மூணார் உங்களை வரவேற்கிறது

dest112மூணார் – பெயரை கேட்கும்போதே குளிர்ச்சியும் பசுமையும் நெஞ்சில் நிழலாடுவது நிச்சயம். சிங்கார சென்னையின் வெயில் கொடுமையிலிருந்து (இரண்டு நாட்கள் மட்டுமே) தப்பிக்க சமீபத்தில் முதன்முறையாக மூணார் சென்று வந்த அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். பயணத்தில் நாட்டமுள்ளவர்களும், இயற்கையை ரசிக்கும் அனைவரும் கண்டிப்பாக சென்று பார்க்கவேண்டிய இடம் மூணார்.

Redbus.in இணையதளத்தின் மூலம் SMR பேருந்தில் முன்பதிவு செய்து என் வாழ்க்கையில் முதன்முறையாக கோயம்பேடு தனியார் பேருந்து நிலையம் சென்றடைந்தேன். அவ்விடத்தைப் பற்றியும், அங்கு நிலவிய காட்சிகளைப் பற்றியும் சொல்ல வார்த்தைகளோ, மனமோ எனக்கில்லை. இந்தப் பேருந்து தினமும் சென்னையிலிருந்து மூணார் செல்கிறது என்பது கூடுதல் தகவல்.

சென்னையிலிருந்து நேரடியாக மூணார் செல்ல பேருந்து மட்டுமே வசதியென்று தோன்றியது. இல்லையெனில், ரயில் மார்க்கமாக எர்ணாகுளம் சென்று இறங்கி செல்ல வேண்டும். விமானமென்றால் கொச்சின் சென்று அங்கிருந்து செல்ல வேண்டும். இதை தவிர்க்க நேரிடையான பேருந்தை செலக்ட் செய்தேன். ஆனால் விதி வலியதாயிற்றே!

வாரயிறுதி வந்துவிட்டால் அங்கிங்கெனாதபடி எங்குமே மக்கள் வெள்ளம்தான்; எல்லாம் சொந்த ஊருக்குப்போகத்தான்! போதாக்குறைக்கு மூன்று நாள் சேர்ந்தாற்போல விடுமுறையென்றால் சொல்லவும் வேண்டுமோ? தினமும் இரவு 9 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பி மறுநாள் காலை 9 மணிக்கு மூணார் சென்றடையும் பேருந்து விதி வசத்தால் ஆரம்பமே ஒரு மணி நேரம் தாமதம். கோயம்பேடிலிருந்து பெருங்களத்தூர் செல்லவே சுமார் இரண்டரை மணி நேரம் ஆகிவிட்டது. ஏறியவுடன் உலக நாயகனின் விஸ்வரூபம் வீடியோ காதை கிழிக்க ஆரம்பித்தது. ஒருவழியாக நண்பகல் 12 மணிக்கு மூணார் அன்புடன் அழைத்தது. அதுமட்டுமில்லாமல் சேலம், நாமக்கல், கரூர், தாராபுரம், உடுமலை வழியாகச் சென்றது கொஞ்சம் சுற்று வழிதானென்று பின்னர் அறிந்தேன்.

உடுமலைப்பேட்டையிலிருந்து மலைப்பிரதேசம் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்தது. இங்கிருந்து சரியாக 86 கி.மீ தொலைவில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில மூணார் அமைந்துள்ளது. தமிழக வனஎல்லைப்பகுதியின் முடிவான ஆனமலை புலிகள் சரணாலயப்பகுதியில் ஒரு பலகையில் எழுதப்பட்டிருந்தது இது. ‘கடைசி மரமும் வெட்டுண்டு, கடைசி நதியும் விஷமேறி, கடைசி மீனும் பிடிபட, பணத்தை உண்ண முடியாதென்று அப்போதுதான் புரியும்!’ உண்மையான வரிகள். வன அதிகாரி கதவை திறந்தவுடன் கேரள வனப்பகுதி நம்மை அன்புடன் அழைக்கிறது. ஓட்டுநர் அதிகாரியிடம் சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டு வந்தார். (Legal Entry into Kerala Forest Division).

அதற்குள் பேருந்தில் பாதி பேர் மயக்கத்துடன் கிடந்தனர். மலையேற்றம்! சிலரது வயிற்றில் பல மேஸ்ட்ரோக்கள் வாத்தியம் வாசிப்பு போல! எனக்குக்கூட லைட்டான பீட்டில்! விடிந்து காலை உணவு அருந்தாததும் ஒரு காரணமென நினைத்து ஒட்டுநரின் உதவியாளரிடம் கேட்டேன் – எப்போ சார் வண்டியை நிறுத்துவீங்க ஒரே பசியாக இருக்கே! ஏன்தான் கேட்டோமோ என்று நினைக்கும்படியான ஓரிடத்தில் (மறையூர்) வண்டியை அவர் நிறுத்தினார். பிறகு சொன்னர். சரியாக 50% பயணம் முடிந்துவிட்டதாம். ஐயோ!

விறுவிறுவென்று ஹோட்டலில் நுழைந்து பல் துலக்கல்போல் ஒரு பாவலா செய்துவிட்டு, இட்லி, இடியாப்பம் ஆர்டர் செய்தேன். பதில் மலையாளத்தில் வந்தது. இல்லையாம்.  வேறு என்னதான் இருக்கு என்று பசிக்கோபத்துடன் கேட்டேன்? தோசைமட்டும்தான் என்றார். (வேறு மொழியென்றாலும் நாங்கள் இருவரும் பத்து நிமிடத்துக்கு மேல் அவரவர் மொழியில் பேசினோம்; புரிந்தும்கொண்டோம்.) காலையில் எண்ணெய் வேண்டாமென்று வெறும் மில்கா ப்ரெட்டை வாங்கி சாப்பிட்டு முடித்தேன்.

குளு குளு ஊட்டி கிளைமேட் போல லேசாக ஆரம்பித்தது. ஏனென்றால் தென்னிந்தியாவிலேயே அதிக உயரம் கொண்ட மலைப்பிரதேம் மூணார். இதைச்சுற்றியுள்ள பகுதி 4760 அடி முதல் 8800 அடி வரை கடல்மட்டத்திலிருந்து உயரமென்று இங்கிருப்பவர்கள் பெருமையாகச் சொல்கிறார்கள்.

மறையூரிலிருந்து கிளம்பியது முதல் மூணார் செல்லும் வரை எந்தப் பக்கம் பார்த்தாலும் பச்சைப்பசேலென்று தேயிலை தோட்டத்தின் ஆட்சிதான். பேருந்தில் சென்றதால் இறங்கி ரசிக்க முடியவில்லை. பைக் மற்றும் காரில் சென்றவர்கள் ஆங்காங்கே வண்டியை நிறுத்தி உலாவிக்கொண்டிருந்ததைக் காண பொறாமையாகத்தான் இருந்தது.

மற்றபடி கொண்டை ஊசி, மண்டை ஊசியென்று எங்கும் வளைவுகள்தான்; அதுவும் சில மரணத்தின் உச்ச பள்ளத்தாக்கு வளைவுகள்; கைதேர்ந்த ஓட்டுநர்கள்தான் சமாளித்து லாவகமாக ஓட்டமுடியும்!

இதற்கிடையில் வயிற்றில் வாசித்த வாத்தியங்கள், வாயிலே கேட்டது சிலருக்கு! அதைப் பார்த்த நானும் ஒரு ப்ளாஸ்டிக் கவரை எடுத்து வைத்துக்கொண்டேன். ஆனால் பிளாஸ்டிக் கூடாது என்று போர்ட் மாட்டியிருந்தார்கள்.

இன்னும் எவ்வளவு நேரமோ என்று கவலைப்படுவதற்குள்  மூணார் வந்துவிட்டது. எல்லோரும் இறங்குங்க என்று ஒரு குரல். அப்பாடா என்று கையில் வைத்திருந்த கவரை பாக்கெட்டில் மடித்துப்போட்டேன். நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன் என்ற பாடல் மனதில் தோன்றியது!

ஆட்டோ!! எஸ்.என். அனெக்ஸ் ஹோட்டல் போகணும். இங்கிருந்து 2 கி.மீ 30 ரூபாய் என்றார் ஆட்டோக்கார்ர். அடடா! நம்மூரில் பக்கத்துத்தெருவுக்கே 30 ஆயிற்றே என்று எண்ணிக்கொண்டே பேரம் பேசாமல் ஏறினேன். என் நண்பனின் உதவியால் எற்கெனவே புக் செய்திருந்த எஸ்.என் அனெக்ஸ் ஹோட்டலுக்குச் சென்றேன். அங்கு ரிசப்ஷனில் இருந்தவர் – என்ன சார் 9 மணிக்கே வருவீங்கன்னு பார்த்தால் 12 மணிக்கு வரீங்களே? உங்களோட சைட் சீயிங் கார் கூட 9 மணியிலிருந்து ரெடி என்றார். ஃப்ளாஷ்பேக்கை விளக்குமளவுக்கு நேரமும், தெம்பும் இல்லாததால் சிம்பிளாக பஸ் லேட் என்று சொல்லி நன்றி கூறிவிட்டு சாவியை வாங்கி ரூமை நோக்கி நடையைக்கட்டினேன்.

சிறிது நேரம் களைப்பாறிவிட்டு, கிளம்பியாச்சு. ரிசப்ஷனில் காத்திருந்தார் டாக்ஸி ஓட்டுநர் திரு. அஷோக். திருநெல்வேலியைச் சேர்ந்த அவர், பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே மூணாரென்றார். அப்போ கைட் மற்றும் ஓட்டுநர் நீங்கதான் என்றேன்.

மாட்டுப்பட்டி, நல்லதண்ணி, பெரியவாரு ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்குமிடம் என்பதால் மூணார் என்று பெயர் வந்தது என்றார். தேயிலைத் தோட்டம்தான் இங்கு அதிகமானோரின் வாழ்வாதாரம் . இவற்றில் பல ஆங்கிலேயர்கள் ஆரம்பித்தவை. பிறகு டாடா குழுமம் களத்தில் இறங்கியது.  (வெள்ளைக்காரன் ஏன் இந்தியாவை கைப்பற்ற நினைத்தான் என்பது இங்கு பரந்து விரிந்து கிடக்கும் செழுமையைப் பார்த்தால் நன்கு புலப்படும்.) கண்ணன் தேவன் ஹில்ஸ் என்று ஆங்காங்கே பலகைகள்; முழுவதும் தேயிலை தோட்டம்தான். டாடாவின் ஹை ரேஞ்ச் பள்ளிக்கூடம் பார்க்க ரம்மியமாக இருக்கிறது; பசுமையின் புள்ளியாக கட்டடம். டாடாவில் வேலை செய்வோரின் பிள்ளைகள் மட்டுமே படிக்கும் பள்ளியாம்.

இவ்வாறாக ஆரம்பித்த ஊர் சுற்றல் முதலில் நின்றது பூக்கள் தோட்டத்தில். (Floriculture Centre). இங்கு பல வகை பூக்கள் தாவரவியல் பெயர்களுடன் போஸ் கொடுக்கின்றன. இந்த இடம் கூட தேயிலை ராணியின் பிள்ளைகள் போலத்தான் காட்சியளிக்கிறது; எங்கு நோக்கினும் தேயிலை, தேயிலை தேயிலை குவியல்கள்தான்.

சிறிது தூரம் சென்றவுடன், சிலர் அண்ணாந்து பார்த்துக்கொண்டும், கிளிக் செய்துகொண்டும் இருந்தார்கள். அதுதான் தேனி கூடு கட்டியிருக்கும் மரமாம் (Honey Bee Tree). கொத்துக் கொத்தாகத் தொங்குகின்றன. அங்கேயே தேனும் விலைக்கு கிடைக்கிறது. மூணாறிலிருந்து சுமார் 2 கி.மீ சென்றவுடன் வருவதுதான் போட்டோ பாயிண்ட் (Photo Point). பசுமையின் அடையாளமான தேயிலைத் தோட்ட்த்தின் அழகை ஒரே நேர்கோட்டில் அமைந்தாற்போல பரந்து விரிந்து கிடக்கும் காட்சி. முன்பொரு காலத்தில் வரும் டி.வி விளம்பரமான கண்ணன் தேவன் டீ இந்த இடத்தில்தான் படம்பிடித்தார்களாம். மைனா, கும்கி, பரதேசி போன்ற படங்களும் இங்கே ஷூட் செய்யப்பட்டுள்ளன. அதில் நடித்துள்ள மூணார் மணி என்பவரைத் தனக்குத் தெரியும் என்றார் அஷோக்.

மூணாறிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் வருகிறது மாட்டுப்பட்டி அணை (Mattupetty Dam). இங்கு படகு சவாரி பிரசித்தம். 15 நிமிடங்களுக்கு சவாரி செய்யலாம். நான் சென்ற தினம் கூட்டம் அதிகமானதால் தாற்காலிகமாக மூடிவைக்கப்படும் என்று ஒரு பலகை! மனதில் ஒரு நிமிடம் முட்டுக்காடை நினைத்துக்கொண்டு படகு சவாரி ஒன்றும் புதிதல்ல கிளம்பலாம் என்றேன் ஓட்டுநரிடம். நேரமும் குறைவுதானே!

இந்த இடத்தைக் கடக்கும்போது மாட்டுப்பட்டி பண்ணை தென்பட்டது. இது 1961ல் கேரள அரசால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மாட்டுப் பண்ணை என்றார் அஷோக். இந்த சீதோஷன நிலைக்கு நன்கு பால் கிடைக்கக்கூடிய அளவுக்கு மாடுகள் வளருமாம். சுமார் 100 விதமான செழிப்பான மாடுகள் நிறையப் பால் கொடுக்கும் என்று சொல்கிறார்கள். இங்கு உள்ளே சென்று பார்க்க அனுமதியில்லை என்றும் கூறினார். அதாங்க மாற்றான் திரைப்படத்தில் வருமே ஒரு மாட்டுப்பண்ணை அதுபோல இருக்குமென்று சொன்னார்.

திடீரென்று ஒரு காட்சி. ஒரு குட்டி யானை அதனருகே ஒரு பெரிய யானை படுத்துக்கிடக்கிறது. தூரத்திலிருந்து பார்ப்பதற்கு ஒரு பெரிய பாறை போல இருக்கிறது. இந்த காட்சியைப் பார்த்தவுடன் ஓட்டுநருக்கு மனம் பிசைகிறது. என்ன ஆச்சோ தெரியவில்லையே? மயக்கமா அல்லது இறந்துவிட்டதா? என்ன பண்ணலாம் என்று அவருக்கு ஒரே அங்கலாய்ப்பு. காரில் எதிரில் வரும் தன் நண்பரிடம் நிறுத்தி இவ்வஷயத்தை விளக்கி, செல்லும் வழியில் வன அதிகாரியிடம் தெரிவிக்க வலியுறுத்தினார். ஆனால் அவர் இயல்பு நிலைக்கு மாற சற்று நேரம் ஆயிற்று!

இந்த இடத்திற்கு எக்கோ பாயிண்ட் (Echo Point) என்று பெயர்; நீங்கள் கூறுவதை நீங்களே திரும்பக்கேட்கலாம் என்றார். இறங்கி செல்லும்போதே சிலர் த்ரிஷா, நயன்தாரா என்று கூவிக்கொண்டிருந்தார்கள்! சிலர் மிக அதிகமான சப்தத்தில் கூவியதுதான் உண்மையாகவே எதிரொலித்தது. 20ரூபாய்க்கு மிகத் தித்திப்பான இளநீரும், என் மகளுக்கு ஒரு பொம்மையும் வாங்கிக்கொண்டு நடையைக்கட்டினோம். டாப் ஸ்டேஷன் இன்னும் ஏற வேண்டியதால் செல்லவில்லை. யானை சவாரியும் இல்லையாம். தண்ணீர் வரத்து இல்லாததால் அருவியைக்கூட காணமுடியவில்லை. இவ்விடத்தின் பிரசித்த பெற்ற மலை ஆடு சரணாலயம் கூட மூடுவிழாவாம். இனப்பெருக்கக்காலமாதலால் அரசாங்கம் மக்களை அனுமதிப்பதில்லையாம்.

சிலபல க்ளிக்குகளை முடித்துவிட்டு கடைசியாக போதமேடு வந்தோம். திருப்பதிக்குச் சென்று லட்டு வாங்கலைன்னா எப்படி குற்றமோ அதுபோல மூணாறுக்குச் சென்று தேநீர் அருந்தவில்லையென்றால்!! இங்குதான் அருமையான மசாலா தேநீர் பருகினோம். இங்கு சென்று பார்த்தால் சூரிய அஸ்தமனம் மற்றும் கீழே ஊரின் அழகும் ஆர்ப்பரிக்கிறது. சூரியன் அன்று விடுமுறை விட்டது. எங்கு பார்த்தாலும் ஒரே பனி மூட்டம்தான்!!

சார், பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் பார்த்துவிட்டோம் – வேறு எங்கேயாவது போகணுமா என்றார் ஓட்டுநர். பிறகு நான் சில இடங்களைப் பற்றி கேட்டேன் – வலைதளத்தில் பார்த்ததாக – அவை எல்லாமே ஒரு மணி நேரத்துக்கு மேல் செல்ல வேண்டிய இடங்களாம்! சரி ஒரு நல்ல ஓட்டலுக்கு டின்னர் சாப்பிடலாம் போங்க என்றேன். நம்மூர் ஓட்டல் சரவண பவன் இருக்கு அங்க போகவா என்றார்? நானும் சரி என்றேன். ஆனர்ல் அங்கு சென்ற பிறகுதான் தெரிந்தது; சுற்றுலாவுக்கு வந்த பாதி பேர் அங்கே குவிந்து கிடந்தார்கள்.  நான் தங்கியிருந்த ஓட்டலுக்கு அருகிலுள்ள மஹாவீர் போஜனாலாயா என்ற உயர்தர சைவ ஓட்டலுக்குச் சாப்பிடச் சென்றோம்.

மறுநாள் சில புளிப்பு மிட்டாய்களும், நார்த்தங்காய் ஊர்காயும், வழக்கம்போல ப்ளாஸ்டிக் கவரையும் கையில் தயார் நிலையில் வைத்துக்கொண்டேன். கேரள அரசு பேருந்து பிடித்து உடுமலைப்பேட்டை நோக்கி உருண்டது பேருந்து. மீண்டும் அதே கொண்டை ஊசி வளைவுகள். தேயிலை தோட்டங்களையும், குளுகுளு குளிரையும் கடந்து தமிழக வனப்பகுதிக்குள் நுழைந்தோம். 37 டிகிரியுடன் தமிழகம் எங்களை உச்சி முகர்ந்து வரவேற்றது.

0

சொல்வதெல்லாம் உண்மை – ஒரு திருடன் போலிஸ் கதை

burglar
அன்று எனது அலுவலகத்தில் மிகுந்த பணிச்சுமையோடு அல்லாடிக் கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்தார் அவர். நடு வயதினர். தன்னை ஒரு வழக்கறிஞரின் வாகன ஓட்டுனராக அறிமுகப்படுத்திக் கொண்டார். வாகன ஓட்டுனருக்கான தோற்றம் அவரிடத்தில் இருந்தது (இங்கு விதண்டாவாதமாக ‘வாகன ஓட்டுனருக்கு அப்படியென்ன தனித் தோற்றம்?’ என்று வினவினால் என்னிடம் விடை இல்லை). தமது முதலாளியின் கணினி பழுதடைந்து விட்டது என்றும், என்னை வந்து பழுது நீக்கித் தர முடியுமா என்றும் வினவினார். என்னால் வரமுடியும், ஆனால் அன்று வர முடியாது மறுநாள் தான் முடியும் என்று கூறி, அவருடைய தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு, அனுப்பி வைத்தேன். அடுத்தடுத்த பணியினால், அவர் வந்து சென்றதை அறவே மறந்து விட்டேன்.

மூன்றாம் நாள், முதல் நாள் வந்த அதே நேரத்துக்கு மீண்டும் வந்தார். அவரைக் கண்டவுடன் தான் அவரைத் தொடர்பு கொள்கிறேன் என்று கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. ஒரு வாடிக்கையாளரிடம் கொடுத்த வாக்கைக் காப்பாற்றாத குற்றவுணர்ச்சியுடன், உடனே வருகிறேன் என்று கூறி அவருடன் கிளம்பினேன். எனது அலுவலகம் ஒரு வணிகக் கட்டடத்தின் முதல் மாடியில் இருந்தது. கீழே வந்தவுடன் அவர் தனது (அதாவது வழக்கறிஞரின்) வாகனத்தைக் காண்பித்து, அதில் போக்குவரத்து நெரிசலில் செல்வதை விட, எனது இரு சக்கர வாகனத்தில் செல்வது இலகுவாக இருக்கும் என்று சொன்னார். எனக்கும் அது சரியென்றே பட்டது. மேலும் அவரது இடம் எனது அலுவலகத்திலிருந்து ஒரு இரண்டு கி.மீ தொலைவு மட்டுமே இருந்தது. எனவே இருவரும் எனது இ.ச வாகனத்தில் கிளம்பினோம்.

சற்று நேரத்துக்குள் நாங்கள் அடைய வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்தோம். அலுவலகம் பூட்டியிருந்தது. நகரின் சற்று நெருக்கடியான இடம். வணிகமயமாக்கலில் வெகு சில வீடுகளே அங்கு எஞ்சியிருந்தன. அந்தத் தெரு முழுவதும் கடைகள். வாகனம் நிறுத்த இடமில்லை.என்னை அழைத்து வந்தவர், “சார்; என் போன்ல சார்ஜ் இல்ல, உங்க போன குடுங்க, சார்ட்ட பேசணும்” என்று எனது கைபேசியை வாங்கி தனது முதலாளியிடம் நாங்கள் வந்திருக்கும் விபரத்தையும், அலுவலகம் பூட்டியிருப்பதையும் கூறினார். பின்னர்  சற்று நிறுத்தி விட்டு, “வீட்ல சாவி குடுத்துருக்காறாம், நான் போய் சாவி வாங்கீட்டு வந்துர்ரேன். அங்கிட்டு அந்த முக்குப் பக்கம் கொஞ்சம் இடமிருக்கும் பாருங்க. நிப்பாட்டிட்டு வந்துருங்க” என்று பக்கத்து சந்துக்குள் சென்றார். நானும் வண்டியை நிறுத்தி விட்டு அலுவலக வாசலுக்கு வந்தேன். 5..10..15 நிமிடங்கள் சென்றன. இந்நேரம் நீங்கள் ஊகித்திருப்பீர்கள். ஆள் கம்பி நீட்டி விட்டான். வெகு அன்மையில்தான் `மிகுந்த` பொருட்செலவில் வாங்கியிருந்தேன் அந்தக் கைப்பேசியை.

அவன் நுழைந்த சந்துக்குள் நுழைந்தேன். சற்று தொலைவில் ஒரு அம்மா அமர்ந்திருந்தார்கள். அவரிடம், ஆள் அடையாளத்தைக் கூறி, பார்த்தாரா, அங்கு எதுவும் வழக்கறிஞர் வீடு உள்ளதா என்று வினவினேன். உடனே அவர் என்னிடம் “செல் போன் எதுவும் குடுத்தீங்களா?” என்று திரும்ப வினவினார். ஆமாம் என்றதும், “இப்பத்தான்யா  இங்கிட்டு ஓடுனான். இதுவரைக்கும் ரெண்டு பேர இந்த மாதிரி ஏமாத்திட்டான்” என்றார்.

சில நிமிடங்களுக்கு திக்கு திசை தெரியவில்லை. சற்று சுதாரித்துக் கொண்டு, எனது நண்பரைத் தொடர்பு கொண்டேன். அவர் என்னை அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு வரச் சொல்லி விட்டு, சற்று நேரத்தில், ஒரு வழக்கறிஞருடன் வந்தார்.

உள்ளே நுழைந்து தென்பட்ட காவலரிடம், கைபேசி திருடு கொடுத்துவிட்டதாகக் கூறியவுடன், அவர், “ஒரு நாளைக்கு 10,20 போன் காணா போகுது; இதுக்கெல்லாம் கம்ப்ளெயிண்டா? ச்சும்மா விடுப்பா” என்று மிகவும் அசிரத்தையாகக் கூறினார். அளவில் சிறியது, விலை குறைந்தது என்றால் அதனை யார் வேண்டுமானாலும் திருடிக் கொள்ளலாமா? அவர் கூறியது போலவே குறைந்தது 10 என்று கணக்கு வைத்துக் கொண்டாலும், ஒருநாளைக்கு திருடு போகும் கைபேசிகளின் மதிப்பு மட்டும் என்ன? இதே போன்று மற்ற மலிவுத் திருட்டுகள் எவ்வளவு? இதனைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால், காவலரின் வேலை தான் என்ன? மேலும் ஒரு பொருளின் பண மதிப்பு மட்டும் தான் மதிப்பா?

ஒரு தனி மனிதன் தனக்கான தொடர்புகள் அனைத்தையும், இந்தத் தொழில்நுட்ப யுகத்தில் இது போன்ற பொருட்களில் தானே வைத்திருப்பான்? அவையனைத்தையும் இழந்தால் அவற்றை அவன் திரும்ப எப்படிப் பெறுவான்? குறிப்பாக என்னைப் போன்ற சுயதொழில் செய்வோருக்கு அந்தத் தொடர்புகளின் மதிப்பு இன்னும் பன்மடங்கல்லவா? இவ்வினாக்களையெல்லாம்,  நடைமுறையில், ஒரு காவலரிடம் நாம் வினவிடத் தான் முடியுமா?

எனது கைப்பேசியின் மதிப்பு சற்று அதிகம் தான். எனது தொழில் கணினி என்பதால், எனது வேலைக்கு உதவுமென்பதால், அது ஒரு கைபேசி மட்டுமல்லாமல் ஒரு கையடக்கக் கணினியாகவும் இருந்தது. பணமதிப்பைக் கூறியவுடன், சரி ஒரு வெள்ளை பேப்பர்ல எழுதிக் குடு என்றார். கொடுத்தவுடன், அதனை அப்படியே எழுத்தரிடம் கொடுத்தார். புகாருக்கு ஒப்புகை (receipt/acknowledgement) கேட்டேன். ஏண்டா அற்பப் பதரே என்ற தொனியில் ஒரு பார்வையை என் மீது வீசி, அப்பிடியெல்லாம் குடுக்க முடியாது, நீ அப்பப்ப வந்து கேட்டுக்க என்று எங்களை அனுப்பி வைத்து விட்டார். வழக்கறிஞர் வந்து ஒரு பயனும் இல்லை.

பின்னர் திருடு கொடுத்த இடத்துக்கு, நானும் எனது நண்பரும் மட்டும் வந்தோம். அங்கு அவருக்கு சில கடைகாரர்களைத் தெரிந்திருந்தது. அவர்களிடம், மீண்டும் விசாரித்தோம். ஒரு பயனும் இல்லை. அங்கு மீண்டும் இது போல ஏதாவது சம்பவம் நடந்தால் எங்களிடம் தெரிவிக்குமாறு வேண்டிக் கொண்டு திரும்பினோம்.

அவ்வப்போது காவல் நிலையத்துக்குச் சென்று வந்து கொண்டிருந்தேன். அங்கு கைபேசி திருடு கொடுத்த இன்னொரு அப்பாவியையும் சந்திக்க நேர்ந்தது. அவரிடமும் என்னிடம் திருடிய அதே நபர் அதே முறையில் திருடியிருக்கிறான். இந்த முறையில், இதே நபரிடம் திருடு கொடுத்த நான்காவது நபர் நான். என்னைப் போலல்லாமல், அவருடைய கை பேசி, விலையில் மிகக் குறைவு. நான் மேற்கூறிய காரணங்கள் போக, அது அவருக்கு மிகவும் பிடித்தமான மற்றும் ராசியான கைபேசியாம். அவர் சற்று அப்பாவியானதால், தங்களது அனைத்து சிறு செலவுகளுக்கும் (தின்பண்டங்கள், வெள்ளைத் தாள், பேனா, பென்சில் …) அவரை ஏவிவிடுவார்கள் (ஆசைப்படக்கூடாது என்று ஞானியர் கூறி வந்ததின் பொருள் அன்று புரிந்தது). இந்தச் சங்கடங்களுக்காக நான் அங்கு செல்வதைக் குறைத்துக் கொண்டேன். அவ்வபோது தொலைபேசியில் அழைத்து நிலவரங்களை விசாரித்துக் கொள்வேன்; பெரிதாகப் பலன் இல்லையென்றாலும்.

என்றாலும், வேறு உபாயங்களைத் தேடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது என்னுடைய நண்பருக்கு, கைபேசியின் IMEI எண்ணை வைத்து அது எங்கு பயன்படுத்தப்படுகிறது என்று கண்டடையலாம் என்று யாரோ ஆலோசனை கூற, என்னையும் அழைத்துக் கொண்டு காவல் நிலையம் சென்றார். வழக்கமான அசிரத்தையான பதில்களுக்குப் பின் அந்த ஆலோசனையை என் நண்பர் நிலைய ஆய்வாளரிடம் கூறியவுடன் ஆய்வாளருக்கு மிகுந்த ஆத்திரம் வந்து விட்டது. “ஓ ஒனக்கு எல்லாம் தெரியுமோ? எனக்கே யோசனை சொல்றியா? அப்பிடீன்னா நீயே கண்டுபுடிக்க வேண்டியது தானே? இங்கே எதுக்குய்யா வர்ர?” என்று கடுமையாகப் பேச ஆரம்பித்தார். நிலைமையை உணர்ந்து, நண்பரைச் சமாதானப்படுத்தி வெளியே அழைத்து வந்து விட்டேன்.

ஓரிரு நாட்களில் மற்றொரு நண்பரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அந்நேரம் எனக்கு ஒரு கைப்பேசி அழைப்பு வந்தது. நான் பேசிக் கொண்டிருக்கும்போது, எனது கைபேசியை அவர் கவனித்து விட்டிருந்தார். நான் பேசி முடித்தவுடன் எனது பழைய கைப்பேசி பற்றி வினவினார். நடந்ததைக் கூறியவுடன், தனது மாமனார் காவல்துறை துணைக் கண்காணிப்பாளரிடம் (AC) உதவியாளராக பணியாற்றுவதாகவும், து.க விடம் முறையிட்டால் எதுவும் பலன் கிட்டலாம் என்றும் கூறி என்னைப் பற்றி தனது மாமனாரிடம் பரிந்துரைத்தார். அவரும் ஓரிரு நாட்களில் து.க வைச் சந்திக்க அனுமதி பெற்றுக் கொடுத்தார்.

து.கவைச் சந்திக்கக் காத்துக் கொண்டிருக்கும்போது, எதிர்பாராமல், அங்கு எனது வேறொரு நண்பரைக் காண நேர்ந்தது. அவர் ஒரு அரசியல் பலம் மிக்க முன்னணி நாளிதழில் தலைமை நிருபராகப் பணியாற்றுபவர். விவரம் கேள்விப்பட்டவுடன், தானும் து.க வைச் சந்திக்கப் போவதாகவும், என்னைத் தன்னுடன் வருமாறு அழைத்துக் கொண்டு சென்றார். நண்பர், து.க விடம் தனது வேலை முடிந்தவுடன், எனது இக்கட்டை எடுத்துக் கூறினார். து.க மிகவும் அக்கறையுடன் கேட்டுக் கொண்டார் (நிருபருக்குண்டான மதிப்பு எனக்கும் பொசிந்தது). கைப்பேசியின் விலையைக் கேட்டவுடன், அவருக்கு என்னுடைய தீவிரம் முழுமையாகப் புரிந்தது. புகாருக்கு எதுவும் ஒப்புகை கொடுத்தனரா எனக் கேட்டு இல்லையென்பதை அறிந்து கொண்டார். உடனே அந்த நிலைய ஆய்வாளரை தொலைபேசியில் அழைக்கச் செய்து, எனது புகார் நிலவரங்களைக் கேட்டறிந்தார். அவரிடம் பேசி முடித்தவுடன், என்னிடம், அந்த ஆய்வாளரே அழைப்பார் என்றார்.

வழக்கமாக நான் அழைத்தால் அசிரத்தையாகவும், எரிச்சலாகவும் பேசும் ஆய்வாளர், அன்று மாலை என்னை அழைத்தார். மிகவும் பண்பாகப் பேசினார். ஏன் என்னை பத்திரிக்கைத் துறை தொடர்புடையவன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை என்று குறைப்பட்டுக் கொண்டார். அன்று மாலை நிலையத்துக்கு வரச் சொன்னார். அங்கு சென்ற போது அதுவரை போலல்லாமல் எனக்கு தனி மரியாதை கிட்டியது. தனியாக ஒரு புதிய புகாரை எழுதித் தருமாறு கேட்டுக் கொண்டார். புகார் கொடுத்தவுடன், உடனே அதற்கு ஒரு ஒப்புகையும் கொடுத்தார். அப்போதிலிருந்து காவல் நிலையத்துக்கு எப்பொழுது சென்றாலும், எனக்கு தேநீர், தின்பண்டங்கள் என்று விருந்தோம்பல் பலமாக இருக்கும். ஆனால் பொருள் தான் கிட்டியபாடில்லை.

ஒருநாள் எனக்கு கைபேசியில் அழைப்பு வந்தது. அழைத்தது, நான் திருடு கொடுத்த இடத்துக்கு அருகேயுள்ள கடைக்காரர். அதாவது, என்னை முதன் முதலில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற நண்பருக்குத் தெரிந்தவர். கைப்பேசித் திருடன் பிடிபட்டுவிட்டதாகவும் காவல்நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கூறினார். உடனே அங்கு விரைந்தேன். அங்கு சென்றவுடன், திருடன் பிடிபட்டுவிட்டான் என்பதை விட அது எனக்கு எப்படித் தெரியும் என்பது ஆய்வாளருக்கு மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது. அது பற்றி அவர் தீவிரமாக விசாரித்தும் நான் சமாளித்தேன். திருடனிடம் அழைத்துச் சென்றனர். அவனேதான். என்னைக் காட்டி என்னுடைய கைபேசியைத் திருடினானாவென்று வினவ அவனும் ஒத்துக் கொண்டான். கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று ஒரு படம் பார்த்திருந்தீர்கள் என்றால், அதில் நாசருடைய படக் கருவியைத் (camera) திருடும் பாத்திரத்திலே நடித்திருப்பாரே, ஒருவர்? அதே தோற்றம் தான்.

திருடன் கிடைத்து விட்டான், திருடு கொடுத்த பொருள் கிடைத்து விட்டது. கதைதான் முடிஞ்சு போச்சே என்று எண்ணுகிறீர்களா? கொஞ்சம் பொறுமை காக்கவும்.

முதலாம் நாள் காவல் நிலையத்தில் திருடனுக்கு தரும அடி. திருடப்பட்டது பத்துக்கும் மேற்பட்ட கைப்பேசிகள். வந்தது நான்கோ ஐந்தோ புகார்கள். கைப்பேசிகள் அனைத்தும் கண்டறியப்பட்டன. குறிப்பாக என்னுடையது உள்ளூர் கடையில் குறைந்த விலைக்கு விற்கப்பட்டு, எந்தத் தாமதமுமில்லாமல், உடனடியாக சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, மென்பொருளில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. யாரந்த கடைகாரர், அவருக்கு இது தான் தொழிலா, வேறு மேல் விபரங்கள் எதுவும் கண்டுகொள்ளப்படவில்லை. முறையிடாதோர் கைப்பேசிகளெல்லாம் அங்கேயே  பங்குபோட்டுக் கொள்ளப்பட்டன.

இரண்டாம் நாளிலிருந்து திருடன், பெயருக்குத்தான் திருடன். அவனும் நிலையத்தார்களில் ஒருவனாகி விட்டிருந்தான் (பங்காளிகளாகி விட்டனரே!). வேளாவேளைக்கு சாப்பாடும், தேநீர், தின்பண்டங்களும் – அனைத்தும் திருடு கொடுத்தவர் ஒருவரின் செலவிலேயே. என்னிடம் நொந்து கொண்டார் – “நம்மள்ட்ட திருடுனவனுக்கு நம்மளே பணிவிடை செய்ய வேண்டியுருக்கு”.

பொருட்கள் அனைத்தையும் நீதிமன்றத்திலே கண்பித்து, அங்கு `சம்பிரதாயங்கள்` முடிந்தவுடன்தான் மீண்டும் உரிமையாளரிடம் ஒப்படைப்பார்களாம். ஏட்டு தினமும் கைப்பேசியில் அழைத்து விடுவார். நாம் அங்கு சென்று வந்திருக்கும் காவலர் அனைவருக்கும், தேநீர் மற்றும் சில்லரை செலவுகளுக்கு மொய் வைக்க வேண்டும். ஆனால் அன்று நமது வழக்கே விசாரணைக்கு வராது. என்னவென்று கேட்டால், தான் வரும்போது, நிலையத்திலிருக்கும் அனைத்து வழக்கு விபரங்களையும் கொண்டுவந்து விடுவாராம். வழக்கு தொடர்புடைய அனைவரும் (வேலை வெட்டியை விட்டு விட்டு) வந்து விட வேண்டுமாம். திடீரென்று வழக்கு விசாரணைக்கு வந்து விட்டால், அதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுமாம். இவ்வாறாக ஒரு மூன்று வாரம் நொங்கெடுத்தார்கள்.

ஒரு நட்பு வேளையிலே ஏட்டு அவர்கள், “உங்களோட போன் அதிக விலை. அதனால ஒரு வக்கீல் வச்சுக்குங்க; அப்பத்தான் வேலை நடக்கும்” என்றார். மூவாயிரத்துக்கு ஒரு வழக்கறிஞரை அமர்த்திக் கொண்டேன். கைப்பேசி புகார் கொடுத்திருந்தவர்களனைவரும் ஒன்று சுயதொழில் செய்பவர்கள் அல்லது வெட்டியாக இருப்பவர்கள். அலுவலகம் செல்லும் ஒருவர் இவ்வாறான புகார் ஓன்றைக் கொடுத்தால் அவருடைய நிலை? எனவேதான் எவரும் `போலீஸ், கோர்ட்` என்று போவதற்கே அஞ்சுகின்றனர் போல்.

வழக்கறிஞர் வைத்துக் கொண்ட பின்னர், எனது வழக்கறிஞர், என்னை வரவேண்டாமென்றும், தான் அழைக்கும் போது வந்தால் போதும் என்றும் சொல்லி விட்டார். பின்னர் எனது வழக்கறிஞர் அழைத்து ஒரே ஒருமுறை மட்டும் நீதிமன்றம் சென்றேன். நீபதியம்மாக்கு முன், திருடனுக்கு எதிரே, கூண்டில் நிறுத்தப்பட்டேன். அரசு வழக்கறிஞர், புகார் விபரங்களை முழுதும் வாசித்தார். இறுதியில், “இவர்தான் திருடினாரா?” என்ற ஒற்றை வினாவுக்கு, “ஆம்” என்ற ஒற்றை விடையுடன் வழக்கு முடிவுக்கு வந்தது. திருடன் பிடிபட்டபின் ஒன்றரை மாதம் சென்று சற்று செய்கூலி,சேதாரத்துடன் எனது கைபேசி என்னிடம் வந்தடைந்தது. இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், திருடு கொடுத்த நாங்கள் வீடு – கா.நி – நீ.ம என்று ஒன்றரை மாதம் அலைக்கழிக்கப்பட்டோம். திருடன், ஒரே ஒரு முறை மட்டும் நீ.ம அழைத்து வரப்பட்டான்.

எல்லாம் சொல்லிவிட்டேன். ஆனால் ஒன்றை மட்டும் சொல்லவில்லையே? திருடன் எப்படிப் பிடிபட்டான்? நடந்தது என்ன?

அன்று, திருடன் பிடிபட்ட முதல் நாள், என்னை, திருடனைக் காட்ட அழைத்துச் சென்றபோது, கிடைத்த இடைவெளியில் அவனிடம் கேட்டேன் “எப்பிடிய்யா எங்கிட்ட திருடனும்னு உனக்கு தோணிச்சு?”. அவனுடைய பதில்  “இப்பிடியே நடந்து போகும்போது பாத்துட்டே போவேன் சார். ஏதாவது கம்பீட்டர் இல்ல எல்ட்ரானிஸ் கம்பேனி போ(ர்)டு தென்பட்டுச்சுன்னா உள்ள போய் பேச்சு குடுத்துட்டே பாப்பேன் சார். ஏன்னா இந்த மாதிரி கம்பீட்ட்ர் எல்ட்ரானிஸ் கம்பேனி வச்சுருக்குருவங்க/அதுல வேல பாக்குறவங்க போன்லாம் நல்லா வச்சுருப்பாஙக.”

இவ்வாறாக திருடப்பட்டதில் பெரும்பாலானோர், ஒரே துறையைச் சேர்ந்தவர்கள்தான். இதில் பெரும்பாலானவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கள் (துரதிஷ்டவசமாக – அல்லது அதிஷ்டவசமாக – என்னுடன் தொடர்புடைய யாரும் இவனிடம் மாட்டவில்லை). என்னைப் போல் திருடு கொடுத்த ஒருவர் (இவரும் கா.நி வந்து, மற்ற பாதிக்கப்பட்டவர்களிடம் அனுபவத்தைப் பகிர்ந்து, அனைவரும் ஒரே முறையில் ஒரே இடத்தில் வைத்து, ஒரே நேரத்தில் திருடு கொடுத்தவர்கள் என்ற விவரத்தை அறிந்தவர்) தான்  திருடு  கொடுத்ததை தனது நண்பரிடம் புலம்ப, திருடனின் மிகக் கெட்ட நேரம், மறுநாளே அந்த இரண்டாவது நபரை அதே முறையில் அணுக, இந்த இரண்டாம் நபர் சுதாரித்துக் கொண்டு மறுநாள் திருடனை வரச்சொல்லிவிட்டு, எப்போதும் அவன் வழக்கமாக அழைத்துச் செல்லும் இடத்தில் ஆட்களை ஏற்பாடு செய்து விட்டார். இதையறியாத திருடன் அதே இடத்தில், தனது அதே அணுகுமுறையைக் காட்ட, பிடிபட்டு அந்த இடத்திலேயே ‘செமத்தியாக கவனிக்கப்பட்டு’ காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டான்.

கூர்ந்து படித்திருந்தீர்கள் என்றால், முதல் 2,3 திருட்டுக்களிலேயே திருடனைப் பிடித்திருந்திருக்கலாம் என்று உணர்ந்திருப்பீர்கள். அனைத்தும் ஒரே நபரால், ஒரே நேரத்தில், ஒரே இடத்தில், ஒரே முறையில் திருடப்பட்டிருக்கிறது. திருடனைப் பிடிக்க எந்த ஜேம்ஸ்பான்ட் வேலையும் தேவையில்லை. இன்னும் கூர்ந்து படித்திருந்தீர்கள் என்றால், திருடு போனது பத்தோ மேற்கொண்டோ கைபேசிகள். வந்தது ஐந்தோ ஆறோ புகார்கள். புகார் வராத மற்ற கைபேசிகள் என்னவாயின? இந்தத் திருட்டுப் பொருளை வாங்கிய உள்ளூர் ‘வணிகர்’ சென்னை ‘வணிகர்’ என்று எவரும் கண்டு கொள்ளப்படவில்லை. எதுவும் விளங்கிற்றா?

இது ஒரு திரைப்படமாக எடுக்கப்பட்டிருந்தால், அது எப்படி ஒரு திருடன் எல்லாரையும் அதே இடத்துக்கு அழைத்துக் கொண்டு போய் அதே மாதிரி, அதுவும் அதே நேரத்தில் திருடுவான்? இவ்வளவு தூரம் plan பண்றவன் இதக் கூட யோசிக்க மாட்டானா?” என்று `logic’ கேள்விகள் கேட்கப்பட்டு கண்டவாறாக விமரிசிக்கப்பட்டிருக்கும். ஆனால் என்ன செய்வது நமது அன்றாட வாழ்வில் நடப்பவை சில திரையில் கூட காண முடியாத சுவாரசியம் கொண்டவையாக, நம்பமுடியாதவையாக அமைந்து விடுகின்றனவே?

0

கலிகாலமடா சாமீ!

escalator“எங்க காலத்துல குழவியத்தான் சுத்துவோம். இப்ப என்னடான்னா உரலும் சேர்ந்து சுத்தறதே….! உரல் ஒரு பக்கம்; குழவி ஒரு பக்கம் சுத்தற கூத்த இப்பத்தான் பாக்கறேன். கலி காலங்கறது சரியாத்தான் இருக்குடீம்மா!”

தானியங்கி அரவை இயந்திரம் வந்தவுடன் ஒரு பாட்டி இப்படி சொல்லி மோவாக்கட்டையில இடிச்சுடுண்டு போனாளாம்.

ஆரம்பத்தில் வியப்பாக இருந்தாலும் போகப்போக பழகிவிட்டது.

துணி துவைக்கற இயந்திரம் முதன்முதலில் எங்கள் வீட்டுக்கு வந்தபோது வாராவாரம் இந்த இயந்திரம் தயாரிக்கிற நிறுவனத்திலிருந்து ஒருவர் வந்து இயந்திரத்தின் வேலை திருப்திகரமாக இருக்கிறதா, துணிகளை நன்றாக அலசுகிறதா? நன்றாக பிழிகிறதா? இன்னும் என்னவெல்லாம் அந்த இயந்திரம் செய்தால் நன்றாக இருக்கும் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்து எடுப்பார். பாவம், அவர் தொழில் கேள்வி கேட்பது.

ஒருமுறை என் கணவர் பதில் சொன்னார்: ‘துணி துவைத்து, உலர்த்தி, இஸ்திரியும் பண்ணி வெளியே வந்தால் நன்றாக இருக்கும். அதுவும் ‘அப்பா துணிகளை (என் கணவரின்) முதலில் வெளியே தள்ளு’ என்று ப்ரோக்ராம் செய்யும்படி இருந்தால் நன்றாக இருக்கும்’

என் அம்மா சொல்வாள்: ‘உங்காத்துக்கு துணி மடிக்கற மெஷின் தான் வேணும்ன்னு.’ எங்க வீட்டுக்கு வந்தால் அம்மாவோட வேலை துணி மடிக்கறது! அவரவர்கள் கஷ்டம் அவரவர்களுக்கு!

சரி இப்போ எதுக்கு பழங்கதை என்கிறீர்களா? சொல்லுகிறேன் என் சோகக்கதையை.

இப்ப வந்திருக்கிற தானியங்கி இயந்திரங்களில் என்னை ரொம்பவும் பயமுறுத்துவது நகரும் படிக்கட்டுகள் அதாங்க, எஸ்கலேட்டர்!

அதென்னமோ அதைப் பார்த்தாலே நானும் (அது மேல ஏறாமலேயே) நகருவது போல பிரமை! முதலில் தட்டையாக வெளி (எங்கிருந்து?) வந்து பிறகு மடிந்து மடிந்து மேலே போவது பார்க்கவே ஒரு மாதிரி இருக்கும்.

எத்தனை மாடிகள், எத்தனை படிக்கட்டுகள் இருந்தாலும் பரவாயில்லை ஏறிடுவேன். இந்த நகரும் படிக்கட்டுல ஏற ரொம்ப பயம். அதனாலேயே பிள்ளையோ, பெண்ணோ ‘மால்’ போலாமான்னா வேண்டாம்ன்னு சொல்லிடறேன். கட்டாயம் போகவேண்டும் என்கிற அவசியம் ஏற்பட்டால் படிக்கட்டுகளைத் தேடிப் பிடித்து ஏறுவேன்! சின்னஞ்சிறுசுகள் எஸ்கலேட்டர்ல போகும் போது, ‘நான் எத்தனை ‘fit’ பாருங்கள், படி ஏறுகிறேன்’ என்று எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு படி ஏறுவேன். வேறு என்ன செய்ய?

இன்னொன்றும் சொல்லவேண்டும். எனக்கும் மாடிப் படிகளுக்கும் அப்படி ஒரு ராசி. நான் எங்கு போனாலும் எங்கள் வீடு மாடியில்தான். இப்போது இருக்கும் வீட்டுக்கு வருமுன் நாங்கள் இருந்த வீடு இரண்டாவது மாடியில். நான் ஆங்கில வகுப்புகள் எடுத்தது 3 மாடியில். சில மையங்களில் 2வது மாடியில் வகுப்புகள் இருக்கும்.

யார் வீட்டுக்காவது போனேன் என்றால் அவர்கள் மாடியில் இருப்பார்கள். ‘நாங்க கீழ தான் இருந்தோம். இப்போதான் மாடிக்கு குடி பெயர்ந்தோம்’ என்பார்கள், என்னைப் பார்த்தவுடன்!

ஆறு மாதங்களாக யோகா வகுப்புகளுக்குப் போய்க்கொண்டிருக்கிறேன் – 3 வது மாடியில். தினமும் நான் ஏறி இறங்குவது மொத்தம் 150 படிகள்!

இவ்வளவு இருந்தும் எஸ்கலேட்டர் என்றால் பயம் தான்!

எல்லோரும் எஸ்கலேட்டர்-ல ஏறி ஆடாம அசையாம மேல போறத பார்க்கும் போது ‘ச்சே! எனக்கு மட்டும் என்ன பயம்?’ ன்னு தோணும். சில வீரதீரப் புலிகள் நகரும் அதன் மேல் நடந்து போவார்கள்.

மனதை ரொம்பவும் தயார் பண்ணிப்பேன். அடுத்தமுறை பயப்படாமல் ஏறிடணும் என்று. ‘ஒண்ணுமேயில்லை. நீ ஒரு காலைத் தூக்கி வை. அதுவே நகர ஆரம்பிச்சுடும்!’ என்று என்னுடன் வருபவர்கள் சொல்லுவார்கள். அதுதான், அது நகருவதுதான் எனக்கு அலர்ஜி!

சென்னை சென்ட்ரல் மாலில் என் அக்கா அனாயாசமாக அதில் ஏறிப்போவதை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே நான் கீழேயே நின்று விட்டேன். அவள் பாவம், நான் பக்கத்தில் வருவதாக நினைத்துக் கொண்டு பேசிக் கொண்டு போனவள் திரும்பிப் பார்த்தால், நான் கீழேயே நகரும் படிக்கட்டை பார்த்து பேந்த பேந்த முழித்துக் கொண்டே நிற்கிறேன்!

அக்கா மேலிருந்து (சத்தமாக) சொன்னாள்: ‘ஒரு காலை தூக்கி வை. அவ்வளவுதான்.’ அதுதானே வரவில்லை எனக்கு! நானும் என் காலுக்கு கட்டளை இடுகிறேன். அது இருந்த இடத்திலேயே ஆணி அடித்தாற்போல நின்று கொண்டிருக்கிறது!

சரி இவ்வளவு சொல்லுகிறார்களே, எஸ்கலேட்டரின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு முயற்சி செய்யலாம் என்று கையை அதன் மேல் வைத்தேன். ஐயையோ! என் கைமட்டும் மேலே மேலே…கால்கள் நான் நின்ற இடத்திலேயே!

அடச்சே! கைப்பிடியாவது ஒரே இடத்தில் நிலை நிற்காதோ? என்ன கலிகாலமாடா சாமீ! உரலும், குழவியும் தான் நினைவுக்கு வந்தன!

போனவாரம் ஒரு மால் போனோம். முதலிலேயே என் மகளிடம் சொன்னேன்: ‘மாப்பிள்ளையும் வருகிறார். எஸ்கலேட்டர் அருகில் போய் ஒரு ‘சீன்’ போட வேண்டாம். மாடிப்படியில் ஏறி வருகிறேன்’ என்று. அவள் கேட்கவில்லை. இன்று ‘உன்னை எஸ்கலேட்டரில் ஏற்றிவிட்டு விட்டு மறுவேலை’ என்றாள்.

வழக்கம்போல எஸ்கலேட்டர் அருகில் போய் அதையே உற்றுப் பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.

‘காலை எடுத்து வைம்மா!’

எங்கள் பின்னால் சிலர் வந்தனர்.

‘இரு, இரு, அவர்கள் போகட்டும்’ – தைரியம் வர எனக்கு கொஞ்ச நேரம் வேண்டுமே!

‘அவர்கள் போயாச்சு! அப்பா, என் கணவர் இருவரும்  போயாச்சு. வா நீ!’

ஏ! காலே! நீ எங்கிருக்கிறாய்?

எத்தனை உசுப்பினாலும் என் கால்களில் அசைவே இல்லை.

திடீரென்று என் அருகில் ஒரு பெண்மணி. என் வலதுகையை சுற்றி தனது  இடது கையால் கெட்டி (ஆ! வலிக்குது!) யாகப் பிடித்துக் கொண்டார்.

‘கால எடுத்து வையுங்க!’ என்றார்.

அவர் மிரட்டிய மிரட்டலில் காலை எடுத்து வைத்தேன். எஸ்கலேட்டர் என்னை அப்படியே உள்ளே இழுத்துக் கொண்டது! நடந்ததை உணர கொஞ்ச நேரம் ஆயிற்று எனக்கு.

அட! நான் எஸ்கலேட்டரில் போய்க் கொண்டிருக்கிறேன்! கடைசி படி வந்தவுடன், ’உம், இப்போ காலை வெளியே வையுங்க!’ இன்னொரு மிரட்டல்!

‘தேங்க்ஸ், நன்றி, தன்யவாத…’ எல்லா மொழிகளிலும் நான் சொல்ல, அவர் கடமையே கண்ணாக அடுத்திருந்த எஸ்கலேட்டரில் இறங்கிப் போய் விட்டார்.

அப்பாடி! நாங்கள் தேடி வந்த கடை எங்கே? என் மாப்பிள்ளை சொன்னார்: ‘இன்னும் ஒரு மாடி ஏறவேண்டும்!’

‘கடவுளே…!’

இந்தமுறை என் பெண் ஒரு பக்கம், என் கணவர் மறுபக்கம் என்னைப் பிடித்துக் கொண்டார்கள். சுற்றுமுற்றும் பார்த்தேன். அந்த ‘bouncer’ பெண்மணி இருக்கிறாரா என்று.

‘ஏறுங்க! அவர் குரல் காதில் ஒலிக்க ஏறிவிட்டேன்.

‘அம்மா ஏறியவுடன், எஸ்கலேட்டர் வேகம் குறைந்து விட்டது பாரு!’ என் கணவரின் ஜோக் கூட என்னை சிரிக்க வைக்கவில்லை. அத்தனை சீரியஸ்ஸாக தலையைக் குனிந்துகொண்டே வந்தேன்!

அடுத்த மாடியும் எஸ்கலேட்டரிலேயே!

ஒருவழியாக ஷாப்பிங் முடிந்தது. கீழே போக வேண்டுமே! எனது பயம் மெல்ல தலை தூக்க ஆரம்பித்தது. என் கை மூலம் என் பயத்தை உணர்ந்த என் பெண், ‘இப்போ லிப்ட்டில இறங்கலாம், கவலைப் படாதே!’ என்றாள். இன்னிக்கு எஸ்கலேட்டர் ஏற்றம் கத்துக்கோ. அடுத்தமுறை இறக்கம் சொல்லித் தரேன்…!’ என்று பெரிதாக சிரிக்க ஆரம்பித்தாள். நானும் எஸ்கலேட்டர் பயம் தெளிந்து அவளது சிரிப்பில் கலந்து கொண்டேன்.

0

உங்களுக்கு நேர்ந்த சுவையான, சுகமான, முக்கியமான அனுபவங்கள் தமிழ்பேப்பரில் வெளிவரவேண்டுமானால் ‘எனது தர்பார்’ என்று தலைப்பிட்டு சுருக்கமாக எழுதி அனுப்புங்கள். அனுப்பவேண்டிய முகவரி :  editor@tamilpaper.net – ஆசிரியர்.