழ்க்கை முறையை மாற்ற இயலாத சூழ்நிலையில் இருக்கிறோம் என்றாலும், இதில் ஏதாவது ஒரு முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அதற்கான பொறுப்பை நாம் ஏற்போம் என்று முடிவு செய்தால் வழி பிறக்கும் என்பது பல்வேறு விதங்களில் நிரூபணம் ஆகியிருந்தது.

சமூகத்தின் அவலங்களில் ஒன்று பாலியல் தொழில் என்று கூறலாம். இதில் ஈடுபட்டுள்ள பெண் பாலியல்  தொழிலாளர்கள் அனைவருமே, ஏதோ ஒரு நெருக்குதலால்தான் இதில் தொடர்ந்து இருந்து வருகின்றனர். அவர்களுக்கும் குழந்தைகள் இருக்கின்றனர். குறிப்பிட்ட வயதைக் கடந்ததும் வாழ்க்கையில் என்ன செய்வது என்ற பயம், பரிதவிப்பு அனைவரிடமும் உள்ளது. எதிர்காலத்துக்கு என்று பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் இயல்பாகவே இருக்கும். ஆனால், இவர்களுக்கு என்று வங்கிக் கணக்கு தொடங்குவது, மிகக் கடினமான விஷயம். இந்தக் குறையை போக்குவதும் நமது பொறுப்புதான் என்று கல்கத்தாவில் விலை மாதர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டுறவு வங்கியைத் தொடங்கினர். 1994ல் இதைத் தொடங்கிய பெண் பாலியல் தொழிலாளியின் பெயர் ரேகா சட்டர்ஜி. வங்கியாக மட்டும் செயல்படாமல், பல்வேறு விதமான சேமிப்புத் திட்டங்களையும், இந்தக் கூட்டுறவு வங்கி செயல்படுத்தி வருகிறது.

இந்த வெற்றிகரமான பரிசோதனையைப் பார்த்து, மும்பையின், பாலியல் தொழில் நகரமான காமத்திபுராவில் உள்ள பெண் பாலியல் தொழிலாளர்கள், தங்களுக்கு என்று, சாங்கினி பெண்கள் கூட்டுறவு வங்கியைத் தொடங்கினர். இந்த வங்கிகள் ரூ.10/-ஐக் கூட சேமிக்கும் விதத்தில் வங்கிக் கணக்கு வைத்துக்கொள்ள தேசிய வங்கிகள் அளிக்கும் வட்டியும் அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூகத்தில் பலவித அவமானங்களையும், துன்பங்களையும் அனுபவித்து வருபவர்கள் கூட, தங்களது வாழ்க்கைக்குத் தாங்களே பொறுப்பு ஏற்கத் தயாராகும்போது, பல புதிய வழிகள் உருவாகின்றன. இவ்வாறு வாழ்க்கையே பிரச்சினையாக உள்ளவர்களும்கூட, அந்த நிலைக்குப் பொறுப்பு ஏற்றால், மனமும், உடலும், மாற்றத்தை உருவாக்க இணைந்து பணிபுரியும் என்பதை அனுபவத்தால் உணரலாம். இதற்கான விதத்தில் எண்ணங்களை உருவாக்கிக் கொண்டாலே போதும். அதாவது உங்களோடு நீங்கள் மானசீகமாகப் பேசினாலே, பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். யாராக இருந்தாலும், பொறுப்புணர்வு ஏற்பட்டால் வாழ்க்கையின் பாதையை செப்பனிடத் தயாராகிறோம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இந்த உணர்வு ஏற்பட, நிலையாக தொடர்ந்து இருக்க பின்வரும் வார்த்தைகளை தினமும், திரும்பத் திரும்ப சொல்லி வாருங்கள். இவை மந்திரம் இல்லை, ஆனால் சக்தியை உருவாக்கும் சாதாரண வார்த்தைகள்தான்.

வெற்றிகரமான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுவதற்கும், சந்தோஷமான மனநிலையை உருவாக்கி, அதைத் தொடர்ந்து இருக்கச் செய்யவும், உடலில் வலிமை ஏற்படவும், இவை நிலையாக இருக்கவும், நானே பொறுப்பு. எனது நேர்மறையான எண்ணங்களுக்கும் ஆரோக்கியமான நம்பிக்கைகளுக்கும், எனது கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்துக்கும் நான் மட்டும்தான் பொறுப்பு.’

0

கவலைப்பட நேரமில்லை

worriesபேசு மனமே பேசு / அத்தியாயம் 17

தன்னோடு பேசுதலை, பொதுவான விஷயங்களுக்கும், தனிப்பட்ட விஷயங்களுக்கும், தெளிவு பெற மற்றும் சரியான முடிவெடுக்க உபயோகப்படுத்தலாம். உதாரணமாக  ‘கவலை’ என்பதை எடுத்துக் கொள்வோம். எந்த விதமான பிரச்னைகளுக்கும் நமது முதல் எதிர்வினை, ‘கவலை’ என்பதாகவே இருக்கிறது. இது பலருக்கு பழக்கமாக இருக்கிறது. பொதுவாகவே, ‘கவலை’ உண்டானால், அது உடலிலும் ஒருவித தேக்க நிலையை ஏற்படுத்தும் வலிமை படைத்தது. பிரச்னைகள் அல்லது அவ்வாறு பிரச்னைகளைக் கொண்டு வரலாம் என்று நினைக்கக்கூடிய விஷயங்கள் ஆகியன ஏற்படுத்தும் முதல் உணர்ச்சி கவலையாகவே இருக்கிறது. இந்த மனப்பான்மையை ‘தன்னோடு பேசுதல்’ மூலம் ஒழிக்கமுடியும். கவலை என்கிற ஒன்றால், தனியான பிரச்னைகளும், நஷ்டங்களும் ஏற்படும் என்பதால் மிக எச்சரிக்கையுடன் இந்த விஷயத்தை அணுக வேண்டும்.

இரண்டாம் உலகப் போரின்போது, சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் பேர்கள் உயிரிழந்தனர். அதே காலகட்டத்தில் இருதயம் தொடர்புடைய நோய்களால் இறந்தவர்கள் 20 லட்சம் பேர்கள். இவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் கவலையால் ஏற்படும், டென்ஷன், பயம் ஆகியவற்றால் இறந்தனர் என்று புள்ளி விவரம் கூறுகிறது. கவலையால், முடக்கு வாதம், வாயுத் தொந்திரவுகள், மன அழுத்தம், இருதய நோய்கள் போன்றவை ஏற்படும் என்று மருத்துவர்கள் நிரூபணத்துடன் கூறுகின்றனர்.

டாக்டர் எட்வர்ட் போடோல்ஸ்கி என்ற புகழ் பெற்ற போலந்து நாட்டு மருத்துவர், Stop worrying and get well என்ற முக்கியமான நூலைஎழுதியுள்ளார். அவரது நூலில் உள்ள அத்தியாயங்களின் தலைப்புகளே, நூலைப் பற்றி புரிந்து கொள்ள உதவுகின்றன.

‘கவலையால் பாதிக்கப்படும் இதயம்’, ‘கவலையால் கூடும் இரத்த அழுத்தம்’, ‘கவலையால் உருவாகும் முடக்குவாதம்’, ‘வயிற்றைப் பாதுகாக்க கவலையைக் குறைப்போம்’, ‘கவலையும் தைராய்டும்’, ‘கவலையால் விளையும் நீரிழிவு’ என்று ஒவ்வொரு அத்தியாயத்திலும், தலைப்பு பற்றிய ஆதார பூர்வ விளக்கங்களும், விவரங்களும் தரப்பட்டுள்ளன.

வரலாற்றைப் புரட்டிப் பார்த்தோமானால், கவலையால் பெரும் மன்னர்களே மாய்ந்து போயிருக்கின்றனர் என்பது தெரியும். புராணங்களை எடுத்துக்கொண்டால், ஞானியும் அறிஞருமான, மகாராஜா தசரதன், கைகேயிக்கு வரங்களைக் கொடுத்துவிட்டு, அதன் விளைவுகள் என்னாகுமோ என்ற கவலையிலேயே மனம் நொந்து இறந்து போனார்.

பிரெஞ்சு நாட்டின் மிகப் பெரிய சோதிடர்களில் முதன்மையானவர் செரோ. அவர் சோதிடம் சொன்னால் அப்படியே பலிக்கும் என்ற பெயரும், புகழும் பெற்றிருந்தார். சாதாரண குடிமகனிடமிருந்து, நாட்டை ஆளும் மாமன்னர் உட்பட அனைவரும், செரோவை அதற்காக போற்றியும், மதித்தும் வந்தனர். அவர் ஒரு நாள் அரசனுக்கு சோதிடம் சொல்லும்போது, அன்றிலிருந்து நான்காவது மாதத்தில், ஒரு குறிப்பிட்ட தேதியில், மன்னன் இறந்து போவான், அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று கூறிவிட்டார்.

அரசனுக்கு பயமும், கவலையும் ஏற்பட்டன. நாட்கள் நகர்ந்தது. அரசனின் கவலையும் அதிகரித்துக் கொண்டே போனது. குறிப்பிட்ட நாளுக்கு, முந்தைய நாள் கவலை உச்சக்கட்டத்தை அடைந்தது. உடல் நிலையில் அதுவரையில் பிரச்னைகள் ஏதும் இல்லாவிட்டாலும், கவலை அவனை ஸ்தம்பிக்க வைத்தது. சோதிடர் குறிப்பிட்ட நாளில் மன்னன், உண்மையிலேயே இறந்து போனான். இது உண்மையில் நடந்தது.

கவலைக்கு அத்தனை வலு உண்டு. மனத்தை ஒரு நிலையில் நிறுத்த முடியாது. சரியாக யோசிக்க முடியாது. சுய பரிதாபம், பிறர்மேல் பழிபோட முயற்சி, எரிச்சல், கோபம், பயம் ஆகிய அனைத்தும் மாறி மாறி வாட்டும். கவலை என்றால், ‘இல்லாத ஊருக்கு வழி தேடுவது’ போலத்தான். அதாவது கவலைப்படுவதன் மூலம், நாம் எதனுடைய மையத்தையும் நோக்கி பிரயாணப்பட முடியாது. இம்மாதிரியாக அழித்துக் கொள்ளவே முடியும். இத்தகைய ‘கவலை’ என்ற விஷ வலையிலிருந்து நாம் எவ்வாறு விடுபட முடியும்? கவலையின் மூலகாரணம், நம்மால் சமாளிக்க முடியுமா? விஷயங்கள் நமது கட்டுப்பாட்டில் உள்ளனவா? போன்ற சந்தேகங்கள்தான் என்று நிச்சயமாகக் கூறலாம். இவற்றை முதலில் விலக்க வேண்டும்.

இதற்காக நமக்குள்ளேயே பேசிக்கொள்ள வேண்டிய வாக்கியங்கள், பின்வருமாறு இருக்கலாம். இவற்றை விட சிறந்ததாக இருந்தாலோ, உங்களது சூழ்நிலையின் அடிப்படையில் மாற்றங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தாலோ, அவ்வாறே செய்யுங்கள். உடல் நலம் இல்லாதவர்களில் சிலர் மாத்திரைகளை விழுங்கும்போது, முதலில் தண்ணீரை வாயில் ஊற்றிக்கொண்டு மாத்திரைகளைப் போட்டுக்கொள்வார்கள். மற்றவர்கள் முதலில் மாத்திரைகளை தொண்டையின் அருகில் வைத்துவிட்டு, பிறகு தண்ணீர் குடித்து விழுங்குவார்கள். அது போலவே, உங்களது சௌகர்யம் போல, தனக்குள் பேசும் வாக்கியங்கள் இருக்கலாம். உதாரணத்துக்கு சில வாக்கியங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

‘பிரச்னை குறித்து எனக்குக் கவலை இல்லை. அக்கறை மட்டுமே இருக்கிறது. எனது எண்ணங்கள், என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றன. எனக்கு வலு சேர்க்கும் எண்ணங்களை, அர்த்த பூர்வமான அணுகுமுறைகளை உருவாக்கும் எண்ணங்களையே உருவாக்கினேன்.’

இரண்டாவதாகக் கவலை, மனத்தில், உடம்பில் ஒருவித இறுக்கத்தை உண்டு பண்ணும். அமைதியின்மையை உருவாக்கும். எதைச் செய்ய அல்லது செயல்பட முயற்சித்தாலும், நம்பிக்கையுடன் அணுகக்கூட முடியாது. இதை மாற்றுவதற்கு, பின்வரும் வாக்கியங்களை சொல்லிக் கொள்ளலாம்.

‘என்னால் சுலபமாக, மனத்தையும், உடலையும் இயல்பாக, இலகுவாக வைத்துக்கொள்ள முடிகிறது. நான் அமைதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்கிறேன்.’
மூன்றாவதாக, கவலையின் விளைவுகளான, உறுதியின்மை, முடிவெடுப்பதில் தடுமாற்றம் ஆகியவற்றை நீக்குவதற்கு… ‘நான் எப்போதும், உறுதியுடனும், நம்பிக்கையுடனும் விஷயங்களை அணுகுகிறேன். முடிவெடுக்கிறேன்.’

அடுத்ததாக, கவலையுடன், நாம் எதைச் செய்ய ஆரம்பித்தாலும், அதில் நமது முழு சக்தியுடன் ஈடுபட முடியாது. ‘பிரச்சினை வந்து விட்டது. இதைச் செய்து பார்ப்போம். இதனால் பிரச்னையைத் தீர்க்க முடியுமா என்று முயற்சிக்கலாம்’ என்கிற ரீதியில் அணுகினால், வெற்றி பெற முடியாது. கவலையின் பரிமாணத்தில் மாற்றம் ஏற்பட்டு, அதன் ஆழமும், ஆதிக்கமும்தான் அதிகமாகும். எந்தக் காரியத்தை செய்யும்போதும், எதையும் நம்பிக்கையுடன் செய்ய, பின்வருமாறு பேசிப் பழகுங்கள்.

‘நான் எதைச் செய்யும்போதும், மனம் முழுக்க நம்பிக்கையுடனும், அந்தச் செயல் வெற்றிகரமாக முடியும் என்ற உறுதியுடனும்தான், காரியத்தில் இறங்குகிறேன்’
பொதுவாகவே நமது எண்ண ஓட்டங்கள் சரியானவையாக வைத்துக்கொண்டால், தவறான உணர்ச்சிகளுக்கு, பாதிப்புகள் உண்டாகும் எண்ணங்களுக்கு மனத்தில் இடம் இருக்காது. அதற்காக தினமும் சொல்லிப் பழக வேண்டிய எண்ணங்கள் பின்வருமாறு:

‘நான் என் மனத்தை நல்ல, வலிமையான, ஆரோக்கியமான, நேர்மறையான எண்ணங்கள் மூலம், மிகவும் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறேன். நான் என்ன நினைக்க வேண்டும் என்பதை நானே தேர்வு செய்கிறேன். கடந்த கால எண்ணங்கள், அனுபவங்கள், நம்பிக்கைகள் ஆகியன எந்த விதத்திலும், எனது முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்க நான் அனுமதிக்கவில்லை. புதிய எண்ணங்கள், சிந்தனைகள், ஆகியவற்றுக்கு என் மனமும், ஆழ்மனமும் தயாராகவே இருக்கின்றன.’

இவ்வாறெல்லாம் பேசிக் கொள்வதன்மூலம், பெரிய விஷயங்களை சாதிக்க முடியுமா என்று தோன்றலாம். ஏனென்றால், இதன் புதுமையும், எளிமையும் நமக்குப் பழக்கமில்லாதவை. ஆனால் நம்புங்கள். உங்களோடு பேசுங்கள். உங்களுக்குள் பேசுங்கள். கவலையற்ற வாழ்வை மகிழ்ச்சியுடன் வரவேற்கத் தயாராகுங்கள்.

0

எழுத்தும் பேச்சும்

Anne Franksபேசு மனமே பேசு / அத்தியாயம் 16

தன்னோடு பேசுதலின் அடுத்த வகை பேச்சையும் தாண்டியது. சிலருக்கு, ஒரே விஷயத்தைக் குறித்து, கோர்வையாக நினைக்கவோ, பேசவோ முடியாமல் போகலாம். ஆனால் உட்கார்ந்து எழுதுவது சாத்தியமான விஷயம்தான். நமக்குத் தேவையான அம்சங்களில் மாற்றம் காண விரும்பும் விஷயங்களைப் பற்றி தன்னோடு பேசுதல் முறையில் எவ்வாறு தயார் செய்கிறோம்? விஷயங்களைக் குறித்து, வார்த்தைக்கு வார்த்தை மாற்றம் செய்து மனத்தில் பதித்துக் கொள்கிறோம். அதே போலவே எழுதிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு விஷயத்துக்கும், தனித்தனியாக நான்கு வரிகளுக்கு மிகாமல் எழுதிக் கொள்ள வேண்டும். அதை தினமும் படிப்பதன் மூலம் நிச்சயம் நன்மை கிடைக்கும் என்பதை நீங்களே அனுபவத்தில் தெரிந்து கொள்வீர்கள்.

பேச்சுக்கு இருக்கும் சக்தி, நிச்சயமாக எழுத்துக்கும் இருக்கிறது. அதாவது, அதற்கு மதிப்பளித்துப் படித்தோம் என்றால் அதற்கான விளைவு மனத்திலும் செயலிலும் உருவாகும். நம்பிக்கையற்ற சூழ்நிலையிலும் இதுபோல எழுதிப் பார்த்துப் படிப்பது, அது போலவே நடந்து கொள்ள வைக்கும்.

இரண்டாம் உலகப் போரின்போது, ஹிட்லர் படையினரால் வேட்டையாடப்பட்ட எண்ணற்ற யூதர் குடும்பங்களில் பிராங்க் என்பவரது குடும்பமும் ஒன்று. இந்தக் குடும்பம் மட்டும் எதனால், பல வருடங்களுக்கு பின்னரும் நினைவில் கொள்ளப்பட்டு வருகிறது? இதற்கும் காரணம், அந்தக் குடும்பத்திலேயே வயது சிறியவளான, ஆனி பிராங்க்தான். 7 – 8 வயதிருந்த அந்தச் சிறுமியின் குடும்பத்தினரும், மற்றும் சிலரும் தாங்கள் வசித்து வந்த வீட்டுக்குச் சொந்தக்காரரான ஜெர்மானியரால் அல்லது அவர்களின் ஆதரவாளர்களால் எந்த நேரமும் தாக்கப்படலாம் என்ற அச்சத்துடன் வாழ்ந்தனர். இதே பயத்துடன், அவர்கள் இரண்டு வருடங்களாக மனத்தில் மிகுந்த நடுக்கத்துடன் வாழ்ந்து வந்தனர். ஏழே வயதுள்ள சிறுமி எவ்வளவு உயிரோட்டமாக, சுறுசுறுப்பாக இருப்பாள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனாலும், உயிருக்குப் பயந்து ஒரே அறையில் இரண்டு வருடங்கள் கழிக்க நேர்ந்தது ஆனிக்கு எந்த அளவுக்கு கடினமாக இருந்திருக்கும்?

தன் பொழுதைப் போக்க ஆனி டைரி எழுதி வந்தாள். அவளுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி முழுமையாகத் தெரிந்தே இருந்தது. ஆனாலும், மனத்தில் உற்சாகத்தை வளர்த்துக்கொண்டாள். இந்தத் தன்மை அவளது எழுத்துக்களில் வெளிப்பட்டது. அதில் ‘போர் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு முடிந்த பின், நான் இன்னும் உற்சாகமாக இருப்பேன்.’ என்றும், இன்னும் ஒவ்வொரு நாளும், ‘இன்றைக்கு நாள் நன்றாக விடிந்திருக்கிறது. மனத்தில் உற்சாகம் வருகிறது’ என்றெல்லாம் தினமும் எழுதி வந்திருக்கிறாள். அவளது டைரிக் குறிப்புகள் முழுவதுமே, மனத்துக்கு சந்தோஷத்தை அளிக்கும் விஷயங்களாக இருந்தன. இது தவிர, அவள் சேகரித்த சிறு, சிறு படங்கள் ஆகியவை கூட சிறு பெண்ணின் ஆர்வத்தைத் தூண்டும் விஷயங்களாகவே இருந்தன.

உண்மை நிலை எப்படி இருந்தது என்றால், அவள் வசித்த அறை மிகவும் சிறியது. அதில் அவளுக்கான இடம் என்று எதுவுமே இல்லை. பெரியவர்கள் எப்போதுமே, எந்த நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்படுவோமோ என்ற விஷயத்தைப் பற்றியே பேசிக் கொண்டும், பயந்து கொண்டும் இருந்தனர். (முடிவும் அவ்வாறேதான் இருந்தது.) இந்த பயத்தை, ஆனி தனது மனத்துக்குள் பரவ விடாமல் இருந்தாள். இதைச் செய்ய முடிந்ததற்கும் காரணம், தன்னோடு பேசுதலில், எழுத்து வடிவ முறையைக் கையாண்டதுதான். இதன் மூலமாக உயிரோடு ஒளிந்திருந்த இரண்டு வருடங்களையும் அவள் உற்சாகமாகக் கழித்திருக்கிறாள். இருக்கக்கூடிய சூழ்நிலை, எப்படிப்பட்டதாக இருந்தாலும், நமது மனநிலை எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது நாம்தான் என்பதை ஆனி பிராங்க் வாழ்ந்து காட்டி விட்டுப் போயிருக்கிறாள்.

இது மட்டுமின்றி, எழுத்துகளுக்கு நமது உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஆற்றல் உண்டு. இதையே ஒரு விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து ஒரு துறையாகவும் உருவாக்கியிருக்கிறார்கள். எழுத்துக்கு உணர்வுகளை வெளிப்படுத்தும் சக்தி உண்டு என்பதை நாமே தெரிந்து கொள்ள முடியும். ஒரு வெள்ளைத் தாளை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் சந்தோஷம், வருத்தம், அவசரம், துக்கம், ஆத்திரம், சாதித்த உணர்வு, வெற்றி, தோல்வி போன்ற பல்வேறு சந்தர்ப்பங்களை மனத்தில் கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்தந்த உணர்வு இருக்கும்போது, உங்களது கையெழுத்தில் மாற்றங்கள் தானாக உருவாவதை கவனியுங்கள்.

அந்தந்த உணர்ச்சிகளின் பிடியில் மனம் இருக்கும்போது, நமது உடல் தசைகள், விரல்களின் அழுத்தம், இறுக்கம் ஆகியன எப்படியெல்லாம் மாறுகிறது என்பதை நீங்களே உணர்ந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இது பயிற்சிதான் என்றாலும் அந்த சமயத்திலும் கூட, உடல் இயக்கம், மனதோடு எந்த அளவுக்கு ஒன்றியிருக்கிறது என்பதை, நன்கு கவனித்தால் புரிந்து கொள்வீர்கள்.

எந்த ஒரு விஷயத்தில் குழப்பமாக இருந்தாலும், அதைக் குறித்து ஒரு முன்னுரிமைப் பட்டியல் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள். குழம்பிய நிலையில், எதை முன்னால் செய்வது, அதற்கு அடுத்த நிலையில் சந்திக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பவை பற்றிய பட்டியல்தான், முன்னுரிமை செயல் பட்டியல். இதை மானசீகமாகச் செய்ய முடியும். அதையே இன்னும் சுலபமாக மாற்றுவதற்கு எழுதியும் கூடப் பார்க்கலாம். மனத்திலே கோர்வையாக சிந்தனை உருவாக, எழுதிப் பார்த்துக் கொள்வது பெரும் உதவிகரமாக இருக்கும்.

காலன் லிச் ஃபீல்ட் என்ற அமெரிக்க வர்த்தகர் இரண்டாம் உலகப் போரின் போது சீனாவில் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் மேலாளராக இருந்தார். 1942ம் ஆண்டில், அவர் இருந்த ஷாங்காய் பகுதியில், ஜப்பானியர்கள், படையெடுத்து உள்ளே வந்தனர். அந்தப் பகுதியிலுள்ள வர்த்தக நிறுவனங்கள் அனைத்தையும், ஜப்பானியர்களின் பெயரில் மாற்றும் வேலையில் இறங்கினர். கையாண்ட சொத்துக்களை, ஜப்பானியர்கள் பெயரில் மாற்றுவதற்கு, அவர் உதவி செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவரும் வேறு வழியின்றி அவ்வாறே செய்தார். நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு அமைப்பின் பங்குப் பத்திரங்கள் இருந்தன. அவற்றுக்கும், ஷாங்காய்க்கும் தொடர்பு இல்லாததால், அதை மட்டும் காலன் லிச் ஃபீல்ட் கணக்கில் கொண்டு வரவில்லை. இதனால் ஜப்பானியர்களின் உத்தரவை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதை அவர்கள் கண்டுபிடித்தால் என்னவாகும் என்பது பற்றிய அச்சமும், பயமும் அவரை நிலைகொள்ளாமல் தவிக்கச் செய்தன. அவர் எதிர்பார்த்தது மாதிரியே உண்மை கண்டறியப்பட்டது. அவரை எப்போது வேண்டுமானாலும், சித்திரவதை கூடத்துக்கு அனுப்பி வைக்கலாம் என்ற நிலை எழுந்தது.

அந்த சமயத்தில் என்ன செய்வது என்பது பற்றி என்ன யோசித்தும், சரியான முடிவுக்கு வர முடியவில்லை. ‘அவர் ஒரு காகிதத்தை எடுத்து, தனது மனதிலுள்ளவற்றை தெளிவாக எழுதினார். எதைப் பற்றி நான் கவலைப் படுகிறேன்? இது பற்றி என்னால் என்ன செய்ய முடியும்?’; முதல் கேள்விக்கான பதில், ‘என்னை நாளைக் காலையில் சித்திரவதைக் கூடத்துக்கு அனுப்புவார்கள். அதுபற்றி பயப்படுகிறேன்.’ – இரண்டாவது கேள்வி – இது பற்றி என்ன செய்ய முடியும்? இதற்கான பதில்கள், ‘நடந்ததைக் குறித்து ராணுவ அதிகாரிக்கு விளக்கம் கொடுக்கலாம். ஆனால் மொழியிலிருந்து பல பிரச்னைகள். அதனால் முடியாது. தப்பிக்க முயற்சிக்கலாம். ஆனால் எந்த வகையிலும் அது சாத்தியம் இல்லை. பிடித்தவுடன் கேள்வி கேட்காமல் சுட்டுக் கொன்று விடுவார்கள். மூன்றாவதாக நாளைக்கு அலுவலகம் போகாமல் இருந்து விடுவது. ஆனால், அவர்களே தேடி வந்து பிடித்தால் நிலைமை மோசமாகிவிடும். நான்காவது, எதுவுமே தெரியாததுபோல நாளை (திங்கட்கிழமை) அலுவலகம் செல்லலாம். அப்போது கேள்வி எழுந்தால் நமது நிலைப்பாட்டைச் சொல்லலாம். அதுவுமின்றி, நடுவில் உள்ள இரண்டு நாட்களில் தாங்கள் கண்டுபிடித்தது பற்றிய சந்தோஷம், எனக்குத் தெரியாது என்ற எண்ணம் ஆகியன அவர்களை ஏதோ ஒரு விதத்தில் அமைதிப் படுத்தியிருக்கலாம்.

இவற்றை எழுதிய காலன் லிச் ஃபீல்ட், நான்காவது வழியைத் தேர்ந்தெடுத்து, அவ்வாறே செயல்படுத்தினார். அவர் எதிர்பார்த்தப்படியே நடந்தது. இது சாத்தியமானதிற்குக் காரணம், அவரது சிந்திக்கும் திறன், நல்லநேரம், தைரியம் ஆகியன மட்டும் காரணம் அல்ல. அவற்றையெல்லாம் எழுத்து வடிவில் வெளிக்கொண்டு வந்து, அதன் மூலம் எடுக்கப்பட்ட தெளிவான முடிவை, அவர் ஏற்று செயல்படுத்தியதுதான். (ஆபத்தான சந்தர்ப்பங்களில் மட்டும் என்றில்லாமல், நமது திட்டமிடுதலை, ஒவ்வொரு நாளும் எப்படி அமைய வேண்டும் என்ற விருப்பங்களையும் தெளிவாக எழுதி, அதைப் பிடித்து (நமக்குள் பேசி) ஏற்றுக்கொண்டால், அவ்வாறே நடப்பதற்கு சுலபமாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள். வெற்றி கிடைக்கும்.

0

பேசுங்கள் கேளுங்கள்

voiceபேசு மனமே பேசு / அத்தியாயம் 15

ஆதி காலத்திலிருந்து, மனிதன் எழுத்துகளை உருவாக்கும்வரையில், உலகம் பேச்சில்தான் இயங்கியது. இன்னமும் கூட, அனைத்து நாடுகளிலும், கல்வியறிவு இல்லாதவர்கள் ஓரளவிற்கேனும் இருக்கின்றனர். சதவிகிதங்கள் மாறுபடுமே தவிர, படிப்பறிவு இல்லாதவர்கள், இல்லாத நாடே கிடையாது. தங்களது வாழ்க்கையை பேச்சின் மூலம், பிறர் கூறக் கேட்பதன் வழியாகவே நன்றாக வாழ்க்கையை நடத்துகிறார்கள். எந்த விஷயத்தையும் படித்து, ஆராய்ந்து புரிந்து கொள்வதை விட, யாராவது அதே விஷயத்தை எடுத்துக் கூறினால் மிக எளிதாகப் புரியும். பேசப்படும் வார்த்தைகளுக்கு சக்தி அதிகம். இதன் அடிப்படையில்தான், அனைத்து நாடுகளின் கல்வி முறையும் இயங்குகிறது. நாம் மனதார உணர்ந்து சொல்லும், சொல்லிக் கொள்ளும் வார்த்தைகள், நம்மை வழிநடத்தும் சக்தி படைத்தவை.

உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள், கிறித்துவ மத போதகர்கள் ஆகியோருக்கு பேச்சின் வலிமை புரிந்திருக்கிறது. எப்படிப் பேசினால், எந்த விதமான உணர்வை ஏற்படுத்த முடியும் என்பதைப் புரிந்து வைத்துள்ளனர். இதன் மூலமாக, தாங்கள் நினைத்ததை நிறைவேற்றியும் கொள்கிறார்கள். மற்றவர்கள் சொல்லக் கேட்கும்போதே, அதேபோல நடந்துகொள்ளத் தோன்றுகிறது. இதையே நாமே நமக்கு சொல்லி, அதைக் கேட்டால், மற்றவர்கள் கூறும் வார்த்தைகளுக்குத் தகுந்ததுபோல நடந்து கொள்வதை விட, பல மடங்குகள், நமது பேச்சைக் கேட்டு நடந்து கொள்வோம் அல்லவா? இதைத்தான் தன்னோடு பேசுதலின் மற்றொரு விதம் எனக் கூறலாம்.

நமக்குத் தீர்க்கத் தெரியாத பயம், அச்சங்கள், ஏனென்று தெரியாமல் மனத்தை பாதிக்கும் உணர்வுகள், இவற்றால் ஏற்படும் தலைவலி மற்றும் உடல் உபாதைகள் போன்றவற்றைப் போக்கவும், மன உறுதியோடு முக்கியமான விஷயங்கள் குறித்துத் தீர்மானிக்கவும்கூட தன்னோடு பேசுதல் என்கிற இந்த முறை கண்டிப்பாக நல்ல பயன் தரும்.

இது தொடர்பாக விஞ்ஞான ரீதியில் நிரூபணமான ஒரு விஷயம் பற்றி இங்கே கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இரண்டு வயதில், எல்லா குழந்தைகளுமே மிக அதிகமான அளவில் சுறுசுறுப்பாக இருப்பார்கள். பலருக்கு முரட்டுத்தனமும் சேர்ந்து இருக்கும். இந்த நிலை 6 வயதுவரைகூட தொடரும். இத்தகைய குழந்தைகள் தங்களுக்கே ஆபத்து வரவழைத்துக் கொள்ளும் அளவுக்கு கண்மூடித்தனமாக செயல்படுவார்கள். இவர்களது ஆபத்தான வேகத்தை மருந்தினால் கட்டுப்படுத்தத் தேவையில்லை என்றாலும், அவர்களது மனத்தைச் சாந்தப்படுத்துவது அவசியம். இதற்கு ஒரு எளிய வழி இருக்கிறது. அவர்கள் தூங்குவதற்குச் செல்லும்போதும், தூங்கி எழும் சமயத்திலும், வயலின், புல்லாங்குழல், வீணை போன்ற வாத்தியங்களின் இசையைப் போட்டுவிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால், குழந்தைகளிடம் நல்ல மாற்றங்கள் ஏற்படும். செய்கைகளில் நிதானம் உருவாகும் என்பது மட்டுமின்றி, புத்திக்கூர்மை, கவனம் ஒருமுகப்படுதல் போன்றவை இயற்கையான முறையில் ஏற்படும். இந்த இசை அனைத்தும் உபகரணங்கள் மூலமாக உண்டாக்கப்படும் முறைப்படுத்தப்பட்ட சப்தங்கள்தாம். நமது பேச்சைப் போலவே.

ஹிட்லரின் முக்கிய தளகர்த்தரும், ஆலோசகருமான கோயபல்ஸ் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். இவரை மனித சரித்திரத்தின் மாபெரும் பொய்யன் என்றுகூட சொல்லலாம். அவரது கருத்துப்படி, எந்த விஷயத்தையும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால், எதையும் உண்மை என்று நம்ப வைக்கலாம். அதேபோல உண்மைகளை பொய்களாக வெற்றிகரமாக சித்தரிக்க முடியும். இதை நடைமுறையில் நடத்திக் காண்பித்து, சரித்திரத்தில் மிகப் பெரிய இனப் படுகொலைக்கும் காரணமாக இருந்தவர். பெரும் பொய்யை உண்மை என்று சாதிப்பவனை, கோயபல்ஸ் போல பொய் சொல்பவன் என்று கூறும் வழக்கம் இன்றும் உள்ளது.

உண்மை, பொய், நல்லது, கெட்டது என்று எதுவாக இருந்தாலும், தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால், அல்லது சொல்லிக் கொண்டால் அல்லது சொல்வதைக் கேட்டால் அதை நம்ப ஆரம்பித்து விடுவோம். அதன் பிறகு, நமது செய்கைகள் நமக்குள்ளேயே இருக்கும் இந்தப் பதிவுகளை ஒட்டித்தான் இருக்கும்.

இந்த உண்மையை நமக்குச் சாதகமாக ஏன் பயன்படுத்தக்கூடாது. நமது எதிர்மறை எண்ணங்கள், தோல்விகள் குறித்த பயங்கள், தாழ்வு மனப்பான்மைகள், மற்ற தேவையில்லாத எண்ணங்கள் போன்றவற்றால் வழி நடத்தப்படும் வாழ்க்கை, இவற்றைப் பிரதிபலிப்பதாகவே இருக்கும். இவற்றுக்குப் பதிலாக, நம்பிக்கை தரும் வாசகங்கள், வெற்றிகளை வழக்கமாக்கிக் கொள்ளும் தன்மை, திட்டமிடுதல், நேரம் தவறாமை, அமைதி, தைரியம், போன்றவற்றை சிந்தனைப் பதிவுகளாக்க வேண்டும். அவற்றை நிகழ்காலத்தில் நடப்பது போன்ற வகையில் மாற்றி அவற்றை நாமே, நமது சொந்த குரலில் ‘டேப்’ அல்லது நவீன உபகரணங்களான அலைபேசி, ஐ-பாட், போன்றவற்றில் பதிவு செய்ய வேண்டும். இதை நாம் படுப்பதற்கு முன்பும், காலையிலும் திரும்பத் திரும்ப கேட்க வேண்டும்.

பொதுவாகவே, அதிகாலையில் நாம் கேட்கும் இறை பாடல்கள், ஸ்லோகங்கள், சொற்பொழிவுகள் மற்றும் இனிய இசை ஆகியவற்றுக்கு ஒரு சக்தி இருக்கிறது. காலையில் எழுந்தவுடன், அன்றைய நாளைக் குறித்த அவநம்பிக்கைகள், பயங்கள், எரிச்சல்கள், குழப்பங்கள் ஆகியவை மனத்தில் இருந்தாலும், மேற்குறிப்பிட்ட பேச்சுக்கள் மற்றும் இசை ஆகியன நிச்சயமாக மனத் தெம்பைக் கொடுக்கும்.

எல்லாம் சரிதான், நானே வாசகங்களை எப்படி உருவாக்குவது, அப்படிச் செய்தால் சரியாக இருக்குமா? என்று தயங்குபவர்களுக்கு ஒரு வார்த்தை. ‘இன்னைக்கு என்ன ஆகப் போகிறதோ?’ ‘இவன் எனக்கு உதவி செய்வான்னு நம்பிக்கையே இல்லை, என்ன செய்யறது, வேற வழியில்லை…’ ‘தினமும் செக்கு மாடு மாதிரி ஒரே வேலை… ச்சே! ஏன்தான் பொழுது விடியுதுன்னு இருக்கு…’ ‘இருக்கிற பிரச்னை போதாது என்று, இது வேற…’ ‘எல்லாம் தலைவிதி…’ என்ற பல வாசகங்களை, நாமே நமக்கு உருவாக்கி அவற்றை திரும்பத் திரும்பச் சொல்லி, அவைகளால் வழி நடத்தப்பட்டுத்தான் உருப்படாமல் போகிறோம்.

அதே சமயத்தில், நம்பிக்கை தரும், வாழ்க்கையை முன்னேற்றும் வாசகங்களை உருவாக்குவதற்கு ‘சிந்தனையாளர்களை’ நம்பியிருக்கிறோம். நமக்கு நாமே சொல்லிக் கொள்ளக்கூடிய சாதாரணமான, அனைவருக்கும் தோன்றக்கூடிய இயல்பான வார்த்தைகள் இங்கே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இவைகளைப் பின்பற்றலாம் அல்லது இந்த அர்த்தங்கள் வருவதுபோன்ற வார்த்தைகளை நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம்.

காலையில் எழுந்தவுடன், கண்ணாடியைப் பார்த்து, ‘குட்மார்னிங்’ என்று சொல்லிக் கொள்ளுங்கள். உங்களது கை பேசியில் அல்லது கேஸட்டில் பின்வரும் வார்த்தைகளை பதிவு செய்துவிட்டு அவற்றை காலையில் கேளுங்கள். அதாவது ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கேளுங்கள்.

‘இன்றைய நாள் என்னைப் புன்னகையுடன் இருக்கச் செய்யும். எனது திட்டத்தின்படி, விருப்பத்தின்படி இருக்கிறது. இந்த நாளை நான் நம்பிக்கையுடன் எதிர் நோக்குகிறேன். தினமும் செய்யும் வேலை/பணி ஆதலால், எளிதாக இருக்கிறது. எதையும், யாரையும் நம்பிக்கையுடன் எதிர் நோக்குகிறேன். என்னைவிட சிரமப்பட்டுக்கொண்டு இருந்தவர்கள், இப்போது முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள். நானும் முன்னேறுகிறேன். இந்தப் பரிட்சையை/வேலையை/பிரச்னையை நான் நம்பிக்கையுடன் அணுகுகிறேன். இன்றைக்கான திட்டத்தில், மற்றவர்களால், சூழ்நிலைகளால் மாற்றங்கள் ஏற்படுமானால் அவற்றை வரவேற்கும் மனநிலையில் நான் இருக்கிறேன்.’ என்பது போன்ற வாசகங்களைப் பேசி, அவற்றைப் பதிவு செய்து கொள்ளுங்கள். இவற்றுடன் உங்களுக்குப் பிடித்த, நீங்கள் நம்பி விரும்பும் பொன்மொழிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பொதுவாக பிரபலமானவர்கள், சுய முன்னேற்ற விஷயங்களைப் பேசி – பதிவு செய்த கேஸட்டுக்களைக் கேட்கும்போது, ‘எல்லாம் சரிதான், இவன் நம்மைப் போல கஷ்டப்பட்டிருப்பானா? பிரச்னைகளை சந்தித்து இருப்பானா? எல்லாம் தயார் செய்து கொண்டு பேசுவது பெரிய விஷயமே இல்லை, வாழ்ந்து பார்த்தால்தானே தெரியும்?’ என்று நீங்கள் எண்ணக்கூடும். அதற்குப் பதிலாக நமது குரலில், நாமே பேசி, அதை நாமே தினமும் கேட்கும்போது, இது போன்ற எதிர்மறை எண்ணங்கள் தோன்றாது.

0

பகல் கனவு

images (1)பேசு மனமே பேசு / அத்தியாயம் 14

இதுவரையில் குறிப்பிட்ட, ‘தன்னோடு பேசுதல் முறைகள்’ பயன்தரக்கூடியவை என்பதை, தொடர்ந்து பயிற்சி செய்து வந்தாலே புரிந்து கொள்ளலாம். அதே சமயத்தில், உள் உரையாடல் நடத்துகிறேன் என்ற பெயரில் பகற்கனாவில் ஈடுபடும் அபாயம் உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். பகல் கனாவில் நம்மை மறந்தால், அது பற்றி நாம் நம்ப ஆரம்பித்துப் பின் ஏமாந்து போவோம்.

ஆக்க பூர்வமான சிந்தனை என்பது மூளையையும், மனத்தையும் வளப்படுத்தி உறுதிப்படுத்தும். இத்தகைய சிந்தனைகளை ஒருமுகப்படுத்தினால், அற்புத சக்தி படைத்த குதிரைகளை சரியாக வழி நடத்திச் செல்கிற சாரதிபோல ஆவோம். ஆக்க பூர்வமான சிந்தனைகளாக இருந்தாலும் அவை ஒழுங்கற்று அலைபாயும் புயல் காற்றைப்போல் அழிவைத்தான் ஏற்படுத்தும்.

ஒரே விஷயத்தைப் பற்றிய பல்வேறு ஆக்கபூர்வமான சிந்தனைகளை ஒன்று சேர்க்கத் தெரிந்து இருக்க வேண்டும். இப்படிப்பட்ட சிந்தனைகள் முதலில் கற்பனைகளாகவே வெளிப்படும். நிரூபிக்கப்படும்வரை எதுவும் கற்பனைதானே? ஆனால் இவை ஒன்று சேர்ந்து என்னவாக மாறுகிறது என்பதுதான், கற்பனைகள் வெறும் பகல் கனவின் ரகத்தைச் சேர்ந்ததா அல்லது பலன் தரும் யோசனையா என்பது முடிவாகும். மருந்துகள் தயாரிப்பதில் சிறந்த நிபுணர் பல்வேறு வேதியப் பொருள்களை, பல்வேறு அளவுகளில் கலந்து, உயிர் காக்கும் மருந்தை உருவாக்குவதுபோல நமது ஆக்கபூர்வ சிந்தனைகள்/கற்பனைகள் இருக்க வேண்டும். நமக்குத் தேவைப்படாத, பயன்படுத்த முடியாத எண்ண நினைவுகள் மற்றும் கற்பனைகள் ஆகியவற்றை உடனடியாக விலக்கத் தெரிய வேண்டும். எந்த விஷயத்தைச் செயல்படுத்தவும், முறைப்படுத்தப்பட்ட சிந்தனைத் துளிகள் அவசியம். ஒரு நோக்கத்துக்காக எழும் கற்பனைகள், கனவுகள் யாவும் நிறைவேற்றப் படக்கூடியவையே.

உதாரணமாக, இல்லத்தில் ஏதோ ஒரு கொண்டாட்டத்துக்காக திட்டத்தை உருவாக்கும்போது, அந்த நிகழ்வு முதலில் மனத்தில்தான் உருவாகிறது. அதாவது கற்பனையில்தான். தனக்குள் பேசுவதன் மூலம்தான் எதுவும் ஆரம்பிக்கிறது. யாரைக் கூப்பிட வேண்டும், அவர்களை அழைப்பது அழைக்க வேண்டிய இரு விருந்தினருக்கிடையில் ஒத்துப் போகாத நிலை இருந்தால், அதை எப்படிச் சமாளிப்பது, வரும் விருந்தினர்கள், விருந்தின் நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில், அழைப்பிதழில் இருந்து, உணவுவரை முடிவு செய்வது, இவற்றுக்கான பட்ஜெட் தயாரிப்பு என்பனவற்றை பட்டியலிட்டு முடிவு செய்வது தெளிந்த சிந்தனையின் மூலம் நடக்கும்.

இதே விஷயத்தை ‘பகல்கனவு’ மூலம் அணுகினால் என்ன நடக்கும்? நமது ஆசைகள் சார்ந்து ‘இதெல்லாம் நடந்து விட்டால், பிரமாதமான விருந்தாகி விடுமே’ என்ற கற்பனை சந்தோஷம் கிடைக்கும். அதேபோல ‘ஒரு வேளை பிரச்னை எழுந்தால், அவ்வளவுதான்’ என்கிற பயம் எழும். இரண்டுமே நடைமுறை சாராத கற்பனைகளின் விளைவு என்பதால், சரியான திட்டம் உருவாகாது.

வளமான, செயல்படும் தன்மையுள்ள கற்பனைக்கும், பகற்கனவுக்கும் உள்ள வித்தியாசம், ஒன்றுதான். செயல்படும் தன்மையுள்ள உள் உரையாடல் அதாவது கற்பனை என்று கூறப்படக்கூடிய எண்ணங்கள் நம்மை செயல்பட வைக்கும். இது மட்டுமின்றி, எதிர்பார்த்த அல்லது எதிர்பாராத எதிர்ப்புகள் வந்தாலும், அதைப் பற்றி கவலை கொள்ளாமல் நினைத்ததை முடிக்க தொடர்ந்து செயலில் ஈடுபடத் தூண்டும். பகல் கனாவைப் பொறுத்த மட்டில் எதிர்ப்பு அல்லது கஷ்டம், கற்பனையில் வந்தாலும், நடைமுறையில் ஏற்பட்டாலும், அதற்குமேல் பயணப்பட முடியாமல், தரைத்தட்டி நிற்கும் கப்பலைப் போல அங்கேயே நிற்கும்.

வளமான உள் உரையாடல், நம்மை எதிர்ப்புக்கும், தடைகளுக்கும் தயார்படுத்தும். உலகத்தில் புதிய விஷயங்களைக் கண்டு பிடித்தவர்கள், சாதித்தவர்கள் ஆகிய அனைவரும், மனத்திலே தாங்கள் செய்ய முயற்சிப்பவை பற்றி வளமான கற்பனையே முதலில் கொண்டிருந்தார்கள். அதை நடைமுறையில் செயல்படுத்தத் தொடங்கியபோது, எதிர்கொண்ட கஷ்டங்களைக் கண்டு கொள்ளாமல், தங்களது எண்ணங்களில் உறுதியாக இருந்தார்கள். இத்தகைய கஷ்டங்கள், சவால்கள், எதிர்ப்புகள் ஆகியன, சந்தர்ப்பம், சூழ்நிலை போன்றவை மட்டுமின்றி, சுற்றி இருந்தவர்களின் எதிர்ப்பையும், கிண்டலையும் கூட அவர்கள் சட்டை செய்யவில்லை. அதனால் மட்டுமே வெற்றியும் பெற்றார்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த மேரிகுரோடா லூயிஸ் என்ற பெண்மணியின் வாழ்க்கை மனத்தின் எண்ணங்களின்படிதான் வாழ்க்கை செல்லும் என்பதற்கு சரியான உதாரணம். இவர் 16 வயது வரை டிஸ்லெக்ஸியா (Dyslexia) என்ற கற்றல் குறைபாட்டு நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார். அது வரையில் அவரால் மனம் குவித்துப் படிக்கவோ, எழுதவோ முடியவில்லை. மனத்தில் எப்போதும் ஒரு வித ஆங்காரம், முரட்டுத்தனம், பிடிவாதம் மட்டுமே இருந்த நபராக வலம் வந்தார். அவரது 18 – 20 வயதுக்குள்ளாக இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக ஆனார். அதுவரையில் யாரையும் திருமணம் செய்து கொள்ளாததால், இரு குழந்தைகளையும் அவரே பராமரித்து வந்தார். இதற்குள் இவரது கற்றல் குறைபாடு பற்றி அறிந்து, அரசின் உதவியுடன் அதற்கான பள்ளியில் சேர்ந்து கல்வி கற்க ஆரம்பித்து இருந்தார். அவரது கனவு, மருத்துவராக வேண்டும் என்பதாக இருந்தது. அவரது வாழ்க்கை முறை என்னவாக இருந்தாலும், இந்த விஷயத்தில் பிடிவாதமாக இருந்தார். மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான தகுதியை விரைவிலேயே அடைந்தாலும், அதற்கான பணம் இல்லை. அதற்காக படித்துக்கொண்டே கிடைத்த வேலைகளைச் செய்து பணம் சேர்த்தார். 16 வயதில், எழுத்துக்களைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்த மேரி, 18வது வயதில் உயர்நிலைப் பள்ளி கல்விக்கு நிகரான தேர்வில் தேறினார். அதன் பிறகு இளங்கலை படிப்பின் ஆரம்ப நிலைக் கல்வியில் சேர்ந்தார்.

இதையடுத்து, மருத்துவராக ஆவதற்கான படிப்பில் சேர பெரும் முயற்சி எடுத்தார். இவரது பின்னணியை அறிந்த 15 மருத்துவ கல்லூரிகள், இவரது விண்ணப்பத்தை நிராகரித்தன. பதினாறாவது கல்லூரியான அல்பனே மருத்துவ கல்லூரி, வாய்ப்பு அளிக்க முன்வந்தது. அந்தக் கல்லூரியில் படித்து, மேற் படிப்பையும் முடித்து மருத்துவத்தில் எம்.டி முடித்து வெளிவந்தார். மருத்துவராக வெளிவந்தபோது அவரது வயது முப்பத்தி ஐந்து.

நாம் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும், அதிலிருந்து வெளி வருவது சாத்தியம்தான். அந்த சூழ்நிலைக்குள் செல்வதற்குக் காரணம், நமது உள்ளத்தில் பதிவு செய்த செய்திகள்தாம். இவற்றை மாற்ற வேண்டுமானால் வேறு விதமான செய்திகளை, உள் உரையாடல்கள் மூலம் பதிவு செய்ய வேண்டும். இந்தச் செய்திகள், பகல் கனாவுக்கும் தேவைதான். ஆனால் அதில் நம்ப முடியாத, நடத்திக்கொள்ள முடியாத அம்சங்கள் இருப்பதை நம்மால் உணர முடியும்.அந்தச் சமயத்தில் நம்மை நாமே தடுத்துக்கொள்வது அவசியம். இதை எப்படி செய்வது?

முதலாவதாக உங்களது மூச்சை வாய் வழியாக வெளியே விடுங்கள். இதற்காக வாயைத் திறந்து ஹா… என்ற சப்தத்துடனும் செய்யலாம். இதற்கு அடுத்து மூச்சை உள்ளே இழுப்பதற்கு முன்பு, அவ்வாறு செய்யாமல் சிறிது நேரம் ‘தம்’ கட்டுங்கள். மூச்சுக்குழல் சில வினாடிகள் வெறுமையாக இருக்கட்டும். இதனுடன் கூட உடல் முழுவதையும் வேண்டுமென்றே இறுக்குங்கள். இந்த நிலையில் எவ்வளவு நேரம் உங்களால் இருக்க முடியுமோ, அவ்வளவு நேரம் அப்படியே இருங்கள். கடைசியாக மூச்சை ஆழமாக, அதே சமயம் மெதுவாக உள்ளே இழுங்கள். கூடவே, உடலையும் தளர்த்துங்கள். இதையே மூன்று முறை செய்யுங்கள். இதன் மூலம் கற்பனையிலிருந்து, நினைவுகள் அறுபட்டு, நிதர்சனத்துக்கு வரும். அதன்பின் வளமான, செயல்படும் தன்மையுள்ள சுய உரையாடலைத் தொடருங்கள். புதிய செய்தி மனத்தில் பதிவாகட்டும். அதன்படி செயல்பட்டு வெற்றி பெறலாம்.

0