பெண் – கடவுள் – பிசாசு

பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும்

பெண்மனது என்னவென்று புரியவில்லையே?

மேலேயுள்ள பிரபலமான பழைய தமிழ் சினிமாப் பாடலின் வரிகளை நீங்கள் அறிவீர்களா?

முன்பெல்லாம் அந்தப்பாடல் வரிகளைக்கேட்கும்போது ‘அட! ஆண்களெல்லாம் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு பெண்கள் புதிராக இருக்கின்றார்கள் போல’ என்று பெருமையாகக்கூட நினைத்திருக்கிறேன். ஆனால், இப்போது கேட்டால் அருவருப்பாகவுள்ளது. இதை வாசித்துக்கொண்டு செல்லும்போது ஏனென்பது உங்களுக்கும் புரியும்.

பெண்களைப்பற்றி நமது சமூகத்திலுள்ள ஆண்கள் என்னதான் நினைக்கிறார்கள்?
தாய் எனும் பெண்ணிலிருந்து பிறந்து அவளிடம் பாலருந்தி அவளது பராமரிப்பிலேயே வளர்ந்து வருகிறான் ஓர் ஆண்மகன். அதே பெண்ணின் வயிற்றில் பிறந்து தன்னைப்போலவே வளரும் பெண் குழந்தையான தனது சகோதரியுடன் சேர்ந்து ஒரே வீட்டில் ஒரே சூழலில் ஒன்றாக வளர்கின்றான். ஆனால் இளம்பருவத்தை எட்டியதும் அவனிடத்தில் பெண்கள் பற்றிய ஏளனமான கருத்துக்களும் வக்கிரமான சிந்தனைகளும் எப்படித் தலைதூக்குகின்றன..?

பாலியல் தேவைகளுக்காக பெண்கள் மீது ஈர்ப்பு ஏற்படுவதை ஓர் இயற்கையான உணர்வாக ஏற்றுக்கொள்ளமுடியும். ஆனால் அதையும் மீறி பெண்கள் மீதான மரியாதையற்ற அவனது எண்ணங்களையும் நடத்தைகளையும் நாம் எவ்வாறு புரிந்துகொள்வது?
நமது சமூகத்திலே தனது வயதொத்த ஒரு பெண், தன்னைவிட புத்திசாலியாகவோ திறமைசாலியாகவோ இருப்பதை விரும்பாத அல்லது சகித்துக்கொள்ள முடியாத போக்கு ஆரம்பப் பாடசாலைப் பருவத்திலிருந்தே ஆண்பிள்ளைகளிடம் காணப்படுகின்றது. இதன் தொடர்ச்சியாக பதின்வயதை அடைந்ததும் ஒரு பெண்பிள்ளை பாடங்களிலோ அல்லது பாடசாலைச் செயல்முறைகளிலோ ஆண் பிள்ளைகளுக்குச் சமமாகவோ அல்லது ஆண்களை விடத் திறமையாகவோ சவாலாக இருந்தால் அதை எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள்? முயன்று படித்துப் பயின்று அவளை முந்துவதற்கு நினைப்பான்.

முடியாதவிடத்து நேர்மையீனமான வழிமுறைகளைக் கையாண்டு அவளை வீழ்த்துவதற்கு நினைப்பான். இரண்டும் முடியாதவிடத்து அவள் திறமை காட்டும் துறையை மலினமாகச் சித்திரித்து அவளது சுயதிருப்தியை இல்லாதொழிக்க முயற்சிப்பான். இதுவே வளர்ந்து தொழிற்துறைக்குள் வந்தபின்பு ஒரு பெண் உயர்பதவிக்கு வந்து விட்டாளெனில், அவளை சக ஆண்கள் எப்படி எடுத்துக்கொள்கின்றார்கள்? ஒன்று, அவளை மானசீகமாக வெறுப்பார்கள். அல்லது அவளது பெண் என்ற பால்நிலை வேறுபாட்டை ஒரு பலவீனமாக எடுத்துக் காண்பிக்கும் விதமாக அவளை சுயமாக இயங்கவிடாது மிகை உதவிகளைப் புரிய முற்படுவார்கள்.

உதாரணத்திற்கு ஒரு பாடசாலைக்கு அதிபராக சகல தகைமைகளுடனும் ஒரு பெண் நியமிக்கப்பட்டாளாயின் அங்குள்ள பெரும்பான்மையான ஆண் ஆசிரியர்கள் அவளை தமது மேலதிகாரியாக ஏற்றுக்கொள்வதற்கு உள்ளூர விரும்புவதில்லை. அவர்களது ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் ஒரு பெண்ணின் கீழே இயங்குகின்றோமே என்ற ஆற்றாமையோடு வெதும்பிக் கொண்டிருப்பார்கள்.

அல்லது ‘நீங்கள் பெண் என்பதால் உங்களால் எல்லாவற்றையும் செய்ய இயலாது. ஆகவே நாங்கள் உங்களுக்கு ஒத்தாசை புரிகின்றோம்’ என்று உதவுவார்கள். உதவிபுரிவது நல்ல விடயம்தான் என்றாலும் அந்த உதவிகளுக்குள்ளே இருக்கும் மறைமுக செய்தி முக்கியமானது. அதாவது ஒரு தகைமையுள்ள பெண்ணைக்கூட அவளது பலவீனங்களை வைத்து வீழ்த்துவதிலே ஆண்களுக்குள்ள குரூர திருப்தியைத்தான் அந்த உதவிகள் வேறுவிதமாக நிறைவேற்றுகின்றன.

இவ்வளவு ஏன், நமது நாட்டின் ஆட்சி உயர்பீடத்திலே ஒரு பெண் இருந்த கால கட்டங்களில் எல்லாம் ‘பொம்பளை ஆட்சிக்குக் கீழ் இருப்பது நல்லது இல்லை’ என்று கூறித்திரிந்த படித்த கனவான்கள் கூட நம்மிடையே இருந்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
தமது வாழ்விலே தாய், சகோதரி, தாரம், மகள், மருமகள், பேத்தி என்று ஓர் ஆணுக்கு வாழ்நாள் முழுவதும் பெண் உறவுகள் அடுத்தடுத்து ஏற்பட்டு வந்தும் கூட பெண்ணை சகமனிதனாக கருதுவதற்கு ஆண்கள் ஏன் முன்வருவது கிடையாது?

ஏன் பெண்களை கடவுள்களாகப் போற்றுகின்றார்களே…காதலி என்று கொஞ்சுகின்றார்களே…மனைவி ஏன்று மாய்கின்றார்களே தாயிற் சிறந்த கோவிலுமில்லை…தாயின் பாதங்களின் கீழேதான் சொர்க்கம் உள்ளது, தாயே மனிதனின் கண்கண்ட தெய்வம் என்றெல்லாம் புகழாரம் சூட்டியிருப்பதெல்லாம் ஆணாதிக்கமுள்ள இந்தச் சமூகம்தானே… என்றெல்லாம் நீங்கள் சிந்திக்கலாம், கேட்கலாம்.

அவற்றை நான் மறுக்கவில்லை! ஆனால் அதற்காக மகிழ்ச்சியடையவும் முடியவில்லை. ஏனெனில் அது ஆண்வர்க்கத்தினரின் ஒரு விதமான ஏமாற்று வேலை அல்லது தப்பித்தல்.
அதாவது.. நீங்கள் பெண்களை ஒரேயடியாக உயர்த்திக் கடவுளாக்குவதிலும் எதிர்மறையாக, ‘ஆண்களை மயக்கி மோசம்செய்ய வந்த பிசாசுகள்’ என்று வசைபாடுவதிலும் நிகழும் விளைவு ஏறத்தாழ ஒன்றுதான். ஆம்! இந்த இரண்டு செயல்களினாலும் பெண்களுக்கு சமூகத்திலே கிடைக்க வேண்டிய நியாயமான சம அந்தஸ்தை அல்லவா மறுக்கின்றீர்கள். வேறு வார்த்தையில் சொல்வதானால்… கடவுள் – பிசாசு என்ற இரு அந்தங்களுக்கும் பெண்ணை எடுத்துச் செல்வதன் மூலம் பெண்ணைப் பெண்ணாகப் பார்ப்பதிலிருந்தும் அவளுக்குச் சம முக்கியத்துவம் தருவதிலிருந்தும் தந்திரமாகத் தப்பித்துக் கொள்கின்றீர்கள்.
ஒருவன் தனது மனைவியை அல்லது காதலியை சகமனிதனாக எண்ணாமல் போகப்பொருளாக நினைத்து அவளைக் கொண்டாடுவதனால் அவளுக்குரிய சம முக்கியத்துவம் கிடைத்து விடுவதில்லை.

‘ஓ! என் அழகிய கிளியே பார்! உன்னை எவ்வளவு விலையுயர்ந்த கூண்டிலே அடைத்து வைத்திருக்கின்றேன்..இதைவிட கௌரவம் வேறென்ன வேண்டும் உனக்கு?’ என்று அதுவரை சுதந்திரமாய்ப் பறந்துதிரிந்த கிளியிடம் கூறுவதற்கும் ஒரு மனைவியை அல்லது காதலியை அழகிய துணிமணிகளாலும் விலையுயர்ந்த ஆபரணங்களாலும் அலங்கரித்து ‘கார்கூந்தலழகியே..கயல்விழித் தேனே காலம் முழுக்க நான் உனதழகுக்கு அடிமையே’ என்று பிதற்றுவதற்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது.

ஆண்களின் இந்தப் புகழ்ச்சிக்குப் பின்னாலிருக்கும் ஏமாற்றுச் சதிவலையைப் புரிந்து கொள்ளாத பெண்கள் வேண்டுமானால் ஏமாந்து போகலாம். ஆனால் உண்மைகளை நீண்ட காலத்திற்கு ஒளித்து வைக்க முடியாது. அது ஒரு பெண்ணின் கர்ப்பம் போல என்றாவது ஒருநாள் வெளிப்பட்டே தீரும்.

காதலியைப் புகழ்வதிலே பாலியல் தேவைகள் என்ற தேவையுண்டு. தாயைப் புகழ்வதற்கு காரணமென்ன?

மனிதன் உயர்நிலைப் பகுத்தறிவுள்ள விலங்கு. தான் புரியும் ஒவ்வொரு செயலுக்கும் தனது சமூகம் சார்ந்த பெறுமானங்களை அறிந்தும் புரிந்தும் வைத்திருக்கக்கூடியவன். எந்தவொரு தீங்கான செயலைச் செய்யும்போதும் உள்ளார்ந்த குற்றவுணர்வை வேறு ஏதோ ஒரு விதத்தில் சமாதானம் செய்ய வேண்டிய தேவை அவனுக்குள்ளது. (உ-ம் : பாவகாரியங்களை விரும்பியோ விரும்பாமலோ செய்தவர்கள் கோயில் உண்டியல்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அல்லது பொருளை பரிகாரமாக்குதல்).

தாய் என்பவளை ஓர் ஆண் மிகைத்துப் போற்றுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். சிறுவயதிலே தாயை இழந்ததனால் உண்டான பிரிவாற்றாமை ஏக்கமாக இருக்கலாம். இருந்தபோதிலும் தனது குற்றவுணர்வை சமாதானம் செய்யும் நோக்கமே பெரும்பாலும் உள்ளது.

சிறுவயதிலே தனது குழப்படிகளால் தாயை வருத்திய குற்றவுணர்வுகள்… இளைஞனானதும் தாயைச் சரிவரப் போஷிக்காத குற்றவுணர்வுகள்.. திருமணமானதும் தனது அன்றாட அலுவல்களினாலும் பொறுப்புகளினாலும் தாயைச் சென்று பார்த்துவரக்கூட முடியாத குற்றவுணர்வுகள்…என்று உள்மனத்திலே கிளம்பும்போது அவற்றைச் சமாதானம் செய்ய ஏதாவது செய்தாக வேண்டுமே…

‘அம்மாவென்றழைக்காத உயிரில்லையே…’ போன்ற ‘அம்மா’ பாடல்களை எழுதியும் பாடியும் வருகின்ற வாலி, இளையராஜா, வைரமுத்து, பாரதிராஜா போன்றவர்களைப் பார்த்தீர்களானால் இந்த உண்மைகள் தெளிவாக விளங்கும். அவர்கள் அத்தனைபேரும் தமது துறைசார்ந்த பரபரப்பான மனிதர்கள்.

கிராமத்துத்தாயை ஊரிலே கள்ளிக்காட்டிலும் கருவேலங்காட்டிலும் விட்டுவிட்டு பிழைப்புத்தேடி சென்னைக்கு வந்தவர்கள். நீண்டகால அலைச்சல்களுக்குப் பின்பு சினிமாத்துறையிலே குறிப்பிடத்தக்க அளவு வெற்றிபெற்றாலும் அவர்களுக்கெல்லாம் உள்ளுர தங்கள் தாய்குறித்த மேற்கூறிய உணர்வுகளின் உறுத்தல்களை சமாதானம் செய்வதற்கு எதாவது செய்தாக வேண்டிய தேவையுள்ளது. அதன் விளைவுகள்தான் தாய் மீதான அதீத பாசத்தை வெளிக்காட்டும் விதமான பாடல்கள், நூல்கள் முதலியன.
கிராமத்திலேயே கிடந்து வாழ்நாள் முழுவதும் தாய்க்கு ஒத்தாசையாக இருந்துவரும் பிள்ளைகளுக்கு -அதிலும் குறிப்பாக தாயை அவளது முதுமைப்பருவத்தின் ஆரம்பம் முதலே பராமரித்து வரும் பெண்பிள்ளைகளுக்கு இத்தகைய மிகை முயற்சிகளின் அவசியம் இருப்பதில்லை.

ஆக நமது சமூகத்திலேயுள்ள ஆண்கள் தங்களில் ஒருத்தியாகி ஒன்றாய் வாழும் பெண்ணை, ஒன்று எட்டாத உச்சியில் கொண்டு நிறுத்துவார்கள் அல்லது அதல பாதாளத்தில் வீழத்துவார்களேயொழிய சகமனிதனாக மதிப்பதில்லை என்பதுதான் உண்மை.

0

இவ்வாறு மதிக்காமல் இருப்பதற்கு அடிப்படைக் காரணங்கள் எதுவாக இருக்க முடியும் என்று பார்ப்போம். வேறு எதுவுமே கிடையாது. நாம் வாழும் குடும்பச் சூழல்தான் முக்கியமான காரணம். சிசுவாகப் பிறக்கும் ஓர் ஆண் குழந்தை ஓரளவு தன்னைப் புரிந்து கொள்ளக்கூடிய பருவம் வந்தவுடன் ஆண்- பெண் பால் வேறுபாட்டையும் அவற்றுக்கிடையேயுள்ள சமமின்மையையும் தனது தாய் தந்தையிடமிருந்துதான் முதலில் புரிந்து கொள்கின்றான்.
வெகு அரிதான விதிவிலக்குகளைத் தவிர, தந்தை நினைத்ததை தடையின்றிச் செய்வதையும் சுதந்திரமாக இயங்குவதையும் மாறாக, தாய் அவ்வாறின்றி தனது பெரும்பான்மையான தேவைகளுக்கும் நடமாட்டங்களுக்கும் தந்தையைச் சார்ந்து வாழ்வதையும் பார்க்கின்றான். அத்துடன் அடிக்கடி தாயின் நியாயமான கோரிக்கைகள் கூட தந்தையினால் வரையறுக்கப்படுவதையும் காண்கின்றான். அங்கிருந்தே ஆரம்பமாகின்றது ஒரு ஆண்மகனின் பெண்களின் மீதான மேலாதிக்கக் கருத்துருவாக்கம்.

இந்தக் கருத்து மேலும் வலுவடைவது தனது சகோதரி அல்லது உறவுப் பெண் பருவ வயதுக்கு வந்தவுடன் திடீரென வேறுபட்டு நடத்தப்படும் விதம். அவளை சுயமாக நடமாட விடாது கட்டுப்படுத்துவதும் அவளது நிலைகுறித்து குடும்பத்தினரால் அதீத கவனம் செலுத்தப்படுவதும் சிறிய சிறிய மீறல்களுக்கெல்லாம் அவள் கண்டிக்கப்படும் விதமும் அவனைப் பெரும் குழப்பத்திற்கு உள்ளாக்குகின்றன.

பலவேளைகளிலே அதற்குரிய உருப்படியான காரணங்கள் கூட அவனுக்குச் சரிவரக்கூறப்படவதில்லை. இதனால் ஆண்- பெண் எனும் பால்வேறுபாடுள்ள மனிதர்களின் இயற்கையான உடல்சார்ந்த வேறுபாடுகள் பற்றிய புரிந்துணர்வு முறையாகச் செய்யப்படாத வெற்றிடம் ஒன்று அவனிடம் உருவாகின்றது.

அந்த வெற்றிடத்தை உடனடியாக நிரப்புவது அவனது வயதொத்த கற்றுக்குட்டி நண்பர்களே. முறையான பாலியல் கல்வி மூலமாகச் செய்யப்பட வேண்டிய மேற்கூறப்பட்ட விடயம் கற்றுக்குட்டித்தனமான அரைகுறை விளக்கங்களால் நிரப்பப்படுகின்றது. இதனால்தான் பொதுவாக ஆண்கள் இளம்பருவத்தை எட்டும்போது தமது நண்பர் வட்டத்தின் தன்மைகளுக்கேற்ப பெண்கள் பற்றிய தவறான கண்ணோட்டங்களுக்கும் வக்கிர உணர்வுகளுக்கும் ஆளாகி விடுகின்றனர்.

இன்றைய முதலாளித்துவ சமூக நுகர்வுக் கலாசாரத்தின் விளைவுகளான சினிமா, தொலைக்காட்சி, நச்சு இலக்கியங்கள், விளம்பரங்கள் போன்றவை பெண்களை வெறும் போகத்திற்குரிய உயிரினங்களாக மட்டுமே கருதுகின்ற வக்கிர உணர்வுகளையும் மரியாதையின்மையையும் மேலும் தூண்டி விடுகின்றன.

சில சமூகங்களிலே பின்பற்றப்படும் நம்பிக்கைகள் சார்ந்த கருத்தாக்கங்களும் ஆண்களின் மனதிலே பெண்களை இரண்டாம்தரப் பிரஜைகளாகக் கருதும் எண்ணப்பாங்குகளுக்குக் காரணமாக இருந்து வருகின்றது. தாம் பின்பற்றுகின்ற மதம் கலாசாரம் ஆண்கள்-பெண்கள் தொடர்பாக எத்தகைய வழிமுறைகளை காலம் காலமாக வலியுறுத்தி வருகின்றதோ அத்தகைய நிலைப்பாடே ஆண்களின் மனோபாவமாக உருவெடுத்து வளருகின்றது. கல்வி வளர்ச்சி, தர்க்க ரீதியான சிந்தனை, ஏனைய சமூகங்களின் இடைத்தாக்கங்கள் இத்தகைய நம்பிக்கைகள் சார்ந்த கருத்தாக்கங்களில் தாக்கங்களை விளைவித்தாலும் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்குவதில்லை.

உதாரணமாக ஒரு ஆண்மகன் தனது துறைசார் கல்வியினூடாக தனது சமூக நம்பிக்கைகள் பற்றி எழும் கேள்விகள் குறித்து சிந்திக்க முன்வருவதில்லை. இதற்குரிய காரணங்களில் ஒன்றாக அந்த நம்பிக்கைகளைக் கேள்விக்குட்படுத்தும்போது தான் வாழும் சமூகத்திலிருந்து கிடைக்கும் உவப்பற்ற எதிர்வினைகளைக் கூறலாம். இதைவிடவும் முக்கியமான காரணம் ஒன்றுள்ளது.

இயல்பாகவே சமூக நம்பிக்கைகளால் ஆண்களுக்கு தரப்பட்டிருக்கும் ‘பெண்களை மேலாதிக்கம் செய்யும் வசதியை’ அவர்கள் இழக்க விரும்புவதில்லை. இதன் காரணமாக ஒரு ஆண்மகன் எவ்வளவுதான் தான் சார்ந்திருக்கும் துறையில் பெரும் அறிஞனாகவோ புத்திஜீவியாகவோ இருந்தபோதிலும் தனது சமூகம் பின்பற்றி வருகின்ற நம்பிக்கை மரபுகளைக் கேள்விக்குட்படுத்துவதில்லை.

இதை ஓர் எளிய உதாரணத்தினூடாக விளங்கிக்கொள்ள முடியும். நானறிந்த நன்கு படித்து பெரும்பட்டங்களும் புகழும் பெற்ற ஒரு டாக்டர் தனது சிக்கலான சத்திரசிகிச்சைகளை முடித்துக் கொண்டதும் ஓய்வறைக்குச் சென்று சிகரெட் ஒன்றைப் புகைக்கும் பழக்கமுடையவாக இருந்து வருகின்றார்.

புகைத்தல் ஒரு மனிதனின் நுரையீரல்களுக்கு எவ்வளவு கேடானது என்பதை ஐந்தாம் தரத்தில் கற்கும் ஒரு சிறுவன்கூட நன்கறிவான். அவ்வாறெனில் இத்தனை பட்டம்பெற்ற டாக்டருக்கு அது தெரிவதில்லையா? தனது சேவைக் காலத்திலே புகைத்தலின் தீங்கைப்பற்றி பொதுமக்களுக்கு அவர் பெரும் சொற்பொழிவுகளைக் கூட ஆற்றியிருக்கக்கூடும்.
அவரிடம் இதுபற்றி நான் ஒருதடவை வினவியபோது, ‘தெரியும்தான்.. என்ன செய்வது? பழகிவிட்டது…டென்ஷனைக் குறைப்பதற்குத்தான் அப்படிச் செய்யகின்றேன்’ என்றார். இதனை எவ்வாறு புரிந்து கொள்வது?

இந்த டாக்டரின் மனோநிலைதான் பெண்களை இரண்டாம்தரப் பிரஜையாகக் கருதுவதை அப்பட்டமாகவும் மறைமுகமாகவும் ஊக்குவிக்கின்ற சமூகங்களிலிருந்து வரும் பெரும்பாலான படித்த ஆண்களிடமும் இருந்து வருகின்றது.

பெருந்தீங்கு பயக்கும் காட்டுமிராண்டித்தனமான கருத்தாக்கங்களைத்தான் இன்னும் கும்பல் கும்பலாகப் பின்பற்றிக்கொண்டிருக்கின்றோம் என்பதை நன்கு அறிந்தாலும் கூட அவற்றிலிருந்து தமது மக்களை விடுவிக்கும் எண்ணமோ செயற்பாடுகளோ இல்லாமல் வாளாவிருக்கின்றார்கள் இந்த ‘அறிவுஜீவிகள்’.

அப்படிச் சும்மா இருப்பதுகூட அவர்களுக்குச் சுகமாக இருக்கின்றதோ என்னவோ? என்றாலும் கற்ற கல்வியினாலும் பெற்ற அறிவினாலும் உண்மைகளைப் புரிந்துகொண்ட நேர்மை மிக்கவர்களால் அவ்வாறு இருக்க நிச்சயமாக முடியாது. அவர்களது மனசாட்சி எங்கோ நான் படித்த பின்வரும் சிறுகவிதையைப் போன்று எப்போதும் உறுத்திக் கொண்டேயிருக்கும் என்பது மட்டும் உண்மையோ உண்மை.

தொல்லை தவிர்ப்பதற்காக
தொலைபேசியை அணைத்து வைத்தபின்பும்
‘யாராவது அவசரச்செய்திக்காக அழைத்திருப்பார்களோ’
என்ற எண்ணத்தின் அரிப்பிலிருந்து மட்டும்
ஏனோ தப்பிக்க முடியவில்லை!

0

மூதூர் மொகமட் ராபி

கல்வி : கொலை, கொள்ளை மற்றும் அபத்தங்கள்

ஒரு சென்னை மாணவர் தமது ஆசிரியரை கொலை செய்தபோது எழுத ஆரம்பித்த கட்டுரை இது. வேலை அழுத்தத்தில் நின்றுபோன அதனை அதன் பிறகு நடந்த மற்றொரு ஆசிரியர் கொலை தொடர வைத்திருக்கிறது.

தஞ்சாவூரில் உள்ள டி.கே.சுப்பையா நாயிடு ஆரம்பப்பள்ளியில் நான் படித்தபோது நடந்த சம்பவம் இது. சீனிவாசபுரம் அகழிக்கு அருகே இருக்கும் மனநலம் குன்றிய இளைஞர் ஒருவரை ஒரு சிறுவன் கல்லால் அடித்துவிட்டான். சற்றே புடைத்த நெற்றியுடன் அவர் அருகே இருக்கும் எங்கள் பள்ளிக்கு வந்து அது குறித்து குற்றம்சாட்டினார். அன்றைய காலைநேர அணிவகுப்புக்கு அவரை கூட்டிவந்து கல்லால் அடித்த மாணவனை அடையாளம் காட்டச்சொன்னார்கள். டிராயர் போட்டிருந்த பையன் என்பதைத் தவிர அவரால் வேறு அடையாளம் சொல்ல முடியவில்லை, அந்த கூட்டத்தில் தேடவும் அவர் முன்வரவில்லை. அதன்பிறகு எங்கள் பள்ளியின் ஐந்தாம்வகுப்பு ஆசிரியர் ஒருவர். அவரைப் போல (மன வளர்ச்சி குன்றியோரிடம்) இருப்பவர்களிடம் சண்டைக்கு போக்க்கூடாது என அறிவுரை சொன்னார். வேறொரு ஆசிரியர் அவரை பள்ளி வாயிற்கதவு வரை கொண்டுவிட்டு வந்தார்.

நானூற்றுக்கு குறையாத மாணவர்கள், கிட்டத்தட்ட இருபது ஆசிரியர்கள் கொண்ட ஒரு பள்ளி, மனவளர்ச்சி குன்றிய ஒரு இளைஞரின் குற்றச்சாட்டை செவிமடுத்து அதற்கு பத்து நிமிடத்தை செலவிட்டது. விவரம் தெரிந்த பிறகு என் பள்ளி குறித்து நான் பெருமிதம் கொள்ளும் ஒரு நிகழ்வு இது. சராசரிக்கும் குறைவான மதிப்பெண் பெறும் மாணவனாகவே அந்த பள்ளியிலிருந்து நான் வெளியே வந்தேன் (இன்றைய மதிப்பீடுகளின் அடிப்படையில் எதற்கும் லாயக்கற்றவனாக வெளியே வந்தேன் என்று சொல்லலாம்). ஆனால் சக மனிதர்கள் எல்லோரையும் சமமாக மதிக்கும் அடிப்படை மனிதப்பண்பை நான் கற்றுக்கொண்டதற்குப் பின்னால் என் பள்ளியும் இருக்கிறது.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதைய பள்ளிகளின் சூழலை ஒப்பிட்டு பார்க்கையில் அதிர்ச்சியாகவும் திகைப்பாகவும் இருக்கிறது. தலையைச் சுற்றி கையால் காதைத் தொடும் ஒற்றை தேர்வு முறை மட்டும் இருந்த நிலை மாறி இப்போது பள்ளிகளின் அட்மிஷன் என்பது பெற்றோரின் வருமானம், படிப்பு மற்றும் அவர்களது முந்திச்செல்லும் திறமை (ஆறுமாதம் முன்பே இரவெல்லாம் கண்விழித்து விண்ணப்பம் வாங்குவது போன்ற முயற்சிகள்) என ஏராளமான விடயங்களை அடிப்படையாக கொண்டிருக்கிறது. ஏறக்குறைய ஒரு காரை சர்வீஸ் செய்யும் பணியைப்போல கற்பித்தலையும் குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து அனுப்பும் சேவையாக மாற்றியிருக்கின்றன நம் சமகாலப் பள்ளிகள்.

ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் கற்றுத்தரவேண்டிய பள்ளிகளே அரசு விதிகளை சர்வசாதாரணமாக புறந்தள்ளுகின்றன. சமூகத்தில் ஆசிரியர்களுக்கு இருந்த மரியாதையை காலி செய்ததில் பெரும் பங்கு தனியார் பள்ளிகளுக்கு உண்டு. அறுநூறு ரூபாய்க்கு ஆசிரியர்கள் கிடைப்பார்கள் எனும் அரிய உண்மையை அவர்கள்தான் கண்டுபிடித்தார்கள். வீட்டில் சும்மாயிருப்பதற்கு பதிலாக ஏதேனும் நர்சரி பள்ளியில் டீச்சர் வேலை பார்க்கலாம் எனும் நிலை வந்த பிறகுதான் ஆசிரியர் பணியின் மரியாதை முற்றாக குறைந்தது.

இந்த வருடத்து மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களே அடுத்த ஆண்டுக்கான வருவாய்க்கான ஆதாரம் என்பதால் தனியார் பள்ளிகள் எல்லா மாணவனையும் அதிக மதிப்பெண் பெற வைக்க துடிக்கின்றன. சில சுமாரான தனியார் பள்ளிகள் பத்தாம் வகுப்பில் 480 வாங்கிய மாணவர்களை பதினொன்றாம் வகுப்பில் கட்டணமில்லாமல் சேர்த்துக்கொள்கின்றன. அவர்கள் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்வாங்கி பள்ளி ஊர் முக்கில் ஃப்ளெக்ஸ் பேனர் வைக்க உதவுவார்கள்.  தனியார் பள்ளிகள் புண்ணியத்தில். இப்போது மதிப்பெண் என்பது ஒரு சரக்காக உருமாற்றம் பெற்றிருக்கிறது. ஒரு இரும்பு பட்டறைக்கும் பள்ளிக்கும் ஒரேவிதமான வியாபார நியாயங்கள் வந்த காலகட்டம்தான் நமது சமூகத்தின் அபாயகரமான அத்தியாயத்தின் துவக்கம் என கருதுகிறேன்.

தனியார் பள்ளிகளின் ஆசிரியர் தரப்பு மிகவும் பரிதாபகரமானது. எப்படியாவது எல்லா மாணவனையும் அதிக மதிப்பெண் வாங்கவைத்தால் போதும் எனும் ஒற்றை இலக்கு மட்டுமே ஒரு ஆசிரியருக்கு தரப்படுகிறது. இன்றைய நிலையில் ஆசிரியர் மாணவர் உறவென்பது ஒரு கஸ்டமர் கேர் ஊழியருக்கும் நுகர்வோருக்குமான உறவைப்போல ஆகியிருக்கிறது.. மிகக் குறைவான ஊதியம் மட்டுமே தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தரப்படுகிறது. ஆகவே உள்ளூரை விட்டு போக விரும்பாதவர்கள், வேறு வாய்ப்பு இல்லாதவர்கள் ஆகியோர்தான் பெரும்பாலும் பள்ளி ஆசிரியர் பணியை தெரிவுசெய்கிறார்கள். இவர்கள் வசம்தான் அனேக நடுத்தர வர்க குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

நான் ஒரு வருடம் எங்கள் கிராமத்து பள்ளியில் படித்தபோது உடன் படித்தவர்கள் பலரும் விவசாய கூலித்தொழிலாளர்களின் பிள்ளைகள். அறுவடை மற்றும் நடவு காலங்களில் பதினைந்து இருபது நாட்கள் மாணவர்கள் விடுப்பு எடுப்பது சர்வ சாதாரணம். மூன்று ஆண்டுகள் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள் எல்லா வகுப்பிலும் உண்டு (அடுத்து ஆசிரியர் சொல்லப்போகும் ஜோக்கைக்கூட சரியாக கணிக்கும் திறமைசாலிகள் அவர்கள்). அங்கே பல பெற்றோருக்கு தமது பிள்ளைகளை கலெக்டராக்கும் டாக்டராக்கும் கனவெல்லாம் இல்லை. மகனை மகனாக பார்க்கும் குணம் மட்டுமே உண்டு. நாலு எழுத்து படிச்சா நல்லதுதானே எனும் எண்ணத்தினால் மட்டுமே அவர்கள் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்கள்.

இப்போது அதே கிராமத்தின் பல குடும்பங்கள் மன்னார்குடிக்கு இடம் பெயர்ந்திருக்கின்றன, முதன்மை காரணமாக குழந்தைகள் படிப்புதான் சொல்லப்படுகிறது. எனது சக ஊழியர்கள் பலர் தங்கள் வருமானத்தில் பெருந்தொகையை தங்கள் பிள்ளைகளின் படிப்புக்கு செலவிடுகிறார்கள். எங்கள் அலுவலகத்தில் இரண்டு உயரதிகாரிகள் தங்கள் மகள்களது பொதுத்தேர்வுக்காக ஒரு மாத மற்றும் இரண்டு மாத விடுப்பிலிருக்கிறார்கள். கசப்பானதொரு உண்மை என்னவென்றால், பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள்தான் தங்கள் எதிர்காலம் என சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் தமது பிள்ளைகளின் படிப்புதான் தமது எதிர்காலம் என முடிவு செய்து செயல்படுகிறார்கள். (ஒன்றுபோல தோன்றினாலும் இது முற்றிலும் வேறானது).

இப்படி மூன்று முக்கிய குழுவும் தங்கள் ஆசை, லட்சியம், கோபம் என சகலத்தையும் இறக்கிவைக்கும் தளமாக குழந்தைகளை வைத்திருக்கிறார்கள். இந்த கூட்டணியால்தான் மாணவர்களது வாழ்வு பெரும் சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறது. அவர்கள் எதிகொள்ளும் பிரச்னைகள் கண்டுகொள்ள நாதியற்று இருக்கின்றன. ஆனால் இந்த சூழலால் பாதிக்கப்படும் மாணவர்களில் சிலர் வன்முறையில் ஈடுபடும்போதோ அல்லது அதிகப்பிரசங்கித்தனமாக ஏதேனும் செய்யும்போதோ நாமெல்லோரும் விழித்துக்கொள்கிறோம்.

சென்னையில் ஆசிரியரை கொலை செய்த மாணவர் விவகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு கொலைகாரனை விருந்தாளி மாதிரி உபசரிக்கிறார்களே என ஆசிரியர் சமூகம் அங்கலாய்க்கிறது, எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என அரசை வலியுறுத்துகிறது. ஒரு குற்றவாளிக்கும் குற்றமிழைத்த சிறுவனுக்குமான வேறுபாடு ஆசிரியர்களுக்கே புரியாத சூழ்நிலை இங்கு நிலவுகிறது. ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு கொலை என்பதன் நிஜமான அர்த்தம் தெரியாது. அது ஒரு நபரை காணாமல் போகவைக்கும் வழியாக மட்டுமே தெரியும். நாம் இவ்விடயத்தில் யோசிக்க வேண்டியது ஒரு மாணவன் ஏன் ஆசிரியை காணாமல் போக்ச்செய்ய விரும்பினான் என்பதையும் கொல்வதை கோபத்தின் வெளிப்பாடாக்கும் கற்றலையும்தான்.

ஒருவேளை அந்த மாணவன் வன்முறையில் ஈடுபடும் இயல்புடையவனாக இருந்திருப்பானேயானால் அதை கண்டறிந்து எச்சரித்திருக்க வேண்டியது பள்ளியின் பொறுப்பு. அப்படியெதுவும் நடந்திருக்கவில்லை. அவன் ஒரு சாதாரண மாணவன் எனில் அவன் கையில் கத்தியை கொடுத்ததற்கான பொறுப்பு பள்ளிக்கும் பெற்றோருக்கும்தான் இருக்கிறது. ஆனால் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள பலரும் தயாராயில்லை.

இன்றைய மாணவர்கள் தங்கள் வயது மற்றும் சக்திக்கு மீறி பணியாற்ற வைக்கப்படுகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த செய்தி. அது நல்லதற்கா கெட்டதற்கா என்பதில்தான் கருத்து முரண்பாடு வரும். தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அவர்கள் தங்கள் மதிப்பெண்னுக்காவே உழைக்க வைக்கப்படுகிறார்கள். அவர்களது வயதுக்கான விருப்பங்கள் பெரும்பாலும் புறந்தள்ளப்படுகின்றன. குழந்தைகள் வாழ்வே அவர்கள் வாங்கும் மதிப்பெண்னில்தான் இருக்கிறது என அறிவுறுத்தப்படுகிறார்கள். அதனை செய்ய முடியாதபோதோ அல்லது செய்ய விரும்பாதபோதோ அவர்கள் கோபம் மற்றவர்கள் மீது திரும்புகிறது. அல்லது தங்களை எதற்கும் லாயக்கற்றவர்களாக கருதிக்கொள்கிறார்கள். இது அனேக சந்தர்பங்களில் தற்கொலையில் முடிகிறது. இரண்டொரு சந்தர்பங்களில் கத்தி எதிர்புறமாகா திரும்பியிருக்கிறது.

இதற்கு நேரெதிரான சம்பவம் ஒரு மாணவனும் ஆசிரியரும் ஊரைவிட்டு ஓடியது. கோபப்படாமல் ஆராய்ந்தால் இதிலும் குற்றவாளிகளாக நாம்தான் இருப்போம். பெருநகரங்களில் வளரும் சிறார்கள் மிகக் குறைவான அளவு சமூக உறவுகளை கொண்டிருக்கிறார்கள். பலதரப்பட்ட உறவுகள் மற்றும் நட்பினை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைப்பதில்லை. பெரும்பாலும் அன்பு என்பது பெற்றோரிடம் மட்டுமே கிடைப்பதாக இருக்கிறது. நல்லது கெட்டது மற்றும் நியாயம் ஆகியவை பெரும்பாலும் சுற்றத்தினை பார்ப்பதன் வாயிலாக குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். அந்த கற்றல் இல்லாதபோது நியாயத்தை தேவைகள் தீர்மானிக்கத் துவங்குகின்றன.

இருபது வயது மூத்தவரை காதலிக்காதே எனும் பாடத்தை பெற்றோரால் சொல்லித்தர முடியாது. ஆனால் ஒருவனது சுற்றம் பரந்ததாக இருக்கையில் அந்த பாடம் அவனுக்கு தன்னியல்பாக கிடைக்கிறது. வெவ்வேறு துறைகளை தெரிந்துகொள்ளவும் விவாதிக்கவும் அவர்கள் அனுமதிக்கப்பட்டால் அவர்களது சிற்றின்பத் தேடல்களுக்கான தேவையும் அவகாசமும் குறைகிறது. அந்த கதவு அடைக்கப்படுகையில் மனிதர்களின் இயல்பான உந்துதல்களில் ஒன்றான காமம் அவ்விடத்தை நிரப்புகிறது. தவறுகளை நாம் கற்றுத்தருவதில்லை என்பது நிஜம்தான். ஆனால் நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட பொழுதுபோக்கான சினிமாவும் டி.வியும் எதை சொல்லித்தருகிறது? டிசைன் டிசைனாக காதலிப்பதையும், சங்கை அறுப்பதையும்தானே?

குழந்தைகள் தங்கள் வயதுக்கு மீறிய அறிவுடனும் ஆற்றலுடனும் இருக்கவேண்டும் என விரும்புகிறோம். அவர்கள் பெரிய மனுசத்தனமாக டிவியில் நடந்துகொண்டால் பெற்றோர்கள் ஆனந்த கண்ணீரோடு அதை ரசிக்கிறார்கள். அதே டிவியில், பெரியவர்கள் பைசாவுக்கு பிரயோசனமில்லாத விசயத்துக்கெல்லாம் கண்ணீர்விட்டு அழுது சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கிறார்கள். பிறகு ஒரு சிறுவன் பெரிய ஆளைப்போலவும் மூத்த ஆசிரியர் சிறுபிள்ளைத்தனமாகவும் நடந்துகொள்ளும்போதுமட்டும் குய்யோ முய்யோவென கத்துவது என்ன நியாயம்?

ஒரு சமூகத்தில் குழந்தைகள் அதிகமாக தவறு செய்கிறார்கள் எனில் அங்கு அவர்களைத் தவிர மற்ற எல்லோரும் குற்றவாளிகள் என பொருள். எனக்கு சொந்தக்காரர்களை பிடிக்காது, காரணம் அவர்கள் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை என ஒரு பதின் வயது மாணவன் சொல்லக் கேட்டபோது எனக்கு அவனது பெற்றோர்கள் மீதுதான் ஆத்திரம் வந்தது. எதையும் தராத சொந்தக்காரன் கெட்டவன் என வேறு யார் அவனுக்கு கற்றுத்தந்திருக்க முடியும்? லஞ்சம் வாங்கி சுகபோகமாக இருக்கும் அப்பா இருக்கையில் மகனுக்கு எந்த நீதிபோதனை வகுப்பும் நேர்மையை கற்றுத்தர முடியாது. நம் குழந்தைகளுக்கு நாம் நடத்தும் மிகப்பெரிய பாடம் நம் வாழ்க்கைதான். அது மோசமானதாக இருக்கையில் மற்ற எந்த சிறப்பு பயிற்சிகளும் நீண்டகால அடிப்படையில் பலன் தராது.

உங்கள் வாழ்க்கையை தியாகம் செய்து என்னை பெரிய பள்ளியில் படிக்க வை என எந்தக் குழந்தையும் கேட்பதில்லை. குழந்தைகளுக்காகவே வாழ்கிறேன் எனும் வாக்கியத்தைப்போல ஒரு அபத்தமான வாசகம் ஒன்றிருக்க முடியாது. உங்களை எவன் குழந்தைகளுக்காவே வாழுங்கள் என கட்டாயப்படுத்தியது? அந்த முட்டாள்தனத்தை நீங்கள் செய்கிறீர்கள் என்பதற்காக உங்கள் குழந்தைகள் உங்களுக்காக தியாகம் செய்யவேண்டுமா? ஒழுங்காக நமக்காக வாழலாம், குழந்தைப் பருவ வாழ்வை அவர்கள் வாழட்டும் என விட்டுவிடலாம். இதுதான் இளைய தலைமுறைக்கு நாம் செய்யும் உருப்படியான சகாயம்.

ஒரு மாணவனை அவனது மதிப்பெண்ணை மட்டும் வைத்து மதிப்பிடுவதுதான் அவர்கள் மீது நடத்தப்படும் மிகப்பெரிய வன்முறை. பள்ளி என்பது ஒருவன் தனக்கு எந்த துறை சரியாக இருக்கும் என முடிவு செய்வதற்கான அடிப்படை பயிற்சிகளை வழங்கும் இடம் அவ்வளவுதான். இந்த எளிய உண்மையை புரிந்துகொள்ளாமல் குழந்தைகள் நாம் மூர்கமாக கையாண்டதன் விளைவுதான் ஆங்காங்கே நடக்கும் மேற்கூறப்பட்ட சம்பவங்கள். நல்வாய்ப்பாக மாணவர்களால் நடக்கும் மோசமான சம்பவங்களின் எண்ணிக்கை அவர்கள் மீதான வன்முறையோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவே. ஆனால் பெற்றோர் தரப்பு தங்களை இனியும் மாற்றிக்கொள்ளாவிட்டால் இந்த ஆறுதலுக்கும் வழியில்லாது போய்விடும்.

கொத்தனார் சம்பளமே இப்போ அறுநூறு ரூபாயாயிடுச்சு, வீடு கட்டுறதெல்லாம் இனி சாமானியமில்லைங்க.. என்று என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார் மாதம் எண்பதாயிரம் சம்பளம் வாங்கும் ஒரு மென்பொருள் பொறியாளர். 25 டிகிரி வெப்பநிலையில் வேலைசெய்து வாரம் தவறாது சொந்த ஊர் செல்ல வாய்ப்பிருக்கும் அவருடைய வேலைக்கு என்பதாயிரம் கிடைக்கையில் உடலை வருத்தி வேலை செய்யும் கொத்தனாருக்கு கிடைக்கும் (அதிகபட்சம்)  பதினெட்டாயிரம் அநியாயமாகப்படுவதை வெறும் சுயநலம் என வரையறுக்க முடியாது. மனிதர்களிடையே பாரபட்சம் பார்க்கும் இழிவான பழக்கத்தின் நீட்சி இது. இன்றைய கல்வித்துறையை பீடித்திருக்கும் தரித்திரத்துக்கான கதவை இந்த பழக்கம்தான் திறந்துவைத்தது.

தனியார் பள்ளிகள் முளைத்தபோது அவர்கள் சிறப்பான கல்வியை தருவார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இருந்திருக்கவில்லை. மற்றவனைக் காட்டிலும் நான் உயர்ந்தவன் என காட்டிக்கொள்ள மட்டுமே இந்த பள்ளியில் குழந்தைகள் சேர்க்கப்பட்டார்கள். பிறகு இந்த பழக்கம் உன்னைவிட நானொன்னும் குறைந்தவனில்லை எனக் காட்ட பயன்பட்டது. இதுதான் வாய்ப்பென்று தனியார் பள்ளிகள் ஊரெங்கும் முளைத்தன, வாய்ப்பை தவறவிடாது அரசாங்கம் தனது பொறுப்பிலிருந்து மெல்ல மெல்ல விலகிக்கொண்டது. அரசுப்பள்ளிகள் வக்கற்றவர்களுக்கு மட்டுமே என்றாகிப்போன இன்றைய சூழலை உருவாக்கியதில் நடுத்தர வர்கத்தின் வெற்று கௌரவம், முதலாளிகளின் லாபவெறி மற்றும் அரசாங்கத்தின் அலட்சியம் ஆகிய மூன்றின் பங்கும் சமமாக இருக்கிறது.  இதில் இழக்கும் தரப்பு என்று என்று பார்த்தால் அது பெற்றோர் மட்டுமே.

ஒரு அடிமுட்டாள்தனமான நம்பிக்கையை அடிப்படையாக வைத்து தனியார்பள்ளிகள் நம் வருமானத்தை சுரண்டிக் கொழுக்கின்றன. நில அபகரிப்பு, ரவுடித்தனம், கட்டப்பஞ்சாயத்து எனும் வரிசையில் அமைச்சர்களும் கட்சிக்காரர்களும் செய்யும் பிரதான தொழிலாக கல்வி இருக்கிறது. பின்னாளில் பிள்ளைகள் நமக்கு நிறைய சம்பாதித்து கொடுக்கவேண்டும் எனும் ஆசையை வைத்து இவர்கள் நிறைய சம்பாதிக்கிறார்கள். கல்வி தொழிலாக நீடிக்கும்வரை குழந்தைகள் எந்திரங்களாகவே நடத்தப்படுவார்கள். எந்திரமாக நடத்தப்படும் குழந்தைகளிடம் குற்ற நடத்தையும் பிறழ்நடத்தைகளும் உருவாகியே தீரும்.

பெருகிவரும் சிறார் குற்றங்களுக்கு கல்வி வணிகமயமானது மட்டும் காரணமல்ல. ஆனால் சிறார் குற்றங்களை தடுப்பதற்கு செய்யவேண்டிய முதல் நடவடிக்கை கல்வியை வணிகர்களிடமிருந்து பறிப்பதுதான். நம் அடுத்த தலைமுறையின் சிறப்பான எதிர்காலத்துக்கு இது மட்டும் போதாது என்பது நிஜம்தான். ஆயினும் எல்லா நீண்ட பயணங்களும் முதல் அடியிலிருந்தே தொடங்குகின்றன.

0

வில்லவன்

சமூகவியல் : ஜெயமோகனும் மக்கள் பங்கேற்பு முறைகளும்

‘ஆற்றிலும் குளத்திலும் சேறுபடிந்த கரையோரமாகவும் பூச்சி, புழுக்களை இரையாக உண்டுவாழும் பொத்தை என்ற நன்னீர்மீன் பறவைகளாலோ பிற ஜீவராசிகளாலோ தனக்கான இரை பறிபோய்விடும் என்று தெரிந்தால், அந்நீரைக் கணநேரத்தில் கலக்கிவிட்டு எதையும் பார்க்கவியலாமல் செய்துவிடுமாம். குழப்பிப்பேசும் சாமர்த்தியசாலிகளை ‘பொத்தைக்கலக்கி’ என்ற செல்லப்பெயரால் கூப்பிடுவதையும், கலக்குவது என்பது சிலருக்கு, குறிப்பாக அரசதிகார வர்க்கத்திற்கு ராஜதந்திர உத்தியெனவும், கலங்கலிலேயே வாழும் உயிரினங்கள் அக்கலங்கிய சூழலில் எப்படி நிலைத்திருக்க கற்றுக்கொண்டிருக்கின்றன…’ என்ற முன்னுரையுடன், கிருஷ்ணன் எழுதிய கலங்கிய நதி நாவலைப் பற்றிய தனது மதிப்புரையைத் தொடங்குகிறார்  ஜெயமோகன்.

தமிழ் மற்றும் இந்திய இலக்கியங்களில், அதிகார வர்க்கத்தின்  மனோபாவம் எப்படியெல்லாம் எடுத்தாளப்பட்டுள்ளது என்ற சுருக்கமான இலக்கிய  வரலாற்றுடன் நின்றுவிடாமல், அதிகாரவர்க்கத்தைப் பற்றி இதுவரை எழுதப்படாமல் விட்டதையெல்லாம் ஈடுகட்டியும், இனிமேல் எழுதப்படுபவற்றை புரிந்து கொள்ளும்படியும், அதிகாரவர்க்கத்தின் ஆளுமை, ஆணவம், அசட்டுத்தனத்தையெல்லாம் ‘பொத்தைக்கலக்கி’ என்ற ஒரே வார்த்தையில் உள்ளடக்கியிருந்தார் ஜெயமோகன். அதிகாரவர்க்கதைப் பற்றி எழுதப்பட்ட நூல்கள் என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கும் எதையும் நான் படித்திருக்கவில்லையெனினும், ஜெயமோகனின் எழுத்திலிருந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள முடிந்தமைக்கு  என்னுடைய கள அனுபவமே கைகொடுத்தது.

பொத்தைக்கலக்கி என்ற ஒரு வார்த்தை, என்னுடைய வாசிப்பனுபவங்களையும் களப்பணி அனுபவங்களையும் ஒரு புதிய கண்ணோட்டத்தில் மீண்டும் கண்டடைய  உதவியது. பொத்தைக்கலக்கிகளின் கலக்கல் விதிமுறைகளை, அதன் விளைவுகளை என் மனம் தன்னிச்சையாகத் தொகுக்க ஆரம்பித்தது. களப்பணியில் நாங்கள் கையாண்ட பங்கேற்புத் திறனாய்வு (Participatory Appraisals) முறைகளெல்லாம், பொத்தைக் கலக்கிகளுக்கெதிரான எதிர்வினையாக்கமே என்றுகூடப் பட்டது.

‘சென்ற இருபதாண்டு காலத்தில் தான் சார்ந்த துறையின், அத்துறை ஆளும் மக்களின் அடித்தளம் பற்றிய புரிதல்கொண்ட ஓர் உயரதிகாரியைக்கூட நான் சந்தித்ததில்லை’ என்ற ஜெயமோகனின் அதிர்ச்சியே நம்மனைவரின் அதிர்ச்சியுமாகும். ‘உயரதிகாரிகள் அனைவருமே ஒரே வார்ப்புதான். தாங்கள் கொண்டுள்ள அதிகாரம் பற்றிய உள்ளார்ந்த குதூகலமும், தனக்கு மேலே உள்ள அதிகாரம் பற்றிய பதற்றமும் ஒரேசமயம் கொண்டவர்கள். தான் ஏறி அமர்ந்துள்ள யானை என்பது பெருங்காட்டைத் தன்னுள் கொண்டுள்ள மிருகராஜன் என அறியாமல் தன் துரட்டிக்கம்பிலும் கட்டளையிலும் இயங்கும் இயந்திரம் எனக் கற்பனை செய்துகொள்ளும் அசட்டுப் பாகன்களைப் போன்றவர்கள் அவர்கள்’ என்று ஜெயமோகன் சொல்லும்போது, நம்முடைய அனுபவங்களையெல்லாம் அவர் வார்த்தை வடிவில் கட்டமைக்கும்போது, நமக்கான வார்த்தைகளைத் தந்தமைக்காக, அவரை நன்றியுடன் பார்க்கப், படிக்கத் தோன்றுகிறது.

பெரும்பாலும் நம் உயரதிகாரிகள் முற்றிலும் செவியற்றவர்களாகவோ, கேட்கும் திறன் குறைந்தவர்களாகவோ, Selective Amnesia என்பதுமாதிரி Selective Hearing Loss என்ற நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதால், ‘ஒரு எளிய நிதர்சனத்தைக்கூட அவர்களிடம் புரியச்செய்துவிட முடியாது. ஆனால் நம்பவேமுடியாத அளவுக்குத் தன்னம்பிக்கை கொண்டவர்கள். தங்களை அறிவுஜீவிகள் என்றும் ராஜதந்திரிகள் என்றும் கற்பனை செய்துகொண்டிருப்பவர்கள்’ என்று ஜெயமோகன் தொடரும்போது, அது ஜெயமோகனின் வார்த்தைகளாக  நின்றுவிடாமல், ஒட்டுமொத்த சமூக அனுபவத்தையும் பிரதிபலிப்பதாக அமைந்து விடுகிறது.

‘அதிகார அமைப்பில் உள்ள எவருக்கும் பிரச்னையின் விளைநிலம் பற்றியோ, அதன் உள்ளோட்டங்கள் பற்றியோ எதுவுமே தெரியாவிட்டாலும், கலக்குவதை மட்டும் தொடர்ந்து செய்கின்றார்கள். எந்த நிபுணராலும் ஊகித்துவிட முடியாத அவர்களின் கலக்கல் முறைகள் சிக்கலானவை. ஒன்றில் இருந்து ஒன்றாக பிரிந்து பெரிய வலையாகி நம்மைச் சூழ்ந்துகொண்டு முற்றிலும் செயலற்றதாக ஆக்கிவிடக்கூடியவை’ என்று ஜெயமோகன் இரண்டே வரிகளில் நம்மில் பலரின் பல்லாண்டு அனுபவங்களை வடித்தெடுத்து விடுகின்றார்.

செயலற்றதாக ஆகிவிட்ட குடிமைச் சமூகத்தை, செயலூக்கம் பெற்றதாக ஆக்க, அதிகாரிகளின் கண்ணோட்டத்தில் அல்ல, இரையின் கண்ணோட்டத்தில் பார்க்க எத்தனையோ முறைகள் உருவாகி வடிவெடுத்துள்ளன. எப்படித்தான் கலக்கியெடுத்தாலும், அந்தக் கலங்கலிலும் தெளிவாகப் பார்க்க அம்முறைகள் (பங்கேற்பு ஊரகத் திறனாய்வு, மற்றும் அதைச் சார்ந்த பலப்பல நுண் உத்திகள்) நடைமுறையில் உதவினாலும், இன்னும் வேகமாகக் கலக்கி எல்லோரையும் மூச்சுத் திணற வைப்பதில் அதிகார வர்க்கத்துக்கு இருக்கும் திறமையே அலாதியானதுதான்.

அவர்கள் விதவிதமாகக் கலக்குகிறார்கள். அவர்கள் செய்வதெல்லாம் ‘ராஜகலக்கல்’. இருந்தாலும் அவர்கள் ஒரு வகையில் பாவம்தான். யாராலும் புரிந்து கொள்ளப்படாது என்று நினைத்து அவர்கள் கலக்கும்போது, அந்தக் கலங்கல்களில் அவர்களே மறைந்தும், கரைந்தும், மூச்சுத்திணறிப் போவதும் மிகப்பெரிய  துரதிருஷ்டம்தானே!

பங்கேற்பு ஊரகத் திறனாய்வில், சப்பாத்தி வரைபடம் (Venn Diagram) என்று ஒரு முறையுள்ளது. ஓர் ஊரோடு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அவை செய்யும் பணிகள், அதன் முக்கியத்துவம் பற்றி, மக்களின் மதிப்பீடுகளை அவர்கள் புரிந்து கொண்டதன் அடிப்படையில் அறிய உதவும் ஓர் உத்தி. தங்கள் ஊர் சம்பந்தப்பட்டதென அவர்கள் பல அரசு நிறுவனங்களை அடையாளப்படுத்தினாலும், 90 சதவீத கிராமங்களில், ‘கவர்ன்மெண்ட் மசுரு எங்க ஊருக்கு என்ன செஞ்சிருக்கு: ஒன்னுங் கிடையாது’ என்றுதான் ஆரம்பிப்பார்கள். அவர்களிடம் மேலும் மேலும் உரையாடும் போதுதான் தெரியவரும் ‘கவர்ன்மெண்ட் மசுரு’ அவர்களுக்கு என்னென்னமோ செய்திருந்தாலும், அதிகாரவர்க்கம்  கலக்கிய கலக்கலில், அரசே கரைந்தும், மறைந்தும் போய்விட்டதென்பதை. ஓர் அரசு கரைவதும், மறைவதும் தவறுகளை, திறமையின்மையை மறைக்க வேண்டுமானால் உதவியாயிருக்கலாம். ஆனால் அது ஆரோக்கியமான சமூக மாற்றுருவாக்கத்திற்கு உதவாது.

ஒரு சின்ன உதாரணத்திலிருந்து ஆரம்பிப்போம். 200 வீடுகளைக் கொண்ட ஒரு சிறிய கிராமம். ஐம்பத்தைந்து மாணவர்களைக்கொண்ட ஈராசிரியர் பள்ளி. ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளம் 45-50 ஆயிரம் ரூபாய் வரை, வருடத்துக்கு ஐந்து லட்சத்திலிருந்து ஆறு லட்சம் வரை ஆகலாம். அப்பள்ளிகளை கண்காணிக்க ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில் அதிகார அடுக்குகள். அதற்காக ஒரு பள்ளிக்கு குறைந்தபட்சம் ஒரு லட்சத்துக்கு மேல் ஆகலாம். பள்ளிக் கட்டடங்கள், அதன் பராமரிப்பு, இலவச பாடப் புத்தகங்கள் என்று ஆகும் செலவுகள். ஈராசிரியர் பள்ளி நடத்தவே எட்டு லட்சத்துக்கு மேலாகலாம். இது தவிர, மதிய உணவு, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள், இலவச பஸ் பாஸ், விதவிதமான கல்வி உதவித்தொகை…. என்று நீள்கிறது பட்டியல். இவ்வளவு செய்தும் உள்ளூர்ப் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பாமல் கடன் வாங்கி, நன்கொடை அழுது,  வேன் ஏற்றி வெளியூர் பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்புகிறார்கள் என்றால், அது பெற்றோர்களின் அறியமையா, அல்லது கலங்கலின் அடையாளமாக அவர்கள் காணும் ஆரம்பப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளை மூச்சுத்திணற வைத்து விடுவார்களென்ற எச்சரிக்கை உணர்வா? பயமா?

அதே ஊரில் 30 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்து, இன்று வரை பல்வேறு பெயர்களில் கட்டப்பட்டு வரும் காலனி மற்றும் பிற வீட்டுவசதித் திட்டங்கள், இலவச மின்சாரம் – வீடுகளுக்கும், விவசாயத்துக்கும் வகை வகையான மானியங்கள், நலத் திட்டங்கள். ஊருக்கு மாதம் நான்கு லட்சத்துக்கு மேல், வருடத்துக்கு 50 லட்சம் வரை வரும் முதியோர் உதவித்தொகை, பொது வினியோகம், கூட்டுக்குடிநீர் திட்டம், பஞ்சாயத்து, தாலுகா, வேளாண்மை, தோட்டக் கலைத்துறை, ஆரம்ப சுகாதாரம்,  கால்நடைத்துறை பொதுப்பணித்துறை, காவல் என்று உள்ளடக்கிய 23 க்கும் மேற்பட்ட அரசுத்துறைகள் – ஒவ்வொரு கிராமத்துக்கும் தனித்தனியாக இல்லாவிட்டாலும், பகுதி/வட்டார அளவில் செய்யப்படும் செலவில் அக்கிராமத்துக்கான பங்கு – உத்தேசமாகக் கணக்கிட்டாலும் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒவ்வொரு வருடமும் கோடிகளைத் தாண்டும். இவ்வளவு செலவு செய்தும், ‘கவர்ன்மெண்ட் மசுரு’ எங்க ஊருக்கு என்ன செஞ்சிருக்கு என்று அவர்கள் கேட்டால், அரசாங்கம், அதிகார வர்க்கம் அவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை என்றுதானே அர்த்தம்? இதை எப்படி எடுத்துக் கொள்வது? வலது கையினால் கொடுப்பது இடது கைக்குக் தெரியலாகாது என்ற அதிகார வர்க்கத்தின் பெருந்தன்மை என்று எடுத்துக்கொள்வதா? இல்லை, அவர்கள் கலக்கிய கலக்கலில் அவர்களே கரைந்து போய்விட்டார்கள் என்று எடுத்துக்கொள்வதா?

3000-5000 ரூபாய் சம்பளத்தில், நான்கைந்து கிராமங்களுக்குப் பொதுவாக ஓர் ஊழியரை மட்டும் பணியிலமர்த்தி, சில சில்லறைப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஓர் உப்புமா தொண்டுநிறுவனத்தைக் குறிப்பிட்டு, “அவர்கள் தாம் எங்களுக்கு எல்லாமும்” என்று சொல்லும்போது, பேரதிகாரமும், பெரும்பொருளுமிக்க அரசையே மக்கள் பார்வையிலிருந்து மறைக்கும் அதிகார வர்க்கத்தின் கலக்கல் சாமர்த்தியத்தை யாரிடம் சொல்லி முட்டிக்கொள்ள?

மாதம் நூறிலிருந்து நூற்றைம்பது வரை சளைக்காமல் கேபிள்காரனுக்கு தரும் சாதாரண பொதுஜனங்கள், வீட்டு வரி தண்ணீர் வரியைக்கூட கட்டுவதற்கு சலிப்படைவது எதனால்? அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களை எடுத்துக்கொள்வோம். எம்எஸ், எம்டி போன்ற உயர்கல்வி படித்த மருத்துவர்களும் முறையாகப் பயிற்சி பெற்ற செவிலியர்களும் அங்கே இருக்கிறார்கள். எல்லாம் இருந்தும் சட்டென்று மக்களின் கவனத்துக்கு அவர்களால் வரமுடியவில்லை. “உடம்புக்கு முடியலேன்னா, மருந்துக் கடையில் போய் மருந்து வாங்கிச் சாப்பிடுவோம். ஒருக்க வாங்கிச் சாப்பிட்டாலே சரியாயிடும்”  என்று சொல்லும்போது, முறையாகப் படிக்காமலே மருந்துகளைக் கையாளும் ஒரு மருந்துக் கடைக்காரனின் செல்வாக்குக்கு முன்னால், அதிகார வர்க்கம் மட்டுமல்ல நாமனைவரும் மண்டியிடத்தான் வேண்டியுள்ளது.

இதையெல்லாம் அதிகார வர்க்கம் தனது அறியாமையால் செய்கிறதா என்றால் இல்லை. ஜெயமோகன்  சொல்வது மாதிரி அவர்கள் செவியற்றவர்களாகிவிட்டார்கள். கேட்கும் திறனை முற்றிலும் இழந்துவிட்டார்கள்.  அவர்கள் மட்டுமல்ல, நம் எல்லோருடைய கேட்கும் திறனையும் சற்று அதிகப்படுத்த உருவான செவுட்டு மிஷன்தான் பங்கேற்பு முறைகள். அதன் வலிமையே எந்த முன் அனுமானமும் இன்றி மக்கள் சொல்வதைக் கேட்பதுதான். பிரச்னைகளையும், தீர்வுகளையும் அவ்வாறுதான் கண்டறியமுடியும். மக்களைப் பேசவைக்கவேண்டும். அவர்கள் பேசுவதை அவர்களை வைத்தே தொகுக்க வைக்கவும் வேண்டும். அதற்கு சுவாரஸ்யமான முறைகளைக் கையாளவேண்டும்.

மக்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்டிருந்தால், பல பிரச்னைகளுக்கு எளிமையான, சிக்கனமான தீர்வுகளைக் கையாண்டிருக்கமுடியும். பங்கேற்பு முறைகள் வலியுறுத்துவதும் அதைத்தான். பங்கேற்பு முறைகள் ஆய்வு முறைகள் மட்டுமல்ல. சிக்கல்களைப் புரிந்து கொள்ள உதவும் ஞானத் திறவுகோலும்கூட.

0

பேரா. எஸ்.ரெங்கசாமி