புள்ளி, புள்ளிவிவரம்
மேட்டர் / அத்தியாயம் 15
இதுவரை நாம் தெரிந்துகொண்டுள்ள விஷயங்களை முதலில் பட்டியலிட்டுவிடுவோம்.
உலகில் பல்வேறு தனிமங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் பிரத்யேகமானது. ஒன்றை மற்றொன்றாக மாற்றமுடியாது. இவை ஒவ்வொன்றுக்கும் அணு எடை என்ற அடிப்படைப் பண்பு உள்ளது. இருவேறு தனிமங்களுக்கு இருவேறு அணு எடை. இந்தத் தனிமங்களுக்கு இணைதிறன் என்ற வேதிப்பண்பு உள்ளது. இதன் அடிப்படையில்தான் சில தனிமங்கள் குறிப்பிட்ட விகிதத்தில் ஒன்றோடு ஒன்று இணைந்து சேர்மங்களை உருவாக்குகின்றன.
இந்தத் தனிமங்களை அழகாக ஓர் அட்டவணையாக ஆக்கமுடியும். ஒத்த பண்புகளுடைய தனிமங்களை ஒரு குழுவாகச் சேர்க்க முடியும். இதனை மெண்டலீவ் செய்தார். அப்படிச் செய்ததன்மூலம் இடையிடையே விட்டுப் போயிருந்த, அதுவரை கண்டுபிடிக்கப்படாதிருந்த சில தனிமங்களை சுட்டிக்காட்டினார். அவையெல்லாம் பின்னாள்களில் கண்டுபிடிக்கப்பட்டன. ஆக, தனிமங்களுக்கு அடிப்படையாக ஏதோ ஒரு குணம் ஒன்று உள்ளது. அதன் காரணமாக ‘அடுத்தடுத்த’ தனிமங்கள் ஏதோ ஒர் ஒழுங்கைக் கடைப்பிடிக்கின்றன.
இவையெல்லாம் இனிமேல்தான் கண்டுபிடிக்கப்படும். அவற்றைப் பின்னால் பார்ப்போம்.
தனிமங்களோ சேர்மங்களோ, அறை வெப்பநிலையில், சாதாரண காற்றழுத்தத்தில் மூன்று நிலைகளில் இருக்கும். வாயு, திரவம், திடம். வாயு வடிவப் பொருள்களை ஆராய முற்பட்டதன் விளைவாகத்தான் பல்வேறு புதிர்களுக்கான விடை நமக்குக் கிடைக்க ஆரம்பித்தது. வாயுக்களை வைத்துச் செய்த பரிசோதனைகளின் விளைவாக நமக்கு நிறைய விதிகள் கிடைத்தன. 17-ம் நூற்றாண்டிலிருந்தே இந்த விதிகள் நமக்குக் கிடைக்கத் தொடங்கின.
ராபர்ட் பாயில் 1662-ல் முன்வைத்த விதிதான் உள்ளதிலேயே பழமையானது. ஒரு பலூனில் ஒரு வாயு அடைக்கப்பட்டுள்ளது. அது ஒரு குறிப்பிட்ட கொள்ளளவைக் கொண்டுள்ளது. அதன் அழுத்தம் ஒரு குறிப்பிட்ட அளவில் உள்ளது. அந்த வாயு மாறாத ஒரு வெப்பநிலையில் உள்ளது. இப்போது அந்தப் பலூனை நசுக்கினால், கொள்ளளவு குறையும். ஆனால் அழுத்தம் அதிகரிக்கும். அழுத்தம் எந்த அளவு அதிகரிக்கிறதோ அந்த அளவு கொள்ளளவு குறையும் என்றார் பாயில். அதாவது அழுத்தம், கொள்ளளவு இரண்டையும் பெருக்கினால் அது மாறாத எண்ணிக்கையாக இருக்கும்.
அடுத்து சார்ல்ஸ் விதி. 1678-ல் வெளியான இந்த விதியின்படி, ஒரு வாயு மாறாத அழுத்தத்தில் இருக்கும்போது, அதன் கொள்ளளவானது அதன் வெப்பநிலையை மட்டும்தான் சார்ந்திருக்கும். அதாவது வெப்பநிலை அதிகமானால் வாயு விரிவடையும். வெப்பநிலை குறைந்தால் வாயு சுருங்கும்.
இதோடு தொடர்புடையதுதான் கே லூஸாக்கின் விதி. 1809-ல் வெளியானது. மேலே உள்ள விதியில் கொள்ளளவுக்கு பதில் அழுத்தத்தை வையுங்கள். மாறாத கொள்ளளவு உள்ள ஒரு பாத்திரத்தில் ஒரு வாயு இருக்கும்போது அதன் அழுத்தமானது அதன் வெப்பநிலையை மட்டுமே சார்ந்திருக்கும். வெப்பநிலையை அதிகப்படுத்தினால் அழுத்தம் அதிகரிக்கும். குறைத்தால் குறையும்.
இந்த மூன்று விதிகளையும் ஒன்றுசேர்த்தால் கிடைப்பதுதான் ‘இலட்சிய வாயு’ விதி. அதனை PV = nRT என்று எழுதி நீங்கள் பார்த்திருக்கலாம். P என்பது அழுத்தம். V என்பது கொள்ளளவு. T என்பது வெப்பநிலை. R என்பது ‘இலட்சிய வாயு மாறிலி’. n என்பது எத்தனை ‘மோல்’ வாயு அந்தக் கொள்ளளவில் உள்ளது என்பது. இலட்சிய வாயு என்றால் என்ன, மோல் என்றால் என்ன என்பதையெல்லாம் விரைவில் பார்ப்போம்.
பரிசோதனைகள்மூலம் கிடைத்த மேலே சொன்ன சமன்பாடு நமக்கு என்ன சொல்கிறது?
ஒரு டப்பாவில் ஒரு வாயு அடைக்கப்பட்டுள்ளது. வாயுவின் மூலக்கூறுகள் அமைதியாக கோலிகுண்டுகள் மாதிரி ஓரிடத்தில் உட்கார்ந்திருக்காது; அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருக்கும் என்று விஞ்ஞானிகள் யூகித்தனர். இதற்கு என்ன சாட்சி? உள்ளே பார்த்தால் மூலக்கூறுகள் அங்கும் இங்கும் ஓடுவதை, அலைவதைப் பார்க்கமுடியுமா? இல்லை. முடியாது. எனவே இப்போதைக்கு இதனை ஒரு கருதுகோளாக மட்டும் எடுத்துக்கொள்வோம்.
மூலக்கூறுகள் அங்கும் இங்கும் அலைகின்றன என்றால் என்ன வேகத்தில் செல்கின்றன? எல்லா மூலக்கூறுகளும் ஒரே வேகத்தில் செல்கின்றனவா? எந்தத் திசையில் செல்கின்றன?
அவை அங்கும் இங்கும் செல்கின்றன என்றால் நிச்சயம் டப்பாவின் சுவரின்மீது மோதவேண்டும். அப்படி மோதினால் டப்பாவுக்கு என்ன ஆகும்?
வெளியிலிருந்து நாம் பார்க்க்ககூடியது என்ன? வாயு அடங்கிய ஒரு பாத்திரத்தை மேசை மீது வைத்தால் அது அசையாமல் அப்படியே உள்ளது. துள்ளிக் குதிப்பதில்லை. இது எப்படிச் சாத்தியம்? உள்ளே உள்ள மூலக்கூறுகள் டொம் டொம் என்று சுவரின்மீது அடித்துக்கொண்டிருந்தால் அந்தப் பாத்திரம் ஆடவேண்டும் அல்லவா?
இங்குதான் புள்ளிவிவரவியல் (ஸ்டாடிஸ்டிக்ஸ்) முறையில் யோசிக்க ஆரம்பித்தார் லுட்விக் போல்ட்ஸ்மான் (Ludwig Boltzmann). ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்தவர். புள்ளிவிவர இயக்கவியல் என்னும் துறையின் தந்தை இவர் என்று சொல்லலாம்.
1844-ல் பிறந்த போல்ட்ஸ்மான் வாயுக்களின் இயக்கக் கோட்பாடு குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றார். கல்லூரிப் பேராசிரியர் ஆனார். இவருடைய காலத்தில் மிகப் பெரிய கேள்வியே உண்மையில் அணு அல்லது மூலக்கூறு என்ற ஒன்று இருக்கிறதா என்பதே. தனிம அட்டவணையைக் கண்டிபிடித்த மெண்டலீவே அணு என்று ஒன்று உண்மையில் இருப்பதை நம்பவில்லை. விஞ்ஞானிகள் இரு பிரிவாகப் பிரிந்துகொண்டனர். அணுக்குழு ஒருபக்கம், அ-அணுக்குழு மறுபக்கம்.
அணுக்குழு என்ன சொன்னது? கடைசியில் எல்லாமே குட்டிக் குட்டித் துண்டுகள். அவை ஒன்றோடு ஒன்று சேரும்போதுதான் நாம் கண்ணால் பார்க்கும் பொருள்கள் தென்படுகின்றன. அ-அணுக்குழு என்ன சொன்னது? பொருள் என்பதே ஒன்றான, கட்டியான ஒன்று. அதை எப்படி வேண்டுமானாலும் நறுக்கமுடியும், ஒட்டமுடியும், சேர்க்கமுடியும், பிரிக்கமுடியும்! ஆங்கிலத்தில் சொல்வதானால் continuum vs discrete என்ற பிரச்னை. அணுவைக் கண்ணால் பார்க்க முடியவில்லை. அப்படியானால் அதை எப்படி நம்புவது. கொழுக் மொழுக் என்று இருக்கும் ஒரு பொருளைக் காணமுடிகிறது. எனவே டிஸ்க்ரீட் என்பது தப்பு. கண்டினுவம் என்பதுதான் சரி!
இந்த நிலையில் போல்ட்ஸ்மான் போன்றோர், ஒரு வாயு டப்பாவில் மூலக்கூறுகள் அனைத்தும் தன்னிஷ்டத்துக்கு அங்கும் இங்கும் ஆளுக்கொரு வேகத்தில் அலைகின்றன என்று சொன்னால் யார் நம்புவார்கள்? எங்கே காட்டு என்றால் எதைக் காட்டுவது?
ஆனால் போல்ட்ஸ்மான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. கண்ணில் தெரிந்தால்தான் உண்மையா? ஒரு வாயு என்பது பல மூலக்கூறுகளைக் கொண்டது என்று எடுத்துக்கொண்டு தன் கணக்கை ஆரம்பித்தார்.
அதை அடுத்தவாரம் பார்ப்போம்.
0















