காந்தியை கோட்சே கொல்லவில்லை

mahatma-gandhi-origional-wallpaper-1-8மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 29

உலகில் நடக்கும் எந்தவொரு புரட்சியிலுமே யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுடைய மதிப்பீடுகளின் அடிப்படையில்தான் புதிய அரசு அமைவது வழக்கம். ரஷ்யாவில் ஜார் மன்னரை எதிர்த்து பாட்டாளிவர்க்கம் போராடி ஆட்சி அமைத்தபோது பாட்டாளிகளின் மதிப்பீடுகள்தான் புதிய ஆட்சியின் அடிப்படையாக அமைந்தன (அதை நடைமுறைப்படுத்துவதில் இருந்த சர்வாதிகாரத்தன்மை தனியாகப் பேசப்படவேண்டிய ஒன்று). அடிமை முறைக்கு எதிரான போராட்டமாக நடைபெற்ற அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிறகு அமைந்த அரசு சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் உருவானது.

ஆனால், இந்தியாவில் மட்டும்தான் ஒரு விபரீதமான விசித்திரம் நடைபெற்றது. பிரிட்டிஷாரின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக நாம் போராடினோம். ஆனால், அவர்களை விரட்டியடித்துவிட்டு நாமே பிரிட்டிஷாராகிவிட்டோம் (அதுவும் அரைகுறையாக). அதாவது, பிரிட்டிஷாரை விரட்டிவிட்டு அந்த இடத்தில் நம்மிடம் இருந்தவர்களில், யார் கூடுதல் பிரிட்டிஷ் அடிமை மனோபாவம் கொண்டவர்களாக இருந்தார்களோ அவர்களிடம் ஆட்சியை அமைக்கும் பொறுப்பையும் அரசியல் சாசனத்தை எழுதும் பொறுப்பையும் கொடுத்தோம். பிரிடிட்ஷாருக்கு எதிராக எந்த காந்தியின் வழியில் போராடினோமோ அவருடைய மதிப்பீடுகளை முற்றாக ஒதுக்கித் தள்ளினோம். எஜமானர் மாறிவிட்டார். ஆனால், அடிமைத்தனம் மாறவில்லை. அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்துவிட்டது. ஆனால், நோயாளிதான் இறந்துவிட்டார்.

சுதந்தரம் பெற்ற பிறகு இந்தியா எப்படியான நாடாக இருக்கவேண்டும் என்று காந்தி ஒரு கனவை முன்வைத்திருந்தார். கிராம ஸ்வராஜ்ஜியம் என்று அவர் அதை எளிய வார்த்தைகளில் அடையாளப்படுத்தியிருந்தார்.

“இந்தியாவின் அதிகாரமையமாக டெல்லியோ பம்பாயோ கல்கத்தாவோ இருக்காது. அதிகாரமானது லட்சக்கணக்கான அதன் கிராமங்களிடம் இருக்கும். மக்கள் தன்னர்வத்துடன் ஒன்றுகூடிச் செயல்படுவார்கள். நாஜிக்களின் ஜெர்மனியைப் போலவோ கம்யூனிஸ்ட்டுகளின் ரஷ்யாவைப்போலவோ சர்வாதிகாரத்தால் அந்தக் கூட்டுறவு பெறப்பட்டிருக்காது.

ஏழு லட்சம் கிராமங்கள் இந்தியாவில் இருக்கின்றன. ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு வாக்கு. அதாவது ஒவ்வொரு கிராமத்தினரும் ஒரு நபரைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த கிராமப் பிரதிநிதிகள் மாவட்ட நிர்வாகியைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த மாவட்ட நிர்வாகிகள் மாநிலப் பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த மாநிலப் பிரதிநிதிகள் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பார்கள். அவர் அனைவருக்குமான தலைமை நிர்வாகியாக இருப்பார்.

ஒவ்வொரு கிராமமும் தன்னுடைய அடிப்படைத் தேவைகளைத் தானே பூர்த்தி செய்துகொள்ளும் திறமை கொண்டதாக இருக்கும். அதேநேரம் தேவையான பிற விஷயங்களில் பிற கிராமங்களைச் சார்ந்ததாகவும் இருக்கும். உணவு, உடை ஆகியவற்றைத் தானே உற்பத்தி செய்துகொள்ளும். கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலம் இருக்கும். பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் மன மகிழ் நிகழ்வுகளுக்கும் விளையாட்டுக்கும் தேவையான இடங்கள் இருக்கும். அதற்கும் மேலாக நிலம் இருந்தால் அங்கு கஞ்சா, புகையிலை போன்றவை அல்லாமல் பிற உணவுப்பயிர்கள் பயிரிடப்படும். கிராமத்தின் சார்பில் ஒரு பொது கலையரங்கம் இருக்கும். பள்ளிக்கூடம் இருக்கும். பொது நலக்கூடம் இருக்கும். சுத்தமான குடிநீர் வசதி இருக்கும். நிலங்களுக்குத் தேவையான நீர்ப்பாசன வசதிகள் இருக்கும். அனைவருக்கும் கட்டாயக் கல்வி தரப்படும். முடிந்தவரை எல்லா செயல்பாடுகளும் கூட்டுறவாகச் செய்யப்படும். இன்று தீண்டாமையின் அடிப்படையில் சாதிகள் மேல் கீழ் என படிநிலைப்படுத்தப்பட்டிருப்பதுபோல் இருக்காது. அங்கு போராடும் வழி முறை என்பது சத்யாகிரக, ஒத்துழையாமை இயக்க வடிவில் அகிம்சை முறையிலேயே இருக்கும்.’

காந்தியின் இந்த கிராம ராஜ்ஜியம் என்பது அப்படியொன்றும் முற்றிலும் புதியதொரு கண்டுபிடிப்பு அல்ல. காலகாலமாகவே இந்தியாவில் இருந்துவந்த கிராம நிர்வாக வழிமுறைதான். அதில் புதிய அறமாக சாதி சார்ந்த சமத்துவத்தை காந்தி அழுத்தமாக முன்வைத்திருந்தார். குழந்தை ஒன்று இளைஞராவது என்றால் குழந்தைப் பருவத்தில் இருந்த கைகளும் கால்களும் பலம் பெற்று வளர்வதுதானே. நேற்றில் கால் ஊன்றி நாளையை எட்டிப் பிடிக்கும் ஒன்றாகத்தானே எந்தவொன்றின் வளர்ச்சியும் இருக்கவேண்டும். யாராக இருந்தாலும் அப்படித்தான் யோசித்திருக்கவேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. இந்தியாவின் கடந்த கால வாழ்க்கையைச் சரியாகப் புரிந்துகொள்ளாதவர்களிடம்தான் அதன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் சாதியை இந்தியாவின் சாபமாகப் பார்த்தார்கள். கிராமத்தை அதன் கோட்டையாகப் பார்த்தார்கள்.

மனிதர்களைத் தனித்தனியாக அடையாளப்படுத்தும் சாதி, மதம், கடவுள் நம்பிக்கை போன்றவையெல்லாம் ஆதிக்க சக்திகளின் கண்டுபிடிப்புகள் அல்ல. எளிய மக்களின் பல ஆண்டுகால நம்பிக்கைகள், மதிப்பீடுகள் ஆகியவற்றின் விளைவாக உருவானவை. ஆனால், ஆதிக்க சக்திகள் எளிய மக்களின் அந்த நம்பிக்கைகளையும் மதிப்பீடுகளையும் தங்கள் ஆதாயத்துக்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அந்த அதிகாரத்தை அவர்கள் கைகளில் இருந்து பறிப்பதுதான் நியாயமான செயலாக இருக்கமுடியும். ஏனென்றால் அந்த மதிப்பீடுகளுக்கு சாதகமான ஒரு பங்களிப்பும் உண்டு.

உதாரணமாக சாதி என்பதை எடுத்துக்கொண்டால், பிற சாதியினரிடம் விலகலை ஏற்படுத்தும் அதே நேரத்தில்  குறிப்பிட்ட சாதியினருக்குள் நட்பையும் ஸ்நேகத்தையும் அது உருவாக்கவும் செய்கிறது.  மனிதன் அடிப்படையில் சுய நலம் மிகுந்த ஒரு விலங்குதான். அப்படிப்பட்டவன் சக மனிதர்களுடன் நட்புறவு கொள்ள குலம், சாதி என்ற மனோபாவம் மிகவும் அவசியமாக இருந்தது. அந்தவகையில் சாதிக்கு ஒரு ஆக்கபூர்வமான பங்களிப்பு உண்டு. எனவே, சாதி மதிப்பீடுகள் முழுவதுமே தவறு என்று சொல்லி அவற்றின் அடிப்படையில் உருவான அமைப்புகளை அழிக்க முற்படுவது சரியாக இருக்காது. இதனால்தான் எளிய மக்களின் நலனில் அக்கறைகொண்டு செயல்படும் பல போராட்ட இயக்கங்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாமலும் அவர்களைச் சுரண்டும் சக்திகளுக்கு பெரும் ஆதரவும் கிடைத்துவருகிறது.

ஒரு மனிதன் தன் கைகளால் கொலை செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். கைகள் இருக்கும்வரை மனிதர்கள் கொலை செய்யத்தான் செய்வார்கள். எனவே, அந்தக் கைகளை வெட்டி எறிய வேண்டும் என்று சொல்வது போல் இருக்கிறது சாதி இருக்கும்வரை ஏற்றத்தாழ்வும் ஒடுக்குமுறையும் இருக்கும் என்று சொல்வது. உண்மையில் கைகளைக் கொண்டு ஒருவன் கொலை செய்யாமல் தடுக்க என்ன வழி உண்டோ, நல்ல செயல்களைச் செய்யவைக்க என்ன வழிகள் உண்டோ அதைத்தான் செய்யவேண்டும். அந்தவகையில் சாதி, மதம், தெய்வ நம்பிக்கை போன்ற அமைப்புகளை அவற்றின் தீய அம்சங்களை அகற்றிச் சீர்திருத்தத்தான் ஒருவர் முயற்சி செய்யவேண்டும். ஏனென்றால் அடிப்படையில் அவை ஆதிக்க சக்திகளின் கண்டுபிடிப்புகள் அல்ல. மனிதர்களின் அதி இயல்பானவை.

காந்திக்கு இந்தப் புரிதல் இருந்தது. எனவேதான் சாதி சார்ந்த கெட்ட குணங்களை விட்டொழித்துவிட்டு சேரிகளுக்குச் சென்று பிராயச்சித்தம் செய்யுங்கள் என்று ஆக்கபூர்வமாகத்தான் அறைகூவல்விடுத்தார். அம்பேத்காரியவாதிகள், பெரியாரியர்கள் தங்களுக்கு மேலாக இருக்கும் சாதி மீது வெறுப்புடன் விமர்சனம் வைத்தனரேதவிர தமக்குக் கீழான சாதியினர் மீதான அடக்குமுறையை அப்படி ஒன்றும் விட்டொழித்திருக்கவில்லை. முதலில் பிராமண-பனியாவை ஒழிப்போம். அதன் பிறகு நம் பிரச்னையைப் பார்ப்போம் என்றுதான் சிந்தித்தார்கள். அது எவ்வளவு பிழையான சிந்தனை என்பதை காலம் நமக்குத் தெளிவாகக் காட்டிவிட்டிருக்கிறது. இந்த இடத்தில்தான் ஒட்டுமொத்த சாதி வெறியை விட்டொழிக்கச் சொன்ன காந்தியின் அணுகுமுறை துலக்கம் பெறுகிறது. காந்தியின் போதனைகளை ஏற்றுக்கொண்ட மேல் சாதியினர் தங்களுக்குக் கீழே இருக்கும் சாதியினருக்கு சேவை செய்ய முன்வந்ததன் மூலம் சாதி வெறியை விட்டொழிப்பது எளிதுதான் என்பதையே உணரவைத்திருக்கிறார்கள்.

இந்த உண்மையைப் புரிந்துகொள்ளும் பக்குவமும் வெளிப்படையாக அதைச் சொல்லும் தைரியமும் உள்ளவர்களைத் தலைவர்களாகப் பெறும்போதுதான் ஒரு சமூகம் முன்னேற்றத்தின் பாதையில் செல்லமுடியும். ஆனால், துரதிஷ்டவசமாக இந்தியாவுக்கு அப்படியான கொடுப்பினை இருந்திருக்கவில்லை. அடிமை இந்தியாவை விழித்தெழ வைக்க ஒரு காந்தி இருந்தார். ஆனால், சுதந்தர இந்தியாவை வழி நடத்த நேருவும் அம்பேத்கரும்தான் நமக்குக் கிடைத்தார்கள்.

சுதந்திரம் பெற்ற புதிய இந்திய அரசு தீவிர ஆய்வுகளுக்குப் பிறகு முன்வைத்த அரசியல் சாசன முன்வரைவின் ஆயிரக்கணக்கான பக்கங்களில் கிராமம் என்ற ஒற்றை வார்த்தைகூட இருந்திருக்கவில்லை (கிராம அலகுகளுக்கு உரிய அதிகாரம் கொடுக்க வேண்டும் என்ற பரிந்துரையைப் பெயரளவில் சேர்க்கவே பெரும்பாடு படவேண்டியிருந்தது).

இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. ஏனென்றால் இந்தியாவின் நவ சிற்பிகளில் முதன்மையானவர்களாக இருந்த நேருவுக்கும் அம்பேத்கருக்கும் இந்திய கிராமம் பற்றி பிரிட்டிஷாரைவிடப் பெரிய வெறுப்பே இருந்தது. அவர்கள் பிறப்பால் நிறத்தால் இந்தியர்களாக இருந்தார்கள். சிந்தையாலும் செயலாலும் பிரிட்டிஷரின் தாசர்களாக, சொன்னதைச் செய்துமுடிக்கும் குமஸ்தாவர்க்கத்தின் தலைமைப் பணியாளர்களாக இருந்தனர்.

நேரு கிராமங்களை அறிவுபூர்வமாகவும் கலாசாரபூர்வமாகவும் பின்தங்கிய இடமாகக் கருதினார். அங்கிருப்பவர்கள் எல்லாரும் குறுகிய ம்னோபாவம் கொண்டவர்கள். எனவே, உண்மையற்றவர்களாகவும் வன்முறையாளர்களாகத்தான் இருப்பர்கள் என்று கருதினார். கிராமங்களைப் புகைப்படங்களில் பார்த்திருக்கும் தைரியத்தில் இந்த அபாரமான கண்டுபிடிப்பை வெளிப்படையாக, தைரியமாக, கூச்சமில்லாமல் முன்வைத்தார். இயற்கை வளங்கள் அதிகமாகவும் மக்கள்தொகை குறைவாகவும் இருந்த மேற்குலகுக்கு தொழில்மயமாதல் மிகவும் அவசியமானதாக இருந்தது. ஆனால், புலியைப் பார்த்து யானையும் சூடு போட்டுக்கொள்வதுபோல் மக்கள்தொகை அதிகமாக இருக்கும் இந்தியாவுக்கும் அதையே முன்வைத்தார். அவர் விரும்பிய நவீன கோயில்களைக் கொண்ட ஓர் இந்தியா உருவாகவேண்டுமென்றால் அதற்கு மையப்படுத்தப்பட்ட வலுவான ஓர் அரசுதான் தேவை என்பதில் உறுதியாக இருந்தார். இந்தியாவின் வளர்ச்சி என்பது அது எந்த அளவுக்கு மேற்குலகின் நகலாக ஆகிறதோ அதில்தான் இருக்கிறது என்று கருதினார். எனவே, அவருடைய உலகில் கிராமங்களுக்கு இடமே இல்லை என்பதில் ஆச்சரியமே இல்லை.

நவீன இந்தியாவின் இன்னொரு சிற்பியான அம்பேத்கரின் உலகிலும் கிராமங்களுக்கு இடமில்லை. அவர் கிராமங்களை சாதிவெறியின் அடையாளமாகக் கண்டார். சாதி சார்ந்த ஏற்றத் தாழ்வு மறைய வேண்டுமானால், கிராமங்கள் அழியவேண்டும் என்று நம்பினார். அவருடைய தீர்மானம் ஒருவகையில் சரியானதுதான். ஏனென்றால், அனைத்து கிராமங்களுமே அந்தப் பகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் சாதியின் அதிகாரமையமாகவே இருந்தன. எனவே, சமத்துவமான சமூகம் உருவாகவேண்டுமென்றால் கிராமப்புற நிர்வாக அமைப்பு மாற்றி அமைக்கப்பட்டாகவேண்டிய தேவை இருந்தது.

ஆனால், இவர்கள் இருவருமே கிராமத்தை வலுவிலக்கச் செய்ததன் மூலம் நகரத்தை வலுவானதாக ஆக்கிவிட்டார்கள். நாய்க்கு பதிலாக ஓநாயைக் காவலுக்குக் கொண்டுவந்து வைத்ததைப் போன்ற ஒரு செயல் இது.

இந்தியாவுக்குத் தேவையான தொழில் வளர்ச்சி என்பது மேற்குலகில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்று காந்தி சொன்னது வெறும் அலங்கார வாக்கியம் அல்ல. இன்றும் பெருமளவிலான மக்கள் கிராமங்களில்தான் வாழ்கிறார்கள். விவசாயம்தான் இந்தியாவின் பிரதான தொழிலாக இருக்கிறது. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தை முன்னேற்றத்தின் பாதையில் கொண்டு செல்வதென்றால், விளைநிலங்களின் பரப்பை அதிகரித்தல், ஏராளமான ஏரிகளையும் குளங்களையும் வெட்டி நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்குதல், உற்பத்தி அளவைப் பெருக்குதல், கடின வேலைகளை எளிமைப்படுத்துதல், உற்பத்திப் பொருட்களைப் பதப்படுத்துதல், நியாயமான முறையில் பகிர்ந்தளித்தல் என நடந்தேறியிருக்க வேண்டும். அதுதான் உண்மையான இந்தியத் தொழில் வளர்ச்சியாக இருந்திருக்கும். ஆனால், நேருவோ, மேற்குலகுக்கு நன்மை தரும் முறையில் இந்தியாவைத் தகவமைப்பதையே தன் பொருளாதார லட்சியமாக முன்வைத்தார். அடுத்துவந்த அரசுகள், இந்தியாவின் கனிம வளங்களில் ஆரம்பித்து உழைப்பு சக்திவரை அனைத்தையும் சூறையாடிக்கொள்ள பன்னாட்டு முதலைகளுக்கு கதவுகளை அகலத் திறந்துவைத்துவிட்டிருக்கிறது. சுதேசி இயக்கம் என்பது இன்று அனைத்துத் தளங்களிலும் முற்றாகத் துடைத்தெறியப்பட்டிருக்கிறது. நேரு இதை விரும்பியிருக்கமாட்டார். ஆனால், அவர் ஆரம்பித்துவைத்த தொழில்மயமாக்கம் இதைத்தான் சாத்தியப்படுத்தும் என்பது காந்திக்குத் தெரிந்திருந்தது. எனவேதான் அவர் பலமுறை நேருவை அவருடைய மேற்கத்திய மோகம் குறித்து எச்சரித்திருக்கிறார். ஆனால், காந்தியின் கிராம ராஜ்ஜியம் ஒரு கற்பனைக் கனவு என்று எள்ளி நகையாடினார் நேரு.

காந்தி தன் கிராம ராஜ்ஜியத்தின் ஆதார அம்சத்தை ராம ராஜ்ஜியத்தில் இருந்து எடுத்திருந்தார். அம்பேத்கருக்கு கிராம ராஜ்ஜியத்தை எதிர்க்க அது ஒன்றே போதுமானதாக இருந்தது. ‘தவம் செய்யும் சூத்திரனின் தலையைக் கொய்வதுதான் ராம ராஜ்ஜியம்’ – இதுதான் இந்தியாவில் தோன்றிய அனைத்து மேதைகளின் போராளிகளின் ஏகோபித்த கண்டுபிடிப்பு.

உத்தர ராமாயணத்துக்கு மக்கள் மத்தியில் என்ன மரியாதை இருந்தது? அது பிற்சேர்க்கையா, இடைச்செருகலா? சரீரத்துடன் மேலுலகம் செல்ல விரும்பித்தான் சம்புகன் தவம் செய்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறதே… துவிஜர்களை எதிர்த்துப் போராடியதாகவா சொல்லப்பட்டிருக்கிறது. உன்னோடு ஐவரானோம் என்று வேடனை ஆரத் தழுவிய ராமன், பழங்குடிக் கிழவி கடித்துக் கொடுத்த பழத்தை ருசித்து உண்ட ராமன், இன்று போய் நாளை வா என்று பகைவனுக்கும் அருளிய ராமன், சிற்றன்னை சொன்ன ஒற்றை வார்த்தைக்காக நாட்டைத் துறந்து சென்ற ராமன்… இந்த ராமன்கள்தானே எளிய மக்களின் மனத்தில் இடம்பிடித்திருக்கும் ராமன். இந்திய மக்கள் தங்கள் சாதி உணர்வுக்கு ராமனையா முன்மாதிரியாக வைத்திருக்கிறார்கள்? வேண்டுமானால், இன்றைய பெண்ணிய அளவுகோல்களை வைத்து ராமனை ஆணாதிக்கவாதி என வேண்டுமானால் சொல்லமுடியுமே தவிர சாதி வெறிக்கு ராமனை முன்வைப்பதில் எந்த நியாயமும் இருக்கமுடியாது. ஆனால், அம்பேத்கரில் ஆரம்பித்து பெரியார் வரை அனைவரும் ராமராஜ்ஜியம் என்றால் அது சாதி வெறி பிடித்தது என்ற முடிவுக்கு சம்புகவதம் என்ற ஒற்றைக் கதையை முன்வைத்து வந்துவிட்டிருக்கிறார்கள்.

எனவேதான் அம்பேத்கர் கிராமங்களிடம் அதிகாரத்தை ஒப்படைப்பது என்பது சாதி இந்துக்களிடம் அதிகாரத்தைக் கொடுப்பதாகவே முடியும். இந்தியாவுக்கு மையப்படுத்தப்பட்ட வலுவான அரசாங்கமே தேவை என்று நினைத்தார். ஆனால், எண்ணிக்கை பலமே அரச அதிகாரத்தைத் தீர்மானிக்கும் தேர்தலமைப்பில் (விகிதாசார பிரதிநிதித்துவத்துக்கு மாற்றாக) அதே சாதி இந்துக்களே மிகப் பெரிய அதிகார மையமாக உருவாக வாய்ப்பு உண்டு என்பதைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார். அதாவது, தாழ்த்தப்பட்ட சாதியினரை கலகம் செய்யச் சொல்லிவிட்டு, கம்பைப் பிற்படுத்தப்பட்ட சாதியிடம் கொடுத்துவிட்டார். கிராமப்புற அலகாக இருந்த வரையில் ஆதிக்க சாதிகளுக்குக் குறைவான அதிகாரமே இருந்தது. இன்றோ அவை பூதாகாரமாகப் பெருகிவிட்டிருக்கின்றன.

உண்மையில் பழங்கால கிராமங்களில் இருந்த மேல் சாதி ஆதிக்க மனோபாவத்தை நீக்க என்ன செய்திருக்கவேண்டும். உதாரணமாக, ஆலமரத்தடியில் நடக்கும் பஞ்சாயத்து சாதி வெறி மிகுந்ததாக இருக்கிறது என்றால் அதை மாற்ற என்ன செய்திருக்கவேண்டும். வாதிக்கும் பிரதிவாதிக்கும் நாற்காலியைக் கொண்டுவந்து போடு என்பதில் இருந்து ஆரம்பித்திருக்கலாம். குற்றம் நிரூபிக்கப்படும்வரை எல்லாரும் நிரபராதிகளே. அவர்களை நிறக வைத்துக் கேள்வி கேட்கக்கூடாது. ஒரு கிராமத்தில் எத்தனை சாதிகள் இருக்கின்றனவோ அத்தனை பிரதிநிதிகள் நீதி வழங்கும் குழுவில் இருக்கவேண்டும். என்ன தவறுக்கு என்ன தண்டனை என்பதை மக்கள் தீர்மானித்து வடிவமைத்துக் கொடுக்கவேண்டும். அதை இம்மி பிசகாமல் ஒப்பிக்கும் பொறுப்பு மட்டுமே நீதிபதிகளுக்கு உண்டு என நீதி அமைப்பில் ஆக்கபூர்வமான மாற்றங்களைக் கொண்டுவந்திருக்க வேண்டும்.

ஆனால், பஞ்சாயத்து ஆலமரத்தை அடியோடு பிடுங்கி எறிவதுதான் சாதி வெறியை ஒழிக்க ஒரே வழி என்று அம்பேத்கர் நினைத்தார். கிராமங்களை அரசியல் சாசனச் சட்டத்தில் செல்லாக்காசாக ஆக்கினார். ஆனால், அதற்கான விலையை நாம் இன்றும் கொடுத்துவருகிறோம். ஒருவேளை ஒவ்வொரு கிராம சபைக்கும் அதனதன் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் அதிகாரம் தரப்பட்டிருந்தால், விளைநிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டிருக்காது. ஏரிகள் தூர்ந்துபோயிருக்காது. கிணறுகள் மண்ணிட்டு மூடப்பட்டிருக்காது. மேய்ச்சல் நிலங்கள் அழிக்கப்பட்டிருக்காது. அனைத்து சாதியினரையும் உள்ளடக்கிய நிர்வாக முறை அமலாகியிருந்தால் மேற்கத்திய அடிமைகளிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டுப் புலம்பும் நிலை வந்திருக்காது.

இன்றைய நம் அரசின் ராணுவ பலமும் காவல்துறை பலமும் நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு பெருகிவிட்டிருக்கிறது. இன்று நம் ஊழல் மிகுந்த தலைவர்களைச் சரிக்கட்டுவதன் மூலம் தேச விரோத சக்திகள் ஒட்டுமொத்த தேசத்தையே சூறையாடிவிட முடிகிறது. அதிகாரக் குவிப்பு நமக்கு எந்த நன்மையையும் இதுவரை செய்திருக்கவில்லை. அல்லது அதன் மூலம் நமக்குக் கிடைத்த நன்மையைவிட தீமையே அதிகம். காந்தி இதையெல்லாம் முன்பே யூகித்துவிட்டிருந்தார். அதனால்தான் மையப்படுத்தப்பட்ட அரசை  ஆதிமுதல் அந்தம்வரை எதிர்த்தார். கிராமங்களின் குடியரசு ஒன்றை முன்வைத்தார். அதை மறுதலித்ததன் மூலம் நேருவும் அம்பேத்கரும்தான் காந்தியைக் கொன்றிருக்கிறார்கள். கோட்சே அல்ல.

0

வர்ணத்துக்குத் திரும்புவோம்

5-Ambedkar Jiமறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 28

இந்து மதத்தையும் இந்தியாவையும் விமர்சிப்பவர்கள் முதலும் கடைசியுமாகச் சொல்வது என்னவென்றால், அதன் சாதி சார்ந்த சமூகக் கட்டமைப்புதான் அனைத்து வீழ்ச்சிக்கும் காரணம் என்பதே. இந்த சாதி அமைப்புக்கு இந்து மதத்தின் முழு அங்கீகாரம் இருக்கிறது எனவே, சாதி அழிய வேண்டுமானால், இந்து மதம் அழிய வேண்டும் என்பதுதான் இவர்களுடைய இலக்கு. இந்து மதத்தின் பழங்கால நூல்களில் சாதி என்ற வார்த்தையே இல்லை என்பதும் அவை சொல்வதெல்லாம் வர்ண அடிப்படையிலான சமூகக் கட்டுமானம்தான் என்பதும் சொல்லிக் காட்டப்பட்டால், அந்த வர்ணமும் சேர்ந்தே அழிய வேண்டும் என்று முழக்கமிடுவார்கள். ஒவ்வொரு மனிதருக்கும் கல்வி தரப்படவேண்டும்; அதன் மூலம் அவர் பெறும் திறமைக்கு ஏற்ப சமூகத்தில் அவருடைய வேலையும் இடமும் தீர்மானிக்கப்படவேண்டும் என இன்றைய நவீன சமூகம் எதைச் சொல்கிறதோ அதையேதான் வர்ணாஸ்ரம தர்மமும் முன்வைக்கிறது என்றாலும் வர்ணாஸ்ரமத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பதன் மூலம் சாதி எதிர்ப்புப் போராளிகளின் இலக்கு சமூக நல்லிணக்கமோ மேம்பாடோ அல்ல என்பதையே உறுதிப்படுத்திவருகிறார்கள்.

வர்ணத்துக்கும் சாதிக்கும் இடையிலான வித்தியாசத்தை ஒருவர் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். கீதையில் கிருஷ்ணர் சொன்னதுபோல், நால் வகை வருணங்களை நானே சிருஷ்டித்தேன், குணங்கள், கர்மங்களின் அடிப்படையில். இதுதான் வர்ணாஸ்ரமத்தின் ஆதாரம். இதில் முதல் வாக்கியத்தை மட்டுமே வைத்துக் கொண்டுதான் அனைத்து திரிபு வேலைகளும் நடந்துவருகின்றன. ‘கருணாநிதி ஒரு முட்டாள் என்று சொல்வது தவறு’ என்று ஒரு வாக்கியம் எழுதப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் முதல் மூன்று வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு பேரியக்கம் ஆரம்பிக்கப்பட்டால் எப்படிப் பிழையாக இருக்குமோ அது போன்றதுதான் கீதையில் கிருஷ்ணர் சொன்ன வாக்கியத்தில் முதல் பாதியை மட்டும் எடுத்துக்கொண்டு மேலும் கீழும் குதிப்பதும்.

வர்ணாஸ்ரமத்தில் ஒவ்வொரு மனிதருடைய குணமே அவருடைய வேலையையும் சமூக அந்தஸ்தையும் தீர்மானிப்பதாக இருந்தது. சாதி பிறப்பை அடிப்படையாகக் கொண்டதாக அதை மாற்றியது. வர்ணம் சாதியாக மாறியது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.

வர்ணாஸ்ரம தர்மத்தில் முதலில் ஒவ்வொரு மனிதருடைய வர்ணமும் சப்தரிஷிகள், மனு என்ற குழுவினரால் தீர்மானிக்கப்பட்டன. அதாவது, சமூகத்துக்கு எத்தனை சத்ரியர்கள் தேவை, எத்தனை வைசியர்கள் தேவை, எத்தனை பிராமணர்கள் தேவை எத்தனை சூத்திரர்கள் தேவை என்றவற்றின் அடிப்படையில் சமூகத்தில் இருக்கும் நபர்களைப் பிரித்து வகைப்படுத்தினார்கள். ஒவ்வொருவரும் தமக்கு என்ன வர்ணம் தரப்பட்டதோ அதற்குரிய பணியைச் செய்து வந்தார்கள். இன்று ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடப்பதுபோல் அன்று நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இந்தத் தேர்தல் நடந்தது. யார்யாரெல்லாம் தங்கள் வர்ணத்தின் பணியைச் சிறப்பாகச் செய்தார்களோ அவர்கள் தொடர்ந்து அதே வர்ணத்தில் இருக்க அனுமதிக்கப்பட்டனர். திறமையாகச் செயல்படாதவர்கள் ஒரு வர்ணத்தில் இருந்து இன்னொன்றுக்கு மாற்றப்பட்டனர். ஒரு வர்ணத்தில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டவர்களும்கூட வேறு வர்ணத்துக்கு விருப்பத்தின் பேரில் மாற்றப்பட்டனர். சூத்திரராக இருந்த ஒருவர் பிராமணராகவோ வைசியராகவோ சத்ரியராகவோ ஆக முடிந்தது. பிராமணர்களில் இருந்து சிலர் சூத்திரர்களாக ஆக்கவும் பட்டிருக்கிறார்கள். இப்படி வர்ணங்களை மாற்றிக் கொண்டதற்கு ஏராள உதாரணங்கள் பழங்கால நூல்களில் காணப்படுகின்றன. வர்ணாஸ்ரம தர்மத்தின் ஆரம்பநிலை என்பது இதுதான். இப்படிப் பல ஆண்டுகள் நடைமுறையில் இருந்திருக்கிறது.

இந்த அனுபவங்களில் இருந்து வேறு சில படிப்பினைகளைக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். நான்கு வருடம் ஒரு வர்ணத்தில் இருந்தவர் வேறொன்றுக்கு மாற்றப்பட்டதால் அவருடைய சமூகப் பங்களிப்பு முழுமையாகக் கிடைக்காமல் போய்விட்டிருக்கிறது. தனிநபர் என்ற வகையில் அவருக்கும் அது எந்த நலனையும் செய்திருக்கவில்லை. விவசாயத்துறையில் நான்கு வருடம் இருந்த ஒருவர் புரோகிதத்துறைக்கு மாற்றப்பட்டபோது அவரால் புரோகிதத்துறையிலும் சிறந்து விளங்க முடியாமல் போனது. விவசாயத்துறையிலும் சிறந்து விளங்க முடியாமல் போனது. இதனால், ஒவ்வொருவருடைய வர்ணத்தையும் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை மாற்றுவதை மறுபரிசீலனை செய்தார்கள்.

இது இன்றைய சூழலில் நமக்கும் நன்கு புரிந்துகொள்ள முடிந்த ஒரு விஷயம்தான். பத்திரிகைத் துறையில் நான்கு வருடம் பணி புரிந்த ஒருவரை அதற்கு அடுத்த நான்கு வருடத்துக்கு வங்கித் துறைக்கு மாற்றினால் அவரால் இரண்டையும் சிறப்பாகச் செய்ய முடியாமல் போக வாய்ப்பு உண்டு அல்லவா. கிணற்றுக்குக் குழி வெட்டுவதானால், ஒரே இடத்தில் தொடர்ந்து வெட்டினால்தானே நீர் கிடைக்கும். ஓரிடத்தில் நான்கு அடி இன்னொரு இடத்தில் நான்கு அடி என்று வெட்டினால் நீர் எப்படிக் கிடைக்கும்? ஒரு துறையில் நான்கு வருடங்கள் பணி புரிவதால் கிடைக்கும் திறமையும் அனுபவ அறிவும் கவனத்தில் கொள்ளவேண்டியவைதானே. புதிய துறைக்கு மாற்றினால் அதைக் கற்றுக் கொள்ள சில மாதங்கள் ஆகும். அதுவரை பல தவறுகள் நடக்கும். தட்டுத்தடுமாறி விஷயங்களைக் கற்றுத்தேர்ந்து வரும் நிலையில் வேறொரு துறைக்கு மாற்றுவது மீண்டும் குழப்பத்தையே தானே கொண்டுவரும். எனவேதான், நான்கு வருடத்துக்கு ஒரு வர்ணம் என்ற முறையை மாற்றி ஒரு ஆயுள் முழுமைக்கும் ஒரு வர்ணம் என்று கொண்டுவந்தார்கள். இன்று 60 வயது வரை ஒரே துறையில் வேலை என்று சொல்கிறோமே அதுபோல். இந்த முறை நல்ல பலனைத் தந்தது. ஒவ்வொருவருடைய அனுபவ அறிவும் முழுவதும் சமூகத்துக்குப் பயன்பட்டது. தனி நபரின் நலனுக்கும் அது பெரிதும் உபயோகமாக இருந்தது. அப்படியாக ஒரு வர்ணம் (வேலை) என்பது ஒரு ஆயுள் முழுமைக்குமாக ஒருவருக்கு வந்தது.

ஆனால், இந்தக் காலகட்டத்திலும் தந்தை என்ன வர்ணமோ அதுதான் அவருடைய வாரிசுகளுக்கும் என்று தீர்மானமாகியிருக்கவில்லை. ஒருவர் ஆயுள் முழுவதும் புரோகிதராக இருந்திருக்கலாம். அவருடைய மகன் புரோகிதத்துறைக்கான திறமையோ ஆர்வமோ இல்லாதவராக இருந்தால் அவர் சூத்திரராகவோ வைசியராகவோ ஆக இடம் இருந்தது. ஒரு சூத்திரரின் மகன் சத்திரியராகவோ பிராமணராகவே ஆக முடிந்தது. இந்த அமைப்பு பல ஆண்டுகள் நீடித்தது. ஆனால், இந்த அமைப்பில் இன்னொரு குறை இருந்தது. ஒவ்வொருவருடைய வர்ணம் என்பது சப்த ரிஷிக்கள் என்ற குழுவினரால் தீர்மானிக்கப்படுவதாக இருந்தது. அதாவது, சூத்திர வர்ணத்துக்கான மனோபாவம் கொண்ட ஒருவரை பிராமணராகத் தவறாக தீர்மானித்துவிட்டால் அவருடைய வாழ்க்கை முழுவதும் சமூகத்துக்கு முழு வலிமையுடன் பங்களிக்க முடியாமல் போடுவிடும். தனிநபர் என்ற அளவிலும் அவருக்கு அந்தத் தீர்மானம் பெரும் தீங்கையே விளைவித்திருக்கும். இதைக் களைவதற்காக இன்னொரு வழிமுறையை அந்த சமூகத்தினர் கண்டடைந்தனர். அதுதான் வர்ணாஸ்ரமத்தின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு. கல்வியின் அடிப்படையில் வேலைகள் (வர்ணம்) தீர்மானமாக வேண்டும் என்ற இன்றைய அதி நவீன சமூகங்கள் முன்வைக்கும் அதே வழிமுறையைத்தான் அன்று நம் முன்னோர்கள் அதில் அமல்படுத்தினார்கள்.

அதாவது, ஒவ்வொரு மனிதரும் குருகுலத்தில் சேர்க்கப்பட்டு 12 வருடங்களுக்கு நான்கு வர்ணங்களிலும் முறையான பயிற்சி பெறவேண்டும். 12 வருட முடிவில் எந்த வர்ணத்தின் குணாம்சங்கள் ஒருவரிடம் மிகுதியாக இருக்கிறதோ அவர் அந்த வர்ணத்தினராக வேண்டும். இப்படியான தேர்வு அனைவருக்கும் உகந்ததாகவும் சமூக மேம்பாட்டுக்கு கூடுதல் பலனளிப்பதாகவும் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக இது மிகவும் நியாயமானதாக இருந்தது. இதுவே வர்ணாஸ்ரமத்தின் உண்மையான வடிவம்.

காலப்போக்கில் இந்த அமைப்பு வேறு வடிவை அடைய ஆரம்பித்தது. இந்த இடத்தில்தான் இன்னொரு முக்கியமான அம்சம் செயல்பட ஆரம்பிக்கிறது. அதுதான் வர்ணத்தை சாதியாக மாற்றியது.

ஒவ்வொரு மனிதருடைய ஆளுமையையும் மூன்று விஷயங்கள் பாதிக்கும். முதலாவதாக, ஒருவருடைய மரபணுக்கள். நிறத்தில் ஆரம்பித்து உடல் உயரம், வலு, பருமன் என அனைத்தும் இந்த மரபணுவால்தான் தீர்மானமாகும்.

இரண்டாவதாக, ஒரு மனிதருடைய சிந்தனை, நடத்தை ஆகியவற்றை அவர் எந்தச் சூழலில் வாழ்கிறாரோ அது பெருமளவுக்குத் தீர்மானிக்கும். பாலியல்/பாலுறவு தொடர்பான சொற்களை இயல்பாகப் பேசும் சமூகச் சூழலில் வளரும் குழந்தை அந்த வார்த்தைகளைச் சரளமாகக் கற்றுக்கொண்டு பேச ஆரம்பிக்கும். ஸ்லோகங்களைக் கேட்டபடி வளரும் குழந்தை இயல்பாகவே சுலோகங்களைச் சொல்லியபடி வளரும். மொழியைக் கற்றுக் கொள்வதுபோல் பல விஷயங்களைக் குழந்தைகள் தாம் வாழும் சூழலில் இருந்து கற்றுக் கொள்வார்கள்.

மூன்றாவதாக, ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இயல்பாக இருக்கும் உள்ளார்ந்த அம்சங்கள். இது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இருக்கும். மாபெரும் கலைஞர்கள் உருவாவதெல்லாம் இந்தத் தனிப்பட்ட உள்ளார்ந்த திறமையின் விளைவாகத்தான். இதை திட்டமிட்டு ஒருவரால் உருவாக்கவும் முடியாது. தடுக்கவும் முடியாது. இப்படியாக ஒரு மனிதருடைய ஆளுமையைத் தீர்மானிப்பதில் பிறப்பு, வளர்ப்பு, உள்ளார்ந்த திறமை என மூன்று விஷயங்கள் முக்கியப் பங்கு வகிக்கும்.

இதில் முதல் இரண்டு அம்சங்களை மீறி வேறொரு வாழ்க்கைப் பார்வையையோ திறமையையோ ஒருவர் பெறுவது முற்றிலும் தற்செயலான நிகழ்வு. அது ஒருவகையில் விதி விலக்குதான். சமூகத்தை முன்னகர்த்திச் செல்வது இத்தகைய விதிவிலக்குகள்தான் என்பது உண்மையே. என்றாலும் சமூகங்கள் அமைக்கப்படுவது விதிகளின்படித்தான். விதிவிலக்குகளின் படி அல்ல. மக்களில் பெரும்பாலானவர்கள் பிறப்பு, வளர்ப்பு என்ற இரண்டின் செல்வாக்குக்குத் தம்மை முழுமையாக ஒப்புக்கொடுத்தவர்களாகவே இருப்பார்கள். அதாவது, தனது பெற்றோர் எப்படியான வாழ்க்கையை வாழ்ந்தார்களோ அதையே விரும்பி, திறமையாகச் செய்பவர்களாக இருப்பார்கள். வர்ணம் காலப்போக்கில் சாதியாக அதாவது பிறப்பின் அடிப்படையில் வேலைகளையும் அதன் மூலம் சமூக அந்தஸ்தையும் தீர்மானிக்கும் அமைப்பாக மாறியதற்கு மனிதர்களின் இந்த இரண்டு அம்சங்களே காரணம். அவரையை நட்டால் அவரைதான் முளைக்கும். துவரை முளைக்காது என்பது மிகவும் எளிய, எல்லாராலும் ஏற்றுக்கொள்ள முடிந்த ஒரு விஷயம்தான். அதன் அடிப்படையில் பிராமணரின் மகன் பிராமணரானதையும் சூத்திரரின் மகன் சூத்திரரானதையும் நம் கடந்த கால சமூகம் மிகவும் இயல்பாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.

ஆனால் அம்பேகர், வர்ணம் சாதியாக மாறியதை சதித் திட்டத்தின் அங்கமாகச் சொல்கிறார். அதாவது பிராமண, சத்ரிய, வைசிய வர்ணங்கள் உயர்வானவை. அந்த வர்ணங்களில் இருந்தவர்களுக்குக் கூடுதல் சலுகைகள் இருந்தன. நிறைய வசதி வாய்ப்புகள் இருந்தன. அதிகாரம் அவர்கள் கையில் இருந்தது. அவர்கள் அதை விட்டுக்கொடுக்க, குறிப்பாக, சூத்திரர்களுடன் பரிமாறிக் கொள்ள விரும்பவில்லை. எனவே, வர்ணாஸ்ரமத்தில் ஒவ்வொருவருடைய குணத்துக்கு ஏற்ப வர்ணம் தீர்மானமாவதை அவர்கள் மாற்றி அமைத்தனர். குரு குலப் பயிற்சிக்குப் பிறகு ஒருவருடைய வர்ணம் தீர்மானமாகும் முறையை மாற்றி ஒவ்வொரு குழந்தையின் அப்பாவே தன் வர்ணத்தைக் குழந்தைக்கு கை மாற்றித் தருவதாக ஆக்கினார்கள். இதன்படி பிராமணரின் மகன் குருவிடம் கல்வி கற்று அதன் பிறகு பிராமணராக ஆவதற்குப் பதிலாக பிராமணருக்குப் பிறந்ததன் மூலமே பிராமணராக ஆகிவிட்டார். இதுதான் சூத்திரரை சூத்திரராகவே இருக்கும்படிச் செய்துவிட்டது என்று அவர் சொல்கிறார்.

ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்குப் பிறப்பதன் மூலமே மகனும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆக மதிக்கப்பட்டுவிடமுடியுமா என்ற வாதத்தின் மூலம் பிறப்பின் அடிப்படையில் சமூக அந்தஸ்து தீர்மானமாவதைக் கேள்விக்குட்படுத்துவார்கள். இவர்கள் ஒரு விஷயத்தை இங்கு கவனத்தில் கொள்ளத் தவறிவிடுகிறார்கள். பிறப்பின் மூலம் கிடைத்த முன்னுரிமை என்பது ஒரு பள்ளியில் எளிதில் அனுமதி கிடைப்பதற்குச் சமமானது மட்டுமே. அந்தப் பள்ளியில் கடினமாக உழைத்து, ஒழுங்காகப் படித்து முடித்து யார் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அவர்களுக்கே முதலிடம் தரப்பட்டது. ஒரு மன்னரின் குழந்தை உரிய காலத்தில் வில் வித்தை, ஈட்டி எறிதல், தேரோட்டுதல் போன்றவற்றில் ஆரம்பித்து ராஜாங்க விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதுவரை அனைத்தையும் முறையாகக் கற்றுக்கொண்டே அரசர் பதவிக்கு வந்து சேர்கிறார். ஒரு பிராமணரின் குழந்தை உரிய காலத்தில் உபநயனம் செய்விக்கப்பட்டு, வேத வேதாந்தங்களைக் கற்றுத் தேர்ந்து, மது மாமிசத்தில் இருந்து விலகி நின்று, பாலியல் ஒழுக்கத்தைப் பின்பற்றி வாழ்ந்ததன் மூலமே சமூக அந்தஸ்தை வென்றெடுக்கிறார். தன் தந்தை பிராமணராக இருந்ததன் மூலம் அவருக்குக் கிடைப்பது ஒரு எளிய முன்னுரிமை மட்டுமே. எஞ்சிய சாதனைகளை அவர் சுயமாகச் செய்துதான் அந்த மரியாதைப் பெறுகிறார். இது எப்படி என்றால், ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகன் கடினமாக உழைத்து தானும் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெறுவதைப் போன்றது. இதை யாரும் தவறு என்று சொல்ல முடியாது.

சாதியப் போராளிகளுக்குப் புரியும்படிச் சொல்வதானால், பெரியாரின் சீடரும் அண்ணாவின் தம்பியும் பகுத்தறிவுப் பகலவனும் தமிழினத் தலைவரும் தலித் சம்பந்தியும் கூடவே கம்யூனிஸ்டுமான திருக்குவளை மு. கருணாநிதி, முரசொலி மாறனின் மகன் என்ற ஒரே காரணத்தின் மூலம் பதவிக்கு பின்வாசல் வழி வந்தவரால் நடத்தப்படும் தொலைக்காட்சியில்  திமுக ரவுடிக்கூட்டத் தலைவன் என்று அடையாளப்படுத்தப்பட்ட மதுரையின் கட்டை பஞ்சாயத்து மன்னரான மு.க. அழகிரிக்கு அமைச்சர் பதவி வாங்கிக்கொடுத்தது போல் அல்ல இது. பாளையங்கோட்டைச் சிறையில் பாம்புகளுக்கும் பல்லிகளுக்கும் இடையே தந்தை வாடியதுபோல் மிசா காலகட்டத்தில் சிறையில் வாடி, கட்சித் தொண்டனாக இருந்து இளைஞர் அணித் தலைவராகி, எம்.எல்.ஏவாகி., மேயராகி, துணை முதல்வராகி இன்று அடுத்த முதல்வராக ஆவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் போலவேதான் அன்றைய பெரும்பாலான மன்னர்களும் வைசியர்களும் பிராமணர்களும் உரிய படிநிலைகளைக் கடந்தே அந்தந்த வர்ணத்தின் தொழிலைச் செய்பவர்களாக ஆகியிருக்கிறார்கள். யாரும் வெறும் பிறப்பை மட்டுமே வைத்து உச்சாணிக் கொம்பில் ஏறி அமர்ந்துவிடவில்லை.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் வர்ணத்தின் அடிப்படையிலான அமைப்பில் பாதிக்கப்பட்டவர்களாக எந்த சூத்திரர் பிரிவை அம்பேத்கர் சொல்கிறாரோ சாதிக் கட்டமைப்பில் அதே சூத்திரர்களை (பிற்பட்ட சாதியினர்) சாதி இந்துவாக கட்டம்கட்டித் தாக்கவும் செய்கிறார். அப்படியானால், அவர்கள் யார்.. நல்லவர்களா… கெட்டவர்களா..? பாதிக்கப்பட்டவர்களா… பாதிப்பை ஏற்படுத்தியவர்களா?

அம்பேதகர் தலித்துகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளாகப் பட்டியலிடுபவற்றில் இரண்டு முக்கியமான விஷயங்களைக் கணக்கில் கொள்ளவேண்டும். முதலாவதாக, அவர் பட்டியலிடுபவை, ஒரு அரசு மருத்துவமனைக்குச் சென்ற ஒருவர் அங்கு சிகிச்சை பெறும் அனைவருடைய நோய்களையும் ஒரே ஒரு நபருக்கு நேர்ந்ததாகச் சொல்வதைப் போன்றது. தலித் என்ற வகைக்குள் நில உடமையாளரான தலித், குத்தகைதாரரான தலித், விவசாயக் கூலியான தலித், சிகை அலங்காரம் செய்யும் தலித், ஆடு மாடு மேய்க்கும் தலித், வெட்டியானாக இருக்கும் தலித், மலம் அள்ளும் தலித், துணி வெளுக்கும் தலித் என எத்தனையோ பிரிவுகள் உண்டு. ஒவ்வொருவருடைய வாழ்க்கை முறையும் அனுபவங்களும் ஒவ்வொருவிதமானவை. அதிலும்கூட மன்னர்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் தலித்தின் வாழ்க்கை வேறானது. நிலப்பிரபுக்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் நபர்களின் வாழ்க்கை வேறுவிதமானது. பிராமணர்களுக்கும் சூத்திரர்களுக்கும் சிகை அலங்காரம் செய்பவர்களின் வாழ்க்கை வேறானது. இவர்கள் அனைவருமே கூட சிகை அலங்காரத் தொழிலில் ஈடுபடுபவர்கள் என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் வரமாட்டார்கள். இங்கு வர்க்கமும் சேர்ந்து செயல்படும்.

இந்த தலித் என்ற ஒற்றைச் சிமிழுக்குள் அடைக்கப்படும் ஒவ்வொருவருமே தமக்கான தெய்வ வழிபாட்டுமுறைகள், சடங்கு சம்பிரதாயங்கள் என அனைத்திலும் வித்தியாசமானவர்கள். மேல்சாதியினருடனான இவர்கள் அனைவருடைய பரிமாற்றமும் வேறுபட்டவை. மன்னருக்கு சேவகம் செய்த தலித் பிரிவினர்களுக்கு நிலங்கள் தானமாகத் தரப்பட்டு அவர்கள் நில உடமையாளராகவே இருந்திருக்கிறார்கள். பல இடங்களில் குத்தகைதாரராக தலித்கள் இருந்திருக்கிறார்கள். அது அரை உடமையாளருக்கு சமமான நிலை. விளைச்சலில் கணிசமான பங்கை குத்தகைதாரர் எடுத்துக்கொள்ள வழி உண்டு. ஊடு பயிராக நடப்படுபவையும் நன் செய் நீங்கலாக நடப்படும் பயிர்களும் முழுவதும் அவர்களுக்கே கிடைக்கும். வறட்சியால் விளைச்சல் பாதிக்கப்பட்டால் நஷ்டத்தை நில உடமையாளரும் சேர்ந்தேதான் பகிர்ந்துகொண்டிருக்கிறார். இந்த தலித்கள் பிற தலித்களை விடப் பல மடங்கு மேலானவர்கள். அம்பேகர் கண்ணில் இப்படியான ஒருவர்கூட பட்டிருக்கவில்லை.

கழுத்தில் கலயத்தைக் கட்டிக் கொள்ளவேண்டும்; இடுப்பில் விளக்கமாறைக் கட்டிக் கொள்ளவேண்டும் என்ற விஷயங்கள் எல்லாம் தலித்களில் ஐந்து சதவிகித மக்களுக்குக் கூட விதிக்கப்பட்டிருக்காத ஒரு வழிமுறை. துணி வெளுப்பவர்கள் இரவு நேரத்தில் உணவை யாசகம் கேட்டுச் செல்வார்கள். பிற பல தலித்கள் அப்படிச் செய்யமாட்டார்கள். மலம் அள்ளுதல் ஒரே ஒரு பிரிவு தலித்கள் மட்டுமே செய்யும் பணி. பிற தலித்கள் யாரும் அதைச் செய்யமாட்டார்கள். இந்தச் செயல்களுக்கான காரணங்களையும் இதில் இருந்து தப்ப என்னென்ன வழிகள் இருந்தன என்பதையும் பற்றியெல்லாம் எதுவுமே அம்பேத்கர் சொன்னது கிடையாது. மேலும் தலித்களுக்கு இருந்த சாதகமான விஷயங்களையெல்லாம் புறக்கணித்துவிட்டு அனைத்து இழிநிலைகளையும் ஒரே ஒரு தலித் என்ற பிரிவுக்கு இழைக்கப்பட்டதாகச் சொல்லும்போது மிகப் பெரிய அநீதி நடந்ததுபோல் தென்படும். இதை அடிப்படையாக வைத்துத்தான் இந்து மதத்தின் மீது சாதி இந்துக்கள் மீதும் கட்டுக்கடங்காத வெறுப்பையும் கோபத்தையும் அம்பேத்கர் கட்டமைத்துக்கொள்கிறார். இது அடிப்படையிலேயே தவறு.

இரண்டாவதாக, அவர் ஒடுக்குமுறைகளாகப் பட்டியலிடுபவை எல்லாமே ஒருவகையில்  ஒடுக்குமுறையே அல்ல. அவையெல்லாம் நாங்கள் உங்களுக்கு சமம்தான் என்ற சவாலை அதிரடியாக முன்வைத்ததால் நடந்தவையே. ஒரு சமூகத்தில் வாழும் மக்கள் அனைவரும் சமம் என்பது உண்மைதான். சம வாய்ப்பும் சம வசதிகளும் அனைவருக்கும் தரப்படவேண்டும் என்பதும் நியாயமான எதிர்பார்ப்புதான். ஆனால், பழைய வாழ்க்கை முறையில் அந்த சமத்துவம் குறித்த கருத்துகள் இரு தரப்பிலுமே இருந்திருக்கவில்லை. வர்ணாஸ்ரம காலகட்டத்தை விட்டுவிட்டுப் பார்த்தால் சம வாய்ப்பு என்பது புதிய சிந்தனையே. ஆனால், பல நூறு ஆண்டுகளாக சிலரை மேலானவர்களாக மதித்து வாழ்ந்துவிட்டு திடீரென்று ஒருநாள் நாங்கள் உங்களுக்குச் சமமே என்று கோஷங்கள் இடுவது நடைமுறையைப் புரிந்துகொள்ளாமல் எடுக்கப்பட்ட நடவடிக்கையே. எளிய மக்களைப் பகடைக்காயாகவைத்து நடத்தப்படும் இதுபோன்ற அரசியல் கலகங்கள் ஆக்கபூர்வமான நோக்கத்தைக் கொண்டவை அல்ல. எதிர் தரப்பில் இருக்கும் மேல் சாதியினரை எதிரிகளாகவே ஆக்கும் குயுக்தி அரசியல்தான் இது.

வர்ணாஸ்ரம/சாதிய கட்டமைப்பைப் பற்றி விமர்சிக்கும்போது அம்பேத்கர் வெகு சாமர்த்தியமாக, கடினமான இழிவான வேலைகளை தலித்கள் செய்ய நேர்ந்தது குறித்து பெரிதாக எதுவும் சொல்லாமல் இருப்பதை ஒருவர் பார்க்க முடியும். ஏனென்றால், என்னதான் ஒரு சமூகத்தின் அறிவு வர்க்கத்துக்குத்தான் அனைத்து மக்களின் நலனுக்காக சிந்திக்கும் பொறுப்பு உண்டு என்று சொன்னாலும் கடினமான கேவலமான வேலையைச் செய்து வந்தவர்களுக்கும் அதை மேம்படுத்தும் பொறுப்பு இருக்கிறது என்ற உண்மை அவருக்குத் தெரியும். எனவேதான் அது பற்றி அதிகம் அவர் பேசுவது இல்லை. சாதி அடுக்கில் தலித்கள் மேலேற முற்பட்டபோது சாதி இந்துக்கள் எப்படியெல்லாம் அவர்களை ஒடுக்கினார்கள் என்பதையே அவர் தன் வாதங்களுக்கு அடிப்படையாக வைத்துக்கொள்கிறார். தேர்ந்த வக்கீல் அல்லவா..? உண்மையைவிட வாதத் திறமைதானே வெல்லும் என்பது அவருக்குத் தெரியுமே.

இதனால்தான் தலித்களுக்குள்ளும் சாதி வெறி இருக்கிறதே என்ற உண்மையைச் சொல்பவர்களை விஷமிகள் என்று அம்பேத்கர் சொல்கிறார். தன் தரப்பு மக்களிடம் இருக்கும் குறைகளையும் அவர் கணக்கில் எடுத்துக்கொண்டிருந்தால் சக மனிதர்களை சமத்துவத்தோடும் சகோதரத்துவத்தோடும் நடத்தும் பண்பு மனித குலத்துக்கு இயல்பாகக் கைகூடும் ஒன்றாகவோ நீடித்து நிற்கும் ஒன்றாகவோ இல்லை. விழிப்பு உணர்வு பெற்ற ஒரு சிலர்தான் இதை மக்கள் மத்தியில் விதைத்து நிதானமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற உண்மைகளைப் புரிந்துகொண்டிருப்பார். இந்து சமூகத்தை அதன் மூலம் ஒரு மறுமலர்ச்சிக்கு அவர் கொண்டு சென்றிருக்க முடியும். காந்தி அதைத்தான் செய்தார். ஆனால், அம்பேத்காருக்கோ இந்து தன் குறைகளைத் திருத்திக்கொண்டு அடுத்தகட்டத்துக்கு நகரவேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை. இந்து மதத்தை அழிக்கவேண்டும் என்ற பிரிட்டிஷாரின் உத்தரவை தன்னுடைய கண்டுபிடிப்பாகவும் உரிமைப்போராட்டத்தின் முதல் முழக்கமாகவும் வைத்துக்கொண்டு சுய சிந்தனையாளர்போல் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இந்தக் காரணத்தினால்தான் வர்ணாஸ்ரமத்தையும் அவர் அழிய வேண்டும் என்று கூறுகிறார். அவருக்கு வர்ணம் என்பது சாதியைவிடப் பல மடங்கு உயர்ந்தது என்பது தெரியும். அதை அவரே விரிவாகக் குறிப்பிடவும் செய்திருக்கிறார். நவீன உலகம் முன்வைக்கும் சமூக அமைப்பு என்பது வர்ணாஸ்ரம தர்மமே என்பதும் அவருக்குத் தெரியும். ஆனால், அதை ஏற்றுக்கொள்ள அவருக்கு மனமில்லை. அதாவது, பிரிட்டிஷாருக்கு அது உவப்பானதாக இருந்திருக்கவில்லை என்பதால் அவருக்கும் அது ஏற்புடையதாக இருந்திருக்கவில்லை. தொட்டியில் வாழும் தங்க மீனுக்குக் கடலின் அருமை எப்படித் தெரியும்?

0

வேள்வித் தீயும் வீட்டை எரிக்கும் தீயும்

imagesமறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 27

சாதி எதிர்ப்பை மையமாகக்கொண்டு செயல்பட்ட ஆரம்பகாலத் தலைவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே அதை முன்னெடுத்திருக்கிறார்கள். அம்பேத்கர் போன்று விரிவான ஆய்வுப் பின்புலத்துடன் செயல்பட்டவராகட்டும்… பெரியார் போன்று அது இல்லாமல் செயல்பட்டவராகட்டும்… அதீத உணர்ச்சி என்பதே அடிநாதமாக இருந்திருக்கிறது.

உலகின் பிற பகுதிகளைப் போலவே நிறை குறைகளோடு இருந்த இந்திய சமூகத்தில் மன்னராட்சி முடிந்து மக்களாட்சி அமலுக்கு வந்ததும் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் கிடைத்து, சமூகம் அடுத்தகட்டத்துக்கு அதிக உரசல்கள் இல்லாமல் நகர்ந்துவிடும்; மக்களை ஒருவருக்கொருவர் எதிரிகளாகக் கட்டமைப்பது இடைவெளியை அதிகரிக்கவே செய்யும்; இந்திய சமூகத்தின் முழு பரிமாணத்தைப் புரிந்துகொண்டு எடுக்கப்படும் சீர்திருத்த முயற்சிகள் குறைந்தபட்ச போராட்டத்தைத் தொடர்ந்து எளிதில் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடும்; ஒரு தாய் உரிய வலிகளைக் கடந்து குழந்தையை சுகமாகப் பிரசவித்துவிடுவதுபோல் இந்திய சமூகமும் தனக்கான நவீன யுகத்தைப் பிறப்பித்துக்கொண்டுவிடும் என்ற தெளிவோ, நம்பிக்கையோ, தொலைநோக்குப் பார்வையோ அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. வயிற்றைக் கிழித்து எடுத்தால்தான் குழந்தையைக் காப்பாற்ற முடியும் என்று நினைக்கும் இன்றைய மருத்துவர்களைப் போலவே அந்த சமூக சீர்திருத்தத் தலைவர்களும் எண்ணினார்கள். அதோடு நிற்காமல் வயிற்றைக் கிழித்துப் பிறக்க வைத்த குழந்தையையும் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் தாயையும் கவனிக்காமல் விட்டுவிடும் அபாயமும் நடந்தேறியிருக்கிறது. அப்படியாக கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்றுமே ஒரு சேர முடக்கப்பட்டிருக்கிறது.

கடந்த காலத்தை மிகையாகப் பழித்தால்தான் நிகழ்காலத்தில் சலுகைகளை அதிகமாகப் பெற முடியும் என்று நினைத்தனரா… வசதி வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதில் இருந்த குற்ற உணர்ச்சி அப்படி மிகைப்படுத்தச் சொன்னதா… அல்லது தவறான தகவல்கள் அல்லது சிந்தனைகளால் அப்படியான முடிவை எடுத்தனரா… தெரியவில்லை. ஒவ்வொரு பிரிவினரும் தம்மை அதிக அளவுக்கு பாதிக்கப்பட்டவர்களாக அடையாளப்படுத்திக்கொண்டனர். இந்து சமூகம் ஒரு பொதுச் சமூகமே அல்ல. தனித்தனி சாதிகளின் கலப்படமே என்று சொன்ன அம்பேத்கர், தலித் என்ற சாதியைக் கட்டமைக்க மிகவும் செயற்கையான ஒரு பொது அம்சத்தை உருவாக்கிக் கொண்டார். அப்படியே சாதி இந்துக்கள் என்ற ஒரு பிரிவை வலுக்கட்டாயமாக எதிரியாகக் கட்டமைக்கவும் செய்தார். பார்ப்பனர்கள் உங்களை வைப்பாட்டியின் புத்திரர்களாகச் சொல்கிறார்கள்… சூத்திரர்களே ரத்தம் கொதிக்கவில்லையா… என்பதுதான் தமிழக சாதி எதிர்ப்பு இயக்கத்தின் முத்திரை வாக்கியம். அப்படி ஒரு பொய்யான கோஷத்தை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட அந்த விடுதலை இயக்கம் தமிழகத்தின் பெரும் துரதிஷ்டமாக, கொடுங்கனவாக, கரிய நிழலாக இன்றும் பின்தொடர்ந்து வருகிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப இடப்பங்கீடு அமலானதால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இயல்பாகக் கிடைத்திருக்கும் வசதி வாய்ப்புகள் எல்லாமே தங்களுடைய எதிர்ப்பரசியலால் வென்றெடுக்கப்பட்ட உரிமைகளாகப் பிரசாரம் செய்து மகிழ்ந்துகொள்கிறார்கள்.

பிற மாநிலங்களில் சாதிப் பெயர் பின்னொட்டாகப் பயன்படுத்தப்படுகிறது; தமிழகத்தில் அப்படி ஒரு நிலைமை இல்லை… இது எங்கள் சாதனை என்பதில் ஆரம்பித்து அதேரகத்தில் ஏராளமானவற்றைப் பட்டியலிடுகிறார்கள். அவர்களுடைய கூற்றுகள் உண்மை என்று வைத்துக்கொண்டால், ஐம்பதே ஆண்டுகள் அதிகாரத்தை ருசிக்க ஆரம்பித்த பிற்படுத்தப்பட்டவர்கள், சோ கால்டு 2000 ஆண்டு ஆதிக்க சக்திகளைவிட தாழ்த்தப்பட்டவர்கள் மீது வன்மத்துடன் இருப்பதைப் பார்க்கும்போது இந்தப் போராளிகள் சமூகத்தைப் பின்னோக்கித்தான் கொண்டுசென்றிருக்கிறார்கள் என்றே அர்த்தமாகும். இதற்கும் மனு&கோவே காரணம் என சாதிப் போராளிகளிடம் ரெடிமேட் பதில் கைவசம் இருக்கத்தான் செய்கிறது. அவர்களை நாம் பரிவோடு புரிந்துகொள்ளத்தான் வேண்டும்.

கீறல் விழுந்த ரெக்கார்டுகளால் ஒரே வரியைத்தானே பாடமுடியும். ஆனால், இன்றைய வன்முறை நிகழ்வுகளைக் குறைக்கவேண்டும் என்று விரும்புபவர்கள் அதன் உண்மையான காரணத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தாகவேண்டும். அதற்குக் கடந்த காலம் பற்றிய சாதியப் போராளிகளின் முன்தீர்மானங்கள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட வேண்டும். பிரிட்டிஷ் காலகட்டத்துக்கு முந்தைய இந்தியாவையும் அதற்குப் பிந்தைய இந்தியாவையும் தனித்தனி மதிப்பீடுகள் கொண்டு ஆராய வேண்டும். வெறுப்பின் விதைகளைத் தூவிவிட்டு வன்முறை முளைக்கிறதே என்று புலம்புவதில் அர்த்தமே இல்லை. காலமெல்லாம் முட்களை விதைத்துவிட்டு நிலத்தைப் பழித்தபடித் திரிவதில் எந்தப் பொருளும் இல்லை. பாரதம் வளமான மண். ஒரு முட் செடியை விதைத்தால் ஒரு முட்காடை விளைவிக்கும். இங்கோ பாத்தி மேல் பாத்தி கட்டி தோட்டம் தோட்டமாக விதைக்கப்பட்டுவருகின்றன முட்செடிகள்.

கடந்த கால இந்திய சமூகம் பெண்களையும் சூத்திரர்களையும் மிகவும் கொடுமைப்படுத்தியதாகச் சொல்கிறோமே… அந்தக் கொடுமைகளை அவர்கள் ஏன் சகித்துக் கொண்டார்கள். அல்லது கொடுமைப்படுத்தியதாகச் சொல்லப்படும் உயர் சாதியினர் மீது அவர்கள் மதிப்பும் மரியாதையும் கொண்டவர்களாக இருக்கிறார்களே அது எப்படி என்ற கேள்விகள் போராளிகள் மனதில் எப்போதாவது எழும். உயர்சாதியினரின் சதி, அடக்குமுறை, தந்திரம் என பல ரெடிமேட் பதில்கள் அவர்கள் கைவசம் இருக்கும் என்றாலும் அந்தப் பதில் தவறாக இருக்குமோ என்ற எண்ணம் சில நேரங்களில் லேசாகத் தலைதூக்கும், சுவரில் முளைக்கும் ஆலமரத்தின் விதைபோல. அப்படியே வளரவிட்டால் அது கட்டடத்தையே தகர்த்துவிடும் என்பதால் உடனே அதைக் கிள்ளி எறிந்துவிடுவார்கள். உண்மையில் அந்தக் கேள்வி அப்படி எளிதில் புறக்கணிக்க வேண்டிய ஒன்றல்ல. கடந்த கால மக்கள் தங்கள் வாழ்க்கை மூலம் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் வரைபடக்குறிப்பு அது. அதைப் பின்பற்றிச் சென்றால் நாம் சென்று சேரும் உலகம் இன்று போராளிகளால் முன்வைக்கப்படும் உலகுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.

வேதனை நிறைந்த வாழ்க்கையை 2000 (?!) ஆண்டுகளாக, பெருந்திரளான, உடல் வலிமை மிகுந்த ஒரு சமூகம் ஏன், எதற்காக ஒப்புக்கொண்டு வாழ்ந்தது என்ற கேள்விக்கு சாதியப் போராளிகள் சொல்லும் பதில்: கர்மவினை, விதி, மறு பிறப்பு என பிராமணர்கள் உருவாக்கிய மாயவலையில் மற்றவர்கள் சிக்கிக்கொண்டுவிட்டார்கள் என்பதுதான். ஆனால், அந்த அம்சங்களை நம்பும் கடந்த கால மனிதரை அழைத்துக்கேட்டால், அவற்றுக்கான வேறு பதில்களைச் சொல்வார். அதை நாம் பொருட்படுத்திக் கேட்பது அவசியம். வேறெதுவும் இல்லையென்றாலும் அவர் நம்பி வாழ்ந்த வாழ்க்கை அல்லவா அது.

விதி, கர்ம வினை, மறு பிறப்பு போன்றவை எப்படி உருவாகின… சமூகத்தில் அவை என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதைப் பார்ப்போம். இதற்குக் கொஞ்சம் பின்னால் இருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கும்.

நான்கு கால்களில் நடந்து கொண்டிருந்த விலங்கில் இருந்து முன்னங்கால்கள் இரண்டும் கைகளானதும் புதியதொரு உயிரினமாக மனிதன் கிளை பிரிந்துவிடுகிறான். அதைத் தொடர்ந்து அவனுடைய மூளை வளர்ச்சி அதிகரிக்கிறது. இயற்கை நிகழ்வுகளில் சிலவற்றை வென்றெடுக்கிறான். சிலவற்றுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்கிறான். இவையெல்லாம் விலங்குகளுக்குக் கனவிலும் கைவராதவை.

அந்த மனிதன் இயற்கையின் பல்வேறு புதிர்களுக்கு ”விடை’ காண முற்படுகிறான். இந்த உலகில் வாழும் எந்த உயிரினமும் எங்கிருந்து பிறந்தோம், எங்கே போகிறோம், ஒவ்வொரு நிகழ்வுகளும் ஏன் நடக்கின்றன என்பது போன்ற கேள்விகளால் துரத்தப்படுவதில்லை. மனிதர்களுக்கு மட்டுமே இந்தக் கேள்விகள் எழுகின்றன. மனித இனத்தின் ஒவ்வொரு பிரிவும் தாம் வாழ்ந்த இடத்துக்கும் அனுபவங்களுக்கும் ஏற்ப ஒவ்வொரு பதிலைக் கண்டடைந்திருக்கின்றன.

ஆரம்பத்தில் இயற்கையின் ஏராளமான நிகழ்வுகள் அன்றைய மனிதருக்கு புரியாததாகவே இருந்திருக்கின்றன. ஏன் மழை பெய்கிறது, ஏன் இரவு வருகிறது என்பதில் ஆரம்பித்து இந்த உலகில் நடக்கும் பெரும்பாலான நிகழ்வுகள் மனித எதிர்பார்ப்புகளுக்கும் புரிதலுக்கும் அப்பாற்பட்டதாகவே இருந்திருக்கின்றன. நம்மையும் இந்த உலகில் வாழும் உயிர்களையும் ஒருவன் படைத்திருக்கிறான். அவனுடைய விருப்பத்துக்கு ஏற்பவே எல்லாம் நடக்கின்றன என்பது மனிதனின் ஆதி நம்பிக்கைகளில் முக்கியமானது.

அந்த இறைவன் நல்லவன் என்று நம்பினால்தான் இந்த உலகில் மனித இனத்தால் நிம்மதியாக வாழ முடியும். ஏனென்றால், அப்போது அவன் பரிணாம வளர்ச்சியின் குழந்தை நிலையில் இருக்கிறான். கிட்டத்தட்ட தாயையும் தந்தையையும்போல் அந்த இறைவனை நினைக்கிறான். இதன் நீட்சியாக நல்லவர்களுக்கு நல்லது நடக்கும். தீயவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என ஒரு நம்பிக்கையை உருவாக்கிக் கொள்கிறான். இறைவனுக்கு பிரியமானதைச் செய்தால் நமக்கு நன்மை கிடைக்கும். செய்யத் தவறினால் தண்டனை கிடைக்கும் என்று நம்புகிறான். தனக்கு எது பிடிக்குமோ அதுவேதான் தான் வணங்கும் தெய்வத்துக்கும் பிடிக்கும் என்று ஒரு குழந்தைபோல் நம்புகிறான்.

இதுவரையில் உலகில் மனிதர்கள் தோன்றி வளர்ந்த இடங்கள் அனைத்திலுமே இந்த சிந்தனைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், இந்த இடத்தில் மனித இனம் இன்னொரு பெரிய பிரச்னையை எதிர்கொள்கிறது. நல்லது செய்தவருக்கும் தீங்கு நேர்கிறது. கெடுதல் செய்தவனும் சந்தோஷமாக வாழ்கிறான். ஒரு தவறும் செய்யாத பச்சிளம் குழந்தை இறந்துபோகிறது… சாவு வரவேண்டியவருக்கு வராமல் நீடிக்கிறது… இவற்றை மனிதனால் புரிந்துகொள்ள முடியவில்லை. இறைவன் கருணை வடிவானவன்… கண்டிப்பு மிகுந்தவன் என்ற முந்தைய கோட்பாடு இங்கு அடிபடுகிறது.

இந்த இடத்தில் உலக நிகழ்வுகளைப் பகுத்தறிந்து வாழ்க்கை என்பது இப்படியாகத்தான் இருக்கும். இறைவன் என்றெல்லாம் ஒருவர் கிடையாது. நல்லது செய்பவருக்கு நன்மையும் நடக்கலாம். கெடுதலும் நடக்கலாம்… கெடுதல் செய்பவருக்கு கெட்டதும் நடக்கலாம். நல்லதும் நடக்கலாம். நட்டு நீரூற்றியவன் தொட்டாலும் முள் குத்தவே செய்யும். வெட்டி எறிந்தவன் எடுத்து முகர்ந்தாலும் மல்லிகை மணம் தரவே செய்யும். வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொள்வதே நல்லது என்ற உண்மையின் பிரமாண்ட கதவுகள் மெள்ள இருளில் இருந்து முளைத்து வருகின்றன. அந்தக் கதவுகளைத் திறந்துகொண்டு சென்றால் அவன் வேறொரு புதிய உலகைச் சென்றடைய முடியும். ஆனால், அந்தக் கதவை மனிதன் திறக்கத் தயங்குகிறான். ஏனென்றால், அது கடவுள் இல்லாத உலகம். காலுக்குக் கீழே இருக்கும் பழைய நிலம் சட்டென்று இல்லாமல் ஆகி புதிய உலகுக்குள் பாயவேண்டிய நெருக்கடியை அவன் உணர்கிறான்.

இந்த இடத்தில்தான் மனித மனம் இன்னொரு சிந்தனையை முன்வைக்கிறது. ஒரு மனிதனுடைய வாழ்க்கையானது பிறப்பிலிருந்து ஆரம்பித்து மரணத்தோடு முடிவதில்லை. அது ஒரு தொடர் சங்கிலி போன்றது. முந்தைய பிறப்பில் செய்த நல்லது கெட்டதற்கு ஏற்ப இந்த பிறப்பு அமைகிறது. இந்தப் பிறப்பில் செய்பவற்றுக்கு ஏற்ப அடுத்த பிறப்பு அமைகிறது. கடவுள் ஒவ்வொன்றுக்கும் கணக்கு எழுதி வைத்து உரியதை உரிய நேரத்தில் தருகிறார் என்று புதிதாக ஒன்றைக் கண்டடைகிறது.

இந்த சிந்தனை மனிதனுக்கு மிகப் பெரிய ஆறுதலைத் தருகிறது. கடவுள் யாரையும் வெறுமனே தண்டிக்கவில்லை. யாருக்கும் எந்த சலுகையையும் காரணம் இல்லாமல் வழங்கிவிடவில்லை என்று மனம் தன்னைத்தானே தேற்றிக்கொள்கிறது. இது அடிபடையில் இரண்டு வகையில் நன்மை தருகிறது. முதலாவதாக இதில் அவன் கடவுளைக் கைவிட வேண்டிய தேவை எழவில்லை. இன்னொன்று இந்த உலக நிகழ்வுகளை ஒரு ஒழுங்குக்குள் கொண்டுவர அது உதவுகிறது.

சூழலை மாற்றி அமைக்க முற்படுவது எவ்வளவு இயல்பான குணமோ அதுபோல் சூழலுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்வதும் இயல்பான இன்னொரு குணமே. அடித்தட்டில் இருந்தவர்கள் தங்கள் நிலையை மாற்றி அமைக்க முயற்சி செய்யாமல் அந்த அமைப்புக்குள் வாழ்தலுக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டதற்கும் கர்ம வினைக்கோட்பாட்டுக்குமான தொடர்பு மிகவும் மெல்லியதுதான். தாழ்ந்த சாதிக்காரர், தான் அந்த சாதியில் பிறந்ததைத் தன்னுடைய விதி என்றோ முற்பிறவியில் செய்த தீமையின் பலன் என்றோ மறு பிறப்பில் சொர்க்கம் கிடைப்பதற்கான முன்னேற்பாடு என்றோ நினைத்து முடங்கியிருக்கவில்லை. தன்னுடைய ஜாதி குறித்தும் தங்களுடைய சடங்கு சம்பிரதாயங்கள் குறித்தும் பெருமிதம் கொண்டவராகவே இருந்திருக்கிறார். உண்மையில் அவர் அந்த வாழ்க்கைக்குள் தனக்கான வசதி வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்பவராகவே இருந்திருக்கிறார். இயற்கை நிகழ்வுகளை மட்டுமே அவர் விதியின் விளைவுகளாக எடுத்துக்கொண்டிருக்கிறார். கர்ம வினைக் கோட்பாடுகளை அங்கு மட்டுமே பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற கருத்தாக்கங்களும் பாவ புண்ணியம் பற்றிய சிந்தனைகளும் வலியவர்களை ஒழுங்குபடுத்தும் பணியைத்தான் அதிகமும் செய்திருக்கின்றன. ஒட்டுமொத்த உலகையும் தன் ஆளுகைக்குள் கொண்டுவந்துவிடவேண்டும் என்று ரத்தவெறியுடன் அலைந்த மதங்கள் கர்மவினைக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. கர்மவினைக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்ட மதம் இந்த உலகைத் தன் ஆளுகைக்குள் கொண்டுவர ஒரு குறுவாளைக்கூட உயர்த்தியிருக்கவில்லை. பாரதம் அசோகனைத்தான் உருவாக்கியிருக்கிறது. செங்கிஸ்கானையோ. நெப்போலியனையோ ஹிட்லரையோ அல்ல.

அரச ஆதிக்க விரிவாக்கம் என்பது போர்களின் மூலமாக அல்லாமல் சாத்விகமான முறையில் நடந்தேற இந்த அம்சமே காரணமாக இருந்திருக்கிறது. இந்தியாவில் தோன்றி இலங்கை, சீனா, ஜப்பான், கொரியா என ஆசியா முழுவதும் பரவிய புத்தமதம் வாளால் தன் எல்லையை விரிவுபடுத்தியிருக்கவில்லை. ஒவ்வொரு தேசத்தின் தத்துவ அறிவுப்புலங்களில் வாத பிரதிவாதங்கள் நிகழ்த்தியும் அந்தந்த தேசத்து மன்னரைப் புதிய வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள வைத்தும்தான் அது பரவியது. இத்தகையதோர் அணுகுமுறைக்கு மறு பிறப்பு நம்பிக்கையும் கர்ம வினைக் கோட்பாடும் மிகப் பெரிய பங்காற்றியிருக்கிறது. உலக வரலாறு மிக மெல்லிய குரலில் துரத்துக் கடலோசைபோல் இந்த உண்மையை ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.

கர்மவினை, மறு பிறப்பு போன்றவை இப்படியாகத்தான் செயல்பட்டிருக்கின்றன. இது உச்சியில் குடுமியும் மார்பில் பூணூலும் கொண்ட பிராமணர்கள் பாதாள குகையில் தீப்பந்த வெளிச்சத்தில் உட்கார்ந்து தீட்டிய ரகசிய சதித் திட்டம் அல்ல. இந்திய மனித மனம் வாழ்க்கை நிகழ்வுகளைப் பார்த்து உருவாக்கிய தர்க்கபூர்வமான உயரிய கோட்பாடு அது. சமண மதத்திலும் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டவிஷயம்தான். இவ்வளவு ஏன்… வள்ளுவரும் ஊழ் வலியை விடப் பெரியது எது என்றுதான் கேட்கிறார். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்றுதான் சொல்கிறார். இவர்கள் எல்லாரும் சொன்ன ஒரு விஷயம் எப்படித் தவறானதாக இருக்க முடியும்?

இதில் இன்னும் வேடிக்கை என்னவென்றால், புலால் உண்ணக்கூடாது… மது அருந்தக் கூடாது… என்று சொல்லும் பிராமணரை விமர்சிப்பார்களாம். ஆனால், அதையே சொல்லும் வள்ளுவரையும் புத்தரையும் கொண்டாடுவார்களாம். பெண்களை ஆணுக்குக் கட்டுப்பட்டு நடக்கச் சொல்கிறார் என்று மனுவைத் திட்டுவார்களாம். அதையே வள்ளுவர் சொல்லும்போது அவரைப் போற்றுவார்களாம். ஆனால், எளிய மனிதர்கள் நேர்மையானவர்கள். இந்த அசட்டு முற்போக்குத்தனம் அவர்களுக்குக் கிடையாது. அதனால்தான் மேலே சொன்ன மதிப்பீடுகளை முறையாகப் பின்பற்றிய பிராமணர்களை கடந்த காலத்தில் அனைத்துத் தரப்பினரும் மதித்துப் போற்றிவந்திருக்கிறார்கள். முற்பிறவி, கர்மவினை என்பதை சதித்திட்டத்தின் அங்கமாகப் பார்க்கவில்லை. வாழ்க்கையின் வழுக்கல் நிறைந்த பகுதிகளைக் கடக்கப் பயன்பட்ட ஊன்றுகோலாகவே ஒழுக்கமுடையாரின் அந்த வாய்ச்சொற்களைக் கருதி வந்திருக்கிறார்கள்.

jogi women meetingஅகால மரணம், நோய்கள் போன்றவையெல்லாம் ஏழை பணக்காரன், உயர்சாதி, தாழ்ந்த சாதி என்றெல்லாம் பார்த்துவருவதில்லை. மேலோட்டமான வித்தியாசங்கள் நீங்கலாக வாழ்க்கையின் பெரும்பாலான அம்சங்கள் இரு தரப்புக்கும் பொதுவானவையே. பச்சிளம் குழந்தையைப் பறிகொடுத்துத் தவிக்கும் ஒரு தாயிடம் “அந்தக் குழந்தையின் கர்மவினைகள் தீர்ந்துவிட்டன. அதைத் தெய்வம் தன் அருகில் அழைத்துக்கொண்டிருக்கிறது’ என்று சொல்ல ஒரு பிராமணன் தேவைப்பட்டான். மருத்துவ அறிவு வளர்ந்திருக்காத காலகட்டத்தில், வாழ்க்கை நிகழ்வுகளை அதன் போக்கிலேயே எதிர்கொள்ளும் வலிமை இல்லாத ஒருவருக்கு அந்த வார்த்தைகள் தந்த மன நிறைவை நம்மால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது.

இந்த உயரிய கோட்பாடுகளை லவுகீக ஆதாயங்களுக்காகவும் சமூக அநீதிகளுக்கு ஆதாரமாகவும் பயன்படுத்தும் ஒருவன் கண்டிக்கத் தக்கவனே… வீட்டைக் கொளுத்தும் தீயைக் கட்டாயம் அணைக்க வேண்டும். வேள்வித் தீயைக் கொழுந்துவிட்டு எரியத்தான் செய்ய வேண்டும். ஆனால், திருவண்ணாமலை தீபத்தைப் பார்த்ததும் அரோகரான்னு கன்னத்துல போட்டுக்கிறியே… வீடு தீப்பிடிச்சு எரிஞ்சா ஏண்டா லபோ திபோனு கத்தற..? என்பதுதான் நம் தமிழக பகுத்தறிவின் தர்க்க லட்சணம். டாக்டர் ஆப்பரேஷனுக்கு வயித்துல கத்தியை வைக்கும்போது மட்டும் பேசாம இருக்கியே… திருடன் வயித்தைக் கிழிச்சா ஏண்டா கத்தற..? என்று கேட்பது போன்ற அபத்தம் இது. தெய்வ நம்பிக்கை எப்படிப் பலரால் பகுத்தாராயாமல் ஏற்றுக்கொள்ளப்படுகிறதோ அதுபோலவேதான் நாத்திகமும் இங்கு உள்வாங்கப்பட்டிருக்கிறது. அதற்குத் தமிழகம் கொடுத்துவரும் விலை கொஞ்சநஞ்சமல்ல.

0

 

3% நன்னீர்… 97% உவர் நீர்

மறைக்கப்பட்ட இந்தியா/ அத்தியாயம் 26

7325544672_7afdaa2e0e_zபெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளில் பெரும்பாலானவை தாசிகளுக்கு எதிராகக் குடும்பப் பெண்கள் உருவாக்கிக் கொண்டவையே. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இன்றைய பெண்ணியவாதிகள் பெண்களின் ஒடுக்குமுறைகளாகச் சொல்லும் விஷயங்களில் பெரும்பாலானவை (உடல் தெரியும்படி ஆடை அணியக்கூடாது, இரவில் தலை வாரிக் கொள்ளக் கூடாது, அடக்க ஒடுக்கமாக நடந்துகொள்ளவேண்டும், வாசலில் நின்று வேடிக்கை பார்க்கக் கூடாது என்பன போன்றவை) தாசிகளின் வழிமுறைகளாக இருப்பதைப் பார்க்க முடியும். அந்த ’ஒடுக்குமுறைகள்’ எல்லாம் அன்றைய குடும்பப் பெண்கள், தாசிகளுக்கு எதிரான வழிமுறைகளாக விரும்பி ஏற்றுக்கொண்டவையே.

சத்தம் போட்டுச் சிரிக்கக் கூடாது என்று சொல்லப்படுவதை இன்றைய பெண்கள் சுதந்தர மறுப்பாகப் பார்க்கக்கூடும். அன்றைய பெண்கள், “நானென்ன தாசியா… ஊரே திரும்பிப் பார்க்கிற மாதிரி சிரிக்க’ என்றுதான் கேட்டிருப்பார்கள். பெந்தகோஸ்தே போல் பூவும் பொட்டும் வைத்துக் கொள்ளக்கூடாது… வெள்ளை உடை மட்டுமே அணிய வேண்டும் என்ற கெடுபிடிகளோ உடல் முழுவதையும் கறுப்பு ஆடையால் மூடிக்கொள்ள வேண்டும் என்ற ஒடுக்குமுறையோ நிச்சயம் இருந்திருக்கவில்லை. இந்து மதத்தைப் பொறுத்தவரையில் இன்று ஒடுக்குமுறையாகப் பார்க்கப்படுபவற்றில் பல அன்றைய பெண்கள் தங்கள் கழுத்தில் பெருமிதத்துடன் அணிந்துகொண்ட தங்கச் சங்கிலிகளாகவே இருந்திருக்கும், கழுத்தை நெரிப்பவையாக அல்ல.

சூத்திரர்களுடைய வாழ்க்கை தொடர்பாகச் சொல்லப்படும் பெரும்பாலான ஒடுக்குமுறைகளும் இப்படியானவையே. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

சூத்திரர்களிடம் நிலம் இருந்திருக்கவில்லை என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டாகச் சொல்லப்படுவதுண்டு. பிற்படுத்தப்பட்டவர்கள், தலித் என்ற இரண்டு பிரிவுகளை உள்ளடக்கிய சூத்திரர்களில் பலரிடம் நிலம் இருந்ததற்குப் பல சரித்திரச் சான்றுகள் இருந்தபோதிலும் அவர்களிடம் நிலம் இல்லை என்பதுதான் பொதுவாக நம்பப்படும் அல்லது நம்ப விரும்பப்படும் உண்மையாக இருக்கிறது. பிரிட்டிஷார் எழுதி வைத்திருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் பார்த்தால் அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றிய காலகட்டத்தில் பெரும்பாலான அரசர்களாக சூத்திரர் பிரிவைச் சேர்ந்தவர்களே இருந்திருக்கிறார்கள். மனு ஸ்மிருதியில் சூத்திரர் அரசாளும் நாட்டில் பிராமணர் இருக்கக்கூடாது என்று எழுதப்பட்டிருப்பதாகச் சொல்வார்கள். ஆனால், நடைமுறையில் முழுக்க முழுக்க நேர்மாறாகவே இருந்திருக்கிறது.

DSCN3290உணவு தொடர்பாகச் சொல்லும்போது சூத்திரர்களுக்கு நெல்லுச் சோறு என்பதைப் பெரிதும் விசேஷ நாட்களில் மட்டும்தான் கண்ணால் பார்க்க முடியும் என்று அதைப் பெரிய வறுமையின் அடையாளமாகச் சொல்வார்கள். விஷயம் என்னவென்றால், நன்செய், புன்செய் பயிர் வகைகளில் கம்பு, சோளம், தினை, சாமை முதலான பெரும்பாலான உணவுப் பயிர்கள் எல்லாமே முழுக்க முழுக்க சூத்திரர்களின் உபயோகத்தில் இருந்தவையே. அந்த தானியங்களைக் கொண்டு ஏராளமான உணவுப் பொருட்களைத் தயாரிக்கவும் முடிந்தது. அந்த உணவுகள் சுவையிலும் சத்திலும் நன்செய் பயிர்களைவிட பல மடங்கு உயர்வானவை. இன்றைய மருத்துவ உலகம் அரிசியை மிகவும் அபாயமான உணவாகவே முன்வைக்கிறது. கேப்பை மிகவும் சத்தானது. இன்றைய ஹார்லிக்ஸ், போர்ன்விட்டாவைவிடவும் கேப்பையில் உருவாக்கப்படும் பானங்கள் சத்தானவை என்று இன்றைய மருத்துவ உலகம் தெரிவிக்கிறது. பழைய சோற்றில் நொதித்தல் வினை நடப்பதன் மூலம் சூடாகச் சாப்பிடும் உணவை விட அதிக சத்துகள் உருவாவதாக இன்றைய மருத்துவ உலகம் தெரிவித்திருக்கிறது. இன்று ஐந்து நட்சத்திர விடுதிகளில் அலங்காரத் தட்டுகளில் பரிமாறப்படும் காளான்கள், நண்டு வகைகள் எல்லாம் தலித்கள் காலகாலமாக இலவசமாக உண்டுவந்தவையே. அசைவ உணவு என்ற பிரிவு முழுக்க முழுக்க சூத்திரர்களின் கோட்டையாகவே இருந்திருக்கிறது.

சூத்திரர்கள் உண்டுவந்த கீரைகளில் இல்லாத சத்துக்களே இல்லை. மணத்தக்காளி கீரை, முருங்கைக்கீரையில் ஆரம்பித்து அரைக்கீரை, சிறு கீரை வரை ஏராளமான கீரைவகைகள் பெரிதும் சூத்திரர்களின் கைக்கு எட்டியவையாகவே இருந்திருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் எந்த பெரிய விவசாய நிலமும் தேவையே இல்லை. வேலியோரங்களிலும் வீட்டைச் சுற்றிய சிறு சிறு இடங்களிலும் வளர்க்க முடிந்தவையே. பூமிக்குக் கீழே விளையும் கிழங்குவகைகள் முழுக்க முழுக்க கடின உழைப்பில் ஈடுபட்டுவந்த சாதியினரின் பயன்பாட்டிலேயே இருந்திருக்கின்றன. பிராமணர்களால் கிழங்குவகைகள் விலக்கப்பட்டதற்கான காரணம் அவற்றைச் செரிக்க கடின உழைப்பு தேவைப்படும் என்பதுதான். அவை முழுக்க முழுக்க சூத்திர்களின் உணவாகவே இருந்திருக்கின்றன.

img_2092cபிராமணர்களின் விஸ்தாரமான உணவு வகைகளைப் பார்க்கும்போது வெறும் செல்வச் செழிப்பை மட்டுமே அது காட்டவில்லை. உடல் உழைப்பு குறைவாக இருந்ததால், உணவு ருசிக்காமல் இருந்திருக்கிறது. எனவேதான் வலுக்கட்டாயமாக உணவை ருசிப்படுத்திக் கொள்வதற்காக எதையெல்லாமோ செய்து பார்த்திருக்கிறார்கள். உண்மையில் சுவை என்பது ஆறேதான். ஒரு மடப்பள்ளியில் இடுப்பு வேட்டியை நெகிழ்த்திக் கொண்டு இலையின் ஒரு கோடியில் இருந்து மறு கோடி வரை பதார்த்தங்களை அடுக்கி வைத்து முழங்கை வரை நக்கியபடி பிராமணர்கள் சாப்பிட்ட சாப்பாடு அவர்களுக்கு என்ன சந்தோஷத்தைத் தந்திருக்குமோ அதே சந்தோஷம் களத்து மேட்டில் மரத்தடியில் துவையலையும் பச்சை மிளகாயையும் வெங்காயத்தையும் உப்புக் கல்லுடன் கடித்துக் கஞ்சி குடித்த சூத்திரருக்கும் கிடைத்திருக்கும். அதிலும் பிராமணர்கள் போஜனப் பிரியர்கள் என்பது உண்மைதான் என்றாலும் பிராமணர்களின் விருந்துச் சாப்பாடு பற்றி மிகையாகவே சொல்லப்பட்டிருக்கிறது. வெறும் இரசத்துடன் உப்பு நார்த்தங்காயைத் தொட்டுக்கொண்டு சாப்பிட்டுக் கழித்த நாட்களே அதிகமாக இருக்கும்.

ஒரு மனிதர் உட்கொள்ளும் உணவைப் பற்றிப் பேசும்போது அதில் எத்தனை சதவிகிதம் சக்தியாக மாறுகிறது என்பதையும் சேர்த்துப் பார்க்கவேண்டும். உடல் உழைப்பில் ஈடுபட்டவர்கள் உண்ணும் உணவில் 80 சதவிகிதத்துக்கு மேல் சக்தியாக மாற்றப்படும். உடல் உழைப்பு குறைந்தவர்களின் உணவானது சுமார் 40-50 சதவிகிதம் மட்டுமே சத்தாக உடலில் சேரும். புத்த பிட்சுகளின் உடலானது ஒரு நேர உணவில் இருந்தே ஒரு நாள் முழுவதும் தாங்கும் சக்தியை உருவாக்கும் வலிமை கொண்டதாக இருக்குமாம். அவரைப் பார்த்து நாளொன்றுக்கு ஒரு நேரம் தான் சாப்பிடுகிறார். ஐய்யோ பாவம் என்று சொன்னால் அதுபோல் பிழை வேறெதுவும் இருக்காது. உடல் உழைப்பில் ஈடுபட்டவர்களுக்குக் கிடைத்த உணவு போதுமானதாக இருந்ததா என்பதை அவர்களுடைய உடல் ஆரோக்கியத்தையும் எத்தனை வயது வரை வாழ்ந்தார்கள் என்பதையும் மையமாக வைத்தும் பார்க்க வேண்டும்.

பிராமணர்கள் எத்தனை வயதுவரை ஆரோக்கியமாக வாழ்ந்தார்களோ அதற்கு சற்றும் குறையாமல் இன்னும் சொல்லப்போனால் அதை விடக்கூடுதலாகவே சூத்திரர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஏழெட்டு குழந்தைகள் பிறந்து அதில் இரண்டு மூன்று இறந்துவிடும் என்பது எல்லா சாதியிலும் நிகழ்ந்த ஒரு விஷயமே.

நன்செய் பயிர்களிலும்கூட சூத்திரர்களுக்கு சொந்தமாக நன்செய் நிலங்கள் இருந்திருக்கின்றன. அவர்களில் பலர் குத்தகைதாரர்களாகவும் இருந்திருக்கின்றனர். ஊடு பயிராகத் தங்களுக்கு தேவையான தானியங்களை விளைவித்திருக்கிறார்கள். நெல் அறுவடையான பிறகு உளுந்து போன்ற தானியங்களைப் பயிரேற்றி, தங்கள் சொந்தப் பயன்பாட்டுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். எங்களுக்கு நிலமே இல்லை என்ற வாக்கியத்தில் இருக்கும் வேதனைக்கும் இவற்றுக்கும் இடையில் ஏராளமான இடைவெளி உண்டு. விவசாயக் கூலித் தொழிலாளர்களை எடுத்துக்கொண்டால்கூட அவர்களுக்குக் கிடைக்கும் கூலியானது அடுத்த அறுவடை வரையான வாழ்க்கையை நிம்மதியாகக் கழிப்பதற்குப் போதுமானதாகவே இருந்தது.

f64d2838-cf3a-455c-985a-644f6b0e74ff_S_secvpfபெரும்பாலான முற்போக்காளர்கள் கடந்த கால விவசாயக் கூலியைப் பற்றிச் சொல்லும்போது ஒரு எஜமானரின் வயலில் பணிபுரிவதால் கிடைக்கும் தொகையை மட்டுமே சொல்லிக்காட்டுவார்கள். உண்மையில் ஐம்பது – நூறு ஏக்கர் நிலத்தைச் சுற்றிய பகுதியில் வசிப்பவர்கள் அனைத்து எஜமானர்களின் வயல்களில் நடக்கும் அறுவடையிலும் பங்கெடுப்பார்கள். அந்த நிலத்தில் விளையும் ஒட்டு மொத்த தானியங்களிலும் குறிப்பிட்ட அளவு கூலியாகக் கிடைக்கும். இது ஒருவகையில் ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் வேலை செய்வதைப் போன்றது. அதோடு சம்பளத்தை முன் பணமாகப் பெறுவதுபோல் அவ்வபோது தேவைப்படும் தானியங்களைப் பெற்றுக் கொள்வதும் உண்டு. அவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், ஆண்டு முழுவதும் உழைத்தாலும் எந்த சம்பளமும் கிடைக்காது என்றுதான் போராளிகள் சொல்லிவருகிறார்கள்.

ஒரு ஏக்கர் நிலத்தில் பத்து பேர் வேலை செய்கிறார்கள். பத்து மூட்டை நெல் விளைகிறது என்றால் ஆளுக்கு ஒரு மூட்டை தரவேண்டும் என்பது மிகவும் நியாயமான எதிர்பார்ப்புதான். ஆனால், ஒருவர் ஐந்து மூட்டையைத் தானே எடுத்துக்கொள்கிறார். எஞ்சிய 9 பேருக்கு வெறும் ஐந்து மூட்டை மட்டுமே கிடைக்கிறது என்பது மேலோட்டமாகப் பார்க்கும்போது அநீதியாகவே தோன்றும். ஆனால், அந்த ஒன்பது பேருக்கு அது போதுமானதாக இருக்குமென்றால் அதில் பெரிய தவறு இல்லை. வேறு பல இடங்களில் பணி செய்து அவர்களுக்கு மேலும் நெல் கிடைக்குமென்றால் அந்த கூலி அமைப்பு மிகவும் நியாயமானதுதான் (கலைஞர் டி.வி. நாளொன்றுக்கு ஒரு கோடி சம்பாதிக்கக்கூடும். ஆனால், பணியாளருக்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் தருமென்றால் அந்த ஆயிரம் ரூபாயில் அவரால் ஒரு குடும்பத்தை நன்கு கவனித்துக் கொள்ளமுடியுமென்றால் அதில் எந்தத் தவறும் இல்லை அல்லவா).

முழு நேர விவசாயத் தொழிலாளியாக இருக்காத சலவைத் தொழிலாளி, குயவர், சிகை அலங்காரத் தொழிலாளி போன்ற பிற அனைத்து தொழிலாளர்களுக்கும் இந்த அனைத்து நில உடமையாளர்களிடமிருந்து வருடந்தோறும் போதுமான அளவு நெல்லும் பிற தானியங்களும் கிடைக்கத்தான் செய்தன.

இவை தவிர வேட்டை, மீன் பிடித்தல், ஆடு, மாடு, கோழி வளர்ப்பு என உணவுத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள ஏராளமான வழிகள் இருந்தன. அதிலும் ஓய்வு நேரம் மிகுதியாக இருந்த கடந்த கால வாழ்க்கையில் வேட்டையும் மீன் பிடித்தலும் பிரதான உப தொழில்களாக இருந்திருக்கின்றன. சூரிய ஒளியில் காய வைத்து உணவைப் பதப்படுத்தி வைப்பதில் கடந்த காலத்து மனிதர்கள் கை தேர்ந்தவர்களாக இருந்தனர். ஓரிடத்தில் நில்லாமல் நாடோடி வாழ்க்கை வாழ்ந்த கீதாரிகள் கூட போகுமிடமெல்லாம் இருக்கும் பாறைகளில் மாமிசத் துண்டுகளைக் காய வைத்தும் கிடை போடும் இடங்களுக்கு அருகில் கத்தரி, மிளகாய் போன்ற சிறு சிறு செடிகளை வளர்த்தும் தங்கள் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துகொண்டிருக்கின்றனர்.

கடந்த காலத்தில் விவசாய வேலைகள் மிகவும் ஆற அமரச் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. இன்றுபோல் வியாபார வழித்தடங்களும் பிற வாகன வசதிகளும் அதிகம் இருந்திருக்கவில்லை. எனவே, ஒரு மாவட்டத்தில் உற்பத்தியாவதில் கணிசமான பங்கு அந்த மாவட்ட மக்களாலேயே பயன்படுத்தப்பட்டன. பணி நேரம் என்பது பெரிதும் அதிகாலையில் ஐந்து மணிக்கு ஆரம்பித்து பத்து மணியோடு முடிந்துவிடும். பிரிட்டிஷ் ஆட்சியை ஒட்டி ஜமீந்தார்களின் உருவாக்கம் நடைபெற்ற பிறகுதான் பணி நேரம் அதிகரித்தது. அதிலும் தொழிற்சாலைகள் உருவான பிறகுதான் காலை முதல் மாலை வரை வேலை என்பது நடைமுறைக்கு வந்திருக்கிறது. அதற்கு முன்பு வரை வெய்யில் அதிகமாக இருக்கும் நேரங்களில் வீட்டுக்குள் அல்லது மரத்தடிகளில் ஓய்வாக பல்வேறு விளையாட்டுகளில் நேரத்தைக் கழிப்பதே வழக்கமாக இருந்திருக்கிறது. ஆண்டு முழுவதும் வேலை இருக்காது. பெரிதும் அறுவடைக்காலத்தில் மட்டுமே கடுமையான வேலைகள் இருக்கும். எஞ்சிய நேரங்களில் எல்லாருமே அவரவர்க்குப் பிடித்தமான செயல்களில்தான் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.

அம்பேத்கார் போன்றவர்கள் தலித்களைப் பற்றிச் சொல்லும்போது ஆறு கோடிபேரும் இரவானால் தட்டேந்தியபடி தெருத்தெருவாகப் பிச்சை எடுத்துத்தான் சாப்பிட்டதாகவும் மாட்டுச் சாணத்தில் செமிக்காமல் இருக்கும் நெல்லைக் கழுவி எடுத்துத்தான் சாப்பிட்டதாகவும்தான் சொல்கிறார்கள். நிலங்கள் எல்லாம் மேல் சாதியினரிடம் இருந்ததால் இந்தியாவில் பஞ்சங்கள் ஏற்பட்டு ஏழை மக்கள் கூட்டம் கூட்டமாகச் செத்து மடிந்ததாகச் சொல்கிறார்கள். பிரிட்டிஷாரின் ஏற்றுமதிக் கொள்கைகளினாலும் பணப்பயிர் விவசாயத்தாலும்தான் இந்திய மக்கள் பஞ்சத்தில் இறக்க நேரிட்டது… அதிலும் மக்கள் தாற்காலிகமாக கிராமங்களை விட்டு இடம் பெயர்ந்து சென்றதைத்தான் இறந்து போனதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள் என்பது போன்ற உண்மைகளை எடுத்துச் சொல்பவர்கள் மிகவும் குறைவே.

கடந்த காலத்தில் இரு பிறப்பாளர்கள், குறிப்பாக, பிராமணர்கள் சொர்க்கத்தில் வாழ்ந்ததாகவும் பிறர் நரகத்தில் வாழ்ந்ததாகவும்தான் பெரும்பாலான அரசியல் ஆசான்கள் முழங்கிவிட்டுப் போயிருக்கிறார்கள். வேறென்ன… இந்தப் பூவுலகில் 3% தானே நன்னீர். 97% உவர் நீரால்தானே சூழப்பட்டிருக்கிறது.

ஆணாதிக்கமும் பெண்ணுரிமையும்

8185828679மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 25

‘ஆணாதிக்கக் கருத்துகளும் வர்ண (சாதி) ஆதிக்கக் கருத்துகளும் கொண்டது’ என்பதுதான் மனு ஸ்மிருதி மீது வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டு. ஆணாதிக்க மனோபாவமும் சாதி அல்லது வர்க்கம் சார்ந்த ஏற்றத்தாழ்வும் எல்லா சமூகங்களிலும் இயல்பாக இருந்த ஒன்றுதான். பழங்குடி சமூகங்கள் மொழி, தேசம், இனம், மதம் என எந்த அடையாளத்தின் கீழ் அணிவகுத்த போதிலும் இந்த உணர்வுகளே எல்லா சமூகங்களிலும் ஆதாரமாக இருந்திருக்கின்றன. இந்து சாதிய வாழ்க்கையைப் பார்த்த மேற்கத்தியர்கள் இங்கு நிலவும் ஆணாதிக்க, சாதிய ஏற்றத் தாழ்வுகளைப் பிற இடங்களில் நிலவும் அத்தகைய மனோபாவத்தோடு பொருத்திப் பார்த்து ‘மனித இயல்பு இப்படியாகத்தான் இருக்கிறது. நவீன உலகுக்குள் நுழையும்போது இவற்றில் பெரும்பாலானவை காலத்துக்கு ஏற்ப மாறும்’ என்ற புரிதலுடன் அணுகியிருந்தால் இந்து சாதிய வாழ்க்கைபற்றிய அவர்களுடைய மதிப்பீடுகள் வேறாக இருந்திருக்கும்.

குறைந்தபட்சம் இந்தியாவில் இருந்து தோன்றிய அரசியல், சமூக சிந்தனையாளர்களாவது இந்து சாதிய வாழ்க்கையை மனித குலத்தின் பிற சமூக வாழ்க்கை முறைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து ஒரு நியாயமான முடிவை எடுத்திருந்தால் இந்து சாதிய வாழ்க்கை இந்த அளவுக்கு இழிவானதாக அவர்களுக்குத் தோன்றியிருக்காது. ஆனால், துரதிஷ்டவசமாக சாதிய வாழ்க்கை குறித்த அப்படியான ஒரு மதிப்பீடு உருவாகியிருக்கவில்லை.

மேற்கத்தியர்கள் இந்தியாவில் நிலவிய ஆணாதிக்க, சாதிய உணர்வுகளை இந்து உயர் வர்க்கத்தினரின் சதியாகக் காட்ட விரும்பினார்கள். அதற்கு அவர்களுக்கு ஒரு ‘வேத புத்தகம்’ தேவையாக இருந்தது. அப்படியான ஒன்றாக மனு ஸ்மிருதியை உருவாக்கி எடுத்தார்கள். மனு ஸ்மிருதி மூலம் கிடைத்த மத (?) அங்கீகாரமே பெண்களுக்கும் சூத்திரர்களுக்கும் எதிராக நடத்தப்பட்ட அனைத்து தீங்குகளுக்கும் தார்மிக வலுவைத் தந்ததாக அவர்கள் புதிய கண்டுபிடிப்பை முன்வைத்தனர். இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களை அவர்கள் பார்த்திருந்ததால், இந்தியாவிலும் அப்படியான ஒரு பெரிய மத அமைப்பு இருந்திருக்கவேண்டும்; அதுதான் இவை அனைத்தையும் செய்திருக்கவேண்டும் என்று சொல்ல விரும்பினார்கள். அப்படியாக, இந்து மதம் என்று ஒற்றைப்படையான மதத்தையும் மனு ஸ்மிருதியை அதன் மூல நூலாகவும் தங்களுடைய தேவைக்கு ஏற்ப உருவாக்கிக்கொண்டார்கள். அதை வழிமொழிந்தபடி நம் தேசத்தில் பலர் முளைத்தெழுந்தனர்.

அவர்களில் மிக முக்கியமானவர் அம்பேத்கர். அவரைப் பொறுத்தவரை இந்திய வரலாறென்பது பெருமளவுக்கு பவுத்த – பிராமணப் போராட்டமே. இஸ்லாமியர்களால் இந்து சமூகத்துக்கு ஏற்பட்டதைவிட அதிக அழிவு பவுத்த இந்தியாவுக்கு பிராமணர்களால் வந்தது என்று கூறுகிறார். சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் பவுத்தம் அதிக முக்கியத்துவம் தந்ததால் அவர்கள் இருவரையும் பிராமண மதம், மனு ஸ்மிருதியை உருவாக்கிக் கட்டம் கட்டித் தாக்கியதாகச் சொல்கிறார் (மது, மாமிசத்தை அறவே விலக்கச் சொன்ன பவுத்தம் சூத்திரர்களுக்கு எந்த அளவுக்கு உவப்பாக இருந்திருக்கும் என்பதும், துறவை லட்சியமாக வைத்த பவுத்தம் பெண்களுக்கு என்ன விடுதலையைத் த்ந்திருக்கும் என்பதும் அம்பேத்காருக்கு மட்டுமே தெரிந்த உண்மை).

அப்படியாக உலகின் பிற இடங்களில் இயல்பாக இருந்த ஒரு விஷயம் இந்தியாவில் இருந்ததற்கு ஒரு குறிப்பிட்ட பிரிவின் சதிதான் காரணம் என்ற புதிய கோட்பாடு வெகு உற்சாகமாக உருவாக்கப்பட்டது. இது உண்மையாக இருந்திருக்குமென்றால், பெண்களும் சூத்திரர்களும் கைகோத்திருந்தால் இருவருமே ‘விடுதலை’ அடைந்திருக்க முடியும். எண்ணிக்கையில் அவர்களே மிகவும் அதிகம். ஆனால், அப்படியான ஒன்று நடக்கவில்லை. ஏனென்றால், அவர்கள் தம்முடைய நிலையை நம் இன்றைய முற்போக்காளர்கள் சொல்வதுபோல் வேதனை நிறைந்ததாக நினைத்திருக்கவில்லை. சிறையில் இருந்தால்தானே விடுதலையைப் பற்றி யோசிக்க முடியும்.

சொத்துரிமை இல்லை; விரும்பிய வேலையைச் செய்யும் சுதந்தரம் இல்லை; சமையல், குழந்தை பராமரிப்பு என வீட்டுக்குள்ளேயே முடங்க நேர்ந்துவிட்டது; விரும்பிய ஆணைத் திருமணம் செய்துகொள்ள முடியவில்லை; கணவன் இறந்தால் மறுமணம் செய்துகொள்ள வழியில்லை… என பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகப் பல விஷயங்களை மனு ஸ்மிருதியைக் காரணம் காட்டிப் பட்டியலிடுவார்கள். இவை எந்த அளவுக்கு உண்மை என்பதையும் மனு ஸ்மிருதி எப்படியான தாக்கத்தைச் செலுத்தியது என்பதையும் பார்ப்போம்.

முதலாவதாக, மனு ஸ்மிருதியில் சொல்லப்பட்டிருக்கும் பெரும்பாலான ஒடுக்குமுறைகள் இரு பிறப்பாளர்களுக்கு அதாவது பிராமண, சத்ரிய, வைசிய ஜாதிப் பெண்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டவையே. சூத்திரர் பிரிவில் வரும் பெண்கள் ஒப்பீட்டளவில் சுதந்தரமானவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அதாவது, மனு ஸ்மிருதியில் சொல்லப்பட்டிருப்பவற்றுக்கு உட்படாதவர்களாகவே இருந்திருக்கிறார்கள். விவாகரத்து, பல புருஷ விவாகம் போன்றவற்றில் ஆரம்பித்து சதி கொடுமையில் ஈடுபடுத்தப்படாததுவரை சூத்திர ஜாதிப் பெண்கள் மேலான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். தொழில் சார்ந்து வெளியில் செல்வது சகஜமாக இருந்திருக்கிறது. விவசாயத்தில் ஆரம்பித்து சலவைத் தொழில், மண் பாண்டங்கள் செய்தல் எனப் பெரும்பாலான தொழில்களில் சூத்திர ஜாதிப் பெண்கள் ஆணுக்கு சமமாகப் பங்கெடுத்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

கணவனை இழந்த இளம் பெண்களுக்கு மறுமணம் செய்துவைக்கவில்லை என்பது பெண்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாகச் சொல்லப்படுகிறது. உண்மையில் இது பிராமண ஜாதியில் மட்டுமே அதிகமாக இருந்திருக்கிறது. அவர்களிலும் திருமணம் செய்து கொண்டவர்களில் இளம் வயதில் கணவனை இழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தில் இருந்து பத்து சதவிகிதம் இருக்கலாம். பிராமணர்களின் எண்ணிக்கையே ஒட்டு மொத்த பெண்களின் விகிதத்தில் மூன்றுக்கு அதிகம் இருக்காது. அந்த மூன்று சதவிகிதத்தில் வெறும் பத்து சதவிகிதம் என்பது ஒட்டுமொத்த பெண்களின் விகிதத்தை எடுத்துப் பார்க்கும்போது மிக மிகக் குறைவாகவே இருக்கும். மறுமண மறுப்பு மிகவும் கொடூரமானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், புறக்கணிக்கத் தகுந்த அளவிலான பெண்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதியை ஒட்டுமொத்த இந்தியப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட ஒன்றாக பூதாகரமாக்கியதில் எந்த நியாயமும் இல்லை.

மேலும், இளம் பெண்ணுடைய கணவன் இறந்துவிடுவதால் ஒரு பிராமணக் குடும்பத்தில் மறுமணமே செய்துவைக்காமல் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அந்தப் பெண் சூத்திர ஜாதியைச் சேர்ந்த ஒருவரிடம் நீங்கள் என்னை மணந்து கொள்வீர்களா என்று கேட்டிருந்தால் வைதவ்ய சோகத்தில் இருந்து அவர் எளிதில் வெளியேறியிருக்க முடியும். சூத்திரர் குலமும் அடைக்கலம் கேட்டு வந்த பெண்ணைத் தன் தலைக்கு மேல் வைத்து தாங்கியிருக்கும். பிராமணப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதன் மூலம் சூத்திரரும் தன்னம்பிக்கை அதிகம் பெற்று சுய மரியாதை மிகுந்தவராக வெகு எளிதில் மேல் நிலை அடைந்திருக்க முடியும். பிராமண எதிர்ப்பெல்லாம் சூத்திரர்களின் வலிமைக்கு முன்னால் ஒன்றும் செய்திருக்க முடியாது. எனவே, இங்கும் சிறையின் சாவி அடைபட்டுக் கிடந்தவரின் இடுப்பில்தான் இருந்திருக்கிறது.

பெண்களுக்கு இறை வழிபாட்டுச் சடங்குகளில் கணிசமான முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. வேதம், காயத்ரி மந்திரம் போன்ற ஒரு சிலவற்றைத் தவிர பிற வழிபாடு சார்ந்த ஸ்லோகங்கள், பாடல்கள் கற்றுக்கொள்ள பிராமணப் பெண்களுக்கு எந்தத் தடையும் இருந்திருக்கவில்லை. தாய்த்தெய்வ வழிபாட்டில் முளைப்பாரி எடுப்பதில் ஆரம்பித்து, பால் குடம், தீ மிதித்தல் என அனைத்திலும் பெண்களுக்கு சிறப்பான இடம் இருக்கத்தான் செய்திருக்கிறது. அதோடு இல்லறத்தில் இருக்கும் எந்தவொரு ஆணும் தன் மனைவி இல்லாமல் எந்தவொரு சடங்கையும் செய்ய அனுமதி கிடையாது. மனு ஸ்மிருதி பெண்களை எதிலும் ஒதுக்கவில்லை.

பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை என்று ஒரு குற்றச்சாட்டு சொல்லப்படுவதுண்டு. பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கும்போது திருமணச் செலவுகளோடு, வரதட்சணை, சீர் வரிசை என கணிசமான தொகை பெண்ணுக்குத் தந்து அனுப்பப்படும். அது கணவன் கைக்குத்தான் போகிறது என்றாலும் தந்தையைப் பொறுத்தவரையில் அவர் தன் மகளுக்கு சொத்தில் ஒரு பகுதியைக் கொடுத்து அனுப்பத்தான் செய்கிறார். நகையாகத் தரப்படுவதை அந்தப் பெண்தான் அணிந்துகொள்கிறாள். நிலமாகவோ பணமாகவோ பிற வழிகளில் வந்து சேர்வதையும் அவள் அனுபவிக்கத்தான் செய்கிறாள். எனவே, சொத்தில் உரிமையே இல்லை என்று நிச்சயம் சொல்ல முடியாது.

இங்கு நாம் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். அடிப்படை உரிமைகள் என நவீன உலகைச் சேர்ந்த நாமாக ஒன்றை உருவாக்கி நிலைநிறுத்திக் கொள்வதைவிட மனித இனம் தனது இயல்பான நகர்வில் எதைக் கண்டடைந்திருக்கிறதோ அதையும் கருத்தில் கொள்ளவேண்டும். நடந்து செல்லும்போது வழியில் ஒரு மேடு இருந்தால் அதில் ஏறிக் கடப்பது ஒருவகை. அதைச் சுற்றி வளைந்து செல்வது இன்னொருவகை. இரண்டில் எது சரி என்பது ஒவ்வொருவருடைய உள்ளார்ந்த இயல்பு சார்ந்தது. முதலாவதுதான் சரி… இரண்டாவது தவறு என்று சொல்வது எப்போதும் சரியாக இருப்பதில்லை. இயற்கையில் ஒருவித சமநிலை இருக்கவேண்டும் என்பதற்காக, சில உயிரினங்கள் தாவர உண்ணிகளாகவும் சில மாமிச உண்ணிகளாகவும் இருப்பதுபோல் சமூகச் செயல்பாடுகளில் ஆண்கள் வீட்டுக்கு வெளியிலான வேலைகளையும் பெண்கள் வீட்டுக்குள்ளான வேலைகளையும் பிரித்துக்கொண்டு செய்து வந்திருக்கிறார்கள். பெண்களுக்கு மிகவும் எளிதான வேலையே தரப்பட்டிருக்கிறது. அந்தவகையில் அது அவர்களுக்குக் கிடைத்த வரம்தான்.

அடிப்படையில் சமையல் தொழிலும் ஒருவகையான கலையே. அதிலும் சுவையான உணவின் மூலம் தன்னைச் சார்ந்திருப்பவர்களுக்குத் தரமுடியக்கூடிய சந்தோஷமானது வேறு எந்தக் கலைஞனுக்குக் கிடைக்கும் மன நிறைவுக்கும் பெருமிதத்துக்கும் சற்றும் குறையாததுதான். எனவே, சமையல், குடும்பப் பராமரிப்பு போன்ற பணிகள் பெண் மீது திணிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் விமர்சனங்கள் எல்லாமே கொஞ்சம் அதிகப்படியானவையே. எந்தவொரு செயலையும் செய்வதா… வேண்டாமா என்று தேர்ந்தெடுப்பதற்கான சுதந்தரம் ஒருவருக்கு இருக்கவேண்டுமென்பது மிகவும் நியாயமான எதிர்பார்ப்புதான். ஆனால், சுதந்தரம் இல்லை என்பதனாலேயே நம்மீது திணிக்கப்படும் ஒன்று நமக்குப் பெரும் சுமையாகிவிடுவதுமில்லை.

நமது உடல் நம்முடைய விருப்பத்தைக் கேட்டுத் தரப்பட்ட ஒன்றல்ல. நம்மில் சிலருக்குச் சிறகுகள் வேண்டும் என்ற ஆசை இருக்கலாம். இன்னும் சிலருக்கு நீரில் மூழ்கி வாழ ஆசை இருக்கலாம். மனித உடலில் கூட உயரமாக இருக்கவேண்டும். அழகாக இருக்கவேண்டும். ஆரிய நிறமாக, திராவிட நிறமாக இருக்கவேண்டும் என்று பல ஆசைகள் இருக்கக்கூடும். ஆனால், மனித உடலானது நம் விருப்பத்தின்படித் தேர்ந்தெடுக்க முடிந்த ஒன்றல்ல. அப்படியிருந்தும் நம்மீது திணிக்கப்படும் உடலை நாம் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு வாழவில்லையா? இயற்கை நமக்குக் கற்றுத் தந்திருக்கும் பாடத்தைப் பயன்படுத்தி சமூக விதிமுறைகளையும் ஒருவர் ஏற்றுக்கொண்டு வாழ முடிவெடுப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? அந்த வாழ்க்கை அவருக்கு வேதனை நிரம்பியதாகத்தான் இருந்தாகவேண்டுமா என்ன? இருப்பதை வைத்து வாழத் தெரிந்தவருக்கு இல்லாதது குறித்த ஏக்கம் இருக்காது.
மனு ஸ்மிருதியின் தாக்கம் பற்றிப் பேசும்போது இன்னொரு விஷயத்தையும் கணக்கில் கொள்ளவேண்டும். தமிழகத்தை எடுத்துக்கொண்டால் தென் மாவட்டங்களிலும் வட மாவட்டங்களிலும் பெண் சிசு கொலை என்ற கொடூரச் செயல் நடைபெற்றுவந்திருக்கிறது.

பெண் குழந்தைகளைப் பிறந்த உடனேயே கொன்றுவிடவேண்டுமென்று மனு ஸ்மிருதியில் எந்த இடத்திலும் சொல்லியிருக்கவில்லை. மனு ஸ்மிருதியில் பெண்களை இரண்டாம்பட்சமாக நடத்தியிருப்பதால்தான் தமிழகக் கிராமப்புறங்களில் இப்படிச் செய்துவிட்டார்கள் என்றும் சொல்ல முடியாது. பெண் குழந்தைகளைக் கள்ளிப் பால் ஊற்றியும் நெல் மணியைக் கொடுத்தும் கொன்றதெல்லாம் ஒரு பெண்தான். பெண் குழந்தை வேண்டாம் என்று சொல்பவர்களிடமிருந்து குழந்தை இல்லாத தம்பதியினர் தத்தெடுத்து வளர்த்து வந்திருந்தால் இந்தப் பிரச்னை எளிதில் தீர்ந்திருக்கும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. மேல் சாதியினரில் குறிப்பாக பிராமணர்களில் இது இல்லை என்பதால், பிரிட்டிஷ் மற்றும் அவர்களுடைய தாக்கத்தால் முற்போக்கு வாசகங்களை முழங்கியவர்களுடைய கடைக்கண் பார்வை இந்தத் தீய செயலின் மீது விழவே இல்லை.

பெண் குழந்தையைப் பிறந்த உடன் கொல்லும் ஒரு சமூக வழக்கமும் பெண்களை இரண்டாம்பட்சமாக நடத்தும் ஒரு புத்தகமும் நம்முன் இருக்கிறது. பெண்களின் பரிதாபமான நிலைதான் நமது விமர்சனத்தின் அடிப்படைக் காரணம் என்றால், நிச்சயம் பெண் சிசு கொலைதான் அதிதீவிரத்துடன் எதிர்க்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால், இந்தியப் பொதுபுத்தியில் அது தொடர்பான எந்தவொரு பெரிய சலனத்தையும் பிரிட்டிஷ் காலகட்டத்திலும் அதற்குப் பிறகும் நாம் பார்க்கவே முடிவதில்லை. ஆனால், மனு ஸ்மிருதியை எரிக்க இந்தியாவில் எந்த மூலைக்குப் போனாலும் ஒரு ரெடிமேட் கும்பல் தயாராகவே இருக்கிறது. பிராமண ஜாதி தன் தவறுகளைத் திருத்திக்கொண்டு செழுமை அடையப் பாடுபடும் முற்போக்காளர்கள் பிற ஜாதியினரை மேம்படுத்துவதிலும் கொஞ்சம் அக்கறை கொள்வது நல்லது.

பெண் குழந்தையைப் பிறந்த உடனே கொல்லும் அளவுக்குக் கொடூரமாக இருக்கும் ‘திராவிட’ சமூகம், பெண்களைக் கல்வி கற்க விடாமல் தடுக்க மட்டும் ‘ஆரிய’ ஸ்மிருதி ஒன்றின் அங்கீகாரத்துக்காகக் காத்துக் கொண்டிருந்திருக்குமா? இந்த இடத்தில் நாம் கேட்க வேண்டிய கேள்வி மனு ஸ்மிருதி ஏன் இங்கு அமலாகவில்லை? (மனு ஸ்மிருதியின் விதிமுறைகளைத் தவறாகப் புரிந்துகொண்டு அல்லது மிகையாக எடுத்துக்கொண்டு எதிர்வினையாற்றுபவர்கள் அதைவிடக் கொடிய ஒரு விஷயத்தை கண்டும் காணாததுபோல் தாண்டிச் செல்வதில் இருக்கும் அரசியலை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே இதை இங்கு குறிப்பிடுகிறேன்).

பெண்களை ஆண்கள் நடத்தும் விதத்தைப்பற்றிச் சொல்லும்போது அடிமைத்தனம் என்ற ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். அடிமையை நடத்துவதற்கும் தன்னைச் சார்ந்து இருப்பவர்களுக்கான முடிவுகளைத் தானே எடுப்பதற்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அடிமையை நடத்தும் விதத்தில் அடிமைக்கு துன்பம் விளைவிக்கும் தன்மையே அதிகமாக இருக்கும். பெண்களை ஆண்கள் நடத்திய விதத்தில் அப்படியான விளைவு மிக மிகக் குறைவாகவே இருக்கும். சர்வாதிகாரத்துக்கும் நல்லெண்ண சர்வாதிகாரத்துக்கும் இடையில் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. மகள் யாரைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற முடிவைத் தானாகவே எடுக்கும் தந்தை தனது அனுபவத்தின் அடிப்படையிலும் சமூக நிகழ்வுகளைப் பற்றிய கூடுதல் புரிதல் உள்ளவர் என்ற வகையிலும் பொறுப்பின் அடிப்படையிலும்தான் அதைச் செய்கிறார். இங்கே தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்ணுக்கு இல்லை என்பது ஒரு குறைதான் என்றாலும், தந்தை மூலம் அமைத்துத் தரப்படும் வாழ்க்கையானது அப்படியொன்றும் வாழ முடியாததாக இருப்பதில்லை.

மணமகனின் பொருளாதார நிலையில் ஆரம்பித்து அவனுடைய குண நலன்களை அலசி ஆராய்ந்துதான் திருமணம் செய்துவைக்கிறார். அவருடைய கணிப்புகள் பொய்யாக வாய்ப்பு உண்டு. ஆனால், அவர் நல்லெண்ணத்தில்தான் அதைச் செய்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் வரத்தேவையே இல்லை. எனவேதான் கடந்த காலத்தில் பெண்கள் தங்கள் மீது திணிக்கப்பட்ட அந்தத் திருமணத்தை ஏற்றுக்கொண்டு சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இன்றைய பெண்ணிய அளவுகோலைக் கொண்டு அன்றைய வாழ்க்கையை அளந்து பார்த்தால், அது நரகம்போல் தோன்றக்கூடும். ஆனால், அந்த வாழ்க்கையை வாழ்ந்தவர்களுக்கு அது வேறுவிதமாகத்தான் இருந்திருக்கும்.
மேலும், பெண்ணின் சம்மதத்தைக் கேட்காமல் திருமணம் தீர்மானிக்கப்பட்டதைப்போலவே ஆணின் விருப்பத்தையும் நேற்று யாரும் கேட்டிருக்கவில்லை. குடும்பத்தலைவர் தன் குழந்தைகளுக்கு எது நல்லது என்பதைப் பார்த்து செய்து தரத் தெரிந்தவர் என்ற நம்பிக்கையும் விசுவாசமும் அனைவருக்கும் இருந்தது. எனவே, ”சுதந்தரம்’ என்பது பெண்களுக்கு மட்டுமே மறுக்கப்பட்டிருக்கவில்லை.

வீட்டு வேலை தவிர பிற வேலைகளைச் செய்ய அனுமதி கிடைத்திருக்கவில்லை என்பது பெரிய குறையே அல்ல. ஏனென்றால் நேற்றைய உலகில் அனைவருமே தமக்கென நிச்சயிக்கப்பட்ட வேலையை மட்டுமே செய்து வந்திருக்கிறார்கள். இன்றைப்போல் விதவிதமான வேலைகள் இருந்திராத அந்தக் காலகட்டத்தில் தேர்ந்தெடுக்கும் உரிமை யாருக்குமே இருந்திருக்கவில்லை. ஒரு உடம்பின் உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேலையைச் செய்துவருவதுபோல் சமூகத்தின் ஒவ்வொரு வேலைகளை ஒவ்வொரு பிரிவினர் செய்துவந்திருக்கிறார்கள். எனவே, வீடு என்பது சிறையாகத்தான் இருந்திருக்கவேண்டும் என்று அவசியமில்லை. வெளியில் இருந்து பாதுகாப்பு தரும் இடமும்கூட. வீட்டுக்குள் செய்துவரும் வேலைகள் உங்களுக்கு மனநிறைவையும் சந்தோஷத்தையும் தரும்பட்சத்தில் அல்லது உங்கள் மனத்தை வீட்டு வேலைகளுக்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ள முடிந்தபட்சத்தில் ஒருவர் தன் வாழ் நாளின் பெரும்பாலான காலத்தை வீட்டை விட்டு வெளியே வராமல் கழித்துவிடுவதில் எந்தப் பெரிய வேதனையும் இருந்திருக்க முடியாது.

பெண்ணுரிமை பேசும் அனைவரும் தமது பாட்டிகள் கொள்ளுபாட்டிகளிடம் ஒரு சில மணி நேரங்களைக் கழித்தால் பல உண்மைகளைப் புரிந்துகொள்ளமுடியும். அந்த வாழ்க்கையில் அவர்களுக்கான பல சந்தோஷத் தருணங்கள் இருந்திருக்கின்றன. பெண்கள் தமக்கு இருக்கும் இயல்பான வசீகரம், அன்பு, பொறுமை, தியாக குணம், தாய்மை, சில நேரங்களில் பெண்ணாதிக்கம் இவற்றின் மூலம் குடும்பத்தில் பெற முடிந்த மதிப்பும் மரியாதையும் எந்த ஸ்மிருதியாலும் மறுக்கப்படமுடியாததுதான். மகளாக இருந்தபோது தந்தையாலும், மனைவியாக இருந்தபோது கணவராலும், தாயாக இருக்கும்போது மகனாலும் பாதுகாக்கப்படும் ஒரு பெண் சுதந்தரத்தை இழந்திருக்கக்கூடும். ஆனால், சந்தோஷத்தை இழந்ததாக நிச்சயம் சொல்ல முடியாது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஆணாதிக்கம் என்பது ஆண்களால் மட்டுமே உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. ஒவ்வொரு குழந்தையையும் அந்த ஆணாதிக்கக் கருத்துகளுடன் வளர்த்தெடுத்தது ஒரு பெண்தான். அந்தவகையில் கடந்த கால வாழ்க்கை வேதனை நிறைந்தது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டால், அந்தக் குற்றத்தைச் செய்ததில் பெண்களுக்கும் சம பங்கு உண்டு. அப்ரூவராக மாறித் தப்பித்துக் கொள்வதுகூடச் சாத்தியமில்லாத வகையிலான குற்றம். இதில் தன்னைப் பாதிக்கப்பட்டவராகச் சொல்வதெல்லாம் மிகவும் அதீதமானது. உண்மையில் அந்த வாழ்க்கைக்கு அவர்கள் எளிதில் தம்மைத் தகவமைத்துக் கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதுமே பறந்து திரிவதற்கான இறகுகள் உண்டு என்றாலும் எல்லாப் பறவைகளுமே கூட்டைச் சுற்றிய பகுதிகளுக்குள்ளாகவே தம்முடைய பறத்தலை நிறுத்திக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை; எந்தப் புற நிர்பந்தமும் இருப்பதுமில்லை.

இன்று இந்து/இந்திய சமூகம் பெண்களுக்கு பல தளங்களில் சம வாய்ப்புகளைத் தந்துவருகிறது. பெரிய போராட்டம் எதுவும் தேவைப்படாமலே இன்று பல கதவுகள் எளிதில் அகலத் திறந்திருக்கின்றன. நேற்றைய பெண்களிடமும் அந்த சமத்துவக் கோரிக்கை இருந்திருக்கவில்லை. எனவே, தட்டாத கதவு திறக்கப்படாததில் பெரிய வலி இருந்திருக்க முடியாது. தன்னைவிட வலிமையானவராகத் தான் கருதும் ஒருவருக்கு அடுத்தபடியில் இருக்க சம்மதிப்பது ஒருவர் மிகவும் இயல்பாகச் செய்யும் செயலே. அங்கு மேலே இருப்பவர் மீது மதிப்பும் மரியாதையும் விசுவாசமும் இருந்தாலே போதும். அடக்குமுறை தேவையே இல்லை. சார்ந்திருக்கும் வாழ்க்கையிலும் சந்தோஷம் உண்டு.

0

மனு ஸ்மிருதியும் கிராமப் பஞ்சாயத்துகளும்

Understanding Manu Smriti Agniveerமறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 24

இந்து சாதி சமூகம் ஒரு மரத்தைப் போன்றது. அதில் கடைநிலை சாதிகள் வேர்களைப் போன்றவை. இடைநிலை சாதிகள் தண்டு மற்றும் கிளைகளைப் போன்றவை. மேல் சாதிகள் பூவையும் காயையும் கனியையும் போன்றவை. வேர் உரிஞ்சும் நீரானது தண்டாலும் கிளைகளாலும் உள்வாங்கப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளுக்குச் சென்று சேர்ந்து பூவாக, பிஞ்சாக, காயாக, கனியாக, விதையாக உருமாறுகின்றன. ஒரு மரத்தின் ஆதார அம்சமான விதையில் பொதியப்பட்டிருக்கும் மரபணுவானது ஒட்டுமொத்த மரத்தின் உருவாக்கமாகவே இருக்கும். இந்து சாதி சமூகத்தில் மேல் சாதியினரால் முன்மொழியப்பட்ட மதிப்பீடுகள் அனைத்துக்கும் ஆதாரமும் அங்கீகாரமும் இடை, கடை நிலை சாதிகளில் இருந்து கிடைத்தவையே. அந்தவகையில் இந்து- சாதி அமைப்பின் நன்மை தீமைக்கான முழுப் பொறுப்பும் மூன்று பிரிவினருக்கும் உண்டு என்பதுதான் உண்மை.

ஒரு அமைப்பில் கடைநிலையில் இருப்பவர்கள் சில தவறுகள் செய்பவர்களாக இருக்கலாம். ஆனால், அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு அடையாளத்தை/அரசை உருவாக்கி வழிநடத்துபவர்கள் எந்தவித பாரபட்சமும் பார்க்காமல் அனைவருடைய நலனையும் கருத்தில் கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்பது சரிதான். ஆனால், இது தொடர்பாக ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு முன் அந்த அமைப்பு அல்லது அரசு எந்தளவுக்கு வலிமையானது என்பதையும் அதன் நிர்வாக வழிமுறை எப்படிப்பட்டது என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.

சாதி அமைப்பைப் பொறுத்தவரையில் அது மையம் அழிக்கப்பட்ட அமைப்பு. இந்தியாவை எடுத்துக்கொண்டால் பிரிட்டிஷார் வருகைக்கு முன்பாக கிராமப் பஞ்சாயத்துகளே அதிகாரம் மிகுந்தவையாக இருந்திருக்கின்றன. அதிகபட்சம் அவற்றின் எல்லை என்பது பத்து இருபது கிலோமீட்டருக்குள் முடிந்துவிடும். சேர சோழ பாண்டியர்கள் என தமிழகத்திலும் தென்னிந்திய வட இந்தியாவை ஒருங்கிணைத்தும் பேரரசுகள் இருந்திருக்கின்றன என்றாலும் பெரிதும் கிராம பஞ்சாயத்துகளே செயல் ஊக்கம் மிகுந்த நிர்வாக அலகுகளாக இருந்திருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் தமக்கான தனிவிதிகளோடு இயங்கி வந்திருக்கின்றன. இந்து மதம் அவற்றை இணைக்கும் மையச் சரடு என்றாலும் அது பெரிதும் விலகி நின்று வழிகாட்டும் ஓர் அமைப்பாகவே இருந்திருக்கிறது.

கிறிஸ்தவ, இஸ்லாம்போல் இறுக்கமான விதிகள் இங்கு கிடையாது. அவற்றிலெல்லாம், ஒருவர் வாழும் நிலப்பரப்பு எத்தகையதாக இருந்தாலும் உடலும் தலையும் மூடிய கறுப்பு நிற ஆடையைத்தான் அணிய வேண்டும் என்று எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு காலத்தில் தீர்மானிக்கப்பட்டுவிட்டால் அதுதான் உலகம் முழுவதும் எந்த மறு கேள்வியும் இன்றி அமல்படுத்தப்படும். ஓய்வு நாள் ஜெபக்கூட்டத்தில் இத்தனையாவது மணித்துளியில் இந்த ஸ்தோத்திரம்தான் பாடப்படவேண்டும்… இந்தப் பிரசங்கம் தான் செய்யப்படவேண்டும் என்று மேலிடம் தீர்மானித்து அச்சிட்டுக் கொடுத்துவிட்டால் அதைத்தான் இம்மி பிசகாமல் பின்பற்றியாகவேண்டும்.

இந்து சாதி அமைப்புக்கு அப்படியான எந்தவிதக் கெடுபிடிகளும் கிடையாது. சபரிமலைக்கு மாலை போடுபவர்கள் அந்நாட்களில் காவி, அல்லது கறுப்பு வேட்டி சட்டைதான் அணிய வேண்டும் என்று “மேலிடம்’ ஒரு விதியைக் கொண்டுவந்தால், பேண்ட் சட்டை போட்டுக்கொண்டு கழுத்தில் காவி அல்லது கறுப்பு துண்டு கட்டிக் கொண்டால் போதும் என்று துணை விதியைக் “கீழிடம்’ எழுதிச் சேர்த்துக் கொள்ளும். இப்படியான நெகிழ்வான தன்மையை வேறு எந்த மதத்திலும் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. இது, இந்து மதத்துக்கே உரிய குணம். அதனால்தான் இந்திய முஸ்லீம்களும் இந்திய கிறிஸ்தவர்களும் கூட தர்கா வழிபாடு, பூவும் பொட்டும் அணிந்து கொள்ளுதல் என சிற்சில உடைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நேற்றுவரை இந்துவாக இருந்தவர்கள்தானே . இந்து-சாதி அமைப்பின் இந்த அம்சம்தான் அதை ஓர் சுதந்தர, ஆன்மிக அமைப்பாக வார்த்தெடுத்திருக்கிறது. எனவே, மக்கள் திரள் மீது அதன் தாக்கம் அந்த அளவில்தான் கேள்விக்குட்படுத்தப்படவேண்டும்.

கடந்தகால இந்திய வாழ்க்கையை விமர்சிப்பவர்கள் ‘அனைத்து தீங்குகளுக்கும் மனுஸ்மிருதிதான் காரணம்’ என்ற பிள்ளையார் சுழியுடன்தான் தங்கள் உரைகளை ஆரம்பிக்கிறார்கள். உண்மையில் பிரிட்டிஷார் வந்ததற்குப் பிறகுதான் மனு ஸ்மிருதிக்கு இவ்வளவு முக்கியத்துவம் வந்து சேர்ந்திருக்கிறது. பைபிள் மற்றும் சர்ச் நடைமுறைகளுக்கு நன்கு பழகிய அவர்கள் உலகின் பிற பகுதிகளிலும் அப்படியான ஒரு மத நிர்வாக அமைப்பே இருக்கும் என்றுதான் நம்பினார்கள். அதோடு, பிறரைப் பிரித்து அழிக்கும் நோக்கமும் இருந்ததால் மனுஸ்மிருதியை அதற்கேற்ப வடிவமைத்தார்கள். உண்மையில் அதன் வீச்சு அன்றும் இன்றும் என்றும் மிகவும் குறைவானதே.

பெரும்பாலும் இந்திய கிராமங்கள் தத்தமது பஞ்சாயத்து விதிமுறைகளோடுதான் செயல்பட்டு வந்திருக்கின்றன. இந்தப் பஞ்சாயத்துகள் எல்லாம் இடை, கடை நிலை சாதிகளால் நிர்வகிக்கப்பட்டவையே. அவர்கள் மனு ஸ்மிருதியைப் படித்தவர்கள் அல்ல. அவர்கள் வழங்கும் தீர்ப்புகள் அவர்களுடைய முன்னோர்களின் வழிமுறையை அடியொற்றி வந்தவை. நூறு தோப்புக்கரணம் போடவேண்டும்… விசேஷ நாளில் 108 குடம் நீர் இறைத்துத் தரவேண்டும் என எத்தனையோ தீர்ப்புகள் தரப்பட்டு வழக்குகள் முடிக்கப்பட்டிருக்கின்றன.

சோ.தர்மனின் ஒரு கதை நினைவுக்கு வருகிறது. திருமண விழாவில் பலர் கூடியிருக்கும்போது ஒரு குழந்தையின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலி திருடு போய்விடும். யார் எடுத்தார்கள் என்பதை யார் மனமும் புண்படாமல் அந்த ஊர் நாட்டாமை வெகு அழகாகக் கண்டுபிடிப்பார். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு சாணி உருண்டை கொடுக்கப்படும். திருடியவர்கள் யாருக்கும் தெரியாமல் அந்த சாணி உருண்டைக்குள் சங்கிலியை வைத்துவிடுங்கள் என்று நாட்டாமை எச்சரிக்கை செய்வார். அனைத்து வீட்டுக்காரர்களும் அந்த சாணி உருண்டையை ஊரின் மத்தியில் வைக்கப்பட்டிருக்கும் பெரிய அண்டா ஒன்றில் வந்து போடுவார்கள். அந்த சாணி உருண்டையை கரைத்துப் பார்ப்பார்கள். அடியில் தங்கச் சங்கிலி மின்னிக் கொண்டிருக்கும். சங்கிலியை எடுத்தவர் மனம் மாறி சாணி உருண்டைக்குள் அதை வைத்துவிட்டிருப்பார்.

கிராமப் பஞ்சாயத்துகளில் இப்படியான எத்தனையோ தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கும். மனு ஸ்ருதியில் இதற்குச் சொல்லப்பட்டிருக்கும் தீர்ப்புக்கும் நடைமுறையில் இருந்த இந்தத் தீர்ப்புக்கும் இடையிலான வேறுபாட்டைக் கவனிக்கவேண்டும். அதோடு, பஞ்சாயத்து என்பது முன்பின் தெரியாத நபர்களைக் கொண்டது அல்ல. வாதியும் பிரதிவாதியும் கிராமத்து மக்கள் அனைவருக்கும் நேர் பரிச்சயமாகத் தெரிந்தவராகவே இருப்பார்கள். இன்றைய நீதிமன்றம் போல் முற்றிலும் அந்நியமான நபர்களால் நடத்தப்படுபவை அல்ல. இப்படியான அந்நியத்தன்மை வழக்கை அதன் சாதக பாதகங்களைப் பாரபட்சமின்றி அலசிப் பார்க்க உதவும் என்பது உண்மைதான். ஆனால், நேற்றைய பஞ்சாயத்துகளில் வாதி, பிரதிவாதிகளுடன் நீதிபதிகளுக்கு இருந்த நட்புறவானது தண்டனையை மிதமாக்கவும் செய்திருக்கும்.

அதோடு பெரும்பாலும் தனி நபர் விசாரணைகளாக அவை இருந்திருக்காது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு அவருடைய சாதியினர் பக்கபலமாக நின்று வாதாடியிருப்பார்கள். நாட்டாமைக்கும் ஆலோசனை சொல்ல ஒரு ஜூரி குழு இருந்திருக்கும். அதேநேரம் சவுக்கடி, சாணிப்பால் போன்ற தண்டனைகள்அந்தந்த கிராமத்தின் தனிப்பட்ட தீர்ப்புகளாக இருந்திருக்கின்றனவே தவிர ஒட்டுமொத்த இந்தியாவையும் வழி நடத்தியதாகச் சொல்லப்படும் மனு ஸ்மிருதியின்படி வழங்கப்பட்டவை அல்ல.

அதோடு மனுஸ்மிருதியானது மேற்கத்தியர்களால் தொகுக்கப்பட்டுத்தான் இன்று நம் கைகளை வந்தடைந்திருக்கின்றன. அது எப்படித் தொகுக்கப்பட்டது… எவையெல்லாம் இடைச்செருகல்கள்… எவையெல்லாம் திரிக்கப்பட்டிருக்கின்றன என்று எந்தவித ஆராய்ச்சியும் செய்யப்பட்டிருக்கவில்லை. அதில் இருப்பவையே உண்மையானவை என்று எடுத்துக்கொள்ளப்பட்டுத்தான் எல்லா அரசியல் செயல்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இன்னும் சொல்லப்போனால், அதில் இல்லாதவைகூட இருப்பதாகச் சொல்லப்பட்டுத்தான் பல அரசியல் பேரியக்கங்கள் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன.

பிரம்மனின் தலையில் இருந்து பிராமணனும் தோளில் இருந்து சத்திரியனும் தொடையில் இருந்து வைசியனும் காலில் இருந்து சூத்திரனும் தோன்றியதாகச் சொல்லப்பட்டிருக்கும் ஸ்லோகம் ஒரு கவித்துவ குறியீட்டு வருணனை. இங்கு சமூகமானது ஒரு மனிதராக உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. கால் என்பது மனிதரைத் தாங்கி நிற்கும் ஆதார உறுப்பு என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், ‘காலில் இருந்து பிறந்தான் என்று சொல்லி இழிவுபடுத்திவிட்டார்கள்’ என்று மிகவும் தவறான விளக்கம் தரப்பட்டுவிட்டிருக்கிறது. நாவன்மை மிக்கவருக்கு நாவில் சரஸ்வதி குடிகொண்டிருக்கிறாள் என்று அழகுறச் சொல்வதை, சரஸ்வதி மல ஜலம் கழிப்பது எங்கே என்று கேட்கும் அதி புத்திசாலிகளுக்கு எதைத்தான் சொல்லிப் புரியவைக்க முடியும்?

‘வேதத்தை ஓதும் சூத்திரனின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றும்படி மனுஸ்மிருதி சொல்கிறது’ என்பது மிகப் பெரிய ஒடுக்குமுறையாக முன்வைக்கப்படுகிறது. அது இடைச்செருகலா… உண்மையான விதிமுறையா என்பது தொடர்பாக எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படவில்லை. சூத்திரர்களில் யாராவது வேதத்தைச் சொல்லவோ கேட்கவோ முற்பட்டு அதுபோல் தண்டனை நிறைவேற்றப்பட்டதாகச் சான்றுகளும் இல்லை. அதோடு வேதம் என்பது மிகவும் அடிப்படையான, எல்லாரும் சொல்லியே ஆகவேண்டிய ஒன்றல்ல. அதாவது, அதைக் கற்காமலும் சொல்லாமலும் இருப்பதால் ஒருவர் எதையும் இழப்பதில்லை. தேவையில்லாத ஒன்று மறுக்கப்படுவதில் பெரிய வலி இருக்க வாய்ப்பில்லை.

ராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்கள் நீதி போதனை, இலக்கியச் சுவை, பாடல், நடனம், நாடகம், ஓவியம் என அனைத்து வகைகளிலும் அது அனைத்து சாதியினருக்கும் கைக்கு எட்டியதாகவே இருந்திருக்கின்றன. அந்த இரு பெரும் காவியங்களை எழுதியவர்கள் சூத்திரர்களுக்கும் கீழ் நிலை என்று சொல்லப்படும் வேடர் குல, மீனவ குலத்தைச் சேர்ந்தவர்களால் எழுதப்பட்டது என்ற எளிய உண்மை சாதி எதிர்ப்புப் போராளிகளின் அனைத்து அவதூறுகளையும் எதிர்த்து நிற்கும் வலிமைகொண்டதாகவே இருக்கிறது.
பெயர்களைப் பொறுத்தவரையில் மனு ஸ்மிருதியில் பிராமணர்களின் பெயர் எப்படி இருக்கவேண்டும், சூத்திரர்களின் பெயர் எப்படி இருக்கவேண்டும் என்று வழிகாட்டிக் குறிப்பு தரப்பட்டிருக்கிறது. ஆனால், நடைமுறையில் பெரும்பாலான நேரங்களில் தங்கள் குல தெய்வத்தின் பெயரையும் தாத்தா, பாட்டிகளின் பெயரையும் தான் சூட்டிவந்திருக்கிறார்கள். இழிவைச் சுட்டும் பட்டப்பெயர்களில் பெரும்பாலானவை சொந்த சாதியினரால் சூட்டி அழைக்கப்பட்டவையே.

தலித்துகளின் வீடுகள் தென் திசையைப் பார்த்தபடிதான் இருக்கவேண்டும். ஏனென்றால் அதுதான் அமங்கலமான திசை என்று அம்பேத்கர் ஓரிடத்தில் சொல்கிறார். விஷயம் என்னவென்றால், கோயிலை மையமாகக் கொண்ட ஒவ்வொரு அக்ரஹாரத்திலும் வீடுகள் இடவலமாக அதாவது வடக்கு, தெற்கு திசையைப் பார்த்தபடிதான் அமைந்திருக்கும்.

பாலியல் விஷயங்கள், மது, மாமிசம் உட்கொள்ளுதல் போன்றவற்றில் மனு ஸ்ருதியோ இன்ன பிற நூல்களோ சொன்ன எதையும் யாரும் பொருட்படுத்தியிருக்கவே இல்லை. அப்படியாக நன்னூல்களின் தாக்கம் என்பது மிகவும் குறைவு என்பதுதான் உண்மை.
கடந்த கால சாதிய வாழ்க்கையின் அனைத்து பின்னடைவுகளுக்கும் மனு ஸ்மிருதியும் மேல் சாதியும்தான் காரணம் என்று சொல்வது முழுக்க முழுக்க பிரிட்டிஷாரின் இந்தியாவை இழிவாகப் பார்க்கும் ஒரு பிரிவினரை அடியொற்றி உருவான சிந்தனைப் போக்கே. அந்த பிரிட்டிஷாரின் அராஜகத்தை நம்மால் புரிந்துகொள்ளமுடியும். ஏனென்றால், அது அவர்களின் ரத்தத்தில் ஊறிய விஷயம். அதை நம் போராளி வர்க்கமும் சுவீகரித்துக் கொண்டதுதான் பெரிய துரதிஷ்டம்.

0

தீண்டலும் தீண்டாமையும்

caste3மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 23

கடந்த கால வாழ்க்கையைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நீங்கள் கடந்தகால மனிதராகவேண்டும். மின்சாரம் இருந்திராத காலத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டுமென்றால் இன்றைய மின்சாரம் உங்கள் மனத்தில் ஏற்படுத்தியிருக்கும் அனைத்து அனுபவங்களையும் முற்றாகத் துடைத்துவிட்டு வேறொரு நபராக ஆகவேண்டும். இல்லையென்றால், மின்சாரம் இல்லாத காலகட்டத்து மனிதர்கள் நிரந்தரமாக சோக இருளில் மூழ்கிக் கிடந்ததாகத்தான் உங்களுக்குத் தோன்றும். அவர்களோ இரவென்றால் இருட்டாகத்தானே இருக்க வேண்டும் என்று சொல்லியபடி வாழ்க்கையை அமோகமாக வாழ்ந்துவிட்டுப் போயிருப்பார்கள். ஆனால், அவர்களைப் பார்த்து போலியாகப் பரிதாபப்பட்டு, ‘மின்சாரத்தைக் கண்டுபிடிக்கவிடாதவர்கள்’ பற்றிய முழக்கங்களை உருவாக்கிக் கொள்ள ஆரம்பிப்பீர்கள். உண்மையோ இருளில் இருக்கும் கரிய நிறக் கற்சிலைபோல் மவுனமாக உங்களைப் பார்த்துப் புன்முறுவல் பூத்துக்கொண்டிருக்கும்.

கடந்த காலத்தில் ஒருவருக்கு, குறிப்பாகக் கடைநிலை சாதியினருக்கு மறுக்கப்பட்டவையாகச் சொல்லப்படுபவற்றில் பெரும்பாலானவை தேவையற்றவையாக இருப்பதை ஒருவர் பார்க்க முடியும். அல்லது, அவை வேறு வழியில் ஈடுசெய்ய முடிந்தாகவே இருக்கும். உதாரணமாக, பெருந்தெய்வக் கோயிலுக்குள் ஒரு தலித்தை நுழைய அனுமதிக்கவில்லை என்பதை எடுத்துக்கொள்வோம். அவருக்கு அவருடைய குலதெய்வக் கோயிலில் இருக்கும் தெய்வம்தான் முக்கியம். பெருந்தெய்வக் கோயிலில் இருக்கும் தெய்வத்தைத் தொழவிடவில்லை என்பது அவரைப் பொறுத்தவரையில் ஒரு பிரச்னையே அல்ல. உண்மையில் பெருந்தெய்வக் கோயிலுக்கு நான் ஏன் செல்லவேண்டும் என்பதுதான் அவருடைய கேள்வியாக இருந்திருக்கும். அந்தக் கோயிலின் பிரமாண்டத்தில் ஆரம்பித்து அங்கு மேற்கொள்ளப்படும் சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாமே அவரைப் பொறுத்தவரையில் தேவையற்றவையே.

அவருடைய தெய்வ நம்பிக்கை என்பது அவருடைய முன்னோர்களிடமிருந்து தலைமுறை தலைமுறையாக கைமாற்றித் தரப்பட்ட ஒன்று. அது அவருடைய அடையாளமாக, பெருமித அம்சமாக இருக்கக்கூடியது. அவர் அவருடைய குல தெய்வத்தை அவருக்கு உகந்த ஒரு நாளில் தொழும் சுதந்தரம் பெற்றவர். சாமியாடி, குறிசொல்லி அல்லது அதுபோன்ற வேறு ஏதாவது பூசாரி அங்கு இருப்பார் என்றாலும் அவர் மிகவும் அனுசரணையானவர். ஒரு தலித் தனக்குப் பிடிக்கும் சுருட்டும் சாராயமும் ஆட்டுக்கறியும்தான் தனது கடவுளுக்கும் பிடிக்கும் என்று எளிய முறையில் நம்பும்போது அதை அந்த பூசாரி மறுக்கவேமாட்டார். எனவே அந்தக் கோயிலில் இருக்கும் தெய்வத்துடன்தான் ஒரு தலித்துக்கு நெருக்கம் இருக்கும். அவர் தினமும் மூன்று நான்கு தடவை தீபாராதனையும் ஏராளமான அபிஷேகமும் மந்திரங்களும் பூவும் பொட்டும் பொங்கலும் புளியோதரையுமாக இருக்கும் ஒரு பெருந்தெய்வக் கோயிலுக்குள் தன்னை அனுமதிக்கவில்லை என்பதை மிகவும் இயல்பான, நியாயமான விஷயமாகவே பார்த்திருப்பார். அங்கு சமத்துவ மறுப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. இதுபோல்தான் பல விஷயங்கள் அவர்களால் பார்க்கப்பட்டிருக்கும் (இது நிச்சயமாக என் விருப்பமோ முடிவோ அல்ல. அந்த வாழ்க்கை அவர்களால் பல நூறு ஆண்டுகளாக அமைதியாக வாழப்பட்டிருக்கிறது. எனவே, அதை அவர்கள் என்ன கோணத்தில் எடுத்துக்கொண்டிருப்பார்கள்? வெறும் மேல் சாதியின் அடக்குமுறைமட்டுமே காரணமாக இருந்திருக்குமா என்ற கேள்வியின் அடிப்படையில்தான் சில விஷயங்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்).

தீண்டாமை மிகவும் கொடூரமான செயல் என்று இன்றைய நவீன மனம் சொல்கிறது. கூடவே, மேல் சாதியினரின் (பிராமணர்களின்) ஒடுக்குமுறையாக அராஜகமாக, சக மனித வெறுப்பாக அது முன்வைக்கப்படுகிறது. ஆனால், அது பல அடுக்குகளைக் கொண்டது. முதலில் தீண்டாமை என்பது தீட்டு என்பதில் இருந்து ஆரம்பிக்கிறது. கடந்தகாலத்தில் பிராமணர்களின் வீடுகளில் மாத மலர்ச்சி நாட்களில் பெண்கள் நடத்தப்பட்ட விதமானது அச்சு அசலாக தீண்டாமைக்கு சமமாகவே இருக்கும். அந்தப் பெண்கள் வீட்டுக்குள் நுழையக்கூடாது. யாரையும் தொடக்கூடாது. நல்ல காரியங்கள் செய்யும் பிறர் கண்ணில் படவே கூடாது. அவர்கள் தொட்ட பொருளை நீர் ஊற்றித்தான் வீட்டில் உள்ளவர்கள் எடுத்துக்கொள்வார்கள். அவர்களுக்கு வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்ட பிறகு எஞ்சும் உணவுதான் தரப்படும். அவர்களுக்குத் தரப்பட்ட உணவு பிறகு வேறு யாராலும் சாப்பிடப்படாது. இந்த இடத்தில் செயல்படுவது அந்தப் பெண்ணின் மீதான வெறுப்பு அல்ல; மாதவிடாய் மீதான ஒவ்வாமையே. இந்தத் தீட்டுதான் தீண்டாமையாக மாறுகிறது. பிராமணர்கள் தவிர பிற சாதியினர் மாத மலர்ச்சி நாட்களில் பெண்களை இந்த அளவுக்கு விலக்கிவைப்பது கிடையாது.

எனவே, பிற சாதியினர் அந்த விஷயத்தில் கறைபடிந்தவர்களாக அதாவது தீட்டானவர்களாகக் கருதப்பட்டனர். அதனால் அவர்களிடமிருந்து பிராமணர்கள் விலகி நின்றனர். பிற சாதியினரும் தீண்டாமையை அனுசரித்திருக்கிறார்கள். இங்கெல்லாம் செயல்பட்டது சக மனித வெறுப்பு அல்ல. தீட்டு தொடர்பான மன விலக்கமே. இந்த உணர்வுக்கு பிற சாதியினரின் அங்கீகாரமும் அனுமதியும் இருந்தது. அதை அவர்கள் புரிந்துகொண்டிருந்தனர். ஆம்… நாமெல்லாம் சுத்தபத்தமா இருக்கமாட்டோம். எனவே, ஒரு பிராமணர் நம்மிடம் இருந்து விலகி நிற்பது சரியே என்ற புரிதல் அவர்களுக்கு இருந்தது. அந்தவகையில் அது ஒருபோதும் சக மனித வெறுப்பை அடிப்படையாகக் கொண்டு உருவான வழிமுறை அல்ல என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அவர்கள் அளவில் அதைக் கடைப்பிடிக்கவும் செய்தனர். தீட்டு காலத்தில் பெண்கள் விதை நெல்லைத் தொடக்கூடாது, மங்கல காரியங்களின் முன் நிற்கக்கூடாது என அவர்களும் விலக்கைக் கடைப்பிடித்தே வந்திருக்கின்றனர். உண்மையில் சொல்லப்போனால் பிராமணர்கள் அளவுக்கு தீவிரமாக கடைப்பிடிக்கமுடியவில்லையே என்ற எண்ணம்தான் அவர்கள் மனத்தில் இருந்ததே தவிர விலக்கி வைத்ததை அராஜகமாகப் பார்க்கவே இல்லை.

தீட்டு தொடர்பான ஒவ்வாமை எப்படித் தோன்றியது என்பதைப் பார்ப்பது அவசியம். பெண்களுக்கு இயற்கை தந்த ஒரு விஷயம் அது. தாய்மை சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வு. எந்தவகையிலும் அது இழிவானதாகவோ விலக்கப்படவேண்டியதாகவோ பார்க்கப்படவேண்டிய ஒன்றே அல்ல. ஆணும் பெண்ணும் சமமாக இருந்த ஆதிகாலத்தில் அது இயல்பான ஒன்றாகவே எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. பழங்குடி சமயங்களில் பெண்கள் பூசாரியாக இருந்ததைக்கூடப் பார்க்க முடியும். ஆனால், அது பெண்ணுக்கேயான விஷயமாக இருந்ததால் பெண்ணைத் தனக்கு அடுத்தபடியாகக் கீழிறக்க ஆண்களுக்கு அது வழிவகுத்துவிட்டது. உண்மையில் இனப்பெருக்கம், உற்பத்தி ஆகியவற்றோடு தொடர்புடையதால் அது உயர்வாகப் பார்க்கப்பட்டிருக்கவேண்டும். அப்படிப் பார்க்கப்பட்டு பெண் தெய்வமாக ஆக்கப்பட்டதும் நடந்தது. என்றாலும் அன்றாடச் செயல்பாடுகளில் ஆரம்பித்து போர், வேட்டை என்பது போன்ற உடல் வலு அதிகம் தேவைப்பட்ட செயல்கள் வரை இயற்கை தந்த விஷயமானது பெண்ணை மெள்ளப் பின்தங்க வைத்தது. தாய்மை உணர்வுகள் இயல்பாகவும் செயற்கையாகவும் மிகைப்படுத்தப்பட்டு பெண் இரண்டாம்பட்சமாக ஆக்கப்பட்டாள். இந்தக் காலகட்டத்தில்தான் தீட்டு சார்ந்த ஒவ்வாமை ஆரம்பித்திருக்கும்.

இங்கும் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இதற்கு பெண்களின் பரிபூரண சம்மதம் இருந்திருக்கிறது. இன்றும் சபரி மலைக்குப் பெண்கள் போகக்கூடாதா என்ற பெண்ணிய கோஷத்தை பெண்ணியவாதிகள் அல்லாத பெண்களிடம் போய்க் கேட்டால் அவர்கள் நிச்சயம் அதை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். பகவதி அம்மனில் இருந்து எத்தனையோ தெய்வங்களைத் தொழ அனுமதிக்கப்பட்டிருக்கிறதே… அவர்களை முதலில் தொழுது முடி. அதன் பிறகு ஐய்யப்பனைப் பார்க்கப் போகலாம் என்று சொல்லிவிடுவார்கள். சபரிமலைக்கு மாத மலர்ச்சிப் பருவத்தில் இருக்கும் பெண்கள் போகக்கூடாது என்பது எந்தவகையிலும் ஒடுக்குமுறையாகப் பெண்களால் பார்க்கப்படவே இல்லை என்பதுதான் உண்மை.

இப்போது இந்த விஷயத்தின் இன்னொரு கோணத்தைப் பார்க்கலாம். மேல் சாதிக்காரரால் தொடப்படாததனால் கீழ் சாதிக்காரர் எதை இழந்துவிட்டார்… அவரைத் தொடுவதால் பெரிதாக எதை அடைந்துவிடப்போகிறார்? என்னைத் தொடாதே என்று சொல்லும் ஒருவரைப் பார்த்து உன்னைத் தொட்டு எனக்கு என்ன ஆகப்போகிறது என்ற கேள்வியை கேட்க முடியாமல் எது தடுத்திருக்கும்? பிராமண மதிப்பீடுகளையும் தலித் மதிப்பீடுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், பல விஷயங்களில் தலித்கள் மேலானவர்களாக இருப்பது தெரியும். விதவை மறுமணம், பாலியல் சுதந்தரம், மது, மாமிசம் என கேளிக்கைகளில் ஈடுபடுதல் என பல விஷயங்களில் தலித்களின் வாழ்க்கை உயர்வானதே. மறு உலக வாழ்க்கை என்ற கற்பனையின் பெயரில் கைக்குக் கிடைத்திருக்கும் வாழ்க்கையை வீணடிக்கவில்லை. இதை அவர்கள் மிகவும் பிரக்ஞைபூர்வமாகவேதான் பின்பற்றியிருக்கிறார்கள். விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்ட ஓர் சமுதாயத்தில் பசுவுக்கும் காளைக்கும் இருக்கும் முக்கியத்துவம் தெரிந்தநிலையில் அதை உணவாகக் கொள்பவர்களுக்கு என்ன சமூக அந்தஸ்து கிடைக்கும் என்பது தெரிந்தேதான் அவர்கள் அதைக் கைக்கொண்டிருக்கிறார்கள். கொன்னாப் பாவம் தின்னாப் போகும்… செரிக்கும் உணவைத் தின்னு என்பது அவர்களுடைய வாழ்க்கைப் பார்வை. அவர்களிடம்போய் மேல் சாதியினர் உங்களை மதிக்கவில்லையே என்று சொன்னால், காரஞ்சாரமாக இருக்கும் மாட்டுக்கறியை வாயில் போட்டு மென்று, இரண்டு மிடறு கள்ளைக் குடித்துவிட்டு, போடா நீயும் உன் …….மரியாதையும் என்றுதான் சொல்லியிருப்பார்.

பார்ப்பானின் கொடூரம் (?) தெரியவேண்டுமானால் பறையனாக இருந்து பார் என்று சொல்வார்கள். பறையரின் சந்தோஷம் தெரியவேண்டுமானாலும் பறையராக இருந்தால்தான் புரியும்.

0

B.R. மகாதேவன்