தொடரும் மொழிப்போர்

annavum rajajiyumமொழிப்போர் / அத்தியாயம் 14  

சின்னச்சாமியின் மரணம் கனன்று கொண்டிருந்த இந்தி எதிர்ப்பு நெருப்பை வேகமாக விசிறிவிட்டது. மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என்று பல தரப்பினரும் போராட்டக் களத்துக்கு வந்தனர். இந்தி ஆட்சிமொழியாக மாறவிருக்கும் 26 ஜனவரி 1965 நெருங்க நெருங்க போராட்டத்தின் வேகம் கூடியது. எங்கு பார்த்தாலும் போராட்டம், கோஷம், கறுப்புக்கொடி, கண்டனக்குரல்.

இன்றைய அத்தியாவசியப் பிரச்னை சோற்றுப் பிரச்னைதானே தவிர மொழிப்பிரச்னை அல்ல என்றார் காமராஜர். உடனடியாக எதிர்வினை ஆற்றினார் அண்ணா. சோற்றுப்பிரச்னைதான் பிரதானம் என்றால் எதற்காக பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இந்தித் திணிப்பு விஷயத்தில் கவனம் செலுத்தவேண்டும்; பேசாமல் தமிழையும் ஆட்சிமொழியாக அறிவித்துவிட்டு, சோற்றுப் பிரச்னையைத் தீர்க்கும் விஷயத்தில் கவனம் செலுத்தலாமே என்றார் அண்ணா.

8 ஜனவரி 1965 அன்று கூடிய திமுக செயற்குழு, ஜனவரி 26 அன்று குடியரசு நாளை துக்க நாளாக அனுசரிக்க முடிவுசெய்தது. சுதந்தர தினத்தை இன்ப நாளாகக் கொண்டாடிய அண்ணா, குடியரசு தினத்தைத் துக்கநாளாக அனுசரிப்பது துரோகச் செயல் இல்லையா? என்று கேள்வி எழுப்பினர் காங்கிரஸ் தலைவர்கள். குடியரசு தினம் முக்கியத்துவம் வாய்ந்த தினம்தான். அந்த நாளில் இந்தி எதிர்ப்பை ஒத்திவைத்தால் என்ன செய்வீர்கள்? இந்திதான் ஆட்சிமொழி என்பதை திமுகவும் தென்னக மக்களும் ஏற்றுக் கொண்டார்கள் என்று மூலைக்கு மூலை பொய்ப் பிரசாரம் செய்வீர்கள். அதைத் தடுக்கவே குடியரசு நாளை அமைதியான முறையில் துக்கநாளாக அனுசரிக்கிறோம் என்றார் அண்ணா!

கடந்த காலங்களில் இந்தியின் காவலராக அடையாளம் காணப்பட்ட ராஜாஜி, தற்போது இந்தியை எதிர்க்கத் தயாராகி இருந்தார். நல்ல நாட்டுப் பற்றுள்ள, நுண்ணறிவுள்ள இந்தியக் குடிமக்கள் மூன்று கோடி பேரை கோபம் கொண்ட பிரிவினைக்காரர்களாக மாற்றும் சட்டமே ஆட்சிமொழி சட்டம் என்று தன்னுடைய சுயராஜ்யா இதழில் எழுதிய ராஜாஜி, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் திமுகவுக்கு நேசக்கரம் நீட்டினார்.

திமுகவின் துக்கள்நாள் அறிவிப்பு குறித்து சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் பக்தவத்சலம், திமுக குடியரசு தினத்தை அமைதியான முறையில் துக்கநாளாகக் கொண்டாடினாலும் அதனைப் பார்த்துக் கொண்டு அரசாங்கம் சும்மா இருக்காது. திருமண வீட்டில் யாராவது அழுதுகொண்டிருந்தால் அதைத் திருமண வீட்டார் அனுமதிக்கமாட்டார்கள். அழுதுகொண்டிருப்பவர்களை வெளியே பிடித்துத் தள்ளி விடுவார்கள். திமுகவினர் தமது வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றுவதை அரசாங்கம் அனுமதிக்காது. கலவரமே ஏற்பட்டாலும் திமுகவினருக்கு அரசு பாதுகாப்பு தராது. பொதுமக்களே அவர்களுடைய அடாத செயலைத் தடுத்து நிறுத்திவிடுவார்கள் என்றார்.

போராட்டத்தில் இறங்குவது குறித்து சென்னை, மதுரை, தஞ்சை, திருச்சி, கோவை என்று பல இடங்களில் மாணவர்கள் கூடிப்பேசினர். இந்தித் திணிப்புக்கு எதிராக உயிர்த்தியாகம் செய்த கீழப்பழுவூர் சின்னச்சாமியின் முதலாம் ஆண்டு நினைவுநாள் 25 ஜனவரி 1965 அன்று போராட்டத்தைத் தொடங்க முடிவுசெய்தனர் மாணவர்கள். போராட்டங்கள் குறித்த தகவல்கள் கல்லூரி மாணவர்களுக்குக் கடிதம் மூலமாக அனுப்பப்பட்டன. சில மாணவர்கள் கல்லூரிகளுக்கு நேரில் சென்று ஆதரவு திரட்டினர்.

25 ஜனவரி 1965 அன்று போராட்டம் தொடங்கியது. மதுரையைச் சேர்ந்த கா. காளிமுத்துவும் நா. காமராசனும் இந்திய அரசியல் சட்டத்தின் பதினேழாவது பிரிவின் நகல்களை எரித்தனர். பின்னர் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். கண்டன ஊர்வலத்தில் கலந்துகொண்ட மற்ற மாணவர்களும் கைது செய்யப்பட்டனர். இடையில் காங்கிரஸ் கட்சியினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.

மதுரையில் மட்டுமல்ல, கோவை, திருச்சி, மேலூர், மாயவரம், தஞ்சாவூர், சிதம்பரம், கும்பகோணம், விருதுநகர், திருநெல்வேலி, ஈரோடு, திருப்பூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மாணவர் போராட்டங்கள் ஆக்கிரமித்தன. மாணவர்கள் தலைவர்கள் முதலமைச்சர் பக்தவத்சலத்தைச் சந்தித்துப் பேச விரும்பினர். ஆனால் அதற்கு மறுத்துவிட்டார் பக்தவத்சலம்.

26 ஜனவரி 1965 அன்று அதிகாலை நான்கு மணிக்கு சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சிவலிங்கம் என்ற இளைஞர் இந்தித் திணிப்பைக் கண்டித்துத் தீக்குளித்துவிட்டார் என்ற செய்தி பதற்றத்தை ஏற்படுத்தியது. பின்னர் விருகம்பாக்கம் அரங்கநாதன் தீக்குளித்தார். இந்தித் திணிப்பை எதிர்த்து தற்கொலைச் சம்பவங்கள் தொடர்ந்தன. அய்யம்பாளையம் வீரப்பன், சத்தியமங்கலம் முத்து, மயிலாடுதுறை சாரங்கபாணி, விராலிமலை சண்முகம், கீரனூர் முத்து, சிவகங்கை ராஜேந்திரன், பீளமேடு தண்டபாணி என்று தமிழுக்காகத் தம்மைப் பலிகொடுத்தவர்கள் பட்டியல் நீண்டுகொண்டே சென்றது.

ஜனவரி 26 அன்றுதான் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தபோதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் முந்தைய நாளில் இருந்தே திமுகவின் முக்கியத் தலைவர்கள் பலரையும் கைது செய்தது பக்தவத்சலம் அரசு. ஆனாலும் போராட்டம் தடைபடவில்லை. திமுகவினர் தமது வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றினர். சட்டையில் கறுப்பு பேட்ஜ் அணிந்தனர்.

திமுகவினர் ஒருபக்கம் போராட்டம் நடத்திக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் மாணவர்களின் போராட்டமும் தொடர்ந்துகொண்டிருந்தது. மாணவர் போராட்டங்களுக்கும் தீக்குளிப்புகளுக்கும் பின்னணியில் திமுகவினரின் கரங்கள் இருக்கின்றன என்றார் சாஸ்திரி. போராட்டத் தேதிக்கு முன்பே திமுகவின் முக்கியத் தலைவர்களையும் தொண்டர்களையும் கைது செய்துவிட்ட சூழலில் மாணவர்களை திமுக தூண்டுகிறது என்பது குற்றச்சாட்டு அல்ல; குழப்பம் விளைவிக்கும் முயற்சி என்றார் அண்ணா.

3 பிப்ரவரி 1965 அன்று தமிழ்நாடு மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்புக் குழு உருவாக்கப்பட்டது. கட்சி சார்புள்ள மாணவர்கள் பலர் அமைப்புக்குள் இருந்தபோதும் எந்தவித கட்சி சாயமும் இல்லாத ரவிச்சந்திரன் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உடனடியாகப் போராட்டத் திட்டங்கள் வகுக்கப்பட்டன. பிறகு மாணவர் அமைப்பின் சார்பில் முதலமைச்சர் பக்தவத்சலத்தைச் சந்திக்கச் சென்றனர்.

ஜனவரி மாத இறுதியில் மாணவர்களை சந்திக்க மறுத்த முதலமைச்சர் இப்போது கொஞ்சம் இறங்கி வந்திருந்தார். அப்போதே சந்தித்திருந்தால் எத்தனையோ உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கமுடியும். சேதங்களைத் தடுத்திருக்க முடியும். முதல்வர் – மாணவர் சந்திப்பு நடந்தது. ஆனால் அப்படியொரு சந்திப்பே நடந்திருக்க வேண்டாம் என்ற அளவுக்கு மாணவர் தலைவர்களை அவமதித்து அனுப்பினார் முதலவர். போதாக்குறைக்கு, இந்தித் திணிப்பை வாபஸ்பெற முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தார் பிரதமர் சாஸ்திரி.

அதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. ரயில் மறியல் போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம், இந்தி எழுத்துகள் அழிப்பு, கடையடைப்பு என்று போராட்டம் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்தது. மாணவர்களின் போராட்டத்தை அடக்கும் நோக்கத்துடன் ஏராளமான மாணவர்களைக் கைது செய்தனர். ராணுவம் வரவழைக்கப்பட்டது. தேவைப்பட்டால் துப்பாக்கிச்சூடு நடத்தவும் தயாராக இருங்கள் என்று காவல்துறையினருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக ஒரு செய்தி அண்ணாவை வந்தடைந்தது.

நிலைமை எல்லை மீறுகிறது என்று தெரிந்ததும் மாணவர்களை அழைத்துப் பேசினார் அண்ணா. ஒரு போராட்டத்துக்குத் தேவையான அனைத்து உத்திகளையும் நீங்கள் பயன்படுத்திவிட்டீர்கள்; உங்கள் ஆயுதக் கிடங்குகளில் இருக்கும் பெரும்பாலான ஆயுதங்கள் தீர்ந்துவிட்டன; எனினும், தமிழுக்கு இழைக்கப்படும் அநீதியை உலகறியச் செய்வதில் மாணவர் போராட்டம் வெற்றிபெற்றுவிட்டது. போதும். போராட்டம் போதும். நேரடி நடவடிக்கையை உடனே நிறுத்துங்கள். இதுதான் அண்ணா கொடுத்த யோசனை.

அண்ணாவின் தலையீட்டுக்குப் பிறகும் மாணவர்கள் அமைதியடையவில்லை. போராட்டம் தொடர்ந்தது. விளைவு, துப்பாக்கியைத் தூக்கினர் காவலர்கள். ஏழு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருபத்தைந்து பேர் கொல்லப்பட்டனர். இது அரசாங்கம் சொன்ன கணக்கு. ஆனால் அசல் கணக்கு இன்னும் அதிகம் என்றனர் மாணவர் தலைவர்கள்.

திடீர் திருப்பமாக இந்தித் திணிப்பைக் கண்டித்தும் ஆங்கில நீட்டிப்பு குறித்த உத்தரவாதத்தைக் கோரியும் 11 பிப்ரவரி 1965 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சி. சுப்ரமணியமும் ஓ.வி. அளகேசனும் தமது பதவியை ராஜினாமா செய்தனர். பின்னர் இருவருமே ராஜினாமா கடிதங்களை வாபஸ் பெற்றனர்.

16 பிப்ரவரி 1965. திடீரென திமுக பொருளாளர் கருணாநிதி இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்த மாணவர்களைத் தூண்டிவிட்டவர் கருணாநிதி என்பதுதான் அரசு முன்வைத்த குற்றச்சாட்டு. ஆனால் இந்தித் திணிப்பை எதிர்த்து உயிர்த் தியாகம் செய்தவர்களைப் பார்த்து முதலமைச்சர் பக்தவத்சலம் திருப்திப்படுவதாக முரசொலியில் கார்ட்டூன் வெளியிட்டதுதான் கைதுக்குக் காரணம் என்பது கருணாநிதியின் வாதம்.

கொந்தளிப்பு அதிகரித்திருந்த சூழலில் 22 பிப்ரவரி 1965 அன்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூடியது. ஆட்சி மொழிச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றனர் இந்திரா, பிஜூ பட்நாயக், எஸ்.கே. பாட்டீல் உள்ளிட்டோர். ஆனால் திருத்தத்துக்கான தேவையே எழவில்லை என்றனர் மொரார்ஜி தேசாய், ஜெகஜீவன் ராம் போன்றோர். சிக்கல் நீடித்தது. பிறகு முதல்வர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார் பிரதமர் சாஸ்திரி. பிரச்னை பற்றி ஆராய்ச்சி செய்ய துணைக்குழு அமைத்ததோடு கடமையை முடித்துக் கொண்டது அந்த மாநாடு.

காங்கிரஸ் கட்சி கூட்டிய செயற்குழு செயலற்றுப் போயிருந்தது; முதலமைச்சர்கள் நடத்திய மாநாட்டிலும் முடிவுகள் எட்டப்படவில்லை. எதிர்பார்ப்புகள் அனைத்தும் பொய்த்துப் போயிருந்தன. அதிருப்திகள் சூழ்ந்த நிலையில் முதலமைச்சர் பக்தவத்சலத்தைச் சந்தித்துப் பேசினார் மாணவர் தலைவர் ரவிச்சந்திரன். இந்தி பேசாத மாநிலங்களின் சம்மதம் இல்லாமல் ஆட்சி மொழி விஷயத்தில் மத்திய அரசு எந்தவித முடிவையும் எடுக்காது; ஆங்கிலம் இணை ஆட்சிமொழியாக நீடிக்கும் என்ற நேருவின் உத்தரவாதம் காப்பாற்றப்படும் என்று பிரதமர் சாஸ்திரி உறுதி கொடுத்துள்ளார். அதை நிறைவேற்ற என்னால் ஆனதைச் செய்வேன் என்று உத்தரவாதம் கொடுத்தார் முதலமைச்சர் பக்தவத்சலம்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு மிரட்டல் விடுக்கவும் பக்தவத்சலம் தவறவில்லை. ‘இனியும் மாணவர்கள் கூடிநின்று கிளர்ச்சி செய்தால் விமானத்தில் இருந்து துப்பாக்கியால் சுடச்சொல்வேன்!’ அதன் தொடர்ச்சியாக மாணவர் போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என்று அறிவித்தார் மாணவர் போராட்டக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன். அந்த முடிவை பல மாணவர்கள் ஏற்கவில்லை. மத்திய அரசு, இந்தித் திணிப்பு விஷயத்தில் மாணவர்களுக்கு மன நிறைவு தரக்கூடிய தீர்வைக் கொடுக்கும் வரையில் போராட்டம் தொடரும் என்று அறிவித்த அந்த மாணவர்கள், ரவிச்சந்திரனுக்குப் பதிலாக விருதுநகர் பெ. சீனிவாசனைத் தலைவராக்கினர்.

மாணவர்களின் போராட்டம் தொடர்ந்ததால் துப்பாக்கிச்சுடுகளும் கைது நடவடிக்கைகளும் தொடர்ந்தன. மொழிப்பிரச்னையைப் பெரியவர்களிடம் விட்டுவிடுங்கள்; கல்வியில் கவனம் செலுத்துங்கள் என்று மீண்டும் கோரிக்கை விடுத்தார் அண்ணா. பத்திரிகைகள், பெற்றோர் ஆகியோரின் ஆதரவு குறைவதை உணர்ந்துகொண்ட மாணவர்கள் 14 மார்ச் 1965 அன்று இந்தித் திணிப்புக்கு எதிரான மாணவர் போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

அளவுக்கு மீறிய அடக்குமுறை காரணமாகப் போராட்டங்கள் நசுக்கப்பட்டன என்றாலும் மனத்துக்குள் எரிந்துகொண்டிருந்த போராட்ட நெருப்பை அரசாங்கத்தால் அணைக்க முடியவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து நடந்த பொதுத்தேர்தலில் அந்த நெருப்பு தனது பலத்தை நிரூபித்தது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி அப்புறப்படுத்தப்பட்டது. அன்று முதல் இன்றுவரை சுமார் நாற்பது ஆண்டுகளாக ஆட்சியின் அருகில்கூட வராமல் இருக்கிறது காங்கிரஸ் கட்சி.

(முடிந்தது)

ஆர். முத்துக்குமார் எழுதிய ‘மொழிப்போர்‘ தனிப் புத்தகமாக உருவாகிக்கொண்டிருக்கிறது. நான்கு கட்டங்களாக நடைபெற்ற மொழிப்போராட்டமும், தொடர்ந்து அவ்வப்போது எழுந்த இந்தித் திணிப்பு முயற்சிகளும் மிக விரிவாக இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. போராட்டத்தை தமிழகம் எதிர்கொண்ட விதம், எதிரான விமரிசனங்கள், ஆய்வுகள் அனைத்தையும் உள்ளடக்கியுள்ள இந்தப் புத்தகம் விரைவில் வெளியாகவிருக்கிறது. மொழிப்போர் குறித்து கல்கி கிருஷ்ணமூர்த்தி தொடங்கி டி.என். சேஷன் வரை பலரும் முன்வைத்த விமரிசனங்களும் அவற்றுக்கான எதிர்வினைகளும் இந்நூலில் பதிவாகியுள்ளன. சமீபத்தில் எழுந்த பாடப்புத்தகச் சர்ச்சை குறித்த விவாதங்களும் இடம்பெறுகின்றன.

சின்னச்சாமியின் உயிர்த்தியாகம்

மொழிப்போர் / அத்தியாயம் 13

ஆட்சிமொழி ஆணையம், நாடாளுமன்றக் குழு ஆகியவற்றின் பரிந்துரைகளின் தொடர்ச்சியாக மத்திய உள்துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி 13 ஏப்ரல் 1963 அன்று ஆட்சி மொழி மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மசோதாவின்படி, 26 ஜனவரி 1965 முதல் இந்தி மொழி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்கும். இந்திக்குத் துணையாக ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம். இந்த இடத்தில்தான் சிக்கல் தொடங்கியது. ஷரத்துகளில் May, Shall என்ற இரண்டு ஆங்கில வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

மத்திய அரசின் ஆணைகள், அவசரச் சட்டங்கள், விதிமுறைகள் இந்தியில் மொழிபெயர்க்கப் பட்டால் அவை அதிகாரப்பூர்வமானவையாகக் கருதப்படவேண்டும் (shall be). நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்மொழியப்படும் மசோதாக்கள், திருத்தங்களுக்கு இந்தி மொழிபெயர்ப்பும் இணைக்கப்படவேண்டும் (shall be). மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் சட்டங்களும்கூட ஆங்கிலத்தோடு இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் (shall be). அந்த மொழிபெயர்ப்பும் அதிகாரப்பூர்வமானதாகக் கருதப்படும்
(shall be).

அரசியல் சாசனம் தொடங்கி பதினைந்து ஆண்டுகள் கழிந்தபிறகும் மத்திய அரசின் அனைத்து அதிகாரப் பூர்வ நோக்கங்களுக்கும் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கும் இந்தியோடு சேர்த்து ஆங்கில மொழியும் தொடர்ந்து பயன்படுத்தப்படலாம் (may be).

இந்தி மொழி பற்றிய ஷரத்தில் Shall be என்ற வார்த்தை அழுத்தம் திருத்தமாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் ஆங்கில மொழி பற்றிய ஷரத்தில் Shall be என்ற வார்த்தைக்குப் பதிலாக May be என்ற வார்த்தை மிகுந்த கவனத்துடன் பயன்படுத்தப்பட்டது. ஆம். இந்தியைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்று சொன்ன அந்தச் சட்டம், ஆங்கில விஷயத்தில் மட்டும் பயன்படுத்தப்படலாம் என்று பட்டும் படாமல் சொன்னது.

அதன்படி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலாகி பதினைந்து ஆண்டுகள் கழிந்த பிறகு (26 ஜனவரி 1965) இந்தியாவின் ஒரே ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருக்கும். இணை ஆட்சி மொழியாக ஆங்கிலம் பயன்படுத்தப்படலாம் அல்லது பயன்படுத்தப்படாமலும் போகலாம். இதன்மூலம் இந்தியைத் தவிர மற்ற தேசிய மொழிகளின் எதிர்காலத்துக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்ற சூழல் உருவாக்கப்பட்டது.

அப்படி இந்தியாவின் ஒரே ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டால் ஏற்படப்போகும் முக்கியமான பாதிப்பு இதுதான்: மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட தேசிய மொழிகளில் எழுதுவதற்கான கதவுகள் முற்றிலுமாக அடைபட்டுவிடும். இப்படி இன்னும் பல பாதிப்புகள் வரிசைகட்டிக் காத்திருக்கின்றன.

மசோதாவைத் தாக்கல் செய்து பேசிய உள்துறை அமைச்சர் சாஸ்திரி, நாடாளுமன்றக் குழுவால் வழங்கப்பட்ட அறிக்கையை இந்த அவையின் உறுப்பினர்கள் பரிசீலனை செய்திருக்கிறார்கள். நான் அறிந்தவரை இந்தக் குழுவின் பரிந்துரைகளுக்கு இந்த அவை ஒப்புதல் கொடுத்திருக்கிறது என்றார். அமைச்சரின் இந்தக் கருத்துக்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்தது.

அறிக்கையின் மீது வாக்கெடுப்பு எதுவும் நடத்தப்படவில்லை; திருத்தங்கள் கொடுப்பதற்கு அனுமதி தரப்படவில்லை. இந்நிலையில் அறிக்கையை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது என்ற தவறான தகவலை அமைச்ச்சர் அவைக்குத் தரக்கூடாது என்று ஆவேசமாகக் கூறினார் மக்களவை உறுப்பினர் ஃப்ராங்க் அந்தோனி. சட்டென்று சுதாரித்துக்கொண்ட அமைச்சர் சாஸ்திரி, “நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகளுக்கு அனுமதி அளிக்கும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்த மன்றத்தில் இருந்தார்கள்’ என்று பதிலளித்து, காங்கிரஸ் கட்சிக்குத்தான் பெரும்பான்மை இருக்கிறது, ஆகவே, காங்கிரஸ் கட்சி எடுக்கும் முடிவுதான் இறுதிமுடிவு என்பதை சொல்லாமல் சொல்லிமுடித்தார்.

நேருவின் முந்தைய வாக்குறுதி ஏன் மசோதாவில் இணைக்கப்படவில்லை என்ற கேள்வி நாடாளு மன்றத்தில் பலத்த விவாதத்தைக் கிளப்பியது. மக்களவை உறுப்பினர் ஃப்ராங்க் அந்தோனிக்கும் பிரதமர் நேருவுக்கும் இடையே நேருக்கு நேரான விவாதம் நடந்தது. உச்சக்கட்டமாக, ‘நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டம், மசோதாவுக்கும் உறுதிமொழிக்கும் தொடர்பு இல்லை. நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகிய அமைப்புகளின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவது முட்டாள்தனம்’ என்று பதில் சொல்லி எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார் பிரதமர் நேரு.

பிரதமர் நேருவின் இந்தப் பேச்சுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரன் ஆற்றிய எதிர்வினை கவனிக்கத்தக்கது.

‘பிளாரன்ஸ் வணிகன் மாக்கியவல்லி கூறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன். எவ்வளவு வாக்குறுதிகள் கொடுக்கமுடியுமோ, அவ்வளவு கொடு. ஆனால் அதன்படி நடக்காதே என்றான் மாக்கியவல்லி. பிரதமர் அதனைப் பின்பற்றுவாரானால், அவருக்கு இருபதாம் நூற்றாண்டின் மாக்கியவல்லி என்று பட்டமளிக்கிறேன்.’

ஆட்சிமொழி சட்டத்தில் இருக்கும் May, Shall என்ற வார்த்தைகள் இந்தி பேசாத மக்களை அவமதிக்கிறது; தவிரவும், இந்தி மொழி புழக்கத்தில் இல்லாத பிராந்தியங்களின் மக்கள் விரும்பும்வரை ஆங்கிலத்தை அகற்றமாட்டேன்; ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக நீடிக்கும் என்ற நேருவின் வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது என்று விமரிசித்தார் அண்ணா. இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் குறித்து ஆலோசனை செய்வதற்காக திமுகவின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்கள் 8 ஜூன் 1963 தொடங்கி மூன்று நாள்களுக்கு நடந்தன.

ஆலோசனைக்கூட்டங்களின் முடிவில் இந்தித் திணிப்பை எதிர்த்து திமுக நேரடிப் போராட்டத்தில் இறங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. போராட்டக்குழுவின் தலைவராக மு. கருணாநிதி தேர்வு செய்யப்பட்டார். அந்தக் குழுவில் என்.வி. நடராசன் உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்கள், மாநில அமைப்பாளர்கள் இடம்பெற்றனர்.

நான்கு லட்சம் உறுப்பினர்கள், நாலாயிரத்து ஐந்நூறு கிளைகள், மூவாயிரம் துணை மன்றங்கள், ஐம்பது சட்டமன்ற உறுப்பினர்கள், ஏழு தமிழ்நாடு மேலவை உறுப்பினர்கள், ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பதினோரு நகராட்சிகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் திமுக இந்தித் திணிப்புப் போராட்டத்துக்குத் தயாராகிவிட்டது என்பது மத்திய ஆட்சியாளர்களின் கவனத்துக்குச் சென்றது. திமுக கிளர்ச்சிகளைக் கைவிடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் உள்துறை அமைச்சர் சாஸ்திரி. ஆனால் அதனைப் புறக்கணித்துவிட்டுப் போராட்டத்துக்குத் தயாரானது திமுக.

மு. கருணாநிதி தலைமையிலான போராட்டக்குழுவினர் இந்தித் திணிப்புக்கு எதிரான பிரசாரப் பணிகளில் தீவிரம் காட்டினர். பொதுக்கூட்டங்கள். கண்டனக் கூட்டங்கள். பிரசார நாடகங்கள். சுவரொட்டிகள். துண்டுப்பிரசுரங்கள். கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் மூலம் மத்திய அரசின் இந்தித் திணிப்பு முயற்சிகள் மக்களுக்கு எடுத்துச்சொல்லப்பட்டன. 13 அக்டோபர் 1963 அன்று சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்புப் பொதுமாநாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்தியை ஆட்சிமொழியாக அறிவிக்கும் இந்திய அரசியல் சாசனத்தின் பதினேழாவது பிரிவை நீக்க வேண்டும்; தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் பதினான்கு தேசிய மொழிகளையும் ஆட்சிமொழியாக்கும் வகையில் புதிய சட்டப் பிரிவு இணைக்கப்படவேண்டும். இவைதான் எங்களுடைய பிரதான கோரிக்கைகள். அவற்றை வலியுறுத்தி 17 நவம்பர் 1963 தொடங்கி 26 ஜனவரி 1965 வரை இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவித்தது திமுக.

போராட்டங்கள் என்றால் பொதுக் கூட்டங்கள், பேரணிகள் நடத்துவது, ஊர்வலம் செல்வது, மறியல் செய்வது, கறுப்புக்கொடி காட்டுவது, கறுப்பு பேட்ஜ் அணிவது, கறுப்புக்கொடி ஏற்றுவது, இத்யாதி இத்யாதிகள். முக்கியமாக, ஆட்சிமொழிச் சட்டத்தின் பதினேழாவது பிரிவை நகலெடுத்து எரிப்பது. இந்தித் திணிப்பை அகற்ற நான்கு ஆண்டுகள் என்ன.. நாற்பது ஆண்டுகள் கூட சிறைசெல்லத் தயார் என்ற அண்ணாவின் முழக்கம் திமுகவினரைக் களம் நோக்கி நகர்த்திச் சென்றது.

அண்ணா, கே.ஏ. மதியழகன், மு. கருணாநிதி, க. அன்பழகன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் நேரடியாகக் களத்தில் இறங்கினர். தலைமை அறிவித்த அத்தனை வகையான போராட்டங்களும் அட்சரம் பிழகாமல் நடந்தன. சட்ட நகல் எரிப்புப் போராட்டம் பெரிய அளவில் நடந்தது. அதில் ஈடுபட்டவர்கள் ஆறுமாதம், ஒருவருடம் என்று சிறைத் தண்டனை பெற்றனர்.

திமுக நடத்திய மொழிப்போரின் தாக்கம் தமிழ் இளைஞர்களை உசுப்பேற்றியது. தமிழ் காக்கும் போராட்டத்தில் தங்களையும் ஈடுபடுத்திக்கொள்ளத் தயாராகினர். அவர்களில் ஒருவர் சின்னச்சாமி. வயது இருப்பத்தியேழு. திருச்சி மாவட்டம் கீழப்பழுவூர்கிராமத்தைச் சேர்ந்தவர். திருமணமானவர். திமுக தொண்டரான இவருக்கு மனைவியும் திராவிடச் செல்வி என்ற இரண்டு வயது மகளும் இருந்தனர். சொந்த வேலை காரணமாக திருச்சியில் இருந்து ரயில் மூலம் சென்னை சென்றிருக்கிறார் சின்னச்சாமி.

முதலமைச்சர் பக்தவத்சலமும் அதே ரயிலில்தான் பயணம் செய்கிறார் என்ற செய்தி காற்றுவாக்கில் காதில் விழுந்தது சின்னச்சாமிக்கு. உற்சாகம் வந்துவிட்டது சின்னச்சாமிக்கு. எப்படியாவது முதலமைச்சரைப் பார்த்துவிடவேண்டும் என்று நினைத்துக் கொண்டார். ரயில் சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் வந்து நின்றதும் முதலமைச்சரை நோக்கி ஓடினார்.

பாதுகாவலர்கள் புடைசூழ எதிரே வந்துகொண்டிருந்தார் முதலமைச்சர் பக்தவத்சலம். அவரைப் பார்த்த மாத்திரத்தில் மனத்துக்குள் எழுந்த கேள்வியைக் கேட்டார் சின்னச்சாமி.

“அய்யா, நீங்கள் தமிழைக் காப்பதற்காக இந்தித் திணிப்பைத் தடுக்கக்கூடாதா?’

ஏற்கெனவே திமுக நடத்திக்கொண்டிருந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களைக் கண்டு எரிச்சலில் இருந்தார் பக்தவத்சலம். இப்போது வழியில் தென்பட்ட யாரோ ஒருவர் இந்தித் திணிப்பு பற்றிக் கேள்வி கேட்டதை அவர் கொஞ்சமும் ரசிக்கவில்லை. சின்னச்சாமியின் கேள்வியை அலட்சியம் செய்துவிட்டு மின்னல் வேகத்தில் நகர்ந்து விட்டார்.

மறுநொடி சின்னச்சாமியை சூழ்ந்துகொண்டனர் காவலர்கள். கையோடு எழும்பூர் காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கத் தொடங்கினர். பிறகு விடுவித்துவிட்டனர். இருப்பினும், முதலமைச்சர் காட்டிய அலட்சியம் சின்னச்சாமியை அதிருப்தியில் ஆழ்த்தியது. இந்தித் திணிப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்குத் தன்னால் ஆன காரியத்தைச் செய்யவேண்டும். சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தவர் தன்னுடைய நண்பருக்குக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தின் முக்கியப்பகுதி இதோ:

ஏ, தமிழே! நீ வாழவேண்டும் என்பதற்காக நான் துடியாத் துடித்துச் சாகப்போகிறேன்.. காலை 11 மணிக்குள் என் உடல் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு செத்துவிடுவேன். இதைப் பார்த்த பிறகாவது ஏன் இந்தி? எதற்காக இந்தி? என்று மக்கள் கேட்கட்டும்.

எழுத்தில் சொன்னதைச் செயலில் காட்டத் தயாரானார் சின்னச்சாமி. 25 ஜனவரி 1964 அன்று காலை திருச்சி ரயில் நிலையத்துக்கு வந்த சின்னச்சாமி தன்னுடைய உடலுக்குத் தீ வைத்துக்கொண்டார். இந்தி ஒழிக! தமிழ் வாழ்க! என்ற கோஷம் எழுப்பியபடியே எரியத் தொடங்கினார். சில நிமிடங்களில் கோஷம் நின்றது. உயிர் பிரிந்தது. இந்தித் திணிப்பைக் கண்டித்து முதல் களபலியாக மாறியிருந்தார் சின்னச்சாமி!

0

நேருவுக்கு சம்பத் எழுதிய கடிதம்

மொழிப்போர் / அத்தியாயம் 12

7 ஏப்ரல் 1960 அன்று இந்திய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்திடம் இருந்து புதிய ஆணை ஒன்று வெளியானது. 1965 ஆம் ஆண்டு முதல் இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆகிவிடும். அதற்கான ஆயத்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதுதான் அதன் உள்ளடக்கம்.

இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை ஆங்கிலமே இருக்கும் என்ற பிரதமர் நேருவின் வாக்குறுதியை அடித்து நொறுக்கும் வகையில் வெளியான இந்த அறிவிப்பு இந்தி பேசாத மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, தமிழ்நாட்டு முக்கிய அரசியல் அமைப்புகளான திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியன குடியரசுத் தலைவரின் இந்தித் திணிப்பு அறிவிப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதற்குத் தயாராகின.

இந்தி என்னும் விஷ விருட்சத்தின் ஆணிவேரைக் கெல்லி எறிய ஒரே வழிதான் இருக்கிறது. அது, நாட்டுப் பிரிவினை. இந்திய யூனியன் வரைபடத்தில் தமிழ்நாடு தவிர்த்த மற்ற பகுதிகளுக்குத் தீவைத்து எரிக்கும் போராட்டத்தை நடத்தவேண்டும் என்று அழைப்பு விடுத்தார் திராவிடர் கழகத் தலைவர் பெரியார். திராவிடர் கழகத்தைப் பின்பற்றி திமுகவும் போராட்டத்தில் இறங்கத் தயாரானது.

18 ஜூன் 1960 அன்று குமாரபாளையத்தில் திமுக பொதுக்குழு கூடியது. இரண்டு நாள்களுக்கு நடந்த ஆலோசனைகளுக்குப் பிறகு மத்திய அரசின் இந்தித் திணிப்பு குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 30 ஆகஸ்டு 1960க்குள் குடியரசுத் தலைவர் தனது உத்தரவைத் திரும்பப்பெறவேண்டும். இந்தி பேசாத மக்களைக் கலந்தாலோசிக்காமல் இந்தி பற்றி முடிவெடுப்பதில்லை என்று அறிவிக்கவேண்டும். தவறினால், மறுநாளில் இருந்து இந்தி ஆதிக்கத்தில் இருந்து தென்னகத்தை விடுவிக்கும் விடுதலைப்போர் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

போராட்டத்தை நடத்துவதற்கு வசதியாக ஈ.வெ.கி. சம்பத் தலைமையில் போராட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் இரா. நெடுஞ்செழியன், க. அன்பழகன், மு. கருணாநிதி, கே.ஏ. மதியழகன் உள்ளிட்ட பலரும் இடம்பெற்றனர். போராட்டக்குழுவினர் விளக்கக் கூட்டங்கள், கண்டனக் கூட்டங்கள் ஆகியவற்றுக்கு ஏற்பாடுசெய்து, கலந்துகொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

திமுகவின் போராட்ட அறிவிப்பு முதலமைச்சர் காமராஜரின் கவனத்துக்குச் சென்றது. திமுகவினர் போராட்டம் நடத்தினால் அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டியிருக்கும் என்றார். முக்கியமாக, துப்பாக்கி இருக்கிறது. அதில் தோட்டாவும் இருக்கிறது என்று காமராஜர் பேசியதாக அண்ணாவுக்கு செய்தி வந்தது. “1938லே மொழிப்போர் நடந்தபோது மூன்று இளைஞர்கள்தான் தியாகம் செய்தனர். தற்போது திமுகவில் 3300 கிளைகள் இருக்கின்றன. மூன்று லட்சம் தொண்டர்கள் இருக்கிறார்கள்’ என்று காமராஜருக்குப் பதில் கொடுத்தார்.

பின்னர் பொதுக்குழுத் தீர்மானங்களைப் பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. அப்படியொரு பொதுக்கூட்டத்தில் பேசிய போராட்டக்குழுத் தலைவர் ஈ.வெ.கி. சம்பத்தின் பேச்சு கவனிக்கத்தக்கது.

‘காமராசருக்கு நாட்டு மக்கள் மீது, மொழியின் மீது நல்லெண்ணம் இருக்குமானால், இங்கு நடைபெறுவதை டில்லிக்கு எடுத்துச்சொல்லி, குடியரசுத் தலைவரின் தாக்கீதை நிறுத்திவைக்கச் சொல்லவேண்டும்… ஆனால் அவர் நம்முடைய மைதானத்துக்குள்ளே புகுந்து ஏதாவது செய்ய முடியுமா? என்று பார்க்கிறார். அதுதான் முடியாது’

பொதுக்குழுத் தீர்மானங்களை மக்களுக்கு விளக்கியதோடு நிறுத்திக்கொள்ளாமல் போராட்டக்குழுத் தலைவர் என்ற முறையில் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்துக்குக் கடிதம் ஒன்றை எழுதினார் ஈ.வெ.கி.சம்பத். ‘தவறான யோசனை அடங்கிய 27 ஏப்ரல் 1960 தேதியிட்ட தங்களுடைய கட்டளையில் அடங்கியிருக்கக்கூடிய, அச்சுறுத்துகின்ற கேடுகளை, திராவிட சமுதாயம் முழுதுமே எதிர்த்துக்கொண்டு இருப்பதுடன், மேற்படி கட்டளையைத் தாங்கள் திரும்பப்பெற்றுக்கொள்வதை பேராதரவுடன் எதிர்நோக்கி இருக்கிறது’ என்று எழுதியிருந்தார் ஈ.வெ.கி. சம்பத்.

திமுக சார்பில் பல பொதுக்கூட்டங்கள் நடந்தன. அவற்றின்மூலம் தமிழ் மக்கள் மத்தியில் இந்தித் திணிப்புக்கு எதிரான உணர்வுகள் மேலோங்கத் தொடங்கின. நிலைமை மோசமடைவதைத் தடுக்கும் வகையில் திமுக நடத்தும் கூட்டங்களுக்கு அனுமதி வழங்க மறுத்தது காமராஜர் தலைமையிலான தமிழக அரசு. ஏற்கெனவே தரப்பட்ட அனுமதிகளும் திரும்பப்பெறப்பட்டன. ஆனாலும் தடையை மீறிப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.

குடியரசுத் தலைவரின் இந்தித் திணிப்பு உத்தரவுக்குக்கு திராவிடர் கழகமும் திமுகவும் பலத்த எதிர்ப்புகளைத் தெரிவித்துக் கொண்டிருந்த சமயத்தில் 14 ஜூலை 1960 அன்று மதுரையில் கூடிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, குடியரசுத் தலைவரின் இந்தித் திணிப்பு உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.

காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியதற்கு மறுநாள் ஈ.வெ.கி.சம்பத் தலைமையிலான இந்தி எதிர்ப்புப் போராட்டக்குழு கூடியது. இரா. நெடுஞ்செழியன், என்.வி. நடராசன், கே.ஏ. மதியழகன், க. அன்பழகன், மதுரை முத்து, கோவை. ராசமாணிக்கம், அன்பில் தர்மலிங்கம், கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அந்தக்கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

 1. சென்னையில் திமுக சார்பாக இந்தி எதிர்ப்பு மாநாட்டை நடத்துவது.
 2. போராட்டத்தில் ஈடுபட விருப்பமுள்ளோரின் பட்டியலைத் தயார்செய்து போராட்டக்குழுத் தலைவருக்கு அனுப்புமாறு கிளைக்கழகச் செயலாளர்களைக் கேட்டுக்கொள்வது.
 3. திமுக ஆதரவு மாணவர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோருக்கு போராட்டத்தில் கலந்துகொள்வதில் இருந்து விலக்களிப்பது.
 4. போராட்ட நிதிக்காக 20 ஜூலை 1960 முதல் 27 ஜூலை 1960 வரை உண்டியல் மூலம் நிதிபெற்று தலைமைக் கழகத்துக்கு அனுப்பிவைக்குமாறு கழக நிர்வாகிகளைக் கேட்டுக்கொள்வது.

திட்டமிட்டபடி இந்தி எதிர்ப்பு மாநாடு ஒன்று சென்னை கோடம்பாக்கத்தில் 1 ஆகஸ்டு 1960 அன்று கூடியது. மாநாட்டுக்கு முன்பாக இந்தி எதிர்ப்பு சுவரொட்டிகளைத் தயார் செய்து சுவர்களில் ஒட்டுவதற்குத் தயாராகினர் திமுக தொண்டர்கள். ஆனால் அவற்றுக்கு அரசு திடீர் தடை விதித்தது. அதுவும், ஆபாச சுவரொட்டித் தடுப்புச் சட்டத்தின்கீழ். அரசின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் இந்தி எதிர்ப்பு மாநாட்டுக்கு பலத்த ஆதரவு இருந்தது.

விரைவில் தமிழ்நாட்டுக்குச் சுற்றுப்பயணம் வரவிருக்கும் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டவேண்டும் என்றும் இந்தித் திணிப்பு அறிவிப்பைத் திரும்பப் பெறுக என்று கோஷங்களை எழுப்பவேண்டும் என்றும் அந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. அந்தப் போராட்டத்தின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி அண்ணா பேசினார்.

கறுப்புக்கொடி காட்டுகிற நேரத்தில் குடியரசுத் தலைவரைத் திரும்பிப் போ என்று எவரும் சொல்லக்கூடாது. “இந்தி ஒழிக! கட்டளையைத் திரும்பப் பெறுக!’ என்றுதான் முழங்க வேண்டும். குடியரசுத் தலைவர் செல்லும் காரில் எதையும் எவரும் எறியக்கூடாது. அவர் தங்கியிருக்கும் கட்டிடத்துக்கு அருகில் எவரும் செல்லக்கூடாது. இவற்றை மீறுபவர்களை துரோகிகள் என்று சொல்லமாட்டேன்; மாறாக, அவர்கள் என் தம்பிகளே அல்ல!

போராட்ட தினத்தன்று தொண்டர்கள் ஏந்த வேண்டிய கறுப்புக்கொடிகளை அந்த மாநாட்டில் வைத்தே தலைவர்கள் வழங்கினர் அண்ணா. போராட்டம் பெரிய அளவில் இருக்கும் என்பதை உணர்ந்த மத்திய உள்துறை அமைச்சர், இந்தி ஆட்சி மொழி குறித்த அரசின் நிலைப்பாட்டை விளக்கும் வகையில் பேசினார்.

பிரதமரின் வாக்குறுதியில் இருந்து மாறுபடும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. அவர் அளித்த உறுதிமொழிக்கு ஏற்பவே அரசின் நடவடிக்கைகள் இருக்கும். இவையெல்லாம் குடியரசுத் தலைவரின் ஆணையிலேயே தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1965க்குப் பிறகும் ஆங்கிலம் நீடிக்கவேண்டும் என்பதைத் திட்டவட்டமாகத் தீர்மானித்துவிட்டோம். இதை உறுதி செய்யும் வகையில் 1965க்கு முன்பாகவே நாடாளுமன்றத்தில் புதிய மசோதா கொண்டுவரப்படும்.

குடியரசுத் தலைவருக்குக் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தை நடத்துவது என்று முடிவுசெய்துவிட்ட நிலையில், அதுகுறித்து பிரதமர் நேருவுக்குக் கடிதம் எழுதினார் போராட்டக்குழுத் தலைவர் ஈ.வெ.கி. சம்பத். அந்தக் கடிதத்தில், ‘ஏற்க மறுக்கும் மக்கள் மீது இந்தி ஒருபோதும் திணிக்கப்பட மாட்டாது’ என்ற பிரதமர் நேருவின் உறுதிமொழியை நினைவூட்டிய சம்பத், அந்த உறுதிமொழியை உருக்குலைக்கும் வகையில் குடியரசுத் தலைவரின் உத்தரவு அமைந்துவிட்டதைப் பதிவுசெய்தார். மேலும், இந்தி பேசாத மக்ககளுக்கு பிரதமர் நேரு முன்னர் அளித்த உறுதிமொழியை மீண்டும் ஒருமுறை அளிக்கும் பட்சத்தில், இந்தப் பிரச்னையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையை இந்த சந்தர்ப்பத்தில் தணிக்கும் என்று நம்புவதாக எழுதியிருந்தார்.

அதற்குப் பதில் கடிதம் எழுதினார் பிரதமர் நேரு. அந்தக் கடிதத்தில், ‘மொழிப்பிரச்னை பற்றி நான் மக்களவையில் அளித்த வாக்குறுதிக்குப் புறம்பான காரியங்களை எப்போதும், எந்தச் சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் நிறைவேற்ற வாய்ப்பில்லை… நாங்கள் அளித்த வாக்குறுதிக்குக் கட்டுப்பட்டே இருக்கிறோம்’ என்று எழுதினார். இத்தனைக்குப் பிறகும் குடியரசுத் தலைவருக்குக் கறுப்புக்கொடி காட்டி அவரை அவமதிப்பது தமக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என்றும் நேரு அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

நேருவின் பதில் கடிதம் குறித்து திமுகவின் போராட்டக் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட அதேசமயத்தில், ஐதராபாத் இந்தி பிரசார சபாவில் பேசிய குடியரசுத் தலைவர், ‘எதிர்காலத்தில் மொழிப்பிரச்னை குறித்து பரிசீலிக்கும்போது அல்லது விவாதிக்கும்போது, இந்தி பேசாத சகோதரர்களின் இடர்கள், உணர்ச்சிகள் புறக்கணிக்கப்பட மாட்டாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். நமது பிரதமர் அடிக்கடி பொதுமக்களிடமும் மக்களவையிலும் கூறியிருப்பது போன்று, இந்தி எவர் மீதும் திணிக்கப்பட மாட்டாது’ என்றார்.

பிரதமர் நேரு எழுதிய வாக்குறுதிக் கடிதம், குடியரசுத் தலைவரின் ஐதராபாத் பேச்சு ஆகிய இரண்டையும் மையமாக வைத்து 4 ஆகஸ்டு 1960 அன்று ஆய்வுசெய்தது திமுக போராட்டக்குழு. எதிர்பார்த்த இடத்தில் இருந்து நம்பிக்கை தரக்கூடிய உறுதிமொழிகள் பிரதமர் நேருவிடம் இருந்து கிடைத்துவிட்டதால் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது என்று அறிவித்தார் திமுக பொதுச்செயலாளர் இரா. நெடுஞ்செழியன். போராட்டம் முடிவுக்கு வந்தது, அப்போதைக்கு!

0

அதிர்ச்சி கொடுத்த ஆட்சிமொழி ஆணையம்

மொழிப்போர் / அத்தியாயம் 11

இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 344வது பிரிவின்படி, குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் 7 ஜூன் 1955 அன்று ஆட்சி மொழி ஆணையம் ஒன்றை அமைத்தார். அதன் தலைவராக பி.ஜி.கேர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழுவில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த சுனிதகுமார் சாட்டர்ஜி, தென்னகத்தைச் சேர்ந்த பி. சுப்பராயன் உள்ளிட்ட 21 பேர் இடம்பெற்றனர். அந்த ஆணையம் செய்யவேண்டிய பணிகள் அனைத்தும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே தெளிவாக வரையறை செய்யப்பட்டிருந்தன.

இந்திய அரசில் உள்ள துறைசார்ந்த பணிகளுக்கு இந்தி மொழியைப் பெருவாரியாகப் பயன்படுத்துதல், ஆங்கிலமொழியின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றச் சட்டங்கள் மற்றும் மசோதாக்களில் பயன்படுத்தவேண்டிய மொழியை அடையாளம் காணுதல் ஆகியன அந்த ஆணையத்தின் பணிகள். முக்கியமாக, இந்திய யூனியனின் ஆட்சிமொழி குறித்தும், மாநிலங்களுக்கு இடையே பரஸ்பரம் தொடர்புகொள்ளவேண்டிய மொழி குறித்தும் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்யவேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

அந்தப் பரிந்துரைகள் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கும் சில வரையறைகள் இருந்தன. அதாவது, ஆணையம் தனது பரிந்துரைகளைச் செய்யும்போது இந்தியாவின் மொழி, பண்பாடு, அறிவியல் வளர்ச்சி ஆகியவற்றையும் அரசுப் பணிகளைப் பொறுத்தவரை இந்தி பேசாத பகுதிகளைச் சேர்ந்த மக்களின் நியாயமான கோரிக்கைகள் மற்றும் நலன்களையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

சற்றேறக்குறைய ஓராண்டுகாலத்துக்குத் தனது ஆய்வுப்பணிகளை நடத்தியது இந்த ஆணையம். முதலில் கேள்வித்தாள் ஒன்றைத் தயாரித்து, மாநில அரசுகள், மாநில அரசு அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் சில பொது நிறுவனங்கள் ஆகியோருக்கு அனுப்பிவைத்தது. மொத்தமாக, 1094 பேரிடம் இருந்து விடைகள் வந்துசேர்ந்தன. 930 பேரிடம் இருந்து வாய்மொழிச் சான்றுகள் பெறப்பட்டன. ஆக, 2024 பேரின் கருத்துகளையும் பதில்களையும் அடிப்படையாகக் கொண்டு, விரிவான அறிக்கை ஒன்றைத் தயார் செய்த ஆணையம், அந்த அறிக்கையை 6 ஆகஸ்டு 1956 அன்று குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்திடம் சமர்ப்பித்தது.

கேள்வித்தாள் தயாரிக்கப்பட்ட விதத்தில் தொடங்கி அது யார், யாருக்கெல்லாம் அனுப்பட்டது என்பது வரை அனைத்தையும் இந்தித் திணிப்பு எதிர்ப்பாளர்கள் கேள்வி எழுப்பினர். குறிப்பாக, இந்திக்கு ஆதரவாக இருக்கின்ற காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்கின்ற மாநில அரசுகளுக்கும் அந்த அரசாங்கத்தில் வேலைபார்க்கும் அதிகாரிகளுக்கும் நீதிபதிகளுக்கும் கேள்வித்தாள் அனுப்பிய ஆணையம், இந்தித் திணிப்பைத் தீவிரமாக எதிர்க்கக்கூடிய திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களிடமோ கருத்து கேட்கவில்லை. அவர்களைப் புறக்கணித்துவிட்டது. இந்தி, ஆங்கிலம் ஆதரவாளர்களின் கருத்துகள், வாய்மொழி சாட்சிகளையும் அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்ட அறிக்கை இந்தி பேசாத மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க வாய்ப்பேயில்லை என்றனர்.

ஆட்சி மொழி ஆணையத்தில் இருந்தவர்கள் பலரும் இந்தி மொழிக்கு ஆதரவானவர்கள் என்பதால் அவர்களுடைய கருத்துகள் அனைத்தும் இந்தி மொழிக்கும் சாதகமாகவே இருந்தன. அதேசமயம், சுனிதகுமார் சாட்டர்ஜி, பி. சுப்பராயன் ஆகிய இருவரும் எதிர்க்கருத்துகளைப் பதிவுசெய்தனர்.

“ஆட்சி மொழி ஆணையத்தின் பரிந்துரைகளில் உள்ள கருத்துகள் பெரும்பாலும் இந்திய அரசில் உள்ள இந்தி பேசுவோரின் கருத்துகளே. இந்தப் பரிந்துரைகளால் உடனடியாகவும் நீண்ட கால நோக்கிலும் இந்தி மொழி பேசுவோரே பயன்பெறுவர். இந்தியாவில் இந்திமொழி பேசுவோர் முதல் நிலைக் குடிகளாகவும் இந்திமொழி பேசாதோர் இரண்டாம் நிலைக் குடிகளாகவும் ஆக்கப்படுவர். முக்கியமாக, இந்தி பேசாத மக்கள் தங்கள் மொழி குறித்து என்ன கருதுகிறார்கள் என்பதை அறிந்துகொள்வதற்கு ஆணையம் ஒரு சிறு முயற்சியையும் செய்ததாகத் தெரியவில்லை’ என்று கருத்துவெளியிட்டார் சுனித குமார் சாட்டர்ஜி.

சரி, அப்படியென்ன பரிந்துரைகளைச் செய்திருந்தது ஆட்சிமொழி ஆணையம்?

 • ஆட்சித்துறைக்குத் தேவையான சட்டங்கள், நெறிகள், கையேடுகள், குறிப்பு நூல்கள்
 • ஆகியவற்றை இந்தி மொழியில் மொழிபெயர்க்கவேண்டும்.
 • இந்தி மொழிக்குத் தேவையான எந்திரங்களையும் கருவிகளையும் விரைவாகத் தயாரிக்க வேண்டும்.
 • இந்தி மொழி மீது விருப்பம் உள்ள அரசு ஊழியர்கள் அதனைக் கற்றுக்கொள்ளலாம் என்ற நடைமுறை தகுந்த பயனைக் கொடுக்காத பட்சத்தில் அவர்களுக்கு கால வரையறை நிர்ணயித்து, இந்தியைக் கட்டாயமாகக் கற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யவேண்டும்.
 • அரசு ஊழியர்களுக்கு ஆங்கிலத் திறமை எந்த அளவுக்கு வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அதே அளவு திறமை இந்தியிலும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஆகவே, குறிப்பிட்ட கால அளவில் தகுந்த அளவு இந்திப் பயிற்சி பெறாதவர்களுக்குத் தண்டனை கொடுப்பது பொருத்தமானதுதான்.
 • மத்திய அரசின் தலைமைச் செயலகப் பணிகள் அனைத்தும் இந்தியிலே நடைபெறும் என்பதால் அங்கு வேலை செய்பவர்கள் இந்தி அறிவு படைத்தவர்களாக இருக்கவேண்டியது அவசியம்.
 • மாநில அரசு ஊழியர்கள் மத்திய அரசுடன் தொடர்புகொள்ள வேண்டியிருப்பதால் அவர்களும் இந்தியில் பயிற்சி பெற்றிருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது நியாயமானதே.
 • நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களும் மாநில சட்டமன்றங்களில் இயற்றப்படும் சட்டங்களும் ஒரே மொழியில் இருக்கவேண்டுமாதலால், நிலையான ஆணைகளும் விதிகளும் இந்தி மொழியிலேயே இருக்கவேண்டும்;
 • மொழிமாற்றத்துக்கு ஏற்ற காலம் வரும்போது உச்சநீதிமன்றம் இந்தி மொழியிலேயே செயல்படவேண்டும்.
 • மொழிமாற்றம் செய்வதற்குரிய காலம் வரும்போது உயர்நீதிமன்றத் தீர்ப்புகள், கட்டளைகள், ஆணைகள் அனைத்தும் இந்தி மொழியிலேயே இருக்கவேண்டும் என்பதற்காக நீதிமன்றங்களில் மொழிபெயர்ப்பு அமைப்புகளை ஏற்படுத்தவேண்டும்.
 • மத்திய, மாநில அரசுகளின் சட்டப்புத்தகங்களை இந்தியில் தயாரிக்கும் பணியை மத்திய அரசு செய்யவேண்டும்.
 • மத்திய அரசுப் பணிகளில் அதிகாரிகளாக வருபவர்களின் மொழியறிவை உத்தேசித்து,
 • இந்தியில் ஒரு கட்டாய வினாத்தாளை ஏற்படுத்துவது தகுதியானது.
 • இந்தி பரப்பும் பணியில் ஈடுபட்டிருக்கும் தனியார் அமைப்புகள் தங்களது பணிகளை விரிவுபடுத்தத் தேவையான நிதியுதவிகளை மத்திய அரசு செய்யவேண்டும்.

இந்தி பேசாத மக்கள் இந்தியையும் கற்றுக்கொள்ளவேண்டும் என்று மத்திய அரசு சொல்லவில்லை. இந்தியைக் கற்றுக்கொண்டே தீரவேண்டும்; அப்படிக் கற்றுக்கொள்வதைத்தவிர வேறு வழியே உங்களுக்கு இல்லை என்று இந்தி பேசாத மக்கள் மீது இந்தியை வலுக்கட்டாயமாகத் திணிக்க முயல்கிறது என்பதற்கு மேலே உள்ள அம்சங்களில் இருக்கும் அழுத்தம்கொடுக்கப்பட்ட அம்சங்கள் பொருத்தமான உதாரணங்கள். அதாவது, கால்வரையறை நிர்ணயித்து இந்தியக் கற்றுக்கொள்ள வேண்டும்; கற்றுக்கொள்ளாதவர்களுக்கு தண்டனை தரவேண்டும்; பணியில் நீடிக்கவேண்டும் என்றால் இந்தியைக் கற்றுக்கொண்டே தீரவேண்டும்.

ஆட்சி மொழி ஆணையத்தின் அறிக்கை 12 ஆகஸ்டு 1957 அன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையைத் தீவிரமாக ஆய்வு செய்து, கருத்து தெரிவிப்பதற்கு வசதியாக நாடாளுமன்றக் குழு ஒன்றை அமைக்கவேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதை ஏற்கெனவே பார்த்தோம். அப்படிப்பட்ட நாடாளுமன்றக் குழு ஒன்று மத்திய உள்துறை அமைச்சர் கோவிந்த வல்லப பந்த் தலைமையில் அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவில் மக்களவை உறுப்பினர்கள் இருபது பேரும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பத்து பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தப் புதிய நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர்கள் மாநில அரசுகள், அதிகாரிகள், மொழியியல் நிபுணர்கள், மொழிப்பண்டிதர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள் ஆகியோரிடம் கருத்துகளைக் கேட்டுத் தெரிந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்தக் குழுவினரோ ஆட்சிமொழி ஆணையம் கொடுத்த பரிந்துரை அறிக்கையை மட்டுமே ஆய்வுசெய்யத் தொடங்கியது.

இதில் என்ன விநோதம் என்றால் நாடாளுமன்றக்குழுவினர் நடத்திய ஆலோசனைக் கூட்டங்கள் அனைத்தும் ரகசியமாகவே நடத்தப்பட்டன. பத்திரிகையாளர்கள், நிருபர்கள் என்று எவரும் அந்தக் கூட்டங்களில் அனுமதிக்கப்படவில்லை. நீண்ட ஆய்வுகளுக்கும் ஆலோசனைகளுக்கும் பிறகு 8 பிப்ரவரி 1959 அன்று நாடாளுமன்றக் குழுவினரின் அறிக்கை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்த அறிக்கை பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த அறிக்கையுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபிராங்க் அந்தோணியின் மறுப்புக்குறிப்பு ஒன்றும் இணைக்கப்பட்டது. அந்த மறுப்புக்குறிப்பில், ‘இந்தி வெறியர்களின் அடாவடித்தனங்கள் நாட்டைப் பிளவுபடுத்துவதிலும் சிறுபான்மை மொழிகளை நசுக்குவதிலுமே முடியும்’ என்று எச்சரித்திருந்தார் ஃபிராங்க் அந்தோணி,

அப்போது அந்த அறிக்கை தொடர்பாக இந்தி பேசாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல சந்தேகங்களை எழுப்பினர். சில உறுப்பினர்கள் முக்கியமான திருத்தங்களைக் கொண்டுவரவேண்டும் என்று விரும்பினர். ஆனால் அப்படியான திருத்தங்களைச் செய்வதற்கு நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றார் மத்திய உள்துறை அமைச்சர். இந்த இடத்தில்தான் முக்கியமான சர்ச்சை எழுந்தது.

நாடாளுமன்றக் குழுவினர் தமது அறிக்கையை முதலில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தால் அந்த அறிக்கையில் உள்ள குறைபாடுகள், முரண்பாடுகள் குறித்து விரிவாகவும் தீர்க்கமாகவும் விவாதித்து, தேவையான திருத்தங்களைச் செய்து, அதன்பிறகு அந்த அறிக்கையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருக்கவேண்டும். ஆனால் அறிக்கை நேரடியாக குடியரசுத் தலைவருக்குச் சென்றுவிட்டதால் அதில் திருத்தங்கள் செய்ய வேண்டிய உரிமைகளை நாடாளுமன்றம் இழந்துவிட்டது என்ற குற்றச்சாட்டை இந்தி பேசாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்தனர்.

குறிப்பாக, ஆந்திராவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் திருமலைராவ், “அவையில் விவாதிப்பதற்காக அறிக்கை வந்திருக்கிறது. ஆனால் எந்தத் திருத்தத்தையும் அதில் செய்யக்கூடாது என்றால் எதற்காக அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யவேண்டும்?’ என்று கேள்வி எழுப்பினார். இந்நிலையில் பிரச்னை குறித்துப் பேசிய பிரதமர் ஜவாஹர்லால் நேரு, “நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர்கள் சமர்ப்பித்துள்ள அறிக்கையின் ஒவ்வொரு வரியையும் ஏற்றுக்கொள்கிறேன் என்றுகூறி உறுப்பினர்களை ஏமாற்றுவதற்கு நான் விரும்பவில்லை. அதேபோல, ஒவ்வொரு வரியையும் ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் நான் கூறவில்லை’ என்றார்.

இந்தி பேசாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை ஒருதலைப்பட்சமாக இருக்கிறது என்றும் இந்தி பேசாத மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டது என்றும் விடாமல் எதிர்க்குரல் எழுப்பினர். இந்நிலையில் இந்தி பேசாத மக்களைச் சமாதானம் செய்யும் வகையில் 7 ஆகஸ்டு 1959 அன்று நாடாளுமன்றத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதி ஒன்றைக் கொடுத்தார் பிரதமர் ஜவாஹர்லால் நேரு.

‘எவ்வளவு காலத்துக்கு மக்கள் விரும்புகிறார்களோ, அதுவரையில் ஆங்கிலம் இருக்கவேண்டும். இதற்கான முடிவுகூறும் உரிமையை இந்தி பேசும் மக்களிடம் நான் விடமாட்டேன். இந்தி பேசாத மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.’

பிரதமர் நேரு கொடுத்த வாக்குறுதி இந்தி பேசாத மக்களுக்கு மிகப்பெரிய தெம்பைக் கொடுத்தது!

0

இந்தியை எதிர்த்து ஆகஸ்டு கிளர்ச்சி

மொழிப்போர் / அத்தியாயம் 10

இந்தி மொழியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பதினேழாவது பகுதியில் உள்ள 351வது பிரிவு சொல்லும் விஷயம் இது ஒன்றுதான். அரசியலமைப்புச் சட்டமே சொல்லிவிட்டதால் அடுத்தகட்ட வேலைகளைத் தொடங்கியது மத்திய அரசு. இந்த இடத்தில் இந்தி மொழியின் வளர்ச்சிக்காகச் செய்யப்பட்ட சில முக்கிய காரியங்களை மட்டும் பார்க்கலாம்.

இந்தி டெலி பிரிண்டர்கள், தட்டெழுத்துப் பலகைகளைச் சீர்செய்து, முறைப்படுத்தப்பட்டன. இந்தி சுருக்கெழுத்து முறையை உருவாக்கி வளர்க்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்தி பேசாத பகுதிகளில் இந்தி ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கல்லூரிகளை அமைக்கும் திட்டங்கள் தொடங்கின. முக்கியமாக, கேந்த்ரீய இந்தி சம்மேளம் என்ற அமைப்பு இதற்கான பணியில் ஈடுபட்டது. இந்தி கற்றுத்தரும் தனியார் நிறுவனங்களுக்கு மானியங்கள் தரப்பட்டன. இந்தி அகராதிகளைத் தயாரிப்பது, இந்தி மொழியில் லிங்குவாஃபோன் மற்றும் டேப்புகள் தயாரிப்பது ஆகிய பணிகள் வேகமெடுத்தன.

பாஷ என்ற பெயரில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளியாகும் இந்தி பத்திரிகை ஒன்றும் இந்தி சமாச்சாட் ஜகத் என்ற பெயரில் மாதப் பத்திரிகை ஒன்றும் தொடங்கப்பட்டது. இந்தி பேசாத பகுதிகளைச் சேர்ந்த இந்தி எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கும் திட்டம், மத்திய அரசு ஊழியர்கள், இந்தி பேசாத பகுதிகள், வெளிநாடுகளிலும் உள்ளவர்களுக்கு அஞ்சல் துறை மூலமாக இந்தியைப் பயிற்றுவிக்கும் திட்டம் ஆகியன செயல்படுத்தப்பட்டன.

தனியார் பதிப்பகங்களுடன் இணைந்து இந்தி புத்தகங்களை வெளியிடுதல், இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் நூலகங்களுக்கும் இந்தி புத்தகங்களை இலவசமாக அனுப்புதல் ஆகிய பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்தியை சுயமாகவும் சுலபமாகவும் கற்றுக்கொள்ளும் புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

அத்தனைக்குமான செலவுகளும் மத்திய அரசுடையது என்பது கவனிக்கத்தக்கது. ஆட்சி மொழி அந்தஸ்து காரணமாக இந்தி வளர்ச்சித் திட்டங்கள் பெருமளவில் செயல்படுத்தப்பட்ட போது இந்தி பேசாத மக்கள் மத்தியில் இரண்டு கேள்விகள் எழுந்தன.

மொழி வளர்ச்சிக்காக இத்தனைப் பணிகளையும் இனிமேல்தான் செய்யவேண்டும் என்ற நிலையில் இருக்கும் இந்தியை ஏன் இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆக்கவேண்டும் என்பது முதல் கேள்வி. இந்தி மொழியின் வளர்ச்சிக்காக இந்த அளவுக்கு முயற்சிகள் எடுக்கும் மத்திய அரசு, மற்ற மாநில மொழிகளுக்கு என்ன மாதிரியான முயற்சிகளை எடுக்கப்போகிறது என்பது இரண்டாவது கேள்வி. இந்தக் கேள்விகள்தான் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ச்சியாக நடப்பதற்குத் தேவையான உந்துசக்தியாக இருந்தன.

மத்திய அரசின் இந்தி வளர்ச்சி நடவடிக்கைகள் எப்போதெல்லாம் இந்தித் திணிப்பு நடவடிக்கையாக எல்லை மீறுகிறதோ அப்போதெல்லாம் இந்தி பேசாத மக்கள் எதிர்க்குரல் எழுப்பினார்கள். குறிப்பாக, தமிழர்கள். நாணயங்கள், ரூபாய் நோட்டுகளில் இந்தி எழுத்துகள் மட்டுமே பொறிக்கப்பட்டபோது எதிர்த்தனர். மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி தெரிந்தவர்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்தபோது எதிர்ப்பு தெரிவித்தனர்.

அந்த வகையில் 1952 ஆம் ஆண்டு மத்திய அரசு எடுத்த இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுள் ஒன்று, ரயில் நிலையங்களில் உள்ள பெயர்ப்பலகைகளில் இந்திக்கு முன்னுரிமை கொடுத்தது. ஆங்கிலம் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில மொழிக்கு அடுத்த இடங்களே தரப்பட்டன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு திராவிடர் கழகம் கண்டனம் தெரிவித்தது.

ரயில் நிலையங்களில் இருக்கும் இந்தி எழுத்துகளைத் தார்பூசி அழிக்கவேண்டும் என்று சொன்ன பெரியார், இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தருவது என்பது வெறும் அரசியல் பணி அல்ல; இதுவொரு மொழிப் பாதுகாப்புப் பணி என்றே ஒவ்வொரு தமிழரும் கருதவேண்டும் என்றார்.

27 ஜூலை 1952 அன்று விடுதலையில் இந்தி நம் கழுத்துக்குச் சுருக்கு என்ற தலைப்பில் தலையங்கம் எழுதிய பெரியார், 1 ஆகஸ்டு 1952 அன்று ரயில் நிலையங்களின் பெயர்ப்பலகைகளில் உள்ள இந்தி எழுத்துகளைத் தார்பூசி அழிக்கும் போராட்டத்துக்கு அழைப்புவிடுத்தார். அப்போது சென்னை மாகாண முதலமைச்சராக இருந்தவர் ராஜாஜி. ஆம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னை மாகாண அரசு ராஜாஜியின் வசம் வந்துசேர்ந்திருந்தது.

கடந்த காலங்களில் இரண்டு முறை இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் நடந்துள்ளபோதும் இந்த மூன்றாவது போராட்டம் சில விஷயங்களில் மிகவும் முக்கியமானது என்று சொன்னார் பெரியார். குறிப்பாக, கடந்த காலங்களில் நடந்த போராட்டங்கள் வர்ணாசிரம எதிர்ப்பின் ஒருபகுதியாக நடந்தவை. ஆனால் இம்முறை நடக்கவிருக்கும் போராட்டங்கள் அதையும் தாண்டியவை என்றார் பெரியார். அந்தக் கருத்தை தலையங்கத்தில் பின்வருமாறு எழுதினார்.

இந்தக் கிளர்ச்சி கட்டாய முறைக்கு மாத்திரம் அல்லாமல் அரசியலிலும் சமுதாய இயலிலும் கல்வி இயலிலும் அரசாங்க ஆதரவில் அரசாங்க நடப்பில் திராவிட நாட்டில் இந்தி தலைகாட்டக்கூடாது என்பதற்கும் ஆகும். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், ரயில் பலகைகளில், போஸ்ட் ஆபீசுகளில், கார்டு கவர்களில், போஸ்ட் முத்திரைகளில் கட்டாயமாக இந்தியை சர்க்கார் புகுத்துகிறார்கள். அவர்கள் ஆட்சி முறையில் குழாயில் தண்ணீர் வருவது போல வந்து இந்தி புகுந்துகொண்டிருக்கிறது.

இந்தித் திணிப்புக்கு எதிராக திராவிடர் கழகம் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் திமுகவும் போராட்டக்களத்தில் இறங்கத் தயாரானது. முன்னதாக, கோவில்பட்டியில் நடந்த திமுக மாநாட்டில் இந்தித் திணிப்புக்கு எதிராக திமுக தொடர்ந்து போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதைச் செயல்படுத்தும் வகையில் 26 ஜூலை 1952 அன்று கூடிய திமுக செயற்குழுவில் ஆகஸ்டு மாதம் நடக்கவிருக்கும் போராட்டங்களில் திமுகவும் கலந்துகொள்வது என்று முடிவுசெய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திமுக சார்பில் அண்ணா அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

நமது எதிரியின் வெறியை அடக்க பெரியார் அவர்களும் ஆகஸ்டு முதல் தேதியைக் குறிப்பிட்டு வெளியிட்டிருக்கிறார்கள். 1950 ஆகஸ்டில் நாம் எச்சரித்தோம். 1952 ஆகஸ்டை அவர் தேர்ந்தெடுக்கிறார்! இரட்டைக்குழல் துப்பாக்கி வடநாட்டு இந்தி ஆதிபத்தியத்தின்மீது தாக்குதல் நடத்தப்போகிறது. மகிழ்கிறோம்!

ஆகஸ்டு முதல் நாள் முதல் கழகக் கொடியை மனத்திலே நினைத்து, அதன் ஒரு பாதியிலே நெளியும் சிகப்பு நாம் சிந்திய ரத்தம் என்பதை மறவாமல் தாரும் பிரஷ்ஷுமாகப் புறப்படுங்கள். இந்தியினை அழியுங்கள்!

திராவிடர் கழகம் சார்பில் யார், யார் எங்கெல்லாம் போராட்டங்களில் ஈடுபடப்போகிறார்கள் என்பது பட்டியல் போட்டு பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. அதைப்போலவே திமுக சார்பிலும் அண்ணா, நெடுஞ்செழியன், ஈ.வெ.கி. சம்பத், கருணாநிதி உள்ளிட்டோர் இந்தி எழுத்துகளை அழிக்கும் பணியில் ஈடுபடுவதற்குத் தயாராகினர். கடந்த காலங்களில் நடந்த மொழிப்போராட்டங்கள் துப்பாக்கிச்சூடு, தடியடி என்று பல நாள்களுக்கு நீடித்ததால் இம்முறை நடக்கும் போராட்டத்தை மாகாண அரசு எப்படி அணுகப் போகிறது என்ற கேள்வி எழுந்தது. அந்தக் கேள்வியை சட்டமன்றத்தில் எழுப்பினார் சி.பா. ஆதித்தனார்.

இந்தி எழுத்து அழிப்புப் போராட்டம் நடத்தும் திராவிடர் கழகத்தினருக்கு எதிராக போலீஸ் படையை ஏவப்போவதில்லை என்று பதிலளித்தார் முதலமைச்சர் ராஜாஜி. 1938ல் மொழிப்போராட்டம் நடந்தபோது சென்னை மாகாணத்தை ஆட்சி செய்தவர் ராஜாஜி. அப்போது போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் ஏவப்பட்டதால்தான் போராட்டம் தீவிரமடைந்தது. அந்த அனுபவம் கொடுத்த பாடத்தின் காரணமாகவே இம்முறை காவல்துறையை ஏவாமல் இருப்பதன்மூலம் போராட்டம் தீவிரமடைவதற்கான பாதையை அடைத்திருந்தார் முதலமைச்சர் ராஜாஜி.

திராவிடர் கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மாகாணம் தழுவிய அளவில் இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட திராவிடர் கழகத்தினர் புடைசூழ ஊர்வலமாகச் சென்ற பெரியார், திருச்சி ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தில் கலந்துகொண்டார். திராவிடர் கழகம் சார்பில் பெரியார் தவிர குத்தூசி குருசாமி, தி.பொ. வேதாச்சலம், கே.ஏ. மணியம்மை, டார்பிடோ ஜனார்த்தனம் உள்ளிட்ட தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு ரயில் நிலையத்தில் அண்ணா உள்ளிட்ட திமுகவினர் இந்தி எழுத்துகளை தார்பூசி அழித்தனர். திமுக சார்பாக கோயம்புத்தூரில் ஈ.வெ.கி. சம்பத், மதுரையில் நெடுஞ்செழியன், கடலூரில் கே.ஏ. மதியழகன், திருச்சியில் கருணாநிதி, சென்னையில் என்.வி. நடராசன், சத்தியவாணி முத்து ஆகியோர் தலைமையில் போராட்டங்கள் நடந்தன.

போராட்டம் முடிவடைந்தபிறகு பேசிய பெரியார் ஒரு முக்கியமான செய்தியைப் பகிர்ந்துகொண்டார்.

‘ஸ்டேஷனில் உள்ள எழுத்துகள் போய்விட்டதால் இந்தியே ஒழிந்துவிட்டது என்று நாங்கள் மனப்பால் குடிக்கவில்லை. தமிழ்நாட்டில் இருந்து இந்தி பரிபூரணமாக ஒழிக்கப்பட்டால்தான் வெற்றி.’

இந்தித் திணிப்பு எதிராக 1952 ஆகஸ்டில் நடந்த போராட்டத்தைப் போலவே ஒவ்வொரு ஆண்டும் நடத்த வேண்டும் என்று அறிவித்தார் பெரியார். அதன்படியே 1953 ஆகஸ்டு மாதத்திலும் இந்தி எழுத்து அழிப்புப் போராட்டம் நடந்தது. இம்முறை போராட்டத்துக்கு எதிர்வினை ஒன்று காத்திருந்தது. அதன் பின்னணியில் இருந்தவர் ம.பொ.சி.

தார் சட்டியுடன் திராவிடர் கழகத்தினர் வந்தால் நீங்கள் மண்ணெண்ணெய் புட்டியுடன் செல்லுங்கள் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு அறிவுரைகள் வந்துசேர்ந்தன. திராவிடர் கழகத்தினரால் தார் பூசப்பட்ட பகுதிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் மண்ணெண்ணெய் கொண்டு தாரை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ம.பொ. சிவஞானத்தின் தமிழரசுக் கழகத்தினர் உதவிகரமாக இருந்தனர். தமிழ்மொழி ஆர்வலராகவும் தமிழ்ப்பற்றாளராகவும் அறியப்பட்ட ம.பொ.சியின் இத்தகையை நடவடிக்கை திராவிட இயக்கத்தினரால் கடுமையான விமரிசனத்துக்கு ஆளானது.

இந்நிலையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 344 வது பிரிவின்படி ஆட்சிமொழி ஆணையம் அமைக்கப்பட்டது. சிக்கல்களைக் களைவதுதான் நோக்கம் என்று சொல்லி அமைக்கப்பட்ட ஆணையம் அடுத்தடுத்த சிக்கல்களுக்கு அடியெடுத்துக் கொடுத்தது!

0

நிறைவேறிய காந்தி கனவு

மொழிப்போர் / அத்தியாயம் 9

இந்தியாவின் ஆட்சிமொழி எது என்பதில் மத்திய சட்டமன்ற (நாடாளுமன்ற) காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டிருந்தன. அவற்றைக் களைந்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும் என்பதற்காகக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. என். கோபாலசாமி அய்யங்கார், டி.டி. கிருஷ்ணமாச்சாரி, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், கே.எம். முன்ஷி, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், சாதுல்லா, எம்.என்.ராய், அபுல் கலாம் ஆசாத், பண்டித பந்த், புருசோத்தம தாஸ் தாண்டன், பாலகிருஷ்ண சர்மா, சியாமா பிரசாத் முகர்ஜி, கே. சந்தானம் ஆகியோர் இடம்பெற்றனர்.

ஆட்சிமொழி பற்றிய ஆய்வு மற்றும் ஆலோசனைப் பணிகள் முடிந்ததும் அறிக்கை ஒன்றை அளித்தனர் அந்தக் குழுவினர். அந்த அறிக்கைக்கு முன்ஷி – அய்யங்கார் திட்டம் என்று பெயர். அந்தத் திட்டத்தில் பல முக்கியமான பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தன. அவற்றின் சுருக்கம் கீழே:

தேவநாகரி எழுத்துகளைக்கொண்ட இந்தி மத்திய அரசின் ஆட்சிமொழி. ஆங்கிலம் பதினைந்து ஆண்டுகளுக்கு ஆட்சிமொழியாக நீடிக்கும். அதற்குப் பின்னரும் ஆங்கிலத்தை ஆட்சிமொழியாகப் பயன்படுத்த நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம். இந்தியை நிர்வாகத்துறையில் பயன்படுத்த குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பிக்கலாம். உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள், அரசாங்கச் சட்டங்கள்,

சட்ட முன் வடிவுகள் உள்ளிட்ட அனைத்தும் ஆங்கிலத்தில்தான் இருக்கவேண்டும். மாநில அரசுகள் தங்களுடைய மாநில மொழியையோ அல்லது இந்தியையோ ஆட்சி மொழியாக ஏற்கலாம். அதுவரை ஆங்கிலம் ஆட்சிமொழியாக நீடிக்கவேண்டும்.

முன்ஷி – அய்யங்கார் திட்டம் குறித்து மத்திய சட்டமன்ற காங்கிரஸ் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனால் இந்தி ஆதரவாளர்கள், ஆங்கில ஆதரவாளர்கள் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை. ஆகவே, அரசியல் நிர்ணய சபையே இறுதி முடிவை எடுக்கட்டும் என்ற முடிவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் வந்தனர். அதனைத் தொடர்ந்து ராஜேந்திர பிரசாத் தலைமையில் 12 செப்டெம்பர் 1949 அன்று அரசியல் நிர்ணய சபை கூடியது. அதில் ஆட்சிமொழி பற்றிய விவாதங்கள் இரண்டு நாள்களுக்கு நடந்தன.

அந்தக் கூட்டத்தில் டாக்டர் சுப்பராயன், காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப், டி.டி. கிருஷ்ணமாச்சாரி, டி.ஏ. ராமலிங்கம் செட்டியார், பி.டி. சாக்கோ உள்ளிட்ட தென்னகத் தலைவர்கள் – சேத் கோவிந்த தாஸ், அபுல் கலாம் ஆசாத் உள்ளிட்ட வடநாட்டுத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் இரண்டு அம்சங்கள் குறித்து பேசப்பட்டது. இந்தியாவின் எந்த மொழியை ஆட்சிமொழியாக ஏற்றுக்கொள்வது என்பது முதல் அம்சம். இந்தியா முழுவதும் ஒரே வகையான எண்களைப் பயன்படுத்துவது என்பது இரண்டாவது அம்சம்.

அந்தக் கூட்டத்தில் இந்திக்கு ஆதரவான கருத்துகளும் ஆங்கிலத்துக்கு ஆதரவான கருத்துகளும் திரும்பத்திரும்ப பேசப்பட்டன. சென்னை மாகாணத்தில் பெரும்பான்மையான மக்கள் இந்தியைத்தான் விரும்புகிறார்கள் என்றார் புருஷோத்தம தாஸ் தாண்டன். ஆனால் அந்தக் கருத்துக்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. ஏனென்றால், இந்தித்திணிப்பு எழுந்த நொடியில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்த மாகாணங்களுள் சென்னை பிரதானமானது.

இந்தியாவின் பழைமையான மொழி ஆட்சிமொழியாக இருக்கவேண்டும் என்றால் தமிழ் அல்லது திராவிட மொழிகள்தான் இந்த மண்ணில் மிகவும் முற்பட்ட காலத்தில் இருந்து பேசப்பட்டு வருகின்ற மொழிகள் என்று பேசினார் காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப். ஒருபகுதியினர் மற்றொரு பகுதியினர் மீது ஆதிக்க எண்ணத்தை வளர்த்துக்கொண்டிருப்பார்கள் என்றால் அதன் விளைவுகள் நம்முடைய முன்னேற்றத்துக்கும் பாதுகாப்புக்கும் ஏற்றவையல்ல. எனவே, இந்தி பேசுபவர்கள் தங்களின் ஆதிக்க எண்ணத்தையும் சர்வாதிகாரப்போக்கையும் கைவிட்டு, ஒத்துழைக்க வேண்டும் என்றார் டி.ஏ. ராமலிங்கம் செட்டியார்.

பலத்த வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு வேறு வழியில்லாமல் 14 செப்டெம்பர் 1949 அன்று சில திருத்தங்களை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர். நானூறுக்கும் மேற்பட்ட திருத்தங்கள் திரும்பப்பெறப்பட்டன. அதன்படி, பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவது குறித்தும் தேவநாகரி எண்களைப் பயன்படுத்துவது குறித்தும் சட்டங்கள் இயற்றலாம்; குடியரசுத்தலைவரின் ஒப்புதலுடன் உயர்நீதிமன்றத்தில் இந்தியைப் பயன்படுத்தலாம்; சட்டங்கள், சட்டமுன்வடிவுகள், ஆணைகள் ஆகியவற்றை மாநில மொழிகளில் வெளியிடலாம் என்பன உள்ளிட்ட திருத்தங்கள் ஏற்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து திருத்தப்பட்ட முன்ஷி – அய்யங்கார் திட்டத்தின் அடிப்படையில் மொழிப் பிரிவுகள் அவையில் ஏற்கப்பட்டு, அரசியல் சட்டத்தின் பதினேழாவது பாகத்தில் இணைக்கப்பட்டன. அவற்றில் பிரிவு 343 தொடங்கி பிரிவு 351 வரையிலானவை மத்திய, மாநில அரசுகள், நீதிமன்றங்கள், நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தவேண்டிய மொழிகள் குறித்து விவரிக்கின்றன. அவற்றைக் கொஞ்சம் நுணுக்கமாகக் கவனித்தால் மொழிப்போர் என்பது ஓரிரு பேச்சுவார்த்தைகள் மூலமாக முடிந்துவிடக்கூடிய விஷயமல்ல; எதிர்காலத்தில் வெடித்துக் கிளம்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என்பது புலப்படும்.

343வது விதி தேவநாகரி வடிவத்தில் எழுதப்பட்டுள்ள இந்தி மொழியே மத்திய அரசின் ஆட்சிமொழி என்றும் 1965 வரையில் ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சிமொழியாகப் பயன்படுத்தப்படலாம் என்று கூறுகிறது. இதன்படி 1965 ஆம் ஆண்டு வரை ஆங்கிலம்தான் ஆட்சிமொழி என்றபோதும் இடைப்பட்ட காலத்தில் மத்திய அரசின் துறைகளில் இந்தியைப் பயன்படுத்துவதற்கு குடியரசுத்தலைவர் ஆணையிடலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்திக்கு மட்டும் குடியரசுத் தலைவர் சிறப்பு ஆணை வழங்கலாம்;, ஆனால் இந்தியாவின் ஏனைய மொழிகளுக்கு அந்தச் சலுகையை குடியரசுத் தலைவர் பயன்படுத்த முடியாது.

343வது விதி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தி மொழியின் வளர்ச்சியைக் கண்டறிய, ஆட்சிமொழி ஆணையம் ஒன்றை அமைக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்த ஆட்சி மொழி ஆணையத்தின் பணிகளில், இந்தியை மத்திய அரசுப் பணிகளுக்குப் பெருவாரியாகப் பயன்படுத்துவது, மத்திய அரசுப் பணிகளில் இயன்றவரைக்கும் ஆங்கிலத்தின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது ஆகியன பிரதானமானவை. இவற்றின் அர்த்தம், இந்தியை ஆட்சிப்பணிகளில் தீவிரமாக நுழைப்பதற்கான அத்தனை முயற்சிகளும் எடுக்கப்படும் என்பதுதான். ஆம். வளர்ச்சிப் பணிகள் என்றால் அது இந்திக்கு மட்டும்தான் நடக்கவேண்டுமே தவிர, இதர மொழிகளுக்கு அல்ல.

345வதுவிதி அந்தந்த மாநிலங்களில் வழங்கும் மொழிகள் ஆட்சிமொழி ஆவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது. 348 வது விதி உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றங்களில் ஆங்கிலம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதைத் தெரிவிக்கிறது. முக்கியமாக, இந்திய அரசியமைப்பின்படியோ, நாடாளுமன்ற, சட்டமன்றங்களின்படியோ தரப்படுகின்ற அனைத்து கட்டளைவிதிகள், ஒழுங்குமுறைகள், துணை விதிகள் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ மூலப்படிவங்கள் ஆங்கில மொழியிலேயே இருக்கவேண்டும் என்பதை உறுதிசெய்கிறது.

351வது விதி இந்தி மொழியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. குறிப்பாக, இந்தி மொழியைப் பரப்பி மேம்பாடு அடையச் செய்து, இந்தியக் கூட்டுப்பண்பாட்டின் அனைத்து கூறுகளுக்கும் இந்தியைச் சொல்லமைப்புச் சாதனமாக்கும் வகையில் வளர்த்து, இந்தியைச் செழித்தோங்கச் செய்வது மத்திய அரசின் கடமை என்று கூறுகிறது இந்த விதி.

ஒருவழியாக, இந்தி மொழிக்கு தேசிய மொழி என்ற அந்தஸ்து கிடைத்தது. நாம் இந்தி மொழிக்குத் தேசிய மொழி என்னும் தகுதியை வழங்காவிட்டால் சுதந்தரம் பற்றிப் பேசிவதில் பயனே இல்லை என்று சொன்ன காந்தியின் கனவு நிறைவேறியது.  இந்திய அரசியல் நிர்ணய சபையில் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி 14 செப்டெம்பர் 1949 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது . அடுத்த மூன்றாவது நாள் சென்னை மாகாணத்தில் ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்புமுனை ஏற்பட்டது.

இந்தித் திணிப்பு எதிராகத் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருந்த திராவிடர் கழகத்தில் கருத்து வேறுபாடுகள் முற்றி, பிளவு ஏற்பட்டது. திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்த சி.என். அண்ணாதுரையும் அவருடைய ஆதரவாளர்களும் இணைந்து 17 செப்டெம்பர் 1949 அன்று திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினர்.

இந்தியை வளர்க்கிறோம், இந்தியைப் பரப்புகிறோம் என்ற பெயரில் மத்திய அரசு இந்தியாவில் உள்ள இந்தி பேசாத மக்களின் உணர்வுகளின் மீதான தாக்குதல்களுக்கு அரசியல் சட்ட அங்கீகாரம் கிடைத்து விட்ட சமயத்தில் திராவிடர் கழகத்தில் ஏற்பட்ட பிளவு தேசிய அளவில் ஆச்சரியத்துடனும் மாகாண அளவில் கவலையுடனும் பார்க்கப்பட்டது. ஆனால் பின்னாளில் நடந்த இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்களில் திராவிடர் கழகமும் திமுகவும் இருமுனைகளில் இருந்து போராடின.

0

இந்தி விஷயத்தில் வேண்டாம் வீம்பு!

மொழிப்போர் / அத்தியாயம் 8

இந்தித் திணிப்புக்கு எதிரான உணர்வுகள் மெல்ல மெல்லப் பொங்கியெழுந்த சமயத்தில் அண்டைப் பகுதியான ஐதராபாத்தில் போர்ச்சூழல் உருவானது. சமஸ்தான இணைப்பில் மத்திய அரசு தீவிரம் காட்டிவந்த சமயத்தில் ஐதராபாத் சமஸ்தானம் முரண்டு பிடித்தது. விளைவு, ஐதராபாத் நிஜாமின் ரசாக்கர் படைகளுக்கு எதிராக இந்திய ராணுவம் நடவடிக்கையில் இறங்கியிருந்தது.

ஐதராபாத்தில் உள்ள கலவரச் சூழல் வேறு. இங்கே இருக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்பு வேறு.  இரண்டும் ஒன்றாகி, மிகப்பெரிய கலவரங்கள் ஏதும் ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் வகையில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் வேகத்தைச் சற்றே குறைத்துக்கொள்வது என்று போராட்டக்குழு முடிவெடுத்தது. 16 செப்டெம்பர் 1948 அன்று போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார் பெரியார். இது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தவர்களை சோர்வடையச் செய்தது. அவர்களைத் தேற்றும் பொறுப்பை அண்ணா கையில் எடுத்துக்கொண்டார்.

‘போராட்டம் தீவிரமாகவும் வெற்றியை நோக்கியும் சென்று கொண்டிருப்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. என்றாலும், ஐதராபாத்தில் நடந்துகொண்டிருக்கும் யுத்தம் முடிவுக்கு வரும்வரைக்கும் நம்முடைய நேரடி நடவடிக்கைகளை நிறுத்திவைக்கச் சொல்லியிருக்கிறார் பெரியார்.’ என்றார். அதன் அர்த்தம், ஹைதராபாத் யுத்தம் முடிந்ததும் மொழிப்போர் மீண்டும் தொடங்கும் என்பதுதான்.

ஹைதரபாத் நிஜாம் சரண் அடைந்து, யுத்தம் முடிவுக்கு வந்தபிறகும்கூட இந்தி விஷயத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு மாறவில்லை. இதனால் அதிருப்தியடைந்தார் பெரியார். ‘மீண்டும் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கும். அப்போது அரசாங்கம் அதனை ஒடுக்கமுயலும். தடியடிகள், துப்பாக்கிச்சூடு எதுவேண்டுமானாலும் நடக்கலாம். ஆனாலும் எங்கள் அழைப்பு வந்ததும், மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் இருந்து வெளியே வாருங்கள். படிப்பைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். அல்லது சிறையிலேயே பள்ளி நடத்தலாம். ஆசிரியர்களையும் உடன் அழைத்துவாருங்கள்’ என்று அழைப்பு விடுத்தார்.

அதன் தொடர்ச்சியாக 23 அக்டோபர் 1948 அன்று ஈரோட்டில் திராவிடர் கழக மாநாடு கூடியது. மாநாட்டுக்குத் தலைமை வகித்துப் பேசினார் அண்ணா.

‘மறியல் தொடங்குவதற்கு முன்னரே நமது கோரிக்கையிலுள்ள நியாயத்தை எடுத்துச் சொன்னோம். நாடாளும் சர்க்கார் அவற்றைக் கேட்க மறுத்தது. காரணங்கள் பல காட்டினோம். காதுகொடுக்க மறுத்தது. கட்டாயமாக்க வேண்டாம் என்று நாம் கெஞ்சினோம். அவர்கள் மிஞ்சினார்கள். புலவர்களைக் கொண்டு புத்திகூறச் செய்தோம்; புன்மையாளர்கள் மதித்தனர் இல்லை. கலை நிபுணர் கல்யாண சுந்தரனாரும் தமிழ்க்கடல் மறைமலை அடிகளாரும் இந்தியால் தமிழ் கெடும் என்று கூறிவிட்டபின்னர் முதன்மந்திரி ஓமந்தூர் ரெட்டியாரும் அமைச்சர் அவினாசியாரும், ‘கெடாது, கெடாது’ என்று எவ்வளவுதான் கூறினாலும் பொதுமக்களால் இவர்கள் வார்த்தையில் எப்படி நம்பிக்கை கொள்ளமுடியும்? வாதாடிப் பார்த்தோம். பயனில்லை. மறியலைக் கொஞ்சம் நிறுத்தியும் பார்த்தோம். புத்தி வரவில்லை. இந்த நிலையில் ஹைதராபாத் போரும் நின்றுவிட்டது. எனவே, அறப்போர் மீண்டும் தொடங்க வேண்டியதுதான். தொடங்கும் நாளை தலைவர் அறிவிப்பார்’

இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்களை மீண்டும் நவம்பர் முதல் தேதி முதல் நடத்துவது என்று மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. கட்டாய இந்திக்கு எதிராக மறியல் நடத்துங்கள்; அரசு தடைவிதித்தால் அதையும்மீறி மறியல் செய்யுங்கள்; கைது செய்து வழக்கு தொடர்ந்தால் ஜாமீனில் வெளியே வராதீர்கள்; எதிர்வழக்கு ஆடாதீர்கள்; அபராதம் விதித்தால் செலுத்தாதீர்கள் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் போராட்டக்காரர்களுக்குத் தரப்பட்டன.

30 அக்டோபர் 1948 அன்று சென்னை ஜிம்கானா திடலில் திரு.வி.கலியாண சுந்தரனார் தலைமையில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. ஆட்சியாளர்களே, ஆணவத்தால் அழியாதீர். நாட்டு மக்களின் மனதை நன்கு அறிந்து நான் கூறுகிறேன். இந்தி விஷயத்தில் வீம்பு வேண்டாம். வீண் பிடிவாதம் வேண்டாம். கட்டாயத்தை விட்டுவிடுங்கள். கபடம் வேண்டாம். கர்வம் வேண்டாம். பெரியாரைப் பகைத்துக்கொள்ள வேண்டாம். இன்றிரவே யோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். அறப்போர் தொடங்குவதற்குள் நாளைய தினமே ஒரு உத்தரவை வெளியிடுங்கள், கட்டாய இந்தியைக் கைவிட்டுவிட்டோம் என்று. அறவழி நாடுகள். அன்பு மார்க்கம் தேடுங்கள் என்று அறிவுரை வழங்கினார்.

அறிவித்தபடியே இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் மீண்டும் வலுக்கத் தொடங்கியது. பல மாவட்டங்களிலும் போராட்டங்கள் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து, கும்பகோணம், தூத்துக்குடி, மதுரை, கோவில்பட்டி, திருக்கோவிலூர், திருவாரூர், நன்னிலம், கொடவாசல், பேரளம், கல்லக்குறிச்சி, விழுப்புரம், வேலூர் ஆகிய இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தத் தடை விதித்தது அரசு. என்றாலும், தடையை மீறிப் பொதுக்கூட்டங்களும் மறியல்களும் நடந்தன. அவற்றைத் தடுக்கும் முயற்சியில் காவல்துறை இறங்கியது. தடியடிப் பிரயோகம் நடந்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட பெரியார், கே.கே. நீலமேகம், என்.வி. நடராசன், கே.ஏ. மணியம்மை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு தொடர்ப்பட்டு, சிறைத்தண்டனைகள் வழங்கப்பட்டன. இவர்களில் என்.வி. நடராசனைக் கைதுசெய்த காவலர்கள், அவருடைய உடலில் இருந்து ரத்தம் வரும்வரைக்கும் தாக்கியதோடு, அவருக்குக் கைவிலங்கு போட்டபடியே வீதியில் அழைத்துச்சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்டால் என்ன கதி ஏற்படும் என்பதை போராட்டத்தில் ஈடுபடுவோருக்குப் புரியவைக்க காவலர்கள் பயன்படுத்திய உத்தி அது.

சென்னை மாகாணத்தில் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் நடந்துகொண்டிருந்த சமயத்தில் இந்தி மொழி குறித்து தேசிய அளவிலான விவாதம் எழுந்தது. குறிப்பாக, சுதந்தர இந்தியாவின் ஆட்சி மொழி எது என்பது குறித்த விவாதங்கள் தேசிய அளவில் எழுந்தன. இந்திய அரசியல் நிர்ணய சபை 4 நவம்பர் 1948 அன்று கூடியது. அந்தக் கூட்டத்தில் மொழிப்பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் பேசிய எல்.கே. மெய்திரா என்ற உறுப்பினர், ‘நம்முடைய நாடாளுமன்றத்தில் இந்தி மொழியில் பேசாவிட்டால் சுதந்தரம் என்பது அர்த்தமற்ற ஒன்றாக மாறிவிடும்’ என்றார். அவருடைய கருத்துக்கு வேறுசில உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் இந்தக் கருத்தை தென்னகத்தைச் சேர்ந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி ஏற்கவில்லை.

‘தென்னக மக்கள் சார்பாக ஒரு எச்சரிகையைத் தெரிவிக்க விரும்புகிறேன். தென்னாட்டில் ஏற்கெனவே பிரிவினை கேட்கும் சக்திகள் (திராவிடர் கழகம்) உள்ளன. அவற்றின் பலத்தை நாம் முடிந்தவரை கட்டுப்படுத்த முயற்சிசெய்யவேண்டும். உத்தரபிரதேசத்தில் இருந்து வந்துள்ள நண்பர்கள் இதற்கு ஒத்துழைப்பு தருவதற்குப் பதிலாக இந்தி ஏகாதிபத்தியம் என்ற சவுக்கடியைக் கொடுக்கிறார்கள்’ என்றார் டி.டி. கிருஷ்ணமாச்சாரி.

மொழி விவகாரத்தில் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் இந்தி ஆதரவாளர்கள், ஆங்கில ஆதரவாளர்கள் என்று இரண்டு கூறுகளாகப் பிரிந்துநின்று விவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் கூர்மையடைவதற்குப் பதிலாக கடுமையடைந்தது. அப்போது பேசிய பிரதமர் நேரு, ‘அவசரம் காட்டினால் நமது நோக்கங்கள் நிறைவேறாது. சிறுபான்மையினர் மீது அவர்கள் விரும்பாத ஒன்றை பெரும்பான்மை கொண்டு திணிக்க முற்பட்டால், இந்த அவையோ அல்லது நாடோ எதை அடைய விரும்புகிறதோ அதற்கு வெற்றி கிடைக்காது’ என்றார்.

மொழி விவகாரத்தில் இந்திய அரசியல் நிர்ணய சபையின் தலைவர் ராஜேந்திர பிரசாத்துக்கும் பிரதமர் நேருவுக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன. சுதந்தர இந்தியாவின் அரசியல் சட்டம் இந்தியில் நிறைவேற்றப்பட்டதாக இருக்கவேண்டும் என்றார் ராஜேந்திர பிரசாத். ஆனால் அரசியல் சட்டம் ஆங்கிலத்தில்தான் இருக்கவேண்டும். இந்தி மொழியாக்கத்தை அங்கீகரித்தால் ஒவ்வொரு
இந்தி சொல்லுக்கும் பொருள் கொள்வது தொடர்பாக அவையில் காரசாரமான விவாதங்கள் ஏற்படும். ஒருமித்த கருத்து ஏற்படாது. நேரம் விரயமாகும் என்றார் பிரதமர் நேரு.

இந்தியா, ஆங்கிலமா என்பது தொடர்பாக ராஜேந்திர பிரசாத்துக்கும் நேருவுக்கும் இடையே கடிதப் பரிவர்த்தனைகள் நடந்தன. ஆனால் இருவருமே தத்தமது நிலையில் உறுதியாக இருந்தனர். அதனைத் தொடர்ந்து 8 ஆகஸ்டு 1949 அன்று இந்திய அரசியல் சட்ட நிர்ணய சபை மீண்டும் கூடியது. அதில் பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

முக்கியமாக, முதல் பத்து ஆண்டுகளுக்கு இந்தி அல்லது ஆங்கிலத்தை ஆட்சிமொழியாகப் பயன்படுத்தலாம் என்ற யோசனை சொல்லப்பட்டது. ஆனால் ஆங்கில ஆதரவாளர்களோ, ‘அல்லது’ என்ற பதத்தைப் பயன்படுத்தி ஆங்கிலத்தை அப்புறப்படுத்தப்பார்க்கிறீர்கள் என்று குற்றம்சாட்டினர். மேலும், முதல் பதினைந்து ஆண்டுகளுக்கு ஆங்கிலம் மட்டுமே ஆட்சிமொழியாக இருக்கவேண்டும். இந்தியைத் திணிக்கக்கூடாது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் விரும்பினால் ஆங்கிலத்துடன் இந்தியையும் முதல் பதினைந்து ஆண்டுகாலத்துக்கு ஆட்சிமொழியாகப் பயன்படுத்தலாம் என்றனர்.

வாதப் பிரதிவாதங்கள் நீடித்துக்கொண்டே சென்றதையடுத்து, மத்திய ஆட்சிமொழி தொடர்பாகப் பொது உடன்பாடு காண்பதற்கு குழு ஒன்றை அமைக்க முடிவுசெய்யப்பட்டது. இது அரசின் சார்பாக மைக்கப்பட்ட குழு அல்ல; காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுவுக்கு ஆலோசனை கூறுவதற்காக, அவர்களுக்கு இடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழு!

0