இயற்கை, விற்பனைக்கு!

“தென்பெண்ணை – கேள்விப்பட்டிருக்கிறீர்களா..?”

“வாட்…? தென்பெண்ணையா..புதுசா இருக்கே..எதாவது பலகாரத்தோட பெயரா?”

“இல்லைங்க.. பாரதியார் கூட சொல்லியிருக்காரே.. காவிரி தென்பெண்ணை பாலாறு…”

“ஓஹோ…அவர் அப்படி சொல்லிருக்காரா.. ஒருவேளை தென்சென்னை-னு சொல்றதுக்கு பதிலா ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகி தென்பெண்ணைன்னு சொல்லிருப்பாரோன்னு நினைச்சேன்.”

இதற்கு மேல் தாங்காது என்று அங்கிருந்து நகர்ந்து கொண்டேன். நல்லவேளை “ஹு ஈஸ் பாரதியார்” என்று கேட்காமல் போனார்.

இந்தக் காலத்து கான்வென்ட் பிள்ளைகளிடம் – குறிப்பாக தமிழை மொழிப்பாடமாக எடுக்காத தமிழ் சிறார்களிடம் – அந்தக் கேள்வியையும் எதிர்பார்க்கலாம். நிற்க.

சாத்தனூர் அணைக்கட்டு பற்றித் தெரிந்தவர்களுக்கு கூட அதில் இருப்பது தென்பெண்ணையாற்று நீர்தான் என்பது தெரியாது. அபூர்வமாக எப்போதாவது ஒருமுறை வீட்டுக்கு வரும் உறவினர்களை எப்படி நம் வீட்டுக் குழந்தைகளுக்கு அடையாளம் தெரியாதோ அது போலத்தான் பெண்ணையாற்று நீரும்!

நாம் மகாகவி பாரதியை தீர்க்கதரிசி என்று போற்றுகிறோம். 1930களிலேயே சேது சமுத்திரத் திட்டம் பற்றி பாடியவர் அவர்.

“காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி – என
மேவிய யாறு பலவோடத் – திரு
மேனி செழித்த தமிழ்நாடு”

தீர்க்கதரிசியின் வாக்கு பொய்த்து விட்டதா? அல்லது எதிர்காலத்தில் என்னென்னவோ நடக்கலாம் என்பதை முன்கூட்டியே யூகித்து, “மேவி செழித்த..” என்று  இறந்த காலத்தில் பாடிவிட்டாரா?

உண்மையில், பாரதியின் காலத்தில் டாப்-5 லிஸ்டில் இருந்த தென்பெண்னை ஆறு இன்று காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்ந்து விட்டது யார் குற்றம்?

இந்த தென்பெண்னை நதி லிஸ்டில் கொஞ்ச நாளில் பாலாறும் சேர்ந்து விடும். ஏதோ பெயரிலேயே ஆறு என்று வருவதனால் பிற்காலத்தில் யாரைக் கேட்டாலும் “ஏதோ ஆறுன்னு நெனக்கிறேன்” என்றாவது சொல்வார்கள்.

மற்றபடி அதுவும் இப்போதே வறண்ட மணல் (இல்லா) பிரதேசமாகவே காட்சியளிக்கிறது. பாலாற்றின் குறுக்கேயும் அணை கட்டப்பட்டு வருகிறது. கூடங்குளம் பிரச்னையைப் போல், எல்லாம் கட்டி முடிக்கட்டும் அப்புறமா நம்ம போராட்டத்தை ஆரம்பிச்சுக்கலாம்னு யாராவது நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ என்னவோ. அது ஆந்திர மாநில எல்லைக்குட்பட்ட குப்பம் பகுதியில கட்டப்படுறதுனால நாமன்னு இல்ல… தெலுங்கானா ‘காரு’க்கள் நினைத்தாலும் அந்த அணையைத் தடுக்க முடியாது, அணைதான் நமக்கு வரவேண்டிய தண்ணியைத் தடுக்கும்.

வைகை நதிக்கு வருவோம். இப்போது இருக்கும் வைகை நதியைப் பார்த்து விட்டு, “பாரதியார் ஏன் இதை டாப்-5 லிஸ்டில் சேர்த்தார்… இதற்குப் பதில் அமராவதியையோ, நொய்யலையோ கூட சேர்த்திருக்கலாமே..அதிலாவது சாயமோ..கழிவோ ஏதோ ஒன்று நதியாக பிரவாகமெடுத்து இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறதே..வைகையில் அதுவும் இல்லையே..மழைக்காலங்கள் தவிர மற்ற நாட்களில் கிரிக்கெட் மைதானமாக அல்லவா இருக்கிறது” என்று சிலர் கேட்கலாம். பாரதியார் வாழ்ந்த காலத்தில் இது வளமையான நதியாகத்தான் இருந்திருக்கிறது. வைகை என்பது மற்ற நதிகளைப் போல ‘சுயம்பு’ அல்ல. அதாவது வைகைக்கு என்று நதிமூலம் கிடையாது. தேனி மாவட்டத்தில் பற்பல இடங்களிலிருந்து ஓடைகளாக ஓடி வரும் நீர் ஒன்றுபட்டு வைகையாகிறது. குறிப்பாக மேல்மணலாறு, மூங்கிலாறு மற்றும் இப்போது பிரபலமாகிவிட்ட முல்லையாறு,பெரியாறு போன்ற நதிகள்தான் அதன் மூலம் (source). ஏதோ முல்லைப்பெரியாறில் இருந்து வைகை அணைக்கு வரும் கொஞ்ச நஞ்ச தண்ணீராலும்,ஆண்டுதோறும் தண்ணீர் இருக்கிறதோ இல்லையோ பம்ப் செட் போட்டாவது வைகை ஆற்றில் நீராடும் கள்ளழகராலும்தான், இப்போதும் மக்கள் வைகையை மறக்காமல் இருக்கிறார்கள்.

ஆக எஞ்சியிருப்பதும் விஞ்சியிருப்பதும் காவிரியும் பொருநை நதியும்தான். காவிரி அவ்வப்போது அரசியலாக்கப்பட்டாலும், ஒரு சில ஆண்டுகள் பொய்த்தாலும், பெரும்பாலும் கர்நாடகத்துக்கு கொடுத்தது போக ஒரளவுக்கு தமிழகத்திற்கும் தன் நீர் வளத்தைத் தந்து கொண்டுதான் இருக்கிறாள். ‘சோழ வள நாடு சோறுடைத்து’, ‘தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் தஞ்சை’ போன்றவையெல்லாம் பொய்த்துப் போனதற்கு காவிரித்தாயை நாம் குற்றம் சொல்ல முடியாது. டெல்டா பிரதேசங்கள் ரியல் எஸ்டேட் தேசங்களாக மாறினால் அவள் என்ன செய்வாள் பாவம்? அவளிடம் நாம் வேண்டுவதெல்லாம் கர்நாடகாவை போதும் போதும் என்கிற அளவுக்கு வளமையாக்குக..அப்பொழுதுதான் மிச்சமுள்ள நீராவது நமக்கு வரும். பங்கீடு என்பதெல்லாம் அவர்களுக்கு புரியாத வார்த்தை.

கடைசியாக பொருநை நதி (தாமிரபரணி). ஆச்சரியத்திலும் ஆச்சர்யம்! மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது இந்த தாமிரபரணி நதியையும் நாம் அண்டை மாநிலத்துக்கு வாரிக் கொடுக்காமல் விட்டிருப்பது நம்மவர்கள் தவறிச் செய்த நற்பிழை. குளிர்பான நிறுவனங்கள் ‘போர்’ போட்டு நீர்வளத்தை உறிஞ்சினாலும், மணல் மாஃபியாக்கள் ‘பொக்லைன்’ போட்டு மண்வளத்தை சுரண்டினாலும் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு இருக்கிறது பொருநை நதி. இன்னும் எத்தனை நாள்களுக்கு? நாம் முழுவதுமாக உறிஞ்சியும், சுரண்டியும் எடுக்கும் வரை! அதற்குப் பின் பாரதியின் டாப்-5 லிஸ்டில் முதல் மூன்று நதிகளுக்கு நேர்ந்துள்ள கதிதான் காவிரி மற்றும் தாமிரபரணிக்கும் நேரும். பின்னர் இயற்கையைப் பழித்து என்ன பயன்?

தமிழகத்தில் ஆண்டு தோறும் பெய்யும் மழையளவு சராசரியாக 900 மில்லி மீட்டர். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால் 30% அளவுக்கு மழையளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சென்ற ஆண்டு சராசரிக்கும் அதிகமாக சுமார் 1050 மில்லி மீட்டர் வரை பெய்திருக்கிறது. அதை முறையாகப் பாதுகாத்தோமா என்றால்.. இல்லை. சோழர் காலத்தில் அரசர்கள் தாங்கள் வாகை சூடும் ஒவ்வொரு போரின் அடையாளமாகவும் ஒரு ஏரியோ அல்லது குளமோ வெட்டினார்கள். இன்றைக்கு தண்ணீர் இன்றி வறண்டு விட்டது என்ற ஒரே காரணத்தால் ஏரியிலேயே பன்மாடிக்குடில்கள் கட்டி அதற்கு பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் ‘சாமர்த்தியமாக’ அனுமதியும் வாங்கி விடுகிறார்கள். வெள்ளம் பெருக்கெடுக்கும் காலங்களில் வீடுகளுக்குள் புகும் வெள்ள நீர் …”ஐயா..! நீர் குடியிருப்பது எங்கள் இடம், ஏரி நீர் குடியிருந்த இடம் ” என்று காட்டிக் கொடுத்து விடுகிறதே!

கேரளாவை கடவுளின் சொந்த நாடு (god’s own country) என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறார்களே, ஏன்? அங்கே ஐயப்பனும் குருவாயூரப்பனும் இருப்பதினாலா? அப்படிப் பார்த்தால் நம்மூரில் கூடத்தான் பழனியாண்டவரும், ரெங்கநாதரும், அருணாச்சலேசுவரரும் இருக்கிறார்கள். பிறகெப்படி அதுமட்டும் கடவுள் வாழும் பூமி எனப்படுகிறது? அங்கு கொட்டிக்கிடக்கும் இயற்கை வளம்! அடர்ந்த வனப்பகுதிகள், அதிலிருந்து பொங்கி வரும் கணக்கிலடங்கா நதிகள் என இயற்கை அங்கே கொலுவிருக்கிறது. அதோடு மக்கள் மற்றும் அரசின் பங்கும் அதில் அடங்கியிருக்கிறது என்பதுதான் இதில் முக்கியமான விஷயம்.

கேரளாவில் நதிகளில் மணல் அள்ளுவது தடை செய்யப்பட்டுள்ளது. அச்சோ.. பிறகெப்படி அங்கிருப்பவர்கள் வீடு கட்டுவார்கள்? அதற்குத்தான் இளிச்சவாயர்கள் நாம் இருக்கிறோமே. காவிரியும், வைகையும், தாமிரபரணியும் மணல் ஏற்றுமதி கிடங்குகளாக அல்லவா ஆகிவிட்டன! கேரளாவில் மக்கள் இயற்கையை மதிக்கிறார்கள். அதையே தங்களின் பிரதான கடவுளாக போற்றுகிறார்கள். அங்கும் மரம் வெட்டாமல் இல்லை. சில சட்டப்பூர்வமாக..சில சட்டவிரோதமாக! ஆயினும் அங்கே எந்தப் பகுதியும் பாலைவனமாகி விடவில்லை. ரப்பர் ‘பால்’வனமாகத்தான் இருக்கிறது. ஊட்டியும் மலைவாசஸ்தலம் தான். வயநாடும் மலைவாசஸ்தலம் தான். இரண்டுக்கும் உள்ள வேறுபாடு உங்களுக்குப் புரிகிறதல்லவா? நம்மவர்களின் கையில் வயநாடு கிடைத்திருந்தால் அது ‘வற’நாடாகியிருக்கும். கேரளா முழுக்க மலைதான். தமிழகத்திலோ அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கிழக்குத்தொடர்ச்சி மலைகளும் சில பல குன்றுகளும்தான் உள்ளன.. ஆனால் கல் குவாரிகளை கணக்கெடுத்தால் நாம் கேரளாவையே மிஞ்சி இருப்போமோ என்று தோன்றுகிறது. இதற்காகவே இரண்டு மாநிலத்திலும் உள்ள கனிம வளத்துறை அலுவலகம் சென்று தகவல் அறியும் உரிமை மூலம் கேட்கலாம் என்ற எண்ணம் மேலிடுகிறது.

மலைகளைப் பாதுகாக்கும் யுக்தியாகவோ என்னவோ… குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனுக்கு கோவில் எழுப்பினர் நம் முன்னோர்கள். ஆனால் குமரனையே சுரண்டியவர்களாயிற்றே நம்மவர்கள்… குன்றுகளை சுரண்டுவதற்கா தயங்குவார்கள்? முருகனுக்கு மட்டும் கொஞ்சம் இடம் வைத்து விட்டு மலையின் பக்கவாட்டில்…பின்னால் என்று முடிந்தவரை சுரண்டி விடுகிறார்கள். ஒரு காலத்தில் மயிலின் தோகை போல பரந்து விரிந்திருந்த மலைகள் இப்போது ஆக்டோபஸ் போல அஷ்ட கோணலாகக் காட்சியளிக்கிறது. ‘மலை முழுங்கி மகாதேவன்’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள், நம் ஊர் கல் குவாரி காண்ட்ராக்டர்களுக்கு அந்தப் பட்டம் கச்சிதமாகப் பொருந்தும்!

“ஏன் கேரளாவைப் பார்க்கிறீர்கள்..இப்படி அவர்கள் ‘கட்டிக் காக்கிறோம்’ என்று பிற்போக்குத்தனமாக இருப்பதனால்தான் கல்வியறிவில் செறிந்த மாநிலமான கேரளம் தொழிற்துறையில் வளர்ச்சியடைந்த மாநிலமாக முடியவில்லை’ என்று சில முற்போக்குவாதிகள் கூச்சலிடலாம். “சிங்கப்பூரைப் பாருங்கள்..ஜப்பானைப் பாருங்கள்” என்றும் ஆவேசப்படலாம். சிங்கப்பூரை எடுத்துக் கொள்ளுங்கள். சிங்கப்பூர் நாட்டின் மொத்தப் பரப்பளவு 694 சதுர கிலோமீட்டர். ஆவடி மற்றும் தாம்பரம் சேர்த்த தற்போதைய ‘கிரேட்டர்’ சென்னையின் பரப்பளவு 812 சதுர கிலோமீட்டர். ஆக, சென்னையை விட குறைந்த பரப்பளவு கொண்ட நாடாகிய சிங்கப்பூரில் உள்ள மொத்த மரங்களின் எண்ணிக்கையோ சென்னையில் உள்ளதைக் காட்டிலும் அதிகம் என்பது சிங்கப்பூர் வாழ் தமிழர்களுக்கு தெரிந்திருக்கும். இத்தனைக்கும் சிங்கப்பூர் தொழில்துறையில் உலகின் முன்னேறிய நாடுகளில் ஒன்று. ஒரு வீட்டின் மாத வாடகையே இங்கே நாம் கொடுக்கும் ஆண்டு வாடகைக்கு நிகராக உள்ள நாட்டில், மரங்களுக்கு அத்தனை முக்கியத்துவம் தருகிறார்கள். நாம் என்ன செய்வோம்? கொல்லைப்புறத்தில் இருக்கும் மரத்தை எடுத்துவிட்டால் அங்கு ஒரு போர்ஷன் கட்டி வாடகைக்கு விடலாம் என்று கணக்குப் போடுவோம். சென்னையில் மரங்களை நேசிப்பவர்களின் ஒரே ஆறுதல் கிண்டி தேசியப் பூங்கா! அதுவும் கூட ஒரு காலத்தில் 5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டிருந்தது. இப்போது 2.8 சதுர கிலோமீட்டராக சுருங்கியிருக்கிறது. இந்த அளவிலாவது தொடர்ந்து காப்பாற்றப்படுமா என்பது ஆண்டவனுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்!

அமெரிக்காவில் நகரங்கள் கான்கிரீட் காடுகளாக இருந்த போதிலும், அதைச் சுற்றி அடர்ந்த வனப்பகுதிகளும் இருக்கின்றன. இது அவர்களுக்கு இயற்கையே கொடுத்துள்ள வரம்! இங்கேயோ திண்டிவனம் வரையிலும் அதையும் தாண்டிக் கூட தென்னந்தோப்புகளையும், வயல்வெளிகளையும் பொட்டலாக்கி பட்டா போட்டு ‘சென்னைக்கு மிக அருகில்’ என்று விளம்பரம் செய்து விற்று விடுகிறார்கள். ஒரு சம்பவம் சொல்கிறேன்! எனக்கு விவசாயம் பற்றித் தெரியாத போதிலும் சம்பளத்துக்கு ஆள் வைத்தாவது விவசாயம் செய்யவேண்டும் என்ற ஆவலில், கரூர் மாவட்டத்தில்… நகர்ப்பகுதியில் இருந்து வெகுதொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள என் மாமாவிடம் சொல்லி அங்கு ஏதேனும் வயல் விற்பனைக்கு இருந்தால் சொல்லுங்கள் என்றேன். இருக்கிறது, ஏக்கர் பத்து லட்சம் சொல்கிறார்கள் என்றார்! பத்து லட்சம் முதலீடு செய்து ஒரு ஏக்கர் வாங்கினாலும் அதன் மூலம் எனக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு ஐம்பதாயிரம்தான் நிகர லாபம் கிடைக்கும்.. அதற்குப் பேசாமல் வங்கியில் போட்டு வைத்திருந்தால் கூட அதை விட கூட வருமே என்றேன். அதற்கு என் மாமா “நீ ஏன் அப்படிப் பார்க்கிறாய், நீ நிலத்தில் செய்த பத்துலட்சம் முதலீடு ஐந்தாண்டுகளில் இரட்டிப்பாகுமே” என்றார். எனக்கு அதிர்ச்சியாயிருந்தது..அப்போதுதான் ரியல் எஸ்டேட் சூத்திரம் எனக்குப் புரிந்தது. வயல்கள் செழித்திருக்கும் பகுதியிலேயே இப்படி விலையேற்றினால் வானம் பார்த்த பூமியை ஏன் கூறு போட மாட்டார்கள்? இதற்கெல்லாம் வானமே எல்லையா..? இல்லையில்லை, முடிந்தால் அங்கும் கூட நம்மவர்கள் கட்டம் கட்டி பட்டா போட்டு “சென்னைக்கு சில லட்சம் மைல்கள் தொலைவே உள்ள திண்டி வானத்தில்…” என்று சின்னத்திரை நடிகைகளை வைத்து டிவியில் விளம்பரம் செய்து விற்றாலும் விற்றுவிடுவார்கள்!

சமீபத்தில் ‘டிஸ்கவரி’ சேனலில் ஒரு செய்தி பார்த்தேன். அமெரிக்காவில் ஒருவர், சாலை போடும் புதுமையான ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். அதன் மூலம் பழைய சாலையையே மிக அதிக வெப்பநிலையில் சூடாக்கி உருகி வரும் அந்தக் தார்க்குழம்புகளையே மீண்டும் பொடித்துக் கலவையாக்கி சாலை போடப்படுகிறது. இதற்கு அந்த இயந்திரம் தவிர வேறு எந்த பொருளும் தேவையில்லை. குறைந்தது மூன்று முறையாவது இதுபோலவே செய்யமுடியுமாம். மூலப்பொருள்கள் செலவு இல்லை என்பதையும் தாண்டி புதிய மணல்,ஜல்லிகள் தேவைப்படாததால் இயற்கையும் பாதுகாக்கப்படுகிறதல்லவா? ஆனால் இங்கே என்ன நடக்கிறது? சாலை போடும் காண்ட்ராக்ட் எடுத்தவர், பழைய சாலையின் மேலேயே அப்படியே புதிய மணல்,ஜல்லி கலவைகளைப் போட்டு ஒட்டு வேலை செய்கிறார். இதனால் ரோடுகள் மேலும் மேலும் உயர்கின்றன. வீடுகள் பள்ளத்துக்குள் கட்டப்பட்டது போல் தோற்றமளிக்கின்றன.

ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றமும், தொழில் வளர்ச்சியும் அதன் இயற்கை வளத்தைப் பெரிதும் சார்ந்து இருக்கிறது. எதுவுமே இல்லாத சவுதியில் கூட எண்னெய் வளத்தைக் கொட்டிக் கொடுத்திருக்கிறாள் இயற்கை அன்னை! நினைத்துப் பாருங்கள்…செம்பரப்பாக்கம் ஏரியும், பூண்டி, புழல் ஏரிகளும் இல்லாவிட்டால் சென்னையில் இத்தனை மக்கள் பெருக்கமும், தொழில் வளர்ச்சியும் சாத்தியமாகியிருக்குமா? விளைநிலங்கள் ‘விலை’நிலங்கள் ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சவால்களுக்கு மத்தியிலும் கூட, திருச்சி மண்டலத்தில் வாழை, கரும்பு என பணப்பயிர்கள் எப்படி செழித்து வளர முடிகிறது..? காவிரித்தாயின் குன்றா நீர்வளத்தால்தானே! நாம் சிறு வயதில் ஒரு கதை படித்திருப்போம்… தினம் ஒரு தங்க முட்டை போடும் கோழியின் வயிற்றை பேராசையால் அறுத்துப்பார்த்து ஏமாந்தானாம் ஒருவன். இன்று பொக்லைன் போட்டு லாரி லாரியாக மணல் அள்ளும் சம்பவங்கள் அதையொட்டியவைதானே!

மழையை சேமிக்கத் தவறியதும், மரங்களை வெட்டுவதும், மணலை அள்ளுவதும், மலைகளையே சுரண்டுவதும்… ஆக இயற்கையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பாழ்படுத்தி வைத்திருக்கிறோம். பிறகு பிறரை பழிப்பானேன்? இதில் வெறும் அரசியல்வாதிகளை மட்டுமே குறைசொல்லி ஒதுங்கிவிடாமல் மக்களாகிய நாமும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காதத்தான் கேரளாவையும் சிங்கப்பூரையும் அமெரிக்காவையும் உதாரணமாக சொல்ல வேண்டி வந்தது. மற்றபடி – எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் தேசமென்று – என்றென்றும் முழங்க வேண்டும் என்பதுதான் இந்தத் தமிழனின் விருப்பமும் கூட.

0

சரவணன்