36-வது சென்னை புத்தகக் கண்காட்சி

36வது சென்னை புத்தகக் கண்காட்சி நாளை தொடங்குகிறது.

தேதி : ஜனவரி 11 முதல் ஜனவரி 23 வரை / முகவரி :  நந்தனம் ஒய்.எம்.சி.ஏ உடற்பயிற்சிக் கல்லூரித் திடல்.

36th-Chennai-Book-Fair-2013காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த புத்தகக் கண்காட்சி ஆறு ஆண்டுகளுக்கு முன்பு புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியப் பள்ளி வளாகத்துக்கு மாற்றப்பபட்டது. இப்போது அங்கிருந்து, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.  முந்தைய இரு இடங்களோடு ஒப்பிடுகையில், ஒய்.எம்.சி.ஏ பெரியது என்பது முதல் ப்ளஸ்.

இரண்டாவது ப்ளஸ், இநத இடமாற்றம் காரணமாக இந்துத்துவாவாதிகள் கடும் வருத்தத்தில் இருப்பதாக வந்துள்ள செய்திகள். காயிதே மில்லத், புனித ஜார்ஜ், ஒய்.எம்.சி.ஏ என்று இஸ்லாமிய, கிறிஸ்தவ சிறுபான்மையினத்தவரைத் திருப்திபடுத்தும் நோக்கில் இந்த இடத்தேர்வுகள் நடைபெறுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். போலி மதச்சார்பின்மை பேசும் காங்கிரஸுக்கு இதில் நிச்சயம் பங்கு இருக்கும் என்றும், எதிர்வரும் தேர்தலை மனத்தில் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும் நம்புவதற்குப் போதுமான ஆதாரங்கள் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

புத்தக வாசனை அலர்ஜி கொண்டவர்கள் சைதாப்பேட்டையில் இருந்து மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். மற்றவர்களைப் புத்தகக் கண்காட்சி அன்புடன் வரவேற்கிறது.

0

சாத்தான்

டெல்லி சம்பவம்: The End

justice-crawls-1_350_122712090047டெல்லியில் ஓடும் பேருந்தில் ஒரு குழுவால் வன்புணர்ச்சி செய்யப்பட்டு, குடல் உருவப்பட்டு, ரத்த வெள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட பெண்ணுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறிய டெல்லி அரசாங்கம் தற்போது அவர் உடல் பத்திரமாக சிங்கப்பூரில் இருந்து வந்திறங்குவதற்காக டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தியுள்ளது. இன்னொரு போராட்ட அலை இதன் பொருட்டு எழுந்துவிடக்கூடாது என்பதற்கும், உறங்கிக்கொண்டிருக்கும் இந்தியாவின் ஆன்மாவை யாரும் தட்டியெழுப்பிவிடக்கூடாது என்பதற்கும் சேர்த்துதான் லத்தி, கண்ணீர்ப் புகை, துப்பாக்கி சகிதம் டெல்லியைக் காவல்துறை பாதுகாத்துக்கொண்டிருக்கிறது.

பெண்களை எப்படிப் பாதுகாப்பது, குற்றவாளிகளை எப்படித் தண்டிப்பது, இப்படிப்பட்ட கொடுமைகள் நிகழாமல் இருக்க நாம் என்ன செய்யவேண்டும் என்றெல்லாம் பக்கம் பக்கமாக பலரும் எழுதப்போகிறார்கள், மணிக்கணக்காக டிவியில் பேசப்போகிறார்கள், மெழுகுவர்த்தி ஏற்றி, பதாகைகள் பிடித்து குரல் கொடுக்கப்போகிறார்கள். பிடிபட்ட குற்றவாளிகளை Castration செய்யவேண்டுமா, தூக்கிலிடவேண்டுமா, ஆயுள் தண்டனை கொடுக்கவேண்டுமா என்று விவாதிக்கப்போகிறார்கள். வாகனங்களில் சிசிடிவி பொருத்துவது, பெண்களுக்கு பெப்பர் ஸ்ப்ரே கொடுப்பது, போலிஸ் பேட்ரோல் அதிகப்படுத்துவது உள்ளிட்ட பல யோசனைகள் உதிர்க்கப்படவிருக்கின்றன.

எல்லாம் ஓய்ந்த பிறகு,  டெல்லியில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிடும். இந்தியா தனது துக்கத்தை உதறித்தள்ளும். மெழுகுவர்த்திகள் அணைக்கப்படும். அறுந்த செருப்புகளையும் சிதறிய காகிதங்களையும் கிழிந்து தொங்கும் பதாகைகளையும் டெல்லி முனிசிபில் தொழிலாளர்கள் பெருக்கிச் சுத்தப்படுத்தி அகற்றுவார்கள். டிவி ரிப்போர்டர்கள் டெல்லியில் இருந்து விடைபெறுவார்கள்.

சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் குழுமிய பெண்களைப் பிரணாப் முகர்ஜியின் மகனும் காங்கிரஸ் அமைச்சருமான அபிஜித் முகர்ஜி இவ்வாறு மதிப்பிட்டுள்ளார்.

“These pretty women, dented and painted, who come for protests are not students. I have seen them speak on television, usually women of this age are not students”.

இந்த வாரத் தொடக்கத்தில், ஆந்திரா காங்கிரஸ் தலைவர் போட்சா சத்யநாநாரயணா, விளக்கு வைத்த பிறகு பெண்கள் வெளியில் செல்லக்கூடாது என்று எச்சரித்திருக்கிறார். டெல்லி விஷயத்தைப் பெரியப்படுத்தவேண்டாம் அது ஒரு ‘சிறிய சம்பவம்தான்’ என்றும் சொல்லியிருக்கிறார்.

உண்மைதான்.  நாம் இவ்வளவு கலவரப்படவேண்டிய அவசியமில்லை. இந்தியாவே துக்கப்படவேண்டிய அளவுக்கான துயரம் அல்ல இது. இறந்துபோன வளர்இளம்பெண்ணுக்கு ட்விட்டரில் அனுதாபம் தெரிவித்துவிட்டு, காங்கிரஸ் அரசைக் கண்டித்துவிட்டு (66A நினைவிருக்கட்டும்!) ஆகவேண்டிய காரியங்களைப் பார்க்கவேண்டியதுதான்.

Traffic Beat update. மத்திய டெல்லியில் குறிப்பாக விஜய் சவுக், ராஜ்பத், இந்தியா கேட், அசோகா ரோட், ரஃபி மார்க் ஆகிய பகுதிகளில் தற்சமயம் டிராஃபிக் அதிகமாக உள்ளதால் பயணிகள் மாற்று வழியில் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.

That’s all for now and wish you all a  Happy New Year!

0

சாத்தான்

டெல்லி சம்பவம் : சாத்தான் யார்?

jnu_1302989fதமிழ்பேப்பரில் எழுதுவது மட்டுமல்ல, தமிழில் எழுதுவதுமேகூட ஆயாசம் அளிப்பதாக இருக்கிறது. ஒரு எழுத்தாளருக்கு நேரக்கூடிய மிகப் பெரிய துர்பாக்கிய நிலை என்ன தெரியுமா? அவர் எழுத்து புரியாமல் போதல். அல்லது, தவறாக அர்த்தப்படுத்திக்கொள்ளப்படுதல்.

இருந்து இருந்து ஒரு random column ஆரம்பிக்கப்போய், முதல் போஸ்டிலேயே இந்த அவல நிலை எனக்கு ஏற்படவேண்டுமா? டெல்லி சம்பவம் குறித்து நான் என்ன எழுதினேன்?

//நேற்று டெல்லியில் 23 வயது பெண்ணை  ஓடும் பேருந்தில் வைத்து நான்கு பேர் வன்புணர்ச்சி செய்திருக்கிறார்கள். இரவு 9.30 மணிக்கு நடந்த சம்பவம் இது. (இருட்டிய பிறகு ஏன் தனியாகப் போனாள்?) அவளுடன் வந்த ஆண் நண்பர் பேருந்தில் தாக்கப்பட்டிருக்கிறார்.  (அந்த ஆண் நண்பன் யார்?). பிறகு அந்தப் பெண்ணை டிரைவரின் கேபினுக்கு இழுத்துச் சென்று பலாத்காரம் செய்திருக்கிறார்கள். (அவள் எப்படிப்பட்ட ஆடைகள் அணிந்திருந்தாள்?). சம்பவம் நிகழ்ந்தபோது அந்தப் பேருந்தில் இருந்தவர்கள் இந்த நான்கு பேர் மட்டுமே. உடந்தையாக இருந்த ராம் சிங் என்னும் டிரைவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண்ணும் நண்பரும் மருத்துவமனையில் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.  சிசிடிவி வைத்தால் சரியாகிவிடும் என்கிறார் ஒரு அமைச்சர். There is an opportunity in every problem என்பதை இவர் தவறாகப் புரிந்துவைத்திருக்கிறார்.//

சாத்தானாகிய என்னைப் போய்  ‘குரூர மனம் கொண்டவர்’  என்று பேப்பர்பாயும் ஆணாதிக்க சிந்தனைவாதி என்று சரவணனும் என் எழுத்தை poorly written என்று ravi-யும் interesting column except the Delhi incidents என்று saravanan என்பவரும் சொல்லியிருக்கிறார்கள். நல்லவேளையாக, Venkat என்பவர் என் tone என்ன என்பதைக் கண்டறிந்துவிட்டார். இந்த உலகம் இப்படிப்பட்டவர்களால்தான் முன்னுக்கு நகர்ந்துகொண்டிருக்கிறது.

0

இன்றைய  தினமணி தலையங்கத்தைப் பாருங்கள்.

“பெண்கள் மீதான பாலியல் வன்முறை அண்மைக்காலமாக அதிகரித்துவிட்டது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.” என்று தொடங்குகிறார்கள். “இத்தகைய பாலியல் கொடுமைகளில் மிகச் சிலவே வெளிச்சத்துக்கு வருகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை.” என்றும் பணிவுடன் ஒப்புக்கொள்கிறார்கள். “இந்தச் சம்பவம் தில்லியில் நடக்காமல், பிகாரின் ஏதாவது ஒரு பழங்குடிப் பெண்ணுக்கு நடந்திருக்குமேயானால், இது நாடு முழுவதும் இத்தகைய எதிர்வினையைச் சந்தித்திருக்குமா? சந்தேகம்தான்” என்றும் தார்மிகக் கேள்வி எழுப்புகிறார்கள்.

ஆனால், இரண்டு பத்தி போன பிறகுதான் தினமணி ஜெகஜ்ஜோதியாக ஜொலிக்கத் தொடங்குகிறது.

“பாதிக்கப்பட்ட துணை மருத்துவ மாணவி ஒரு வளர்இளம் பெண். ஆனால், தனது அறிவீனத்தால் இத்தகைய நேர்வில் சிக்கினார்.” அடப்பாவி, இந்த வளர்இளம் பெண் செய்த பாபச்செயல் என்ன? ” தனது அறியாமையால் தனக்குத் துன்பத்தைத் தேடிக்கொண்டார்.”

என்ன அறியாமை? போன பத்தியில் அடைப்புக் குறிக்குள் உள்ள கேள்விகளை இங்கே ஒருமுறை அளிக்கிறேன்.

  • இருட்டிய பிறகு ஏன் தனியாகப் போனாள்?
  • அந்த ஆண் நண்பன் யார்?
  • அவள் எப்படிப்பட்ட ஆடைகள் அணிந்திருந்தாள்?

இந்தக் கேள்விகளை அடைப்புக்குள் இட்ட நான் குரூர மனம் கொண்டவன் என்றால், வெளிப்படையாக அடைப்புக்கு வெளியே இவற்றை முன்வைக்கும் தினமணி எப்படிப்பட்டது? அதன் தலையங்கம் எப்படிப்பட்டது? அந்தப் பத்திரிகையின் ‘பத்திரிகா தர்மம்’ எப்படிப்பட்டது?

தினமணி தொடர்கிறது.

“துணை மருத்துவப் படிப்பு தொடர்பான பயிற்சிக்காக தில்லி வந்துள்ள, டேராடூன் கல்லூரியின் மாணவி, கணினி நிறுவனத்தில் பணிபுரியும் தனது ஆண் நண்பரான பொறியியல் பட்டதாரியுடன் ஒரு ஞாயிற்றுக்கிழமையை இனிமையாகக் கழிப்பது அவரது விருப்பம். ஆண் நண்பர்களுடன் ஷாப்பிங் மால் செல்வதும், இரவு விருந்துக்குச் செல்வதும் அவரது உரிமை. ஆனால், இரவு 9.30 மணிக்கு, ஒரு தனியார் சொகுசுப் பேருந்தில், அதுவும் பெண்களே இல்லாமல் முரட்டு வாலிபர்கள் மட்டுமே இருந்த தனியார் பேருந்தில் பயணம் செய்யும் அளவுக்கு அறியாமையில் இருந்திருக்கிறார். அந்த இரவு வேளையில் அதைப்போன்ற ஆபத்தை அழைக்கும் செயல் வேறேதுமில்லை என்பதை அந்த மாணவியோ, அல்லது அவரது ஆண்-நண்பரோ ஏன் உணர்ந்திருக்கவில்லை?”

தினமணி சில சலுகைகளை வளர்இளம்பெண்களுக்கு அளிக்கிறது. அவையாவன:

  • அவருக்கு ஆண் நண்பர் இருக்கலாம். ஒரு ஞாயிற்றுக்கிழமையை இனிமையாகக் கழிக்கலாம். ஷாப்பிங் மால் செல்லலாம். இரவு விருந்துக்கும்கூடச் செல்லலாம்.

செய்யக்கூடாதது என்ன?

  • பெண்களே இல்லாத பேருந்தில் ஏறக்கூடாது.
  • முரட்டு வாலிபர்கள் மட்டுமே உள்ள பேருந்தில் ஏறக்கூடாது.
  • இரவு வேளையில் ஆபத்தைத் துணைக்கு அழைக்கும் எந்தச் செயலையும் செய்யக்கூடாது.

தினமணியின் இந்த மணிமணியான விதிகளைமீறினால் என்ன ஆகும்?

“காதலுக்குத் தனிமை எத்தனை இனிமை சேர்க்குமோ அதே அளவுக்குத் துன்பத்தையும் கொண்டுவந்து சேர்க்கும்”

எனில், தினமணி அந்த வளர்இளம்பெண்ணுக்கு நேர்ந்ததை நியாயப்படுத்துகிறாரோ என்று யாரும் தப்பாக நினைக்கவேண்டாம்.

“இதை இந்த சந்தர்பத்தில் “அசட்டு தைரியம்’ என்று நாம் குறிப்பிட்டால், அதை நாம் சம்பவத்தை நியாயப்படுத்துவதாகக் கருதலாகாது.”

அதே சமயம், முரட்டு வாலிபர்களுக்கு தேவையற்ற வாய்ப்புகளை அளிக்கும் அபகீர்த்தியான செயல்களை வளர்இளம்பெண்கள் தவிர்க்கவேண்டும் என்கிறது தினமணி.

“ஆண்-நண்பர் தன்னுடன் இருக்கும் தைரியத்தில், பயணிகள் குறைவாக இருக்கும் ரயில்பெட்டியைத் தேடி ஏறுவதையும், பேருந்தில் பின்இருக்கையைத் தேடிப்பிடித்து சிரித்துக் கொஞ்சிப்பேசுவதையும் பெருநகரங்களில் காண முடிகிறது. இது அவர்களது தனிப்பட்ட விருப்பம். ஆனால், அச்செயல் சகபயணிகளின் கவனத்தை மட்டுமின்றி சமூகவிரோதிகளின் கவனத்தையும் ஈர்க்கின்றது. தேவையற்ற ஆபத்துக்கு ரகசிய அழைப்பாக அமைந்துவிடுகிறது. ஆண்கள் கண்மூடிகளாக இருந்தாலும் பெண்கள் விழிப்பாக இருந்தால் ஆபத்துகள் பலவற்றிலிருந்து பாதுகாப்பாக வெளியேறிவிட முடியும்.”

அடுத்து வரும் பத்திகள் பெண்ணியவாதிகள் படித்து கட்டுடைத்து புரிந்துகொள்ளவேண்டியவை.

“உடலை அதிகம் வெளிப்படுத்தும் ஆடைகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வதும், பெண்கள் மதுக்கூடங்களைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வதும், நேரத்தோடு வீடு திரும்ப வேண்டும் என்பதும் ஆணாதிக்க உலகத்தால் பெண்களுக்கு விதிக்கப்படும் தடைகள், கட்டுப்பாடுகள் என்று பெண்ணியவாதிகள் விமர்சனம் செய்கிறார்கள். வீட்டுக்குள்ளேயே பெண்ணுக்கு பாலியல் கொடுமை நடந்துகொண்டிருக்கும்போது வெளியுலகில் எத்தனை எச்சரிக்கையுடன் இருந்தாக வேண்டும்? என்ற அறிவுறுத்தல் என்பதைப் புரிந்துகொள்வதில்லை.

“எங்கள் உடல் எங்கள் சுதந்திரம்’ என்று பதாகையுடன் ஊர்வலம் வருகிறார்கள். “நாங்கள் ஒழுங்காக ஆடை உடுத்தினால் பாலியல் வன்முறை நின்றுவிடுமா?’ என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.

“புகைப் பிடிக்காதீர், புற்றுநோய்க்கு ஆளாகாதீர்’ என்பது நோய்த்தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் மட்டுமே. சிகரெட் பிடிக்காதவருக்கும் நுரையீரல் புற்றுநோய் வருகிறது என்பதால் புகைப்பிடிப்பது ஆரோக்கியமானதாக ஆகிவிடுமா?”

இவை கடினமாக இருந்தால், முத்தாய்ப்பான இந்த இறுதிவரிகளைப் படியுங்கள்.

“சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு வழங்குவது சாத்தியமில்லாதது. ஆனால், பெண்கள் சில சுயக்கட்டுப்பாடுகளால் பெறும் விழிப்பு நிலையும், உள்ளுணர்வும் அவர்களைப் பல்வேறு பாலியல் வன்முறைச் சூழலில் சிக்காதபடி பாதுகாக்கும். தீதும் நன்றும் பிறர்தர வாரா.”

இதுவும் புரியவில்லை என்றால், இது புரிகிறதா பாருங்கள். எல்லாச் சாத்தான்களும் சாத்தான் என்று பெயர் வைத்துக்கொண்டு எழுதுவதில்லை.

0

சாத்தான்

வணக்கம்

satan3என்னை ஆதாமின் முதல் கன்ஸல்டண்ட் என்று அழைக்கிறார் மார்க் ட்வைன். என்னைப் பற்றிய மிகவும் யதார்த்தமான அவதானிப்பு என்று இதைச் சொல்வேன். ட்வைன் தொடர்கிறார். ‘நான் சாத்தானோடு எப்பொழுதுமே நட்புணர்வோடு இருக்கிறேன். ஆம், இது பரம்பரைத் தொடர்ச்சியாகத்தான் இருக்கவேண்டும். என் ரத்தத்தில் இந்த உணர்வு கலந்திருக்கவேண்டும்.’

Autobiography of Mark Twain நூலில் இந்த மேற்கோள் இடம்பெறுகிறது. (The devil is in the details!) மார்க் ட்வைன் ஓர் யோக்கியமான இலக்கியவாதி என்பதால் என்னை ஏற்றுக்கொண்டிருக்கிறார். இலக்கியமும் யோக்கியமும் அரிதாகவே ஒன்றுசேர்கின்றன என்பதால் ட்வைனைப் போல் என்னை வெளிப்படையாக அங்கீகரிப்பவர்கள் அதிகம் இல்லை.

ஒன்று நிச்சயம். உலகம் கடவுளைப் பிரார்த்தித்துக்கொண்டே என்னைத் தீவிரமாகப் பின்பற்றிக்கொண்டிருக்கிறது.

0

மெல்லிய குளிரோடு மெல்லிய ஜலதோஷம் தொடங்கிவிடுகிறது. கூடவே டிசம்பர் கச்சேரிகளும்.  நேற்று நான் என்னென்ன தவறவிட்டிருக்கிறேன் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக நேற்றைய தி இந்து பார்த்தேன். ‘இளநீர் இட்லி. மோர்கொழம்பு இட்லி. சாக்லேட் தோசை. கார்ன் தோசை. பன்னீர் புதினா ரோல். காஷி ஹல்வா. பர்வான் பன்னீர்…’  வழங்கியவர்கள் மவுண்ட்பேட்டன் மணி கேட்டரிங் சர்வீஸ். எத்தனை பெரிய வரலாற்று இழப்பு!

0

கடவுளாக இருப்பதைக் காட்டிலும் சாத்தானாக இருப்பதுதான் சுவாரஸ்யம். எப்படி இருக்கவேண்டும் என்பது கடவுளின் ஏரியா. என்னவாக இருக்கிறோம் என்பது என் ஏரியா.

0

நேற்று டெல்லியில் 23 வயது பெண்ணை  ஓடும் பேருந்தில் வைத்து நான்கு பேர் வன்புணர்ச்சி செய்திருக்கிறார்கள். இரவு 9.30 மணிக்கு நடந்த சம்பவம் இது. (இருட்டிய பிறகு ஏன் தனியாகப் போனாள்?) அவளுடன் வந்த ஆண் நண்பர் பேருந்தில் தாக்கப்பட்டிருக்கிறார்.  (அந்த ஆண் நண்பன் யார்?). பிறகு அந்தப் பெண்ணை டிரைவரின் கேபினுக்கு இழுத்துச் சென்று பலாத்காரம் செய்திருக்கிறார்கள். (அவள் எப்படிப்பட்ட ஆடைகள் அணிந்திருந்தாள்?). சம்பவம் நிகழ்ந்தபோது அந்தப் பேருந்தில் இருந்தவர்கள் இந்த நான்கு பேர் மட்டுமே. உடந்தையாக இருந்த ராம் சிங் என்னும் டிரைவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண்ணும் நண்பரும் மருத்துவமனையில் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.  சிசிடிவி வைத்தால் சரியாகிவிடும் என்கிறார் ஒரு அமைச்சர். There is an opportunity in every problem என்பதை இவர் தவறாகப் புரிந்துவைத்திருக்கிறார்.

0

VIRUS ALERT! என்று இதற்குப் பெயரிட்டதற்குக் காரணம் இதய பலவீனமானவர்களும் ரத்த அழுத்தம் கொண்டவர்களும்  கண்டவுடன் விலகவேண்டும் என்பதுதான். மீறி பிரவேசிப்பவர்களுக்கு சாத்தானின் வணக்கங்கள்.

0