போதிதர்மர் வாழ்கிறார்

போதிதர்மர் / அத்தியாயம் 10

போதிதர்மர் இறப்பதற்கு முன்பே அவரது புகழ் சீனதேசம் முழுவதும் பரவிவிட்டது. அவர் இறந்து ஓரிரு நூற்றாண்டுகளுக்குப் பின் ‘சான்’ புத்த மதம் ஜப்பானை அடைந்தது. ‘சான்’, ‘ஜென்’ ஆக பெயர் மாற்றம் பெற்றது. தாமோ (Damo) தாய்சீ தருமா (Taishi Daruma) ஆனார். பெயர் மட்டுமா மாறியது? ஜென்னின் பூர்வீகமே மாறியது.

போதிதர்மர் வரலாறு பலராலும் காலப்போக்கில் சரமாரியாக பின்னப்பட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் பின்னியதால் இன்று எது நிஜம் எது பொய் என பிரித்தறிய இயலாத குழப்பப் பின்னலாகக் காட்சியளிக்கிறது.

அதன் விளைவாக ஜப்பானியர்கள் போதிதர்மரை குறுதெய்வமாக, தெருமுனைக் கடவுளாக, நோய்நொடி போக்கும் ஆவியாக, வீரிய சக்தியளிப்பவராக இன்னும் என்னென்னமோவாக சித்தரித்து சிங்காரித்துள்ளனர். இவை சிங்காரமா சீரழிவா என்று நாம் ஒவ்வொன்றாகக் காண்போம்.

நம்மூர் திருஷ்டி தகடுகளைப் போல் சிகப்பு நிறத்தில் ஒருவகை தகட்டில் போதிதர்மரது பயங்கரமான உருவத்தைப் பொரித்து குழந்தைகளின் கழுத்து, கை, கால்களில் தாயத்தாக கட்டித் தொங்கவிடுகின்றனர். அந்தத் தாயத்து குழந்தைகளை பெரியம்மை நோயிலிருந்து பாதுகாக்கும் என்பது நம்பிக்கை. 1850க்குப் பின் அம்மை தடுப்பூசி அறிமுகமானதால் இந்த வழக்கம் ஜப்பானியர்கள் மத்தியிலிருந்து சிறிது சிறிதாக மறைந்து தொலைந்து போனது.

இதைவி போதிதர்மர் பொம்மை என்றொன்று ஜப்பானியர்கள் மத்தியில் ரொம்பப் பிரபலம். இப்பொம்மைகள் கால்கள் இல்லாமல் இந்திய வீடுகளில் தொங்கும் திருஷ்டி பூசணிக்காய்களைப்போல் காட்சியளிக்கின்றன. இவை, கிட்டத்தட்ட நம் தஞ்சாவூர் பொம்மைகள் போன்றவை, தள்ளிவிட்டால் எழுந்து நிற்கும்.

கால்கள் இல்லாத போதிதர்மர் பொம்மைகளுக்குப் பின் ஒரு பெருங்கதை உள்ளது. போன அத்தியாயத்தில் பார்த்தோமல்லவா, தியானத்தில் இருந்த போதிதர்மர் அந்தக் குகையில் இருந்து மாயமாக மறைந்தார் என்று ஜப்பானியர்கள் நம்புவதாக. அதே கதை இங்கும் தொடர்கிறது.

இரு நூல்களை அங்கு விட்டுவிட்டு மாயமாக மறைந்தார் என்று பார்த்தோம். அந்நூல்களுடன் தன் கால்கள் இரண்டையும்கூட அவர் விட்டுச் சென்றார்.  ஒரே இடத்தில் பல ஆண்டுகள் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருந்ததால் அவருடன் அவரது கால்கள் வர மறுத்துவிட்டனவாம். எனவே, அவற்றை போதிதர்மர் அங்கேயே விட்டுச்சென்றுவிட்டார்.  இதனாலேயே போதிதர்மர் பொம்மைகள் கால்கள் இன்றி காணப்படுகின்றன. அவர் ஆவி ரூபத்தில் சென்றார் என்று சிலர் கருதுவதால்தான் இன்றும் அவர் எந்தத் துன்பத்தினுள்ளும் நுழைந்து அதனைத் தீர்த்துவைக்கும் ஆற்றல் பெற்றவர் என்று ஜப்பானியர்கள் நம்புகின்றனர்.

இன்றைய போதிதர்மர் பொம்மைகள் கண்களின்றிக் காணப்படுகின்றன. அதற்குப் பின்னாலும் இருக்கிறது ஒரு கதை.

ஒருநாள், போதிதர்மர் குகையில் தியானம் செய்துகொண்டிருக்கையில் தூக்கம் அவர் கண்களைத் தழுவியது. விழித்துப்பார்த்தவருக்கு பேரதிர்ச்சி. தான் தியானிக்காமல் தூங்கியதை நினைத்து நினைத்து மனம் நொந்தார். ‘இந்தத் தூக்கத்துக்குக் காரணம் எனது கண்களின் இமைகள் தானே?’ என்று கோபப்பட்டு தன் இமைகளை இலையைப் பிடுங்குவதுபோல் வெடுக்கெனக் கிள்ளி எறிந்துவிட்டாராம்.

மண்ணில் விழுந்த அந்த இமைகளிலிருந்து ஒரு செடி முளைத்து எழுந்தது. அதனைக் கண்ட மக்கள் செடியின் இலைகளைப் பறித்து வெந்நீரில் இட்டு அருந்தினர். அருமையான சுவை. அது போக அவர்களிடம் அண்ட வந்த தூக்கத்தையும் அது விரட்டி அடித்தது. தூக்கத்தைப் போக்கும் புனிதம் வாய்ந்ததாகக் கருதி அந்த நீருக்கு ‘தேநீர்’ என பெயரிட்டனர். ஆகையால் அந்தச் செடியின் இலை தேயிலையானது. இன்றுவரை சீனர்களும் ஜப்பானியர்களும் மஹாயான பௌத்தர்களும் ‘தேநீரை’ புனிதமாகக் கருதி பயபக்தியுடன் அருந்துகின்றனர். இது நாம் பாலுடன் அருந்தும் தூள் தேநீர் அல்ல, அவர்கள் அருந்துவது சுடுநீரில் இட்டு அருந்தும் உயிர்ச்சத்து நிரம்பிய ‘பச்சை’ தேநீர்.

போதிதர்மர் இமைகளற்றவர் என்று ஜப்பானியர்கள் கருதுவதால்தான், போதிதர்மர் பொம்மைக்கு இமைகள் மட்டுமின்றி கண்களும் இல்லை. தருமா பொம்மைக்கு கண்கள் வரைவதென்பது ஜப்பானியர்களுக்குத் தனிப்படலம். முதலில் தருமா பொம்மையை எதற்காக ஜப்பானியர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று தெரிந்துகொள்வோம்.

‘போதிதர்மர் பொம்மை’ ஒரேயொரு பலனுக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. சிகப்பு என்பது பண்டைய ஜப்பானியர்கள் மத்தியில் பிணிக்கடவுளின் இஷ்ட நிறம் என நம்பப்பட்டது. ஆகையால் போதிதர்மரின் சிவப்பு நிற பொம்மை தங்களை பிணியிலிருந்து காக்கும் என அவர்கள் நம்பினர். குறிப்பாக பெரியம்மையிடமிருந்து. அக்காலத்தில் (15 முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை), அந்த அளவுக்கு அம்மை ஜப்பானியர்களை காவுவாங்கிய கொள்ளை நோய். ஜப்பானியர்களை மட்டுமல்ல உலகில் வாழ்ந்த மனித குலத்தையே அந்த நோய் ஒரு கலக்கு கலக்கியது எனலாம். நாம் ஏற்கெனவே பார்த்தவாறு இந்த வழக்கம் அம்மைத் தடுப்பூசி வந்தபின்னர் மறைந்தது.

போதிதர்மர் பொம்மை நல்ல சகுனத்தின் சின்னமானது. அந்த பொம்மைக்கு எவ்வளவுக்கெவ்வளவு அழகாக நாம் கண்களை வரைகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதிர்ஷ்டம் வரும் என்பது நம்பிக்கை.

அரசியல் பதவி, திருமணம், புது வருடப் பிறப்பு, வேலை, மதிப்பெண் என அனைத்துக் காரியங்களை தொடங்குவதற்கு முன்பும் ‘போதிதர்மர் பொம்மைக்கு’ விழி திறக்கும் படலம் நடக்கின்றது. இது ஜப்பானியர்களிடம் இன்றும் நிலவும் வழக்கம்.

தங்களது எந்த நோக்கம் நிறைவேற வேண்டுமோ அதை மனத்தில் கொண்டு ஜப்பானியர்கள் புது வருடத்தன்று போதிதர்மர் பொம்மையை கடைகளில் இருந்து வாங்குவார்கள். தங்களது லட்சியத்தை மனத்தில் தியானித்தபடி பொம்மைக்கு ஒரு கண் மட்டும் வரைவார்கள். அதுவும் பெரும்பாலும் இடது கண். மற்ற வலது கண் அவர்களது நோக்கம் நிறைவடையும்பொழுது பூர்த்திசெய்யப்படுகிறது. பூர்த்தியடையாவிட்டால் அதுவரை போதிதர்மர் ‘ஒற்றைக்கண்ணனாக’ காட்சியளிப்பார். ஜப்பானிய அரசியல்வாதிகள் தேர்தலுக்கு நிற்கும்பொழுது ஒரு போதிதர்மர் பொம்மையை வாங்கி இடக்கண் வரைவதும், தேர்தலில் வென்றுவிட்டால் வலக்கண்ணை பெரும் ஆரவாரத்துடன் தன் ஆதரவாளர்கள் முன்னிலையில் வரைந்து தங்கள் செல்வாக்கை நிரூபிப்பதும் இங்கு சகஜம்.

போதிதர்மர் பொம்மைகள் போதிதர்மர் திருவிழாக்களில் தான் அதிகம் விற்பனையாகின்றன. இந்த திருவிழாக்கள் Great Daruma Fairs of Japan என்று அழைக்கப்படுகின்றன. மேலும், ‘போதிதர்மர் திருவிழா’ என்றும் ஒரு திருவிழா ஜப்பானியர்களால் வருடா வருடம் கொண்டாடப்படுகிறது. இதில் பூர்த்தி செய்யப்பட்ட போதிதர்மர் பொம்மைகளை தீயிலிட்டு பொசுக்குவதுதான் உற்சவ நிகழ்ச்சியாகும். இந்தத் திருவிழாவைக் காண விரும்புபவர்கள் மார்ச் 3,4 ஆகிய தினங்களில், டோக்கியோவிலுள்ள ஜிந்தாய்ஜி கோவிலுக்குச் (Jindaiji Temple) சென்றால் உற்சவத்தில் கலந்து மகிழலாம்.

போதிதர்மர் பொம்மைகளிலும் பல்வேறு தினுசுகள் உண்டு. போதிதர்மரின் கொடூர முகம், ஆந்தை முகம், குரங்கு முகம், நாய் முகம், பெண் முகம் எனப் பல வகைகள். இந்த பொம்மை கோலிக்குண்டு அளவிலிருந்து பலாப்பழ அளவுவரை கிடைக்கிறது. உருண்டை, நீழ்உருண்டை என பல கோண அமைப்புகளிலும் பொம்மைகள் விற்கப்படுகின்றன.

போதிதர்மர் பொம்மையின் குரங்கு முகத்துக்கும் ஆந்தை முகத்துக்கும் நாய் முகத்துக்கும் பெண் முகத்துக்கும் பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. இதில் பெண் முகத்துக்காகக் கூறப்படும் கதை சற்று வித்தியாசமானது.

இப்பொம்மை ‘ஹிம் தருமா’ (Hime Daruma) என்று அழைக்கப்படுகிறது. இதற்கு இளவரசி போதிதர்மர் என்று பொருள். போதிதர்மர் ஒன்பது ஆண்டுகள் குகைக்குள் சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருந்தது ஒரு பெண்ணின் ஒன்பது மாத கர்ப்பத்தைக் குறிக்கிறதாம். இது போக ஹிம் தருமருக்கான கதை இன்னும் பல கிலோ மீட்டருக்கு நீள்வதால், இத்துடன் இதனை முடித்துக்கொள்வது சாலச் சிறந்தது. சுருக்கமாக, போதிதர்மரைப் பெண்ணாக சித்தரிக்கும் நோக்குடன் செய்யப்படும் பொம்மை இது அவ்வளவு தான்.

பெண் குழந்தைகள் நோய், நொடி இன்றி கொழுக்மொழுக் என ‘அழகாக’ வளர்வதற்கான நேர்த்தியுடன் இவை ஜப்பானியப் பெண்பிள்ளைகளின் பெற்றோர்களால் வாங்கப்படுகின்றன. இவற்றுக்கு விலைமகளிரிடையேயும் பெரும் வரவேற்பும் உண்டு.  இப்பொம்மையில் ‘தள்ளிவிட்டால் எழுந்து நிற்கும்’ பண்புக்கு பல்வேறு ஆற்றல்கள் உள்ளனவாம்.

  • நம்மைப் பீடித்துள்ள நோய்களால் விழுந்து கிடக்கும் நாம் எழுந்திரித்து நிற்போம்.
  • விடாமுயற்சி, மனவுறுதி, அச்சமின்மை ஆகியவற்றை அளித்து நம் உள்ளத்தை எழுச்சி பெறச்செய்யும்.
  • காமத்தைத் தூண்டும்.
  • இழந்த வீரியத்தை மீட்டெடுக்கும்.
  • வாடிக்கையாளர்களிடம் வீழ்ந்து எழ விலைமாதர்களுக்கு ஆற்றல் அளிக்கும்.
  • மலட்டுத்தன்மையை விரட்டி கருத்தரிக்க உதவும்.

மெய்ஜி (Meiji) காலகட்டமான 1912 வரை போதிதர்மர் பொம்மை படைப்பாற்றல் வடிவத்தில் அதாவது லிங்க வடிவில் செய்யப்பட்டதாம். அதேபோல், டோகுகுவா (Tokugawa) பரம்பரை அரசாண்ட காலத்தில் விலைமகளிர் ‘தருமா’ என்ற புனைப்பெயருடன் அழைக்கப்பட்டனராம். இந்த டோகுகுவா மன்னர்களின் ஆட்சியில் போதிதர்மர் கேலிக்குரியவராகவும், நகைப்பிற்குரியவராகவும், ஆபாச பேச்சுக்குரியவராகவும் அன்றைய கலைஞர்களால் சித்தரிக்கப்பட்டார் என்பது அப்போதைய ஓவியங்களின் மூலம் தெரியவருகிறது. விலைமகளிருடன் இருப்பவராகவும், பெண்ணாகவும், பெண் உடை தரித்தவராகவும் போதிதர்மரை இவர்கள் தீட்டியுள்ளனர். ஏன் இவ்வாறு செய்தனர் என்பதற்கு முரண்பட்ட கருத்துகள் உள்ளன.

இப்பிட்ஸூ போதிதர்மர் (Ippitsu Daruma) என்பது ஒருவகை சித்திரம். கையை எடுக்காமல் தூரிகையால் போடப்படும் போதிதர்மரின் ஒற்றை வளையச் சித்திரம். இதற்கும் பல்வேறு சக்திகள் உண்டு. பட்டுப் புழுக்கூட்டினால் செய்யப்படும் மாயூ போதிதர்மர் (Mayu Daruma) பொம்மைகளும் உள்ளன. இவை குழந்தைகளுக்கு நல்லதாம்.

ஆக, நிலவில் வடை சுடும் நம் பாட்டியைப் போல் போதிதர்மர் ஜப்பானியர்களின் வாழ்வில் ஒன்றிவிட்ட ஒருவர். இன்றைய ஜப்பானிடம் இருந்து பிரித்தெடுக்க இயலா சின்னம்.

இவ்வளவு மூடநம்பிக்கைகள் புரையோடியிருக்கும் ஜப்பான் போதிதர்மரது நோக்கத்தை வரையறுக்க முடியாத அளவுக்குச் சிதைத்துவிட்டது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
இந்த தருமா பொம்மைகள் உருவெடுத்ததற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. இது கொஞ்சம் நம் மனத்துக்கு ஆறுதல் அளிக்கும் செய்தி.

டக்கசாகி (Takasaki) நகரே போதிதர்மர் பொம்மைகளை தயாரிப்பதன் முன்னோடி. முன்னொரு காலத்தில், சுமாராக பதினேழாம் நூற்றாண்டில் ஜப்பானில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சம் முடிந்தும் மக்களை பொருளாதார வறட்சி வாட்டியது. அப்போது அங்கிருந்த கோயிலில் (Shōrinzan Darumaji Temple) வாழ்ந்த போதிதர்மர் (அவரது அவதாரமாம்), அம்மக்களை தன் உருவபொம்மையை உருவாக்கி விற்று அதன் மூலம் பொருளீட்டும்படி யோசனை அளித்ததைத் தொடர்ந்து அவ்வூர் மக்கள் இதில் ஈடுபட்டனராம். வறட்சியும் விலகியதாம்.

போதிதர்மர் கூறியதாகச் சொல்வது உண்மையோ இல்லை புருடாவோ, இப்பொம்மைகளால் ஒரு கூட்டம் பெரும் வறட்சியிலிருந்து தப்பியது மகிழ்ச்சிக்குரிய செய்தி. எது எப்படியோ இன்றுவரை ‘போதிதர்மர் பொம்மை’ தயாரிக்கும் தொழில் ஓகோவென இருக்கிறது. சுமார் ஒன்றரை மில்லியன் பொம்மைகள் டக்கசாகியிலிருந்து தயாராகின்றன. இது போதிதர்மர் பொம்மையின் மொத்த உற்பத்தியில் எண்பது சதவிகிதமாகும்.

இப்படியாக, போதிதர்மர் இன்றும் வாழ்கிறார். ஜென்னின் மூலமாகவும், குங்ஃபூவின் மூலமாகவும், புனைக்கதைகளின் வாயிலாகவும், சடங்கு சம்பிரதாயங்களின் வாயிலாகவும், மூட நம்பிக்கையின் வாயிலாகவும், பழமொழிகளின் வாயிலாகவும், பொம்மைகள் மற்றும் இன்னபிற வாயிலாகவும். ஜெய் போதிதர்மா!

முடிந்தது

மரணமும் வாழ்க்கையும்

போதிதர்மர் / அத்தியாயம் 9

ஷாவோலின் மடத்திலேயே தங்கிய போதிதர்மர் தான் கொண்டுவந்த தியான ஆன்மத்தை சீனர்களிடத்தில் சிறிது சிறிதாக எத்திவைத்தார். எத்திவைத்தல் என்றால், மனத்தில் இருப்பனவற்றை புத்தகமாக எழுதி, புத்தகத்திலிருந்து பிறர் மனத்துக்கு ஏற்றுவதல்ல. நேரடியாக மனத்திலிருந்து மனத்துக்கு. அதுதான் போதிதர்மர் கண்டுணர்ந்த வழிமுறை. அதுதான் ஜென்.

சில ஆண்டுகள் கழிந்தன. ஒரு நாள் போதிதர்மர் தன் முதன்மைச் சீடர்கள் எனக் கருதிய நால்வரை அழைத்தார். தனது ஆன்மீக வாரிசை (அதாவது 29ஆம் பௌத்த தலைவர்) அறிவிக்கப்போகிறார் என்று அறிந்து ஷாவோலினே கலகலப்படைந்தது.

ஒருவர் முகம் மற்றவருக்குத் தெரியாத காரிருள் இரவு. சீடர்கள் நால்வரும் ஒருவர் பின் ஒருவராக ஷாவோலின் மடத்தின் மத்திய அறையை அடைந்தனர். போதிதர்மர் அவர்களுக்கு முன்பாகவே அங்கு காத்திருந்தார்.

‘நான் உங்களிடம் சில கேள்விகளை கேட்க இருக்கிறேன்.’

‘கேளுங்கள் குருவே!’

‘நீங்கள் என்னிடமிருந்து இத்தனை வருடங்களாக என்ன கற்றுக்கொண்டீர்கள் என்று ஒருவர் பின் ஒருவராகக் கூறுங்கள்?’ என்றார்.

முதல் மாணவன் தாவ்ஃபூ (Dàofū) கூறினார். ‘புனித நூல்களால் புத்த மதத்தை மட்டுமே அறிய முடியும்; அதனால் நாம் புனித நூல்களை மட்டும் கற்று அத்துடன் கட்டுண்டு விடக்கூடாது. அதேசமயம் இந்நூல்களை விடுத்து எதுவும் செய்யவும் கூடாது.’

‘இதுதான் நீ அறிந்திருக்கிறாய் என்றால், நீ புத்த மதத்தின் தொடக்கத்தை மட்டுமே கற்றுள்ளாய், என் தோலைக்கூட கடக்கவில்லை. இன்னும் நீ கடக்க வேண்டிய பாதை அதிகம்.’

இரண்டாவதாக, தாரணி (Dharani) எனும் பிக்குணி தொடர்ந்தார். ‘தங்களது போதனைகள் எங்களை புத்தரது நிலத்துக்கே அழைத்துச் சென்றது. புத்தரை நேரில் கண்டு அவர் எப்படி விழிப்படைந்தார் என்று படிப்படியாக அவரிடமே கற்றதைப்போல் இருந்தது. அதனை தரிசித்ததே விழிப்படைந்த நிலையை எங்களுக்கு நல்கியது.’

‘நீ பரவாயில்லை, என் தசையை அடைந்துவிட்டாய், அடுத்து?’

‘நீர், நிலம், குளிர், வெப்பம், வானம், பூமி என நாம் பார்ப்பவை அனைத்தும் வெறுமையின் ரூபங்கள். பார்த்தல், தொடுதல், கேட்டல் என நாம் உணர்பவை அனைத்தும் மாயை. உண்மையில் ‘இருப்பு’ என்பதே இல்லை. நீங்கள், நான் என அனைவரும், அனைத்தும் மாயத் தோற்றங்களே, பிம்பங்களே. அழிந்து போகக் கூடியவர்களே’ என்று முடித்தார் மூன்றாம் சீடர் தாவ்யூ (Dàoyù).

‘மிக்க நன்று, நீ என் எலும்புகளை அடைந்துவிட்டாய்!’ என்று கூறி போதிதர்மர் அடுத்து தன் விருப்பத்துக்குரிய சீடன் ஹூய்கீ என்ன கூறப்போகிறான் என்று பார்த்தார்.

ஹூய்கீயிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. எழுந்துநின்றான். கைகூப்பினான். நேரே சென்று போதிதர்மரின் காலில் விழுந்தான். அவ்வளவு தான்.

போதிதர்மர் நெகிழ்ந்தே போனார். ‘நீ என் ஆன்மாவை அடைந்துவிட்டாய், நான் எடுத்துவந்த ஆன்மா தற்போது உன்னிடம்’ என்று கூறி தன் உடைகளையும், பிச்சைப் பாத்திரத்தையும், லங்கவர்த்தன சூத்திரத்தையும் ஹூய்கீயிடம் அளித்துவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றார்.

ஹூய்கீயின் இச்செயலுக்கு பொருள் என்ன? போதிதர்மரின் செயலுக்கும் வார்த்தைக்கும் என்ன அர்த்தம்?

‘எல்லாம் அறிந்தவன் அறிவிக்கமாட்டான்; அறிவிப்பவன் எல்லாம் அறியமாட்டான்’ என்ற போதிதர்மரின் போதனைக்கு ஏற்றவாறு, ‘நான் அறிந்தவன். அதனை தங்களிடம் நிரூபித்து நற்சான்றிதழ் பெற எனக்கு விருப்பமில்லை’, என்று தன் செய்கையால் தெரிவித்திருக்கிறான் ஹூய்கீ.

போதிதர்மரும் அதனை அறிந்து. ‘நீயே, எனக்குப்பின் என் பணியைத் தொடர்வதற்குத் தகுதி வாய்ந்தவன்’ என்று தெரிவிக்கும் விதமாக தன் உடைகளையும், திருவோட்டையும் ஹூய்கீவிடம் கைமாற்றினார். தான் சீனா சென்ற நோக்கத்தையும் பூர்த்தி செய்தார்.

இவ்வாறாக, ஹூய்கி ஜென்னின் இரண்டாம் குரு (மாஸ்டர்) ஆனார்.

இந்த நிகழ்வில் இருந்து பெறப்படும் கருத்துகளே போதிதர்மர் தோற்றுவித்த ஜென் புத்தமதத்தின் அடிப்படைத் தத்துவங்கள். புத்தரைப்போல் பிரபஞ்ச விழிப்படைய மறை நூல்களின் மூலம் கற்கும் அறிவைவிட அனுபவத்தால் கற்கும் அறிவே முக்கியம். அனுபவம் என்றால் புத்தர் பட்டுணர்ந்த அதே அனுபவம். இதனை செந்தமிழில் ‘பட்டறிவு’ என்பர்.

புத்தர் பெற்ற இந்தப் பட்டறிவை வார்த்தைகளால் ஒருவர் அறிய முடியாது. அதனை ‘ஜென்’ மூலமே அறியலாம். ஜென் என்றால் என்ன?

சீனர்களுக்கும் ஜப்பானியர்களுக்கும் வெளிநாட்டுப் பெயர்களை உச்சரிப்பதில் ஆரம்பத்தில் இருந்தே சிக்கல். அதனால் தான் போதிதர்மரை சீனர்கள் ‘தாமோ’ என்றும் ஜப்பானியர்கள் ‘தருமா’ என்றும் தங்களுக்கேற்றார் போல் பெயர் வைத்து அழைக்கின்றனர். அதே போல் ‘ஜென்’ என்பதும் ‘சான்’ என்பதும் ‘தியானம்’ என்ற சொல்லின் திரிபே.

சமஸ்கிருத சொல்லான ‘தியானத்துக்கு’, பாலி மொழியில் ‘ஜான்’ என்று பெயர், அதுவே சீன மொழியில் ‘சான்’ என்றானது. ஜப்பானிய மொழியில் ‘ஜென்’ என்றானது. இவ்வற்றுள் இன்று துலங்கிவிட்ட பெயர் ’ஜென்’ என்பதே. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் போதிதர்மர் சீனா எடுத்துச் சென்ற தியானம் கிட்டத்தட்ட ஜென் ஆனது. ஜென் புத்தமதத்தின் தனிப் பிரிவாக உருமாறியது. செக்ஸ் சாமியார் எனச் செல்லமாக அழைக்கப்படும் ஓஷோ ரஜ்னீஷை உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். அவரும் ஜென் பிரிவு போதிதர்மர் தோற்றுவித்த பௌத்தத்தால் ஈர்க்கப்பட்டவர்தான். அவர் ஏன் அந்தப் பட்டப் பெயரை பெற்றார் என்றால், கலவியிலும் தியானம் செய்ய முடியும் (அதாவது கலவியிலும் ஜென் சாத்தியம்) என ஆராய்ந்து அறிவித்ததால்தான்.

போதிதர்மர் தாம் வந்த நோக்கம் நிறைவடைந்தது என்று உணர்ந்தார்.

ஆனால் அதற்குப் பின் நடந்த நிகழ்வுகள்?

எப்போதுமே தலைமைப் பதவி என்பது அமைதிக்கு உரித்தானதல்ல என்பதற்கு வரலாறு நெடுகிலும் ஏராளமான ரத்தச் சான்றுகள் இருக்கின்றன. ஷாவலின் பதவியும் அப்படித்தான் ஆனது. போதிதர்மர் இருந்தவரை அந்த நாற்காலி ‘பளிச்’சென்றுதான் பிரகாசமாக இருந்தது. எப்போது அவரை விட்டு ஹூய்கி கைக்கு மாறியதோ. அன்றே அதற்கு ஏழரை ஆரம்பித்துவிட்டது.

ஹூய்கிக்கு எப்படி போதிதர்மர் தன் பதவியைத் தரலாம்? அவன் நம்மைவிட எதில் சிறந்துவிட்டான்? ஒழுங்காக அவனுக்கு தியானம்கூட செய்ய வராது. அனாதை. பரதேசி. நம்மைவிடக் கீழான தாழ்ந்த குலத்தைச் சார்ந்தவன். காலில் விழுந்து பாசாங்கு செய்து போதிதர்மரை ஒருவாறு கவிழ்த்துவிட்டான், சதிகாரன். அவன் எப்படியிருந்தாலும், முற்றும் அறிந்த போதிதர்மருக்கு எங்கே சென்றது புத்தி? அவருக்கு நாம் அப்படி என்ன துரோகம் செய்தோம்? அவர் உண்ணும் சோற்றில் மண்ணையா அள்ளிப்போட்டோம். சரி, இதுவரை மண்ணை அள்ளிப்போடவில்லை. திறமையான உண்மைச் சீடர்களை உணர்ந்துகொள்ள முடியாத அவரது சோற்றில் இனி நஞ்சைக் கலந்தாலும் தப்பில்லை.

ஷாவோலினில் சிலரது மனம் மேற்படி சிந்திக்கத் தொடங்கியது. அது செயல்படுத்தவும் பட்டது. ஆனாலும் எப்படியோ போதிதர்மர் அதிலிருந்து தப்பினார். மீண்டும் ஒருமுறை நஞ்சேற்றம், மீண்டும் போதிதர்மர் தப்புதல். மீண்டும் ஒருமுறை நஞ்சேற்றம். இப்படி மாற்றி மாற்றி செய்துகொண்டே இருந்தால் ஒரு சாமானியன்கூட விழித்துவிடுவான். ஆனானப்பட்ட போதிதர்மருக்குத் தெரியாதா என்ன? இறுதியில் ஒரு நாள் அவர் தமக்கு உணவில் இடப்பட்ட நஞ்சை மனம் விரும்பி உண்டார். சுயவிருப்பத்துடன் இறந்தார்.

இப்படி மட்டும் அவர் செய்யாமல் இருந்திருந்தால் ஃபிடல் காஸ்ட்ரோவின் ‘தப்புதல்’ படலத்தை விஞ்சியிருப்பார். விதியை வெல்ல யாரால் இயலும்?

போதிதர்மரின் மரணம் குறித்து இன்னும் சில கருத்துகள் நிலவுகின்றன. ஆனால், பெரும்பாலான நூல் ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளும் கருத்து இதுதான்.

போதிதர்மர் இறந்த பிறகு ஹுய்கீ தானாகவே ஷாவோலினை விட்டு வெளியேறினார். சீனா, ஜப்பான் என தேசம் தேசமாக தியானத்தை எடுத்துச்சென்றார். போதிதர்மருக்குப் பின் ஜென் பௌத்த பிரிவின் இரண்டாம் உபதேசராக சீனம் முழுவதுமே அவரை ஏற்றுக்கொண்டது. ஆனால், ஷாவோலின் மட்டும் தனிப் பாதையில் பிரவேசித்துக் கொண்டிருந்தது.

போதிதர்மர் இறந்து மூன்று வருடங்கள் ஓடியிருந்தன.

பமிர் மலைச்சாரல், இதமான காற்றும், அதன் ஈரப்பதமும் அதனை கடந்து செல்பவர்களை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தது. வெளிநாட்டிலிருந்து சாங் யுங் என்ற அரச தூதுவன் தன் வேலையை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு கிட்டத்தட்ட மூன்று வருட காலத்துக்குப் பின் தனது தாயகமான ஷாவோலின் நோக்கி வந்துகொண்டிருந்தான். அப்போது தூரத்தில் யாரோ ஒரு துறவி மெதுவாக நடந்து வருவதைக் கண்டான்.

‘யார் அவர், காலில் செருப்பில்லை. ஆனால் கைத்தடியில் செருப்பொன்று தொங்குகிறது. இந்தியத் துறவிபோல் தெரிகிறார். யார் இது? அட,  நம் போதிதர்மர்!’ என வியந்து யுங் அவரை நோக்கி விரைந்தான். யுங்குக்கு போதிதர்மர் இறந்தது அதுவரை தெரியாது. ‘மாஸ்டர் கொஞ்சம் நில்லுங்கள். நானும் உங்களுடன் வருகிறேன்’ என்று கூவிக்கொண்டே யுங் அவர் பின்னாலேயே ஓடினான். அவர் விலகிச் சென்றார். அவன் விடவில்லை. துரத்திக் கொண்டே பின்னால் சென்றான். ஓரிடத்தில் அவரும் நின்றார்.

‘மாஸ்டர், காலில் காலணி ஏதும் அணியாமல், ஒரே ஒரு செருப்பை தடியில் கட்டித் தொங்கவிட்டபடி எங்கே செல்கிறீர்கள்?’ என்று வினவினான் யுங்.

‘தற்போது நீ எங்கே செல்கிறாய்?‘’

‘ஷாவோலினுக்கு…‘’

‘ஷாவோலினில் நீ அதை அறிவாய், செல்’, என்று சொல்லிவிட்டு போதிதர்மர் நடந்து கொண்டே இருந்தார்.

சரி, போதிதர்மர் ஏதாவது அவசர வேலையாகச் சென்றுகொண்டிருப்பார் என எண்ணி யுங் அவரை வணங்கிவிட்டுக் கிளம்பினான். சில மணி நேரங்களில் யுங், ஷாவோலின் அடைந்தான். தன் வீட்டுக்குச் சென்று இளைப்பாறிவிட்டு கடைத்தெருவுக்கு வந்தவன், தனது நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது வழியில் தான் போதிதர்மரைப் பார்த்த விவரத்தைப் பகிர்ந்துகொண்டான்.

‘பமிர் மலை நோக்கிச் சென்ற போதிதர்மர் எதற்காக ஒருகால் செருப்பை தன் கைத்தடியில் கட்டித் தொங்கவிட்டிருந்தாரோ தெரியவில்லை’ என்று அவன் சொல்ல, நண்பர்கள் யுங்கை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ‘போடா பைத்தியக்காரா போதிதர்மர் இறந்து மூன்றாண்டுகள் ஆகின்றன. கனவேதும் கண்டாயா என்ன?’ என்று கேலி செய்தனர்.

யுங் அதிர்ச்சியிடைந்தான். ‘என்ன போதிதர்மர் இறந்து விட்டாரா. இல்லை, இல்லை உண்மையிலேயே நான் அவரைப் பார்த்தேன்’ என்று யுங் சத்தியம் செய்தான்.

அப்பக்கம் வந்த ஒற்றர்கள் மூலம் இது மன்னன் காதுக்குச் சென்று சேர்ந்தது.

மன்னன் யுங்கை அழைத்து விசாரித்தான். யுங் தான் கண்டவற்றை அப்படியே சொன்னான். அவன் பேச்சை நம்பாமல் கோபமடைந்த மன்னன், போதிதர்மர் விஷயத்தில் பொய் கூறிய குற்றத்துக்காக யுங்கை சிறையில் அடைக்க உத்தரவிட்டான். இப்போதும் யுங் மனம் திருந்தி தான் சொன்னது பொய்தானென்று ஒப்புக்கொண்டால் விடுதலை அடையலாம் என ஒரு வாய்ப்பும் அளித்தான்.

யுங் மனம் கலங்கவில்லை. தான் உண்மையிலேயே போதிதர்மரைக் கண்ணாரக் கண்டதாக உறுதியாகக் கூறினான். யுங் பொய் கூறுபவனல்ல என்றும் நேர்மைக்குப் பெயர் பெற்றவன் என்றும் மன்னனுக்கும் தெரியும் என்பதால், யுங்குக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பாக ஷாவோலின் மட பிக்குகளிடம் விசாரணை நடத்த விரும்பினான்.

பிக்குகள் அனைவரும் அரசவைக்கு அழைத்து வரப்பட்டனர்.

‘பிக்குகளே, போதிதர்மரைக் கண்டதாக யுங் என்பவர் சத்தியம் செய்து கூறுகிறார். தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்றான் மன்னன்.

குலை நடுங்கிப் போனது ஷாவோலின் மட பிக்குகளுக்கு. தாங்கள் போதிதர்மரை நஞ்சிட்டுக் கொன்ற விஷயம் எதுவும் யுங்குக்குத் தெரிந்து விட்டதோ? மழுப்ப ஆயத்தமாகினர்.

‘போதிதர்மரது உயிர் பிரிந்த பின்னர் நாங்களல்லவா, அவரது உடலை அவர் ஒன்பதாண்டுகள் தவமிருந்த குகைக்குள் நல்லடக்கம் செய்தோம்‘

‘இல்லை, யுங் கூறுவதை வைத்துப் பார்த்தால் அவன் உண்மை உரைப்பதாகவே தெரிகிறது. அவன் ஏன் அவசியமின்றி நம்மிடம் பொய் சொல்ல வேண்டும்.’ என்றான் மன்னன்.

‘மன்னா, தங்களுக்கே சந்தேகம் வந்தபின் பேசிப் பயனில்லை, வாருங்கள் அவரது சமாதியை உடைத்துக் காண்பிக்கிறோம்’ என்றனர் ஷாவோலின் பிக்குகள்.

‘தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; மக்கள் அவ்வாறு சந்தேகிக்கின்றனர். மன்னன் மக்கள் பிரதிநிதி அல்லவா? நம் மதத்தில் சமாதியை உடைப்பதற்கு இடமிருந்தால், அவ்வாறே செய்து மக்கள் சந்தேகத்தை தீர்த்துவிடுவோம்.’ என்றான் மன்னன்.

‘இடம் உள்ளது, வாருங்கள் செல்வோம்.’ பிக்குக்கள் ஆவேசமாக குகை நோக்கிப் புறப்பட்டனர். மக்கள் பின்தொடர்ந்தனர்.

போதிதர்மரது நெடுந்துயில் அறை திறக்கப்பட்டது. இல்லை உடைக்கப்பட்டது. நம்மூர் கோவில்களின் கருவறை திறப்பைப் போல.

உள்ளே உடலும் இல்லை, எலும்பும் இல்லை, துணியும் இல்லை. உள்ளே ஒரே ஒரு செருப்பு மட்டுமே அனாதையாகக் கிடந்தது. மிரண்டு போன பிக்குகள் சிரம் தாழ்த்தி வணங்கி மண்டியிட்டனர்.

மாஸ்டர் தாமோ (போதிதர்மர்), தாயகம் திரும்பி விட்டார் என்று உணர்ந்துகொண்டனர்.

இதன் பின்னர் ஷாவொலின் மட பிக்குகள் மனம் திருந்தி ஒன்றுகூடி ஹுய்கீயை அழைத்து வந்து மடத்தை அவர் பொறுப்பிலேயே ஒப்படைத்தனர்.

0

இதுவரை பார்த்தவை அனைத்தும் போதிதர்மரின் மரணத்தைப் பற்றி சீனர்கள் கூறும் கருத்தாகும். இதுவே பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்ளும் கருத்தும்கூட. அதன்படி போதிதர்மர் சாகவில்லை. தாயகம் திரும்பிச் சென்றுவிட்டார்.

இவை போக போதிதர்மரின் இறப்பைப் பற்றி வேறு சில கருத்துகளும் நிலவுகின்றன. போதிதர்மர், சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருந்தபோதே இறந்துவிட்டார் என்பது சிலரது நம்பிக்கை.

ஜப்பானியர்களின் கூற்றுப்படி போதிதர்மர் அமர்ந்திருந்தபோதே மறைந்துவிட்டார். இங்கு மறைந்துவிட்டார் என்றால் மரித்துவிட்டார் என்று பொருள் இல்லை. அப்படியே மாயமாக மறைந்துவிட்டார் என்று பொருள். இரு நூல்களை அங்கு விட்டுவிட்டு மாயமாக மறைந்தார். அவை உடற்பயிற்சி பற்றி விளக்கும் ‘யி ஜின் ஜிங் (Yi Jin Jing)’ மற்றும் தியானத்தை விளக்கும் ‘க்ஷி சூய் ஜிங் (Xi Sui Jing)’ ஆகியன. யி ஜின் ஜிங்கே பின்னர் தோன்றிய யிங் ஜிங் குங்ஃபூவுக்கு அடிப்படை நூலாம். ‘க்ஷி சூய் ஜிங்’ கால ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதாம்.

இவைபோக பமிர் மலை வழியே சென்ற போதிதர்மர் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டதாகவும், போகிற வழியில் வியட்னாம், கம்போடியா, மலேசியா ஆகிய தேசங்களுக்குச் சென்றதாகவும், அவர் இறக்கவே இல்லை என்றும், ஒவ்வொரு நூற்றாண்டும் அவதரிப்பதாகவும் பல கதைகள் உலவுகின்றன.

இந்த சீன, ஜப்பானிய, பிற கூற்றுக்களின் முடிவில் நமக்குத் தெரியவரும் செய்தி. ‘போதிதர்மர் இன்றும் வாழ்கிறார்.’

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், மகாத்மா காந்தி, ஆபிரஹாம் லிங்கன், நெப்போலியன், சே குவேரா, நேதாஜி சுபாஸ் சந்திர போஸ், எம்.ஜி.ஆர், பிரபாகரன் போன்ற பெரும் புள்ளிகளின் மரணத்தை மக்கள் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களின் தலைவரைப் பிரிந்த நிலையை சாமானிய மக்கள் விரும்பவதில்லை என்பதே யதார்த்தமான உண்மை.

அதனால் தங்கள் தலைவன் வாழ்கிறான் என பிறரை நம்ப வைக்க சில கதைகளை இவர்கள் தோற்றுவிப்பதும் வழக்கம். இதனை legend என்றழைப்பர். புனைக்கதைகள் முற்றிலும் கற்பனையாகவும் இராது, முற்றிலும் உண்மையாகவும் இராது; சிறிதளவு உண்மையை வைத்துக்கொண்டு கற்பனையால் புனையப்படுபவை என்று கொள்ளலாம்.

இவ்வாறு புனையப்பட்ட கதைகளின் ஆயுட்காலம் இறந்த நபரைப் பொருத்து வேறுபடும். சில ஒருசில நாட்கள், சில ஓரிரு மாதங்கள், சில ஓரிரு ஆண்டுகள், சில முடிவற்றவை. இம்முடிவற்ற புனைக்கதைகள் புராணக் கதைகள் எனப்படுகின்றன. புராணத்துக்கு பாரதத்தில் எந்தப் பஞ்சமும் இல்லை. அந்த அளவுக்கு பெருந்தலைவர்கள் நிரம்பி வழிந்த பூமி இது.

போதிதர்மர் மீதிருந்த அபரிமிதமான அன்பு, கண்மூடித்தனமான அன்பு மக்களை பல்வேறு புனைகதைகள் புனையத் தூண்டியது. அதுவும் குருட்டுத்தனமான கட்டுக்கதைகள், நம்பிக்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், மேலும் பல.

போதிதர்மரை ஆதிமுதல் அலசத் தொடங்கிய நாம் அந்தமாகிய இப்புனைவுகளையும் கொஞ்சம் பார்ப்போம். புனைவுகளில் சீனர்களை லட்சம் மடங்கு மிஞ்சுகின்றனர் ஜப்பானியர்கள்.

0

மந்திரவாதி, சூனியக்காரர்

போதிதர்மர் / அத்தியாயம் 8

மன்னன் வே சினத்துடன் வெளியேற, புன்னகையுடன் போதிதர்மர் மேற்கு திசை நோக்கிப் புறப்பட்டார். யாங்ஸி நதியைக் கடந்து புத்த பிக்குகளுக்கு திருப்தியாகத் திகழ்ந்த லியோயாங் என்ற இடத்துக்குச் செல்வதுதான் அவரது நோக்கம்.

யாங்ஸி நதி தென் சீனாவையே செழிப்பாக வைத்திருக்க உதவும் பெரும் நதி. இன்றும் கூட அது அப்படித்தான்.

அந்த நதியைக் கடக்க பல படகுகள் இருந்தன. அப்படி ஒரு படகில் ஏற போதிதர்மர் காலடி எடுத்து வைத்தார்.  அதற்குள் அங்கிருந்தவர்கள் கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.   இறுதியில், போதிதர்மர் அப்படகில் ஏறவில்லை என்று சொல்லப்படுகிறது.

மக்கள் பேசியதனைத்தும் போதிதர்மர் காதிலும் விழுந்தது. படகில் ஏறப்போனவர் படகிலிருந்து தன் காலை கீழிறக்கினார். நேராகச் சென்று அங்கிருந்த புல் ஒன்றை முறித்தார். புல் என்றால் நம்மூர் அருகம்புல் இல்லை. அது சீனப் புல். சோளத்தட்டை அளவில் இருக்கும். அதனை ஆற்றில் மிதக்கவிட்டார். பிறகு, அந்தப் புல்லின் உதவியுடன் யாங்ஸி ஆற்றை மின்னல் வேகத்தில் கடந்தார். படகில் இருந்தவர்கள் அனைவரும் அந்தக் காட்சியை வாய்பிளந்து பார்த்தனர்.

காம்பே போன்றவர்கள் உண்மையில் அது புல் இல்லை என்றும், புல் போல் ஒடுக்கமான படகு என்றும் கூறுகின்றனர். தான்லின் போன்ற சீன ஆசிரியர்கள் ‘புல் போன்ற படகைத்தான் ’புல் என உருவகப்படுத்திக் கூறியிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.

அதுநாள்வரை பைத்தியக்காரராகவும் முரடராகவும் சீனர்களால் கருதப்பட்ட போதிதர்மர், இந்த நிகழ்வுக்குப் பின்னர் மந்திரவாதியாகவும் சூனியக்காரராகவும் பார்க்கப்பட்டார். இப்படியாக, லியோயாங் சென்றடைந்த போதிதர்மர் அங்கும் அழையா விருந்தாளியாகவே பார்க்கப்பட்டார். இனவெறி அங்கும் தலைவிரித்தாடியது.

இதன்பிறகு, தீவிரமாக யோசித்த போதிதர்மர் அங்கிருந்து சாங் மலை வழியே ஹெனான் மாநிலத்தில் இருந்த ஷாவோலின் மடத்துக்குச் செல்ல முடிவு கட்டினார். ஏனென்றால் ஷாவோலினில்தான் இந்தியாவிலிருந்து சீனா செல்லும் புத்தபிக்குகள் பெரும்பாலும் தங்குவர். அதனால் அங்கு இனத்துவேஷம் இருக்காது என போதிதர்மர் எண்ணியிருக்கலாம்.

சுற்றிலும் மலைகள், அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் ஷாவொலின் மடம் கம்பீரமாக அமைந்திருந்தது. போதிதர்மர் அதன் கதவுகளையும் தட்டினார். ஆனால் இவருக்கு முன்பாக இவரது புகழ் அங்கும் பரவியிருந்தது. குதர்க்கவாதியான அவரை உள்ளே விட்டால் மற்ற பிக்குகளின் தியானநிலை பாதிப்படையும் என்றும் கூறி போதிதர்மரை மடத்துக்கு உள்ளேவிட மறுத்துவிட்டனர்.

போதிதர்மர் எள்ளளவும் கலங்கவில்லை. ஷாவோலின் மடம் மலைப் பிரதேசத்தில் இருந்ததால் பல்வேறு மலைக் குகைகள் இருந்தன. அவர் கண்ணில் அங்கிருந்த குகையொன்று பட்டது. இறைவன் படைத்த இப்பரந்த உலகில் எனக்கா இடமில்லை எனக் கருதி அதே குகையில் தஞ்சமடைந்தார். உள்ளே சென்றவர் குகையின் ஒரு பக்கச் சுவற்றை வெறித்துப் பார்த்தவண்ணம் அமர்ந்தார்.

மகான்கள் வாழ்க்கையில் இதுபோன்ற தொடர் துன்பங்கள் என்பது இயல்பே. அத்துன்பத்திலும் அவர்கள் தம் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் இருக்கின்றனரா என்பதை இறைவன் சோதிப்பான் என்பர். சமணர் நெறியை விட்டொதுங்கிய புத்தரும், ரோமானியர்களால் துரத்தப்பட்ட ஏசுவும், விண் ஏற்றத்துக்கு முன் முஹம்மது நபியும், சார்புநிலைக் கோட்பாட்டை வெளிப்படுத்திய நிலையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும், கம்யூனிச சித்தாந்தத்தை முன்வைத்த நிலையில் கார்ல் மார்க்ஸும் இவ்வகையான தொடர் சோதனைக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஆனால், இச்சோதனைகளின் இறுதியில் அவர்களுக்கு கிடைத்தது என்னவோ மகத்தான வெற்றிதான். போதிதர்மருக்கும் வெற்றி கிட்டியது. அதுவும் மாபெரும் வெற்றி.

குகைக்குள் சென்றமர்ந்த போதிதர்மர் அதன் சுவற்றை வெறித்துப் பார்த்தபடி, நாட்கள், வாரங்கள், மாதங்களாக இடத்தை விட்டு நகராமல் அங்குமிங்கும் அசையாமல் அப்படியே வீற்றிருந்தார்.

போதிதர்மரை மடத்துக்குள் வரவிடாமல் விரட்டிய தினத்தன்று பார்த்ததுதான்; அதன்பிறகு பிக்குகள் யாரும் அவரைப் பார்க்கவில்லை. மற்றபடி மக்களின் கண்களிலும் அவர் தென்படவில்லை என்பதால் சீனா முழுவதும் போதிதர்மர் இறந்துவிட்டதாகவும், இந்தியாவுக்கே திரும்பிவிட்டதாகவும், பித்துப் பிடித்து வடக்கு மாகாணங்களில் அலைவதாகவும் விதவிதமான வதந்திகள் பரவின.

ஷாவோலின் மடத்தில் பாலுக்காக சில ஆடுகள் வளர்க்கப்பட்டன. ஒருநாள் மடத்திலிருந்து ஆடுகளை ஓட்டிக்கொண்டு ஒரு மாணவன் கிளம்பினான். ஒவ்வொரு பகுதியாக மேய்ந்து கொண்டே வருகையில், தற்செயலாக அந்த ஆடுகள் போதிதர்மர் இருந்த குகை நோக்கி வந்தன. மாணவன் வெளியில் நின்றிருக்க ஒரு சில ஆடுகள் மட்டும் நீர் தேடி அந்தக் குகைக்குள் சென்றன. சில குகைகளுக்குள் சுனை இருப்பது வழக்கம். உள்ளே சென்ற ஆடுகள் மிரண்டு போய் வெளியே ஓடிவந்தன.

ஆடுகள் மிரளும் அளவுக்கு குகையினுள் அப்படி என்னதான் இருக்கிறது என்று அறிய உள்ளே நுழைந்த மாணவனுக்கு தூக்கிவாரிப் போட்டது. உள்ளே சுவற்றை வெறித்த நிலையில் போதிதர்மர் அசைவின்றி அமர்ந்திருந்தார்.

மடத்துக்குச் சென்றபிறகும் போதிதர்மர் நினைவாகவே கிடந்த மாணவன் ஷாவோலினில் இருந்து கொஞ்சம் உணவும் நீரும் எடுத்துக்கொண்டு குகைக்குச்சென்றான். போதிதர்மர் முன் அதனை வைத்துவிட்டு சிறிது நேரம் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். அவர் அசைவின்றி இருந்தார்.

ஷாவோலின் பிக்குகளிடம் இந்தச் செய்தியைச் சொன்னபோது அவர்கள் நம்பவில்லை. மாணவன் எதையோ கண்டு மிரண்டுபோய் இருக்கிறான் என்றும் போதிதர்மர் இறந்துவிட்டிருப்பார் என்றும் சொன்னார்கள். ஆனாலும் மாணவன் விடாப்பிடியாகக் கூறியதால், சென்று பார்த்துவிட்டுத்தான் வருவோமே என்று மாணவனுடன் புறப்பட்டு குகைக்குச் சென்றார்கள்.

அனைவரும் போதிதர்மரைப் பார்த்தார்கள். வியந்தார்கள். ஒரு மனிதன் இப்படி மாதக்கணக்கில், உணவு தண்ணீர் இல்லாமல் தவமிருக்க முடியுமா என்று எண்ணி அவர் மேல் மதிப்பு கொண்டார்கள். அன்றிலிருந்து ஷாவோலின் மடத்தில் வசித்த பிக்குக்கள் அவர் தவத்துக்கு இடையூறோ அபாயமோ ஏதும் நேராமல் காவல் புரிய ஆரம்பித்தனர்.

போதிதர்மர் குகையில் இருந்ததை எப்படி கண்டுபிடித்தனர் என்பதை விளக்கும் வேறு பல கதைகளும் உண்டு. ஆனால், மேற்கூறிய இக்கதையைதான் ஷாவோலின் பிக்குகள் நம்புகின்றனர்.

‘போதிதர்மர் ஒரே இடத்தில் பல மாதங்களாக அசைவேதும் இன்றி தவம் கிடக்கிறார்’ என்ற செய்தி மளமளவெனப் பரவியது. பைத்தியக்காரர், சூனியக்காரர், முரடர் எனக் கூறி அவரை ஒதுக்கிய மக்களுக்கு அவர் ஊண், உறக்கம் இன்றி தவமிருப்பது அதிசயமாகத் தெரிந்தது. ஒரு பிக்குக்கு இது சாத்தியமான செயலா என்று எண்ணி வியப்பில் ஆழ்ந்தனர். அவர் புகழ் சீனதேசம் முழுவதும் வெகுவிரைவில் பரவியது.

இந்நிலையில் போதிதர்மரின் புகழ் பரவக் காரணமாக இருந்த ஒரு நிகழ்வு ஷாவோலினில் இன்றும் நினைவு கூரப்படுகிறது.

போதிதர்மர் இப்படி அசாத்தியத் தவமிருக்கும் செய்தி, அவரை விரட்டியடித்த ‘வே’ மன்னனையும் சென்றடைந்தது. அடடா இத்தகைய தவசீலரை நாம் அறியாமையால் தவறவிட்டு விட்டோமே என மனம் நொந்தான். எப்படியாவது போதிதர்மரை அரண்மனைக்குக் கவர்ந்து வந்துவிட வேண்டும் என எண்ணினான்.

அவரது தளபதி தன் சேனையை அழைத்துக்கொண்டு ஷாவோலின் வந்தான். போதிதர்மர் குகைக்கு காவலாக இருந்த பிக்குகளையும் மக்களையும் அங்கிருந்து விரட்டிவிட்டு, தன் படைகளுடன் உள்ளே புகுந்தான் . மக்களும் பிக்குகளும் என்ன நிகழப்போகிறதோ என்றெண்ணி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

உள்ளே நுழைந்த தளபதி தியானத்தில் அசையாதிருந்த போதிதர்மரை அழைத்துப் பார்த்தான், பதிலில்லை. தவத்தைக் கலைக்க எண்ணி அசைத்துப் பார்த்தான். முடியவில்லை. வேறுவழியில்லாமல் போதிதர்மரை குண்டுக்கட்டாகத் தூக்க முயற்சித்தான். போதிதர்மர் யானைக்கனம் கனத்தார். ஓர் அங்குலம்கூட அசைக்கமுடியவில்லை. பின்னர், குதிரையில் கயிற்றைக் கட்டி இழுத்துப் பார்த்தான். கயிறு அறுபட்டு குதிரைகளும் அவனும் விழுந்தனரே தவிர, போதிதர்மரை நகர்த்த முடியவில்லை. இன்னும் என்னென்னமோ செய்து பார்த்தான். எதுவும் பலன் அளித்ததாகத் தெரியவில்லை. தொங்கிய முகத்துடன் அரண்மனைக்கே திரும்பினான். அனைத்தையும் கேட்ட மன்னனுக்கு முகம் தொங்கிப்போனது.

இந்த நிகழ்வு சீனாவின் மூலை முடுக்கெல்லாம் பேசப்பட்டு போதிதர்மர் புகழை எங்கெங்கும் எதிரொலித்தது. போதிதர்மர் இருந்த ஷாவோலின் குகைப் பிரதேசம் சுற்றுலாத் தலம்போல் நிரம்பி வழிந்தது. பிக்குகளுக்கு விழி பிதுங்கியது. எப்பொழுதுதான் போதிதர்மர் எழுந்திருப்பார் என்ற ஆர்வம் அனைவருக்கும் இருந்தது.

இந்த நிகழ்வு போதிதர்மரை ஏதோ மாயாவி போல் காண்பிக்கிறது, இது நடந்திருக்க வாய்ப்பில்லை என்று நவீன வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். ஆனால், சீனர்கள் விடுவதாக இல்லை. பௌத்தத்தின் ‘சீ’ எனப்படும் சக்தியால் இது சாத்தியமே என்கின்றனர்.

காலம் அதன் போக்கில் ஓடிக்கொண்டிருந்தது. போதிதர்மர் அவர் போக்கில் அசைவின்றி அமர்ந்திருந்தார். குகைக்குள் புகுந்த போதிதர்மர், சுவற்றை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்து ஓர் ஆண்டு இரு ஆண்டல்ல ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்து இருந்தன.

ஒன்பது ஆண்டுகள் போதிதர்மர் அசையாமல் அமர்ந்திருந்தார் என்பது சீனர்களின் கருத்து. ஆனால், இன்றைய நவீன வரலாற்று அறிஞர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். இது சீனர்களின் கட்டுக்கதை என்கின்றனர். போதிதர்மர் அவ்வப்போது உணவுக்காகவும் பிற கடமைகளுக்காகவும் நிச்சயம் எழுந்திருக்கவேண்டும், ஒரே இடத்தில் ஒன்பது வருடம் அமர்வதெல்லாம் இயலாத காரியம் என்கின்றனர். ஆனால் சீனர்களின் போதிதர்ம புராணம் இப்படித்தான் என்கின்றது. சரி கதைக்கு வருவோம்.

இந்த நேரத்தில்தான் சீன கிராமம் ஒன்றில் வாழ்ந்து வந்த டாஸூ ஹூய்கீ (Dazu Huike) என்பவனுக்கு போதிதர்மர் பற்றித் தெரியவந்தது.  சிறு வயதில் இருந்தே தானும் புத்தபிக்குவாகி விழிப்படைய வேண்டும் என்று அவனுக்கு ஆசையிருந்தது. ஆனால், அவன் ஏழையாகவும், தீண்டத்தகாதவனாகவும் இருந்ததால் அவனது ஆசை நிறைவேறவில்லை. பிக்குகளும் பௌத்தப் பள்ளிகளும் அவனை ஏறெடுத்துக்கூட பார்க்கவில்லை. இப்போது அவனுக்கு, ‘நாம் ஏன் போதிதர்மரிடம் சென்று சீடனாகக் கூடாது’ என்று யோசனை எழுந்தது. அதன்படியே புறப்பட்டான். அவன் கிளம்பும் பொழுதே சீனாவில் பனிக்காலமும் ஆரம்பமாகியிருந்தது.

சில மாதப் பயணத்துக்குப் பிறகு ஹூய்கீ ஷாவோலினில் போதிதர்மர் இருந்த குகையை அடைந்தான். அவனுக்கு முன்பே அங்கு பலர் தாங்களும் போதிதர்மரின் சீடனாக வேண்டும் எனும் ஆசையில் அலைமோதினர். அவர்களுடன் சேர்ந்து ஹூய்கீயும் தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளுமாறு போதிதர்மரிடம் வேண்டினான். மன்றாடினான். வழக்கம்போல் போதிதர்மரிடமிருந்து பதில் ஏதும் இல்லை. சுவற்றை வெறித்த நிலைதான். இதனால் கோபம்கொண்ட ஹூய்கீ போதிதர்மர் தன்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ளும்வரை அந்த இடத்தை விட்டு நகரப்போவதில்லை எனும் சூளுரையுடன் அக்குகை வாசலிலேயே அமர்ந்தான்.

சீனத்தில் வடதுருவப் பனி அதிகமாக வீசும் காலமும் தொடங்கியது. இந்த வட துருவப்பனி ஆர்டிக்கிலிருந்து ரஷ்யா, சைபீரியா ஊடாக சீனத்தை வந்தடையும். டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் அங்கே பனி கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டத் தொடங்கிவிடும்.

குகை வாசலிலேயே காத்திருந்த ஹூய்கீ அவ்வாறு வீசிய பனியில் விரைத்துக் கட்டையானான். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் ஷாவோலின் மடத்து பிக்குக்கள் அவனைக் காப்பாற்றினர். அந்த நிலையிலும்கூட போதிதர்மர் எழவில்லை. இதனால், பொறுமை இழந்த ஹூய்கீ எழுந்தான். குருவுக்கு எனது காணிக்கை என்று ஓங்கிச் சொன்னபடி, தனது வலக்கையை வெட்டி இடக்கையில் ஏந்தியவனாக போதிதர்மர் முன் சென்று மண்டியிட்டான்.

பாறையிலும் ஈரம் கசிந்தது. போதிதர்மர் தன் ஒன்பது வருட தவத்தை முடித்துக்கொண்டு கண்விழித்தார். ஹூய்கீயைத் தன் மாணவனாக ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர், ஷாவோலின் மடத்துக்குள் பிக்குகளால் வலியவந்து அழைத்துச் செல்லப்பட்டார். ‘தாங்கள் சொல்வதையே இனி நாங்கள் செய்வோம். எங்களுக்கு பௌத்தத்தை பெரிய மனது வைத்து உபதேசியுங்கள். தியானத்தை கற்றுத்தாருங்கள்’ என அவர்கள் போதிதர்மரிடம் மன்றாடினர்.

ஷாவோலின் மடத்துக்குள் காலடி வைத்ததும் போதிதர்மர் தனது முதல் ஆணையை பிறப்பித்தார். சம்பிரதாயங்களும் சடங்குகளும் புத்த மதத்துக்கு விரோதமானவை. விட்டொழியுங்கள்.

மேலும், கௌதமர் கண்ட பௌத்தம் புனித நூல்களைத் தாண்டியது என்றும் தேடலாலும் தியானத்தாலும் மெய்யறிதலாலும் அறியப்பட வேண்டியது என்றும் பிக்குகளுக்கு அவர் புரியவைத்தார். பிறகு, பௌதத்தின் தீபமாக, உயிராகக் கருதப்பட்ட தியானத்தை சீனர்களுக்கு அறிமுகப்படுத்த ஆயத்தமானார். அதற்கு முதல் தடையாக சீனர்களின் உடல் இருந்ததைக் கவனித்தார். நோஞ்சான்களாகக் காணப்பட்ட ஷாவோலின் பிக்குகளுக்கு தேகப்பயிற்சியிலிருந்து தன் பாடத்தைத் தொடங்கினார்.

போதிதர்மர் அறிமுகப்படுத்திய இந்த தேகப் பயிற்சிக்கு யிங் ஜிங் (Yijin Jing) என்று பெயர். இதுதான் இன்றைய யிங் ஜிங் குங்ஃபூவுக்கு முன்னோடி என ஷாவோலின் மடத்தில் கூறப்படுகிறது.

இப்படி சீனாவுக்குள் தேகப்பயிற்சியாக அறிமுகமாகி தற்காப்புக் கலையாக வளர்ந்தது தமிழகத்துக் களரி என்னும் கருத்தும் உள்ளது. அதேபோல், ஹூய்கீயின் வெட்டுப்பட்ட கையை போதிதர்மர் தான் கற்ற மருத்துவமுறையை வைத்து மீண்டும் பொருத்தினார் என்றும் குறிப்பிடப்படுகிறது. அதாவது பழந்தமிழர் மருத்துவ முறையை போதிதர்மர் பயன்படுத்தி சீனாவில் அதைப் பிரபலப்படுத்தினார் என்கிறார்கள். இதன் மூலம் வர்மப்புள்ளிகளை வைத்து மருத்துவம் பார்க்கும் பழந்தமிழர்முறைதான் சீனத்தில் அக்குபஞ்சர் என பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கும் என்ற கருத்தும் உருவாகிறது.

புத்தர் என்றொருவர் இல்லை!

போதிதர்மர் என்னும் துறவி தமிழகத்திலிருந்து கிளம்பி பௌத்த தொண்டாற்ற சீனா வருவதாகவும், அவர் பல்லவ நாட்டின் தலைசிறந்த பிக்கு என்றும், ஏற்கெனவே போதிநிலையை அடைந்தவர் என்றும், அவர் பல்லவ இளவரசராகப் பிறந்து பௌதத்தை ஏற்று துறவி ஆனவர் என்றும், தீர்க்கதரிசி என்றும், எங்கள் உடன்பிறந்தவர் என்றும் தமிழகத்திலிருந்து பல்லவர்கள் புறாக்கள் மூலமாக சீனா முழுவதும் உள்ள நாடுகளுக்கு செய்தி அனுப்பினர்.

எனவே, சீன அரசர்களும் போதிதர்மருக்கு உலகமே போற்றும் விதம் வரவேற்பு அளிக்கவேண்டும் என்று முடிவு கட்டிக் காத்திருந்தனர். போதிதர்மர் தென்சீனம் சென்று சேர்ந்தபோது மாபெரும் மக்கள் கூட்டம் அவரை வரவேற்கக் காத்திருந்தது.

குய் நாட்டின் Zhu Jiang ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் Ghuang Cho எனும் நகருக்கு போதிதர்மரின் கப்பல் வருகிறது என்று தகவலறிந்து, அவரை வரவேற்க குய் நாட்டு அரசனும், க்ஷியாங் ஆங் (Xiang Ang) நாட்டு மன்னனும் காவலர்கள், சுமைதூக்கிகள், புத்த பிக்குகள் அடங்கிய பெரிய குழுவுடன் அத்துறைமுகம் நோக்கிச் சென்றனர்.

போதிதர்மர் தனது சீடர்கள் புடைசூழ, பௌத்த புனித நூல்கள் நிரம்பிய பெரும் பைகளைச் சுமக்கும் அடிமைகளுடன் மிகப்பெரிய குழுவாக இந்தியாவில் இருந்து பெரிய கப்பலில் வருவார் என எதிர்பார்த்துத்தான் இப்பேற்பட்ட படையை ஏற்பாடு செய்திருந்தனர் மன்னர்கள். ஏனென்றால் அதற்கு முன் சீனா வரும் பிக்குகள் அனைவரும் அப்படித்தான் வந்திறங்கியிருந்தனர்.

அவர்கள் எதிர்பார்த்ததைப் போன்றே ஒரு கப்பலும் துறைமுகம் வந்து நங்கூரமிட்டது. அதிலிருந்து பெரும் ஜனக்கூட்டம் ஏதும் இறங்கவில்லை. ஒருசிலர் மட்டும் இறங்கினர். அவர்களும் பார்ப்பதற்கு வியாபாரிகளைப்போல் தெரிந்தனர். மன்னர்களீன் வீரர்கள் சென்று அவர்களிடம் போதிதர்மரைப் பற்றி விசாரித்தனர்.

‘ஓ! போதிதர்மரா? அதோ!’ அவர்கள் காட்டிய திசையில் கையில் கம்பும் முதுகில் ஒரு சிறு மூட்டையுமாக பரதேசியைப் போன்ற ஒருவர் நின்றுகொண்டிருந்தார். இவரா? தன்னந்தனியே வந்திருக்கும் இவரா போதிதர்மர்!

‘ஐயா, தாங்கள் தான் பல்லவ நாட்டில் இருந்து வரும் பிரபல புத்த பிக்கு போதிதர்மரா?’ – குழுத் தலைவன் அவரிடம் சென்று விசாரித்தான்.

‘ஆம், என் பெயர் போதிதர்மன்தான். அதுவும் என் குரு ப்ரஜ்னதாரா சூட்டியது. நானும் பல்லவ நாட்டிலிருந்துதான் வருகிறேன். ஆனால் நீங்கள் தேடும் அந்தப் ‘பிரபலமான’ பிக்கு நான் இல்லை.’ – எந்த அலட்டலும் இல்லாமல் அவர்களிடம் தெரிவித்தார் போதிதர்மர்.

திரளான சீடர்களோ, பெட்டி பெட்டியாக பௌத்த நூல்களோ எதுவும் இல்லாமல் தனியனாக, ஒரு சாதாரணப் பரதேசியைப்போல் வந்திறங்கிய போதிதர்மர் அவர்களுக்கு புதுமையாகத் தோன்றினார். சரி, புனிதப் புத்தகங்களை அவர் மனப்பாடம் செய்து மனத்தில் வைத்திருக்கவேண்டும் என்று எண்ணி அனைவரும் அவர்முன் மண்டியிட்டு வணங்கிவிட்டு தங்கள் தலைநகருக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு மக்கள் அலைகடலெனத் திரண்டு போதிதர்மரை வரவேற்றனர். அன்றையதினம் சொற்பொழிவு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வந்திறங்கிய கையுடன் மக்களும் மன்னனும் போதிதர்மரை தங்களுக்கு உபதேசம் செய்யுமாறு வேண்டினர். அவரும் சம்மதித்து மேடையேறினார்.

மேடையில் ஏறிய போதிதர்மர், வாய் திறக்கவே இல்லை. ஒரு சொல் கூட உதிர்க்கவில்லை. சில மணி நேரம் கண்களை மூடி அமர்ந்திருந்தார். பின்னர், அவர்களிடமிருந்து விடைபெற்று ஊருக்குள் நடையைக் கட்டினார். அவர் வாயிலிருந்து அமுதமொழிகளைக் கேட்போம் என்ற ஆவலுடன் அவரை எதிர்பார்த்துக் குழுமியிருந்தவர்களுக்கு ஒரே ஏமாற்றம்.

இதனால் ஆங்காங்கே மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது, சிலர் கோபத்துடன், வேறு சிலர் நையாண்டிச் சிரிப்புடன், மற்றும் சிலர் லேசான புரிதலுடன் அங்கிருந்து நகர்ந்தனர்.

மேற்கண்ட சம்பவம் போதிதர்மரை பிரபலப்படுத்தியது. அவர் திமிர் பிடித்தவர், தலைக்கனம் மிக்கவர், எதுவும் தெரியாதவர் என்னும் பெயரையும் எடுத்துத் தந்தது.

அந்தக் காலகட்டத்தில் ஷூ ஜியாங் நகரம் வணிகத்துக்குப் பெயர்பெற்றது. அங்கு வணிக நிமித்தமாக பல்வேறு இந்திய வியாபாரிகள் தங்கி இருந்தனர். அவர்களுக்கு அப்பிரதேசத்தின் காண்டனீஸ்  மொழி நன்றாகத் தெரியும். அவர்கள் மூலமாக காண்டனீஸ், மாண்டரின் இரண்டையும்  போதிதர்மர் கற்றிருப்பார் என்பது ஜோஸெப் அரெண்டாவின் (Joseph Aranda) கணிப்பு.

இதற்குப்பின் நடந்ததாக ஒரு நிகழ்வு சீனர்களிடம் செவிவழிக்கதையாக உலவுகின்றது. இதற்கு ஆதாரம் இல்லை என்றாலும் இந்த நிகழ்வுதான் கோவன் வழிக் கதைக்கு அடித்தளம் என கருதப்படுகிறது. கோவன் என்றால் என்னவென்று பிறகு பார்ப்போம். முதலில் அந்த நிகழ்வு.

ஊருக்குள் சென்ற போதிதர்மர் ஒரு மரத்தடியில் அமர்ந்தார். இவர் அமர்ந்த மரத்தடி நோக்கி ஒரு புத்த பிக்கு வந்தார். அவருடன் நூற்றுக்கும் மேலான சீடர்கள் பின்தொடர்ந்தனர். அவர் வாயிலிருந்து வந்த ஒவ்வொரு சொற்களையும் அவர்கள் குறிப்பெடுத்துக்கொண்டே வந்தனர்.

‘அழகாவும் சுத்தமாகவும் இருக்கும் நல்ல மணம் படைத்த தாமரை அசுத்தமான கெட்ட நாற்றமுடைய சேற்றில்தான் பூக்கிறது. அதைப்போல் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் மனச்சுத்தம் இல்லாமல் கெட்டவர்களாக இருந்தாலும் நம்மால் மனச்சுத்தம் உள்ளவராகவும் நல்லவர்களாகவும் மலரமுடியும்!’ என்று அந்த பிக்கு கூறிக்கொண்டே நடந்தார்.

அதைக் கேட்டுக்கொண்டிருந்த போதிதர்மர், ‘நல்ல மண்ணால் மட்டுமே நல்ல வேளாண்மையை அளிக்கமுடியும். சேறு பார்ப்பதற்கு அசுத்தமாகத் தெரிந்தாலும், அதனுள் இருக்கும் நல்லதன்மைதான் நல்ல தாமரை பூக்க உதவுகிறது’ என்று ஒரு போடு போட்டார். அந்த புத்த பிக்குவின் முகம் தொங்கிப் போனது. மிக்க சினத்துடன் அங்கிருந்து நகர்ந்து சென்றார். அவரது சீடர்களும் அவர் பின் ஓடினர்.

இத்துடன் அந்நிகழ்வு முடிகிறது.

இதன் பின் போதிதர்மர் அப்பகுதியில் இருந்த ஹெனான் (Henan) போன்ற பெரும் பெரும் பௌத்த மடங்களுக்குச் சென்றார். அங்கு பிக்குகளும் அவர்தம் மாணவர்களும் செய்த தியானத்தை கடுமையாக விமரிசித்தார். அவர்களது சடங்குகளிலும், சம்பிரதாயங்களிலும் குறைகள் கண்டு கேள்விகள் கேட்டார். புத்தர் கண்ட தியானம் இதுவல்ல என்று கண்டித்தார்.

இதன் விளைவாக, ‘இந்தியாவிலிருந்து வந்த பிக்கு பௌத்தம் தெரியாமல் இருக்கிறார். நம் தியானத்தையே கேள்விக்குள்ளாக்குகிறார்.’ என்ற வருத்தம் பௌத்தர்கள் மத்தியில் பரவியது.

இப்படியிருக்கையில்தான் மன்னன் ‘வே’ (Wei, வூ என்றும் சொல்லலாம்) தன் அரண்மனைக்கு வருகை தரும்படி போதிதர்மரை அழைத்தான். அவனது அழைப்பை போதிதர்மர் ஏற்றுக்கொண்டார்.

பல்வேறு காடுகளையும் மலைகளையும் கடந்து போதிதர்மர் ‘வே’யின் நாட்டுக்குள் பிரவேசித்தார். தனது மிகப் பெரும் அரண்மனையின் நுழைவாயிலுக்கே வந்து மன்னன் ‘வே’ போதிதர்மரை வரவேற்றான். உள்ளே அழைத்துச் சென்று உணவளித்து மகிழ்ந்தான். பின்னர் சற்று நேர ஓய்வுக்குப் பிறகு, இருவரும் உரையாடத் தொடங்கினார்கள்.

மன்னன் போதிதர்மரிடம், ‘ஐயா, நான் இந்தப் பிராந்தியத்தின் அரசனாவேன். புத்த மதத்துக்குச் செய்யும் தொண்டாக பல்வேறு இடங்களில் மடங்களையும் சிலைகளையும் நிறுவியுள்ளேன். அவற்றை வரும் வழியில் பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். அதுபோக பௌத்த நூல்கள் பலவற்றைப் பிரதியெடுக்கவும், மடங்களில் தங்கியுள்ள பிக்குக்களுக்கு உணவு, உடை, தங்கும் இடம் அளிக்கவும் பெரும் பொருள் தந்து உதவியும் செய்துள்ளேன். என்னைப்போல் பௌத்தத்தைப் போற்றும் மன்னன் ஒருவன் எனக்கு முன்பும் இருந்ததில்லை. இனிமேலும் இருக்கப்போவதில்லை என்று இங்கு இருக்கும் பிக்குகள் என்னைப் பாராட்டுவார்கள்.’

‘ஓ! அப்படியா?’

‘புத்த மதத்தொண்டாக இன்னும் நிறைய செய்திருக்கிறேன். இவ்வாறு நான் செய்த தொண்டுக்காக எனக்கு என்ன பலன் கிடைக்கும்?’

‘ஒன்றும் கிடைக்காது!’

‘எவ்வளவு நற்செயல்கள் செய்தாலுமா?’

‘நீ எவ்வளவு நற்செயல்கள் செய்தாலும் கடும் நரகத்தைத் தவிர உனக்கு எதுவும் கிட்டாது.’

இந்தப் பதில் மன்னனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இப்படியும் ஒரு மனிதன் இருப்பாரா! நான் மன்னன் எனத் தெரிந்தும் இத்தனை துணிச்சலுடன் பேசும் இந்த மனிதனைப் போன்ற ஒருவனை இதுவரை நாம் பார்த்ததில்லையே! வியப்புடன் மீண்டும் தொடர்ந்தான்.

‘போதிதர்மரே, எனக்குப் பல காலமாகவே ஒரு சந்தேகம் உள்ளது. கேட்கலாமா?’

‘தாராளமாக…’

‘புத்தர் என்று ஒருவர் உண்மையிலேயே உலகத்தில் இருந்தாரா? ஏன் கேட்கிறேன் என்றால் நம் காலத்தைச் சார்ந்த யாரும் அவரைத்தான் நேரில் பார்த்ததில்லையே!’

‘இல்லை, அப்படி யாரும் உலகத்தில் வாழ்ந்ததாகத் தெரியவில்லை. அவர் யாரென்று கொஞ்சம் சொல்ல முடியுமா?’ – போதிதர்மரின் மேற்படி கேள்வி மன்னனை வியப்பில் ஆழ்த்தியது.

‘கௌதம புத்தர். நம் மதத்தை தோற்றுவித்தவர். நம் கடவுள். அப்படித்தான் சொல்கிறார்கள். அப்படி ஒருவர் இல்லையா?’

‘கௌதம புத்தர். அப்படி ஒருவர் நிச்சயமாக இல்லை.’

‘என்ன இல்லையா?!’

‘ஆம்.’

‘அப்படியா, தாங்கள் யார் என்றேனும் உங்களுக்குத் தெரியுமா?’, மன்னன் முகத்தில் ஏளனப் புன்னகை.

‘தெரியாது’

ஏற்கெனவே போதிதர்மருடைய மௌனச் சொற்பொழிவைப் பற்றி கேள்விப்பட்டிருந்த ‘வே’, போதிதர்மர் தனக்கு அளித்த எதிர்மறை பதில்களால் சினமுற்றான்.

‘அப்படியா, மிக்க நன்று. என் அரண்மனைக் கதவுகள் உங்கள் வெளியேற்றத்துக்காகவே திறந்திருக்கின்றன. என் சினம் எல்லை மீறும்முன் தயவுசெய்து வெளியேறி விடுங்கள். மீண்டும் இங்கு வரும் எண்ணம்கூட உங்களுக்கு தோன்றிவிட வேண்டாம்.’

அவனிடம் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை போதிதர்மர். மேற்கு திசையை நோக்கி அமைதியாக வெளியேறினார்.

போதிதர்மர் ஏன் இவ்வாறு எதிர்மறையாக பதிலளித்தார் என்று சற்றுப் பார்ப்போம்.

முதல் கேள்விக்கான பதில்:

தான் செய்த புத்தமதத் தொண்டுக்காக தனக்கு என்ன பலன் கிடைக்கும் என்று கேட்ட மன்னன், தான் செய்த தொண்டை பெருமிதமாக போதிதர்மரிடம் கூறினான். இது அவனது ‘தற்பெருமை’யை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இதுவே அவனுக்கு யாதொரு பலனும் இல்லை, நரகத்தைத் தவிர என்று போதிதர்மர் கூறியதற்கான காரணம்.

இரண்டாம் கேள்விக்கான பதில்:

கௌதம புத்தர் என்று ஒருவர் உலகில் இருந்தாரா?

‘நாம் புத்தரைப் கண்ணால் பார்த்ததில்லை, யாரோ கூறியதால் தான் கௌத்தமர் இருந்ததாக நம்புகிறோம். எனவே புத்தர் என்பவர் கற்பனையாகக் கூறப்பட்ட உருவமாகவும் இருக்கலாம் அல்லவா? தாங்கள் இதுபற்றி என்ன கூறுகிறீர்கள்? இருந்தாரா? இல்லையா? பார்த்திருக்கிறீர்களா? பார்த்ததில்லையா?’, இதுவே மன்னனது மனத்தில் ஓடிய பெருங்கேள்வி என்பதை அவன் வெளிப்படுத்திய ஒரு வரிக் கேள்வியிலேயே அறிந்துகொள்வார்கள் போதிதர்மர் போன்ற மகான்கள்.

இது மன்னனுக்கு புத்தர் மீதிருந்த ‘நம்பிக்கை ஊசலாட்டத்தை’ தெளிவாகச் சுட்டுகிறது. ஆகையால்தான் ‘புத்தர் இல்லை’ என்று ஏளனமாக பதில் அளித்தார் போதிதர்மர். ‘நீ அடிப்படையிலேயே தள்ளாடுகிறாய் மகனே‘ என்று கூறாமல் கூறுகிறார்.

மூன்றாம் கேள்விக்கான பதில்:

தாங்கள் யார் என்றேனும் உங்களுக்குத் தெரியுமா?

‘இல்லை’ என்ற போதிதர்மரின் பதில் ஒரு மாபெரும் தத்துவத்தை உள்ளடக்கியது.
‘உலகில் உள்ள பொருள் அத்தனையும் மாயை’ எனும் தத்துவம்தான் அது. நான் என்பதே இல்லாத நிலையில் எப்படி நான் யார் என்பதைக் கூற இயலும்?

‘நீங்கள் என்பது உங்கள் பெயரா? இல்லை உடலா? இல்லை மனமா? இல்லை உயிரா?’
இக்கேள்விக்கு போதிதர்மரின் பதில் ‘நீங்கள் என்பது உங்கள் அனுபவமே. அனுபவம் என்பதும் ஒரு மாயையே, ஆக ’நான்’ என்பதே மாயை’ அழியக்கூடிய அனைத்தும் மாயை. தனித்தமிழில் ‘அனைத்தும் பொய்த் தோற்றம்’. போதிதர்மர் தோற்றுவித்த ’ஜென்’ தத்துவம் (மெய்யியல்) இந்தக் கருத்தை அழகிய முறையில் படம் பிடிக்கிறது.

(தொடரும்)

இதுவரை

எப்படி சீனா சென்றார்?

பட்டுப்பாதை எனப்படும் சில்க் ரோட் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘பட்டுப்பாதை’ என்பது உலகமே சீனப் பட்டுக்கு ஆசைப்பட்டு அதை வாங்கத் துடித்த காலத்தில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த வியாபாரிகள் பட்டு வாங்க சீனத்துக்கு சென்றுவரப் பயன்படுத்திய பாதை. பணம் கொழித்த பாதை.

இதில் இரு வழிகள் தெரியும். ஒன்று தரை மார்க்கமான பாதை மற்றொன்று கடல் மார்க்கமான பாதை. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் தரை மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் பாதைகள் இருந்தன. இதை, இன்னொரு கோணத்தில் சொன்னால் வட இந்தியாவுடன் தரைவழித் தொடர்பையும், தமிழகம் போன்ற தென்னிந்தியப் பகுதிகளுடன் கடல்வழித் தொடர்பையும் சீனர்கள் கொண்டிருந்தார்கள் எனக் கொள்ளலாம்.

ஏனென்றால், தரைவழியே தமிழகத்திலிருந்து சீனா சென்றடைய சிக்கல் மிகுந்த பாலைவனங்கள், காடுகள் எனப் பல பகுதிகளையும் இமய மலையையும் கடக்கவேண்டி இருக்கும். தட்பவெப்ப நிலையும் சாதகமானது அல்ல. எனவே தரைவழியைவிட கடல்வழிப் பாதையையே அதிகம் பயன்படுத்தினர்.

போதிதர்மர் வாழ்ந்த காலத்தில் இக்கடல்வழி பட்டுப்பாதை வழியேதான் சீன-தமிழக வியாபாரிகள் வியாபாரம் செய்தனர். அது மட்டுமில்லாமல், போதிதர்மர் தங்கள் நிலத்தைக் கடந்தே சீனா சென்றார் என்று சுமத்ரா, கம்போடியா, மலேசியா, வியட்னாம், தாய்லாந்து போன்ற நாடுகள் தீர்மானமாக அறிவிக்கின்றன. மலேசிய தற்காப்புக் கலையான ‘சிலாத்’ போதிதர்மர் வாயிலாகவே அறிமுகமானதாக மலேசியர்கள் கருதுகிறார்கள்.

இதுவும் கணக்கில் கொள்ளத்தக்கதுதான். காம்பே (Kambe) போன்ற வரலாற்றாசிரியர்கள் இந்தக் கருத்தை ஒப்புக்கொண்டு, சில சான்றுகளையும் அளிக்கிறார்கள். காம்பே கூறுவதாவது: ‘தற்போதைய கப்பல்களைப்போல் போதிதர்மர் காலத்தில் எரிபொருளால் துரிதமாக இயக்கப்படும் மிகப்பெரும் கப்பல்கள் எல்லாம் இல்லை. எல்லாம் பாய்மரக் கப்பல்கள் தான். பருவக்காற்றை கணக்கிட்டு ஓட்டப்படும் கலங்கள்தான். அதேபோல், பல நாட்களுக்கு உணவுப்பொருளை பதப்படுத்தி வைக்கும் நுட்பங்கள் எல்லாம் அப்பொழுது கிடையாது. அதனால், தாங்கள் செல்லும் வழியில் இருக்கும் நாடுகள் பலவற்றில் நிறுத்தி உணவுப்பொருள்களை நிரப்பிக்கொண்டு, பயணத்துக்குத் தக்க பருவம் வரும்வரை காத்திருந்து தான் பயணத்தைத் தொடர்வர்.’

போதிதர்மரும் இவ்வாறுதான் சென்றிருப்பார். பெரும் துறவி என்பதால் வழிநெடுகிலும் உள்ள நாடுகளின் மன்னர்கள் அவரை விருந்தினராக வரவேற்று உபசரித்திருப்பார்கள். போதிதர்மரும், அங்கிருக்கும் பௌத்த மடங்களில் சில காலம் தங்கிவிட்டு, பௌத்தத்தைப் பரப்பிவிட்டு, தக்க பருவம் வரும்பொழுதுதான் கிளம்பியிருப்பார். ஏனென்றால் பௌத்த மத பிக்குகள் மழைக் காலங்களில் பயணம் மேற்கொள்ளமாட்டார்கள். இதனால் போதிதர்மர் இலங்கை, ஜாவா, சுமத்ரா, மலேயா, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் வழியாக குவாங்சூவ் (Guǎngzhōu) வந்திருப்பார். இதுதான் போதிதர்மர் சீனா சென்ற பாதை.
இதை வைத்தும் வட இந்தியாவையும் திபெத்தைக் காட்டிலும் இந்நாடுகள் போதிதர்மரைக் கொண்டாடுவதை வைத்தும் இன்னபிற சான்றுகளை வைத்தும், போதிதர்மர் வட இந்தியத் தரைவழி பட்டுப்பாதையை விட கடல்வழி பட்டுப்பாதை வழியாகவே சீனா சென்றார் என அடித்துக் கூறுகிறார் காம்பே.

அதேநேரத்தில் சீன ஆசிரியர்கள் தான்லின், லியோயங், தாவோக்வஷுவான் ஆகியோர் போதிதர்மர் இந்தியாவிலிருந்து தரை மார்க்கமாகவே சீனா வந்ததாகப் பதிவு செய்திருக்கின்றனர்.

0

போதிதர்மர் இந்தியாவிலிருந்து சீனா செல்லும்பொழுது வயதானவராகத்தான் இருந்தார். சரியாக எத்தனை வயது என்பதற்குக் குறிப்புகள் இல்லை.  100 வயதுக்கு மேல்தான் போதிதர்மர் சீனா வந்தார் என ‘தான்லின்’ போன்ற சீன ஆசிரியர்கள் பதிவு செய்திருக்கின்றனர்.

அதே வேளையில், ஜெஃப்ரி ப்ராடன் (Jeffery L.Broughton), ஜான் ரே (John McRae) போன்றவர்கள் போதிதர்மர் சீனா வரும்போது அவர்  நிச்சயம் இளைஞர் இல்லை, வயது ஐம்பதுக்கும் மேல் என்பதை மட்டும் உறுதியாகக் கூறலாம் என்கின்றனர்.

ஆகையால் ஐம்பது வயதுக்கு மேல் தான் போதிதர்மர் சீனப் பயணம் மேற்கொண்டார் என்பது தெளிவான கருத்து. ஐம்பது வயதில் ஒருவர் இமயமலையைக் கடந்து சீனா செல்வதெல்லாம் எட்டாவது அதிசயம். ஆகையால், சீனாவுக்கு கடல்வழியே தான் சென்றார் என்ற முடிவுக்கு இன்றைய நவீன மேற்கத்திய ஆசிரியர்கள் வருகின்றனர்.

அதேபோல், போதிதர்மர் எந்தத் துறைமுகத்தில் கப்பலேறினார் என்பதற்கும் ஆதாரம் ஏதுமில்லை. அந்தக் காலகட்டத்தில் வியாபாரிகளுக்கும் வெளிநாட்டுப் பயணிகளுக்கும் காஞ்சி முக்கிய நகரமாக இருந்ததால் காஞ்சிக்கு அருகில் நிறைய துறைமுகங்கள் இருந்திருக்கும். அப்படி காஞ்சிக்கு அருகே இருந்த ஏதாவதொரு துறைமுகத்தில் தான் போதிதர்மர் கப்பல் ஏறியிருப்பார் என்பது பொதுவான கருத்து. இப்படி இருக்கும் வேளையில் காம்பே போன்ற சில வரலாற்று அறிஞர்கள் அவர் மாமல்லபுரத்தில் கப்பலேறியிருக்கக் கூடும் எனக் கருதுகிறார்கள்.

கப்பலேறும்போது அவருக்கு வயது ஐம்பதுக்கும் மேல் என்பதைப் பார்த்தோம். அவர் நல்ல திடகாத்திரமான உடலைப் பெற்றிருந்தார். மிகப் பெரிய பானைத் தொப்பையுடன் அவர் இருந்ததாக அவர் காலத்தைச் சார்ந்த சீன சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். ‘சீனர்களிடம் கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை ஒரு வினோத கருத்து நிலவியது. அதாவது மனிதனின் மூளை அவனது வயிற்றில் உள்ளதென அவர்கள் கருதினார்கள். அதனால் மரியாதைக்குரிய முக்கியஸ்தர்களின் உருவத்தை வரையும்பொழுதும் சிற்பமாகச் செதுக்கும் பொழுதும், எழுத்தில் வடிக்கும்பொழுதும் அவர்களுக்கு அறிவு அதிகம் என்பதைக் காட்ட வயிற்றை சற்று வீங்க வைத்துவிடுவர். இதன் விளைவாகக்கூட போதிதர்மர் பெரும் வயிற்றை பெற்றிருக்கக் கூடும்’ என்றும் சிலர் கருதுகிறார்கள்.

போதிதர்மருக்கு கோலி குண்டைப் போன்ற மிகப் பெரிய கண்கள் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது விழிகள் நீல நிறத்தில் இருந்தாகவும், பார்ப்பவரை அடிபணியச் செய்யும் ஆற்றல் பெற்றிருந்ததாகவும், மொத்தத்தில் அவர் ஒரு நீலக்கண் காட்டுமிராண்டியைப் (Blue Eyed Barbarian) போல் இருந்ததாகவும் சீன வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

நடுத்தர உயரம், தலையில் மிகப் பெரும் வழுக்கை, விளையாட்டு மைதானத்தைப் போல் பரந்து விரிந்த மார்பு, மீசைபோல் அடர்ந்த புருவங்கள், வாயை மறைக்கும் மீசை, ஒழுங்கில்லாத காடுபோல் தாடி. மரத்தை உடைத்து எடுத்துக்கொண்டு வருவதைப்போல் கையில் ஒரு தடி, காவி நிறத்தில் இரு முரட்டுத் துணிகளால் ஆன ஆடை. இன்ன பிற பொருள்களை அடக்கி தோளில் ஒரு பொதி. இதுதான் போதிதர்மரின் உருவம் என்று வர்ணிக்கப்படுகிறது. போதிதர்மரின் தோற்றம் பற்றிய இக்கருத்தில் அனைத்து வரலாற்றாசிரியர்களும் ஒன்றிவிடுகின்றனர். ஆதலால், படங்களில் காட்டப்படும் கட்டுமஸ்தான இருபது வயது போதிதர்மரை தயவுசெய்து மனத்தில் இருந்து அகற்றிவிடுங்கள். அடுத்து வரைபடத்தைக் கூர்ந்து கவனியுங்கள், போதிதர்மரின் வழித்தடங்களை பின் தொடர.

தமிழகத்திலிருந்து இந்தோனேஷியத் தீவுகள் வழியே தென் சுமத்ராவுக்குச் செல்கிறார். அங்கிருந்து மலேயா, தாய்லாந்து, வியட்னாம் என கடல் வழியாகவே பயணம் செய்து முத்து ஆற்றை Pearl River) அடைந்து அங்கிருந்து தென்சீனத்தை அடைகிறார். எப்படிப் பார்த்தாலும் அவருக்கு சீனா சென்று சேர பல ஆண்டுகள் பிடித்திருக்கும் என்று மட்டும் தெரிகிறது. மூன்று ஆண்டுகள் என்பது பொதுவான கருத்து. இத்தனை ஆண்டுகளை அவர் சீன மொழியை கற்றுக்கொள்ளவும், அவர்களது பண்பாட்டை அறிந்துகொள்ளவும் பயன்படுத்தியிருக்கக் கூடும்.

எது எப்படியோ அவர் தமிழகத்தில் இருந்து கடல் வழியே பயணம் செய்து தென் சீனத்தை அடைகிறார். தென் சீனத்தில் அவர் முதலில் நுழைந்த இடம் எது? Nanyue, Qi/Qin, Guǎngzhōu, Canton என்று பல்வேறு பெயர்கள் முன்மொழியப்படுகின்றன. இவை ஒன்றும் ஆயிரம் மைல்கள் தொலைவில் இருக்கும் தனித்தனிப் பகுதிகள் அல்ல. அனைத்தும் ஒரே மாகாணம் தான். காலம் தான் வேறு வேறு.  புரியவில்லையா?  கலிங்கத்தையும் ஒரிஸாவையும் ஒடிஸாவையும் எடுத்துக்கொள்ளுங்கள். இவை ஒரே பெயரைத்தான் குறிக்கின்றன அல்லவா?

போதிதர்மரின் காலம் ஐந்தாம் நூற்றாண்டு என்று நாம் கொண்டிருப்பதால் ‘குய்’ என்றே இத்தென்சீன நிலப்பரப்பைக் கொள்வோம். கம்போடியா, வியட்நாம் வழியாக குய் பகுதிக்குள் நுழைவது சுலபம். அதே போல், கடும் பனிப்பிரதேசமான வட சீனத்தைவிட தென் சீனம் சற்று தமிழகத்தைப் போல்தான் இருக்கும். தட்பவெப்பமும் நமக்கு ஏற்றாற் போல்தான் இருக்கும். இதனாலேயே அக்காலத்திய தமிழகப் பயணிகளின் முதல் விருப்பம் தென்சீனம் தான். இப்பகுதியில்தான் போதிதர்மரும் தரை இறங்குகிறார்.

போதிதர்மர் சீனம் சென்றடைவதற்கு முன்பே அவர் சீனம் வருகிறார் எனும் செய்தி சீனா சென்றடைந்துவிட்டது.

(தொடரும்)

இதுவரை

கடத்தல்காரன் தேவை

போதிதர்மர் / அத்தியாயம் 5

போதிதர்மரை தனது வாரிசாக அறிவித்த ப்ரஜ்னதாரா அவரை சீனாவுக்கு அனுப்பி வைக்க ஆசைப்பட்டார். அதன் காரணமாகவே ப்ரஜ்னதாரா இறந்த பிறகு போதி தர்மர் குருவின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு சீனா சென்றார். உலகில் எத்தனையோ நாடுகள் இருக்க, ப்ரஜ்னதாரா ஏன் குறிப்பாக சீனாவுக்கு அனுப்ப முடிவெடுத்தார்? அதற்குக் காரணம் ஒருவர்.

கி.மு. 260. மேற்கில் இரான், ஆப்கானிஸ்தான் போன்ற தேசங்களையும், கிழக்கில் வங்கதேசம், பர்மா போன்ற நாடுகளையும், வடக்கில் பூடான், நேபாளம் போன்ற இமாலய நிலங்களையும், தெற்கே தமிழகம் தவிர்த்த பிரதேசங்களையும் உள்ளடக்கிய மாபெரும் ராஜ்ஜியத்தை கட்டி ஆண்டவன்.  தன் பதவியை நிலைநாட்ட போர் தொடுக்கத் தயங்காதவன். அரியணையைக் கைப்பற்ற உடன்பிறந்த அண்ணன்களையே காவு வாங்கியவன். தன் மீதுள்ள விசுவாசத்தை நிரூபிக்க தன் கீழ் இருந்த ஊழியர்களின் உயிரைக் பிடுங்கியவன். தன்னை எதிர்க்க நினைத்தவனை விரைந்து அழித்தவன். மொத்தத்தில் கொலை வெறிபிடித்தவன். செங்கிஸ்கானுடனும் ஹிட்லருடனும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டியவனை மஹா அலெக்ஸாண்டருடனும் அக்பருடனும் சேர்த்தது வைத்த நிகழ்வு, கலிங்கப் போர். அவன் என்று குறிப்பிடப்படவேண்டியவன் மரியாதைக்குரியவராக மாறியதற்குக் காரணம் இந்த இறுதிப் போர். அவர், சாம்ராட் அசோக கக்கரவர்த்தி.

திரும்பும் இடம் எங்கும் ஓலக்குரல். கண்ணுக்கெட்டிய தூரம்வரை குருதி வெள்ளம். தீப் பற்றி எரியும் கட்டடங்கள். செத்து மடிந்து கிடக்கும் யானைகள், குதிரைகள், மனிதர்கள். இறந்த போர்வீரர்களைச் சுற்றி நின்று கதறும் உறவுகள். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களை பலி வாங்கிக்கொண்டு அசோகருக்கு வாகை சூட்டியது கலிங்கத்துப் போர்க்களம்.

பார்ப்போர் மனதை பதைபதைக்கச் செய்யும் இக்காட்சிகளுக்கிடையே மன்னன் அசோகன் அமர்ந்திருந்தான். வல்லூறுகளும் பிணவாடையும் வெற்றி முழக்கங்களும் எதிரொலித்த சூழலில் அவனிடம் ஒரே ஒரு சிந்தனை! ‘வெற்றி யாருக்கு? எனக்கா இல்லை காலனுக்கா? வெற்றி எனக்குத்தான் என்றால் இத்தனை உயிர்களை இழந்தது எப்படி வெற்றியாகும்? ஒரு சாராரின் கண்ணீரும் ரத்தமும்தான் மற்றொரு சாரரின் வெற்றியைத் தீர்மானிக்கிறதா? ஒருவன் மடிந்தால் தான் மற்றொருவன் தழைக்க முடியுமா?’

இது போன்ற கேள்விகள் அசோகனைச் சல்லடையாகத் துளைத்தெடுத்தன. ‘மனத்தில் ஏன் இந்த அமைதியற்ற நிலை? இத்தனை பெரிய வெற்றி பெற்றும் துளியும் சந்தோஷமில்லையே. குற்ற உணர்வு பாடாகப் படுத்துகிறதே. இதையெல்லாம் அறிந்துதான் நம் பாட்டனார் சந்திரகுப்த மௌரியர் சமணராக துறவு மேற்கொண்டாரா?’

அப்போதுதான் ஞானோதயம் பிறந்தது. ‘ஆம், உலகை வெல்லத் தேவை அமைதி, போர் அல்ல!’ தெளிவடைந்தார் அசோக மாமன்னர். அமைதி வேண்டி புத்த மதத்தைத் தேர்ந்தெடுத்தார் அசோகர். பௌத்தத்துக்கு ஆற்றும் முதல் தொண்டாக புத்த பிக்குக்கள் சங்கத்தைக் கூட்டினார். வாய் மொழியில் இருந்த புத்த நூல்கள் அனைத்தும் பிரதி எடுக்கப்பட்டன. காலம் காலமாக மனப்பாடம் செய்து வைக்கப்பட்டிருந்த கருத்துகள் ஏட்டில் பொறிக்கப்பட்டன. பின்னர், மக்களிடத்தில் புத்தரின் கருத்துகளைக் கொண்டு செல்லும் பொருட்டு உலகின் நாலாப்புறமும் புத்தபிக்குகளை அனுப்பி வைத்தார். தவிர தனது மகன் மஹிந்தரையும், மகள் சங்கமித்திரையையும்கூட பௌத்தமதத் தொண்டுக்கு அர்ப்பணித்தார். இவ்வாறு தென்திசை நோக்கி வந்த மஹிந்தராலேயே தமிழ் நாட்டுக்கு பௌத்தம் அறிமுகமானது. பெரும்பான்மை வரலாற்றாசிரியர்களின் ஒருமித்த கருத்து இது.

ஆனால், இலங்கை புத்த மத நூலான மஹாவம்சம், மஹிந்தர் தமிழகத்தின் வழியாக அல்லாமல் இலங்கைக்கு நேரடியாக பறக்கும் தட்டில் பறந்து வந்ததாகக் கூறுகிறது. இலங்கைக்கு அவர் தமிழகம் வழியே மட்டுமே செல்ல வாய்ப்புண்டு என்பது சிந்திக்க தெரிந்த அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனாலும் மகாவம்சம் இப்படிச் சொல்வதற்குக் காரணம் அக்காலத்தில் தமிழ் மன்னர்களுடன் சிங்களவர்கள் கொண்டிருந்த பகைமையின் விளைவாகக்கூட இருக்கலாம்.

இப்படியாக அசோகர் மூலமாக உலகெங்கும் அனுப்பிவைக்கப்பட்ட ஏராளமான புத்தத் துறவிகளுள் ஒருவரான மசிம் ஸ்தவீரா (Massim Sthavira) என்ற பிக்கு மூலமாகத்தான் பௌத்த மதம் சீனத்தை சென்றடைந்தது என்பது மேற்கத்திய ஆசிரியர்களின் கருத்து. அதே நேரம், சீன ஆசிரியர்களின் கருத்துபடி Fayuan Zhulin என்பவர்தான் சீனாவுக்கு பௌத்தத்தை எடுத்து வந்தார். இங்கு நமக்குத் தேவை பௌத்தம் அசோகர் காலத்திலேயே சீனாவுக்கு கடத்தப்பட்டு விட்டது என்பதே.

இப்படியாக, பௌத்தம் சீனத்துக்கு போய்ச் சேரும் முன்பே சீனாவில் கன்ஃபூஷியசின் தத்துவமும் மூதாதையர் வழிபாட்டு முறையும் மக்களால் பின்பற்றப்பட்டு வந்தன. அன்றிருந்த நிலையில் பௌத்தம் உடனடியாக சீனர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சைவத்துக்கும் அசைவத்துக்கும் வேறுபாடு தெரியாத சீனர்களுக்கு பௌத்தம் சொல்லும் புலால் உண்ணாமை என்றால் என்னவென்றே தெரியவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடவுளை வணங்குபவர்களிடம் கடவுள் விமரிசனமற்ற பௌத்தம் தடுமாறியது. இதனால் அவர்களுக்கு ஏற்றாற்போல் தன்னை தகவமைத்துக்கொண்டு பல காலம் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டிய நிலை பௌத்தத்துக்கு ஏற்பட்டது.

கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகள் கடந்தன. கி.பி முதல் நூற்றாண்டில் ஹான் வம்சத்து மன்னன் மிங் ஆட்சிக்கு வந்தான். ஒரு நாள் மிங்கின் கனவில் ஒரு மனிதர் தோன்றி பிரகாசித்தார். முகம் சந்திரனைக் காட்டிலும் பல மடங்கு ஜொலித்தது. மிங்கின் அரண்மனையின் முன் நின்று அவனைப் பார்த்து புன்னகை சிந்தினார். விடிந்தவுடன், அரசன் தனது சபையோரிடம் தான் கண்ட கனவைக் கூறி அதற்கான விளக்கம் கேட்க, அமைச்சர்களும் ஜோதிடர்களும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தனர். ‘அவர் இந்தியாவைச் சார்ந்த கௌதம புத்தராகத்தான் இருக்கவேண்டும். ஏனென்றால் அவர் தான் தற்போதைக்கு மிகவும் விழிப்படைந்தவராக பேசப்படுகிறார்’ என்று அரசனிடம் பதிலளித்தனர். விரைவில் இதுபற்றி இந்திய பௌத்த பிக்குகளுக்கு தகவல் பறந்தது.

இறுதியில், தன்னையும் தனது மக்களையும் பௌத்தத்தை ஏற்றுக்கொள்ளச் சொல்லியே புத்தர் தன் கனவில் வந்தார் என்கிற முடிவுக்கு வந்த மன்னன் மிங் பௌத்தத்தை ஏற்றான்.
சீனாவில் பௌத்த மதத்தின் பொற்காலம் தொடங்கியது. மிகத் துரிதமாக மக்களைச் சென்றடையவும் ஆரம்பித்தது. சீனாவுக்கேற்றாற் போல் பௌத்தத்தில் சில மாறுதல்கள் செய்யப்பட்டன. அதற்கு தேராவாதம் அசைந்து கொடுக்காவிட்டாலும் மஹாயானம் தலையசைத்தது. மடமடவென புத்த விஹாரங்கள் எழுப்பப்பட்டன. பாளி மொழியிலிருந்து பௌத்த சமய நூல்களை சீன மொழிக்கு மொழிபெயர்க்க இந்திய பிக்குகள் இறக்குமதி செய்யப்பட்டனர். சீன, இந்திய பிக்குகளின் கைவண்ணத்தில் எழுந்த நூல்கள் சீன காகித்தில் எழுதி பத்திரப்படுத்தப்பட்டன.

புதிதாக பௌத்தத்தை ஏற்ற சீனா எப்படி இருக்கிறது என்று காண சீனாவுக்கு இந்திய பிக்குகள் அடிக்கடி சென்று பார்த்துவிட்டு வருவதும், பௌத்தத்தை பிரதானமாகக்கொண்ட இந்தியாவின் நாலந்தா பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களுக்கு சீன மாணவர்கள் வந்து பாடம் கற்றுச் செல்வதும் இயல்பாயின. அன்றிலிருந்து இந்தியாவிலிருந்து சீனாவுக்கும் சீனாவிலிருந்து இந்தியாவுக்கும் பௌத்த பிக்குகளும் மாணவர்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டனர்.

அப்படி இந்தியாவுக்கு வருகை புரிந்த சீன மாணவர்களுக்கு எடுத்துக்காட்டு யுவாங் சுவாங்  என்ற பௌத்த மாணவர். கி.பி. 600 வாக்கில் சீனாவிலிருந்து புத்தர் பிறந்த இந்தியாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்டார் யுவான் சுவாங். இவரது குறிப்புகளின்படி தஞ்சையிலும் மதுரையிலும் காஞ்சிபுரத்திலும் அசோகர் கட்டிய பல புத்த மடங்கள் இருந்தனவாம். தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அசோகர் காலத்து ஸ்தூபிகளும் காணப்பட்டனவாம். மேலும், மஹிந்தர் தங்கியிருந்தாகக் கூறப்பட்ட மடம் இவர் பார்க்கும்பொழுது சிதிலமடைந்த நிலையில் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

அதேபோல், இந்தியாவில் இருந்து சீனா சென்ற பிக்குகளுக்கு ஒரு எடுத்துக்காட்டுதான் நம் போதிதர்மர். தொடக்கத்தில் சீனாவில் பௌத்தம் பரவியபோது, சீனர்கள் பெயரளவிலேயே பௌத்தர்களாக இருந்தனர். சடங்குகளும் சம்பிரதாயங்களும் அவர்கள் வாழ்கையை ஆக்கிரமித்திருந்தன. புனித நூல்களைப் பட்டு இழைகொண்டு எழுதி தங்கப் பெட்டியில் பாதுகாப்பாக வைத்து அதற்கு தினமும் பூப்போட்டு வணங்கினர். வருடத்தில் என்றாவது ஒருநாள் அதனை வெளியில் எடுத்து தூசு தட்டி வாசித்துவிட்டு அதனால் தங்களுக்கு நன்மை கிட்டும் எனும் மயக்கத்தில் இருந்தனர்.

புத்தரின் சிலை, வீட்டுக்கு வீடு கடவுள் சிலை போல் இருந்தது. புத்தர் சொல்லித்தராத வகையில் அந்த சிலையை புத்தராக எண்ணி தினமும் போற்றிப் பிராத்தனை செய்து வந்தனர்.
ஆனால், புத்தமதச் சடங்குகளையும் புனித நூல்களையும் போற்றிய அளவுக்கு புத்தரின் தேடலை அவர்கள் போற்றவில்லை. தியானத்தை மேலோட்டமாக புரிந்துகொண்டிருந்தனர். அது மகான்களுக்கான வேலை என முடிவுகட்டினர். தங்களுக்கு தியானம் அவசியமில்லை எனக் கருதினர்.

மொத்தத்தில், புத்த மதத்தின் உடலை மட்டும் தரிசித்து வந்த சீனர்களுக்கு அதன் உயிர் எனக் கருதப்பட்ட தியானத்தைக் கடத்திச் செல்ல அப்போதைக்கு ஆளில்லை. இந்தக் குறை சீனாவில் இருந்த பிக்குகளுக்கும் இந்தியாவில் இருந்த பிக்குகளுக்கும் பெருங்கவலை அளித்தது. இந்த நிலையில்தான் ப்ரஜ்னதாராவின் கண்களில் சிக்கினார் போதிதர்மர். சீனர்களுக்கு பௌதத்தின் உயிரான தியானத்தை, தேடலை, மெய்யறிதலை கொண்டுசேர்க்க சரியான நபர் போதிதர்மர்தான் எனும் முடிவுக்கு வந்தார். போதிதர்மரும் எந்த மறுப்பும் சொல்லாமல் புறப்பட்டார்.

ஆக, போதிதர்மர் சீனா சென்றது பௌதத்தின் ஆன்மாவாகிய தியானத்தை சீனர்கள் மத்தியில் ஏற்றி வைக்கத்தானே தவிர,  தமிழர் தற்காப்புக் கலையையும் மருத்துவத்தையும் பரப்புவதற்கு அல்ல. போதி தர்மர் ஒரு தமிழனாகச் சென்றார் என்று கூறுவதைவிட பௌத்தனாக அங்கு சென்றார் என்பதே பொருத்தம். அதைவிட பௌத்தத்தின் 28ஆம் சமயத் தலைவராக சென்றார் என்பது மிக மிகப் பொருத்தமானது.

போதிதர்மர் எப்படி, எந்த வழியில் சீனா சென்றார் என்பது பல முடிச்சுகளைக் கொண்ட ஒரு கேள்வி.

(தொடரும்)

இதுவரை

இவரை ஏன் சீனாவுக்கு அனுப்பக்கூடாது?

போதிதர்மர் / அத்தியாயம் 4

வீரத்திலும் சரி, அறிவாற்றலிலும் சரி போதி தர்மர் தனது மூத்த சகோதரர்கள் இருவரையும்விட திறமைசாலி என்பது உண்மைதான். ஆனாலும் சகோதரர்கள் பயந்ததுபோல அவர்களை வீழ்த்தி ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ளவேண்டும் என்கிற ஆசையெல்லாம் அவருக்கு இருந்ததில்லை.

சகோதரர்களின் மேற்படி பயத்தைப் பற்றி அறிந்துகொண்ட போதிதர்மர், அவர்கள் தன்னையே கொல்ல நினைக்கும் அளவுக்கு மாறிப்போனதை நினைத்து மனம் வருந்தினார். ஆசையானது தன் சகோதரர்களை கொலைகாரர்களாக ஆக்கும் ஆற்றல் படைத்தது எனக் கண்டுகொண்டார். சொந்தம், பந்தம் அனைத்தும் ஆசைக்கு முன் மண்டியிட்டுக் கிடக்கும் மாயைகளே என்பதை உணர்ந்தார். இத்தனைநாள் தான் அனுபவித்த துன்பத்துக்கும் மன உளைச்சலுக்கும்கூடக் காரணம் ஆசையே என்பதை இனம் கண்டுகொண்டார். தன்னிடத்தில் ஆசை இருப்பதாலேயே துன்பம் இருக்கின்றது; ஆசைப்படுவதை நிறுத்திக்கொண்டால் துன்பப்படுவதும் நின்றுவிடும். உலகத்தின் மீது ஆசைப்படுவதை நிறுத்த உலகையே துறக்க வேண்டும் என்று உணர்ந்த போதி தர்மர், அவ்வாறே துறப்பதற்கும் தயாரானார். அடுத்த கணம் கொஞ்சமும் யோசிக்காமல், கௌதமர் சென்ற பாதையிலேயே தானும் நடக்கத் தொடங்கிவிட்டார்.

போதிதர்மர் ஏன் துறவறம் மேற்கொள்ள முடிவெடுத்தார் என்பதற்கு ஒரு சாரார் சொல்லும் கருத்து இது. இதுதவிர இன்னொரு சாரரும் இருக்கின்றனர். அவர்களைப் பொருத்தவரை, ‘போதிதர்மர் எதற்காக அரச வாழ்வை துறந்தார் என்பதற்கு வரலாற்றில் தெளிவான ஆதாரம் இல்லை’. மேற்கத்திய ஆசிரியர்கள் அனைவரும் இந்த ரகத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் போதிதர்மர் எதற்காகத் துறவியானார் என்பதை அறிவதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. சீனர்களும் ஜப்பானியர்களும்தான் போதிதர்மரின் துறவுக்குப் பின்னால் ஒரு பெரும் நிகழ்ச்சி இருப்பதாகக் கருதி, ஆளாளுக்கு ஒரு கதையை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

சரி, எப்படியோ ஒருவழியாக துறவறம் மேற்கொண்ட போதிதர்மர், ப்ரஜ்னதாரா என்பவரை குருவாக ஏற்றுக்கொண்டு புத்த பிக்குவானார்.

யார் இந்த ப்ரஜ்னதாரா?

ப்ரஜ்னதாரா காஞ்சியின் பௌத்த மடம் ஒன்றில் தங்கியிருந்த பிக்கு. சாக்கிய முனி கௌதம புத்தருக்கு முன்பிருந்த ஏழு புத்தர்கள் தொடங்கி பௌத்த மதத்தின் ஆன்மாவாகிய தியானத்தை வழிவழியாகச் சுமந்துவந்த பௌத்த சமய குருமார்களில் ப்ரஜ்னதாரா 27ஆம் தலைமுறை குரு ஆவார். இவரே போதிதாரா எனும் பெயரை போதிதர்மர் என மாற்றி தன் சீடனாக போதிதர்மரை சேர்த்துக் கொண்டவர். இதற்கு மேல் ப்ரஜ்னதாராவைப் பற்றி தகவல் ஏதும் இல்லை. அவர் ஆணா, பெண்ணா என்ற தகவல் கூட இல்லை!

ஓஷோ போன்ற சிலர் ப்ரஜ்னதாராவை பெண் என்றே கூறுகின்றனர். அதேநேரத்தில் சீனர்களும் மேற்கத்திய ஆசியர்களும் அவரை ஆண் என்று கூறுகின்றனர்.

இவ்வாறு போதிதர்மர் தன் அரச வாழ்வைத் துறந்து பௌத்த பிக்குவாகிறார். அரச வாழ்க்கை எப்படிப்பட்ட ராஜபோக வாழ்க்கை என நமக்கெல்லாம் தெரியும். ஆனால், பிக்கு வாழ்க்கை?

ஒரு சாமானியன் பிக்குவாகிவிட்டான் என்று இதனை ஒரே வரியில் சொல்லிவிடலாம். ஆனால், உண்மை அப்படியானதல்ல. ஒரு சாமானியன் இருபது வயதைக் கடந்து, உலகம் மாயை என்று உணர்ந்திருப்பதால் பிக்கு ஆகத் தகுதி மட்டுமே ஆகிறான். ஆனால் அவன் முழுமையான பிக்குவாகத் தொடர, நிர்வாணம் அடைய இத்தகுதிகள் போதாது. அசாதாரணமான பிக்கு வாழ்வில் 227க்கும் மேற்பட்ட விதிகள் உண்டு. இதுவே பிக்குணி (பெண் பௌத்த துறவிகள்) என்றால் 311. அவற்றைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும். ஏதாவது ஒரு விதியில் பிசகினால்கூட அவன் பிக்கு எனும் அந்தஸ்தை இழந்துவிடுவான். இப்படி ஒருமுறை தவறினால் போதும் அவனால் மீண்டும் பிக்குவாகவே முடியாது.

உண்ணல், உடுத்தல், பருகல், உறங்கல், தும்மல், இருமல், பார்த்தல், கேட்டல், படித்தல், பழகுதல் என பிக்கு வாழ்க்கையின் அனைத்து நிகழ்’தல்’களும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதற்கு திட்டமான வரையறை உண்டு. கொலை கூடாது, பொய் கூடாது, திருட்டு கூடாது, உடலுறவு கூடாது என நாம் அறிந்த கட்டுப்பாடுகளுடன் மேலும் தலை சுற்றும் அளவுக்குக் கூடாதுகள் உள்ளன.

வழக்கமாக பிக்குகள் கூட்டம் கூட்டமாக மடங்களிலும் குகைகளிலும்தான் வசிப்பர். இந்த பிக்குகளின் கூட்டத்துக்கு ‘சங்கம்’ என்று பெயர். மேலும், இந்த பிக்கு இன்ன முறையில்தான் தவம் செய்யவேண்டும், இன்ன முறையில்தான் மற்றவர்களிடம் நடந்துகொள்ளவேண்டும் என்று பிக்குகளின் அகவாழ்வையும் புறவாழ்வையும் நிர்வகிப்பது இச்சங்கமே.

பொதுவாக பிக்குகள் தினமும் ஒரு வேளை மட்டுமே உண்பர். அதுவும் பிச்சையெடுத்து. உண்மையில், பிக்கு என்பதற்கு பாலிமொழியில் பிச்சைக்காரன், யாசகன் என்பதுதான் நேரடிப் பொருள். ‘புத்தம் சரணம் கச்சாமி. சங்கம் சரணம் கச்சாமி’ எனும் மந்திரத்தை மெல்லிய குரலில் ஓதிக்கொண்டே தெரு நெடுகப் போவர். கண்ணில் படும் ஏதாவதொரு வீட்டின் முன் நின்று இருமுறை மட்டும் ‘புத்தம் சரணம்’ ஓதுவர். அதற்குள் அந்த வீட்டைச் சார்ந்தவர் உணவளித்தால் ஏற்றுக்கொள்ளுவர். இல்லை என்றால் அங்கிருந்து நகர்ந்து விடுவர்.

இப்படி பிச்சையெடுக்கும் உணவை பிக்குகள் தரையில் அமர்ந்துதான் உண்ணவேண்டும். ஒரே வீட்டில் தினசரி பிச்சை எடுக்கக்கூடாது. ஏழைகளிடம் பிச்சை கேட்கக்கூடாது. பிக்குகளின் திருவோடு ஒரே அளவில்தான் இருக்கவேண்டும். திருவோட்டின் முக்கால்வாசி பகுதிக்கு மேல் உணவை யாசித்து நிரப்பக் கூடாது. ஒரு பருக்கையைக்கூட வீணடிக்கக்கூடாது. யாசிக்கச் செல்லும்போதும், திரும்பும்போதும் யாசிக்கும்போதும் பாதையையும் திருவோட்டையும் தவிர வேறு திசைகளில் பார்வையை ஓடவிடுவது கூடாது. அவனுக்கு என்ன உணவு கிடைத்துள்ளது என பக்கத்து பிக்குவின் திருவோட்டை எட்டிப்பார்க்கக்கூடாது.

பொது மக்கள் வாழும் பகுதிகளில் பலமாகச் சிரிப்பதோ சத்தம் போடுவதோ கூடாது. யாசித்து வாங்கிய உணவை அழகிய முறையில் சாப்பிட வேண்டும். சூரியன் உதிக்கும் முன்பும், அஸ்தமனத்துக்குப் பின்பும் உண்ணக் கூடாது. சங்கத்தின் அனுமதியின்றி குடில்கூட கட்டக் கூடாது. மாற்று ஆடைகள் வைத்திருக்கக் கூடாது. துறவாடையை இயற்கை பொருள்களால் தவிர வேறு பொருள்களைக் கொண்டு சாயம் போடக்கூடாது. துறவறத்துக்கு அத்தியாவசியமான பொருள்களைத் தவிர பிற பொருள்களை நாற்பத்தெட்டு மணிநேரத்துக்கு மேல் வைத்திருக்கக் கூடாது.

ஆறு மாதத்துக்குக் குறைவாக பயன்படுத்திய போர்வைகளை (பெரும்பாலும் சணல் சாக்குகள்தான் பிக்குகளுக்குப் போர்வைகளாகப் பயன்படும்) மாற்றக்கூடாது. தீ மூட்டக் கூடாது. பிற பிக்குகளை பயமுறுத்தக் கூடாது, கிண்டலடிக்கக் கூடாது. நின்று கொண்டு சிறுநீர் கழிக்கக் கூடாது. கட்டாந்தரை தவிர வேறு படுக்கை கூடாது. அறிமுகமில்லா பிக்குணிகளிடம் பேசக்கூடாது. இது போல் இன்னும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் நிறைந்தது பிக்குகளின் சங்கம்.

சங்கத்தில் இணையும் இளம் பிக்குகள் இவ்விதிமுறைகளை மூத்த பிக்குகளின் நடைமுறையிலிருந்து அறிந்துகொள்வர். அடிக்கடி திரிபிடகம் ஓதுவதாலும், பிற பௌத்த நூல்களை வாசிப்பதாலும் இவ்விதிமுறைகள் பிக்குகளின் மனத்தில் உருவேறிவிடுகின்றன. மேலும், மாதத்துக்கு நான்கு அல்லது ஆறு முறை, உபசத்தா எனும் நாள், தேராவாத மற்றும் மஹாயான பிக்குகளால் கடைபிடிக்கப்படுகிறது. அந்த நாளில், ‘நான் ஒழுங்கான துறவாடையை அணிவேன்; நான் ஒழுங்கான மேலங்கியை அணிவேன், மக்கள் வசிக்கும் பகுதிகளுள் நுழையும் முன் என் அங்கிகளை ஒழுங்குபடுத்திக் கொள்வேன்; முழு கவனத்துடன் நான் யாசித்து உணவை வாங்கிக்கொள்வேன்’ எனத் தொடங்கும் நீண்ட நெடிய உறுதிமொழிகள் அடங்கிய சூத்திரம் ஒன்றை பிக்குகள் அனைவரும் சேர்ந்து ஜெபிப்பர். தாங்கள் தியானத்தில் எந்த நிலையில் இருக்கிறோம் என ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வர். நிர்வாணத்தை அடைய தாங்கள் இன்னும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என வரையறுத்துக் கொள்வர்.

ஒரு நாளின் முக்கால்வாசி பொழுதை தியானத்திலும் மெய்யறிவதிலேயே செலவு செய்வர். அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் தியானம்தான். அனைத்திலும் கவனம் வேண்டும். மன ஒருமைப்பாடு வேண்டும்.  அதற்காகத்தான் இத்தனை விதிமுறைகள், கட்டுப்பாடுகள்.

உடலுக்குப் பயிற்சி அளிப்பது போல் மனத்துக்கு அளிக்கப்படும் பயிற்சி.  நாம் சொல்வதை மனம் கேட்டால் நிர்வாணம் அதாவது பிரபஞ்ச விழிப்படைவது எளிது. இதுதான் பௌத்த பிக்குகளின் வாழ்க்கை உணர்த்தும் நீதி. இவ்வாறாக, பிக்குகள் தங்கள் மனத்தைப் பயன்படுத்தி தொடர் தேடலில் ஈடுபட்டு தங்கள் நிலைகளை உயர்த்திக்கொள்வர்.

அவரவர் தியான நிலைக்கேற்றாற்போல் விதவிதமான பணிகள் ஒதுக்கப்படும். தம்மத்தை (பௌத்தத்தை) மக்களுக்குக் கொண்டுசெல்ல சிலர் ஊர் ஊராக அனுப்பி வைக்கப்படுவர். சிலர் மற்ற புத்த பிக்குகளுக்கு ஆசிரியராக, கண்காணிப்பாளாராக நியமிக்கப்படுவர். வேறு சிலர் மடத்து வேலைகளைக் கவனிப்பர்.

பிரபஞ்ச விழிப்படைய போதிதர்மரும் இப்படிப்பட்ட விதிமுறைகள் அனைத்தையும் கடக்க வேண்டியிருந்தது. இவ்விதிகள் அவருள் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் வளர்த்திருப்பதை அவரது பின்னாளைய வாழ்க்கை படம் பிடித்துக் காட்டுகின்றது. இளவரசனாக இருந்தாலும், பௌத்த வழியில் நிர்வாண நிலையை அடைய தன் மனத்தைத் தயார்படுத்தத் தொடங்கினார்.  குரு ப்ரஜ்னதாராவும் போதிதர்மரைச் சரியான திசை நோக்கி நகர்த்திச் சென்றார்.

பல வருட மெய்ஞ்ஞானப் பயணத்தின் பலனாக  போதிதர்மர் பிறருக்கு பௌத்த தம்மத்தை போதிக்கும் ‘போதி நிலைக்கு’ உயர்ந்தார். அதே சமயம் அவரது சகோதரர்களோ பல்லவ நாட்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து குடும்பம், குழந்தைகளுடன் சுகபோக வாழ்க்கை நடத்தினர்.

போதிதர்மர் வகுத்துக்கொண்ட வழியில் தொடர்ந்து முன்னேறினார்.  ப்ரஜ்னதாராவுக்கு ஒரு யோசனை தோன்றியது. ஏன் போதிதர்மரை சீனாவுக்கு அனுப்பக்கூடாது?

(தொடரும்)

இதுவரை