ஆழி பெரிது
47. விரதப் போராளிகள்
‘உன் பணிக்காக வீர விரதம் மேற்கொண்ட நாங்கள் இதற்காகவே கச்சை அணிந்துள்ளோம்!’
விளிம்பு நிலை சாதுக்கள் குறித்து போன அத்தியாயத்தில் பார்த்தோம். முழுக்க போர் கலைகளுக்கே தம்மை அர்ப்பணித்த ஒரு சாது வர்க்கம் இந்தியாவில் வேத காலம் தொட்டே இருந்திருக்கிறது. சமுதாயத்தில் பிரச்னைகள் ஏற்படும்போது அறத்தை நிலைநிறுத்தும் பொறுப்புடன் அது வாழ்ந்திருக்கிறது. இது குறித்த விவரணம் அதர்வண வேதத்தில் வருகிறது. அதர்வண வேதத்தில் ஒரு முக்கியமான பகுதி (15 ஆவது நூல்) விராத்யர்கள் என்பவர்களைக் குறித்து பாடுகிறது.
இவர்கள் ருத்திரனை வழிபடுகிறவர்கள். கருப்பு நிற ஆடை அணிந்தவர்கள். கைகளில் ஈட்டியும் வில்லம்புகளும் கொண்டிருப்பவர்கள். தலைப்பாகை அணிந்தவர்கள். விராதர் எனும் பெயர் விரதம் மேற்கொண்டவர்கள் என்பதிலிருந்து வந்திருக்கலாம் என ஸ்டெல்லா க்ராம்ரிச் கருதுகிறார். யஜுர் வேதத்தில் உள்ள சதாருத்ரியம் என்னும் ருத்ர துதியில் விராதபதி (தைத்ரீய சம்ஹிதை 4.5.4.1) என ருத்ரன் அழைக்கப்படுவதை க்ராம்ரிச் சுட்டுகிறார். ரிக் வேதத்தில் விரதங்களைக் காப்பாற்றும் தெய்வமாக (இங்கு அக்னி விராதபதி) துதிக்கப்படுவது இதனுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என க்ராம்ரிச் கருதுகிறார். வில்லெடுத்து விரதங்களைக் காப்பாற்றும் விராதன் அவனால் கிளர்ந்தெழுந்தே பிரஜாபதி படைக்கிறார். அத்தருணத்தில் விராதன் முக்கண் மகாதேவனாகவே ஆகிறான் என்பதாக இந்த தொன்மம் அதர்வண வேதப்பாடல்களில் அமைக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் விராதர்கள் என பல சமுதாயக்குழுக்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். ரிக்வேதத்தில் ‘சங்காத்மகர்’ (ரிக் 1.163.8) என்று சொல்லப்படும் குழுவைச் சேர்ந்தவர்களாக விராதர்கள் இருக்கலாம் என மவுரிஸ் ப்ளூம்பீல்ட் என்னும் இந்தியவியலாளர் கருதுகிறார். பாலி இலக்கியங்கள் மகதர்களை விராதர்கள் என அழைக்கின்றன. மள்ளர்கள் மற்றும் லிச்சாவிகள் விராத க்ஷத்திரியர்கள் என்று தர்ம சாஸ்திரங்கள் உருவான காலங்களில் அழைக்கப்பட்டுள்ளனர். கிழக்குப் பிரதேசங்களைச் சேர்ந்த அங்கர்கள் விராதர்கள் என அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் விராத பிராம்மணர்கள், விராத க்ஷத்திரியர்கள், விராத வைசியர்கள் ஆகிய பிரிவுகளும் இருந்திருக்கின்றன என்பதைப் பார்க்கும் போது ஒரு காலகட்டத்தில் விராதர்கள் ஒரு தனி அரசமைப்பு கொண்ட சமுதாயமாகக்கூட இயங்கியிருக்கக்கூடும் என கருத இடமுள்ளது.
கிரேக்க வரலாற்றாசிரியர்களின் குறிப்புகளில் இத்தகைய சாது, சன்னியாசிகள் குறித்த விவரணங்கள் வருகின்றன. கிமு 326 ஆம் ஆண்டு அலெக்சாண்டர் இந்தியாவின்மீது படையெடுத்தான். சிந்து நதியோர குடியரசு நாடுகளை எளிதாக வென்றான். இதற்கு முக்கியமான காரணம் அந்தக் குடியரசுகளிடம் ஒற்றுமையில்லாமல் இருந்ததுதான். இத்துடன் அலெக்சாண்டர் ஜீயஸ் என்னும் கிரேக்க இறைவனின் ஒரே மகன் என்றும் உலக வெற்றிக்காகவே பிறந்தவன் என்றும் கருத்துகள் பரப்பப்பட்டன. எனவே திட்டமிட்டு பரப்பப்பட்ட இந்த வதந்திகளால் சிந்து கரைகளில் இருந்த குடியரசுகளின் தலைவர்களில் சிலர் இதனை உண்மை என நம்பி அலெக்சாண்டர் பக்கம் சாய்ந்தார்கள்.
என்றாலும் அலெக்சாண்டரால் பாரதத்தின் அன்றைய பேரரசாக விளங்கிய மகதத்தின்மீது படையெடுக்க இயலவில்லை. உலக வெற்றி எனும் அவன் கனவு பாரதத்தில் தகர்ந்தது. அவன் பின்வாங்கிச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால்அப்படி திரும்பிச்செல்லும் போது குறைந்தபட்சம் சிந்து நதியருகிலான குடியரசுகளிலாவது மாசிடோனிய கொடி பறப்பது குறித்து அவனுக்குக் கிடைத்திருக்கக்கூடிய கர்வமும் இல்லாமலானது. அங்கெல்லாம் மக்கள் கிளர்ச்சி பெரிய அளவில் ஏற்பட்டிருந்தது. அதனை அடக்க அவன் முனைந்தபோது இந்தப் புரட்சியைத் தூண்டியவர்கள் சாது சன்னியாசிகள் என்பது அவனுக்குத் தெரிந்தது. கலகத்தை அடக்க 80,000 மக்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் சாதுக்கள். ஒரு கோவிலுக்குள் நுழைந்து அங்கிருந்த சன்னியாசிகள், அர்ச்சகர்கள் என பலரை அவன் கொன்றதை பண்டைய கிரேக்கஆவணங்கள் பெருமையுடன் பதிவு செய்திருக்கின்றன.
இறுதியாக, அலெக்சாண்டருக்கு பாரத சாது ஒருவருடன் ஏற்பட்ட சந்திப்பு அவனது உலக வெற்றி குறித்த ஆசையை முழுமையாக முறியடித்திருக்கலாம். தாந்தமிஸ் (Dandamis) என்கிற பாரதிய சாது ஒருவரை அலெக்சாண்டர் சந்தித்ததாக மெகஸ்தனிஸும் அர்ரியனும் எழுதிய விவரணங்கள் தெரிவிக்கின்றன. இவர் வனத்தில் வாழ்ந்து வந்தார். இவரைச் சந்திக்கஅலெக்ஸாண்டர் ஒரு தூதனை அனுப்பினான். அந்த தூதன் தாந்தமிஸிடம் தேவமைந்தனான அலெக்ஸாண்டர் அழைப்பதாகவும் வந்தால் உலகவெற்றியாளனான அலெக்சாண்டர் சாதுவுக்கு அளவிடமுடியாத செல்வங்களைஅளித்து கௌரவிப்பார் என்றும் வர மறுத்தால் சிரச்சேதம் தண்டனையாக கிடைக்குமென்றும் கூறினான்.
தாந்தமிஸ் எனும் அந்த பாரத சாது அலெக்சாண்டருக்கு சொன்ன மறுமொழி உலக வரலாற்றில் முக்கிய இடத்தை பெற வேண்டியதாகும்: ’கடவுள் என்பது அன்பு, அருள், ஒளி ஆகியவற்றின் வடிவம். மரணத்தையும் படையெடுப்பையும் தருகிறவன் தேவமைந்தன் அல்ல. … அலெக்சாண்டர் அளிப்பதாக நீங்கள் சொல்லும் எல்லாச் செல்வங்களும் எனக்குத் தேவையற்றவை. எனக்கு வேண்டிய அனைத்தையும் இந்த பூமி தருகிறாள். ஒரு தாய் தனது மகனுக்கு பால் நினைந்தூட்டுவதைப் போல என் தேவைகள் அனைத்தையும் அவள் பூர்த்திசெய்கிறாள். ஆனால் செல்வத்தை வெறியுடன் சேர்ப்பவர்களுக்கோ அதுவே அழிவையும் தருகிறது….என்னைக் கொல்லப்போவதாக நீங்கள் சொல்கிறீர்கள். இந்த உடலைத்தானே நீங்கள் அழிக்கமுடியும். ஆன்மாவை என்ன செய்யமுடியும்? அது கிழிந்த உடையைத் துறப்பது போல இவ்வுடலை துறந்து அதன் சத்திய நிலைக்கு திரும்பிவிடும்…’
பூமியைக் குறித்த இந்த சாதுவின் பார்வை அதர்வண வேதத்தின் பூமி சூக்தத்தை நினைவூட்டுகிறது. கிரேக்க சரித்திர ஆசிரியர்கள் எழுதுகிறார்கள். ‘உலகில் வெற்றிகளையே சந்தித்த அலெக்சாண்டர் அந்த இந்தியத் துறவியின் முன்னால் தன்னைவிட மேலான வெற்றியாளரைச் சந்தித்தான்.’
பிற்கால அன்னியப் படையெடுப்புகளின் போதும், நாத சித்த யோகிகள் என்னும் சாதுக்கள் ராஜ புத்திரர்களின் சமுதாய-ஆன்மிக குருக்களாக இருந்து அறத்தைக் காக்கும் கிளர்ச்சிகளை உருவாக்கினார்கள். இவர்களும் சிவ வழிபாடு கொண்டவர்கள். பின்னர் நாக சாதுக்களின் அகாராக்கள் முக்கிய அன்னிய ஆக்கிரமிப்புகளின் எதிர்ப்பு கேந்திரங்களாக விளங்கின. இவற்றில் முக்கிய வழிபாட்டு தெய்வமாக விளங்கியவர் ருத்ர அம்சமாக கருதப்பட்ட அனுமான் ஆவார். இந்தச் சாது அணிகள் பின்னர் நவீனத்துவ காலகட்டங்களில் எப்படி ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் சக்திகளாக மாறின என்பதை முந்தைய கட்டுரையில் நாம் பார்த்திருந்தோம். ஆம், தேசத்தின் விடுதலையையும் அறத்தையும் காப்பாற்ற விரதம் பூண்ட துறவிகளின் படை ஒன்று வேத காலம் தொடங்கி தொடர்ந்து இந்த மண்ணில் இருந்து கொண்டே இருந்திருக்கிறது.
மேலதிக விவரங்களுக்கு:
- Ancient India as described by Megasthenes and Arrian, [J.W.Mc Crindle, 1877]
- Stella Kramrisch, The Presence of Śiva, Motilal Banarsidass Publ., 1988
- William.R.Pinch, Warrior ascetics and Indian empires, Cambridge University Press, 2006













