க்யூபா காட்டும் வழி

aaaaaஏழைகளின்  நிலையைப் போக்க எடுத்துக்கொண்ட பொருளாதார முயற்சிகளில் ஒரு நாடு எவ்வாறு ஒரு முற்போக்கான பாதையில் செல்லும் என்பதை க்யூபா நிரூபித்து வருகிறது. வறியவர்களுக்கான ஒரு பொருளாதார அறிக்கை எவ்வாறு நாட்டின் பொருளாதார அடித்தளத்தையே மாற்றும் என்பதை நான் இங்கு பதிவு செய்கிறேன்.

உலகில் நிலவிய பனிப்போர் முடிந்த நேரம், பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக கருதிய சோஷ‌லிச பொருளாதாரக் கொள்கையைக் காட்டிலும், முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையே வெற்றிக்கு உகந்தது என்ற கருத்தாக்கம் ஏற்பட்டது.

ஆனால் இந்த சுய தம்பட்ட முதலாளித்துவ மேலாண்மை உயர்வு மறைந்துவிட்டது.  அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சியில் சிக்கித் தவிக்கிறது.  ஐரோப்பிய நாடுகளோ தங்களது யூரோ கூட்டணி நாடுகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள பெரிதும் தவித்துவருகின்றன. அமெரிக்காவில் வால் ஸ்ட்ரீட் முற்றுகை போன்ற பெரும் எழுச்சிகள் அனுதினமும் குலுக்கிக் கொண்டிருப்பதும், ஐரோப்பா முழுவதும் எழுச்சிகள் நடைபெறுவதும்  முதலாளித்துவ பொருளாதாரத் திட்டம் குறித்த உண்மையை வெகுவாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இந்த வளர்ந்த நாடுகளில் பொருளாதாரத்தில் நிலவும் குழப்பம், ஒரு புதிய சோஷ‌லிச பொருளாதார முறையை நோக்கி உலகை நகர்த்தி கொண்டிருக்கிறது.

இந்த வெளித் தெரியாத மாற்றத்துக்கு தலைமை ஏற்றிருக்கும் க்யூபா, அமெரிக்காவின் அனைத்து வகை எதிர்ப்புகளையும் ஏற்று அதற்கு எதிர் தாக்குதல் தொடுத்து, தற்போது உலகின் பல முதலாளித்துவ நாடுகளைக் காட்டிலும் பல்வேறு வகையில் பொருளாதார முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.

அமெரிக்கா பல்வேறு வகையில் க்யூபாவுக்கு செல்லக்கூடிய பல நாடுகளை, கார்ப்பரேட் நிறுவனங்களுடனான வர்த்தகப் போக்குவரத்தை தடுத்து வருவதுடன், ஜப்பானிலிருந்து மருத்துவ உபகரணங்கள், இத்தாலியிலிருந்து ரசாயனப் பொருட்கள், பிரான்சிலிருந்து எக்ஸ்ரே கருவிகள் இறக்குமதி செய்யப்படுவது உட்பட அனைத்துக்கும் தடைகளை உண்டாக்கி வருகிறது.

ஆனால், அமெரிக்காவின் இந்த தடங்கலை எல்லாம் மீறி க்யூபா தனக்கென்று ஒரு வழிமுறையை உருவாக்கி, வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒரு கூட்டு முயற்சியை உண்டாக்கி தனது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முதலீடுகளை பெற்று வருகிறது.

ஜெர்மனி, பிரான்ஸ், பிரேசில், கனடா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட அனைத்து நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டுத்திட்ட முயற்சியின் பலனாக க்யூபாவின் திட்ட மதிப்பீடு 5 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது.  இது தற்போது வளர்ந்து, 60 வெவ்வெறு நாடுகளிலுள்ள 40 துறைகளை உள்ளடக்கிய மொத்தம் 240 திட்டங்களாக பெருகியுள்ளது.

இதை க்யூபா தன் சுய முயற்சியில் சோஷ‌லிச வழிமுறைகளில் சாதித்துள்ளது.  அதன் காரணமாக அதன் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 9.6% தொட்டுள்ளது.

இன்னும் அதிகம் சொல்லலாம்.  ஆரம்பக் கல்வி தொடங்கி முனைவர் பட்டம் பெறும்வரை அனைவருக்கும் இலவசக் கல்வியை க்யூபா உத்திரவாதம் செய்துள்ளது. அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏ-வின் fact book படி க்யூபாவின் அண்டை முதலாளித்துவ நாடுகளான அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளைக் காட்டிலும் அதிகமாக படிப்பறிவு 99% உள்ளது என்று ஒப்புக்கொண்டுள்ளது.

அது போல மருத்துவ வசதியை உறுதி செய்துள்ளது.  க்யூபா போன்ற வளர்ந்து வரும் பல்வேறு நாடுகளில் உள்ளது போல், மருத்துவத் துறையில் உள்ள அசுத்தமும், கவனிப்பாரற்ற தன்மையும், ஊழலும் க்யூபாவில் இல்லவே இல்லை.

ஆச்சரியப்படும் வகையில், க்யூபா தனது நாட்டின் ஆண்டு நிதி நிலையில் 45 சதவீதத்தை மருத்துவத்திற்கும், கல்விக்கும் மட்டுமே ஒதுக்கீடு செய்து வருகிறது.  ஐக்கிய நாடுகளின் அங்கமான உலக ஆரோக்கிய நிறுவனத்தின் (WHO) குழந்தை இறப்பு விகிதம் 1000-க்கு 4.7 என்ற விகிதத்தில் குறைந்திருப்பதாக பதிவு செய்துள்ளது.  மேற்கத்திய நாடுகளில் பல நாட்டின் நிலைமையைக் காட்டிலும் சிறந்திருப்பதை உறுதி செய்கிறது.

இன்று முதலாளித்துவ நாடுகள் ஒரு சிறு பகுதியினருக்கு மட்டுமே பாதுகாப்பு கொடுக்கிறது. க்யூபா தனது சோஷ‌லிசப் பாதையில், நாட்டின் அனைத்து மக்களையும் வறுமையிலிருந்து, வேலையின்மையிலிருந்து, நோயிலிருந்து காத்திருப்பது அசாதாரண சாதனையாகும்.

சோஷ‌லிசக் கோட்பாட்டின் உள்ளடக்கத்தை முற்றாக பேணுவதுடன், தனது நாட்டின் வளர்ச்சிக்கான திட்டமிடுதலை அந்த நாட்டின் தொழிலாளர்களுடனும், உழைப்பாளர்களுடனும், உள்ளாட்சி அமைப்புகளுடனும் முற்றாக கலந்தாலோசித்த பின்னரே முடிவெடுக்கிறது க்யூபா.  அதுதான் உண்மையான சோஷ‌லிசப் பாதையின் உள்ளடக்கம்.  அத்தோடில்லாமல் நேட்டோ அமைப்பிலுள்ள பிரான்ஸ் போன்ற நாடுகளையும், தனது சோஷ‌லிச வழிமுறைகளை மாதிரியாக கொண்டு திட்டமிடும் அளவுக்கு ஊக்குவித்து வருகிறது.

பெர்கலேயை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் “அமெரிக்காக்கள் பற்றிய ஆய்வு” மையத்தின் இயக்குனர் திரு ரோஜர் பர்பேக் எழுதிய ஒரு கட்டுரையில், க்யூபா தனது சோஷ‌லிசத் திட்டங்களின் மூலமாக பொருளாதார வீழ்ச்சியைத் தடுத்ததுடன், அதில் வெற்றியும் கண்டதை வெகுவாக பாராட்டியுள்ளார்.

க்யூபா போல் உலகின் எந்த நாடும் தனது பொருளாதாரத் திட்டங்களை தனது நாட்டு தொழிலாளர்களுடன் கலந்து பேசி முடிவெடுப்பதில்லை.  கார்ப்பரேட் நிறுவனங்களின் நண்பனான மனிதாபிமானமற்ற முதலாளித்துவக் கணக்கீடுகளை சார்ந்திராமல், நாட்டின் தொழிலாளர் வர்க்கத்துக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களது நலனையே பேணி வருகிறது க்யூபா.

அமெரிக்க வழியில் லாபம் மற்றும் வணிகத்தில் புரளும் தொகைகளை வைத்து நாட்டு மக்களின் வாழும் நிலையை குறிப்பதென்பது ஒரு அப்பட்டமான மோசடியாகத்தான் இருக்கும்.  ஏனென்றால், அந்தப் புள்ளி விவரங்கள் உண்மையில் அந்த நாட்டு மக்களின் உண்மையான வளர்ச்சியைப் பிரதிபலிப்பதில்லை.

முந்தைய சோவியத் ரஷ்ய கூட்டணித் திட்டங்கள் சரியானவையாக இல்லாமல் இருந்திருக்கலாம்.  ஆனால் சோஷ‌லிசத்தின் மதிப்பு, சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியுடன் மூழ்கிவிடவில்லை.  மாறாக, சரியான திட்டமிடுதலால்,  சோஷ‌லிச கொள்கை இன்னும் வீறுகொண்டதாக எழும்.

மந்திர ஒலியால் கட்டுண்டு குழல் வாசிப்பவன் பின்னால் செல்லும் எலிகளைப் போல, பல்வேறு நாடுகளை தனது  சோஷ‌லிச கொள்கை திட்டங்கள் மீது ஈர்க்க க்யூபாவால் முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

நன்றி : அரிந்தம் செளத்ரி, டெக்கான கிரானிக்கல், தி சண்டே இந்தியன்

தமிழில் – சித்ரகுப்தன்

லஞ்சம் வளர்த்தெடுக்கும் விதிமீறல்கள்

India-Tops-In-Bribery-List-Surveyசமீபத்தில், கோவை அவிநாசி சாலையில் ஒரு வணிக வளாகக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டு நான்கு பெண்கள் பலியான செய்தியை வாசித்திருப்பீர்கள். இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். விபத்து குறித்து புலனாய்வு ஒரு புறம் தொடங்கும் முன்னர், கட்டட வரைபட அனுமதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவசர கதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட நிர்வாகம் சில விதிமீறல்களைச் சுட்டிக்காட்டியுள்ளது. அனுமதிக்கு மேலாக இரண்டு தளங்கள் கட்டப்பட்டுள்ளன. அவசரகால வெளியேறும் வழி அமைக்கப்படவில்லை. தீயணைப்புச் சாதனங்கள் இல்லை.

சாதாரண நடுத்தர வர்க்க சாமானியன் ஒரு கட்டடம் கட்டத் தொடங்கினால் அல்லது வங்கிக் கடன் வாங்கப் புறப்பட்டால் அல்லது தன் கட்டடத்தில் ஒரு சிறு பகுதியை விரிவாக்கம் செய்ய முயன்றால் உடனே,  வார்டு உறுப்பினர், வருவாய் ஆய்வாளர் முதல் மின்வாரிய பொறியாளர் வரை மாறி மாறி வந்துவிடுவாரக்ள். வரைபட அனுமதி உள்ளதா, வரி திருத்தியமைக்கப்பட வேண்டாமா, மின் இணைப்பு பெற பத்திர நகல் கொடு, வீட்டு வரி ரசீது கொடு என கெடுபிடிகள் பெருகிவிடும்.  ”நாங்கள் இரண்டு, மூன்று பேர் சார், பார்த்து கவனிங்க”  என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படும்.

ஆனால் அதுவே கோடிக்கணக்கிலான திட்டம் எனில் உரியவர்களை உரிய முறையில் “கவனித்து”விட்டு வேலை தொடங்கப்படுவதால் விதிமீறல்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை. மலிவாகிப்போன மனித உயிர்கள் இழப்பு ஏற்பட்டவுடன் இது போன்ற விதி மீறல்கள் 3-4 நாட்கள் தலைப்பு செய்தியாகி பின்னர் மறந்து போகப்படுவது தொடர்கதையாகிறது.

சில மாதங்களுக்கு முன்பாக பள்ளி / கல்லூரி பேருந்து ஒன்றில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டவுடன் தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. ஒரு வாரம் பரபரப்பாக பேசப்பட்டது. அதோடு அந்த பிரச்னையை மறந்துவிட்டோம்.  பெரும்பாலான வாகனங்கள் உடனடியாக வர்ணம் பூசப்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சென்று காண்பித்து தகுதிச்சான்று பெறுவதற்கு சில (*)சலான் வெட்டுவதோடு அது மறந்து போகப்பட்டது. (சலான் – என்றால் கருவூல செலுத்துச்சீட்டு என எண்ணிக்கொள்ள வேண்டாம். அனைத்து வ.போ.அலுவலகத்திலும் கணிணிமூலம் அரசாங்கத்திற்கு ஒவ்வொரு மனுவுக்கும் கட்டணம் வசூலிக்கும் வழக்கம் வந்தாகிவிட்டது – பின்னர் இந்த சலான் என்பது? இன்றும் வ.போ.அ-களில் லஞ்சம் என்பதற்கு பயன்படுத்தப்படும் பரிபாஷை). விதிகள் நெருக்கிப்பிடிக்கப்படும் போது “கவனிப்பும்” அதிகரிக்கிறது.

பேருந்துகளில் எதிரில் வரும் வாகன ஓட்டியை கண்கூச வைக்கும் விதத்தில் 4 முகப்பு விளக்குகள் பயன்படுத்தக்கூடாது என்பது விதி. ஆனால் ஒரு வருடத்துக்கு ஒரு முறை தனியார் பேருந்துகள் தகுதி்சான்று புதுப்பிக்க (ஆர்டிஓ) வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் வரும் போது மட்டும் பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு ஹெட் லைட்டை கழற்றி ஒரு தகடால் மறைத்து ஸ்குரூ போட்டு மூடிவிட்டு, ஆய்வு முடித்து தடத்தில் செல்லும் போது மீண்டும் பளீரென்ற லைட்டுகள் மாட்டப்பட்டுவிடும். இந்த இரண்டு மணி நேர நாடகத்துக்கு சற்று சலான் அதிகம் கொடுக்க வேண்டும்.

மதுரையில் சில தினங்களுக்கு முன்பாக ஷேர் ஆட்டோ ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். அன்று முதல் 3 தினங்கள் நகர் முழுவதும் ஷேர் ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றியதாக காவல்துறை, மோட்டார் வாகன ஆய்வாளர்கள்என வளைத்து, வளைத்து குற்றக் குறிப்பாணை, அபராதம் என்ற கெடுபிடிகள், ஆட்டோக்களின் பக்கவாட்டில் இந்த ஆட்டோவில்3 பேர்களுக்கு மேல் ஏற்றப்படமாட்டாது என பெயின்டினால் வாசகங்கள் என அமர்க்களப்பட்டது. 3 நாட்கள் கழிந்தவுடன், தினமும் வடக்கு, தெற்கு என ஒரு சரகத்துக்கு 3-4 ஆட்டோக்களை மட்டும் அபராதம் விதித்துக் கொள்கிறோம், மற்றபடி அதிக பயணிகளோடு செல்பவர்கள் அவ்வப்போது எங்களை ‘கவனித்து’ விடுங்கள் என்ற எழுதப்படாத உடன்பாட்டோடு அது மறந்து போகப்பட்டது.

தொடரும் விதிமீறல்களையும், அவை உடனுக்குடன் மறந்து போகப்படுவதையும் பார்க்கும் போது மிகுந்த அச்சம் ஏற்படுகிறது. லஞ்சம் வாங்குங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை. குறைந்தபட்சம், உயிருக்கு உலை வைக்கும் விவகாரங்களில் மட்டுமாவது நேர்மையாக இருக்கக்கூடாதா?

0

நம்மால் இதைக்கூடச் செய்ய முடியாதா?

Uni-Protest_CI

விதியே விதியே

என் செய நினைத்தாய்

என் இந்திய ஜாதியை..?

சமீபகாலமாகத் தமிழகத்தில் இந்திய தேசியத்தை வெறுத்து விமர்சிக்கும் போக்கு அதிகரித்துவருகிறது.

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்

கைக்கொல்லும் காழ்த்த இடத்து

இந்த அடிப்படையில் இந்தப் பிரிவினைவாத முழக்கங்களை கொஞ்சம் அதிக பதற்றத்துடன் நாம் கவனித்தாக வேண்டியிருக்கிறது. ஒருவேளை இந்த பதற்றம் தேவையற்றதாக இருக்கக்கூடும். இது தொடர்பான யூகங்கள் பொய்த்துப்போகக்கூடும். அப்படி நடந்தால் நல்லதே. நல்லதே நடக்கும் என்று நம்புவோம். அதேநேரம், மோசமானதை எதிர்கொள்ளவும் தயாராகிக்கொள்வோம்.

சமீபத்தில் ’தன்னெழுச்சி’யாக ஆரம்பிக்கப்பட்ட மாணவர்களின் போராட்டம் இந்திய எதிர்ப்பு உணர்வை ஒரு சில கோரிக்கைகளில் வெளிப்படையாகவும் வேறு சிலவற்றில் மறைமுகமாகவும் வெளிப்படுத்தியிருந்தன. ஏற்கெனவே இலங்கைத் தமிழர் பட்ட வேதனைகளுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என குற்ற உணர்ச்சியில் இருந்த தாயகத் தமிழர்களின் உணர்ச்சிக்கு வடிகாலாக அந்தப் போராட்டம் பலம் பெற்றது. ஆனால், இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்த சாதாரண மக்களுக்குப் பிரிவினை எண்ணம் துளியும் கிடையாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பின்னின்று இயக்கும் நபர்களின் செயல் திட்டத்தை முழுவதுமாகப் புரிந்துகொள்ளாமல்தான் பலரும் தெருவில் இறங்கிப் போராடினார்கள் என்பதுதான் உண்மை.

ஆனால், விடுதலைப் புலிகள் தனி நாடு கேட்டுப் போராட ஆரம்பித்தபோது அவர்களிடம் இல்லாத நியாயமானது சிங்கள அரசின் அராஜகச் செயல்களால் வந்து சேர்ந்ததுபோல், இன்று தனித் தமிழ் நாடு கோரும் பிரிவினைக்குரலுக்கும் இந்திய தேசிய அரசு ஒரு நியாயத்தைக் கற்பித்துவிடுமோ என்ற அச்சம் தோன்றுகிறது. இறையாண்மைக்கு ஊறு வந்துவிடும் என்று சொல்லிச் சொல்லியே இறையாண்மைக்கு ஊறை விளைவித்துக்கொண்டுவிடும் அது. ஏனென்றால், இந்திய தேசம் தற்போது இந்தியர்களால் ஆளப்படவில்லை. பிறப்பால் இந்தியர்களாகவும் நடத்தையால் மேற்குலகின் விசுவாசிகளாகவும் இருக்கும் கூட்டத்தால் இந்த தேசம் ஆளப்பட்டுவருகிறது.

தமிழகத்தில் எழத் தொடங்கியிருக்கும் பிரிவினைவாதக் குரல்களை இந்தப் பின்னணியில்தான் பார்க்கவேண்டும். இன்று ஈழத் தமிழர்களுக்காகப் போராட வந்திருக்கும் மாணவச் செல்வங்கள், நாளை கூடங்குளம், முல்லைப் பெரியாறு, காவிரி போன்ற பிரச்னைகளுக்கும் வீதிக்கு வருவார்கள். பேரறிவாளன் உட்பட மூவருக்கான தூக்கு பற்றிய தீர்ப்பு வரும்போது அது தொடர்பாகவும் வீதிக்கு வருவார்கள். ஆனால், பரமக்குடி, தருமபுரி வன்முறைகளின் போதெல்லாம் இந்த மாணவச் செல்வங்கள் பொங்கி எழமாட்டார்கள் என்றே தோன்றுகிறது. சுருக்கமாகச் சொல்வதானால், மாணவச் செல்வங்களின் அரசியல் என்பது மே-17, வைகோ, சீமான், நெடுமாறன் அன்கோவின் அரசியல்தான். ஒருவேளை அவர்களுக்கு இதையும் தாண்டிய அக்கறை உண்டு என்றால், பிரபாகரனின் புகைப்படத்தையும் புலிகளின் கொடியையும் தூர தள்ளி வைத்துவிட்டு வந்திருப்பார்கள். ஆனால், அவர்களோ திலீபன்களைத் தொடர்ந்து பிரபாகரன்கள் வருவார்கள் என தெளிவான திட்டத்துடன்தான் இயங்க ஆரம்பித்திருக்கிறார்கள். கொடுக்கப்படும் சாவிக்கு ஏற்பத்தானே ஆட முடியும் பொம்மைகளால். எனவே, இந்த எழுச்சியை மாணவச் செல்வங்களின் போராட்டம் என்று வெகுளித்தனமாகப் பார்க்காமல் மறைந்திருக்கும் அம்சங்களின் அடிப்படையில் பார்ப்பது மிகவும் அவசியம்.

இந்தியா ஒரு தேசமாக இத்தனை ஆண்டுகள் (!?) நீடித்து நிற்கும் என்று உலகில் பெரும்பாலானவர்கள் நம்பியிருக்கவே இல்லை. பல்வேறு மொழிகளின் காட்சிசாலையான இந்தியா ஒரு இயல்பான கூட்டமைப்பு அல்ல. பிரிட்டிஷார்தான் அதை உருவாக்கினார்கள். அவர்கள் போனதும் இந்திய மாநிலங்கள் தமக்குள் சண்டையிட்டபடி பிரிந்துவிடுவார்கள் என்பதுதான் மேற்குலகின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்தது. அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தினால் வழங்கப்பட்ட உரிமைகளையும் சலுகைகளையும் பெற்று ஒவ்வொரு பிரிவும் தமக்கான முன்னேற்றத்தை ஜனநாயக முறையில் வென்றெடுக்க ஆரம்பித்தன. எவ்வளவோ குறைகள் உண்டு என்றாலும் அவற்றை ஆக்கபூர்வமான போராட்டங்கள் மூலம் சரி செய்வதற்கான வழிகளும் இந்தியாவில் இன்றும் இருக்கவே செய்கின்றன. சூழலை வென்றெடுப்பதற்குப் பதிலாக சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதே நம் தேசிய குணமாக இருக்கிறது. எனவே, மேற்குலக அளவுகோல்களை வைத்து அளவிட்டு வருந்த வேண்டிய அவசியமில்லைதான். ஆனால், பாரம்பரியத்தில் இருந்து நாம் துண்டிக்கப்பட்டதால் அடைந்திருக்கும் இழப்புகள் குறித்தும் சுதேசி நலன்கள் புறக்கணிக்கப்படுவது குறித்தும் நாம் நிச்சயம் கவலைப்பட்டாகவேண்டும். அந்த வகையில் இந்தியா ஒற்றை தேசமாக இருப்பதில் பெருமைப்பட்டுக்கொள்ளப் பெரிதாக எதுவும் இல்லை என்பதுதான் உண்மையே.

அதோடு, பிரிவினைக்கான அதிருப்திகளும் இயக்கங்களும் ஆரம்பத்திலிருந்தே இருக்கத்தான் செய்கின்றன. காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள், காலிஸ்தான் என பிரிவினை கோஷங்கள் எழுந்தும் அடங்கியும் இருந்துவருகின்றன. தமிழகத்திலும் திராவிட நாடு கேட்டு இயக்கங்கள் வெடித்திருக்கின்றன. ஆனால், மத்தியில் கூட்டாட்சி… மாநிலத்தில் சுயாட்சி என்பது தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் நன்மையைத் தரும் என்பதைப் புரிந்துகொண்டு திராவிட முன்னேற்றக்கழகத்தினர் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டனர் (விடுதலைப் புலிகள் செய்யத் தவறிய விஷயம்). காவிரிப் பிரச்னை, முல்லை பெரியாறு பிரச்னை போன்றவற்றில் அவ்வப்போது தமிழகம் வஞ்சிக்கப்பட்டதாக அதிருப்திக் குரல்கள் எழும். அவை பெரிதும் தூய தமிழ் தேசியம் பேசும் சிறு குழுக்களால் முன்னெடுக்கப்படும். மக்கள் மத்தியில் அந்தப் பிரிவினைக் குரல்களுக்கு என்றும் ஆதரவு இருந்ததில்லை.

இலங்கை பிரச்னையில்கூட ராஜீவ் காந்தி கொலைக்கு முன்புவரை இலங்கைத் தமிழர்கள் மீது இருந்த ஆதரவு அதற்குப் பின்பாக வற்றிவிட்டது. ஈழத்தின் கடைசி யுத்தம் நடந்தபோது இந்தியாவில் நடந்த தேர்தலில்கூட உள் நாட்டுப் பிரச்னைகளே தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணிதான் கூடுதல் இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்தன. அந்தவகையில் அதுவரையிலும் தனி ஈழத்துக்கு (விடுதலைப்புலிகளுக்கு) இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் எந்தப் பொது மக்கள் ஆதரவும் இருந்திருக்கவில்லை.

ஆனால், இப்போது பாய்மரம் திருப்பப்பட்டிருக்கிறது. தமிழக முதல்வராக தற்போது பதவியில் இருக்கும் ஜெயலலிதா, தனி ஈழமே தீர்வு என்று சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்திருக்கிறார். இலங்கை நட்பு நாடு அல்ல என்றும் முழங்கியிருக்கிறார். இந்தியா சர்வதேச விசாரணைக்கு முன்கை எடுக்க வேண்டும், இலங்கை அரசை இனப்படுகொலை செய்த அரசாக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை தி.மு.க.வும் முன்வைத்திருக்கிறது. இவை இரண்டுமே ‘மாணவர் போராட்ட’த்துக்குப் பிறகு நடந்தேறியிருக்கும் பெரிய திருப்பங்கள்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸையும் தி.மு.க.வையும் தனிமைப்படுத்த உதவும் என்ற நோக்கில் மாணவப் போராட்டத்தை தொடர அனுமதித்த ஜெயலலிதாவுக்கு இந்தப் போராட்டத்தின் பின்னால் இருக்கும் அபாயங்கள் புரிந்ததுபோல் தெரியவில்லை. ஆனால், அவர்கள் மிகவும் தெளிவாகவே இருக்கிறார்கள். காங்கிரஸைக் குறிவைத்து எதிர்ப்பதால் உருவாகப்போகும் வெற்றிடத்தை மற்றொரு தேசிய கட்சியான பிஜேபி பிடித்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாத தனி ஈழக் கோரிக்கையை முன்வைத்தே போராட ஆரம்பித்திருக்கிறார்கள். மேலும் இலங்கை அரசு செய்த மிகப் பெரிய தவறு ஒன்றை முன்னிலைப்படுத்தியதன் மூலம் தாங்கள் (புலிகள்) செய்த அதைவிட சற்று குறைவான எல்லா தவறுகளையும் நியாயப்படுத்திவிட்டிருக்கிறார்கள். ஒரே அம்பில் பல குருவிகள்.

இன்று வெறுமனே காங்கிரஸ் எதிர்ப்பாக இருக்கும் இந்த இயக்கமானது நாளை நிதானமாக, இந்திய எதிர்ப்பாக மடைமாற்றப்படும். இப்போதே பல புரட்சிகர குழுக்கள் தாங்கள் கனவு கண்ட புரட்சி வந்தேவிட்டதோ என்று திடுக்கிட்டு எழுந்து மத்திய அரசு அலுவலகங்கள், ராணுவ மையங்கள் ஆகியவற்றை முற்றுகையிட்டதும் நடந்திருக்கிறது. விடுதலைப் புலிகளை கொம்பு சீவிவிட்டு பேரழிவுக்கு ஒருவகையில் காரணமான நபர்கள் இன்று இந்தியாதான் கொன்று குவித்தது என்று வீதிகளில் வெளிப்படையாக முழங்க ஆரம்பித்திருக்கிறார்கள். இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த கட்சிகள் தமிழர்களை ஒடுக்குவதில் போட்டி போட்டதுபோல், இந்திய தேசியத்துக்கு எதிராகச் செயல்படுவதில் யார் முந்தி என தமிழகத்திலும் கூத்துகள் நடைபெற அனைத்து சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன. ஏனென்றால், தமிழக அரசியல் கட்சிகளும் தேசியக்கட்சிகளும் அப்பட்டமான சுய நல, மக்கள் விரோத நபர்களின் கைகளில்தான் சிக்கியிருக்கின்றன.

இப்போது இந்திய எதிர்ப்பு முழக்கங்களின் தார்மிக வலுவைப் பற்றிப் பார்ப்போம். ஈழப் பிரச்னை, மீனவர் கொலைகள், கூடங்குளம், காவிரி, முல்லைப் பெரியாறு, மூவர் தூக்கு தண்டனை போன்ற விஷயங்களில் இந்தியாவுடன் தமிழகத்துக்கு மோதல் இருக்கின்றன. மின் தட்டுப்பாடு, விவசாய நசிவு, மது போன்ற உண்மையான பிரசனைகள் இருக்கும் நிலையிலும் உணர்ச்சிபூர்வமான பிரசனைகளே அரசியலுக்கு உதவும் என்பதால் இவையே முன்னிலைப்படுத்தப்படவும் செய்யும்.

முதலாவதாக, ஈழப் பிரச்னையில் இந்தியா இலங்கைக்கு செய்த ராணுவ உதவிகள் தமிழ் தேசியக் குழுக்களுக்குப் பெரும் ஆத்திரத்தைக் கிளப்பியிருக்கின்றன. முள்ளிவாய்க்கால் பகுதியில் புலிகளும் மக்களும் முற்றுகையிடப்பட்டபோது கடல் வழியாக பிரபாகரன் தப்பிவிட திட்டமிட்டிருந்ததாகவும் இந்திய கடற்படையின் உதவியால்தான் அவர் பிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார் என்றும் உள்வட்டாரங்களில் பேசப்படுகின்றன. இன்னும் சிலர் இந்திய (சோனியா) அரசின் திட்டப்படித்தான் கடைசி போரில் பிரபாகரன் தடுப்பாட்டம் ஆடினார். இலங்கை அரசை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்த அவர்களால் கொல்லப்படும் அப்பாவிகளின் பிணங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கடல் வழியாகத் தப்பித்துப்போய் போராட்டத்தை வென்றெடுக்கலாம் என்று திட்டம் தீட்டிக் கொடுத்த இந்திய (சோனியா) அரசு கடைசியில் குறுக்குச் சால் ஓட்டி பிரபாகரனைப் பிடித்துக் கொடுத்துவிட்டது என்றும் சொல்கிறார்கள். (சோனியா) இந்தியாவின் அந்த துரோகத்துக்குத்தான் பழிவாங்கப் புறப்பட்டிருக்கிறார்கள் தமிழ் தேசியப் போராளிகள். சீனா, பாகிஸ்தான் கொடுத்த ஆயுதங்களில் பத்தில் ஒரு பங்குகூட கொடுத்திராத இந்தியா மீது பெரிதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதன் பின்னால் அந்த விஷயமே அடங்கியிருக்கிறது.

போரினால் அப்பாவிகள் பாதிக்கப்பட்டதுதான் இவர்களுடைய ஆவேசத்துக்குக் காரணமென்றால், ஆதி முதல் அந்தம் வரை புலிகள் செய்த அட்டூழியங்களையும் சேர்த்தே விமர்சித்திருப்பார்கள். இன்றைய போராட்டங்களில் பிரபாகரனின் படமும் புலியின் படமும் இருந்திருக்காது. இப்போதும் அந்த இரண்டையும் கீழிறக்கிவிட்டு போராட முன்வந்தால் இந்தியாவுக்கு இவர்கள் சொல்லும் விஷயத்தில் அக்கறை ஏற்படும். ஆனால், இந்திய அரசுக்கு உண்மையைப் புரியவைத்து ஈழத்தமிழர் விஷயத்தில் ஆக்கபூர்வமாகச் செயல்படவைக்க வேண்டும் என்பது அல்ல; நிறைவேற்ற முடியாத கோரிக்கையை முன்வைத்து இடைவெளியை என்றென்றைக்குமாக அதிகரிக்கவேண்டும் என்பதுதான் இப்போதைய இலக்கு. சர்வதேச விசாரணையில் விடுதலைப்புலிகளின் செயல்களும் விசாரிக்கப்படவேண்டும் என்ற வாசகத்தை என்றைக்குச் சேர்க்கிறார்களோ அன்றுதான் ஈழத் தமிழர்கள் மீதான அக்கறையில் இதைச் செய்கிறார்கள் என்று இவர்களை நம்பமுடியும்.

அடுத்ததாக, ஈழத்தில் இருக்கும் தமிழர்களே கேட்காத தனி ஈழக் கோரிக்கையை பாதுகாப்பான துரத்தில் இருந்துகொண்டு தமிழகத்தில் ஆவேசமாக எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். இலங்கை அரசை விடுங்கள்… இந்திய அரசுகூட இந்த கோரிக்கையை ஏற்க முடியாது. தனி ஈழத்துக்கு ஆதரவாக ஒரு வார்த்தை இந்தியா பேசினாலும் அதைச் சாக்காக வைத்து மேலும் கிளர்ந்தெழ இந்தியாவில் ஏராளமான குழுக்கள் காத்திருக்கின்றன. எனவே, இந்தியா இந்த விஷயத்தில் தனி ஈழத்தை ஆதரிக்கவே முடியாது. அது நிச்சயமாக பிரிவினைவாதிகள் சொல்வதுபோல் தமிழர்கள்மேல் இருக்கும் வெறுப்பினால் அல்ல. ஏனென்றால், மத்திய மாநில அரசுகளின் கூட்டாட்சிதான் இந்தியாவின் கொள்கையே.

இன்று இந்த கோஷங்களை வைப்பவர்களின் நோக்கம் தனி ஈழம் கிடைக்கவேண்டும் என்பது அல்ல. அதை வைத்து இந்தியாவுக்கு நெருக்கடி தரவேண்டும் என்பதுமட்டுமே. ஏனென்றால், ஈழம் கிடைக்காது என்பது அவர்களுக்கும் நன்கு தெரியும். இந்த விஷயத்தில் இந்தியா மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் விழி பிதுங்கிக்கொண்டு நிற்கிறது. புலிகளுக்கும் தனி ஈழத்துக்கும் எதிராகப் பேசுவது என்பது வேறு; ஈழத்தமிழர்களின் நலனுக்காகப் பேசுவது என்பது வேறு. இந்தத் தெளிவை மக்களுக்கு கொண்டுசெல்லத் தவறினால் பிரிவினைவாதிகளின் கையே ஓங்கும்.

india2000 ஆண்டுகளுக்கு முன்னால் மனுவாதிகள் செய்தவை என்று நீட்டி முழக்கி அரசியல் நடத்திவரும் திராவிட முன்னேற்ற கழகத்தினரும் நேற்று நாங்கள் செய்ததை மறந்துவிடுங்கள். இன்று நாங்கள் பரிசுத்தவான்கள். இந்தியா இலங்கையைக் கண்டிக்கவேண்டும் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து ரத்தம் கூட ஆறியிருக்காத நிலையில் இலங்கைக்குச் சென்று ராஜபக்சேவுடன் பெட்டிகள் மாற்றிக்கொண்டு பொன்னாடைகள் போர்த்தி முரண்பாடுகளோடு உறவாடச் சென்றவர்கள் இந்திய தேசியத்துடன் பகைமை பாராட்டத் தொடங்கியதன் காரணம் என்ன? தமிழகக் கட்சிகளின் இப்படியான அரசியல் குட்டிகரணங்களால் நிலைமை மேலும் சிக்கலாகவே செய்யும்.

அடுத்ததாக, தமிழக மீனவர்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்படும் விவகாரம். இது தொடர்பாக வட இந்திய ஊடகங்களில் பேசும் தமிழகத் தலைவர்கள், ஒரு விஷயத்தை ஆவேசமாகக் கேட்கிறார்கள்: முப்பது ஆண்டுகளாக 500க்கும் மேற்பட்ட தமிழகத் தமிழர்கள் கொல்லப்பட்ட பிறகும் நீங்கள் எதிர்த்து எதுவும் சொல்லவே இல்லையே. கேரள மீனவர்கள் இரண்டு பேர் கொல்லப்பட்டதற்கு இத்தனை நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களே… அப்படியானால் தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லையா..?

இந்தக் கேள்வியில் இருக்கும் நியாயம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதுதான். ஆனால், தமிழர்களை இந்தியர்களாக மதிக்கவைக்க என்ன செய்யவேண்டும்? என் துயரத்தை நீ பொருட்படுத்தவில்லை எனவே, நான் உன்னை விட்டுப்பிரிகிறேன் என்பது எந்த அளவுக்கு நியாயம்? இந்த முப்பது வருட காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் வலிமையுடன் இருந்த காலகட்டமும் அடங்கும். அப்போது நடந்த கொலைகள் வேறு கோணத்தில் பார்க்கப்படவேண்டியவை அல்லவா. இந்திய தேசியத்தில் இணைந்து இருந்ததால் தமிழகம் அடைந்த நன்மைகள் எல்லாமே இந்த ஒற்றை விஷயத்தினால் இல்லாமல் போய்விடுமா?

அதோடு, தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள்தான் இந்தப் படுகொலைகள் நடந்தபோதெல்லாம் மத்திய அரசில் அங்கம் வகித்திருந்தார்கள். இந்தியாவின் பிற பகுதி மக்கள் இந்தப் பிரச்னையை தமிழக அரசியல் தலைவர்கள் எப்படி அணுகினார்களோ அதன் அடிப்படையில்தான் புரிந்துகொண்டிருக்கவும் முடியும். அந்தவகையில் வட இந்திய ஊடகங்களின் அலட்சியத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகங்களின் செயல்பாடும் முக்கிய காரணமே. இலங்கையில் போர் தீவிரம் அடைந்தபோது ஏன் மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்கவில்லை என்ற கேள்விக்கு திமுக ஒரு சப்பைக்கட்டு பதிலைச் சொல்கிறது. இவர்கள் ஆதரவை விலக்கிக்கொண்டிருந்தால் வேறொரு கட்சி ஆதரவு கொடுத்திருக்குமாம். அதாவது, இவர்கள் கத்தியால் குத்தியிருக்கவில்லையென்றால் வேறொருவர் குத்தியிருப்பாராம். அதனால் இவர்கள் ஈழத்தமிழர்கள் முதுகில் குத்திவிட்டார்களாம். உண்மையில் இந்த விஷயத்தில் என்ன செய்திருக்க வேண்டும். மத்திய அரசுக்கு யாரெல்லாம் ஆதரவு தரத் தயாராக இருக்கிறார்களோ அவர்களுடன் பேசி விஷயத்தை விளக்கிப் புரிய வைத்திருக்கவேண்டும். ஆனால், அதைச் செய்யவில்லை.

இப்போதும் மம்தா பானர்ஜி இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை பிராந்திய கட்சிகள் தீர்மானிக்கக்கூடாது என்று சொல்லும்போது பிரிவினைவாதிகள் என்ன செய்கிறார்கள்… பாண்டிச்சேரியில் இருக்கும் மேற்குவங்காள அரவிந்தரின் ஆஸ்ரமத்தை அடித்து நொறுக்குகிறார்கள். இதுவா பிரச்னையைப் பிறருக்குப் புரியவைக்கும் முறை? உண்மையில் இன்று தமிழக அரசியல் கட்சிகள் எல்லாவற்றிடமும் காட்சி ஊடகமும் அச்சு ஊடகமும் இருக்கின்றன. வட இந்திய ஊடகங்களில் தமிழக பிரச்னைகள் பேசப்படுவதில்லை என்று அங்கலாய்ப்பவர்கள், தங்களுடைய ஊடகங்களில் வட இந்திய சிந்தனையாளர்களை அழைத்து பேச வைத்து அவர்களுக்கு நிலைமையை எடுத்துச் சொல்லியிருக்கலாமே? அதிகாரவர்க்கத்தை எதிர்க்கும் அருந்ததி ராய் போன்ற நபர்களுக்கூட உங்கள் பக்க நியாயத்தைப் புரியவைக்க முடியவில்லையென்றால் யார் மீது குற்றம்? இன்று திடீரென்று சிலிர்த்துக்கொண்டு எழுந்து தமிழன் இந்தியன் இல்லையா..? என்று முழங்குவதில் என்ன நியாயம் இருக்கிறது?

பிற பகுதி தமிழர்களும் இந்தப் பிரச்னைக்காகப் பெரிதாக போராடியதும் இல்லை. அப்படியானால், தமிழக மீனவர்கள் எஞ்சிய தமிழக மக்களைப் பார்த்து நாங்கள் தமிழர்களா இல்லையா..? எங்கள் வேதனையை ஏன் நீங்கள் பொருட்படுத்தவில்லை என்று கேட்கவும் முடியும் அல்லவா? இப்போதுகூட பெரிய படகுகளில் செல்பவர்கள் தாக்குதலுக்கு ஆளாவதில்லை. சிறிய தனிப் படகுகளில் செல்பவர்கள் மட்டுமே தாக்கப்படுகிறார்கள். முதற்கட்டமாக பெரிய படகுகள் சிறிய மீனவர்களைத் தம்முடன் அழைத்துச் செல்லலாம். கூட்டமாக மீன் பிடிக்கச் செல்லலாம். இந்திய கடற்படையினர், தமிழக காவல் படையினர் பாதுகாப்புக்கு உடன் செல்லலாம். நமது கடல் பகுதிக்குள்ளாகவே படகு சவாரி, சர்ஃபிங்க், டைவிங் என கோவா, கோவளம் போல் கடல் சுற்றுலாவையும் நீர் விளையாட்டுகளையும் வளர்த்தெடுத்து மீனவர்களுக்கு புதிய வாழ்வாதாரத்தை உருவாக்கித் தரலாம்.  துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பது புதிய சிந்தனை ஒன்றுமல்ல. கச்சத்தீவை வென்றெடுத்தல், வாரத்தில் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் மீன் பிடித்தல், மீன் வளத்தைப் பெருக்குதல் என பிரச்னைக்குரிய பகுதியில் ஒருவித ஒழுங்கு கொண்டுவரப்படும்வரையில் உயிரிழப்பைத் தடுக்கும் வகையிலான முயற்சிகளை எடுப்பது மிகவும் அவசியம்.

இது போன்ற விஷயங்களில் இந்திய அரசியல் கட்சிகள் செய்யும் தவறுகளுக்காக இந்தியாவை வெறுத்து அறம் பாடிய பார்ட் டைம் பத்தினிகளில் யாரும் தமிழினம் அழிந்து போகட்டும் என்று சாபம் எதுவும் விடவில்லையே. இந்தியாவைத் திட்டினால் கிடைக்கும் வசதி வாய்ப்புகள் தமிழினத்தைத் திட்டினால் கிடைக்காது என்பதனாலா புதிய தலைமுறையின் கருத்து கந்தசாமிக்கள் வாய் மூடிக் கிடக்கிறார்கள்? தமிழக அரசியல் தலைவர்களையும் தமிழினத்தையும் பிரித்துப் பார்க்கும் நிதானமும் முதிர்ச்சியும் இந்திய விஷயத்தில் மட்டும் காணாமல் போவது ஏன்?

சரி அதை விடுங்கள்… தமிழகத்தில் கடந்த அதே முப்பது ஆண்டுகளில் சாதி தமிழர்களால் நூற்றுக்கணக்கான தமிழ் தலித்கள் கொல்லப்பட்டிருக்கிறார்களே… இன்றும் கிராமங்களில் தமிழ் தலித்கள் படும் வேதனை கொஞ்ச நஞ்சமா என்ன? தமிழ் தலித்களுக்கு தனி நாடுகேட்டு போராட வேண்டியதுதானே? தேவர்களும் வன்னியர்களும் வெட்டி விடுவார்கள் என்ற பயமா? தமிழ் தலித்துகளையும் சாதி தமிழர்களையும் தமிழ் என்ற அடையாளத்தின் மூலம் ஒன்றிணைக்க வேண்டும் என்ற முயற்சி எந்த அளவுக்கு நல்லதோ அதைவிட தமிழர்களை இந்தியர்களோடு ஒன்றிணைக்க எடுக்கும் முயற்சிகள் நூறு மடங்கு நல்லது அல்லவா.

இந்திய தேசியத்தில் தமிழர்கள் தங்கள் முக்கியத்துவத்தை அதிகரித்து நம் நலனை வென்றெடுக்க வேண்டும். அதுதான் மக்கள் நலனில் அக்கறைகொண்ட போராளியின் முதலும் கடைசியுமான இலக்காக இருக்கும். பிரிந்து போவேன் என்று மிரட்டுவது எந்த நன்மையும் தராது. விடுதலைப் புலிகளுக்கு இந்திய அரசு ஆதரவு தராமல் போனதற்கான காரணங்களில் ஒன்று, ஈழம் அமைந்துவிட்டால் தனித் தமிழ்நாடு கோஷம் வலுத்துவிடும் என்பதுதான். எனவே, ஈழம் அமையாமல் போன இந்த நேரத்திலும் தனித்தமிழ் நாடு கோஷத்தை ஆரம்பித்துவைத்து, இந்திய அரசு இலங்கை விஷயத்தில் செய்தது சரியே என்று சரித்திரத்தை எழுத வைத்துவிடாதீர்கள். ஏனென்றால், இந்த சரித்திரம் எளிதில் உலரும் மை கொண்டு எழுதப்படாது.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. நம்மில் ஒற்றுமை நீங்கிடின் அனைவருக்கும் தாழ்வு. உள்ளத்தில் உண்மையைக் கொண்டவனின் ஒளி நிறைந்த வாக்கு அது. கலைஞர்கள், அறிவுஜீவிகள் போன்ற படித்தவர்கள் பிரிவினை பற்றிப் பேச ஆரம்பித்தால் என்ன ஆகும் என்பதற்கும் அவனே பதில் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான். செவியுள்ளவர்கள் கேட்டாகவேண்டும் அதை.

ஈழம் கிடைக்கவில்லை. எனவே இந்தியாவும் இருக்கக்கூடாது என்ற தனக்கு ஒரு கண் போனால் எதிரிக்கு இரண்டு கண் போகவேண்டும் என்ற அணுகுமுறை ஒருநாளும் பயன் தராது. அதிலும் தன்னுடைய கையே தன் கண்ணைக் குத்தியிருக்கும் நிலையில் இது மிக மிக அபாயமான கோபம்.

0

அடுத்ததாக, கூடங்குளம் பிரச்னை காத்திருக்கிறது. காங்கிரஸ், பிஜேபி, அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் என அனைத்து கட்சிகளுமே அணு மின் நிலையத்தை ஆதரிக்கின்றன. சீனா போன்ற நாடுகளில் என்றால் அணு மின் நிலையத்தைச் சுற்றி நாலைந்து கிலோ மீட்டர் பகுதியில் வசிக்கும் மக்களை பெட்டி படுக்கையுடன் வேறு இடத்துக்குக் கொண்டு சென்றுவிடமுடியும். இந்தியா ஜனநாயக நாடு ஆயிற்றே. நாளை பிஜேபி ஆட்சிக்கு வந்தால் கூடங்குளம் இப்போது இருப்பதைவிட பெரிய பிரச்னையாக வெடிக்க வாய்ப்பு இருக்கிறது. பார்ப்பன / இந்து / ஆரிய / வட இந்திய கட்சி திராவிடர்களைக் கொல்ல சதி என புதிய கோஷத்துடன் தமிழக பிரிவினைவாத சக்திகள் களமிறங்குவார்கள். இந்த விஷயத்தில் அனைத்து கட்சிகளுமே கூடங்குளம் அணு மின் நிலையத்தை விரும்புகிறார்கள் என்ற விஷயம் பின்னுக்குப் போய்விடும்.

காவிரி ஒரு நிரந்தர முள்ளாக இருந்து உறுத்திக்கொண்டேதான் இருக்கும். ஜீவ நதிகள் இல்லாத தமிழகத்தில் கடந்த காலத்தில் ஏரி, கிணறு, குளம் போன்றவை மூலம் மிக அருமையான பாசன அமைப்புகள் இருந்துவந்திருக்கின்றன. இன்று அவை எல்லாம் பெருமளவுக்கு அழிக்கப்பட்டுவிட்டன. மன்னராட்சி காலத்தில் மக்கள் வசம் இருந்த அதிகாரத்திலும் பொறுப்புணர்விலும் நூற்றில் ஒரு பங்கு கூட மக்களாட்சி என்று சொல்லப்படும் இன்றைய காலகட்டத்தில் இல்லை. பிரிவினை வாதம் பேசும் குழுக்களில் எந்த ஒன்றாவது ஒரு கடப்பாரை எடுத்து ஒரு குழியை வெட்டி ஒரு சொட்டு நீராவது எடுத்துக் கொடுத்திருக்கிறதா? கர்நாடகாவுடன் சண்டை என்றால் மட்டும் சரித்திரத்தின் மூடப்பட்ட பக்கங்களில் இருந்து அவர்களுக்கான வெறுப்பின் வரிகளை உருவி எடுத்துக்கொண்டு களமிறங்கிவிடுவார்கள்.. சேரனும் சோழனும் கூட நேற்றுவரை வெட்டியும் குத்தியும் வாழ்ந்த புண்ணிய பூமிதானே இது என்ற கேள்விகளை எல்லாம் எளிதில் புறக்கணித்துவிடுவார்கள். மத்திய அரசு இந்தப் பிரச்னையில் ஆக்கபூர்வமாக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுத்ததில்லை. இனியும் அப்படியே இருக்கும் என்றே தோன்றுகிறது.

இந்த விஷயத்தில் பிரிவினை வாதம் பேசுபவர்களை மட்டும் குறை சொல்வதில் பயனில்லை. தேசியத்தைக் கட்டிக் காப்பதாகச் சொல்லிக் கொள்ளும் அமைப்புகளும் படு அலட்சியமாகவே செயல்படுகின்றன. குறைவான நீரை வைத்து பயிர் செய்யும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், தமிழகத்தில் வீணாகக் கடலில் கலக்கும் நீரைச் சேமிக்க வழி செய்தல் என எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதோடு, தமிழகத்தில் இருக்கும் நீர்நிலைகளை சீரமைத்தல் என்பது பெரிய விஷயமே இல்லை. ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கும் நபர்களை ஒருங்கிணைத்து அவரவர் பகுதிக்கான நீர்வளத்தைப் பெருக்குவது மிகவும் எளிய விஷயமே. நூறு நாள் வேலைத் திட்டம் போன்றவற்றை தேசியவாத வலதுசாரிகள் பயன்படுத்திக்கொண்டு ஆக்கபூர்வமான மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கமுடியும். ஆனால், அவர்களோ பிற மத வெறுப்பின் மூலம் அரசியல் செய்வதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். நாஞ்சில் நாட்டில் மண்டைக்காடு கலவரத்தைத் தொடர்ந்து உருவான இந்து முன்னணி எழுச்சி, கோவையில் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து உருவான எழுச்சி என்ற இரண்டைத் தவிர தமிழகத்தின் பிற எந்த பகுதியிலும் ஆக்கபூர்வ நடவடிக்கைகளால் துளி செல்வாக்கைப் பெறக்கூட அவர்களால் முடிந்திருக்கவில்லை. பிரிவினை சக்திகளின் செயலூக்கத்தில் நூறில் ஒரு பங்கு கூட தேசியம் பேசும் குழுக்களிடம் இல்லாமல் போனால் கொடுக்கவேண்டிய விலை மிகவும் அதிகமாகவே இருக்கும். ஆநிரைகள் களவாடப்பட்ட பின் கொட்டிலைப் பூட்டிப் பலனில்லை.

அடுத்ததாக முல்லைப் பெரியாறு பிரச்னை. இங்கும் எந்தவித மாற்றுச் செயல் திட்டமும் நம்மிடம் இல்லை. நீர் மிகுதியாகக் கிடைக்கும் இடத்தில் இருந்து பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு பம்ப் ஸ்டோரேஜ் சிஸ்டத்தின் மூலம் தண்ணீரைக் கொண்டுவரும் திட்டங்கள் உலகின் பல இடங்களில் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. பள்ளமான இடத்தில் இருந்து நீரை மின்சாரத்தின் மூலம் மேலே ஏற்ற வேண்டும். மறுபக்கத்தில் அந்த நீரை வேகமாக இறங்கவைக்கும்போது அதே மின்சாரத்தை உற்பத்தி செய்துகொண்டுவிட முடியும். அப்படியாக அதிக செலவில்லாமல் நீர் மறுபக்கம் வந்து சேர்ந்துவிடும். முல்லைப் பெரியாறு அணையில் தற்போது சுமார் 100க்கு அடிக்கு மேல் இருக்கும் நீர் மட்டுமே நம்மால் பயன்படுத்தப்படுகிறது. அணையின் உயரத்தை அதிகரிக்காமலேயே ஆழத்தில் இருக்கும் நீரையும் பயன்படுத்திக் கொள்ள இந்தத் திட்டம் பயன்படும். கர்நாடகாவில் மேற்குப் பகுதி மலைகளில் பெய்து அரபிக் கடலில் கலக்கும் 90% நீரைக் கிழக்குப் பக்கம் திருப்பவும் இது பயன்படும். இவற்றில் எல்லாம் எந்த சுற்றுச்சூழல் பிரச்னையும் கிடையாது. அதிக செலவும் ஆகாது. மக்கள் மீதான அக்கறை இருந்தால் போதும். உலக வங்கி ஒப்புதல் கொடுத்த திட்டமும் கூட. இருந்தும் இவை தொடர்பாக எந்த துரும்பும் இதுவரை தேசிய சக்திகளால் கிள்ளிப்போடப்படவில்லை.

மூவர் தூக்கு பிரச்னை தமிழ் மக்கள் மத்தியில் அதிக சலனத்தை உருவாக்க வல்லது. அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோரின் தூக்கு இந்திய அளவில் ஏற்படுத்திய தாக்கத்தைவிட மூவர் தூக்கு தமிழகத்தில் பெரும் அலைகளை உருவாக்கும். பேரறிவாளனைத் தவிர மற்ற இருவருக்கு மட்டுமே மரண தண்டனையை நிறைவேற்றும் அரசியல் சாதுரியம் நம் தலைவர்களிடம் இருக்குமா என்று தெரியவில்லை.

வெறும் பேட்டரி செல் வாங்கிக் கொடுத்ததற்காக பேரறிவாளனுக்கு தூக்கா..? என்பதுதான் மக்கள் முன் வைக்கப்படும் வாதம். ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது குறித்து பேரறிவாளரின் கருத்து என்ன? விடுதலைப் புலிகளின் செயல்பாடுகள் குறித்து என்ன நினைக்கிறார்? ராஜீவுடன் அப்பாவி காவலர்கள் கொல்லப்பட்டார்களே அதற்கான தண்டனையை யாருக்குக் கொடுக்கவேண்டும்? அவருக்குத் தெரியாமல் இந்தச் சதியில் இணைத்து துரோகம் இழைத்துவிட்டார்கள் என்று வெளிப்படையாக ஒப்புக்கொள்வாரா? இவை பற்றி பேரறிவாளரின் பதிலைத் தெரிந்துகொண்டால்தான் அவர் எந்த அளவு அப்பாவி என்பது தெரியவரும். ஆனால், இந்த விஷயங்கள் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு பேட்டரி செல் மட்டுமே முன்னால் நிறுத்தப்படும் (தனிப்பட்ட முறையில் எனக்கு சட்டபூர்வமான கொலையில் அரசு ஈடுபடுவதில் உடன்பாடு கிடையாது. மூவரையும் ராஜீவ் காந்தியின் சமாதிக்கு முன்பாக விழுந்து வணங்கச் சொல்லி, உடன் கொல்லப்பட்ட காவலர்களின் குடும்பத்துக்கு சேவகம் செய்யச் சொல்லி அனுப்பிவைத்துவிடுவேன்).

0

இந்திய அரசும் அதிகாரவர்க்கமும் கடுமையாக விமர்சிக்கப்படவேண்டியவையே. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அந்த விமர்சனமானது இந்தியா தன் தவறுகளைத் திருத்திக்கொண்டு முன்னேற வேண்டும் என்ற அக்கறையில் வைக்கப்படுகிறதா… இந்தியா அழிய வேண்டும் என்ற செயல்திட்டத்தின் அங்கமாக முன்வைக்கப்படுகிறதா என்பது மிகவும் முக்கியம். அமெரிக்காவில் புஷ் அரசோ ஒபாமாவின் அரசோ ஒரு தவறு செய்தால் அங்குள்ள மக்கள் புஷ்ஷின் அரசையோ ஒபாமாவின் அரசையோதான் விமர்சிப்பார்கள். அமெரிக்க கூட்டமைப்பை வெறுத்து ஒழிக்க நினைக்கமாட்டார்கள். இதுதான் விமர்சனத்தின் அடிப்படை. இப்படியான அணுகுமுறையை நிச்சயம் வரவேற்க வேண்டும். அதைவிட்டு விட்டு பிரிவினையை முன்வைப்பது எந்தவகையிலும் யாருக்கும் பலன் தரப்போவதில்லை. இன்று இந்திய மாநிலத்தினர் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்னையும் அவர்கள் இந்தியர்களாக இருப்பதால் வந்தவை அல்ல. இந்தியராக இல்லாமல் இருப்பதால் வரும் பிரச்னையே. இந்திய தேசியம் தந்திருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி பிரச்னைகளைத் தீர்க்க முடியாத ஒரு குழு பிரிவினைவாதம் பேசி, பேரழிவைத்தவிர எதைத்தான் சாதித்துவிட முடியும்?

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிரச்னைகளை, அடுத்து வரப்போகும் மத்திய அரசு எப்படி கையாளப் போகிறது என்பதுதான் நம் வருங்காலத்தைத் தீர்மானிக்கப் போகிறது. நம் இயற்கை வளங்கள் வளர்ந்த நாடுகளால் சூறையாடப்பட்டு வரும் பின்னணியில், அதிக மக்கள் தொகையையும் வேறுபாடுகளையும் கொண்ட நம் தேசம் ஒருமைப்பாட்டுடன் திகழ வேண்டுமானால், தொலை நோக்குப் பார்வையும் திட சித்தமும் தேச பக்தியும் கொண்ட ஒரு தலைவர் தேவை. சோனியாவின் ஆட்சியில் இந்தியா உள்நாட்டில் அடைந்த பின்னடைவில் இருந்தும் சர்வ தேச அரங்கில் பட்ட அவமானங்களில் இருந்தும் மீள நாம் நிறையச் செய்ய வேண்டியிருக்கிறது.

பிரிவினைவாதிகளை அழிக்க முற்படுவதைவிட அவர்களுடைய அதிருப்திக்குக் காரணமான பிரச்னைகளை அழிப்பதுதான் தேசத்தின் வளர்ச்சிக்கு உதவும். அவர்கள் களத்தில் இறங்கிவிட்டார்கள். தேசியவாதிகள் தூக்கத்தைக் கலைத்துக்கொண்டு எழுந்தாகவேண்டும். உலகின் மிகப் பெரிய கொடுங்கோல் சாம்ராஜ்ஜியத்தை அஹிம்சை வழியில் அடிபணியவைத்த நம்மால் இதைக்கூடச் செய்ய முடியாதா?

தாகத்தை விதைத்தால் லாபம் நிச்சயம்

பி. சாய்நாத் எழுதி தி ஹிந்துவில் மார்ச் 27 அன்று வெளியான Tankers and the economy of thirst கட்டுரையின் அனுமதி பெற்ற தமிழாக்கம்.

27TH-opedSainat_27_1408808eமராத்வாடாவில் தண்ணீர் வியாபாரம் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஜால்னா நகரில் மட்டும் கொள்கலன் வாகனம் (tanker) வைத்திருக்கும் முதலாளிகள் ஒவ்வொரு நாளும் தண்ணீர் வியாபாரத்தின்மூலம் ரூபாய் 6 முதல் 7.5 கோடி பரிவர்த்தனை மேற்கொள்கின்றனர்.

இந்தப் பருவத்தில் மராத்வாடாவின் மிக உயர்ந்த பயிர் தண்ணீர்தான்.  கரும்பை மறந்து விடுங்கள்.  தாகம் என்பது மனிதர்கள், தொழிற்சாலைகள் என எங்கும் வியாபித்திருக்கிறது.  அந்த மாநிலம் முழுவதும் தாகத்தை அறுவடை செய்வதன் மூலம் கோடிக்கணக்கில் ஒவ்வொரு நாளும் வணிகம் நடைபெறுகிறது.  சாலைகளில் வேன்களில் நீங்கள் பார்க்கும் கரும்பு சக்கைகள் கால்நடைகளுக்கு தீவனமாக முடிகிறது.  எண்ணிக்கையிலடங்கா கொள்கலன் வாகனங்கள் அதே சாலை வழியாக கிராமங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் தண்ணீரை விற்று லாபம் பார்க்கின்றன.  தண்ணீர் வியாபாரம் அங்கு பெரிய அளவில் நடைபெறுகிறது. பெரிய கொள்கலன் வாகனங்கள் அவற்றின் அடையாளமாக திகழ்கின்றது.

மராத்வாடாவில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களின்மூலம் தண்ணீர் எடுப்பதும், பல இடங்களுக்குக் கொண்டு சென்று விற்பதும் நடந்து வருகிறது.  அதில் அரசாங்கத்தின் மூலமான ஒப்பந்தத்தில் இருப்பது மிகச் சில மட்டுமே. அதுவும்கூட காகித அளவில் மட்டுமே. ஆனால் தனியார்மூலம் நடைபெற்றுவரும் தண்ணீர் வியாபாரம்தான் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.

சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களாக மாறிய பெரு முதலாளிகளும் இந்த வணிகத்தில் உள்ளனர்.  குறிப்பாக சட்டமன்ற உறுப்பினர்கள்தான் இந்தக் கொள்கலன் வாகன பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றுகின்றனர்.  உயர் அலுவலர்கள் பலரும் இந்த வணிகத்தில் நேரடியாகவோ பினாமி மூலமாகவோ ஈடுபட்டு வருகின்றனர்.

தண்ணீர் வணிகம்

கொள்கலன் வாகனம் என்பது என்ன?  மெல்லிய இரும்புத் தகடுகளை வளைத்து உருவாக்கப்படும் கலன்.  10,000 லிட்டர் கொள்ளளவு உள்ள கலன் தயாரிக்க 5 x 18 அடி தகடுகள் மூன்று தேவைப்படும். அவற்றைச் சேர்த்து ஏறக்குறைய 198 கிலோ எடையில் கலன் உருவாகும். அவ்வாறு உருளையாக வளைக்கப்படும் தகடுகள் பற்றவைக்கப்பட்டபின் சிறியதிலிருந்து பெரியது வரையில் அதனதன் அமைப்பிற்கேற்ப வாகனத்துடன் இணைக்கப்படும்.

மாட்டு வண்டி, திறந்த நிலை 3 சக்கர வாகனம், சிறிய லாரி, பெரிய லாரி போன்றவற்றில் 500 லிட்டர் கொள்ளளவிலிருந்து 5000 லிட்டர் வரை கலன்கள் அமைக்கப்படுகின்றன. தண்ணீர் தட்டுப்பாடு மிகுந்து கொண்டே செல்வதால், மாநிலம் முழுவதிலும் தினசரி இத்தகைய கொள்கலன் வாகனங்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது.  ஜால்னா மாவட்டத்தில் ஜால்னா நகரில் மட்டும் 1200 கொள்கலன்கள் வெவ்வேறு அளவுகளில் பெரிய, சிறிய வாகனங்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.

அவை தண்ணீர் சேகரிக்கும் இடத்துக்கும், தண்ணீர் தேவையான இடங்களுக்கும் இடையில் தொடர்ந்து இயங்கிவருகின்றன.  அதன் ஓட்டுனர்கள் வாடிக்கையாளர்களிடம் கைப்பேசி மூலம் பேரம் பேசுகின்றனர்.  இருப்பினும் பெரும்பகுதி தண்ணீர் என்பது மொத்தமாக வாங்கப்படும் தொழிற்சாலைகளுக்குத்தான் விற்கப்படுகிறது.  லோக்சத்தா என்ற மராத்திய தினசரி பத்திரிகையை சேர்ந்த திரு லஷ்மண் ரவுத், கொள்கலன் வாகனங்களின் உரிமையாளர்களால் தினமும் ரூ 6 முதல் 7.5 கோடி வரை விற்பனை மேற்கொள்ளப்படுகிறது என்கிறார்.  எனவே இந்த ஒரு ஊரில், இந்த வணிகம்தான் மிகப்பெரும் சந்தையை கைப்பற்றுகிறது.  திரு ரவுத் மற்றும் அவருடன் பணியாற்றும் சில பத்திரிகை நிருபர்கள் கடந்த பல வருடங்களாக இந்தத் தண்ணீர் வணிகம் பற்றிய செய்திகளை பின்பற்றிய வண்ணம் உள்ளனர்.

கொள்கலன் தொழில்நுட்பம்

கொள்கலன்களின் அளவுகள் வேறுபட்டவை.  ஆனால் இந்த நகரின் சராசரி கொள்கலன் அளவு 5000 லிட்டர்.  இப்படி 1200 வாகனங்கள் ஒரு நாளைக்கு 3 நடைகள் இயக்குகின்றன.  எனவே மொத்தத்தில் 24 மணி நேரத்தில் 18 கோடி லிட்டர் தண்ணீர் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது.  1000 லிட்டருக்கு ரூ 350 வீதம் கணக்கிட்டால் ஒரு நாளைக்கு 6 கோடி வருகிறது.  இந்தக் கொள்கை என்பது வீட்டு உபயோகம், அல்லது அத்தியாவசிய தேவை, அல்லது தொழிற்சாலைகளுக்கு என்கிற தேவையை பொறுத்து மாறுபடும். பற்றாக்குறை என்பது கொள்கலன் வாகனப் பொருளாதாரத்தை இயக்குகிறது.

ஜால்னா செல்லும் வழியில் அஹமத்நகர் மாவட்டத்திலுள்ள ராஹூரியில் ஒரு தொழிற்சாலை சுறுசுறுப்பாக இயங்கிவருகிறது. இங்கு 10,000 லிட்டர் கொள்ளளவு கலன் வடிவமைப்பதற்கு 30,000 வரை செலவாகிறது.  பின்னர் அதைப் போல இரு மடங்கு விலைக்கு அவை விற்கப்படுகின்றன.  ராஹூரியின் சிறிய தொழிற்சாலையில் கொள்கலன் வாகன தொழில்நுட்பம் பற்றி எங்களுக்கு ஒரு விரைவு வகுப்பே எடுக்கப்பட்டது.  அந்த வடிவமைப்பு தளத்தின் உரிமையாளர் ஸ்ரீகாந்த் மேலாவானே ஒவ்வொரு 5 x 18 அடி தகடும் 3.5 மி.மீ தடிமனாக (10 கேஜ் அளவு) இருக்குமென விவரித்தார்.  எங்களிடம் அவர் தகட்டை உருளை வடிவமாக்கும் உருளை இயந்திரத்தை காண்பித்தார்.

10,000 லிட்டர் கலன் என்பது 800 கிலோ எடை அளவில் இருக்கும் என்றார் அவர்.  3 தகடுகள் என்பவை உத்தேசமாக ரூ 27,000 ஆகும் என்றார்.  வடிவமைப்பு, பற்றவைத்தல், கூலி போன்ற வகையில் ரூ 3000 கூடுதலாகும்.  ஒரு 10,000 லிட்டர் கொள்கலன் வடிவமைக்க ஒரு நாளாகும் என்றார் அவர்.  இந்தப் பருவகாலம் எங்களுக்கு பணி மிகுதியாக உள்ளது.  3 மாதத்தில் வெவ்வேறு அளவுகளில் 150 கொள்கலன்கள் தயாரித்துள்ளோம்.  ஒரு கி.மீ. சுற்றளவுக்குள் இதே போல் நான்கு சிறிய உற்பத்திக் கூடங்கள் உள்ளன என்பதுடன், அவற்றிலிருந்தும் இதே அளவு கலன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.  அஹமத் நகரில் 3 கி.மீ. சுற்றளவில் ஏறக்குறைய 15 தொழிற்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன என்கிறார் அவர்.

மேலாவானே மேலும் கூறுகையில், பெரிய அளவு கலன் என்பது 20000 லிட்டர் கொள்ளளவில் தயாரிக்கப்பட்டு கால்நடை வளர்ப்பிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு விற்கப்படுகின்றன என்கிறார்.  10000 லிட்டர் அளவு கலன்கள் பெரிய நகரங்களுக்குச் செல்லும்.  சிறியது என்பது 1000 லிட்டர் அளவில் இருக்கும். அவை பெரும்பாலும் சிறிய விவசாயப் பண்ணைகளுக்கு அனுப்பப்படும்.  பெரும்பாலும் பரங்கி பயிரிடுவோர் சொட்டு நீர் பாசனம் செய்ய இயலாது என்பதால் சிறிய கொள்கலன்கள் வாங்குவார்கள்.  அவர்கள் அந்த கலன்களை மாட்டு வண்டியில் வைத்து தண்ணீர் சேகரித்து வருவார்கள்.

கிணறுகள், நீர்நிலைத் தொட்டிகள் மற்றும் நீர்நிலைகள்

ஆக எங்கிருந்து தண்ணீர் வருகிறது?  நிலத்தடி நீரை அதிகமான அளவில் உறிஞ்சுவதன்மூலம்.  தனியார் ஆழ்துளை கிணறுகள், அதுவும் பற்றாக்குறையை வணிகமாக பயன்படுத்த சமீபத்தில் தோண்டப்பட்டவை.  நிலத்தடி நீர் இருப்பு உள்ளது என்பது மோசமடைந்து வருவதால் இதுவும் முடிந்து போகலாம்.  இந்த வணிகத்தை சூதாட்டமாக எண்ணுபவர்கள் நீர் இருப்பு உள்ள ஆழ்துளை கிணறுகளை விலைபேசி வாங்குகின்றனர்.

ஜால்னா நகரில் பாட்டில்களில் நீர் அடைத்து விற்கும் சில நிறுவனங்கள், ஏற்கெனவே தண்ணீர் தட்டுப்பாடு மிகுதியாகவுள்ள விதர்பா மாவட்டத்தின் புல்தானாவிலிருந்து தண்ணீர் வரவழைக்கின்றனர்.  எனவே பற்றாக்குறை என்பது விரைவில் பிற மண்டலங்களுக்கும் பரவ உள்ளது.  சிலர் உயர்நிலை நீர் தொட்டிகள் மற்றும் நீர் தேக்கங்களிலிருந்து நீரை சட்ட விரோதமாகத் திருடி விற்கின்றனர்.

கொள்கலன் வாகன உரிமையாளர் 10000 லிட்டர் தண்ணீரை ரூ 1000 முதல் 1500 விலையில் வாங்கி ரூ 3500 வரை விற்று 2500 வரை லாபம் சம்பாதிக்கிறார்.  அவரே நீர் கிடைக்கும் வகையில் ஒரு ஆழ்துளை கிணறு அல்லது வெட்டப்பட்ட கிணறு வைத்திருப்பாரானால் அவரின் தண்ணீருக்கான செலவினம் குறையும்.  அவரே பொது சேமிப்பிலிருந்து திருடி விற்பாரானால் செலவு என்பது “இல்லை” தான்.

இந்த வருடம் 50,000க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்கிறார் முன்னாள் நாடாளுமன்ற மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான பிரசாத் தான்புரே.  ஏற்கெனவே செயலில் உள்ள ஆயிரக்கணக்கான கொள்கலன் வாகனங்கள் முந்தைய ஆண்டுகளிலேயே செயல்பாட்டில் உள்ளன என்பதை மறந்துவிடக்கூடாது.  எத்தனை வாகனங்கள் இயங்கி வருகின்றன என்பது யாருக்காவது தெரியுமா? நீண்டகால அரசியல்வாதி தான்புரே இந்த வணிகத்தைப் பற்றி நன்கறிந்தவர்.  மற்றவர்கள் ஏறக்குறைய ஒரு லட்சம் அளவில் புதிய கொள்கலன் வாகனங்கள் இயங்கி வருகின்றன என்கின்றனர்.

50,000 என வைத்துக்கொண்டால்கூட அதன் வடிவமைப்பு தொழிற்கூடங்கள் மாநிலம் முழுவதிலும் இந்த வணிகத்தில் மட்டும் சில மாதங்களில் 2 கோடி அளவில் சம்பாதித்துள்ளனர்.  இன்னும் சொல்லப்போனால் இந்த தயாரிப்பு மிகுதியினால் இரும்பு சட்டங்கள், தூண்கள் போன்ற வடிவமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டதால் கட்டடம் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்கிறார் மேலாவானே.

பலர் இந்தக் கொள்கலன் தயாரிப்பு வணிகத்துக்குள் குதித்துள்ளனர்.  ஜால்னாவில் 100 கலன் தயாரிப்பு கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஏறக்குறைய 90 பேர் இதற்கு முன் இந்த பணியை மேற்கொண்டிராதவர்கள் என்கிறார் சுரேஷ் பவார். ஜால்னா மாவட்டம் ஷெல்காவுன் கிராமத்தில் உள்ளூர் அரசியல்வாதியாக இருக்கும் விவசாயி தீபக் அம்போர் ஒரு நாளைக்கு ரூ 2000  வீதம் தண்ணீருக்காகச் செலவழிக்கிறார்.  நான் தினமும் எனது 5 ஏக்கர் விதையில்லா திராட்சை தோட்டம் உள்ளிட்ட 18 ஏக்கர் நிலத்துக்காக 5 கொள்கலன்கள் தண்ணீர் வாங்குகிறேன்.  ஏன் இவ்வளவு காசு கொடுத்து வாங்க வேண்டும் என்றால், இன்றளவும் எனது பழத்தோட்டத்தை உயிரோட்டமுள்ளதாக வைத்திருப்பதற்காக என்கிறார் அவர்.  இங்கு கடன் கொடுக்கும் வட்டி விகிதம் என்பது 24 சதவீதம் மற்றும் அதற்கு மேல்தான் உள்ளது.

நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  ஆனால் இன்னும்கூட மோசமடையவில்லை.  ஜால்னாவில் இதற்கு முன் இது போன்ற கொள்கலன் வாகனங்கள் இல்லாத நிலையிலும் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.  ஆனால் தற்போது எண்ணிக்கையில் அதிகமான கொள்கலன் வாகனங்கள் என்பதுதான் பற்றாக்குறையை மிகைப்படுத்தி காண்பிக்கிறது.

மிக மோசம் என்ற நிலையடைய இன்னும் சற்று தொலைவு உள்ளது.  அது மழையளவு குறைதல் என்பதை சார்ந்து மட்டும் இல்லை.  இங்கு ஒரு அரசியல் தலைவர் நிலைமையின் தீவிரத்தை இவ்வாறு சொல்கிறார். ‘நான் 10 கொள்கலன் வானங்களுக்கு உரிமையாளராக இருப்பின், இந்த ஆண்டும் வறட்சி தொடரட்டும் என வேண்டிக்கொள்வேன்.’

0

சிங்களர்கள்: அடையாளம், இனவாதம், வெறுப்பு அரசியல்

18TH_PROTEST_1399042f1

இலங்கை கால்பந்தாட்டு வீரர்கள் தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது என்னும் முதல்வரின் கருத்துக்கு தி இந்து எழுதிய தலையங்கத்தை முன்வைத்து 6 செப்டெம்பர் 2012 அன்று இவ்வாறு எழுதியிருந்தேன்.

//இலங்கை அரசின் மீதான கோபத்தை இலங்கை விளையாட்டு வீரர்கள்மீதும் சுற்றுலாப் பயணிகள்மீதும் வெளிப்படுத்தியது நிச்சயம் தவறுதான். ‘இன்று பள்ளிக்கூட கால்பந்து அணியினரைத் திருப்பியனுப்பினார்கள். நாளை கிரிக்கெட் வீரர்களைத் தடை செய்யச் சொல்வார்கள். இலங்கையில் இருந்து சுற்றுலாப் பயணிகளும் ஆன்மிகக் பயணிகளும் வரக்கூடாது என்று தடை செய்யக் கோருவார்கள். இது ஆபத்தான விளையாட்டு!’ என்னும் தி இந்து எடிட்டோரியலின் கவலையும்கூட நியாயமானதுதான்.//

அதே கட்டுரையில், தி இந்துவின் பக்கச் சார்பு குறித்தும் தெளிவுபடுத்தியிருந்தேன்.

//தமிழர்களின் கல்வீசும் செயல்பாட்டைக் கண்டித்து தலையங்கமும் கார்ட்டூனும் செய்திக்கட்டுரைகளும் தீட்டிய தி இந்து, இதே உக்கிரத்துடன், இதே தார்மிகக் கோபத்துடன் இலங்கையை என்றேனும் கண்டித்திருக்கிறதா? இல்லை எனில், இதுவும்கூட ஒருவகை வெறுப்பு அரசியல்தான் அல்லவா?//

அந்தக் கட்டுரை இப்படி முடிகிறது.

//முழு விழிப்புடனும் சுயநினைவுடனும் இருக்கவேண்டிய அவசியம் நமக்குத்தான் இருக்கிறது. இயல்பாக நம்முள்ளே எழுந்தாலும் சரி, செயற்கையாக வெளியில் இருந்து தூண்டிவிடப்பட்டாலும் சரி, ஆபத்தான வெறுப்பு அரசியல் வளையத்துக்குள் நாம் சிக்கிக்கொள்ளக்கூடாது. இதிலிருந்து வெளிவருவதற்கான ஒரே வழி, வரலாற்றை ஆழமாகவும் அகலமாகவும் கற்பதும், கற்றதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதும் மட்டும்தான்.//

ஐபிஎல் விளையாட்டுப் போட்டியில் இலங்கை வீரர்கள் கலந்துகொள்ளக்கூடாது என்று முதல்வர் மீண்டும் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். மீண்டும் தி இந்து அதை எதிர்த்து எழுதியிருக்கிறது.  நான் முன்னர் எழுதிய கட்டுரை இப்போது இதற்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன். (கட்டுரையின் முழுவடிவம் இங்கே).

2

இந்தக் கட்டுரை சிலருக்குக் கோபத்தையும் வேறு சிலருக்குக் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. இன்றுகூட ஒரு நண்பர் கேள்வி எழுப்பியிருந்தார்.

//இலங்கைக் கால்பந்தாட்டக்காரர்களைத் தமிழக அரசு சட்டப்படி வெளியேற்றியது, புத்த பிட்சுக்களின் மீது சில தனிமனிதர்கள் தாக்குதல் நடத்தினர், இரண்டையும் இணைத்து மோசடி செய்கிறது இந்து தலையங்கம், ஓர் இனப்படுகொலை செய்த நாட்டின் விளையாட்டாளர்களை வெளியேற்றுவது என்பது எப்படி இனவாதமாகும்? இந்தக் கவலை நியாயமானது என்று நீங்கள் எப்படி கூறுகிறீர்கள் மருதன்? //

விளையாட்டு வீரர்களைத் திருப்பி அனுப்பியது ஓர் அரசின் செயல்பாடு. புத்த பிட்சுக்களின்மீது தாக்குதல் நடத்திய சில தனிமனிதர்களின் செயல்பாடு. ஒரு நாட்டு அரசின் செயல்பாடும் அந்நாட்டு மக்கள் சிலரின் செயல்பாடும் ஒன்றா என்பதுதான் கேள்வி. நிச்சயம் வெவ்வேறுதான். அதே சமயம் இரண்டுமே ஆபத்தானவை என்பதால் இரண்டும் சேர்த்தேதான் எதிர்க்கப்படவேண்டும்.

சிங்கள இனவாத அரசு, தமிழர்களை அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தக்காக ஒடுக்குவது நியாயமல்ல என்றால் சிங்களர்களை அவர்கள் சிங்களர்கள் என்ற ஒரே காரணத்துக்காகத் தமிழக அரசு ஒடுக்குவதும் நியாயமற்றதுதான்.

ஆனால், நம்மில் பலரால் சிங்களர்களின் செயல்பாடுகளையும் தமிழகத்தின் செயல்பாடுகளையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்து பார்க்கமுடியவில்லை. அதற்கு மனம் ஒப்பவில்லை. பல கேள்விகள் அலைமோதுகின்றன. பல்லாயிரம் பேரைக் கொன்றவர்களும் கல்லெறிபவர்களும் ஒன்றா? இருவருக்கும் ஒரே நீதியா? இருவருடைய குற்றங்களையும் ஒன்றுபோல் பாவித்து தீர்ப்பு எழுதுவது சாத்தியமா? படுகொலை செய்பவர்கள்மீது ஆத்திரப்பட்டு சிறு கல் வீசினால் அது கொடுஞ்செயல் ஆகிவிடுமா?

இந்தக் கேள்விகளுக்கு விடை தேடவேண்டுமானல், இவற்றோடு சேர்த்து இன்னும் இரு  கேள்விகளை நாம் எழுப்பவேண்டும்.

  • ஒரு நாட்டின் அரசையும் அதன் மக்களையும் ஒன்றுபோல் பாவிக்கவேண்டுமா?
  • ஒரு நாட்டின் செயல்பாடுகளுக்கு அந்நாட்டு மக்களும் பொறுப்பேற்கவேண்டுமா?

எனில், அமெரிக்க அரசின் செயல்பாடுகளை எதிர்க்கும் ஒருவர், அமெரிக்கர்கள் அனைவரையும் எதிர்த்தாகவேண்டுமா? சோவியத் ரஷ்யாவை அல்லது செஞ்சீனத்தை ஏற்கும் ஒருவர் ஒவ்வொரு ரஷ்யரையும் ஒவ்வொரு சீனரையும் அரவணைக்கவேண்டுமா?

3

ஒருவருடைய அடையாளம் என்பது என்ன என்னும் ஆதாரமான கேள்வி இங்கே எழுகிறது. The Argumentative Indian புத்தகத்தில் அமர்த்தியா சென் இதுபற்றி விவாதிக்கிறார். ஒருவர் பட்டம் பெற்றவராக இருக்கிறார். அவர் ஒரு வங்கியில் பணிபுரிகிறார். அவருக்கு கால்பந்து பிடிக்கும். அவருக்கு ஒரு குறிப்பிட்ட அரசியல் பார்வை இருக்கிறது. அவர் மாலை நேரங்களில் தன் வீட்டுத் தோட்டங்களைப் பராமரிக்கிறார். அவர் ஒரு கணவர். தன் மகனுக்குத் தகப்பன். அவர் கற்றறிந்தவர். அவர் ஒரு இந்தியர். அவர் ஒரு முஸ்லிம். இதில் எது அவருடைய அடையாளம்? எந்த அம்சத்தை அல்லது அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்மீதான மதிப்பீடு முன்வைக்கப்படுகிறது? எந்த அடையாளத்தைக் கொண்டு அவர் ஏற்கப்படுகிறார் அல்லது நிராகரிக்கப்படுகிறார்? அவரைப் பற்றி நாம் உருவாக்கிக்கொள்ளும் பிம்பம் எத்தகையது? இது மிகவும் முக்கியமானதொரு கேள்வி. காரணம், இந்தப் பிம்பத்தை வைத்துதான் நாம் அவரை எதிர்கொள்கிறோம்.

மஹிந்த ராஜபக்ஷேவை ஒரு  ஃபாசிஸ்டாக அன்றி வேறெப்படியும் நம்மால் கற்பனை செய்யமுடியாததற்குக் காரணம் அவருடைய பிற குணாதிசயங்களைக் காட்டிலும் அவருடைய ஃபாசிச குணம் மேலெழும்பியிருப்பதுதான். அந்தக் குணமே அவரது சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் வடிவமைக்கிறது.

ஒரு ஃபாசிஸ்ட் என்னும் அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷே எதிர்க்கப்படவேண்டியவர். ஒரு போர்க்குற்றவாளி, கிரிமினல் என்னும் அடிப்படையில் தண்டிக்கப்படவேண்டியவர். அவருடைய  அரசியல் நிராகரிக்கப்படவேண்டிய ஒன்று. முறியடிக்கப்படவேண்டிய ஒன்றும்கூட. மஹிந்த ராஜபக்ஷேவின் அடையாளம் இதுவே. அவர் ஒரு சிங்களராகவும் இருக்கிறார். அவ்வளவுதான்.

இதே ரீதியில், மஹந்த ராஜபக்ஷேவின் அரசை ஒரு ஃபாசிஸ்ட் அரசு என்னும் முறையில் எதிர்க்கவேண்டும். மஹிந்த ராஜபக்ஷேவுக்குத் துணை நிற்கும் அவருடைய அரசையும் ராணுவத்தையும் எதிர்க்கவேண்டும். அதே வரிசையில், சிங்களப் பேரினவாதம் எதிர்க்கப்படவேண்டியது. ஆனால் சிங்களர்கள் அனைவரும் எதிர்க்கப்படவேண்டியவர்களா?

அமெரிக்க எதிர்ப்பு என்பது அனைத்து அமெரிக்கர்களையும் எதிர்ப்பது என்று நாம் அர்த்தப்படுத்திக்கொண்டால், நோம் சாம்ஸ்கி, ஹோவர்ட் ஜின், பாப் உட்வர்ட்உள்ளிட்ட அமெரிக்க விமரிசகர்களையும் சேர்த்தேதான் நாம் எதிர்க்கவேண்டியிருக்கும்.

சிங்கள அரசைக் கடுமையாகச் சாடி பலியான லசிந்த விக்கிரமதுங்கவை ஒரு சிங்களர் என்பதற்காக நாம் எதிர்க்கவேண்டுமா என்ன?

எதிர்க்கவேண்டியது சிங்கள இனவாத அரசைத்தான்; சிங்களர்களை அல்ல. இந்த உண்மை தெரிந்தேதான் இங்குள்ள அரசியல் கட்சிகளும் சில இயக்கங்களும் வெறுப்பு அரசியலை மக்களிடையே பரப்பிவிடுகின்றன. அவற்றுக்கு நாம் இரையாகக்கூடாது.

4

sl_1401580fஒரு நாட்டிலுள்ள பெரும்பான்மை இனம் அதன் சிறுபான்மை இன மக்களை எப்படி நடத்துகிறது என்பதைத் தொடர்ச்சியாக கவனித்து, ஒடுக்கப்படும் சிறுபான்மை இனத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவேண்டியது அந்நாட்டு மக்களின் தார்மிகக் கடமையாகும். இந்த அளவுகோலின் அடிப்படையில்தான் இலங்கைப் பிரச்னையை நாம் கவனிக்கவேண்டும். அங்கே ஒருவேளை சிங்களர்கள் சிறுபான்மையினராக இருந்து, பெரும்பான்மை தமிழர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டால், அப்போது நாம் சிங்களர்களுக்கு ஆதரவாகத்தான் குரல் கொடுக்கவேண்டும். நம் இனம், நம் மொழி, தொப்புள்கொடி உறவு போன்ற பதங்களை அப்போது பயன்படுத்தமுடியாது என்றபோதிலும்.

‘சிங்களர்கள்’ என்னும் அடையாளத்தை இப்போது மூன்றாகப் பிரிக்கலாம்.

  • இலங்கை அரசின் இனவாதக் கொள்கையை ஏற்பவர்கள் / அவற்றால் பலனடைபவர்கள்.
  • இலங்கை அரசின் இனவாதக் கொள்கைகளை ஏற்காதவர்கள் / அவற்றை எதிர்ப்பவர்கள்.
  • அரசியல் பார்வை ஏதுமற்றவர்கள்.

சிங்களப் பேரினவாதத்துக்கு எதிரான நம்  போராட்டத்தில் இரண்டாவது பிரிவினரை நாம் ஒன்றிணைத்துக்கொள்ளவேண்டும்.

மூன்றாவது பிரிவினரை வென்றெடுக்கவேண்டும்.

முதல் பிரிவினர் எதிர்க்கப்படவேண்டியவர்கள்.

எப்படிப் பார்த்தாலும், சிங்களர்களோடு உரையாடாமல், அவர்களை இணைத்துக்கொள்ளாமல், அவர்களோடு முரண்படாமல் இலங்கைத் தமிழர் போராட்டத்தை முன்னெடுக்கமுடியாது. சிங்களர்களை அவர்கள் சிங்களர்கள் என்னும் ஒரே காரணத்துக்காக ஒதுக்குவது பிரச்னையின் தீவிரத்தை அதிகரிக்கவே செய்யும்.

சிங்கள அரசின்மீதான கோபத்தை சிங்களர்கள்மீது செலுத்துவதும் அதற்குத் துணை போவதும் சிங்கள அரசுக்கு சாதகமான செயல்பாடாகத்தான் இருக்கும். அரசியல் பார்வை ஏதுமற்ற சிங்களர்களும்கூட தங்கள் அரசோடு வேறுவழியின்றி ஒன்றிப்போகும் அபாயமும் ஏற்படும்.

ஆட்சியாளர்களைப் போலன்றி, பாட்டாளி வர்க்கம் சர்வதேசத்தன்மை கொண்டிருக்கவேண்டியது அவசியம். மாணவர்கள் போராட்டமாக இருந்தாலும் சரி, மக்கள் போராட்டமாக இருந்தாலும் சரி. பாதிக்கப்பட்ட சிங்களர்களுக்கும் சேர்த்து குரல் கொடுத்து அவர்களையும் ஒன்றிணைத்து போராடுவதன்மூலம் மட்டுமே ஒடுக்கப்படும் தமிழர்களுக்கு விடுதலையைப் பெற்றுத்தரமுடியும்.

0

அரை உண்மைகளின் அபாயம்

images (3)லயோலா கல்லூரி மாணவர்களின் ‘தன்னெழுச்சியான’ போராட்டத்தைத் தொடர்ந்து தமிழகமெங்கும் புரட்சி அலை பொங்கி எழ ஆரம்பித்திருக்கிறது. ஏற்கெனவே கொந்தளித்துக் கொண்டிருந்த இணையவெளியைத் தொடர்ந்து இப்போது ஊடக வெளியும் கொதிக்கத் தொடங்கியிருக்கிறது. காங்கிரஸ், திமுகவை தேர்தலில் தோற்கடிக்க இந்த ‘எழுச்சி’ உதவும் என்பதால், அதிமுக புன்முறுவலுடன் இந்த போராட்டங்களை மறைமுகமாக ஊக்குவித்துவருகிறது. ஆனால், ஜெயலலிதாவின் கையை மீறி இந்தப் போராட்டம் போக அனைத்து வாய்ப்புகளும் உண்டு. இந்தப் போராட்டத்தின் சில கோரிக்கைகள்: இலங்கை அரசை சர்வதேச குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டும். வெறும் போர்க்குற்றம் அல்ல; இனப்படுகொலை செய்த அரசு என அதற்கு தண்டனை வாங்கித் தரவேண்டும். இந்தியா இலங்கையுடன் அனைத்து பொருளாதார உறவுகளையும் துண்டித்துக் கொள்ளவேண்டும். இந்தியாவுக்கும் இந்தப் பேரழிவில் முழு பங்கு உண்டு. தமிழகத்துக்கு என்று தனியாக வெளியுறவுத்துறை அமைக்கப்படவேண்டும். இதையெல்லாம் செய்யவில்லையெனில் நாங்கள் வரி கட்டமாட்டோம்.

இந்தத் ‘தன்னெழுச்சியான’ கோரிக்கைகள் மாணவர்களுடையதுதான் என்ற நம்பிக்கை அனைவருக்கும் வரவேண்டும் என்பதற்காக சில மாணவத்தனமான கோரிக்கைகளும் இடம்பெற்றிருக்கின்றன. மற்றபடி இந்த போராட்டத்தின் முக்கிய நோக்கம், இலங்கை செய்தது இனப்படுகொலை. இந்தியாவும் அதற்கு முழு உடந்தை. இந்த இரண்டு விஷயங்களைத் தமிழக மக்கள் மத்தியில் பரப்பவேண்டும் என்பதுமட்டுமே.

மிகவும் உணர்வுபூர்வமான இந்தப் பிரச்னையில் தமிழகத்தில் இப்போது ஒருவித பாசிச மாற்று அமைப்பு கட்டமைக்கப்பட்டுவருகிறது. இலங்கைப் பிரச்னையில் தனி ஈழத்துக்குக் குறைவாக யார் பேசினாலும் அவர்கள் தமிழினத் துரோகியே என்ற நிலையை மெள்ள உருவாக்கிவருகிறார்கள். இலங்கை அரசு மிக மோசமான குற்றங்களை இழைத்திருப்பது உண்மையே. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கும் ஒருவர் வேறு சில விஷயங்களையும் கட்டாயம் பேசியாக வேண்டும்.

இலங்கை ஈழப் பிரச்னை என்பது நீண்ட நெடும் வரலாறைக் கொண்டது. பல்வேறு ஊடுபாவுகள் கொண்டது. ஈடுபட்ட அனைத்து தரப்புகளின் கைகளிலும் ரத்தக் கறை உண்டு. ஆனால், அவை எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஒற்றை குற்றவாளி (சிங்கள-இந்திய கூட்டணி) மட்டும் கட்டம் கட்டப்படுவதற்கான சர்வதேச அரசியல் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. விடுதலைப் புலிகள் செயல்பட்டுவந்த காலகட்டத்தில் அந்த அமைப்பை தீவிரவாத அமைப்பு என்று சொல்லி இலங்கைக்கு ஆதரவு அளித்துவந்த அமெரிக்க அரசு இன்று யோக்கியன் போல் நீதிபீடத்தில் ஏறி அமர்ந்து இலங்கையைக் குற்றம்சாட்டுகிறது. அதோடு நின்றுவிடாமல் இந்திய அரசையும் சேர்த்தே குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் தந்திரத்தையும் சர்வதேச அரசியல் சக்திகள் செய்ய ஆரம்பித்திருக்கின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரையில் மிக மோசமாக இந்தச் சதி வலையில் சிக்க வைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இது தொடர்பான முழுச் சித்திரமும் கிடைக்கவேண்டுமென்றால், சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்தே ஆரம்பிக்கவேண்டும். பாகிஸ்தானின் அங்கமாக இருந்த கிழக்கு பாகிஸ்தானை பங்களாதேஷாகப் பிரித்து மிகப் பெரிய சாதனையைச் செய்திருந்தார் இந்திராகாந்தி. இந்திய ராணுவத்தினரை தெய்வமாகத் தொழும் பங்களாதேஷிகள் இன்றும் உண்டு (அந்தப் போரில் அப்படி ஒரு ரட்சகனாக இருந்த இந்திய ராணுவம் இன்று என்ன நிலையை அடைந்திருக்கிறது… இதற்கு யார் காரணம் என்ற கேள்விகள் மிகவும் முக்கியமானவை).

கிழக்கு பாகிஸ்தானைத் தனி நாடாகப் பிரித்துவிட்டதற்குப் பழிவாங்கும் நோக்கில் பஞ்சாபை இந்தியாவில் இருந்து பிரிக்கவேண்டும் என்ற பெயரில் தீவிரவாத சக்திகள் தூண்டிவிடப்பட்டன. அதை அடக்க இந்திரா எடுத்த முயற்சிகள் அவருடைய உயிருக்கு உலை வைத்தன. அதோடு பஞ்சாப் பிரச்னையும் மெள்ள முடிவுக்குவந்தது (மிஷன் ஆல்ரெடி அக்கம்ப்ளிஸ்ட்). ஏற்கெனவே, மூத்த இளவரசர் சஞ்சய் காந்தி ‘விமான விபத்தில்’ கொல்லப்பட்டிருந்தார். அடுத்ததாக, ஆட்சிக்கு வந்த இளைய இளவரசர் ராஜீவ் காந்தி தன் அன்னையின் வழியில் இலங்கை விஷயத்தில் ராஜ தந்திரத்துடன் செயல்பட்டு சர்வதேச அளவில் புகழ் பெற வழிநடத்தப்பட்டார்.

கிழக்கு பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தானில் இருந்து இந்திய நிலப்பரப்பால் பிரிக்கப்பட்டிருந்ததால் தனிநாடாக உருவாக்குவது எளிதான செயலாக இருந்தது. இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழர்களின் நலன் பாதுகாக்கப்படவேண்டும்; அவர்களுக்கு மாநில சுய ஆட்சி பெற்றுத் தரவேண்டும் என்பதுதான் நியாயமான நோக்கம். எனவே, ராஜீவ்காந்தி அந்த உடன்பாட்டுக்கு ஆத்மார்த்தமாக முயன்றார். இலங்கையின் வேண்டுகோளின் பேரில் அமைதிப்படை என இந்திய ராணுவத்தை அங்கு அனுப்பினார். தனி ஈழம் என்பது மிகவும் நியாயமற்ற கோரிக்கை என்பதுதான் இந்தியாவின் கொள்கை. இந்தியா மட்டுமல்ல உலகின் பெரும்பாலான நாடுகளின் தீர்மானமும் அதுவே.

ஆனால், இலங்கை இந்த இடத்தில் தன் நரித்தனத்தை காட்டியது. இந்தியாவை இந்த போரில் சிக்க வைக்க வேண்டும் என்ற சர்வதேச தந்திரத்தின் அங்கமாக அது இந்திய அமைதிப் படையை தன் நாட்டுக்குள் முதலில் அனுமதித்தது. ஆனால், அடுத்தகட்டமாக தன்னுடைய இறையாண்மைக்கு இழுக்காகிவிட்டது என்ற போர்வையில் இந்திய ராணுவத்தைத் துரத்தி அடிக்கத் தீர்மானித்தது. தாற்காலிக உடன்பாடாக விடுதலைப் புலிகளுடன் நட்புறவு கொண்டு, இந்திய ராணுவம் செய்தவற்றை விட மிக அதிகமான குற்றச்சாட்டுகளை அதன் மீது சுமத்தி அதை அங்கிருந்து அகற்றினார்கள். அடுத்த தேர்தலில் ராஜீவ் வென்றுவிடுவார் என்ற நிலை ஏற்பட்டபோது, மீண்டும் இந்திய அமைதிப் படையை அனுப்பிவிடுவாரோ என்ற பயத்தில், விடுதலைப் புலிகள் ராஜீவையும் அப்பாவிக் காவலர்களையும் இந்திய மண்ணில் கொன்றார்கள். அதுவரை விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் ஆதரவாக இருந்த தமிழக மாநிலக் கட்சிகளும் மக்களும் விடுதலைப் புலிகளுக்கு எதிர்நிலையை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மூன்று ‘எதிர்பாராத’ மரணங்களைத் தொடர்ந்து அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி நின்ற சோனியாவின் மீது ‘விதிவசமாக’ ஆட்சிப் பொறுப்பு திணிக்கப்பட்டது. (முன்னாள்) இந்தியப் பிரதமரைக் கொன்றதற்காகவும் தமிழகத்தில் பிரிவினை சக்திகள் பலம் பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவும் விடுதலைப் புலிகளை ஒழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய காங்கிரஸ் அரசு, இலங்கை அரசுக்கு விமான, கடல் சார்ந்த படைகளின் உதவியைத் தந்தது. முழுக்க முழுக்க விடுதலைப் புலிகளை ஒழிக்கத் தந்த இந்த உதவியானது இலங்கையில் நடந்த இன்ன பிற வன்முறைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு இன்று இந்தியாவும் போர் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கிறது. நாளை இந்தியா மீதும்கூட இனப்படுகொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படலாம். ஏற்கெனவே ஆரிய திராவிட கதைகள் வேறு இங்கு வலுவாக வேருன்றித்தான் இருக்கின்றன.

இந்தியா நிச்சயமாக இலங்கைக்கு எதிரான கடுமையான நிலைப்பாடை எடுக்கவே செய்யாது. அது முடியவும் செய்யாது. இலங்கை அரசு உள்நாட்டில் கலகம் விளைவித்தவர்களை அடக்கியிருக்கிறது… அங்கு சீனா காலூன்ற இடம் கொடுத்துவிடக்கூடாது… தமிழக பிரிவினை சக்திகள் வளர இடம் கொடுக்கக்கூடாது என்பது போன்ற வெளிப்படையான காரணங்களில் ஆரம்பித்து, ராஜிவ் கொல்லப்பட்டபோது அருகில் எந்த காங்கிரஸ் தலைவரும் இல்லாமல் போனது எப்படி? சம்பவ இடத்தில் கிடைத்த முக்கிய வீடியோ எப்படி மாயமாக மறைந்தது என்ற விடைதெரியாத கேள்விகள் வரை பல காரணங்கள் இருக்கின்றன. எனவே, இந்தியா கடைசிவரை இலங்கைக்கு சாதகமாகவே நடந்துகொள்ளும். சர்வதேச அரங்கிலும் தமிழ் மக்கள் மனங்களிலும் இந்தியா மீதான மதிப்பு மேலும் குறையவே செய்யும்.

இப்படியான சூழலில் லயோலா கல்லூரி மாணவர்கள் ‘தன்னெழுச்சியாக’ போராட்டத்தை மூன்று மிக அபாயகரமான நோக்கங்களைக் கொண்டு ஆரம்பித்திருக்கிறார்கள். முதலாவதாக இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று சொல்கிறார்கள். இது முழுக்க முழுக்க தவறானது. கிழக்குப் பகுதி தமிழர்கள், மலையகத் தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்கள் என பெரும்பான்மையான தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்களே. விடுதலைப் புலிகளுடைய கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதியில் மட்டும்தான் இலங்கை ராணுவம் தன் தாக்குதலை நிகழ்த்தியிருந்தது. கொழும்புவிலும் பிற இலங்கையின் பகுதிகளிலும் ஈழத்தைவிட மிக அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் வசித்து வந்திருக்கிறார்கள். இப்போதும் வசித்து வரத்தான் செய்கிறார்கள். இனப்படுகொலை என்றால் அவர்களும் சேர்த்தே கொல்லப்பட்டிருப்பார்கள். ஆனால், இலங்கை அரசு அவர்களை ஒன்றும் செய்யவில்லை.

இரண்டாவதாக, இந்தப் போரில் விடுதலைப் புலிகள் செய்த அட்டூழியங்கள் குறித்து சிறு குறிப்பு கூடக் கிடையாது. பொய்யைவிட அரை உண்மைகள் மிக ஆபத்தானவை. இலங்கை – ஈழப் பிரச்னையில் இலங்கை அரசு எந்த அளவுக்கு வன்முறையில் ஈடுபட்டதோ அதற்கு சற்றும் குறையாத அட்டூழியங்களை விடுதலைப் புலிகள் இயக்கமும் செய்து வந்திருக்கிறது.

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் யார் ஆண்டது… அதற்கு முன் யார் ஆண்டது என்பதெல்லாம் ஒருவகையில் நிரூபிக்க முடியாத உண்மைகள். நவீன அரசு எப்போது எந்த ஒப்பந்தத்தின் பேரில் உருவாகிறதோ அதன் அடிப்படையில்தான் சிந்தனைகளும் செயல்பாடுகளும் இருக்கவேண்டும். சேர சோழ பாண்டியர்களின் போர்களால் நிறைந்ததுதான் தமிழக சரித்திரமும். நாளையே மதுரையை எங்களுக்குப் பிரித்துக்கொடு என்று பாண்டியர்கள் போராடினால் தமிழ் இறையாண்மை அரசு அவர்களை ஒடுக்கத்தான் செய்யும். தங்களுடைய நலன்கள் போதிய அளவுக்கு கவனிக்கப்படவில்லை என்று கருதும் பிரிவினர் தங்கள் எதிர்ப்பை ஆதி முதல் அந்தம் ஜனநாயக முறையில் வெளிப்படுத்தி உரிமைகளை வென்றெடுக்கத்தான் முயற்சி செய்யவேண்டும்.

கேவலம் ஒரு கருத்துக் கணிப்பில் தனக்கு மக்கள் ஆதரவு இல்லை என்ற விஷயத்தை வெளியிட்ட அற்ப காரணத்துக்காக மூன்று தமிழ் அப்பாவிகளை உயிருடன் கொளுத்திய சம்பவத்தையும் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டதற்கு பேருந்தை எரித்து தமிழ் மாணவிகளைக் கொன்றவர்களையும் இந்த இடத்தில் நினைத்துப் பார்ப்பது நல்லது. இவ்வளவு ஏன், சாதிப் பிரச்னைகளில் கொல்லப்படுபவர்கள் எல்லாருமே அப்பாவித் தமிழர்கள்தானே. சாராயக் கடை திறந்து மெள்ள மெள்ளக் கொல்லப்படுவதும் தமிழர்கள்தானே. சிறு எதிர்ப்புகூட தெரிவிக்காத நிலையிலேயே இந்தப் படுகொலைகள் என்றால் நாட்டைப் பிரித்துக் கொடு என்றால் நம் தமிழ் அரசு நம் தமிழ் மக்களை எப்படி நடத்தும் என்பதை யோசித்துப் பார்த்துவிட்டு அடுத்த வார்த்தைகளைப் பேசுவது நல்லது. அகதிகளாக இங்கு வந்து ஆண்டுக்கணக்காக துன்பத்தில் தவிப்பவர்களுக்கு இந்த தமிழினத்தலைவர்களும் காவலர்களும் இனமான எழுச்சி நாயகர்களும் செய்து கிழித்தது என்ன என்பதையும் யோசித்துப் பார்க்கவேண்டும்.

இத்தனைக்கும் தமிழகத்தில் கூட தாய் மொழிக் கல்வி இருந்திராத நிலையில் ஈழத்தில் முழுக்க முழுக்க தமிழிலேயே மருத்துவக் கல்லூரி வரை படித்து முடிக்க முடிந்திருந்தது. நீதிக் கட்சி தொடங்கியபோது சொற்ப எண்ணிக்கையிலான பிராமணர்கள் அரசுப் பணிகளில் பெருமளவு இடத்தைப் பிடித்திருந்ததுபோல் இலங்கையில் சிறுபான்மையாக இருந்த தமிழர்கள் (சுமார் 15%)  அரசுப் பணிகளில் 40-50% இடங்களில் இருந்தார்கள். இலங்கை அமைச்சகத்திலும் தமிழர்கள் கணிசமாக இடம்பெற்றிருந்தனர். இவையெல்லாம் 1983-ல் பேரழிவு ஆரம்பிப்பதற்கு முந்தைய நிலை. அப்படியாக தனி நாடு கோருவதற்கான எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில்தான் விடுதலைபுலிகள் போராட்டத்தை அதுவும் மிக மூர்க்கமான வன்முறைப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.

இஸ்லாமியர்களைப் போட்டது போட்டபடி துரத்தியடித்ததில் இருந்து அவர்களை இலங்கை அரசின் கைக்கூலிகள் என்று கண்டந்துண்டமாக வெட்டியும் வெடி குண்டு வைத்தும் கண்மூடித்தனமாகக் கொன்றழித்திருக்கிறார்கள். பாலசந்திரனை விட மிகச் சிறிய குழந்தைகளையெல்லாம் கூட மசூதியில் தொழுது கொண்டிருந்தபோது நேருக்கு நேர் நின்று சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். இதைவிட தமிழ் இனத்துக்குள்ளேயே பிற போராட்டக் குழுவினரை சரமாரியாகக் கொன்று குவித்திருக்கிறார்கள். ஆயுதக் கடத்தலில் ஆரம்பித்து அனைத்துவகையான திரைமறைவு வேலைகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். இவை குறித்து ஒரு வார்த்தைகூட இன்றைய போராட்டத்தில் முன்வைக்கப்படவில்லை.

மூன்றாவதாக, இந்தியாவை இந்தப் போரில் பிரதான குற்றவாளியாக இணைக்கும் பணியை வேகத்துடன் முன்னெடுத்திருக்கிறார்கள். ஏற்கெனவே, வை.கோ. பழ நெடுமாறன், சீமான், மே 17 இயக்கம் போன்றவர்களுக்கு இடப்பட்ட பணியும் இதுவே. ‘தன்னெழுச்சியாகப்’ போராட முன் வந்திருக்கும் லயோலா கல்லூரி மாணவர்களும் இதையே முன்வைத்திருக்கிறார்கள். அப்படியாக இலங்கையைச் சீரழித்தது போதாதென்று இந்தியாவையும் அழிக்கும் நோக்கில்தான் இது ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. மிகையான, பாதி உண்மைகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ரத்த சரித்திரத்தின் இந்த இரண்டாம் பாகம் சரியாக இனங்காணப்பட வேண்டும். ஒரு பெரும் கொடுங்கனவின் தொடக்க நிமிடங்கள் இவை. நாளைய பெரும் வன்முறைக்குத் தோதாக இது போன்ற நடவடிக்கைகளால் நிலம் தயார்படுத்தப்பட்டுவருகிறது. சில நோய்களை வரும் முன்பே தடுத்துவிடவேண்டும். வந்த பிறகு மீட்சிக்கான வழியே கிடையாது.

இலங்கைக் கடற்படையால் தமிழக/இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக பேசப்படுபவற்றைக் கொஞ்சம் சீர்தூக்கிப் பார்த்தாலே அரை உண்மை எவ்வளவு அபாயகரமானது என்பது புரிந்துவிடும். தமிழகப் பகுதிகளில் மீன்வளம் குறைந்து வருவது, தமிழக மீனவர்கள் வலிமையான மோட்டர் படகுகளைப் பயன்படுத்துவது, இலங்கை மீனவர்களுக்கு அவர்களுடன் போட்டிபோட முடியாத நிலை, தமிழ மீனவர் குழுக்களுக்குள் நடக்கும் சண்டைகள் கூட இலங்கை அரசின் மீது பழிபோடப்படுதல், அரசியல் உள்நோக்கத்துடன் மிகைப்படுத்திக் கூறப்படும் நிகழ்வுகள், கைது போன்ற இலங்கைக் கடற்படையின் முதல் கட்டத் தொடர் எச்சரிக்கைகள், மாற்று மீன் பிடித் தடங்களை உருவாக்குதல், கடல் பாசிகள் வளர்த்தல் என எதுவுமே பேசப்படாமல் வெறுமனே இலங்கை அரசு தமிழக/இந்திய மீனவர்களைக் கொல்கிறது என்ற ஒற்றைக் குற்றச்சாட்டு பிரச்னையை மேலும் பெரிதாக்க மட்டுமே செய்யும்.

பஞ்சாபில் ஆரம்பிக்கப்பட்ட காலிஸ்தான் பிரச்னை இந்திய அரசால் ஓரளவுக்கு ”நல்ல முறை’யில் தீர்க்கப்பட்டிருக்கிறது. என்றாலும் காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் என எல்லையோரப்பகுதிகளில் தீராத வன்முறைகள் தலைவிரித்தாடுகின்றன. இப்போது ஈழத்தையும் உள்ளடக்கிய தனித் தமிழ் நாடு என்ற சாகசப் போர் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

தமிழக, இந்திய அரசும் அதன் அதிகாரவர்க்கமும் இந்தப் பிரச்னையைக் கையாளும் திறமை கொண்டவர்களாகத் தெரியவில்லை. தங்கள் தரப்புக்கான எண்ணெயை ஊற்றி பிரச்னையைக் கொழுந்துவிட்டெரியவே செய்வார்கள். அல்லது அந்த திசையில் உளவுத்துறையால் வழிநடத்தப்படுவார்கள். மக்களாட்சியில் மக்கள்தான் மன்னர்கள்… அவர்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள்தான் அடுத்தகட்ட மன்னர்கள் என்பதுதான் பொதுவான நம்பிக்கை. ஆனால், உண்மையில் தேசங்கள் இவர்களால் ஆளப்படுவதில்லை. சர்வதேச வஞ்சக உளவாளிகளால் அது ஆளப்படுகிறது. பிரிவினைவாதிகளுக்கு உணவிடும் அவர்கள்தான் இறையாண்மையைக் கட்டிக் காக்கவேண்டும் என்ற பேரில் அரசையும் ஆட்டுவித்துவருகிறார்கள். சதுரங்கத்தின் இரண்டு பக்கமும் அவர்களே அமர்ந்து ஆடும் இந்த ஆட்டத்தில் உருட்டப்படும் காய்கள்தான் நாமும் நம் தலைவர்களும்.

பாரத மாதாவின் முகமூடிக்குப் பின்னால் இன்றிருப்பது சூனியக்காரி. நாம் சூனியக்காரி மீது எறியும் அம்புகள் எல்லாம் கேடயமாகப் பிடிக்கப்பட்டிருக்கும் பாரத மாதாவின் தேகத்தைத்தான் குத்திக் கிழிக்கின்றன. மீட்பு தேடி ஓடும் நம்மை, புதிய அவதாரமெடுத்து அரவணைக்கக் காத்திருப்பதோ தெய்வ வடிவில் இருக்கும் சாத்தான். சூனியக்காரிக்கும் சாத்தானுக்கும் இடையில் சிக்கிக் கொண்டிருக்கும் நம் பாரத தேசத்தின் எதிர்காலம் அச்சமூட்டுவதாகவும் வேதனை நிறைந்ததாகவும் இருக்கிறது.

புதிய உலகமயமாக்கம்: யார் பலன் பெறுகிறார்கள்?

images (2)200 ஆண்டுகளுக்கு முன்பாக, ஐரோப்பாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் தொழிற்புரட்சியை மேம்படுத்துவதும் மனிதத்தன்மையை ஏற்படுத்துவதும்தான் மிகப் பெரிய சவாலாக இருந்தது. 150 ஆண்டுகளுக்கு முன்பாக, தொழிற்சாலைகள் மிகுந்த நகரங்களில் அதிக எண்ணிக்கையில் குடி பெயர்ந்த மக்களுக்கு பாதுகாப்பையும், நகரங்களில் வாழ்வதற்கேற்ற சூழலை ஏற்படுத்துவதும் சவாலாக இருந்தது. 75 ஆண்டுகளுக்கு முன்பாக, மக்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தைப் போக்குவதே சவாலாக இருந்தது. ஆனால் இன்று உலகம் எதிர் கொள்கிற மிகப் பெரிய சவால், புதிய உலகமயமாதல்தான் என்கிறார் The Price of Civilisation நூலாசிரியர் ஜெஃப்ரி சாக்ஸ் (Jeffrey Sachs).
உலகமயமாதல் எளிதாக சாத்தியமானதற்கு என்ன காரணங்கள்?  உலகமயமாதலை அமெரிக்கா சரியாக எதிர் கொண்டுள்ளதா? மேலும், இப்புதிய உலகமயமாதலால் பலனடையும் நாடுகள் எவை? உலகமயமாதலின் தாக்கத்தால் ஏற்படப் போகும் உலக அரசியல் மாற்றங்கள் என்னவாக இருக்கும்? எம்மாதிரியான சமூகம் இதனால் பலன் பெறுகிறது? புதிய உலகமயமாதல் ஏற்படுத்திய தாக்கத்தால் ஏற்படும் விளைவுகள் என்ன? அமெரிக்கா இனிவரும் காலங்களில் உலகமயமாதலை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும்? இது போன்ற கேள்விகளை இந்தப் புத்தகம் எதிர்கொள்கிறது.
அதென்ன புதிய உலகமயமாக்கல்?
வணிகம், முதலீடு மற்றும் உற்பத்தி கூடங்கள் ஆகியவற்றின் மூலமாக உலகம் இணைக்கப்பட்டிருப்பதற்கு புதிய உலகமயமாதலின் தாக்கம்தான் காரணம். உலகமயமாதல் என்பது ஏதோ கடந்த 40 வருடங்களில் ஏற்பட்டதல்ல. கடந்த 2000 ஆண்டுகளாக பண்டமாற்று முறைகளும் வணிகமும் நடந்தேறி உள்ளன. சீனாவிலிருந்து பட்டு ஐரோப்பியப் பேரரசுகளுக்கு ஏற்றுமதியாகியுள்ளதும் அதற்கு மாற்றாக சீனா தங்கத்தைப் பெற்றுள்ளது என்பதும் வரலாறு. 15ஆம் நூற்றாண்டில் கிறிஸ்டோபர் கொலம்பஸ், வாஸ்கோடகாமா ஆகிய இருவரும் உலகத்தின் அனைத்துப் பகுதிகளையும் வணிகத்துக்கு அதாவது கடல் வழி வணிகம் செய்ய பாதை அமைத்துத் தந்தார்கள். ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்கா மூன்றுக்குமான கடல் வழி இணைப்புகளை கண்டறிந்தவர்கள் இவர்களே.
உலகமயமாதலின் டிஜிட்டல் காலம்தான் புதிய உலக மயமாதல் என்கிறார் ஜெஃப்ரி. தொழில் நுட்ப த்தின் துணை கொண்டும் , பொருளாதார இணைப்புகள் மூலமும் ஏற்பட்ட மாற்றங்களே புதிய உலகமயமாதலுக்கான அடிகோல். உலகப் பொருளாதாரம் முன்பைவிட இப்போது அதிக அளவிற்கு இணைக்கப்பட்டிருப்பதற்குக் காரணம், உலக அளவில் குறைந்த செலவில்  விமானத்தின் மூலமும், கப்பல் சேவையின் மூலமும் பொருட்களை ஏற்றுமதி/இறக்குமதி  செய்ய முடிகிறது. மேலும், வணிகம் சார்ந்த அத்தனை விடயங்களையும் கணினியில் சேமித்து வைப்பதும், செய்முறை விளக்கங்களை இணையம் மற்றும் கைபேசிகள் மூலமாகவோ,  நேரடியாகவோ, Online மூலமாகவோ இன்று எளிதாகப் பெற இயலுகிறது.
1950களில் பொருட்களை உற்பத்தி செய்யும் பெரும்பாலான நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவை  ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பானில்தான்  இருந்தன. இந்த நாடுகள்  உற்பத்திக்குத் தேவையான உதிரி பாகங்களை மட்டும் மற்ற நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்து கொண்டன. ஆனால், புதிய உலகமயமாதலுக்குப் பிறகு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவை உலகின் அனைத்து நாடுகளிலும் குறிப்பாக சீனா, இந்தியா மற்றும் வளரும் நாடுகளில் அமைந்துள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள், இந்த வளரும் நாடுகளில் பொருட்களை தயாரித்தல் அல்லது assembly என தொழிற்சாலைகளை நிறுவியுள்ளன.
குறிப்பாக மின்னியல் துறையென எடுத்துக் கொண்டால் Schneider Electric , ABB, Alstom, Siemens போன்ற ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களும், GE, Exxon Mobil, Wall mart, Mc donalds, Ford Motor company, IBM என்று பல அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களும், ஜப்பானின் பன்னாட்டு நிறுவனங்களான  Toyota , Mitsubishi, Hitachi ஆகியவையும் உலகின் பெரும்பாலான நாடுகளில் தங்கள் தொழிற்சாலைகளை அமைத்துள்ளன.
புதிய உலகமயமாதலின் விளைவாக பன்னாட்டு நிறுவனங்கள் அதிக வணிகத்தையும் அதிக லாபத்தையும் அடைந்தன. உதாரணமாக, GE நிறுவனம் 1,33, 000 பணியாளர்களை அமெரிக்காவில் கொண்டிருந்தது. ஆனால் மற்ற 60 நாடுகளில் அந்நிறுவனத்தின்மூலம் பணி செய்தவர்களின் எண்ணிக்கை 1,54,000 ஆகும். அந்த ஆண்டில் GE நிறுவனம் அமெரிக்காவில் 75 பில்லியன் டாலர்களுக்கு வணிகம் செய்ததென்றால் மற்ற நாடுகளில் 83  பில்லியன் டாலர்களுக்கும் மேலாக வணிகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது என்கிறார் ஜெஃப்ரி. மேலும் புதிய உலகமயமாதலுக்கு முன்பாக, 1960ல் 5 % மட்டுமே லாபமீட்டிய பன்னாட்டு நிறுவனங்கள் இன்று 25 % அளவிற்கு லாபமீட்டுகின்றன.
தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி, போக்குவரத்து தொழில் நுட்ப வளர்ச்சி, இணைய வளர்ச்சி மற்றும் உலக அரசியல் மாற்றங்களின் வாயிலாகவே புதிய உலகமயமாதல் பரவலாகியுள்ளது.  ஐரோப்பிய காலனியாதிக்கத்திலிருந்தும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரும்தான் பல நாடுகள் சுதந்தரமடைந்தன. அதன் பிறகே பல நாடுகள் பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணம் செய்தன. 1960ன் தொடக்கத்தில் ஆசிய நாடுகளான வட கொரியா, தைவான், ஹாங் காங் போன்றவை உலகச் சந்தை வணிகத்தில் ஈடுபட ஆரம்பித்தன. அதாவது, அந்நிய முதலீட்டை தொழிற்சாலைகளில் குறிப்பாக ஏற்றுமதி செய்கிற பொருள் சார்ந்த வணிகம் செய்ய அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றன.
1978 ல் சீனா உலகமயமாதலைத் திறந்துவிட்டிருந்தது. அதன் மூலம் நிதி, உலக வணிகம், அந்நிய முதலீடு என தங்கள் தேசத்தை புதிய பொருளாதாரக் கொள்கை என்றழைத்துக் கொண்டு வரவேற்றது. அதே வழியை  இந்தியா 1991 ல் பின்பற்ற ஆரம்பித்தது. இப்போது உலகின் அனைத்து நாடுகளும் வணிகம் , நிதி மற்றும் (பொருள்) உற்பத்தி என உலகமயமாதலின் மூலம் பிணைக்கப்பட்டுள்ளன.
புதிய உலகமயமாதலால் ஐக்கிய அமெரிக்க நாடுகள், ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைக் காட்டிலும் சீனா, இந்தியா, பிரேசில் மற்றும் வளரும் நாடுகள் அதிகம் பலனடைகின்றன என்கிறார் ஜெஃப்ரி. சீனா, இந்தியா போன்ற நாடுகள் இதன் மூலம் அதிக பொருளாதார வளர்ச்சியை அடைகின்றன. ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் மட்டுமே பொருட்கள் உற்பத்தியையும் (Goods ), சேவையையும் (Services)  ஒரு காலத்தில் அளித்து வந்தன. ஆனால் இன்று வளரும் நாடுகளில் பொருள் உற்பத்தியையும் சேவைகளையும் செய்யும் அனைத்து வசதிகளும் வந்து விட்டன. மேலும் உற்பத்தி செய்த பொருட்களை High Income Economies மூலம் ஏற்றுமதி செய்து அதிக பொருளாதார வளர்ச்சியை இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் பெறுகின்றன.
புதிய உலகமயமாக்குதலால் உற்பத்தி, சேவை ஆகிய  இரண்டும்  குறைந்த சம்பளத்திற்குத் தொழிலாளிகள் கிடைக்கும் நாடுகளுக்கும், பொருள் தேவையிருக்கும் நாடுகளுக்கும் அனைத்து உற்பத்தி நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இடம் பெயர்ந்ததால் அமெரிக்காவில் அதிக வேலை வாய்ப்பின்மையும் வருமானமும் குறைந்துள்ளன என்கிறார் ஜெஃப்ரி சாக்ஸ்.
1998-2009 காலகட்டத்தில், அமெரிக்காவில்  2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பின்மை ஏற்பட்டது. டிசம்பர் 2010 ஆம் ஆண்டின் கணக்கின் படி, 19.3 % பேர் வேலை வாய்ப்பின்றியோ, அல்லது பகுதி நேரப் பணி மட்டுமே செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக 8.3 % பேர் வேலை வாய்ப்பின்றி இருந்தனர். இன்று அது இரு மடங்கிற்கும் மேலாக சென்றதற்கு முக்கியக் காரணம் புதிய உலகமயமாக்கலே.
புதிய உலகமயமாதலுக்குப் பிறகு அமெரிக்காவில் GDP விகிதாச்சாரம் குறைந்துள்ளது. சேமிப்பு பழக்கம் அறவே இல்லாமல் போனது. பொருட்களை வாங்கி குவிக்கும் நுகர்வுக் கலாசாரத்திற்கு மக்கள் தள்ளப்பட்டார்கள். ஊதியம் கொடுப்பதில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, வேலை வாய்ப்பின்மை பெருகியுள்ளது என்கிறார் நூலாசிரியர்.
1900 – 1998  காலத்தில் உற்பத்தி நிறுவனங்களில் 17.2 மில்லியன் பணியாளர்கள் இருந்தார்கள். அந்த எண்ணிக்கையில் 1998 – 2004 காலத்தில் உற்பத்தி நிறுவனங்களில் 3.2 மில்லியன் பணியாளர்களுக்கு வேலையின்மை ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணம், பெரும்பாலான உற்பத்தி நிறுவனங்கள் சீனாவிலும் இந்தியாவிலும் உள்ளன. அமெரிக்காவில் உற்பத்தி செய்வதற்குப் பதிலாக, உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்து அதிக லாபம் பார்க்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள்.
2009ம் ஆண்டில், சீனா அமெரிக்காவிற்கு 296 பில்லியன் டாலருக்கு பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. அதாவது அமெரிக்கா 2.1 % GDP அளவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. உற்பத்தி நிறுவனங்களில் 19% அமெரிக்காவைக் காட்டிலும் அதிகமாக உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கணினி, தகவல் தொழில்நுட்ப சாதனங்கள், தொலைக்காட்சி, எலக்ட்ரானிக் பொருட்கள், பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள், செருப்புகள், ஆடைகள் மற்றும் மர வகையிலான உற்பத்திப் பொருட்களை,  அதிகமாக சீனாவே ஏற்றுமதி செய்து வருகிறது.
புதிய உலகமயமாதலுக்குப் பிறகு சீனாவின் வளர்ச்சி அபரிமிதமானது. அது வெறும் பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல. உலக அரசியலிலும் மிகப் பெரிய வளர்ச்சியை சீனா அடைந்துள்ளது. 2010 ஆம் ஆண்டின் கணக்கின்படி, சீனா ஜப்பானைக் காட்டிலும் முன்னேறி உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக விளங்குகிறது. பொருட்களை விற்பதில் ( purchasing power) சீனா ஜப்பானை 2001 லேயே சமன் செய்து விட்டது.  2020ல் சீனா அமெரிக்காவைக் காட்டிலும் பொருளாதார வளர்ச்சியில் விஞ்சி விடும் என ஜெஃப்ரி தெரிவிக்கிறார். உலக அரசியல் மாற்றங்களிலும் அனைத்து நாடுகளும் அமெரிக்காவைக் காட்டிலும் சீனாவுடன் உறவு கொள்வதையே விரும்பும். சீனா மிகப் பெரிய அரசியல் சக்தியாக 2020 ல் விளங்கும் என்றும் குறிப்பிடுகிறார்.
உண்மையைச் சொல்லப் போனால் 200 ஆண்டுகளாக அட்லாண்டிக் பகுதி செய்த அரசியல் அதிகாரங்கள், பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு இனி மாறிவிடும். உலகிலேயே அதிகமாக ஆயில், தாமிரம், நிலக்கரி மற்றும் சோயா பீன்ஸ் இறக்குமதியில் அமெரிக்காவைக் காட்டிலும் சீனா முன்னணியில் உள்ளது. ஆகையால் அதிக அளவில் பச்சை வாயுக்களை (Greenhouse gases) வெளியிடுவதிலும், அதிக மாசு ஏற்படுத்துதலிலும் சீனா மோசமாகி வருகிறது.
குறிப்பாக பொருள் உற்பத்தி மட்டுமல்லாமல், நுகர்வோர் வாங்குகிற பொருட்களுக்கான விலையில் சீனாவோடு அமெரிக்கா போட்டியிட இயலாது தவிக்கிறது. பொருட்களின் தரம் அதிகமென அமெரிக்கா சொல்லிக் கொண்டாலும், மிகப் பெரிய சமூகத்தின் தேவையென்பது குறைந்த விலையிலான பொருட்களை வாங்குகிற சக்தியாகவே இருக்கிறது. அவ்வகையில் பெரும் சமூகத்தின் தேவையை சீனாவில்  உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் பூர்த்தி செய்வதால் அமெரிக்காவைக் காட்டிலும் சீனா வேகமாக முன்னேறி செல்கிறது.
நீண்ட கால அடிப்படையில் புதிய உலகமயமாதல் கொள்கையால் எந்தெந்த அதிக நாடுகளுக்கு லாபம்? அமெரிக்காவைக் காட்டிலும் சீனா, இந்தியா, பிரேசில் மற்றும் சில வளரும் நாடுகளுக்குத்தான் அதிக லாபம். இந்த நாடுகள் வணிகம், முதலீடு, அதிக மக்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் அதிக வருவாய் என தங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய புதிய உலகமயமாதல் பெருமளவு உதவுகிறது.
புதிய உலகமயமாதலால் பலனடையப் போவது யார்?
வளரும் நாடுகள் புதிய உலகமயமாதலால் பலனடைய மூன்று காரணங்களை முன்வைக்கிறார் ஜெஃப்ரி.
  1. Convergence Effect : பொருட்களைத் தயாரிப்பது, உற்பத்தி செய்வது போன்றவை  உலகின் எல்லா நாடுகளிலும் அமையலாம் என்றான பிறகே இந்தியா , சீனா போன்ற நாடுகள் பெருமளவு லாபமடைய ஆரம்பித்தன. குறிப்பாக சீனாவின் அந்நிய முதலீட்டுக் கொள்கை  என்பது எந்த நிறுவனமாக இருந்தாலும் அதன் உற்பத்தியில் தங்கள் பங்கென்பது (Joint Venture Partner in technology) தொழில்நுட்பத்திலும் இருக்கும் என அமைத்துக் கொண்டுள்ளது. இதனால் குறுகிய காலத்தில் வெளிநாட்டுப் பொருட்களை பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டு , அதற்கு இணையாக புதுமையான முறையில் பொருட்களின் உற்பத்தியை சீனாவே செய்து வருகிறது.
  2. Labour Effect : தாராளமயமாக்கலுக்குப் பிறகுதான் சீனாவும் இந்தியாவும் அதிக அளவுக்குப் பயனடைந்து வருகின்றன. உலகின் பல நாடுகளும் தங்களின் பொருள் உற்பத்திக்கும், சேவைக்கும் குறைந்த சம்பளத்திற்கு பணியாட்களை நியமித்துக்கொண்டன. ஆகையால் பெருமளவிற்கு இந்தியா, சீனாவிலிருந்து பணியாட்கள் பல்வேறு நாடுகளுக்கு அழைத்து வரப்பட்டார்கள். அதிகம் கற்க வேண்டிய தேவை இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்பட்டது. அதில் அவர்கள் ஓரளவு வெற்றியும் கண்டார்கள்.  உதாரணமாக, அமெரிக்காவில் உள்ள ஒருவருக்கு தர வேண்டிய நியாயமான சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதியையோ அதை விடக் குறைவாகவோ இந்தியா, சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்தால் போதுமென்ற சித்தாந்தத்தை பன்னாட்டு நிறுவனங்கள் கடைப்பிடிக்க ஆரம்பித்தன. இதன் காரணமாகவே வேலைவாய்ப்பின்மை அமெரிக்கா, ஐரோப்பாவில் பெருகி உள்ளது.
  3. Mobility Effect : தங்கள் நாட்டுக்கு வேலைக்கு பணியாளர்களை வரவழைத்து உற்பத்தி செய்வதைக் காட்டிலும் முதலீட்டை அந்தந்த நாடுகளில் செய்வது என்பதாக உலகமயமாதல் மாறிப் போனதும் காரணம். அதாவது எந்த நாட்டில் முதலீடு செய்கிறார்களோ அந்த நாட்டின் மக்களைக் கொண்டே தங்கள் உற்பத்தியைக் குறைந்த செலவில் செய்து, ஏற்றுமதி செய்து  அதிக லாபத்திற்கு பொருட்களை விற்பது வழக்கமானது. இதைத் தான் Internationally Mobile Capital and Immobile Labour என தனது நூலில் வர்ணிக்கிறார் ஜெஃப்ரி.
இதை பன்னாட்டு நிறுவனங்கள் செய்வதற்குக் காரணம் நிறைய வரி விலக்கு ரத்து, எளிதான முறையில் பொருட்களை நுகர்வோருக்கு கிடைக்கச் செய்வது, குறைந்த விலைக்குப் பொருட்களை உள்நாட்டு வரிவிலக்கின்றி விற்க இயலும் என சொல்லி அரசுகளிடம் அனுமதி வாங்கி கொள்ளை லாபமீட்டுகின்றன.
ஒவ்வொரு நாடும் இந்தப் போட்டியில் வரிவிலக்கு, பல சலுகைகள் என பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதால் அனைத்து நாடுகளும் கடும் பொருளாதாரப் பிரச்னைகளை எதிர்கொள்ளும் என்கிறார். மேலும்  Internationally Immobile Labour தான் அதிக பாதிப்புக்கு (பல வரிகளுக்கு) உள்ளாவார்கள் எனவும் கருத்துத் தெரிவிக்கிறார் ஜெஃப்ரி.
மேற்கூறிய மூன்று விடயங்களின் வாயிலாக நிச்சயமாக சீனா, இந்தியா மற்றும் சில வளரும் நாடுகள்தான் அதிக வெற்றியடையும்.  அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் முதலீட்டாளர்களே அதிக லாபம் அடைகிறார்கள். ஆனால் ஒப்பீட்டளவில் வளரும் நாடுகளே அதிக பலனை அறுவடை செய்யும். பல புதுமைகளை கொண்டு வருவதிலும் தரமான தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களைக் கொண்டிருப்பதால் அமெரிக்கா அதிக பலனடைகிறது. உதாரணமாக Microsoft , Google, Facebook , Amazon , Apple என தொழில்நுட்ப புதுமைகளைப் படைப்பதே அமெரிக்காவின் பொருளாதார வெற்றிக்கு முக்கியக் காரணம்.
அமெரிக்க நிறுவனங்களில் பெரும்பாலான மென்பொருள் நிறுவனங்கள் இந்தியா, சீனாவில் அமைந்துள்ளதே தங்கள் நாட்டின் வேலை வாய்ப்பின்மைக்கு முக்கியக் காரணம் என்கிறார்.
வருவாயில் நடுநிலையின்மை:
அதிக திறமை கொண்டவர்கள் (அதிகக் கல்வி) அதிக ஊதியம் பெறுவதும் , குறைவான திறமையானவர்கள் (குறைந்த கல்வியறிவு) குறைவான ஊதியம் பெறுவதும் மிகப் பெரிய நடுநிலையின்மையை ஏற்படுத்தி உள்ளது. தொழில்நுட்ப அறிவைப் பெற்றவர்களே இந்தப் போட்டியில் தங்களை எளிதாக நிலைநிறுத்த முடிகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கத் தொழிலாளர்கள் அதிகமாக போட்டியை எதிர்கொள்ளவேண்டிய அவசியமில்லாமல் இருந்தது. இன்று கல்வியறிவை வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் பெற்றுள்ளதால் பலத்த போட்டியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இன்று வெளிநாடுகளில் பணி புரியச் செல்கிற அதிக திறமையானவர்கள் வசதி வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். எந்த ஒரு நேரத்திலும் 5,00,000 பேர் வானூர்தியில் பறந்துகொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
இயற்கையை மாசுபடுத்துதலில் உலகமயமாதலின் பங்கு:
price_of_civilization_jeffrey_sachsஇந்தியா, சீனா மற்றும் வளரும் நாடுகளிலும், ஏழைமை நாடுகளிலும் மக்கள் தொகை அதிகமாகவதால் உணவுப் பொருட்களின் தேவை அதிகமாகிறது. அதற்கேற்றாற் போல விலைவாசி ஏற்றமும் அதிகமாகிறது. ஆகையால் உணவுப் பிரச்னையும் வறுமையும் அதிகரிக்கிறது.  இரும்பு, தாமிரம், அலுமினியம் போன்ற பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. மேலும் தொழில்நுட்ப வளர்ச்சியால் எண்ணெய், நிலக்கரி ஆகியவற்றின் விலையேற்றமும், இவற்றை உபயோகிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுதலும் அதிகரிக்கிறது. காடுகளை அழித்தல், சூழலியல் மாற்றங்கள், நில அரிப்பு, போன்றவற்றை சிறிதும் பொருட்படுத்தாது உலக நாடுகள் தங்களின் பொருளாதார வளர்ச்சியையும் மக்களின் ஆடம்பர வாழ்க்கையைப் பூர்த்தி செய்யும் போட்டியிலும் இறங்கியுள்ளது வருந்தத்தக்கது.
உலகமயமாதலை அமெரிக்கா சரியான முறையில் அணுகத் தவறிவிட்டது. உற்பத்தி நிறுவனங்கள் மற்ற நாடுகளில் அமையப் பெற்றதால் அமெரிக்கர்கள் பெருமளவிற்கு வேலை வாய்ப்பை இழந்துள்ளார்கள் என்று குறைபடுகிறார் ஜெஃப்ரி சாக்ஸ். மேலும் உலகமயமாதலால் உலக நாடுகளின் பொருளாதார நிலைத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. தொழில்நுட்பத்திற்கும் உற்பத்தி சார்ந்து மட்டும் பொருளாதாரக் கொள்கைகளை வகுக்காது, வேளாண்மை மற்றும் ஏழ்மை மக்களும் பலன்பெறும் வகையிலும் அரசாங்கமும் சந்தையும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலமே உலகமயமாதலை முழுமையாக வெற்றி பெற செய்ய இயலும்.
0
லஷ்மண பெருமாள்