சேரி

slum_quarter_in_th_1_galleryfull2பறையர்கள் / அத்தியாயம் 24

செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘ஆலஞ்சேரி’ என்னும் ஊர்ப் பெயர் உண்டு. சென்னையில் வேளச்சேரி, சேலத்தில் மேச்சேரி என்னும் ஊர்ப் பெயர்களும் உண்டு. கொச்சியில் ‘மட்டாஞ்சேரி’ என்ற ஊர் உண்டு. சிவகங்கை சமீனில் ‘இரவுச்சேரி நாடு’ என்ற பகுதி இருந்துள்ளது. கேரளாவில் ‘சங்கனாச்சேரி’ என்ற ஊர் உண்டு. பரமக்குடிக்கு அருகில் ‘பெரும்பச்சேரி’ என்ற ஊர் உள்ளது. நாகர்கோவிலில் ‘ஒழிகினச்சேரி’ என்ற ஊர் உண்டு.

தமிழகத்தில் பனங்காட்டுச் சேரி, பனஞ்சேரி, பனையஞ்சேரி ஆகிய பெயர்கள் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டத்தில் வயல்களுக்கு நடுவே உள்ள சிறிய ஊர் புரவசேரி. நாகர்கோவிலின் ஒருபகுதி, அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் ‘வடசேரி’ என்ற ஊர் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோவானை வட்டத்தில் இப்போது வீரநாராயண மங்கலம் என்ற ஊரின் பழைய பெயர் ‘வீரநாராயணன் சேரி’.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டத்தில் வீமனேரி: வீரநகரி, ‘வீமனசேரி’, உள்ளதை அறியலாம். நாஞ்சில் நாட்டில் கி.பி.1472ம் ஆண்டு அடிமை ஓலைப் பிரமாணம் ஒன்று தென்னாட்டுக் குறுநாட்டு ‘ஆளூர் சேரி’யில் வாழ்ந்த பறையர் சாதி என்று குறிப்பிட்டுள்ளதில் ‘ஆளூர் சேரி’யைக் காணலாம்.

பெருங்குன்னூர்க் கிழார் குடக்கோ இளஞ்சேரிரும்புரை என்ற மன்னனின் பெயரில் ‘சேரி’ என்ற சொல் பொதிந்துள்ளதைக் காண்க.

இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தை அரும்பத உரையுடனும், அடியார்க்கு நல்லார் உரையுடனும் தென்கலைச் செல்வர் டாக்டர் உ.வே.சாமிநாதையர் வெளியிட்டார். அதில் ‘சேரிப் பரதர் வலை முன்றில்’ கூறப்பட்டுள்ளது. சேரிப்பரதர்….. பரதர் என்னும் வகுப்பினர் மட்டும் சேர்ந்து செறிவாக வாழ்ந்ததால் ‘சேரி’ எனப்பட்டது. இதுபோல் பார்ப்பனச் சேரி, ஆயர்சேரி என்றும் பண்டு அழைக்கப்பட்டுள்ளன. இன்றும் வடுகச்சேரி, செட்டிச்சேரி என்னும் ஊர்கள் இருப்பதையும் நினைவில் கொள்க.

சோழர் காலத்தில் அவரவர் சாதிக்குப் பின்னால் (கிராமத்தை) தூய தமிழில் சேரி என்னும் பெயரைச் சேர்த்துக்கொண்டனர். அந்த வகையில் கண்மானச்சேரி, பறைச்சேரி, ஈழச்சேரி, வலைச்சேரி மற்றும் தீண்டாச்சேரி ஆகியவை உருவாயின. தீண்டாச்சேரி என்பது கைவினைஞர் குடியிருப்பு, பறையர் குடியிருப்பு, ஈழவர் குடியிருப்பு, வலைஞர் குடியிருப்பு மற்றும் தீண்டத்தகாதோர் குடியிருப்பு ஆகியவை. பார்ப்பனர் குடியிருப்புக் கூட, ‘சேரி’ என்ற நிலையில்தான் குடியிருப்புகள் அமைந்திருந்தன.

வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக, ஆதிக்க சாதிகளால் கூறப்படும் உத்திரமேருர் வைகுந்த பெருமாள் கோயில் கல்வெட்டு கி.பி. 14ம் நூற்றாண்டின் முதலாம் பராந்தக சோழனின் ஆட்சிக் காலத்தில் கூட, இந்த 12 சேரிகளிலுமுள்ள முப்பது குடும்பத்துக்கும் குடவோலை முறைப்படி தேர்தல் நடந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் மேற்கண்ட குடியிருப்புகளும் சோழர்காலத்தில் உயர்குடி மக்களாகவே வாழ்ந்துள்ளனர்.

உத்திரமேரூருக்கு ஒரு கிலோ மீட்டர் முதல் இரண்டு கிலோ மீட்டருக்கு அப்பால் கிழக்கில் அருணாச்சலப்பிள்ளை சத்திரம் சேரி, தென் கிழக்கில் நல்லூர்ச்சேரி, தெற்கில் குப்பைய நல்லூர் சேரி, மேட்டுச்சேரி, காட்டுப்பாக்கம் சேரி, மேற்கில் வேடபாளையம் சேரி, வடக்கில் மல்லிகாபுரம் என்கிற கீழ்சேரி (இது மல்லிகாபுரத்திற்கும் உத்திரமேரூருக்கும் நடுப்பகுதியில் வயல் வெளியில் அமைந்த சேரிப்பகுதியாகும். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தற்போதுள்ள இடத்திற்கு இடம் பெயர்ந்ததோடு 1970களில் மல்லிகாபுரம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது). இதையொட்டி மேற்கில் கல்லஞ்சேரி என்கிற கல்லமா நகரின் பெயரும் 1970களில் மாற்றப்பட்டதாகும். மேற்கண்ட அனைத்துக் குடியிருப்புகளும் பறையர் குடியிருப்புகளாகும்.

கேரளத்தின் பறையடிமை ஆவணங்களில் அடிமையானவர்களைக் குறிப்பிடும்போது சேரமாதேவிப் ‘புறஞ்சேரி’யில் கிடக்கும் பறையரில்… என்றும் (1459), ‘ஆளூர் புறஞ்சேரி’யில் கிடக்கும்… (1472, 1728) என்னும், ஆரைவாய் பாலபொய்கை புறஞ்‘சேரி’யில் கிடக்கும்…… என்றும் (1827), தாழைக்குடி பெரும் பறைச்‘சேரி’யில் கிடக்கும்… என்றும் (1832) குறிப்பிடப்படுகிறது. இவற்றில் கூறப்பட்டுள்ளபடி கி.பி. 14ம் நூற்றாண்டுகளில் கேரளாவில் சேரியில் குடியிருந்தவர்கள் பறையரே என்பதைச் சுட்டுகிறது. இன்றும் கேரளாவில் ‘சேரி’ என்ற பொருள் கூறும் ஊர்ப் பெயர்கள் பல உண்டு.

போதி சத்தர் கோதமர் பின்னர் புத்தர் ஆனார். அவன் முன் பிறவிகளைப் பற்றியவையே ஜாதகக் கதைகள் என்பது. இக்கதையில், இவர் ‘சேரி நாட்டில்’ பானை சட்டி விற்பவராகப் பிறந்து ஆந்தபுரம் (ஆந்திரம்) சென்றார் என்று கூறப்படுகிறது. இக்கதையின் கூற்றுப்படி ‘சேரிநாடு’ என்று ஒன்று இருந்துள்ளதை அறியமுடிகிறது.

தமிழ் ஆடற்கலை 1925 வரை சின்னமேளம்/சதிர்க்கச்சேரி என்றே அழைக்கப்பட்டது. அப்பெயரை மாற்றி ‘பரதநாட்டியம்’ எனப் புதுப் பெயரிட்டவர் ஈ.கிருஷ்ண ஐயர். தமிழர் ஆடற்கலைக்கு, பரதநாட்டியம் என்று பெயர் வைத்ததை கண்டித்து பாரதிதாசன்  பல நூல்களில் விளக்கி அவரைக் கண்டித்துள்ளார். தமிழ் ஆடற்கலையான சின்னமேளம்/சதிர்க்கச்சேரி – பெயர்களில் உள்ள ‘சேரி/மேளம்’ என்ற சொற்களை நோக்குக.

சிலம்பில் மாதவிக்குப் பொன் அளிக்கப்பட்ட செய்தியைப் பேசும் இளங்கோவடிகள், ‘இக் கோவிலில் உள்ள ஐவர் மலைத் தேவருக்கு அவிப்புறம் முதலியவற்றிற் கென ‘குவளைச் சேரி’யைச் சேர்ந்த வட்டம் வடுகி என்பவர் இரண்டு கழஞ்சு பொன் அளித்துள்ளார்’ என்ற கல்வெட்டுக் குறிப்பின் வாயிலாக, குவணச்சேரி என்ற ஊர் இருந்துள்ளதை அறிகிறோம்.
பண்டைத் தமிழகத்தில் சேரிகளில் குடியிருந்த மக்கள் பல இன, மொழி, பண்பாட்டைக் கொண்டவராக இருந்தனர் என தொல்காப்பியம், அகம், புறம், பரிபாடல், மதுரைக் காஞ்சி, சிலப்பதிகாரம் ஆகிய பல இலக்கியங்களில் பரவலாகக் குறிக்கப்பட்டுள்ளன.

கலைமகிழ் ஊரான் ஒலிமணி நெடுந்தேர்
ஒல்லிழை மகளிர் ‘சேரி’ப் பண்ணாள். (அகம் 146-5-6)
பாடுவார் பாக்கங் கொண்டென
ஆடுவார் ‘சேரி’யடைந்த தென. (பரிபாடல் 7-32)
மீன் சீவும் பாண் ‘சேரி’ (புறம் 348-4)
வலை வாழ்நர் ‘சேரி’ வலை வணங்கும் முன்றில் (சிலம்பு – கானல் 4-60 சிலம்பு – கானல் – 38)
உறை கிணற்றுப் புறஞ்‘சேரி’ (பட்டினப்பாலை -75)
மன்றுதோறும் நின்ற குரவைச்‘சேரி’  (மதுரைக்காஞ்சி -615)
‘சேரி’ வாழ்வின் ஆர்ப்பெருந்தாங்கு (மதுரைக்காஞ்சி – 619)

என இலக்கிய நூல்கள் கூறியுள்ள சான்றுகளைப் பார்த்தால் சேரிகளில் வாழ்ந்தவர்கள் பெருமளவு வேற்று நாட்டினரும், வேறு திணை நிலங்களில் வாழ்ந்த மக்கள் என்பது புலனாகும்.

கி.பி. 9ம் நூற்றாண்டிலிருந்து 13ம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த இடைக்கால சோழராட்சியில் அருண்மொழித் தேவச்சேரி, ராச மார்த்தாண்டச் சேரி, குந்தவைச் சேரி, சன நாதச் சேரி, நித்த வினோதச் சேரி, சோழ சுந்தரிச் சேரி, தனிச்சேரி, பறைச்சேரி, வண்ணாரச் சேரி, கம்மான் சேரி, ஆரிய பார்ப்பனர் சேரி, தீண்டாச்சேரி போன்ற பல சேரிகள் இருந்ததாகவும், இந்தக் குடியிருப்புகளில் பல இனமக்கள் கலந்து வாழ்ந்ததாகவும் இம்மக்கள் சேர்ந்து வாழும் இடத்தைச் ‘சேரி’ என்றும் பாவாணரின் ‘பழந்தமிழராட்சி’ என்ற நூலில் குறிப்பிடப்படுகிறது.

சேரிகளில் வாழ்ந்தவர்கள் பேசும் மொழிக்கும் ஊர், நகரங்களில் வாழ்ந்தவர் பேசும் மொழிக்கும் வேற்றுமை இருந்த காரணத்தால் அதனை சேரி மொழி என வழங்கியுள்ளனர். கஞ்சி, உறங்கு போன்ற சொற்கள் பழந்தமிழ்ச் சொற்கள். இச்சொற்களைப் பேசுவோர் சேரிகளில் வாழ்ந்தவர்கள். அலை வாழ்நர், பரதவர், இடையர், வலையர், ஆடுவார், பாணர், பறையர், துடியர், கடம்பர், விறலியர், பரத்தையர், ஒளியர், அருவாளர், ஈழவர், யவனர், ஆரியப் பார்ப்பனர் போன்றவரும் மற்றும் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்த மோரியார், கோசர், மழவர் போன்றவர்களின் படைவீரர்களில் சிலர் தமிழகத்தில் நிலைத்து, தமிழ் வேந்தர் படையில் சேர்ந்து பணியாற்றியவர்களும் இச்சேரிகளில் வாழ்ந்தவர்களாவர் என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

மேலும் ரோமர், கிரேக்கர்கள் வணிக நோக்கோடு தமிழகத்துக்கு வந்து இங்கு அரண்மனை வாயில் காப்பாளராகவும், அரண்மனைப் பணிப் பெண்களாகவும் இருந்துள்ளனர் என்றும், பல்லவர் படையெடுப்புடன் வந்து தமிழகத்தில் நிலைத்துவிட்ட களப்பிரரும் (ஆய்வுக்குரியது), விஜய நகரப் பேரரசு படையெடுப்புடன் வந்து தமிழகத்தில் நிலைத்துவிட்ட அருந்ததியரும் ஆகிய பல இனத்தவர், பல நாட்டினர், பல மொழியினர் கலந்து வாழ்ந்த இடத்தைச் சேரி என்றும், அவர்கள் திருத்தமான மொழி பேசாமல் கொச்சை மொழிப் பேசியதால் ‘சேரி மொழி’யென்றும் வழங்கியுள்ளனர்.

பல்லவர் காலத்திலும் அந்தணச் சேரி, முட்டிகைச் சேரி, பரத்தையர் சேரி, புறம்பனைச் சேரி என்று பல சேரிகள் இருந்துள்ளன. தமிழ் மூவேந்தர் ஆட்சிக் காலத்தில் ஆடுவார் சேரி, பாண்சேரி, வலை வாழ்நர் சேரி, பரதவர் சேரி, புறஞ்சேரி, முத்துக் குளிப்பவர் சேரி, சங்கு அறுப்பவர் சேரி எனப்பல சேரி வகைகள் இருந்ததாக இலக்கியங்கள் காட்டுகின்றன.
பல இனமக்களும் சேர்ந்து வாழுமிடத்தைக் குறித்த ‘சேரி’ என்பது பின்னர் தீண்டாமையின் அடையாளமாக்கப்பட்டுவிட்டது.

0

ஆதிதிராவிடர்கள்

278607bigபறையர்கள் / அத்தியாயம் 23

சிந்துவெளி நாகரிகத்தில் காணப்படும் தொன்மையான நகர் நாகரிகத்துக்கு திராவிடர்கள் தான் சொந்தக்காரர்கள் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு குறிப்பிடுவது ஆதி திராவிடர்களையேச் சாரும். ‘தமிழ் பேசும் தாழ்த்தப்பட்ட மக்கள்’ தமிழாதற்குதி (ஆதித் தமிழர்) என்று அழைக்கப்பட்டனர். (தமிழாதி – உயர்குல வகுப்பினர் எனக் கூறிக் கொள்வோர், தாழ்த்தப்பட்ட மக்களை குறிக்க இந்தச் சொல்லை கையாள்கின்றனர்).

ஒதுக்கப்பட்ட மக்கள் இன்று யாராலும் திருகுலத்தார் (புனிதக் குடும்பத்தைச் சார்ந்தவர்) என்றும், ஆதி திராவிடர் அதாவது முதல் தமிழர், முன்னைய தமிழர் என்றும் அழைக்கப்படுகின்றனர். தமிழ் பேசுவோர், தொன்று தொட்டுப் பேசுவோர், தமிழ் பற்றுடையோர், தமிழரிடைப் புறக்கணிக்கப்பட்டிருப்போர் இவர்கள் யாவரும் ஒருவகையாகத் ‘தமிழர்’ என்றே கூறப்படுகின்றனர். எனினும் ஆதிதிராவிடரே சிறப்பு வகையால் ‘முழுத் தமிழர்’ ஆவர் எனத் தோன்றுகிறது.

மத்திய காலத்தில் எழுதப்பட்ட தமிழ் நூலாகிய ‘ஞான வெட்டியான்’ என்ற நூலில் ஆதி திராவிடர்கள் தங்கள் புலன்களை அடக்கி மனத்தை ஆண்டதற்கும் அதன் மூலம் ஆத்ம ஞானம் பெற்று உயர்ந்து நின்றதற்கும் ஆதாரமாக வெள்ளைக் குடையையும், வெண்சாமரத்தையும், கற்கள் பதித்த காதணிகளையும், வாளையும் பெற்றிருந்தனர் எனத் தெரிகிறது. இவை அனைத்தும் ஆதிதிராவிடர்கள் ஒரு காலத்தில் மன்னர் பரம்பரையைச் சார்ந்தவர்கள் என்பதை எடுத்துக்காட்ட வந்தவை எனக் கருதப்படுகிறது.

சுதந்தர இந்தியாவில் தீண்டாமை என்பது சட்டப்படி குற்றமாகக் கருதப்பட்டு வந்த போதிலும் இன்றளவும் ஆதி திராவிடர்கள் ஒதுக்கப்பட்டே வாழ்ந்து வருகின்றனர். மரபு வழியில் இவர்களைப் ‘பறையர்’ என்றும் அழைக்கின்றனர்.

தாழ்த்தப்பட்ட மக்கள் நலன் கருதி பண்டிதர் அயோத்திதாசர் தான் அமைத்திருந்த ‘பறையர் மகாசன சபை’ என்ற பெயரை 1910ம் ஆண்டுக்குப் பின்னர் ‘ஆதிதிராவிடர் மகாசன சபை’ என மாற்றினார். திராவிடர் என்னும் சொல் தென் இந்தியாவில் வாழ்ந்த அத்தனை மக்களையும் குறிக்கும் பொதுப்பெயராகக் கருதப்பட்டதால் பழங்குடி மக்கள் என்பதனைக் குறிக்கும் ‘ஆதி’ என்னும் அடைமொழியை இணைத்து ஆதிதிராவிடர் எனக் குறிக்கத் தொடங்கினார்கள்.
ஆதிதிராவிடர் மகாசன சபை 1918ல் அன்றைய சென்னை மாகாண அரசுக்குக் கொடுத்த கோரிக்கையில் மக்கள் கணக்கெடுப்பிலும் மற்ற அரசு ஆவணங்களிலும் ‘பறையர்’, ‘பஞ்சமர்’ என்னும் பெயர்களுக்குப் பதிலாக ‘ஆதிதிராவிடர்’ எனும் பெயர் பெற்றது. ஆனால் அப்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி இதனை ஏற்கவில்லை. ஆந்திரத்திலும், கன்னடத்திலும் ‘ஆதி திராவிடர்’ என்னும் பெயரை ஏற்கத் தாழ்த்தப்பட்டோரில் எவரும் முவரவில்லை. இந்த நிலையை அந்த அதிகாரி சுட்டிக் காட்டினார். ஆனால், ஆதி திராவிடர் மகாசன சபை, பெயர் மாற்ற கோரிக்கையிலே பிடிவாதம் காட்டியது. தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் மத்தியில் பொதுக்கூட்டங்கள் போட்டு, இதற்காக தனது கோரிக்கைக்கு அவர்களுடைய ஆதரவைத் திரட்டியது. நீதிக்கட்சியினரும் அந்த மகாசனசபைக்கு உதவியாக இருந்தனர்.

அக்கட்சியின் பெருந்தலைவர்களில் ஒருவரான டாக்டர் சி. நடேச முதலியார், ஆதி திராவிடர் மகாசன சபையின் கோரிக்கையை ஏற்குமாறு அரசினருக்குப் பரிந்துரை வழங்கும் தீர்மானம் ஒன்றை சென்னை மாநகராட்சிக் கூட்டம் ஒன்றில் முன்மொழிந்து அதை நிறைவேற்றுமாறு செய்தார். 1921ம் ஆண்டுக்குரிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது தமிழ்நாட்டளவில் பரவலாக சுமார் 15,025 பேர் தங்களை ஆதி திராவிடர்கள் என்று சொல்லிக்கொண்டு, குடி மதிப்பீட்டுக் கணக்கேட்டில் அதை ஏறும்படி செய்தனர். 1921ம் ஆண்டு குடிமதிப்புக் கணக்கெடுப்பின்படி, சென்னை மாகாணத்தில் தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கை 63,72,074 ஆகும். இவர்களில் சுமார் 15,000 பேர்தான் ஆதிதிராவிடர் என்று பதிவு செய்து கொள்ள முன்வந்தனர். இது, தமிழக தாழ்த்தப்பட்டோரும் ‘திராவிடர்’ என்னும் பெயரை விரும்பவில்லை என்பதையே புலப்படுத்தியது. சென்னை மாகாணத்தின் இந்தப் பகுதிகளில் தங்களை ஆதிதிராவிடர் என்று பதிவு செய்து கொள்ள எவரும் முன் வரவில்லை.

1922ம் ஆண்டு மார்ச் திங்கள் 25ம் நாள் பஞ்சமர் என்ற இழி பெயர் நீக்கப்பட்டது. (ஆனால் பஞ்சமி நிலம் என்ற சொற்றொடரில் உள்ள பஞ்சமி என்ற சொல் மட்டும் இன்னும் நீக்கப்படாமல் பஞ்சமி நிலம் என்றே வழங்கப்படுகிறது). சென்னை மாகாணச் சட்டமன்றத்தில் ஆதி திராவிடர் என்னும் பெயரை அதிகாரபூர்வமாக ஏற்குமாறு அரசுக்குப் பரிந்துரை செய்யும் தீர்மானம் ஒன்று நீதிக்கட்சியினரால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றி வைக்கப்பட்டது. ‘பஞ்சமர்’ அல்லது ‘பறையர்’ என்பதற்குப் பதிலாக ‘ஆதிதிராவிடர்’ என்னும் பெயர் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அரசு ஆணை பிறப்பித்தது.

இட ஒதுக்கீட்டு ஆணை, கல்லூரிக் குழுக்கள் ஆகியவற்றால் கல்வித்துறையிலும் அரசுப்பணியிலும் பார்ப்பனர்களின் ஏகபோகத்தைத் தடுத்தும், பஞ்சமர் பெயர் மாற்றத்தால் வைதீக சாதி அமைப்புகளைத் தகர்த்தும் செயல்பட்டது நீதிக்கட்சியின் அரசு. ஆனால் இந்தப் பெயர் மாற்றம் தமிழ் மாவட்டங்களில்தான் அமலில் இருக்குமென்றும் அரசு தெளிவுப்படுத்தியது. மற்றபடி, தெலுங்கு மாவட்டங்களில் ‘ஆதி திராவிடர்’ என்றும், கன்னட மாவட்டங்களில் ‘ஆதி கன்னடர்’ என்றும் வழங்கிவரும் என்பதாகவும் அரசு உறுதிப்படுத்தியது.

ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோர் ‘ஆதித் தமிழர்’ என அழைக்கப்படாமல் ஆதி திராவிடர் என்றே அழைக்கப்பட்டு, தமிழர்கள் ஆட்சி அதிகாரத்திலிருந்து தள்ளிவைக்கப்பட்டனர். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின ஓவிய, சிற்பக் கலைஞர்களின் திறமைகளை மக்களிடையே கொண்டு செல்ல அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறது.

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் ஆதி திராவிட மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் ஆதி திராவிட நலத்துறை மூலமாக ஆண்டுதோறும் வழங்கப்படும் உதவித் தொகையில் நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையில் 2008 முதல் 2010 வரையிலான ஆண்டுகளில் மட்டும் ரூ.1 கோடி மோசடி நடந்திருக்கிறது. ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு உள்ள மக்களின் கல்வி முன்னேற்றத்துக்கு வழங்கப்படும் உதவித் தொகையின் இந்த மோசடியால் ஆதிதிராவிடரின் ஒட்டுமொத்த முன்னேற்றமும் தடைபடும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அதே போல் தமிழகத்தில் ஆதிதிராவிடர்களை ஓட்டுக்காக மட்டுமே அரவணைத்துக் கொள்ளும் போக்கு இருந்து வருகிறது. கடந்த 2012ம் ஆண்டு (தினகரன், 04.03.2012) நடந்த சங்கரன்கோயில் இடைத்தேர்தலில் ஆதிதிராவிடர்கள் ஓட்டுக்களைப்பெற ஒரு கட்சி புது திட்டம் அமைத்து சங்கரன் கோயில் தொகுதியில் மொத்தம் 45 ஆயிரம் ஆதி திராவிடர்களின் ஓட்டுகளை முழுவதும் பெற முயற்சி நடப்பதாகவும் அன்றைய செய்தித்தாளில் (உண்மையாக இருக்கலாம் அல்லது குறிப்பிட்ட கட்சியின் மீது கூறப்பட்ட இந்தப் புகார் காழ்ப்புணர்ச்சியாகவும் இருக்கலாம்) காண முடிந்தது.

0

பண்டைத் தமிழகத்திலும், இன்றும் ‘சேரி’ என்ற சொல் புழக்கத்தில் இருந்து வருகிறது. சேரி என்ற சொல் இன்று தீண்டப்படாதார் வாழும் இடமாக குறிக்கப்படுகிறது. ஆனால் பண்டைத் தமிழகத்தில் அவ்வாறு இல்லை. அப்பொழுது இருந்த சேரிகளில் குடியிருந்த மக்கள் பல இனங்களை, பல மொழிகளை, பல பண்பாட்டைக் கொண்டவராக இருந்தனர் என தொல்காப்பியம், அகம், புறம், பரிபாடல், மதுரைக் காஞ்சி, சிலப்பதிகாரம் ஆகிய பல இலக்கியங்களில் பரவலாகக் குறிக்கப்பட்டுள்ளன.

பொதுவாக நகர்க்கரையில் அமைந்தது. நகர் எனப்பட்டது போல், ஊர்ந்து பெருகும் வாழிடங்கள் ஊர் எனப்பட்டது போல, சேர்ந்து வாழுமிடங்கள் சேரி எனப்பட்டது.
சேரி என்பது, பல வீடுகள் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் குடியிருப்பு. முற்காலத்தில் முல்லை நிலத்தூர்கள்  ‘சேரி’ என்னும் பொதுப்பெயர் பெற்றன. முல்லை நிலமக்கள் இடையராதலின், மருதநில நகர்ப்புறத்துள்ள பேரூரும் நகருமாகி, திணை மயக்கமும் தொழில் பற்றிய குலப்பாகுபாடும் உண்டானபின் ஒவ்வொரு பேரூரிலும் ஒவ்வொரு குலத்தாருடைய தனிக் குடியிருப்பும் ‘சேரி’ எனப்பட்டது. இவ்வாறு இடைச்சேரி, பறைச்சேரி, பார்ப்பனச் சேரி என்னும் வழக்கு எழுந்தது.

‘ஏமப் பேரூர்ச் சேரியும் சுரத்தும்’ (தொல். அகம் 37). நாளடைவில் குலப்பாகுபாடு, பிறப்போடு தொடர்புபடுத்தி அமைக்கப்பட்டப் பின் தாழ்த்தப்பட்டோர் பிற குலத்தாரோடு சேராது ஊருக்குப் புறம்பே வசிக்க நேர்ந்தது. அதிலிருந்து ‘சேரி’ என்னும் சொல் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பையே உணர்த்தி வருகின்றது.

கி.பி. 2ம் நூற்றாண்டின் முடிவில் மலபார் கரையில் உள்ள தமிழ்க்குடியிருப்புகள் வடக்கே தலைச் சேரிக்கு அப்பாலும், கிழக்கே மலைத் தொடர் அடிவாரம் வரையிலும் பரவியிருந்தது என்று பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரை  (ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்) குறிப்பிடுகின்றார். இதில் கூறப்பட்டுள்ள தலைச்சேரி என்ற பகுதி இருந்துள்ளதை அறியலாம்.

கொங்கு நாடானது பழங்காலத்தில் 24 நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்று ஆறை நாடு. இந்த ஆறை நாடு 6 உட்பிரிவுகளைக் கொண்டிருந்தது. அதில் ஒன்று தணக்கு நாடு என்பது. இந்த தணக்கு நாடு என்பது ‘நடுவச் சேரி’யைச் சுற்றியுள்ள பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன்மூலம் ‘நடுவச்சேரி’ என்ற ஊர் இருந்துள்ளதை அறியமுடிகிறது.

சங்க கால மதுரை மாநகரில் புறமதிலுக்கும், அகமதிலுக்கும் இடையில் இருந்த வீதிகள் ‘புறஞ்சேரி’ என்று பெயர் பெற்றிருந்தன. அங்கு பெரும்பாலும் ஆயர்குல மக்கள் வாழ்ந்திருந்தனர்.

கபிலர் கூட குறிஞ்சித்திணை குறித்து விளங்குங்கால் ‘ஊர் அலம் சேரிச்சிறூர்’ என்று குறிப்பிடுகிறார். பெரிய ஊரல்லாது சேரிகளைக் கொண்ட சிற்றூர் என்பது இதன் பொருள்4
‘யவனச்சேரி’ இருந்ததை மணிமேகலை, பெருங்கதை ஆகிய நூல்கள் குறிப்பிடுகின்றன. (யவனர் – கிரேக்கர், அரேபியர் மற்றும் ரோமர். பொதுவாக வெளிநாட்டவரை குறித்தாக இருக்கலாம்) இலங்கையில் ‘சாவகச் சேரி’ என்ற நகரம் உள்ளது.

தஞ்சை மாவட்டம் மாயூரம் வட்டம் ‘திருமணஞ்சேரி கோயில்’ உள்ளது. இதற்குப் பழைய பெயர் ‘திருக்கற்றாளி மகாதேவர் கோயில்’ என்பது. இப்போதைய பெயர் ‘உத்வாகநாத சுவாமி கோயில்’ என்பது.

சங்க காலப் பார்ப்பனப் புலவர் ஒருவரின் பெயர் முடமோசியார். இவர் உறையூர் ‘ஏணிச்சேரி’ முடமோசியார் என்று அழைக்கப்படுவார். மோசி என்பது ஒரு குடிப்பெயராக இருக்கலாம். மோசி என்பது ஊர்ப்பெயராகவும் இருக்கலாம். இம்மோசி என்னும் ஊர் தாராபுரம் வட்டம் மூலனூர்க்கு அருகில் உள்ளதாகக் கூறுவர். இவர் பாண்டிய நாட்டில் மோசி என்னும் குடியைச் சார்ந்தவர் என்றும் கூறுவர். இவர் உறையூர்ச் சோழன் கோப்பெருநற்கிள்ளியிடம் தங்கியிருந்தவர். ஏணிச்சேரி என்ற ஊரில் வாழ்ந்தவர் என்பர்.

பவானிக்கு மேற்கில் ஆறுகல் தொலைவில் ‘ஓரிச்சேரி’ என்னும் ஊர் உள்ளது. அது இன்று ‘ஓரிச்சேரி’ என்று வழங்கப்படுகிறது. சங்ககால வள்ளல்களில் ஒருவனான ஓரியின் பெயரால் ஓரிச்சேரி வழங்கப்பட்டது எனலாம்.

0

ஆதி திராவிடர்

imagesபறையர்கள் / அத்தியாயம் 22

இப்போது நாம் பார்த்த பறையர் தொன்மங்களில் பறையர் அண்ணனாகவும், பிராமணர் தம்பியாகவும் உள்ளனர். இந்தத் தொன்மத்தின்படி அண்ணன் தம்பி என்ற வயது வேறுபாடு தந்தை வழிச் சமூக அமைப்பில் மூத்தவர் தந்தையின் இறப்புக்குப்பின் குடும்பப் பொறுப்பு வாரிசுரிமை பெறுதல் போன்றவற்றால் அதிக அதிகாரம் பெற்றவராக மாறுகிறார். ஆனால் இறந்த மாட்டை அப்புறப்படுத்தும் போதும், மௌன விரதம் இருக்க முடிவு செய்யும்போதும் ‘என் தம்பி பார்ப்பான்’ என்னும் கட்டம் வரும்போது அண்ணன் தகுதியிழந்து புறச்சாதியாகவும், தம்பி பிராமணராகவும் மாறுகின்றனர்.

தொன்மத்தின் கதைக் கூறுகளைக் கவனிக்கும் போது அண்ணன் நேர்மையாகவும், கடமை உணர்வோடும், பொறுப்பு மிக்கராகவும், நல்ல கணவராகவும் உள்ளார். இக்கட்டான சோதனை வந்தபோது ‘என் தம்பி பார்ப்பான்’ என ஊரை விட்டு வெளியேறுகிறார். இத்தொன்மத்தின் இன்னொரு அடிக்கருத்து மிகவும் முக்கியமானதாகும். பிராமணர் முதற்கொண்டு பல உயர்சாதிகளின் தொன்மங்கள் கடவுளால் தோற்றுவிக்கப்பட்டன அல்லது விண்ணுலகு நிகழ்ச்சியோடு தொடர்பு கொள்பனவாக இருக்கின்றன. ஆனால் பறையர் தொன்மத்தில் புறச்சாதியாக மாறும் முடிவினை இறைவன் வழங்கவில்லை. அண்ணன்தான் முடிவு செய்கிறார்.

அண்ணன் மாட்டுக்கறி உண்டுவிட்டு அண்ணிக்குப் பொங்கல் சோறு மட்டும் கொண்டு வருகிறார் என்று தம்பியின் பொய்யான கூற்று மூலம் அண்ணனுக்குச் சோதனை ஏற்படுத்தித் தகுதியிழக்கச் செய்யும் தம்பியின் விளைவானது, தோற்றத் தொன்மங்கள் அல்லாத தொன்மங்களிலும் காணக் கூடியவையே.

பறையரும், பிராமணரும் சகோதரர்கள் என்று பல தொன்மங்கள் கூறுகின்றன. அவை யதார்த்தத்தைப் பிரதிபலிக்கவில்லை. பிராமணர்கள் மத்தியத் தரைக்கடல் இனத்தையும் பறையர்கள் திராவிட இனத்தையும் சேர்ந்தவர்கள்.

பிராமணர்கள் கீழ்ச்சாதிப் பெண்களை மணந்தால் ஆறு கீழ்ச்சாதிகள் (அபஸ்தக்குகள்) தோன்றினர் என மனு கூறுகிறது. ஒரு காலத்தில் உயர்ந்த நிலையில் இருந்து இன்று தாழ்ந்தவராக மாறிவிட்டோம் என்பதையே இத்தொன்மங்கள் வலியுறுத்துகின்றன.
பிராமணர்கள் இந்தியாவுக்குள் குறைந்தபட்சம் இரண்டு கட்டங்களாக வந்தனர் என்பது பெரும்பாலோர் ஏற்றுக் கொண்ட இரண்டு கட்ட நுழைவுக் கோட்பாடாகும். முதலில் அசுரர்களும், பின்னர் தேவர்களும் நுழைந்தனர். முதலில் வந்த அசுரர்கள் சிந்துவெளித் திராவிடர்களோடு இணக்கம் பெற்றுச் செயல்பட்டனர். இன்றைய மேற்கு வங்கம் உள்ளிட்ட கிழக்கிந்தியப் பகுதியில் வாழும் பிராமணர்கள் அசுரர் பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் திராவிடப் பண்பாட்டை வெகுவாக ஏற்றுக் கொண்டவர்கள். பின்னர் வந்த தேவர்கள் சிந்துவெளி நாகரிக மக்களுடன் முரண்பாடு கொண்டவர்கள். அவர்களே சிந்துவெளி நாகரிகத்தை அழித்துத் திராவிடர்களின் மேல் மேலாதிக்கம் செலுத்த முற்பட்டவர்கள்.

பிராமணர்களின் நுழைவுக்குப் பின் ஏற்பட்ட மிக நீண்ட சமூகப் பண்பாட்டு உருவாக்கத்தில் இந்நாட்டு மன்னர்களே பிராமணர்களுக்குச் சமூகப் புரவலர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில், அடித்தளச் சாதியினர் (பறையர் சாதி) ஒரு காலத்தில் பெற்றிருந்த உயர்ந்த நிலையைப் பின் வந்த பிராமணர்கள் ஏற்றுக் கொண்டதை ஒரு சமூக இணக்கக் கருத்தாக சகோதரர் என்னும் தொன்மமாக்கம் விவரிக்கிறதா? என்பன போன்ற தேடல், தோற்றத் தொன்மம் குறிந்த இந்த ஆய்வுக்களத்திலிருந்து விலகுவதாக அமைகிறது.

மேலும் பறையர்களின் பெரும்பாலான தொன்மங்கள் அண்ணனின் முடிவால் தாழ்ந்தநிலை ஏற்பட்டது என்றிருக்க, வேளாளருக்குத் தொழில் செய்ய சிவனால் படைக்கப்பட்டவன் பறையன் என்பது, இவர்கள் மேல் மற்ற சாதிகள் வேண்டுமென்றே செலுத்திய அதிகாரமாகவே உள்ளது.

0

இனி, ஆதிதிராவிடர் பற்றிப் பார்ப்போம்.

ஆதி என்ற சொல், பழமை, முதுமை என்ற பொருளிலேயே இன்று அறியப்படுகிறது. கதைகளைச் சொல்வோர் ஆதி காலத்திலேயே என்று தொடங்குவர். ஆதிதிராவிடர் என்ற சொற்கள் இன்று வழக்கில் உள்ளன. ஆதி என்பதற்கு தோற்றம், முதல், மூப்பு, தொடக்கம் என்று பொருள்படும்.

கடைக்கழக இலக்கியங்களில் ஆதி என்ற சொல் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் கலித்தொகை, ‘பழமை’ என்ற பொருளில் விளக்கமளிக்கிறது.

ஆதி அந்தணன்: சிவன் முப்புரங்களை அழித்தபோது, ஆதி அந்தணன் தேர்ப்பாகனாக வந்து தேரைச் செலுத்தினான் என்று பரிபாடல் கூறுகிறது. ஆதி அந்தணன் என்று பரிபாடல் கூறும் தேரோட்டியை பிரம்மாவாக ஆரியச்சார்பு உரையாசிரியர்கள் எழுதியுள்ளனர். ஆதி அந்தணனை நல்லோன், உயர்ந்தோன், அறிவு மிக்கோன் எனப் பொருள் கொள்வதே சிறப்பானது.

ஓரியன் கூட்டத்தில் சிவந்து ஒளிர்ந்து காணப்படும் ஒரு விண்மீனையே ஆதிரையென்று தொல் தமிழர் அழைத்தனர். ஓரியன் கூட்டமே முதலில் அறியப்பட்டுப் பெயரிடப்பட்டதாகவும் ஒரு கருத்து உண்டு. அக்கூட்டத்தை குறிஞ்சி நிலத் தலைவனாகிய வேடன் போன்றும் உருவகம் செய்தனர். அக்கூட்டத்தில் ஒளிமிகுந்த மீனை ஆதி திரை என்றே தொல் தமிழர் அழைத்தனர்.

ஆதி அருமன்: இவன் ஒரு வள்ளல், இவனது ஊர் பழமையான பனைவளம் சார்ந்தது என கள்ளில் அத்திரையினார் என்ற புலவர் குறுந்தொகையில் கூறுகிறார். தனை ஆதி அருமன் முதூர் என்று குறிப்பிடுகின்றனர்.

ஆதி மந்தி: கரிகாலன் மகளாக ஆதிமந்தி கூறப்படுகிறாள். (மந்தி என்ற சொல்லுக்கு வண்டு என வீரமாமுனிவர் பொருள் கூறுகிறார்).

ஆதிரை: கரிகாலனின் மகளான இவர் எழுதிய பாடல் ஒன்று (31) குறுந்தொகையில் உள்ளது.
ஆதிரை: மார்கழி மாதத்து ஆதிரை நாளில், சிவனுக்கு விழாவெடுத்தச் செய்தியை பரிபாடல் விளக்குகிறது. ஆதி என்ற சொல் குதிரையின் தேரோட்டம் என்று மதுரைக்காஞ்சி கூறுகிறது. (புரவியைக் குறித்த ஆதி என்ற சொல், கடைக்கழகக் கால வழக்கே எனக் கொள்ளலாம்).

கலித் தொகையும், குறுந்தொகையும் மட்டுமே, ஆதி என்பதற்குப் பழமை என்ற பொருளைத் தருகின்றன. ஆதி-அந்தம் என்பது, தொடக்கமும் முடிவுமில்லாத கடவுள் தன்மையைக் குறித்த சொல்லாகும். (அந்தம்-முடிவைக் குறித்தச் சொல்) எனவே, ஆதி என்ற சொல், பழந்தமிழ் இலக்கியங்களில் பரவலாகக் காணப்படுகிறது என்பதால், அது பழந்தமிழ்ச் சொல்லே என அறியலாம்.

ஆதி என்ற சொல் குமரிக்கண்ட அழிவுக்குப் பிறகே வழக்கில் வந்தது எனக் கருத இடமுள்ளது. ஆதி என்ற சொல்லுக்கு ‘யா’ என்பதே வேர்ச் சொல்லாகும்.

திருவள்ளுவர் ‘ஆதி பகவன்’ என்று குறிப்பிடுகிறார். யாத்திசை என்ற சொல்லின் சுருக்கமே ‘யாதி’. யாதி பகவன் என்ற சொற்களை நோக்கும் போது, அவை பிற்காலத்தில் ஆதி பகவன் என்று சொல்லப்பட்டது என்று கொள்ளலாம். பகவன் என்பதற்கு உயிரினங்களை வகைப்படுத்தி, அவற்றுக்குத் தேவையானவற்றை அளிப்பவன், இறைவன் என்று பொருள்படும்.

யாதி-பகவன் = தென்திசைக் கடவுள். குமரிக்கண்டத்தில் வணங்கப்பட்ட கடவுள்.

திருவள்ளுவர் கூறிய ஆதிபகவன், தென்திசைக் கடவுளே என்பதும் தெளிவு. ஆதி என்ற சொல், யாதி என்பதின் மறுசொல்லே என்பதால், ஆதி தமிழ்ச்சொல்லே. மிகப் பழைமையான கடவுளை ஆதி என்ற சொல் சுட்டுவதால், பிற்காலத்தில் பழமை என்ற சொல்லும், ஆதி என்ற சொல்லாலேயே அறியப்பட்டது.

ஆதி என்ற சொல்லுக்கு, யா என்பதே வேர்ச்சொல்லாகும். யா என்பது தென் திசையைக் குறித்தச் சொல்லே என்பதற்குத் தமிழில் சான்றுகள் இல்லை அல்லது யா என்ற சொல்லை விளக்கும் இலக்கியங்கள் அழிந்து போயிருக்க வேண்டும். யா என்ற சொல் தென்திசையைக் குறித்ததே என்ற விளக்கம் தமிழில் காணப்படவில்லை என்றாலும், தமிழ் மொழியில் இருந்து கிளைத்ததாகக் கருதப்படும் பல்வேறு மொழிகளில் யா என்ற சொல், தென் திசையைக் குறித்தே சொல்லப்பட்டுள்ளது. இம்மொழிகள் யாவும் குமரிக்கண்ட அழிவுக்குப் பிறகு, தமிழர் குடியேறிய நாடுகளில் பேசப்பட்ட மொழிகளாகும். பாபிலோனியம், எபிரேயம், கிரேக்கம், சமஸ்கிருதம் போன்ற மொழிகளில், யா என்ற சொல்லுக்குத் தென்திசை என்றே பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

யா என்பது, பிற்காலத்தில் ஆ என்ற எழுத்தால் சொல்லப்பட்டுள்ளதை அறியலாம். யாண்டு-ஆண்டு, யாடு-ஆடு, யாடவர்-ஆடவர், யாத்திரை-ஆத்திரை, யாணி-ஆணி, யாத்தி-ஆத்தி, யாதன் – ஆதன் என விரியும்.

யா (பாபிலோனிய மொழி) : பாபிலோனுக்குத் தெற்கேயிருந்த கடல் தெய்வத்தின் பெயர் இச் சொல் பாபிலோனிய மொழியில் நீரோடும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியமான குறுந்தொகையும் யா என்ர சொல்லுக்கு நீர் என்ற பொருளையே தருகின்றது.

ஆதி என்ற சொல், தென்திசையைக் குறித்த யாதி என்ற தமிழ்ச்சொல்லே. யாதி தமிழர் என்போர் (இப்போது நாம் குறிக்கும் ஆதி திராவிடர்) குமரிக்கண்டத்தே வாழ்ந்திருந்த தொல் தமிழர் ஆவர். அவரே தமிழரின் மூத்த குடியும் முதற் குடியும், அறிவார்ந்த பல்குடியுமாவர்.

0

பறையரும் தொன்மும்

cowபறையர்கள் / அத்தியாயம் 21

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியைப் பெற்றுத்தர அந்தந்த காலகட்டங்களில் பலர் போராடியிருக்கின்றனர். அம்பேத்கருக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் ஜோதிபா புலே அவர்கள். அவர் 1851ம் ஆண்டு பெண்களுக்காகவும், 1852ல் தீண்டப்படாத மக்களுக்காகவும் பள்ளிகளை உருவாக்கினார். பெண்களுக்கும், தீண்டப்படாத தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும். முதன் முதலில் இந்தியாவில் ‘மகாத்மா’ என்ற பட்டம் ஜோதிபா புலேவுக்குத்தான் கொடுக்கப்பட்டது.

ஜோதிபா புலேயின் கருத்தை நடைமுறைப்படுத்தி இந்தியாவில் 1902ல் தன்னுடைய கோலாப்பூர் சமஸ்தானத்தில் 50 விழுக்காடு இடஒதுக்கீட்டைப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கொடுத்தவர்தான் சாகு மகராஜ் என்று சொல்லக்கூடிய கோலாப்பூர் அரசர். புத்தருடைய கருத்தை எப்படி அசோகர் நடைமுறைப்படுத்தினாரோ அதுபோல ஜோதிபா புலேயின் தத்துவத்தை மராட்டிய ஆட்சியிலே செலுத்திய பெருமை ‘சத்ரபதி’ என்று அழைக்கப்பட்ட சாகுமகராஜ் அவர்களையே சாரும்.

தமிழகத்தில் ஆங்கிலேயர் வருகைக்குப் பின் தாழ்த்தப்பட்ட தீண்டப்படாதார் சமூக அந்தஸ்தில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. தீண்டப்படாதவர்களுக்காக கிறிஸ்தவர்கள் பல கல்விக் கூடங்களையும், மருத்துவ நிலையங்களையும், அநாதை இல்லங்களையும், நல்வாழ்வுத் திட்டங்களையும், திருச்சபைகளையும் தென் தமிழகத்தில் உருவாக்கினர். இதன் விளைவாகத் தீண்டாமைக் கொடுமைகளிலிருந்து தப்பித்து வாழ விரும்பியவர்கள் கிறிஸ்தவ மதத்துக்குக் குடிபெயர்ந்தனர். இதனால் ஒரு சில தீண்டாதாரின் பொருளாதார, கல்வி, சமூக நிலை உயர்ந்தது. ஆங்கில அரசு பிறப்பித்த கல்விச் சட்டங்களும், திட்டங்களும் தாழ்த்தப்பட்ட மக்கள் அடைந்து வந்த கொடுமைகள் குறைய வழிவகுத்தன.

தாழ்த்தப்பட்ட மற்றும் தீண்டப்படாத பிரிவினருக்கு கிறிஸ்தவ மதத்தில் விருப்பம் இருந்ததோ இல்லையோ, உயர்குடி-தமிழர் கொடுத்த இடையூறு மற்றும் அநீதிகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், வறுமையிலிருந்து விடுபடவும், தாங்கள் உயிர்வாழவும், மானத்தைக் காத்துக்கொள்ளவும், தங்களது சந்ததிகள் இந்த நாட்டில் பாதுகாப்போடு வாழவும், கல்வி கற்கவும், பல தீண்டப்படாதார் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினர். பறையரில் பெரும்பாலோர் இப்படிக் கிறிஸ்தவர்களாக மாறினர்.

‘தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உயர்கல்வி கொடுக்கக்கூடாது. அவர்கள் எல்லோரும் தொடக்கப்பள்ளியோடு நிற்க வேண்டும்’ என்று பால கங்காதர திலகர் கூறியதாக கி.வீரமணி (சாவர்க்கர்-காந்தியார்-கோட்சே-ஆர்.எஸ்.எஸ்) தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

0

பறையர் பற்றிய சில தொன்மங்களை இனி பார்ப்போம்.

வழக்காறு 1 : அண்ணன், தம்பி ஆகிய இரண்டு பிராமண சகோதரர்கள் இருந்தனர். கோயிலுக்குப் பூசை செய்ய அண்ணன் தினமும் கோயிலுக்குச் செல்வார். பொங்கலிட்டுப் படைக்கும் காலத்தில் அங்கு வந்த இந்திரலோகத்துப் (தேவலோகம், மேலுலகம்) பசு ஒன்று வந்து நிற்க அண்ணன் பசுவிலிருந்து தினமும் ஒரு சொட்டு ரத்தத்தை எடுத்து அரிசிப் பொங்கலுடன் ரத்தப் படையல் இடுவது வழக்கம். படையல் முடிந்ததும் பசுவும் அங்கிருந்து போய்விடும்.

அண்ணன் வீட்டுக்குத் திரும்பி வரும்போது மனைவிக்கும் தம்பிக்கும் பொங்கல் படையல் கொண்டு வருவார். தினமும் படையலின்போது பசு வந்து செல்வதைக் கவனித்த ஊரார் தம்பியிடம் அண்ணன் மாட்டுக்கறி உணவிட்டு, உங்களுக்குப் பொங்கல் சோறு மட்டும் கொண்டு வருகிறார் என்று சீண்டிவிட்டனர். தம்பியும் இத்தகவலை கர்ப்பமாயிருந்த அண்ணியிடம் கூறினான். அவள் தன் கணவனிடம் கர்ப்பமாயுள்ள எனக்குச் சோறு, உனக்கு மட்டும் மாட்டுக்கறியா? கறி கொண்டு வராவிட்டால் நான் இறந்துவிடுவேன் எனக் கூறினாள். மாட்டுக்கறி உண்னாத அண்ணன், மனைவி சொல்லுக்குக் கட்டுப்பட்டு பசுவிலிருந்து ஒரு சிறு சதையை வெட்டி கறியாக்கிக் கொண்டு வந்தான். பசு இறந்து விட்டது. இவ்வளவையும் மறைந்திருந்து பார்த்த தம்பி கறியை உண்ண மறுத்து விட்டான்.

ஊரார் பஞ்சாயத்துக் கூட்டி ‘நீ பசுவைக் கொன்று விட்டாய் அதை அப்புறப்படுத்துவதுடன் அதனை நீயே உண்ண வேண்டும். மாடு வெட்டிய பயலாக மாறியதால் நீ தீண்டத்தகாதவன், ஊரை விட்டு வெளியேறு’ எனத் தீர்ப்புக் கூறினார்.

அண்ணன் ஊரைவிட்டுக் கிளம்பும்போது ஒரு பெரியவர் ‘எங்கே போகிறாய் சாமி, இனிக் கோயிலைப் பார்ப்பது யார்’ எனக் கேட்க அண்னன் ‘கோயில் வேலையைத் தம்பி பார்ப்பான்’ எனக் கூறினான்.

அண்ணனும் மனைவியும் வேறோர் ஊருக்கு வந்தவுடன் மக்கள் ஒரு குடிசையை ஒதுக்கிக் கொடுத்து ஊராரிடம் உணவு பெற்றுப் பிழைத்துக் கொள்ளுங்கள் என்றனர். பஞ்சாயத்தார் கூடி அண்ணனுக்கு ஊர்க்காவல் செய்யும் வேலையையும் பஞ்சாயத்துக்கு மக்களை அழைக்கும் வேலையையும் கொடுத்தனர். அழைக்கும் வேலையை எளிமையாக்க அண்ணன் விலங்குத் தோலால் தப்பு செய்து பறையடித்து அழைக்க அன்றிலிருந்து பறையன் என அண்ணனை அழைத்தனர். இறந்த விலங்குகளையும் எடுக்கச் சொன்னார்கள். தீட்டுள்ள இவ்வேலையைச் செய்தமையால் அண்ணனை ஒதுக்கி வைத்தார்கள். (ராபர்ட் டெலீஜ் 1993:538)

வழக்காறு 2: மாரியம்மன் கோயிலுக்குச் சகோதரர்கள் இருவர் பூசாரியாக இருந்தனர். ஒரு நாள் அண்ணன் பேசா விரதமிருக்க முடிவு செய்து மக்களிடம் கோயில் வேலைகளை ‘என் தம்பி பார்ப்பான்’ என்று சொல்ல அன்றிலிருந்து அண்ணன் மேளமடிப்பவராகவும் தம்பி பார்ப்பனப் பூசாரியாகவும் மாறினர்.

வழக்காறு 3: இரண்டு ஏழைச் சகோதரர்கள் சாமி கும்பிட கோயிலுக்குச் சென்றனர். அங்கு இறந்து கிடந்த பசுவை அகற்றுமாறு கடவுள் ஆணையிட, அண்ணன், ‘என் தம்பி பார்ப்பான்’ (அதை என் தம்பி செய்வான்) என்றான். கடவுள் அக்கூற்றை அவன் தம்பி ‘பார்ப்பான்’ (பார்ப்பனன்) என்று புரிந்து கொள்ள அன்றிலிருந்து அண்ணன் பறையனாகவும், தம்பி பார்ப்பானாகவும் அவர்களிடமிருந்து பிர சாதிகளும் தோன்றின.

வழக்காறு 4: ஒரு காலத்தில் பறையர் உட்பட கிராமத்திலிருந்த எல்லாச் சாதியினரும் ஏரியில் மீன் பிடிக்கச் சென்றார்கள். மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சிவன் அதிசயமாகத் தோன்றி முதலில் ஒவ்வொருவருக்கும் ஒரு பரிசு தருவதாகக் கூறினான். இதற்கு ‘நான் கொடுக்கும் பூணூலை ஒவ்வொருவரும் போட்டுக் கொள்ள வேண்டும்’ எனச் சிவன் கூறினார். அனைவரும் போட்டுக் கொண்டனர். பின்னர் வரிசையில் நின்று ஒவ்வொருவராகச் சிவனிடமிருந்து பரிசைப் பெற்றுத் தங்கள் உடைகளில் முடிச்சு போட்டு பத்திரமாக எடுத்துச் சென்றனர். ஆனால் பறையர் தாம் கொண்டு வந்த கூம்பு வடிவ மீன் பிடிக்கும் கூடையானது இருபக்கமும் வாயுடையது இதை மறந்துவிட்டுப் பரிசைப் பெற்றதால் வீட்டிற்குச் செல்லும்போது பரிசு விழுந்துவிட்டது. தன் அறிவின்மையை உணர்ந்து மிகவும் வேதனைப்பட்டான். (ஜீர்ஃபெல்ட் மற்றும் லிண்ட்பெர்க் 1975: 222-3)

வழக்காறு 5: உலகம் ஏற்பட்ட போது ஒன்றுமேயில்லை. உயிரினங்களும் இல்லை. ஆதி என்ற பெண் மட்டும் தோன்ற அவள் தனக்குத் துணை வேண்டும் என அக்னியாகம் நடத்தினாள். நெருப்பிலிருந்து அழகான மனிதன் தோன்றினான். ஆதி அவனை மணந்தாள். மணந்தவன் யாருமில்லை; ஈஸ்வரனே. இருவரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
இவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர். மண்ணில் மனித இனத்தவர்களை உண்டாக்கிய வேலை முடிந்து விட்டது. சாதியைத் தோற்றுவிக்கும் வேலை மட்டும் பாக்கி உள்ளது. அதையும் முடிக்க வேண்டும் என நான்கு குழந்தைகளையும் நான்கு வருணங்களாகப் படைத்தார். அதில் ஒருவரே பறையர்/பள்ளர்.

வழக்காறு 6: மற்றொரு வழக்குப்படி வெள்ளாளர்களுக்குத் தொழில் செய்வதற்குத்தேவேந்திரனால் படைக்கப்பட்டவர்கள்.

வழக்காறு 7: சூத்திரருக்கும் பிராமணப் பெண்ணுக்கும் பிறந்தவர் என்பது ஒரு வழக்கு.

வழக்காறு 8: கலா சாம்பவன் என்ற பறையருக்கு மூதாதையராக இருந்த ஒரு புரோகிதன், சிவனுக்குப் படைக்க இருந்த மாட்டிறைச்சியின் ஒரு பகுதியை மறைந்து வைத்து தனது கர்ப்பவதி மனைவிக்குக் கொடுக்க இருந்தாள். இதை அறிந்த சிவன், அவனை இறைச்சியை மறைத்ததால் ‘பறையன்’ என்று இகழ்ந்து கூறி அவனைத் தாழ்த்திவிட்டார். அவர் அர்ச்சகர் பணியிலிருந்து நீக்கப்பட்டு அவரது தம்பிக்கு அப்பணி அளிக்கப்பட்டது. ‘மறையன்’ என்று அழைக்கப்பட்ட பெயர் நாளடைவில் மருவி ‘பறையன்’ என வந்தது என்ற ஒரு மரபுக்கதை உண்டு. பறையர்களும், பார்ப்பனர்களும் உடன் பிறவா சகோதரர்கள் என்று எப்.ஆர். ஹெமிங்வே திருச்சி மாவட்டம் பறையர்கள் பற்றிய குறிப்பாக எழுதியுள்ளார். இதன் காரணமாகவே ‘பறையர்கள்’ தங்களது திருமணக் காலத்திலும், நீத்தார் சடங்குகளிலும் இன்றும் பூணூல் தரித்துக் கொண்டு சடங்குகளைச் செய்து வருகிறார்கள்.

வழக்காறு 9: மலபார் பகுதியில் பறையர்கள் மத்தியில் ஒரு தனிப்பட்ட மரபு முறை வளர்ந்து வந்துள்ளது. அதன்படி அவர்கள் பிராமணர்களில் ஒரு பகுதியினரென்றும், இவர்களைச் சிலர் மாட்டிறைச்சி தின்னச் செய்து சமுதாயப் பழக்க வழக்கங்களை மீறியவர்களென்று பெயர் கொடுத்துள்ளனர். இந்த முறையில் இவர்கள் ஏமாற்றப்பட்டதாக நம்பப்படுகிறது.

வழக்காறு 10: பிராமணரும், பறையரும் ஒரு காலத்தில் பங்காளிகளாக இருந்ததாகத் தெரிகிறது. மூதாதையர்கள் சொத்தை இவர்கள் தங்களுக்குள் பிரித்துக் கொண்டுள்ளனர். மாட்டிறைச்சியை உண்டதற்காக இன்றைய பறையர் என்ற பிரிவினர் பிராமணரிடமிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிகிறது.

வழக்காறு 11: பார்ப்பானின் தலையோடு கூடிய மறையர் உடலில் தான் மாரியம்மன் இருப்பதாக ஒரு கதை கூறப்படுகிறது.

வழக்காறு 12: நந்தர் இனத்தவரின் ஒரு பிரிவினர் சாம்பான் என்று அழைக்கப்பட்டுகின்றனர். ஏனெனில் புராணப்படி இறைவன் நாராயணனுக்கும் படைத்தளபதியாக இருந்தவர் ‘சாம்பான்’ என்பவரே. இவரே நாராயணனுக்குத் தலைமை நீதிபதியாகவும் இருந்துள்ளார். சாம்புவான் என்பவர் புராணப்படி பிரம்மாவின் நேரடி மகனாக இருந்திருக்கிறார். ஆனால், பிராமணர்கள் பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர்கள் என்று புராணம் கூறுகிறது. எனவே சாம்பவான் வழிவந்த அதிதிராவிடர்கள், பார்ப்பனர்களை விட உயர்ந்தவர்களாக இருந்திருக்க வேண்டும்.

வழக்காறு 13: கேரளாவில் அடித்தளச் சாதியின் தொன்மமானது, பறையர்களை மூத்த பிராமணன் என்று கூறுகிறது.

வழக்காறு 14: கேரள நாயாடிகள் ‘ஹல்லே மக்களு’ (பூர்வீக மகன்கள்) என்று, அவர்களைப் பிராமணரோடு தொடர்புபடுத்துகிறது.

வழக்காறு 15: ராபர்ட் டெலீஜ், களப்பணி செய்த ‘வாழ்கிற மாணிக்கம்’ (புனை பெயர் கொண்ட இராமநாதபுரக் கிராமம்) கிராமத்தின் பிராமணர்கள் பறையருடனான உறவை அங்கீகரிக்கிறார்கள் என்றும், திருமணத்தின் போது அண்ணன் வரிசையாக வெற்றிலைப்பாக்கு, பழம், பூ ஆகியவற்றை சடங்கு ரீதியாக அவர்களுக்குக் கொடுப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

வழக்காறு 16: பிராமணர்களுக்கும், பறையர்களுக்கும் உள்ள தொடர்பு பல வழக்காறுகளாக மக்களிடம் வழங்கி வருகிறது. தமிழகத்தில் தென் மாவட்டங்களில் சிறுவர்கள் பனம்பழம் தின்னும்போது அதன் முனையைப் ‘பார்ப்பான் முனை’ என்றும் மற்றொரு முனையைப் ‘பறையன் முனை’ என்றும் கேலி செய்வதுண்டு. இப்பழம் பற்றிய குறியீடு இரு சாதியரும் ஒரு தொழிற்களத்தில் இருந்ததைக் குறிப்பதாகும்.

வழக்காறு 17: திருவாரூர் கோயில் விழாவின் போது பறையர் ஒருவர் யானை மீதமர்ந்து கொடிபிடித்துச் செல்லும் வழக்கம் அண்மைக்காலம் வரை நடைமுறையில் இருந்திருக்கிறது. பார்ப்பனரையும், பறையரையும் தொடர்புபடுத்தும் கதையும் நடைமுறையும் இக்கோவிலில் சில ஆண்டுகள் முன்பு வரை வழக்கில் இருந்துள்ளது.
ஒரு நாள் திருவாரூர்க் கோயிலுக்குள் பார்ப்பனர்கள் யாகம் செய்து கொண்டிருந்தனர். அதே வேள்வியின் பயனாக சிவபெருமான், ஒரு பறை மகன் வேடத்தில் செத்த கன்றுக்குட்டியைத் தோளில் போட்டுக் கொண்டு வேள்விக் கூட்டத்திற்குள் வந்து விட்டார். வந்தவர் சிவபெருமான் என்பதை உணராத பார்ப்பனர் ‘பறையன் உள்ளே வந்துவிட்டான், யாகம் தீட்டுப்பட்டு விட்டது என்று கத்திக்கொண்டே வெளியே ஓடிவிட்டனர். சினங்கொண்ட சிவபெருமான் ‘நீங்களும் பறையன் ஆகுங்கள்’ என்று சாபம் கொடுத்துவிட்டார்.

சாபத்திலிருந்து விமோசனம் ஆகுமாறு பார்ப்பனர்கள் கெஞ்சினர். மனம் இறங்கிய சிவபெருமான் நிரந்தரமாகப் பறையனாவதற்குப் பதில் நாள் தோறும் நண்பகல் ‘முதல் ஒரு நாழிகை நேரம்’ மட்டும் பறையனாய் இருப்பீர்களாக என்று சாப விமோசனம் தந்தார். அதன்படியே திருவாரூர்க் கோயில் பார்ப்பனர்கள் நண்பகலில் (மத்தியானம்) ஒரு நாழிகை நேரம் பறையர்களாகிவிடுகிறார்கள் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை. இதனால் திருவாரூர்க் கோயில் பார்ப்பனர்களுக்கு ‘மத்தியானப் பறையர்கள்’ என்ற பெயர் ஏற்பட்டது. பறையனானவர் மீண்டும் பார்ப்பனராக வேண்டுமென்றால் தீட்டுக் கழிக்க வேண்டும். எனவே திருவாரூர்க் கோயில் பார்ப்பனர்கள் மத்தியானம் ஒரு முறை குளிக்கும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர். இந்த வழக்கமும் அண்மைக் காலம் வரை நீடித்திருக்கிறது.
வழக்காறு 18: ஔவையார் வளர்த்த மூன்று பறையர் பெண்கள் திருக்கோவிலூர் மன்னனை மணந்து அவர்கள் வழிவந்தோரே உடையார் என்று தொன்மம் கூறுகிறது.

0

ஹரிஜன்

15245217_2பறையர்கள் / அத்தியாயம் 20

1936ல் ‘ஏலா’ என்ற இடத்தில் ஷெட்யூல்டு சாதியினர் மாநாடு அம்பேத்கர் தலைமையில் நடந்தது. இதில் தீண்டாமைக்கு எதிராக மதம் மாறுங்கள் என்றும், தான் இந்துவாகப் பிறந்தாலும் இந்துவாக சாகமாட்டேன் என்றும் அம்பேத்கர் கூறினார். இதனைத் தடுக்க மகாத்மா காந்தி சில உத்திகளைக் கையாண்டார். அதில் ஒன்று தான் 1938ல் ‘ஹரிஜன்’ என்ற சொல்லில் ஷெட்யூல்டு சாதியினரை அழைக்க வேண்டுமென்று சொல்லியது.

இச்சொல் கூடாதென்று அம்பேத்கர் கடுமையாக எதிர்த்தார். அரிசன் என்பதற்கு ‘கடவுளின் பிள்ளைகள்’ என்று பொருள். அன்றைய காங்கிரஸ் கட்சியில் தலைவராக இருந்த ஜெகஜீவன்ராமும் எதிர்த்தார்.

‘ ஹரிஜன் ’ என்ற சொல்லை நாங்கள் ஏற்க முடியாது. இது ஷெட்யூல்டு சாதி மக்களையும், மற்ற இந்துக்களையும் நிரந்தரமாகப் பிரித்து வைக்கவே செய்யும். அதனால் நன்மைக்குப் பதில் தீமையே விளையும் என்றும் சொன்னார். இதற்காக ஜெகஜீவன்ராமை கட்சியைவிட்டு விலகுமாறு நோட்டீசு அனுப்பப்பட்டது. அரிசன் என்ற சொல்லுக்கான எதிர்ப்பு நாடு முழுவதும் நீடித்தபோதும் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் கண்டுகொள்ளவில்லை.
மராட்டியம், பிகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநில அரசுகள் ‘ ஹரிஜன்’ என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என்று சட்டம் இயற்றியுள்ளன.

இந்தியாவின் பல பகுதிகளில் வாழ்ந்த தீண்டப்படாதார் பல பெயர்களில் தீண்டப்படாதாராக வாழ்ந்தாலும் காந்தி அவர்களுக்குப் பொதுவாக அளித்த ‘ஹரிஜன்’ என்ற புதுப்பெயர் இவர்களைத் தனியே ஒதுக்கிவைத்தது. அனைவராலும் எளிதாகக் கண்டறியச் செய்தது. தொடாமல் ஒதுக்கி வைக்கவும், புறந்தள்ளவும், அணுகவிடாமல் பார்க்காமல் தடுத்து நிறுத்தவும், மக்களோடு கலந்து வாழவிடாமலும் சுலபமாகத் தடுத்து வந்தது.
ஹரிஜனர் வழக்காறு:

1. அனுப்பர்களின் சாவுச் சடங்கில் கோடி வெள்ளிப் போடுதல் (பிணத்தின் மீது துணிப் போர்த்துதல்) உரிமையைக் கன்னட அரிசனங்கள் பெற்றுள்ளனர்.

2. தொட்டிய நாயக்கர்களும் தெலுங்கு ஹரிஜனங்களும் உடன் பிறந்தவர்கள். நாயக்கச் சகோதரர் இருவருள் இளையவர் கன்றுக்குட்டியைச் சமைத்து உண்டதால் ஹரிஜன் என விலக்கப்பட்டான்.

3. ஈஸ்வரன் களத்துமேட்டில் வேலை செய்தபோது நெற்றி வியர்வையைத் தென்னைமரத்தின் மீது தெளிக்க, அம்மரத்திலிருந்து ஹரிஜனர் வெளிப்பட்டனர்.

‘சமூக அந்தஸ்து கிடைக்காத நிலையில் ஹரிஜனங்கள் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பொருளாதார மற்றும் சமூக சமத்துவத்தைத் தராது நமது ஜனநாயகத்தின் கூரையை வேய்ந்து கொண்டே போவது வீண்’ என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பேசியுள்ளதை இங்கே பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம்.

ஹரிஜனங்களின் முன்னேற்றத்துக்கு காந்தி தன் வாழ்நாளின் பிற்காலத்தில் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினார்’ என்று காந்திஜியினுடைய சீடனும், முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யுமான ஸ்ரீநாராயண பிள்ளை குறிப்பிடுகிறார். அப்படியானால் காந்தியடிகள் தன் ஆரம்பகால அரசியல் வாழ்க்கையில் ஹரிஜன்களைப் பற்றி கவலை கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது.

0

பறையரைத் தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் குறிப்பிடுவர். ‘கொடிது கொடிது வறுமை கொடிது’ என்று பாடினார் ஔவையார். வறுமைக்கு ஒப்பான கொடுமை உடையது உலகில் என்றுதான் உள்ளது. அதுதான் வறுமை என்றார் வள்ளுவர். வறுமையின் கொடுமையை உணர்ந்த இவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் ஆவர். இன்னமும் தாழ்த்தப்பட்டவர்கள் பல உணவைச் சேகரித்து வாழும் நிலையிலிலிருந்து மேற்கொண்டு முன்னேறவில்லை.

மனிதர்களின் இருப்பு, இடம், காலமென்ற இருபெரும் பொருளால் வரையறுக்கப்படுகிறது. எனவே அதிகாரத்தை கட்டமைக்கிறவர்கள், தாங்கள் அதிகாரம் செலுத்துபவர்களின் நடமாடும் இடத்தை, காலத்தை வரையறைக்குள் கொண்டு வருவதில் கவனமாகச் செயல்படுகின்றனர். இந்தியச் சாதிச் சமுகத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் நடமாடும் வெளியை வரையறுப்பவர்கள் அதிகாரம் செலுத்தும் ஆதிக்கச் சாதியினரே.

ஒடுக்குமுறை அரசியலின் மற்றொரு அதிகாரத் தளம் பண்பாட்டுத் தளமாகும். ஒடுக்குகின்ற தன்னுடைய வாழ்க்கையின் பழக்க வழக்கங்களை உயர்ந்ததாகவும், ஒடுக்கப்படுகின்ற மக்களின் பழக்க வழக்கங்களைத் தாழ்ந்ததாகவும் புனைந்து அம்மக்களுக்கும் ஒருவிதத் தாழ்வு மனப்பான்மையை உளவியல் ரீதியாகவே வடிவமைத்து விடுவதில் வெற்றி அடைந்து விடுகிறது.

பொருள் ஆதாரத்தைப் பறிப்பது, வேலைப்பிரிவினை அமைப்பது, நடமாடும் வெளியை வரையறுப்பது, மொழியைப் பிடுங்குவது, கல்வியைப் பறிப்பது முதலிய பல தந்திரங்களை ஆதிக்கச் சாதியினர் கையாண்டுள்ளனர். அதனால் தாழ்த்தி வைக்கப்பட்டவன் தாழ்த்தப்பட்டவனாகவே இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

‘இந்தியர்களே அறியாமை இருளில் மூழ்கியுள்ள, கல்வி அறிவு இல்லாத அந்தத் தாழ்த்தப்பட்ட இனத்தவர்களை மறந்து விடாதீர்கள்! அவர்கள் என் சகோதரர்கள்’ என்றார் விவேகானந்தர். அவர் போதனை ஏற்கப்பட்டுள்ளதா?

0

பாரசீக எல்லையிலிருந்து கிழக்கே வங்காள விரிகுடாக் கடல் வரை இந்திய சாம்ராஜ்யத்தை விஸ்தரித்த மாபெரும் முதற்பெரும் மன்னர் சந்திரகுபதர். இவர் தாய்வழியில் தாழ்த்தப்பட்டவர் என்று சில நூலாசிரியர்கள் கூறுகிறார்கள். இவர்களின் கருத்துப்படி, ராஜவம்சத்தில் பிறந்த சந்திரகுப்தரின் தந்தை ‘மௌரா’ என்னும் தாழ்த்தப்பட்ட பெண்ணிடம் காதல் வயப்பட, அவர்களுக்குப் பிறந்தவர்தான் சந்திரகுப்தர் என்றும், ‘மௌரா’ என்கிற பெயரிலிருந்துதான் ‘மௌரிய’ என்பது வந்தது என்றும் சொல்லப்படுகிறது.

சந்திரகுப்தரும், நந்த மன்னர்களும் பங்காளிகள் என்பதால் இவர்களுக்கிடையே நடந்த பங்காளிச் சண்டையால் நந்தர்களின் ஆட்சியை அழித்து மௌரியர் ஆட்சி தொடங்கியது என்றும் சொல்லப்படுகிறது.

இந்தியாவின் வரலாற்றிலேயே ஒரே ஒரு காலகட்டம்தான் சுதந்தரமும் பெருமையும் புகழும் கொண்டதாக இருக்கிறது. அது மெரியப் பேரரசின் காலமே. மற்ற காலங்களில் எல்லாம் தேசம் தோல்வியில் துவண்டு கிடந்தது. அது ஏன்? மௌரியர் காலத்தில் நான்கு வர்ண அமைப்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டது. மக்களில் பெரும்பான்மையினரான சூத்திரர்கள் அப்பொழுதுதான் தங்களுக்குரிய நிலையை எட்டினார்கள் – நாட்டின் ஆட்சியாளர் ஆனார்கள். இந்த நாட்டின் பெரும்பான்மையினரான மக்களின் அவல நிலைக்குக் காரணமான நால்வர்ண அமைப்பு மேலோங்கிய காலம் – தோல்வியும் அறியாமை இருளும் மேலோங்கிய காலம்.

சங்ககாலத் தமிழர் கல்வியின் சிறப்பை நன்கு உணர்ந்திருந்தனர். கல்வியைப் பற்றிப் பேசும் அதிகாரங்கள் நான்கு திருக்குறளில் சேர்க்கப்பட்டுள்ளன (குறள் 40-43 அதிகாரங்கள்). குற்றமறக் கற்க வேண்டுமென்றும், கற்றபின் தாம் கற்ற வழியே நடக்க வேண்டும் என்றும், கல்வி கற்க கற்க அறிவு சுரந்துகொண்டே போகும் என்றும், கல்வி கற்ற ஒருவனுக்கு உலகம் முழுவதும் தன் சொந்த ஊராகவே தோன்றும் என்றும், கல்விச் செல்வம் ஒன்றே அழியாச் செல்வமாம் என்றும், கல்லாதவன் மேனியழகு ஒர் பொம்மையின் அழகுக்கு நிகராம் என்றும், கல்வியை விடக் கேள்வியே மேம்பட்டதென்றும், யார் யார் என்ன சொன்னாலும், அதை ஆராய்ந்து அதனுள் காணக்கூடிய உண்மையை ஓர்வதே நல்லறிவு என்றும் திருவள்ளுவர் வலியுறுத்துகின்றார்.

கல்வி பயிலும் உரிமை சங்க காலத்தில் தனிப்பட்ட ஒரு சிலரின் உரிமையாக இருந்ததில்லை. எக்குலத்தைச் சார்ந்தவர்களும், செல்வர்களும், வறியோரும், மன்னரும், எளிய குடிமக்களும் ஆகிய ஆண்களும் பெண்களும் கல்வியைத் தேடிப் பெற்றனர்.  பல குலத்தைச் சார்ந்த புலவர்கள் தமிழகமெங்கும் உலவிவந்தனர். அதன்பின் வேத நெறியைப் பின்பற்றிய பார்ப்பனர்கள் தங்கள் தலைமையைத் தக்க வைத்துக்கொள்ள கையாண்ட மிகக் கடுமையான வழிகளில் ஒன்றுதான் கல்வியைத் தமது தனியுடமையாக்க முயன்ற முயற்சியாகும். பார்ப்பனர்களின் இம்முயற்சியை மனிதநேயம் கொண்ட அனைவரும் கண்டித்துள்ளனர் என்பதும் வரலாற்று உண்மையாகும்.

புத்தருக்கும் லோகித்யன் என்ற பார்ப்பனுக்கும் நடந்த உரையாடல் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கல்வி பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியது என்ற கருத்தை வற்புறுத்தியும், பரப்பியும் வந்த லோகித்யனை வாதத்தில் வென்றதுடன், கல்வி மக்களின் பொதுச் சொத்து என்றும் அப்பொதுச்சொத்தைத் தனதாக்கிக் கொள்பவன் கள்வனாகத்தான் இருக்க முடியும் என்றும் விளக்கி அவனை ஏற்கும்படிச் செய்தார் புத்தர்.

இந்தியாவில் நெடிய வரலாற்றில் பார்ப்பனீயத்தை வெளிப்படையாகப் புறக்கணித்த அரசர்கள் இருவர் மட்டுமே. அவர்கள் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனும், 20ம் நூற்றாண்டில் கோல்காப்பூர் அரசராக விளங்கியவரும் சத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றலுமாகிய சாகு மகாராசாவும் ஆவர். கல்வி கற்பதிலும், அரச பொறுப்புக்களை வழங்குவதிலும், செல்வத்தைச் சேமிப்பதிலும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு விதிகளை மீறி, தடைகளை உடைத்துச் செயல்பட்ட காரணத்தால் கண்ணகியைச் சாக்காக வைத்துப் பார்ப்பனர்கள் மதுரையை எரித்தனர். நெருப்புக் கடவுள் பார்ப்பனக் கோலத்தில் வந்து மதுரையை எரித்தது என்பதற்கு வேறு என்ன பொருள் இருக்க முடியும்?

பௌத்தர்களின் நாலந்தர் பல்கலைக்கழகத்தைப் பல்லாயிரம் மாணவர்கள் தங்கிப் படித்த அக்கல்வி நிலையத்தை இரவோடு இரவாகப் பார்ப்பனர்கள் தீயிட்டு கொளுத்தியும், மதுரையில் சமணர்களோடு அனல்வாதமும், புனல்வாதமும் நடத்தி அவர்களின் நூல்களை அழித்து பிறர் கல்வி கற்பதை தடுத்து நிறுத்த முயன்ற செய்தியை வரலாற்றில் நாம் அறிகின்றோம்.

0

வெட்டியான் முதல் ஹரிஜன் வரை

imagesபறையர்கள் / அத்தியாயம் 19

இனி வெட்டியான் என்று அழைக்கப்படும் பிரிவினரைப் பற்றிப் பார்ப்போம்.
வெட்டியான்: உறவினர் அனைவரும் தங்கள் பற்றை உடல் அளவில் துறந்து உறவை வெட்டிவிடும் வேளையில் பிணத்துக்கும் தனக்கும் இடையே வெட்ட முடியாத பணிப்பிணைப்பை ஏற்படுத்திக் கொள்பவன்தான் வெட்டியான். பிணம் எரிவதற்கான குறுகிய நேரம்தான் இவனது பணிக்காலம் என்றாலும் இப்பணியின் பொழுது இவன் சற்றும் விலகிவர முடியாது.

வெட்டு, வெட்டி என்ற வேர்ச் சொற்களிலிருந்து பிறந்தது வெட்டியான் என்ற சொல். ‘வெட்டி என்பதற்கு வீண், பயனற்றது, பொழுதை வெட்டியாகக் கழிக்காதே, வெட்டிப்பேச்சு’ (ந.சி. கந்தையாப்பிள்ளை. செந்தமிழ் அகராதி. 1957) எனப்பல அகராதிகளும் பொருள் தருகின்றன. இதிலிருந்து பிறந்த வெட்டியான் என்பதற்கு ‘கிராம ஊழியர், பிணம் எரிப்பவர்’ எனப் பொருள் அறியப்படுகின்றது.உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு (குறள் 339)என்னும் குறள், யாக்கை நிலையாமையைக் குறிப்பிடுகின்றது. நாம் உயிருடன் வாழும் காலத்தில் நற்பண்புகளிலிருந்து வழுவாமல் வாழ வேண்டும் என்பதை அறிவுறுத்தவே பல நிலையாமைக் கருத்துகளை எடுத்துக் காட்டுகின்றனர். உடம்பினின்று உயிர் பிரிந்து விட்டால் இவ்வுடம்பால் யாதொரு பயனுமில்லை. எனவே வெட்டியான் அல்லது வீணான உடல் என்றாகி விடுகின்றது. இவ்வாறாகிவிட்ட உடலைப் பொறுமையுடன் பொறுப்புணர்வுடன் போதிய நேரம் எடுத்துக் கொண்டு எரிக்கின்றதால் தான், இத்தொழில் புரிவோனுக்கு ‘வெட்டியான்’ என்ற பெயர் ஏற்பட்டுள்ளது போலும். எனவே இத்தொழிலை வெட்டித்தொழில் அதாவது அழிந்த ஒன்றை மேலும் அழிப்பதற்கு எடுத்துக்கொள்ளும் வெட்டி முயற்சி எனக் கூறலாம்.

வெட்டியான்: ‘விருஷ்டி’ என்ற சமஸ்கிருத சொல்லிலிருந்துதான் ‘வெட்டி’ என்ற சொல் வந்திருக்கும். வீணான-பயனற்ற வேலை செய்பவர்களை இன்று கூட ‘வெட்டி வேலை செய்பவர்’ என்றுதான் சொல்கிறோம். மன்னர்கள் காலத்தில் இந்த வேலையினை செய்யாவிட்டால் தண்டனை உண்டு; செய்தால் கூலி இல்லை. கோயில்கள் கூட இப்படித்தான் கட்டப்பட்டிருக்கக் கூடும். காவிரிக் கரையை உயர்த்துவதற்கு இத்தகைய வேலையே வாங்கப்பட்டிருக்கிறது. கோயில்களில் வேலை செய்யாதவர்களை ‘சிவத் தூரோகி’ என்று கூறி தண்டனைகள் தரப்பட்டிருக்கின்றன. கோயில்களுக்குச் சென்று; இருந்த நிலங்களின் உழைக்க வேண்டும். ஆனால் கூலி இருக்காது. கடவுளிடத்தில் போய் பேரம் பேச முடியாது.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னன் 64 வகை ஊழியர்களை வைத்திருந்திருக்கிறான். ஊழியம் என்றால் வெட்டி வேலை. உப்பு ஊழியம், யானை ஊழியம், ஓலை ஊழியம் என்று பல ஊழியங்கள் உண்டு. யானை ஊழியம் என்பது யானைக்கு மட்டை வெட்டிப் போடுவது அன்றைக்கு யாருடைய முறையோ அவர்கள் கண்டிப்பாக ஊழியத்தை செய்ய வேண்டும். இல்லை என்றால் தண்டனை உண்டு. ஆனால் வேலைக்கு ஏற்ற ஊதியமோ, ஓலைக்கு கிரயமோ தர மாட்டார்கள். ஓலை ஊழியம் என்பது ஓலையை வெட்டி எழுதுவதற்கேற்ப பதப்படுத்தி, சீவி அரசு அலுவலகங்களில் சேர்க்க வேண்டும். நேற்றைய ஓலையில் இன்று எழுத முடியாது. அன்றே தயாரித்தால்தான் எழுத முடியும். இது ஓலை ஊழியம்.

உப்பு ஊழியம் என்பது தாமரைக் குளத்தில் எடுக்கப்பட்ட உப்பை நாகர்கோவிலில் உள்ள  நாகராஜா கோயிலுக்கும், கன்னியாகுமரியில் உள்ள சுசீந்திரம் கோயிலுக்கும் கொண்டு போய் கொடுப்பது. இந்த மாதிரியான ஊழியங்களும், வெட்டி வேலைகளும், பண்பாட்டு ஒடுக்குமுறைகளும், பொருளாதார சுரண்டல்களும் மன்னராட்சியில் இருந்தன. அங்கு ஜனநாயகம் கிடையாது.

சோழர் காலத்தில் இறுக்கமாகி, விஜய நகர காலத்தில் ‘தீண்டாமை’ முற்றுப் பெற்றிருக்கிறது. சோழர்காலத்தில் பார்ப்பனர் – வேளாளர் கூட்டாக இருந்து வேலை செய்திருக்கிறார்கள். பரஸ்பரம் ஒருவரை ஒருவர் காப்பாற்றிக் கொள்வது.

மேற்கண்ட வேலைகளை செய்பவர்கள் பொதுவாக வெட்டியான் என்றழைக்கப்பட்டனர் போலும்.

0

பறையர்களை ‘காலனிக்காரர்’ என்ற சொல்லாலும் குறிக்கப்படுகின்றனர். இப்படி ஆதிக்க சமூகத்தினர் குறிப்பதின் பொருள் என்ன என்பது எங்களுக்கு விளங்கவில்லை. அவர்களுக்கும் அது விளங்காதென்பது எங்களுக்கும் விளங்கும்.

நகர நாகரிக வளர்ச்சிமிக்க இக்காலத்தில் பல இடங்களில் புதிய புதிய வாழ்விடத் தொகுதிகள் அமைக்கப்படுகின்றன. இவற்றை ஆங்கிலத்தில் காலனி என்னும் சொல்லால் குறிப்பிடுவது வழக்கமாக இருக்கிறது. இத்தகைய இடங்களைச் சுட்டுவதற்கு நாம் ‘குடியிருப்பு’ எனும் சொல்லைப் படைத்து வழங்கத் தொடங்கியிருக்கிறோம். தனக்கென தனி அமைப்புகளைப் பெற்றிருப்பதாலேயே அவ்வாறு வழங்கப்படுகிறது.

சுந்தரர் காலத்திலோ அதற்கு (கி.பி. 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் சுந்தரமூர்த்தி நாயனார் ஆவார்) முன்னோ தமிழ்நாட்டில் வலங்கையர் (முற்பட்ட சாதியினர்) 98 பிரிவினரும், இடங்கையர் (பிற்பட்ட சாதியினர்) 98 பிரிவினரும் அணி திரண்டு உரிமைக் கோரிப் போரிட்டனர் என்று பேராசிரியர் நா.வானமாமலை தமது நூலில் (தமிழர் பண்பாடும் வரலாறும்) கூறியுள்ளார்.

நிலப்பட்டம், குடை கொடி பந்தம் முதலிய விருதுச் சின்னங்கள்; வெண்கவசி வீச்சு, சிவிகை, குதிரை முதலிய ஊர்தி; மேளவகை, தாரை வாங்க முதலிய ஊதிகள்; வல்லவாட்டி, செருப்பு ஆகியவை பற்றிக் குலங்களுக்கிடையே பிணக்கும் சச்சரவுகள் ஏற்பட்டதனால் கரிகாலன் என்னும் பெயர் கொண்டிருந்த வீர ராசேந்திரச் சோழன் (1063-69) அந்த வழக்கைத் தீர்த்து வைத்ததாகத் தெரிகின்றது.

சோழனுக்கு வலக்கைப் பக்கம் அமைந்திருந்த குலத்தார் வலங்கையர் என்றும், இடக்கைப் பக்கம் அமர்ந்திருந்த குலத்தார் இடங்கையர் என்றும் பெயர் பெற்றதாக உய்த்துணரலாம்.
சோழராட்சிக்குப் பின் பல்வேறு அரசுகள் ஏற்பட்டதனாலும் பல புதுக் குலங்கள் தோன்றியதனாலும் ஆங்கிலேயர் அரசாட்சிக் காலத்தில் மீண்டும் வலங்கை இடங்கைச் சச்சரவு கிளர்ந்தெழுந்தது. 1809ம் ஆண்டு ஜூலை மாதம் 25ம் தேதி பக்கவ், செங்கழுநீர்ப்பட்டு மாவட்ட நயன்மைத் தீர்ப்பாளர் சார்சு கோல்மன்  துரை அவ்வழக்கைத் தீர்த்து ஒவ்வொரு குலத்தார்க்கும் உரியவற்றைத் திட்டம் செய்தார். அவ்வகையில் பறையர்கள் வலங்கைக் குலங்களில் இடம் பெற்றிருந்தனர்.

0

நேர தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ‘ஹரிசனங்கள்’ என்று 1931ல் காந்தியடிகள் பெயரிட்டபோதே சர்ச்சைகள் எழுந்தன. அவற்றுக்குப் பதிலளிக்கும் வகையில் காந்தியடிகள் இவ்வாறு விளக்கம் அளித்தார். ‘தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு நபர் எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘எங்கள் குலத்தவர்களை அந்நியஜாஸ்’ என்று குறிப்பிடுவது எங்களை அவமானப்படுத்துவதாக உள்ளது மாறாக, நீங்கள் ஏதாகிலும் ஓர் புதிய பெயரை புனைந்தளியுங்களேன்’ என்று வேண்டுகோள் விடுத்தார். அதற்கு முன்பாக வழக்கிலிருந்து ‘பங்கிகள்’, ‘பறையர்கள்’ பெயர்களும் தாழ்த்தப்பட்டோருக்குப் பிடித்தமில்லாமலிருந்தது’ ஆகவே ‘அந்நியஜாஸ்’ (கடைசி மக்கள்) என்ற பெயரில் குறிப்பிடப்பட்டனர்.

சுவாமி சிரத்தானந்தர்தான் முதன் முதலில் ‘தலித்’ என்ற பெயரை உபயோகித்தார் என்று நினைக்கிறேன். என்னைக் கேட்டால், தீண்டாமை எனும் கொடிய நச்சு நமது சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் வரை எந்தப் புதுப் பெயரும் சில காலத்திற்குப் பிறகு வெறுக்கத்தக்கதாகிவிடும். எது எப்படியோ, அந்தியஜாஸ் அல்லது தலித் என்ற சொற்களுக்குப் பதிலாக வேறு தகுந்த பெயரை எவரேனும் சிபாரிசு செய்து எனக்கு எழுதுங்கள் என்று ‘நவஜீவன்’ (07.06.1931) இதழில் கேட்டிருந்தேன். பலர் பல்வேறு பெயர்களைப் பரிந்துரைத்தனர். ராஜ் கோட்டைச் சேர்ந்த ஜகந்நாத் தேசாய் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினர், ‘ஹரிஜன்’ என்கிற பெயரைப் பிரஸ்தாபித்து எனக்கு எழுதிய கடிதத்தில் ‘பல கிராமங்களில் ஏற்கனவே ‘ஹரிஜனா’ என்ற பெயர் வழக்கில் உள்ளது. மேலும் மிகச்சிறந்த குஜராத்தி பக்திக் கவிஞரான நரசிங் மேத்தா தமது அந்தியஜா பக்தர்களை ஹரிஜனங்கள் (திருமாலின் புத்திரர்கள் – கடவுளின் குழந்தைகள்) என்று குறிப்பிட்டு வந்தார்’ என விளக்கமாக எழுதியிருந்தார்.

ஆகவே, ‘ஹரிஜன்’ என்ற சொல் புதிதல்ல, குஜராத்தி பக்தி கீதங்களின் பிதாவாகக் கருதப்படும் நரசிங் மேத்தாவினால் ஏற்கெவே புனையப்பட்டது. தவிர ‘சமூகத்தால் கைவிடப்பட்ட ஜனங்களும் ஹரியின் மக்களே’ என்ற அர்த்தமும் அப்பெயரில் தொனிக்கிறது’ (அரிசன் 07.06.1931).

1946, பிப்ரவரி 4 அன்று உளுந்தூர் பேட்டை ரயில் நிலையத்தில் மகாத்மா காந்தி பேசுகையில் ‘ஹரிஜன சேவையில் நான் தொடர்ந்து ஈடுபட்டு வருவதன் பொருட்டு எனக்கு 125 வருட ஆயுசு அருளுங்கள் இறைவா’ என்பதே எனது பிரார்த்தனை. நீங்களெல்லாம் தீண்டாமை எனும் பாவத்தைக் களைத்தெறியாத வரை நமக்கு மெய்யான சுயராஜ்யம் கிட்டாது; நமது மதமும் வெகுநாள் நீடிக்காது’ என்று அறிவுறுத்தினார். (தி ஹிந்து 04.02.1946).

‘பெயரில் என்ன இருக்கிறது?’ என்ற தலைப்பில் தமது 14.04.1946 தேதியிட்ட ‘அரிஜன்’ வார இதழில் மகாத்மா காந்தி இவ்வாறு எழுதியிருக்கிறார். ‘ஹரிஜன் என்ற பெயர் புனிதம் வாய்ந்தது. ஒரு தாழ்த்தப்பட்ட நபரால் பிரஸ்தாபிக்கப்பட்டது. சிறந்த பக்திக் கவிஞரால் ஏற்கெனவே ஏற்கப்பட்ட பெயர் அது. எப்பெயராயினும் தாழ்மை மனப்பான்மை அகல வேண்டும் என்பதே முக்கியம். அது இன்று வரை மிக மிக மெதுவாகத்தான் அகன்று வருகின்றது.

ஒவ்வொரு இந்துவும் உயர்வு-தாழ்வு மனப்பான்மையை உள்ளார்ந்த உணர்ச்சியுடன் அறவே விலக்கிக் கொண்டு நடைமுறையில் அனைவருமே ஹரிஜனங்களாக மாற வேண்டும். அப்போது நாம் எல்லோருமே கடவுளின் மெய்யான குழதைகளாகி விடுவோம். அதுவே ‘ஹரிஜன்’ என்பதன் மெய்ப்பொருள்.

காந்தியாரின் இக் கருத்தை ஏற்று ‘அரிஜன்’ ஆக விருப்பமுள்ளோர் இம் மனித கூட்டத்தில் யாரேனும் உண்டா? சோத்துக்கே வக்கில்லை என்றாலும் கூட அவனுடைய சொந்த சாதியை விட எந்த ஆதிக்கச் சாதியாவது தயாரா?

0

பறையர்களும் சில பெயர்களும்

imagesபறையர்கள் / அத்தியாயம் 18

தமிழகத்தில் வேளாண்மையை மட்டும் குலத்தொழிலாகக் கொண்டவர்களைத் தான் ஆதிக்குடியினர் எனக் கொள்ளலாம். இவர்கள் உழவுப்பறையரென்றும், நெசவுப் பறையரென்றும் அழைக்கப்பட்டனர். வேளாண்மையைத் தொழிலாகக் கொண்டு பிறந்த மண்னை முதன் முதலில் உழுது வந்தவர்களை ஆதிக்குடியினர் அல்லது முதல் குடியினர் எனக் கூறுகிறோம். இவர்கள் மண்னை உழுதுண்டு வாழ்ந்த மண்ணின் மைந்தர்கள். இந்த இனங்கள் மண்ணை வாழ்விடமாகக் கொண்டதால்தான் அதை வைத்து உழுது பிழைத்துள்ளார்கள். இவர்களது உழவுத் தொழிலுக்கும் பின்னர்தான் மற்றத் தொழில்கள் பிறந்துள்ளன.

பறையருக்கு தலையாரி, தண்டாசி என்ற பெயர்கள் உண்டு. தலையாரி என்பவன் நிலங்களின் எல்லையை நன்கு அறிந்திருந்தான். இதனால் மற்றச் சாதியினரைப் பார்க்கப் பறையன் நெடுங்காலம் நாட்டில் வாழ்ந்து வருகிறான் என்று அறியப்படுகிறது.

பறையர், ஆதிதிராவிடர், பழங்குடி மக்கள், பழந்தமிழர், பச்சைத் தமிழர், கலப்பில்லாத தமிழ்க்குடியினர். ஸ்ரீ ராமானுஜரால் திருக்குலத்தார் (புனித குடும்பத்தை சார்ந்தவர்கள்) என்றும், காந்தியடிகளால் ஹரிஜன் (கடவுளின் குழந்தைகள்) என்றும் அழைக்கப்படுகிறார்கள். திருவாரூர், தியாகராசர் கோயிலோடு தொடர்பு கொண்ட பறையரை ‘யானை ஏறும் பெரும் பறையர்’ என்று அழைக்கின்றனர்.

உழவுப் பறையர், நெசவுப் பறையர், கோட்டைப் பறையர், கோட்டாகாரர் பறையர், முரசுப் பறையர், அரிப்புக்காரப் பறையர், கோலியப் பறையர், கட்டிப்பறையர், குடிப்பறையர், வேளாப் பறையர், அம்புப் பறையர், வள்ளுவப் பறையர், தீப் பறையர், கொங்குப் பறையர், சோழியப் பறையர், கிழக்கிந்திய பறையர், பந்தல் முட்டிப் பறையர், பூவன் பறையன் என்று பறையரை வகைப்படுத்துவர். இவற்றின் விரிவைக் கீழே காண்போம்.

தமிழ்நாட்டுக் கோயில்களின் திருவிழாக்களில் பறையர்களுக்கு ராஜ மரியாதைகளைப் பெற்று வந்துள்ளனர். பறையர்களில் ஒரு பிரிவினரான ‘கோட்டைப் பறையன்’ என்பவர்களே. தங்களுக்கென கோட்டையை வைத்திருந்ததை தங்கள் பெயர்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.

இன்னொரு பிரிவினர் தங்களைக் கோட்டைக்கார பறையர் எனக் கூறிக் கொண்டுள்ளனர். இப்பிரிவினர் குதிரைத் தொழுவங்களை வைத்துக் குதிரைகளை வளர்த்து வந்துள்ளனர் என்பது தெரிகிறது.

இன்னொரு பிரிவினர் படையில் முரசு கொட்டியதால் ‘முரசு பறையர்’ என்ற பெயர் பெற்றுள்ளனர். படை நடத்தும்போது இம்மக்கள் வெற்றி முரசு கொட்டுபவர்களாகவும் இருந்துள்ளனர். முரசுக்கு எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது என்பதை மோசி கீரனாருடைய பாடலிலிருந்தும், வரலாற்றிலிருந்தும் அறியலாம்.

தமிழகத்தில் பறையர்கள் பல தொழில்களையும் ஆற்றிவந்துள்ளனர். இருப்பினும் இவர்களில் பெரும்பாலோர் ‘உழவுப் பறையர்கள்’ என்று அழைக்கப்பட்டுள்ளனர். உழுது பயிரிடுதல் இவர்களுடைய முதன்மைத் தொழிலாக இருந்துள்ளது. இவர்களில் சொத்துள்ளவர்கள் நிலவரி கட்டி வந்துள்ளனர். இந்த இனத்தவர்களில் ‘தலையாரி’ என்பவர்கள் குளங்களிலிருந்து பாசன வாய்க்கால்களுக்கு தண்ணிர் திறந்து விடுபவர்களாகப் பணி புரிந்துள்ளனர். இவர்களில் ஒரு சிலர் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் தறிக்குப் ‘பறைதறி’ என்று பெயர் இருந்தது. இவர்கள் ‘நெசவுப் பறையர்’ என அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது செலுத்தப்பட்ட வரிக்கு ‘பறைதறி இறை’ என வழங்கப்பட்டு வந்துள்ளது.

கி.பி. 1665ம் ஆண்டின் செப்பேடுபடி ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்த பறையர்கள் தாங்கள் அனுபவித்து வந்த வெள்ளைக் குதிரையைப் பயன்படுத்தும் பழக்கத்துக்கு வாதாடி வந்துள்ளனர். அத்தோடு தாங்கள் அனுபவித்து வந்த பதினாறுகால் பந்தல், மூன்று தேர்கள், பதினெட்டு வகை இசைக்கருவிகள் போன்றவையும் பயன்படுத்த உரிமை வேண்டினர். இந்த உரிமைகளை அவர்களுக்கு அளிக்க வேண்டாமென அப்பகுதி குரும்பர்கள் எதிர்ப்புக் கிளம்பி வந்தனர். இந்தப் பறையர்கள் மொத்தம் 348 குலங்கள் இருந்தன. இவர்கள் குலங்கள் யாவும் தொழிற் பெயர்களாகவும் இருந்தன.

தங்கம் எடுப்பவர் ‘அரிப்புக்கார பறையர்கள்’, நெல் விளைவிப்பவர் ‘உழவுப் பறையரென்றும்’ நெசவு செய்பவர் ‘கோலியப் பறையரென்றும், இரும்பை உருக்குபவர் ‘கட்டிப் பறையரென்றும்’, முடித்திருத்துவோர் ‘குடிப்பறையரென்றும்’, துப்புரவு செய்பவர் ‘வேளாப் பறையரென்றும்’, வேட்டையாடுபவர் ‘அம்புப் பறையரென்றும்’, முரசு அறிவிப்பவர் ‘முரசுப் பறையரென்றும்’, நிமித்தம் சொல்லுபவர் ‘வள்ளுவப் பறையரென்றும்’, கள்ளெடுப்பவர் ‘தீப் பறையரென்றும்’, வழங்குவதோடு, ‘கொங்குப் பறையர்’ என்போர் சோழ நாட்டவரென்றும், ‘கிழக்கிந்தியப் பறையர்’ செலத்தவரென்றும், ‘பந்தல் முட்டிப் பறையர்’ பானைகளை பந்தல் அளவு உயர்த்தி வைத்துத் திருமணம் செய்தவரென்றும் பெயர் கொண்டிருந்தனர். இவ்வாறு 1891ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி பறையர்கள் என்று 348 பிரிவினரைக் குறிப்பிடுகின்றனர்.

‘பூவன் பறையன்’ என்பவன், பாசன வாய்க்கால் ஒன்றை வெட்டிக் கொடுத்து அரையண் அணுகன் என்ற பட்டப் பெயரைப் பெற்றுள்ளான். பூவன் பறையன் என்பவன் சோழ மன்னனின் மெய்க்காப்பாளர்களில் ஒருவனாக இருந்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. பூவன் வெட்டித்தந்த வாய்க்காலுக்கு பூவன் வாய்க்கால் என்று பெயர் பெற்றுள்ளது. இந்த இனத்தவர்களில் சிலர் சோழர், பாண்டியர்களின் படைகளில் படைவீரர்களாக இருந்திருக்கின்றனர். இவர்கள் வலங்கை மாந்தர் என அழைக்கப்பட்டுள்ளனர். முதலாம் ராசராச சோழன் காலத்தில் இம்மக்கள் அடங்கிய படைக்கு வலங்கை வெள்ளைக்கார சேனை என்று பெயர் இருந்தது. இவர்களது படைத்திறமையைக் கண்டு ஆங்கிலேயர்கள் இவர்களைக் கொண்டு ஒரு தனி ராணுவப் பிரிவை உருவாக்கியுள்ளார்கள் எனத் தெரிகிறது.

கி.பி. 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நடுக்கல்லில் ‘சாக்கைப் பறையனார்’ என்ற பெயரும், மற்றொரு நடுக்கல்லில் ‘பறையன் புளியனேன்’ என்ற பெயரும் காணப்படுகிறது. இந்த வீரர்கள் நாடு காக்கவும், மாடு காக்கவும் வேண்டி தம் புகழ் நிறுத்தி மாய்ந்தனர்.
சங்க இலக்கியத்தில் ஒரு இசைக்குடியாக இடம் பெற்ற பறையர், பிற்காலத்தில் போர் வீரர்களாகவும், காவலர்களாகவும் விளங்கியுள்ளனர். கலைத் தொழிலில் ஈடுபட்ட பறையர்கள் தமிழ்நாட்டுப் புராதன குடிகள். இவர்கள் தமிழ் நாட்டில் பறையரென்றும், வட நாட்டில் மாலமாதிகரென்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஒரு காலத்தில் பலமுள்ள கூட்டத்தினராக இருந்தனர். பறையர்களில் பல வகுப்புகள் உண்டு. (ஏற்கெனவே கூறப்பட்டுள்ள பறையர்-பெயர்கள் கீழே வருவதால் ஒரே பெயர் இருமுறை வருவதாக எண்ண வேண்டாம். ஏனெனில் இருவேறு ஆசிரியர்களுடைய ஆய்வை அப்படியே கொடுத்துள்ளேன்).

அம்மபறையன், கட்டிப்பறையன், கீழ்க்கட்டி, கோலியாண், கொங்கு, கொறம், கோட்டை, முரசு, மொட்டை, பச்சை, சாம்பன், சங்கு, சோழியன், தங்கலான், வலங்கமத்து, அறுத்துக் கட்டாதவர், வலை நாதன், இவர்களுள் கோலியன் – துணி நெய்வோன், வள்ளுவன் – பறையர்களுக்குப் புரோகிதன், மருத்துவன், உறுமிக்காரன், பம்பைக்காரன், பறையடிப்பவன், பொடராயன், வண்ணார வேலை செய்பவன்.

பறையர்கள் 9வது நூற்றாண்டின் பல்லவர் காலத்து உயர் பதவியில் இருந்ததாகத் தெரிகிறது.
சோழர் காலத்தில் பறையர் என்ற குலத்தைப் பற்றி இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் பல செய்திகள் கிடைக்கின்றன. பறையர்கள் தனித்தனி சேரிகளில் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கெனத் தனிச் சுடுகாடும் (இன்னும் அதே நிலைதான்) ஒதுக்கப்பட்டிருந்தது. ஏனைய குலத்தினரைப் போலவே அவர்கள் முழு சொத்துரிமை பெற்ற குடிகளாக வாழ்ந்தனர். கிராமத்தார்கள் எழுதிக் கொடுத்த ஆவணங்களில் பறையர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

சோழர் காலத்தில் தீண்டாதவர் என்றோ, சண்டாளர்கள் என்றோ இவர்கள் அழைக்கப்படவில்லை. ஆனால் ‘புல்லுப்பறிக்கிற பறையன்’ தாழ்ந்தவனாகக் கருதப்பட்டான். அத்துடன் புலையரும் சமூகத்தில் தாழ்ந்தவராகக் கொள்ளப்பட்டனர். இந்தக் குலத்தினருள் ‘ஊர்ப்பறையன்’ மண்டை சோமநாதன் ஏழிசை மோகப் படைச்சண்’ என்பான் ஒருவரு ராசராசன் காலத்தில் கோயிலில் சந்தி விளக்கு ஒன்று ஏற்றிவரத் தானம் அளித்துள்ளான். பறையடியான் ஒருவன் திருக்கழுக்குன்றம் கோயிலில் விளக்கு ஒன்று எரிக்க ஏற்பாடு செய்து வைத்தான். ஆனால் கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் திருக்கோவலூர்ப் பகுதியில் பறையர் மிகவும் இழிந்த நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

கூலி உழவர்களாகவும் கொத்தடிமைகளாகவும் திகழ்ந்த பறையர்களுள் ‘புல்லுப்பறிக்கும் பறையர்’ என்னும் புதுப்பிரிவு தோன்றியது. பிற்காலச் சோழப் பேரரசர்கள் படைகளில் உள்ள குதிரைகளுக்கும், யானைகளுக்கும் வேண்டிய புல்லை வழங்கியவர்கள் ‘புல்லுப் பறிக்கும் பறையர்’ ஆனர். அரசர்கள் மாறினாலும், அரசுகள் மாறினாலும் புல்லுப்பறிக்கும் அந்தத் தொழிலிலிருந்து மட்டும் அம்மக்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை.

தங்கலான் பறையர் என்ற பிரிவு ஒன்று இருந்தது. தங்கலான் என்பதற்கு ஊர்க்காவல் என்பது பெயர். தங்கலான் பறையர் சாதியைச் சேர்ந்தவர்கள் திருமணத்தில் மணமகளை அழைத்துக் கொண்டு மணமகன் தன் வீட்டுக்கு வரும் சமயம் அவனுடைய மைத்துனன் வாசலில் அவனை நிறுத்தி அவன் கால்விரலில் ஒரு மெட்டியினை அணிவிப்பான். அப்போது தனக்கு ஒரு மகள் பிறந்தால் அவளை, அவன் மகனுக்குக் கட்டி வைப்பதாக மணமகன் உறுதி கூறும்வரை அவன், மணமகன் பாதத்தைக் கிள்ளியபடி இருப்பான்.

தங்கலான் பறையர் சாதி சிறுமியர், முதன் முதல் பூப்படையும்போது நிகழ்த்தும் சடங்கில் அவளுடைய மாமன் மனைவி அல்லது அத்தை, புட்டு முடியப்பட்ட துணியினால் அவளை மொத்தியபடி அவளுக்கு ஒரு பெண் பிறக்குமானால் அவளைத் தன் மகனுக்கு மணம் செய்து வைப்பதாக உறுதி கூறும்படி வேண்டுவாள்.

பார்ப்பனர்களின் உட்குழு ஒன்று தன்னை ‘மத்தியானப் பறையர்’ என அழைத்துக் கொள்கின்றது. ஒவ்வொரு நாளும் நடுப்பகல் ஒரு மணி நேரத்துக்கு இவர்கள் பார்ப்பனத்தன்மையை இழந்து விடுவதாகவும், அந்த ஒரு மணி நேரம் முடிந்த பின்னரே மீண்டும் இவர்கள் பார்ப்பனர்களாக மாறுவதாகவும் ஐதீகம்.

பொதுவாகவே ‘ஐயன்’ என்னும் சொல் தந்தையைக் குறிக்க பறையர் ஆளும் சொல்லாகும். (ஐயன் என்னும் சொல் பறையரும், ஐயா என்னும் விளிவடிவம் பாண்டி நாட்டு வெள்ளாளர், முதலியார் முதலிய பல குலத்தாரும் தந்தையைக் குறிக்க ஆளும் சொல்லாகும்.
பறையருள் ‘தோட்டி’ என்ற பிரிவினர் உண்டு. இவர்கள் மேளம் அடிப்பவர்கள். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தோட்டிகளில் பெரும்பாலோர் மேளம் அடிப்பவரே. இன்றும் இவர்களின் குடும்பம் பெரும் தொகையினராக உள்ளனர்.

கோண்டுச் சமூகத்தில் இசைக்கருவியுடன் பாடும் பர்தான்களைப் ‘பாண’ என்றழைத்தனர். ‘பாண’ என்று குறிப்பது சங்க காலத் தமிழ்ச்சமூகத்தில் காணப்பட்ட பாணர்களை நினைவுப்படுத்துகிறது. கோண்டுகளிடம் ‘தோட்டி’ என்பவரும் அண்டி வாழ்கின்றனர். இன்றைய தமிழ்ச்சமூகத்திலும் தோட்டிகள் உள்ளனர். இத்தகு பிரிவினர் இருப்பது பழம்பெரும் வரலாற்றுத் தொடர்ச்சியைக் காட்டுகிறது. கோண்டுகள், வட இந்தியாவில் வாழும் பூர்வ திராவிடர்கள் ஆவர்.

தோட்டி மலை ஒன்று இருந்துள்ளதை அறிகிறோம். கடையேழு வள்ளல்களில் ஒருவன் நள்ளி. இவன் தோட்டி மலையின் தலைவன். இது பழனி மலையின் தென்கீழ்ப் பகுதியில் உள்ளது என்பர். பழனிமலையில் பழையர் என்பவர்கள் வாழ்கின்றனர். இந்த பழையருக்கும் பறையருக்கும் தொடர்பு உண்டு. பறையர்களின் ஒரு பிரிவான தோட்டியின் பெயராலே மேற்கண்ட தோட்டி மலை இருந்ததாகக் கொள்ளலாம்.

0