தந்தை பெரியார்: தமிழ்த் தேசிய அறிவியலர்

(ஆழம் மே 2015 இதழ் பெரியார் சிறப்பிதழாக வெளிவந்தது. அடுத்து வந்த ஜூன் இதழில் ம. வெங்கடேசன் எதிர்வினை புரிந்திருந்தார். ‘பெரியார் யாருக்குப் பெரியார்?’ என்னும் தலைப்பில் எழுதப்பட்ட அவருடைய கட்டுரை, பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்காக எப்போதும் போராடியதில்லை என்றும் பிற்படுத்தப்பட்ட சூத்திரர்களுக்கு மட்டுமே அவர் பெரியார்; மற்றவர்களுக்கு அல்லர் என்றும் வாதிட்டிருந்தது. நலங்கிள்ளியின் இந்தக் கட்டுரை பெரியார் மீது முன்வைக்கப்படும் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிப்பதுடன் விரிவான ஒரு தளத்தில் பெரியாரையும் அவருடைய பங்களிப்பையும் அறிமுகப்படுத்துகிறது. – ஆசிரியர்.)

periyar2011பெரியாரை இன்று பலரும் கொண்டாடுகிறார்கள். திமுக, அதிமுக, மதிமுக, விசிக, பாமக, தேமுதிக எனப் பல பல தேர்தல் அரசியல் கட்சிகளின் விளம்பரப் பலகைகளில் பல நேரம் பெரியார் முகம் பளிச்சிடுகிறது. இவர்கள் நாளுக்கொரு கூட்டணி காண்பது, பதவி சுகங்கள் அனுபவிப்பது எல்லாமே பெரியார் புகழ் பரப்பத்தானாம்.

திராவிடர் கழகத்தை இன்று வழிநடத்தும் கி. வீரமணி பெரியாரின் கொள்கைகளை, கருத்துகளைத் தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியாவெங்கும், ஏன், உலகெங்கும் பரப்புவதே குறிக்கோள் என முழங்குகிறார்.

வீரமணியால் குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விட்ட பெரியார் கொள்கைகளை மீட்டெடுக்கப் போவதாக முழங்கி புதுப் புது திராவிட அமைப்புகள் பல பெயர்களில் தமிழகத்தில் இயங்கி வருகின்றன.

மார்க்சிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டுகளும் கூட கொஞ்ச நாளாகப் பெரியாரைப் புகழத் தொடங்கியுள்ளனர். அவர் ஒரு பூர்ஷ்வா சமூக சீர்திருத்தவாதி, கலகக்காரர் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த மகஇக உள்ளிட்ட அதிதீவிர கம்யூனிஸ்டுக் கட்சிகளும் இன்று பெரியாரியம், பார்ப்பனியம் என்றெல்லாம் பேசத் தொடங்கியுள்ளனர். மிதவாத, தீவிரவாத கம்யூனிஸ்டுகள் இருவருமேஇப்போதுதான் பெரியாரைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்களாம்.

எத்தனை எத்தனை அமைப்புகளும், எத்தனை ஆயிரம் பேரும் பெரியாரைக் கொண்டாடட்டும். அவர்கள் கொண்டாடுவது பெரியாரையா? பெரியார் கொள்கைகளையா? தேர்தல் பதவிக் கட்சிகளுக்கு அவர் விளம்பர மாடலா? கொள்கை வழிகாட்டியா?

புரிந்து கொள்ள கலைஞரை எடுத்துக் கொள்வோம். பெரியாரின் விரல் பிடித்து வளர்ந்தவர் அல்லவா? கலைஞரின் பெரியார்ப் புலமை என்ன? சென்ற ஆண்டு (2014) மோதி அரசு வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது அறிவித்தது. உடனே கலைஞர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவருக்கு வாஜ்பாய் மீது என்றுமே பேரன்பு உண்டாம். வாஜ்பாய் அவருக்கு என்றுமே ஜென்டில்மேன்தானாம். கலைஞர் அத்துடன் நிறுத்திக் கொண்டிருந்தால் குற்றமில்லை. அவருடைய பதவி வேட்டை அரசியல் புரிந்து கொள்ளக் கூடியதே. எஸ். வி. சேகரிடமே எம். ஆர். ராதாவின் முற்போக்கைக் கண்டவரல்லவா?அவர் குடியரசுத் தலைவர் பிரணாபுக்கும் தலைமை அமைச்சர் மோதிக்கும் கடிதம் எழுதினாராம். நீங்கள் அன்புமிகு வாஜ்பாயை கௌரவிப்பதெல்லாம் சரிதான். அதேபோது தமிழகத்தையும் திராவிட இயக்கத்தையும் கௌரவிக்கும் வகையில் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் கட்டாயம் பாரத ரத்னா தர வேண்டாமா? என வலியுறுத்திக் கேட்டுக் கொண்டாராம். கலைஞாரின் உள்ளத்தில் இந்துத்துவ முகமூடி வாஜ்பாய்¢க்கும் இடமுண்டு, பகுத்தறிவுப் பகலவன் பெரியாருக்கும் இடமுண்டு. ஆனால் பெரியாரின் உள்ளத்தில் இந்த பாரதத்துக்கும் ரத்தினத்துக்கும் இடமுண்டா?

கலைஞர், வைகோ, கி. வீரமணி எனத் தமிழ்த் தலைவர்கள் பெரியாரை இந்தியத் தேர்தல் சந்தையில் ஒரு பண்டமாக்கி வெகு காலமாகிவிட்டது. இப்போது பாரதக் கட்சிகளுக்கும் பெரியார் அத்தியாவசியப் பண்டமாகி வருகிறார். சமூகநீதி காக்கவும், இந்து மதவெறி எதிர்க்கவும் பெரியாரைக் கையில் எடுப்பதாக அனைவரும் ஒரே பாட்டு பாடுகின்றனர்.

அப்படியானால் பெரியார் சமூகநீதிக்காகப் போராடவில்லையா? கட்டாயம் போராடினார். ஆனால் அத்துடன் அவரைக் கோடு கட்டி நிறுத்துவதில்தான் சிக்கல். இதைச் சொல்வதற்குச் சமூகநீதிக் காவலர்களும், தமிழினத் தலைவர்களும், எழுச்சித் தமிழர்களும், புரட்சிப் புயல்களும் தேவையில்லை. எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களே போதும். பெரியார் சமூகநீதி காக்க, பெண்ணடிமை ஒழிக்கப் பாடுபட்டார், வைக்கம் வீரர் எனப் போற்றப்படுகிறார் என்றெல்லாம் அவர்கள் காலங்காலமாய் மனனம் செய்து தேர்வெழுதி தேறி வருகிறார்கள். ஆனால் பெரியாரின் முழு மெய்யியலையும் கற்க இத்தகைய எளிய சொல்லாடல்கள் போத மாட்டா.

சமூகநீதி காக்க, பெண்ணடிமை ஒழிக்க எனச் சராசரி அரசியல்வாதிகள் போல் வெறும் முழக்கங்களை மட்டும் முன்வைத்தவரல்லர் பெரியார். அவர் சமூக விடுதலைக்கான மெய்யியலை உருவாக்கிக் கொடுத்தவர். கற்பு, பதிவிரதை, பத்தினி, தாலி, விதவை போன்ற ஆணாதிக்கக் கருத்தியல்களை உடைத்தெறிந்து புத்தம் புதுப் பெண்ணியக் கருவைச் செதுக்கிக் கொடுத்தவர்.

சாதியத்தை எதிர்த்து வாழ்நாளெல்லாம் போரிட்ட பெரியார் அந்தச் சாதிப் புற்றைக் கரைப்பதற்குக் கூட்டணித் தந்திரங்கள் எதையும் முன்வைக்கவில்லை. அவரே கூறுவது போல், அவரது காமராசர் ஆதரவு, திமுக ஆதரவு எல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களின் தற்காலிக உரிமைகளை நிலைநாட்டவே.சாதிகளுக்கு இடையே நல்லிணக்கத்தை போதிக்கவில்லை பெரியார். சாதி அமைப்பையே ஒழித்துக் கட்டும் விடுதலை அரசியலை முன்வைத்தார். அந்த விடுதலைக்குத் தேவையான அறிவியலை விண்டுரைத்தார்.

அவர் விண்டுரைத்த அறிவியலை மேம்போக்காக ஒன்றிரண்டு பெரியார் மேற்கோள்களை மேய்வோரால் புரிந்து கொள்ள முடியாது. அவர் 1925 முதல் 1973 வரை அவரே நடத்திய பல ஏடுகளில் எழுதிய கோடிக் கணக்கான எழுத்துக்களிலும், ஆயிரக்கணக்கான கூட்டங்களில் முழங்கிய சொற்களிலும் அடிநாதமாய் இழையோடி நிற்கும்அறிவியலைப் புரிந்து கொள்பவர்களால்தான் சமூகநீதிக் கொடுமுடியை அடைய  முடியும்.

பெரியார் விண்டுரைத்த அந்த அறிவியல்தான் என்ன?

தமிழகத்தில் சமூகநீதிக்குக் கேடு பயக்கும் அகப் பகை எது எனக் கேட்டால் பல முற்போக்கர்களும் பார்ப்பனியம், சாதியம் என விடையளிக்கக் கூடும். சாதியம் காக்கும் புறப் பகையை வரையறுத்துச் சொன்னதில்தான் பெரியாரின் மேதைமை அடங்கியுள்ளது. அந்த மேதைமையின் ஆழ அகல உயரங்களை ஆராயத் துணிவோருக்கே பெரியாரின் சமூக அறிவியல் விதிகள் தெளிவாய் விளங்கும்.

காங்கிரசிடம், காந்தியிடம் சாதிக்கு, தீண்டாமைக்கு நீதி பெறுவது இயலாத காரியம் என உணர்ந்த பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறுகிறார் (22.11.1925). சுயமரியாதை இயக்கம் காண்கிறார். பார்ப்பனரல்லாதார் உரிமைகள் காத்தல், தீண்டாமை ஒழித்தல், பெண்ணடிமை ஒழித்தல், மூடநம்பிக்கை அகற்றுதல் ஆகியவற்றை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளாக அறிவிக்கிறார். அவர் காங்கிரசில் இருந்தபோதே தொடங்கிய குடி அரசு ஏட்டில் இயக்கக் கொள்கைகளைப் பரப்பினார். ஞாயிறுதோறும் வெளிவந்த குடி அரசு கிழமையேட்டின் முதல் பக்க முகப்பில் கோயிலும், தேவாலயமும், மசூதியும் காட்சியளித்தன. பாரத மாதா காட்சியளித்தாள். பெரியாரிடம் கடவுள் நம்பிக்கை அகன்று நாத்திகக் கொள்கைகள் ஏற்றம் கண்டு வந்த நிலையில் மத வழிபாட்டிடங்கள் காணாமல் போயின. அதே காலக் கட்டத்தில் அவரிடம் இந்திய நம்பிக்கையும் அகன்றது, பாரத மாதாவும் காணாமல் போனாள். கடவுள், இந்தியம் இரண்டுமே கற்பனைப் புனைவுகள் என உணரத் தலைப்பட்டார். குடி அரசு ஏட்டில் (01.06.1930) வெளியான அவரது சேலம் சொற்பொழிவைக் கேளுங்கள்:

‘இந்தியா ஒரு நாடு என்று ஆனால்தானே, இந்தியா முழுமையும் பற்றிப் பேச நமக்கு உரிமை உண்டு.’

1937இல் இராஜாஜி அரசின் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டக் களத்தில் பெரியாரின் இந்திய எதிர்ப்புணர்வும், தமிழ்நாடு பிரிவினை உணர்வும் இன்னும் இன்னும் கூர்மைப்பட்டன.

1937 செப்டம்பர் 19ஆம் நாள் ஈரோடு கொல்லம்பாளையத்தில் அவர் ஆற்றிய சொற்பொழிவில் இந்திய எதிர்ப்பு இன்னும் சூடுபிடிக்கிறது பாருங்கள்:

‘நாம் ஏமாறுவதற்குத்தான் வடநாடு உபயோகப்படுகிறது. இன்றைய அரசியலைப் பார்க்கின்றபோது, எக்காரணம் கொண்டாவது, எப்பாடு பட்டாவது நம் நாட்டை வடநாட்டு சம்பந்தத்திலிருந்து தனியாகப் பிரித்துக் கொண்டால் ஒழிய நமக்கு விடுதலையோ மானமோ ஏற்படப் போவதில்லை. இன்று நமக்குச் சிறிதாவது சுயமரியாதை உணர்ச்சியும் சுதந்திர உணர்ச்சியும் இருக்கிறதென்றால், அது நமது தமிழ் நிலை உணர்ச்சியாலேயும், இந்தி படிக்காததாலேயுந்தான் என்று வலிமையாகக் கூறுவேன்.’

பெரியார் இந்தக் கருத்துகளை உணர்ச்சியில் அள்ளித் தெளித்துவிடவில்லை. தேசிய இனங்களின் வரையறை குறித்துத் தெளிவான அறிவியலை முன்வைத்த லெனினியத்தைக் கரைத்துக் குடித்த இந்திய கம்யூனிஸ்டுகளே இந்திய மயக்கத்தில் கிறங்கிக் கிடந்த காலத்தில், பெரியார் பட்டறிவு கொண்டே தமிழின விடுதலைக்கான அடிப்படைகளைத் தெளிவாய் விளக்கினார். அவர் அதே உரையில் கூர்முனைக் கேள்விகளால் எப்படி ஏரணத் தோரணம் கட்டுகிறார் பாருங்கள்:

  1. இந்தியாவை மொழி அடிப்படையில் தனித்தனி மாகாணங்களாகப் பிரித்து விட்டால், இந்தியா எப்படி எல்லோருக்கும் தாய்நாடாகும்?
  2. நம் ஒரு ஜில்லா போல் விஸ்தீரணம் கொண்ட நேபாளத்தில் வாழ்வோர் இந்தியாவைத் தாய்நாடென்பார்களா?
  3. இந்து மதத்தைப் பெரும்பான்மையாகக் கொண்ட சயாம் நாட்டினர் இந்தியாவைத் தாய்நாடென்பார்களா?
  4. பர்மா, நேபாளம், பூடான், மலேயா என எல்லாம் ஒவ்வொன்றாக இந்தியாவை விட்டுப் பிரிந்து விட்டன. அதற்கு முன் காந்தாரம், காபூல் (ஆப்கானிஸ்தான்) பிரிந்து விட்டன. இப்படி எவ்வளவோ பிரிந்து, எவ்வளவோ சேர்ந்து விட்ட பிறகு தாய்நாடெது? தகப்பன் நாடெது?
  5. ஐரோப்பாவில் நார்வே, ஸ்வீடன், டென்மார்க், ஹாலண்டு, பெல்ஜியம், போர்ச்சுகல், கிரீஸ் ஆகிய நாடுகள் நமது நான்கு ஜில்லா, மூன்று ஜில்லா, இரண்டு ஜில்லா போன்ற விஸ்தீரணமுள்ளவை. இவர்கள் தத்தமது நாட்டைத் தாய்நாடென்பார்களா? ஐரோப்பாவைத் தாய்நாடென்பார்களா?
  6. ஆகவே தமிழ்நாட்டவர்கள், திராவிட மக்கள் எந்தக் காரணம் கொண்டு இந்தியாவைத் தாய்நாடென்று கூற வேண்டும்? எதற்காக இந்தியா பூராவும் ஒரே குடையின் கீழ் இருக்க வேண்டும்? ‘பாரத நாடு’ என்பதையும், நாமெல்லாம் ‘பரதர்கள்’ என்பதையுங்கூட நாம் ஏன் ஏற்க வேண்டும்?

இந்தியா தமிழர்களின் நாடன்று, தமிழகமே தமிழர்களின் நாடெனப் பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் விளக்குகிறார் பெரியார்.

அந்த உரையில் இந்தியத்தின் ஆபத்தைப் பெரியார் சுட்டுகிறார்:

‘தமிழன் ஈன நிலைக்குக் காரணம் இந்து மதத்தைத் தனது மதம் என்று கருதியதும், இந்தியா பூராவையும் தன் நாடு என்று கருதியதும், இவ்விரண்டுக்கும் உழைக்கும் தொண்டே மக்கள் தொண்டு, தேசத் தொண்டு என்று கருதி வருவதுமேயாகும். இந்தியத் தேச அபிமானம் என்பது தமிழன் பல நாட்டாரின் நலனுக்கு உழைத்துப் பல நாட்டாருக்கு அடிமையாய் இருப்பது என்பதாகும்.’

இறுதியில் பெரியார் தமிழர்க்கு உரிமையுடன் கட்டளையிடுகிறார்:

‘நம்மை ஏய்த்து அழுத்தி நம் தலை மேல் கால் வைத்து ஏறி மேலே போக வட நாட்டானுக்கும், தமிழரல்லாதானுக்கும் நாம் படிக்கல் ஆகி விட்டோம். இனியாவது தமிழ்நாடு தமிழருக்கே! என ஆரவாரம் செய்யுங்கள்! உங்கள் கைகளில் தமிழ்நாடு தமிழருக்கே! எனப் பச்சை குத்திக் கொள்ளுங்கள்! உங்கள் வீடுதோறும் தமிழ்நாடு தமிழருக்கே! என்னும் வாசகத்தை எழுதிப் போடுங்கள்!’

பெரியாரின் தமிழகப் பிரிவினைஇந்தித் திணிப்பினால் தீவிரமடைந்தது உண்மைதான். ஆனால் அந்தப் பிரிவினையின் மையம் இன்னும் ஆழமானது. அது சரியாகச்சாதி ஒழிப்பில், இந்து மத அழிப்பில் மையம் கொண்டிருந்தது. சாதி ஒழிப்புக்குப் பெரியாரிட்ட அறைகூவல் தமிழக ஓர்மைக்கு அடிப்படையாக இருந்தது. இதற்கான சான்றை அதே உரையில் காணலாம்:

‘தமிழ் மக்கள் இன்று தங்களை உண்மைத் தமிழரென்றும், கலப்படமற்ற தனித் தமிழ்ச் சாதி என்றும் ஒருவன் சந்தேகமறக் கருதுவானாயின், அவன் உடனே தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் சமயத்தை, சரியாகச் சொன்னால் தனக்கு எவ்வகையிலும் எப்போதும் சம்பந்தமே இல்லாத, தன்னை சூத்திரன் என்றும், சண்டாளன் என்றும் கூறும்படியான சமயத்தை உதறித்தள்ளி விட வேண்டியது முதற்காரியமாகும்.’

ஒருவர் தன்னை உண்மைத் தமிழன் என்று கருதிக் கொள்ள வேண்டுமானால், சூத்திரன், சண்டாளன் இரு நிலைகளில் இருந்தும் வெளியேற வேண்டும் எனப் பெரியார் இங்கு தெளிவாகக் கூறுகிறார். இதன் மூலம் பிற்படுத்தப்பட்டோருக்கும் தலித்துகளுக்குமான ஒற்றுமையை வலியுறுத்தித் தமிழர் ஓர்மைக்கு அடித்தளமிடுகிறார்.

பெரியாரின் இந்தப் பார்வை 1940 ஆகஸ்டு 25ஆம் நாள் திருவாரூரில் நடைபெற்ற ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் அவர் ஆற்றிய தலைமை உரையில் மிகத் தெளிவாக வெளிப்படுகிறது:

‘திராவிட நாட்டில் எப்படி வெளியிலிருந்து வந்த ஆரியர்களுக்குத் திராவிட மக்கள் தீண்டப்படாதவர்களாக இருக்கிறார்களோ, அப்படி திராவிடர்களுக்கு ஆதித் திராவிடர்கள் அதைவிட மேம்பட்ட தீண்டப்படாதவர்களாய் இருக்கிறார்கள். இந்த நிலைமை திராவிட சமுதாயத்துக்கே ஒரு பெரும் மானக்கேடான நிலைமையாகும் என்பதோடு, திராவிடர்களை ஆரியர்கள் தீண்டப்படாத மக்களென்று வகுத்திருப்பதையும், நடத்துவதையும் அரண் செய்கிறது. ஆகையால், ஆதித் திராவிடர் என்ற பெயரே மாற்றப்பட்டு, இருவரும் திராவிடர்கள் அல்லது தமிழர்கள் என்ற பெயராலேயே வழங்கப்பட வேண்டும் என்பதும், திராவிடருக்கும் ஆதித் திராவிடருக்கும் சமுதாயத் துறையிலுள்ள எல்லா வித்தியாசங்களும் பேதங்களும் ஒழிந்து, ஒரே சமூகமாக ஆக வேண்டும் என்பதும் எனது ஆசை.’

பெரியாரின் இந்த உரையில் அவர் தமிழர் ஓர்மைக்கு அடிப்படையாகச் சாதி ஒழிப்பை முன்வைப்பது தெளிவாக வெளிப்படுகிறது. அவர் இந்தப் பார்வையைத் தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட மக்களிடம் பேசி வந்தது அவரது சாதி ஒழிப்பு நேர்மையைக் காட்டுகிறது.

1930 ஜூன் முதல் நாள் சேலத்தில் நடைபெற்ற வன்னியர் குல சத்ரியர் மாநாட்டில் பெரியார் எழுப்பிய முழக்கம் அவரை உண்மை சாதியொழிப்பு வீரராகக் காட்டும். பெரியோர்களே! இந்த மாநாட்டிலாவது உங்களுக்கு மேல் சாதி ஒன்று இருக்கிறது என்பதையும், நீங்கள் சில சாதிகளுக்கு மேலானவர்கள் என்பதையும் மறந்து விடுங்கள், இல்லையேல் உங்களின் கீழ்மை நிலை என்றென்றும் நிலைக்கவே செய்யும் என வன்னிய மக்களை எச்சரித்தார் பெரியார். சத்ரியர் என்ற பட்டமெல்லாம் உங்களுக்கு மேலும் இழிவைத் தேடித் தருமே தவிர என்றும் எந்த மேன்மையையும் அளிக்காதெனத் துணிந்துரைத்தார்.

சாதியொழிப்பின் அடிப்படையை உணர்த்தும் வகையில்தான் ‘பறையர்ப் பட்டம் ஒழியாது சூத்திரப் பட்டம் ஒழியாது’ என முழங்கினார் பெரியார்.

பெரியார் தாம் உட்பட அனைத்துக் கழகத் தோழர்களையும் சாதிப் பின்னொட்டுகளைக் களையச் செய்தார். இதனால் தமிழகத்தில் இந்தியாவிலேயே வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அதிசயமாக ஐயங்கார், ஐயர், முதலியார், செட்டியார் எனச் சாதிப் பட்டங்கள் அனைத்தும் ஒழிந்தன.

தமிழகத்தில் சாதிப் பட்டம் ஒழியக் காரணமாக இருந்த மாபெரும் தலைவாரின் பெயரையே ஈ. வெ. ராமசாமி நாயக்கர் எனக் கூச்சமற்று எழுதுவோரின், பேசுவோரின் அறிவு நாணயத்தை என்னென்பது? பெரியார் இடைநிலைச் சாதித் தலைவரே தவிர தலித்துகளுக்கு ஏதும் செய்து விடவில்லை எனப் பார்ப்பனர்களும், ஆதிக்கச் சாதியினர் சிலரும் இன்று முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். பெரியார் தலித்துகளைக் கோயிலுக்குள், ஆதிக்கச் சாதியார் தெருக்களுக்குள் அழைத்துச் செல்லும் போராட்டமேதும் நடத்தினாரா? எனச் சில தலித் எழுத்தாளர்கள் கேட்கின்றனர். அவரை தலித் விரோதி என்னும் அளவுக்கு அறிந்தோ அறியாமலோ எழுதுகின்றனர். இந்த மனிதர்களின் அறிவு முதிர்ச்சியை என்னென்பது?

சாதியையும் பாதுகாத்துக் கொண்டு தலித் விடுதலை கோரிய மொன்னைப் பேர்வழியல்ல பெரியார். சாதிக் குடுமி இழுத்துப் பார்ப்பனியத்தின் தீண்டாமையின் அடிமடியில் கைவைத்த மாவீரர் அவர்.

சாதியம் என்னும் புற்றுடைத்து தலித்தியத் தேரைத் தமிழ்த் தேசியப் பாட்டையில் தங்கு தடையின்றி முடுக்கி விட்டவர் பெரியார். சல்லி வேர் நுனி கண்டு மனநிறைவு காண்போர் சாதாரண மனிதர்கள். ஆணி வேர் அடி காணும் வரை அயராதோரே மேதைகள்.

பெரியார் தலித்துகளை எத்தனை கோயில்களுக்குள், தெருக்களுக்குள் அழைத்துச் சென்றார் எனக் கணக்கு கேட்போர் சம்பிரதாய மாற்றங்களில் நம்பிக்கை வைத்து தலித் விடுதலையைக் கற்பனைக் கனவாக்கி வைத்துள்ளனர், அப்படியே நம்மையும் நம்பச் சொல்கின்றனர். ஆனால் பெரியாரோ சார அளவிலான மாற்றங்களில் நம்பிக்கை வைத்தவர். எனவேதான் அவர் தலித்துகளின் கோயில் நுழைவு என்பதை விட, கருவறை நுழைவு என்பதில் பெரும் அக்கறை செலுத்தினார்.

திமுக ஆட்சியின் போது 1972 ஜூன் 23ஆம் நாள் நொய்யலில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பெரியார் பேசுவதைக் கேளுங்கள்:

‘இன்றைக்குத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாகக் கூறிக் கொண்டு, அரசாங்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித் தருகின்றேன் என்று கூறி ஊருக்கு வெளியே, ஒதுக்குப்புறத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கின்றார்கள். முன்பு ஊருக்கு வெளியே சேரியில் குடி இருக்கின்றதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம். தாழ்த்தப்பட்ட மக்களைப் புதிய சேரியில் தனியாகக் குடி ஏற்றுவதாகத் தானே ஆகின்றது.அரசாங்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுக்க வேண்டும். மற்ற மக்களோடு கலந்து வாழச் செய்ய வேண்டும்.’

சேரி மக்கள் ஆதிக்கச் சாதியினர் தெருக்களுக்குள் அழைத்துச் செல்வதையே குறிக்கோளாகக் கொண்டவரல்லர் பெரியார். அந்தச் சேரிகளையே இல்லாதொழிக்க வேண்டுமென அவரது வாழ்நாள் முடிவு வரை முழக்கமிட்டதைத்தான் அவரது நொய்யல் பேச்சு காட்டுகிறது.

பெரியார் சுயமரியாதை இயக்கக் காலத்தில் தாழ்த்தப்பட்டோரின் விடுதலைக்கு நேரடியாகக் கண்ட களங்கள் பல. சென்னை (15.01.1928; 10.02.1929; 21.07.1929; 07.08.1933), கள்ளக்குறிச்சி (16.06.1929), இராமநாதபுரம் (25.08.1929), ஆதனூர் (13.10.1929), தலைச்சேரி (30.03.1930), திருநெல்வேலி (10.06.1930), சேலம் (16.05.1931), லால்குடி (07.06.1931; 07.02.1932; 07.08.1933), திருச்சிராப்பள்ளி (05.07.1931), கோயம்புத்தூர் (05.07.1931), அருப்புக்கோட்டை (28.08.1932; 03.01.1938), தஞ்சாவூர் (09.07.1935), சீர்காழி (10.07.1935), திருச்செங்கோடு (07.03.1936), கொச்சி (23.05.1936), சேலம் (02.09.1936), சிதம்பரம் (06.05.1937), ஆம்பூர் (04.07.1937), திருச்செங்கோடு (01.08.1937) எனத் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பல ஆதி திராவிடர் மாநாடுகளையும், தீண்டாமை ஒழிப்பு மாநாடுகளையும் நடத்தியவர் பெரியார்.

வரலாற்றை மறந்த, அல்லது வரலாற்றைத் திரிக்கும் இந்துத்துவ வெறியர்கள் பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் என்ன தொடர்பு என இன்று கேட்கின்றனர்.

1936இல் லாகூரில் நடைபெறவிருந்த சாதி ஒழிப்புச் சங்கத்தார் மாநாட்டுக்குஅண்ணல் அம்பேத்கர் ஒரு தலைமை உரையை அனுப்பி வைத்ததும், அந்த உரையை அம்மாநாட்டார் மறுதலித்ததும், எனவே அந்த உரையை அம்பேத்கர் The Annihilation of Caste என்னும் தலைப்பில் 1936 மே 15ஆம் நாள் புத்தகமாக வெளியிட்டதும் நம்மில் சிலருக்கேனும் தெரிந்த செய்திகளே. அதுவும் அருந்ததி ராய் போன்றோரே இப்போதுதான் அம்பேத்காரின் அந்த உரையைப் படிக்க நேர்ந்தது என்றும், அதன் மூலமாகத்தான் சாதியத்தின் கொடூர முகத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது என்றும் புல்லரித்துப் பேசுகின்றனர், எழுதுகின்றனர். ஆனால் இணைய வசதியேதுமற்ற அந்தக் காலத்தில், அம்பேத்கர் உரை புத்தகமாக வெளியான இரண்டே மாதத்தில் அதனைத் தமிழில் மொழிபெயர்த்து 1936 ஜூலை 19ஆம் நாள் ‘சாதி ஒழிய வேண்டும்’ என்னும் தலைப்பில் குடி அரசு ஏட்டில் வெளியிடச் செய்தார் பெரியார்.

எனவே பெரியாரின் சாதி ஒழிப்புக் கருத்தியலே உண்மையான தலித் விடுதலைக்கு அச்சாணியாயிற்று என்பதில் ஐயமில்லை. ஆனால் அதற்கும் மேலாகப் பெரியார் சாதியத்துக்குக் காரணமான ஆணி வேருக்கே அமிலம் அடித்த வரலாறுதான் அவரின் மெய்யுருவை நமக்குப் படம்பிடித்துக் காட்டும்.

சாதி ஒழிப்புக்கு, தலித் விடுதலைக்குத் தடையாக நிற்கும் அகப் பகைக்கு எதிராகத் தமிழகத்தில் களங்கண்ட பெரியார் புறப் பகையையும் சரியாக அடையாளம் கண்டு முன்னிறுத்தினார். பார்ப்பனியத்தின், சாதியத்தின் காப்பரணாக இந்தியமும் இந்திய அரசமைப்புச் சட்டமும் திகழ்வதாக நிறுவினார். இந்தியத்தில் தமிழர்களுக்கு எந்த விடிவுமே கிடைக்காது என்பதால்தான் அவர் இந்தியாவின் முதல் விடுதலை நாளையும், தொடர்ந்து முதல் குடியரசு நாளையும் (26.01.1950) துக்க நாள்களாக அறிவித்தார்.

பார்ப்பனியத்தின் உறைவிடமாகத் திகழும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை எதிர்த்து வாழ்நாள் முழுதும் போராடினார் பெரியார்.

1952 ஆகஸ்டு 3ஆம் நாள் சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் பெரியார் பேசினார்:

‘நான் சொல்கிறேன். இந்திய அரசியல் சட்டத்தை ஏற்க மாட்டோம். இந்த அரசியல் சட்டம் எங்களுக்குத் தீங்கிழைப்பது ஆகும். இது எங்கள் பிரதிநிதிகளால் செய்யப்பட்டதல்ல. இதை நெருப்பில் போட்டுப் பொசுக்குவோம்.’

அரசமைப்புச் சட்டத்தை எரிக்கும் களத்தில் 1957இல் இறங்கினார் பெரியார். போராட்டத்துக்கு நவம்பர் 26 என நாள் குறித்தார். போராட்டத்துக்கு முதல் நாள் பெரியார் கைது செய்யப்படுகிறார். குறிப்பிட்ட நாளில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட திராவிடர் கழகத் தோழர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் துணிந்து எரித்தனர். அவர்களில் மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் மூன்றாண்டு அளவுக்குச் சிறைத் தண்டனை பெற்றனர். சிறைக் கொடுமையில் இருவர் இறந்தனர்.

போராட்டத்தில் கைதாகி நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட போராளிகள் ஒவ்வொருவரும் ஒரே வாக்குமூலத்தையே ஒரு தாளில் எழுதி வைத்துக் கொண்டு வாசித்துக் காட்டினர். அவர்கள் வாசித்துக் காட்ட வேண்டிய வாக்குமூலத்தை ஏற்கெனவே விடுதலை (21.11.1957) நாளிதழ் வெளியிட்டிருந்தது. அந்த வரலாற்று வாக்குமூலமே பெரியாரின் சாதியொழிப்புக் குறிக்கோளுக்கு ஆவணமாகிறது:

‘நான் சாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன். இந்திய அரசியல் சட்டத்தில் சாதிக்கும் அதை உள்ளடக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அரசியல் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவும் இல்லை. அச்சட்டத்தைத் திருத்தக்கூடிய வசதியும் தமிழர்களுக்கு இல்லை. ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்தியதற்கு எனக்கு உரிமை உண்டு.  இதனால் எந்த உயிருக்கும் எந்தப் பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்றவாளி அல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கைகளில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை. நான் எதிர் வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கூறப்பட்டால் அதற்குரிய தண்டனையை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.’

‘இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்’ என ஆணவத்தோடு திருச்சிராப்பள்ளியில் பேசினார் நேரு (இந்து, 10.12.1957). மீறுபவர் எவரானாலும் சிறையில் வைப்பேன், பைத்தியக்கார மருத்துவமனையில் அடைப்பேன் என்றெல்லாம் எக்காளமிட்டார் அந்த சனநாயகப் புத்திரர். ஆனால் பெரியார் சளைக்கவில்லை. நேருவே! தமிழ்நாடு உன்னாடல்ல! நீ முதலில் என்னாட்டை விட்டு வெளியேறு! என முழங்கினார். இன்னும் தீவிரமான பல போராட்டங்களை முன்னெடுத்தார். தமிழ்நாடு நீங்கிய இந்தியத் தேசப் படத்தைத் தமிழ்நாடெங்கும் எரிக்கச் செய்து கைதானார் (05.06.1960). இந்தியக் கொடி எரிக்கும் போராட்டங்களையும் அடுத்தடுத்து அறிவித்தார். தமிழ்நாட்டுக்கு முழு விடுதலை கோரி 1968 ஏப்ரல் 24ஆம் நாளை தில்லி ஆதிக்கக் கண்டன நாளாகக் கடைப்பிடித்தார்.

எனவே பெரியாரின் சாதி ஒழிப்புக் கொள்கை என்பது தமிழக விடுதலையில், இந்திய ஆதிக்க எதிர்ப்பில் பின்னிப் பிணைந்துள்ளது. பாரத ஒற்றுமை பேசி சாதியை ஒழிப்பேன் என்பது பெரியார் மெய்யியலின் ஆன்மாவை வேரோடு பறிப்பதாகும்.ஓட்டு வேட்டைக்கு, சந்தர்ப்பவாத அரசியலுக்குப் பெரியார் கொள்கைகள் உறுத்தலாகத்தான் இருக்கும். ஆனால் அதற்காக அவற்றைத் திரிப்பதும், புரட்டிப் பேசுவதும் அவருக்குச் செய்யும் இரண்டகம் ஆகும்.

பெரியார் விடுதலை நாளேட்டைத் தொடங்கியதிலிருந்து முகப்பில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்னும் முழக்கத்தை இடம்பெறச் செய்தார். அவர் இறப்புக்குப் பின் இந்திரா காந்தியின் நெருக்கடிக் காலத்தில் அம்முழக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டு அகற்றப்பட்டது. ஆனால் நெருக்கடிக் காலம் முடிவுக்கு வந்த பிறகும் அம்முழக்கத்துக்கு இன்று வரை இடந்தரவில்லை கி. வீரமணி.

பெரியார் தனித் தமிழ்நாடு கேட்ட காலத்தில் கன்னடர்கள் காவிரியைச் சிறைப்பிடிக்கவில்லை, மலையாளிகள் பெரியாற்று அணையை உடைக்கத் துடிக்கவில்லை, சிங்களவர்கள் தமிழ் மீனவர்கள் எவரையும் கொல்லவில்லை, தமிழீழத்தில் வரலாற்றின் பெருந்துயரமான இனப்படுகொலை ஏதும் நடைபெறவில்லை. எனவே முன்னெப்போதையும்விட இன்றுதான் நமக்குப் பெரியாரின் பிரிவினை ஆயுதம் இன்றியமையாததாகிறது. ஆனால் இன்று பெரியாரின் பிரிவினைக் கொள்கையே கதைக்குதவாது என திராவிடக் கட்சியினரும், பாரதக் கம்யூனிஸ்டுகளும் ஒன்றாகச் சொல்கின்றனர்.

அண்மையில் 2014 செப்டம்பர் 17 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் பெரியாரின் பிறந்த நாளை ஒட்டி விவாதம் நடைபெற்றது. தனித் தமிழ்நாடு என்பதே தந்தை பெரியாரின் உயிர்க் கொள்கை என்னும் கருத்தை முன்வைத்தார் தோழர் தியாகு. விவாதத்தில் மதிமுகவின் காரை செல்வராஜ், அதிமுகவின் கோ. சமரசம், திமுக ஆதரவு சுப. வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். மூவருமே பெரியாரின் தனித் தமிழ்நாடு கோரிக்கை இன்று சாத்தியமில்லை என ஒற்றுமையாகக் குரல் கொடுத்தனர். பைசா பெறாத சிக்கல்களுக்கெல்லாம் குடுமிப்பிடிச் சண்டையிடும் இந்தத் திராவிடக் கட்சிகள் தனித் தமிழ்நாடு என்னும் பெரியாரின் உயிர்க் கொள்கைக்குத் தமிழகத்தில் வேலையில்லை எனக் காட்டுவதில் ஒற்றுமை காட்டினர். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மாற்றம் செய்து கூட்டாட்சியைக் கொண்டு வருவதே இன்றைக்கு நடைமுறையில் சாத்தியம் என்றார் சுபவீ. தேர்தல் கட்சிகளுக்கு என்று ஓர் எல்லை உண்டு எனக் கூறினார். பதவிச் சுகங்களைப் பங்கிட்டுக் கூட்டணி பிடிக்கத் துடிக்கும் கட்சிகளுக்கு ஓர் எல்லை உண்டு எனக் கூறியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். உங்களின் ஓட்டு வேட்டை அரசியலுக்குப் பெரியாரின் பிரிவினைக் கொள்கை முற்றுப் புள்ளியாக இருக்கலாம். ஆனால் தமிழ்த் தேசியர்களுக்குப் பெரியாரின் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ முழக்கந்தான் தொடக்கப் புள்ளியாக இருக்க முடியும்.

திராவிடக் கட்சியினரின் இந்தச் சந்தர்ப்பவாத விளக்கங்களுக்குத் தமிழ்த் தேசியர்கள் விடையளிக்க வேண்டியதில்லை. பெரியார் அன்றே விடையளித்து விட்டார். அவர் இறப்பதற்கு 3 மாதம் முன்பு தமது 95ஆவது பிறந்த நாள் விழா மலா¤ல் பெரியாரே எழுதுகிறார்:

‘நாம் உடனடியாக விடுதலை பெற்று, அதாவது இந்தியக் கூட்டாட்சியிலிருந்து விலகி சுதந்தரத் தமிழ்நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டாக வேண்டியவர்களாக இருக்கிறோம். இம்முயற்சியில் இன்றைய திமுக ஆட்சி இணங்கும் என்று கூற முடியாது. ஏனெனில் அது இந்தியக் கூட்டாட்சி ஆதிக்கத்துக்கு உட்பட்ட மாகாண சுயாட்சியை விரும்புகிறது. மாகாண சுயாட்சி என்றால், அரசியலில்தான் ஏதோ சில மாறுதல்களைச் செய்து கொள்ள முடியுமே தவிர, சமுதாயத் துறையில் அரசியல் சட்டத்துக்கு விரோதமாக எதுவும் செய்ய முடியாது.’

பெரியாரின் தனித் தமிழ்நாடு முழக்கத்துக்கு எதிராய் நிற்கும் எவரும் பெரியாருக்கு எதிரிகளே. வாஜ்பாய்க்கு ஆதரவளிக்கும் கைகளால் பெரியார் சிலைகளுக்கு மாலையிடும் தலைவர்களுக்கும், பெரியாரைச் செருப்பால் அடித்து இழிவுபடுத்தும் இந்து வெறியர்களுக்கும் அடிப்படையில் வேறுபாடேதும் இல்லை.

பெரியார் பாரதத்தின் ரத்தினம் இல்லை, தமிழர்களின் பல நூற்றாண்டுச் சமூகநீதிப் போராட்டத்தின் விளைபயனாய்த் தமிழ்த் தேசியத்துக்குத் தமிழன்னையளித்த நன்முத்து ஆவார்.

பெரியார் பதவி அரசியலுக்குப் பயன்படும் விளம்பரப் பொம்மையல்ல, சாதியறுக்கும் தமிழ்த் தேசிய விடுதலையின் திருவுரு என்பதையே தமிழகத்துக்காக, தமிழர்களுக்காக உழைக்கும் எவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

பெரியாரைத் தேச விரோதி என்போரிடம் உரக்கச் சொல்வோம், ஆம், உங்களின் இந்தியத் தேசியத்துக்கு அவர் பெரும் விரோதியே! எங்களின் தமிழ்த் தேசியத்துக்கோ அவர் பெரும் அறிவியலர்!

பெரியார் தேசியக் கொடி எரிப்புப் போராட்டம் அறிவித்த போது ‘திருப்பூர் குமரன் ஏந்திய கொடியை எரிப்பதா?’ என அன்று பாரதக் கம்யூனிஸ்டுகள் மனம் புழுங்கினர். பெரியார் சென்னை திருவல்லிக்கேணியில் 1955 ஜூலை 31ஆம் நாள் ஆற்றிய உரையில் அவர்களுக்குக் காட்டமாகப் பதில் சொன்னார்:

‘குமரன் ஒருவன் உயிர் விட்டுக் காப்பாற்றிய கொடி இதுவானால், தாளமுத்து, நடராசன் என்ற இருவர் உயிர் விட்டது, இந்திக் கிளர்ச்சிக்காகவல்லவா? குமரன் ஓர் ஆள்; எங்களில் இருவர் பலியானோமே! இதை யார் இன்றைக்குக் கூறுகிறார்கள்?’

திராவிடக் கட்சிகளே! கம்யூனிஸ்டுகளே! அன்று பெரியார் மொழிப் போராளிகள் இருவாரின் உயிரைக் காவு வாங்கிய இந்தியக் கொடியை எரிப்பேன் என்றார். இன்று தமிழீழத்தில் லட்சக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கிய இந்தியக் கொடி நம் தமிழகச் சட்டமன்றத்தில் திமிராய்ப் பறக்கிறதே? அதை எரித்துச் சாம்பலாக்க உங்களின் பாரத பக்தி  உங்களுக்குத் தடையாக இருக்கலாம். ஆனால் தமிழ்த் தேசியத்தின் தமிழ்ப் பற்று வருங்காலத்தில் இந்தியக் கொடியையும் எரிக்கும், இந்தியத்தையும் எரிக்கும். இதுவே பெரியார் தமிழர்களுக்கு இட்ட கட்டளை. ஆம், 1950 நவம்பர் 27ஆம் நாள் சென்னை சைதாப்பேட்டையில் பெரியார் முழங்கினார்:

‘இன்று பிரிவினை கேட்கும் நான் கிழவனாக இருக்கலாம். அதன் காரணமாக பலாத்காரத்தில் நம்பிக்கையற்றவனாக இருக்கலாம். நாளை நம் இளைஞர்களும் இப்படியே இருந்து விட மாட்டார்கள். இரத்த வெள்ளத்தின் மத்தியில் பிரிவினை கேட்பார்கள்; கத்தி முனையில் பிரிவினை கேட்பார்கள். ஆட்சியாளர்கள் இப்படி எல்லாம் நடக்க விடாமல் நம் நாட்டை ஒழுங்காக நமக்குப் பிரித்துக் கொடுத்து விட வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன்.’

ஜெ : சில குறிப்புகள்

J

சட்டத்துக்கு விரோதமான முறையில் சொத்துகள் சேர்த்த வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ள பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அவருக்கு நான்காண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்திருக்கிறது.   இந்த வழக்கில் தொடர்புடைய சசிகலா, வி.என். சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு நான்காண்டு சிறைத் தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் அளிக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் முதல்வர் பதவியைப் பறித்து அவரைச் சிறையிலும் தள்ளியுள்ள இந்தத் தீர்ப்பு வழக்கத்துக்கு மாறான சில எதிர்வினைகளையும் அசாதாரணமான ஒரு சூழலையும் இங்கே ஏற்படுத்தியிருக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது?

1) நிலப்பிரபுத்துவ மனோபாவம்

அஇஅதிமுக மீது பெரிதளவு பற்றோ ஆர்வமோ இல்லாத   திரளான மக்களும்கூட (குறிப்பாக, பெண்கள்) ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனையால் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஜெயலலிதா இழைத்த குற்றங்கள் நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டபிறகும்   அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு அவரைக் கொண்டாடாடும் மனோபாவமும் அவர் தண்டிக்கப்பட்டவுடன் உடைந்து அழும் மனநிலையும் நீடிப்பதற்கு என்ன காரணம் இருக்கமுடியும்?

நிலப்பிரபுத்துவக் கண்ணோட்டம் நம் சமூகத்தில் வலுவாக வேறூன்றியிருப்பதன் விளைவே இது. நம்மை ஆளும் ஒருவர் கடவுளாகவோ அல்லது குறைந்தபட்சம் எஜமானராகவோதான் இருக்கமுடியும் என்று கருதும் எளிய அதே சமயம் ஆபத்தான இந்த மனோபாவம் தமிழகத்தில் (ஏன், முழு இந்தியாவிலும்கூட) பலமாக வளர்ந்துள்ளது. இந்த எஜமான விசுவாச மனோபாவத்தை ஆட்சியாளர்கள் இரண்டு வழிமுறைகளைப் பயன்படுத்தி வளர்த்தெடுக்கிறார்கள். ஒன்று, பாப்புலிசம். இரண்டு, அச்சுறுத்தல். ஜெயலலிதா இந்த இரண்டையும் திறமையாகக் கையாண்டவர். ஆனாலும் பின்னதைக் காட்டிலும் முந்தையதே பளிச்சென்று வெளியில் தெரிவதால் அவருடைய பதவி இழப்பைத் தங்களுக்கு ஏற்பட்ட பெரும் இழப்பாக மக்கள் கருதுகிறார்கள்.

2) சந்தர்ப்பவாத அமைதி

ஜெயலலிதா அரசின் குறைபாடுகளும் அத்துமீறல்களும் வெளியில் தெரியாமல் போனதற்கும் அவருடைய நல்ல முகம் மட்டுமே பிரகாசமாக வெளியில் தெரிவதற்கும் காரணம் மீடியா (குறிப்பாக, அச்சு மற்றும் காட்சி ஊடகம்). நிலப்பிரபுத்துவ மனநிலையில் இருந்து மக்களை மீட்டெடுத்து ஆட்சியாளர்கள் குறித்த மாயைகளை உடைத்தெறிந்து உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டவேண்டிய கடமை மீடியாவுக்கு உள்ளது. ஆனால் அவர்கள் இவற்றைச் செய்வதில்லை என்பதோடு ஆட்சியாளர்களின் மாய பிம்பங்களை மேற்கொண்டு வலுவாகக் கட்டமைக்கும் பணியையே மேற்கொள்கிறார்கள்.

அரசியல், புலனாய்வு, ஆய்வு என்றெல்லாம் பெயர்கள் இட்டு அவர்கள் உற்பத்தி செய்யும் எழுத்துக்குவியல்கள் கதநாயாக(கி) வழிபாட்டுணர்வை மேலும் ஆழமாக்குகின்றனவே தவிர குறைக்கவில்லை. ஜெயலலிதா அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை வசதியாக மறைத்துவிட்டு தனிநபர் வழிபாட்டை ஊக்குவிக்கும் விளம்பரங்களையே செய்திகளாக இவர்கள் வழங்குகிறார்கள். செய்தித்தாள்கள், பத்திரிகைகள், டிவி சானல்கள் அனைத்தும் ஜெயலலிதாவை அப்பழுக்கற்ற ஒரு தூய நபராக, புனிதமான ஓர் அரசியல் தலைவராக, துதிபாடத்தக்க ஒரு கடவுளாக மக்கள் முன்னால் தூக்கி நிறுத்துகின்றன. அரை உண்மையான அல்லது போலியான இந்தப் பிம்பங்களை மட்டுமே நீண்டகாலமாக உட்கொண்டு வளர்ந்த மக்களால் திடீரென்று ஜெயலலிதாவை ஓர் ஊழல்வாதியாகக் காணமுடியவில்லை. இந்த முரண்பாடு அழுத்தும்போது கோபமும் சோகமும் வெடிக்கின்றன. மக்களின் இந்தத் தடுமாற்றத்துக்கு மீடியாவும் அதில் இயங்குபவர்களும் ஒரு வகையில் பொறுப்பேற்கவேண்டும்.

3) செயல்படாத கட்சிகள்

ஜெயலலிதாவின் சட்டவிரோதச் செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டி மக்களுக்கு அரசியலறிவும் விழிப்புணர்வும் ஊட்ட இங்கே எந்தவொரு கட்சியும் முன்வரவில்லை. குறிப்பாக, திமுக. தற்போது அதிகாரபூர்வமான எதிர்க்கட்சியாக இயங்கவில்லை என்றபோதும் வரலாறு நெடுகிலும் அதிமுகவை எதிர்த்து அரசியல் களத்தில் செயல்பட்டு வந்த திமுக, தற்போதைய இந்த அசாதாரணமான சூழ்நிலையை கிட்டத்தட்ட அமைதியாகவே கடந்துசெல்ல விரும்புகிறது. இத்தனைக்கும் ஜெயலலிதா மீதான வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டதற்கும் அவருக்குப் பாதகமான (எனவே திமுகவுக்கு அனுகூலமான) தீர்ப்பு அங்கிருந்து வெளிவந்ததற்கும் காரணம் திமுக. இருந்தும் திமுக இந்த வாய்ப்பைத் தன்னுடைய அரசியல் லாபத்துக்காகக்கூடப் பயன்படுத்திக்கொள்ளத் தயங்குகிறது. காரணம் திமுகமீதும் இத்தகைய குற்றச்சாட்டுகள் நீடிப்பதுதான். அதனாலேயே ஜெயலலிதாவைத் தனிமைப்படுத்தி அவரை எதிர்க்கவும் விமரிசிக்கவும் முடியாத நிலைக்கு திமுக தள்ளப்பட்டுவிட்டது. அந்த வகையில், ஆளுங்கட்சியின் தவறுகளை வலுவாகவும் துணிவாகவும் எதிர்க்க இன்று அரசியல் களத்தில் கிட்டத்தட்ட யாருமில்லை.

தமிழகத்தில் மட்டுமல்ல, பல மாநிலங்களிலும் ஏன் மத்தியில்கூட இப்போது இதுதான் நிலை. எதிர்க்கட்சி என்பது ஆளுங்கட்சியின் தவறுகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி அம்பலப்படுத்தும் பணியை மேற்கொள்ளவேண்டும் என்பதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கம். பலகட்சி ஜனநாயகத்தின் அடிப்படையும்கூட இதுதான். ஆனால் நடைமுறையில் எதிர்க்கட்சிக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையில் எந்த வேறுபாடும் இருப்பதில்லை. அவர்களுடைய அரசியல், சமூக, பொருளாதாரக் கண்ணோட்டமும் கொள்கையும் ஒன்றுபோலவே இருக்கின்றன. எனவே, ஊழலிலும் ஒன்றுபோலவே இருக்கிறார்கள். சிற்சில வேறுபாடுகள் கடந்து இரண்டும் மக்களை ஒன்றுபோலவே ஏய்த்துப் பிழைக்கின்றன.

இந்த உண்மை தெரிந்தும், ஜெயலலிதாவை இன்றுவரை ஒரு புனித பிம்பமாக மட்டுமே உயர்த்திப் பிடிக்கும் மீடியா கருணாநிதியை அவ்வாறு பாவிப்பதில்லை என்பதை நாம் கவனிக்கத் தவறக்கூடாது. கருணாநிதி என்று வரும்போது மட்டும் மீடியாவின் அற உணர்வும் விமரிசனப் பார்வையும் திடீரென்று கூர்மையடைந்துவிடுவதன் பொருள் என்ன? அச்சமா? ஜெயலலிதாமீதான அனுதாபமா? எனில், இந்த அனுதாபத்தின் அடிப்படை என்ன?
இடதுசாரிக் கட்சிகளின் தோல்வியையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும். சமரசங்கள் கைவந்தால் மட்டுமே இங்கே தேர்தல் அரசியல் சாத்தியம் என்னும் நிதர்சனத்தை சிபிஐ, சிபிஎம் கட்சிகள் கேள்வியின்றி ஏற்றுக்கொண்டுவிட்டன என்றுதான் சொல்லவேண்டும். மேலே கண்ட முக்கியக் குறைபாடுகளான நிலப்பிரபுத்துவ மனோபாவம், தனிநபர் வழிபாடு, அரசியல் உணர்வற்ற நிலை, மீடியாவின் சார்புத்தன்மை போன்றவற்றுக்கு எதிராகப் போராடவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இடதுசாரிக் கட்சிகள் போதுமான உழைப்பைச் செலுத்தவில்லை, போதுமான அளவுக்கு மக்களை நெருங்கவில்லை.

4) மழங்கடிக்கப்படும் அறிவு

வேலை, வீடு, குடும்பம், பிரச்னைகள் என்று ஒரு சிறிய வட்டத்தில் சிக்கி, மீளமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் பெரும்பாலான மக்களால் ஆட்சிமுறை குறித்தோ அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்தோ ஆராயவோ, விவாதிக்கவோ முடிவதில்லை. இவர்களில் பலர் அரசியலை சினிமாவின் நீட்சியாக, அதாவது மற்றொரு பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பார்க்கின்றனர். தம்மைப் பாதிக்கக்கூடிய பிரச்னைகளின் அடிப்படைகளைக்கூட தெரிந்துகொள்ள அவர்கள் விரும்புவதில்லை. அரசியல் என்பது அவர்களுக்குப் படிக்கவும் பார்க்கவும் கிடைக்கும் சுவாரஸ்யமூட்டும், பதைபதைப்பூட்டும், பிரமிக்கவைக்கும், அதிர வைக்கும் கதைகள் மட்டுமே. தாம் வாசித்துக்கொண்டிருப்பது (அல்லது பார்த்துக்கொண்டிருப்பது) நிஜமா, கற்பனையா என்று தெரிந்துகொள்ளக்கூட அவர்கள் விரும்புவதில்லை.

அரசியல் உணர்வற்ற, அரசியலற்ற இத்தகைய மக்கள் மிக எளிதாக உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறார்கள். அவர்களைத் தேவைப்படும்போது தூண்டிவிடமுடிகிறது. தலைவருக்காக இவர்களில் சிலர் உயிரைக் கொடுக்கவும், எடுக்கவும் முன்வருகிறார்கள். இவர்களை வாக்கு வங்கிகளாகப் பயன்படுத்திக்கொள்ளமுடிகிறது. தேவைப்பட்டால் அவர்களில் ஒரு பிரிவினரை இன்னொன்றுக்கு எதிராகத் திருப்பிவிட முடிகிறது. மக்களின் அறிவு மழங்கடிக்கப்பட்ட நிலையில் இருக்கும்வரை குருட்டுத்தனமான தலைவர் ஆராதனையும் இன்னபிற சமூக அவலங்களும் தொடரவே செய்யும். இதைத்தான் அரசியல் கட்சிகளும்  விரும்புகின்றன.

5) மத அரசியலும் சீர்திருத்தமும்

ஜெயலலிதாவுக்கும் அதிமுகவுக்கும் ஏற்பட்டுள்ள இந்தப் பின்னடைவைப் பயன்படுத்திக்கொள்ளும் ஆர்வமும் வேகமும் தற்போதைக்கு பாஜகவிடம் மட்டுமே இருக்கிறது என்பதைப் பலர் சுட்டிக்காட்டுகிறார்கள். இது உடனடியாகச் சாத்தியப்படும் என்று சொல்லமுடியாது என்றபோதும் பாஜக அந்தத் திசையில்தான் இனி செல்லும் என்பதை மறுப்பதற்கில்லை. தமிழகத்தில் காலூன்ற இரு வழிகளை  பாஜக கையாளும் என்று எதிர்பார்க்கலாம். ஒன்று, இந்து மத உணர்வுகளைத் தூண்டிவிடுவது.  இரண்டு, திராவிட அரசியலுக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்துவது.

பிற மாநிலங்களைப்போலன்றி மத அடையாளங்கள் தமிழகத்தில் முக்கியத்துவம் பெறாமல் இருப்பதற்குக் காரணம் அத்தனை குறைபாடுகளையும் கொண்டிருக்கும் இந்த இரு பெரும் திராவிட அரசியல் கட்சிகள்தாம் என்பதை மறுப்பதற்கில்லை. தற்போதைய வெற்றிடத்தைப் பயன்படுத்திக்கொண்டு பாஜக தனது மதவாத அரசியலை இங்கே பரப்பத் தொடங்கும்போது அதை எதிர்கொண்டு முறியடிக்கவேண்டிய அவசியம் திமுகவுக்கு இருக்கிறது. வேறு காரணங்களுக்காக இல்லாவிட்டாலும், பதவிக்காகவாவது இதனை திமுக செய்தாகவேண்டும். அப்போது திமுக சில சமரசங்களைச் செய்தாகவேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம்.

பெரும்திரளான மக்கள் பாஜக பக்கம் நகர்ந்து செல்வதைத் தடுக்க திமுகவுக்கு இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று, தனது நாத்திகவாதத்தை (என்றால் மிச்சமிருக்கும் அதன் கூறுகள் அனைத்தையும்) அது முற்றிலுமாகக் கைவிடவேண்டும். அல்லது, தனது நாத்திகவாதக் கொள்கையைத் தீவிரமாக்கி, வகுப்புவாதத்துக்கும் மதவாதத்துக்கும் எதிராக இப்போதிருந்தே குரல் கொடுத்துப் போராடத் தொடங்கவேண்டும். கிட்டத்தட்ட இதே இரு வழிகள்தான் இடதுசாரிக் கட்சிகளுக்கும் உள்ளன.

0

இந்திய தேசியமும் தமிழ் தேசியமும்

indian_flagஇந்தியாவுக்கு 1947-ல் சுதந்தரம் தரும்போதே, அது நீண்ட காலம் சுதந்தர நாடாக நீடிக்காது/ நீடிக்கக்கூடாது என்பதே பிரிட்டிஷ் உள்ளிட்ட மேற்குலகின் எண்ணமாகவும் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. ஒவ்வொரு சமஸ்தானமும் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ சேரலாம்; விரும்பினால் தனியாகவும் இருந்துகொள்ளலாம் என்று மிகவும் தாராள மனதுடன்தான் இந்தியாவை விட்டு வெளியேறியிருந்தார்கள். பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் கூட்டமானது விரைவிலேயே தமக்குள் அடித்துக்கொண்டு மடியும். பிரிட்டிஷாரின் மேலான ஆட்சியை வேண்டாம் என்று எதிர்த்தவர்களுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைய முடியாது, அமைந்துவிடக்கூடாது என்பதே அந்த கனவான்களின் பெருவிருப்பமாக இருந்தது. ஏற்கெனவே இஸ்லாமியர்களுக்குத் தனி நாடு என பாரத தேசத்தைத் துண்டாடிவிட்டிருந்தார்கள்.

ஒரே இறைவனைத் தொழுபவர்கள் மட்டுமே ஒற்றுமையாக, (பெயரளவிலான) சமத்துவத்துடன் வாழமுடியும் என்பதே மேற்குலகின் நம்பிக்கை. அதன் நீட்சியாக ஒற்றை மொழியைப் பேசுபவர்களே ஒரு தேசமாக ஆக முடியும் என அது எண்ணியது. எனவே பல மொழிகள் பேசப்படும் இந்தியா விரைவிலேயே மொழிவாரியாகப் பிரிந்து சிதறிவிடும் என எண்ணினார்கள். ஆனால், பிரிட்டிஷார் வருவதற்கு முன்பாகவே இந்த நிலப்பரப்பில் வாழ்ந்த பல்வேறு சாதியினரை ஒன்றிணைத்திருந்த இந்து மதமானது பல தெய்வங்களைத் தொழுபவர்களும் ஒன்றாக வாழமுடியும் என்பதை உணர்த்தியிருந்தது. அதன் நீட்சியாகப் பல மொழிகள் பேசும் மக்கள் வெகு அழகாக ஒரே தேசமாக உருவாகி வந்திருக்கிறார்கள். அதன் பல குறைகளுடன் இந்தியா என்ற இந்தப் பரிசோதனை உலகுக்கு ஓர் எளிய பாடத்தை அழுத்தமாக உணர்த்தி வந்திருக்கிறது: வேற்றுமையில் ஒற்றுமை.

ஆனால், இந்த அம்சமானது ஒருபோதும் சாதகமானதாக ஆகி இந்தியா வலுவான தேசமாக ஆகிவிடக்கூடாது. ஒற்றுமையைத் தக்கவைப்பதற்கே முழி பிதுங்கவேண்டும் என ஒரு மறைமுகச் செயல்திட்டமானது மேற்குலகால் தொடர்ந்து பின்பற்றப்பட்டுவந்திருக்கிறது.
முதல் கட்டமாக தன் செல்ல ரவுடியான பாகிஸ்தானைக் கொம்பு சீவிவிட்டு இந்தியாவின் ராணுவச் செலவுகளை அதிகரிக்கச் செய்ததன் மூலம் மேற்குலகம் தமது பொருளாதாரத்தை பலப்படுத்திக்கொண்டதோடு இந்தியாவின் உள்கட்டுமானங்களில் போதாமையை உருவாக்கி அதிருப்தியின் விதைகளை ஊன்றின.

அடுத்தகட்டமாக அந்த அதிருப்தியை அடிப்படையாக வைத்து சாதி, மத, பிராந்திய (மொழி) இடைவெளிகளைப் பெரிதாக்கி உள் நாட்டு உறவைச் சிதைக்க ஆரம்பித்தன. தனியார்மயம், இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்துவிடுதல், இந்திய நலன் சாராத விவசாய ‘முன்னேற்ற’ நடவடிக்கைகள் என பல தளங்களில் இந்திய விரோதச் செயல்களைத் தனது பொம்மை பிரதிநிதிகள் மூலம் முன்னெடுத்தன. அந்தவகையில் இத்தனை ஆண்டுகால ”சுதந்தர’ ஆட்சியினால் எட்ட வேண்டிய உயரத்தை நம் தேசத்தால் எட்ட முடியாமல் போய்விட்டிருக்கிறது.

சுதந்தரத்துக்கு முன்பாகவே மதம், சாதி, மொழி சார்ந்து ஊன்றப்பட்ட கண்ணிவெடிகளில் மதம் மட்டுமே பெரும் அழிவை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் என்ற நாடு இந்தியாவை வெட்டிப் பிளந்து உருவாக்கப்பட்டது. பாகிஸ்தானில் 90 சதவிகித முஸ்லிம்கள் மத்தியில் சிக்கிய பத்து சதவிகித இந்துக்கள் அனைவரும் கொல்லவோ, அடித்துத் துரத்தவோ, மதம் மாற்றப்படவோ, பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படவோ செய்யப்பட்டனர். இந்தியாவில் 90 சதவிகித இந்துக்கள் மத்தியில் வாழ்ந்த இஸ்லாமியர்களில் எல்லைப்புறங்களில் வாழ்ந்தவர்கள் நீங்கலாக பிறர் மீது ஒரு சிறு கீறல் கூட விழுந்திருக்கவில்லை.

உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான இஸ்லாமியர்கள் இந்தியா முழுவதும் இருப்பதால் 1947-துண்டாடலோடு விஷயம் முடிந்துவிடாது என மேற்குலகம் சப்புக் கொட்டியபடி காத்துக் கொண்டிருந்தது. ஆனால், காஷ்மீர் பகுதியில் மட்டுமே பிரிவினைவாதம் தொடர்ந்து நீடித்துவந்தது. எஞ்சிய பகுதிகளில் இஸ்லாமியர்கள் எந்த மாநிலத்திலும் பெரும்பான்மையாக ஆகியிருக்கவில்லை என்பதாலும் அவர்கள் ஏற்கெனவே இந்து மதத்தில் இருந்து மதம் மாறியவர்கள் என்பதாலும் சுமுகமான வாழ்க்கை வாழ ஆரம்பித்திருந்தனர். இது மேற்குலகம் எதிர்பார்த்திராத, விரும்பியிராத திருப்பம்.
நேரு காலத்திய தொழிற்துறைக் கோட்பாடுகளில் சில குறைபாடுகள் உண்டென்றாலும்  தேச நலன் சார்ந்த பல நவீனத் திட்டங்களுக்கு அடித்தளமிட்டவகையில் அது முக்கியமானதுதான். இந்திய மாநிலங்கள் பரஸ்பர கொடுக்கல் வாங்கல் மூலம் மெள்ள வளர்ச்சிப் பாதையில் ஒற்றுமையாக முன்னேற ஆரம்பித்தன. இதுவும் மேற்குலகம் எதிர்பார்த்திராதது.
சாதிரீதியில் தூண்டிவிடப்பட்ட பிரச்னைகளும்கூட இந்திய தேசியத்தின்மீது எதிர்பார்த்த வெறுப்பைத் தோற்றுவித்திருக்கவில்லை. ஆக மத, சாதித்துருப்புச் சீட்டுகள் வலுவிழக்கத் தொடங்கிய நிலையில்தான் தனியார் மயம், பிராந்திய (மொழி வாரி) இடைவெளிகளை விசிறிவிடுதல் என புதிய ஏற்பாட்டுத் திருப்பணிகள் ஆரம்பமாகின. அதில் மொழி வாரி கண்ணிவெடியை இடுப்பில் கட்டிக்கொண்டு பாயும் போராளியாகத் தமிழ் தேசியவாதிகள் உருவெடுத்துவருகிறார்கள். இன்று சொற்ப எண்ணிக்கையிலான நபர்கள்தான் இதை முன்னெடுக்கிறார்கள் என்றாலும் அவர்களைப் பின்னின்று இயக்கும் சக்தி எளிதில் புறக்கணிக்கத் தகுந்ததல்ல.

ஒரு கூட்டாட்சியில் எழும் அதிருப்திகள் கூட்டாட்சியினால் உருவானவையா… கூட்டாட்சி சரியாக அமல்படுத்தப்படாததால் (நிர்வாகக் குறைபாடுகளால்) உருவானவையா என்பது முக்கியமான கேள்வி. அடிப்படையில் தேசியம் என்ற உணர்வு அதற்குக் கீழான பல்வேறு குழு அடையாளங்களின் குறைபாடுகளை இல்லாமல் ஆக்கும் தன்மை கொண்டது. உதாரணமாக இந்தியச் சூழலில் சாதி, மதம், மொழி, வர்க்கம் போன்ற அடையாளங்களினால் ஏற்படும் ஏற்றத்தாழ்வை இல்லாமல் ஆக்கும் வலிமை கொண்டது. அல்லது அப்படி அதை ஆக்கிக்கொள்ள முயற்சி செய்யவேண்டும். தேசத்தின் ஆட்சியாளர்கள், அதிகாரவர்க்கம் தவறு செய்தால் அவர்களைக் கட்டாயம் விமர்சிக்கவேண்டும். ஆனால், தேசத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்கக்கூடாது. அதிகாரவர்க்கத்தை விமர்சிப்பதேகூட தேசத்தின் மீதான அக்கறையினால்தான் இருக்கவேண்டும். அதுதான் பிரச்னைகளைத் தீர்க்க விரும்புபவர்களின் இலக்காக இருக்கமுடியும். ஏனென்றால் பிரச்னை தேசியத்தின் அதிகார வர்க்கத்திடம் இருக்கிறது. தேசியத்தில் இல்லை.

ஒரு அமெரிக்கர் புஷ்ஷை விமர்சிப்பார்… ஒபாமாவை விமர்சிப்பார். ஒருபோதும் அமெரிக்காவை இகழமாட்டார். தேசம் ஒருவருக்குத் தரும் வசதி வாய்ப்புகள், உரிமைகள் தொடர்பான அடிப்படை நன்றி விசுவாசம் அது. நாகரிக மனிதரின் குறைந்தபட்ச கண்ணியம் அது. இந்து சமயத்தின் ஆகப் பெரிய விமர்சகரான அம்பேத்கர் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை ஆத்மார்த்தமாக உருவாக்கியதற்க்குக் காரணம் தலித்களின் வாழ்க்கை ஓரளவுக்கேனும் மேம்படவேண்டுமென்றால் அதற்கு வலுவான இந்திய தேசியம் அவசியம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையே. அவர் இந்து மதத்தை பார்ப்பனிய, பனியா மதமாகப் பார்த்தார். ஆனால், இந்திய தேசியத்தை தலித்களின் மீட்சியாகவே பார்த்தார். இந்திய தேசியம் இன்றும் அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தபடித்தான் இயங்கிவருகிறது. எந்தவொரு பிரிவும் தனது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளத்தேவையான ஜனநாயக வழிகள் அனைத்தையும் உருவாக்கிக் கொடுத்தபடிதான் இந்திய தேசியம் செயல்பட்டுவருகிறது.

தமிழ் தேசியம், இந்திய தேசியம் என்பவை உண்மையில் தனி அடையாளங்களே அல்ல. உருவ வழிபாடு, பல தெய்வக் கோட்பாடு, பூ, பழம், தீபம், படையல் என வழிபடும் விதம், சாதிக் கட்டமைப்பு, விதி மீதான நம்பிக்கை என பல ஆதார விஷயங்களில் இந்தியா முழுவதிலும் வசிப்பவர்களுக்கும் தமிழகத்தில் வசிப்பவர்களுக்கும் இடையே அழுத்தமான ஒற்றுமை உண்டு. ஒற்றுமை என்று சொல்வதைவிட இருவரின் வாழ்க்கைப் பார்வையும் ஒன்று என்பதுதான் சரி. அதிலும் வேறு தெய்வத்தை வழிபடுபவரை எதிரியாகக் கருதாத ஆன்மிக பக்குவம் உள்ள ஒரே மக்கள் திரள் தமிழர்களையும் உள்ளடக்கிய இந்தியர்கள் மட்டுமே. அறுவடைத் திருநாள் என்பது தமிழகத்தில் கொண்டாடப்படும் அதே நாளிலேயே இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. ராமாயணம், மகாபாரதம் என்ற காவியங்களே இந்தியா முழுமைக்கும் இணைப்புச் சரடாக இருக்கிறது. தமிழகமும் அதற்கு விதிவிலக்கல்ல. வட இந்தியர்களுக்கு ராமேஸ்வரமும் தென்னிந்தியர்களுக்கு காசியும் என புனித ஸ்தலங்கள் மற்றும் அனைத்து புனித யாத்திரைகளும் ஓருடம்பின் அங்கங்களே என்பதையே உணர்த்துகின்றன. கையெடுத்துக் கும்பிடுதல், காலில் விழுந்து வணங்குதல் என்ற இந்தியர்களுக்கே உரிய விஷயங்கள்தான் தமிழகத்திலும் நிலவுகிறது.

தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள்… அதிலும் இந்திய பாரம்பரியத்துக்கு எதிரானவர்கள் என்பதெல்லாம் அசட்டு அரசியல்வாதமே அல்லாமல் வேறில்லை. இவர்கள் இந்து மதம் என்பதையும் மறுதலிப்பவர்களாக குறிப்பாக தலித்கள் இந்துக்களே அல்ல என்று சொல்பவர்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் சொல்லும் தலித் என்ற ஒற்றை அடையாளம்கூட வலிந்து உருவாக்கப்பட்டதுதான். தலித் என்ற பிரிவினருக்கு இடையிலும் எந்தவித ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது. மாட்டுக்கறி தின்பவர்கள் என்பது நீங்கலாக. இந்து என்ற ஒற்றை அடையாளம் செயற்கையானது என்றால் தலித் என்ற அடையாளம் அதைவிடப் படு செயற்கையானது.

நில உடமையாளராக, குத்தகைதாரராக, விவசாயக் கூலியாக இருக்கும் தலித்களுக்கும் பிற தொழில்களில் ஈடுபடும் தலித்களுக்கும் இடையில் மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி உண்டு. உண்மையில் இட ஒதுக்கீடு என்பதில் மலம் அள்ளுதல், பிணத்தை எரித்தல், அழுக்குத் துணி துவைத்தல், சிகை அலங்காரம் செய்தல், செருப்புத் தைத்தல் போன்ற இழிவான கடினமான பணிகளைச் செய்பவர்களுக்குத்தான் முன்னுரிமை தரவேண்டும். ஆனால், அதன் அனைத்து பலன்களையும் அனுபவிப்பது யார் என்று பார்த்தால் விவசாயத் தொழிலில் ஈடுபடும் பறையர், பள்ளர் போன்றவர்களே. விவசாயம் சாராத அந்த தலித்களின் வேதனையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் விவசாயம் சார்ந்த தலித்களின் வேதனை ஒன்றுமே இல்லை. உண்மையில் அவர்கள் சூத்திர சாதி என்ற பிரிவுக்குள் வரவேண்டியவர்களே. ஆக உண்மையான தலித்களுக்கு இட ஒதுக்கீடு இன்னும் கிடைக்கவில்லை. அதைக் கிடைக்கவிடாமல் செய்தது தலித் என்ற பெயரில் அணி திரண்டு நிற்கும் சாதிகளே. இது தனியாகப் பார்க்கப்பட வேண்டிய விஷயம்.

தலித்கள் இந்துக்கள் அல்ல என்று சொவதற்கு இணையானதுதான் தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று சொல்வதும். தலித் என்ற செயற்கையான அடையாளத்தைப் போன்றதுதான் தமிழ் என்ற அடையாளமும். ஏனென்றால், பிரிட்டிஷாரின் காலத்தில் இந்தியா ஒரே அரசின் கீழ் வருவதற்கு முன்புவரை தமிழகம் என்பது சேரர்களின் குருதியாலும் சோழர்களின் குருதியாலும் பாண்டியர்களின் குருதியாலும் நனைந்த ஒரு பூமியாகத்தான் இருந்திருக்கிறது. தமிழ் மொழி பேசும் நாமெல்லாம் ஒரே குடும்பத்தினர் என்ற உணர்வு இந்தியாவின் கீழ் ஒன்றிணைவது வரையில் இங்கு இருந்திருக்கவே இல்லை. இந்தியா என்பதே பிரிட்டிஷாரின் கண்டுபிடிப்பு என்று சொல்பவர்கள் தமிழ் நாடு என்பதும் அவர்களுடைய கண்டுபிடிப்பு என்பதையும் சேர்த்தே சொல்லியாகவேண்டியிருக்கும்.

சமகால அரசியலின் அடிப்படையில் பார்த்தால் சிங்கள அரசு மற்றும் விடுதலைப் புலிகளின் தவறான செயல்பாடுகளினால் நேர்ந்த துன்பங்களுக்கெல்லாம் இந்திய அரசே காரணம்; காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னையில் இந்திய அரசு தமிழர்களுக்குத் துரோகம் இழைக்கிறது; வட இந்திய மேலாதிக்கத்தை நிறுவ முற்படுகிறது என்ற ’நியாயமான’ காரணங்களின் அடிப்படையில் தமிழ் தேசிய உணர்வு ஊட்டப்படுகிறது. இந்துத்துவ சக்திகள் தம்மை பலப்படுத்திக்கொள்ள இந்திய இஸ்லாமிய கிறிஸ்தவ சக்திகளை எதிரிகளாகக் கட்டமைப்பதைப் போலவே தமிழ் தேசியவாத சக்திகளும் இந்திய தேசிய எதிர்ப்பைத் தமக்கான ஆயுதமாக எடுத்துக்கொண்டுவருகிறார்கள். ஆரியப் படையெடுப்பு, பார்ப்பனிய மேலாண்மை, வட இந்திய ஆதிக்கம், ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பு என்று சற்றும் பொருத்தமற்ற, ஆதாரமற்ற கோட்பாடுகளால் இந்திய தேசியத்தை விமர்சிக்கும் திராவிடப் பாரம்பரியத்தின் நீட்சியாக தமிழ் தேசியவாதம் முன்வைக்கப்படுகிறது.

ஏற்கெனவே தனி நாடு கேட்டு வீர முழக்கங்கள் எழுப்பிய முன் அனுபவம் கொண்ட திராவிட முன்னேற்றப் போர்வாள்கள் இந்திய தேசிய உறைக்குள் அடங்கிவிட்டதாலும் ஈழப் பிரச்னையின் வீழ்ச்சிக்கு சகோதர யுத்தமே காரணமென்று சொல்வதாலும் இந்தத் தமிழ் தேசிய ஆட்டத்தில் அவர்கள் இப்போதைக்கு ஓரங்கட்டப்பட்டிருக்கிறார்கள். ஸ்டாலின், கலைஞர் ஆகியோரின் காலத்துக்குப் பிறகு இந்திய தேசிய உறையில் இருந்து திராவிடப் போர்வாளை தமிழகத்து ஜான்சி ராணி கனிமொழி உருவுவார் என்ற நம்பிக்கையில் சில கூட்டணிகள், சங்கமங்கள் உருவாகின என்றாலும் இன்று அந்த ஜான்ஸி ராணி பாத்திரத்துக்கு அவரை விடப் பொருத்தமான ஒருவர் கிடைத்துவிட்டிருப்பதால் தமிழ் தேசியப் பட்டறையில் துருத்தி ஊதும் சத்தமும் இரும்படிக்கும் சத்தம் உற்சாகமாகக் கேட்கத் தொடங்கியிருக்கிறது. கையைக் கொண்டே கண்ணைக் குத்த வைப்பதில் அலாதி திருப்திதானே. கலைஞர்ஜிக்கு இதில் வருத்தம்தான். எனினும் நாம் ஓரங்கட்டப்பட்டாலும் நம் கொள்கைகள் முன்னிலைக்கு வந்திருக்கின்றன தலைவரே என அல்லக்கைகள் அவருக்குப் பாடம் எடுக்க ஆரம்பித்தாகிவிட்டது. அதை அவர் புரிந்துகொள்ளும் தன்மையைப்பொறுத்து தமிழ் தேசியம் வீறு கொண்டெழும்.

இந்திய தேசியத்தைக் கட்டிக் காக்கும் பொறுப்பில் இருக்கும் இந்துத்துவ சக்திகள் இந்துஸ்தானை உருவாக்கும் பகல் கனவில் திளைத்திருப்பதான தோற்றம் உருவாக்கப்படுகிறது. சமஸ்கிருதம் கற்றுத் தரும் பள்ளிகளில் சம்ஸ்கிருத வாரம் கொண்டாடச் சொன்னதையும் சமூக வலைதளத்தில் இந்திக்கு முன்னுரிமை கொடுத்ததற்கு (தமிழகம் நீங்கலாக என்று சொன்ன பிறகும்) என்னமோ தேசத்தின் மொழியாக சம்ஸ்கிருதத்தையும் ஹிந்தியையும் ஆக்கியதைப்போல் போர்ப்பரணிகள் பாடப்படுகின்றன. திடீரென ராம்ராஜ் வேட்டிக்கு சல்யூட், ராஜபக்சேவுக்கு எச்சரிக்கை என முத்தமிழில் மூன்றாம் தமிழ் அதீத முக்கியத்துவம் பெறத் தொடங்கியிருக்கிறது. இவையெல்லாம் நீர்க்குமிழ்களாக உடைந்துபோய்விடக்கூடியவை என்று எளிதில் புறந்தள்ளிவிடமுடியாது. அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகர்ந்துவிடும் அபாயம் உண்டு.

ஏற்கெனவே வடக்கு எல்லையில் பாகிஸ்தான் மூலமான பயங்கரவாதம், வட கிழக்கு எல்லைகளில் அமெரிக்க கிறிஸ்தவ பயங்கரவாதம் தலைவிரித்து ஆடும் நிலையில் தென் எல்லையில் தமிழகத்தில் பிரிவினைக் கோட்பாடுகள் மெள்ள முளைவிடத் தொடங்கியிருக்கின்றன. இந்த வெறுப்பின் ஆதார மையம் ஈழப் போராட்டத்தில் அடைந்த படு தோல்வியே.

பங்களாதேசத்தை தனிநாடாகப் பிரித்துக் கொடுத்ததுபோல் ஈழத்தையும் பெற்றுக் கொடுப்பார்கள் என இந்திய அரசை நம்பியதாகவும் இந்திய அரசு துரோகம் செய்ததால் ராஜீவைக் கொன்று பழி தீர்த்ததாகவும் வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. கூட்டாட்சிக்குள் சுயாட்சி என்ற ஒப்பந்தப்படி இந்திய அமைதிப்படை புலிகளிடமிருந்து ஆயுதங்களைப் பறிப்பதில் காட்டிய ஈடுபாட்டை விரும்பாத புலிகள் தரப்பு இந்திய ராணுவம் குறித்த அவதூறுகளை உருவாக்கி உலவவிட்டது. இந்திய ராணுவத்தினரில் சிலர் பாலியல் மீறல்களில் ஈடுபட்டிருக்கக்கூடும். ஆனால், அது மிகையாக ஊதிப் பெருக்கப்பட்டிருக்க அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. இலங்கை அரசுக்கும் இதில் பெரும் பங்கு உண்டு. விடுதலைப் புலிகள், சிங்கள அரசு இரண்டுக்குமே ராஜீவின் செயல்பாடுகளில் அதிருப்தி இருந்தன. அவையே இந்திய ராணுவத்தின் மீதான அவதூறுகளாக வெளிப்பட்டன.  இன்று அவை ஆதாரமே தேவைப்படாத உண்மையாகிவிட்டிருக்கின்றன. நாளையே இந்திய அமைதிப்படையில் பணி புரிந்த ஏதேனும் ராணுவ அதிகாரி தேன்பொறியிலோ வேறு எதிலோ சிக்கிக்கொண்டு சில ’அதிகாரபூர்வ சாட்சியங்களை’ அளித்துவிட்டால் உண்மையின் சிதை மீது இறுதி விறகும் அடுக்கப்பட்டுவிடும். இத்தனைக்கும் அமைதிப்படையில் ”அத்துமீறல்களுக்கு’ ராஜீவ் காந்திக்கு தண்டனை கொடுத்தாகிவிட்டது. மேலும் ஒரு அரசு செய்யும் தவறுக்கு அந்த தேசத்தையே எதிர்ப்பது நிகழ்வுகளின் அடிப்படையில் எடுத்த தீர்மானமல்ல. முன்தீர்மானத்துக்கு ஏற்ப நிகழ்வுகளைத் திரித்துக்கொள்ளும் போக்கு மட்டுமே.

இந்திய ராணுவத்தை (இந்தியாவை) இப்படியான ஒரு பொறியில் சிக்க வைத்ததற்குப் பின்னால் பெரும் சதித்திட்டமே இருக்கிறது. இந்திய ராணுவத்தின் பாரம்பரியம் முற்றிலும் வேறானது.

கிழக்கு பாகிஸ்தான் மக்கள் நில ரீதியான தொடர்ச்சி இல்லாத காரணத்தாலும் வெறும் இஸ்லாமிய அடையாளத்தோடு மட்டுமல்லாமல் வங்காள மொழியோடும் தம்மை இனம் கண்டதாலும் தனி நாடாக வாழ விருப்பம் தெரிவித்தனர். பாகிஸ்தான் அரசும் அதன் ராணுவமும் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையில் இருந்து இந்திய அரசின் (ராணுவத்தின்) துணையுடன் விடுதலை பெற்றனர். அன்றைய பங்களாதேசத்தின் தெருக்களில் இந்திய ராணுவத்துக்குக் கிடைத்த பெரும் வரவேற்பு பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படவேண்டியவை. காஷ்மீரிலும் கூட பாகிஸ்தான் ராணுவத்தினால் மறைமுக உதவிகள் பெற்று மலைகளில் இருந்து இறங்கிய வெறிபிடித்த பழங்குடி பதான் கூட்டத்திடமிருந்து காஷ்மீர் காப்பாற்றப்பட்டபோதும் இந்திய ராணுவத்துக்கு இதே ரத்னக் கம்பள வரவேற்பு தரப்பட்டது.

பங்களாதேஷைப் பிரித்துத் தனி நாடாக்கியதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக பஞ்சாபில் காலிஸ்தான் பிரச்னை பாகிஸ்தானால் தூண்டப்பட்டபோதும் இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் மிதமாகவே இருந்திருக்கின்றன. மேலும் காலிஸ்தான் பிரச்னை சுமுகமாகத் தீர்க்கவும்பட்டுவிட்டது.

வட கிழக்குப் பகுதில் கூட இந்திய அரசின் பெரும்பாலான நலத்திட்டங்களும் இந்து என்.ஜி.ஓக்களின் சமூக சேவைத் திட்டங்களும் ராணுவத்தினரின் பங்களிப்புடனே நடந்தும் வந்தன. இவையெல்லாம் மேற்குலகம் துளியும் விரும்பாத விஷயங்கள். எனவே, வடகிழக்குப் பகுதியிலும் இலங்கையிலும் இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் திட்டமிட்டுத் திரிக்கப்பட்டன. எந்தவொரு ராணுவமும் சில அத்துமீறல்களில் ஈடுபடக்கூடும். போர் வியூகத்தின் ஓர் அங்கமாகக்கூட இவை முன்னெடுக்கப்படும். ஆனால், மேற்கத்திய சக்திகளின் கைப்பாவையான ஊடகங்கள் அவற்றை மிகைப்படுத்தின. திரித்தன. இன்று அவையே உண்மையாக நிலைபெற்றும்விட்டன. இந்த “உண்மை’தான்  தமிழ் தேசியப் பேரியக்கத்தின் ஆதார உத்வேகமாகவும் இருக்கிறது.

தமிழ் தேசியவாதிகள் முன்வைக்கும் அடுத்த முக்கிய துரோகக் கதை காவிரி தொடர்பானது. கர்நாடகாக்காரன் தண்ணீர் தர மறுக்கிறான். இந்திய அரசு அதைத் தட்டிக் கேட்பதில்லை. பின் நான் இந்தியன் என்று எதற்காகச் சொல்லவேண்டும் என்பது இவர்களின் இன்னொரு முக்கியமான முழக்கம்.

தமிழக விளை நிலங்களில் இறால் பண்ணைகள் அமைப்பது தமிழர்கள்தான்… சாயப் பட்டறைக் கழிவுகளைக் கொட்டி நதிகளை பாழ்படுத்தியதும் தமிழர்கள்தான்… விளை நிலங்களை வீட்டு மனைகளாகப் பட்டா போடுவதும் போட்டி போட்டு வாங்குவதும் அதே தமிழர்கள்தான். குளம், கிணறு, ஏரிகளைத் தூர்வாராமலும் மழை அதிகம் பெய்யும் காலத்தில் வெள்ள நீரை கடலில் கலக்கும்படிவிடுவதும் அதே தமிழர்கள்தான். ஆனால், கர்நாடகாக்காரன் தண்ணீர் தராவிட்டால் மட்டும் உடனே இந்தியாவில் இருந்து பிரிந்து சென்றுவிடுவார்களாம். அதன் பிறகு கடல் நீரை வைத்து வெள்ளாமை செஞ்சு தமிழகத்தை உலகின் நெற்களஞ்சியமாக மாற்றிக் காட்டிவிடுவார்களாம்.

உண்மையில் இந்தக் காவிரி பிரச்னையில் தமிழர்கள் பக்கம் எந்த அளவு நியாயம் இருக்கிறது? கர்நாடகாவில் தோன்றும் காவிரி நதியைக்கொண்டு கர்நாடகாவைவிட இரண்டு மூன்று மடங்கு அதிக நிலத்தில் விவசாயம் செய்வது தமிழர்கள்தான். பிரிட்டிஷாரின் ஆட்சி காலத்தில் மதராஸ் பிரசிடென்ஸி வலுவானதாக இருந்ததால் தமிழகத்துக்குச் சாதகமாக ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதை அடிப்படையாக வைத்துத்தான் இன்றும் எங்களுக்குத் தண்ணீர் தரப்படுவதில்லை என்று தமிழ் தேசியவாதிகள் முழங்குகிறார்கள். கர்நாடகாவில் பாயும் நதிக்கு அவர்கள் அணை கட்ட வேண்டும் என்றாலும் நம்மைக் கேட்டுத்தான் செய்யவேண்டும் என்று ஒரு நியாயத்தை அவர்கள் துணிச்சலாக முன்வைக்கவும் செய்கிறார்கள். சுதந்தரம் பெற்ற பிறகு கர்நாடகத்தினர் தமது விளை நிலத்தை அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களுடைய பயன்பாட்டுக்குத்தான் முன்னுரிமை தருவார்கள். மத்திய அரசும் அவர்கள் பக்கம் இருக்கும் நியாயத்தைத்தான் ஏற்கவும் முடியும்.
தமிழக விவசாயிகள் மீது தமிழ் தேசியத்தினருக்கு உண்மையான அக்கறை இருந்தால் கிணற்றுப் பாசனம், ஏரிப்பாசனம் ஆகியவற்றை வளர்த்தெடுத்திருக்கவேண்டும். அதிக நீர் தேவைப்படக்கூடிய வேதி உரங்களின் பயன்பாட்டைக் குறைத்திருக்கவேண்டும். மேலும் இது தமிழ் தேசியவாதிகளின் பணி மட்டுமே அல்ல. இந்திய தேசியத்தை முன்வைப்பவர்களின் பணியும்கூட. ஆனால், இந்திய தேசியத்தை இந்து தேசியமாகப் புரிந்துகொண்டிருக்கும் பி.ஜே.பி. அன்கோவோ இஸ்லாமிய வெறுப்பின் மூலமே தமது இலக்கை அடைந்துவிட முடியும் என்று மனப்பால் குடித்துவருகிறது.

சிங்கள அரசுடனான நட்புறவு, எழுவர் தூக்கு, கூடங்குளம் என மத்திய மாநில அரசுகளுக்கிடையே மோதல் வலுப்பதற்கான முகாந்தரங்கள் ஏராளம் இருக்கின்றன. உண்மையில், தமிழர்களால் இந்திய தேசியத்துக்கு எவ்வளவு நன்மை விளைந்திருக்கிறதோ அதே அளவுக்கு இந்திய தேசியத்தால் தமிழர்களுக்கும் நன்மை விளைந்திருக்கிறது. பீகார், உத்தரபிரதேசம் போன்ற பின் தங்கிய (நவீனத்துவ அளவுகோலின்படி) மாநிலங்கள் இந்திய தேசியத்தை எதிர்த்தால்கூட அதில் நியாயம் உண்டு. இந்திய மாநிலங்களில் பல விஷயங்களில் முன்னணியில் இருக்கும் ஒரு மாநிலம் தமிழகம். இந்திய தேசியத்தில் இருந்ததால்தான் இது சாத்தியமாகியும் இருக்கிறது. விவசாயப் பொருளாதாரத்தில் இருந்து நகர்ந்து தொழில்மயமாக்கலினால் முன்னேறிய சமூகங்களில் தமிழ் சமூகமும் ஒன்று. அந்த தொழில்மயமாக்கலுக்கு முக்கிய காரணமான காமராஜர் பழுத்த தேசியவாதி. அவர் காலத்தில் கொண்டுவரப்பட்ட மத்திய அரசின் திட்டங்களே ஒப்பீட்டளவில் சாதிப்பிடியில் இருந்து தமிழகம் விடுபட வழிவகுத்திருக்கிறது. வேறு எந்த வெங்காயத்தைவிடவும் இந்தத் தொழில் வளர்ச்சியே தமிழகத்தின் இன்றைய வளத்துக்கும் சமூக முன்னேற்றத்துக்கும் காரணம். ஆனால், தமிழ் தேசியவியாதிகளோ கடப்பாரையும் கையுமாக அலைகிறார்கள். ஈழத்தைச் சுடுகாடாக்கிவிட்டு இந்தியா பக்கம் இந்தத் தமிழ் தேசியவாதம் தன் கோர விழிகளைத் திருப்பியிருக்கிறது. இந்தியா உஷாராக இருக்கவேண்டும். குறிப்பாகத் தமிழகம்.

0

விதை நெல்லைப் பழிக்கும் கூட்டம்

vedasமக்களின் பேச்சு மொழியாகப் பயன்படவில்லையே; பின் எதற்காக சம்ஸ்கிருதத்தை மதிக்கவேண்டும் என்று சொல்வது சமைக்கத்தான் பயன்படுவதில்லையே; விதை நெல்லை எதற்காகப் பாதுகாக்கவேண்டும் என்று கேட்பதைப் போன்றது. இந்து, பவுத்த, சமண மதங்களின் பெரும்பாலான படைப்புகள் சம்ஸ்கிருதத்தில்தான் இருக்கின்றன. இந்தியாவின் கடந்த கால அறிவுச் செல்வத்தில் பெரும்பாலானவை சம்ஸ்கிருதத்தில்தான் இருக்கின்றன. விஞ்ஞான உலகின் அறிவுத்துறைகளுக்கான மொழியாக ஆங்கிலம் எப்படி இன்று இருக்கிறதோ அதுபோலவே கடந்த கால அறிவுச் செல்வத்துக்கான மொழியாக சம்ஸ்கிருதம் இருக்கிறது. சம்ஸ்கிருதத்தைப் பழிக்கும் ஓர் இந்தியர் அவருடைய முன்னோர்களின் அறிவை, வாழ்க்கையை, அனுபவத்தைப் புறக்கணிக்கிறார் என்றே அர்த்தம்.

சம்ஸ்கிருதத்துக்கு இன்னொரு பயன்பாடும் இருக்கிறது. அது வழிபாட்டு மொழியாக இருக்கிறது. பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட இறைவனை வணங்க நாம் அன்றாடம் பேசும் மொழியைவிட புரியாமல் இருக்கும் மொழியே சிறந்தது. அதுதான் அந்தச் சடங்குக்கு ஒருவித பூடகமான தன்மையை அளிக்கும். கண்ணால் காண முடிந்தவர்களுடன் பேச ஒரு மொழி. காண முடியாத இறைவனுடன் பேச புரிந்துகொள்ள முடியாத மொழி. தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட இறைவனை வணங்க தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட சடங்குகளே உகந்தது.

இறைவனின் இருப்பையே நிராகரிக்கும் நாத்திகம் இறைவனை வணங்க சம்ஸ்கிருதம் மட்டும் கூடாது என்றெல்லாம் சொல்லமுடியாது. பிற மொழிகளையுமே அந்த இடத்தில் நிராகரிக்கவே செய்யும். செய்ய வேண்டும். அது வேறு வகையான விவாதத்துக்கான விஷயம். ஆனால், இறைவனின் இருப்பை ஏற்பவர்களுக்குத் தாய் மொழியைவிட சம்ஸ்கிருதத்தில் பிரார்த்தனைகள் இருப்பதில் எந்தப் பிரச்னையும் இருக்கமுடியாது. சூத்திர, தலித் கோவில்களில் ஸ்பீக்கரில் முழங்கும் சம்ஸ்கிருத ஸ்லோகங்களே இதற்கான சாட்சி. இசை நயம் மிகுந்த கம்பீரமான சமஸ்கிருத மந்திரங்கள் அளிக்கும் மன நிறைவு புரிந்த மொழிகளில் இருக்கும் மந்திரங்களில் கிடைப்பதில்லை. பூக்களால் அலங்கரித்தல், பல்வகை திரவங்களால் அபிஷேகம் செய்தல், இருண்ட கர்ப்ப கிரகத்தில் கற்பூரம் ஏற்றுதல், பொன்னிற விளக்கொளியைப் படர விடுதல் என வழிபாட்டைக் கலையாக வளர்த்தெடுத்த குலம் பூஜைக்கான மொழியாக சம்ஸ்கிருதத்தை ஒட்டுமொத்த சமூகத்தின் சம்மதத்தோடுதான் முன்வைத்திருக்கிறது.

சம்ஸ்கிருதத்தின் மீதான காழ்ப்புணர்ச்சிக்கு முக்கிய காரணம் அது இந்துக்களின் குறிப்பாக பிராமணர்களின் மொழி என்ற மேலோட்டமான புரிதல்தான். இந்து மதம் மீதும் பிராமணர்கள் மீதுமான வெறுப்புக்குக் காரணம் அவர்கள்தான் சாதி அமைப்பை உருவாக்கி வளர்த்தெடுத்தார்கள் என்ற அரசியல் தீர்மானம்தான். இந்த உலகில் மதவெறி, இன வெறி, நிற வெறி, மொழி வெறி என ஏராளமான வெறிகள் இருக்கின்றன. அந்த வரிசையில் சாதி வெறி கடைசித் தட்டில் இருக்கும் ஒன்றுதான். ஆனால், மதம், இனம், நிறம், மொழி என அனைத்துவகை வெறியிலும் சிறந்து விளங்கும் கிறிஸ்தவ மேற்கத்திய சக்திகள் சொல்லிவிட்டன என்பதால் சாதி வெறியே உலகில் மிகவும் கொடூரமானது என்று இந்திய அறிவுஜீவி வர்க்கமும் கிளிப்பிள்ளைபோல் கூவிக்கொண்டு வருகிறது. தமது தவறை மறைத்துக் கொள்ள விரும்பும் சூத்திர தலித் ஜாதிப் போராளிகள், ஏகாதிபத்திய வெறி கொண்ட மேற்கத்திய கிறிஸ்தவ சக்திகள் இவற்றோடு வீசும் காற்றுக்கு ஏற்ப பாய் விரிக்கும் சமத்காரம் மிகுந்த அக்ரஹாரத்து அம்பிகள் என அனைத்து முனைகளிலும் இந்து/பிராமண மதிப்பீடுகளும் வாழ்க்கை முறையும் கட்டம் கட்டித் தாக்கப்படுகின்றன.

தொழில் புரட்சிக்கு முன்வரையான மன்னராட்சி காலகட்டத்தில் பிறப்பின் அடிப்படையில்தான் உலகின் எல்லா இடங்களிலும் எல்லாமும் தீர்மானமான நிலையிலும் இந்து சாதி அமைப்பு மட்டுமே கொடூரமானது என்றும் அதற்கு பிராமணர்களே காரணம் என்றும் சொல்லப்பட்டுவருகிறது. பிறப்பின் அடிப்படையில் அல்லாமல் குணத்தின் அடிப்படையில் சமூகத்தை இயக்கிவந்த வர்ணாஸ்ரம தர்மத்தை சாதியின் தோற்றுவாயாக முத்திரை குத்தித் தாக்கி வருகிறார்கள்.

இன்றைய நவீன சமூகம் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகூடாது என்று சொல்வதைத்தான் வர்ணாஸ்ரம தர்மமும் சொல்கிறது. ஆரம்பத்தில் இந்தியாவில் அதுவே நடைமுறையில் இருந்தது. அனைவருக்கும் அனைத்துவிதமான கல்வி தரப்பட்டது. திறமைக்கும், விருப்பத்துக்கும், குண இயல்புக்கும் ஏற்ப வேலைகள் தீர்மானமாகின. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை அனைவரும் கூடிக் கலந்து உரையாடி, வேலைகளை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருந்தது. அதில் சில நடைமுறைச் சிக்கல்கள் வரவே ஒரு தலைமுறைக்கு ஒரு வேலை என்று தீர்மானமானது. பல நூறு வருடங்கள் கழித்த பிறகு பெற்றோரின் தொழிலே பிள்ளைகளுக்கும் என்று தீர்மானமானது (அதாவது சாதி அமைப்பாக ஆனது).

ஒவ்வொரு தனி மனிதரும் தமது உள்ளார்ந்த வலிமையால் மேலெழ முடியும் என்றாலும் மரபணு, சுற்றுச் சூழல் ஆகியவையே ஒரு மனிதனுடைய சிந்தனையையும் செயல்பாடுகளையும் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மையே. புரோகிதத் தொழில் போலவே எல்லாத் தொழிலும் உயர்ந்தவை என்பதை ஏற்க முடியாதவர்கள் குறைந்தபட்சம், எல்லாத் தொழிலும் சமூக மரியாதைக்கு உரியவையாக உயர்த்தப்பட முடிந்தவையே என்பதையாவது புரிந்துகொள்ளவேண்டிய காலம் வந்திருக்கிறது. கூடவே, எந்தத் தொழிலையும் உயர்த்திக் கொள்ள முடியாமல் யாரும் தடுத்திருக்கவில்லை என்ற உண்மையையும் சேர்த்து.

மேலும் நிறவெறி, மதவெறி, இன வெறி போன்றவை அதிகாரக் குவிப்பை அடிப்படையாகக் கொண்டவை. சாதி அமைப்போ அதிகாரப் பரவலாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே, அது எந்த நிலையிலும் பிற வெறிகளைப் போல் கொடூரமாக ஆனதும் இல்லை. இனி எப்போதும் ஆகவும் போவதில்லை. சாதிகளை ஒருங்கிணைத்து ’இந்து மதம்’ உருவானதுபோல் மொழிவாரி மாநிலங்களை ஒருங்கிணைத்து இந்திய தேசியம் உருவாகிவருகிறது. இன்று அதீத பிராந்திய (மொழி) தேசியம் பேசுபவர்கள் ஒருவகையில் சாதி வெறியாளர்களின் அப்கிரேடட் (டவுன்கிரேடட்?) வெர்ஷன்களே.

இந்து சாதி அமைப்புதான் பன்முகத்தன்மையை உயிர்ப்புடன் தக்கவைத்திருக்கிறது. இந்து சாதி அமைப்பு வழங்கியிருக்காத சமத்துவத்தை இஸ்லாமும், கிறித்தவமும் கூட வழங்கியிருக்கவில்லை. பாரம்பரிய வழிமுறையை தூக்கி எறிந்துவிட்டு முஸ்லீமாகவும், கிறிஸ்தவராகவும் ஒருவர் மாறினால்தான் சமத்துவம் கிடைக்கும் என்றால் அதன் பெயர் சமத்துவம் அல்ல. கையூட்டு, அழித்தொழிப்பு அல்லது பச்சை சந்தர்ப்பவாதம். இந்து சாதி அமைப்பு அப்படியான ஒரு சமத்துவத்தை முன்வைக்காததை அதன் பலமாகவே கொள்ளவேண்டும்.

இவையெல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு செயல்படும் ஒருவருக்கு பிறப்பின் அடிப்படையில் வேலைகளைத் தீர்மானிப்பது தவறு என்ற நவீன மதிப்பீட்டைத்தான் வர்ணாஸ்ரம தர்மமும் முன்வைத்திருக்கிறது என்ற உண்மையும் இந்திய சாதி அமைப்பு ஒப்பீட்டளவில் குறைகள் குறைந்த சமூக அமைப்பு என்ற உண்மையும் புரியவரும் (அவருக்கு அதை வெளிப்படையாகச் சொல்லும் தைரியம் எப்போது வரும் என்பது மேலை நாடுகளில் அந்தக் கருத்து எப்போது ஏற்றுக்கொள்ளப்படும் என்பதைப் பொறுத்தது என்பது வேறு விஷயம்). அந்த உண்மையைப் புரிந்துகொள்ளும்போது சம்ஸ்கிருதத்தின் முக்கியத்துவமும் மேன்மையும் புரியவரும்.

மொழிபெயர்ப்பு : ஐந்து சவால்கள்

91cd54ab-9eaf-4ce3-b60c-8a1efa40fa1cகடந்த சனிக்கிழமை மொழிபெயர்ப்பு குறித்த கருத்தரங்கம் ஒன்றை நடத்தியிருந்தோம். சுமார் 40 பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.  இயன்றவரை விரிவான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன.

ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும்போது அடிக்கடி நேரும்  பிழைகளை நலங்கிள்ளி சுட்டிக்காட்டினார். செய்தித்தாள் மொழிபெயர்ப்பு என்று தனியாக ஏதேனும் உள்ளதா என்று கேள்வி எழுப்பி சில அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் அ. குமரேசன். புனைவல்லாத எழுத்துகளையும் புனைவையும் ஏன் ஒன்றுபோல் மொழிபெயர்க்கமுடியாது என்று விளக்கிப் பேசினர் ஜி. குப்புசாமி. மொழிபெயர்ப்புப் பணியை மேம்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து பத்ரி சேஷாத்ரி பேசினார். இவற்றின் ஒலிப்பதிவுகள் விரைவில் பகிர்ந்துகொள்ளப்படும்.

தரமான மொழிபெயர்ப்பு நூல்கள் அதிக அளவில் வெளிவர என்ன செய்யவேண்டும்? அல்லது, அவ்வாறு வெளிவராமல் இருப்பதற்குக் காரணம் என்ன? இப்போதைக்கு எனக்குத் தோன்றும் 5 விஷயங்களை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், வாசகர்கள் என பலரும் இணைந்துதான் இவற்றைச் செய்தாகவேண்டும்.

1) தேர்வு

புதிதாக என்னென்ன புத்தகங்கள் வெளிவந்துள்ளன, எவற்றையெல்லாம் தமிழுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதைப் பொதுவாகப் பதிப்பாளரே முடிவு செய்கிறார். இதிலுள்ள சவால்கள் : 1) புதிய புத்தகங்களைப் பற்றி உடனுக்குடன் தெரிந்துகொள்வது. 2) எது தேவை என்று முடிவு செய்வது. 3) துறை சார்ந்த மொழிபெயர்ப்பாளரைக் கண்டறிவது. வாசிப்பை அதிகப்படுத்துவதன்மூலம் முதல் பிரச்னையைத் தீர்க்கலாம்.

இரண்டாவது, விற்பனை / லாபத்தோடு தொடர்புடையது. எது தேவை என்பதைப் பெரும்பாலும் சந்தையே தீர்மானிக்கிறது. தனிப்பட்ட முறையில் ஒரு பதிப்பாளருக்கு குறிப்பிட்ட ஒரு புத்தகம் பிடித்திருந்தாலும் அந்தப் புத்தகத்தின் விற்பனை நிறைவைத் தராது என்று அவர் கருதினால் அதை அவர் எடுத்துக்கொள்ளப்போவதில்லை. ஏதேனும் அரசியல் அல்லது சித்தாந்த உந்துதலால் ஓர் இயக்கமாக நடத்தப்படும் பதிப்பகங்களால் மட்டுமே விற்பனை எண்ணிக்கையை மறந்துவிட்டு பல விதமான புத்தகங்களைத் தமிழில் கொண்டுவரமுடியும். இவ்வாறான பதிப்பகங்களின் எண்ணிக்கையும் குறைவு. இதனால் ஒரே சமயத்தில் தரத்தில் நல்ல புத்தகமாகவும் வணிகரீதியில் விற்பனையாகக்கூடிய புத்தகமாகவும் ஒரு மொழிபெயர்ப்பு நூல் அமைவது கடினமாகிவிடுகிறது.

மற்றபடி, பெரும்பாலும் சுயமுன்னேற்றம், துப்பறியும் கதைகள், ஆன்மிகம், உணவு போன்ற பெஸ்ட்செல்லர்ஸ் மட்டுமே அதிக அளவில் மளமளவென்று தமிழில் வெளிவருகின்றன.

மூன்றாவது சிக்கல் மிகப் பெரியது. அரசியல், கலை, இலக்கியம், தத்துவம், வரலாறு, பொருளாதாரம் என்று பல துறைகள் சார்ந்த புத்தகங்களைத் தமிழாக்கம் செய்வதற்கான தேவை நீடித்து வருகிறது என்றபோதும் இவ்வளவு துறைகள் சார்ந்த அனுபவம் வாய்ந்த மொழிபெயர்ப்பாளர்கள் கிடைப்பதில்லை. நல்ல வாசிப்பு அனுபவமும் எடுத்துக்கொண்ட விஷயத்தைப் பற்றிய நல்ல அறிவும் மொழிபெயர்ப்பில் ஈடுபடுவதற்கான ஆர்வமும் ஒருங்கே பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள் கிடைப்பது கடினமாகிவிட்டது.

2) வருமானம்

மொழிபெயர்ப்பாளர்கள் கிடைப்பது அரிதாகிவிட்டதற்கு ஒரு முக்கியக் காரணம் அப்பணியில் ஈடுபடுபவர்களுக்குக் கிடைக்கும் குறைந்த சன்மானம். பெரும்பாலும் தனிப்பட்ட ஆர்வத்தினால் மொழிபெயர்ப்பில் ஈடுபடுபவர்களே இங்கே அதிகம். தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்கள் குறைவு.  அவர்களை ஊக்குவிக்கும் பதிப்பாளர்களும் குறைவு. மொழிபெயர்ப்புமூலம் எங்களுக்குக் கிடைக்கும் லாபமும் குறைவு என்றுதான் பதிப்பாளர்களும் சொல்லக்கூடும். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் போதாமை நிலவும்போது மொழிபெயர்ப்பாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது எதிர்பார்க்கக்கூடியதுதான்.

3) உரிமம்

ஒரு புத்தகத்தை மொழிபெயர்க்க யாரை அணுகவேண்டும், எப்படி அனுமதி வாங்கவேண்டும், (வாங்க வேண்டும் என்பதேகூட பலருக்குத் தெரியாது!) ஒப்பந்தம் எப்படிப் போடவேண்டும் உள்ளிட்ட அடிப்படைகள் தெரியாத பல சிறிய, நடுத்தர பதிப்பாளர்கள் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பலர் பெரும்பாலும் மூல நூலாசிரியர் அல்லது பதிப்பாசிரியர் அனுமதியின்றி மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுவருகிறார்கள். அல்லது, உரிமம் தேவைப்படாத புத்தகங்களை நாடுகிறார்கள். இத்தகைய பதிப்பங்களால் மொழிபெயர்க்கப்பட்ட பிரதியை சரிவர எடிட் செய்ய முடியவில்லை. வசதியில்லை. சில பெரிய பதிப்பகங்களாலும் அரசியல் இயக்கப் பின்புலம் கொண்டவர்களாலும் மட்டுமே மொழிபெயர்ப்பு நூல்களைக் கொண்டுவரமுடியும் என்னும் நிலை ஆரோக்கியமானதல்ல.

4) கோட்பாடுகள்

மூலப் பிரதிக்கு எந்த அளவுக்கு விசுவாசமாக ஒரு மொழிபெயர்ப்பாளர் இருக்கவேண்டும்? புதினத்தையும் அபுதினத்தையும் மொழிபெயர்க்கும்போது எத்தகைய சுதந்தரத்தை ஒருவர் எடுத்துக்கொள்ளவேண்டும்? மூல ஆசிரியரின் தவறுகளைத் திருத்தி மொழிபெயர்க்கலாமா? அளவில் அதிகம் என்றால் சில பகுதிகளைச் சுருக்கலாமா, முற்றிலும் வெட்டலாமா? இப்படி மொழிபெயர்ப்பில் ஈடுபடும்போது தோன்றும் முக்கியமான பல சந்தேகங்களை மொழிபெயர்ப்பாளர் தனிமையில் தன்னிச்சையாக முடிவெடுத்து கடந்து சென்றுவிடுகிறார். அவருக்கு உதவ எந்தவொரு வழிகாட்டு நெறிமுறைகளும் இல்லை. எந்தக் கோட்பாடும் இங்கு உருவாகவில்லை அல்லது வளர்த்தெடுக்கப்படவில்லை.  இதே சந்தேகங்கள் ஒரு எடிட்டருக்கு எழும்போது அவரும்கூட அவ்வாறே தன்னிச்சையாக முடிவெடுத்துவிடுகிறார். பிழைகள், தப்பர்த்தங்கள் மலிந்துவிடுகின்றன.

5) விமரிசனம்

குப்பை, மட்டம், போர், மோசம் ஆகியவை விமரிசனங்களல்ல. கோட்பாட்டு வழியில் கூர்மையான, இரக்கமற்ற விமரிசனங்கள் தேவை. நல்ல எழுத்து எது என்பதையும் மோசமான எழுத்து எது என்பதையும் அதை எவ்வாறு சரிசெய்யவேண்டும் என்பதையும் தகுதியுள்ளவர்கள் விவாதிக்கவேண்டும், கற்றுக்கொடுக்கவேண்டும். நல்ல விமரிசனங்கள் இல்லாத இடத்தில் நல்ல படைப்புகள் வெளிவருவதில்லை.

0

வட்டத்தைச் சுற்றி வருவது போலத்தான் இதுவும். நல்ல விமரிசகர்கள் உருவாகவேண்டுமானால் நல்ல பல படைப்புகள் வேண்டும். அதற்கு நல்ல ரசனை வேண்டும். அதற்கு நல்ல வாசிப்பு அவசியம். அந்த வாசிப்பும் ரசனையும் ஒரு நல்ல பதிப்பாளரோடு உரையாடவேண்டும். அந்த உரையாடல் ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளரைச் சந்திக்கவேண்டும். அவர் அதனை நல்ல தமிழுக்குக் கொண்டுச் செல்லவேண்டும். அதை நல்ல வாசகர்கள் அடையாளம் கண்டு வாங்கி படிக்கவேண்டும். நல்ல நூல்களை வாசகர்கள் அடையாளம் காணவேண்டுமானால் அவர்கள் நல்ல விமரிசகர்களால் வழிநடத்தப்படவேண்டும்…

0

எல்லாவற்றையும் எங்கிருந்தாவது தொடங்கித்தான் ஆகவேண்டியிருக்கிறது. ஒரு  சிறு முயற்சியாக நானும் மொழிபெயர்ப்பில் காலடி எடுத்து வைக்கிறேன்.

0

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகளில் நீங்கள் காணும் பிரதான குறைகள், குற்றங்கள் என்ன? அவற்றை எப்படிக் களையலாம்? உங்களில் மொழிபெயர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள் யார்? நீங்கள் படித்த புத்தகங்களில் உங்களுக்குப் பிடித்த மொழிபெயர்ப்பு நூல்கள் என்ன? உங்களுக்குப் பிடித்த மொழிபெயர்ப்பாளர் யார்?

தருண் தேஜ்பால் : சில சிக்கல்கள்

Tarun_Tejpal_20131024.jpg.ashxதருண் தேஜ்பாலுக்கு எதிரான குரல்கள் வலுத்துக்கொண்டிருக்கும் அதே சமயம், அவரை ஆதரித்தும் ஒரு சிறு கூட்டம் இயங்கி வருகிறது.

இவர்கள் தர்க்கத்தை, அதில் உள்ள பாவனைகளை விலக்கிவிட்டுப் பரிசீலித்தால் ஒரு எளிய உண்மை புலப்படுகிறது. குற்றச்சாட்டு இங்கே பின்னுக்குத் தள்ளப்பட்டு, குற்றம்சாட்டியவர் யார், அவர் பின்னணி என்ன என்பதும் யார்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது, அவர் பின்னணி என்ன என்பதும் இங்கே முக்கியமாகியிருக்கிறது. நன்கறிந்த பிரபலம் ஒரு பக்கம். பெயர் கூட தெரியாத ஒரு பெண், இன்னொரு பக்கம். இந்த இருவரில் எதற்காக முகமற்ற, அடையாளமற்ற ஒருவரை நாம் ஆதரிக்கவேண்டும்?

தருண் தேஜ்பால் பலருக்கும் இங்கே ஓர் ஆதர்சமாகவும் திகழ்வது சிக்கலை அதிகரிக்கவே செய்கிறது.  குறிப்பாக, 2002 குஜராத் பற்றிய அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிக்கொணர்ந்த ஒரு புலனாய்வு பத்திரிகையின் நிறுவனர்மீது ஒரு சாதாரண பெண்  பாலியல் குற்றச்சாட்டை வீசி ‘களங்கப்படுத்துவதை’ எப்படி ஏற்பது? தெஹல்காவை இந்தக் காரணத்துக்காகவே எதிர்த்து வரும் ஒரு பெருங்கூட்டத்துக்கு இப்போது மெல்ல அவல் கிடைத்துவிட்டது அல்லவா? எனவே இது ஏன் ஓர் திட்டமிடப்பட்ட அரசியல் சதியாக இருக்கக்கூடாது?

இதுதான் அவர்களுடைய சங்கடத்தின் மையப்புள்ளி. இந்தச் சங்கடத்தை மறைக்கவே சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளரை நோக்கி இவர்கள் மீண்டும் மீண்டும் எரிச்சலுடன் சந்தேகக் கேள்விகளை வீசுகிறார்கள்.

எந்தவொரு பிரபலத்தின்மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டாலும் இத்தகைய உத்தி புகார் சொல்பவர்மீது பிரயோகிக்கப்படுவதை நாம் பார்க்கிறோம்.

இத்தனைக்கும் தருண் தேஜ்பால் தன் குற்றத்தைக் கிட்டத்தட்ட ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் அடுத்த சிக்கல் இங்கே எழுகிறது. ஆம் நான் பாலியலல் பலாத்காரம் செய்தேன் என்பதை தருண் தேஜ்பால் எப்படியெல்லாம் பூசி, மெழுகி வார்த்தை விளையாட்டுகள் விளையாடியிருக்கிறார் என்று கவனியுங்கள். எழுத்தாளர் அல்லவா? எனவே மோசமான ஒரு செயலையும் மூடி மறைத்து, வாசனைத் திரவியம் தெளித்து அழகாக முன் நிறுத்தும் கலை அவருக்குக் கைகூடியிருக்கிறது.

குற்றம் இழைத்திருப்பதால் அவருக்கும், அவரை ஓர் ஆதர்சமாகக் கருதுவதால் மற்றவர்களுக்கும் இத்தகைய சாமர்த்தியமான மழுப்பல்கள் தேவைப்பட்டிருக்கலாம்.

நமக்கல்ல.

நம் அன்றாட வாழ்விலும்கூட இப்படிப்பட்ட கடினமான முடிவுகளை நாம் எடுக்கவேண்டியிருக்கும். நமக்குப் பிடித்த ஆளுமைகள், நமக்கு நெருக்கமான மனிதர்கள் தவறிழைக்க நேரிடும். நம்மை ஈர்த்த தத்துவங்களில், கொள்கைகளில் குறைபாடுகள் இருக்கக்கூடும். இரு கண்களையும் காதுகளையும் மனதையும் திறந்து வைத்து நேர்மையாக குற்றங்களையும் குறைபாடுகளையும் நாம் பரிசீலிக்கவேண்டும்.

ஓர் அசாதாரணமான சூழல் ஏற்படும்போது நம் மதிப்பீடுகளை நாம் மீண்டும் கடினமான ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். விருப்பு வெறுப்பற்று, புதிய மதிப்பீடுகளை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.

இது எனக்கும் பொருந்தும்.

Let’s learn to call a spade a spade.

0

மேலும் : தருண் தேஜ்பாலும் தெஹல்காவும்

நரேந்திர மோடியா, ராகுல் காந்தியா?

21rahul1அமெரிக்க அதிபர் தேர்தலைப் போல் ‘அவரா, இவரா?’, ‘அந்தக் கட்சியா, இந்தக் கட்சியா?’ என்று எதிர்வரும் பொதுத் தேர்தலை மீடியா அலசுவதைப் பார்க்கும்போது நிஜமாகவே விவாதத்தின் மையத்தை விட்டு நாம் நகர்ந்துகொண்டிருக்கும் என்னும் உணர்வே ஏற்படுகிறது.

ஜனநாயகம் என்பது பன்முகத்தன்மை கொண்டது என்னும் காரணத்தை முன்வைத்து இந்தக் குறுகியப் பார்வையைச் சிலர் எதிர்க்கின்றனர். ‘காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி இந்த இரண்டையும் விட்டால் இந்தியாவை ஆளும் வாய்ப்பு வேறு யாருக்கும் இல்லையா என்ன?’ மூன்றாவது அணி ஆட்சி அமைக்கக்கூடிய சாத்தியத்தை மறுப்பது இவர்களைப் பொறுத்தவரை தவறு.

இனி தனிப் பெரும் பலம் எந்தவொரு கட்சிக்கும் சாத்தியமில்லை என்னும் நிலையில், கூட்டணிக் கட்சிகளைப் புறக்கணித்துவிட்டு இரு பெரும் கட்சிகளை மட்டும் முன்னிறுத்துவது தவறு என்கிறார்கள் இவர்கள். ஒவ்வொரு தேர்தலின்போதும் மாநிலக் கட்சிகளின் பலம் உயர்ந்து வருவதை இவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஆனால் மீடியா மட்டுமல்ல இந்த இரு பெரும் தேசியக் கட்சிகளுமேகூட இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை மட்டுமே மக்களுக்கு அளிக்க விரும்புகின்றன. மாநிலக் கட்சிகளின் வளர்ச்சியையும் எழுச்சியையும் இவர்கள் ஓர் அச்சுறுத்தலாக மட்டுமே பார்க்கிறார்கள்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தவறுகளையும் சறுக்கல்களையும் பட்டியலிட்டு, பாஜகவை ஒரு வலிமையான மாற்றாக முன்வைக்கிறார் நரேந்திர மோடி. காங்கிரஸின் ‘போலி மதச்சார்பின்மையை’ மோடி கடுமையான விமரிசனங்களுக்கு உள்ளாக்கி நிராகரிக்கிறார். காங்கிரஸ் தன் பங்குக்கு வகுப்புவாதத்தை முன்னிறுத்தி பாஜகவை நிராகரிக்கிறது.

பால் பிராஸ் (Paul R Brass) தனது The Politics of India Since Independence நூலில் ஓரிடத்தில் இந்தப் பிரச்னையைச் சுருக்கமாக அலசுகிறார்.  சுதந்தரத்துக்கு முன்பும், பிறகும் இந்தியாவில் மூன்று பிரதான சிந்தனைகள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தன. முதலாவது, போர்க்குணம் கொண்ட இந்து தேசியவாதம். இரண்டாவது, பிரிவினைவாதச் சிந்தனைகள் கொண்ட இஸ்லாமியவாதம். மூன்றாவது, மதச்சார்பின்மை.

இந்து மதத்தையும் இந்து மதத்தைப் பின்பற்றுவோரையும் மையப்படுத்தி ஓர் அரசையும் நாட்டையும் உருவாக்க விரும்பியது இந்து தேசியவாதம். இந்துக்களோடு ஒன்றிணைந்து வாழ்வது சாத்தியமில்லை; இஸ்லாமியர்களுக்கென்று ஒரு தனி நாடு வேண்டும் என்னும் லட்சியத்தோடும் செயல்பட்டது இஸ்லாமியவாதம். மதம், மொழி, கலாசாரம் போன்றவை பிரிவினையை மட்டுமே ஏற்படுத்தும், நமக்குத் தேவை மதச்சார்பற்ற ஓர் அரசு என்றது மூன்றாவது சிந்தனையோட்டம்.

ஜவாஹர்லால் நேரு மதச்சார்பின்மையை அடித்தளமாக முன்வைத்து சுதந்தர இந்திய அரசியலைத் தொடங்கிவைத்தார். இன்றுவரை காங்கிரஸின் பலமாகப் பலரும் கருதுவது இதைத்தான். 1947க்குப் பிறகு இஸ்லாமியப் பிரிவினைவாதத்துக்கான தேவை இங்கே இல்லாமல் போய்விட்டது. போர்க்குணமிக்க இந்து தேசியவாதத்துக்கும் மதச்சார்பின்மைக்கும் இடையில் இஸ்லாமியர்கள் சிக்கிக்கொண்டனர்.

இந்தியாவும்தான். காங்கிரஸ், மதச்சார்பின்மையையும் பாஜக இந்து தேசியவாதத்தையும் முன்வைக்கின்றன. பாஜகவின் இந்து தேசியவாதத்தில் பாசிசத்தின் கூறுகள் இருப்பது எந்த அளவுக்கு உண்மையோ, அந்த அளவுக்கு உண்மை காங்கிரஸின் மதச்சார்பின்மையில் கோளாறுகள் இருக்கின்றன என்பதும்.

இஸ்லாமியர்கள் இந்த இரு சிந்தனையோட்டத்தையும் நிராகரிப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் பால் பிராஸ். அயோத்தியும் 2002 குஜராத்தும் இந்துத்துவ அரசியலின் அபாயங்களை நேரடியாகச் சுட்டிக் காட்டுகின்றன.  இந்த இரு பயங்கரங்களும் அரங்கேறியதைத் தடுக்கத் தவறியபோது மதச்சார்பின்மையின் தோல்வி வெளிப்பட்டது.

இந்தப் பின்னணியில் நரேந்திர மோடியா ராகுல் காந்தியா என்னும் கேள்வியை நாம் இப்படியும் புரிந்துகொள்ளலாம். போர்க்குணம் கொண்ட இந்து தேசியமா அல்லது தோல்வியடைந்த மதச்சார்பின்மையா?

இந்து தேசியம், போலி மதச்சார்பின்மை இரண்டையும் நிராகரிக்கும் சிந்தனையாளர்கள் ஜனநாயகத்தின் சாத்தியங்கள் மீது நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். தோல்வியடைந்த இந்த இரு பெரும் கருத்தாக்கங்களுக்கு மாற்றே இல்லையா என்று இவர்கள் வெளிப்படையாக ஏங்குகிறார்கள். போர்க்குணம் தொலைத்த இந்து தேசியமும் போலித்தனம் இல்லாத மதச்சார்பின்மையும் இருந்தால் நன்றாக இருக்கும் என்கிறார் ராமச்சந்திர குஹா.

அவரா, இவரா என்னும் ஆபத்தான எளிமைக்குள் சிக்கிக்கொள்ளாமல் சற்றே அகலமாக நாம் சிந்திக்கவேண்டிய தருணம் இது. மேலே நாம் கண்ட இரு பெரும் கருத்தாக்கங்களும் தோல்வியடைந்துவிட்டன என்பதை நீங்கள் ஏற்கிறீர்களா? எனில், இந்த இரண்டுக்கும் மாற்றாகத் திகழக்கூடிய இன்னொரு கருத்தாக்கம் என்னவாக இருக்கும்? அல்லது, இரண்டில் அபாயம் குறைந்த ஒன்றைத் தேர்ந்தெடுப்பது மட்டுமே நமக்குள்ள ஒரே வாய்ப்பா? ஆம் எனில், ஜனநாயகம் என்பதன் பொருள்தான் என்ன?

0