மின்சாரம் : அனல், நீர், அணு, காற்று

மின்சார உற்பத்தி அதிகரிக்கவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. ஆனால், எந்த வழியில் அதிகப்படுத்துவது? மின்சாரம் உற்பத்தி செய்ய எது சரியான வழி? அதைவிட முக்கியம், எது பாதுகாப்பான வழி? நீர் வழி மின்சாரம் அணு மின்சாரத்தைக் காட்டிலும் பாதுகாப்பானது என்று சொல்லப்படுவது அந்த அளவுக்கு உண்மை?
உலகில் உள்ள நீர் மின் ஆற்றலின் கொள்ளளவுத் திறனை (MW அல்லது GW) வைத்துப் பார்க்கும் போது, நீர் மின் நிலையங்களின் பங்கு 16% ஆக இருக்கிறது. இந்தியாவில் அனைத்து மின் நிலையங்களின் INSTALLED CAPACITY 205 GW. இந்தியாவைப் பொறுத்தவரையில், தோராயமாக 37364 MW அளவுக்கு நீர் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது இந்தியாவில் நீர் மின் சக்தியின் INSTALLED CAPACITY யின் பங்கு 21.5%. உலகில் நீர் மின்சக்தி உற்பத்தியில், இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. மின் உற்பத்தி அதிகமாக செய்கிற நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஆனால், மின் தேவை மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில், குறைவாக இருப்பதுதான் பிரச்னை. இந்தியாவில் மின் வசதியே இல்லாதே மக்கள், 300 மில்லியன் இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில், நீர் மின்சக்தியின் Installed capacity  500MW மட்டுமே.  நீர் மின்சக்தி என்பது தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், மிகச் சிக்கலான ஒன்றாகவே உள்ளது.
நீர் மின் ஆற்றல் என்பது, நிலையாக இருக்கும் நீரை TURBINE க்குள் செலுத்தி, இயக்க ஆற்றலாக மாற்றி, ஜெனரேட்டர் துணை கொண்டு மின் சக்தியாக மாற்றுவது.
நீர் மின் ஆலைகள் பெரும்பாலும் அணைத் திட்டங்களில் உள்ள நீரைப் பயன்படுத்தி உற்பத்தி செய்வதால், அவை மலைப் பகுதிகளில் அமைக்கப்பெறுகின்றன. மக்களின் விவசாயத்துக்கும் , மின் உற்பத்திக்குமாகத் தான் அணைகள் அமைக்கப் பெறுகின்றன.
Renewable energy மூலம் மின் உற்பத்தி செய்யப்படும் காற்றாலைகள், கதிராலைகள் ஆகியவற்றை கட்டுப் படுத்துவது சாத்தியமல்ல. ஆனால் நீர் மின் உற்பத்தி , அவ்வாண்டில் அணைகளின் நீர் மட்டத்தைப் பொறுத்து , நீர் மின் உற்பத்தியை பெற இயலும். மேலும், இதனுடைய ஆற்றல் அளவு (அவுட்புட் ) கதிராலைகளையும், காற்று ஆலைகளோடும் ஒப்பிடுகையில் கூடுதல் என்பது இதனுடைய பலம். ஆனால் அணு ஆலைகளோடு ஒப்பிடுகையில் ஆற்றல் பாதி அளவுதான்.
நீர் மின் ஆலைகள், நிலக்கரி மற்றும் காஸ் ஆலைகள் போல கரியையோ, கரிமில வாயுவையோ உமிழாது. எரி பொருள் செலவு மிகக் குறைவு. மேலும் இதை இயக்க, குறைந்த அளவில்தான் மனித வளமும் தேவைப்படுகிறது. இதன் எரிபொருளாக நீர் உள்ளதால், கதிர் இயக்கம் போன்ற பிரச்னைகளும் இல்லை. இதற்கு தேவையான முதலீடுதான் (Capital cost) அதிகமே ஒழிய, நடத்துவதற்கான செலவு (Operating cost) மிகவும் குறைவு.  Non renewable energy மூலம் பெறப்படும் யுரேனியும், நிலக்கரி, காஸ், ஆயில் ஆகியவற்றுக்கு அதிகம் செலவிடவேண்டி இருக்கும்.
நீர் மின் ஆலைகளின் தீமைகள் என்னென்ன? மிகப் பெரிய தீங்கு, சுற்றுச்சூழல் பாதிப்பு. நீர்மின் திட்டங்கள் அருகில் உள்ள சூழ்மண்டலத்தை இவை பெரிதும் பாதிக்கின்றன. ஓடும் ஆறு, நீர் தேக்கமாக மாறும்போது, அதில் வாழும் நீர் விலங்குகள், அந்நீரில் படிவளர்ச்சியில் தோன்றிய பல உயிர்கள் பாதிப்படைகின்றன. இதனால் பல மடங்கு மீன்கள் இத்திட்டத்தால் அழிந்து வருகின்றன. மேலும் நீர் மின் திட்டத்தால், ஆற்றின் கீழே இருக்கும் அடிநீர்மட்டத்தை பாதிக்கும். நில அரிப்பு உருவாக காரணமாகும்.
மற்றொரு பிரச்னை, மக்கள் இடப்பெயர்ச்சி. அதன் மூலம் விளையும் பல பொருளாதார, சமூக, தனிப்பட்ட உணர்வுப் பிரச்னைகளையும் இணைத்துக்கொள்ளவேண்டும். இதே பிரச்னைகள் இன்று அணு மின் நிலையங்களை அமைப்பதிலும் உள்ளன. எதிரி நாடுகள் குண்டுமழை பொழிந்தால் அணு உலைகள் போலவே நீர் மின் ஆலைகளும் பாதிக்கப்படும். தவிரவும்,  கதிராலைகளைக் காட்டிலும் ஐந்து மடங்கு நிலப்பரப்பு நீர் மின் ஆலைகளுக்குத் தேவைப்படுகிறது.   ஆனால், அணு மின் நிலைய விடயம் மட்டும் இங்கு அரசியலாக்கப் பட்டுள்ளது.
பிப்ரவரி 2008 கணக்கின்படி, உலக அளவில் ஏறத்தாழ 4-8 கோடி மக்கள், அணை கட்டுமானத்துக்காக இடப்பெயர்ச்சி செய்யப்பட்டுள்ளார்கள்.  எந்தவிதமான ஈடுத் தொகையும் அளிக்கப்படவில்லை. பல பண்பாட்டு, வரலாற்று சிறப்பு வாய்ந்த பகுதிகள் அணைகளால் முழுவதுமாக அழிக்கப்படுவதுண்டு. பெரும்பாலும் காடுகளை அழித்தே அணைகள் கட்டப்படுகின்றன. மேலும், நீர் மின் நிலையங்கள் வெளிப்படுத்தும் மீத்தேன் காரணமாகவும் ஆச்சிஜன் குறைவு மூலமாகவும் நீர் வாழ் உயிரினங்கள் அழிகின்றன.
தொழில்நுட்ப ரீதியில் உற்று நோக்குவோமேயானால், நீர் மின் ஆலைகள் மூலம், வருடம் முழுமைக்குமான மின்சக்தியைப் பெற இயலாது என்பது புலப்படும். இந்தியாவைப் பொருத்தவரை,  நீர் மின் ஆலைகள் மூலம் , 43% மட்டுமே மின் உற்பத்தி செய்ய முடிகிறது. நீர் மின்சக்தியின் மூலமாக உலக மின் உற்பத்தியின் சராசரி ஆண்டு மின் உற்பத்தியின் ஆற்றல் அளவு  44 %. நான்கு மாதங்களுக்கு மட்டுமே அதிக ஆற்றல் கிடைக்கும்.  குறைந்த பட்சம் நான்கு வெயில் மாதங்களுக்கு உற்பத்தி மிகக் குறைவு அல்லது கிடையாது.
அணு ஆலைகளைப் பொருத்தவரையில், விக்கிபீடியாவின் தகவல் இது. The capacity factor of Indian reactors was at 79% in the year 2011-12 as against 71% in 2010-11. Nine out of Twenty Indian reactors recorded an unprecedented 97% Capacity factor during 2011-12. With the imported Uranium from France, the 220 MW Kakrapar 2 PHWR reactors recorded 99% capacity factor during 2011-12. The Availability factor for the year 2011-12 was at 89%.
இந்தக் கட்டுரையின் படி, அணு ஆலைகளோடு ஒப்பிடுகையில், நீர் மின்சக்தியின் மூலம், பாதி அளவுக்குத் தான் மின் உற்பத்தி செய்ய முடிகிறது. உலைகளால் ஏற்படும் பிரச்னைகளும் கிட்டத்தட்ட ஒன்றுபோலவே இருக்கின்றன. சீனாவின் பாங்கியோ அணை (Banqiao Dam) உடைப்பு விபத்தில் இறந்தவர் எண்ணிக்கை சுமார் 1,71,000 ஆகும். இத்துயர நிகழ்வில் லட்சக்கணக்கானோர் தம் வீடுகளை இழந்தனர்.
0
எனது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். ஸ்ரீசைலம் நீர்மின் ஆலையில் (Srisailam 6×150 MW Hydro power plant) பணியாற்ற (Electrical Testing & Commissioning Engineer) சென்றிருந்தேன். அந்த ஆலையை அமைக்கும் பணியில் ஈடுபட்ட பல பத்தாயிரம் பேர் மரணடைந்திருக்கிறார்கள். இந்த விவரங்கள் வெளியிடப்படுவதில்லை.  மலையைக் குடைந்து குகைக்குள் மின் ஆலை அமைத்துள்ளார்கள்.
அதன் முகப்பில் இருந்து, உள்ளே செல்ல இரண்டு கி.மீ அளவுக்கு ஒரே ஒரு பாதை மட்டுமே இருக்கும். சிக்னல் பார்த்துப் பார்த்துதான் வண்டிகள் ஒவ்வொன்றாகச் செல்லும்.  இந்த ஆலையை அமைக்க 20 ஆண்டுகள் ஆயின.  உற்பத்திக்கு முன்பே, பல பத்தாயிரக்கணக்கானவர்கள் இறந்துபோயிருக்கிறார்கள்.
மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதரவேண்டியது ஓர் அரசின் கடமை. அதே போல், மக்களின் அச்சங்களைப் போக்குவதும் அரசின் கடமைதான். பொதுவாக அரசின் நலத் திட்டங்கள் நிறைவேற எந்த சமூகமும் மிகப் பெரிய தியாகத்தைச் செய்யவேண்டியுள்ளது. அத்தகைய தருணங்களில் பாதிக்கப்படும் மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்து, அவர்களுக்குப் போதுமான அளவுக்கு இழப்பீடு தரவேண்டும்.
அணு உலைகளைப் பொருத்தவரை, அறிவார்ந்த சமூகம் தேவையற்ற அச்சத்தைப் பரப்புரை செய்கிறது என்று நினைக்கிறேன். அணு உலைகள் மட்டும் கூடாது என்ற வாதத்தை நான் ஏற்கத் தயாராக இல்லை. அதே போல், மக்கள் நலனைக் கவனிக்காத அரசையும் நான் ஏற்கவில்லை.
இங்கு அணு உலையை ஆதரித்துப் பேசுவது போராடும் மக்களுக்கு எதிரானது என்பது போலவும் அரசின் கைக்கூலியாகச் செயல்படுவது என்பது போலவும் திரிக்கப்படுகிறது. இதை நான் எதிர்க்கிறேன். தொழில் நுட்ப ரீதியாக,  மின்சக்தியைப் பற்றிய புரிதலை ஏற்படுத்துவது ஒரு மின்னியல் பொறியாளனாக என் கடமை. அணு ஆலைகள் மின் உற்பத்தியில் மிகச் சிறந்த பங்கு ஆற்றுகின்றன. அதனால் இதனை ஆதரிக்கவேண்டும்.
அணு ஆலைகள் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பது போன்ற ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளலாம். அணு உலைகளே வேண்டாம் என்பது ஏற்கத்தக்கதல்ல.
இருந்தால் ஏற்றுக் கொள்ளலாமே தவிர , அணு உலைகள் மட்டுமே தீங்கு என்கிற பரப்புரைகளை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. ஒவ்வொரு தொழில் நுட்பத்திலும் நன்மை , தீமைகள் உள்ளன. அதில் இருந்து எந்த அளவுக்குப் பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள இயலுமோ அவ்வகையில் அதனைப் பயன்படுத்த யோசனை தெரிவிப்பதே அறிவார்ந்த சமூகவாதிகள் செய்ய வேண்டிய பணி. அதை விடுத்து, வெறும் அச்ச்சத்தைப் பரப்புவதில் என்ன நியாயம் இருக்கிறது?
குறிப்பு : சூரிய மின் சக்தியைப் பற்றியும், அதன் நன்மை, தீமைகள் பற்றியும் எனது இணையதளத்தில் (http://lakshmanaperumal.com) விளக்கியிருக்கிறேன்.
0
லஷ்மண பெருமாள்

ஹிக்ஸ் போஸான் : கிட்டத்தட்ட கடவுள்

கடவுள் துகளை (God Particle) விஞ்ஞானிகள் கண்டுபிடித்து விட்டதாக நேற்றைய தினத்திலிருந்து கதறுகின்றன ஊடகங்கள். ஏதோ கடவுளையையே கண்டுபிடித்து விட்டது போல! கண்டுபிடித்துவிட்டது உண்மையானால், தொலைத்தவர் யார் என்று பகடிகள் வேறு!

கடவுளிடம் போகும் முன் முதலில் சில அடிப்படை விஷயங்களைப் பார்க்கலாம்.

இன்றைய நவீன துகள் இயற்பியல் (Modern Particle Physics) பரவலாக ஏற்றுக் கொண்டிருக்கும் சித்தாந்தம் – நியம மாதிரி (Standard Model) என்பதாகும். இது அணுக்கூறுகளிடயே (Subatomic Particles) இயங்கும் மின்காந்த விசை (Electromagnetic Force), மென்விசை (Weak Force), வன்விசை (Strong Force) ஆகிவற்றை விளக்குகிறது.

இதன்படி பிரபஞ்சம் மூலத்துகள்களால் (Elementary Particles) ஆனது. சூரியன், சந்திரன், கடல், காற்று, அனக்கோன்டா பாம்பு, ஐஸ்வர்யா ராய், நீங்கள், நான் எல்லாமே.

இந்த‌ மூலத்துகள்கள் இரண்டு வகைப்படும் – ஃபெர்மியான்கள் (Fermions) மற்றும் போஸான்கள் (Bosons). இத்தாலிய‌ இயற்பியலாளர் என்ரிகோ ஃபெர்மியின் பெயரால் அழைக்கப்படுபவை ஃபெர்மியான்கள். இவை ஃபெர்மி – டைராக் புள்ளியியல் (Fermi-Dirac Statistics) சொல்லும் குணங்களைக் கொண்டிருப்பவை. இந்திய விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸின் பெயரால் அழைக்கப்படுபவை போஸான்கள். இவை போஸ் – ஐன்ஸ்டைன் புள்ளியியலைப் (Bose-Einstein Statistics) பின்பற்றுபவை.

ஃபெர்மியான்கள் க்வார்க்கள் (Quark), லெப்டான்கள் (Lepton) என இருவகைப்படும். அப் (Up), டௌன் (Down), சார்ம் (Charm), ஸ்ட்ரேஞ் (Strange), டாப் (Top), பாட்டம் (Bottom) என க்வார்க்கள் ஆறு வகைப்படும்.

எலக்ட்ரான் (Electron), ம்யூவான் (Muon), டாவ் (Tau), எலக்ட்ரான் ந்யூட்ரினோ (Electron Neutrino), ம்யூவான் ந்யூட்ரினோ (Muon Neutrino), டாவ் ந்யூட்ரினோ (Tau Neutrino) என லெப்டான்கள் ஆறு வகைப்படும்.

ப்ரோட்டான் (Proton), ந்யூட்ரான் (Neutron) போன்று நாம் உயர்நிலைப்பள்ளிகளில் படித்த அணுக்கருப்பொருட்கள் எல்லாம் இந்த ஃபெர்மியான் மூலத்துகளின் கூட்டு தான். 2 அப் க்வார்க்கள் மற்றும் 1 டௌன் க்வார்க்கால் ஆனது ப்ரோட்டான். 1 அப் க்வார்க் மற்றும் 2 டௌன் க்வார்க்களால் ஆனது நியூட்ரான். போஸான்கள் காஜ் போஸான் (Gauge Boson), ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) என இரு வகைப்படும். காஜ் போஸான்கள் ஃபோட்டான் (Photon), க்ளூவான் (Gluon), W போஸான், Z போஸான் என நான்கு வகைகளை உள்ளடக்கியது. நாம் இப்போது பேசவிருப்பது இந்த‌ ஹிக்ஸ் போஸான் எனும் மூலத்துகள்களை பற்றி.

1960களிலும் 70களிலும் மெல்ல மெல்ல நியம மாதிரி உருவாகி வந்தாலும் அவை சித்தாந்த ரீதியில் விளக்கிய மூலத்துகள்களை விஞ்ஞானிகள் பரிசோதனைக்கூடங்களில் சந்திக்க‌ பல தசாப்தங்கள் பிடித்தன.

நேற்றைய முன்தினம் வரையிலும் மேலே சொன்ன பதினேழு மூலத்துகள்களில் பதினாறு மூலத்துகள்களை விஞ்ஞானிகள் தம் பரிசோதனைகளில் உருவாக்கி ஆராய்ந்திருந்தார்கள். ஹிக்ஸ் போஸான் ஒன்று மட்டும் தான் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தது. நேற்று CERN பரிசோதனைக்கூட விஞ்ஞானிகள் ஹிக்ஸ் போஸானையும் உருவாக்கி விட்டதாக அறிவித்திருக்கிறார்கள். ஹிக்ஸ் போஸான் என்ற இந்தத் துகளின் இன்னொரு பெயர் தான் கடவுள் துகள்!

ஃபோட்டான், க்ளூவான் தவிர மற்ற எல்லா மூலத்துகள்களும் எடை கொண்டவை. இவை எப்படி எடை பெற்றன என்பதற்கு ஆரம்பத்தில் நியம மாதிரியில் விளக்கம் இல்லை. பிற்பாடு பீட்டர் ஹிக்ஸ் என்ற பிரிட்டிஷ் இயற்பியலாளர் இதை ஹிக்ஸ் இயங்கமைவு (Higgs Mechanism) என்ற கோட்பாட்டின் மூலம் விளக்கினார்.

அதாவது ஹிக்ஸ் புலம் (Higgs Field) என்பது பிரபஞ்சம் முழுக்க வியாபித்திருக்கும் ஒரு க்வாண்டம் ஊடகம். மூலத்துகள்கள் இவற்றுடன் ஈர்ப்பு எதிர்ப்பு விசைகளின் மூலமாக சதா விளையாடிக் கொண்டே இருக்கின்றன. அதன் பலனாகவே அவை தமக்கான‌ எடையை அடைகின்றன என்பது தான் ஹிக்ஸ் இயங்கமைவு. அந்த ஹிக்ஸ் புலம் எதனால் ஆனது என்ற கேள்விக்கான பதில் தான் ஹிக்ஸ் போஸான். மேலோட்டமாக, எப்படி ஒளி என்ற மின்காந்தப் புலம் ஃபோட்டான் என்ற எடையற்ற மூலத்துகளால் ஆனதோ அதே போல் ஹிக்ஸ் புலம் என்ற ஊடகமானது ஹிக்ஸ் போஸான் என்ற எடையுள்ள மூலத்துகளால் ஆனது.

ஹிக்ஸ் போஸான்கள் எடை கொண்டவை, மின்னூட்டம், தற்சுழற்சி அற்றவை. இதன் குறியீடு H0. சித்தாந்தரீதியாக நியம மாதிரி நம்பிக் கொண்டிருந்த ஹிக்ஸ் இயங்கமைவு, ஹிக்ஸ் புலம் போன்றவை பரிசோதனை அடிப்படையிலும் சரியே என்பதைத்தான் நேற்றைய கண்டுபிடிப்பு உறுதி செய்திருக்கிறது (பிஎஸ்சி சிலபஸ் மாறாது என்பதால் இளநிலை இயற்பியல் மாணவர்கள் பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம்).

CERN என்பது சுவிட்ச‌ர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள 20 நாடுகள் ஒன்றிணைந்த ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் (European Organization for Nuclear Research). இங்கே Large Hadron Collider (LHC) என்ற உலகிலேயே மிகப்பெரிய துகள் முடுக்கி (Particle Accelerator) இருக்கிறது. இது மூலத்துகளைகளை அதிவேகத்தில் பயணிக்கச் செய்து அவற்றின் குணங்களை, செயல்களை ஆராயும் பணி நடக்கிறது.

LHC பூமிக்கு அடியில் (ஜெனீவா புறநகர் பிரான்ஸ் சுவிட்சர்லாந்து எல்லையில்) கட்டப்பட்டுள்ள வட்ட வடிவ 27 கிமீ நீள‌ சுரங்கப் பாதையில் புதைக்கப்பட்டுள்ளது. LHC பயன்படுத்தி மொத்தம் ALICE, ATLAS, CMS, TOTEM, LHCb, LHCf மற்றும் MoEDAL என‌ ஏழு பரிசோதனைகள் நடந்து வருகின்றன. இதில் ATLAS (A Toroidal LHC Apparatus) மற்றும் CMS (Compact Muon Solenoid) என்ற இரண்டு பரிசோதனைகளில் தாம் ஹிக்ஸ் போஸான் மூலத்துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன‌.

ஹிக்ஸ் போஸான் துகள்கள் ஏதோ நேற்று தான் முதல் முறையாகப் பார்க்கப்படுகிறது என்பது போன்ற பிம்பமே தவறு. 2011ன் ஆரம்பம் முதலே LHCயில் நடந்த பரிசோதனைகளிலும், ஃபெர்மிலேப் (Fermilab), டெவட்ரான் (Tevatron) போன்ற பிற பிரிசோதனைக்கூடங்களிலும் அவ்வப்போது தொடர்ச்சியாக ஹிக்ஸ் போஸான் தீற்றல்கள் உணரப்பட்டே வந்தன. ஆனால் துகள் இயற்பியலில் ஒரு துகளை பரிசோதனை ரீதியாக உருவாக்கி விட்டதாக அறிவிக்க ஐந்து சிக்மா துல்லியம் தேவை (ஐந்து சிக்மா என்பதன் அர்த்தம் என்னவென்றால் 99.999% சரியானது. அதாவது லட்சத்தில் ஒரே ஒன்று மட்டும் பிழையாகச் சாத்தியம்).

நேற்று ATLAS பரிசோதனையில் 126 GeV/c2 எடை கொண்ட ஹிக்ஸ் போஸான்கள் 5 சிக்மா துல்லியத்திலும், பரிசோதனையில் 125 GeV/c2 எடை கொண்ட ஹிக்ஸ் போஸான்கள் 4.9 சிக்மா துல்லியத்திலும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன (துகள் எடை eV/c2 என்ற அலகில் அளக்கப்படுகிறது. ஐன்ஸ்டைனின் E = mc2 என்ற நிறை – ஆற்றல் சமன்பாட்டிலிருந்து m = E/c2 என்ற அடிப்படையில் கணக்கிடும் முறை). நேற்று அறிவிக்கப்பட்ட முடிவுகள் யாவும் 2011 மற்றும் 2012 காலகட்டத்தில் நடத்தப்பட்ட‌ ப்ரோட்டான் – ப்ரோட்டான் மோதல் (Proton – Proton Collision) பரிசோதனைகளில் பெறப்பட்ட தரவுகளை ஆராய்ந்ததன் அடிப்படையில் சொல்லப்படுபவை. இன்னும் 2012 தரவுகள் முழுக்க ஆராய்ந்து முடிக்கப் படவில்லை என்றும் தெரிகிறது. இந்த முடிவுகள் மிகவும் ஆரம்பநிலைக் கண்டுபிடிப்புகள். முழு முடிவுகள் ஜூலை இறுதிவாக்கில் வெளியாகும்.

இந்த ஆராய்ச்சி எப்படி நடத்தப்பட்டது என்பது குறித்த ஓர் அபாரமான விளக்க வீடியோ இங்கே காணக்கிடைக்கிறது.

ATLAS சோதனையின் தலைவி ஃபேபியோலா கியனோட்டி, CMS பரிசோதனையின் செய்தியாளர் ஜோ இண்கண்டேலா, ஆராய்ச்சி இயக்குநர் செர்ஜியோ பெட்ரொலூஸி ஆகிய மூவருமே இது ஒரு புதிய மூலத்துகள் என்பதையும் போஸான் வகைச் சார்ந்தது என்பதையும் சொல்லி இருக்கிறார்கள்.

சித்தாந்தரீதியாக வர்ணிக்கப்படும், எடை உள்ளிட்ட குணங்களின் அடிப்படையில் இந்தப் புதிய மூலத்துகள்கள் ஹிக்ஸ் போஸானுடன் ஒத்துப் போகின்றன (consistent with Higgs boson). அதாவது இப்போதைக்கு இவை கிட்டதட்ட ஹிக்ஸ் போஸான்.

சரி, ஹிக்ஸ் போஸானுக்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு? அது ஊடகங்களின் சதி. துகள் இயற்பியல் பற்றி குறிப்பாக ஹிக்ஸ் போஸான் பற்றி இயான் லெடெர்மேன் என்ற நொபல் பரிசு பெற்ற விஞ்ஞானி 1993 ல் ‘The God Particle: If the Universe Is the Answer, What Is the Question?’ என்று ஒரு புத்தகம் எழுதினார்.

ஹிக்ஸ் போஸான் துகள்கள் தாம் நியம மாதிரியின் முக்கிய மையப் புள்ளி என்று கருதியதால் அவ்வாறு அதற்கு அப்பெயர் இட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால் இயானோ ஹிக்ஸ் போஸான் ஆயார்ச்சிக்கு செலவழிக்கப்படும் பெருந்தொகை மற்றும் கடின முயற்சிகள் குறித்தான விரக்தியில் தான் Goddamn Particle என்றே தலைப்பு வைத்ததாகவும் பதிப்பாளர் ஒப்புக்கொள்ளாமல் கவர்ச்சிக்காக God Particle என்று மாற்றியதாகவும் விளையாட்டாகச் சொல்கிறார்.

எப்படி இருப்பினும் ஊடகங்கள் God Particle பெயரையே ஹிக்ஸ் போஸானுக்கு நிலைக்கச் செய்து விட்டன. இப்போதும் அது தான் நடக்கிறது. மற்றபடி, கடவுளுக்கும் ஹிக்ஸ் போஸானுக்கும் மயிரளவும் தொடர்பில்லை.

அரை நூற்றான்டு முன்பு ஹிக்ஸ் போஸான் துகள்களை முதன் முதலில் சித்தாந்த ரீதியாகப் பிரசவித்த‌ பீட்டர் ஹிக்ஸுக்கு தற்போது 83 வயதாகிறது. விழியோரம் வழியும் நீர்த்துளிகளை துடைத்தபடியே தன் வாழ்நாளிலேயே இது ருசுப்பிக்கப்பட்டிருப்பது நப்ப முடியாத ஆச்சரியம் என்று சொல்லி CERN நிறுவன‌ஆராய்ச்சி குழுவினருக்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.  எப்படியும் கூடிய விரைவில் அவருக்கு இயற்பியல் நொபல் பரிசு உறுதி.

இந்தியாவிலிருந்தும் டாடா இண்ஸ்ட்யூட் ஆஃப் ஃபண்டமென்டல் ரிசர்ச் (TIFR) உள்ளிட்ட ஆராய்ச்சிக்கூடங்களிலிருந்து பல விஞ்ஞானிகள் CERN ஆராய்ச்சியில் பங்கு கொண்டிருக்கிறார்கள். அவர்களும் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர். 3,300க்கும் அதிகமான விஞ்ஞானிகள் இரு தசாப்தங்களுக்கும் மேலாக உழைத்ததன் பலன் தான் இந்தக் கண்டுபிடிப்பு.

ஒருவழியாக நியம மாதிரியின் இறுதிக்கேள்விக்கு விடை கிடைத்து விட்டது என்பது தான் இதில் முக்கியமானது. கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் புதிய துகள் ஹிக்ஸ் போஸான் தான் என 100% உறுதி செய்யப்படும் பட்சத்தில் அந்தத் துகள் குறித்து மேலும் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு மூலத்துகள்கள் குறித்து புரிந்து கொள்ள முயல்வார்கள்.

இப்போது ஹிக்ஸ் போஸான் என்று பொதுவாகத் தான் சொல்லியிருக்கிறார்கள். அடுத்து அதன் பல்வேறு வகைகள் என்னென்ன என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடக்கும். நாம் இதுவரையிலும் அறிந்திருப்பது 4% பிரபஞ்சம் பற்றித்தான். மிச்சம் 96% வெறும் ஏட்டுச்சுரைக்காயாக எழுத்துக்களில் மட்டுமே நம்மிடம் இருக்கிறது. அதை குறித்து மேலும் தெரிந்து கொள்ள இது ஒரு முக்கிய ஆரம்பமாக அமையும். அதற்கு துகள் இயற்பியல் இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. அவ்வகையில் இந்த‌ ‘கடவுள் துகள்’ ஆரம்பத்தின் முடிவல்ல; முடிவின் ஆரம்பம்.

0

சி. சரவணகார்த்திகேயன்

அணுசக்தியும் எதிர்காலமும் – அப்துல் கலாம் : 3

எதிர்காலத்தின் அணு எரிபொருள் : தோரியம்

கதிரியக்கப் பொருள்களில் குறைவாக அறியப்பட்ட ஓர் உறுப்பினரை நாம் அறிமுகம் செய்து கொள்வோம் – தோரியம். ஒருவேளை எதிர்காலத்தில் சாத்தியமான சிறந்த தீர்வாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் இன்னும் இருபது ஆண்டுகளுக்கு சிறந்த தேர்வாகவும் அது அமையும். தனிம அட்டவணையில் 90வது தனிமமான தோரியம் யுரேனியத்தைவிட சற்றே எடை குறைந்தது. தோரியம் ஏராளமாகக் கிடைக்கிறது – பாரம்பரிய அணு எரிபொருளான யுரேனியத்தைவிட நான்கு மடங்கு (xxvi) அதிகமாக.

தவிர, அதன் தூய்மையான வடிவத்தில் கிடைக்கிறது. மிஞ்சியிருக்கும் பெட்ரோலியம், நிலக்கரி, பிற தொல்லுயிரெச்ச எரிபொருட்கள் மற்றும் யுரேனியம் எல்லாவற்றையும் சேர்த்தால் கிடைக்கும் ஒட்டுமொத்த ஆற்றலை விட தோரிய இருப்பில் கிடைக்கும் மொத்த ஆற்றல் அதிகம் என நம்பப்படுகிறது.  உலகின் மிகப்பெரிய தோரிய இருப்பு – 6,50,000 டன்கள் – இந்தியாவில் இருக்கலாம் என IAEA அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது (IAEA என்பது ச‌ர்வதேச அணு சக்தி முகமை. அணுசக்தித் துறையில் உலகின் ஒத்துழைப்பு மையம். இது 1957ல் ‘அமைதிக்காக அணுக்கள்’ என்ற அமைப்பாக ஐ.நா. குடும்ப அங்கமாகத் தொடங்கப்பட்டது).

மொத்த தோரிய இருப்பில் இது நான்கில் ஒரு பங்கை விட அதிகம். ஒப்பீட்டளவில் யுரேனிய மொத்த இருப்பில் 1 சதவிகிதத்தை விடக் குறைவாகவே இருக்கிறது. இது மூடிய எரிபொருள் சுழற்சி தொழில்நுட்பம் மூலம் திறம்படப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  தோரியத்தால் வேறு பல நன்மைகளும் இருக்கின்றன. (இயற்கை) யுரேனியத்துடன்(xxvii) ஒப்பிடும்போது தோரியத்தால் (அதிலிருந்து தயாரிக்கப்படும் யுரேனியம்-233ன் வழியாக) ஒரு நிறை அலகுக்கு எட்டு மடங்கு அதிக மின்சாரம் தயாரிக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மிக அதிகம் விவாதிக்கப்படும் கழிவு வெளியேற்றத்திலும் தோரியத்தில் ஒப்பீட்டளவில் நன்மை அதிகம். தோரியம் வெளியேற்றும் கழிவுகளில் ஆக்டினைடுகள் (யுரேனியத்துடன் தொடர்புடையவை) இல்லாததால் ஒப்பீட்டளவில் இவை குறைந்த நச்சுத்தன்மை கொண்டவை.

அதே நேரம், யுரேனியத்திலிருந்து வரும் நீண்ட ஆயுளுடைய உயர் மட்டக் கழிவுகளை – குறிப்பாக ப்ளுடோனிய மற்றும் யுரேனிய மீட்புக்காக மறுபதனிடுதல் உள்ளிட்ட மூடிய எரிபொருள் சுழற்சியைப் பின்பற்றும் இந்திய வழிமுறைகளின் பின்புலத்தில் – இன்று கிடைக்கும் தொழில்நுட்பங்களைக் கொண்டு சிறப்பாகக் கையாள‌ முடியும் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஒப்பீட்டளவில் சிறிய அளவிலான அந்தக் கழிவுகளைக் (1000 மெகாவாட் உலையிலிருந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ள கழிவுகளுக்கு ஒரு கால்பந்து மைதானத்தில் கால் பங்கு அளவுள்ள ஒரு நீண்ட கால சேமிப்பு இடம் போதுமானது) கண்ணாடியாக்கி சுற்றுச்சூழலுக்கோ, மக்களுக்கோ எந்த ஆபத்தும் விளைவிக்காமல் நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு பாதுகாப்பாக சேமித்து வைக்க முடியும் என்று இந்திய அணு வல்லுனர்கள் நம்மிடம் சொல்கிறார்கள்.

திடீரென முளைக்கும் ஒரு கேள்வி – பிறகு, ஏன் தோரியத்தைக் காட்டிலும் யுரேனியமே உலகம் முழுக்க அணு ஆற்றல் திட்டங்களுக்கான‌ பிரபலத் தேர்வாக ஆனது? இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று தொழில்நுட்ப ரீதியானது. மற்றது வரலாற்று ரீதியானது.

தொழில்நுட்பரீதியான காரணம் ஓர் எளிய உண்மையிலிருந்து கிளைக்கிறது. முதலில் ஒருவர் தோரியத்திலிருந்து யுரேனியம்-233ஐத் தயாரிக்க வேண்டும். இதற்கு இயற்கையில் கிடைக்கும் அணு எரிபொருளான யுரேனியம்-235 சார்ந்த உலைகள் தேவை. கூடுதலாக, கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்ப‌ட்ட தோரியத்தை பெரிய அளவில் மறுபதனிடுவதன் மூலம் யுரேனியம்-233ஐ மீட்பதும், கடின காமா கதிர்களை உமிழும் யுரேனியம்-232 இதில் இருக்க வாய்ப்பிருப்பதும் சில நடைமுறைச் சிக்கல்களை முன்வைக்கின்றன. ஆனால் வல்லுனர்களின் கருத்துப்படி இந்த எல்லாவற்றையுமே தொழில்நுட்பரீதியாக சமாளித்து விடலாம்.

தோரியம் சார்ந்த எரிபொருள் வழங்கும் பலமிருந்தும் முன்னேற்ற‌த்தின் ஏணியில் ஏன் தோரியம் பின் தங்கியது என்பதற்கான இரண்டாவதும் வரலாற்று ரீதியானதுமான காரணம், ஒப்பீட்டளவில் நிலையற்ற புவியியல் சார் அரசியல் நிலைமைகளின் சூழலைக் கொண்டு பார்த்தால் – தோரியத்தை ஆயுதமாக்க இயலாது. மின்சார மூலமாக இருப்பதும், அழிவுப் பயன்பாடுகள் கண்டுபிடிக்கப் படுவதும் என இரண்டுக்குமிடையே எப்போதும் கயிற்றின் மேல் நடப்பது போல் இருக்கும் யுரேனியம் போல் அல்லாது தோரியம் குண்டுகளை அப்படித் தயாரித்து விட முடியாது.

இங்குதான் வரலாறு உள்ளே வருகிறது. தற்போதைய ராணுவம் சாராத அணுப் பயன்பாடுகளில் கணிசமானவை பனிப்போர் காலத்து ராணுவ அணு தொழில்நுட்பங்களிலிருந்து நேரடியாகக் கிளைத்தவை என்பது நினைவு கூர வேண்டும். அணு தொழில்நுட்பத்தின் முதல் குறிப்பிடத்தக்க‌ வெளியீடு இரண்டாம் உலகப் போரின் போதான மான்ஹாட்டன் திட்டம். அது தான் இறுதியில் அமெரிக்காவின் 1945 ஹிரோஷிமா நாகாசாகி குண்டுவெடிப்பில் முடிந்தது.

அணு ஆயுதம் என்பது அணு உலையிலிருந்து வேறுபட்டது. முதலாவதில் அணு வினைகளை மட்டுப்படுத்தவோ கட்டுப்படுத்தவோ வேண்டிய அவசியமில்லை, அதனால் பேரழிவை விளைவிக்கும் ஆற்றல், குறுகிய கால இடைவெளியில் வெளிப்படும். அது தான் அணுகுண்டின் சாரமே. ஆனால் அணு உலையில் நீடித்து நிலைக்கும் கட்டுப்படுத்தப்பட்ட ஆற்றல் வெளிப்படும்படியாக‌ மட்டறுத்தல் தேவைப்படுகிறது. 1951 தான் குறிப்பிட்டுச் சொல்லும் படியான கட்டுப்படுத்தப்பட்ட அணு மின்சார உற்பத்தி இடாகோவில் EBR-1 பரிசோதனை மூலம் 100 கிலோவாட் சக்தி தரும்படியாகச் செய்யப்பட்டது. அணுத் தொழில்நுட்பத்தில் இந்த “ஆயுதமே பிரதானம்” என்ற அணுகுமுறை தான் ஆயுதமாக்கவியலா தோரியத்தின் மேல் குறைந்த கவனத்தையும் ஆயுதமாக்கவியலும் யுரேனியத்தின் பால் மிகுந்த கவனத்தையும் ஏற்படுத்தியது.

ஆனால் இப்போது தோரியத்தின் பெரும் சொந்தக்காரனாகவும், வளர்ச்சிக்கு உகந்த பெரும் மின்சாரத்தேவை உடைய நாடுகளில் ஒன்றாகவும் நடப்பு அணுத் திட்டங்களைத் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்க இந்தியாவுக்கு இது ஒரு வாய்ப்பு. குறிப்பாக, நீண்ட கால நிலையான‌ தேர்வாக இருக்கும் தோரியத்தின் வழியில் சிறப்பு கவனத்துடன் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் இது ஏற்கெனவே நடந்து கொண்டும் இருக்கிறது. இந்தத் தேவைக்காக, இந்தியாவின் தற்போதைய திட்டத்தை – யுரேனியம் மற்றும் ப்ளுடோனியம் சார்ந்த எரிபொருள் சுழற்சி தொழில்நுட்பங்களும், இவை தோரியம் சார் உலைகளாக மாற்றமடையும் போது பெருமளவு தோரியத்தைக் கதிர்வீச்சுக்குட்படுத்தி யுரேனியம்-233 எரிபொருளை ஆக்குவதும் – தொடர்வது முக்கியமாகிறது.

இந்தியாவின் திட்டமான நவீன கன நீர் உலை (AHWR) உருவாக்குதல் இந்தியாவில் தோரியப் பயன்பாட்டின் ஆரம்ப நிலையில் ஒரு முக்கியப்படி என்பது குறிப்பிடத்தக்கது. தோரியத்தைப் பயன்படுத்தும் குறிப்பிடும்படியான அடுத்தகட்ட‌ முயற்சிகளுள் தோரியத்திலிருந்து தயாரிக்கப்பட்ட யுரேனியம்-233லிருந்து நிலையான‌ ஆற்றல் உற்பத்தி செய்யத் தேவைப்படும் வெப்ப மற்றும் வேக உலைகளும் அடங்கும்.

நம்பிக்கையூட்டும் எதிர்காலம் மிக்க ‌தோரியம் சார் உலைகளுக்கான பல்வேறு தொழில்நுட்பங்கள் ஏற்கெனவே உருவாக்கப்பட்டு சோதனை அடிப்படையில் இந்தியா உட்பட உலகெங்கும் முயற்சிக்கப்ப‌ட்டு வருகிறது. முதலில் அதை வழக்கமான‌ உலைகளைக் கொண்டு அணுப்பிளவுறும் யுரேனியம்-233 ஓரகத்தனிமமாக உருவாக்குதல் அல்லது உருகிய உப்பு உலைகள் (MSR) போன்ற தொழில்நுட்பங்களின் மூலம் காற்றுடன் வினை புரியாமல், காற்றிலோ, நீரிலோ எரியாமல் உப்புகளைப் பயன்படுத்தி அணுப்பிளவுறும் பொருட்களை சேகரித்தல் ஆகியவை இதில் அடங்கும். இத்தொழில்நுட்ப‌த்தில் செயல்பாட்டு அழுத்தம் சாதாரண காற்றழுத்தத்துக்கு அருகில் இருக்கும். இதனால் கட்டுமானச் செலவும் குறைவு, அழுத்தத்தின் காரணமாக வெடிக்கும் அபாயமும் இல்லை(xviii).

அணு ஆற்றல் திட்டங்களின் தாய்த்திட்டமான அணு ஆயுதங்களின் வடிவில் குறிப்பிடத்தக்க அதிக அளவிலான உயர் திறனுடைய அணு பொருள்கள் இருக்கவே செய்கின்றன, அவற்றின் இருப்பு தொடர‌வே செய்யும். 2010ல் உலகின் ஒன்பது நாடுகளில் 22,000 அணு ஆயுதங்கள் இருந்தன. அவற்றில் 8,000 ஆயுதங்கள்(xxix) கட்டுப்படுத்தப்பட்ட அணு உலைகளைக் காட்டிலும் அதிக ஆபத்தைச் சுமந்த‌படி வெடிப்பதற்குத் தயார் நிலையில் இருக்கின்றன. அமைதியான மின்சாரத் தயாரிப்புத் திட்டத்தை நிறுத்துவதற்கு ஆபத்து என்ற வாதத்தைப் பயன்படுத்தினால், அணு எதிர்ப்புக் குழுக்கள் முதலில் அவர்களின் முயற்சியை – அழிவையே நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட உலகின் 90 சதவிகித அணு ஆயுதங்களை வைத்திருக்கும் – வாஷிங்டனுக்கும் மாஸ்கோவிற்கும் திருப்ப வேண்டும். அது நடக்குமா? கண்ணுக்கெட்டிய எதிர்காலத்தில் தெரியவில்லை. நமது நோக்கம் அணு சக்தியுடன் தொடர்புடைய ஆபத்துக்களைக் குறைப்பதே.

அணுக்கருவின் சக்தி மிகப்பெரியது. மனிதகுலத்தின் எதிர்காலம் அதை பாதுகாப்பாகவும் திறம்படவும் பயன்படுத்துவதில்தான் இருக்கிற‌து. வரும் ஆண்டுகளில் பூமி சார்ந்த தேவைகளுக்கு மட்டுமில்லாமல் நமது விண்வெளி திட்டங்களுக்கும் மற்ற கோள்களில் நமது நாகரிகம் குடியேறுவதற்கும் கூட அது தான் நமக்கு எரிபொருள். நமது தற்போதைய அணுத் திட்டங்கள் தோரியம் போன்ற மேம்பட்ட, பாதுகாப்பான பொருட்களுக்கு விரிவடையும். பிற்பாடு அணுக்கருப்பிணைவு போன்ற மேம்பட்ட அணு வினைகளுக்கு மாறும். இவை முழுமையாக உருவாக்கப்படும் போது தற்போதைய அணுச்சிதைவு முறைகளைக் காட்டிலும் பல நூறு மடங்கு அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். அணு மூலங்கள் தரும் சிக்கனமான, சுத்தமான, நிறைந்த மின்சாரம் தான் ஆரோக்கியமான, கற்றறிந்த‌, இணைக்கப்பட்ட ஓர் எதிர்காலத்துக்கான நமது நுழைவாயில் – விண்வெளியில் ஆழமாகச் செல்லும், தற்போதைய மனித கற்பனைகளின் எல்லைகளைத் தாண்டும் ஓர் எதிர்காலம்.

*

ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக 2002 முதல் 2007 வரை இருந்தவர். அவரது மின்னஞ்சல் apj@abdulkalam.com

ஸ்ரீஜன் பால் சிங், Sustainable Development துறையில் வல்லுனர், மின் பொறியாளர், ஐஐஎம்ஏவில் எம்பிஏ பயின்றவர். அவரது மின்னஞ்சல் 7srijanpal@iimahd.ernet.in

குறிப்புகள் :

 i) http://www.world-nuclear.org/education/whyu.htm

 ii) Thorium as a Secure Nuclear Fuel Alternative, A Canon Bryan, 23-April-2009, Journal of Energy Security (available at http://www.ensec.org/index.php?option=com_content&view=article&id= 187:thorium-as-a-secure-nuclear-fuel-alternative&catid= 94:0409content&Itemid=342)

 iii) Steve Kirsch, The Most Important Investment that We Aren’t Making to Mitigate the Climate Crisis, 26.12.2009 Huff Post Green, (http://www.huffingtonpost.com/steve-kirsch/the-most-important-invest_b_402685.html)

 iv) Data from World Resources Institute (for 2003) 

v) IndiaandChina, Raghav Behal 

vi) Indiaenvisages about 950,000 MW power requirement by 2030, http://bit.ly/vTv5Qx 

vii) “World Nuclear Power Reactors 2006-08 and Uranium Requirements.” World Nuclear Association. 2008-01-14. 

viii) “World Uranium Production U3O8/ million lbs.” Ux Consulting Company, LLC 

ix) World Nuclear Power Reactors & Uranium Requirements, World Nuclear Association (21 October 2011) (available at http://www.world-nuclear.org/info/reactors.html) Data is for 2010 

x)  Nuclear Power Plant Information, IAEA PRIS (2010), available at http://www.iaea.org/cgi-bin/db.page.pl/pris.nucshare.htm 

xi) International Monetary Fund, 2010 

xii) India 2011/12 coal import needs may jump to 114 mln T, Reuters, September 27, 2011 

xiii) Rise of the Coal Bill, RN Bhaskar, Forbes India Magazine (April 2010) 

xiv) Matters elucidated thus far by RERF studies, http://www.rerf.or.jp/rerfrad_e.pdf 

xv) Matters elucidated thus far by RERF studies, http://www.rerf.or.jp/rerfrad_e.pdf 

xvi) IPCC Reports on climate change 

xvii) Air quality and health, Fact Sheet, WHO (http://www.who.int/mediacentre/factsheets/fs313/en /index.html) 

xviii) Climate Change and Health, WHO 2010, http://www.who.int/mediacentre/factsheets/fs266/en/ 

xix) “UNSCEAR assessment of theChernobylaccident.” Unscear.org. 

xx) Climate change fight to cost $300 billion a year, Alister Doyle (12-August-2009), OneWorld (available at http://southasia.oneworld.net/globalheadlines/climate-change-fight-to-cost-300-billion-a-year) 

xxi) How Coal Works, Union of Concerned Scientists (available at http://www.ucsusa.org/clean_energy/coalvswind/brief_coal.html) 

xxii) Each kg of coal generates about 2.93 kg of CO2 

xxiii) Considering the following calculations. About 30,000 million tons of CO2 is responsible for the casualties of about 1.3 million lives per year. (1 billion ton = 1000 million ton). Thus, 1 MT corresponds to about 43.33 causalities per year. And 8.37 million tons would be responsible (by interpolation) for about 362 lives being lost.

xxiv) Similar to the above derivation 

xxv) Based on the eight fold mass to energy advantage we have earlier cited from the article: Thorium as a Secure Nuclear Fuel Alternative, A Canon Bryan, 23-April-2009, Journal of Energy Security

xxvi) IAEA, 2005

xxvii) Extracted from http://www.world-nuclear.org/info/inf62.html

xxviii) Liquid Fluoride Thorium Reactors http://www.americanscientist.org/issues/feature/2010/4/liquid-fluoride-thorium-reactors Thorium Fuel for Nuclear Energy, http://www.americanscientist.org/issues/feature/thorium-fuel-for-nuclear-energy/3 

xxix) “Federation of American Scientists: Status of World Nuclear Forces.” Fas.org.

அணுசக்தியும் எதிர்காலமும் – அப்துல் கலாம் : 2

அணு அபாயங்கள்

ஃபுகுஷிமா – டாய்ச்சி நிகழ்வுகளை நாம் அணு உலை விபத்துக்களின் வரலாற்றுச் சட்டகத்துள் வைத்து ஆராயவேண்டும். பெருமளவில் பொருட்சேதமும், அன்றாட வாழ்க்கைக்குப் பாதிப்பும் இருந்தாலும் விபத்தின்போதோ அதற்குப் பிறகான மீட்பு நடவடிக்கைகளின்போதோ நேரடியான உயிரிழப்புகள் எதுவும் இல்லை. கெட்டதிலும் ஓர் ஆறுதலான விஷயம், 1986 செர்னோபில் விபத்துடன் ஒப்பிடும்போது இந்த விபத்து கையாளப்பட்ட விதம், இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் அணு உலை அவசரநிலைகளின் போதான மேலாண்மையில் நாம் எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறோம் என்பதைக் காட்டியது. ஃபுகுஷிமா – டாய்ச்சி உலை, மின் உற்பத்தியில் கிட்டதட்ட ஐந்து மடங்கு பெரியது.

அதைவிட முக்கியமாக, விபத்தின்போது ஒன்பது மடங்கு அதிக அணு எரிபொருளைக் கொண்டிருந்தது. ஆனாலும், இடைப்பட்ட‌ வருடங்களில் அவசரநிலை மேலாண்மையில் நாம் கற்றுக் கொண்டதை வைத்து உச்சபட்சக் கதிர்வீச்சை செர்னோபில் விபத்தில் வெளியானதில் 0.4 சதவிகிதத்துக்கும் குறைவாகக் கட்டுப்படுத்த முடிந்தது. ஃபுகுஷிமா – டாய்ச்சி விபத்து துரதிர்ஷ்டவசமானது, ஆய்வுக்குட்பட்டது என்றாலும் அணு உலை அவசரநிலைகளைக் கையாள்வதில் தேசிய மற்றும் சர்வதேசிய வல்லமைகளை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

அணுசக்தி விவாதங்களின்போது வைக்கப்படும் மற்றொரு வாதம், அணு விபத்துக்களின்போதும் அதற்குப் பிறகும் வெளிப்படும் கதிர்வீச்சினால் அந்தத் தலைமுறை மட்டுமல்ல, அடுத்து வரும் தலைமுறைகளும் பாதிக்கப்படும் என்பது. வெறும் ஊகங்கள், படக்கதைப் புத்தகக்‌ கற்பனைகளை விட கிடைத்திருக்கும் தகவல்களுக்கும், விஞ்ஞான விசாரணைகளுக்கும் நாம் அதிக முக்கியத்துவம் தருவோமெனில், இந்த வாதம் எந்த வகையில் பார்த்தாலும் ஒரு புரட்டு என்பது நிரூபணமாகும்.

மனிதர்கள் கதிர்வீச்சுக்கு இலக்கானதற்கும், அழிவுக்கு உள்ளானதற்கும் வலுவான உதாரண‌ங்கள் என்றால் வாதத்துக்கு இடமின்றி 1945ன் ஹிரோஷிமா மற்றும் நாகாசாகி அணுகுண்டு வீச்சுகள் தாம். இந்த இரண்டு சந்தர்ப்பங்களில்தான் அணுசக்தி வேண்டுமென்றே மனித அழிவுக்கெனத் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. குண்டுவெடிப்புக்குப் பின், அணுகுண்டு வீச்சில் உயிர் பிழைத்தவர்கள் மத்தியில், க‌திர்வீச்சு தாமதமாக ஏற்படுத்தும் விளைவுகளை ஆராய 1946ல் அமெரிக்க அரசாங்கம் அணுகுண்டுவீச்சு பாதிப்பு கமிஷனை (ABCC) அமைத்தது. 30 வருடங்கள் அது இயங்கியது. பின் 1974ல், அமெரிக்க ஜப்பானியக்‌ கூட்டு முயற்சியாக, கதிர்வீச்சு விளைவுகள் ஆராய்ச்சி நிறுவனம் (RERF) என்ற பெயரில் மாற்றியமைக்கப்பட்டு, இன்றும் செயல்பட்டு வருகிறது.

ABCC மற்றும் RERF கடந்த அறுபது ஆண்டுகளாக பல தலைமுறைகளுக்கு மத்தியில், அணு விபரீதங்கள் மற்றும் கதிர்வீச்சின் நீண்டகால‌ விளைவுகள் குறித்து விரிவாக ஆராய்ந்து வெளியிட்ட கண்டுபிடிப்பு முடிவுகள் கதிர்வீச்சின் பாதிப்பு சாத்தியங்கள் மீது ஒளி பாய்ச்சி இருக்கின்றன.  நீண்ட கால (நிலையான‌) 100 மில்லிசீவர்ட்ஸ் (mSv – கதிர்வீச்சை அளப்பதற்கான சர்வதேச அலகு) அளவு கதிர்வீச்சுக்கு ஆளானால் புற்றுநோய் அபாயம் 0.5%- லிருந்து 0.7 % ஆக அதிகரிக்கும் என்கிறது அதன் ஆய்வறிக்கை. ஃபுகுஷிமாவைச் சுற்றிய நெருங்கிய வட்டாரங்களில் உச்சபட்ச கதிர்வீச்சு 800மில்லிசீவர்ட்ஸ்(xiv) என்பது குறிப்பிடத்தக்கது.

கதிர்வீச்சுக்கு ஆளாவதற்கும், புற்றுநோய் வருவதற்கும் தொடர்பு இருக்கிறது என்பதை நிச்சயம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் குறிப்பிடத்தக்க விஷயம் – பரவலான நம்பிக்கைக்கு எதிராக – கதிர்வீச்சின் பாதிப்பு என்பது அதன் பாதிப்புக்குள்ளான தலைமுறைக்கானது மட்டுமே என கண்டுபிடிப்புகள் தெளிவாகச் சொல்கின்றன. ஆய்வறிக்கையிலிருந்து, ’இதுவரையிலான எங்கள் ஆராய்ச்சியில், கதிர்வீச்சுக்கு ஆளான‌ பெற்றோரிலிருந்து எந்த மரப‌ணு விளைவுகளையும் A-Bombல் பிழைத்தவர்களின் குழந்தைகளிடம் கண்டுபிடிக்கவில்லை.”(xv) (A-Bomb என்பது அணுகுண்டைக் குறிக்கிறது. ஆகஸ்ட் 6 மற்றும் 9, 1945ல் ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகாசாகி மீது இரு அணுகுண்டுகள் அமெரிக்காவால் போடப்பட்டன). அணுவிபத்துக்களின் போதான கதிர்வீச்சு ஆபத்தானது தான். ஆனால், அணுவிபத்துக்கள் வரும் தலைமுறைகளையும் பாதிக்கும் என்பது தவறான பிரச்சாரம். அதே சமயம், கடந்த தசாப்தங்களில் தொழில்நுட்பம் முன்னேறி இருக்கிறது, அணு விபத்துக்களைத் தடுக்கும் மனிதர்களின் வல்லமையும் நிச்சயம் மேம்பட்டு இருக்கிறது.

ஆற்றல் அடர்த்தி, மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தின் மீதான விளைவு, பொருளாதார பலன்கள் ஆகிய மூன்று பரிமாணங்களிலும் சிறந்தது அணுச‌க்திதான் என்பதில் சந்தேகமே இல்லை. இப்போது, இத்துறை தொடர்புடைய முக்கிய சவால்களைப் பார்க்கலாம். குறிப்பாக, சமீபத்தில் இயற்கைச்சீற்ற விபத்துக்குள்ளான ஃபுகுஷிமாவில் உள்ள‌ டாய்ச்சி அணு உலை எழுப்பியிருப்பவை. இரண்டு பிரச்னைகள் இங்கு முக்கியமானவை. முதலாவது, விபத்தின் போதான உலையின் பாதுகாப்பு. இரண்டாவது, உலை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்பு, அணுக்கழிவுகள் தொடர்புடையது.

இரண்டாவது பிரச்னையை முதலில் பார்ப்போம்.

அணு ஆற்றலின் பிற வாய்ப்புச் செலவு

அ) அணுசக்தியைத் தவிர்ப்பது என்பது தர்க்கரீதியான மாற்றை முன்வைக்காத‌ ஓர் அரைகுறை எதிர்வினை. மாற்று நடவடிக்கைகளுக்கான முழுமையான சித்திரத்தைப் பார்த்தோமென்றால் தற்போதைய மற்றும் எதிர்கால ஆற்றல் தேவைகளை அடைவதை நாம் ஆதரிக்கத்தான்வேண்டும்.

பொருளாதாரத்தில் “பிறவாய்ப்புச் செலவு” என்றொரு கருத்தாக்கம் இருக்கிறது. அடுத்த மாற்று வழியைத் தேர்ந்தெடுக்கும் போது ஆகும் செலவு. ஒட்டுமொத்த அணு ஆற்றல் தயாரிப்புக்கும் நாம் தடை விதித்தால் என்ன ஆகும்? எதிர்காலத்தேவையில் கொஞ்சம் பகுதி – அது சிற்றிலக்கமாக இருந்த போதிலும் – சூரிய சக்தி மற்றும் காற்றாலை மூலங்களிலிருந்து வரும். முன்பே குறிப்பிட்டது போல், பெரும் நிச்சமற்ற தன்மையுடன். நீர் மின்சாரமும் குறையும் ஒரு பகுதியை நிரப்பும். ஆனால், எல்லா சாத்தியங்களையும் வைத்துப் பார்த்தால், குறைந்தபட்சம் சமீப‌ மற்றும் மத்திம எதிர்காலத்தில் – தொல்லுயிரெச்ச எரிபொருள் சார்ந்த மின்சார தயாரிப்பு முறைகளை நாம் சார்ந்திருக்கும் நிலை தொடர்ந்து அதிகரிக்கவே செய்யும். ஆனால் அங்கே தான் பிரச்னையே இருக்கிறது.

ஒவ்வோர் ஆண்டும் மனித இனத்தின் செயல்பாடுகளால் 3000 கோடி டன்கள்(xvi) கொண்ட கரியமில‌ வாயு காற்று மண்டலத்தில் கலக்கிறது. அதில் 26 சதவிகித வெளியீடு (760 கோடி டன்கள்) மின் உற்பத்தி தேவைகளின் நேரடி விளைவுகளினால் ஏற்பட்டவை என IPCC மதிப்ப்பிட்டிருக்கிறது. இதனால் காற்று மாசடைதல் மட்டுமல்ல, மழை வரத்து, கடல் மட்டம், வெப்பநிலை ஆகிய‌வற்றை பாதிக்கும் வானிலை மாற்றங்களையும் தூண்டும் அபாயத்தை அதிகரிக்கிறது. இதனால் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்துப் பற்றாக்குறை, நோய்வாய்ப்படுதல் மாற்றங்கள் ஆகியன நிகழும். நகர்ப்புற,‌ வெளிப்புற‌ காற்று மாசு படுதலால் மட்டும் 13 லட்சம் பேரும் (xvii), வானிலை மாற்றங்களுக்கு ஒத்துப்போக இயலாமல் 1,40,000 பேரும் உயிரிழப்பதாக(xviii) உலக சுகாதார மையம் மதிப்பிட்டிருக்கிற‌து. (இது தவிர, 20 லட்சம் பேர் உள்ளக‌ மாசுபடுதலால் உயிரிழக்கின்றார்கள். இவர்களில் கணிசமானோர் பெண்களும், ஐந்து வயதுகுட்பட்ட குழந்தைகளும்).

மின் தயாரிப்பு செயல்பாடுகளின் காரணமான‌ மாசுபடுதல் மற்றும் தொடர்புடைய வானிலை மாற்ற‌ங்கள் நேரடியாகவோ, மறைமாகவோ 4,81,000 மரணங்களை ஒவ்வோர் ஆண்டும் ஏற்படுத்துகின்றன. ஒப்பீட்டளவில் செர்னோபிலில் நடந்தது, மிக மோசமான ராணுவம் சாராத அணு விபத்து. 4000 பேர் வரையிலான‌ புற்றுநோய்(xix) (கணிசமானவை குணப்படுத்தக்கூடியவை) பாதிப்புகளையும், 57 நேரடி பாதிப்புகளையும் ஏற்படுத்தியிருப்பதாக ஐக்கிய நாடுகள் கதிர்வீச்சு விளைவுகள் விஞ்ஞான கமிட்டி (UNSCEAR) கணக்கிட்டிருக்கிறது. அசுத்த தொல்லுயிரெச்ச ஆற்றல் எதிர்காலத்தில் நிலைக்காது. அதைத்தவிர தொல்லுயிரெச்ச எரிபொருள் வேகமாகத் தீர்ந்து வருகிறது. அதன் பற்றாக்குறை புவியியல் சார் அரசியல் நிலையாமைகளை உலகெங்கும் உருவாக்கி வருகிறது.

மாசுபாடு, வெளிப்புறம் மற்றும் உள்ளகம்

நகர்ப்புற வெளிப்புற மாசுபாடு (UOP): இது நகர்ப்புறம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், பொதுவாக, திறந்த வெளிகளில் – உதாரணம்: சாலைகள் – வாழும் மக்கள் அனுபவிக்கும் காற்று மாசுபாட்டைக் குறிக்கிறது. உள்ளகக் காற்று மாசுபாடு (IAP) பொதுவாக, திறமில்லாத எரிபொருள் நுகர்வு, ரசாயன மாசுபாட்டுக்குள்ளாகும் கட்டடப் பொருள், மற்றும் இன்ன பிற காரணங்களால் உட்புறத்தில் காணப்படும் மாசுபடுத்தும் விஷயங்களைக் குறிக்கிறது. IAPக்கு UOPயும் பங்களிக்கிறது. கிட்டதட்ட இருபது லட்சம் பேர் உள்ளகக் காற்று மாசுபாட்டின் காரணமாக உயிரிழக்கிறார்கள். இதில் மிக அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளும்.

இது தவிர, மாறி வரும் வானிலை எதிர்காலத்தில் பெரும் ஏற்பு விலைப் பட்டையோடு வரும் என நம்பப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் பெரும் தொகையான 30,000 கோடி டாலர்கள். இது உலக GDPக்கு(xx) பெருத்த இழப்பாக இருக்கும். நாம் டைப்-0 வகை எரிபொருள்களிலிருந்து வெளியேறி அடுத்த தலைமுறை எரிபொருள்களுக்கு – இவற்றில் மிக முக்கியமானது அணு எரிபொருள், இது நம் எதிர்கால விண்வெளித் திட்டங்களூக்கும் பக்கபலமாக இருக்கும் – மாறினால் தான் அத்தனை பிரச்னைகளையும் சமாளிக்க முடியும். 1000 மெகாவாட் நிலக்கரி மின் நிலையத்துக்கும், அணு உலைக்குமான தோராய தர ஒப்பீடு அட்டவணை-1ல் தரப்பட்டுள்ளது.

அணுசக்தியின் பாதுகாப்பு பிரச்னைகள்

 ஆ) இப்போது, நாம் மற்ற பிரச்னையான உலை பாதுகாப்பை ஆழமாகப் பார்ப்போம். அணு மின்சார உற்பத்தியின் ஒட்டுமொத்த வரலாற்றிலும் நான்கு பெரிய உலை விபத்துக்கள் நிகழ்ந்திருக்கின்றன. 1957ல் எரிபொருள் மறுபதனிடுதலில் நடந்த‌ கைஷ்டைம் விபத்து, ஒப்பீட்டளவில் சிறிய மூன்று மைல் தீவு உருகிய விபத்து (அமெரிக்கா), மிக‌ப்பெரிய செர்னோபில் விபத்து (சோவியத் யூனியன், 1986) மற்றும் சமீபத்தில் ஜப்பானின் ஃபுகுஷிமாவில் நடந்த விபத்து. முதல் விபத்து முழுக்க அரைகுறை தொழில்நுட்பத்தினால் நடந்தது. அடுத்த இரண்டு விபத்துக்களும் மனிதத் தவறுகளினால் நடந்தவை. 2011ன் ஃபுகுஷிமா விபத்துகூட அசாதாரண இயற்கை சீற்றத்தால் நடந்தது. பிரமாண்ட நில நடுக்கத்தின் அழுத்தச் சுமையும், முன் நிகழ்திராத சுனாமியின் நறுக்குச் சுமையும் இணைந்தது அரிதான நிகழ்வு.

அதே சமயம் உலகெங்கும் மேம்பட்ட தொழில்நுட்பமும் நிலையான உலை வடிவமைப்பும் நிச்சயம் தேவை. அறுபது ஆண்டுகளில் நடந்த நான்கு விபத்துகள் – தொல்லுயிரெச்ச கீழ்நிலை எரிபொருள்களைத் தாண்டிச்செல்ல‌ முக்கிய துருப்புச்சீட்டாக இருக்கும் – இத்தொழில்நுட்ப‌த்தையே முழுமையாக‌க் கைவிடக் காரணமாகி விட‌க்கூடாது. மனித இனத்தின் மகத்தான நண்பனாக‌ இருக்கும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் மிகச் சிறப்பானவை கூடுதல் ஆபத்துடன்தான் வரும். கற்றலின் வாயிலாக அந்த ஆபத்தைக் தணிக்கும் முறைகளை உருவாக்குவதுதான் சரியான வழியே தவிர முதல் விபத்தைக் காரணம் காட்டி விஞ்ஞானத்தையே கலைத்து விடுவதல்ல.

சில உதாரணங்களை எடுத்துக் கொள்வோம். 1903ல் ரைட் சகோதரர்கள் மனிதர்கள் விமானத்தில் பறக்கும் அற்புதமான கனவை உண்மையாக்கினார்கள். அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் 1908ல் முதல் விமான விபத்து நடந்தது. அதில் ஆர்வில்லி ரைட் படுகாயமடைய, உடன் பயணித்தவர் உயிரிழந்தார். நிறைய விபத்துகள் தொடர்ந்தன. இன்றைய தேதியில் கூட விமான விபத்துக்கள் ஒவ்வோர் ஆண்டும் 1,500 பேரை பலி வாங்குகிறது. 1908 விபத்தையோ, அதற்குப் பிற்பாடு நடந்தவற்றையோ காரணமாகக் காட்டி மனிதர்கள் பறப்பதைத் தடை செய்திருந்தால் நாம் தூரத்து நகரங்களிடையே, கடல்கள், கண்டங்கள் கடந்து பறந்து கொன்டிருக்க முடியுமா? 1912ல் பிரமாண்ட கப்பலான டைட்டானிக் கிளம்பிய‌போது பெரிய சொகுசுக் கப்பல்களின் துறையில் ஒரு முன்னோடித் திட்டமாகக் கருதப்பட்டது. ஆனால், தன் முதல் பயணத்திலேயே பனிப்பாறையில் போதி மூழ்கியது. 1,500 பேர் – கப்பலிலிருந்தவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் – உயரிழந்தார்கள். ஆனால், மிகப்பெரிய அதிவேக ச‌முத்திரப் பயணங்களுக்கான தேடலை அது நிறுத்தி விடவில்லை.

மனிதனை நிலவுக்கு அனுப்பும் முதல் திட்டமான அப்போலோ-1 விபத்தில் சிக்கி, மூன்று முக்கிய விண்வெளி வீரர்களைப் பலி வாங்கியது. அடுத்து, 10 திட்டங்கள் கலவையான முடிவுகளை சந்தித்தபின், 1969ல் தான் அப்போலோ-11 இறுதியாக நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்டது. நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவின் பரப்பில் கால் பதித்ததும் அந்த மறக்கமுடியாத சொற்களை உலகுக்கு அறிவித்தார், “மனிதனுக்கு ஒரு சிறிய அடி; மனித இனத்துக்கு மாபெரும் பாய்ச்சல்.” உண்மையில் அந்தச் சிறிய அடிக்கு முன்பாக பல தடுமாற்றங்கள் இருந்தன.

தற்போது உலகின் சிறந்தவற்றுள் ஒன்றாக வரிசைப்படுத்தப்படும் இந்திய விண்வெளித் திட்டம், 1978ல் ஒரு தோல்வியுடன்தான் தொடங்கியது. எங்கள் முதல் ஏவுகணை செயற்கைக்கோளை பூமிக்கு அருகிலான நீள்வட்டப்பாதையில் எடுத்துச் செல்வதற்குப் பதிலாக வங்காள விரிகுடாவில் விழுந்தது. நான் அந்த ஏவலின் திட்ட இயக்குநராக இருந்தேன். சில கோடிகளை கடலில் எறிந்தோம் எனத் தூற்றப்பட்டோம். அந்த ஒரு விபத்தோடும், விமர்சன‌ங்களோடும் எங்கள் கனவுகளை நாங்கள் முடித்துக் கொள்ளவில்லை. திட்டம் தொடர்ந்தது. அடுத்த வருடமே நாங்கள் வெற்றியடைந்தோம். தோல்வியோடு தொடங்கப்பட்ட அந்தத் திட்டம்தான் இன்று தனது சந்திரயான் திட்டம் மூலம் நிலவில் நீர் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கும் முதல் மற்றும் ஒரே திட்டம். தற்போது இது தேசத்தின் பெருமை. நிச்சயம் எல்லாத் தோல்விகளும் விபத்துகளும் செம்மையான சேவை புரிவதிலும் மேம்பட்ட பாதுகாப்பான தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும் நம்மை சிந்திக்க வைக்க‌ உந்துதலாக அமைகின்றன‌ என்பதுதான் வாதம். அணு சக்தி விஷ‌யத்தில் கதிர்வீச்சின் விளைவுகள் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவைதாம். ஆனால், நமது அடுத்த அடி மேம்படுத்துதல்தானே ஒழிய தப்பித்தல் அல்ல.

(தொடரும்)

அணுசக்தியும் எதிர்காலமும் – அப்துல் கலாம் : 1

நவம்பர் 6, 2011 தேதியிட்ட The Hindu நாளேட்டின் சென்னைப் பதிப்பில் ஏவுகணை விஞ்ஞானியும் முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் கலாம், ஸ்ரீஜன் பால் சிங்குடன் இணைந்து இந்தியாவின் எதிர்காலத்துக்கு அணுசக்தியின் அவசியம் குறித்து Nuclear power is our gateway to a prosperous future என்ற தலைப்பில் ஒரு சிறப்புக் கட்டுரை எழுதி இருந்தார் (பக்கம் 14, 15). அதன் தமிழ் மொழியாக்கம் இது. கட்டுரையின் ஆங்கில மூலம் இங்கே உள்ளது.  தமிழில் மொழிபெயர்த்தவர் : சி. சரவணகார்த்திகேயன்

அணுசக்தியே வளமான எதிர்காலத்துக்கான நமது நுழைவாயில்

• ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் & ஸ்ரீஜன் பால் சிங் •

0

பிரபஞ்சத்திலிருக்கும் ஒவ்வொரு அணுவும் நியூக்ளியஸ் எனப்படும் கற்பனைக்கெட்டாத‌ சக்தியுடைய மின்கலத்தைச் சுமந்து கொண்டிருக்கிறது. இந்த வகை ஆற்றல் டைப் – 1 என்று அழைக்கப்படும். இது டைப் – o எரிபொருள்களைவிட பல லட்சக்கணக்கான மடங்கு கூடுதல் சக்தி வாய்ந்தது. டைப் – 0 எரிபொருள் என்பது அடிப்படையில் மரித்த தாவரங்களும் விலங்குகளுமாகும். இவை, நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, இன்ன‌ பிற மரபான (conventional) எரிபொருள்கள் போன்ற வடிவங்களில் கிடைக்கும்.

விஷயத்தைப் புரிந்து கொள்ள மரபான எரிபொருள் – சுமார் 10,000 டன் நிலக்கரி – சுமந்த 50 சரக்குப் பெட்டிகளைக் கொண்ட ஒரு கிலோ மீட்டர் நீள ரயிலைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு சிறிய காரின் டிக்கியில் அடைத்துவிட முடிகிற 500 கிலோ (i) டைப்-1 எரிபொருளால் – இயற்கையில் கிடைக்கும் யுரேனியம் – அதே அளவு ஆற்றலை உற்பத்தி செய்யமுடியும். தொழில்நுட்பம் முழுமையாகப் பயன்படுத்தப்படும் போது இயற்கையில் கிடைக்கும் தோரியத்தைக் கொண்டு இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். சில மதிப்பீடுகளின் படி (ii), இந்த வகையில் இன்னும் குறைவான அளவே தேவைப்படும் – ஒரு சிறிய பையில் (iii) வைத்துவிடக்கூடிய 62.5 கிலோ அல்லது அதற்கும் குறைந்த அளவு. (குறிப்பு: 500 கிலோ இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் 3.5 கிலோ யுரேனியம்-235 எரிபொருள் இருக்கும்.)

ஆற்றலும் பொருளாதாரமும்

முன்னேற்றத்தின் ஏணியில் ஏறிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு சமூகத்துக்கும் அல்லது தேசத்துக்கும் மிக அடிப்படைத் தேவை, ஆற்றல். ஒரு குறிப்பிட்ட அளவு முன்னேற்றத்தை எட்டிய பிறகே அதன் ஆற்றல் தேவை நிலை பெறும். ஒரு தேசத்தின் ஆற்றல் நுகர்வுக்கும் வருமானத்துக்கும் – பஸ்பரம் வலுப்படுத்திக்கொள்கிற – தனித்துவமான, ப‌குக்கப்பட்ட ஒரு தொடர்பு இருக்கிறது. உங்களைச் சுற்றிப் பாருங்கள்: முன்னேற்றத்தின் ஒவ்வொரு படியும் ஆற்றல் தேவையை சேர்த்துக் கொண்டே வருகிறது – போக்குவரத்துக்கு கார்கள், கப்பல்கள், விமானங்கள், தரமான வைத்திய வசதிக்கு மருத்துவமனைகள், இணைய தொடர்பைப் பயன்படுத்தும் கல்வி, அதிகரித்த, சிறப்பான‌ பொருள் உற்பத்தி, மேம்பட்ட விவசாயத்துக்கு நீர்ப்பாசனம். நம் வாழ்வின் ஒவ்வொரு அங்கமும் ஆற்றல் அடர்வு மிக்கதாக ஆகி வருகிறது. முன்னேற்றத்துக்குத் தேவையான முன்நிபந்தனை அது. தேசவாரியான தனி நபர் சராசரி ஆற்றல் நுகர்வு இதனை தெளிவாக பிரதிபலிக்கிறது – உதாரணமாக ஓர் அமெரிக்கனின் ஆற்றல் நுகர்வு ஓர் இந்தியனுடையதைக் காட்டிலும் 15 மடங்கு அதிகம் (படம் 1ஐப் பார்க்கவும்) (iv).

இன்று இந்தியா பொருளாதார பலப்படுத்துதலில் அதிவேக ஏறுமுகக் கட்டத்தில் தன்னை வைத்துக் கொண்டிருக்கிறது. தாராளமயமக்கலுக்குப் பின் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் அதிக தொழிற்சாலைகள் உருவாகி வருகின்றன. வரும் பத்தாண்டுகளில் நமது நோக்கமெல்லாம் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதும், பொருளாதார உணர்ச்சிப் பொறிகளாக 75 கோடி மக்கள் வாழும் 6 லட்சம் கிராமங்களை முன்னேற்றுவதும் ஆகும். 2008ல் ஒரு லட்சம் கோடி டாலர் நிலையைக் கடந்தோம். அந்த மைல்கல்லை அடைய நமக்கு அறுபது ஆண்டுகள் பிடித்திருக்கிறது. இருப்பினும் இந்தியப் பொருளாதாரம் 2016ல் இரட்டிப்பாகி, 2 லட்சம் கோடி டாலர் நிலையையும், 2025ல் அதுவும் மறுபடி இரட்டிப்பாகி 4 லட்சம் கோடி டாலர் மைல்கல்லையும் அடையும் என கணிக்கப் பட்டுள்ளது (v). இந்தப் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் ஆற்றல் தேவைப்படுகிற‌து. 2030ம் ஆண்டில் மொத்த மின்சாரத் தேவை தற்போதைய 1,50,000 மெகா வாட்டிலிருந்து 9,50,000 மெகாவட்டாக அதிகரிக்கும் எனக் கணக்கிடப் பட்டுள்ளது (vi). இதுவும் தற்போதைய அமெரிக்க தனி நபர் ஆற்றல் தேவையில் நான்கில் ஒரு பங்கை விடக் குறைவு தான். 2050ல் தேவை இன்னமும் அதிகரித்து, தற்போதைய பிரெஞ்சு அல்லது ரஷ்ய அளவான தனிநபருக்கு 6000 வாட்கள் என்பதை அடையும்.

அணு ஆற்றலின் சர்வதேச நிலைமையை ஆராய்தல்

அதீத இயற்கைச்சீற்றங்களால் ஜப்பானில் 40 வயது ஃபுகுஷிமா அணு உலையில் நடந்த ஒரு விபத்து, பொருளாதாரத்தில் முன்னேறிய நாடு ஆவதற்கான நம் கனவுகளை தடம் புரளச் செய்வதை நாம் அனுமதிக்கப் போகிறோமா? சில ஐரோப்பிய நாடுகள், குறிப்பாக ஜெர்மனி, அணுசக்தியை படிப்படியாக நிறுத்த‌ முடிவு செய்திருப்பது நமது அணுசக்தித் திட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை நம்மை எடுக்க வைக்கும் மேலோட்டமான‌ விவாதப்பொருளாகிவிடக்கூடாது.

தொடர்புடைய சில விஷயங்களை இங்கே சொல்ல வேண்டும். ஜெர்மனியின் முடிவு அதன் தற்போதைய நிலைமைக்குப் பொருந்துகிறது – அணுசக்தி தொடர்பாக முன்வைக்கப்படும் அபாயங்களின் வெற்று கரிசனங்களைத் தாண்டியது அது. ஜெர்மனி ஒரு முன்னேறிய நாடு, மின்சக்தி உபரியாக வைத்திருக்கும் நாடு. அதனால் சில அணு உலைகளை இழப்பதில் அதற்குப் பிரச்னையில்லை. அதை விட முக்கியமாக, ஜெர்மனி தன் அணு க்கனிம வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி முடித்து விட்டது. யுரேனியம் மொத்தத் தேவை 3,332 டன்களில் (2006 – 2008) (vii) எனும் போது அதனால் உற்பத்தி செய்ய‌ முடிந்தது 68 டன்கள் மட்டுமே (குறிப்பு : இது 2006ம் ஆண்டின் உற்பத்தி). பற்றாக்குறைக்கு அது இறக்குமதியை நம்பி இருக்கிற‌து (viii). ஆக, ஆற்றல் சுதந்தரம் என்ற அதன் குறிக்கோளுக்கு அணு ஆற்றல் பொருந்தாது. இதற்கு நேர்மாறாக இந்தியா தோரியம் எனப்படும் புதிய அணு எரிபொருள் வளத்தில் முதன்மையில் இருக்கிறது – இது நாளைய‌ அணு எரிபொருளாகக் கருதப்படுகிறது.

சில மேற்கத்திய நாடுகள் தம் அணுத்திட்டங்களை நிறுத்துவதாக‌ அல்லது ஜப்பான் தன் அணு உலை விஸ்தரிப்பை மறுபரிசீலனை செய்து வருவதாக சொல்லப்படும் போது இந்திய மக்கள் தவறாக செலுத்தப்படுகிறார்கள். தொடர்புடைய அட்டவணையைக் கவனியுங்கள். முன்னேறிய நாடுகள் அணு சக்தி மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் பங்கு என்ன என்பதைக் காட்டுகிறது இது.

பெரும்பாலான செல்வச்செழிப்பு மிக்க‌ நாடுகள் 30 – 40 சதவிகித மின்சாரத்தை அணுசக்தியிலிருந்து பெறுகின்றன என்பதையும் பருவநிலை மாற்றங்கள் பாதிப்புக்குள்ளாதல், சூழல் மாசு ஏற்படுத்தும் சுகாதாரக் கேடுகள் ஆகிய சுமையைக் குறைத்து, சுத்த‌ சக்தி திட்டத்தில் அது குறிப்பிடத்தகுந்த பங்கு வகிக்கிறது என்பதையும் இந்த ஆய்வு தெளிவாக்குகிறது. அதே சமயம் இந்தியா தன் மொத்த 150 ஜிகாவாட் மின் உற்பத்தியில் 5000 மெகாவாட் கூட அணுசக்தி மூலம் உற்பத்தி செய்வதில்லை. பெரும்பாலானது நிலக்கரியிலிருந்தே வருகிறது.

அணுசக்தியின் அதிகபட்ச பலன்களை அனுபவித்து வரும் நாடுகள் அவ்வப்போது பரப்பும் அணுசக்திக்கு எதிரான செய்திகளில் அடித்துச் செல்லப்படாமல் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தம் வெற்றிகளைத் திரித்து, நியோ யுக செயலுரிமை அதிகார பொருளாதாரக் கட்டுப்படுத்தலுக்கு சவாலாக அமையக்கூடிய இந்தியா போன்ற முன்னேறும் நாடுகளை தவறாக வழி நடத்துவது பொருளாதாரத்தில் முன்னேறிய உலகுக்கு நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பழக்கம். இந்தியாவுக்கு என்ன தேவை என்பதை இந்தியர்களாகிய நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

ஆக, நமது சூழ்நிலை மற்றும் கனிம வளம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு நம் பொருளாதார வளத்திற்குத் தேவைப்படும் சிறந்த செயல் எது என நாம் மட்டுமே முடிவு செய்ய வேண்டும். அபூர்வமான, மிக முக்கியமான, நாளைய‌ அணு எரிபொருளான தோரிய வளம் அருளப் பெற்றது இந்தியா. உலகின் ஆற்றல் தலைந‌கராக உருவாகக்கூடிய வாய்ப்பை நாம் இழக்க முடியாது. அத்தோடு மாபெரும் இளைஞர் சக்தியும் இணைந்தால் பெரும் பொருளாதார சக்தியாக உருவெடுப்பதற்கு அதுவே காரணமாக‌ அமையும். தொல்லுயிரெச்ச எரிபொருளைச் சார்ந்திராத முதல் நாடு என்ற கனவை நனவாக்கும் வல்லமை இந்தியாவுக்கு இருக்கிறது. இதனால் பெட்ரோலியமும் நிலக்கரியும் இறக்குமதி செய்வதற்கான‌ 10,000 கோடி டாலர் செலவிலிருந்தும் நாடு விடுவிக்கப்படும். நிலக்கரிக்கோ எண்ணெய்க்கோ செலவழியும் பல நூறுகோடி டாலர்கள் தவிர சுற்றுச்சூழலுக்கும் மனித ஆரோக்கியத்துக்கும் கேடு விளைவிக்கும் பல லட்சம் டன் கார்பன் டை ஆக்ஸைட் மற்றும் பிற பசுமை இல்ல வாயுக்களையும் நாம் இதன் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. 2010 – 11ல் 8200 கோடி டன்கள் நிலக்கரி (xii) இறக்குமதி செய்திருக்கிறோம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதில் கணிசமான பங்கு அனல் மின் நிலையங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. படம் 2ல் (xiii) காட்டப்பட்டுள்ளதைப் போல் வருங்காலத்தில் இது பன்மடங்கு அதிகரிக்கும் என்பது வல்லுனர்களின் நம்பிக்கை.

நிலக்கரி வயல்களும் எரியும் பூமியும்

ஜார்கண்டிலிருக்கும் ஜாரியா, நிலக்கரி வயல் நாட்டின் மிக வளமான நிலக்கரிப் பிரதேசமாகத் திகழ்கிறது. அங்கு அதிக‌ அளவில் உயர் ரக சுட்ட நிலக்கரி இருக்கிறது. ஆனால் உள்ளூர் பழங்குடி கிராமத்தவர்களுக்கு இந்த இயற்கை வளம் அங்கே இருப்பது ஒரு சாபம். பெரும் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் விளைவித்த விபத்துகளின் நூற்றாண்டுக்கும் மேலான வரலாறு கொண்ட ஜாரியா பகுதியில் அதிக எண்ணிக்கையிலான சுரங்கத் தீ விபத்துக்கள் இன்னமும் தொடர்கின்றன‌.

நான் ஜனாதிபதியாக இருந்தபோது நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. நான் சிந்திரியிலிருந்து தன்பாத் சென்று கொண்டிருந்தேன். நூற்றுக்கணக்கான கிராம மக்கள் என் காரை நோக்கி விரைந்து வந்தார்கள். நாங்கள் உடனே நிறுத்தி அவர்களை விசாரித்தோம். அவர்கள் வீடுகளுக்கு அருகில் தீப்பிடித்தல், அதிகச் சூடாகுதல் போன்ற நிகழ்வுகள் வழக்கமாகிவிட்டதை விவரித்தார்கள். சுரங்கத்துறையினருக்கு இருக்கும் பெரும் சவால் மக்கள் தொகையும் மக்கள் அடர்த்தியும் மிகுந்த நிலக்கரிப் பிரதேசங்களில் தீ விபத்துக்களைக் கையாள்வதுதான். நானும் என் குழுவும் அவர்கள் வீடுகளைச் சென்று பார்த்தோம். அங்கே வானத்திலிருந்து அல்லாமல் கீழே நிலத்திலிருந்து அதிகபட்சமான, தாங்கவொண்ணா வெப்பம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. சிலசமயம் நெருப்பு ஜ்வாலைகள் நிலத்திலிருந்து வெளிப்பட்டு பூமியைக் கருப்பாக்கும்.

மொத்தப் பகுதியே சுரங்க வேலைகளால் அழிக்கப்பட்டு, மனிதர்களோ பிற உயிர்களோ வாழத் தகுதியற்றதாக ஆக்கப்பட்டிருந்தது. துக்ககரமாக, அதைப் பழைய நிலைமைக்கு மாற்றவே முடியாது. குறைந்தபட்சம் அடுத்து சில லட்சம் வருடங்களுக்கேனும். இன்று உலகம் முழுக்க எடுக்கப்படும் நில‌க்கரியில் பெரும்பான்மை மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. பூமியெங்கும் கிராமங்களிலும் காடுகளிலும் பல ஜாரியாக்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாம் தொல்லுயிரெச்ச எரிபொருட்களுக்கு நீடித்ததொரு மாற்று எரிபொருள் கண்டுபிடிக்கும்வரை இவை எண்ணிக்கையிலும் அளவினிலும் தொடர்ந்து அதிகரிக்கவே செய்யும்.

இயற்கைக்கு உகந்த ஆற்றல் வழிகள் நிச்சயம் சூரிய சக்தியும் காற்றாலைகளும்தாம். ஏராள‌ சூரிய ஒளி, காற்று வேகம் அதிகமாக இருக்கும் இட‌ங்கள் என இந்த வகை ஆற்றலுக்கான வாய்ப்பு நிச்சயம் இந்தியாவில் இருக்கிறது. ஆனால் சூரிய சக்தியும் காற்றாலைகளும் அவற்றின் அத்தனை அனுகூலங்களையும் தாண்டி வானிலையையும் சூரிய ஒளியையும் ஆதீதமாகச் சார்ந்து இருப்பதால் நிலையற்றவை. இதற்கு நேர்மாறாக அணு சக்தி சர்வதேசிய இருப்புடன், ஒப்பீட்டளவில் சுத்தமான, அதிக அடர்த்தியான, நம்பகத்தன்மையான ஆற்றல் மூலமாக விளங்குகிறது. இன்று 29 நாடுகள் 441 அணு உலைகளை இயக்கி 495 ஜிகாவாட்கள் மின்சாரம் உற்பத்தி செய்கின்றன. மொத்தமாக இத்துறையில் 14,000 வருட உலை அனுபவம் இருக்கிறது. 58.6 ஜிகாவாட் உற்பத்தித் திறனில் அறுபது புதிய அணு உலைகள் கட்டுமான‌த்தில் இருக்கின்றன (குறிப்பு: 2010ம் ஆண்டு தரவுகளின் அடிப்படையில்).

அணு உலை விபத்துகளின் அழிவு சக்தி, இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கத் துருப்புகள் ஜப்பான் மீது வீசிய அணுகுண்டுகளின் விளைவுகளோடு ஒப்பிட‌ப்படுகிறது. அணு அபாயங்கள், விபரீதங்கள் குறித்த நமது கருத்துகளைக் கட்டமைக்க நகரங்கள் மீது பரவிய வெண்குடை மேகங்கள், தீய்ந்து போன கட்டடங்கள் போன்ற கொடுமையான‌ மரணக் காட்சிகள் எழுப்பப்படுகின்றன. ஆனால் இது உண்மையிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறது. அணுகுண்டை அணு உலையோடு ஒப்பிடுவது மோசமான முடிவு. திட்டமிட்டு பீதியைப் பரப்பும் செயல். அணுகுண்டு என்பது குறைந்த நேரத்தில் அதிக ஆற்றலை வெளியிடுவதன் மூலம் வெடிப்புகளும், நெருப்பும் உருவாகி, பிரம்மாண்ட வெப்பம் உற்பத்தி ஆகிறது. அதன் வழியில் எதிர்ப்படும் எல்லாப் பொருட்களையும் உருத்தெரியாமல் சிதைப்பதற்கென்றே அது வடிவமைக்கப்பட்டது. ஒரு குண்டு இப்படிச் செய்யவேண்டும் என்றுதான் எதிர்பார்க்கப்படும்.

இதற்கு நேர்மாறாக, அணு உலைகள் போன்ற ராணுவம் சாரா அணு பயன்பாடுகள், குறைந்த ஆற்றலை பெரும் காலச்சட்டகத்தில் நிலைத்து நின்று வெளிப்படுத்தும்படி வடிவமைக்கப்பட்டவை. அணுக்கரு விளைவுகளைக் கட்டுப்படுத்தும், குளிரச்செய்யும் அமைப்புகளுடன் வடிவமைக்கப்பட்டவை . பாதுகாப்பு முறைமைகள், காப்பு ஏற்பாடுகள் ஆகியவை இருக்கின்றன. 2011 போலான ஒரு விபரீதத்தின் போதும் கூட‌ ஏற்படும் அழிவு அணுகுண்டால் ஏற்படுவதில் ஒரு பின்னம் கூட இருக்காது.

(தொடரும்)

அழிவிற் சிறந்தது – அப்துல் கலாம் கட்டுரைகளை முன்வைத்து

அப்துல் கலாம் கூடன்குளம் விவகாரத்தில் நுழைந்து புதுக் குமிழிகளை உருவாக்கியிருக்கிறார். அணு உலைக்கு எதிரான போராட்டத்தை சாதூர்யமாக சமாளிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே, அப்துல் கலாம் அரசால் இறக்கப் பட்டிருக்கிறார் என்பதில் ஐயம் கொள்ள எதுவும் இல்லை. சில வாரங்கள் முன்பு ‘கூடன்குளம் அணுமின் நிலையப் பிரச்சினையில் அப்துல் கலாமின் ஆலோசனை பெறப்படும்’ என்று மத்திய அமைச்சர் சொன்னார். அரசுக்கு கலாமின் ஆலோசனை எதுவும் (குறைந்த பட்சம் புதிதாக) இப்போது தேவையில்லை; இங்கே ஆலோசனை என்பதன் அர்த்தம், அவர் கருத்து சொல்லி, அது பரவாலான மக்கள் மற்றும் ஊடக கவனம் பெறுவது; அவர் என்ன கருத்து சொல்வார் என்பது அணு உலை ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் மட்டுமின்றி, கலாமிற்கு பிடித்த குழந்தைகளுக்கும்கூட தெரியும்.

ஆகையால் கலாம் கூடன்குளம் சென்று, ‘ஆய்வு செய்து’, கருத்து சொல்வது என்பது விவாதத்திற்காகவோ, நம் அறிவுப்பரிசீலனைக்காக உதிர்க்கப்படுவதோ அல்ல. ஒரு பிரபலமாக, முன்னாள் குடியரசு தலைவராக அவர் கருத்து சொல்கிறார்; அக்கருத்து அரசியல் காரணங்களால் முன்வைக்கப்பட்டது; இன்று ஒரு நிறுவப்பட்ட உண்மையாக மாறிவிட்டது. பொதுமக்கள் எல்லார் மனங்களிலும் படிந்துவிட்ட பிம்பமான, ‘இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி‘யின் கூற்றாக, அவர் கருத்து அரசாலும் ஊடகங்களாலும் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படுகிறது. அணு அறிவியல் மற்றும் அணுவியல் சார்ந்த தொழில்நுட்ப அறிவு கொண்ட, விண்கலப் பொறியியலாளரான கலாம் என்பவர், வேறு பல காரணங்களால் அடையும் அதிகாரத்தின் அங்கீகாரத்துடன், அணு உலைக்கு ஆதரவான பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்க கருத்து சொல்கிறார்.

கலாம் அணு விஞ்ஞானியா இல்லையா என்பது, அணு மின்சாரம் சார்ந்த ஒரு விவாதத்தில் ஒரு முக்கிய பிரச்சினை அல்ல; கூடன்குளம் அணு உலைக்கு அவர் அளிக்கும் சான்றிதழ், அவர் அணு விஞ்ஞானி என்று சொல்லப்பட்டு, அந்த அதிகாரத்தின் பாற்பட்டு முன்வைக்கப்படுகிறது. அவரின் கருத்துக்கள் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டதாகவும் ஆக்கப்படுகிறது. அவர் அளித்த உத்தரவாதத்தையும் மீறி, எதிர்ப்பாளர்கள் பிடிவாதம் பிடிப்பது அறிவுக்கும் நாட்டிற்கும் எதிரானதாகப் பரப்புரை செய்யப்படுகிறது.

அணு உலை, அணு மின்சாரம் குறித்து ஓரளவு அறிதல் உள்ள எவரும் கருத்து சொல்லி, அது விவாதப் பொருள் ஆகலாம். ஆனால் இங்கே எதிர் கருத்துக்களை விவாதமின்றி முறியடிக்க, அவரை தலை சிறந்த விஞ்ஞானியாக விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு முன்வைப்பதுதான் பிரச்சினை. அரசியல் நிலைப்பாடு சார்ந்த கோஷங்களால், கலாமை அவதூறு செய்து, அணு மின்சாரம் சார்ந்த அவரது வாதங்களை நிராகரிப்பது அபத்தம் என்றால், அதைவிட அபத்தம் அவரது செலிபிரிடி நிலையை முன்வைத்து, எல்லாம் அறிந்த விஞ்ஞானியின் கூற்றாக அவர் சொல்வதைப் பரப்புவது.

இந்த காரணங்களால், கலாம் ஓர் அணு விஞ்ஞானி என்கிற ‘உண்மையை’ மறுதலிக்க வேண்டியுள்ளது. ஒரு பொறியியலாளராக தொடங்கி, பல்வேறு அனுபவங்கள் மூலம் அவர் பெற்றிருக்கக் கூடிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அறிவை பற்றி சந்தேகம் கொள்ளவில்லை. ஆனால் கலாம் எந்த விதத்திலும் ஒரு அணு விஞ்ஞானி இல்லை என்பது மட்டுமின்றி, ஏதேனும் ஒரு வகையில் நேரடியான பங்களிப்பை அறிவியலுக்கு செய்வது என்ற வகையில், ஒரு விஞ்ஞானி என்று கூட அவரை அழைக்க முடியாது. நான் அறிந்தவரை, ஆக்கபூர்வம் அழிவுபூர்வம் என்கிற எந்த நோக்கில் பார்த்தாலும், எந்த ஒரு தனித்துவமான அறிவியல் பங்களிப்பையும் அவர் செய்யவில்லை. இதற்கு மாறான தகவலை யார் எங்கிருந்து தந்தாலும் பரிசீலித்து கருத்தை மாற்றிக் கொள்ள தயாராக இருக்கிறேன். கலாமை பற்றிய பொய்யான தகவலைச் சொல்லி, அதன் மூலம் குறிப்பிட்ட கருத்து தரப்பிற்கு பலம் சேர்க்க முயல்வதாலும், அவரை ஒரு அணு விஞ்ஞானியாக அணுமின்நிலைய ஆதரவாளர்கள் மட்டுமின்றி, எதிர்ப்பாளர்களும் பார்ப்பதாலும் மட்டுமே இதைச் சொல்ல வேண்டியுள்ளது.

தமிழ் மக்களை ஓர் அணு உலை விபத்திற்குப் பலிகடாவாக்குவதுதான் இந்திய மையஅரசின் அடிப்படை நோக்கம் என்று சொல்வது எவ்வளவு ஆதாரமற்ற அவதூறோ, அதைப் போலவே கூடன்குளம் உலையை எதிர்ப்பது அன்னிய நாட்டுச் சதி என்பதும், மதரீதியான உள்நோக்கங்கள் கற்பிப்பதும். அவை ஆதாரமற்ற அவதூறுகள். பிரச்சினையைத் தீர்க்காமல் இழுத்துக்கொண்டு போவதுதான் நோக்கம் என்றால், தாரளமாக இந்த இரு எதிர் எதிர்த் திசைகளில் கருத்துக்களை உதிர்த்துக் கொண்டிருக்கலாம். இருபது ஆண்டுகளாக இருக்கும் ஒரு எதிர்ப்பை பற்றிப் பேச தொடங்கும் ஒவ்வொரு முறையும், ஊடகங்கள் திடீரென கிளம்பிய எதிர்ப்பாக இதை வர்ணித்துவிட்டுத் துவங்குவதைக் காணலாம்.

அணு உலைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் வாதங்கள், பதில்கள் பல்லாண்டுகளாக ஏராளமாக எழுதிக் குவிக்கப்பட்டிருக்கின்றன. கலாமின் கட்டுரை புதிய வெளிச்சம் எதையும் தரவில்லை.

ஏற்கனவே ஒப்புக்கொண்டது போல், இந்திய அரசாங்கம் தமிழ் மக்களை பலியிடும் திட்டத்துடன் நிச்சயமாக கூடன்குளத் திட்டத்தைத் தொடங்கவில்லை. ஆகையால் அணு உலைக்கான பாதுகாப்பு என்கிற வகையில் என்னவெல்லாம் இன்றைய நிலையில் சாத்தியமாகுமோ, அவையனைத்தும் கொண்டதாக கூடன்குளம் அணு உலை இருக்கும் என்று அரசாங்கம் சொல்வதையே நேரடியாக நம்பலாம். அதை தாண்டி கலாம் ஆய்வு செய்து சொல்ல என்ன இருக்கிறது என்று விளங்கவில்லை. பொறுப்பில் உள்ளவர்களிடம் விளக்கம் கேட்டு பெறுவதைத் தவிர, ஒரு நாளில் கூடன்குள அணு உலையில் என்ன ஆய்வை அவர் செய்திருக்க முடியும் என்பதும் புரியவில்லை. கலாமின் ஆங்கிலம்  மற்றும் தமிழ்  இரண்டு கட்டுரைகளும் ஓர் ஆய்வுக் கட்டுரையின் எந்தப் பண்பையும் கொண்டது அல்ல; மாறாக முழுக்க பிரசார தொனியில் ஏற்கெனவே சொல்லப்பட்ட தகவல்களை அளிப்பது மட்டுமே. புதிது என்று தோன்றக்கூடிய, தோரியத்தை முன்வைத்து அவர் சொன்ன தகவல்களும் ஏற்கெனவே என்டிடிவி வரை வெளிவந்த செய்திகள்தான்.

கலாமின் கட்டுரையில் தரப்படும் உலையின் பாதுகாப்பு சார்ந்த தகவல்களை யாவும் உண்மை என்றே நாம் எடுத்துக் கொள்ளலாம். வேறு ஒரு அணு உலை தொழில் நுட்ப நிபுணர் அதில் கருத்து வேறுபாடும், ஐயங்களும், பிரச்சினைகளும் கொள்ள இயலலாம். ஆனால் அரசாங்கத்தின் கையாளாக கலாம் திட்டமிட்ட பொய்யை சொல்வதாக நினைப்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் இந்த ஏற்பாடுகள் எல்லாம், விபத்து நேரவே நேராது, விபத்திற்கான நிகழ்தகவு பூஜ்யம் என்ற உத்தரவாதத்தை அளிக்காது என்பதைத்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றுவரை மனித சமுதாயம் படைத்த எந்த தொழில்நுட்பமும், மனிதப் பிழை மற்றும் இயந்திரக் கோளாறு சார்ந்து, தவறு என்று எதுவுமே நடக்காமல் ஒரு விதிவிலக்காக இருப்பதற்கான சாத்தியம் இல்லை என்கிற அடிப்படை விதியை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். துல்லியம் என்பது கணித அறிவியல் விதிகளின்படியே முழுதும் கறாரான ஒரு சாத்தியமில்லை. எல்லா சோதனைகளும், கணித்தல்களும் பிழை அளவுகட்கு உட்பட்டவைதான். இந்தப் பிழையின் இடைவெளியை மேலும் மேலும் குறைத்துக் கொண்டே செல்ல இயலுமே ஒழிய, பிழையே இல்லாமல் சோதனைகளும், அறிவியல் செயல்பாடுகளும் சாத்தியமில்லை.

அந்த வகையில் அணு உலையிலும், மனிதர்கள் இழைக்கும் தவறுகளும், இயந்திரங்கள் குறித்த கணித்தல்களில் நிகழும் எதிர்பாராத தவறுகளும் முற்றிலுமாக தவிர்க்க கூடியது அல்ல; முன்னேறிய நாடுகளிலேயே இது சாத்தியமில்லை என்பதைத்தான் அமேரிக்க, ரஷ்ய, ஜப்பானிய விபத்துக்கள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. அணு உலையில் பலவேறு தளங்களில் நடக்கும் செயல்பாடுகள் சிக்கலானாவை. அதில் எதிரே பார்க்காத ஒரு கோணத்தில் பிரச்சினைகள் நிச்சயமாக ஏற்படலாம்; எந்த நிலையிலும், எந்தச் சிக்கலும், என்றுமே உருவாகாது என்று சொல்ல இங்கு யாரும் கடவுள் அல்ல.

இன்று பிரச்சினையுள்ளதாக கருதப்படும் ஃபுகுஷிமா உலையை, சென்ற வருட சுனாமிக்கு முன்பு யாரும் பிரச்சினை இருக்க வாய்ப்புள்ளதாகக் கருதவில்லை. அவர்கள் முற்றிலும் எதிர்பாராத வகையில், அவர்கள் செய்த மூன்று பாதுகாப்பு ஏற்பாடுகளும், உலையின் செயல்பாடு நின்றபின் குளிரூட்ட இயலாமல் வெடித்தது. நம்மூர் கூடன்குளத்தில் ஃபுக்குஷிமா விபத்தின் அதே சாத்தியம் இல்லை என்று உத்தரவாதம் அளிப்பதால், விபத்திற்கான எதிர்பாராத வேறு சாத்தியங்கள் இல்லை என்று நம்புவதற்கு அறிவியல்ரீதியான எந்த அடிப்படையும் இல்லை. அவ்வாறு நம்புவது அறிவியல் மனம் அல்ல; அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த மமதை மட்டுமே.

ஒரே ஒரு உயிரை காக்க ஜப்பானிய அதிகார வர்க்கம் எடுக்கக் கூடிய நடவடிக்கைகளும், பொதுவாகவே பாதுகாப்பு சார்ந்து, ஜப்பானியர்கள் அதீத obsessionடன் எடுக்கும் முன்னேற்பாடுகளையும் கணக்கில் கொண்டு, ஃபுகுஷிமா விஷயத்தில் நடந்த தவறைப் புரிந்து கொள்ளவேண்டும். எல்லாவித பிரச்சினைகளையும் எதிர்பார்த்து செய்திருந்த அதீத பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தாண்டி, கண்களைக் கட்டி விட்டிருக்கிறது இயற்கை. பொது மக்களின் உயிர்கள் குறித்து நம் அரசின், அதிகார வர்க்கத்தின் அதீத உதாசீனங்களுக்கு விளக்கமும் ஆதாரமும் காட்டத் தேவையில்லை. உதாசீனமும் ஊழலும், இன்னும் பல சீர்கேடுகளும், நெருக்கடியான தருணத்தில் நம் பொதுமக்களின் பொறுப்பற்றதன்மை எல்லாம் கலந்து, எந்த வித அழிவிற்கும் நம்மை இட்டுச் செல்லுக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.

‘விபத்து நடந்த காரணத்தால் நாமெல்லாம் விமான பயணம் போவதில்லையா’ என்கிற அபத்த உதாரணத்தை கலாமும் கேட்பது எரிச்சலூட்டினாலும், அதில் ஆச்சரியப்பட எதுவுமே இல்லை. விமான விபத்துக்களையும், அணு உலை விபத்துக்களையும் இணையாக வைத்து ஒப்பிட்டு பேசுவது ஒரு அறிவுள்ளவாதமா என்கிற சுய சந்தேகம் கிஞ்சித்தும் இல்லாமல், ரொம்ப கூலாக எல்லா அறிவாளிகளும் இப்படித்தான் கேட்கிறார்கள். ஒரு அணு உலை விபத்திற்கும், விமான விபத்திற்கும் – விபத்தின் பாதிப்பு, அளவு (magnitude) சார்ந்த பரிமாணங்கள், தொடரப்போகும் பின் விளைவுகள் என்ற – வித்தியாசங்களை பற்றிய கேள்விகளையும் புரிதல்களையும், அவரவர் மனவிவாதத்திற்கு விட்டுவிட்டு, நேரெதிராக இந்த வாதத்தை எதிர்கொள்வோம்.

‘நூறு விழுக்காடு பாதுகாப்பு ஏற்பாடு’ என்று சொல்லப்படுவதுடன்தான், விபத்து நடந்த எல்லா விமானங்களும், விபத்து நடப்பதற்குமுன் பறக்கத் தொடங்கின; மீறி தவறுகள் நடக்கின்றன. விமானத்தில் போகிறவர்கள், விபத்து நடப்பதற்கான சிறிய சாத்தியம் இருப்பதை நன்றாக உணர்ந்து, தெளிவாக முன்னமே அறிந்து, தங்கள் தேர்வாகப் பயணம் செய்கிறார்கள். மாறாக கூடன்குளம் விவகாரத்தில் விபத்து நடக்கவே நடக்காது, அதற்கான சாத்தியம் பூஜ்யம், நூறு சதவிகித பாதுகாப்பு என்று பொய் சொல்லி அணு உலையை இயக்கப் போகிறார்கள்; கூடன்குள அணு மின் உற்பத்திக்கான தேர்வை அரசும், அதிகார வர்க்கமும் முடிவு செய்து, நம் எலீட் சமூகம் அதற்கு ஆதரவாக பேசி பிரசாரம் செய்து, அதே எலீட் சமூகம் அதன் பயனை மிகுதியாக துய்க்கப் போகிறது. அபாயம் அதை தேர்வு செய்யாத, அதை எதிர்க்கும் மக்களுக்கு மட்டும்.

கலாம் தனது கட்டுரையில் விசித்திரமான ஒரு பாயிண்டை சொல்கிறார். ‘Many accidents followed, and even today air accidents kill more than 1,500 people every year’ என்கிற தகவலை தந்துவிட்டு அதனால் பறப்பதை நாம் விட்டுவிட்டோமா என வினவுகிறார். நல்ல உதாரணம்; இன்றய நமது முன்னேறிய நிலையில் கூட நம்மால் ஆண்டிற்கு 1500பேர் விமான விபத்துக்களில் சாவதை தடுக்க முடியவில்லை. ஆனாலும் பறக்கிறோம். அதே போன்ற வாதத்தைதானே மக்களிடம் கூடன்குள விவகாரத்திலும் முன்வைக்க வேண்டும்?

‘நாங்கள் எங்களால் முடிந்த எல்லாப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துவிட்டோம். அதையும் மீறி ஏதேனும் நடக்க சிறு வாய்ப்பு உண்டு; விபத்து நடக்க சில வாய்ப்புகள் உள்ளதால் மட்டும் மின்சார உற்பத்தியை எங்களால் நிறுத்த முடியாது’ என்று நேரடி யதார்த்தமான கூற்றை மக்கள் முன்வைத்திருக்க வேண்டும். பல லட்சம் தடவைகள் பயன்படுத்தி பயன்பாட்டில் நாம் மிகவும் முதிர்ந்த பின்னும் விமான விபத்துக்கள் இன்றும் நடக்க்கிறது; ஒப்பீட்டளவில் பயன்பாட்டில் இன்னமும் முதிரா நிலையில் இருக்கும் அணு மின்னுற்பத்தியின் போது என்னவகை விபத்து நடக்கக்கூடும் என்பதையும் மக்களுக்கு முன்னமே சொல்லி, நடந்தால் என்ன செய்யவேண்டும் என்பதையும் சொல்வதுதானே நியாயம். அதற்குப் பிறகும், கூடன்குளம் மக்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக, அந்த ஒருவேளை நடக்க சாத்தியக்குறைவுள்ள ஆனால் சாத்தியமுள்ள ஆபத்தை எதிர்கொள்ளத் தயராக இருக்கிறார்கள் என்றால் அது வேறு விஷயம். நூறு விழுக்காடு பாதுகாப்பு உள்ளதாக கூறி, விபத்து நடக்க சாத்தியம் இல்லவே இல்லை என்று மறுப்பது ஏமாற்று வேலையல்லவா?

அணு உலையின் பலனான மின்சாரத்தையும், முன்னேற்றத்தையும், வேறு ஒரு மேல்தட்டு சமூகம் நுகர, பாதிக்க சாத்தியமுள்ள மக்களை ‘நாமல்ல நாடுதான் நம்மைவிட முக்கியம்’ என்கிற அரிய கருத்தை சொல்லி ஏமாற்ற முனைவது என்னவகை நேர்மை? பேரணைகள் எழுப்பும்போதும், கனிமங்களுக்காக மக்கள் நிலத்தை பிடுங்கும்போது சொல்லப்படும் அதே நேர்மையற்ற ‘நாமல்ல நாடுதான் நம்மைவிட முக்கியம்’ வாதம்தானே இது.

ஃபுகுஷிமாவில் பொருட்சேதம் ஏற்பட்டாலும் உயிர்சேதம் ஏற்படவில்லை என்று ஒரு வாதத்தை கலாம் முன்வைக்கிறார். நியாயமாக அவர் செய்திருக்க வேண்டியது, ஜப்பானில் நடந்த அதே விபத்து அப்படியே இங்கே நடந்திருந்தால், என்னவகை பாதிப்பு நடந்திருக்கும் என்று நம் சூழலில் கற்பனையில் நிகழ்த்தி ஒப்பிட்டு பார்ப்பதுதான். குஜராத்தில் நடந்த பூகம்பத்தில் லட்சக்கணக்கில் உயிர்சேதம் நடந்தது. அதைவிட வலிமை வாய்ந்த பல பல ஜப்பானிய பூகம்பங்களில் வெறும் 25 பேர் கூட பலியாகவில்லை. ஒரு பேரழிவின் போதும் ஜப்பானியர் காட்டும் பொறுப்புணர்ச்சி, ஒழுக்கம், கட்டுப்பாடு, அரசாங்கத்தின் அதி தீவிர துரித நடவடிக்கை, இவை எல்லாவற்றையும் நாம் நம் சூழலுடன் ஒப்பிட்டே பார்க்கமுடியாது. பத்து லட்சம் மக்கள், கூடன்குள அணு உலையிலிருந்து, 30 கிமீ ஆரத்தில் வசிப்பதாக சொல்கிறார்கள்; இது சரியென்றால், நம் ஊரில் விபத்து நிகழ்ந்தால் ஏற்படும் உயிர் சேதத்தைக் கற்பனையே செய்து பார்க்கமுடியாது.

அணு உலை எதிர்ப்பாளர்கள் முன்வைக்கும் இன்னொரு முக்கிய வாதம் – ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நிகழக்கூடிய சாத்தியத்தின் அச்சுறுத்தல். ஏனோ கலாம் இந்த பிரச்சினையை சுத்தமாகக் கண்டு கொள்ளவேயில்லை. ஒரு பயங்கரவாதத் தாக்குதல் மூலமோ, வேறு வகை சதிகளின் மூலமோ அணு உலைக்கு எந்தத் தீங்கும் யாராலும் நிகழ்த்த முடியாது என்று எந்த உத்தரவாதமும் அவர் தரவில்லை. (பயங்கரவாதத் தாக்குதல் நடக்கவே நடக்காது என்று உத்தரவாதம் தருவது நோய்க்கூறு கொண்ட நகைச்சுவையாக இருக்கும்.)

தொடர்ந்து அரசு மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டு, எல்லாவகை தடுப்புகளையும் மீறி அணு உலையில் இருந்து வெளிப்படப்போகும் (ஆபத்தில்லை என்று கருதப்படும்) கதிர்வீச்சின் அளவு குறித்து அரசு உண்மை தகவல்களை முன்வைப்பதில்லை என்பது. கலாம், பொத்தாம் பொதுவாக இதுவரையான அரசு அறிக்கையைப் போலவே, பாதுக்காப்பான கதிர்வீச்சே ஊருக்குள் கலக்கிறது என்கிறாரே தவிர, குற்றச்சாட்டுகளுக்கு நேரடி பதிலாக எதுவும் சொல்லவில்லை.

நடைமுறையில் மக்களை அன்றாடம் பாதிக்கப் போவதாக சொல்லப்படும் பல பிரச்சினைகளை, மிகைப்படுத்தப்பட்ட பயம் என்று எளிதாக கலாம் புறம் தள்ளுகிறார். அணு நிலையத்தில் வேலை பார்ப்பவர்கள், அணு உலை உள்ள ஊரில் வசிப்பவர்கள் பலவிதப் புற்றுநோய்களால் பாதிக்கபடுவதாகப் பல புள்ளி விவரங்கள் வந்துள்ளன. நான் நேரடியாக இந்தப் புள்ளி விவரங்களைச் சேகரிப்பதிலும், சரிபார்ப்பதிலும் ஈடுபட்டவன் அல்லன். ஆனால் அவை அத்தனையும் மிகை என்று ஒரு வாக்கியமாக கலாம் சொல்வதைமட்டும் வைத்து நம்பவது சாத்தியமில்லை. இது குறித்து செய்திகளை முதலில் கேள்விப்பட்டு, சரி பார்த்து, பின் தகவல்ரீதியான எதிர் பதிலை கைவசம் வைத்து கொண்டுதான் சொல்கிறாரா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். இது பற்றிய செய்திகள் பரப்பப்பட்ட பொய் என்றால், பொய் என்று நிறுவி, பொய்த் தகவல்களை தேசத்தின் முக்கியப் பிரச்சினைகளின்போது பரப்பியதற்கு, அதைப் பரப்பியவர்களின்மீது நடவடிக்கை எடுத்தால் நாமும் கலாமின் கட்டுரையை நம்புவது பற்றி யோசிக்கலாம். உதாரணமாக இங்கேயும், இங்கேயும் தரப்பட்டுள்ள தகவல்களுக்கு எதிரான ஆறுதல்களை கலாமின் கட்டுரையில் காண முடியவில்லை.

விபத்து என்பது சாத்தியக்கூறு மட்டும் உள்ள, தடுக்க எல்லா முயற்சிகளும் செய்யகூடிய ஒன்று. விஞ்ஞானத் தொழில் நுட்ப முன்னேற்றத்திற்கு ஆதரவான எல்லா வாதங்களையும், விபத்து நிகழ்வதை முன்வைத்துச் சொல்லப்படும் வாதத்திற்கு எதிராக முன்வைக்கலாம். நிதர்சனமான பிரச்சினை அணுக் கழிவுகளை அப்புறப்படுத்துவது; அதாவது பாதுகாப்பது.

கலாம் அது குறித்தும் புதிதாக எதுவும் சொல்லவில்லை. ஒரு கால்பந்து மைதானம் அளவிற்கான இடத்தில் வைத்து நூறு ஆண்டுகாலம் பாதுகாக்கலாம் என்கிறார். சரி, அதற்குப் பிறகு? சில லட்சம் வருடங்களை half-life காலமாகக் கொண்டவற்றை, நூறு ஆண்டுகளுக்குப் பிறகு என்ன செய்வதாக உத்தேசம்? அதனுடைய கதீர்விச்சு சில நூறு வருடங்களில் மங்கி, பாதுகாப்பான அளவிற்குள் வந்துவிடும் என்பது ஒரு வசதியான கணிப்பு மட்டுமே. நூறு வருடங்களுக்கு பிறகும் ஏதாவது ஒரு பிரச்சினையைக் கொண்டதாகவே எதிர்கால சந்ததியினருக்கு அது இருக்கும்.

இப்போதய நமது மின்தேவை, முன்னிலிருந்து பன்மடங்கு பெருகி, அணு மின்சாரம் இல்லாமல் ஆகாது என்கிற நிலையில் உள்ளது. அது exponentialஆக வளர்ந்து, இன்னும் பல பல பெருமடங்குளாகவே எல்லா வாய்ப்புகளும் உள்ளன. அப்துல் கலாம் வேறு நாம் 2030இல் நிச்சயம் வளர்ந்த நாடாகிவிடுவோம் என்கிறார். அதற்கு ஏற்ப இன்னும் மின் தேவை எத்தனை மடங்கு பெருகும் என்பதையும் அவரே சொல்கிறார். அதற்கு இன்னும் எவ்வளவு உலைகள் வேண்டுமோ? மேலும் மேலும் அப்புறப்படுத்த வழியில்லாத, தொடர்ந்து பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில், சேர்மானம் ஆகிக்கொண்டே  இருக்க போகும் அணுக் கழிவை பற்றி எந்த பொறுப்புமே இல்லாமல் சாதாரணமாக ஒரு இடத்தில் வைத்து சமாளிக்கலாம் என்கிறார். பத்ரியாவது, பிரச்சினைதான், ஆனால் எதிர்காலத்தில் சமாளித்துவிடலாம் என்று தன் அறிவியல் மனம் நம்புவதாக மட்டும் சொன்னார்.

நம் நுகர்வு கலாசாரம் உற்பத்தி செய்யும் ப்ளாஸ்டிக்கை சாமாளிப்பதற்கே, உருப்படியான எந்த நடைமுறை உத்தியும், உலகம் முழுக்க எந்த நாட்டிலும் இருப்பதாக தெரியவில்லை. நாம் வாழும் நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை விடுவோம். காட்டையும், கடலையும் பிளாஸ்டிக் கழிவுகள் அழித்து வருகின்றன. கடலில் சேரும் கழிவுகளில் பெரும் விழுக்காடு ப்ளாஸ்டிக் கழிவுகள். பல கடல்வாழ் உயிரினங்களின் அழிவுகளுக்கு இந்த பிளாஸ்டிக் கழிவுகள் காரணமாக உள்ளன. சில திமிங்கல இனங்கள் அழியும் நிலையில் உள்ளன. பிபிசி இது குறித்து வெளியிட்டுள்ள ஆவணப் படங்களைப் பார்த்தால் எவ்வளவு அற்புத உலகை நாம் அயோக்கியத்தனமாக அழித்து வருகிறோம் என்று அறியலாம்,

இந்த யதார்த்தத்தில் அணுக் கழிவுகளை பிரச்சினையின்றி சமாளிப்போம் என்று அறிஞர்கள் சொல்வது அத்தனையும், நம்மை ஏமாற்றும் வேலை மட்டுமின்றி அவர்களையே ஏமாற்றிக் கொள்ளும் வேலை. அவர்களில் பலருடைய அறிவியல் மனமே எதிர்காலத்தில் அணுக்கழிவுகளை சந்திர மண்டலத்தில் கொண்டுபோய் போடலாமா என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறது. மறு சுழற்சி என்பது ப்ளாஸ்டிக் விஷயத்தில் பயனாளிகளுக்கு மனச்சமாதானத்தை தந்து, குற்றவுணர்வு நீக்கும் ஒரு பொய் நாடகம்; ஏனெனில் செய்யப்படும் அற்ப மறு சுழற்சிகள், தொடர்ந்து பெருமளவில் ப்ளாஸ்டிக் உற்பத்தியாகும் சூழலைத் தடுக்கவில்லை. மாறாக இது மறுசுழற்சியாகிறது என்று, அதைப் பயன்படுத்துபவரின் குற்றவுணர்வை மட்டுமே நீக்குகிறது. அணுக்கழிவுகள் விஷயத்திலும் மறு சுழற்சி என்பது வாதத்திற்காகவும் மனச்சமாதானத்திற்காகவும் சொல்லப்படுவதே. கழிவுகள் மேலும் மேலும் சேர்வதையும், அதை பாதுகாக்கும் பிரச்சினையும் இதனால் தவிர்க்கப்பட போவதில்லை. இந்த அணுக்கழிவுகளை சமாளிப்பது, என்றென்றைக்கும் நம் எதிர்கால சந்ததியினருக்கு – ஒருவேளை அவர்கள் எல்லா வகை எதிர்கால அழிவுகளையும் தாண்டி பிழைத்திருந்தால்-அணு மின்சார உற்பத்தியை நிறுத்திய பின்பும்- பெரும் பிரச்சினையாக இருக்கும். அதாவது முந்தய தலைமுறை அனுபவித்துவிட்ட பயனின் பாவத்திற்காக, அடுத்த தலைமுறை பெரும் செலவுகளையும், பெரும் அர்பணிப்புகளையும் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

இது தவிர ஒவ்வொரு நிலையிலும் அணு கழிவுகளை பாதுகாக்கும்போது கையாள்வதிலும், இடமாற்றம் செய்யும் போக்குவரத்திலும் எந்த பிரச்சினையும் நேரவே நேராது என்பதற்கும் உத்தரவாதமில்லை. கலாம் சொல்வதுபோல் அணு மின்சாரம்தான் நம் எதிர்கால வளர்ச்சிக்கு அடிப்படை என்றானபின், பெருமளவில் சேர்ந்துகொண்டே இருக்கப்போகும் கழிவுகளைத் தொடர்ந்து கையாண்டுகொண்டே இருக்க வேண்டும். மருத்துக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், சுற்று சூழல் கேடு எதைப் பற்றியும் – தன் வீட்டிற்கு வெளியே – எந்த தளத்திலும் பிரக்ஞை இல்லாத நம் நடுத்தர வர்க்கமும், எலீட் மக்களும் இருக்கையில், பாதுகாப்பிற்கு முழு உத்தரவாதம் நிச்சயம் இல்லை.

அப்துல் கலாம் தொழில்நுட்பத்தின் மூலம் சமூகம் அடையக்கூடிய வளர்ச்சிப் பாதையில் அசையா நம்பிக்கை உடையவர். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு எதிரான மனம் என்று ஒன்று இருக்கமுடியாது. எல்லா வகை பழைமைவாதிகளும்கூட தொழில்நுட்ப முன்னேற்றத்தினால் தங்கள் சுதந்திரத்தை மேம்படுத்திக் கொள்வார்கள். எத்தனையோ விதங்களில் கடந்த ஒரு நூற்றாண்டு தொழில்நுட்பம் நம்மை விடுதலை செய்திதிருக்கிறது. ஆனால் சுயவிமர்சனம் இல்லாத எல்லா வகை பற்றுக்களைப் போலவே தொழில்நுட்ப வெறியும் புதிய நெருக்கடிகளுக்கே இட்டுச் செல்லும்.

ஒருமுறை கேள்விக்கு பதில் சொல்லும்போது, பிருத்வி ஏவுகணை வானில் எழுந்ததையே தன் வாழ்வின் மகத்தான தருணமாக அப்துல் கலாம் சொல்கிறார். எவுகணைக்கான தவிர்க்க முடியாத அவசியம் பற்றி நாட்டுப்பற்றுள்ள ஒருவர் வாதிட்டால் புரிந்துகொள்ளலம். ஆனால் ஏவுகணை வானில் எழுவதை வாழ்வின் மகத்தான தருணமாக நினைக்கும் மனதை விமர்சனம் செய்து கொள்வதில், தொழில்நுட்பம் தரும் நெருக்கடியையும் அழிவையும் எதிர்கொள்வதன் தொடக்கம் இருக்கலாம்.  இன்றைய அதீத தொழில்நுட்ப வளர்ச்சி உருவாக்கும் பேராசையும், பெருந்தேவைகளையும், பெரும் நெருக்கடிகளையும் பற்றிப் பலர் பேசும்போது, தொழில்நுட்பத்தின்மீது மதப்பற்று போன்ற தீவிர ஆதரவுடன், முழுக்க ஒரு பிரசாரத்திற்கான மொழியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் கலாம் கட்டுரைகளை எழுதியுள்ளார். அதை அரசும் ஊடகங்களும் பரப்புரையாக மக்கள் மனதில் திணிக்கிறது.

 

ன்னளவில் கலாமின் கட்டுரையில் எதிர்க்க மட்டும் செய்யாமல் எதிர்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் உண்டு. கலாம் தனது கட்டுரையில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சுத்தமான மின் உற்பத்தி முறையாக அணு மின்சாரத்தைக் குறிப்பிடுகிறார். இதைக் குறிப்பிடும்போது புவி சூடேற்றம் பற்றியும், அதன் ஆபத்துக்கள் பற்றியும் பேசுகிறார். இந்த வாதமும் ஏற்கெனவே வேறு சிலரால் அணு மின்சாரத்திற்கு ஆதரவாக முன்வைக்கப்பட்டதுதான்.

கலாம் புவி சூடேற்றம் பற்றி பேசுவதன் நேர்மையை நான் சந்தேகிக்க விரும்பவில்லை. ஆனால் சூழலியவாதிகள் புவி சூடேற்றத்தை முன்வைத்து பேசுவதை எல்லாம் எள்ளி நகையாடும் ஒரு எலீட் கூட்டம், அணு மின்சாரத்திற்கு ஆதரவாக வாதிடும்போது மட்டும் புவி சூடேற்றத்தை ஒரு வாதமாக முன்வைப்பது அப்பட்டமான நேர்மையின்மை.

அணுக்கழிவுகளைத் தொடர்ந்து சாமாளிப்பது என்ற வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக அணு மின்சாரத்தை சொல்ல முடியுமா என்று கேள்வியை மண்டையிலிருந்து கழற்றி வைத்துவிட்டுப் பார்த்தால், அணு மின்சாரம் ஒரு விதத்தில் தூய்மையான பச்சை மின்சாரமாகத்தான் தெரிகிறது. ஆனால் கலாம் சொல்வதுபோல் மற்றவகை மின் உற்பத்திகளை நிறுத்தி, அணு மின்சார உற்பத்தியை மட்டும் மேற்கொண்டால் Green house வாயு உமிழ்வுகள் உண்மையில் குறையுமா? தன் வாதத்திற்கு ஆதரவாகப் பல புள்ளி விவரங்களைத் தருகிறார். உதாரணமாக 26% CO2 வெளியேற்றம் (அணு சாராத மற்ற) மின் உற்பத்தியால் மட்டும் ஏற்படுகிறது என்கிறார். அவற்றை நான் சரி பார்க்க முயலவில்லை. ஆனால் நான் காண விரும்பிய ஒரு குறிப்பிட்ட புள்ளி விவரத்தை அவர் தரவில்லை.

ஜப்பான் போன்ற நாடுகள் பெருமளவில் அணு உற்பத்தியை மட்டும் சார்ந்து நிற்கத் தொடங்கியபின், அந்நாட்டிலிருந்து வெளியேறும் கரிமில வாயுவின் அளவு கூடிக்கொண்டிருக்கிறதா, குறைந்து கொண்டிருக்கிறதா என்பதன் புள்ளி விவரம்தான் எனக்கு முக்கியமானதாகத் தெரிகிறது. கரிமில வாயு உமிழ்வுப் புள்ளிவிவரம், வரைபடத்தில் மேல் நோக்கிய வளைவாக, செங்குத்தாக தொடர்ந்து ஏறிக் கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு எந்த சந்தேகம் இல்லை. ஆகையால் அணு மின் உற்பத்தி புவி சூடேற்றத்தைக் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டதாக நம்ப ஆதாரம் உண்மையில் இல்லை; மாறாக மின்பற்றாக்குறை நீங்கி, அபரிமிதமான மின்சாரம் கைவசம் இருக்கும்போது, பொறுப்பற்ற எல்லாவகைக் குளிரூட்டுதலாலும் புவி சூடேற்றம் அதிகமாகவே எல்லா சாத்தியங்களும் உள்ளது.

நிலக்கரி, தொல்லுயிர் எச்சங்களில் இருந்து கிடைக்கும் எரிபொருள்களின் இருப்பு வற்றும் நிலைமையில், நாம் அணு எரிபொருளைத் தேடவேண்டியுள்ளது என்கிறார் கலாம். மட்கிக் கிடக்கும் இயற்கை எரிபொருட்கள் வற்றப்போவது நிச்சயமான எதிர்காலப் பிரச்சினை. அதை அணு மின்சார உற்பத்திக்கு மாறுவதன் மூலமாக மட்டும் சமாளிக்க முடியுமா? எல்லாவித பெட்ரோல், டீசல் தேவைகளையும் நேரடி மின்சாரம் சார்ந்த பயன்பாடாக மாற்ற வேண்டும். இன்னும் நேரடியாக அணு சக்தியிலேயே ஓடக்கூடிய கார்களையும், விமானங்களையும் படைத்து விட்டால் மிகவும் உசிதம்; உண்மையிலேயே அதைத் தவிர வேறு வழியில்லை. இன்றைய வாகனங்களைப் போலப் புகை கக்க வேண்டிய தேவையும் இருக்காது. அணுக் கழிவுகளை மட்டும் எப்படி ஒவ்வொரு குடிமகன்களும் சமாளிப்பார்கள் என்பதை எதிர்கால அறிவியல் முன்னேற்றத்திடம் விட்டுவிடலாம்.

புவி சுடேற்றத்தை அணு மின்சாரம் குறைக்கும் என்கிற வாதம் சந்தேகக் கேஸாக இருந்தாலும், எதிர்காலத்தை பற்றிக் கவலை கொள்ளாமல், உடனடிச் சூழல் மாசை மட்டும் கணக்கில் கொண்டால், மற்ற அனல், புனல் மின்சாரங்களுக்கு அணு மின்சாரம் மேல்தான். உதாரணமாக கலாம் நிலக்கரிச் சுரங்கங்கள் நிகழ்த்தும் நாசத்தை முன்வைத்து அப்படி ஒரு வாதத்தை முன்வைக்கிறார். இந்த சந்தர்ப்பத்திற்கான ஒரு சாமர்த்தியமான வாதமாக இல்லாமல், அணு மின்சாரம் தொடங்கிய உடன், நிலக்கரிக்காகத் தோண்டுவதை நம் கார்ப்பரேட்டுகள் நிஜமாகவே முழுக்க விட்டுவிடுவார்கள் என்றால், அந்த வகையில் கலாம் சொல்வதை- சேரப்போகும் அணுக்கழிவு குறித்து யோசிக்காத நிலையில்- ஒப்புக் கொள்ளலாம்.

என்னை பொருத்த அளவில் எல்லா விதத்திலும் அழிவை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறோம். பிளாஸ்டிக் கழிவுகள் நம்மை மட்டுமின்றி, கடலையும் கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது. புவி சூடேற்றம் பற்றிக் கறாரான புள்ளி விவரங்களுடன் புட்டு புட்டு வைத்த பின்பும், நன்றாய்ப் படித்த அறிவாளிகளே கிராக்குத்தனமான வாதங்களால் மறுக்கிறார்கள். இன்னும் பைத்தியக்காரத்தனமான தீர்வுகளையும் தருகிறார்கள். இதற்குமேல் வெடிக்க சாத்தியமுள்ள போர்கள், முதலீட்டியம் எதிர்காலத்தில் நிகழ்த்தப்போகும் தீவிர சுரண்டல், அளிக்கக்போகும் நெருக்கடிகள் என்றும் ஏராளமாக இருக்கின்றன. இதில் உடனடி ஆபத்து என்று பார்த்தால் அணுக்கழிவுகள் குறைந்த வீர்யத்துடனேயே இருப்பது போல் தெரிகிறது.

ஆற்றலுக்காக நவீனமான வாழ்க்கையில் எத்தனையோ விதத்தில் அழிவை தேடுகிறோம்; அணு மின்சாரம் உற்பத்தி மூலம் இன்னொன்றை இழுத்துக்கொண்டு அழிவைத் தேடுவதில் என்ன குடி முழுகப்போகிறது என்றால் – பதில் எதுவும் இல்லை. ஆகையால் நேர்மையாக அழிவிற் சிறந்தது எது என்பதைப் பற்றி விவாதிப்போம். அதில் அணு ஆற்றல்தான் நம் பார்வையில் இப்போதைக்கு சாதகமான அழிவு என்றால் அதை ஏற்றுக்கொள்வோம். சைனா இந்தப் பாதையில்தானே போகிறது, நாம் பின்தங்கி விட மாட்டோமா என்று கேட்கிறார்கள். உண்மைதான்; எல்லோரும் அழிவுப்பாதையில் போகும்போது நாமும் அதையே செய்வோம். தனிமைப்பட்டுத் தவிர்க்க முடியும் என்று தோன்றவில்லை. தவிர்க்க முயன்றாலும் மற்றவர்கள் அனுமதிக்கப் போவதில்லை. புவி சூடேற்றப் பிரச்சினையிலும் மற்ற நாடுகள் யோக்கியமாக நடக்காதபோது, கரிமில வாயு உமிழ்வை நாம் மட்டும் ஏன் கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்கிறார்கள். உண்மைதான்; மற்றவர்கள் செய்யும் போது நாமும் நம் பங்களிப்பை அழிவிற்குச் செலுத்த வேண்டாமா?

எல்லாம் வாஸ்தவம்தான். ஆனால் ஐரோப்பிய அமேரிக்க நாடுகளைப் போல நவீனமாதலின் பயன் நம் அனைத்து மக்களுக்கும் சமமாக கிடைக்கப் போவதில்லை; நாம் சைனா போன்ற எதேச்சதிகார அரசமைப்பு கொண்ட நாடும் அல்ல. ஆகையால் ஒரு ஜனநாயக நாட்டில், நம் (அதாவது நானும் உறுப்பினராகியுள்ள மேல்தட்டின்) தேர்வுக்கு, வேறு ஒரு மக்களை விலை கொடுக்கச் சொல்லக் கூடாது. வேறு ஒரு மக்கள் என்று கூடன்குளத்தில் வசிக்கும் மக்களை போன்றவர்களைத்தான் சொல்கிறேன். (எதிர்கால சந்ததியினரை நம் பாவங்களை சுமக்கத்தான் உருவாக்குகிறோம் என்பதால் அவர்களை சொல்லவில்லை.) எத்தனையோ விஷயங்களில், எத்தனையோ விதங்களில் ஒரு தட்டினரின் தேர்விற்கு வேறு யாரோ விலை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்; இதிலும் செய்தாலென்ன என்று நேரடியான ஒரு கேள்வியை எலீட் கூட்டம் கேட்பது ஒருவேளை அடுத்த கட்ட வாதமாக இருக்கலாம்.

இந்த புலம்பல்களை விட்டுவிட்டு இதற்கான மாற்றுத் தீர்வு என்னவென்று கேட்டால், நிறைவான பதில் எதுவும் எனக்கு தெரியவில்லை. அணு உலையை எதிர்ப்பவர்கள் காற்றாலை, சூரிய மின்சாரம் என்று பலவற்றை முன்வைக்கிறார்கள். விரிந்துகொண்டே போகும் தேவைகளை அது முழுவதும் தீர்த்து வைக்கும் என்று கலாமை போலவே எனக்கும் நம்பிக்கையில்லை. உருவாக்கி கொண்டே செல்லும் தேவைகளை குறைக்காமல், அதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் எந்த தீர்வையும் எட்டமுடியாது. டெவலப்மெண்ட் என்கிற வளர்ச்சியின் வன்முறையையும், அழிவையும் உணராமல் அது குறித்து யோசிக்க வாய்ப்பில்லை. தொடர்ந்த மின் பற்றாக்குறையும், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடும் ஒருவேளை நம்மை யோசிக்க வைக்கலாம். அந்த வகையில் கூடன்குளம் அணு மின்சாரம் வந்து நம் மின்பற்றாக்குறையை தீர்க்குமானால், நாம் யோசிக்கவே போவதில்லை.

ஃபுகுஷிமா விபத்திற்கு பிறகு, இயக்காமல் இருந்த பல அணு உலைகளின் காரணமாக, ஜப்பானியர்கள் மின் பற்றாக்குறையை சமாளிக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தது; மின்சிக்கனம் குறித்த பரப்புரை செய்யப்பட்டது. குளுரூட்டுதலை தவிர்ப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம், ஒட்டு மொத்த ஜப்பானே மின் சிக்கன நடவடிக்கைகளில் இறங்கியது. இதன் விளைவாக கடந்த செப்டம்பர் மாதம் கடந்த பல வருடங்களைவிட குளிர்ந்து இருந்ததாக ஒரு செய்தி வாசித்தேன். இது போன்ற ஒரு செயல் இந்தியர்களாகிய நம்மாலும் முடியும் என்று கூறுவதற்கான முகாந்திரம் இல்லாததால்தான், கலாம் அணு மின்சாரத்தில் ஜப்பானை போல நாம் சாதித்து காட்ட முடியும்… முடியும்… முடியும்… என்று கோஷிக்கிறார் போலும்.

பி.கு. 1. கூடன்குளம் அணு உலையை எதிர்ப்பவர்கள் குறிப்பாக பல பிரச்சினைகளை எழுப்பியுள்ளனர். அது குறித்து எந்த அளவிற்கு நிறைவான, நியாயமான பதில்களை கலாம் கூறியிருக்கிறார் என்று அலச நான் முயலவில்லை. வேறு யாராவதுதான் அந்த வேலையைச் செய்யவேண்டும்.

பி.கு. 2. ஹிந்து பத்திரிகையில் ஆங்கிலத்திலும், பின் கலாமின் வலைத்தளத்தில் முதலில் வெளியாகி பின் விகடனில் தமிழிலும் இரண்டு கட்டுரைகள் கலாமின் கட்டுரைகளாக வெளியாகியுள்ளன. இரண்டுமே இணை ஆசிரியர்களாக வேறு ஒருவரையும் கொண்டது. ஶ்ரீ ஜன்பால் சிங் ஆங்கிலக் கட்டுரையிலும், பொன்ராஜ் தமிழ்க் கட்டுரையிலும் இணை ஆசிரியர்கள். ஆய்வுக் கட்டுரையாக அல்லாமல், வெகுஜன வாசிப்பிற்கான ஒரு பரப்புரை கட்டுரையில், இவர்கள் பங்கு என்னவென்று தெரியாவிட்டாலும், பலரும் இதைக் கலாமின் கட்டுரையாகவே வாசிக்கின்றனர். என் கருத்தில், கலாமின் மேற்பார்வையில், இந்த இரண்டு கட்டுரைகளுமே முழுமையாகவே மற்றவர்களால் எழுதப்பட்டிருக்க வாய்ப்பு நிறைய உள்ளதாகவே கருதுகிறேன். ஆனால் இங்கே கலாமின் கட்டுரை என்று விளித்துள்ளதன் பொருள், அவர் எழுதியது என்பதல்ல. அவரின் பெயரால் முன்வைக்கப்பட்டதை எதிர்கொள்வதுதான்.

- ரோஸா வசந்த்

 

 

C மொழித் தந்தைக்கு ஒரு மாணவனின் அஞ்சலி

“It’s not the actual programming that’s interesting. But it’s what you can accomplish with the end results that are important.”

-    Dennis Ritchie (in an interview to ‘Investor’s Business Daily’)

சமீபத்தைய ஏராள ஸ்டீவ் ஜாப்ஸ் அஞ்சலிக்குறிப்புகள் படித்த அயர்ச்சியிலிருந்த எனக்கு அத்தகையதோர் கட்டுரையை விரைவில் நானே எழுதப் போகிறேன் என்று யாரேனும் சொல்லியிருந்தால் எதன்பொருட்டும் அதனை நம்பியிருக்க மாட்டேன். இன்று டென்னிஸ் ரிட்ச்சிக்காக அதைச் செய்யவேண்டியிருக்கிறது.

இதை எழுதிக்கொண்டிருப்பது ஓர் எழுத்தாளனாக அல்ல; ஒரு மாணவனாக‌.

மென்பொருள் தர உத்திரவாதப் பொறியாளனாக நிரல் எழுதுவது என்பது சற்றே அந்நியப்பட்டுப்போயிருந்தாலும் அவ்வப்போதான தேவைக்கென்று தொடுப்பு வைத்திருப்பது ஜாவா மொழியோடு மட்டும்தான் என்றாலும் தற்போதைக்கு எனக்கு நன்கு தெரிந்த நிரலாக்க மொழி எனில் அது C தான். போலவே, பழக்கம் தந்த சொகுசின் காரணமாக, பிடித்த இயங்குதளம் விண்டோஸ்தான் என்றாலும் அலுவலகத்தில் தினசரி அதிகப்படி பயன்படுத்த நேர்வது லின‌க்ஸ்தான்.

நேர்முகத் தேர்வுகளில், பிடித்த ஏதேனும் மொழியில் குறிப்பிட்ட விஷ‌யத்துக்கு நிரல் எழுதச் சொன்னபோதெல்லாம் C மொழியையே தேர்ந்திருக்கிறேன். நான் மற்றவர்களை நேர்காணல் செய்ய நேர்ந்தபோதும் இதே கேள்விக்கு C மொழி பயன்படுத்தி எழுதியவர்கள்பால் தனியானதொரு வாஞ்சை ஏற்பட்டிருக்கிறது.

எண்ணங்களிலும் செயல்களிலும் ஊறிப்போயிருக்கும் இத்தொழில்நுட்பங்களின் ஆதிவடிவங்களை ஆக்கியவர் டென்னிஸ் ரிட்ச்சி – ஒன்று C மொழி; மற்ற‌து யூனிக்ஸ் இயங்குதளம். இவைதவிர அவரது முக்கியமான ஆக்கம் என நான் கருதுவது அவரது புத்தகங்களை: The C Programming Language மற்றும் Unix Programmer’s Manual.

கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்தால் சமகாலத்தவர் எவரையும்விட‌ தொழில்நுட்பத்தின்வழி நம் தினசரி வாழ்வின்மீது ஆகப்பெரிய பாதிப்பை எற்படுத்தியவர் என டென்னிஸ் ரிட்ச்சியையே சொல்லவேண்டியிருக்கிறது – ‘எவரையும்’ என்பது பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் இருவரையும் சேர்த்துத்தான்.

விண்டோஸ் உட்பட கணிசமான இயங்குதளங்கள் C மொழியில் எழுதப்பட்டவை, பேர்ல் (Perl) உட்பட பல நிரலாக்க மொழி கம்பைலர்கள் C மொழியில் எழுதப்பட்டவை. இன்றும் ஒட்டுமொத்தப் பயன்பாட்டில் ஜாவாவுக்கு அடுத்து C மொழி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. யூனிக்ஸின் நீட்சியான லினக்ஸ் பரவலாக நிரலாக்கத்தில் பயன்படுகிறது. இப்படியாக, இன்றைய தேதியில் நாம் பயன்படுத்தும் எந்த மின்னணுச் சரக்கிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தவிர்க்கவே முடியாத‌படி டென்னிஸ் ரிட்ச்சியின் தொழில்நுட்பம் ஒளிந்திருக்கிறது.

ஆனால் அவரது இறப்புச் செய்தி அவர் இறந்து மூன்று நாட்கள் கழித்து அவரது முன்னாள் பணிச்சகாவான ராப் பைக் என்பவர் தன் கூகுள் ப்ளஸ் பக்கத்தில் நேற்று அதிகாலை 6:32-க்கு பகிர்ந்து கொண்டதன் வாயிலாகவே வெளி உலகத்துக்கு வந்ததிருக்கிறது. அதிலும் அவரது மரணத்தேதி சரியாகக் குறிப்பிடப்படவில்லை.

நேற்று காலை 9 மணிவரை எந்த ஆங்கில வலைதளத்திலுமே இந்தச் செய்தி வெளியாகவில்லை. காலை 10 மணிவரை விக்கிப்பீடியாவில் தகவல் பதியப்படவில்லை. நேற்று மதியம் 2 மணி வரை பிபிசி போன்ற பிரபல செய்தி நிறுவன‌ங்கள் இச்செய்தியை வெளியிடவில்லை. இப்போதும்கூட ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகவில்லை. தவிர்க்க இயலாது, ஸ்டீவ் ஜாப்ஸின் சமீப‌ மரணத்துக்குக் கிடைத்த அளப்பரிய அலப்பறைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து மனம் ஆதங்கம் கொள்கிறது.

கணிமையின் வரலாற்றில் ஒரு முக்கியமான சகாப்தமான அவரைப் பற்றி அவர் இறந்தபின்னரே எழுத நேர்ந்தது குற்றவுணர்ச்சியை எழுப்புவதாகவே இருக்கிறது.

டென்னிஸ் ரிட்ச்சி தனது வலைப்பக்கத்தில் தன் வாழ்க்கையை ஓர் அஞ்சலிக் குறிப்பைப்போல் சொல்ல விரும்பாமல் தன்மையிலேயே விவரிக்கிறார். (“A brief biography, in first person instead of obituary style.”) இப்போது அவர் இறப்புக்குப்பின் எழுதப்படும் இக்குறிப்பும் அவர் விருப்பம் போல் அப்படியே சொல்லப்படுகிறது:

“நான் டென்னிஸ் ரிட்ச்சி. 1941ம் வருடம் செப்டெம்பர் மாதம் 9-ம் தேதி நியூ யார்க் நகரில் உள்ள ப்ரான்க்ஸ்வில் என்ற செல்வச்செழிப்பானதொரு கிராமத்தில் பிறந்தேன். என் அப்பா அலிஸ்டைர் ரிட்ச்சி பெல் பரிசோதனைக்கூடத்தில் ஸ்விட்சிங் சிஸ்டம் எஞ்சினியராகப் பணியாற்றினார்; அம்மா ஜீன் மெக்ஜீ வீட்டைக் கவனித்துக்கொண்டிருந்தார். என் பாலியப் பருவமும் பள்ளிப்படிப்பும் நியூ ஜெர்சியில் நிகழ்ந்தன. படிப்பில் நான் கெட்டிக்காரனாகவே இருந்தேன்.

பின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் இளநிலை இயற்பியல் படித்தேன். அப்போது ஹார்வார்ட்டில் இருந்த Univac – I என்ற கணினி பற்றிய ஒரு விரிவுரையைக் கேட்க நேர்ந்தது. அதுதான் கணினியியல்மீதான காதல் எனக்குள் உண்டாவ‌தற்கான முதல் விதை. பின்னர் கணினிகள் பற்றி, குறிப்பாக அவற்றின் நிரலாக்கம் பற்றித் தேடிப் படிக்கத் தொடங்கினேன்.

பின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திலேயே பயன்பாட்டுக் கணிதத்தில் (Applied Mathematics) முதுநிலை பயின்றேன். கணினியியல் அப்போது தனிப்படிப்பு ஆகாததால் கணினி அறிவு இருப்பவர்கள் யார் என்றாலும் ஆராய்ச்சி நிறுவனங்கள் அவர்களைப் பணிக்குச் சேர்த்துக்கொண்டிருந்த காலம் அது. அதன் காரணமாக கல்லூரி படித்துக்கொண்டிருக்கும்போதே எம்.ஐ.டி.யில் கணினித்துறையில் வேலை கிடைத்தது. அனுபவசாலிகளுடன் பல ஆண்டுகள் உயர் தொழில்நுட்பத்தில் பணியாற்றும் வாய்ப்பு அங்கே வாய்த்தது. அது இரண்டாவது விதை.

அப்போதைய கணினிகள் அளவில் மிகப் பெரியவை. ஒரு கணினி, ஒரு மொத்த அறையையே ஆக்ரமித்துக்கொண்டிருக்கும். மேசைக்கணினி (Desktop) உருவாக்கம் அப்போது அதன் ஆரம்பக்கட்டத்தில் இருந்தது. BASIC போன்ற ஆரம்ப நிரலாக்க மொழிகளே உருவாகாத காலம். மேசைக்கணினிக்கு என தனி இயங்குதளம் (Operating System) உருவாகாத காலம். நான் அதன் தேவை உணர்ந்து மேசைக்கணினிக்கு என தனி இயங்குதளம் ஒன்றை உருவாக்கத் தீர்மானித்தேன்.

எம்.ஐ.டி தவிர பெல், ஜெனரல் எலெக்ட்ரிக், ஹனிவெல் ஆகிய நிறுவனங்கள் இத்திட்டத்துக்கு உதவின. கல்லூரிகளில் படித்துக்கொண்டிருந்தவர்களும், நிறுவனங்களில் பணியாற்றிக்கொண்டிருந்தவர்களும் இதில் பங்கெடுத்துக்கொண்டனர். அப்போது நிரலாக்கம் எனக்கு ஒரு சிக்கலான பிரச்னையாக அல்லாமல், சுவாரசியமான புதிராகவே தோன்றியது. இறுதியில் 1,000 பேர் பயன்படுத்தவல்ல, 24 மணி நேரமும் செயல்படும் ஓர் இயங்குதளத்தை வெற்றிகரமாக உருவாக்கினோம். அது மூன்றாவது பலமான‌ விதை.

1967-ல் என் அப்பா வேலை பார்த்த பெல் பரிசோதனைக்கூடத்திலேயே எனக்கும் வேலை கிடைத்தது. அங்கே கணினியியல் ஆராய்ச்சி மையத்தில் பணி. பின் 1968-ல், ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பேட்ரிக் ஃபிஷர் என்ற புகழ்மிக்க கணினி விஞ்ஞானியின் கீழ் ஆய்வு செய்து பி.ஹெச்டி பெற்றேன். என் ஆய்வு subrecursive hierarchies of functions என்பது தொடர்பானது. இளநிலையில் நான் கற்றுக்கொண்ட விஷயம், இயற்பியல் என்பது எனக்கு ஒத்துவராது என்பதையே; அதேபோல் முதுநிலையில் நான் கற்றுக்கொண்ட விஷயம் அல்காரிதம் எனக்கு ஒத்துவராது என்பதையே. இவ்வாறுதான் நான் மெல்ல கணினியியலை வந்தடைந்தேன்.

பெல் பரிசோதனைக்கூடத்தில் சேர்ந்த புதிதில் மல்ட்டிக்ஸ் இயங்குதளத்தை (Multics OS) வடிவமைப்பதில் ஈடுபட்டிருந்தேன். பெல், எம்.ஐ.டி, ஜெனரல் எலெக்ட்ரிக் ஆகியவற்றின் கூட்டுமுயற்சியில் நடந்துவந்தது அத்திட்டம். அதில் இருந்தபோதுதான் BCPL, ALTRAN ஆகிய நிரலாக்க மொழிகளின் கம்பைலர்களை எழுதினேன்.

பெல் பரிசோதனைக்கூடத்தில் கென் தாம்ப்ஸனின் அறிமுகம் கிடைத்தது. அவர் எனக்கு ஓராண்டுமுன்பு அதாவது 1966ல்-தான் பெல் பரிசோதனைக்கூடத்தில் சேர்ந்திருந்தார். என் வாழ்வில் என்னை அதிகம் பாதித்த ஒருவர் இருப்பாரெனில் அது கென்னாகவே இருக்க முடியும். அவருடன் பணியாற்றிய அந்த ஆண்டுகள் என் ஒட்டுமொத்த வாழ்வின் மிக முக்கியமான காலகட்டம் எனக் கருதுகிறேன்.

சிறிய கணினிகளுக்கென உருவாக்கப்பட்ட மல்டிக்ஸ் இயங்குதளம் நிறைய புதிய விஷயங்களைக் கொண்டிருந்தாலும் கூடவே நிறைய பிரச்னைகளையும் கொண்டிருந்தது. கென்னும் நானும் அதனைச் சரிபடுத்தும் பணியில் ஈடுபடுவது என முடிவெடுத்தோம். கோப்புகளைச் சுலபமாக உருவாக்க, திருத்த, சேமிக்க, அச்சிட, அழிக்கவல்ல ஓர் இயக்குதளம்; ஒரு கணினியிலிருந்து ம‌ற்றொன்றுக்கு சிக்கலின்றித் தொடர்புகொள்ள உதவும் ஓர் இயக்குதளம்; சாதாரணர்களும் பயன்படுத்தத் தோதான, சுலபமான ஆணைகளைக் கொண்ட ஓர் இயக்குதளம்; வெளி மென்பொருட்களைப் பிரச்னை இன்றி இயக்க அனுமதிக்கும் ஓர் இயங்குதளம்; சிறிய கணினிகளுக்குத் தகுந்தமாதிரியான சல்லிசான விலையிலான ஓர் இயங்குதளம். இதுதான் எங்கள் கனவு. மாதக்கணக்கில் கடுமையாக இதற்கு உழைக்க நேர்ந்தது. யூனிக்ஸ் (Unix) இயங்குதளம் உருவானது.

1971-ல் யூனிக்ஸ் உதவிக் கையேடு (UNIX Programmer’s Manual) வெளியிடப்பட்டது.

ஐ.பி.எம் நடத்திய இயங்குதள ஆராய்ச்சி மாநாட்டில்தான் யூனிக்ஸ் முதன்முதலில் உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. யூனிக்ஸ் இயங்குதளம் ஓர் உடனடி வெற்றி என்பேன். நிறைய சிறிய கணினிப் பயனர்கள் யூனிக்ஸ் இயங்கு தளத்துக்கு மாறினார்கள். கல்விக்கூடங்கள், அரசாங்க அலுவலகங்கள், வணிக நிறுவங்கள் என் எல்லா இடங்களிலும் யூனிக்ஸைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். யூனிக்ஸ் உலகெங்கிலும் ஒரு மோசமான‌ தொற்றுநோய்போலப் பரவத்தொடங்கியது.

“UNIX is very simple, it just needs a genius to understand its simplicity” என்று நினைக்கிறேன்.

பின் 1970-களின் தொடக்கத்தில் C நிரலாக்க மொழியின் உருவாக்கத்தில் நான் தனியே ஈடுபட்டேன். BCPL மொழியின் நீட்சியாக கென் தாம்ப்ஸன் உருவாக்கியதுதான் B மொழி. அதை நீட்டித்து நான் C மொழியை உருவாக்கத் தொடங்கினேன்.

யூனிக்ஸ் இயங்குதளத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே முதலில் C மொழியை உருவாக்கினேன். யூனிக்ஸின் ஆரம்ப வடிவம் அசெம்ப்ளி மொழியில் (Assembly Language) எழுதப்பட்டது. அசெம்ப்ளி மொழி சிக்கலான‌து; நிரல் பெரிதாக வள‌ரும்போது நிர்வகிக்கச் சுமையானது; எல்லோராலும் சுலபாகப் புரிந்துகொள்ளக் கூடியதும் அல்ல. அதனால் யூனிக்ஸை மாற்றி ழுத‌ முயற்சித்தபோது புதிய கணினி வன்பொருட்களுடன் ஒத்துழைப்பதில் அசெம்ப்ளி மொழிக்குச் சில போதாமைகள் இருப்பதை உணர்ந்தோம். அதன் காரண‌மாகவே C உருவானது.

1973-ல் C மொழியின் முதல் வடிவம் வெளியிடப்பட்ட‌து. தொடர்ந்து நானும் தாம்ப்ஸனும் யூனிக்ஸ் இயங்குதளத்தை C மொழியில் மாற்றி எழுதுவதில் ஈடுபட்டோம். 1973-லேயே C மொழியில் எழுதப்பட்ட யூனிக்ஸ் வெளியானது.

1978-ல் ப்ரையன் கெர்னிகன் என்பவருடன் இணைந்து C மொழியைப் பயன்படுத்துவது குறித்து ‘The C Programming Language’ என்ற புத்தகத்தை எழுதினேன்.

பின்னர் யூனிக்ஸ் என்ற நோக்கத்தைத் தாண்டி C மொழியைப் பல்வேறு அமைப்பு நிரலாக்கங்களுக்கு (System Programming), பயன்பாட்டு நிரலாக்கங்களுக்கு (Application Programming) பயன்படுத்தத் தொடங்கினார்கள். அதன் விஸ்தரிப்பின் பிரம்மாண்டம் அதன் பிரம்மாவான எனக்கே வியப்பளிக்கக்கூடியதாகவே இருந்துவருகிறது.

C மொழிக்கு ஒத்துவராத கணினி ஆர்க்கிடெக்ச்சர்கள் அதன்பிறகு அதிகம் எழுதப்படவில்லை. கணினி நிரல் எழுதுகிற ஒவ்வொருவருமே C மொழியைப் பயன்படுத்த விரும்பினார்கள். “C is quirky, flawed, and an enormous success” – அதுவே அதன் வெற்றி. பிற்பாடு 1983-ல் யார்ன் ஸ்த்ரோஸ்த்ரூப் C++ மொழியை உருவாக்க C மொழியே அடிப்படையாக அமைந்தது. Java, Javascript, C#, Objective C போன்ற பிற மொழிகளும் C மொழியின் மறைமுக பாதிப்பைக் கொண்டிருக்கின்றன‌.

1984-க்குப் பின் GNU, BSD, MINIX இயங்குதளங்கள் யூனிக்ஸை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டன‌. இவற்றின் அடுத்தகட்டமாக லினக்ஸ் இயங்குதளம் இலவச, திறமூல மென்பொருளாக (Free and Open Source Software) 1991-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அது இன்று இயங்குதளச் சந்தையில் பிரம்மாண்டமான, தவிர்க்க இயலாத‌ ஓர் அங்கமாக வளர்ந்து நிற்பது திருப்தியை அளிக்கிறது.

பின்னர் தொடர்ந்து பெல் பரிசோதனைக்கூடத்திலேயே பல திட்டங்களில் பங்கெடுத்தேன். 1995-ல் Plan 9 என்ற இயங்குதளத்தையும் 1996-ல் Inferno என்ற இயங்குதளத்தையும் எனது தலைமையிலான குழு உருவாக்கி வெளியிட்டது.

எனது பணிகளுக்காக‌ நான் பெற்ற விருதுகள்: ACM award for outstanding paper in systems and languages (1974), IEEE Emmanuel Piore Award (1982), Bell Laboratories Fellow (1983), ACM Turing Award (1983), ACM Software Systems Award (1983), United States National Academy of Engineering Membership (1988), C&C Foundation Award of NEC (1989), IEEE Richard W. Hamming Medal (1990), National Medal of Technology (1998), Japan Prize for Information and Communications (2011).

இதில் பல விருதுகள் கென் தாம்ப்ஸனுடன் கூட்டாகப் பெற்றவை. இவற்றில் முக்கியமானது National Medal of Technology – தொழில்நுட்பத்துறையில் சாதனை நிகழ்த்திய அமெரிக்கர்களுக்கு அமெரிக்க அரசு வழங்கும் உயரிய விருது. இவிவிருதினை 1999-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் பில் க்ளிண்டனிடமிருந்து நானும் கென்னும் பெற்றுக்கொண்ட‌து மிகச் சந்தோஷமான தருணம்.

Bell Telephone Laboratories, Bell Laboratories, AT&T Bell Laboratories, Lucent Bell Labs Innovations, Alcatel-Lucent Bell Labs என பெல் ப‌ரிசோதனைக்கூடத்தின் பல்வேறு பெயர் மற்றும் நிர்வாக மாற்றங்களுக்கிடையே கிட்ட்த்தட்ட நாற்ப‌தாண்டுகள் அதனோடு இணைந்து பணிபுரிந்திருக்கிறேன். 2007-ல் பணி ஓய்வு பெறும்போது பெல் கணிமை மற்றும் மென்பொருள் துறையின் தலைவராக இருந்தேன். இப்போது பார்க்கையில் கணிமைக்கான என் ஆகச்சிறந்த பங்களிப்பு என யூனிக்ஸ் உருவாக்கத்தில் பங்கெடுத்ததையும் C மொழியை வார்த்தெடுத்ததையுமே சொல்வேன்.

தற்போது இந்த 2011-ல் 70 வயதாகிறது. நியூ ஜெர்சியின் பெர்க்லி ஹைட்ஸ் பகுதியில் இருக்கும் என் பெரிய வீட்டில் முழுக்கவே தனிமையில் அடைந்து கிடக்கிறேன். ப்ரோஸ்டேட் புற்று நோய்க்கான சிகிச்சை நடக்கிறது. உடன் இதயம் சம்மந்தப்பட்ட நோய்களும். ஆனால் நான் இப்பூமிக்கு வந்த கடமையைச் சரியாக‌ முடித்துவிட்டேன். தொழில்நுட்பத்தில் மனித குலத்தின் அடுத்தகட்ட நகர்வுக்கு முக்கியமானதொரு பங்களிப்பைச் செய்திருப்பதாகவே தோன்றுகிறது. அது ஒருவித திருப்தியையும் மனநிறைவையும் அளிக்கிறது.”   

- சி.சரவணகார்த்திகேயன்