நேரு நிராகரிக்கப்படுவது ஏன்?

jawaharlal_nehruகாந்தியின் புகழ் அவர் மறைவுக்குப் பிறகு முன்பைவிட வேகமாகப் பரவத் தொடங்கியது என்றால் நேருவின் புகழ் அவர் வாழும் காலத்திலேயே சுருங்க ஆரம்பித்துவிட்டது. நடைமுறைத் தேவையைப் பொருத்தே ஒருவருடைய வாழ்வும் சிந்தனைகளும் நினைவுகூரப்படுகின்றன. அந்த வகையில், காந்தி தேவைப்பட்ட அளவுக்கு இந்தியாவுக்கு நேரு தேவைப்படவில்லை என்பதுதான் நடைமுறை உண்மை. அன்று மட்டுமல்ல இன்றும்கூட இதுதான் நிலைமை.

இத்தனைக்கும் காந்தியின் வாரிசாக காந்தியாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டவர் நேரு. வெகு சில விஷயங்கள் தவிர பெரும்பாலும் காந்தியோடு நேரு முரண்பட்டதில்லை. ஆனாலும் அந்தக் காரணங்களுக்காகவே நேரு புறக்கணிக்கப்படுகிறார். சித்தாந்த அளவில், சோஷலிசம்மீது நேரு கொண்டிருந்த பிரமிப்பு அவரைக் காந்தியிடம் இருந்தும் காங்கிரஸிடம் இருந்து அந்நியப்படுத்தியது. இரண்டாவதாக, 1962 சீன யுத்தத்தில் இந்தியா சந்தித்த தோல்வியை நேருவின் தோல்வியாகவே இந்தியா (அன்றும் இன்றும்) கண்டது. ஆக, நேருவின் சித்தாந்தம், நடைமுறை இரண்டும் காங்கிரஸால் அப்போதைக்கு அப்போதே நிராகரிக்கப்பட்டுவிட்டது.

1926-27 ஆண்டுகளில் ஐரோப்பாவில் பயணம் மேற்கொண்டபோது சோஷலிஸ்டுகளின் அறிமுகம் நேருவுக்கு ஏற்பட்டது என்று சொல்கிறார்கள். குறிப்பாக, பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் (Congress of Oppressed Nationalities) உலகம் முழுவதிலும் இருந்து சோஷலிச தாக்கம் கொண்டவர்கள் ஒன்றுகூடினார்கள். இந்தச் சந்திப்புகளின் முடிவில் நேரு தெரிந்துகொண்ட உண்மை, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மூலம் மட்டுமே தனிமனித முன்னேற்றம் சாத்தியமில்லை என்பதுதான். தற்போதைய சமூகத்தின் கட்டமைப்பை மாற்றாமல் லட்சக்கணக்கான மக்களின் ஏழைமையையும் பஞ்சத்தையும் ஒழிக்கமுடியாது என்று நேரு கற்றுக்கொண்டார். அந்த வகையில், சோஷலிசத்தை நோக்கி நேரு நம்பிக்கையுடன் நகர்ந்ததற்கு உந்து சக்தியாக இருந்தது அவரது தனி மனித முன்னேற்றம் என்னும் கனவுதான்.

நேரு சுபாஷ் சந்திர போஸுக்கு எழுதிய கடிதத்தில் இது பற்றி குறிப்பிடுகிறார். ‘உண்மையிலேயே அது (சோஷலிசம்) என்னைக் கவர்ந்துவிட்டது. ஏனென்றால் கணக்கற்ற மக்களை பொருளாதார மற்றும் கலாசாரத் தளைகளில் இருந்து (சோஷலிசம்) விடுவிக்கிறது.’ சுதந்தரத்துக்கு முன்பும் சரி, பின்பும் சரி சோஷலிசம் என்பதை நேரு இப்படித்தான் அர்த்தப்படுத்திக்கொண்டார். இந்தக் கனவோடு அரசியலை அணுகுவதே சரியான தேர்வாக இருக்கும் என்று நேரு நம்பினார்.

காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே நேருவுக்கு எதிர்ப்புகள் தோன்றிவிட்டன. ராஜேந்திர பிரசாத்திடம் இருந்து கடிதம் பறந்து வந்தது. ‘வல்லபபாய், ஜம்னாலால்ஜி, நான் மூவரும் உங்கள் கருத்தோட்டத்தில் இருந்து முற்றிலுமாக மாறுபடுகிறோம்’. அந்தக் கடிதம் ஒரு மிரட்டலையும் விடுத்தது. ‘நமது பணித்திட்டத்தில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தும்வரை, நாம் ஒன்றிணைந்து பணியாற்றுவது சாத்தியமில்லை.’ சோஷலிசத்தை நீங்கள் துறக்காவிட்டால் நிறைய ஆபத்துகளைச் சந்திக்கவேண்டிவரும் என்று எம்.ஏ. அன்சாரி உள்ளிட்ட நண்பர்கள் நேருவுக்கு அறிவுரை கூறவேண்டியிருந்தது.

நேரு பிரதமரானபோது அவரது அமைச்சரவையில் பழமைவாதிகளே அதிகம் இடம்பெற்றிருந்தனர். படேலின் கை மேலோங்கியிருந்தது. நேருவின் சோஷலிசக் கனவைப் புரிந்துகொள்ள யாருமில்லை. இருந்தும் நேரு மதச்சார்பின்மை, சோஷலிசம், பகுத்தறிவுவாதம் ஆகியவற்றை பிரசாரம் செய்ய ஆரம்பித்திருந்தார். நேருவின் இந்தப் பிரசாரம் பூர்ஷ்வா இளைஞர்களையே அதிகம் கவர்ந்தது. நேரு ஒரு நேர்மையான, முற்போக்கான தலைவர் என்னும் தோற்றத்தை அவர்களிடையே ஏற்படுத்தியது. நேரு எங்கு சென்றாலும் கூட்டம் அலைமோதியது. அவருடைய ‘தரிசனத்துக்காக’ பெரும் கூட்டம் காத்திருந்தது. ஆனால் அதற்கு மேல் அவருடைய கொள்கைகளை யாரும் பரிசீலிக்கத் தயாராகயில்லை.

ஆகஸ்ட் 1947க்கு முன்பும்கூட நேரு விரிவான சுற்றுப்பயணங்களை மேற்கொண்டிருக்கிறார். தனது சோஷலிசக் கனவுகளைப் பொதுக்கூட்டங்களில் பகிர்ந்துகொண்டிருக்கிறார். பிரதமரானபிறகும் அதனை அவர் தொடரவே செய்தார் என்றாலும் ஒரு தலைவராக அவருக்குக் கிடைத்த வரவேற்பும் அங்கீகாரமும் அவரது கொள்கைகளுக்குக் கிடைக்கவில்லை.

புதிதாகக் கிடைத்திருக்கும் சுதந்தரத்தைக் கொண்டு என்னென்ன சாதித்துக்கொள்ளலாம் என்றுதான் அரசியல்வாதிகள் கணக்கு போட்டுக்கொண்டிருந்தனர். சுதந்தரம் பல நல்ல விஷயங்களைக் கொண்டுவரப்போகிறது என்றுதான் மக்களும் காத்திருந்தனர். இவர்கள் அனைவரையும்விட அதிக ஆர்வத்துடன் சுதந்தரத்தை எதிர்நோக்கியிருந்தவர்கள் முதலாளிகள்தாம். எப்போது பிரிட்டன் வெளியேறும் எப்போது நாம் சந்தையைக் கைப்பற்றலாம் என்று அவர்கள் காத்திருந்தனர். அவர்களில் சிலர் ஆகஸ்ட் 1947க்கு முன்பே காங்கிரஸுடன் உறவு ஏற்படுத்தி வைத்திருந்தனர். நேரு விவரிக்கும் சோஷலிச சித்தாந்தங்களை உள்வாங்கிக்கொண்டு பரிசீலிக்கும் அளவுக்கு யாருக்கும் பொறுமையும் ஆர்வமும் இல்லை. தேசபக்தியும் தேசநலன் சிந்தனைகளும் தியாகங்களும் மறந்துபோயிருந்தன.

டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஜனவரி 15, 1958 பத்திரிகையில் A Deep Malice என்னும் தலைப்பில் நேரு எழுதிய கட்டுரை அவரது அப்போதைய மனநிலையை படம் பிடித்து காட்டுகிறது. ‘யதார்த்தத்தைப் புறக்கணிக்கும் அளவுக்கு நாம் துவண்டு போய்விட்டோமா? இதுவே போதும் என்று திருப்தி கண்டுவிட்டோமா? கடந்த காலங்களில் காங்கிரஸுக்குப் பலத்தைக் கொடுத்த வெற்றியின் இழைகள் சோர்ந்துவிட்டனவா?’

சுதந்தரத்துக்கு வெகு காலத்துக்கு முன்பே காங்கிரஸ் கொள்கையளவில் ஏற்றுக்கொண்ட பல விஷயங்களைக்கூட நடைமுறைப்படுத்த முடியவில்லை. குறிப்பாக, பாதுகாப்புத் துறை, பெரிய தொழிற்சாலைகள் ஆகியவற்றை அரசுடைமையாக்கவேண்டும் என்பதை காங்கிரஸ் முன்னர் ஏற்றிருந்தது. இப்போதோ சோஷலிசம் என்னும் பதமே எரிச்சலூட்டும்படியாக மாறிப்போனது.

காங்கிரஸ் சந்தர்ப்பவாதிகளின் அமைப்பாகச் சுருங்கிப்போனது. மாற்றுச் சிந்தனையாளர்களால் அங்கே தாக்குப்பிடிக்கமுடியவில்லை. சோஷலிச குழுவின் தலைவரான ஆச்சாரிய நரேந்திர தேவ் மார்ச் 1948ல் காங்கிரஸில் இருந்து வெளியேறினார். அதற்குக் காரணம் பிப்ரவரி மாதம் காங்கிரஸில் சர்தார் படேல் கொண்டு வந்த தீர்மானம். காங்கிரஸுக்குள் குழுவாதம் இருக்கக்கூடாது என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் பொருள் சோஷலிசம் பேசுபவர்களுக்கு இங்கே இடமில்லை என்பதுதான். இதைத் தொடர்ந்து, சொற்ப சோஷலிச ஆதரவாளர்களும் ஒவ்வொருவராக வெளியேற ஆரம்பித்தனர். வெளியேறியவர்களின் கூட்டத்தில் காந்திய ஆதரவாளர்களும்கூட இருந்தனர். புனரமைக்கப்பட்ட புதிய காங்கிரஸில் அதிகார நாட்டம் கொண்டவர்களும் கொள்கைகளைக் கைவிட்டவர்களும் சமரசவாதிகளும் லாபமீட்ட விரும்பியவர்களும் மட்டுமே இருந்தனர். நேருவின் சோஷலிசக் கனவு படிப்படியாக முடிவுக்கு வந்தது. 1962 சீனப் போர் நேருவின் சோஷலிசக் கனவின் சவப்பெட்டிமீது கடைசி ஆணியைப் பாய்ச்சியது.

நேருவின் சோஷலிசக் காதலை தீவித வலதுசாரிகள் மட்டுமல்ல தீவிர இடதுசாரிகளும் நிராகரித்தனர். சோஷலிசத்தை நேரு அளவுக்கு அதிகமாகக் கொண்டு செல்கிறார் என்பது முந்தைய குழுவின் குற்றச்சாட்டு என்றால், போதுமான அளவுக்கு சோஷலிசத்தைக் கொண்டுவரவில்லை என்பது இரண்டாவது சாராரின் குற்றச்சாட்டு. நேருவின் சோஷலிசம் சோஷலிசமே அல்ல, அது வெறும் socializing மட்டுமே என்னும் விமரிசனமும் முன்வைக்கப்படுகிறது. நேருவின் சோவியத் நாட்டமும் சீன நாட்டமும் விமரிசிக்கப்பட்டது. நேருவின் காஷ்மிர் கொள்கையும் மொழிக்கொள்கையும் விமரிசிக்கப்பட்டது.

a42c7bbe5ddc4733b97fd3e9a80d1890பிரிட்டன் வெளியேறியதைத் தொடர்ந்து இந்தியாவை வலதுசாரிகள் கடத்திக்கொண்டு போகாதபடி நேரு தடுத்தார் என்கிறார்கள் சிலர். சோஷலிச இந்தியாதான் நேருவின் விருப்பம் என்றால் அதற்கான அடித்தளத்தை அழுத்தமாக அவர் உருவாக்கவில்லை என்கிறார்கள் வேறு சிலர். 1991க்குப் பிறகு நேருவின் அடையாளம், ‘தேவைப்படாதவர்’ என்பதில் இருந்து ‘ஆபத்தானவர்’ என்னும் நிலைக்கு உயர்த்தப்பட்டது.

உலகமயமாக்கலையும் தாராளமயமாக்கலையும் தீவிரமாக எதிர்க்கும் தீவிர இடதுசாரிக் குழுவினருக்கு நேரு போன்ற ஒரு‘மென்மையான சோஷலிஸ்ட்’ தேவையில்லை. பகத்சிங் போன்ற தீவிரமானவர்களே தேவை. மொத்தத்தில் நேரு இன்று யாருக்கு தேவைப்படவில்லை.

மேலதிக விவரங்களுக்கு:

Retreat of Socialism in India, Two decades without Nehru 1964-1984, R.C. Dutt.

0

மருதன்

வரலாறு அவசியமா?

ஏன் ஒருவர் வரலாறு படிக்கவேண்டும்? அதனால் என்ன பயன்? இர்ஃபான் ஹபீப் அளிக்கும் பதில் இது. ‘பிறகு எதற்காக ஒருவருக்கு நினைவாற்றல் இருக்கிறது?’ வரலாறு என்பது மனிதகுல நினைவுகளின் தொகுப்பு. அனைவராலும் பயன்படுத்தப்படக்கூடியது, பயன்படுத்தப்படவேண்டியது. ‘மக்கள் கூட்டம், வர்க்கங்கள், சமுதாயங்கள், நாடுகள் அனைத்தும் வரலாற்றைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். நம் நினைவாற்றல் துல்லியமாக இருக்கும்போது, அதாவது வரலாறு துல்லியமாக இருக்கும்போது, அதன்மூலம் நமக்குக் கிடைக்கும் பலன்களும் துல்லியமாக இருக்கும். நம் கடந்த கால தவறுகள், வெற்றிகள், அவற்றுக்கான காரணங்கள் அனைத்தில் இருந்தும் நம்மால் பலன் பெறமுடியும்.’

வரலாற்றைக் கற்பதில் பல பிரச்னைகள் உள்ளன. மீண்டும் நினைவாற்றலை வரலாற்றோடு ஒப்பிட்டு அலசுகிறார் இர்ஃபான் ஹபீப். நினைவுகளைப் போலவே வரலாற்றிலும் பிசகுகளும் குழப்பங்களும் தவறுகளும் ஏற்படுகின்றன. ‘எப்படி ஒருவரால் தன்னைப் பற்றிய நினைவுகளில் துல்லியமாக இருக்கமுடியாதோ அதேபோல் மற்றவர்களைப் பற்றிய நினைவுகளிலும் துல்லியமாக இருக்கமுடியாது.’  இதைத் தவிர்க்க ஒரே வழி ‘உண்மையான நிகழ்வுகளோடு நம் நினைவுகள் இயன்றவரை ஒத்திருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.’ என்றால், நம் நினைவுகள் திரிந்துவிடாமல் இருக்கவேண்டும். வரலாற்றுக்கும் பொருந்தக்கூடிய உண்மை இது.

அதே சமயம், ‘தங்கள் வரலாறு என்று மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதுவும் முக்கியமானதுதான். அது தவறு என்றபோதும்’ என்கிறார் இர்ஃபான் ஹபீப். நம் கடந்த காலம் குறித்து நாம் கொண்டிருக்கும் தவறான நினைவுகள்கூட நம்மைப் பொருத்தவரை உண்மையானதுதான். தவறான நினைவுகள் சாத்தியம் என்னும்போது தவறான வரலாறும் சாத்தியம்தான். ‘ஆனால் இந்தத் தவறான வரலாறு பலன் தராது.’

பாபர் மசூதி இடிப்பு ஓர் உதாரணம். பாபர் மசூதி அமைந்திருந்த இடத்தில் ராமர் கோயில் இருந்தது என்பது வலதுசாரிகளின் வாதம். இது வரலாற்று உண்மைதானா என்பதை ஆராய்வது அவர்களுக்கு முக்கியமல்ல. அவர்களுக்கு முக்கியம், அவர்கள் கட்டமைத்திருக்கும் நினைவுகளே. இந்த நினைவுகளைக் கொண்டு உருவாக்கப்படும் வரலாற்றை அவர்களே ஒரு கட்டத்தில் நம்பத் தொடங்கிவிடுகிறார்கள். இந்த ‘வரலாற்றின்’ அடிப்படையில் அவர்கள் செயல்படும்போது பெரும் தவறுகள் நிகழ்ந்துவிடுகின்றன. பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குக் காரணம் Distortion of history.

நினைவுகள் பிசகுவதும் தவறான பிம்பங்கள் திடமான நினைவுகளாக மாற்றப்படுவதும் இயல்பானதுதான். ஆனால் இந்த நினைவுகளை வரலாற்று உண்மையாக வரித்துக்கொண்டு அதன் அடிப்படையில் மட்டும் ஒரு முடிவுக்கு வருவது அறிவியல்பூர்வமானதாக இருக்காது. மட்டுமின்றி அது அபாயகரமானதும்கூட. ‘பாஜக ஆட்சிக்காலத்தில் பண்டைய இந்தியா அறிவற்ற முறையில் அதீததமாகப் புகழப்பட்டதைக் கண்டு நாம் கலக்கம் கொண்டதற்குக் காரணம் இதுதான்’ என்கிறார் ஹபீப்.

பாசிஸ்டுகள் வழக்கமாகக் கையாளும் உத்தி இது. கடந்த காலத்தைப் பற்றிய பிழையான, போலியான ஒரு சித்திரத்தை அளித்து அதன் அடிப்படையில் தங்கள் அரசியல் நோக்கங்களை இவர்கள் நிறைவேற்றிக்கொள்கிறார்கள். ஹிட்லரைப் போல. ஆரிய வம்சம் குறித்த பெருமையையும் யூதர்கள்மீதான வெறுப்பையும் விதைக்கும் வகையில் நாஜி கட்சி தொடர்ச்சியாக செய்து வந்த பிரசாரமும் அதன் விளைவாக நிகழ்த்தப்பட்ட படுகொலைகளையும் மறக்கமுடியுமா? ஹிட்லர் கடைபிடித்த அதே வழியைத்தான் வலதுசாரிகள் இந்தியாவிலும் பயன்படுத்துகிறார்கள். பண்டைய இந்தியா குறித்தும் வேதகாலம் குறித்தும் இவர்கள் முன்வைக்கும் சித்திரம் வரலாற்று உண்மைக்கு முற்றிலும் எதிரானது. இந்த வெற்றுப் பெருமை கொடுக்கும் துணிச்சலில் அவர்கள்  சிந்திக்கும்போதும் செயல்படும்போதும் தவறுகள் நிகழ்ந்துவிடுகின்றன.

இத்தகைய நோக்கங்களையும் தவறுகளையும் கண்டறிந்து வெளிப்படுத்தும் கடமை வரலாற்றாசிரியர்களுக்கு இருக்கிறது. பாபர் மசூதி விவகாரமாக இருந்தாலும் சரி, சாதிய மோதலாக இருந்தாலும் சரி, இடஒதுக்கீடாக இருந்தாலும் சரி, தகுந்த வரலாற்றுப் பின்புலத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் பொருத்தி உண்மையைப் பகுத்தாய்ந்து வெளியிடுவதன் வாயிலாக தவறான கற்பிதங்களையும் பிழையான வாதங்களையும் ஆபத்தான விளைவுகளையும் வரலாற்றாசிரியர்களால் தடுக்கமுடியும்.

வரலாறு என்பது கடந்து முடிந்த காலம் அல்ல. அது தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருப்பது. கடந்த காலம் என்று ஒன்று இல்லவே இல்லை என்றுகூட சிலர் கருதுகிறார்கள். ‘கடந்த காலத்தில் இருந்து பெரும் படிப்பினைகளை நாம் பெறுகிறோம். சமூகச் செயல்பாட்டின் வாய்ப்புகளையும் எல்லைகளையும் பற்றி நடைமுறை அனுபவங்கள் நமக்குக் காட்டுவதன் அடிப்படையில் நாம் கடந்த காலத்துக்குத் திரும்புகின்றோம். புதிய உள்ளடக்கத்தைப் பெறுகிறோம்.’ என்கிறார் இர்ஃபான் ஹபீப்.

இந்தியாவின் பூர்வகுடிகள் ஆரியர்களே என்றும் ஹரப்பா கலாசாரத்தை உருவாக்கியவர்கள் அவர்கள்தாம் என்றும் இந்துத்துவ வலதுசாரிகள் வாதாடியபோது, ஆர்.எஸ். ஷர்மா, இர்ஃபான் ஹபீப் உள்ளிட்ட வரலாற்றாசிரியர்கள் வரலாற்றைத் துணைக்கு அழைத்து இந்த வாதங்களை எதிர்கொண்டார்கள். பூமிபுத்ரா கோட்பாட்டை முன்வைத்து மராட்டியர் அல்லாதோரை அச்சுறுத்திய மறைந்த பால் தாக்கரே, சாதிய உணர்வையும் வெறுப்பு அரசியலையும் விதைத்து அரசியல் லாபம் ஈட்டத் துடிக்கும் ராமதாஸ் உள்ளிட்டோரை எதிர்கொள்ள வரலாற்று உண்மைகளைத்தான் நாடிச் செல்லவேண்டியிருக்கிறது.

திரிக்கப்பட்ட போலியான வரலாறு முன்நிறுத்தப்படும்போதெல்லாம் சரியான வரலாற்று உண்மைகளை எடுத்து வைத்து வரலாற்றாசிரியர்கள் போராடுகிறார்கள். அந்த வகையில் உண்மையை நிலைநாட்டவும் பேரழிவைத் தடுக்கவும் வரலாறு அவசியமாகிறது. வரலாற்றை அதற்காகவேனும் நாம் வாசிக்கத்தான் வேண்டும்.

ஆதாரம்:

  • Excursus in History, Essays on Some Ideas of Irfan Habib, Edited by Prabhat Patnaik, A Social Scientist-Tulika Books Series

0

மருதன்