நேர்மையும் செல்வமும்

truthஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 30

சிலர் பத்து, பதினைந்து ஆண்டுகளாக நல்ல பெயருடன் சிறுதொழில் நடத்திக்கொண்டிருப்பார்கள். ஆரம்பித்துவிட்டு திணறுபவர்களும் இருப்பார்கள். பணமுடையால் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டு, தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாமல் தங்கள் வாழ்வையே சிக்கலாக்கிக் கொண்டவர்களும் உள்ளனர். ஒரு சில செல்வந்தர்களுக்கும் சிறுதொழில் ஆர்வம் இருக்கும். ஆனால் அதற்கான பொறுமை இருக்காது. வேறு சிலரைப் பயன்படுத்தி இவர்கள் தங்கள் கனவைப் பூர்த்தி செய்துகொள்வார்கள்.

சேகர் என்பவர், எலக்ரானிக்ஸ் துறையில் அனுபவம் வாய்ந்தவர். இவரது சிறுதொழில் நிறுவனம் சுமார் இருபது வருடங்களாக மார்க்கெட்டில் நிலைத்து வருகிறது. சுமார் இரண்டு கோடி வரை டர்ன்ஓவர் செய்துவந்தார். ஒரு கட்டத்தில், ஒரேயடியாக லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் தவறான நபர்களை தன் வியாபாரத்தில் இவர் இணைத்துக்கொண்டார். அவர்களோ இவருடைய பலவீனத்தை உணர்ந்து, பணப் பற்றாக்குறையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, சிறிது சிறிதாக நிறுவனத்தின் அதிகாரத்தை தங்கள் வசம் எடுத்துக்கொண்டனர்.
சேகர் மன உளைச்சலுக்கு ஆளானார். தொழில் கைவிட்டுப்போவதை அவர் உணர்ந்த பொழுது காலம் கடந்துவிட்டது. இவரை நம்பி, நிறுவனத்துக்குக் கச்சாப்பொருட்களைக் கொடுத்த மற்ற நிறுவனங்கள் நெருக்க ஆரம்பித்தனர். மற்றொரு பக்கம் வங்கிகள் கடனுக்காக அழுத்தம் கொடுக்கத் தொடங்கின. தொழிலாளர்களுக்குச் சம்பள பாக்கி வேறு.

சேகரைப் போன்று பல சிறுதொழிலதிபர்கள் இப்படிப்பட்ட சிக்கல்களில் எளிதாக மாட்டிக்கொண்டுவிடுகின்றனர். இது போன்று நிகழாமல் தடுப்பது தொழிலதிபரின் தலையாயக் கடமையாகும். குறுந்தொழில்களை மேற்கொண்டு நடத்த முடியாமலும் அல்லது விரிவுபடுத்த முடியாமலும் போகும்போது, நிறுவனம் ஒரு நிலையான இடத்தில் இருக்கும்போதே அதை ஒரு நல்ல விலைக்கு கைமாற்றித்தருதல் நலம்.

தன்னை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையைக் கேள்விகுறியாக்கி தொழிலை முடக்கி வைப்பது ஒரு சமுதாயத்துக்கு செய்யும் தீமை. நன்னடத்தையுள்ள தொழிலதிபர்களின் தொழில் முடங்கினாலும் வேறு ஒன்றை தொடங்குவதற்கான வாய்ப்புகள் எளிதாக அமையும். மாறாக தனி நபர் நாணயம் பறிபோனால் மீண்டு வருதல் மிக மிகக் கடினம்.

0

செல்வச் செழிப்புள்ள பலரைப் பார்க்கும்போது நம் எல்லோருக்கும் பொதுவாக ஒரு எண்ணம் தோன்றும். இவருக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது? நிச்சயம் இது தவறான முறையில் வந்ததாகத்தான் இருக்கும் என்று நினைத்துவிடுவோம். ஆனால் நம் அனைவருக்கும் அதே ஆசைகள் இருக்கின்றன என்பதை மறுக்கமுடியாது.

செழிப்புடன் வாழ்ந்து வரும் ஒரு தொழிலதிபர் குடும்பத்தை நான் அறிவோன். அப்பா, மகன், மகள், மருமகள் ஆகியோர் இணைந்து இத்தொழிலை நடத்தி வருகிறார்கள். அவர்கள் நேர்மையானவர்கள் என்பது எந்தவித சீர்கேடும் அற்றவர்கள் என்பதும் முக்கியமானது. மனித நேயத்தோடு பிறரை நடத்துவதிலும் தங்கள் செல்வத்தின் பிரம்மாண்டம் அடுத்தவரின் கண்ணை உருத்தாத அளவுக்கு நடந்து கொள்வதிலும் அவர்கள் திறமையானவர்கள்.
இதில் நான் உணர்ந்த உண்மை என்னவென்றால், பாஸிட்டிவாக உள்ளவர்களிடம் செல்வம் நல்ல எண்ணத்தை மட்டுமே தோற்றுவிக்கிறது. நல்ல உணர்வோடு பணத்தைக் கையாள்பவர்கள் தங்களைச் சுற்றி நல்ல மனிதர்களின் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்கின்றனர். பணத்தால் பெரிய எதிரிகளை இவர்கள் ஏற்படுத்திக் கொள்ளுவதில்லை.

இதற்கு மாறாக, அதிக சுயநலத்துடன் செல்வத்தை கையாண்டவர்கள், அந்தச் செல்வத்தால் மேன்மேலும் சிறப்புகளைப் பெறுவதில்லை. புத்தியோடு பகிர்ந்தளித்து வாழ்பவர்களிடம்தான் பணம் மீண்டும் மீண்டும் வந்து ஒட்டிக்கொள்கிறது.

ராமகிருஷ்ணன் என்பவர் பெரும் பணக்காரர். பொருளை நல்ல வழியில் சம்பாதித்தவர். இறை நம்பிக்கையும் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற தாராள சிந்தனையும் உள்ளவர். அதே சமயம் கேட்கும் பொழுதெல்லாம் அள்ளிக் கொடுக்கும் கர்ணனைப் போன்றவர். இவரது வருமானம் காலச்சுழற்சியில் தடைப்பட்டு போன பொழுது, கொடுக்க பணம் இல்லை என்று சொல்லத் தொடங்கினார். இவரிடம் வாங்கியே பழக்கப்பட்டவர்கள் இந்தப் பதிலை ஏற்க மறுத்தனர். இருக்கும் போது காசை வச்சுப் பிழைக்கத் தெரியலை. இப்ப நம்மகிட்ட வந்து உதவிக்கு நிற்கிறார் என்று பேசத் தொடங்கினார்.

இந்த நிலைமையை நம்மால் தடுக்கமுடியும். உதவிக்குக் கொடுக்கும்பொழுது சிந்தித்து, முடிவெடுத்து, இன்முகத்தோடு அடுத்தவருக்குக் கொடுங்கள். இல்லையேல் நிதானத்துடன் மறுத்துவிட்டு குற்ற உணர்ச்சி இல்லாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள்.

என் பெற்றோராகட்டும், மாமனார், மாமியாராகட்டும் இவர்கள் வாழ்க்கையில் நான் கண்ட பொதுவான அம்சம், மற்றவர்களுக்கு உணவளிப்பதிலாகட்டும் பரிசுகள் கொடுப்பதிலாகட்டும் அதை நல்ல சிந்தனையோடு அன்புடனும் விருப்பத்தோடு கொடுப்பார்கள். அதனால் தானோ என்னவோ அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் பெரிய வறுமையோ, பொருளிழப்பு அனுபவங்களோ இல்லாமல் வாழ்க்கை நடத்துகின்றனர். சிறு குழந்தைகளுக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே, மற்றவர்களுக்கு கொடுப்பதில் இருக்கும் சுகத்தைப் புரிய வைத்தல் நலமாகும்.

பணம் நம்மிடம் இருக்கும் பொழுது நாம் நல்லவர்களாக நடந்து கொள்வதைப் பொருத்தும் அது அதிக அளவில் பெருகினாலும், நல்லவர்களாகவே இருப்போம் என்று எண்ணுவதிலும்தான் செல்வத்தின் சூட்சமம் இருக்கிறது.

பணக்காரர்கள் கெட்டவர்கள், ஆணவக்காரர்கள், இரக்கமற்றவர்கள், அடுத்தவர்களின் ரத்தத்தை உறிஞ்சுபவர்கள் என்று சொல்லிச் சொல்லியே வளர்ந்துவருகிறோம். சினிமாவிலும் இதே கருத்து. அதிக பணம் ஆபத்தானது, நிம்மதியைக் கெடுத்துவிடும், நாம் கெட்டவர்களாக மாறிவிடுவோம் என்பன போன்ற எதிர்மறை எண்ணங்கள் நமக்குள் ஆழமாக ஊறிப்போயுள்ளன.

ஏன் நாம் நல்லவர்களாக, மனிதாபிமானம் உள்ளவர்களாக, கருணை, இரக்கம் கொண்டவர்களாக இருக்கக்கூடாது? செல்வம்-நன்மை என்று ஏன் நம்மால் தொடர்புபடுத்திக் கொள்ள முடிவதில்லை? இது நம்முடைய பலவீனம்.

பணம் வேண்டும் என்று வெளிமனமும், வேண்டாம் ஆபத்து என்று உள்மனமும் இரு வேறு திசையில் பயணிக்கும்பொழுது நம்மால் வளமையை எட்டமுடிவதில்லை. இதற்கு மாறாக மீண்டும் மீண்டும் பணம் வேண்டும், நல்ல விதத்தில் வேண்டும், அடுத்தவர் அழுகையிலிருந்து இல்லாமல் புன்னகையோடு வரவேண்டும். அந்தச் செல்வம் சிரிப்பையும் சந்தோஷத்தையும் கொடுக்க வேண்டும் என்று நினைத்தோமானால் நம்மால் செல்வந்தர்களாக நிச்சயம் ஆக முடியும். சுமையாக செல்வத்தை நினைக்கும் மனப்போக்கு மாறி நல்லவர்களோடு பணத்தையும், நன்மையோடு பணத்தையும் தொடர்புப்படுத்தி பார்க்க வேண்டும்.

உதாரணமாக நாட்டாமை சினிமாவில் வரும் ஒரு சரத்குமார் பாத்திரத்தைப் போல் அல்லது எஜமான் படத்தில் வரும் பாத்திரத்தைப் போல் பணக்காரர்கள் நல்லவர்களாக வாழும் சூழல் அதிகமாக அதிகமாக பணம் நன்மையாக மாறும். நம் ஊடகங்கள் பெண்களை, அதுவும் படித்த பெண்களை அரக்க குணம் கொண்டவர்களாகவே தொடர்ந்து காட்டி வருகிறது.

பொதுவாக நம் சமூகத்தில் சைக்கிளில் செல்பவன் அல்லது பஸ்ஸில் செல்பவன், ஏழையாகவும், காரில் செல்பவர்கள் அனைவரும் திமிர் பிடித்தவர்களாகவும் நம்பும் குணம் இருக்கிறது. காரில் செல்லும் ஒருவர் மிகுந்த கவனத்தோடு வண்டியை ஓட்டுபவராக இருப்பினும், குறுக்கே முட்டாள்தனமாக ஒருவர் வந்து விழுந்தால், சுற்றியுள்ள கூட்டம் வண்டியைச் சுற்றி நின்று பெரும் சப்தத்துடன் கூச்சலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி பணம் பறிக்கும் அவலம் நிறைய இடங்களில் நடக்கிறது. இதற்காக எல்லா ஏழைகளும் ஏமாற்று பேர்வழிகள் என்றோ அல்லது எல்லாப் பணக்காரர்களும் உத்தமர்கள் என்றோ நான் சொல்ல வரவில்லை. ஆனால் சைக்கிளில் செல்பவன் பைக் வாங்க ஆசைப்படுகிறான். பைக்கில் செல்பவனோ கார் வாங்க ஆசைப்படுகிறான். காரில் செல்பவனோ ஒரு விமானத்துக்குச் சொந்தக்காரனாக வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அவரவரின் தேவைக்கேற்ப பணத்தின் அளவு மாறுகிறதே ஒழிய, பணம் வேண்டும் என்ற எண்ணம் யாரிடமும் கடைசிமட்டும் மறைவதில்லை.

இந்தச் சூழலில் அடுத்தடுத்த நிலைகளுக்கு, பணத்தோடு மேலே போக வேண்டும் என்று நினைப்பவர்கள் நல்ல குணங்களை மட்டும் கீழே விட்டுவிட்டு, மேலே போவது எப்படி சாத்தியம்?

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி வரி ஏய்ப்புச் செய்வதாக எவ்வித உண்மையுமின்றி சில பத்திரிகைகள் எழுதி வந்தன. பல சமயம் அமைதியாக அதை புறம் தள்ளிய நாராயணமூர்த்தி ஒரு சமயம் பதிலடி கொடுக்க விரும்பினார். பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். அந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு வருடமும் வருமான வரித்துறையிடமிருந்து வந்த சம்மன்களையும் அவர் ஒழுங்காக வரிகட்டியதற்கான ரசீதுகளையும் தைரியமாக புன்னகையோடு எடுத்து வைத்தார். அவர் மடியில் கனம் இல்லாததாலும், பணத்தைப்பற்றிய தெளிவான அணுகுமுறை இருந்ததாலும் இது சாத்தியமானது.

அவர் மனைவி திருமதி. சுதா, பலவிதமான சமூக சேவைகளுக்கு நிறைய பொருளுதவி செய்வதோடு, சேவை மையங்களையும் நடத்தி வருகிறார். இதைப்போல் விப்ரோ நிறுவனர், மற்றும் குறிப்பிடத்தக்க பெரும் பணக்காரர்கள், சமூக சேவைக்காக நிறைய பணம் செலவழித்துவருவதை நாம் காணலாம். நல்லவர்களோடு தொடர்புகொள்ளும்பொழுது பணம் புனிதமடைகிறது. பெருகவும் செய்கிறது.

0

நினைவு தெரிந்த நாளிலிருந்து நாம் பணத்தின் பின்னால் அலையத் தொடங்கிவிடுகிறோம். ஆனாலும் எப்போதும் நம்மோடு பணம் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டே இருக்கிறது. ஒன்றும் இல்லாதவன் கொஞ்சம் கிடைத்தால் போதுமென்கிறான். கொஞ்சம் இருப்பவனோ, தன் எதிர்பார்ப்பின் விளிம்பை உயர்த்திக்கொண்டே போகிறான். அதிகம் இருப்பவனோ அதைப் பெருக்குவதிலும் தக்க வைத்துக் கொள்வதிலுமே தன் வாழ்நாளைச் செலவிடுகிறான்.
எல்லை தெரியாத மைதானத்தில் ஓடி ஓடிக் களைத்த ஒருவன், ஒரு கோடிக்குச் சென்ற பின்பு அங்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் மீண்டும் வந்த வழியே திரும்பி ஓடுவதைப் போல், பணம் நம்மை அலைகழிக்கிறது. அர்த்தமற்ற ஓட்டப்பந்தய வீரர்களாக நம்மை மாற்றிவிட்டது. பணத்தால் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அநேகம். இழந்த உறவுகள் அதிகம். தொலைத்த நட்புகள் அதிகம்.

பணம் ஒருவரையும் திருப்திபடுத்துவதில்லை என்பதே உண்மை. நம்மை மகிழ்விக்கவேண்டிய பணம் உண்மையில் நம்மை மன உளைச்சலுக்குத்தான் ஆளாக்குகிறது. இது ஏன் என்ற கேள்வியை நம்மில் பலரும் கேட்க மறுக்கின்றோம்.

நாம் செய்யவேண்டியது என்ன தெரியுமா? செல்வத்தை அடைவதில் பிழையில்லை. அதனால் வரும் பலன்களை அனுபவியுங்கள். அது கொடுக்கும் வளமையை ஈர்த்துக் கொள்ளுங்கள், தவறில்லை. ஆனால் அது வரும் வழியை உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும்.

சென்னை அண்ணாசாலையில் மிக முக்கிய இடத்தில் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக நண்பர்கள் இருவர்- கண்ணப்பன், முருகேசன்- பெரிய கடையெடுத்து கூட்டாகத் தொழில் செய்தனர். தொழில் நன்கு விரிவடைந்து லாபமும் பெருகியது. திடீரென்று ஒரு நாள் எதிர்பாராத விதத்தில் கண்ணப்பன் சாலை விபத்தில் மரணமடைந்துவிட்டார். அவர் மரணம், அவரது நண்பரை உலுக்கியது. ஆனால் சில மாதங்களிலேயே அவருக்குள் இருந்த சாத்தான் தலை தூக்கி அவரை திசைத் திருப்பியது.

கண்ணப்பன் மறைந்த பின் சில மாதங்கள் வரை அவரது மனைவிக்கு லாபத்தில் சரி பங்கு கொடுத்து, நிர்க்கதியான நண்பரின் குடும்பத்துக்கு ஆதரவு அளித்து வந்த முருகேசன், அதன் பின்னர் குறுகிய புத்தியுடன் செயல்பட்டார். இரண்டே, இரண்டு நண்பர்கள் நடத்தி வந்த நிறுவனத்தில் தனது சொந்தக்காரர்களைப் பங்குதாரர்கள் ஆக்கி, வந்த லாபத்தை பல கூறுகளாகப் பிரித்து, ஒரு சிறு பகுதியை மட்டும் கண்ணப்பனின் மனைவிக்குக் கொடுக்கத் தொடங்கினார். அதிகம் படித்திராத, உலக நடத்தை தெரியாத, சட்ட நுணுக்கம் அறியாத கண்ணப்பனின் மனைவி, அதில் உள்ள சூழ்ச்சியை அறியாமல் நீட்டிய காகிதங்களிலெல்லாம் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.

சிறிது சிறிதாக முழு நிர்வாகத்தையும், லாபத்தையும் முருகேசனே ஆண்டு அனுபவிக்கத் தொடங்கினார். இது நடந்து சரியாக ஒரு வருடம் கழித்து, முருகேசன் தன் மகனுக்கு ஆசையாக ஒரு கார் வாங்கி பரிசளித்தார். காரை டெலிவரி எடுத்து வீட்டு வாசலில் நிறுத்தி தன் மகனை அழைத்தார். ஆசையாக ஓடோடி வந்த மகன், (வயது 24, பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த மாணவன்) நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்தான். மாரடைப்பு. நொடியில் மரணம். முருகேசனை இயற்கை கொடூரமாகவே தண்டித்துவிட்டது.

சம்பந்தம் பிரபல வங்கி ஒன்றில் கிளை மேலாளர். சனிக்கிழமை மதியம், ரத்னம் என்பவர் இவரைத் தேடி வந்தவர். அவர் அந்த வங்கியில் நீண்டகாலமாக கணக்கு வைத்திருப்பவர். சுமார் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை சம்பந்தத்திடம் கொடுத்து தனது கணக்கில் சேர்ப்பித்துவிடுமாறு அவர் கேட்டுக்கொண்டார். இருவருக்கும் நல்ல பழக்கம் என்றபோதும் அலுவலக நேரம் முடிந்துவிட்டதால் பணத்தை வாங்கிக்கொள்ள மறுத்தார் சம்பந்தம். ஆனால் ரத்னம், தான் வியாபார விஷயமாக வெளியூர் செல்லவிருப்பதாகவும் எப்படியாவது தன் கணக்கில் பணத்தைச் சேர்ப்பித்து விடுமாறும் வேண்டிக்கொண்டார். சம்பந்தமும் திங்கட்கிழமை காலை பணத்தைச் செலுத்திவிடுவதாகக் கூறி பெற்றுக்கொண்டார்.
நான்கைந்து நாட்கள் கழிந்து ஊர் திரும்பிய ரத்னம், தான் மற்றவர்களுக்குக் கொடுத்த காசோலைகள் கணக்கில் பணம் இல்லாத காரணத்தில் வங்கியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதை அறிந்து சம்பந்தத்தைச் சந்திக்க ஓடினார்.

சம்பந்தம் விடுப்பில் போயிருப்பதாக மற்றவர்கள் சொல்ல அதிர்ச்சி அடைந்து அவரைத் தொடர்பு கொள்ள பலவாறாக முயன்று தோல்வியடைந்தார். பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி ரத்னம் திகைத்து நின்றார். பணம் கொடுத்த நபர்களோ, பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு அவரை நச்சரிக்க ஆரம்பித்தனர். நாணயஸ்தர் என்று பெயர் வாங்கிய ரத்னம் செய்வதறியாது அல்லாடி, புது கடன்கள் வாங்கி தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள முனைந்து போராடினார்.

entrepreneurசில நாட்கள் கழித்து சம்பந்தம் வங்கியில் விடுப்பு முடிந்து சேர்ந்து விட்டதாக தகவல் கிடைத்து, வங்கியை நோக்கி ஓடினார் ரத்னம். அவரை வரவேற்ற சம்பந்தம், ஒன்றும் அறியாதது போல் ‘என்ன விஷயமாக என்னைப் பார்க்க வந்தீர்கள்?’ என்று கேட்டதும், பெரும் பாறாங்கல் தன் தலையில் விழுந்தது போல் ரத்னம் அலறினார். அவரிடம் தன் கணக்கில் கட்டக் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டார். சம்பந்தமோ தனக்கு எந்தத் தொடர்பும் இல்லாதது போல் ‘பணமா? எப்போது கொடுத்தீர்கள்?’ என்று கேட்டதும் ரத்னம் நொந்து, மனம் அதிர்ச்சியடைந்தார். ஊருக்குக் கிளம்பும் அவசரத்தில் அவர் பணத்தை கொடுத்ததற்கான அடையாளமாக எந்தப் ஆதாரத்தையும் வாங்கவில்லை. இதற்கு சம்பந்தத்தின் மேலுள்ள நம்பிக்கையும், அவர் வகித்து வந்த பதவியின் மேலுள்ள மதிப்பும் காரணம் ஆகும். நியாயம் கேட்கச் சென்ற அனைவரும் ரத்னத்தைதான் குறைகூறினார்கள்.
இது நடந்து சரியாக நான்கு மாதங்கள் கழித்து சம்பந்தம் தன் குடும்பத்தினருடன் உல்லாசப் பயணம் சென்றுவிட்டு காரில் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். எதிர்பாராமல் லாரி வந்து காருடன் மோதியதில் சம்பந்தமும் அவரது மனைவியும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். இரு குழந்தைகளும் விபத்து நடந்த இடத்தில் அநாதைகளாக அழுது கொண்டிருந்தன. காலம் குரூரமாக அவரைப் பழிவாங்கிவிட்டது.

0

பணம் கையில் தங்க வேண்டும் என்று மன உறுதியுடன் நினைப்பவர்கள், முதலில் தங்கள் எண்ணங்களில் தூய்மையைக் காத்தல் வேண்டும். உண்மையான உழைப்பும் நல்ல சிந்தனையும் நிச்சயம் பலன் தரும். செல்வம் அவர்களைத் தேடி வரும்.

முடிந்தது

கவனம் இங்கே தேவை

shoppingஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 29

எதையாவது இலவசமாகவோ அல்லது டிஸ்கவுண்ட் என்ற பெயரில் சிறிது விலையைக் குறைத்து கொடுத்தாலோ மட்டுமே ஒரு பொருளை வாங்கும் மனோபாவம் பலரிடம் இருக்கிறது. சொல்லும் விலையைக் கொடுத்து ஒரு பொருளை வாங்கும்போது திருப்தி ஏற்படுவதில்லை. தங்கமாக இருந்தாலும் சரி, குண்டூசியாக இருந்தாலும் சரி.

ஒரு பொருள் விற்கப்படும் பொழுது அதனால் விற்பவருக்கு நஷ்டம் ஏற்பட்டால் அந்தப் பொருள் தொழிலுக்குரிய தகுதியை இழந்து விடுகிறது. அப்படியென்றால் டிஸ்கவுண்ட் எப்படிக் கொடுக்கப்படுகிறது? நேர்மையற்ற சிலர் பொருளின் விலையை அதிகப்படுத்தி பின்னர் சிறிது குறைக்கின்றனர். இன்னும் சிலர், தங்களுடைய லாபத்தில் இருந்து குறைத்துக்கொண்டு அதன் பங்கை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பார்கள். இதுவே சரியான நடைமுறையாகும்.

பெரிய ஷாப்பிங் மால்களில் ஃபிக்ஸட் பிரைஸ் எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட விலைப் பலகைகள் தொங்கிக்கொண்டிருக்கும். இந்த வகை கடைகளில் டிஸ்கவுண்ட் கிடைக்காது. வாடிக்கையாளர்களும் மௌனமாக சொன்ன விலைக்குப் பொருள்களை வாங்கிச் சென்றுவிடுவார்கள். பேரம் பேசுவது எல்லாம் சிறு வியாபாரிகளிடம் மட்டும்தான்.

உண்மையில், நிர்ணயித்த விலையைக் காட்டிலும் மிக அதிக அளவில் விலைக் குறைப்பு செய்தால், நாம் உற்சாகப்படக்கூடாது. உஷாராகவேண்டும். ஸ்டாக் க்ளியரன்ஸ் என்று சொல்லி சரக்குகளைத் தீர்ப்பவர்களிடமும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஒரு பொருள் வாங்கினால் ஒன்று இலவசம் என்பதும் பொருள் வாங்கினால் மற்றொரு பொருள் இலவசம் என்பது வியாபார உத்திகளே. விற்பனையாகாத அல்லது கொள்முதல் ஆகாத பொருள்களே இவ்வாறு கவர்ச்சிகரமாகத் தள்ளிவிடப்படுகின்றன. எந்தப் பொருள் அதிகம் விற்பனையாகிறதோ அதன் விலையைக்கூட்டி விற்காத பொருளை இலவசம் என்று இணைத்து விற்றுவிடுவார்கள்.

நிறுவனங்களை மக்கள் புரிந்துகொள்வது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் மக்கள் நிறுவனங்களைப் புரிந்துகொள்வதும். பல கார்பரேட் நிறுவனங்கள் இதற்காக மார்கெட் ரிசர்ச் பிரிவுக்குப் பல கோடிகள் செலவு செய்கின்றன. மக்களின் மனநிலையையும் தேவைகளையும் புரிந்துகொண்டு அதற்கேற்பவே ஒரு நிறுவனம் தன் பொருள்களைச் சந்தைப்படுத்துகின்றன. ஒரு பொருள் யாருக்குத் தேவைப்படுகிறது? (டார்கெட் ஆடியன்ஸ்) அவர்களுடைய சமூகப் பின்னணி என்ன? வயது என்ன? பொருளாதாரப் பின்னணி என்ன? எவ்வளவு விலை வைத்தால் அவர்களால் வாங்கமுடியும்? போன்ற கேள்விகளுக்கான விடைகளைத் தெரிந்துகொண்டால்தான் வெற்றி கிடைக்கும்.

திரைப்படத் துறையினர் இந்த ரீதியில் வெற்றி பெறுவதை நாம் பார்க்கமுடியும். திறமையான மார்க்கெட்டிங் உத்திகளைப் பயன்படுத்தியே திரைப்படங்களின் வெற்றி இன்று உறுதி செய்யப்படுகிறது. சமீபத்திய கொலைவெறி பாடல் ஹிட் ஆனதை இங்கே பொருத்தமான உதாரணமாகச் சொல்லலாம்.

சில தொழில்கள் அபாரமான வெற்றிகளை அடையாவிட்டாலும்கூட, உயிரோட்டமாக மினிமம் கியாரண்டியுடன் தங்கள் பொருள்களை விற்று சமூகத்தில் நல்ல பெயரைச் சம்பாதித்துக்கொள்கின்றன. பல குறுந்தொழில்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.

0

சட்டபூர்வமான அங்கீகாரத்துடன் மட்டுமே எந்தவொரு தொழிலையும் தொடங்கி நடத்தவேண்டும். சிலர் பெயர் பலகை இல்லாமல், உரிய முறையான சட்ட ரீதியான பதிவுகளை மேற்கொள்ளாமல் தமது வேலையில் ஈடுபட்டிருப்பர். பின்னர் வளர்ச்சி அடையும் நிலையில், முன்னரே உரிய பதிப்புகள் மேற்கொள்ளாத காரணத்தால்,சில நல்ல பயன்களை அடையத் தவறிவிடுவர். தமது நிறுவனத்தின் இருப்பிடத்தை வணிக வளாகம் என்ற பிரிவின் கீழ் மின்சார வாரியத்தில் பதிவு செய்யாமல் இருத்தல், அரசாங்கத்துக்குரிய வரிகளைச் சரிவரச் செலுத்தாது இருத்தல் ஆகியவை பின்னாள்களில் மிகுந்த சிக்கல்களை ஏற்படுத்தும்.

சரிவர முறையாகச் செயல்படாததால், அரசாங்கம், சுங்கம், மின்சார வாரியம் ஆகிய பிரிவுகளிலிருந்து திடீர் சோதனைகள் நடைபெற்றால் பிடிபட வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு நிகழ்ந்துவிட்டால் பணம், நேரம் இரண்டையும் மிக அதிகம் செலவு செய்து தவறுகளைச் சரிசெய்துகொள்ள நேரிடும். தேவையற்ற மனச்சோர்வும் ஏற்படும்.

அதேபோல சிறுதொழில் (எஸ்எஸ்ஐ), தனியார் நிறுவனம் (பிரைவேட் லிமிடெட்), ப்ரொப்பரைட்டர் கன்சர்ன் ஆகியவற்றை உரிய முறையில் பதிவு செய்யவேண்டும். விற்பனை வரி, சேவை வரி, TDS  போன்ற வரிகளைச் சரியான முறையில் செலுத்தவேண்டும்.

தொழிலுக்குப் பொருத்தமான தரச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதும் நன்மை அளிக்கும். அக்மார்க், ஐஎஸ்ஐ போன்ற தரக்கட்டுப்பாடுகள் அவசியம் எனில், அதற்குரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும்.

0

சிறுதொழில்கள் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றன. அதில் முதன்மையானது உலகமயமாக்கலின் தாக்கம். இன்றைய சூழலில் மிகக் குறிப்பிட்ட சில தொழில்களைத் தவிர, அனைத்தும் தொழில்நுட்பத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றன. சுதேசி இயக்கத்தைப் போற்றி முன்னிறுத்திய நம் நாடு இன்று பல நாடுகளின் தொழில்நுட்பத்தை நம்பியே இயங்கி வருகின்றன. இப்படிப்பட்ட நிறுவனங்கள் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றியமைத்துக்கொள்வது அவசியம்.

அந்த வகையில் சிறுதொழில் செய்பவர்கள் தங்கள் நிறுவனம் சார்ந்த தொழில் நுட்பம் எந்த வகையில் எல்லாம் மாறி வருகிறது என்பதையும், அந்தந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் அந்த நிறுவனத்திடமிருந்து எதை எதிர்பார்க்கின்றார்கள் என்பதையும், தெளிவுப்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு இணையதளம் பெரிதும் பயன்படும். உலகளவில் நடக்கும் மாற்றங்களைத் தெரிந்துகொண்டு, பொருட்களின் ஏற்றுமதி அல்லது இறக்குமதி சார்ந்த முடிவெடுக்கலாம்.

பிறநாட்டு நிறுவனங்களோடு வணிகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும்போது, கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இவை.
ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனமும் அயல்நாட்டு வணிகத்தில் பெரும் ஈடுபாடு காட்டினாலும், தாங்கள் யாருடன் தொழில் உறவில் ஈடுபடப் போகிறார்களோ, அவர்களுடைய பின்னணியைத் தெரிந்து கொண்ட பின்னரே, தொழில் செய்யத் தொடங்குவர். அதேபோல், நாமும் அந்தந்த நிறுவனத்தின் பின்னணியைப் பற்றித் தெரிந்து கொள்வது இன்றியமையாதது.

எந்தவொரு நிறுவனத்தின் பணபலத்தைவிட, அவர்கள் தங்கள் நாட்டில் பெற்றிருக்கும் நற்பெயரும், வியாபார நாணயமும்தான் மற்றவர்களை ஈர்க்கும். இன்று பிரபலமான பல நிறுவனங்கள், பல்வேறு நாடுகளுக்கிடையே உள்ள நிறுவனங்களை ஒன்றிணைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், சில நிறுவனங்கள் இதற்கென உள்ள வணிகச் சந்தையை ஆராய்ச்சி செய்யும் நிறுவனங்களுக்குப் பணம் கொடுத்து, தாங்கள் யாருடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்களுடைய பலம், பலவீனங்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டு தொழில் தொடர்பை விரிவுபடுத்துகின்றன.

தொழிலில் நிலைநிற்பதற்கு அல்லது தொடர்ந்து செல்வதற்கு, நம் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயச் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தைக் கண்டு அச்சப்படாமல், அந்த ஓட்டத்துக்கு ஈடுகொடுக்க மனதளவில் நம்மைத் தயார் செய்து கொள்ளவேண்டும். அவ்வாறு செய்தால் நம் தொழில் வீழ்ந்துவிடுமோ என்ற அச்சம் மறைய வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால் நம் தொழில் நம் கண்முன்பே நொடித்துப்போகும்.

நாம் எந்தந்த நாட்டுடன் வியாபாரத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகின்றோமோ, அந்தந்த நாட்டின் வியாபாரக் குறிக்கோள்கள், வியாபார உத்திகள், கலாசாரம் முதலியவற்றைத் தெரிந்து கொள்வது மிக அவசியம். எந்த நிறுவனத்தோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டாலும், அந்த நிறுவனத்தின் மனிதர்களோடு பழகுகிறோம். அந்தச் சூழலுக்கும், புதிய மனிதர்களின் விருப்பு வெறுப்புகளை எடைபோட்டுப் பார்த்தும், நம் அணுகுமுறையைத் தக்கவாறு மாற்றிக்கொண்டும் செல்வது இன்றியமையாதது.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில்களின் வாங்கும், விற்கும் பொருளைப்பற்றி நாம் எவ்வாறு ஆராய்கிறோமோ, அதே போல் கொண்டு செல்லும், கொண்டு வரும் வழிவகைகளையும் நுணுக்கமாக ஆராய்வது முக்கியம். உலக வரைபடத்தை வைத்துக் கொண்டு நாம் பொருட்களைக் கொண்டு வரும் அல்லது கொண்டு செல்லும் மார்க்கங்கள் என்ன? கடல்வழி மார்க்கமா? தரைவழி மார்க்கமா? சுங்கத் தீர்வின் அளவு என்ன? எப்படி பேக்கேஜ் செய்வது? என்று பல கேள்விகளுக்கு விடைகள் தெரிந்துகொள்ளவேண்டும்.

0

கணவனும் மனைவியும்

The successful agreementசுயதொழில் பற்றிய கருத்தரங்குகளில் பெருமளவில் கேட்கப்படும் ஒரு கேள்வி இது. கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து தொழில் செய்யலாமா? அதன் சாதக பாதகங்கள் என்ன? மேடம், என் மனைவி வீட்டுல சும்மா சீரியல் பார்த்துக்கிட்டிருக்காங்க, அவளுக்கு ஏதாவது தொழில் கத்துக்கொடுங்க என்று சிலர் கேட்டிருக்கிறார்கள். பெண்களும் இதே போல் கேட்டிருக்கிறார்கள். நான் என் கணவனோடு இணைந்து தொழில் தொடங்கவேண்டுமா அல்லது தனியாகவே தொடங்கவேண்டுமா?

தொழில் என்பது என்னை பொறுத்தமட்டில் பெருமளவு அறிவு சம்பந்தப்பட்டது. மனிதர்களை எடைபோடவும் சந்தையைப் புரிந்துகொள்ளவும் முடிவுகள் எடுக்கவும் ஆற்றல் படைத்தவர்களே தொழிலில் இறங்கவேண்டும். குடும்பம் என்பது சற்று மாறுபட்ட அமைப்பு. உறவுகளிலும் உணர்வுகளிலும் உண்மை இருந்தால் போதுமானது. புத்திபூர்வமான அணுகுமுறை பல சமயங்களில் குடும்பச் சூழலை இயந்திரத்தனமாக மாற்றிவிடும் அபாயமும் உண்டு.

சமீபத்தில் பத்திரிகையில் படித்த ஒரு வாசகம் நினைவுக்கு வருகிறது. அதிகமான குறைகளை மட்டுமே சுட்டிக் காட்டும் மனைவியும், அதிகமாக நிறைகளை மட்டுமே சுட்டிக் காட்டும் நட்பும், ஒருவனை என்றுமே உயர்த்துவதில்லை. தொழிலென்று வரும்போது, கணவனோ மனைவியோ தங்களது பலம் அல்லது பலவீனம் இரண்டையும் தெளிவாகத் தெரிந்து கொள்ளவேண்டும்.

தொழிலை வழி நடத்திச் செல்லும் திறமை யாருக்கு அதிகம் என்பதை முதலில் கண்டறியவேண்டும். தலைமைப் பண்பு அதிகமுள்ள அந்த நபரை இன்னொருவர் ஏற்று அங்கீகரிக்கவேண்டும். இதில் ஆண், பெண் பேதம் கிடையாது. ஒருவேளை,  மனைவி தலைமேற்கும் பட்சத்தில், அவரை முன்னிலைப்படுத்தி தொழிலைக் கொண்டு போவதில் கணவனுக்கு எந்தவித ஈகோவும் இருக்கக்கூடாது. நட்புணர்வுடனும் ஆழ்ந்த புரிதலுடனும் இருவரும் ஒன்றிணைந்து இயங்கவேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் அங்கே தொழில் வளர்ச்சி  பெருகும்.

தொழில் நிமித்தமாகத் தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அத்தகைய சமயங்களில் கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருக்கவேண்டியது அவசியம். ஒவ்வொரு தொழிலும், தட்பவெப்ப மாறுதல்களைப் போல் மாறுதலுக்கு உட்பட்டதே. வளமையான வசந்த காலங்களில் லாபத்தை அனுபவிக்கவும் தொழில் நலிவடையும் சமயங்களில், அந்தத் துன்பத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும் இருவருக்கும் தெரிந்திருக்கவேண்டும்.

பெரும்பாலும் கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து செய்யும் தொழில்களில் தொழில் வளர்வதை விட, குடும்பச் சூழலில் நிம்மதி பறிபோவதுதான் அடிக்கடி நடந்துவிடுகிறது. இதற்கு தொழில் காரணமல்ல. சமூகத்தின் ஆண் பெண் கண்ணோட்டமே காரணம்.
பொதுவாக, பெண்களின் திறமைகளை மனம் திறந்து பாராட்ட முன்வரும் ஆண் வர்க்கம், தன் மனைவி என்று வரும்பொழுது, பெண்களின் புத்திக்கூர்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. ஆணின் கருத்துக்கு, வீட்டில் பெண் மறுப்பளித்தால் அது அவளுடைய ஆணவமாகவே புரிந்துகொள்ளப்படுகிறது.

பெண்களும் பெரும்பாலும் இரண்டு நிலைகளில் செயல்படுகின்றனர். அதிகம் அடங்கிபோவது அல்லது அதிகம் அடக்கப் பார்ப்பது. இரண்டில் இருந்தும் விடுபட்டு, அவரவருக்குரிய இடத்தில் இருந்துகொண்டு அடுத்தவரை மதிக்கக் கற்றுக் கொள்ளும்போதுதான் வாழ்க்கை அமைதியாகச் செல்லும்.

கணவன், மனைவி இருவருமே அறிவுகூர்மையில் ஒன்றாக இருக்கும் பட்சத்தில், தொழில்களைத் தனித்தனியாக செய்வதில் தவறில்லை. ஆண், பெண் என்ற பாகுபாட்டை மறந்து, தொழில் என்று வரும்போது, ஒருவர் மற்றவரின் கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைப் பெறவேண்டும். ஒரு தொழிலுக்கு பல திறமையாளர்கள் தேவைப்படலாம். ஆனால் முன்னிலைப்படுத்தப்படும் நபர் ஒருவராக இருப்பது நலம்.

பொதுவாக பணம் என்று வரும்பொழுது, பெண்கள் அதிகபட்ச பாதுகாப்பை மனதில் கொண்டு செயல்படுவர். ஆண்களோ அது சாம்ராஜ்யமாக விரிவடைவதில் அதிகமாகக் கவனம் செலுத்துவார்கள். பெண்கள் தொழில் செய்வதில் பெரும்பாலாலும் ஒரு நேர்த்தி, ஒழுங்கு முறை இருக்கும். ஆனால் பிரம்மாண்டங்களை அவ்வளவு எளிதில் அடைய மாட்டார்கள்.

இதற்கு விதிவிலக்குகளும் இருக்கலாம். பிரம்மாண்டத்தை உருவாக்கும் திறமை இருப்பினும், பெண்கள் பொதுவாக சிறிது அடக்கி வாசிக்கும் மனோபாவத்தை உடையவர்களாக இருப்பர். ஆண்களோ இதற்கு முற்றிலும் வேறாக, தொழில் சாம்ராஜ்ஜியங்களை நிறுவுவதில் அதிக ஆர்வம் காட்டுவர். மனைவிக்கு கணவனைப் போல் சிறந்த பிசினஸ் பார்ட்னர் கிடைப்பது அரிது. அதேபோல் கணவனுக்கும் நேர்மையான தொழில் பங்காளர் அமைவது அரிது.

எம்.எஸ். சுப்புலட்சுமியின் திறமையைக் கண்டு அவரை ஊக்குவித்து, உலகப் பாடகியாக்கிய பெருமை திரு. சதாசிவம் அவர்களையே சாரும். இன்றும் திருமதி. சுதா ரகுநாதன், திருமதி. நித்யஸ்ரீ  மகாதேவன், நளினி சிதம்பரம், கவிஞர் தாமரை, சுகாசினி மணிரத்தினம், ஐஸ்வர்யாராய் பச்சன், வாணி ஜெயராம் போன்றோர் உள்ளனர். பெண்களை முடக்காமல், அவர்களை முன்னிலைப்படுத்தி, ஊக்குவிக்கும் பெருந்தன்மை இருக்கும்பொழுது, பெண்கள் சாதனையாளர்களாக வர முடியும்.

குடும்ப வேலைகள் என்று வரும் பொழுது, சமையல், குழந்தை பராமரிப்பு, பெரியவர்களைப் பார்த்துக் கொள்ளுதல் என்று பலவற்றிலும், ஆண் இறங்கி வந்து வேலைகளை சமமாக பங்கிட்டுக் கொள்ளும் போதுதான், பெண் பதட்டமின்றி வெளி வேலைகளைக் கவனிக்க முடியும். ஆனால் ஆண்களில் ஒரு பிரிவினர், ‘நான்  வெளியில் போவதைத் தடுக்கவில்லையே, மேலே படிப்பதைத் தடை செய்யவில்லையே, வேலைக்குப் போவதை மறுக்கவில்லையே, நானும் சுதந்தரம் கொடுத்துதான் இருக்கிறேன்’ என்று சொல்வார்கள்.

ஆனால் இவர்கள் பெண்களிடம் ஓர் அஸ்திரத்தைப் பிரயோகிப்பார்கள். ‘நீ காலையில் எழுந்து எல்லா வீட்டு வேலை, சமையல் இன்றும் பிற வேலைகள், குழந்தைகள் பராமரிப்பு, சில்லரை வேலைகள் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு, மாலை இரவு மெனுவரை  பிளான் செய்தபின்னர், என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்!’

இதை சொல்வது ஆண்களுக்கு எளிதானது. ஆனால் நடைமுறையில் பெண்கள் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும்பொழுது உடலளவிலும் மனரீதியிலும் எளிதில் பலமிழந்துவிடுகின்றனர். அதற்குமேல் தொழில், வேலை போன்றவற்றில் சுமையை ஏற்றுக்கொள்ளும்பொழுது அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இதற்கு மாறாக குடும்பப் பொறுப்புகளை சரிசமமாகப் பகிர்ந்து கொண்டு, குழந்தை பராமரிப்பதில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, ஆண்கள், பெண்களை முன்னேற்றினால் அதிக அளவு தொழில் மாற்றங்கள் ஏற்படுமென்பதில் சந்தேகமில்லை. கணவன் மனைவி இவர்களுக்கு மட்டும் இவை பொருந்தும் என்பதில்லை. குடும்ப உறவினருக்கிடையே நடக்கும் எந்தத் தொழிலிலும் மற்ற குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்.

இசை உலகில் கொடி கட்டிப் பறக்கும் இரட்டையர்களான சூலமங்கலம் சகோதரிகள், ஹைதராபாத் சகோதரர்கள், பிரியா சகோதரிகள், கணேஷ் குமரேஷ் போன்ற பலரும், சுருதி பிசகாமல் ஒன்றிணைந்து இசையை வெளிப்படுத்தும் பொழுது, அது அதிக பட்ச உத்வேகத்தோடு, திறமைகள் உயர்ந்து வெளிப்படுகின்றன என்பதே உண்மை. சுருதி பிசகாத இசையைப் போல் லாபம் குன்றாத தொழிலும் ஒன்றிணைந்து இயங்குதல் என்பது மிக அவசியம்.

0

வாய்ப்புகள், மேலும் வாய்ப்புகள்

women-entrepreneurs-branding-mistakes1ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 27

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வழங்கும் கடன் உதவிகள் குறித்து இனி பார்ப்போம். உணவு விடுதி, நடமாடும் உணவு விடுதி, சுழல் முறையில் செயல்படும் நூலகம், ஆகியவற்றைத் தொடங்கி நடத்த விரும்பும் பெண் தொழில்முனைவோருக்கு இந்த வங்கி கடனுதவி அளிக்கிறது.

மேலும், தொழிற்கல்வி சார்ந்த பணி, சுயதொழில் வகையில் தேர்ந்த நிபுணத்துவம் கொண்ட சிறந்த மருத்துவர், பொறியாளர், தணிக்கையாளர், கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் கடன்  அளிக்கிறது. அதே போல், சில்லறை வணிகத்தில் ஈடுபடுவோருக்கும் உதவி கிடைக்கிறது.

குறுந்தொழில் மற்றும் கிராம குடிசைத் தொழில், கைத்தறி ஆடை தயாரிப்பு நெசவுத் தொழில், உணவு தயாரிப்பு ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கு ரூ.50,000 வரை கடனுதவி அளிக்கப்படுகிறது.

கிராமங்களில் விவசாயம் மற்றும் சார்புத்தொழில்கள், பயிர் வளர்ப்பு, மீன், தேனி, பட்டுப்பூச்சி வளர்ப்பு, தோட்டக்கலை, பூந்தோட்டங்கள் பராமரிப்பு மற்றும் விவசாய சார்புடைய தொழில்கள் செய்யும் தொழில்முனைவோருக்கு இந்த வங்கி கடனுதவி அளிக்கிறது.

அரசாங்கத் தரப்பில் வழங்கப்படும் மானியம் பெறவல்ல தொழில்களுக்கும் கடனுதவிகள் கிடைக்கப் பெறுகின்றன. இதற்கான முழு விவரங்களைக் கீழ்கண்ட இணையதளத்தின் வாயிலாக அறியலாம். (www.centralbankofindia.co.in)

0

ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் – ஓரியண்டல் மகிலாவிகாஸ் யோஜனா என்ற அமைப்பின் கீழ் பெண் தொழில்முனைவோருக்கு, ரூ. 2 லட்சம் முதல் 10 லட்சம் வரை 2 சதவிகித வட்டி குறைப்புடன் கடன் அளிக்கிறது. 10 லட்சத்துக்கு மேலும் கடனுதவி பெறலாம். தொழிலகங்கள் பெண்களால் நிர்வகிக்கப்பட்டு, 51% பங்குகள் இருக்கும்பட்சத்தில் மேற்கண்ட கடனுதவி பெறலாம். இணையதளம் : http//obcindia.co.in.

ஐசிஐசிஐ வங்கியின் விமன்ஸ் அக்கவுண்ட் என்ற திட்டத்தின்கீழ் பெண்கள் பயன் பெறவும் வாய்ப்புகள் உள்ளன. மேலதிக விவரங்களுக்கு : http://www.icicibank.com

0

உதவிகள் ஒரு பக்கம் இருக்க, நாம் கவனிக்கவேண்டிய மிக முக்கியமான விஷயம், தொழில் தொடங்குவதற்கு உண்மையிலேயே நமக்கு விருப்பமும் உத்தேவகமும் இருக்கிறதா என்பதுதான்.

பொதுவாக பெண்கள் தன்னம்பிக்கை குறைந்தவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்வார்கள். அதிலும் இந்தியப் பெண்கள் தங்கள் திறமைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தங்களது குடும்பத்தினர் முன் வாயடைத்து அமைதி காப்பார்கள். அவர்களுடைய திறமை வெளியில் தெரியாது. குடும்பச் சூழலில் பெண்களின் பங்களிப்பு மிக அதிக அளவில் தேவைப்படுவதாலும், சமூகத்தின் எதிர்பார்ப்பும் அதை ஒட்டியே இருப்பதாலும், பெரும்பாலான பெண்கள் வீட்டுக்குள் அடங்கி இருக்கவேண்டிய நிலையே உள்ளது.

இந்தப் பின்னணியில், சுயதொழிலில் ஈடுபட முன்வரும் பெண்கள் தங்களைச் சுயபரிசோதனை செய்துகொள்வது அவசியம். வாழ்க்கையில் அவ்வப்போது எழும் பிரச்னைகளுக்கு ஏற்ப, துணிச்சலுடன் தோல்வியின் பயமின்றி வெற்றியை நோக்கி நடைபோடுபவரா நீங்கள்? தனிப்பட்ட முறையில் சில பல நிகழ்வுகளுக்கு பொறுப்பு எடுத்துக் கொள்பவரா? செய்யும் காரியத்துக்கு ஏற்ப அதற்குரிய அறிவை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் உடையவரா? பொதுவாக எந்தவொரு சூழலிலும் இயல்பாக எழும் தடைகளை மீறி, நினைத்த காரியத்தை முழு முயற்சியோடு முடிப்பவரா? நிர்வாகத் திறமைப் பளிச்சிடும்படி செயல் திட்டம் வகுப்பவரா? உங்களை நம்பி ஒரு செயலில் இறங்குவீர்களா? அதற்கான துணிச்சலும் தன்னம்பிக்கையும் உங்களிடம் இருக்கிறதா?

மேற்கூறிய எல்லாவற்றுகும் உங்கள் உண்மையான பதில் ‘ஆம்’ என்றால் மட்டுமே நீங்கள் சுயதொழிலுக்கு ஏற்றவர்.

இனிவரும் காலங்களில் என்னென்ன தொழில் செய்தால் முன்னேற்றம் காண முடியும்?
இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு வரை சுயதொழில் என்றால் சமையல் பொடி, ஊறுகாய், அப்பளம், தையல் என்றுதான் நினைப்பார்கள். இன்றளவும் இந்தத் துறைகளில் பெண்கள் ஈடுபட்டு வந்தபோதும், அவர்களுக்கான தொழில் வாய்ப்புகள் இவற்றையும் கடந்து பெருமளவில் விரிவடைந்துள்ளன.

 • கணினிச் சார்ந்த சேவை பிரிவுகள்
 • கணினி வணிகம். இதில் ஏற்றுமதிக்கு அரிய வாய்ப்புகள் உள்ளன.
 • மல்டிமீடியா உள்ளிட்ட வரைகலை துறைகள்.
 • சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பொருள்கள் உற்பத்தி.
 • ஈவெண்ட் மேனேஜ்மெண்ட்.
 • சுற்றுலாத் துறை.
 • பிளாஸ்டிக் மூலப்பொருள்களைக் கொண்டு தொழில் தொடங்குதல்.
 • குடிநீர் வழங்குதல் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் நிறுவுதல்.
 • உணவு, காய்கறி போன்றவற்றைப் பதப்படுத்தும் தொழில்.
 • பூ அலங்காரம், வீட்டு அலங்காரம்.
 • மூலிகைகள் மற்றும் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பொருள்களை விற்பனை செய்தல்.
 • கல்வி பயிற்சி மையங்களை நிறுவுதல்.
 • இயற்கை உரம் உற்பத்தி செய்தல்.

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

நம்மைச் சுற்றியுள்ள பிரச்னைகளும்கூட நமக்கான தொழில் வாய்ப்பை வழங்கக்கூடிய திறன் படைத்தவை.   ஒரு பெண் சுமாராகப் படித்தவராக இருந்தாலும், மனித தொடர்பு கலையில் தேர்ச்சி பெற்றிருந்தால் நல்லதொரு வாய்ப்பை அவரால் ஏற்படுத்திக்கொள்ளமுடியும். உதாரணத்துக்கு, வீட்டு வேலைக்கு ஆள்கள் அனுப்பும் சேவை மையம் தொடங்கலாம். இதன் மூலம் வருமானத்தை ஈட்டலாம்.

இதை ஒரு தொழிலாக செய்வது எப்படி? உதாரணமாக லட்சுமி என்ற பெண்மணி இதை தொடங்க நினைக்கிறார் என்றால் அவர் முதலில் அக்கம்பக்கத்து வீடுகளிலலும் சுற்றியுள்ள வீடுகளிலும் நல்ல நட்பை நாகரிகமாக வளர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டாவது, ஒவ்வொரு வளமுடைய நகர் பகுதிக்கு அருகிலும் அல்லது அதைச் சுற்றியும் வளமையில்லாத குடிசைப் பகுதிகளோ குடிசைமாற்று வாரியமோ இருப்பது இயல்பான ஒன்று.

சென்னை, மும்பை போன்ற பெரும் நகரங்களில் இதைக் கண்கூடாகப் பார்த்திருக்கலாம்.
லட்சுமி செய்ய வேண்டியது, அதைப் போன்ற குடிசைப் பகுதிகளிலும், குடிசைமாற்று வாரியங்களிலும் சரியான நபர்களை அடையாளம் காண்பது. பிறகு அவர்களைப் பணிக்கு அழைப்பது.  நுணுக்கமாக மனிதர்களை எடைபோட பழகிக் கொள்ளுதல் இதற்கு அவசியம். அருகிலுள்ள காவல் நிலைய உயர் அதிகாரிகளை தொடர்பில் கொண்டு, தன்னுடைய சேவை மையத்தின் நோக்கத்தையும், தான் வேலைக்கு அமர்த்தும் பெண்களின் பின்புலத்தையும் கேட்டு அறிந்துக் கொள்ள வேண்டும்.

அதே போல் சமூகத்தில் பின் தங்கியுள்ள வேலைக்கு அமர்த்தும் பெண்களின் பாதுகாப்பையும் மனதில் கொண்டு, அவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளும் வசதி படைத்தவர்களிடமும் பேச வேண்டும். அவர்களை மனித நேயத்தோடு நடத்துமாறு வற்புறுத்த வேண்டும். பாலியல் கொடுமைகளுக்கு பெண்கள் ஆளாகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் பெண்களுக்கு முதலில் ஒரு சில நாட்கள், மனிதவள பயிற்சி அளிக்க வேண்டும். மாதம் ஒரு முறையாவது அவர்களைச் சந்தித்து அவர்கள் பிரச்சனைகளைக் கண்டறியவேண்டும். அதேப்போல் அவர்களைப் பணிக்கு அமர்த்தும் வீட்டுத் தலைவர்களையும் தலைவிகளையும் சந்தித்து, இவர்களின் பணி குறித்து ஏதேனும் அதிருப்தி உள்ளதா என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

இதைப்போன்று நிர்வாக திறமையோடு செயல்பாட்டால் நிச்சயமாக இவரது சேவை மையம் ஒரு நல்ல நிறுவனமாக மாறும் வாய்ப்பு உண்டு. லட்சுமி இத்தொழில் மூலம், பணம் சம்பாதிப்பது மட்டுமல்லாது, சுற்றியுள்ள சமூகத்தின் தேவைக்கும் வழி வகுப்பவராக மாறுகிறார்.

0

கடன் கிடைக்கிறது

Personal_Loanஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 26

சிறு தொழில் அதிபர்களை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். இப்பொழுது நாம் சொல்லும் செய்தி, இருபாலருக்கும் பொருந்தும். நல்ல கல்விப் பின்னணி மற்றும் அனுபவத்தோடு தொழிலை மேற்கொள்பவர்கள் முதல் வகை. தகுந்த முன்னேற்பாடுகளோ பின்னணியோ இன்றி சுயதொழிலில் இறங்குபவர்கள் இரண்டாவது வகை. முந்தைய பிரிவினரைவிட இவர்களே அதிகம் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். இவ்வாறான சிக்கல்களைத் தகுந்த வல்லுனர்களைக் கொண்டு இவர்கள் நிவர்த்தி செய்துகொள்கிறார்கள். தவறான வழிகாட்டுதல்கள் அமைந்துவிட்டால் இவர்களால் பிரச்னையில் இருந்து மீளமுடியாமல் போய்விடுகிறது. இவர்களை மனத்தில் கொண்டு வழிகாட்டும் திறன் கொண்டவர்கள் நிரம்பிய ஓர் ஆய்வுக்கூடங்களை அரசாங்கம் ஏற்படுத்தவேண்டும்.

குறுந்தொழில் அதிபர்கள் பெரும்பாலும், சுற்றுப்புறச்சூழலைப் பற்றியோ, தங்கள் நிறுவனங்களால், தங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுக்குச் சங்கடங்கள் ஏற்படுவது பற்றியோ கவலைப்படுவதில்லை என்று ஒரு பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. இதைக் குறைப்பதற்கு குறைந்த செலவில் எரிபொருள் சேமிப்பதற்கும், சுற்றுபுறச்சூழலைப் பாதுகாப்பதற்கும் நல்ல ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பதற்கும் வழிமுறைகளை ஏற்படுத்தி, அவர்களை அதை செயல்படுத்துமாறு கட்டாயமாக்கினால், தொழில் வளர்ச்சியோடு சமுதாயமும் பாதுகாக்கப்படும்.

இதன் மூலம் இன்னொரு அனுகூலமும் உண்டு. சுயதொழிலை தீவிரமாக கையாளாமல் மேம்போக்காக அதில் இறங்குபவர்களுக்கு தெளிவான ஒரு செய்தியை அளிக்கமுடிகிறது. கடுமையான சட்டத்திட்டங்களைக் கருத்தில் கொண்டு கவனமாகத் தொழிலைத் தொடரவேண்டும். அல்லது, விலகிக்கொள்ளவேண்டும்.

பல துறைகளில் பல பொருள்களுக்கு வரிவிகித சதவிகிதங்கள் தாறுமாறாக இருக்கின்றன. நமது நாட்டில் பெரும் நிறுவனங்கள் பட்ஜெட் வருவதற்கு முன்பே வரிகளின் போக்கைத் தீர்மானம் செய்யுமளவுக்குத் திறமை படைத்தவை. ஆனால் இந்த விதத்தில் இன்னும் குறுந்தொழிலதிபர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்குக்கூடப் போராடவேண்டியுள்ளது. ஆகவே அரசாங்கம் கலந்தாய்வுக் கூட்டங்கள் மூலம், நேர்மையான அதிகாரிகளை தொழிலதிபர்கள் முன்நிறுத்தி, அவர்களுடைய தொழில் பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு முயற்சிக்கலாம்.

பட்ஜெட் தொடர்களுக்கு முன்பு நேர்மையான குறுந்தொழில், சிறுதொழில் அதிபர்களை வைத்து கூட்டம் நடத்தி கருத்துக்களை அறிந்துக்கொள்ள அரசு முயற்சி செய்யவேண்டும். மத்திய அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஈஎஸ்ஐ, பிஎஃப் போன்ற சலுகைகளுக்கு உள்ள விதிமுறைகள் இன்னும் குறுந்தொழிலதிபர்களுக்கு சாதகமாக இல்லை என்றே கூறலாம். ஒரு குறுந்தொழிலதிபர் 10 பணியாளர்களைக் கொண்டு நிறுவனம் நடத்தினால் ஈஎஸ்ஐ பிரிவுக்குள் அவர் வந்துவிடுவார் என்று விதிமுறை இருக்கிறது. அதனால், சிலர் 5 அல்லது 6 நபர்களைக் கொண்டே தங்கள் தொழிலை நடத்துகின்றனர். சில சமயங்களில் தொழிலுக்கு வேண்டிய ஆர்டர்கள் அதிகமாகும்போது, அதிகப் பணியாளர்களை நியமனம் செய்வர். அதனால் சிறு தொழில் நிறுவனத்தின் சம்பளப் பட்டுவாடா தொகை அதிகமாகும். ஆனால் ஆர்டர்கள் குறையும் போது அதே பணியாளர்கள் நிறுவனத்துக்குச் சுமையாகிவிடுகிறார்கள். இதனால் அதிக அளவில் குறுந்தொழில் நிறுவனங்கள் ஈஎஸ்ஐ சலுகைகளை அளிப்பதற்கு யோசனை செய்கின்றனர். ஆனால் ஈஎஸ்ஐ சலுகை இல்லாததால் நல்ல பணியாளர்கள் வேலைக்குக் கிடைப்பதும் கடினமாக உள்ளது. இதற்கு மாறாக கீழ்க்கண்டவாறு செய்யலாம்.

ஒரு குறிப்பிட்ட குறுந்தொழில் நிறுவனம் தொடர்ந்து மூன்று வருடங்கள் அதிக டர்ன்ஓவர் காண்பித்தால், ஈஎஸ்ஐ பிரிவுக்குள் வருமாறு செய்யலாம். தொழில் தொய்வடையும் போது அதிலிருந்து விலக்கு அளிக்கவும், மீண்டும் அது வலுவடையும் போது ஈஎஸ்ஐயில் தன்னை உட்படுத்திக் கொள்ளவும் சட்டத்தில் இடமிருக்கவேண்டும். இது குறுந்தொழில் நிறுவனங்கள் சிறப்பாகப் பணியாற்றவும் நல்ல பணியாளர்களை வேலைக்கு அமர்த்த ஏதுவாகவும் அமையும். இதைப் போல பிஎஃப் பற்றிய விதிமுறைகளும் மாற்றியமைத்தால் நல்ல அங்கீகாரத்துடன் குறுந்தொழில் நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட முடியும்.

0

இன்னும் பெருமளவு பெண்கள் தொழில்முனைவோராக ஊக்குவிக்கப்படவேண்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. பொருளாதார ரீதியாக மட்டுமின்றி சமூக ரீதியாகவும் இந்தச் சம்பாத்தியம் அவர்களுக்குப் பல வழிகளில் உபயோகமாக இருக்கிறது. ஒருவேளை தனித்து செயல்படும் சூழல் உருவானாலும் இது அவர்களுக்குக் கைகொடுக்கும். எனவே பெண்களை அதிக எண்ணிக்கையில் சுயதொழிலில் ஈடுபட வைக்கவேண்டும். அதற்கான உந்துதலை அவர்களுக்கு அளிக்கவேண்டும். வியாபார நுணுக்கங்களையும் பணத்தைக் கையாளும் முறைகளையும் சொல்லித்தர வேண்டும்.

குடும்பத்தினரின் ஊக்குவிப்பு முதன்மையான தேவை. இரண்டாவது, வங்கிகள் உள்ளிட்ட அமைப்புகளின் உதவி. தொழில்முனைவோராக வளரத் துடிக்கும் பெண்களுக்கு துணைபுரிய வங்கிகள் முன்வரவேண்டும்.

இனி பெண்களுக்குத் தற்போது கிடைக்கும் வங்கிகளின் ஆதரவு குறித்து பார்ப்போம்.

குறு மற்றும் சிறுதொழில்களில் ஈடுபடும் பெண்களுக்கு பெருமளவில் ஒவ்வொரு மாநிலமும் பணஉதவி செய்வதற்கு தயாராக இருக்கின்றன. தமிழ்நாட்டில் கிராம விடியல் என்ற குறுந்தொழிலுக்குகான நிதி நிறுவனம் பிற சமூக நிறுவனங்களோடு இணைந்து கடன் உதவி செய்கிறது. இது தனிநபர் கடனாகும். இதற்கு கியாரண்டி தேவையில்லை. ஆனால் விண்ணப்பத்தில் எல்லா விதமான தகவல்களும் விரிவாக அளிக்கப்படவேண்டும். கடன் உதவியின் அளவு சுமார் 30 ஆயிரத்திலிருந்து 70 ஆயிரம் வரை இருக்கும். இதுதவிர தேனா வங்கி பெரும்பாலான குறுந்தொழிலுக்கு நிதி உதவி அளிக்கின்றது.

ஸ்ரீ சக்தி என்ற பிரிவின் கீழ் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பெண்களுக்கு ரூ. 5 லட்சம் வரை கடனுதவி தொகை குறு மற்றும் சிறு தொழில்களுக்கு அளிக்கிறது. (http.//.www.statebankofindia.com).

பிரியதர்ஷனி என்ற பிரிவின்கீழ் பாங்க் ஆஃப் இந்தியா பெண் தொழில்முனைவோருக்கு சிறு மற்றும் குறுந்தொழில் தொடங்க உதவுகிறது. தொழிலுக்கான இயந்திரங்கள் வாங்க கடன் தொகை அளிக்கிறது. இதில் இரண்டு லட்சத்துக்கு மேல் கடனுதவி பெறுபவர்களுக்கு 1 சதவிகித வட்டி குறைப்புக் கிடைக்கிறது. இவ்வங்கியின் இணையதளத்துக்குச் (www.bankofindia.com) சென்று மேலும் விவரங்கள் அறியலாம்.

கனரா வங்கி கேன் மஹிலா (Canara Bank-Can Mahila) என்ற திட்டத்தின்கீழ் இல்லத்தரசிகள் முதல், பணிபுரியும் பெண்கள் மற்றும் சுயத்தொழில் செய்யும் பெண்களுக்குக் கடனுதவி அளிக்கிறது. வீட்டு உபயோகப் பொருள்கள் முதல் கணினி, தங்க ஆபரணங்கள் வரை வாங்கலாம். 18 முதல் 55 வயது வரையுள்ளவர்களுக்கு இந்தக் கடனுதவி அளிக்கப்படுகிறது. பணிபுரியும் பெண்கள் மற்றும் சுயதொழில் முனைவோருக்கு அவரது ஆண்டு வருமானம் 1.5 லட்சத்துக்குள் இருந்தால் ரூ.50,000 வரை கடனுதவி பெறலாம். வங்கியின் இணையதளம் (www.canarabank.in) ஆகும்.

விக்லங் மகிலா விகாஸ் யோஜனா என்ற திட்டத்தில் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, உடல் ஊனமுற்ற, மாற்றுத்திறன் பெற்ற பெண் தொழில்முனைவோருக்குக் கடனுதவி அளிக்கிறது. உடல் ஊனமுற்றவரின் குறைபாடுகளைக் கண்டறிந்து அதற்கேற்ற வகையில் அவர்களுக்கு மாற்றுத்திறனுக்கான பயிற்சி வழங்கி (Vocational Training) ரூ.25,-000 வரை புதிய தொழில் முயற்சியில் இறங்க உதவி செய்கிறது. இது குறித்து விபரங்கள் வங்கியின் கீழ்கண்ட இணையதளத்தில் காணலாம். (www.unionbankofindia.co.in)

யூகோ வங்கியின் நாரி சக்தி என்ற திட்டத்தின் அடிப்படையில், பணிபுரியும் பெண்களுக்கு உதவித்தொகை அளிக்கப்படுகிறது. 5 வருடகாலங்களில் தவணை முறையில் கடனைத் திரும்ப செலுத்துவதிலும், வட்டியில் சில சலுகையும் வழங்குகிறது. வங்கியின் இணையதளம் www.ucobank.com.

சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, ‘சென்ட் கல்யாணி’ என்ற திட்டத்தின் அடிப்படையில், பெண் தொழில்முனைவோருக்குக் கடனுதவி அளிக்கிறது. விவசாயம் உள்ளிட்ட தொழில்களுக்கும் வியாபாரம் மற்றும் தொழிற்கல்வி சார்ந்த பணிகளுக்கும் பெண் தொழில் முனைவோர்களை இந்த வங்கி இருகரம் நீட்டி வரவேற்கிறது.

(தொடரும்)

அரசாங்கம் என்ன செய்யவேண்டும்?

ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 25

இன்று மத்திய, மாநில அரசுகள் குறுந்தொழில் வளர்ச்சிக்குப் பலவாறான சலுகைகள் அளிக்கின்றன. இருந்தாலும், இன்றைய சூழலில் சுயதொழில் செய்ய யார் முன்வருகிறார்கள்? குறிப்பாக பெண்கள் முன்வருகிறார்களா? இல்லை என்றே பதிலளிக்கவேண்டியிருக்கிறது. காரணம், இன்றும் அரசாங்கச் சூழல் சிறுதொழிலுக்கு அனுகூலமாக இல்லை.

உதாரணத்துக்கு வங்கிகளை எடுத்துக்கொள்வோம். சுயதொழில் முனைவோருக்கு வங்கிகள் கடன் கொடுக்கின்றனவா? பெரும்பாலான வங்கி அதிகாரிகள் கடன் கொடுக்கத் தயங்குகிறார்கள் என்பதே உண்மை. ஒருவேளை கடன் கொடுத்து அது திரும்பி வராமல் போனால் பதில் சொல்லியாகவேண்டும் என்னும் எண்ணத்தில் கடன் கொடுப்பதை இவர்கள் தவிர்க்கின்றனர். வங்கிக் கிளை மேலாளர்களுக்கு தெளிவான வழிமுறைகளையும் 4_8விதிகளையும் அரசாங்கம் முதலில் நிர்ணயிக்க வேண்டும்.

நேர்மாறாக, ஒரு சில வங்கி அதிகாரிகள் தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் சிபாரிசோடு வருபவர்களுக்கும் முன்னுரிமை அளித்து, தகுதியில்லா நபர்களுக்கும் கடன் கொடுக்கின்றனர். அசையாச் சொத்துகள் இல்லாத நபர்களுக்கும் கடன் கொடுப்பதற்கு விதிமுறைகள் உள்ளன. ஆனால், அவற்றை பெரும்பாலும் நடைமுறைப்படுத்துவதில்லை. ஆகவே வங்கிக் கடன் குறித்த தெளிவான விதிமுறைகளை பொதுமக்கள் அறியுமாறு அரசு விளம்பரப்படுத்தவேண்டும். தகுதியுள்ள நபர்களுக்குக் கடன் கிடைப்பதையும் உறுதிசெய்யவேண்டும்.

குறுந்தொழில் அதிபர்களுக்கு திறமையான ஆள்கள் கிடைப்பது அரிதாகி கொண்டுவருகிறது. நல்ல நபர்களைத் தேர்வு செய்யும் பொழுது, பெரும் பணத்தை ஊதியமாக அளிக்க வேண்டி வருகிறது. இதற்கு அரசாங்கம் கீழ்க்கண்டவாறு செய்யலாம்.

 1. அரசாங்க வேலைக்கு பணி நியமனம் செய்யும்போது ஒவ்வொரு நபரும் குறைந்தபட்சம் இரண்டு வருடங்களாவது அங்கீகரிக்கப்பட்ட, நேர்மையாக தொழில் செய்து கொண்டிருக்கும் குறுந்தொழில் அலுவலகங்களில் பணி புரிந்து இருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கலாம்.
 2. குறுந்தொழில், சிறுதொழில் பிரிவுகள் இன்னமும் மேலெழுந்தவாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ரூ.25 அல்லது 50 லட்சம் டர்ன்ஓவர் செய்யும் கம்பெனிகள் குறுந்தொழில் பிரிவிலும், 5 கோடி டர்ன்ஓவர் செய்யும் கம்பெனிகள் சிறுதொழிலாகவும் பிளாண்ட் அண்ட் மெஷினரியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. குறுந்தொழில் மற்றும் சிறுதொழில் பிரிவுகள் இன்னமும் விரிவாகப் பிரிக்கப்படவேண்டும். அதேபோல் வரிச்சலுகைகளும் இப்பொழுதைவிட அதிகமாக அளிக்கப்பட வேண்டும்.
 3. அரசு டெண்டர்களில் பங்கு பெறும்போது பலவித பெரிய ஆர்டர்களுக்கு அரசாங்கம் விதிக்கும் விதிமுறைகளில் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள், பங்குபெற முடியாமல் போகிறது. இதற்கு மாறாக மத்திய, மாநில அரசுகள், எந்த தொழிலையும் வாங்குவதற்கு முன், அதன் எண்ணிக்கை மற்றும் அளவுக்கு ஏற்றவாறு அதைப் பிரித்து, அந்தந்த பகுதியிலுள்ள சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்குப் பிரித்து கொடுக்க வழிவகை செய்தால் சிறுதொழில்கள் இன்னும் நன்கு வளரும்.

இன்று பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி அதிகம் செய்வதால் பொருள்களின் விலையை கணிசமான முறையில் குறைக்க முன்வந்துள்ளன. குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களால் அவற்றோடு போட்டிப் போட முடியவில்லை.

பொதுமக்களும் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனத்தைப் பற்றிய தங்களின் மதிப்பீட்டுகளை மாற்றிக் கொள்ள முன் வரவேண்டும். எந்த தொழில் நிறுவனமும், தொழிலில் நேர்மையோடு பெயர் பெற்று விளங்குமானால், அவற்றின் பொருள்களுக்கு ஆதரவு அளிக்க மக்கள் முன் வர வேண்டும்.

அடுத்ததாக, குறு மற்றும் சிறு தொழில்களுக்கு பெரும்பாலும் விளம்பரம் அளிப்பதற்கு பணப்பற்றாக்குறை இருக்கும். ஆதலால் அரசாங்கம் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் மூலமாக விளம்பரம் செய்வதற்கு அந்த நிறுவனங்களுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும். இந்த நிறுவனங்கள் தங்கள் விளம்பர வருமானத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிப்பதன் மூலம் ஈட்டியிருக்க வேண்டும்.
இதை மேம்போக்காகச் செய்யாமல் கட்டாயமாக்கினால் நலிந்துகொண்டிருக்கும் சிறு மற்றும் குறுந்தொழிலின் சந்தை விரிவடையும். இதனால் அத்தொழில்கள் வீழ்ச்சி அடையாமல் வளர்ச்சி அடையும்.

அடுத்ததாக குறுந்தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்காக, அரசாங்கம் சில சலுகைகளை அளிக்க முன்வரவேண்டும். இதன் மூலம் ஈஎஸ்ஐ மற்றும் பிஎஃப் உட்பிரிவுகளுக்குள் வராத குறுந்தொழில் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் நலன் காக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை அந்தந்த நிறுவனங்களிலிருந்து அரசாங்கம் வசூலித்துக் கொள்ளலாம்.

குறுந்தொழில் அதிபர்களில் திறமையாகவும் நேர்மையாகவும் செயல்படும் நபர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கலாம். பொதுமக்களின் மத்தியில் அவர்களையும் அவரது நிறுவனப் பொருள்களையும் பிரபலப்படுத்தலாம். அரசாங்க விழாக்கள் மற்றும் அரசாங்கக் கண்காட்சிகள் போன்றவை நடக்கும்பொழுது, இந்தக் குறுந்தொழில் நிறுவனங்களின் பொருள்களை அத்தகைய இடங்களில் விளம்பரப்படுத்துவதற்கு அனுமதிக்கலாம்.
அரசாங்கமே, பல கண்காட்சிகளை வெவ்வேறு பிரிவுகளுக்காக நடத்தலாம். இந்தியாவை பொருத்தமட்டில் முறையாகப் பதிவு செய்து சரியாக வரிகள் செலுத்தி, நிலையாக குறு மற்றும் சிறுதொழிலை நடத்தும் நிறுவனங்கள் இன்னும் குறைவாகவே உள்ளது. (Organised SME Sector) மாறாக, சில விசிடிங் கார்ட்டுகள் மற்றும் லெட்டர் பேடுகள், ஒரு கைப்பேசி எண் இவற்றைக் கொண்டு சிறு தொழில் செய்வதாக பாவனை செய்து கொண்டிருக்கும் நபர்களே அதிகம். அங்கீகாரம் இல்லாமல் தொழில் நடத்தும் நிறுவனங்களால் அரசாங்கத்துக்கு எத்தனையோ கோடி வருமான இழப்பு ஏற்படுகிறது.

என் அனுபவத்தில் பல குறுந்தொழில் அதிபர்கள் எந்த வித பதிவுகளுமின்றி கோடிக்கணக்கில் வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். கருப்பு பணப்புழக்கத்தை நாட்டில் அதிகப்படுத்துவதில் இதைப் போன்ற நபர்களின் பங்கு கணிசமானது. இவர்களை அடையாளம் கண்டு, சட்டத்தை கடுமையாக்கி தண்டனைக்கு உட்படுத்தினாலன்றி, இந்தப் பிரச்னை முடிவுக்கு வராது. இந்தச் சூழலில் நாட்டுப்பற்றோடு சமுதாய நோக்கோடு, தானும் வாழ்ந்து பிறரும் வாழ, தொழிலின் துன்பங்களை ஏற்க முன் வரும் நபர்கள் மனச்சோர்வு அடைகிறார்கள்.

பெரும்பாலான சிறு தொழிலதிபர்களுக்கு, போடும் முதலீட்டை திருப்பி எடுக்கவே நெடுங்காலமாகிறது. இத்தகைய நிகழ்கால அச்சுறுத்தலால், தொழில் செய்ய திறமையுள்ள பல தனி நபர்கள் முடங்கிப் போகின்றனர். அதனால் அரசாங்கம் முழு வீச்சாக நடைமுறை சிக்கல்களைக் களைந்து, இன்னும் விழிப்புணர்ச்சியோடு, யதார்த்தமான திட்டங்களைத் தீட்டி குறுந்தொழில் மற்றும் சிறுதொழில் உயிர்ப்புடன் இருப்பதற்கு முனையவில்லையென்றால், இன்னும் சில வருடங்களில், திறமையிருந்தும், தொழில் செய்ய முன்வருவது நின்றுவிடும்.

மக்கள்தொகை பெருக்கமுள்ள இந்தியா போன்ற நாடுகளில், குறுந்தொழில்களின் அழிவு பெரிய பொருளாதாரச் சிக்கல்களையும் வேலையில்லா திண்டாட்டத்தையும் ஏற்படுத்தும். அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளோ, ஒரு தொழிலின் தன்மை, அதற்குரிய சந்தை போன்றவற்றை நுணுக்கத்தோடு ஆராய்வதை விட்டுவிட்டு, பிணையாக கொடுப்பதற்கு அசையா சொத்து இருக்கும் பட்சத்தில் மட்டும் கடன் கொடுக்க முன் வருகின்றனர். இது ஒரு நகைப்புக்குரிய விஷயமாகும். அதாவது தொழில் உருவாக்குவதிலும், வளர்ப்பதிலும் கவனத்தைச் செலுத்தாமல், அது தொய்வடைந்து, தோல்வியடையும்போது தங்கள் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள அசையாச் சொத்துக்கள் உதவும் என்ற தவறான கண்ணோட்டத்தோடு வேலை செய்கின்றனர்.

உதாரணமாக, கடன் கொடுக்கும் சிறுதொழில்கள் எல்லாம் தோல்வியடையும்போது, அவர்கள் கொடுத்த அசையாச் சொத்துகளை அரசாங்கம் விற்று பணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஒரு தொழிலதிபரின் தோல்வியின் மூலம், பல புதிய தொழிலதிபர்களை உருவாக்கமுடியாது. புதிய தொழில்கள் உருவாகாத பட்சத்தில், திறமையுள்ள தொழிலதிபர்களின் தொழில்கள் நலிந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். மிக முக்கியமாக அரசாங்கம் சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கான கலந்தாய்வுக் கூட்டங்களை குறைந்தது மாதத்துக்கு ஒரு முறையாவது, அந்தந்த பகுதிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்து, வல்லுனர்களை அழைத்து, தொழிலதிபர்களுடன் உரையாடல் செய்தால், தொழிலதிபர்களின் நடைமுறை சிக்கல்களை அறிந்துக் கொள்ள முடியும்.

0

டர்கிஷ் காபி

turkishcoffeebackgroundஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 24

பெண்களும் சுயதொழிலும் என்ற தலைப்பில் இரண்டு சர்வதேச கருத்தரங்குகளில் கலந்துகொள்வதற்காக முதல் முறையாக அமெரிக்கா சென்றிருந்தேன். உலகின் பல பாகங்களில் இருந்தும் தொழில்முனைவோர் திரண்டிருந்தனர். நானும் என் தோழி ஒருவரும் அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தோம். கருத்தரங்கில் ஓர் அமர்வில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன.

ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருந்த ஒரு பெண்மணி வெளிப்படுத்திய கருத்து இது. ஆண்கள் சமைத்தால் சமையல் மேடையை சுத்தமே செய்வதில்லை என்றும், பாத்திரங்களிலிருந்து கரண்டிகளை வெளியில் எடுத்து, பின் அவற்றை மூடி ஃப்ரிட்ஜில் வைக்காமல் கரண்டிகளோடு உள்ளே வைப்பார்கள். துணி மாற்றும்பொழுது அல்லது குளிக்கச் செல்லும் பொழுது, பயன்படுத்திய ஆடைகளை அதற்குரிய கூடையிலோ வாஷிங் மெஷினிலோ போடுவதில்லை.

பல நாடுகளில் இருந்தும் வந்திருந்த பெண்கள் இந்தக் கருத்தை ஆமோதித்தார்கள். தங்கள் வீட்டிலும் இப்படித்தான் நடக்கிறது என்றார்கள். இதை ஊன்றி கவனித்தால் ஒரு விஷயம் புலப்படும். ஆண்களின் மனோபாவம் இனம், மொழி, மதம் என்ற வேறுபாட்டுக்கு அப்பால் ஒரே மாதிரியாக இருக்கிறது. பெண்களின் எதிர்பார்ப்புகளும் பெரும்பாலும் ஒன்றாகவே இருக்கிறது. இது ஒரு முக்கியமான விஷயம் அல்லவா?

வெளிநாட்டு பயணங்களின் பொழுதோ, நாம் அயல் நாட்டவரோடு வியாபாரம் பேசும்பொழுதோ அல்லது உணவருந்தும் வேளைகளிலோ அவர்களுடைய பொதுவான கலாச்சாரத்தை நாம் அறிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

உதாரணத்துக்கு நான் துருக்கி நாட்டிலிருந்து மின்னணு சாதனங்களை இறக்குமதி செய்வதற்காக அந்த நாட்டின் தலைநகரான இஸ்தான்புல்லுக்குச் சிலமுறை பயணம் செய்ய வேண்டியிருந்தது. அதே போல் கொரியாவின் தலைநகரான சியோலுக்கும் போக வேண்டியிருந்தது. துருக்கி நாட்டில் மரியாதை நிமித்தமாக டர்கிஷ் காபி எனப்படும் ஒரு பானத்தை கொடுத்தார்கள். காபி என்றதும் நானும் இயல்பாக அதை சுவைத்தேன். ஆனால் அது மிகவும் ஸ்ட்ராங்காக இருந்தது. ஒரு சில துளிகள் அருந்துவதேகூட கடினமாக இருந்தது.

வேண்டாம் என்று மறுப்பது மரியாதைக் குறைவான விஷயம். பண்டைய துருக்கியில் மணப்பெண்ணைத் தேர்ந்தெடுப்பதற்கு இந்த வகை காபி பயன்பட்டிருக்கிறது. யார் வேகமாக குடிக்கிறார்களோ அவரையே மணமகன் தேர்வு செய்து வழக்கமாக இருந்திருக்கிறது. இப்படி ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பழக்க வழக்கங்களைத் தெரிந்துவைத்துக்கொள்வது தொழில் முனைவோருக்கு அவசியம். எங்கே சைவம், எங்கே அசைவம்? பிறர் மனம் புண்படாதபடி நம் உணவு வழக்கத்தைத் தொடர்வது எப்படி? சைவம் மட்டுமே உண்ணும் நான், ஊர்வன, பறப்பன, மிதப்பன எல்லாவற்றையும் கடித்து ருசித்துச் சாப்பிடுபவர்களுக்கு அருகில் என் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இயல்பாக இருக்க நேர்ந்ததை இங்கே நினைத்துப் பார்த்துக்கொள்கிறேன்.

இருக்கும் இடத்துக்குத் தகுந்தபடி நடந்துகொள்வது முக்கியம். அயல்நாட்டுச் சந்திப்புகளில் நேரம் தவறாமை மிக மிக முக்கியம். வியாபாரச் சந்திப்புகளின் பொழுது அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி எதுவும் பேசக்கூடாது. ஃபார்மல் டைம், இன்ஃபார்மல் டைம் போன்ற பிரிவுகள் அங்கே உள்ளன. வியாபாரம் தவிர்த்த சந்திப்புகளில் மட்டுமே தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அதுவும் பொதுவான சில விஷயங்களைப் பற்றி மட்டுமே பேச வேண்டும்.

வியாபார ஒப்பந்தங்கள் முடிந்த பின்பு அவர்களை விருந்துக்கு அழைக்கலாம். நம் நாட்டை நினைவுபடுத்தும் ஒரு சில பரிசுப் பொருள்கள் கொடுப்பது சிறப்பு. எந்தவொரு நாட்டுக்குச் சென்றாலும், வியாபார நோக்கம் நிறைவேறிய பிறகே சுற்றிப்பார்க்கும் படலம் மேற்கொள்ளவேண்டும். இது மிகவும் முக்கியமானது.

0

செல்வத்தின் விதிகளுக்குத் திரும்புவோம். நமது முந்தைய தலைமுறையினர், ஈட்டும் பணம் முழுவதையும் தம்மைச் சுற்றியுள்ளவர்களுக்காகச் செலவு செய்து, வாழ்ந்து முடித்தனர். பெரும்பாலான குடும்பங்களில் ஒருவர் மட்டும் பணம் ஈட்டுபவராக இருப்பார். தங்கள் ஆசைகளை முதன்மைப்படுத்தி வாழாமல், தங்களுக்கென்று விருப்பங்களை வைத்துக் கொள்ளாமல், எதையும் பொருட்படுத்தாமல் வாழ்ந்தனர்.

அதற்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தாங்கள் ஈட்டும் பணத்தின் ஒரு பகுதியை தங்களுக்காகச் செலவு செய்தனர். வருமானத்தில் ஒரு பகுதி சினிமா, உடைகள், ஹோட்டல் ஆகியவற்றுக்குச் செலவு செய்யப்பட்டன. தான் சம்பாதிப்பதைச் சேமிக்க தனக்கும் உரிமை உண்டு என்று அவர்கள் நினைத்தனர்.

இதற்கு அடுத்த தலைமுறை அதாவது இன்றைய தலைமுறை, நான் சம்பாதிப்பது நான் மகிர்ச்சியாக இருப்பதற்கே என்று கருதுகின்றனர். பணம் நீராகச் செலவழிக்கப்படுகிறது. ஷாப்பிங் மால்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன. கேளிக்கைக்கான சாத்தியங்கள் மிகவும் விரிவடைந்திருக்கின்றன. கம்ப்யூட்டர், ஸ்மார்ட் ஃபோன், பைக், கார் என்று வாங்கவேண்டிய சாதனங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்துகொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட தலைமுறைக்குத்தான் இன்றைய வியாபாரிகளும் தொழில்முனைவோரும் சர்வீஸ் செய்துகொண்டிருக்கிறார்கள். விதவிதமான விளம்பரங்கள்மூலம் இவர்கள் இளைஞர்களை ஈர்க்கிறார்கள்.

தனி மனிதனின் சமூக மதிப்பு பணத்தைக் கொண்டு மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை என்பதை நாம் மறுக்கக்கூடாது. தனிநபர் அமைதி, மகிழ்ச்சி, நிம்மதி போன்ற அம்சங்களும் முக்கியமானவை. ஒருவன் மேலும் மேலும் சம்பாதித்துக்கொண்டே போகலாம். அவன் வாழும் சமூகம் சீர்கெட்டதாக இருந்தால் அவனால் தன் செல்வத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது.

இன்றைய இளைஞர்களும் யுவதிகளும் பகிர்ந்து வாழ்பவர்களாக இல்லை. மத்திய தர, கீழ் மத்தியதர குடும்பங்களில் ஒருவர் அல்லது இருவர் என்று சிறு குடும்பங்களாக மாறிவிட்டது. நான், எனது, என்னுடைய பொருள்கள் என்றுதான் பெரும்பாலானோர் சிந்திக்கிறார்கள். இந்தக் கண்ணோட்டம் சமுதாய வாழ்க்கையிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆடம்பர மோகம், வறட்டுத்தனமான கௌரவம் ஆகியவற்றால் கடன்,மேலும் கடன் என்று பலர் நிம்மதியிழந்து வருகிறார்கள்.

0